கலிலேயாவிலுள்ள பெத்லேகேமில் ஒரு சாதாரண மாட்டுத் தொழுவம் ஒன்றில் பிறந்தவர் தான் இயேசு. தன்னுடைய வாழ்வின் சிறுவயதுக் காலங்களை பெற்றோருடன் செலவிட்ட இயேசு அறிவிலும் ஞானத்திலும் நிறைந்து விளங்கினார்.
சிறுவயதிலேயே யூத மத சட்டங்களைக் குறித்தும், இறையாட்சியைக் குறித்தும் தெளிவு பெற்றிருந்தார் இயேசு. எல்லோரும் பார்க்கும் பார்வையில் சட்டங்களையும், மறை நூல்களையும் பார்க்காமல் அதிலுள்ள பிழைகளைத் துணிச்சலுடன் சுட்டிக் காட்டுபவராக சிறுவயதிலேயே இயேசு திகழ்ந்தார். தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் எருசலேம் தேவாலயத்தில் நரைத்த, பழுத்த ஆன்மீக வாதிகளுடன் இறையாட்சி குறித்த விவாதத்தில் ஈடுபடுமளவுக்கு அவருக்கு மறை நூல்கள் குறித்தும் சமுதாயம் குறித்தும் விழிப்புணர்வு இருந்தது.
தன்னுடைய முப்பதாவது வயதில் திருமுழுக்கு யோவானிடம் யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்று பணி செய்யத் துவங்கிய இயேசு மூன்று ஆண்டுகள் இடையறாது பணிசெய்தார். தன்னுடைய பணியை முழுக்க முழுக்க மனித நேயம் சார்ந்த பணியாக அமைத்துக் கொண்டவர் இயேசு. இறை தன்மையுடன் விளங்கிய அவர் தான் கடவுளின் மகன் என்பதை தன்னுடைய போதனைகளில் வெளிப்படையாகவே அறிவித்தார்.
இறை தன்மையை வெளிக்காட்டும் விதமாக நோய்களைக் குணமாக்குதல், பேய்களை ஓட்டுதல், இறந்தோரை உயிர்த்தெழச் செய்தல் என ஏராளம் புதுமைகளை மக்களிடையே நிறைவேற்றினார் இயேசு.
பன்னிரண்டு பேரை தன்னுடைய சீடர்களாகத் தெரிந்தெடுத்த இயேசு அவர்களுக்கு வாழ்வியல் போதனைகளையும், பல ஆற்றல்களையும் வழங்கி தன்னுடைய போதனைகளை எல்லா இடங்களுக்கும் அறிவிக்க அவர்களைத் தயாராக்கினார். ஏழைகளுக்கு உதவுதலே இறை பணி என்பதை தன்னுடைய போதனைகளின் அடிப்படையாக்கிக் கொண்ட இயேசு அன்பு என்பதே ஆன்மீகம் என்று போதித்தார்.
தன்னுடைய போதனைகளை சுருக்கி, கடவுளிடம் முழு மனதோடு அன்பு செய்வதும், தன்னை நேசிப்பது போல அடுத்தவரை நேசிப்பதையும் இரண்டு முக்கிய போதனைகளாக்கிக் கொண்டார்.
மூன்று ஆண்டுகள் இயேசு நிகழ்த்திய போதனைகளும், செய்த அற்புதச் செயல்களும் யூத மத குருக்களை எரிச்சலடையச் செய்தது. அவர்களை இயேசு வெளிவேடக்காரர்கள் என்றும், வெள்ளையடிக்கப் பட்ட கல்லறைகள் என்று பகிரங்கமாகச் சாடி, அவர்கள் போதனைகளை நம்பவேண்டாம் அவர்கள் விண்ணரசிற்கு நுழையமாட்டார்கள். அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டும் குருடர்கள் என்று மக்களுக்குப் போதித்தார். எனவே மத குருக்கள் அவரை ஒழித்துக் கட்ட வழி தேடினார்கள்.
எருசலேம் தேவாலயத்தில் பலிப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை சாட்டையால் அடித்துத் துரத்தி இயேசு புரட்சி செய்தது மத குருக்களை வெறி கொள்ளச் செய்தது. காலம் காலமாக நடந்து வந்த விற்பனையையும், அதற்கும் மேலாக மதகுருமார்கள் மேல் இருந்த மரியாதையையும் இயேசு சிதைத்து விட்டதால் அவர்கள் இயேசுவை கொல்வது என்று முடிவு செய்தார்கள்.
தலைமைக் குருக்களாக இருந்த அன்னா, காய்பா இருவரும் இயேசு தன்னைக் கடவுளின் மகனாகக் காட்டிக் கொண்டார் என்னும் குற்றச்சாட்டின் கீழ் அவரைப் பிடித்து ஆளுநனாக இருந்த பிலாத்துவின் விசாரணைக் கூடத்துக்குக் கொண்டு வந்தார்கள். அங்கு பொய்சாட்சிகள் அவருக்கு எதிராக நிறுத்தப்பட்டனர். பொய் சாட்சிகளின் சாட்சியங்கள் வலுவிழந்தன. ஆனால் இயேசு தானே கடவுளின் மகன் என்று அந்த விசாரணைக் கூடத்திலேயே துணிச்சலுடன் அறிவித்து சிலுவைச் சாவை விரும்பி ஏற்றுக் கொண்டார்.
கல்வாரி மலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிலுவையின் உச்சியிலிருந்தும் தன்னைத் துன்புறுத்துபவர்களுக்காக மன்னிப்பை மன்றாடிய இயேசு தன் தந்தையின் கைகளில் தன்னுடைய உயிரை ஒப்படைத்தார். இறந்து விட்டார் என்று அரச வீரர்கள் ஈட்டியால் குத்தி ஊர்ஜிதப்படுத்திய பின் இயேசுவின் உடல் கீழிறக்கி கல்லறையில் அடக்கப்பட்டது.
இறந்த மூன்றாம் நாள் உயிர்ப்பேன் என்று இயேசு சொல்லியிருந்ததால் அவருடைய கல்லறைக்கு அரச காவல் நியமிக்கப்பட்டது. கல்லறைக் கதவை சங்கிலியால் பூட்டி காவலர்கள் காவலிருந்தார்கள். ஆனால் மூன்றாவது நாள் இயேசு சொன்னது போல உயிர்த்தெழுந்தார். உயிர்த்த இயேசு தன்னுடைய சீடர்களுக்கு பல முறை காட்சியளித்தார்.
இயேசுவின் இறப்பினால் சோர்ந்து போயிருந்த சீடர்களுக்கு இயேசுவின் உயிர்ப்புச் செய்தி புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. அதுவே கிறிஸ்தவ மதம் மண்ணில் தோன்றுவதற்கு முக்கிய காரணமாயிற்று.
உலகெங்கும் உள்ள இயேசுவைப் பின்பற்றும் மக்களின் கூட்டமே திருச்சபை என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருச்சபை தன்னுடைய தலைவராக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தத் திருச்சபை இயேசு கிறிஸ்துவால் உருவாக்கப் பட்டது. இயேசு தன்னுடைய சீடர்களைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு நோய்தீர்க்கும் ஆற்றலையும், பேயோட்டும் ஆற்றலையும், போதிக்கும் ஆற்றலையும் அளித்தபோது திருச்சபை ஆரம்பமானது என்பது ஒரு சாராருடைய நம்பிக்கை.
இன்னொரு சாரார், திருச்சபையின் ஆரம்பம் இயேசுவின் உயிர்ப்பிற்குப் பிறகே துவங்கியது என்று நம்புகிறார்கள். எப்படியெனினும், திருச்சபையை ஆரம்பித்தவர் இயேசு என்பதில் கிறிஸ்தவர்கள் ஒன்றுபடுகிறார்கள்.
அப்போஸ்தலர் என்னும் கிரேக்கச் சொல்லுக்கு செய்தியாளர் அல்லது அனுப்பப் பட்டவர் என்னும் பொருள் உண்டு. இயேசு தன்னை தந்தை உலகிற்கு அனுப்பினார் என்று பிரகடனப் படுத்தியது போல தன்னுடைய சீடர்களை தன்னுடைய பணிக்காக அனுப்புகிறார். அனுப்புதல் என்ற சொல்லில் அவர்களுடைய வாழ்நாள் பணி என்பது இயேசுவின் போதனைகளைப் பரப்ப வேண்டும் என்பதே.
வெறும் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான நாட்கள் மட்டுமே இயேசுவோடு பணியாற்றும் வாய்ப்புப் பெற்றிருந்தார்கள் அவர்கள். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருந்தவர்களும், தச்சு வேலை செய்து கொண்டிருந்தவர்களும், வரி வசூலித்துக் கொண்டிருந்தவர்களும் இந்த மூன்று ஆண்டுகளில் நல்ல பக்குவம் வாய்ந்த போதகர்களாகியிருந்தார்கள். மக்கள் முன்னிலையில் தைரியமாக வந்து நின்று இறைவனைப் பற்றியும், இறையரசு பற்றியும் தயக்கமில்லாமல் பேசும் பக்குவத்தைப் பெற்றிருந்தார்கள் அவர்கள்.
அவர்களுடைய முதன்மையான பணி இயேசு கிறிஸ்துவைப் பற்றி சான்று பகர்வதே. இயேசுவின் வாழ்க்கையில் அவர் சீடர்களோடு பகிர்ந்து கொண்ட செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவும். அவர் மக்களிடம் போதித்த செய்திகளை புதிய மக்களிடம் போதிக்கவும், எல்லோரையும் இயேசுவின் போதனைகளின் பாதையில் நடப்பவர்களாக மாற்றுவதுமே அவர்களுடைய பணியாய் இருந்தது. அவர்கள் யாருமே தங்களை முன்னிலைப்படுத்தி போதிக்கவில்லை. அவர்களுடைய போதனைகளிலெல்லாம் இயேசுவே முதன்மையாய் இருந்தார்.
அந்த பன்னிரண்டு சீடர்களின் வாழ்வும் பணியுமே கிறிஸ்தவ மதம் வளரவும், ஆழமாய் வேர்விடவும், ஊரெங்கும் பரவவும் காரணமாயிற்று.
சிலகாலம் இணைந்து பாலஸ்தீனத்தில் பணியாற்றி வந்த சீடர்கள் தங்கள் பணி அந்த இடத்தை விட்டு மற்ற இடங்களுக்குப் பரவ வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இயேசு தன்னுடைய வாழ்நாளில் சுமார் இருநூறு மைல் சுற்றளவுள்ள இடத்தைக் கடந்து எங்கும் சென்றதில்லை என்கிறது இறையியல் வரலாறு. ஆனால் அவர் சீடர்களுக்குக் கொடுத்த கட்டளையோ ‘உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்’ என்பதே.
இயேசுவின் பன்னிரண்டு சீடர்களும் எப்படி கிறிஸ்தவத்தைப் பரப்பினார்கள். எங்கெங்கே சென்றார்கள் என்பதை அறிகையில் அவர்கள் இயேசுவின் பால் கொண்டிருந்த நம்பிக்கையும், அவர்களுடைய மன உறுதியும் நம்மை வியப்பின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்துகின்றன.