உலக வரலாற்றில் மொழிகளுக்கு எழுத்துருக்கள் உருவாக்கப்பட்ட பின்னரே இலக்கியங்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன் இலக் கியங்கள் இல்லை என்று கருதுதல் தவறு. வாய்மொழி இலக்கியங்கள் இருந்திருக்கவேண்டும். எழுத்துருக்கள் உலகின் வெவ்வேறு நாகரிகங்களில் வெவ்வேறு ஊடகங் களில் எழுதப்பட்டன. சீனத்திலும், சுமேரியத்திலும் மண்ணோடுகளில் எழுதப்பட்டன. பழந்தமிழகத்தினைப் பொறுத்தவரை இரும்புக்காலத்தில் எழுத்துருக்கள் தோன்றின. ஒரே காலகட்டத்தில், அவ்வெழுத்துக்கள் கற்பாறைகளிலும், பானையோடுகளிலும் வடிக்கப் பட்டன. தொடர்ந்து செப்புப்பட்டயங்களிலும் எழுதப் பட்டன. இரும்புக் காலத்திற்கு முன்பிருந்த வாய்மொழி இலக்கியங்கள், எழுத்துக்கள் உருவாக்கப்பட்ட கால கட்டமான கி.மு. 300 தொடக்கம் நூல் வடிவத்திற்குக் கொணரப்பட்டன. அதே காலத்தினைச் சார்ந்த சங்க இலக்கியங்கள் எனப்படும் தொகையிலும், பாட்டிலும் உள்ள செய்திகளும் சில வரலாற்றுக் குறிப்புகளும் ஒத்துப்போகின்றன. இக்கூறு தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாற்றினைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு: புகழூர் கல்வெட்டுச்
செய்திகள் பதிற்றுப்பத்தின் செய்திகளோடு ஒப்பிடப் பட்டு இரண்டின் வரலாற்றுத் தன்மைகளும் உய்த்துணரப் பட்டன.
தமிழகத்தில் அரசுருவாக்கம் ஓர் இயக்கமாக எழும்போதே வாய்மொழி வடிவில் இருந்த தொகை நூல்களும், பாட்டும் எழுத்து வடிவத்திற்கு வந்திருக்க வேண்டும். அவ்வடிவாக்கத்தில் வடபுலத்தின் இலக்கியங் களிலுள்ள சில கூறுகள் தொன்ம வடிவில் பதியப் பட்டுள்ளன. ஏனென்றால், அதற்கான தேவை ஆட்சி யாளர்களுக்கு இருந்தது. வெவ்வேறு திணைச் சூழல்களில் இயங்கிவந்த சீறூர் மன்னர்கள் குறுநில மன்னர்கள், வேளிர்கள், வேந்தர்கள் என்போர் தங்களுக்குள் நடத்திக் கொண்ட இனக்குழுச் சண்டைகளில்1 தம் தம் குல அடையாளங்களை இழக்கத்துணிந்து ஒரு கற்பனாவாத ஆளுமையோடு தம்மை இணைத்துக் கொண்டனர். இதன் மூலம், தங்களுக்கு ஒரு புதிய புகழ்வழிபாட்டினையும், தெய்வீகத் தன்மையினையும் உருவாக்கிக்கொள்ள விழைந்தனர். வீர குணத்தினைவிட்டு, விந்தையான கடவுள் குணத்தினைப் பெறத் துடித்தனர். அதன்மூலம் மக்களைத் தம் வயப்படுத்த முனைந்தனர். இவ்வீர புருஷர்கள் தாம் தோழமையுடன் பழகி வந்த பாணர் குலத்தினரைப் புறக்கணித்துப் புலவர் கூட்டத்தினரைத் தம்மோடு களிப்புடன் இருத்திக்கொண்டனர்2.
வட புலத்துப் பண்புகளைக் கொண்ட இப்புலவர்களை நம்பினர். தானமளித்தனர். பதிலுக்கு, புலவர்கள் வேதங் களிலும், ஸ்மிருதிகளிலும், புராணங்களிலும் வருணிக்கப் பட்ட கடவுளர்களுடன் தமிழகத்து மன்னர்களை ஒப்பிட்டனர். இவர்களுக்கு, மக்களின் அறிந்தேற்பினைப் பெறத் தொன்மங்கள் தேவைப்பட்டன. எனவே, ஆள விரும்புவோர் தங்கள் குலத்தினரைத் தொன்மங்களுக்குள் இட்டுச் சென்றனர். இவ்வாறு, பெருஞ்சோற்று உதியன் மக்களிடத்தில் வேந்தன் என்னும் அறிந்தேற்பினைப் பெறும் பொருட்டுத் தம்மைப் பாரதப்போர் என்னும் தொன்மத்தோடு தொடர்புபடுத்திக் கொண்டான்3. இப்படித் தமிழ் மன்னர்கள் இந்தியமயமாதலுக்குத் தம்மை இணைத்துக் கொண்டனர். வழுதிகளும், கிள்ளிகளும் வீரகுணத்தினை விடுத்து வேதகுணத்தினைத் தொட்டு நடத்தினர். போரிட்டு பிற இனக்குழுக்களை வெல்வதைக் காட்டிலும் வேள்வி நடத்தி மக்களின் இதயங்களை வென்றிடலாம் என்று நம்பினர். தமிழகத்தில் தோன்றிய இனக்குழுத்தலைவர்களுக்கே மக்களின் அறிந்தேற்பினைப் பெறுதற்குத் தொன்மங்களையும் புராணக் கதைகளையும் இலக்கியங்களில் பதிய வேண்டிய தேவை இருந்த தென்றால், சாதவாகனர்களிடம் குறுநிலத் தலைவர்களாக இருந்த பல்லவர்கள் மொழிபெயர் தேயமான வட வேங்கடத்திற்கு அப்பால் இருந்து தமிழகத்தில் தம் செங்கோலை ஊன்றுவதற்கு எவ்விதமான தொன் மங்களைத் தாம் வெளியிட்ட பட்டயச் சான்றுகளில் பதித்திருப்பர் என்று கண்டறிவது இங்கு நோக்கமாகக் கொள்ளப்படுகிறது.
இந்திய மொழிகளில் தமிழிற்கும் பிராகிருதத்திற்கும் தான் ஒரே கால கட்டத்தில் இலக்கிய வளமும் கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. தென்னகத்தின் ஆந்திரப்பகுதி களிலுள்ள சாதவாகனர்களின் பிராகிருத மொழிக் கல் வெட்டுகள் போக முற்பல்லவர் (கி.பி. 300 - 600) என்போர் பிராகிருத மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும்
செப்புப் பட்டயங்களை வெளியிட்டனர். அச்சான்றுகளின் மொழி சமஸ்கிருதம் கலந்த பிராகிருதமாயிருக்க, எழுத்துக்கள் கிரந்தமாயிருந்தன. தமிழ் மொழியிலும் சான்றுகளை வெளியிட்டனர். இச் செப்புப் பட்டயங் களில் பல்லவர்கள் சில தொன்மங்களைப் பதித்துள்ளனர். இத்தொன்மக் கதைகளில் தங்களின் முன்னோர்களாக புராணங்களில் சொல்லப்பட்ட கடவுளர்களையும், முனிவர்களையும் அடையாளம் காட்டுகின்றனர். இவற்றுள் சொல்லப்பட்ட கடவுளர் பாத்திரங்கள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்ட கடவுளர்களாக உள்ளனர். பல்லவர்கள் தங்கள் முன்னோர்களாக தொன்மங்களில் சுட்டியவற்றுள் சிவன், விஷ்ணு, பிரம்மா போன்ற புருடகடவுளர்களும், துரோணர் போன்ற நரபுருடர்களும் மீண்டும் மீண்டும் சுட்டப்படுகின்றனர். இங்கு, பல்லவர் செப்பேடுகளில் சொல்லப்பட்ட தொன்மங்களையும் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட தொன்மங்களையும் இணைத்துப் பார்க்கலாம். (பின்னிணைப்பு).
சமணம் தமிழகத்தில் பரவலாக ஆதரவு பெற்றதனைக் கல்வெட்டுச் சான்றுகள் உறுதிசெய்த போதிலும், அக் கல்வெட்டுக்களில் சமணத் தத்துவங்கள் பதியப்பட வில்லை. பல்லவ மன்னர்களில் சிலர் சமணராயிருந்தும், தம் செப்புப்பட்டயங்களில் வைதீகத் தொன்மங்களைப் பதித்தனரேயன்றிச் சமண சமயக் கொள்கையினை அன்று. ஒழுக்கத்தினைப் போதிக்கும், கொல்லாமையை (போரினைத் தவிர்க்கும்) வலியுறுத்தும் சமண சமயக் கருத்தினைப் பின்பற்றி மெல்ல எழும்பும் பல்லவர் தம் ஆட்சியினை விரிக்க முடியாது. இதனை அறிந்தே காலத்தேவைக்கேற்ப மதம் மாறியிருப்பர். ஆட்சிப்பரப்பினை விரிக்க வேண்டு மெனில் போரிட வேண்டும். அதற்கு வீரகுணத்தினை அரச குடும்பங்களுக்கும், மக்களுக்கும் ஊட்ட வேண்டும். எனவேதான், இதிகாச கதாபாத்திரங்களின் வீரபுருஷர்களான துரோணரையும், அசுவத்தாமனையும் முன்னோராக ஏற்றுக்கொண்டனர் போலும்.
அரச வமிசத்தினர் மதம் மாறியதனைத் தமிழர் புறக்கணிப்பரோ என்று பல்லவர் எண்ணியிருப்பர். இம்மனவோட்டத்தின் விளைவாக வந்த உளக்காய்ச்சலை ஈடுகட்டுதற்கு மருந்து தேடியிருப்பர். தமிழ்ச்சமூகம் ஏற்கெனவே சங்க இலக்கியங்களில் பதித்து வைத்திருந்த வைதீகத் தொன்மங்கள் இவர்களுக்கு மருந்தாய்ப் பயன்பட்டன. சங்க இலக்கியங்களில் கடவுளர் களைச் சுட்டும் சில சொற்கள் அரசர்களைச் சுட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளன4. இதனை உணர்ந்த பல்லவர் தாமும் வைதீகத் தொன்மங்களைப் பட்டயச் சான்றுகளில் பதித்திருப்பர். இது தமிழோடும் தமிழரோடும் தம்மைப் பல்லவர் இணைத்துக்கொண்ட உத்தியாகும். இதனால், வேங்கடத்திற்கு - அடுத்த மொழிபெயர் தேயமான வடபுலத்திலிருந்து பல்லவர் நிலம் பெயர்ந்தனர் என்ற கூற்று தமிழர் மனங்களில் மறக்கடிக்கப்படுகிறது.
இவ்வாறு, தமிழ் மண்ணோடு தமக்கு ஒரு தொப்பூழ்க் கொடி உறவு இல்லாத நிலையில் இத்தொன்மங்கள் உறவினை உண்டாக்கின என்று கொள்ளலாம். இரத்த உறவினை உண்டாக்குதற்குப் பிறிதொரு தொன்மமும் உருவாக்கப்பட்டது. தமிழர்கள் வணங்கி வந்த கடவுளர் களைத் தாமும் வழிபடத் தொடங்கியதன் மூலம் தமிழரின் சமய வலயத்திற்குள் வந்துவிட்ட பல்லவர் நாககன்னிகைக் கதையினைத் தொடர்புறுத்தி தமிழரின் சமூக வட்டத் திற்குள் வந்தனர்.
தொன்மங்களில் தாங்கள் குறிப்பிட்ட கடவுளர் களுக்குச் சிலையுரு தந்து போற்றிய பல்லவர் இரத்த உறவினைப் பெற்றுத் தந்த நாககன்னிகைக்கும் சிலையுரு வைத்தனர்.
குறிப்புகள்
1. இக்கருத்தினை ஓராய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெ. மாதையன், சங்ககால இனக்குழுச்சமுதாயமும் அரசு உருவாக்கமும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2004, ப.158. ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று. இவ்வுலகத்து இயற்கை (புறம் : 76,2) என்ற பாடல் வரியினை இவ்வறிஞர் நம் கவனத்திற்குத் தருகிறார்.
2. ச.வையாபுரிப்பிள்ளை தம் ஆய்வில் இக்கருத்தினை வலியுறுத்தியுள்ளார். ‘அரசர் முதலியவர்களை இசை யினாலும் கூத்தினாலும் மகிழ்வித்து அவர்களுக்குத் தோழர் என்ற நிலையில் பல சந்தர்ப்பங்களிலும் உதவி வந்த பாணர்கள் தங்கள் பதவியை இழந்து விட்டார்கள். இவர்களால் பேணப்பட்டு வந்த இசையும் கூத்தும் ஆதரவிழந்தன’ என்று பாணரின் சரிவு பற்றிக் கூறுகையில் அரசர் - ஆரியர் உறவு பற்றியும் பின்வருமாறு கூறுகிறார். ‘அரசருக்கு நிமித்திகராகவும், புரோகிதராகவும் மந்திரி களாகவும் இவர்கள் (ஆரியர்) அமைந்தனர்’ அரசருக்கும் அந்தணருக்கும் இடையிலான உறவு பற்றிப் பேசும் போது பின்வருமாறு கூறுகிறார். ‘அந்தணனடைந்த பெருவெற்றியென்று கூறத் தகுவது ஒரு பாண்டியனைப் பலயாகங்கள் இயற்றும்படி செய்து அவனைப் பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி என்ற பெயராற் சிறப்பித்ததும் (புறம் : 15), ஒரு சோழனை இராஜசூய யாகம் புரியும்படி செய்து அவனை இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயராற் சிறப்பித்ததும் (புறம் : 16), பல்யானை செல்கெழு குட்டுவன் என்ற சேரனிடமிருந்து பாலைக் கௌதமன் தானும் தன்பத்தினியும் சுவர்க்கம் புகுதற்காக ஒன்பது பெருவேள்வி வேட்கப் பெரும்பொருள் பெற்று, பின் அவனைத் துறவு பூண்டு காடு செல்லும்படி செய்ததும் (பதிற்றுப்பத்து, 3 பதிகம்) ஆம். இவ்வுதாரணங்களிலிருந்து ஆரியரது கலைப்பண்பாடு தமிழ் நாட்டில், தமிழ்ச் சமுதாயத்தில் உயர்ந்த படியிலுள்ள அரசர் முதலிய பெருமக்களையே முதன்முதலாக வசீகரித்தார் என்பது விளங்கும்.’ எஸ். வையாபுரிப் பிள்ளை, காவியகாலம் : நூற்களஞ்சியம், தொகுதி - 3 (முதற்பதிப்பு) சென்னை. 1991.பக்.62; 82. இந்நூலிலேயே குமட்டூர்க் கண்ணனார், காப்பியாற்றுக் காப்பியனார், கபிலர் போன்ற அந்தணப் புலவர்கள் அரசர்களுக்கு இணையாக அந்தஸ்து பெற்ற தனையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலது, ப.68.
3. புறம்-2லும், அகம்-233லும் பதியப்பட்ட உதியஞ் சேரல் என்ற சேர மன்னன் பாரதப்போருக்குப் பெருஞ்சோறு கொடுத்தான் என்பதே தமிழகத்திற்கு வந்த வடபுலத்துப் பண்பாட்டுக் கருத்துக்களில் அரசியலுக்கு மிகவும் பயன் பட்டது எனக் கொள்ளலாம். இத்தொன்மம் பற்றிப் பலரும் பல்லாண்டுகளாக ஆய்ந்துள்ளனர்.
4. குறிப்பாக நெடியோன் என்னும் சொல் கடவுளைச் சுட்டுவதற்கு மட்டுமல்லாமல் ‘மன்னனைச் சுட்டவும்’ பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கண்டறியப் பட்டுள்ளது. பெ.மாதையன், வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 2001,ப.101.
5. பல்லவர் தோற்றுவாய்பற்றி வரலாற்றறிஞரிடையே வெவ்வேறு கொள்கைகள் நிலவி வருகின்றன. பல்லவர் தமிழரே என்பர் சிலர்; தமிழரல்லர் என்பர் சிலர். பல்ல வரைத் தமிழரென்போர் தொண்டைமான் இளந்திரையன், தொண்டையோர் மருக, திரையர் என்ற சங்கச் செய்யுள் களின் தொடர்களைத் தொண்டைநாடு, தொண்டையர் போன்ற பிற்காலச் செய்யுள்களிலுள்ள குறிப்புகளோடு பல்லவரை இணைத்துப் பார்ப்பர். மணிபல்லவத்தீவு, நாக கன்னிகைக் கதை போன்றவற்றையும் கருத்திற் கொள்வர். பல்லவர் தமிழரென்றால் புராண இதிகாசக் கதைகளின் புருடபாத்திரங்களைத் தம் முன்னோராகக் குறித்திருக்க மாட்டார். சங்ககாலமன்னர்கள் / வேந்தர்கள் வடபுலத்து வழிபாட்டு முறைகளைப் பின்பற்றினரேயன்றி தங்களின் முன்னோராக புராணப்பாத்திரங்களைக் கொள்ளவில்லை.
பல்லவர் தோற்றுவாய் பற்றியும் அவர்கள் தமிழரா? இல்லையா? என்பது பற்றியும் சென்ற நூற்றாண்டின் முதல் கூற்றிலேயே வாதங்கள் தொடங்கிவிட்டன. எஸ். கிருஷ்ண சுவாமி அய்யங்கார், பி.டி. ஸ்ரீநிவாச ஐயங்கார் போன் றோரின் வாதங்கள் முன்னுதாரணங்களாய் அமைந்தன. நூறாண்டுகளைத் தாண்டும் நிலையிலும் இவ்விவாதம் தொடர்கிறது. பல்லவர் தோற்றுவாய்பற்றிப் பல கொள்கைகளை வாதிட்ட ஆர். கோபாலன் தெளிவான முடிவிற்கு வரவில்லை. அண்மையில் ‘பல்லவர்கள் ஆந்திரர்கள் என்ற கருத்தே ஏற்றுக்கொள்ளும்படியாய் உள்ளது’ என்று கல்வெட்டறிஞர் சு. இராஜவேலு கூறி யுள்ளார்.
இக்கூற்று உண்மையெனில், இங்குக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைச் சரியெனக் கொள்ளலாம்; இல்லையேல் தள்ளலாம்.
S. Krishna swamy Aiyangar, Some Contuributions of South India to Indian culture (First Published, 1923) cosmo Publications, New Delhi. 1981; P.T.Srinivasa Iyengar, History of the Tamils : From the beginning to 600 AD, New Delhi (Frist Published, 1929) Asian Educational Service, 1929; R. Gopalan, studies in the History of the Pallavar of Kanchi, University of Madras, 1929; S. Rajavelu, Migration of Brahmins to Tamil Nadu under the Pallavas in (ed) S.Rajagopal, Kaveri : Studies in Epigraphy Archaeology and History (Professor. Y. Subbarayalu Felicitation volume) Panpattu Veliyiittakam, Chennai, 2001. P.407. fn.1