Written by S NAGARAJAN
Date: 11 February 2017
Time uploaded in London:- 6-24 am
Post No.3625
Pictures are taken from various sources; thanks.
contact: swami_48@yahoo.com
சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 21
இரண்டாம் பாகம் – முதல் கட்டுரை
இந்தக் கட்டுரை சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்னர் 2-12-1973 தினமணி சுடர் இதழில் வெளியான எனது கட்டுரை.
பாரதத்தின் பழம்பெரும் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்!
by ச.நாகராஜன்
மனிதர்கள் கூட்டமைப்பாக ஓரிடத்திலே தங்கி வாழ்ந்து தமக்கெனச் சிறப்பான பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் என்று ஏற்படுத்திக் கொண்டார்களோ, அன்றே தேசம் பிறந்தது. இயற்கையான எல்லைகளைக் கொண்டு, பொதுவான இலக்கியம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், கருத்துக்கள் ஆகியவற்றைக் கொண்ட மனிதத் தொகுதியையே தேசம் என்று ஹோலி காம்ப் (Hole Combe) பர்கெஸ் (Burgess), கெட்டல் (Gettell) போன்ற மேனாட்டறிஞர் உரைப்பர். பூகோள எல்லையை வெறும் உடலாகவும், பழம் பெரும் பண்பாடு, மரபு, பழக்க வழக்கங்களை ஆன்மாகவும் உருவ்கப்படுத்துகிறார் சர் எர்னஸ்ட் பார்கர் (Sir Ernest Barrmer) என்ற தற்கால அறிஞர்.
இந்த நோக்கில் பாரதம் ஒன்றுபட்ட தனிப்பெரும் நாடாக பண்டு தொட்டு இலங்கி வந்திருக்கிறது. இதற்கான சான்றுகளை சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம்.
நாட்டு எல்லைகள்
இமயம் முதல் குமரி வரை பரவியுள்ள பூமியே பாரதம் என்று விஷ்ணு புராணம், மகாபாரதம், பாகவதம் ஆகிய நூல்கள் கூறுகின்றன. சங்க நூல்களிலும் நம் எல்லை பற்றிய இத் தெளிவான கருத்தைப் பல இடங்களில் காண்லாம்.
“தென் குமரி, வட பெருங்கல்
குண குட கடலா எல்லை” (புறம் 17)
வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்
குணா அது க்ரைபொரு தொடுகடற் குணக்கும்
குடா அது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் (புறம் 5)
என்று புறநானூற்று அடிகளும்,
“ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொ யாயிடை” (பதிற்றுப்பத்து 11)
“நெடுவரை
வடதிசை எல்லை இமயமாகத்
தென்னங் குமரியொடு ஆயிடை அரசர் (பதி-43)
என்ற பதிற்றுப்பத்து அடிகளாலும், பண்டாட்டால் ஒன்று பட்டிருந்த நாடு, பல அரசர்களால் ஆளப்பட்டதென்றாலும், அதை ஒவ்வொரு அரசனும் தன் ஆளுகைக்குக் கீழ்க் கொணர முயற்சித்து வெற்றி பெருவதைப் பெருமையாகக் கொள்வது வழக்கம் என்றும் அறிகிறோம்.
இலக்கிய ஒருமை
தேசம் முழுவதெற்கும் பொதுவான இலக்கியமெனத் திகழும் இராமாயண, மகாபாரதக் கதை நிகழ்ச்சிகள் சங்க இலக்கியம் முழுதும் காணப்படுகின்றன.
பீமன் அரக்கு மாளிகைத் தீயிலிருந்து பாண்டவர்களைக் காப்பாற்றியது (கல்-25), பீமன் துரியோதனன் தொடையை முறித்தது (கலி-52), துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றி இழுத்தது (கலி 101) ஆகிய பாரதக் கதை நிகழ்ச்சிகளையும் சீதையின் ஆபரணங்களைக் குரங்குகள் அணிந்தது, சீதையை இராவணன் தூக்கிச் சென்றது (புறம் 378), தனுஷ்கோடியில் இராமன் தன் கை கவித்துப் பறவைகளின் ஒலியை அடக்கியது (அகம் 70) ஆகிய இராமாயணக் கதை நிகழ்ச்சிகளையும் சங்க இலக்கியம் கூறுவதிலிருந்து இந்தப் பொதுவான இலக்கியம் பற்றிய உணர்வு பழங் காலத்திலேயே இருந்தது என்று தெரிகிறது..சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட புராணச் செய்திகளை சங்க இலக்கியம் கூறுகிறது.
பண்பாட்டு ஒருமை
பாரதப் பண்பாடு வலியுறுத்தும் உருவ வழிபாடு, இம்மை, மறுமை பற்றிய எண்ணம், மறுபிறப்பில் நம்பிக்கை, கங்கை, காவிரி, இமயம் போன்ற ஆறு, மலைகளைப் பற்றிய புனித உணர்வு, கற்பிற்கு அருந்ததியைக் காட்டல், வேள்வி இயற்றல் போன்றவற்றை சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.
திருமுருகாற்றுப்படையில் ஆறு முகங்களைப் பற்றி வரும் அருமையான விளக்கமும், பதிற்றுப்பத்தில் வரும் ‘க்டவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி’ (5ஆம் பதிகம்) என்ற வரியும் உருவ வழிபாட்டைச் சங்க கால மக்கள் ஏற்றிருந்தமையை வலியுறுத்துகின்றன. மேலும் க்டவுளை வாழ்த்தல், கடவுளுக்குப் பலி கொடுத்தல், கோவில் அமைத்தல் முதலானவற்றைப் பெரும்பாணாற்றுப்படை (வரி 39), நற்றிணை (358), பட்டினப்பாலை (வரி 286-287) ஆகியவற்றில் காண்கிறோம்.
தவறான வழியில் ஈட்டும் பொருள் இம்மைக்கும், மறுமைக்கும் பகையாக இருக்கும் என்ற நம்பிக்கையைக் கலித்தொகை (14) கூறுகிறது.
“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்றி எய்துப”
என்ற அகநானூற்று (66) அடிகள் சங்க கால மக்களின் மறு உலக நம்பிக்கையை வலியுறுத்துகிறது.
“தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்:” (புறம் 27)
“உயர்ந்த வேட்டத்து உயர்ந்தி சினோர்க்கு
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறிப் பிறப்பின் இன்மையுங் கூடும்” (புறம் 214)
என்கின்ற புறநானூற்று அடிகளால் சங்க காலத்தில் பாரதப் பண்பாட்டின் அடிப்படையான மறுபிறப்பு நம்பிக்கையையும், வினைப்பயன் பற்றிய எண்ணமும் இருந்தது என்பது விளங்குகிறது.
சிவன் உறைந்திருப்பதால் புனிதம் பெற்ற இமயம் என்ற பொருளில் ‘கடவுள் உறைய கல்லோங்கு நெடுவரை’என்ற அடியைப் பதிற்றுப் பத்தில் காண்கிறோம். பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு இமயத்தில் கல் எடுத்து புனிதமான் கங்கையிலே நீராட்டலை ‘ பேரிசை இன்பல் அருவிக் கங்கை மண்ணி; என்று பதிற்றுப்பத்து (பதிகம் 5) குறிப்பிடுகிறது.
‘வடமீன் புரையும் கற்பின் மடமொழி’ என்று புறநானூறும் (122), ’வட்மீன் போல் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள்’ என்று கலித்தொகையும் (2) கற்பிற்கு எடுத்துக்காட்டாக அருந்ததியைக் கூறுகின்றன.
பாரதம் முழுதும் வேள்வி இயற்றல் பண்டைக் காலத்தில் பரவி இருந்தது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னம் பெயராலும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழன் பெயராலும் சங்ககால் மன்னர்கள் வேள்வி இயற்றிய செய்தியை உணரலாம்.
பிணத்தைப் பாடையில் கொண்டு செல்லல் (புறம் 286) போன்ற பழக்க வழக்கங்களும் இறந்த கணவனுக்குக் காதலி பிண்டம் வைத்தல் போன்ற ச்டங்குகளும் நாடு முழுவ்தற்கும் பொதுவானவையாக இருந்தவை தான்.
ஒரே நாடு பாரதம்
இப்படி இயற்கையான பூகோள எல்லையால் பொதுவான உடலையும், ஒரே பண்பாடு, மரபு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் பொதுவான ஆன்மாவையும் பாரதம் கொண்டிருந்தது என்பது சங்க இலக்கியம் கூறும் உண்மை. அதாவது ஒரே தேசம் என்ற எண்ணம் சங்க இலக்கியம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானதாகும்.