போனவாரம் தினத்தந்தி மூன்றாம் பக்கத்தில் கீழ்க்காணும் விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் இருந்த உறவினரிடம் காண்பித்தேன்.
”சித்தப்பா, இது என்ன விளம்பரம்னு தெரியுதா உங்களுக்கு?”
பேப்பரை மடித்து பல கோணங்களில் இப்படியும் அப்படியுமாகத் திருப்பிப் பார்த்தார் சித்தப்பா.
”ம்.. எனக்குப் புரிஞ்சு போச்சு. பெட்ரோல் வண்டியை காஸ் சிலிண்டருக்கு மாத்துறதுக்குள்ள கம்பெனி இது. என்னப்பா அது..ஆங் டாடா மேஜிக். அவங்க தான் இப்படி விளம்பரம் கொடுத்திருப்பாங்க.”
காபியை எடுத்துக் கொண்டு சித்தப்பா மகன் வந்தான்.
”அட, இதே மாதிரி விளம்பரம் சென்னைல எல்லா பஸ்லயும் பின்னாடி பெரிசு பெரிசா இருக்கே. இதுல ஆட்டோ காரர் போட்டோ. ஆனா ஒவ்வொரு விள்ம்பரத்திலயும் வேற வேற போட்டோ இருக்கும். அந்த டிவி சீரியல் நடிகை…பேரு மறந்திடுச்சு, அவ போட்டோ இருக்கும். விஜிபி குரூப் சேர்மன் செல்வராஜ் போட்டோ கூட பாத்திருக்கேன். இது ஏதோ சுயதொழில், சுயமுன்னேற்றம் சம்பந்தமான விளம்பரம்னு தோணுது.”
புடவைத் தலைப்பால் வியர்வையைத் துடைத்துக் கொண்டே வந்த சித்தி அந்த விளம்பரத்தைப் பார்த்தார்.
”ஆமாம், நான் கூட டிவில பாத்திருக்கேன். என்னடா விளம்பரம் இது?”
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த கணினியில் விளம்பரத்தில் கண்ட இணையதள முகவரியைத் தட்டினேன் – powertochangeindia.com.
முதலிலேயே பொறி தட்டியது. ஊகம் சரிதான். The usual suspects. வழக்கமான முகமூடிக் கொள்ளையர்கள் தான். ஆனால் மிக நேர்த்தியாக, ஸ்டைலாகத் தோற்றமளிக்கும் விளம்பர முகமூடி.
அதுவும் இணையதளத்திற்கு எப்படிப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள் – ’பவர் டூ சேஞ்ச் இந்தியா’வாம்.
இந்த இணையதளத்தில் உள்ள விளம்பர வீடியோக்களில் ’சாட்சியம்’ தருபவர்கள் தங்கள் மன பலவீனங்களையும், மனப்பிராந்திகளையும், தாங்கள் மூளையை அடகுவைத்ததையும், வெளியில் சொல்லமுடியாமல் வேறுவழியின்றி தாங்கள் எடுத்த சில முடிவுகளையும் ஏதோ வாழ்க்கையில் ஏற்பட்ட அற்புத ’மாற்றம்’ என்று கதை விடுகிறார்கள். ஆனால் ஒரு பொது அம்சம் – எல்லாவற்றிலும் இந்துக்களாக இருந்தவர்கள் மதம் மாறுகிறார்கள்.
உன் பிசினசை நான் பாத்துக்கிறேன், என் ஊழியத்தை நீ செய் என்று ஏசு சொன்னதாகவும், அதன் படியே தான் நடப்பதாகவும் வி.ஜி.பி செல்வராஜ் ஒரு வீடியோவில் சொல்கிறார். இவர் பேசுவதைப் பார்த்தால் இந்த மதவெறியர் நடத்தும் நிறுவனங்களின் லாபம் முழுவதும் கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரத்திற்குத் தான் செலவழிக்கப் படுகிறது என்பது வெளிப்படை. இதைப் பார்த்தபிறகாவது. சுயமரியாதையும், தங்கள் பண்பாட்டின் மீது குறைந்தபட்ச பற்றும் கொண்ட இந்துக்கள் விஜிபி கடைகளில் பொருட்கள் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். விஜிபி நிறுவனத்தை பகிஷ்கரிக்க வேண்டும்.
இன்னொரு வீடியோவில், தான் கலைக்குடும்பத்தில் பிறந்தவள் என்பதை அழுத்திச் சொல்லும் சுவர்ணமுகி என்பவர், ஆண்டவர் ஏசுவை ஏற்றுக் கொண்டதும் சிறுவயது முதல் தான் கற்றுக் கொண்டு சாதனைகள் படைத்த பரதநாட்டியக் கலையை பாவம் என்றும் தீயசெயல் என்றும் உணர்ந்து அதை விட்டுவிட்டதாக சாட்சியம் அளிக்கிறார். ஆபிரகாமிய மூளைச்சலவைக்கு முற்றிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டுவிட்ட இவர் ”முன்னாள் நடனக் கலைஞர்” என்று தன்னை அழைத்துக் கொள்கிறார். இந்தப் போலியைத் தான் முன்பு எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழக அரசு “அரசவை நர்த்தகி” என்று பட்டமளித்து கௌரவித்திருந்ததாம். கொடுமை!
சாந்தி கணேசன் என்ற டிவி சீரியல் நடிகை தான் தேவாங்க செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை ஆரம்பத்தில் மறக்காமல் குறிப்பிட்டு விட்டு, தான் வீட்டில் வைத்து வணங்கிய சிலைகள் எதுவும் கஷ்ட நேரத்தில் தன்னைக் காப்பாற்றவில்லை என்று பேசிக் கொண்டு போகிறார். பிரதீப் பிலிப், ஐ.பி.எஸ் என்ற காவல்துறை ஆணையர் கூட ஒரு சாட்சியமாக வருகிறார்.
இந்த எல்லா விளம்பர வீடியோக்களிலும் சன்னமாக (in a subtle way) இந்து தெய்வங்களின் மீது அவதூறு கற்பிக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும் “சாட்சியங்கள்” பேசியிருக்கிறார்கள்.
சரி, விளம்பரம் என்று வந்தாயிற்று. பிறகு எல்லா விளம்பரமும் போல இதுவும் ஒன்று என்று ஆகிவிட்டது. இஷ்டப் பட்டவன் பொருளை வாங்குவான், வேண்டாதவன் கண்டுக்காம போய்விடுவான். விடுங்க சார் என்கிறார் நண்பர் ஒருவர்.
அவ்வளவு தானா? இந்த விளம்பர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் மதமாற்றி சொல்வதைக் கேளுங்கள் –
எதேச்சையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் போனபோது அங்கேயும் இந்த விளம்பரம்! ஸ்டேஷன் உள்ளே நுழையும் இடத்திலேயே பூதாகாரமான அளவில் வைக்கப் பட்டுள்ளதைப் பார்க்க நேர்ந்தது. வாஸ்தவம், இந்த’வரலாறு காணாத’ பிரசாரத்தின் பின் எத்தகைய நீண்டகால திட்டமிடல் உள்ளது என்பதும் இவர் சொல்வதிலிருந்து தெரிய வருகிறது.
நவீன நுகர்வுக் கலாசாரத்தில், எல்லாமே வியாபார மயமாக்கப் பட்டுள்ள சூழலில், எல்லாத் துறைகளிலும் விளம்பரங்கள் வந்துவிட்டன. இன்றைக்கு நம்மால் தவிர்க்கமுடியாதவையாக தெருக்களிலும், பொது இடங்களிலும், வாகனங்களிலும், பத்திரிகைகளிலும், மின் ஊடகங்களிலும் எங்கெங்கும் விளம்பரங்கள் தட்டுப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் உலகின் எல்லா நாடுகளிலும், பிரம்மாண்டமான கார்ப்பரேட் அமைப்புகளிலும் கூட, விளம்பரத்திற்கு என்று தெளிவான நெறிமுறைகள் (Advertising ethics) உள்ளன. விளம்பரம் என்பது நுகர்வோரை திகைக்க வைப்பதாக, ஆர்வம் கொள்ள வைப்பதாக இருக்கலாம் – ஆனால் பச்சையாக ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது. ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்து இன்னொரு பொருளைத் தலையில் கட்டக் கூடாது. மேலும், விற்கப் படும் பொருளின் பக்க விளைவுகள், அபாயங்கள் பற்றித் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இவையெல்லாம் முக்கிய விதிகள்.
கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் செய்யும் இந்த மூன்றாந்தர மதமாற்ற பிரசாரத்தில், வெளிப்படையாக பார்வையில் உள்ள விளம்பரங்களில், ஏசு பற்றியோ, கிறிஸ்தவம் பற்றியோ எந்த ஒரு குறிப்பும் இல்லை. மிகக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள். ஏன்?
ஏற்கனவே தமிழகமெங்கும் சுவிசேஷ நற்செய்திக் கூட்டங்கள், உபவாச ஜபக் கூட்டங்கள், வெறியூட்டும் கிறிஸ்தப் பிரசாரங்கள் என்று எல்லா ஊர்களிலும், கண்ட இடங்களிலும் போஸ்டர்களும், விளம்பரப் பலகைகளும் தென்பட்ட வண்ணம் உள்ளன. அதோடு, சுவர்களிலும் பெரிது பெரிதாக கிறிஸ்தவ மதப்பிரசார வாசகங்களை எழுதித் தள்ளிவிட்டார்கள். மரங்களிலும், மலைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் வன்முறைச் சின்னமான சிலுவையை வரைந்து வரைந்து தங்கள் மதமாற்ற அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் மிக்க பொறுமையுடன் சகித்துக் கொள்ளப் பழகி விட்டிருக்கிறார்கள். அப்படி சகித்துக் கொள்ள நேர்ந்தபோதும், அடித்தட்டு மக்கள் உட்பட எல்லாவித குடும்பங்களிலும் நாட்டைக் கெடுக்கும் இந்த நயவஞ்சக தீயசக்திகளைப் பற்றி குழந்தைகளுக்கும், நண்பர்களுக்கும் எச்சரிக்கை செய்து வைத்திருக்கிறார்கள். பல கீழ்நடுத்தர வர்க்க குடும்பங்களில் கூட, கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்தாலும் ஆபிரகாமிய வைரஸ் தங்கள் குழந்தைச் செல்வங்களைத் தாக்கி விடக் கூடாது என்று பெற்றோர்கள் கவனமாக இருக்கிறார்கள்.
சக்தி செய்யும் புதுமை பல பேசு – நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு
என்ற பாரதியார் பாடலைப் படித்துள்ள தமிழர்கள், ஏசு என்ற தமிழ்ச் சொல்லின் உண்மையான பொருள் என்ன என்பதையும் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான், வெளிப்படையாக எந்த கிறிஸ்தவ அடையாளமும் இல்லாமல் மாறுவேட விளம்பரம் (surrogate advertising) செய்கிறார்கள். நான் முதலில் குறிப்பிட்ட சித்தப்பா குடும்பம் போலத் தான் அனேகமாக எல்லாரும் இந்த விளம்பரங்களை அர்த்தப் படுத்திக் கொள்வார்கள். அவர்களில் கணிசமான பிரிவினர் விளம்பரத்தில் உள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளும் போது தான், அங்கே ஆரம்பிக்கும் மதமாற்ற மூளைச் சலவை! மதமாற்றத் தூண்டிலில் விழுவதைத் தடுக்கும் முதல் கட்ட தடையை இப்படி சாதுர்யமாக விலக்க முயற்சிக்கிறார்கள்.
கருத்து சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், நுகர்வோர் உரிமைகளையும், வணிக நெறிகளையும் மதிக்கும் ஒரு சமுதாயமாக, நாம் இந்த விளம்பரத்தைத் தோலுரிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும். கண்டனம் செய்ய வேண்டும்.
மதமாற்றிகள் காசு தருகிறார்களே என்று பத்திரிகைகள் இந்த ஏமாற்று விளம்பரத்தை வெளியிடுகிறார்கள். கிறிஸ்தவ அமைப்பின் பெயரையும் சேர்த்துப் போட்டால் தான் வெளியிடுவோம் என்று அவர்கள் வலியுறுத்த வேண்டும். தேசிய, கலாசார உணர்வுள்ள பத்திரிகைகளும், ஊடகங்களும் மதமாற்றத்திற்குத் துணைபோகும் எந்த விளம்பரங்களையும் வெளியிட மறுக்க வேண்டும்.
அரசு பஸ்களிலும், ரயில் நிலையங்கள் போன்ற அரசுக்குச் சொந்தமான பொது இடங்களிலும் இந்த ஏமாற்று மதமாற்ற விளம்பரங்கள் இடம்பெறுவதை எதிர்த்து வழக்குப் போடவேண்டும்.
இதே சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பஸ்களில் ஜக்கி வாசுதேவ் அவர்களின் ’ஆனந்த அலை’ விளம்பரம் கூட வருகிறது. அதுவும் மதப்பிரசாரம் தானே, அதை அனுமதித்த ரயில்வே ஏன் இதை அனுமதிக்கக் கூடாது என்கிறீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார்.
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த விளம்பரத்தில் ஜக்கி வாசுதேவ் அவர்களின் படத்தைப் போட்டு, அது ஒரு யோகப் பயிற்சி, தியானப் பயிற்சி முகாம் என்ற தெளிவான குறிப்பு இருக்கிறது. மேலும், நிகழ்ச்சி அறிவிப்பு என்ற வகையில் அது நேரடியான, எந்த ஒளிவு மறைவும் இல்லாத விளம்பரம். இதே போல, நேரடியான கிறிஸ்தவ மதமாற்றப் பிரசார விளம்பரம் என்று பார்த்தவுடனேயே தெரிந்தால், பஸ்களிலும், அரசு பொது இடங்களிலும் வைக்க சம்பந்தப் பட்ட அரசுத் துறை நிர்வாகத்தினர் அதை அனுமதித்திருப்பார்களா என்பது சந்தேகமே. எனவே இந்த விளம்பரதாரர்கள் மக்களை மட்டுமல்ல, அரசையும் சேர்த்து ஏமாற்றியிருக்கிறார்கள். இதற்காகவும் அவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய அக்கறையுள்ள செயல்வீரர்கள், அரசு உபகரணங்களைப் பயன்படுத்தி இத்தகைய விளம்பரங்கள் செய்யப் படுவதை எதிர்த்து பொதுநல வழக்கு போடவேண்டும்.
திருமண வாழ்க்கையில் பிரசினையா? கடன் தொல்லையா? வியாபார நெருக்கடியா? உடனே டால் ஃப்ரீ நம்பரை கால் பண்ணுங்க என்று கோட்டுப் போட்ட சேல்ஸ்மேன்கள் வந்து இந்த விளம்பரத்தில் சிரிக்கிறார்கள். இது தான் ”மாற்றும் சக்தி”யின் லட்சணமா? இதற்கு உண்மையில் என்ன அர்த்தம்?
கட்சிக் காரங்க எலக்ஷன் நேரத்துல வாக்காளர்களுக்கு லஞ்சம் குடுத்து ஐந்து வருடத்திற்கு ஆட்சியைப் பிடிக்கறதைத் தடுக்க கண்ணில விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தேர்தல் கமிஷன் கண்காணிக்கும். ஆனா எங்களுக்கு அதையெல்லாம் பத்தி எந்தக் கவலையும் கிடையாது. வெளிநாட்டுல இருந்து கோடிகோடியா வர்ற பணத்தை வச்சு, உங்களை விலைக்கு வாங்கி உங்களை மாத்திடுவோம், இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தையே மாத்திடுவோம், இங்க உள்ள கலாசாரத்தையே மொத்தமா மாத்திடுவோம். மாற்றத்தின் சக்தி! பவர் டூ சேஞ்ச் இண்டியா. அதை எந்த கமிஷனும், எந்த சட்டமும் கண்டுக்காது, மீறி எவனாவது சத்தம் போட்டா, மவனே மதச்சார்பின்மைங்கற வீச்சரிவாள எடுத்து வீசிருவோம். நாங்க யாரு தெரியுமில்ல?
இது தான் அவர்கள் சொல்லாமல் சொல்லும் செய்தி.
நமது மக்களில் பெரும்பாலரது மனதில் எம்மதமும் சம்மதம் என்ற மதச்சார்பின்மை ஜல்லி ஆழப் பதியவைக்கப் பட்டுவிட்டது. கிறிஸ்தவ இறையியல் என்பது மூடத்தனமான, ஒற்றைப்படையான குருட்டு சித்தாந்தம் என்பதும், அதிகார மமதை பிடித்து, உலகெங்கும் வன்முறையையும், காலனியாதிக்கத்தையும் கட்டவிழ்த்து விட்டு நாடுகளையும், இனங்களையும், கலாசாரங்களையும் அழித்துக் கொண்டே இருப்பது தான் கிறிஸ்தவத்தின் உண்மையான வரலாறு என்பதும் நம் மக்களுக்கு பரவலாக எடுத்துச் சொல்லப் படவில்லை. மகாத்மா காந்தியும், விவேகானந்தரும் மட்டுமல்ல, மாதா அமிருதானந்தமயியும், ஜக்கி வாசுதேவும் கூட கிறிஸ்தவ மதமாற்றத்தை தீவிரமாகக் கண்டனம் செய்துள்ளார்கள் என்ற விவரங்கள் அவர்களிடம் விளம்பரப் படுத்தப் படுவதில்லை. இந்த மதமாற்ற ஏஜெண்டுகள் ஒவ்வொருவரும் இந்திய தேசத்தைத் துண்டாடுவதற்கு, பலவீனப் படுத்துவதற்கு திட்டமிட்டு வேலை செய்யும் உலகளாவிய சக்திகளின் ஏவல்காரர்கள் என்ற விபரம் பொதுமக்களிடம் சென்று சேரவில்லை. Breaking India புத்தகத்தின் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அல்ல, மனதை மயக்கும் பொய்க் கோஷங்களைத் தான் அவர்கள் கேட்கிறார்கள். ’ஒரே கடவுளை நீங்க ஏசுங்கிறீங்க, நாங்க வாசுங்கிறோம்’ போன்ற சில்லறைத் தனமான சினிமா வசனங்கள் தான் அவர்கள் மனதில் ஏதோ தத்துவங்கள் போலப் பதிந்துள்ளன.
இந்தச் சூழலில், மதமாற்றம் பொருளியல் ரீதியாக, வாழ்க்கை வசதிகள் ரீதியாக உடனடியாக சில சாதகங்களைத் தருகிறது என்ற செய்தியை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம், துயருறும் மக்களிடம் மறைமுகமாக சபலம் ஏற்படுத்தும் விதத்தில் இத்தகைய விளம்பரங்கள் அமைந்துள்ளன. எனவே இவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த ஏமாற்றுகளை அம்பலப் படுத்துவோம், எதிர்ப்போம், தகர்ப்போம்.