அன்பின் ஜெ.
சமஸ்கிருதம் குறித்தான உங்கள் பதிவைப் படித்தேன்.
“சமஸ்கிருதம் ஒரு பொதுவான மொழி. இந்தியாவின் ஏன் உலகின் அனைத்து இந்துக் கோவில்களிலும் பொதுமைக்காக சமஸ்கிருத வழிபாடு செய்யப்படுகிறது. அய்யப்பன் கோவிலில் சமஸ்கிருதம் வந்தபின்புதான் அனைவரும் அங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்” என்கிறீர்கள்.
இந்து மதம் பொதுவாகவே பொதுமைக்கு எதிரானது என்பதை இன்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில் ‘அந்நிய மதத்தினர் பிரவேசிக்கக் கூடாது’ என்று எழுதி வைக்கப்பட்டுள்ள பலகைகள் மூலம் அறியலாம். அவ்வளவு ஏன், இன்றும் கூட சில இந்துக் கோவில்களில் எல்லா சாதியினரும் நுழைய முடியாது. ஆக மதத்தில், சாதியில் பிரிவினையைக் கடைப்பிடிக்கும் இந்து மதம் மொழியில் மட்டும் பொதுமையை எப்படிக் கடைப்பிடிக்கும் ?
’மையத்தில் சம்ஸ்கிருத வழிபாட்டுமுறை இருப்பது பிறமொழிகளில் வழிபடுவதற்கான தடை அல்ல. எல்லா இந்திய வட்டார மொழிகளும் இந்து வழிபாட்டு மொழிகளாகவே உள்ளன. எல்லா மொழிகளிலும் பல்லாயிரம் தோத்திரங்களும் பாடல்களும் உள்ளன. அவை ஆலயங்களில் பாடப்படுகின்றன’ என்கிறீர்கள் .சமஸ்கிருதம் அவ்வளவு நல்ல மொழியாக இருந்தால் ஏன் சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடிய ஆறுமுகசாமி அய்யா அடி வாங்கினார். சமஸ்கிருதம் தேவ பாஷையாகவும் ,தமிழ் நீச பாஷையாகவும் ஆனது எப்படி?
அரசியல்வாதிகளால் நமக்குச் சொல்லப்பட்டிருப்பது போல சம்ஸ்கிருதம் வடவர்களின் மொழியோ, பிராமணர்களின் மொழியோ, வைதிகத்தின் மொழியோ, இந்துமதத்தின் மொழியோ அல்ல’ என்கிறீர்கள்.
பிறகு ஏன் அந்த மொழி மற்றவர்களால் பேசவோ, புழங்கவோ படவில்லை. பிராமணர் அல்லாதார் வேதம் கற்றால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற ஸ்லோகம் எதற்கு?
பின்வரும் இன்றைய நிஜமான நிலை மாறுபட்டதாக இருக்கிறதே ஏன் ?
1. அனைத்துக் கோவில்களிலும் சமஸ்கிருதம் தான் முதன்மை மொழி. தமிழில் போனால் போகிறது என்று சில பாடல்களைப் பாடுகிறார்கள்.
2. பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர் ஆக்கும் எண்ணம் இன்று வரை நிறைவேறவில்லை. அவர்கள் இந்தத் தொழிலைக் கற்று விட்டு இன்று சும்மா இருக்கின்றனர்.
3. திருமணம், காதுகுத்து, புதுமனை புகும் விழா எனத் தமிழர்களின் அனைத்து நிகழ்வுகளும் பிராமணர்களால், நமக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில்தான் நடத்தப்படுகின்றன[ இதற்கு நானும் விதி விலக்கு இல்லை]
4. எந்தக் கோவில்களில் கூட்டம் வருகிறதோ அங்கு உள்ள சாமிகளுக்கு மட்டும் ஸ்லோகங்கள் உருவாக்கப்பட்டு பிராமணர்களால் பூசை செய்யப்படுகிறது.உ.ம் …திருப்பதி, சபரிமலை, திருச்செந்தூர்…..
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஏகப்பட்ட சிறுதெய்வங்கள் பலபேருக்குக் குலதெய்வங்களாக உள்ளன. ஆனால் சமஸ்கிருதத்தின் கருணைப் பார்வை அந்த தெய்வங்களுக்கு எல்லாம் ஏன் கிடைக்க வில்லை?
மேலே உள்ள கருத்துக்களில் ஏதேனும் பிழை இருப்பின் திருத்திக் கொள்கிறேன்.
என்னுடைய இந்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு
அன்புடன்
செல்வம்
அன்புள்ள செல்வம்,
மன்னிக்கவும், நான் ஏற்கனவே விரிவாக எழுதிய குறிப்புகளில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் உள்ளன. அவற்றை கவனிக்காமல் மீண்டும் அதே கேள்விகளையே கேட்கிறீர்கள். இந்த வகையான கவனக்குறைவு உங்களிடம் இருப்பதில்இருந்தே உங்களுடைய மேலே சொல்லப்பட்ட எல்லா வினாக்களும் வந்துள்ளன. அவை பொதுவாக சூழலில் இருந்து வந்தடைந்த மனப்பதிவுகளே ஒழிய கொஞ்சமேனும் ஆராய்ந்து நோக்கப்பட்டவை அல்ல.
இந்துமதம் பொதுமைக்கு எதிரானது என்கிறீர்கள். பத்ரிநாத் முதல் கன்யாகுமரி வரை பல்வேறு இனம்சார்ந்த, மொழி சார்ந்த,சாதி சார்ந்த கோடிக்கணக்கான மக்களால் இந்துமதவழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது என்ற கண்கூடான உண்மையையாவது மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் வேறுபடுவதையும் மறுக்கமாட்டீர்கள்.
இந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான சில வழிபாட்டு முறைகளைத் தன் மையத்தில் இந்துமதம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது, அது இந்தியா முழுக்கப் பொதுமொழியாக விளங்கிய சம்ஸ்கிருதத்தில் உள்ளது என்று நான் சொல்கிறேன். அதில் என்ன பிழை? அப்படி ஒரு மையமொழி எந்த மதத்துக்குமே இருக்கக்கூடாது என்கிறீர்களா? அல்லது இந்துமதத்திற்கு மட்டும் இருக்கக்கூடாது என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?
இக்குறிப்புகளில் நான் முன்வைப்பது ஒரு விரிவான இந்திய வரலாற்றுப் பரிணாமத்தின் சித்திரத்தை. அதன் அடிப்படையில்தான் என் விளக்கங்களை அளிக்கிறேன். அது டாக்டர் அம்பேத்கர்,டி.டி.கோசாம்பி முதல் இன்று டாக்டர் ராமச்சந்திரன் வரையிலான வரலாற்றறிஞர்கள் கூறும் ஆய்வுத்தரவுகளையும் வாதங்களையும் அடிப்படையாகக் கொண்ட, தெளிவாக விளக்கப்பட்ட, ஒரு வரலாற்றுவரைவு.
இந்து மதம் எல்லா பக்தர்களையும் சமமாக நடத்தியது, நடத்துகிறது என நான் சொல்லவில்லை. உலகில் உள்ள எந்த மதமும் அப்படி ஒரு மானுடசமத்துவத்தை உள்ளடக்கமாகக் கொண்டது அல்ல. எல்லா மதங்களுமே அதன் நம்பிக்கையாளர்களிடையே தெளிவான உயர்வுதாழ்வுகளை வரையறுத்து வைத்திருந்தவைதான். இன்றுகூட எந்த மதமும் அந்த ஏற்றத்தாழ்வுகளை முழுமையாக விட்டுவிடவும் இல்லை.
ஏனென்றால் மானுடவரலாற்றின் கடந்த காலத்தில் மனிதர்களெல்லாம் நடைமுறையில் சமம் என்ற சிந்தனையே இருந்ததில்லை. அந்தச்சிந்தனை ஒரு இலட்சியக்கனவாக உதித்துப் பல்வேறு சமூகப்போராட்டங்கள் வழியாக வளர்ந்து, சென்ற முந்நூறாண்டுகளுக்குள் உலகில் சில இடங்களில் சோதனை நடைமுறைக்கு வந்தது. இந்த நூறாண்டுக் காலத்தில்தான் உலகளாவிய ஒரு கருத்தாக அது ஏற்கப்பட்டுள்ளது. இன்னும் மானுட இனத்தில் நேர்பாதி அதை ஏற்றுக்கொண்டதில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மக்களே இன்றைய உலகில் பெரும்பான்மை என்பதை மறக்கவேண்டாம்.
இதுவரையிலான மானுடப்பண்பாட்டின் வளர்ச்சி என்பது மனிதர்களைத் திரட்டி மேல்கீழாக அடுக்கி உறுதியான சமூக அமைப்புகளை உருவாக்குவதாகவே இருந்து வந்துள்ளது. உலகமெங்கும் உள்ள எல்லா சமூகங்களும் அப்படி மேல்கீழ் அடுக்குகளாகக் கட்டப்பட்டவைதான். அவ்வாறு இந்தியநிலத்தில் பல்வேறு சமூகங்கள் உருவான காலகட்டத்தில் பிறந்து வந்தது இந்துமதம்.
இந்துமதம் ஒரு தொகைமதம். இந்தியப்பெருநிலத்தில் பல்லாயிரம் வருடங்களாக இருந்துவந்த பல்லாயிரம் இனக்குழுக்கள் சாதிமுறை என்ற அமைப்புக்குள் மேல் கீழாக அடுக்கப்பட்டு இங்குள்ள சமூகமுறை உருவானது. எந்த சாதி நிலத்தையும் வணிகத்தையும் வென்றெடுத்ததோ அது மேலே சென்றது. பிற சாதிமேல் அதிகாரம் செலுத்தியது. சமூகத்தை வழிநடத்திச்சென்றது.
இவ்வாறு பல்வேறு இனக்குழுக்கள் ஒரே சமூகமாகத் தொகுக்கப்பட்டபோது அந்த இனக்குழுக்களின் வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் ஆசாரங்களும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டன. அவ்வாறுதான் இந்துமதம் உருவானது.
பல்வேறு வழிபாட்டுமுறைகளும் சிந்தனைகளும் ஒன்றானபோது அவற்றுக்குள் ஓர் உரையாடல் நிகழ்ந்தது. பலநூறாண்டுக்காலம் பல தளங்களில் நிகழ்ந்த உரையாடல் அது. அந்த உரையாடலில் ஒவ்வொரு வழிபாட்டுமுறையும் ஒவ்வொரு சிந்தனையும் இன்னொன்றால் பாதிக்கப்பட்டன. காலப்போக்கில் அதற்கு ஒரு மையஓட்டம் உருவாகி வந்தது. அந்த மையம் பிற அனைத்தையும் இணைக்க ஆரம்பித்தது.
நடைமுறையில் இந்தப் பல்வேறு சிந்தனைகளில் எது வலுவானதோ அது பிறவற்றை விட அதிக முக்கியத்துவம் அடைந்து மையமாக ஆவதே வழக்கம். உலகமெங்கும் பார்த்தால் அந்த வலுவான தரப்பு பிற எல்லாத் தரப்புகளையும் அழித்து இல்லாமலாக்கி வெற்றிகொண்டிருப்பதையே நாம் காணமுடியும். இந்தியாவில் அது நிகழவில்லை. மாறாகப் பிறவற்றை ஒருங்கிணைத்துக்கொண்டு அந்த வலுவான தரப்பு வளர்ந்ததையே காண்கிறோம்.
இந்துமதத்தைப் பொறுத்தவரை வேதமரபு என்பதுதான் வலுவானது. ஆனால் அது பிற மரபுகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதாகவே அது இருந்தது. அனைத்தில் இருந்தும் முக்கியமான அம்சங்களை வாங்கிக்கொண்டு அது வளர்ந்தது. அந்த வளர்ச்சிப்போக்கில் வேதமரபு வேதாந்தமாகவும் பின்னர் பக்திமதங்களாகவும் மாறியது.
வைதிகமரபில் இருந்த பிரம்மம் என்ற கருத்துதான் இந்த இணைப்புப்போக்கு உருவாவதற்கான காரணம். பிரம்மம் என்பது பெயரற்ற, உருவமற்ற, எங்கும் நிறைந்த, எல்லாமாக ஆகிய ஒரு தத்துவார்த்தமான தெய்வம். அந்தத் தத்துவமாக நாம் எந்தக் கடவுளையும் காணமுடியும். கல்லையும் மண்ணையும் மிருகங்களையும் எல்லாம் பிரம்மமாக விளக்கமுடியும். உங்கள் உள்ளூர் மாரியம்மனைக்கூடத் தோத்திரங்களில் பிரம்ம சொரூபிணி [பிரம்மமே உருவெடுத்து வந்தவள்] என்றுதான் சொல்லி வழிபடுவார்கள்.
இந்தியாவெங்கும் இந்தத் தொகுப்புநிகழ்வு அன்றும் இன்றும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்து மெய்ஞானம் எவரையும் மேலே கீழே என வரையறுக்கவில்லை. சமூகத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அவர்கள் இந்துமதத்திலும் மேலாதிக்கம் செலுத்துபவர்களாக ஆகிறார்கள். இந்துமதத்தின் ஆசாரங்களை அவர்கள் அதற்கேற்ப வரையறைசெய்துகொள்கிறார்கள்.
நூறுவருடம் முன்பு இங்கே வரலாற்றை எழுதிய வெள்ளையர் இந்துமதம்தான் மக்களை சாதி அடிப்படையில் பிரித்து, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது என எழுதிவைத்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிறித்தவ மதமாற்ற எண்ணம் கொண்டவர்கள். சென்ற நூறாண்டுக்காலத்தில் ஏராளமான வரலாற்று ஆய்வுகள் மூலம் அது பொய் என நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் சாதிமுறையும் ஏற்றத்தாழ்வும் உருவாகி வந்த வரலாறு துல்லியமாகவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் நூறுவருடமாகவே வரலாற்றை வாசிக்காத அரசியல்வாதிகளால் சொல்லப்படும் சில்லறை வரிகளே நம் மேடைகளில் உலவுகின்றன. உங்களைப்போன்றவர்கள் எந்த பரிசீலனையும் இல்லாமல் அதை நம்புகிறீர்கள்.