New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கென்யா – குறுங்குறிப்புகள் வெங்கடேஷ்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கென்யா – குறுங்குறிப்புகள் வெங்கடேஷ்
Permalink  
 


கென்யா – குறுங்குறிப்புகள்

kenya2

கென்யாவிற்கு வந்து கடந்த ஜூலையோடு ஐந்து வருடங்களாகிறது. 2006-ல் ஓசூரிலிருந்து மும்பைக்கு மாறியபோது உடன் வேலை செய்த சேலத்து நண்பர் குடும்பத்தை சேலத்தில் விட்டுவிட்டு கென்யா கிளம்பினார். கென்யாவில் இரண்டு வருடங்கள் வேலை செய்துவிட்டு அடுத்த மூன்று வருடங்களில் உகாண்டாவையும் சவுதியையும் சுற்றி மறுபடி கென்யாவில் அவர் செட்டிலானபோது, மும்பையிலிருந்த என்னை அழைத்து “கென்யா வருகிறாயா?” என்றார். அதற்கு முன்பு, ஒரு மும்பை தனியார் மனிதவள நிறுவனத்திடமிருந்து ‘கென்யா கொய்மலர் வளர்ப்பு பண்ணைகளில் வேலை செய்ய விருப்பமா?’ என்று கேட்டு வந்த இரு மின்னஞ்சல்களுக்கு, மிகுந்த யோசிப்பிற்கு பின் ‘நன்றி; இப்போதைக்கு அந்த விருப்பம் இல்லை’ என பதில் அனுப்பியிருந்தேன். காரணங்களில் முதன்மையானது ’ஆப்பிரிக்க’ நாடுகளுக்கு செல்வதற்கு மிகுந்த தயக்கம் இருந்தது. எதனால் இந்த மனப்பதிவு ஏற்பட்டதென்று தெரியவில்லை; கேள்விப்பட்ட, படித்த வன்முறைகள்; குடும்பத்தோடு செல்லும் பட்சத்தில் சமூக சூழல் ஒத்து வருமா என்ற யோசனை. மேலும் முன்முடிவான, வேலைக்கு வெளிநாடு செல்வதென்றால் மலர்த்துறையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அல்லது ஆஸ்திரேலியாவிற்கு முயற்சிக்கலாம் என்ற எண்ணம்.

2011-ல் சேலம் நண்பர் அழைத்தபோது, போய்தான் பார்க்கலாமே என்று தோன்றியது. பெண் ‘இயல்’ நான்காம் வகுப்பிலிருந்தாள். பள்ளி வசதிகள், குடும்பத்திற்கான மாத செலவுகள், பாதுகாப்பான குடியிருப்பு, மருத்துவ வசதிகள் பற்றி எல்லாம் நண்பரிடம் பேசி விவரங்கள் அறிந்துகொண்டு தெளிந்து கிளம்பியபோதும், புதுநிலம் எப்படி இருக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்புகளும், மெல்லிய தவிப்பும் மனதில் உடனிருந்தன. ஆப்பிரிக்க நாடுகள் சுற்றும் இருசக்கர வாகன நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் பணிபுரியும் கோவை கல்லூரியில் உடன் படித்த காந்தியிடம் கென்யா செல்வதாக சொன்னபோது, அவன் தந்த ஒரே ஒரு அறிவுரை “தவறான நேரத்தில், தவறான இடத்தில், தவறான சூழலில் இருப்பதை தவிர்க்க வேண்டும்” என்பது தான்.

கோவை விமான நிலையத்தில் ஏர் அரேபியா முகப்பில் பயணப் பைகளை எடைபோட்டு உள்ளனுப்பிவிட்டு டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளும் போது உதவி இளைஞன் “சார், கென்யாவுக்கா போறீங்க?; பாதுகாப்பான நாடா அது?” என்று கேட்டான் (புதிதாய் வேலைக்கு சேர்ந்திருப்பான் போலும்). புன்னகைத்தபடி “நண்பர்கள் இருக்கிறார்கள்; முதல்முறை செல்கிறேன்” என்று பதிலளித்தேன். இமிக்ரேஷனில் அழைப்புக் கடிதத்தையும், மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழையும் காட்டச் சொன்னார்கள். காத்திருப்பில் அமர்ந்திருந்தபோது முதல் வாயிலில் சென்னை விமானத்திற்கான வரிசையில் அனந்த் வைத்தியநாதனும், டான்ஸ் மாஸ்டர் கலாவும் நின்றிருந்தார்கள்; ஏதேனும் கோவை நிகழ்ச்சிக்கு வந்து திரும்புகிறார்கள் போலும்; இயல் போய் ஹலோ சொல்லிவிட்டு வந்தது.

ஷார்ஜாவில் விடிகாலை இறங்கும்போது அந்நேரத்திலும் காற்றில் மெல்லிய வெப்பமிருந்தது. விமான நிலையத்தினுள் வரி தீர்வயில்லா கடைகள் வரிசையாய் கலர் விளக்குகளோடு மின்னின. எங்கு பார்த்தாலும் பெரும்பாலும் நீண்ட வெள்ளை அங்கிகள்; கண்கள் மட்டும் திறந்துவிட்டு முழுதும் கறுப்பு நீளுடை அணிந்த பெண்கள். உள்ளேயே மும்பை உணவகம் ஒன்றிருந்தது. காபி குடித்துக் கொண்டிருக்கும் போது, ஏர் அரேபியா அலுவலர் ஒருவர் உள்ளே வந்து “சென்னை…சென்னை…சென்னை பயணிகள் யாரேனும் இருக்கிறீர்களா?” என்று ஆங்கிலத்தில் சத்தமாய் கூவினார். எனக்கு “சிதம்பரம்…மாயவரம்…சீர்காழீஈஈஈ…” ரைமிங் சாயலில் கேட்டது. மேஜை மேலிருந்த மெனு கார்டை புரட்டியபோது இட்லி, நெய் ரோஸ்ட், மசால் தோசையிலிருந்து, பாவ் பாஜி, தாபேலி வரை நம்மின் பெரும்பாலானவற்றின் பெயர் இருந்தது.

வான் போக்குவரத்து நெரிசலால்(!?) நைரோபி விமானம் ஒருமணி நேர தாமதம் என்ற அறிவிப்பு வந்தது. வாயில் முகப்பருகில் காத்திருக்கலாம் என்று பாதுகாப்பு சோதனைக்கு சென்றோம். நீண்ட வரிசை; ஏகப்பட்ட கெடுபிடிகள்; காவலர்கள் அனைவரும் கடுமையான முகபாவத்தோடு; அவர்கள் மொழியே மெல்லிய பதட்டம் தந்தது. ’ஆர்கோ’-வின் இறுதிக் காட்சி தேவையில்லாமல் எனக்கு ஞாபகம் வந்தது. சோதனைகள் முடிந்து படிகளில் இறங்கி தரைத் தளத்திற்கு சென்றபோது மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நுழைந்தது போல இருந்தது – மக்கள் கூட்டம். குஜராத்தியும், தெலுங்கும் காதில் விழுந்தன. சக்கர நாற்காலியில் ஒரு முதுபயணியை அழைத்துவந்த ஏர் அரேபியா சிப்பந்தி நாங்கள் தமிழ் பேசுவதை பார்த்து “சார், கோயம்புத்தூர்லருந்து வர்றீங்களா? எங்க போறீங்க?” என்றார். பேசியதில் அவர் ஊர் கும்பகோணம் என்றும், ஷார்ஜா வந்து இரண்டு வருடங்களாகிறதென்றும் சொன்னார்; சம்பளம் குறைவுதான், பெரிதாய் ஒன்றும் சேமிக்க முடியவில்லை என்றார்.

மதியம் ஒரு மணிக்கு விமானம் நைரோபியில் தரையிறங்கியபோது, வெளியில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்று அறிவிப்பில் தெரிவித்தார்கள். இமிக்ரேஷனில் பணம் செலுத்தி மூன்று மாதத்திற்கான சுற்றுலா விசா வாங்கிக்கொண்டபோது (இரண்டு வருட வேலை விசா இரண்டரை மாதங்கள் கழித்து நிறுவனம் மூலம் விண்ணப்பித்து கிடைத்தது) பெண் அலுவலர் “கென்யாவிற்கு நல்வரவு; உங்கள் கென்ய நாட்கள் சிறப்பாய் அமையட்டும்” என்றார். சோதனையில் காவலர்கள் பயணப்பைகளை திறக்கச் சொல்லி மேலும் கீழும் புரட்டினார்கள். “நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசுப் பொருட்கள் ஏதேனும் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று விசாரித்தார்கள். முடித்து வெளியில் வந்தபோது, பெயரட்டையை தூக்கிப் பிடித்துக்கொண்டு அழைக்கவந்த ஓட்டுநர் நின்றுகொண்டிருந்தார். மேகமூட்டத்துடன் லேசான தூறல் இருந்தது. அந்த நண்பகலிலும் மெல்லிய குளிர்.

காரில் உட்கார்ந்ததும் “வீடு செல்ல எத்தனை நேரமாகும்?” என்று ஓட்டுநரிடம் விசாரித்தபோது “பொதுவாய் அரைமணி நேரம்தான் ஆகும்; போக்குவரத்து நெரிசல் அதிகமிருந்தால் ஒன்றரை மணி நேரம்கூட ஆகலாம்” என்றார். இருபக்கமும் கட்டிடங்களை பார்த்துக் கொண்டே வந்தோம். “ரேடியோ கேட்கிறீர்களா? இந்திய சேனல்கள் இரண்டு வருகின்றன” என்று சொல்லி கார் ஸ்டீரியோ குமிழை திருகினார். டிடிஎல்ஜே(DDLJ)-வின் “கர் ஆஜா பர்தேசி தேரா…” பாட்டு ஒலித்தது. வந்த முதல் நாளேவா…நல்ல சகுனம் என்று நினைத்துக்கொண்டேன்.

நானறிந்த கென்யா, சில கிராமங்களும் சில நகரங்களும் (நைரோபி (தலைநகரம்), நகுரு, நைவாஸா, மோலோ, ஜோரோ ) மட்டுமே; வேறு நிலங்களில் மற்றுமொரு முகம் இருக்கலாம். விரிவாய் எழுத இன்னும் நுண்மையான வாழ்க்கை அவதானிப்புகள் எனக்கு குறைவு; குறுங்குறிப்புகளாய், அறிந்த கென்யாவை ( உள்ளில் பயணித்தது கொஞ்சமே!) கீழே பகிர்ந்து கொள்கிறேன்.

~oOo~

kenya_nairobi_schools_kids_children_education_girls_students

1. இந்தியர்களில், குஜராத்திகள் மிக அதிகம்; மூன்று/நான்கு தலைமுறைகளாய் கென்யாவிலிருக்கும் குடும்பங்கள் மிகுதி (முதல் தலைமுறை காலனி ஆட்சியின்போது இரயில் பாதை போடும் வேலைக்கு வந்தவர்கள்; இரண்டாம், மூன்றாம் தலைமுறை நல்ல செல்வத்தோடு செழிப்பாயிருக்கிறது); பெரும்பாலும் இளைய தலைமுறை பிரிட்டனிலோ, ஆஸ்ட்ரேலியாவிலோ படிப்பும், வேலையும். வயதான் பிறகு கென்யா வந்து செட்டிலாகி விடுகிறார்கள்.

குஜராத்திகளுக்கு அடுத்து ஆந்திரா (முதல் முதலாய் மகள் ‘இயல்’-ஐ பள்ளியில் சேர்க்க, நைரோபியில் ஒரு பள்ளிக்குச் சென்றபோது, ஆந்திராவிற்குள் நுழைந்து விட்டோமா என்று சந்தேகமாய் இருந்தது – காதுகள் முழுதும் தெலுங்கு!; அதற்கு அடுத்துதான் கேரளமும், தமிழ்நாடும்.

2. நானறிந்த கென்யா குறிஞ்சியும், மருதமும் உடைய அற்புதமான காலநிலையைக் கொண்டது; முக்கிய தொழில் பயிர் – மலரும், காய்கறிகளும், மக்காச் சோளமும், தோட்டப்பயிர்களும். முக்கிய உணவு மக்காச்சோளமும், கீரையும், மாட்டிறைச்சியும்.

3. கிறித்தவர்கள் அதிகம் (இங்கு வந்த பிறகுதான் கிறித்தவத்தில் இத்தனை பிரிவுகள் இருப்பது தெரிந்தது; ஒரு கிராமத்தில் குறைந்தது மூன்று சர்ச்சுகள்); அடுத்து முஸ்லிம்கள் – சிறுபான்மை (பெரும்பாலும் ‘மொம்பாசா’ போன்ற கடற்கறை நகரங்களில்).

4. குழு மனப்பான்மை (tribes) மிக அதிகம்; கிட்டத்தட்ட நாற்பத்தியெட்டு இனக்குழுக்கள் ; அரசியலும், தேர்தலும், வாக்கு வங்கியும் இதை வைத்துத்தான்; 2007 தேர்தலின் போது, மிகப் பெரும் வன்முறையும், படுகொலைகளும் நிகழ்ந்திருக்கின்றன.

நானும் இங்கு வருமுன் ஆப்ரிக்கா, ஆப்ரிக்க மக்கள் என்றால் எதோ ஒற்றைப் பகுதி போலவும், ஒரு நில மக்கள் போலவும்தான் என்ற பிம்பம் வைத்துக் கொண்டிருந்தேன். நண்பர்கள் வெவ்வேறு ஆப்ரிக்க நாடுகளில் (உகாண்டா, எத்யோபியா, டான்சானியா, ருவாண்டா) மலர், காய்கறி மற்றும் கரும்புப் பண்ணைகளை நிர்வகிப்பதால், தொடர்பிலிருப்பதால், உண்மையான சித்திரம் மெதுவாய்ப் புலப்படுகிறது.

ஆப்ரிக்க நாடுகளில் வன்முறைகளுக்கு காரணம் அங்கே இருக்க கூடிய பல விதமான இனகுழுக்களுக்கு இடையே உள்ள பகைமையால்.

2013 – மார்ச்சில், ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. எங்கள் நிறுவனம் இருக்கும் பகுதியில் “கிகுயு” (Kikuyu) இனக்குழு மக்கள் தொகை அதிகம் (மொத்த கென்யாவிலும் இந்த இனக்குழுவே அதிகம்; முதல் ஜனாதிபதி “ஜோமோ கென்யாட்டா’ ஒரு கிகுயு!; இரண்டாவதாக “களன்சியன்ஸ்” (kalanjians). தேர்தல் தொடங்கி முடிவுகள் வரும்வரை, பிற இனக்குழு சார்ந்த அனைவரும் விடுமுறை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், வன்முறை பயத்தினால். ஒரு இனக்குழு, பிற இனக்குழு சார்ந்த அரசியல் தலைவருக்கு கண்டிப்பாக ஓட்டுப்போடாது.

5. கென்யாவை விட உகாண்டாவில் எய்ட்ஸ் விழுக்காடு அதிகம்; காரணம் வாழ்க்கை முறை; ஒரு பெண் பல ஆண்களை மணப்பதும், ஒரு ஆண் பல பெண்களை மணப்பதும் சர்வ சாதாரணம். உகாண்டாவில் சேலத்து நண்பர் இரு வருடங்கள் பணி புரிந்தபோது, வீட்டு வேலைப் பெண் அவர் மனைவியிடம் “பதினைந்து வருஷமா ஒரேயொரு புருஷன் தானா???” என்று ஆச்சர்யத்துடன் கேட்டு நம்ப முடியாமல் சிரித்ததாம்.

6. போக்குவரத்து பிரிவும், காவல் துறையும் மிகு ஊழல் பிரிவுகள்; நைரோபி வெஸ்ட் கேட் (Nairobi West Gate) வணிக வளாக தீவிரவாத சம்பவத்தில் (கிட்டத்தட்ட முந்நூறு பேர் செத்துப்போனார்கள்; ஊடகம் 75 என்றது!), தீவிரவாதிகள் அனைவரும் தப்பிப் போனார்கள்; பிணைக் கைதிகளைக் காப்பாற்றப் போகிறோம் என்று உள்ளே புகுந்த துணை ராணுவமும், காவலும் அங்கிருந்த எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டது. (பார்லிமென்டில் விஷயம் நாறியது!).

horse_carriage_carts_transport_vehicle_flowers_donkey_weight

7. கிராமங்களில் மாட்டு வண்டிகள் இல்லை; கழுதைகள் பூட்டிய மிகச்சிறு வண்டிகளை பயன்படுத்துகிறார்கள்; மலர்ப் பண்ணைகளிலும், நாங்கள் இரு வண்டிகள் உபயோகிக்கிறோம் – குப்பை அகற்றிச் செல்ல; ஒன்பது கழுதைகள் இருக்கின்றன (ஒன்று பத்தாயிரம் கென்யன் ஷில்லிங்கிற்கு வாங்கியது; தற்போது ஒரு இந்திய ரூபாய் 1.5 கென்யன் ஷில்லிங்); இரு மாதம் ஒருமுறை கால்நடை மருத்துவர் வந்து பார்த்துச் செல்கிறார்.

1963 டிசம்பர் 12-ல், கென்யாவிற்கு சுதந்திரம் கிடைத்தது; உள்ளூர் மொழி “கிஸ்வாஹிலி”யாயிருந்தாலும் (தனி எழுத்துரு கிடையாது; ஆங்கில எழுத்துருதான்), பெரும்பாலும் அனைவருக்கும் ஆங்கிலம் பேசத் தெரியும்.

குடும்பத்திற்கு, குறைந்தது மூன்று குழந்தைகள்; அதிகம் எட்டு/பத்து என்று போவதுண்டு (இங்கு பணிபுரியம் இரு ஓட்டுநர்களுக்கு தலா எட்டு குழந்தைகள்); குடும்பக் கட்டுப்பாடு பெரும்பாலும் கிடையாது.

8. ஸ்கூட்டர்கள் மிக மிகக் குறைவு; பெண்கள் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதில்லை; சீன பைக்குகள் அதிகம் (டிவிஎஸ், பஜாஜ்-உம் இருக்கிறது). பொதுவாகவே சீன பொருட்கள் மார்க்கெட்டில் மிக அதிகம் கிடைக்கிறது.

9. நைரோபியில் இரண்டு ஹிந்தி எஃப்.எம். சேனல்கள் ஒலிபரப்பாகின்றன. 15000 ஷில்லிங்கிற்கு, டிஷ் மாட்டி தென்னிந்திய சேனல்கள் தருகிறார்கள்; மாதத் தவணை கட்டணச் சேவையில் பெரும்பாலும் ஹிந்தி மற்றும் செய்தி சேனல்கள் கிடைக்கின்றன. பெரிய வணிக வளாகங்களில் மட்டும்தான் திரைப்படங்களுக்கான திரைகள். தனியாக ஏதும் தியேட்டர்கள் கிடையாது. ஹிந்தி திரைப்படங்கள், இந்தியாவில் ரிலீஸ் ஆகும்போதே, இங்கும் ஆகின்றன. தமிழ் படங்கள்  தமிழ் கலாச்சார அமைப்பின் மூலம் ஒன்றிரண்டு காட்சிகள் திரையிடப்படுகின்றன.

10. பெண்கள், குழந்தைகளை, நடந்து செல்லும்போது பெரும்பாலும் முதுகில் கட்டிக் கொள்கிறார்கள், துணியால். குழந்தைகள் வெகு அமைதி; 99% இந்த ஐந்து வருடத்தில் அழும், அடம் பிடிக்கும் கென்யக் குழந்தையை நான் பார்த்ததேயில்லை. (அழுது ஒன்றும் ஆகப் போவதில்லை என்ற உளவியல் காரணமாயிருக்கலாம்). நான்கு வயதுக் குழந்தைகள் கூட, தோளில் பையை மாட்டிக் கொண்டு பள்ளிக்குத் தனியே செல்கின்றன.

11. கீழிலிருந்து, மேல் மட்டப் பெண்கள் வரை இயன்ற அளவுக்கு விதவிதமாய்ப் பின்னிய தலை அலங்காரங்களை வாங்கி, மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வாரத்திற்கு ஒருமுறையோ மாற்றிக் கொள்கிறார்கள். (ரெடிமேட் பின்னல்கள், அங்காடிகளில் 500 லிருந்து 10000 ஷில்லிங் வரை கிடைக்கின்றன). தங்களின் இயற்கை முடி குறித்த ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை, பெண்களிடம் இருக்கிறது. முடியையும், நிறத்தையும் குறித்து மறந்தும் யாரிடமும் விளையாட்டாய் கூட கமெண்ட் அடிக்காமல் இருப்பது நல்லது; மிக எளிதாய்ப் புண்படுவார்கள்.

12. மருந்துகள், இந்தியாவை விட மூன்று மடங்கு விலை அதிகம்; மருத்துவர் செலவும் அதிகம்; அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் குறைவு; இந்தியர்கள், அறுவைச் சிகிச்சை என்றால் (அப்பெண்டிஷைடிஷ், டான்சிலிடிஷ் – க்கு கூட) இந்தியா போய் வந்து விடுகிறார்கள். துணியும் விலை அதிகம்.

13. தமிழ் வார, மாத இதழ்கள் கிடைக்கின்றன – ஐந்தரை மடங்கு அதிக விலையில்.

14. தாய் வழிச் சமூகம் தான்; ஆண்கள் திருமணத்தின் போது, பெண்ணின் பெற்றோருக்கு வரதட்சணை தரவேண்டும் – பெண்ணுக்கு அல்ல! (தரவில்லையென்றால் குடும்பத்தில் கெட்டவைகள் நடக்கும் என்ற மூட நம்பிக்கை உண்டு). பெண்ணைப் பெற்றவர்கள் மிகுந்த சந்தோஷம் கொண்டவர்கள் (55 வயதான எங்கள் சமையல்காரருக்கு 7 பெண்கள்; “அவருக்கென்ன, ராஜா – அவருக்கு ஏழு பொண்ணு!” என்று உடன் வேலை செய்யும் மற்றொருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.)

அம்மாவும் குழந்தைகளும் மட்டும் கொண்ட குடும்பங்கள் அதிகம் (தனியாக தாய் மட்டும் குழந்தையை வளர்க்கிறார்கள்); குழந்தை முக்கியம்; அப்பா முக்கியமில்லை. பெண்களிடம் முதலில் “எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டுவிட்டு, தைரியமாய் “கல்யாணமாகி விட்டதா?” என்று கேட்கலாம்; குழந்தை பெற்றுக் கொள்வதற்கு திருமணம் அவசியமில்லை. “என்னுடைய குழந்தைகளும், உன்னுடைய குழந்தைகளும், நம்முடைய குழந்தைகளுடன் விளையாடுகின்றன” – சரிதான்!

15. 2011 – ல், Ol’kalou – ல் பணி புரிந்தபோது, இயலும், மல்லிகாவும் நகூரு (Nakuru) – ல் இருந்தார்கள் (நல்ல பள்ளி நகுரு-வில் இருந்ததால்); நான் வாரம் ஒருமுறை நகூரு போய் வந்து கொண்டிருந்தேன். (நகூரு – வில், “செக்சன் 58” ஏரியாவில் வசிப்பது, மல்லிகாவிற்கு மும்பையில் வசித்தது போலத்தான்; ஒரு வயதான குஜராத்தி தம்பதியினரின் வீட்டு காம்பவுண்டிற்குள் இருந்த இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம்; மல்லிகாவால் தனியாய் எல்லாம் செய்து கொள்ள முடிந்தது – கரண்ட் பில் கட்டுவது, பள்ளிக்குச் செல்வது, கடைகளுக்குச் செல்வது (நகூரு- வில் ஆட்டோ உண்டு; நைரோபியில் குறைவு).

kenya_public_transport_14_seater_vans_vehicles_move_bus

ஒரு முறை, Ol’kalou – லிருந்து, நகூரு- விற்கு, மடாடுவில் (பொதுப் போக்குவரத்து – 14 பேர் பயணிக்கக்கூடியது) போகலாமென்று முடிவு செய்து (ஒரு மணி நேரப் பயணம் – 150 கென்ய ஷில்லிங்), Ol’kalou நிறுத்தத்தில், ஒரு மடாடுவில் ஏறி ஒட்டுநர் இருக்கைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டேன்; பக்கத்தில் இருக்கை காலியாயிருந்தது. பத்து நிமிடம் கழித்து ஒரு பெண் (25-30 வயதிருக்கலாம்) கையில் குழந்தையும் (ஆறு மாதங்களாயிருக்கும்), பைகளுமாய் வந்து ஏற முயன்றது; ஏற சிரமப்பட்டதால், குழந்தையை நான் வாங்கி மடியில் வைத்துக் கொண்டு (இருக்கையில் உட்கார்ந்தபின் கொடுத்து விடலாமென்று) ஏறச் சொன்னேன்.

குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டு ஏறி, அருகிலிருந்த இருக்கையில் பைகளுடன் வசதியாய் அமர்ந்துகொண்டது; உட்கார்ந்தவுடன் குழந்தையை வாங்கிக் கொள்ளும் என்று நினைத்தேன்; கேட்கவேயில்லை!!!; குழந்தையும் அம்மாவிடம் போக வேண்டுமென்று அழவில்லை; பக்கவாட்டில் திரும்பி குழந்தையை அவ்வப்போது கொஞ்சுவதோடு சரி; முழுப் பயணத்திலும் குழந்தை என் மடியிலேயே இருந்தது; இறங்கும் போது வாங்கிக் கொண்டது.

16. சென்ற முறை, ஐந்து வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து கொடுக்க அரசு ஆணையிட்டது; கிராமங்களில் மருத்துவ அலுவலர்களை வீடு வீடாகச் சென்று போடுமாறு சொல்லியிருந்தது.

ஒரு “செக்ட்” – ஐச் சேர்ந்த (தலையில் வெண்ணிற டர்பன் அணிகிறார்கள்) கிராம சர்ச்சுகள் (மருத்துவர் மற்றும் மருந்துகள், தங்கள் குழுவிற்கு எதிரானவை என்று நம்புபவர்கள்) அவர்களின் மக்களைக் கூப்பிட்டு, “சாத்தான்கள் வீடு தேடி வருகின்றன; அனுமதிக்காதீர்கள்; பாதுகாப்பாயிருங்கள்” என்று அறிவுறுத்த, அவர்களின் வீடுகளுக்குச் சென்ற மருத்துவ அலுவலர்களுக்கு, சட்சட்டென்று உடனடியாய் பூட்டிக் கொண்ட வீட்டிற்குள்ளிருந்து, பிரார்த்தனைச் சத்தம்தான் கேட்டிருக்கிறது “எங்களைக் காப்பாற்றும்! எங்களின் வீடுதேடி வந்து எங்களை பாழும் நரகக் குழிக்குள் தள்ள நினைக்கும் சாத்தான்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்!”.
ஒருசில இடங்களில் கைகலப்பும் நடந்திருக்கிறது; பின்னர் மருத்துவ அலுவலர்கள், போலீஸோடு போனார்கள்

17. இரண்டு பெரும் டெலிகாம் நிறுவனங்கள் – சஃபாரிகாம் (Safaricom) மற்றும் ஏர்டெல்; பின்பு எஸ்ஸார், “யு (Yu)” என்ற பெயரில் நுழைந்தது. 2012 இறுதி வரை, சிம் கார்டு வாங்க ஒரு டாகுமெண்டும் தரத் தேவையில்லை; வீதிக்கு வீதி சிம் கார்டுகள் கிடைக்கும் – 100 ஷில்லிங்கில்; 2012 இறுதியில், அரசு உத்தரவினால், டெலிகாம் நிறுவனங்கள் அனைத்து எண்களையும் கண்டிப்பாய் பதிவு செய்யச் சொல்லியது; பதியாத எண்கள் சேவை நிறுத்தப்பட்டன. கென்யாவிலிருந்து, இந்தியாவிற்கு பேச, லோகல் கால் சார்ஜ்தான் ஏர்டெல்லில் நிமிடத்திற்கு 3 ஷில்லிங்; சஃபாரிகாம் -ல் 5 ஷில்லிங். ஏர்டெல் கென்யா சிம்கார்டிற்கு, இந்தியாவில் இருந்து வரும் இன்கமிங் அழைப்புகள் எல்லாம் இலவசம்.

18. எல்லா பெட்ரோல் ஸ்டேஷன்கள், வணிக வளாகங்களில் கேஸ் ஸிலிண்டர்கள் கிடைக்கின்றன (5 கிலோ, 12.5 கிலோ); 12.5 கி. ஸிலிண்டர் – 2900 ஷில்லிங் (சமயங்களில் தட்டுப்பாட்டின்போது 4500-5000 வரை போகும்). மண்ணெண்ணையும் (100 ஷில்லிங்/லிட்டர்).

19. வீடுகளில் தண்ணீருக்கு மீட்டர் உண்டு; மாதம் ஒருமுறை “கென்யா நீர் வாரியத்”திற்கு, உபயோகிக்கும் அளவிற்குத் தகுந்தவாறு, பணம் கட்ட வேண்டும்.

20. நகரங்களுக்குள் பயணிக்க, சைக்கிள்களும், “போடோ போடோ” எனப்படும் பைக்குகளும் கிடைக்கின்றன.

21. மலேரியா காய்ச்சல் வெகு சாதாரணம் (கென்யாவை விட உகாண்டாவில் அதிகம்); உள்ளூர் தொலைக்காட்சிகளில், மலேரியா மருந்துகளுக்கு விளம்பரம் வருகிறது.

22. வருகை விசா கிடைக்கிறது, விமான நிலையத்தில்; மூன்று மாதத்திற்கு 50 டாலர் ஒருவருக்கு; வேலை செய்ய அரசிடம் விண்ணப்பித்து “வேலை அனுமதி (Work Permit)” பெறவேண்டும். வருடத்திற்கு கட்டணம் 200000 ஷில்லிங்; அதற்கு மேல் கண்டிப்பாக குடிபுகல் (Immigration) அதிகாரிகளுக்கு, மறைமுகமாய்ப் பணம் கொடுக்கவேண்டியிருக்கும் (40000-50000).

23. கென்யா வர “மஞ்சள் காய்ச்சல் (Yellow fever)” தடுப்பூசி போட்டு, சான்று அட்டை வைத்திருக்க வேண்டும். மும்பையில் தடுப்பூசி போட நானும், மல்லிகாவும், இயலும் காலை 6 மணியிலிருந்து வரிசையில் நின்றிருந்தோம் (அதற்கு முன்பே இருபது பேர் வந்திருந்தார்கள்!); பத்து மணிக்கு கதவு திறந்து இரண்டு பேருக்கு போட்டபின், ஊழியர் வந்து “தடுப்பாற்றல்” மருந்து தீர்ந்து விட்டது; ஏர்போர்ட்டிற்குப் பக்கத்திலிருக்கும் இன்னொரு சென்டருக்குப் போகச் சொன்னார்; அங்கிருந்து ஏர்போர்ட் 15 கிமீ; டிராபிக்கில் சிக்கி போய் சேர்வதற்குள் மூடிவிடுவார்கள்; இன்னொரு நாள் வரலாமா என்று யோசித்து (கிளம்புவதற்கு மூன்று நாள்தான் இருந்தது), சரி போய்தான் பார்ப்போமே என்று அங்கு போனால், மிகப்பெரிய வரிசை!; பார்க்கிங் கிடைக்காமல் அலைபாய (3 மாடிகளில் கார் நிறுத்த முடியும்), அங்கிருந்த பார்க்கிங் அட்டெண்டர் விஷயம் கேட்டு, 2000 ரூபாய் ஒரு வாக்சினுக்கு கொடுத்தால் (300 ரூபாய் – மருத்துவமனையில்), உணவு இடைவேளையில், டாக்டர் கார் எடுக்க வரும்போது இங்கேயே போட்டுவிடலாம் என்றார்; அட!!!; பணம் கொடுத்து அரை மணி பின்பு, டாக்டர் வர, காருக்குள் சென்று ஒவ்வொருவராய் ஊசி போட்டுக் கொண்டோம்; உச்சம், இயல் ஊசி போட்டுக் கொள்ளும்போது, பெருங்குரலெடுத்து அழ, பார்க்கிங்கில் ஒன்றிரண்டு பேர் திரும்பிப் பார்த்தார்கள்; டாக்டர் பயந்து போனார்.

24. பழமைவாதம்தான் – ஒருசில குறுங்குழுக்களில் மட்டும்தான்; அலோபதி மருந்துகளுக்கும், மருத்துவர்களுக்கும் அலர்ஜியாவது(!), கிறித்தவத்தின் ஒரு குறுங்குழுவான “mukurino”க்கள்; மற்றுமொரு குழுவான் “ஜெகோவா விட்னஸ்” மற்றும் சில “ஏழாம் நாள்” குழுக்கள், வாரத்தின் முதல் நாள் ஞாயிறு என்கின்றன; ஏழாம் நாள் ஓய்வு என்பதால் சனிக்கிழமைகளில் எந்த வேலையும் செய்வதில்லை; அவர்களின் சர்ச்சுகளின் பிரார்த்தனைக் கூட்டங்கள்  சனிகளில் தான் நடைபெறுகின்றன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard