சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான் என்றாலும், மறைமுகமாக அமெரிக்காவும், ரஷ்யாவும் தங்களுக்குள் பலப்பரிட்சையை நடத்திக் கொண்டிருக்கின்றன என்றே சொல்லவேண்டும். அமெரிக்கா சவுதி அரேபியாவுடன் சேர்ந்து கொண்டு ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனைத் தோற்கடித்ததை முன்னாள் கே.ஜி.பி.யரான (சோவியத் உளவு நிறுவனம்) புடின் மறந்திருக்க மாட்டார். வியட்நாமிய கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து கொண்டு ரஷ்யர்கள் தங்களைத் தோற்கடித்ததற்கு அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் பழிக்குப் பழி வாங்கினார்கள். இன்றைக்கு ரஷ்யா அதனை வட்டியும் முதலுமாகத் திருப்பித் தர முயன்று கொண்டிருக்கிறது.
ஒருவகையில் இந்தத் தாக்குதல் சவுதி அரேபியாவிற்கான மறைமுகமான எச்சரிக்கையும் கூட. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கையில் ஆயுத மற்றும் படைபலத்தில் அமெரிக்காவிற்கு நிகராக இருந்த சோவியத் யூனியன் நீண்ட போர்கள் மற்றும் மூடத்தனமான கம்யூனிச பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக பொருளாதார ரீதியில் தள்ளாடிக் கொண்டிருந்தது. அதன் ஒரே வருமான பெட்ரோலிய எண்ணை ஏற்றுமதி மட்டும்தான். எனவே அமெரிக்கர்கள் சவூதிகளிடம் தேவைக்கு அதிகமாக பெட்ரோலை உற்பத்தி செய்ய வைத்து கச்சா எண்ணை மார்க்கெட்டை மூழ்கடித்தார்கள். உலகச் சந்தையில் பெட்ரோலிய எண்ணையின் விலை வீழ்ச்சியடைந்தது. சமாளிக்க முடியாமல் ரஷ்யா ஆப்கானிஸ்தானை விட்டுத் தோல்வியுட வெளியேறியது. ரஷ்ய அதிபராக பதவியேற்ற கோர்பசேவ்வின் மென்மையான நடவடிக்கைகள் காரணமாக சோவியத் யூனியன் சிதறுண்டது. அமெரிக்கா தன்னைத் தோற்கடித்த சோவியத் யூனியனை பழிக்குப் பழி வாங்கி அகமகிழ்ந்தது.
அது ஒருபுறம் இருந்தாலும் ஆப்கானிஸ்தானை பல நூற்றாண்டுகளாக ஒருவரும் வென்றதில்லை என்னும் காரணம் நன்கு தெரிந்த பின்னரும் சோவியத் யூனியன் அகலக் கால் வைத்து அடிவாங்கிக் கொண்டதும் உண்மைதான். அலெக்ஸாண்டரிலிருந்து, பிரிட்டிஷ்காரர்கள் வரைக்கும் ஆப்கானிஸ்தானைப் பிடிக்க முயன்று, ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு இறந்தார்கள். ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்துச் சென்ற பிரிட்டிஷ் இந்தியப் படைகளுடன் சென்ற ரூட்யார்ட் கிப்ளிங் போன்றவர்கள் இதனைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். Jungle Book போன்ற புத்தகங்களை எழுதிய அதே ருட்யார்ட் கிப்ளிங்தான். ஆப்கானிஸ்தானைக் குறித்து அவர் எழுதிய பல வாக்கியங்களில், “When you’re wounded and left on Afghanistan’s plains, and the women come out to cut up what remains, jest roll to your rifle and blow out your brains and go to your gawd like a soldier” மிகவும் புகழ்பெற்ற ஒன்று. ஏறக்குறைய குற்றுயிரும் குலையுயிருமாக கிப்ளிங் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குத் தப்பி வந்தார்.
கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா அதனை நன்றாக உணர்ந்திருக்கிறது. இருந்தாலும் அங்கிருந்து வெளியேறுவது அமெரிக்காவிற்கு அத்தனை எளிதில்லை. அமெரிக்காவிலிருந்து வரும் சரக்குகளை ஆப்கானிஸ்தானுக்குள் கொண்டு செல்ல ஒரே வழி கராச்சி துறைமுகம்தான். அந்தச் சரக்குப் போக்குவரத்தின் மூலம் பாகிஸ்தான் பெரும் பணம் ஈட்டுகிறது. தந்திரசாலிகளான பாகிஸ்தானிய ஜெனரல்கள் அந்த வருமானத்தை எளிதில் இழக்கத் துணிய மாட்டார்கள். எனவே, எப்போதெல்லாம் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைக்கிறதோ அப்போதெல்லாம் தனது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பாகிஸ்தானிய/ ஆப்கானிஸ்தானிய பயங்கரவாதிகளை முடுக்கிவிடுகிறது. சமீபத்திய குன்டுஸ் நகர தாக்குதல் அந்த வகையிற்பட்டதே. அதுவரைக்கும் அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானத்தை விட்டு வெளியேற்றுவதே தனது இலட்சியம் என்று முழங்கிய ஒபாமா அப்படியே அந்தர் பல்ட்டி அடித்திருக்கிறார். அமெரிக்கர்களுக்கு வேறுவழியில்லை. மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்.
விளாடிமிர் புடினின் வலு அதிகரித்துக் கொண்டு வருவதை வெறுத்த அமெரிக்கர்கள், தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சவூதி அரேபியர்கள் மூலமாக மீண்டும் கச்சா எண்ணை விலையை அதல பாதாளத்திற்கு இறக்கினார்கள். ரஷ்யா பொருளாதார ரீதியில் பெரும் அடி வாங்கினாலும், அதன் கையில் ஏறக்குறைய 400 பில்லியன் டாலர்கள் ரிசர்வ் இருப்பதை வைத்து சமாளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதில் சவூதிகள் இம்முறை பொருளாதார ரீதியில் பெரும் அடி வாங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் 720 பில்லியன் டாலர் ரிசர்வ் வெகு வேகமாகக் கரைந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் பெட்ரோல் விலை உயராவிட்டால் இன்னும் பத்து ஆண்டுகளில் சவூதி அரேபிய பொருளாதாரம் படுத்துவிடும். மனதிற்குள் பதைத்தாலும் அமெரிக்கர்களை எதிர்த்து அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
எது எப்படியோ, இப்போதைக்கு சிரியா அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் பகடையாட்டத்தில் சிக்கியிருக்கிறது. ஒருபுறம் ஈவு இரக்கமற்ற இஸ்லாமிய அடிப்படைவாத ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம், இன்னொரு பக்கம் அதற்கு அத்தனை உதவிகளும் செய்து வரும் வஹாபி அடிப்படைவாத சவூதி அரேபியா, அதனைக் கண்டும் காணாமல் விடும் அல்லது அதனை ஊக்குவிக்கும் அமெரிக்கவும் அதன் பேராசை பிடித்த கார்ப்பரேட்கள். இன்னொரு புறம் ஈரானும், ரஷ்யாவும் அவர்களின் நண்பனான பஷார்-அல்-அசாதைக் காப்பாற்ற களமிறங்கியிருக்கிறார்கள். அதன் மற்றொருபுறம் ஈராக்கியர்களும், குர்துகளும். இடையே துருக்கி என மண்டையைக உலர்த்தும் இடியாப்பச் சிக்கல். இதிலிருந்து எப்படி மீளப்போகிறார்கள் என்று யோசித்தால் தலை சுற்றுகிறது.
oOo
இஸ்லாமியரான தந்தைக்குப் பிறந்து, இந்தோனேஷிய மதரஸாக்களில் இளவயதில் படித்து, இஸ்லாமியப் பெயர் கொண்ட அமெரிக்க அதிபரான பராக் ஹுசைன் ஒபாமா ஒரு முஸ்லிமாக அமெரிக்க வலதுசாரிகளால் அறியப்படுகிறார். இஸ்லாமியத் தீவிரவாதத்தின் மீது மென்மையான அணுகுமுறையைக் கையாளும் பராக் ஒபாமாவே இன்றைய மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்தவர்களால் குற்றம் சாட்டப்படுகிறார். தேவையற்ற முறையில் இராக்கின் மீது படையெடுத்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் செய்தது தவறு என்றாலும், பதவியேற்ற உடனேயே எவ்வித முன்யோசனையும் இன்றி அமெரிக்கப்படைகளை இராக்கிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டது மாபெரும் தவறு என்பதே பெரும்பாலான அரசியல் நோக்கர்களின் கருத்து. அதில் உண்மையும் இருக்கிறது.
ஒபாமா பதவியேற்ற நாளிலிருந்தே சுன்னி முஸ்லிம்களின் ஆதரவாளராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது தாரெக் ஃஃபாடா (Tarek Fatah) போன்ற விமர்சகர்களின் கருத்து. அதற்கான ஆதாரங்களை அவர் அடுக்கடுக்காக எடுத்து வைக்கிறார். முதலாவதாக, பதவியேற்றவுடன் எகிப்திற்குப் போன ஒபாமா அங்கிருந்து பல்கலைக்கழகத்திற்கு உரையாற்றச் செல்கிறார். எகிப்திய அரசாங்கத்தால் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்ட முஸ்லிம் பிரதர்ஹுட்டைச் சேர்ந்தவர்கள் முதல்வரிசையில் அமர வைக்கப்பட்டார்கள். பத்திரிகைகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய செய்தியாக வந்த அதனை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆனால் சில மாதங்களுக்குள்ளாகவே எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக முஸ்லிம் பிரதர்ஹுட்டைச் சேர்ந்தவர்கள் கலவரம் செய்து அவரைப் பதவியிழக்க வைக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து நடந்த எகிப்திய தேர்தலில் தீவிரவாத இயக்கமான முஸ்லிம் பிரதர்ஹுட் அமோக வெற்றி பெறுகிறது. பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே எகிப்திய பூர்வகுடிகளில் ஒருவர்களான காப்டிக் கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். பல காப்டிக் கிறிஸ்தவர்கள் தெருவில் ஓட, ஓட வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் சர்ச்சுகளின் முன்பு வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. சர்ச்சுக்கு பிரார்த்தனை செய்யச் சென்றவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அச்சமடையும் காப்டிக் கிறிஸ்தவர்களில் பலர் வெளி நாடுகளுக்குத் தப்பியோடுகிறார்கள். அதுபோலவே பிற சிறுபான்மை மதத்தவர்களும், இனத்தவர்களும் முஸ்லிம் பிரதர்ஹுட் குண்டர்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
இது நடந்து கொண்டிருக்கையில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் அதனைத் தடுக்க எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அதன்பின் நடந்ததெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கலாம். எகிப்தைப் பார்த்து துனிஷியா, லிபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் கலவரத்தைத் துவங்கி, அங்கு ஆண்டுகொண்டிருந்த சர்வாதிகாரிகளை ஒழித்துக் கட்டினர். இதன் பின்னணியில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் இருந்தது என்பது இன்றைக்கு வெளிச்சமாகிவிட்டது.
லிபியாவின் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா பெருமளவு ஆயுதம் கொடுத்திருப்பதைக் கண்டுபிடித்த லிபியாவிற்கான அமெரிக்கத் தூதர் கிறிஸ் ஸ்டீவன்ஸ் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். தீவிரவாதிகள் தாக்கியதால் அமெரிக்க தூதரக கட்டிடம் எரிந்து அதன் காரணமாக அவர் இறந்ததாகக் கூறப்பட்டாலும், அவர் கொல்லப்பட்ட காரணத்தை மறைக்க ஹில்லாரி கிளிண்டன் போன்றவர்கள் முனைப்பு காட்டியதற்கான காரணமும் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
இன்றைக்கு வெள்ளை மாளிகையில் ஒபாமா முஸ்லிம் பிரதர்ஹுட்டைச் சேர்ந்தவர்களால் சூழப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவரது பேச்சுக்களும் முஸ்லிம் பிரதர்ஹுட்டைச் சேர்ந்தவர்களாலேயே தயாரிக்கப்படுவதாகவும், வெள்ளை மாளிகைக்குள் தொழுகை நடப்பதாகவும் கூறப்படும் செய்திகள் உண்மையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதுகுறித்தான தகவல்கள் இணையமெங்கும் நிறைந்து கிடக்கின்றன. தேவைப்படுபவர்கள் அதனை எளிதில் தேடிக் கொள்ளலாம்.
இன்றுவரை இஸ்லாமியத் தீவிரவாதிகளை “தீவிரவாதிகள்” என்று அழைக்க ஒபாமா மறுத்தே வந்திருக்கிறார். மேலும் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யின் தலைவராக இஸ்லாமியர் எனக் கருதப்படும் பால் பிரன்னனை நியமித்ததும், வேறு பல முக்கிய பதவிகளில் முஸ்லிம்களை அமர்த்தியதும் ஒபாமாவின் நோக்கத்தைக் குறித்தான சந்தேகத்தை அமெரிக்கர்களிடையே வலுப்படுத்தியிருக்கிறது. ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு பெருமளவு குடியுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அகதிகள் என்ற போர்வையில் ஏராளமான முஸ்லிம்கள் மிச்சிகன், மின்னியாபொலிஸ் போன்ற பகுதிகளில் பெருமளவிற்குக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். குடியமர்த்தப் படுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது வலதுசாரி அமெரிக்கர்களை எரிச்சலில் தள்ளியிருக்கிறது.
இன்றைக்கு பெருமளவில் அகதிகளாக ஐரோப்பாவில் வந்து குவியும் முஸ்லிம் அகதிகளைக் கண்டு பெரும்பாலான அமெரிக்கர்கள் அஞ்சுகிறார்கள். அதற்குக் காரணமும் உண்டு. ஐரோப்பிய கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொருவரும் அமெரிக்கா வருவதற்கு விசாவோ அல்லது வேறு ஆவணங்களையோ காட்ட வேண்டியதில்லை. எனவே அந்த அகதிகளின் முக்கிய நோக்கம் அமெரிக்காவாகத்தான் இருக்க வேண்டும் என்பது ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த வலதுசாரிகளின் கருத்து.
உலகில் வஹாபிய சுன்னி இஸ்லாமியத் தீவிரவாதம் பரவக் காரணமாயிருக்கிற சவூதி அரேபியா பிற இஸ்லாமிய பிரிவுகளைச் சேர்ந்த ஷியா, அல்லாவைட் போன்றவர்கள் வாழும் இராக்கிய, இரானிய, குர்து, சிரிய நாடுகள் மீது பயங்கரவாதத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்கா அதனைத் தடுக்க முயலாமல் அவர்களுக்கு மறைமுகமாக உதவுகிறது என்னும் குற்றச் சாட்டிற்கு அமெரிக்கா இன்றுவரை பதிலளிக்கவில்லை. மானுடகுலம் இதுவரை கண்டிராத குரூரத்துடன் நடந்து கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ரஷ்ய தாக்குதல்களால் சிதறடிக்கப்படுகையில் அதனை ஆதரிக்காமல் எரிந்து விழும் ஜான் மெக்கெய்ன் போன்ற அமெரிக்க செனட்டர்கள் அமெரிக்காவின் மீதான சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துகிறார்கள்.
குறிப்பு : மேற்கண்ட தகவல்கள் என்னுடையவை அல்ல. முன்பே கூறியது போல இணையத்தில் பரவலாகக் கிடைக்கும் தகவல்களை இங்கு சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன்.
oOo
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கையில் சிக்கி சின்னாபின்னமாயிருக்கும் சிரியாவின் பகுதிகளில் Captagon என்னும் கொடிய போதை மருந்து தயாரிக்கப்பட்டு வளைகுடாவின் பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வஹாபிய தீவிரவாதத்தை நீருற்றி வளர்க்கும் பணக்கார வளைகுடா நாடுகளுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் அளிக்கும் பரிசு இது. இந்த போதை மருந்தில் பெருமளவு சவூதி அரேபியர்களினால் உபயோகிக்கப்படுகிறது என்பதுதான் ஆச்சரியமளிக்கும் செய்தி. சிரியாவில் தயாரிக்கப்பட்டு, லெபனான் வழியாக துபாய், குவைத், சவூதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளுக்கு கடத்திச் செல்லப்படும் Captagon-இன் ஒருவருட வியாபரத்தின் மதிப்பு ஏறக்குறைய 800 மில்லியன் டாலர்கள் என்கிறார்கள் லெபனானின் போதை மருந்து கடத்தல் தடுப்பு காவலர்கள்.
சண்டைக்கோ அல்லது தற்கொலைத் தாக்குதலுக்கோ செல்லும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு இந்த மாத்திரை கொடுக்கப்படுகிறது. இதனைத் தின்ற தீவிரவாதியின் புலன்கள் அனைத்தும் செயலிழந்து விடுவதால் எவ்விதமான அச்சமோ அல்லது குற்றவுணர்ச்சியோ இன்றி கொலைபாதகச் செயல்களையும், சிறுவர், சிறுமியர்களை வன்புணர்வதையும் அவர்களால் எளிதில் செய்ய இயல்கிறது. எனவே இது தீவிரவாதிகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்தியாவின் மீது தாக்குதல் தொடுக்கவரும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கும் இதுபோன்ற போதை மருந்துகள் கொடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
குடிசைத் தொழில் போலத் தயாரிக்கப்படும் Captagon படுபயங்கரமான நச்சுத் தன்மை வாய்ந்தது. தொடர்ந்து உபயோகிப்பவர்களின் மூளை முற்றிலும் உபயோகமற்றதாக மாறிவிடுவதுடன் அவர்களை செயலற்றவர்களாகவும் ஆக்கி விடுகிறது. மதுபானங்களுக்குத் தடையிருக்கும் சவூதி அரேபியாவில் இந்த மாத்திரைக்குத் தேவை தினம் தினம் அதிகரித்துக் கொண்டு போவதாக அதனைத் தயாரிப்பவர்கள் கூறுகிறார்கள். மறுக்கப்படுவதை அடைய இயல்வதே மானுட இயல்பு.