இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட(ர்)/(ம்) என்ற “சொல்” பலராலும் பல் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான புரிதலில், திராவிடத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்தான் என்றும் ‘திராவிடம் என்பதே போலியான ஒன்று’ என ஒரு கருத்தும் உண்டு. “திராவிடந்தான் எல்லாம் தந்தது” என்ற மிகைப்படுத்தப்பட்டப் புரிதலும் உண்டு. எது சரி என்பதை அவரவர் புரிதலுக்கு விட்டுவிட்டு பெரியார், அண்ணா, பாவாணர் போன்றோர் திராவிட(ர்)/(ம்)-த்தை எப்பிடிக் கையாண்டனர்?அவையெல்லாம் ஒன்றா? என்பதைப் பற்றியே இப்பதிவு !
இவர்களில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளக் கூடியவர் பெரியார்தான்.
பெரியாரின் திராவிடரும் திராவிடத் தமிழ் நாடும் :
பெரியார்தான் முதன்முதலில் திராவிடர் எனக் குறித்தார் என்பது உண்மையா? இல்லவே இல்லை ! அயோத்திதாசர் ‘சாதியற்ற திரவிட மஹா ஜன சபை‘ என்னும் அமைப்பைத் துவக்கியது 1891-ல். அப்போது பெரியார்க்கு வயது 12 ! அதே நேரத்தில் ஜான்ரத்தினம் என்பவர் ‘திரவிடர் கழகம்‘ என்ற அமைப்பையும் திராவிட பாண்டியன் என்னும் பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். அயோத்திதாசரும் அதில் எழுதினர்.பின் இவரது அமைப்பு ‘திராவிட மகாஜன சபை‘ என மாறி இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் ‘ஆதி திராவிட மகாசபை‘ எனப் பதிவு செய்யப்பட்டது. 1922-ல் பனகல் அரசர் தலைமையிலிருந்த நீதிக் கட்சி பள்ளர்/பறையர் எனக் குறிக்காமல் ‘ஆதி திராவிடர்‘ எனக் குறிக்க அரசாணை (அரசாணை 817) கொண்டு வந்ததது.
பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து (1919–1925) வெளியேறியவுடன் நீதிக் கட்சியில் சேரவில்லை. தனியே ‘சுயமரியாதை இயக்கம்’ என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். அவர் நீதிக் கட்சிக்குத் தலைவராகி, சுய மரியாதை இயக்கத்துடன் இணைந்தபின்புதான் சேலம் மாநாட்டில் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டது (1944-ல்).
பெரியார் யாரைத் ‘திராவிடர்’ என்று குறித்தார்? இதுதான் நாம் அறிய வேண்டியது. தமிழக,ஆந்திர,கன்னட,மலையாள மக்களைச் சேர்த்து அனைவரையும் திராவிடர் என அழைத்தார் என்பது பொய் ! திராவிடர் என்று சென்னை மாகாண வாழ்த் தமிழரையேக் குறித்தார். திராவிடன் என்பதை அவர் குறிச் சொல் என்றே சொன்னார். ‘திராவிடர்’ என்ற சொல்லை பண்பாட்டு விடுதலைக்காக, சமூக விடுதலைக்காக, ஆரியத்திற்கு எதிராக பார்ப்பனரல்லாதார் அனைவரையும் ஒன்றுத் திரட்ட/குறிக்கத்தான் பயன்படுத்தினார்.
ஈரோட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு கூட்டத்திற்குப் போனால், அங்குள்ள பெரும்பான்மையான நாகர்கோவில் மக்களைப் பார்த்து ‘ஈரோடுமக்கள் அல்லாதவர்களே’ என அழைப்பது எப்பிடிப் பொருத்தமில்லால் இருக்குமோ அதே போலதான் 2% மக்களை பார்ப்பனர் என்றும் மீதமுள்ள 98% மக்களை பார்ப்பனரல்லாதார் எனவும் அழைப்பது.
https://aasifblogs.wordpress.com/2016/09/23/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/
ஏன் திராவிடர் என அழைத்தார்? தமிழர் என்றுதானே அழைத்திருக்க வேண்டும் எனக் கேட்கலாம்? அதற்கும் விடையளித்துள்ளார். தமிழன் எனப் பொதுவாய்க் குறிப்பிட்டால் பார்ப்பனரரும் அதனுள் வருவார்கள். திராவிடன் எனக் குறித்தால் அதை அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அவன் என்றும் ஆரியனாக இருக்கவே விரும்புவான். எனவே நம்மைத் திராவிடன் எனக் குறிப்பதே சரியானது என்றார்.
இதில் கவனிக்கவேண்டிய ஒன்று. பிறப்பின் அடிப்படையில் ஆரியன் என்றும் திராவிடன் என்றும் பிரித்தாரா? தமிழன் – பிற மொழியாளன் (or வந்தேறி :) ) எனப் பிறப்பினடிப்படையில் பிரிக்கக் கூடாது என நாம் கூறும் போதெல்லாம் பெரியார் மட்டும் என்ன? பார்ப்பனர்களை பிறப்பின் அடிப்படையில்தானே ஆரியர் என்றார் என எதிர்க் கேள்வி வரும். (சீமான் கூட ஒரு பேட்டியில் இதைச் சொன்னார் ).
அம்பேத்கார் ஒருமுறை தனது கட்டுரையில் வட இந்திய சமார்-ரும் (இங்கேயுள்ள அருந்ததியர் போல) ஆரியர்தான் தென்னிந்திய பார்ப்பனரும் திராவிடர்-தான் என்றார். அதைக் காட்டி பெரியாரிடம் கேட்ட பொழுது, அவர் , நான் இரத்தப் பரிசோதனை செய்து நாங்கள் மக்களைப் பிரிக்கவில்லை. எனக்குத் தெரியும் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் நேரடி வாரிசுகள் இவர்கள் இல்லை என்பது நன்றாகத் தெரியும்.ஆனால் அவர்களின் பண்பாட்டு வெளிப்பாடுகளில், ஆச்சார அனுஷ்டானங்களில் அவர்கள் காட்டும் பிரிவினைதான் என்னை அப்பிடிப் பேசச் செய்கிறதே தவிர இரத்தத்தைப் பார்த்தோ இரத்த சுத்தத்தைப் பார்த்தோ பிரிப்பத்தில்லை. நான் அதை ஆதரிப்பதும் இல்லை !
“இன்றைய தினம் ஆரிய – திராவிட என்ற பிரிவினை இரத்தப் பரீட்சையின் பேரிலல்ல. அல்லாமல், கலாச்சார, பழக்க, வழக்க அனுஷ்டானத்தின் படியாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.” – 28.08.1953-இல் தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் தந்தை பெரியார் சொற்பொழிவு- “விடுதலை” 07-09-1953
ஆக, பெரியாரின் ‘திராவிடர்’ பார்ப்பனரல்லாத தமிழக மக்களைக் குறித்ததே !
திராவிட நாடு கேட்டாரா? தனித் தமிழ்நாடு கேட்டாரா ?
பெரியாரின் திராவிட நாடு என்பது சென்னை மாகாணந்தான், அதாவது இன்றையத் தமிழ்நாடு. பெரியார் தனித்தமிழ் நாடு பற்றிப் பேசிய பிறகுதான் 1937 அக்டோபரில் சென்னைப் பொதுக்கூட்டமொன்றில் பேசிய சோமசுந்தர பாரதியார், தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதற்காகத் ‘தமிழ் மாநிலம்’ அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் அதற்கு உகந்த தருணம் என்றும் பேசினார். மொழிவாரி மாநிலம் அமைந்த போது அப்போதைய பிரதமர் நேரு ‘தட்சிண ராஜ்யம்’ என்ற பெயரில் தமிழகம், கேரளம்,கருநாடகம் இவற்றை இணைத்து ஒரே மாநிலமாக்க எண்ணினார். பெரியார் திராவிட நாடு வேண்டுமென நினைத்திருந்தால் இதை ஆதரித்திருப்பார். ஆனால் அவர் தட்சிண ராஜ்யத்தைக் கடுமையாக எதிர்த்து அத்திட்டத்தைக் கைவிட வைத்தார்.
“தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் இருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லாமல் காக்கை, கழுகு தூக்கிக் கொண்டா போய் விடும்? பக்கத்தில் இருக்கும் இலங்கையும், பர்மாவும் இருக்கும் பொழுது நாம் மட்டும் இருக்க முடியாதா? நமக்குப் போதுமான வசதி இங்கேயே இருக்கிறது”. – (விடுதலை, 29.8.1956; வே. ஆனைமுத்து, பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பக் -732)
ஆந்திரா, கேரளா,கர்நாடக எனப் பிரிந்ததை வரவேற்ற அவர் அரசாங்கத்தில் மலையாளிகளின் ஆதிக்கத்தை அப்போதே எதிர்த்தார் !
“பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும் மலையாளமும் (கர்நாடகமும் கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் – இவை சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றி விட்டது. என்ன காரணம் என்றால்,
ஒன்று, கன்னடியனுக்கும் மலையாளிக்கும் இனப்பற்றோ, இனச் சுயமரியாதையோ, பகுத்தறிவுணர்ச்சியோ இல்லை என்பதாகும்….
இரண்டு, அவர்கள் இருவருக்குமே மத்திய ஆட்சி என்னும் வடவராட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாய் இருப்பது பற்றியும் சிறிதும் கவலையில்லை…. மூன்றாவது இவர்கள் இரு நாட்டவர்களும் பெயரளவில் இருநாட்டவர் களானாலும், அளவில், எஞ்சிய சென்னை இராச்சியம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக் காரர்களாவார்கள்… “
“அப்படி 14இல் ஏழிலொரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3 இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு,இவை கலந்து இருப்பதால் நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூடச் சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். “
“இதை, நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாகப் பிரிய நேர்ந்து விட்டது. ஆதலால், நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.” – (விடுதலை – அறிக்கை, 11.10.1955; பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் -ய, பக்.730)
பெரியார் பேசியது 100% தமிழ்த் தேசியந்தான்.அவர் மக்களைக் குறிக்கும் போதும், மண்ணைக் குறிக்கும் போதும் தமிழரையும், தமிழகத்தையுந்தான் குறித்தார் ! இன்றையத் தமிழ்த் தேசியவாதிகள் பெரியாரைத் தாராளமாக முன்னெடுத்துச் செல்லலாம் !
அண்ணா கேட்ட திராவிட நாடு: ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு ‘
1939-ல் பெரியார் நீதிக் கட்சித் தலைவராய் ஆன போதே இராசாசி அவரைச் சந்தித்துத் தான் பதவி விலகத் தயார் என்றும், நீதிக் கட்சிச் சார்பாக பெரியாரை முதல்வராகக் கேட்டார். பெரியார் மறுத்த போதே அண்ணாவிற்கு சற்று மனக் கசப்பு ஏற்பட்டது. பின் பெரியாரிடமிருந்து வெளியேறி 1949-ல் தி.மு.கவை உருவாக்கி இராபின்சன் பூங்காவில் பேசும் போதே அண்ணா இவ்வாறு குறிப்பிடுகிறார். எங்கள் கட்சிப் பெயரில் ‘ர்’இல்லை என்பதைக் கவனியுங்கள். இது திராவிட முன்னேற்றக் கழகம். பெரியார் திராவிடர் என மக்களைக் குறித்தார். நாங்கள் திராவிட நாட்டைக் குறித்து அதை முன்றேற்ற விழைகிறோம் என்றுதான் அறிமுகப்படுத்தினார். உண்மையில் ‘திராவிட ‘ என்னும் சொல்லைக் கட்சிப் பெயரில் சேர்க்க அவர்க்கு மட்டுந்தான் தேவை இருந்ததது. அதற்குப் பின் வந்த எந்தக் கட்சிக்கும் திராவிட தேவையில்லா ஒரு ஓட்டுதான் !
மொழிவழித் தேசியம் குறித்த அண்ணாவின் புரிதல் எத்தகையது ?அவருடைய சொற்களிலிருந்தே:
“இந்தியாவில் ஒரு இனத்தையும் அதற்குரிய தாயகத்தையும் எதைக் கொண்டு நிர்ணயிப்பது? இது முக்கிய விடயமே. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் ஆகியவைகளை உடையோரைத் தனி இனமாகவும், அவர்கள் சேர்ந்தாற்போல் வாழும் பிரதேசத்தை அவர்களுக்குரிய தாயகமாகவும் கொள்வதே சரியான முறை. அதன்படி பார்த்தால் இந்தியாவில் தமிழர், ஆந்திரா, கேரளர், கன்னடர், கூர்ஜரர், வங்காளத்தார், பாஞ்சாலத்தார், மராட்டியர் போன்ற பதினேழு தேசிய இனங்களும் அவற்றின் தாயகங்களும் இருக்கின்றன. “இந்தப் பதினேழு நாடுகளும் தத்தம் எல்லையில் வேறு எவர் தயவுமின்றி, தனி அரசு புரியக்கூடிய அளவுக்கு மக்கள்தொகை, பொருள்வளம், நீர்வளம் ஆகியவைகளைப் பெற்றிருக்கின்றன.” – (திராவிடநாடு, கடிதம் 55, 24.6.1956; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்- தமிழ் அரசிப் பதிப்பகம், சென்னை,2005, பக்.199)
மாகாணத் தமிழாசிரியர் மாநாட்டில் (12.3.1947) தமிழ் மாநிலம் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்ச்சியில் அண்ணாவும், ம.பொ.சியும் பங்கேற்றனர். தமிழ் மாகாணக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், திராவிட நாடு பிரிவினைக்கு முதன்மை தந்தும் அண்ணா பேசினார். ம.பொ.சி. இவ்வாறு பதிவு செய்கிறார்:
“தமது திராவிடர் கழகத்தின் திராவிடத் தனிநாட்டுக் கோரிக்கைக்கும், தமிழரசுக் கழகத்தின் தமிழரசுக் கோரிக்கைக்கும் வேற்றுமையில்லை யயன்று கூறி (அண்ணா) எங்களிடையே உறவை வளர்ப்பதில் தமக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ‘திராவிடத் தனியரசு ஓரணா போன்றதென்றும், தமிழரசு காலணா போன்றதென்றும் கூறினார். ‘நான் கேட்கும் ஓரணாவில், ம.பொ.சி. கேட்கும் காலணா இருக்கிறது. ஆனால், ம.பொ.சி. கேட்கும் காலணாவில் ஓரணா இல்லை என்றார்.” மாநாட்டில், ‘இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டுக்குட்பட்ட தமிழரசு’ என்ற கோரிக்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (ம.பொ.சி-யின் தமிழரசுக் கழகம் தமிழ்த் தேசியம் பேசினாலும் பெரியாரைப் போலத் தனித் தமிழ்நாடு கேட்கவில்லை. மதிய அரசுடன் இணைந்த தனி மாநில சுய உரிமையைத்தான் வலியுறித்தியது)
“திராவிடம் முன்னாளில் தனியாட்சியுடன் இருந்தது என்றும் அதை ஆரியர், வடவர் அடிமைக்காடு ஆக்கி விட்டனர் என்றும் ‘இன்றுதிராவிடத்தின் தலைவிதி டில்லியில் எழுதப்படுகிறது’ என்றும் டில்லி ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற வேண்டும்” என்றும் அண்ணா கருத்துரைத்தார். – “திராவிட நாடு தனியாக வேண்டும் – தனி அரசாக வேண்டும்.” ( அண்ணா ‘இன்பத் திராவிடம்’. பக்.20)
தமிழகம், கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் திராவிடக் கூட்டாட்சி: அவரவர் உரிமை, கலை, மொழி இவைகளில் கை வைக்கப்பட மாட்டாது; ஆங்காங்கே அந்தந்த வட்டார மொழிகள் பயிலப்படும். அகில உலகத் தொடர்பிற்கும் கூட்டாட்சி விவகாரங்களுக்கும் ஆங்கிலம் இருக்கும்”. – ( அண்ணா ‘இன்பத் திராவிடம்’, பக்.37)
“தமிழ்நாடு தமிழருக்குத்தான் – ஆந்திர நாடு ஆந்திரருக்குத் தான் கேரள நாடு கேரளருக்குத்தான் கர்நாடகம் கர்நாடகருக்கே இவையாவும் கூடிய திராவிட நாடு திராவிடருக்கே ஆரியருக்கல்ல! பனியாவுக்கல்ல! “ – (அண்ணா ‘இன்பத் திராவிடம்’, பக்.34)
“இந்த மூல நோக்கத்தை ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம். ஏற்றுக் கொள்வதிலே இந்த நால்வருக்கும் நலமிருக்கிறது என்று நம்புகிறோம். அவர்கள் டில்லியுடன் இணைந்து இருப்பதை விட, கூட்டாட்சியாக நம்மோடு இருப்பது நல்லது என்று எண்ணுகிறோம். எடுத்துக் கூறும் அளவுக்கு நமக்கும் அவர்களுக்கும் பாத்தியதை உறவு, ஒரே இனம் என்ற உரிமை இருக்கிற காரணத்தால்.” (அண்ணா ‘இன்பத் திராவிடம், பக்.24)
“இந்த நான்கு மொழிவழிப் பிரிவுகளை அமைப்பதுதான் உடனடித் தேவை என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக்காட்ட விரும்புகிறது. இதைச் செய்யும் போது எந்த ஒரு மொழிப் பிரிவும் மற்றொரு மொழிப் பிரிவின் நிலப்பரப்பை அபகரித்துக் கொள்ளாதவாறு அதிகாரத்தில் உள்ளோர் முழுக் கவனம் செலுத்த வேண்டும். விசால ஆந்திரம், சம்யுக்த கர்நாடகம், ஐக்கிய கேரளம், தமிழகம் என்ற பெயரால் உலவும் கோரிக்கைகளை தி.மு.க முழு மனதுடன் வரவேற்பதுடன் ஆதரவளித்தும் வருகிறது. அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும், மொழிவழிப் பிரிவினை வேண்டும் என்ற இரண்டின் சேர்க்கையே திராவிட நாடு கோரிக்கையாகும்.” – (மேற்கோள்: அருணன், அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி? மதுரை, 2005, பக்.46)