‘மூலதனம்’ எனும் தலைப்பின் கீழ் ‘முதலாளித்துவம்’ குறித்து எழுதியது போல் ‘சாதி’ குறித்து மார்க்ஸ் சிறப்பு அராய்ச்சி கட்டுரைகள் எதையும் எழுதவில்லைதான்; இருப்பினும், தனது எழுத்துக்களில், இந்தியாவில் உள்ள சாதியமைப்பு குறித்தும், மற்ற நாடுகளில் நிலவும் சாதிக்கு இணையான சில ஏற்பாடுகள் குறித்தும் சில அவதானிப்புகளைச் செய்துள்ளார் மார்க்ஸ். மார்க்ஸின் அவதானிப்புகளை உதவியாகக் கொண்டு சாதிக் கருத்தியல்களையும், அந்தப் பிரச்சனைக்குறியத் தீர்வாக அவர் சுட்டிக் காட்டியுள்ளவற்றையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
உலகின் மற்ற இடங்களில் உள்ளதைப் போல் மார்க்ஸின் கோட்பாட்டுகளை எதிர்க்கும் (தெரிந்தோ, தெரியாமலோ அல்லது அரைகுறை அறிவோடோ) மனிதர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள அத்தகைய எதிர்ப்பாளர்கள் மார்க்ஸின் கோட்பாடு குறித்து இரண்டுவிதமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள் – (1) மார்க்சின் கோட்பாடு 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்குப் பொருத்தமானதாக இருந்தது, ஆனால் அது அங்கும் தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லை. (2) மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் மார்க்ஸின் கோட்பாடுகள் பொருத்தமானதாக இருக்கலாம், ஆனால் இந்தியாவுக்கல்ல, ஏனென்றால் இங்கு சாதியமைப்பு நிலவுகிறது. மேலும், அது மார்க்ஸின் கோட்பாட்டு எல்லையின் கீழ் வருவதில்லை.
மார்க்ஸின் கோட்பாட்டிற்கு எதிராக வைக்கப்படும் இரண்டுவிதமான பார்வைகள் இவையே. எவ்வாறாயினும், இந்த இரண்டு பார்வைகளும் முற்றிலும் தவறானவை. மார்க்ஸின் கோட்பாடு ‘உற்பத்தி உறவுகள்’* (உழைப்புசார் உறவுகள்) பற்றி பேசுவதால், அது மானுட சமுதாயத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும். ஒவ்வொரு உறவுக்கும் பொருந்தும் வகையில் அது உள்ளது.
எந்தவொரு நாடும் அல்லது சமூகமும், எந்த ஒரு காலகட்டத்திலும், ‘உழைப்புசார் உறவுகளின்’ அடிப்படையிலேயே வாழ்கிறது. ஒரு சமூகத்தின் இயல்பும் அதன் உற்பத்தி உறவின் அடிப்படையிலேயே அமைகிறது.
அந்த உற்பத்தி உறவுகள் குறித்து மார்க்ஸ் பேசினார். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்கள், உற்பத்தி உறவு எனும் அரங்கில் நிகழ்ந்த ‘உழைப்புச் சுரண்டல்’ குறித்து அவர் பேசினார். உழைப்புச் சுரண்டலினால் விழையும் எண்ணற்ற பிரச்சனைகளைப் பற்றி மார்க்ஸ் விவாதித்தார். அந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வையும் அவர் வழங்கினார். இவ்வாறாக நமதுப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வது நம் பொறுப்பில்தான் இருக்கிறது. முதலில், இந்தியாவில் உழைப்புச் சுரண்டல் நிலவுகிறதா என்பதை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும், சாதிப் பிரச்சனையானது உற்பத்தி உறவின் வட்டத்திற்குள் வருகிறதா என்பதையும் நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். சாதிக்கும், உழைப்பிற்கும் தொடர்புள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் சந்தேகத்திற்கிடமின்றி மார்க்ஸின் கோட்பாடு இந்தியாவுக்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.
மானுட சமூகத்தின் எந்தப் பிரச்சனையும் உற்பத்தி உறவுகளோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. சாதிப் பிரச்சனையும் மனிதர்களோடு தொடர்புடையதால், அது உற்பத்தி உறவுகள் பற்றி பேசும் கோடாட்டின் பரப்புக்குள்ளேயே வருகிறது.