ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 1
- வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டுப் போட்டு சோர்ந்து போயிருப்பவரா நீங்கள்?
- அலுவலகத்திலும் பிற இடங்களிலும் தினம் தினம் அவமானங்களை சந்தித்துச் சந்தித்து இதயம் நொறுங்கிப் போகிறவரா?
- எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோதனை என்று மனம் புழுங்கித் தவிப்பவரா?
- எங்கேயும் எப்போதும் சூழ்ச்சிகளுக்கும், துரோகங்களுக்கும் தொடர்ந்து இரையாகிக் கொண்டிருப்பவரா?
- ஆண்டவன் உங்களுக்கு மட்டுமே ஓர வஞ்சனை செய்துவிட்டதாக உள்ளம் குமுறுகிறவரா?
- மொத்தத்துல வாழ்க்கையே வெறுப்பாயிருக்கு… வாழவே பிடிக்கலை’ என்று சதா புலம்பிக்கொண்டே இருப்பவரா?
- இந்தக் கட்டுரைத் தொடர் உங்களுக்காகத்தான்…!
- மேலே சொன்ன எந்தப் பிரச்னையும் எனக்கில்லேப்பா…I am perfectly well. I am a gifted person என்று நினைப்பவரா? இந்தத் தொடர் உங்களுக்காகவும்தான்
0
சிறு வயது முதல் தமிழ் மீடியத்திலேயே படித்து வளர்ந்த எனக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.
பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். அடுத்து பிளஸ் டூ விலும் நல்ல மதிப்பெண்கள் (மாவட்டத்தில் முதல்) எடுத்ததை அடுத்து, லயோலா கல்லூரியில் சீட் கிடைத்தது. நான் ஆசைப்பட்டபடி அங்கு பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன்.
சரளமாக ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்கிற தணியாத ஆவல் காரணமாக, நன்கு ஆங்கிலம் பேசும் மாணவர்களுடன் எனது நட்பை – அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ – நான் வளர்த்துக்கொள்ள முனைந்தேன். விளைவு… அவமானங்கள்… ஏளனங்கள்… புறக்கணிப்புக்கள். ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்கிற ஒரே உந்துதல் காரணமாக அனைத்தையும் தாங்கிக் கொண்டேன்.
கல்லூரியில் நடைபெறும் விழாக்களில், போட்டியில், கலை நிகழ்ச்சிகளில் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகள், நாடகங்கள், அனைத்திலும் நம்பிக்கையுடன் கலந்துகொள்வேன். எனக்கு இருந்ததெல்லாம் ஒரே ஒரு லட்சியம்தான். ஆங்கிலத்தில் பேச வேண்டும்… ஆங்கிலத்தில் பேசவேண்டும்… ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதுதான்.
மேற்கண்ட நான்கு பாராக்களை படித்துக்கொண்டு வருபவர்களுக்கு ஆங்கிலம் பேசவேண்டும் என்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதென்ன பெரிய பிரமாதம்? நிறைய பேருக்கு இருக்குற தாகம்தானே இது? என்று தோன்றும். நான் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டேன். எனக்கு பிறவியிலிருந்தே பார்வை கிடையாது என்பதுதான் அது. ஆம், நான் ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி.
கல்லூரியில் சேர்ந்த தினத்திலிருந்தே இப்படி ஒரு ஆங்கில ஆசையோடு நான் திரிந்த இந்தச் சூழலில், கல்லூரியில் இருந்த சில சீனியர்களுக்கு என்னை ஏனோ பிடிக்காமல் போய்விட்டது. என்னுடைய ஆங்கில தாகம், எல்லோரிடமும் ஆங்கிலத்திலேயே பேசும்
பழக்கம் இதெல்லாம் ஏனோ அவர்களுக்குப் பிடிக்கலைபோல. குறிப்பாக ஒரு சீனியர் மாணவனுக்கு – அவன் பேரு ராபர்ட்னு வெச்சிக்கோங்களேன் – அவனுக்கு என்னைக் கண்டாலே ஆகலை.
ராபர்ட் யாருன்னா அவன்தான் அந்த காலேஜ்லேயே ராகிங் ஸ்பெஷலிஸ்ட். அதுவும் எப்படிப்பட்ட ராக்கிங் ஸ்பெஷலிஸ்ட்னா அவன் யாரையாவது ராக்கிங் பண்ணினா, ஜஸ்ட் அஞ்சே நிமிஷத்துல அழ வெச்சிடுவான். மேல கை வெக்கமாட்டான். அடிக்க மாட்டான். ஆனா வார்த்தைகளாலேயே சாகடிச்சிடுவான்.
எப்படிப்பட்ட மனவுறுதி கொண்ட ஆளா இருந்தாலும் அவன்கிட்டே சமாளிக்க முடியாது. அவங்களை அழ வைக்காமல் விடமாட்டான். கத்தியின்றி ரத்தமின்றி வார்த்தை களாலேயே காயப்படுத்திடுவான். எதிராளி கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு கண்ணீராவது வந்த பிறகுதான் அவங்களை விடுவான். இப்படிப்பட்ட ராபர்ட்டுக்கு என் மேல அளவுகடந்த வெறுப்புணர்வு.
என்ன இவன் எப்போ பார்த்தாலும் இங்கிலீஷ், லிட்டரேச்சர், டிராமா, காம்பெடிஷன் அப்படி இப்படின்னு சீன் போட்டுகிட்டே இருக்கான்? அதுவும் நம்மளையெல்லாம் சுத்தமா கண்டுக்குறதேயில்லை?’ என்கிற எரிச்சல் அவனுக்கு.
ஒருநாள் நான் அவன் கண்ணுல மாட்டிட்டேங்க. ஏய்…இங்கே வா…’ன்னு கூப்பிட்டான். நான் இங்கே இருக்கேன். கரெக்டா பார்த்து வா’ – அதுலயும் ஒரு நக்கல். ஒரு குத்தல்.
நான் போனேன்.
‘ Tell me senior’
‘ஏய்… என்ன இங்கிலிஷ்ல பேசுறே? தமிழ் தெரியாதா உனக்கு?’
‘ Yes… i know senior’
‘அப்போ தமிழ்ல பேசு’
‘No senior. I am speaking in English because you know English and understand it senior. Isn’t it?’
‘என்ன மறுபடியும் இங்கிலிஷ்ல பேசுறே… தமிழ் தெரியும்தானே? ஒழுங்கா தமிழ்லயே பேசு.’
‘சரி’
‘நான் பொதுவா உன்னை மாதிரி மாற்றுத் திறனாளிகளை ராகிங் செய்றதில்லே… ஆனா நீ
ரொம்ப திமிர் பிடிச்சவன். உன்னை ராக்கிங் பண்ணியே தீர்றதுன்னு முடிவு
பண்ணிட்டேன்’
‘சரி’
‘எங்களை மாதிரி கண்ணு தெரிஞ்ச ஆளுங்களோட சரிசமமா படிக்கிறது உனக்கு
கஷ்டமா இல்லே… எப்படி உன்னால முடியுது?’
இப்படியாக எங்கள் உரையாடல் சிறிது நேரம் நீள்கிறது. பல்வேறு விஷயங்களைப் பற்றி
என்கிட்டே பேசுகிறான். நானும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வர்றேன்.
அடுக்கு நடுவுல ராபர்ட் என்னை ராக்கிங் செய்வதைப் பார்க்க அங்கு ஒரு பெரிய
கூட்டமே கூடிவிட்டது.
என்னுடைய லட்சியமே இந்த காலேஜ்ல சேர்ந்து இங்கிலீஷ்ல ஒரு கலக்கு கலக்கணும், அதுல ஒரு சாதனை பண்ணனும்கிறதுதான் என்பதை புரிந்துகொண்ட ராபர்ட், எந்த
அஸ்திரத்தை வீசினாலும் நான் கலங்காமல் உறுதியாக நின்ற நிலையில்… கடைசியில்…
அந்த கீழ்த்தரமான செயலில் இறங்குகிறான்.
‘சரி… நீ இங்கிலீஷ்ல பெரிய எக்ஸ்பர்ட்தான். ஏத்துக்குறேன். நான் கேட்குற சில கேள்விகளுக்கு முதல்ல பதில் சொல்லு. உங்க அம்மாவை நீ பார்த்திருக்கியா?’
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பார்வையில்லாததைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. ஏனெனில், எனக்கு sight தான் இல்லையே தவிர vision உண்டு என்பதை நம்புகிறவன் நான். ஆனால், இந்தக் கேள்வி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. என் நிலையில் என்ன சொல்ல முடியும்? எனவே மௌனமாக நின்றுகொண்டிருந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட ராபர்ட் மேலும் மேலும் கேள்விகளை வீசுகிறான்.
‘உன்னை பத்து மாசம் சுமந்து பெத்த உங்கம்மா எப்படியிருப்பாங்க தெரியுமா?’
‘……………’
‘உன் அப்பா எப்படியிருப்பார்?’
‘…………….’
இந்த சூரியன், சந்திரன், நட்சத்திரம் இதெல்லாம் எப்படியிருக்கும் தெரியுமா?’
‘…………….’
‘ரெயின்போ, மலை, அருவி, நதி, போன்ற இயற்கைக் காட்சிகள் எப்படியிருக்கும்னு
தெரியுமா?’
‘…………….’
‘சரி… அதையெல்லாம் விடு. நீ எப்படியிருப்பேன்னு உனக்கு தெரியுமா? உன் முகம்
எப்படியிருக்குன்னு உனக்குத் தெரியுமா?’
‘…………….’
‘தெரியாதில்லே… உன் முகமே உனக்கு எப்படியிருக்கும்னு தெரியாது. நீ என்ன
இங்கிலீஷ்ல டிகிரி படிச்சு, இங்கிலீஷ்ல பேசி கிழிக்கப்போறே? நீ வாழ்ந்து
என்னத்தை சாதிக்கப்போறே? உனக்கெல்லாம் சாகணும்னே தோணினது இல்லையா? என்னடா வாழ்க்கை இது… பேசாம தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துடலாம்னு கூட தோணினது இல்லையா? உண்மையை சொல்லு…’
ஓர் உயிரைக் கொல்வதுதான் கொலை என்பதில்லை. இப்படிப் பலர் முன்னிலையில்
ஒருவரைக் காயப்படுத்துவது, அவமானப்படுத்துவது, அவரது காரக்டரை கொல்வதுகூட (Character Assassination) கொலை தான். படுகொலை. சொல்லப்போனால் உயிரை எடுப்பதைவிட இது கொடுமையானது. மிகுந்த வலியைத் தரக்கூடியது.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். – – குறள் 206
ராபர்ட் கேட்ட கேள்விகளுக்கு என்னோட நிலைமையில நீங்க இருந்திருந்தீங்கன்னா
என்ன செஞ்சிருப்பீங்க; என்ன பதில் சொல்லியிருப்பீங்கன்னு ஒரு நிமிஷம் கற்பனை
செஞ்சி பாருங்க.
பார்வையில்லாத சூழ்நிலையில நான் வேற என்ன பண்ண முடியும்? என்னளவில் நான் ஒரு ஹீரோ தான். ஆனால் சினிமா ஹீரோ அல்ல.
இது ஷூட்டிங் இல்லை. கலை நிகழ்ச்சி மேடையில்லை. வசனம் எழுதித் தர இது
நாடகமுமில்லை. நிஜம். துடிக்க வைக்கும் நிஜம்.
ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு நான் மௌனத்தை உடைத்தேன்.
ராபர்ட்டிடம் சொன்னேன். ‘முதல்ல நீ கையை கொடு… ஜஸ்ட் வான்ட் டு ஷேக் மை ஹாண்ட்ஸ் வித்யூ.’
‘டேய்… முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு… சமாளிக்காத’
‘நோ… நோ… நீ கையை கொடேன். அப்புறம் சொல்றேன்’
வேண்டா வெறுப்பாக ராபர்ட் கைகளை நீட்ட, அழுத்தமாக அவரது கைகளைப் பற்றி
குலுக்கினேன்.
பின் டிராப் சைலன்ட்டாக நான் சொல்லப்போவதை மொத்த கூட்டமும் பார்த்துக்
கொண்டிருக்கிறது.
‘முதல்ல உனக்கு நான் நன்றி சொல்லனும்னு ஆசைப்படுறேன். தேங்க்யூ வெரி மச்.
எனக்கு இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை நீ சொன்ன மாதிரி தற்கொலை எண்ணம்
வந்திருக்கு. ‘பார்வையில்லாம எதுக்கு இந்த உலகத்துல வாழணும்? பேசாம செத்துடலாம்’னு யோசிச்சிருக்கேன். ஆனா, உன்னைப் பார்த்ததும், இந்த நிமிஷத்துல
இருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன். நான் வாழ்ந்து காட்டுறேன். என்னால
என்ன முடியும்னு சாதிச்சு காட்டுறேன். உன்னை மாதிரி மிருகங்களே வெட்கமில்லாம
இந்த உலகத்துல நடமாடும்போது நான் எதுக்கு சாகனும்?’
ராபர்ட் நான் சொன்னதை அதிர்ச்சியுடன் கேட்டபடி நின்றுகொண்டிருக்க ஒரு சில
வினாடிகள் நீடித்த நிசப்தத்தை தொலைக்கும் விதமாக கூடியிருந்த மொத்த கூட்டமும் ஒரு கணம் நான் சொன்ன பதிலுக்கு விசிலடித்து கைகளை தட்டியது.
அப்புறம் என்ன? ஒரே நாளில் நான் காலேஜ் முழுக்க ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு பாப்புலராகி விட்டேன். ராபர்ட்டின் நண்பர்கள் எல்லோரும் அப்புறம் அவனை ஒதுக்கி விட்டு எனது நண்பர்களாகி விட்டார்கள். ஐ மீன்… நான் அதைத் தூண்டவில்லை. அவர்களுக்கே மனசாட்சி உறுத்தியிருக்கும் என்று தோன்றியது.
அன்றைக்கு என் மனத்தில் கொழுந்துவிட்டெரியத் தொடங்கிய லட்சியத் தீ… இன்று வரை
எரிந்துகொண்டிருக்கிறது.
நான் லயோலா கல்லூரியில் பி.ஏ. படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பட்டம்
பெற்றபின்பு, அங்கேயே முதுகலைப் பட்டப் படிப்பில் (எம்.ஏ.) சேர்ந்தேன். 1994ல்
கல்லூரியை விட்டு வெளிவந்தபோது சிறந்த மாணவராக லயோலா கல்லூரி நிர்வாகம்
விருதளித்துப் பாராட்டியது. பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில், ‘ஆங்கிலத்தை
எப்படிக் கற்றுத் தருவது?’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு M.Phil முடித்தேன்.
பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து பட்டறைகள் நிகழ்த்துவேன். பிறகு குருநானக் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் நான் பயின்ற சென்னை பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராகப் பணி.
தவிர, பிரின்ஸ் ஜூவல்லரி மற்றும் ரேமண்ட்ஸ் ஷர்டிங் – ஷூட்டிங் விளம்பரங்களில் ஆங்கிலத்தில் ஒலிக்கும் குரல் (Prince Jewellery Panagal Park, Raymonds the Complete Man) என்னுடையதுதான்!
அது மட்டுமில்லீங்க… வேற பல நிறைய விளம்பரங்களுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்
நான். தொழில்முறை பாடகர். சாஸ்திரிய சங்கீதத்தில் ஓரளவு பாண்டித்யம் உண்டு.
தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஆயிரம் பாடல்களுக்கு எந்த
நோட்ஸும் இல்லாமல் என்னால் பாட முடியும். சங்கீதம் கற்றிருக்கிறேன். கீபோர்ட்
வாசிப்பேன். மிமிக்ரி செய்வேன். பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலம்
கற்றுத் தருகிறேன்.
இளங்கோ என்கிற பெயருடைய நான் தற்போது, ACE PANACEA SOFTSKILLS PVT. LTD என்ற வளர்ந்து வரும் ஒரு மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.
தமிழகம் முழுதும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும்
பயிற்சியளிக்கும் பணி என்னுடையது. என் கீழுள்ள சுமார் 300 பயிற்சியாளர்கள்
மற்றும் 50 ஊழியர்களின் ஊதியத்துக்கு நான்தான் பொறுப்பு. ஒரு வருடத்துக்கு குறைந்தது பதினைந்தாயிரம் மாணவர்களைச் சந்தித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு என்னால் முடிந்த அளவுக்கு ஒரு கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறேன்.
என்னுடைய லட்சியப் பயணம், சவால்களை நான் எதிர்கொண்ட விதம், தன்னம்பிக்கை, எதிர் நீச்சல், இப்படி பல விஷயங்களை இத்தொடரில் தொடர்ந்து பார்க்கப்போகிறோம். அதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதல்களை நீங்கள் அடைய முடியும் என்று நம்புகிறேன்.
‘வாழ்ந்து காட்டுவதைவிட பழிவாங்கும் செயல் எதுவுமில்லை’ என்பதை
அழுத்தந்திருத்தமாக நம்புகிறவன் நான்.
எனவே வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்!
நமக்கு என்ன நடக்கிறதோ அது வாழ்க்கையல்ல; அதற்கு நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததே வாழ்க்கை!