New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜெயிக்கலாம் தோழி - கீதா பிரேம்குமார்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஜெயிக்கலாம் தோழி - கீதா பிரேம்குமார்
Permalink  
 


செல்வம் தேடும் வழி

கீதா பிரேம்குமார், மனித மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். உளவியல் துறையில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். இவர் எழுதும் ஜெயிக்கலாம் தோழி தமிழ்பேப்பரில் ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று வெளிவரும். இது பெண்களுக்கான தொழில் முனைவோர் கையேடு.

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 1

மனித குலத்தை மேம்படுத்தக்கூடிய கருவி ஒன்று உண்டு. மனிதனின் கனவுகள் நனவாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இது உதவுகிறது. இந்தக் கருவி நல்லவிதமாகப் பயன்படுத்தப்படும்போது வையகம் மனித குலத்தின் வசத்துக்குள் வருகிறது. அதே கருவி தவறாகச் செலுத்தப்படும்போது மனிதக்குலத்தையே வேரறுக்கும் வல்லமையைப் பெற்றுவிடுகிறது. இது இல்லையேல் மகன் தாயை மறக்கலாம், மனைவி கணவனை இழக்கலாம்; எவரும் உயிரைத் துறக்கலாம். இனம், குலம், மதம், மொழி, நாடு என்ற எந்தவிதப் பாகுபாடும் இன்றி மனிதகுலத்தை தன் வசத்தில் வைத்திருக்கிறது அந்தக் கருவி.

செல்வம்.

காலையில் கண் விழித்ததும் இன்று என் தேவைகள் என்ன, அதற்குத் தேவைப்படும் பணம் என்ன என்று யோசிப்பவரா நீங்கள்? பணம் இல்லாததால் என் மதிப்பு குறைகிறது என்று மனக்குமுறலுடன் வாழ்பவரா நீங்கள்? பணம் மட்டும் என் கையில் இருக்கட்டும், என்ன செய்கிறேன் பார் என்று உலகுக்குச் சவால் விட விரும்புவரா நீங்கள்? பணம் இல்லாததால் சாவின் விளிம்பை எட்டிப்பார்க்க விரும்புவரா நீங்கள்? எந்தப் பிரிவில் நீங்கள் இருந்தாலும் சரி, உங்களுக்காகத்தான் இந்த எழுத்து.

இதை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

இருக்கிறது. இல்லாமையிலிருந்து உயிர் பெற்று, வல்லமையைப் வென்று கொண்டிருக்கும் ஒருவருடைய அனுபவம் இது. வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களைத்தான் உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். இதிலிருந்து ஒரு துளி உங்கள் நினைவை, நிலையை மாற்றுமேயானால் மகிழ்ச்சியே.

வேண்டாம் என்று ஒதுங்கிப் போவோருக்கும் ஒரு சிறு விண்ணப்பம். என் நிலையை நீங்கள் அடையும் நாளில் இப்புத்தகத்தின் ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். ஒற்றுமையை உணர்வீர்கள்.

என் அனுபவச் சிதறல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள என்னைத் தூண்டிய வல்லமைப் படைத்த இறைவனுக்கும், ஈன்றெடுத்த பெற்றோருக்கும், கல்வி தந்த ஆசிரியருக்கும், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னைச் செலுத்தும் உந்து சக்தியாக இருந்து, என்னை வசீகரித்த மனிதர்களுக்கும், என் வாழ்வின் நினைவலைகளுக்குச் சங்கிலிப் போடாத குடும்பத் தலைவருக்கும், என் வளர்ச்சிக்கு எப்போதும் தடை விதிக்காது மறைந்த என் மாமனார், மாமியார் அவர்களுக்கும், என் பணிக்குத் தங்கள் வாழ்வில் சிறு சிறு தியாகங்கள் செய்த என் குழந்தைகளுக்கும், மற்றும் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக, நட்பென்ற பெயரில் என்னுடன் இணைந்து, தன்னுடன் இணைந்ததால் மீண்டும் பலம் பெறச் செய்து, புனிதமான உறவுமுறைத் தொடர தோழிகளாக வந்த பலருக்கும் இப்புத்தகத்தை மனமுவந்து காணிக்கை ஆக்குகிறேன். இதில் குறைகள் இருப்பின் அவை என்னைச் சேரட்டும். நிறைகள் இருந்தால் அது மேற்கூறிய அனைவரையும் சார்ந்தது.

இந்தப் புத்தகம் கீழ்கண்டவர்களுக்கு :

  1. குடும்பத் தலைவர்கள்
  2. பெண்கள்
  3. இளைஞர்கள்
  4. தொழிலதிபர்கள்
  5. வறுமையை எதிர்கொண்டு போராடும் கீழ், மத்தியதரக் குடும்பத்தினர்
  6. மத்தளமாக இருக்கும் நடுத்தரக் குடும்பத்தினர்
  7. மேல்தட்டு வர்க்கத்தினர்
  8. தொழில்முனைவோர்.

0

என் கையில் பணம் இல்லை, என்னால் பணம் ஈட்ட முடியவில்லை, என் தேவைகளுக்குப் பணம் போதவில்லை என்றுதான் நம்மில் பலரும் நம்மைப் பற்றி சுயமதிப்பீடு செய்கின்றோம். உண்மை என்னவெனில் காற்று எங்கும் வியாபித்திருப்பது போல், நீர் எங்கும் பரவிக்கிடப்பது போல், செல்வமும் உலகில் ஏராளம் கொட்டிக்கிடக்கிறது. தாகத்தால் தவிப்பவன் நீரைத் தேடி அலைந்து, திரிந்து அதைக் குடித்து உயிர் வாழ நினைப்பது போல், செல்வத்தையும் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அடைய முடியும்.

தான் ஈட்டும் பணத்தால் எந்தவித மனச்சாட்சி உறுத்தலும் இன்றி யார் வாழ்கிறார்களோ அவர்களே செல்வத்தால் பயன் பெறுகின்றார்கள். அநியாயத்துக்குத் துணை நின்று அளவில்லாத செல்வத்தைச் சிலர் பெற்றிருக்கலாம். அவர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள் என்று நம்மில் பலரும் நினைப்பது இயல்பு. உண்மையில் அந்தப் பணம் அவர்களுடைய  பொருளாதார நிலையை மட்டுமே உயர்த்தியிருக்கிறது. சமூகத்தின் மதிப்பை அவர்கள் பெறுவதில்லை. ஊரைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், கள்ளக் கடத்தல், போதைப்பொருள் கடத்துதல், சாராய வியாபாரிகள் இன்னும் பிற சீர்கேடான செயல்களில் ஈடுபட்டு, கோடிக் கணக்கில் பணம் குவிக்கும் பலரும், மன உளைச்சலோடு மட்டுமே தங்கள் வாழ்வை நடத்துகிறார்கள்.

நேர்மையான வழியில் செல்வத்தை ஈட்ட நினைப்பவர்கள் கீழ்வருமாறு சொல்லிக்கொள்ளுங்கள்.

அளவில்லாத செல்வம் என்னைச் சுற்றி இருக்கிறது. அது என்னைத் தேடி வரும் முன்பு, நான் என்னை அதனுடன் இணைத்துக் கொள்வேன்.

கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும், உளவியல் ரீதியாக இந்த வாக்கியம் ஏற்படுத்தும் தாக்கம் முக்கியமானது.

கண்ணாடி அறைக்குள் இருக்கும் ஆடைகளை நம் மேல் பொருத்திப் பார்ப்பது போல், ஒரு கடைக்குள் இருக்கும் இனிப்புப் பலகாரத்தை நம் நினைவில் சுவைத்துப் பார்ப்பது போல், தெருவில் செல்லும் ஒரு அழகான வாகனத்தை ஆள நினைப்பது போல், செல்வத்துடன் நம்மை இணைத்துக் கொண்டு, செயல்படவேண்டும்.

வீட்டில் அரிசி இல்லை, பணம் இல்லை என்பதை அந்தக் காலத்தில் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். ‘வீட்டில் அரிசி நிறைந்து கிடக்கிறது, நாளைக்கு அரிசி வாங்க வேண்டும்’ என்பார்கள். இல்லாமை என்ற நிலையை அகற்ற வேண்டும் என்று உள்ளுக்குள் முதலில் சொல்லிக்கொள்ளவேண்டும்.

Think Positive always and talk Positive about the aspects of life என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நம்மில் பெரும்பாலோர் இதைச் செயல்படுத்துவதே இல்லை. நம்மிடம் என்ன இல்லை என்பதைத்தான் மிக அதிக அளவில் கணக்கெடுக்கிறோம். என்னிடம் உள்ளவை இவை என்று மிகக் குறைவானவற்றையே பட்டியலிடுகின்றோம். விளைவு? பெருமூச்சு, சுய பச்சாத்தாபம், தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல், தூக்கமின்மை.

இப்படிச் சொல்லிப் பாருங்கள். உலகத்தில் வியாபித்திருக்கும் காற்றை நான் இயல்பாக எடுத்து சுவாசித்து வெளிவிடுவது போல், உலகத்திலுள்ள நீரை எனக்கு வேண்டிய அளவு எடுத்து உயிர் வாழ்வது போல், என்னைச் சுற்றியிருக்கும் செல்வத்தில் இருந்து எனக்குரிய பங்கை நான் அடைந்தே தீருவேன்.

இது ஓர் உறுதிமொழியாக உங்கள் நினைவலைகளில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். இதுதான் செல்வத்தை நோக்கி நாம் நடத்தும் பயணத்தின் முதல் படி.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சேமித்தால் ஆனந்தம்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 2

செல்வத்தைப் பெருக்கும் வழிகள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன், கையில் வரும் பணத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.

உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இரு சக்கர வண்டி ஒட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதை நல்ல விதமாக வைத்திருந்தால் மட்டுமே, அதைவிடச் சிறந்த ஒரு வாகனத்தை அவருக்கு நீங்கள் வாங்கிக்கொடுப்பீர்கள். அதேபோல் உங்கள் கையிருப்பை நீங்கள் திட்டமிட்டு கையாண்டால்தான் அதைவிடக் கூடுதல் செல்வம் கிடைக்கும்.

பொருளாதார ரீதியில் கீழே உள்ளவர்களைக் கவனித்துப் பாருங்கள். தெருவில் நின்று இஸ்திரி செய்பவர், பூ விற்பவர், வீடுகளில் வேலை செய்பவர் என ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஈட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் வாழ்நிலை முன்னேற்றம் காண்பதில்லை. இதே போல்தான் மத்தியதரக் குடும்பங்களின் நிலையும். குறைவு என்றாலும் மாதாந்திர சம்பாத்தியம் இருக்கும். இருந்தும், முன்னேற்றம் இருக்காது.

மூட்டை தூக்கிப் பிழைப்பவர்கள், கூலித் தொழிலாளிகள், வீட்டு வேலை செய்பவர்கள், தெருவில் காய்கறி விற்பவர்கள், சிறு சிறு வேலை செய்பவர்கள் என்று பலரிடமும் நான் பேசியிருக்கிறேன். உங்களுடைய ஒரு நாள் சம்பளம் என்ன? அவர்களும் தோராயமாகச் சொல்வார்கள். சுமார், நூறு ரூபாய்! மேலும், இந்த 100 ரூபாய் என்பது அவர்களுடைய லாபமாக இருக்கும்.

இவர்களில் பெரும்பாலானோர் குடிப்பழக்கத்துக்கும் பிற தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாக இருப்பதை எனது ஆராய்ச்சிப் படிப்பின் போது தெரிந்து கொண்டேன். தவிரவும், தங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பற்றியும், தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய கல்வியின் அவசியம் பற்றியும், நல்ல வாழ்க்கை முறையை பற்றியும் அறியாதவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.

நல்ல ஒரு வழிகாட்டுதலை மிகுந்த சிரமப்பட்டாவது அரசாங்கமும் தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கு அளிக்கும் பட்சத்தில், உண்மையான பொருளாதாரச் சீர்திருத்தத்தை இவர்களிடையே ஏற்படுத்தி விட முடியும். எதுவுமே செய்யாமல் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி நாம் கவலைப்படவோ திட்டமிடவோ முடியாது.

0

‘என்னுடைய வருமானம் 7,000 ரூபாய், இதில் நான் என் குடும்பத்தை, அதன் தேவைகளை எப்படிச் சமாளிப்பேன்?’ என்று கேட்பவர்களுக்காக திட்டமிடுவது சாத்தியம்.

முதல் காரியமாக நீங்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா? இனி உங்கள் மாதச் சம்பம் 6700 மட்டுமே. ஒரு சுயகட்டுப்பாட்டுடன் இதை நீங்கள் கிரகித்துக்கொள்ளவேண்டும். உங்கள் சம்பளம் 6700 மட்டுமே என்றால் என்ன செய்வீர்கள்?

செலவினங்களைக் குறைக்க வேண்டியிருக்கும். அத்தியாவசியம் எது? அனாவசியம் எது? தேவையானது எது? தேவையற்றது எது? என்று பிரித்துப் பார்க்கவேண்டியிருக்கும். எவ்வளவுதான் நம் மனதை ஈர்க்கும் ஒரு விஷயமாக இருந்தாலும், தேவையற்றதை வாங்குவதைத் தள்ளிப்போடவேண்டியிருக்கும்.

விளக்கமாகப் பார்ப்போம். ஒரு குடும்பத்தின் தேவைகள் என்னென்ன? வீட்டு வாடகை, பால், அரிசி, மளிகைப் பொருட்கள், குழந்தைகளின் கல்விச்செலவு, மருத்துவச் செலவு, போக்குவரத்துச் செலவு. இவை குறைந்தபட்சத் தேவைகள், அத்தியாவசியமானவையும்கூட.

ஆனால் ஒரு திரைப்படத்துக்குச் செல்வதும், உல்லாசப் பயணங்களுக்குச் செல்வதும், பக்தி என்னும் போர்வையில் மிக அதிகமாகப் பூஜைக்குச் செலவிடுவதும் அவசியம் அற்றது.
பூஜை என்ற பெயரில் அதிக அளவில் செலவுகளை இழுத்துக் கொள்பவர்களை எனக்குத் தெரியும். வருடத்துக்குக் குறைந்தது மூன்று முறையாவது தீர்த்த யாத்திரை செல்வார்கள். மன நிம்மதிக்காக என்பார்கள். திரைப்படம் பார்ப்பவர்களும் இதே பதிலைத்தான் சொல்வார்கள்.

ஒரு மனிதனுடைய தூய மனபக்திதான் இறைவனுக்கும் அவனுக்கும் உள்ள தொலைவைக் குறைக்கிறது. எச்சில் பழத்தை ராமனுக்கு ஊட்டிய சபரியாகட்டும், ஒரு பிடி அவலை கிருஷ்ணனுக்கு வழங்கிய குசேலராகட்டும், சிவனின் கண்களிலிருந்து வழிந்த உதிரத்தை நிறுத்த தன்னையே குருடாக்கிக் கொண்ட சிவபக்தர் கண்ணப்பர் ஆகட்டும்… இவர்களில் யாருமே பணக்காரர்கள் இல்லை. செல்வத்தால் இறைவனைப் பூஜித்தவர்கள் இல்லை. நாம் மட்டும் ஏன் பணத்தைச் செலவழித்து தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்ளவேண்டும்? அதுவும், மன நிம்மதிக்காக?

திரைப்படம் பொழுதுபோக்குக்காக என்று சொல்வோம். ஆனால் நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்றால், அதிக பணம் கொடுத்தாவது அந்தப் படத்தைப் பார்க்கத் துடிக்கிறோம். மாதக் கடைசி பற்றிய சிந்தனை அப்போது எழுவதில்லை. எந்த மகிழ்ச்சிக்காக அந்தப் பணத்தை இழந்தீர்களோ, அந்த மகிழ்ச்சி உங்களை விட்டு நெடுந்தூரம் போய் விடுகிறது.

குடும்பத்தின் செலவுகளைத் தவறாகத் திட்டமிடுவதால் மட்டுமே பெரும்பாலான பிரச்னைகள் தொடங்குகின்றன என்பது வெளிப்படை.

பல வீடுகளில் செய்யப்படும் பொதுவான தவறுகள் கீழே பட்டியலிடிப்பட்டுள்ளன. இவற்றில் சில உங்களுக்கும் பொருந்தலாம்.

  • அவ்வப்போது சிடி, கேசட் என்று வாங்கி குவிப்பது.
  • அடிக்கடி புடைவைக்காரன் வருகிறான் என்பதால் நிறைய துணிமணிகளைக் கடனில் வாங்குவது.
  • உணவுப் பொருள்களை வாங்குவதில் கூட திட்டமிடுதலின்றி ஊதாரித்தனமாகச் செலவு செய்வது.
  • மிக அதிகமாக கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
  • வீட்டுக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ விளம்பரங்களில் வரும் பொருட்களால் ஈர்க்கப்பட்டு, கடனை வாங்கியாவது அப்பொருளை வாங்கத் துடிப்பது.
  • வீட்டிலுள்ள மின்சார உபகரணங்களைச் சிக்கனமாகச் செலவு செய்யாமல் இருப்பது.
  • வீட்டு வைபவங்களுக்கு அதிகமாகச் செலவிடுதல்.
  • ஆடை, ஆலங்காரம் என்று நிறைய செலவிடுவது.

மனைவி, குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வெளியில் செல்வது ஒரு சிந்தனைப் பரிமாற்றத்துக்கு, ஒரு நட்புறவான சூழ்நிலைக்கு உதவும். பத்து ரூபாய் செலவு செய்தும் இதனை அடையமுடியும். இரண்டு ரூபாய் கடலை வாங்கித் தின்றால் கூட, இந்த நெருக்கத்தை குடும்பத்தில் ஏற்படுத்திவிட முடியும்.

அடிநாதம் இதுதான். எது பொழுதுபோக்கு? எது எனக்காக மகிழ்ச்சியை அளிக்கும் செயல்? எது உல்லாசம்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நீங்கள் கண்டறியவேண்டும். நான் இப்போது செய்யும் செய்கை, பின்னால் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? கொடுக்காதெனில் அதைச் செய்யாதிருப்பது உத்தமம். மேற்கொண்டு பொருளீட்டத் தெரியாதவர்கள் தன் கை இருப்பையும் இழப்பது எந்த வகையில் சிறந்தது?

பணத்தைச் செலவு செய்வதில் கிடைக்கும் ஆனந்தத்தைவிட, பணத்தைக் கையில் வைத்திருப்பதில் கிடைக்கும் ஆனந்தம் பெரியது.

கையில் பணம் இல்லையென்றால், விரக்தியும் எரிச்சலும் கோபமும்தான் ஏற்படும். உங்களை அழுத்தும் பொருளாதாரப் பிரச்னைகளைப் பறறிதான் நீங்கள் சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள். கையில் பணம் இருந்தால், பிரச்னைகள் பின்னுக்குப் போய்விடும்.

முதல் வாரம் கரெண்ட் பில் கட்டவேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தையின் பிறந்த நாள், நண்பர்கள் திருமணம் என்று ஏதாவது ஒன்று உள்ளே புகுந்து அந்தப் பணத்தை அபகரித்துச் சென்றுவிடும். சரி, கடைசி தேதிக்குள் கட்டிவிடலாம் என்று சமாதானம் சொல்லிக்கொண்டு அப்போதைய தேவைகளைப் பூர்த்திசெய்துவிடுவார்கள்.

மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் தடைபடும் அளவுக்குப் போன பிறகு, பணம் தேடி அங்கும் இங்கும் செல்வார்கள். தொலைபேசிக் கட்டணம், பேப்பர் கட்டணம், மளிகைக் கடை பாக்கி, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், பால் செலவு என்று அனைத்துக்கும் இந்த நிலைமைதான்.

இந்தச் சூழலில் நீங்கள் முதலில் செய்யவேண்டியது ஒன்றுதான். முக்கியமான செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை, எக்காரணம் கொண்டும் வேறொரு விஷயத்துக்குப் பயன்படுத்தக்கூடாது. சுயக் கட்டுப்பாட்டுடன் உங்களுக்கு நீங்களே இந்த விதியை விதித்துக்கொள்ளவேண்டும். செய்தால், அநாவசியமாக மற்றவர்களிடம் கடன் கேட்கவேண்டிய அவசியம் இருக்காது.

0

இந்த இடத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் பற்றி சிறிது பார்த்துவிடுவோம். முன்பெல்லாம், ஒரு கஷ்டத்தின்போது மற்றவர்கள் முன் பணத்துக்காகத் தலைகுனிந்து நிற்பது அவமானமான ஒரு செயலாகக் கருதப்பட்டது. ஆனால் இன்றைய சூழ்நிலையில், கடனுக்கு மிக அழகிய முலாம் பூசப்பட்டுவிட்டது. கடன் வாங்குவது என்பதே மிகப்பெரிய கௌரவம் என்னும் அளவுக்கு ஆகிவிட்டது. ஓ! எனக்குக் கடன் கொடுக்க எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா என்றுகூட சிலர் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.

கடன் கேட்பது தவறில்லை என்ற எண்ணம் பரவலாகப் பரவியிருக்கிறது. சொன்ன நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுத்தல் தனி நபரின் நாணயத்தின் பிரதிபலிப்பாகக் கருதி இருந்த காலம் போய், ‘என்ன? கொடுப்பேன் என்று சொன்னேன்! அதற்கென்ன இப்போ? முடியவில்லை!’ என்று எந்தவித உறுத்துதலின்றி சொல்லப் பழகிக்கொண்டிருக்கிறோம்.

செல்வம் சேர்க்கவேண்டும் என்று உண்மையில் நீங்கள் மனதார விரும்பினால், ஒரு சபதம் செய்துகொள்ளுங்கள்.நான் கடன் கேட்கமாட்டேன்! மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பராக இருக்கும்பட்சத்தில் இப்படிச் சொல்லுங்கள். இனி நான் கடன் கொடுப்பதில்லை!

உடனே உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். தேவை இருப்பவர்களுக்கு உதவி செய்வது மனித நேயம் இல்லையா? உங்கள் மனித நேயம், உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்றால் அப்படிப்பட்ட மனித நேயம் எந்த வகையிலும் உதவாது என்பதுதான் உண்மை.

மனித நேயம் கொண்ட பலரும், பெரும் சங்கடங்களில் சிக்கி, ஈவு இரக்கமற்ற மனிதர்களாகப் பிற்காலத்தில் மாறி இருக்கிறார்கள். ‘நான் நல்ல மனிதனாகத்தான் இருந்தேன். ஆனால் உலகம் என்னை மாற்றிவிட்டது’ என்று இவர்கள் வருந்தியது உண்டு.

இன்றைய பொருளாதார உலகின் எழுதப்படாத சாசன விதி என்ன தெரியுமா? Unwritten Economic Constitutional Law என்றுகூட இதனை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

உங்கள் பணத்தைக் கையாள்வதில் உணர்வுபூர்வமாகச் சிந்திக்காதீர்கள். புத்திசாலித்தனமாகச் சிந்தித்து, புத்திசாலித்தனமாகச் செயல்படுத்துங்கள்.

நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் சரி, நன்கு பரிச்சயமானவராக இருந்தாலும் சரி. தெரியாத நபர் ஒருவரிடம் எப்படி கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவீர்களோ அப்படியே இங்கும் செய்யுங்கள். அவ்வாறு செய்யாமல், கடன் பெற்றவரின் நாணயத்தைப் பற்றியும் நம்பகத்தன்மை பற்றியும் பின்னால் புலம்புவதில் பயனில்லை.

கடன் கொடுப்பவதன்மூலம் நீங்கள் யாருக்கும் உதவமுடியாது. ஒருவரைத் தவறான பாதையில் வேண்டுமானால் கொண்டு செல்லலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 கொஞ்சம் நம்பிக்கை நிறைய துணிச்சல்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 3

வேலைக்குச் செல்லாத, 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தை எப்படிச் செலவிடுகிறார்கள்? பெரும்பாலானோர் தொலைக்காட்சியில் சரணாகதி அடைந்துவிடுகிறார்கள். அல்லது உறக்கம். அல்லது அக்கப்போர் வெட்டிக்கதைகள்.

இவையனைத்துமே மன உளைச்சல் ஏற்படுத்தும் விஷயங்கள். நேரத்தையும் வீணாக்கி உடலையும் வருத்திக்கொண்டு இப்படி பொழுதை ஓட்டுவதற்குப் பதில் சுயதொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வீட்டுப் பொருளாதாரத்தை உயர்த்தலாமே?

இப்படிச் சொன்னால் உடனே உதிக்கும் சந்தேகம், சுயதொழில் செய்தால் வீட்டு வேலைகளை எப்படிக் கவனித்துக்கொள்வது என்பதுதான். உண்மையில், வேலைக்குப் போகும் பெண்களும், சுயதொழில் செய்வோரும் வீட்டு வேலைகளை எளிதாகவே கையாள்கிறார்கள். மற்றவர்களோ, நேரம் அதிகம் இருக்கிறது என்று கால விரயம் செய்கிறார்கள்.

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று சொன்னாலும் இயல்பாக சில செயல்களைப் பெண்கள் மட்டுமே திறம்படச் செய்யமுடியும். அதேபோல சில செயல்களை ஆண்கள் மட்டுமே திறம்படச் செய்ய முடியும். அவரவர் திறமை எதில் இருக்கிறது என்று அறிந்து செயல்படும் போதுதான் வெற்றி எளிதாகிறது.

சுயதொழிலில் வெற்றி கிடைக்குமா என்னும் தயக்கமும் பலரை வீட்டுக்குள் முடக்கிவைத்திருக்கிறது. எதையும் முயற்சி செய்யாமல் தோல்வியைப் பற்றி சிந்திப்பவனைவிட, முயற்சி செய்து தோல்வி அடைபவன் மேல் என்பதை இவர்களுக்கு நினைவூட்டவேண்டும். இந்த இடத்தில் என் வாழ்க்கைப் பாதையிலிருந்து ஒரு சில அனுபவத் துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என்னுடைய குடும்ப நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். ‘உங்களிடம் திறமை இருக்கிறது. அறிவு இருக்கிறது. சுயமாகத் தொழிலில் ஈடுபடும் ஆர்வம் இருக்கிறது. அடி எடுத்து வைப்பதில் என்ன தடை?’ என்று அவர் கேட்டார். ஒரு சிறு பொறியாக விழுந்த இந்தச் சிந்தனை என்னைத் துரத்த ஆரம்பித்தது.

சுயதொழிலா? என்னால் முடியுமா? என் கணவர் வீடு திரும்பியவுடன் இதைப்பற்றிப் பேசினேன். தன் நண்பர்கள் சிலருடன் மின்னணு துறையில் தொழில் செய்ய முனைந்து பெரும் பிரச்னையில் அவர் திண்டாடிக் கொண்டிருந்த நேரம் அது. ஒரு பார்ட்னர் எதிர்பாராமல் இறந்துவிட்டார். மற்றொரு நபரோ கலப்புத்திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார். தொழில் பயங்கரமாக ஆட்டம் கண்டது.
கலப்புத் திருமணம் செய்து கொண்டு, எதிர்ப்புகளுக்கு இடையில் சமுதாயத்தை எதிர்நோக்கியிருந்த சமயம் அது என்பதையும் நினைவுபடுத்தவிரும்புகிறேன்.

‘நான்கு ஆண்கள் சேர்ந்து தொழில் செய்ய நினைக்கும் போதே இவ்வளவு பிரச்சனைகள். நீ தனியாக என்ன செய்வாய்?’

எது என்னைச் சுயதொழிலில் ஈடுபட வைத்தது? தன்னம்பிக்கையா? மேலே வரவேண்டுமென்ற தணியாத தாகமா? என் பிரசனைகளுக்குத் தோள் கொடுக்க அருகில் யாருமில்லையே என்ற ஆதங்கமா? இல்லை இதற்கெல்லாம் மீறிய சக்தியா? தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் தெளிவாகக் கூற இயலும். இவை அனைத்தும் ஒன்றிணைந்த ஒரு சக்திதான் சுயதொழிலைப் பற்றி சொந்தமாக என்னை முடிவெடுக்க வைத்தது.

பிறகு யோசிக்க ஆரம்பித்தேன். எந்தத் துறையில் இறங்கலாம்? எதில் என் பலமும் இருக்கிறது? கம்ப்யூட்டர் துறை சார்ந்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். முன்னரே பழக்கப்பட்ட துறை என்பது ஒரு காரணம். குறிப்பாக, என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, பவர் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் உற்பத்தி பிரிவில் இடம் இருப்பது தெரிந்தது. மின்வெட்டுகளும் மின்சாரப் பற்றாக்குறையும் அலுவல்களை மிக மோசமாக பாதித்துக்கொண்டிருந்த சமயம் அது. எனவே நிச்சயம் மின் உற்பத்திக்கான தேவை பரவலாக இருக்கும். மேற்கொண்டு அதிகரிக்கவும் செய்யும். அதனால் அந்தத் துறையையே நான் இறுதியாகத் தேர்ந்தெடுத்தேன்.

அடுத்த சில நாள்கள் என் கணவரிடம் இதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசி விவாதத்தில் ஈடுபட்டேன். ‘நமக்கு அனுபவமோ பணபலமோ இல்லை. இருவரும் வாழ்வின் தொடக்கத்தில் இருக்கிறோம். நான் மட்டும் தொழில் முயற்சியில் ஈடுபடுகிறேன். நீ வேறு வேலை தேடிக்கொள்.’ என்றார் அவர்.

என்னால் அவர் விளக்கத்தை ஏற்கமுடியவில்லை. பிறகு அவர் ஒருவழியாக ஒப்புக்கொண்டார். ஒரு கன்டிஷனோடு. ‘அப்படியென்றால் உன் பெயரில் தொழில் முயற்சியை ஆரம்பித்துக்கொள். அதன் சாதக, பாதகங்களுக்கு நீதான் பொறுப்பு.’
சரி என்றேன்.

அடுத்து என்ன? நெருங்கிய உறவினர்களிடம் பேசினேன். அந்தச் சந்திப்புகளில் அவர்கள் திணிக்க முயன்ற விஷயம் ஒன்றுதான். ‘உன்னால் தனியாக எதுவும் செய்யமுடியாது. அந்த எண்ணத்தை விட்டுவிடுவததான் நல்லது. உன் நல்லதுக்குத்தான் சொல்கிறோம்.’
நான் பின்வாங்கவில்லை. கையில் சிறிதளவு பணமே இருந்தது. அதை வைத்துதான் தொடங்கியாகவேண்டும். முதலில், அலுவலகத்துக்கான இடம். அலுவலகமும் அதை நடத்துபவரின் அறையும் பெரியதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் நகரின் மையப்பகுதியில் இடம் பார்த்துக்கொண்டேன்.

பெரிய அறையின் நடுவில் ஒரு நாற்காலி, சிறு மேஜை போட்டு உட்கார்ந்த தருணத்தில் மனதில் ஆயிரம் எண்ணங்கள். நான் ஜெயித்தால் சமூகத்தின் அங்கீகாரம் கிடைக்கும். தோற்றால், கிண்டலடிக்கப்படுவேன். எது கிடைக்கப்போகிறது?

இத்தருணத்தில் தாய்மையும் அடைந்தேன். வயிற்றில் கருவுடன் பண உதவி வேண்டி வங்கிகளின் கதவுகளைத் தட்டத் தொடங்கினேன். என் உற்பத்தித் தொழிலுக்குத் தேவையான பல சோதனைக் கருவிகளும் (Testing Equipments) அலுவலகத்தில் வந்து இறங்கியாகி விட்டது. கடன் கேட்கலாம் என்றால் தனி நபராக நான் பலருக்கும் அறிந்த ஆளில்லை. பிரபல வங்கி ஒன்றில் நான் கொடுத்த விண்ணப்பத்தை ஏற்று நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தார்கள்.

காலை 11.00 மணிக்கு என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாலும் 10.45க்கு நான் அங்கே நின்றேன். ஐந்தாவது மாடியில்தான் நேர்முகத்தேர்வும் நடந்தது. லிஃப்ட் வேலை செய்யவில்லை. ஐந்து மாடிகளையும் கடந்து மேலேறி அமர்ந்தபோது, அந்த வங்கிப் பணியாளர் உங்கள் முறை வருவதற்கு குறைந்தது இன்னும் இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டுமென்றார். காலையில் ஏற்படும் அயற்சி காரணமாகச் சாப்பிட எதுவும் பிடிக்காததால் சிறிது கஞ்சி மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டிருந்தேன்.

ஏதாவது சாப்பிடலாம் என்றாலோ ஐந்து மாடி இறங்கி ஏற வேண்டுமே என்ற பயம். என்னைப்போல் பல ஆண்களும் பெண்களும் நேர்முகத் தேர்வுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். முன்பின் தெரியாத அலுவலகத்தில், அதுவும் கடனுக்காக வந்துள்ள நிலையில், அங்கு பணிபுரிபவர்களிடம் என் நிலையைச் சொல்லி ஏதாவது வாங்கி வந்து தாருங்கள் என்று சொல்வதும் சரியில்லையென்பதால், மனதை ஒருமுகப்படுத்தி நேர்முகத்தேர்வை எப்படி சிறப்பாகச் செய்வது என்பதைப் பற்றிய சிந்தனையில் மட்டும் நேரத்தைக் கடத்தினேன்.

இடையில் வந்த சூடான காபி பசித்தவன் கையில் கிடைத்த உணவைப் போலாயிற்று. சுமார் மூன்று மணி நேரக் காத்திருத்தலுக்குப்பின் உள்ளே அழைக்கப்பட்டேன். மிகப் பெரிய நவீன அறையில் சுமார் ஆறு பேர் மர்ந்திருந்தார்கள். இரண்டுபேர் சாதாரண முறையில் கேள்விகளைக் கேட்டபோதும், மற்ற நால்வர் ‘பெண்கள் சுய தொழிலுக்கு வருவதைப் பற்றிய, அதுவும் எந்தவிதமான வர்த்தகத் தொடர்பும் இல்லாத குடும்பத்திலிருந்து வருவதை’ ஏற்றுக்கொள்ள முடியாதவராக இருந்தார்கள்.

தேவையற்ற பணிவோ, அசாதாரணமான பொய்களோ இன்றி, நம்பிக்கையுடன் பதிலளித்தேன். என் பதில் அவர்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதை நேர்முகத் தேர்வு முடிந்தபோது தெரிந்தது. ஒரு பெரிய கதவு எனக்காகத் திறக்கப் போகிறது என்னும் ஆர்வம் மறைந்த நிலையில் அடுத்தது என்ன என்று யோசிக்கத் தொடங்கினேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பணம் இல்லாமல் தொழில் தொடங்கலாம்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 4

அன்று தொடங்கிய பயணம். அடுத்த இரு மாதங்களுக்கு வயிற்றில் குழந்தையுடன் வெயில், மழை பாராமல் வங்கிகள், கிளைகள் என்று அலையத் தொடங்கினேன். பொருள்களைக் கொடுத்தவர்களும், உற்பத்திக் கருவிகளை வழங்கியவர்களும் பணத்துக்காக நெருக்கத் தொடங்கி விட்டனர்.

என் அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஒரு தேசிய வங்கியில் ஆயிரம் ரூபாய் செலுத்தி கரெண்ட் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கியிருந்தேன். நாள் தவறாமல் அங்கு சென்று, வங்கி மேலாளரைச் சந்திப்பேன். கடன் வாங்குவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் கையோடு கொண்டு செல்வேன். ஆனால் அவரோ பிடிகொடுக்கமாட்டார். இந்த நிலையில் நீங்கள் ஏன் இப்படி அலைகிறீர்கள் என்றுகூட கடுமையாக ஒருமுறை சொல்லிவிட்டார். ஆனாலும் நான் பொறுமையுடன் என் நிலையை அவருக்கு விளக்கினேன். ஒவ்வொரு நாளும் இது நடந்தது. தினமும் ஐந்து நிமிடங்களாவது இதற்கென்று ஒதுக்கிவைத்துக்கொண்டேன். மறுப்பது அவர் உரிமை என்றால், விடாமல் என் கனவைத் துரத்துவது என் கடமையல்லவா?

இப்படியாகச் சில நாள்கள் கடந்தன. ஒருநாள், சனிக்கிழமை மதியம் சுமார் மூன்று மணியளவில், யாரோ என் அலுவலகப் படியேறி வரும் ஓசை கேட்டு வெளியில் வந்தேன். எதிர்பாராதவிதமாக அந்த வங்கி மேலாளர் வந்திருந்தார். சிறிது பதட்டத்துடன் அவரை வரவேற்று அமரச் செய்தேன். ஆனால், அவரோ கிடுகிடுவென்று எனது அலுவலகத்தின் உள்ளே சென்று பணியிடங்களையும், இயந்திரக் கருவிகள் இயங்குவதையும் பார்த்துக் கொண்டே வந்தார். என்ன பார்க்கிறார்? என்ன செய்கிறார்? அவரது செய்கையை என்னால் புரிந்துகொள்ளடியவில்லை.

சிறிது நேரத்தில் என்னிடம் திரும்பினார்.

‘நான் உடனே போகவேண்டும், போவதற்குமுன் உங்களிடம் ஒன்றுகூற விரும்புகிறேன். உங்களின் விடாமுயற்சியும் நேர்மையான அணுகுமுறையும் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டது. இதைப்போல லோன் கேட்டு வருபவர்கள் தக்க ஆவணங்களுடனும், நாணயத்துடனும், பணியாற்றும் திறமையுடனும் நடந்துகொள்ளும் பட்சத்தில் எங்களைப் போன்ற அலுவலர்களுக்கு வேலை சுலபமாகிவிடும்.’

பாராட்டுகளெல்லாம் சரிதான். கடன் உதவி? மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் அவர் பின்னே படிக்கட்டில் இறங்கி வாசல் வரை வந்தேன். வாசலிலிருந்து விடைபெறும் நேரம் அவர் அமைதியாகச் சொன்னார். ’மேடம், உங்களுக்கு ரூபாய் 50,000 லோன் அளிக்க ஆவன செய்கிறேன். முதல் கட்டக் கடனை அதை வைத்துச் சமாளியுங்கள்.’

கண்ணெதிரே கடவுள் வந்து நின்று வரம் கொடுத்ததுபோல் உணர்ந்தேன். அடுத்த சில நாள்கள் வேலையைத் தவிர வேறு சிந்தனைகள் இல்லை. ஓன்றிரண்டு மாதங்களில், நான் கேட்காமலேயே என்னுடைய ஓசிசி லிமிட் 75,000 ரூபாயாக உயர்ந்தது.

மூச்சுத் திணறலிலிருந்து விடுபட்டுவிட்டேன் என்று நினைத்தபோது, பிரச்னைகள் மீண்டும் சூழ்ந்தன.  உற்பத்தி செய்த இயந்திரங்கள் பர்சேஸ் ஆர்டர் இல்லாமல் தங்கிவிட்டன. விற்ற இயந்திரங்களுக்குப் பணம் வரவில்லை. தனிப்பட்ட முறையிலும் வீட்டு வாடகை, அலுவலக வாடகை என்று பல்வேறு சவால்கள். மார்க்கெட்டிங் சப்போர்ட் கொடுப்பதாகச் சொல்லி வந்தவர்களும் கையை விரித்துவிட்டனர். பிரசவத்துக்கான காலமும் நெருங்கி கொண்டிருந்தது.

சிறிய இடமாக இருந்தாலும், வீடும் அலுவலகமும் ஒரே இடத்தில் இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். அது அப்போதைய பணப் பிரச்சனையை முழுவதுமாகத் தீர்க்காவிட்டாலும் உடனடியாக ஓரளவுக்குத் தீர்த்துவைக்கும். என் கணவரும் இதற்கு ஒத்துக்கொண்டார். நான் நினைத்தது போல் இடம் தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. நீண்ட தேடலுக்குப் பிறகே இடம் கிடைத்தது. மேலே வீடு, கீழே அலுவலகம். சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கினேன்.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பிரசவத்துக்குத் தாய் வீடு போகமுடியாத சூழல். குழந்தை பிறக்கும் தினத்தன்றும், என் பொருள்களை நானே எடுத்து வைத்துக் கொண்டு ஆட்டோவில் மருத்துவமனைக்குப் புறப்பட்டுப் போக நேர்ந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை. அலுவலக வாழ்க்கை. இரண்டிலும் பிரச்னைகளும் சவால்களும் மாறிமாறி வரத் தொடங்கின. ஆனால் அனைத்தையும் மீறி, உழைப்பின் பலன்கள் சிறிது சிறிதாக கிடைக்கத் தொடங்கின. குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், தோல்வியைக் குறித்து நான் ஒருபொழுதும் சிந்திக்கவில்லை என்பதுதான்.

வெற்றி பெற்றவர்களின் கதை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது தற்செயலல்ல. தாங்கமுடியாதபடி பல துயரங்களை அவர்கள் கடந்து வந்திருப்பார்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களைச் சவால்கள் பிடித்து தள்ளியிருக்கும். ஒருவர்கூட சுகமாக இலக்கை அடைந்திருக்கமாட்டார்கள்.

நான் சில விஷயங்களில் தெளிவாக இருந்தேன். யாரிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பணபாக்கி வைத்துக்கொள்ளக்கூடாது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை உருவாக்கவேண்டும். நம்மிடமிருந்து ஒருவர் ஒரு பொருளை வாங்குகிறாரென்றால் அவர் அதற்குண்டான பலனை முழுமையாக அனுபவிக்க வேண்டும்.
என் அலுவலகத்துக்கு வருபவர் யாராக இருந்தாலும் அவர், தான் ஒரு நேர்மையான நிர்வாகத் திறமையாளரிடம்தான் உரையாடிக்கொண்டிருக்கிறேன் என்று உணரவேண்டும். இந்த 22 வருடத்தில் என்னுடைய ஒரு காசோலைகூட பணம் இல்லை என்று வங்கியில் இருந்து திரும்பியதில்லை.  இதை என்னுடைய மிகப் பெரும் பலமாகக் கருதுகிறேன்.

0

சுயதொழில் செய்வோர், வீடு, நிலம் வாங்குவதைப் பற்றி இந்த இடத்தில் சிறிது பார்ப்போம். சுயதொழில் செய்வோர் தங்கள் லாபத்தை நல்ல விதமாக முதலீடு செய்ய நினைக்கும்போது, தொழில் செய்வதற்காக உரிய இடத்தை விலைக்கு வாங்குவது மிகமிக அவசியம். சிறு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் முதல் தேவையே ஒரு இடம் என்று இருக்கும்போது, வரும் லாபத்தில் அதற்குரிய இடத்தை வாங்குவது மிக  அவசியம். ஆனால் தொழில் செய்வதற்கு வேண்டிய இடத்தை வாங்குவதாக இருந்தாலும், வாடகைக்கு எடுப்பதாக இருந்தாலும் அதற்குரிய செலவை தொலைநோக்கோடு திட்டமிடாது போனால், ஒவ்வொரு மாதமும் அந்தத் தொழிலை நடத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்படும்.

சிலர் ‘நான் வீட்டிலிருந்தபடியே தொழில் செய்கிறேன்’ என்று கூறிக்கொண்டு, தேவையான தொழில் ரீதியான முன்னேற்பாடுகளைச் செய்யாமல் இருப்பார்கள். இதனால் பல சட்ட ரீதியான பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும். தொழிலில் ஒரு மாதிரி தலையெடுத்து வரும் கால கட்டத்தில், இதைப் போன்ற சட்டச் சிக்கல்கள் வரும்போது மேற்கொண்டு தொடரமுடியாமல் போய்விடும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, முதலில்  வேலைக்கான இடத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும். பணம் இருப்பவர்கள் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்பது உண்மையானால் என்னைப் போன்ற பலர் தொழில்முனைவோராக மாறியிருக்கமடியாது. பெரும் செல்வந்தர்கள் மட்டுமே  தொழில் செய்து முன்னேறியிருக்க வேண்டும்.

ஆக, பணம் மட்டும் தொழில் தொடங்குவதற்குக் காரணமல்ல. எத்தனையோ பிற முக்கிய அம்சங்களோடு சேர்த்து பணமும் தேவை. அவ்வளவுதான். இதை பலர் உணர்வதில்லை. ‘பணம் போடுவதற்கோ கடன் கொடுப்பதற்கோ யாராவது இருந்தால், நான் இந்நேரம் தொழில் செய்து உலகையே என் காலடியில் கொண்டு வந்திருப்பேன்’ என்று மார் தட்டிக் கொள்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 எனக்கு ஏற்ற தொழில் எது?

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 5

உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா என்பது மிகப் பெரிய, வளமான சந்தை. நாம்தான் இதனை ஒரு வாய்ப்பாக உணர மறுக்கிறோம். மேம்போக்கான காரணங்கள் கூறி சுயதொழிலை நிராகரிக்கிறோம்.

சரி, எனக்கு ஏற்ற தொழில் எது என்பதை எப்படித் தீர்மானிப்பது? ஒரு சிறிய உதாரணம்.

கண்மணி அதிகம் படித்தவரல்லர். பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவேண்டுமானால் வேலைக்குப் போயே தீரவேண்டும். ஆனால் அதற்கும் பல தடைகள். இவருக்கு விதவிதமாக உணவுப் பண்டங்கள் சமைப்பதில் அலாதி பிரியம். எப்போதும் ஏதாவது ஒன்று செய்து கொண்டேயிருப்பார். ஒரு ஞாயிற்றுக்கிழமை, புது வகையான இனிப்பு பண்டத்தை செய்ய முயற்சி செய்தார். வீட்டிலுள்ளோர் அனைவரும் பாராட்டினர்.

சில தினங்களில் அவருடைய கல்யாண நாள் வந்தது. தன்னுடைய நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். என்ன செய்யலாம் என்று வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் ஒருமித்த குரலில் இதைத்தான் சொன்னார்கள். அன்று ஒரு இனிப்பு செய்தாயே, அதையே செய்துவிடு.
கண்மணியும் மற்ற உணவு வகைகளோடு சேர்த்து இந்த இனிப்பையும் கொஞ்சம் அதிகமாகச் செய்து, விருந்தினர்களுக்குப் பரிமாறினார். விருந்தும் இனிதே முடிந்தது. அனைவரும் பாராட்டித் தீர்த்தபிறகே வெளியேறினார்கள்.

ஒரு நாள் பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தை தற்செயலாகப் பார்த்தார். ஒரு போட்டிக்கான விளம்பரம் அது. நல்ல கைமணமுள்ள பெண்கள் தங்கள் திறமையை வெளிக்கொணர ஒரு போட்டியை அறிவித்திருந்தார்கள். கண்மணியும் வீட்டிலுள்ளோர் விருப்பத்துக்கும், வற்புறுத்தலுக்கும் கட்டுப்பட்டு அந்தப் போட்டிக்கு நுழைவுத்தாளை அனுப்பினார். பலத்த போட்டிக்கு நடுவில் அவர் முதல் பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தப் பரிசளிப்பு விழாவை ஒட்டி நடந்த கண்காட்சியில் ஒரு ஸ்டால் போடுவதற்கு அனுமதி அளித்தனர். தனக்குத் தெரிந்த அந்த இனிப்பு வகையைச் செய்து அடுக்கி வைத்தார். அனைத்தும் விற்றுத் தீர்ந்த பிறகு கிடைத்த லாபம் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது.

சுயதொழிலா, நானா என்று காத தூரம் ஓடிப்போன கண்மணிக்குள் ஒரு சிறு பொறி. பணம் மட்டுமா கொடுக்கிறது இந்தப் புதிய முயற்சி? பாராட்டுகள். தொழில்திருப்தி. அளவிடமுடியாத மகிழ்ச்சி. வேறு என்ன வேண்டும்?

சீரியசாக யோசிக்கத் தொடங்கினார். தொழில் முயற்சி தொடங்கியது. சில பயிற்சி மையங்களில் இணைந்து வேறு பல புதிய பதார்த்தங்களைத் தொழில் ரீதியாகச் சமைக்கக் கற்றுக்கொண்டார். வங்கியில் சிறு தொகை கடன் வாங்கினார். சொந்த நிறுவனம் வளர்ந்தது. இன்று ஐந்து, ஆறு பெண்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்து, மிகச் சிறந்த முறையில் தொழில் செய்து வருகிறார்.

எதற்கு ரிஸ்க் வேறு ஏதாவது செய்யலாமே என்று இன்று யாராவது அவரிடம் சென்று கூறினால் நிச்சயம் அவர் அதனைப் பொருட்படுத்த மாட்டார். சுயதொழில் அவரை மட்டுமல்ல அவரைச் சார்ந்துள்ள சிலரையும் இன்று வாழ வைத்துக்கொண்டிருக்கிறத. இதில் கிடைக்கும் சுகம், சந்தோஷம், ஆத்ம திருப்தி ஆகியவற்றை அனுபவிப்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.

0

கண்மணியின் கதை நமக்கெல்லாம் ஒரு பாடம். அவரைப் போல் நமக்குள்ளும் பல விருப்பங்களும் தனித் திறமைகளும் ஒளிந்துகொண்டிருக்கின்றன.

நம்மில் பெரும்பாலோர் நமது சுய மதிப்பீட்டில் பெரும் தவறு செய்து விடுகிறோம். இதன் காரணமாக ஒன்று நம்மைப் பற்றி மிக தாழ்வான அபிப்பிராயத்தை உருவாக்கிக்கொள்கிறோம். அல்லது மிதமிஞ்சிய அளவுக்கு நம் திறமையின்மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஈடு எவரும் இல்லை என்று கூறிக்கொள்கிறோம்.

இந்த இரண்டு நிலையையும் எடுக்காமல் நடுநிலையோடு நம்மை நாமே சுய விமர்சனம் செய்து, நமக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளைத் தூசித்தட்டி வெளிக்கொணர்ந்து, உண்மையான உழைப்பை முதலீட்டாக்கினால் வெற்றி நிச்சயம்.

சுயதொழிலுக்கு வர விரும்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை.

  1. சுய தொழிலில் செய்த முதலீட்டுக்கு உடனடி அறுவடை கிடைக்காது. இதை மிகுந்த கவனத்தில் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். செய்யும் தொழிலின் தன்மையைப் பொறுத்து லாபம் ஈட்டுதல் என்பது அந்தந்தச் சூழலுக்கேற்ப மாறுபடும். அதனால் பொறுமை மிக மிக அவசியம்.
  2. எந்தத் தொழிலும் கடலில் கரைக்கும் உப்பாக மென்மேலும் முதலீட்டை இழுத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. தொழில் செய்பவர், அவரின் பணபலம் என்ன, தான் எதுவரை தாக்குப் பிடிக்க முடியும் என்பதில் சீரிய கவனத்தோடு செயல்படவேண்டும். முதலீட்டுக்காகத் திட்டமிடும்போது இதனை மனத்தில் வைத்திருக்கவேண்டும்.
  3. தொழிலின் சந்தையைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து திரட்டவேண்டும். மாறும் சூழலுக்கேற்ப முடிவுகளை மாற்றிச் செயல்படவும் தெரிந்து கொள்ள வேண்டும்.
  4. உணர்வுப்பூர்வமாக அணுகுமுறை தொழிலுக்கு, அதுவும் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, தவிர்க்கப்பட வேண்டும். மாறாக புத்தி பூர்வமான அணுகுமுறை கையாளப்படவேண்டும். உறவு, நட்பு போன்ற வலைப் பின்னல்களில் மாட்டிக்கொண்டு தொழிலைச் சிக்கலாக்கிக்கொள்ளக்கூடாது.
  5. கடன் கொடுக்க வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தயாராக இருந்தாலும், கூடிய மட்டும் கடனைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.
  6. ஒரு தொழில் ஆரம்பிக்கும் வரைதான் தொழிலதிபரின் முயற்சியும் அறிவு கூர்மையும் முதன்மை பெறுகின்றன. அது தொடர்ந்து வளரும் போது, அதன் சாதகங்கள் தொதிலதிபரைச் சேர்ந்தாலும், அதன் பாதகங்கள் அவரை மட்டுமல்லாது அதை சார்ந்துள்ள பலரையும் பாதிக்கும். எனவே, தொழிலைத் தீவிரமாக நேசிப்பவர்கள் மட்டுமே இதில் காலடி எடுத்து வைக்கவேண்டும். பகுதி நேரமாகச் செய்து பார்ப்போமே என்று அலட்சிய மனோபாவத்துடன் தொழிலில் இறங்குவது பயனளிக்காது.
  7. இன்றைய சூழலில் சிறுதொழில் செய்ய முன்வருபவர்கள் தொழிலின் பல்வேறு பகுதிகளைப் பற்றி ஓரளவுக்காவது அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். உதாரணம், சேல்ஸ் & மார்க்கெட்டிங், ஆள்கள் நியமித்தல், நிதி, நிர்வாகம், மனித வளம், தொழில்நுட்பம் ஆகியவை.
  8. எல்லாவற்றுக்கும்  பிறரை முழுவதுமாக அண்டியிருக்கக்கூடாது. தொழிலை தடையில்லாமல் நடத்திச் செல்லவேண்டுமானால், தொடர்ந்து நம் திறமைகளைக் கூர் தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த விஷயங்களை மனத்தில் வைத்துக்கொண்டு பொறுப்புணர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் சுயதொழிலில் ஈடுபடுபவர்களால் நிச்சயம் தங்களுடைய இலக்கை அடையமுடியும்


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மாட்டுக்கொம்பு கற்றுக்கொடுத்த பாடம்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 6

தொழிலிலிருந்து வரும் லாபத்தை மறுமுதலீடு செய்வது எப்படி என்பதில் ஒரு சிறுதொழிலதிபருக்கு தெளிவான சிந்தனையும் திட்டமிடுதலும் அவசியம். முதலீட்டில் பலவகை உண்டு. ஒரு சிறுதொழிலோ பெருந்தொழிலோ லாபம் சம்பாதிப்பது என்பது எப்பொழுதும் தொடர்ந்து நடக்கக்கூடிய ஒன்றல்ல. அதனால் ஈட்டிய லாபத்தை நல்ல முறையில் அறிவுள்ள வகையில் பாதுகாத்துக் கொள்ளத் தவறினால் தொழில் சோர்வடையும் காலங்களில் அந்த நிறுவனம் பணபலத்தின் பின்னணி ஏதுமின்றித் தத்தளிக்கத் தொடங்கிவிடும்.

என்னுடைய இத்தனை வருட சுயதொழில் அனுபவத்தில் பகட்டு வார்த்தைகளை நம்பியோ அல்லது நல்ல பேச்சுத் திறமையுள்ள வாய்ச்சவடால் பேர்வழிகளின் கருத்துக்கு மயங்கியோ, எந்த ஒரு தவறான முதலீட்டிலும் நிறுவனத்தின் பணத்தை இழந்ததில்லை.

சில வருடங்களுக்கு முன்பு பலர் தேக்கு மரமென்றும், பழத்தோட்டங்கள் என்றும், ஹாலிடே ரிசார்ட்ஸ் என்றும் வண்ணமயமான புகைப்படங்களை வைத்துக் கொண்டு ஆசை காட்டினர். ஆனால் இயல்புக்கு மாறான, உண்மைக்குப் புறம்பான லாபத்தை (return on investment) என்றுமே நான் ஏற்றுக்கொண்டதில்லை. காலிலிருக்கும் செருப்பு அறுந்து விட்டால் அதைத் தைப்பதற்கு ஐந்து அல்லது ஆறு ரூபாய் கொடுப்போம். கத்தி சாணை பிடிப்பதற்கு எட்டு ரூபாய். யாரும் இருபத்தைந்து ரூபாயோ ஐம்பது ரூபாயோ நிச்சயமாகக் கொடுக்க மாட்டார்கள். ஓரளவுக்கு நாட்டுப் பொருளாதாரத்தைப் பற்றியும் வங்கிகள் கொடுக்கும் வட்டி விகிதத்தைப் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்வது மிக மிக அவசியம்.

அதிகபட்ச வங்கி வட்டி விகிதமே பத்து அல்லது பதினோரு சதவிகிதம் இருந்த காலகட்டத்தில், பல நிதிநிறுவனங்களும் நகைக்கடைகளும், பொது மக்களின் முதலீட்டுக்கு 22 முதல் 30% வரை வட்டி கொடுப்பதாக விளம்பர யுத்தமே நடத்தின. அந்தப் பகட்டில் மயங்கி கையிருப்பை விட்ட தனி நபர்களையும் தொழிலதிபர்கள் பலரையும் சந்தித்திருக்கிறேன். அரசாங்கப் பாதுகாப்புடைய வங்கிகளிலும், இன்ன பிற பொதுத் துறைகளிலும் முதலீடு செய்வதே சிறந்த வழி.

ஒரு சில தொழிலதிபர்கள் லாபத்தைக் கண்டவுடன் மடமட வென்று, இயந்திரங்கள், பெரிய அலுவலகம் என்று ஆடம்பரமாகச் செலவு செய்துவிடுவார்கள். இதுவும் மிக மிகத் தவறு. எந்த முதலீடும் தொலைநோக்குடன் செய்யப்படவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட ஆர்டரைச் செயல்படுத்துவதற்காகவோ அல்லது பிசினஸ் கொடுக்கிறேன் என்று சிலர் சொல்வதை வைத்தோ கையிருப்பை இழக்கக்கூடாது. நல்ல லாபம் கிடைக்கிறது என்று சந்தோஷமாக இருந்த சிலர், ஆறே மாதங்களில் மீண்டும் சோர்வடைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். இடைக் காலத்தில் என்ன நடந்தது என்று கேட்டால் ‘எனக்கு மூன்று நான்கு கம்பெனியிலிருந்து மதிய உணவுக்கான ஆர்டர் காண்ட்ராக்ட் கிடைத்தது. அதை நம்பி சமையலுக்கு வேண்டிய மேலும் சில பெரிய உபகரணங்களை வாங்கினேன். ஆனால் திடீரென்று அந்த நிறுவனங்களின் ஆர்டர் ஏதோ காரணங்களுக்காகத் தடைப்பட்டுவிட்டது. இப்பொழுது என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கிறேன்’ என்பார்கள்.

நீங்கள் பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்துபவராக இருந்தால் ஓர் இயந்திரத்தையோ அல்லது கருவியையோ வாங்குவதற்கு முன்பு, தீர விசாரித்து யோசனை செய்து பணத்தை முதலீடு செய்யவும். அதே போல் சிறிய இடத்தில் இருந்து நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால், இடத்தை விரிவாக்குவதற்கு முன்போ அல்லது பெரிய பரப்பளவுக் கொண்ட இடத்துக்கு மாறுவதற்கு முன்போ, பலமுறை யோசிப்பது மிக அவசியம்.

ஒரு சிலருக்கு இன்னொரு பழக்கமுண்டு. தன்னுடைய தொழில் மூலமாக வரும் லாபம் கையிலிருக்கும்பொழுது, தெரிந்தவர்களோ அறிந்தவர்களோ வந்து கடன் கேட்டால் உடனே எடுத்துக்கொடுத்து விடுவார்கள். ஒரு தொழில் நிறுவனத்தின் பணத்தை அந்த நிறுவனத்தின் பணமாகக் கருத வேண்டுமேயன்றி, அதை தொழில் நிர்வகிப்பவரின் பணமாக கொண்டு விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு செலவிடக்கூடாது.

அதே போல், குறுகிய மனப்பான்மையையும் விட்டொழிக்கவேண்டும். இனம், மதம், குலம், மொழி, நாடு ஆகிய நிலைகளுக்கு அப்பால் தொழில் வளர்ச்சிக்கு உதவுபவர் யாராக இருந்தாலும் அந்தப் பிணைப்பை (customer relationship) பாதுகாத்துக் கொண்டு தொழிலை நடத்திச் செல்லவேண்டும்.

அடுத்து, நிறுவனத்தை நடத்துவதற்குத் தேவையான நபர்களின் எண்ணிக்கையிலும் கவனம் தேவை. எத்தனையோ நிறுவனங்கள் ஒரு காலகட்டத்தில் தம்மிடம் வேலை செய்பவர்களுக்கு கார், தொலைபேசி, குவார்டர்ஸ் என்று அதிகமாக வசதகிள் செய்து கொடுத்து, பின்னர் சில காரணங்களுக்காக மாதா மாதம் கொடுக்கும் ஊதியத்தை ஐந்து மாதங்களுக்கு நிறுத்தி விட்டனர். வேலை செய்யும் பணியாளருக்கும் உபரிச் சலுகைகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நிரந்தர வருமானமும் பாதுகாப்பும். இதை தொழிலதிபர்கள் மறக்கக்கூடாது.

வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பிற சலுகைகளும் கொடுப்பதிலும் அந்தத் தொழிலை நடத்துபவர்க்கு (சிறு தொழிலதிபர்களுக்கு) நிதானம் தேவை. சில தொழிலதிபர்கள் தம்மிடம் வேலை செய்பவர்களிடையே ஒரு விதமான மாறுபட்ட கண்ணோட்டதுடன் இருப்பர். ஒரு சில நபர்கள் வேலையில் தம் திறமையை வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் தம் முதலாளிகளின் பலவீனங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப தம் செயல்களை வகுத்துக் கொண்டு, ஒரு விதமான நாடகத் தன்மையுடன் போலியான விசுவாசிகளாக நடந்துகொள்வர். இந்தப் போலி ஆசாமிகளின் பிடியில் சிக்கி, அவர்களுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு பல தவறான முடிவுகளைச் சிலர் எடுத்துவிடுகிறார்கள். பின்னொரு நாளில் அந்தத் தவறான முடிவுகளால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க நேரும்போது, உண்மை நிலையறிந்து தம்மைத் தாமே நொந்து கொள்வர்.

தவறான வழிகாட்டுதல் ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டையே ஸ்தம்பிக்கச் செய்துவிடும். அந்தத் தவறுகளைச் சரி செய்ய கால அவகாசம்கூட சில நேரங்களில் கிடைக்காமல் போய்விடும். தொழிலும் பெரிதும் பாதிக்கப்படும். அதனால் தொழிலதிபர் ஒரு கண்ணியமான உறவுமுறையை தம்மைச் சுற்றி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உணர்வுபூர்வமான உறவுமுறை சரியல்ல.

இப்படி நஷ்டத்தை உருவாக்கக்கூடிய செயல்களைக் கண்டறிந்து தவிர்த்தால் நிச்சயம் லாபத்தை ஈட்ட முடியும். தொழில் செய்யும் முறையில் நிதானமும் புத்திக் கூர்மையும் இருக்கும் பட்சத்தில், எந்தத் தொழிலும் அவ்வளவு எளிதாக நஷ்டத்தைத் தந்துவிடாது.

0

சரி, இவ்வாறு ஈட்டும் லாபத்தை எப்படிக் கையாள்வது? பெரும்பாலான நபர்கள் பிற தொழில்களில் மறுமுதலீடு செய்வார்கள். ஆனால் அத்தகைய முடிவுகள் ஆராயாமல் எடுக்கும் பட்சத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

உதாரணத்துக்கு, ஒரு தொழிலின் லாப நஷ்டத்தையும், அதன் எதிர்காலத்தையும் குறைந்தது ஐந்து வருடங்களாவது நடைமுறையில் கண்டபிறகே இன்னொன்றைத் தொடங்கவேண்டும். பெரும்பாலான நபர்கள் தொழிலை ஆரம்பித்து ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் ‘ஆஹா! நாம் கரை கண்டுவிட்டோம்’ என்ற மிதப்பில், சுற்றியுள்ள நபர்களின் ரசனைக்கும் விருப்பத்துக்கும் ஏற்றவாறு வெவ்வேறு விதங்களில் நடைமுறைக்கு ஒவ்வாத முயற்சிகளில் ஈடுபட்டு, இருக்கும் கையிருப்பை இழந்து தவிப்பர்.

ஒவ்வொரு தொழிலுக்கும் பொதுவான குணநலன்களும் செயல் திறன்களும் (General characteristics of entrepreneurship) உள்ளன. குறிப்பிட்ட ஒரு தொழிலுக்கு ஏற்ற குணநலன்கள் தன்னிடம் இருக்கினறவா என்று ஒவ்வொருவரும் சுய பரிசோதனையில் ஈடுபட்டு, பின்னர் முடிவெடுப்பது நல்லது.

உதாரணமாக என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நான் எடுத்துக்காட்டாகக் கூற முடியும். எனது தொழில்முயற்சியில் காலூன்றி சில வருடங்களுக்குப் பின்னர், சில நண்பர்களோடு சேர்ந்து ஒரு புதிய தொழிலில் முதலீடு செய்தேன். மாடுகளின் கொம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் பட்டன்களை வடிவமைக்கும் தொழில் அது. அதற்கு வெளிநாடுகளில் தோல் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கிடையே அதிகமான தேவை இருந்தது.

ஆனால் அந்த மாடுகளின் கொம்புகள், சென்னையில் அடிமாடுகளை இறைச்சிக்காக வெட்டும் இடங்களில்தான் கிடைக்கும். நானோ மிருக வதையை ஏற்காத, சைவத்தில் அதிக நம்பிக்கையுள்ள ஒரு நபர். அதனால் என் கணவரை ஓரிரு முறை இந்த இடங்களுக்கு பொருள் வாங்கக் கட்டாயப்படுத்தி அனுப்பினேன். அவர் அசைவம் சாப்பிடும் நபராக இருந்தபோதிலும், அந்த இடங்களுக்கு ஓரிரு முறைச் சென்று வந்தவுடனேயே, மிகத் தீர்மானமாக, ‘என்னால் அங்கு இனிமேலும் செல்ல முடியாது,’ என்று சொல்லிவிட்டார். அவர் அங்கு பசுக்களும் எருமைகளும் தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் கொம்புக்காகவும் உயிருடன் வெட்டப்படுவதை விவரித்தவுடன் நான் திக்பிரமைப் பிடித்து அமர்ந்து விட்டேன்.

என் மன உளைச்சலுக்கு விடை காண விரும்பினேன். நன்கு சிந்தித்து அதிக நஷ்டமடையாமல் அந்தத் தொழிலில் விருப்பமிருந்த மற்றொரு நபருக்கு அதை விற்று விட்டேன். இது ஒரு கூட்டு முயற்சியாக இருந்ததால் தனி நபர் நஷ்டம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் பொருள் நஷ்டம் ஏற்பட்டது உண்மை.

ஒவ்வொருவரும் தமக்குப் பொருந்தக்கூடிய தொழில்களில் மறுமுதலீடு செய்வதுதான் நஷ்டத்தைத் தவிர்க்க சிறந்த வழி.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 சுயநலம் நல்லது

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 7

எது நமக்கான தொழில் என்று தீர ஆராய்ந்து முடிவெடுத்த பிறகு கீழ்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உங்களுடையது முதல் தொழில் முயற்சி என்றால், உங்களுக்கு ஏற்ற முதலீட்டை மட்டும் போட்டு ஆரம்பியுங்கள். அகலக்கால் நினைப்பு வேண்டாம். மேலும், உங்கள் முயற்சி தனி முயற்சியாக இருப்பது உத்தமம். உறவினருடனோ, நண்பருடனோ சேர்ந்து தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், உங்களைப் போலவே அவர்களும் உண்மையான, நேர்மையான வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் உள்ளவர்களாக இருத்தல் மிக அவசியம். அப்படி இல்லாவிட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே மன வருத்தம் உண்டாகிவிடும். இதனால் செய்யும் தொழில் பாதிக்கும். லாபமோ, நஷ்டமோ உங்கள் தனித்திறமைகளை முன்வைத்துத் தொடங்கும் போது, உங்களுடைய குறைகளை நீங்களே அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

குறுந்தொழிலோ, சிறு தொழிலோ செய்பவர் தன்னை ஓர் உழவருடன் ஒப்பிட்டுக்கொள்ளவேண்டும். நிலம், நீர் அனைத்தும் இருந்தாலும் சிறந்த அறுவடையை மனத்தில் இருத்திக்கொண்டு ஒரு உழவர் கடுமையாக உழைக்கிறார். அதைப் போல் தொழில் முனைவோர் தனது செயல்திறனைப் பயன்படுத்தி இலக்கைக் குறிவைத்து உழைக்கவேண்டும். ஒருவரது உழைப்பைப் பொறுத்தே அறுவடை எத்தனை ஆண்டுகளுக்குக் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

சிலர், லாபம் கிடைத்தவுடன் உடனே செலவு செய்யவும் ஆரம்பித்துவிடுவார்கள். கல்லாவில் சில்லறை சேர்ந்தவுடன் ஒரு ஓட்டல் முதலாளி அதனை எடுத்துக் கொண்டு காணாமல் போனால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டதுதான் இதுவும். இடத்துக்கான வாடகை, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, சப்ளையர்களுக்குத் தரவேண்டிய பாக்கி, வங்கிக் கடன் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, மிச்சமிருப்பதை சேமிப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். மிகச் சிறு பகுதி மட்டுமே செலவுகளுக்கு.

பிரமிக்க வைக்கும் அளவுக்கு பணம் ஈட்டியவர்களையும் நம்பமுடியாத அளவுக்கு அவற்றைத் தொலைத்தவர்களையும் நான் கண்டிருக்கிறேன். செல்வம் என்பது கையை விட்டு செல்லக் கூடிய ஒரு கருவி. தக்க வைத்துக் கொள்ளும் சூத்திரம் அறியாதவர் எவ்வளவு ஈட்டினாலும் பிரயோஜனம் இல்லை. சிறு லாபம் வந்தவுடன் நிலை தடுமாறி வாழ்க்கைத் தரத்தை மிக அதிகமாக உயர்த்திக் கொள்ளும் பெரும்பாலோரை நான் கண்டிருக்கிறேன். தொழிலிலிருந்து வரும் நிகர லாபத்தின் ஒரு பகுதி அந்தத் தொழிலை மேம்படுத்துவதற்குச் செலவு செய்ய வேண்டியது அவசியம். தொலைநோக்கு மிக அவசியம்.

நாற்பது வயதுக்குமேற்பட்ட பலரும் பொதுவாக இவ்வாறு கூறுவதுண்டு. ‘நான் கூட சிறிது காலம் தொழிலில் ஈடுபட்டேன். ஆனால் எதிர்பாராத முன்னேற்றம் இல்லாததால், அத்தோடு விட்டுவிட்டேன்.’ எந்தவொரு தொழிலையும் நின்று, நிதானித்து, நிலைத்து நிற்கும்படி தொடர்ந்து நடத்துவதில்தான் திறமை அடங்கியுள்ளது. சிறிது காலம் அதைச் செய்தேன், சிறிது காலம் இதைச் செய்தேன் என்று சொல்பவர்கள் தொழிலைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு மேம்போக்கான உந்துதலில் தொடங்கி இருப்பவர்களாக இருக்கவேண்டும். இல்லையேல் தொழில் ஆர்வத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் பின்வாங்கிட முடியாது.

உலகளாவிய அளவில் நிர்வாகவியல் குறித்து ஆய்வுகள் நடத்தியிருப்பவர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் இது. ஒரு தொழிலின் வீழ்ச்சிக்குக் காரணம் அந்தத் தொழிலை நடத்துபவர்தானே தவிர, அந்தத் தொழிலால் ஏற்படும் இடர்பாடுகள் அல்ல. முன்பெல்லாம் பிசினஸில் இறங்கவேண்டுமானால் ஒருவருக்கு தொழில்நுட்ப அறிவு (Technical expertise) மட்டும் போதும் என்று சொல்வார்கள். ஆனால் இன்றோ நேர்மையான எண்ணம், நிர்வாகத் திறமை, பிரச்னைகளைக் கையாளும் விதம், கடுமையான உழைப்பு, சமூக அக்கறை ஆகிய அனைத்தும் தேவைப்படுகின்றன.

இதைப் படிக்கும்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். வண்ணமயமான விளம்பரங்கள், பகட்டு வார்த்தைகள், ஆடம்பரமான மக்களைக் கவரும் உத்திகள் போன்றவற்றைச் செய்துதானே பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலை நடத்திக் கொண்டிருக்கின்றன? சற்று முன் பார்த்த அம்சங்கள் எங்கே இருக்கின்றன? என்றால், என் பதில் இதுதான். உண்மை, உழைப்பு, உறுதி ஆகியவை நம் வசம் இருந்தால் நம் முயற்சி முழு வலிமையுடன் நிச்சயம் வெற்றியடையும். மற்றபடி, பொய்மையும் போலித்தனமும் நிச்சயம் ஒருநாள் நம்மைக் கீழே இழுத்துவிடும்.

இன்று மக்கள் வேகமாக முடிவெடுத்து ஒரு பொருளையோ ஒரு நிறுவனத்தையோ நம்பிவிடுகிறார்கள். அதே போல், மிக எளிதாக தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டும் விடுகிறார்கள். உண்மைத்தன்மை இல்லாவிட்டால் எந்தவொரு நிறுவனத்தாலும் தாக்குப்பிடிக்கமுடியாது. அதனால் தரமான பொருளையோ, சேவையையோ மக்களுக்கு அளிப்பது ஒவ்வொரு தொழிலிலும் ஈடுபடுவோரது கடமையாகும்.

0

ஒரு தொழிலில் ஈடுபடுபவரின் பிரச்னையும் மன உளைச்சலும் அந்த அனுபவத்தைப் பெற்றவர்களால் மட்டுமே உணரமுடியும். பொதுவாக நமது சமுதாயத்தில் பிசினஸ் செய்பவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுபவர்களே அதிகம். அவர்களுக்கென்ன பிசினஸில் பணம் அள்ளி எடுக்கிறார்கள் என்றுதான் அவர்கள் சொல்வார்கள். அவர்களுடைய ஏக்கங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தொழிலில் முழுக்கவனத்தைக் குவிக்கவேண்டியது அவசியம்.

தகுதியான நபர்கள் இல்லாமல் எந்தவொரு தொழிலையும் நடத்தமுடியாது. உங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புத் தருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் அவருக்குரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தாத பட்சத்தில் அவரை வெளியேற்றுவதில் எந்தவித தயக்கமோ, உணர்வுப் பிரச்னையோ எழக்கூடாது. பரவாயில்லை, பொறுக்கலாம் என்று தவறுகளைப் பொறுத்துக்கொள்ளத் தொடங்கினால் அதுவே அந்தத் தொழிலின் வீழ்ச்சிக்குப் பெரும் காரணமாக அமைந்துவிடும். பெரும்பாலான சிறு தொழிலதிபர்கள் ஒரு சில தொழிலாளர்களை அளவுக்கு அதிகமாக நம்பி விடுவார்கள்.

எந்தவொரு தொழிலையும் தொடங்குவதற்கு முன்பு அதை நீங்கள் தனி நபராகச் செய்யப்போகிறீர்களா அல்லது கூட்டுத் தொழிலாகச் செய்யப்போகிறீர்களா என்பதைப் பற்றித் தீர்மானமான, தீர்க்கமான முடிவை எடுப்பது மிக அவசியம். தனிப்பட்ட நட்பு வேறு, தொழில்முறை உறவு வேறு. இதைப் புரிந்துகொள்ள தவறினால் மன உளைச்சல் பெருகும்.

உடன் இருப்பவர் உழைப்பாளியா அல்லது சுகவாசியா, நேர்மையானவரா அல்லது போலியா, லாபத்தில் மட்டும் பங்கேற்பவரா அல்லது நஷ்டங்களிலும் உடன் இருப்பவரா, பிரச்னைகளைத் துணிவுடன் எதிர்கொள்பவரா அல்லது ஓடிவிடுபவரா போன்றவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள்மீது அக்கறையும் அன்பும் கொண்டவராக அவர் இருப்பது நல்லது.

கவனம், ஒரு தொழிலைத் தொடங்குவதில் மட்டுமல்ல, இழுத்து மூடுவதிலும்கூட சட்டச் சிக்கல்கள் உள்ளன. தொடரவும் முடியாமல் மூடவும் முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் அகப்பட்டு செய்வதறியாது நிற்கும் நிலையைத் தடுக்கவேண்டும். ஒருவர் தங்களுடைய சொந்த லாப, நஷ்ட பிரச்னைகளால் சுய தொழிலிலிருந்து விலகினால், பலர் வேலையிழந்த தடுமாறுவார்கள் அல்லவா?

0

சிறு தொழில் ஒன்றை மேற்கொள்பவரை வட்டத்துக்குள் இருக்கும் ஒரு புள்ளியோடு ஒப்பிடலாம். முதலில் அவரால் ஒரு சிறு குழுவுக்கு (team of employees) வேலை வாய்ப்பு கிடைத்து பலன் பெறுகிறார்கள்.

அடுத்து, அவருடைய தொழிலுக்குத் தேவையான கருவிகளையோ உபரிப் பொருளையோ மூலப் பொருள்களையோ வழங்குபவர்கள் (suppliers) பலன் பெறுகிறார்கள். அவர்களுடைய வியாபாரம் வளர்ச்சி அடைகிறது. அடுத்த கட்டமாக, தொழில் செய்பவர் தான் உற்பத்தி செய்யும் பொருளையோ (finished products) அல்லது சேவையையோ (services) சமுதாயத்தின் முன் வைக்கின்றனர். பிறகு, அவற்றை நுகரும் வாடிக்கையாளர்கள் (customers) உருவாகிறார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழில் உருவாவதால், அந்த இடத்தைச் சுற்றி பல சிறிய பெரிய அனுகூலங்கள் உருவாகின்றன.

உதாரணமாக, சிறு தொழில் நடத்தும் இடத்துக்கு அடிக்கடி பொருள்கள் வந்து போக வேண்டிய நிலை இருந்தால், அந்தத் தொழிலதிபர் சாலைப் பிரச்னையைத் தீர்க்கவேண்டியவராக மாறிவிடுகிறார். தனது சுயலாபத்துக்காகவும் தொழில் முன்னேற்றத்துக்காகவும்தான் அவர் அவ்வாறு செய்கிறார் என்றாலும் அவருடைய சுயநலன் பொதுநலத்துக்கும் உகந்ததாக மாறிவிடுகிறது. அதே போல் அவர் செலுத்தும் வணிக வரி, வருமான வரி போன்றவை மூலம் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் வருமானம் பெருகுகிறது. நல்லப் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஆர்வம் மட்டும் போதும்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 8

இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கமுள்ள ஒரு நாட்டில் அரசாங்கத்தால் எல்லோருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கமுடியாது. இந்த இடைவெளியைத் தொழில்முனைவோர்தான் நிரப்பவேண்டும். அந்தத் தார்மிகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது. இந்த உணர்வை அவர்கள் எப்பொழுதும் மறக்கக்கூடாது. அதனால் எத்தனை சவால்கள் வந்தாலும் எப்பாடுபட்டாவது தொழில் முயற்சியைத் தொடரவேண்டும்.

எனில், ஆரம்பித்த ஒரு தொழில் முயற்சியை எக்காரணம் கொண்டும் கைவிடவே கூடாதா? நான்கு காரணங்களுக்காகச் செய்யலாம். முதல் காரணம், தொழில் நடத்துபவரின் மரணம். இரண்டாவது காரணம், பெரிய அளவிலான உடல் ஊனம். மூன்றாவது, அரசாங்கத்தின் அநாவசியக் குறுக்கீடு. நான்காவது, வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் ஒருவர் மீதிருந்த ஆதரவை விலக்கிக் கொள்ள நேரும்போது. இப்படிப்பட்ட சூழல் ஏற்படும்போது (அவ்வாறு ஏற்படக்கூடாது என்பதுதான் நம் விருப்பம்) அத்தொழிலைத் தொடர்ந்து நடத்துவது சாத்தியமாகாமல் போகலாம்.
நெகடிவ் விஷயம் என்றபோதும், இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் ஒரு தொழிலுக்கு வளர்ச்சியும் வீழ்ச்சியும் இயல்பானது என்பதால்தான். தொழில்முனைவோருக்குச் சங்கடங்கள் ஏற்படலாம், விபத்து நேரலாம், மரணம் சம்பவிக்கலாம். ஆனால், தொழில் சிந்தனைக்கு எந்த இக்கட்டும் நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை வி.சி.ஆர் வீடியோ காசெட்டுகளை வாடகைக்குக் கொடுக்கும் பல கடைகள் நல்ல லாபத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. மக்கள் வீட்டில் உட்கார்ந்து குடும்பத்தோடு காசெட் போட்டு படம் பார்க்கும் வழக்கம் அப்போது அதிகம் இருந்தது. ஆனால் இன்றோ ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் குறைந்தது அறுபது சாட்டிலைட் சானல்கள் வந்துவிட்டன. இன்று வீடியோ டேப்பை யாரும் வாடகைக்கு எடுப்பதில்லை என்பதால் காசட் வியாபாரம் செய்தவர்கள் பாதிக்கப்பட்டனர். அறிவுள்ள சிலர் மாறும் சூழலுக்குத் தக்கவாறு சிடிக்குத் தாவினர்.

0

சிறு தொழிலில் ஈடுபடுவதற்குத் தோதான வயது எது? இந்தக் கேள்விக்கான விடை, அப்படியொரு வரையறை எதுவும் இல்லை என்பதுதான். ஆர்வம் இருந்துவிட்டால் வயதோ, கல்வித் தகுதியோ ஒரு தடையல்ல. இருந்தாலும் கூடுதலாக கல்வியறிவு என்பது ஒரு முழுமையான திறமையை வளர்த்துக் கொள்ள உதவும் என்றால் அதில் தவறில்லை. அதே சமயம் நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு முன்பு, சில காலம் கட்டாயமாக ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவது நல்லது. காரணம் எந்தவொரு தொழிலையும் மற்றவர் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே பணியைக் கற்றுகொள்ளுவது, தொழிலைக் கவனிப்பது அனுகூலமானதாகும். Learning business at other’s expenses என்று சொல்வார்கள்.

இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும். மிகப் பலர், பகுதி நேரத் தொழிலில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படிப்பட்ட ‘சைட் பிசினஸ்’ தவறானது. ஒரு நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றும்போது, சுயதொழில் ஆர்வமும் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட சமயத்தில், பணியாற்றும் நிறுவனத்துக்கு உட்பட்ட எல்லா வேலைகளையும் கவனிப்பதும் அறிந்து கொள்வதும் நல்ல உத்தியாகும்.

நீங்கள் ஈடுபட நினைக்கும் தொழில் வேறாக இருந்தாலும், எல்லாத் தொழில் நிறுவனங்களுக்கும் பொதுவாக சில அம்சங்கள் உண்டு. அந்த அம்சங்கள் நம்மை மெருகூட்டக்கூடியவை. இதை என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
நான் பணிபுரிந்த இடங்களில் எனக்கு மேலாளராக, உதவி மேலாளராக இருந்த பலரிடமிருந்தும் பல நுணுக்கமான விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். அது பிற்காலத்தில் எனக்கு உதவியது. இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் பணம் ஈட்டுவதில் அதிக ஆர்வத்தைக் காட்டுகின்றனர். எளிதில் பணம், விரைவில் பணம் என்பது நடைமுறை சித்தாந்தமாகிவிட்டது. இந்த சித்தாந்தம், அரசியல், சினிமா, இரண்டு துறைகள் அல்லாமல், (அந்தத் துறைகளிலும் ஒரு சிலருக்கு, எல்லோருக்குமல்ல) மற்ற தொழில்களுக்கு அறவே பொருந்தாது. விதை விதைத்தவுடன் அறுவடைக்கு ஆசைப்படும் மனோபாவம், தொழில் முனைவோருக்கு இருக்கக்கூடாது.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, கையிருப்பை ஏற்படுத்திக்கொண்டு, நல்ல சந்தர்பத்துக்காக ஆற்றின் கரையோரம் மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கு போல் தவம் இருக்கவேண்டும். ஏனென்றால், சுய தொழில் என்பது ஒரு நிமிடத்தில் ஆசைப்பட்டு, அடுத்த நிமிடத்தில் ஆரம்பித்து, அதற்கடுத்த நிமிடத்தில் செல்வந்தனாக மாறுவது என்பதல்ல. அது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமான விஷயம்.
குறைவற்ற வாழ்க்கையே வாழவேண்டும் என்றால், தொழிலில் எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்கும் தன்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். முதலில் சிறிது காலமாவது தொழிலாளியாக இருந்து, பின்னர் முதலாளியாக மாறுவது தொழிலுக்கு நன்மையைத் தரும்.

0

நம் சமூக அமைப்பில், பெண்களுக்குள்ள பொருளாதாரச் சுதந்திரத்தைப் பற்றியும் சிந்தித்தே ஆக வேண்டும். மணமாகாத பெண் என்றால், தொழில் தொடங்குவதற்கு தந்தையிடமிருந்து முதலீட்டுப் பணத்தை எதிர்பார்ப்பது சிக்கலாகவே இருக்கும். பெரும்பாலான பெற்றோர், அடிப்படைக் கல்வி, மருத்துவம், மற்றும் திருமணச் செலவு இவற்றுக்கு மட்டுமே பணத்தை செலவழிப்பதற்கு விரும்புவர். ‘தனியாகத் தொழில் தொடங்க வேண்டும், முதலீடு வேண்டும்’ என்றால் ‘வேண்டாத வேலை எல்லாம் எதற்கு?’ என்ற விமரிசனம் மட்டுமே பலமாக எழும்.
மணமான பெண்ணாக இருந்தால், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சம்மதத்தைப் பெறவேண்டும். இது மிகவும் சிக்கலான விஷயம். அப்படியானால், பெண்கள் தொழில் தொடங்குவது எப்படி?

நீங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருந்தால் குறைந்த முதலீடு உள்ள தொழில்களைத் தேர்வு செய்வது மிக அவசியம். ஆனால், எந்தச் சிறு தொழிலும், எளிமையாக இருந்தாலும், திறமையாக அதை நடத்திச் செல்லும்போது, அது வளர்ச்சி அடைவதைத் தவிர்க்கவே முடியாது. சிறு அலுவலகமாக இருந்தாலும், அதை ஒரு அழகான இடமாக மாற்றி, தங்கள் தொழிலை, பொருளை, தங்களை, இந்தச் சமூகத்தின் முன்பு அடையாளம் காட்ட வேண்டியது மிக அவசியம். வாடிக்கையாளர்களை தொழிலதிபர் நேரிடையாகச் சந்திப்பதும் தொடர்புகளை விரிவுபடுத்துவதும் இந்தச் சூழலில் மிக அவசியம். எந்தத் தொழிலிலும், தரமான பொருள் அல்லது சேவை இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகுவது இயல்பானது.

0

தொழில் முனைபவர் வாடிக்கையாளரின் பிரச்சனைக்கு உடனடித் தீர்வுகளை யோசிக்கும் திறன்படைத்தவர்களாக இருப்பது அவசியம். இந்த இடத்தில் தொழில் முனைவோரின் சில தனிமனித இயல்புகள், தன்னிச்சையாக வெளிப்பட வாய்ப்பு உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உதாரணமாக ஒருவர் வீட்டிலோ அல்லது தான் வாழும் சூழலிலோ, கோபப்படுபவராக இருந்திருக்கலாம். பிறரின் ஏளனமான சொற்களையோ கடுமையான விமரிசனங்களையோ பொறுத்துக் கொள்ள முடியாத இயல்புடையவராக இருந்திருக்கலாம். ஆனால் தொழிலென்று வந்த பிறகு வாடிக்கையாளரின் விமரிசனத்தை மனத்தில் கொள்ளாமல் செயல்படவேண்டும்.

வாடிக்கையாளர் சில நேரம் எரிந்து விழலாம். பாராமுகத்தோடு சொற்களைப் பேசலாம். கடுமையான வார்த்தைகளுடைய கடிதத்தை அனுப்பலாம். இவை யாவும் தனி மனித மரியாதையை அவமதிப்பதாக எடுத்துக்கொண்டு செயல்படுவது வியாபாரத்தில் தவறு. நிதானமும் பொறுமையும், குறிப்பிட்ட நேரத்தில் முடிவெடுக்கும் திறனும், எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியமும், ஒரு பிரச்னைக்கு பல தீர்வுகளை யோசனை செய்வதும் மிக அவசியம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கஸ்டமர் என்றால் கடவுளா?

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 9

ஒரு நிறுவனத்திடமிருந்து வெளிவரும் பொருளோ சேவையோ தரமாக இருக்க வேண்டியது கட்டாயம். ஒரு மகிழ்ச்சியான திருப்தியடைந்த வாடிக்கையாளர் நம்மைப்பற்றிப் பிறரிடம் நல்லவிதமாகப் பேசாமல் போகலாம். ஆனால் அதிருப்தியான வாடிக்கையாளர் நமது நிறுவனத்தின் புகழை, குறைவான நேரத்தில் அதிக அளவில் சேதப்படுத்திவிட முடியும்.

வாடிக்கையாளர்களை இரண்டாகப் பிரிக்கலாம். தனிநபர், நிறுவனம். நம் வாடிக்கையாளர் ஒரு நிறுவனம் என்னும் பட்சத்தில் நாம் பல விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். நிறுவனத்தின் பாலிசி என்ன? நடத்துபவர்களின் இயல்புகள் என்ன? அவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது? இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு வாடிக்கையாளரின் அடிப்படைத் தன்மைகளை, தொழிலை நடத்துபவர் புரிந்து வைத்துக் கொள்ளுவது இன்றியமையாதது.

ஒவ்வொரு வாடிக்கையாளரையும் – genuine customer, reasonable customer, open customer, hidden customer, crooked customer, stable minded customer எனப் பலவகையாகப் பிரிக்கலாம். வாடிக்கையாளர் வெவ்வேறாக இருந்தாலும் அவர்கள் அனைவருமே, நாம் நடத்தும் நிறுவனத்துக்கு இன்றியமையாதவர்கள். அதேபோல் அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் தொழில் முனைபவருக்கு உண்டு. அதேசமயம், தேவைக்கு அதிகமாக நம் நிறுவனத்திடமிருந்து பலவற்றை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்கிறேன் என்று சிக்கல்களை உருவாக்காமல் இருப்பது அவசியம். நிறுவனத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு வாடிக்கையாளருமே இன்றியமையாத நபராக இருந்தாலும், அவரால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் வியாபாரத்தின் அளவையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

அதே சமயம் நமக்கு விற்பனை செய்யும் நிறுவனங்களைப் பற்றியும் கவனத்தில் வைத்துக்கொள்ளுதல் இன்றியமையாதது. நமது உற்பத்திக்காக வாங்கப்படும் பொருள்களின் தரம், தன்மை, சிறப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வியாபாரத்தை விரிவாக்கவேண்டும். இதற்கு ஒவ்வொரு நிறுவனமும் தமக்குரிய வெண்டார் பாலிசி அல்லது சப்ளையர் பாலிசியை வரையறுத்துக் கொள்ளுதல் அவசியம். தர நிர்ணயம் மற்றும் நிர்வாகத்திறன் ஆகியவற்றை அடிப்படைக் கொள்கையாக வைத்துக் கொண்டு, ஒரு சீரிய கண்ணோட்டத்துடன் கொள்கையைத் தயாரித்துக் கொள்ளுதல் நலனைத்தரும்.

இந்த வரையறுக்கப்பட்ட திட்ட வரைவு அணுகுமுறை விற்பனையாளர்களிடமிருந்து நேரத்துக்கு கச்சாப் பொருள்கள் பெறுவதற்கும், அதனால் உரிய நேரத்தில் நமது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருள்கள் காலதாமதமாகாமல் குறிப்பிட்ட நேரத்துக்கு வாடிக்கையாளர்களை அடையவும் வழி வகுக்கும்.

விற்பனையாளர்களிடம் திட்ட வரைவு செயல்முறை போல், வாங்கப்படும் உபரி மற்றும் கச்சாப் பொருள்களுக்கு விலை மதிப்பீடு ஆகியவற்றை முதலிலேயே பேசித் தீர்மானித்தல் மிக அவசியமாகும். குறிப்பிட்ட பொருளின் விலை ஏற்றம், சந்தை நிலவரம் ஆகியவற்றை அறிந்து கொண்டு, சப்ளையர்களுடன் கலந்தாலோசித்து திட்டமிடுதல் மிகவும் சிறந்த முறையாகும். இதனால், கட்டுக்கோப்பான செயல்முறைத் திட்டங்கள் நடைமுறையாக்கப்பட்டு விரைவான, தரமான மற்றும் கண்ணியமான உறவுமுறை சப்ளையர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் இடையே உருவாக வழி செய்யும்.

மேலும், தொழில் முனைவோர் தமது வாடிக்கையாளரிடமிருந்து எப்படி தாம் விற்பனை செய்யப்படும் பொருளின் வருவாயை எதிர்நோக்குகிறாரோ அதேபோன்று தமது சப்ளையரின் எண்ணத்தைக் கருத்தில் கொண்டு, அவரது பொருள்களுக்கான விலையை உரிய முறையில் காலதாமதமின்றித் தருவது மிக முக்கியமாகும். விற்பனையாளரின் திருப்தியும், நம்பிக்கையும்கூட நமது வாடிக்கையாளர்களின் மன நிறைவுக்குச் சமமானதே. இதனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதால் நிச்சயமாக தரமான மற்றும் கண்ணியமான உறவுமுறையை ஏற்படுத்த முடியும்.

தொழில் முனைவோர் சிறிய, குறுந்தொழில் நிறுவனமாகச் செயல்பட்டாலும் (Private, Partnership, Proprietor concern) தனது நிறுவனத்திடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை, தனது மாத ஊதியமாக நிர்ணயித்து எடுத்துக் கொள்ளுதல் சிறந்தது. தொழில் தொடங்கி ஒரு வருட காலத்துக்குள் வருவாய் மற்றும் செலவினங்கள் சமன்நிலை அடைந்து, எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். இதனால் பலர் தமது நிறுவனத்தின் வளர்ச்சியை முதன்மையாகக் கொண்டு, தனக்கென்று வருவாயை எடுத்துக்கொள்ள முயல்வதில்லை. இதனைத் தொடர்ந்து செய்வதால் சுயதொழில் முனைவோரின் சுய மதிப்பீட்டையும் தமது குடும்ப நபர்களின் ஆதரவையும் இழக்க நேரிடலாம். கடலில் போட்ட பெருங்காமாக அவரது மூலதனம் ஆகிவிடலாம். இதனைத் தவிர்க்கும் பொருட்டு, தொழில் தொடங்கிய கால கட்டத்திலேயே தனது வருவாயினை ஊதியமாகக் கருதி எடுத்துக் கொள்வது சிறந்தது.

தொழில் முனைபவர் தனது பலம், பலவீனம் இரண்டையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்விரண்டு விஷயங்களை மேலோட்டமாகப் பார்க்காமல், தனி நபரின் குண நலன்கள், வருவாய், சக மனித ஆதரவு போன்ற அளவு கோல்களை வைத்து சீரிய முறையில் சுய ஆய்வு செய்வதால் பலவித இடையூறுகளை நேரிடையாக தைரியத்துடன் சந்திக்கலாம்.

தொழில் முனைபவர் எவராயினும் ஆணோ, பெண்ணோ தனது நடை உடை பாவனைகளை கவனத்தில் வைத்தல் நலம். தனது சுய வேலைவாய்ப்பினால் ஈட்டிய மரியாதையை கண்ணியமாகப் பாதுகாக்கும் பொருட்டு, அவரது ஆடை அணிகலன்களில் தனிக் கவனம் செலுத்துவது மிக அவசியம். தனி நபரின் தன்னம்பிக்கையினை வளர்க்கவும், சமூக மதிப்பில் உயரவும் அளிக்கவல்லதான இக்கருத்தினைப் பேணுவது மிகவும் அவசியமாகும். தொழில் முனைபவர் அநேக காலகட்டங்களில் பலரின் சந்திப்புகளையும், கூட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். இத்தருணங்களில் வாடிக்கையாளரோ, விற்பனையாளர்களோ, சக தொழில் முனைவரோ ஒருவரின் நடை உடை பாவனையை வைத்து எடைபோடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். எனவே எக்காலக்கட்டங்களிலும் சுய தொழிலில் ஈடுபடுவோர் கண்ணியமாக உடை உடுத்தி, தனது வறுமை அல்லது இயலாமைகளின் சாயல் படியாத வண்ணம் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதற்காக படாடோபமாகவோ, தேவைக்கு அதிகமாகவோ உடைஉடுத்திக் கொள்ளுவதால் சமூகப் பார்வையில் மரியாதையினை இழக்க நேரிடும் அபாயமும் அதிகம்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, பொருத்தமான ஆடை அணிகலன்கள், பேசும் திறன், தெளிவான சிந்தனை, சீரிய நோக்கம், நம்பகத்தன்மை ஆகியவை வெற்றி வாய்ப்பைப் பெறுக்கும்.

தொழில் முனைவோரின் நடத்தை, செயல்திறன் ஆகியவை சமூகப் பார்வையிலும், சக தொழில்முனைவோர் மத்தியிலும், அவரது வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியிலும், மிகவும் கூர்ந்து கவனிக்கப்படுவதால் ஒருவர் தனது திறமையின்மையையோ, பலவீனங்களையோ வெளிப்படுத்திக்கொள்ளக்கூடாது. இதில் கவனம் அவசியம்.

தனது தயாரிப்பில் உருவாகும் பொருளின் அடிப்படை விஷயங்களிலிருந்து, அதனைச் சார்ந்த தொழில் நுட்பம், வியாபார அணுகுமுறை முதலியவற்றைத் தெளிவாக அறிந்து வைத்திருப்பது தொழில் முனைவோரின் கடமையாகும். தற்போதைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு, தனது நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான, பன்முக அறிவினை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம்.

செய்யும் தொழில் பற்றிய உயர்வான கருத்து உங்களுக்கு இருக்கவேண்டியது அவசியம். என் நிறுவனம் செழிப்படையப்போகிறது, வளரப்போகிறது, வெற்றிபெறபோகிறது என்று சிந்தித்து வரவேண்டும். இத்தகைய பாசிட்டிவ் அணுகுமுறை உளவியல் ரீதியில் நல்ல பலனைப் பெற்றுத்தரும். உங்கள் தன்னம்பிக்கையும் வளரும்.

நிறுவனத்தின் உற்பத்தித் திறனை வளர்க்க நினைத்தால், அதன் செயல்திறன், உற்பத்தி அளவு, தொழில்நுட்ப நிலை, வசதி வாய்ப்புகள் ஆகியவற்றைக் கணித்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. புதிய வாய்ப்புகள் அல்லது ஆணைகள் அதிக அளவில் கிடைக்கலாம். அப்போதும்கூட, தமது நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் (Production capacity), மனித வளம் (Manpower) ஆகியவற்றின் அடிப்படையில் புதிய உற்பத்தி ஆணைகளை (Production Order) வாங்குவது குறித்து முடிவுகள் எடுப்பது நல்லது.

இவ்வாறு செய்வதன்மூலம் வாடிக்கையாளர்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்கமுடியும். ஒரு புதிய ஆர்டரை ஒப்புக்கொள்வற்கு முன்னால் அது சாத்தியமா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியுமா? ஒப்புக்கொண்ட தரத்தில் பொருளையோ சேவையையோ வழங்கமுடியுமா? இந்தக் கேள்விகளை உங்களுக்குள் நீங்கள் எழுப்பிக்கொள்ளாவிட்டால் வாடிக்கையாளர்களை நீங்கள் இழக்கவேண்டியிருக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வீடு, வேலை – பேலன்ஸ் செய்வது எப்படி?

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 10

பலர் வருவாயைப் பெருக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். நிறுவனத்தின் செலவுகளில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதாவது செலவைத் தள்ளிப்போட முயற்சி செய்வார்கள் அல்லது போதுமான அளவுக்குச் செலவழிக்காமல் இருந்துவிடுவார்கள். இத்தகைய செயல்முறைகளால் நிறுவனத்தின் வளர்ச்சி பாதிப்படையும்.

ஒரு நிறுவனத்துக்கு வரவேண்டிய வருவாய் பாக்கியை வசூலிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு, அடிப்படைச் செலவினங்களுக்குச் செலவிடுவதும் முக்கியம். சிலர் தொலைபேசிக் கட்டணத்தைக் கூடச் சரிவர செலுத்தாமல் இருப்பார்கள். விரைவு தபால் சேவை, நிறுவனத்தின் வாடகை, குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான சேவைகளின் செலவினங்களை காலதாமதமின்றிச் செலுத்துவதால், தொழில் முனைவோரின் நிறுவனம் நல்லவிதமாக இடையூறின்றிச் செயல்படும். வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் போதே, நிறுவனத்தின் அடிப்படை செலவுகளை நிர்ணயித்து அதற்குரிய தொகையினை காலதாமதமின்றிச் செலுத்துவது அவசியம்.

0

சாதாரணமாக பெரிய நிறுவனங்களில் பணியாளர் நியமனங்களில் எந்த நிபந்தனைகள் இருந்தாலும், அதற்கு கட்டுப்பட பலர் தயாராக இருப்பார்கள். ஆனல் சிறிய நிறுவனங்களில், சிறு தொழில்களில் பெரும்பாலும் அவ்வளவு எளிதில் பணியாளர் நியமனம் செய்ய முடியாமல் போகலாம். அதன் நிலைமை, வளர்ச்சி, நம்பகத்தன்மை ஆகியவற்றைப் பணியாளர்கள் பரிசீலிக்கும் காரணமாக, எளிதில் பணியிடங்கள் நிரம்புவதில்லை. இக்கருத்திலிருந்து நாம் அறிவது யாதெனில், ஒரு தொழில் முனைவோர் தமது நிறுவனத்தினை எவ்வாறு வழி நடத்திச் செல்லுகிறார் என்பதை பலதரப்பட்ட மக்கள், அவர்கள் நிலையிலிருந்து கண்காணிக்கிறார்கள் என்பதுதான்.

ஒரு வாடிக்கையாளர் ஒரு நிறுவனத்திடமிருந்து பொருள் வாங்கும்போது அதன் தரம் குறித்து அக்கறை செலுத்துவார். அதேபோல, நிறுவனத்தில் வேலை தேடி வருபவர்கள் தாங்கள் சேர விரும்பும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் அக்கறை செலுத்துவார்கள். எனவே, தொழிலதிபர்கள் தமது கண்ணியமான செயல்பாட்டின் மூலம், நிறுவனத்தின் தரத்தை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

இன்றைய வியாபாரச் சூழ்நிலையில் நம்பகத்தன்மை உடைய பணியாளர் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்க நேரிட்டால் அவரையும், அவரது செயல்திறன்கள் பற்றியும் நன்கு ஆராய்ந்து, அதற்குத்தக்க வளர்ச்சியினை வழிவகுத்தல் அவசியமாகிறது. இப்படிச் செய்வதால் தனி நபர் வளர்ச்சி, நிறுவனத்தின் வளர்ச்சியாகவும் மலர்கிறது. படித்து பண்புடன் விளங்கும் பல இளைஞர்கள் நல்ல வேலை வாய்ப்புக்காக இன்று காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு திறமைக்கேற்ற வேலை அளிக்கவேண்டும்.

தொழில் முனைவோர் முதலில் தம்முடைய பணியாளர் தேவை எவ்வளவு என்று சரிவர நிர்ணயித்துக் கொள்ளுதல் அவசியம். தமது நிறுவனத்தின் தன்மையைப் பொறுத்து, துறைகளாகப் பிரித்து, எத்தனை நபர்கள் தேவை என்று தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.
பணியாளர்களை நியமனம் செய்த பின்னர், தொழில் முனைவோரின் பொறுப்பு கூடுதலாகிறது. தமது நிறுவனத்தின் செயல்பாட்டினை சிறந்த முறையில் செயலாக்க இருக்கும் பணியாளர்களை, கண்ணியமாக நடத்துவது மிக அவசியம். அதிகாரமாகவும் அகந்தையாகவும் செயல்படுவதைவிட, அரவணைத்து, அனுசரித்து மனிதநேயப் பண்புகளுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த பலன்களைவிட பலமடங்கு உயர்வைப் பெறலாம். பணியாளரின் பார்வையில் நிறுவனம் பற்றிய நல்ல கருத்தை உருவாக்குவது, நேர்மையாகவும், திறமையாகவும் செயல்பட வழி செய்யும்.

நிறுவனத்தின் தேவைக்கேற்ப பணியாளர்களுக்குப் பயிற்சி முகாம்கள் அமைக்கலாம். உபகரணங்களை உபயோகிப்பதில் பயிற்சிகள் தரலாம். பணியாளர் வளர்ச்சி தொடர்பாக கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்த்தலாம். அடிப்படை வசதிகளை சீர்செய்யலாம். அவர்களுடைய செயல்பாட்டில் காணப்படும் மாற்றங்களை ஆராய்ந்து அறிந்து மேம்படுத்தலாம். அவ்வப்போது உரையாடி அறிவுறுத்தலாம். தவிரவும், அக்கறையுடன் பணியாளர்களின் பிரச்னைகளை அணுகுவதன்மூலம் அவர்களுடைய முழுமையான நம்பிக்கையை வென்றெடுக்கலாம். இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நேரடியாக உதவும்.

தொழில் முனைவோர் பணியாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டியது அவசியம்.

0

பெண்கள் சுயதொழிலில் ஈடுபட இப்போது வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.எனவே துணிச்சலுடன் பெண்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அரசாங்கப் பணியிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ பணிபுரியும் பெண்களுக்கு அலுவலக நேரம், விடுமுறை நாட்கள், விடுப்புச் சலுகைகள் ஆகியவை வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனால் சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு குறிப்பிட்ட கால நேரம், விடுமுறை நாட்கள் போன்றவை அநேகமாக இருக்காது. எனவே ஒரு பக்கம் குடும்பத்தின் தேவைகளையும் மற்றொரு பக்கம் சுயதொழிலின் தேவைகளையும் உணர்ந்து பேலன்ஸ் செய்ய பழகிக்கொள்ளவேண்டும்.

முடிந்தவரை, சுயதொழில் தன்மை, நேரம், செயல்பாடுகள் ஆகியவற்றை குடும்ப உறுப்பினர்களுக்கு உணர்த்த முயற்சி செய்யவேண்டும். வாடிக்கையாளர் சந்திப்பு, விற்பனையாளர்களின் விசாரணைகள், காலதாமதம் ஆகியவற்றை புரியவைக்கவேண்டும். தொழில் தொடர்பான பின்னணி தகவல்கள், அடிப்படைப் பிரச்னைகளை ஆகியவற்றை ஓரளவுக்கு கணவருக்கோ சக குடும்ப உறுப்பினர்களுக்கோ தெரியப்படுத்துதல் நல்லது. இதற்கு மேலும், சொந்த பந்தங்களிடையே எழும் விமரிசனங்களைப் புறந்தள்ளி, கண்ணியத்துடன், நேர்மையுடன் செயல்படவேண்டும். அடிப்படையில் சுயக் கட்டுப்பாடும், நன்நெறிகளைப் போற்றிப் பேணும் குணநலன்களும், தெளிந்த நீரோடை போன்ற தூய்மையான சிந்தனைகளும் கொண்டு சுய மரியாதையுடன் பயணம் செய்தால் வெற்றி உறுதி.

பெண் தொழில் முனைவோர், சிறந்த தாயாகவும் செயல்பட வேண்டியது அவசியமாகும். எனவே, தனது வீட்டுக்கு அருகிலேயே தொழில்கூடத்தையோ, நிறுவனத்தையோ அமைத்துக் கொள்வதன் மூலம் வீடு, அலுவலகம் இரண்டையும் கவனித்துக்கொள்ளமுடியும். பல சமயங்களில், 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அப்படிப்பட்ட சமயங்களில் வீடும் அலுவலகமும் அருகருகே இருப்பது மிகுந்த பயனையும் நிம்மதியையும் தரும்.

பணியிடம் தனியாக உள்ள நிறுவனமாக இருந்தால், ஒரு அறையைத் தனது குழந்தைகளுக்காக ஒதுக்கிவைக்கலாம். பள்ளியிலிருந்து மாலை திரும்பும் வேளையில் உடன் இருந்து, உணவு அளித்து, வீட்டுப் பாடத்தில் உதவி, விளையாட வைக்கலாம். அதற்கேற்றவாறு அடிப்படைத் தேவைகளான பால் குக்கர், காஸ் அடுப்பு, மின்சாரக் குக்கர் ஆகியவற்றை உடன் வைத்திருப்பது நல்லது. இந்த ஏற்பாட்டால், குழந்தைகளுக்கும் மனநிறைவும் களிப்பும் தாயின் பராமரிப்பும் கிடைக்கிறது.

சுயத்தொழில் ஆரம்பித்து அது ஒரு நிலைக்கு வருவதற்குள் பல பிரச்னைகள் உருவாகலாம். வாய்ப்புகளும் திடீர் திடீரென்று அதிகரிக்கலாம். அனைத்தையும் அணுகி சீர் செய்ய வேண்டும். இதனால் ஆரம்பக்கட்டங்களில் பணிகள் அதிகமான அளவில் இருக்கலாம். பின்னர் படிப்படியாக சமன் செய்யப்பட்டு, முக்கியப் பொறுப்புகளைப் பிறரிடம் பகிர்ந்துகொடுத்து செயல்படத் தொடங்கினால், வேலையும் வாழ்க்கையும் பழகிவிடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

உன்னால் முடியும் தோழி!

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 11

பொதுவாக இந்தியப் பெண்கள் தங்களுடைய உடல் அழகை, உடல் நலத்தைப் பேணிக் காப்பதில்லை. திருமணத்துக்கு முன்புவரை மட்டுமே தங்களைப் பற்றிப் பெரும்பாலும் கவலைப்படுகிறார்கள், அழகாக தங்களைக் காண்பித்துக் கொள்ளவும் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறார்கள். இப்பொழுது நிலைமை பெரும்பாலும் மாறிக்கொண்டு வருகிறது என்று எடுத்துக்கொண்டாலும், இந்த மனோபாவம் மேல்தட்டு மக்களிடையேயும், உயர்மட்ட மத்திய தர பெண்களிடம் மட்டுமே நிலவுகிறது.

ஆண், பெண் கவர்ச்சியும், ஈடுபாடும் அக்காலத்திலும் இருந்தாலும், பெரும்பாலும் திருமணம் என்ற பந்தம் ஒரு கட்டுக்கோப்பான சமுதாய விதியாக காப்பாற்றப்பட்டு வந்தது. அதாவது சமூக மதிப்பீடுகள் உயர்வாகக் கருதப்பட்ட சமயம் அது. விதிமீறல்கள் அங்குமிங்கும் இருந்தாலும் மீறுபவர்கள் பெரும் விமரிசனத்திற்கு உள்ளானார்கள். சமூக அங்கீகரிப்பும் மறுக்கப்பட்டது. மேற்கூறிய காரணத்தால் பெண்கள் தங்கள் குடும்பம், குழந்தைகள், கணவன், உற்றார், உறவினர், வழிபாடுகள், பண்டிகைகள் என்று ஒரு வட்டத்துக்குள் தங்களின் கடமைகளை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருந்தார்கள்.

பொருளாதார ரீதியாக குடும்பத்தின் பொறுப்புகள் பெரும்பாலும் ஆண்களால் கையாளப்பட்டு வந்தன. திறமையுள்ள பெண்கள், தங்கள் அறிவை, திறமையை எழுத்து, இசை, நடிப்பு, நாடகம் என்ற பொழுதுபோக்கு அம்சங்களில் வெளிப்படுத்தி சமூக அங்கீகாரம் பெற்றார்கள். திருமண பந்தம் அழுத்தமாக இருந்த காரணத்தால், விலகல்கள் அநேகமாக இல்லை. பெண் தன் இயலாமையை, வருத்தங்களை தனக்குள் புதைத்து ‘இது எனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை’ என்ற கோணத்தில் சகிப்புத்தன்மையுடன் எடுத்துக்கொண்டாள்.

ஆண்கள் பெண்கள்மீது ஆதிக்கம் செலுத்திவந்தபோதும், சமூக, குடும்பக் கடமைகளிலிருந்து பின்வாங்கவில்லை. பெண் சுதந்தரம், பெண்ணுரிமை என்றெல்லாம் சிலர் பேசிவந்தாலும் சமூகமாற்றம் எதுவும் பெரிய அளவில் ஏற்படவில்லை. பெண் தனக்கு வரையறுக்கப்பட்ட கோடுகளைத் தாண்டிச் செல்லவில்லை. தன் சுதந்தரம் கட்டுப்படுத்தப்பட்டது பற்றியும் தனது தனித்துவத்தை இழந்தது பற்றியும் பெரும் மனவருத்தம் அடையவில்லை.

காலம் மாற மாற, பொருளாதாரப் பிரச்னைகள் முன்னுக்கு வந்தன. முன்புபோல், குடும்பப் பொறுப்பை ஆண் ஒருவரே கவனித்துக்கொள்வது கடினமாக இருந்தது. இதனால் பெண்கள் கல்வி கற்பதும் வேலைக்குப் போவதும் அதிகரித்தன. பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்தரம் கிடைத்தது. தங்கள் தனித்துவத்தைப் பற்றி நினைக்கத் தொடங்கினர். நான், எனது அறிவு, எனது கருத்து, எனது உணர்வு, எனது நிலை என்று சிந்தனையை மேம்படுத்தத் தொடங்கினர். பெண் தியாகம் செய்பவள், வீட்டில் அடங்கி கிடப்பவள், அதிகாரம் அற்றவள் என்ற நிலை மாறத் தொடங்கியது. எந்த ஒரு சமூக மாற்றத்துக்கும் பொருளாதாரம் அடிப்படையாக இருக்கும் என்பதற்கு இது ஒரு முக்கிய உதாரணம்.

நம் நாட்டில் பல்வேறு நம்பிக்கைகள், சமூக நியதிகள், சமூக விதிகள் ஆகியவை பின்பற்றப்படுகின்றன. எழுதப்படாத சமூகச் சட்டங்களாக இவை பின்பற்றப்படுகின்றன. பிற்போக்குத்தனமானவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு பொதுவாக அணுகினால் இந்த சமூக அமைப்புகள் நம்மை மேற்கத்திய கலாசாரங்களில் இருந்து காப்பாற்றியிருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். இந்தியக் குடும்ப அமைப்பு மேற்கத்திய பாணியிலான அமைப்பில் இருந்து பெரிதும் வேறுபடுவதற்குக் காரணம் நம் சமூக, கலாசார, வரலாற்று அடித்தளம்.

சமூக மதிப்பை, விதியை ஒரு ஆண் மீறும்போது தனிப்பட்ட முறையில் அவன் பாதிக்கப்படுகிறான். ஒரு பெண் மீறும்போது குடும்ப அமைப்பு குலைகிறது. குடிகாரத் தலைவன், கொலைக்காரத் தலைவன், பொறுப்பற்ற கணவன் என்ற எத்தகைய மோசமான நிலையை ஆண் எடுத்தாலும், அந்தக் குடும்பத் தலைவி அதைச் சமன் செய்யும் திறமைசாலியாக, உழைப்பாளியாக இருக்கும் பட்சத்தில், அக்குடும்பத்தின் பாதிப்புகள் நீக்கப்பட்டு குழந்தைகளின் எதிர்காலம் ஓரளவுக்கு நல்ல முறையில் அமைந்து விடுகிறது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் பெண் தவறும்போது, பெண் செயல்படாமல் இருக்கும்போது, மிக மோசமான விளைவுகளை அக்குடும்பத்தினருக்கு ஏற்படுத்தி விடுகிறாள். இவ்வகையில் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற கூற்று உண்மையென்றே கூறலாம். ஆக்கக் கற்றுக் கொடுத்து விட்டால் பெண்களை அழிவிலிருந்து காப்பாற்றி விடமுடியும். பெண்களைக் காப்பாற்றுவதன் மூலம் ஒரு சமூக அமைப்பை, நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பாற்றிவிட முடியும்.

பொருளாதாரத் தேவைகளுக்காக பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்கினாலும், இன்றும் வசதியுள்ள பல பெண்களும் வேலைக்குச் செல்ல இவர்களோடு போட்டி போடுகின்றனர். அதாவது பணம் ஈட்டவேண்டிய கட்டாயமுள்ள பெண்கள் ஒருபுறம்; அந்தக் கட்டாயமில்லாத பெண்கள் மறுபுறம். பொதுவாக, இருபதிலிருந்து நாற்பது வயது வரையிலான பெண்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் தன்னைச் சுயமாக நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். இது சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான சமூக மாற்றம்.

பொருளாதார சுதந்தரம் உள்ள பெண்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது மிக அவசியம். பொருளாதார சுதந்தரத்துக்கும் பலத்துக்கும் அடிப்படையாக அமைவது பணம். அந்தப் பணத்தை சுயக் கட்டுப்பாடு இன்றி, திட்டமிடுதல் இன்றி செலவு செய்வது அறிவீனம். வேலைக்குச் செல்லும் மணமான பெண்கள் பலர் இதனை உணர்வதில்லை. கையில் பணம் புழங்கத் தொடங்கியதும், போதுமான சம்பளம்தான் வருகிறதே என்ற நினைப்பில் தாறுமாறாகச் செலவு செய்துவிடுகிறார்கள். சேமிக்கும் வழக்கத்தை மறந்துவிடுகிறார்கள். போதாதற்கு, கடனையும் வாங்கிவிடுகிறார்கள். எல்லாம் மாதச் சம்பளம் கொடுக்கும் துணிச்சல்! ஆக, வேலையில் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்ற கட்டாயத்தைத் தம்மைச் சுற்றி உருவாக்கிக் கொள்கின்றனர்.

கற்பகம் திருமணமாகி கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர். தான் சம்பாதிப்பதில் அதீத பெருமையும் கர்வமும் கொண்டவர். மற்றவர்களைத் துச்சமாக எடை போடுபவர். பொருளாதார ரீதியாக தன்னுடைய பிறந்த வீட்டு மனிதர்களுக்கு, கணவருக்குத் தெரியாமல் பல உதவிகள் செய்தவர். ஆனால் அவருக்கே ஒரு தேவை என்று வந்தபோது செய்வதறியாது நின்றுவிட்டார்.

இத்தகைய பெண்களின் குணாதிசயங்களைப் பொருளாதாரப் பின்னணியில் அலசிப் பார்க்கும்போது சில விஷயங்கள் தெரியவருகின்றன. இவர்களுக்குப் பொருளாதார சுதந்தரம் இருக்கிறது. பணம் ஈட்டும் திறன் இருக்கிறது. தகுதி இருக்கிறது. ஆர்வம் இருக்கிறது. என்றாலும், சம்பாதித்த பணம் கையில் தங்கவில்லை. மன அமைதியைக் கொடுக்கவில்லை. இவர்களுக்கும் காலையில் எழுந்து கடமையைச் செய்து ஒன்பது மணிக்கு கையசைத்துக் கணவனை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, ஒன்றாம் தேதியன்று கணவனின் சம்பளக் கவரை ஆவலுடன் எதிர்பார்க்கும் பெண்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதுதான் உண்மை.

வேலைக்குச் செல்லும் பெண்கள் கடன் இன்னி நிறைவான வாழ்க்கை வாழவேண்டும். அதற்கு சேமிப்பு அவசியம். உறுதியான முதலீடு அவசியம். இதையெல்லாம் செய்தால்தான் அவர்கள் ஓடியாடி பொருள் ஈட்டியதற்கு ஒரு மதிப்பு இருக்கும். பெண்கள் தங்களுடைய பொருளாதார சுதந்தரத்தை தங்கள் மகிழ்ச்சிக்கும் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்தவேண்டும்.

நமது திரைப்படங்கள் அன்று தொடங்கி இன்று வரை, பெண்களைச் சரியான கோணத்தில் சித்தரிக்கத் தவறிவிட்டது. படித்த, சம்பாதிக்கும் பெண்கள் திமிர் படைத்தவர்களாகவும், குடும்பத்துக்குக் கட்டுப்படாதவர்களாகவும் காண்பிக்கப்படுகிறார்கள். உண்மையில் பெண்கள் இப்படியா இருக்கிறார்கள்? படித்த, வேலைப் பார்க்கும், சுயத்தொழில் செய்யும் எத்தனையோ பெண்கள், வெற்றிகரமான குடும்பத் தலைவியாகத் திகழ்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்களைக் காட்டிலும் வீட்டுக்கு இவர்கள் அதிகம் பங்களிக்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இங்கே கவனம் தேவை

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 12

சுயதொழிலில் ஈடுபடும் பெண்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒரு பிரிவினர்,சிரத்தையுடன் தொழிலின் புனிதம் கெடாமல் முன்னேற்றத்தை நோக்கி நகர்வார்கள். இன்னொரு பிரிவினர் தங்கள் முன்னேற்றத்துக்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருப்பார்கள். இங்கு தொழிலில் ஒழுக்கத்தைப் போன்று, தனி மனித ஒழுக்கமும் இன்றியமையாதது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

பொருளாதார நிர்பந்தங்களின் காரணமாக, வேலைக்குப் போகும் பெண்களின் சதவிகிதமும், சுயமாகத் தொழில் செய்யும் பெண்களின் சதவிகிதமும் அதிகரித்துள்ள இன்றைய சூழ்நிலையில், பொருளாதார வளர்ச்சிக்காக, சமூக நியதிகளையும், பண்பாட்டையும், மண்ணில் புதைத்துக் கொண்டு வருகிறோமோ என்று அச்சமாக இருக்கிறது.

ஆண்களுடன் இணைந்து பணியாற்றும் சூழல் பெண்களுக்கு ஏற்படலாம். சுயமாகத் தொழில் புரிபவராக இருந்தாலும் சரி, வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் சரி. இப்படிப்பட்ட சமயங்களில் எதிர் பாலினத்தவர்மீது ஒரு ஈர்ப்பு வருவது இயற்கையே. இதைப் பொதுவானது என்று எடுத்துக் கொள்ளலாமே தவிர, அதை மீறி உறவின் எல்லைகளை விரித்துக் கொள்ள முயற்சிப்பது அறிவீனம். ஆண், பெண் இருவரும் எந்த வயதிலும் சேர்ந்து தொழில் செய்ய நேரிட்டாலும், ஒரே அலுவலகத்தில் பணிபுரிய நேரிட்டாலும், மேற்கூறிய ஈர்ப்பு ஏற்படுதல் இயற்கையே. ஆனால் இந்த ஈர்ப்பு பல நேரங்களில் பல நபர்களின் வாழ்க்கையில் உறவுகளின் எல்லைகளைக் கடந்து, சமூக அங்கீகரிப்புக்கு உட்படாத, உறவுச் சிக்கல்களில் முடிந்ததைக் கண்கூடாக பல சமயங்களில் கண்டிருக்கிறோம்.

இதில் வினோதமான ஒரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். இப்படிப்பட்ட ஆண்கள் பணியிடங்களில் பெண்களோடு இணக்கமாக இருப்பவர்களைப் போல் தங்களை வெளிப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் வீட்டில் தங்கள் மனைவியிடம் இவ்வாறு இருக்கமாட்டார்கள்.
திருமணம் என்ற பந்தத்தால் வரும், உறவுப் பிணைப்பு உண்மையானது, நேர்மையானது, பின்விளைவுகள் இல்லாதது. ஆனால் இதற்கு மாறாக, வெளிப்படும் தொழில் மற்றும் அலுவலக உறவுகளில் உணர்ச்சி மீறல்கள் எழுந்தால் கட்டுப்படுத்திக்கொண்டு பணியில் முழு கவனத்தையும் செலுத்துவது அவசியம்.

ஒரு சில பெண்களோ, தீவிரமான உறவுகளை தங்களைச் சுற்றியுள்ள ஆண்களிடமும் ஏற்படுத்திக்கொண்டு, பல சமூக சிக்கல்களை உண்டாக்கிக் கொள்கின்றனர். வெளிப்படையாகச் சொல்லப் போனால் வழக்கத்துக்கு மாறான திருமண உறவு இன்று ஒரு பொதுப் பிரச்னையாகி விட்டது. தொழிலில், வேலையில் முன்னேற இன்று பல பெண்கள் தங்கள் வயதையும், வசீகரத்தையும் இலகுவாகப் பயன்படுத்தி, பல ஆண்களை, தங்களின் பிடிக்குள் கொண்டு வந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இதைவிடப் பெரிய தொழில் அதர்மம் இருக்கமுடியாது. இந்த மாதிரி பெண்களின் அணுகுமுறையால், கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பங்கள் பற்பல.

இந்த இடத்தில், ஆண் பெண் நட்புறவு பற்றியோ, தொழில் முறை உறவு பற்றியோ, நான் தவறாகக் கூற வரவில்லை. அதேசமயம், இந்த சமூகத்தால், நம் இந்தியப் பாரம்பரியத்துக்கு உட்படாத எந்த உறவுகளையும் தொடர்வது, இச்சமூகத்தைச் சீரழிக்கும் அபாயத்தில் கொண்டு விட்டுவிடும். சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் இப்படிப்பட்ட வலையில் சிக்கிக்கொண்டவர்கள் இனிமேலாவது திருந்திவரவேண்டும்.

இன்னும் சிலரைப் பற்றியும் கூறவேண்டியிருக்கிறது. வேலை, வேலை என்று நேரம் காலம் இல்லாமல் உழைப்பதாகக் கூறிக்கொண்டு, எந்த நேரமும் அலுவலக, தொழில் கூட்டாளிகளோடு, காலத்தைச் செலவழித்துக் கொண்டு, பணம் ஈட்டுவதில் மட்டும் சிலர் குறியாக இருக்கிறார்கள். இதில் பல ஆண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாது அவர்கள் இந்த உலகத்தில் பிறந்ததே, தங்கள் தொழில் மற்றும் அலுவலக பணிகளை மேற்கொள்ளத்தான் என்று வாழ்க்கை நடத்துவார்கள். பல பேர் இரவு நேரங்களிலும் விடுமுறை நாள்களிலும்கூட அலுவலகப் பணிக்காகவே நேரம் செலவிடுவார்கள். மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்று வீட்டு நினைவுகள் எதுவும் இருக்காது. வேலை. அது மட்டும்தான் குறிக்கோள். அது மட்டும்தான் முக்கியம்.

காலச்சக்கரத்தின் சுழற்சியில் வேலை மற்றும் தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியாமல் போகும்போதுதான் இவர்கள் குடும்பத்தையே திரும்பிப் பார்ப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அப்போதுதான் அவர்களுக்குப் புரியவரும். பொருள் ஈட்டுவது முக்கியம்தான். ஆனால், குறிப்பிட்ட நிலைக்குப்பிறகு ஓடுவதை சற்றே நிதானப்படுத்திக்கொள்ளவேண்டும். பக்குவமடையவேண்டும். இதைச் செய்யத் தவறினால் பொருளீட்டத் தெரிந்தவர்களும் அதிக பணத்தைச் சம்பாதிப்பவர்களும், பணம் இருந்தும் அநாதைகளாக, உறவு இருந்தும் தனிமரமாக, முதுமையைக் கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

இறுதிவரை ஏதாவது ஒரு தொழிலையோ, வேலையையோ செய்வதில் தவறில்லை. முதியவர்கள்கூட சோர்ந்திருக்கவேண்டியதில்லை. அதே சமயம் முப்பதில் வரும் பக்குவம், நாற்பதில் முழுமையடைந்து ஐம்பதில் நிதானப்பட்டு, அறுபதில் அமைதி பெற வேண்டும். இல்லையேல், முழுவதுமாக மன உளைச்சலோடு, மகிழ்ச்சியைத் தொலைத்து நிற்கவேண்டியிருக்கும்.

குடும்பத்தைப் பிரிந்து வெளியூர், வெளிநாடு சென்று ஓடி ஓடிப் பறந்து சேர்த்த பணத்தை, சுற்றியுள்ளவர்கள், ‘இவர்கள் மூச்சு என்று அடங்கும், எப்போது சொத்தைக் கையகப்படுத்தலாம்’ என்று நினைக்கும் நிலைக்கு நாம் சென்றுவிடக்கூடாது. ஒரு நிலைக்கு மேல் தன் பணம், தன் தொழில், தன் சக்தியின் பாதுகாப்பு என்ற நிலையை விடுத்து, உலகத்தை, சமூகத்தை, நேசிக்கத் தொடங்க வேண்டும்.

இன்னொரு புது நிலையும் இன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. நல்ல வேலையில், தொழிலில் இருப்பவர்கள், கஷ்டப்படுபவர்களுக்கு ஆயிரக்கணக்கில் எடுத்துக் கொடுத்துவிட்டு, மற்றவர்களிடம் தான் தர்மமாகச் செய்ததைப் பற்றிப் பெருமைப் பேசுவர். ஈட்டிய பொருளை சமூகத்திற்குத் திருப்பிச் செய்ய ஒரு நெறிமுறை இருக்க வேண்டியது அவசியம். உங்கள் செல்வத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை சமூகப் பணிகளுக்காக அர்ப்பணம் செய்வதை, கொள்கையாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ‘பாத்திரம் அறிந்து பிச்சை இடு’ என்பது போல், செய்யும் தானத்தில் கூட, உணர்ச்சி வசப்படாமல், நிதானத்தைக் கடைப் பிடிக்க வேண்டும்.

இன்னும் ஓர் அபாயத்தையும் பார்த்துவிடுவோம். முன்னெல்லாம் உயில் எழுதாமல் இறந்தால்கூட, மனசாட்சிக்கு உட்பட்டு, முன்னோர் சேர்த்த சொத்தை பின்னால் வந்த சந்ததியினர், தங்களுக்குள் சரிசமமாகவும் நாணயமாகவும் பங்கிட்டுக் கொண்டனர். ஆனால் இன்றையச் சூழலில் செல்வம் சேரும்போதும், தொழில் வளர்ச்சியடையும் போதும், அதை நிர்வகிப்பவர்கள் அந்தச் செல்வத்தை எப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும், தொழில் நிறுவனமாக இருந்தால் அந்தத் தொழில் எந்த வகையில் பிரித்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை எழுத்துப்பூர்வமாக, சட்டத்தின் உதவியோடு ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். இல்லையேல் எதிர்பாராத மரணம் இவர்கள் விரும்பிய செல்வ சாம்ராஜ்யத்தையும், தொழில் சாம்ராஜ்ஜியத்தையும் அழித்துவிடும்.

பொருள் தேடல், செல்வத்தைக் கையகப்படுத்துவது முதலானவற்றில் உள்ள ஆர்வம் குறைந்து, வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை அறிந்து, முடிந்தால் ஆன்மிகத் தேடலையும் தொடங்குதல் நல்லது. ஆத்திகரோ நாத்திகரோ, மனம் பக்குவப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு முடிந்த அளவில், நேர்மையான வழிகாட்டியாக வாழ்ந்து, வாழ்வை முடித்துக் கொள்ளுதல் நிறைந்த அமைதியை அளிக்கும்.

செல்வத்தைப் பெருக்க வேண்டும், ஈட்ட வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதே நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை வாழத்தான். பின்பு, இவற்றை பெறாமல் இந்த உலகில் வாழ்ந்து மடிவதில் பயன் என்ன?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

எப்படித் தொடங்கலாம்? யார் தொடங்கலாம்?

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 13

சிறு தொழில் பலருடைய கனவாகவும் விருப்பமாகவும் இருந்தாலும் ஒரு சிலருக்கே அது கைகூடுகிறது. தவிர்க்கவியலாதபடி ஓர் அடிப்படை கேள்விக்கு இது நம்மை இட்டுச் செல்கிறது. யார் தொடங்கினால் சுய தொழில் துலங்கும்?

ஒவ்வொருவருடைய குணாதிசயங்களைப் பொருத்தே அவருடைய வெற்றி, தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்தால்தான் உங்களால் தொழில்முனைவோராக இயலுமா என்பதைச் சொல்லமுடியும்.

கீழ்வரும் கேள்விகளுக்கு ஆமாம், இல்லை என்று நேர்மையாகப் பதிலளிக்கவும்.

1. தனிப்பட்ட முறையில் நீங்கள் எந்தவொரு செயலைச் செய்தாலும் அதனைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் கொண்டவரா? குறைந்தது, மிக முக்கியமான விஷயங்களையாவது திறம்படச் செய்ய முயற்சிக்கும் நபரா?

2. தவறுகள் நேர்ந்தால், அமைதியாக சிறிது அது குறித்து சுய பரிசோதனையில் ஈடுபடுபவரா?

3. பொருளாதார முன்னேற்றம், பண வரவு இவை இரண்டையும் பிரதானமாக சிந்தனை செய்பவரா?

4.சுற்றியுள்ள மனிதர்களின் குணநலன்களை குறைந்தபட்சம் உங்களுக்குள்ளாவது நேர்மையாக விமரிசிக்கவும் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்பவரா?

5. பொதுவாக உடல்நலனில் சராசரி அக்கறையாவது செலுத்துபவரா அல்லது உடல்நலப் பாதிப்புக்கள் ஏற்படும்பொழுது வாழ்க்கையின் முடிவுபற்றிச் சிந்திப்பவரா?

6. கையில் புரளும் பணம், கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஓரளவுக்காவது தெளிவான கண்ணோட்டம் கொண்டிருப்பவரா?

7. ஒரு செயலில் ஈடுபடும்போது, தடைகள் ஏற்படும்போது அதை வெல்வதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்பவரா?

8. சவாலான தருணங்களில் கழிவிரக்கம் கொள்ளாமல், அதைத் தடுக்கும் வழிமுறைகளை அறிந்து வைத்திருப்பவரா?

9. குடும்ப உறவுகளை நேர்மையுடன் மதிக்கத் தெரிந்தவரா? ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் செய்பவரா?

பல கேள்விகளை இப்படி அடுக்கமுடியும் என்றாலும் மேலே உள்ளவை ஒரு நுணுக்கமான அளவுகோல். சுயமாக யார் உதவியையும் எதிர்பார்க்காமல் வாழவேண்டும் என்ற நோக்கம் கொண்டவராக நீங்கள் இருந்தால் சுயதொழில் உங்களுக்கானது.

சுயதொழில் என்பது அம்பானியும் நாராயண மூர்த்தியும் லட்சுமி மிட்டல்களும் மட்டுமே மேற்கொள்ளவேண்டிய முயற்சி அல்ல. சிறு புள்ளியில் தொடங்கியே இவர்கள் பெரும் வெற்றிகளை ஈட்டியிருக்கிறார்கள்.

தற்கால சினிமாக்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். மிக பிரமாண்டமாக பல கோடிகள் செலவழித்து எடுத்த பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் தயாரிப்பாளருக்கு அதிகபட்ச லாபத்தை எல்லா நேரமும் பெற்றுத் தந்ததில்லை. அதே சமயம் குறைந்தபட்சம் படங்கள், சின்னத் தயாரிப்பாளர்கள் ஈடுபடும் திரைப்படங்கள் வெற்றிப்பெற்று அவர்களுக்கு லாபத்தை ஈட்டிக்கொடுத்துள்ளன.

பிரம்மாண்ட வெற்றிகள் தொழிலில் தொடர்ந்து ஏற்படும் என்று எதிர்பார்க்கமுடியாது. அது உலகளவில் ஒரு சிலருக்கே சாத்தியப்படலாம். அதிகம் பேசப்படாத சிறு தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து கணிசமாக லாபம் கொடுத்துக்கொண்டிருக்கும். உயிர்ப்புடன் இயங்கிகொண்டிருக்கும். ஆக, தொழில்முனைவோருக்கான தங்க விதி இதுதான். நீங்கள் ஈடுபடும் தொழிலமைப்பு உங்களுக்கு தொடர்ந்து அதை நடத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டே இருக்குமானால், நீங்கள் அந்த தொழிலை திறம்பட நடத்துகிறீர்கள் என்று பொருள்.

குறுந்தொழில்களும் சிறுதொழில்களும் இந்தியப் பொருளாதாரத்துக்கு பெருமளவில் வலிமை சேர்க்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இந்த உண்மை, பல தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் எல்லைக்குட்பட்டு, வியாபார உத்திகளை திறம்பட கையாண்டு செயல்படுவதன் மூலமே சாத்தியமாயிற்று.

பெரிதாகச் செய்யவேண்டும் என்று கற்பனையில் ஆழ்ந்து, பின்னர் இயலாமையை உணர்ந்து விலகியிருப்பதைக் காட்டிலும், தன் திறனுக்கேற்ற ஒன்றை தேர்ந்தெடுத்து அந்த வட்டத்துக்குள் தொடர்ந்து சலிக்காமல் இயங்கிகொண்டிருந்தால் உங்களால் ஒரு தொழிலதிபராக மாறமுடியும்.

இன்றைய காலகட்டத்தில் பத்து வருடங்களுக்கு மேல் ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தினால், அந்த நிறுவனத்தின் பெயரை மக்கள் மனத்தில் பதிய வைத்தால், வெற்றி நிச்சயம் சாத்தியமாகும்.

மற்றபடி மீடியாவின் வெளிச்சம் கிடைக்காமல் இருப்பதோ, வெளியுலகுக்குப் பெரிய முறையில் அறிமுகமாகாமல் இருப்பதோ அவ்வளவு முக்கியமல்ல. தேவை தொடர்ச்சியான நீடித்த வெற்றி மட்டுமே. அது சாத்தியப்பட்டால், அதைத் தொடர்ந்து அளிக்கமுயன்றால் அதுவே பெரிய வெற்றிதான். பெரிய அளவிலான முதலீடும் பெரிய அளவிலான லாபங்களும் மட்டும்தான் உன்னதமானவை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும்.

சுயதொழிலில் வெற்றிபெறுவதற்கு நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் என்னென்னத் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்?

1. கல்வியில் தங்க மெடல்கள் வாங்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், சராசரி கல்வியும் கல்வியில் ஆர்வமும் அவசியம்.

2. நம்முடைய மெக்காலே கல்வித் திட்டங்கள் பெருமளவு தொழில் முயற்சிக்கு உறுதுனையாக இல்லையென்றாலும், நமது கல்வியும், சில அம்சங்களில் அதன் மூலம் நாம் பெறும் பொதுஅறிவும் அடிப்படை அறிவை அளிக்கின்றன. எனவே கல்வி அவசியம். கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொள்ள அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்வதும் அவசியம். வாழும் சூழ்நிலைக்கேற்ப சுற்றியுள்ள சமூகத்துக்கு ஒப்பான தொழில்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஓர் உதாரணம் பார்க்கலாம். காபி குடிக்கும் பழக்கமுள்ள சுமார் 100 குடும்பங்கள் உங்களைச் சுற்றி இருப்பதாக கற்பனை செய்துகொள்வோம். இரண்டு, மூன்று கிமீ தொலைவில் காபி அரைக்கும் இயந்திரம் இல்லையென்றால், இதுதான் அந்தச் சூழலுக்கு ஏற்ற சரியான தொழில்.

ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து பெரிய காபி நிறுவனங்களின் கிளைகளாகச் செயல்பட்டு வாடிக்கையாளர்களைக் கவரலாம். அல்லது காபிக் கொட்டைகளின் தன்மை, திறன், கிடைக்கும் இடம் மற்றும் விவரங்கள் அறிந்து அதனை கொள்முதல் செய்து, அரைக்கும் இயந்திரத்தை நிறுவலாம். சூழலையும் தேவையையும் ஆராய்ந்து தொடங்கப்பட்ட தொழில் முயற்சி என்பதால் நிச்சயம் பலன் கிடைக்கும். சீராகவும் தரமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தை உங்களுக்கென்று உருவாக்கிக்கொள்ளலாம்.

இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படிப் பல வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளமுடியும். எந்தப் பொருள் அல்லது சேவை நம் சுற்றுப்புறத்தில் கிடைக்கவில்லை என்பதை ஆராய்ந்து அறிந்து அதைத் தொழில் முயற்சியாக மாற்றும் திறன் இருக்கவேண்டும். இப்படித்தான் ஒரு சிறு தொழில் தொடங்கப்படவேண்டும். இப்படித்தான் தொழில் அதிபர்கள் உருவாகிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மருத்துவத் துறையில் வாய்ப்புகள்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 14

எங்கெங்கே தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று இனி பார்ப்போம். முதலில், மருத்துவம். இந்தியாவைப் பொருத்தமட்டில் மருத்துவம் மற்றும் அதை சார்ந்த பிற தொழில்களில் நல்ல பல வாய்ப்புகள் இருக்கின்றன.

இன்றைய சூழலில் மருத்துவம் என்பது எளியவர்களின் எட்டாக்கனியாக மாறி விட்டது. மனிதாபிமானமும் மருத்துவமும் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு வந்த சமூக வாழ்க்கையிலிருந்து நாம் மிகவும் தள்ளி வந்துவிட்டோம். இன்று மருத்துவம் லாபம் அளிக்கும் ஒரு தொழில். மற்ற முன்னணி வியாபாரங்களைக் காட்டிலும் இதில் வருமானம் அதிகம். சில மாதங்களுக்கு முன்புகூட போலி மருந்துகளின் நடமாட்டம் குறித்த பல செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்ததை யாரும் மறந்திருக்கமுடியாது.

எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும் வியாபார தர்மத்தை மீறுதல் முறையல்ல. இருந்தும், மருத்துவத்திலும் கல்வியிலும் பெருகியிருக்கும் முறைகேடுகளையும் ஊழலையும் காணும்போது வருத்தம் ஏற்படுவது இயல்பே. என்றாலும், இப்படிப்பட்டவர்களைக் கொண்டு அனைத்து தொழில்முனைவோரையும் எடைபோட நினைப்பது சரியல்ல. என் கணிப்பில் தொழிலதிபர்கள் ஓரளவுக்கேனும் லாப நோக்கோடு நியாமான பொருளையோ சேவையையோ அளிப்பதில் விருப்பமுடையவர்களாக இருக்கின்றனர். அதனால் பெண்கள் மருத்துவ துறையில் உள்ள வர்த்தக வாய்ப்புகளைக் கைப்பற்றிக்கொள்ளத் துணியவேண்டும்.

சுயததொழில் செய்ய விரும்பும் பெண்கள் ஒரு சிறு கடை வைக்கும் அளவுக்கு இடமிருந்தால் நல்ல மருந்து கடைகளை நிறுவலாம். அந்தத் துறையில் கல்வித்தகுதி இல்லையென்றாலும், கல்வித்தகுதி உள்ள ஆள்களை அமர்த்திக் கொண்டு தொழில் தொடங்கலாம். அதற்கு வேண்டிய லைசன்ஸ் மற்றும் சட்டரீதியான வழிமுறைகளைத் தக்கமுறையில் பூர்த்தி செய்துவிட்டால், மருந்து கடை தயார். கிராமம், நகரம் வேறுபாடு இல்லாமல் அனைத்து இடங்களிலும் மருந்து கடைக்கான தேவை இருக்கிறது.

நல்ல தரமான நிறுவனங்களின் மருந்துகளை விற்பனை செய்வதன்மூலம் லாபம் ஈட்டுவதோடு சமூக நன்மை செய்த திருப்தியும் ஏற்படும். முதலீடு அதிகப்படுத்த முன்வரும் பெண்கள் சிறு மருத்துவமனைகள் அமைக்கலாம். அறுவைச் சிகிச்சை செய்யும் வசதி இல்லாவிட்டாலும் புற நோயாளிகளைக் கவனிக்கும் அடிப்படைத் தேவைகளோடு மருத்துவமனையை அமைக்கலாம். இன்று ஏராளமான மருந்துவர்கள் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும்போது, அவர்களைத் தங்கள் தொழிலில் ஈடுபடுத்தி பொருள் ஈட்ட முனையலாம்.

இன்று 40% மக்கள் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவற்றை அறிந்துகொள்ளக்கூட மருத்துவமனைக்குச் செல்ல அஞ்சி தங்கள் உடல்நிலையை மோசமாக்கிக் கொள்கின்றனர். எத்தனையோ நுட்பமான ஆனால் எளிய மருத்துவ சாதனங்கள் ரத்த கொதிப்பின் அளவை அறிந்து கொள்ளவும், சர்க்கரையின் அளவை அறிந்து கொள்ளவும் சந்தைக்கு வந்துவிட்டன. குறைந்த முதலீட்டில் இப்படிப்பட்ட சாதனங்களைத் தகுந்த மருத்துவர்களின் கலந்து பேசி தருவிக்கலாம். புற நோயாளிகளைக் கண்காணிக்கும் மையங்களை ஏற்படுத்தலாம்.

பொதுவாக பெண்கள் வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லையென்றால் அன்புடன் கவனித்துகொள்ளும் குணம் படைத்தவர்கள். இத்தகைய மனித நேயம், சேவை மனப்பான்மை போன்ற அடிப்படை குணங்களோடு தொழில் செய்ய ஆர்வம் இருக்கும் பெண்கள், இத்துறையில் ஈடுபடுவதற்கு முன்வந்தால் நல்ல லாபத்தோடு அதிக மனநிறைவையும் பெறமுடியும்.

இன்று சமூகம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பிரச்னை, உடல்நலமில்லாத முதியோர்களைப் பேணிக் காப்பதற்கு யாருமில்லை என்பதுதான். பெரும்பாலான குடும்பங்களில் நல்ல ஆரோக்கியமான முதியோர்களை வைத்து பராமரிப்பதே சிக்கலாகி கொண்டு வருகிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவு ஏற்படும்போது அது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. மற்றொரு பக்கம், உடல் நலம் குன்றிய முதியவர்களைக் கையாளத்தெரியாமல் திண்டாடுபவர்கள் மிக அதிகம். குறிப்பாக ஆண்கள் நோய்வாய்ப்படும் போது அவர்களை தகுந்த முறையில் கவனிக்க நல்ல செவிலியர் கிடைப்பது அரிதாகிக் கொண்டு வருகிறது. படுக்கையில் இருந்து எழுந்திருக்கக்கூட முடியாமல் பலர் அல்லல்படுகிறார்கள்.

இன்று தெருவுக்கு நான்கு வீட்டிலாவது இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. நல்ல சேவை மனப்பான்மையுள்ள தொழில்செய்யும் ஆர்வம் உள்ள பெண்கள், இன்று இரண்டு வகையான வியாபார சந்தர்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முதியோர் இல்லம் ஒரு வாய்ப்பு. சிறிய அளவில் தொடங்கி, நன்றாகப் பராமரித்தால் நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

முதியோர் இல்லங்களை நிறுவுவது இன்று சமூகத்தின் இன்றியமையாத தேவையாகும். மனிதனின் சராசரி ஆயுள் நீண்டு வரும் இந்நாளில், ஒரு முதியவர் சுமாராக 75 வயதுடையவராக வைத்துக்கொண்டால், அவரது மகன் அல்லது மகளுக்கு 45 முதல் 50 வயது இருக்கும். 40 வயதை கடந்த நடுத்தர வயது மக்களுக்கு, அந்த வயதுக்குரிய உடல்நல கேடுகள் தொடங்கும் காலகட்டம் இது. வேலை செய்யும் கட்டாயம், குழந்தைகளின் கல்வியைப் பற்றிய கவலை என்று நடுத்தர வயதுக்குடைய அத்தனை கவலைகளாலும் அவர்கள் சூழப்பட்டிருக்கும் சமயத்தில், வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்வது அவர்களுக்கு மிகவும் சவாலான ஒரு காரியமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களின் திண்டாட்டம் இன்னும் அதிகம்.

இத்தகைய சமூகச் சூழலில் சுகாதாரமான அடிப்படை வசதிகளோடு கூடிய சிறிய முதியோர் இல்லங்களை நிறுவுதல் நல்ல தீர்வாகும். பெரும்பாலான மக்களுக்கு தராதரம் குறைந்த முதியயோர் இல்லங்களில் தங்கள் பெற்றோரை விட்டுவைக்க மனம் இருக்காது. இத்தகைய சூழலில் சிக்கித்தவிப்பவர்களுக்கு நீங்கள் தொடங்கும் முதியோர் இல்லம் அருமருந்தாக அமையும். அடிப்படை கல்வியறிவும் முதலீடு செய்வதற்கு வேண்டிய பணமும் இருந்தால் பெண்கள் இத்தகைய பராமரிப்பு இல்லங்களை அமைக்கலாம். வருமானம் ஒரு பக்கம், திருப்தி இன்னொரு பக்கம்.

இத்துறையில் தொழில் செய்ய முன்வரும் பெண்கள் தங்களைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து அதிகம் படித்திராத பெண்களை தேர்ந்தெடுத்து, சுகாதாரம் அடிப்படை மருத்துவம் மற்றும் முதியோரைப் பராமரித்தல் போன்றவற்றில் அடிப்படை பயிற்சி அளித்து இணைத்துக்கொள்ளலாம். இந்தப் பணியாளர்களை முதியோர்களின் வீட்டுக்கு இரவு, பகல் என்று தேவைக்கு ஏற்ப அனுப்பலாம். இப்படி செய்வதன் முலம் இது ஒரு நல்ல சமூக சேவையாக உருவாக (Service Industry) வாய்ப்புகள் அதிகம்.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் house keeping மற்றும் nursing care போன்ற துறைகளில் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. பொருளை உற்பத்தி செய்யும் ஒரு துறையில் இறங்க மனமில்லாத பெண்கள் இதை ஒரு சிறு தொழிலாக, சேவைகளின் அடிப்படையில் உருவாக்கிக் கொள்ளமுடியும். நிச்சயம் இது ஒரு லாபகரமான தொழிலாக மாறும் வாய்ப்பு அதிகம். அதே போன்று ஆட்கள் வைத்து முதியோர் இல்லங்களை நிறுவ வசதியில்லாதவர்கள் சுயமாக குறிப்பிட்ட சில வீடுகளுக்கு சில மணி நேரங்கள் வருகை தந்து, இந்த முதியோர்களுக்குச் சேவை புரிவதன் மூலம் சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வாய்ப்புகள், வாய்ப்புகள், வாய்ப்புகள்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 15

சிறிய முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கு சில முக்கியத் துறைகளை எடுத்துக்கொள்வோம். விலைவாசி உயர்வு காரணமாக இப்போது குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போகும் கட்டாயத்தில் உள்ளனர். குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள நம்பகமான ஆள்கள் கிடைக்காமல் பலர் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் குறைந்த முதலீட்டில் எளிய சுகாதாரத்தோடு கூடிய க்ரீச் எனப்படும் குழந்தை காப்பகங்களை உருவாக்குவது பெண்களுக்கு ஏற்ற ஒரு தொழிலாக இருக்கும்.

பாலர் பள்ளிகளை நிறுவுவதற்கு தாயுள்ளம் இருந்தால் போதுமானது. அதிகம் படித்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. குழந்தைகளின் இயல்புகளை அறிந்து கொண்டு தங்கள் பள்ளிகளை இருந்த இடத்திலேயே நடத்தி வந்தால் அந்தப் பகுதியிலுள்ள வேலைக்குப் போகும் பெண்களுக்கு அது வரப்பிரசாதமாக அமையும்.

கணிதம், அறிவியல் அல்லது கணினி சார்ந்த கல்வியில் தனித்திறமைப் பெற்றவர்களாக இருந்தால் ட்யூஷன் சென்டர் எனப்படும் தனிப்பயிற்சி மையங்களை ஆரம்பிக்கலாம். இதற்கான தேவையும் நமது நாட்டில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

போட்டிகள் நிறைந்த வியாபார உலகில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பது மட்டுமல்லாமல் அதற்கும் மேலே தனிப்பட்ட கவனமும் தேவைப்படுகிறது. பயிற்சி மையங்களில் திறமையுள்ள பெண்கள் தாங்களே வகுப்புகளை எடுக்கலாம். அதைத் தவிர, தங்களுக்கு தெரிந்த நண்பர்களைத் தேர்ந்தெடுத்து தங்கள் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பதற்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

கணினி சார்ந்த தொழில்களில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. பெரிய நிறுவனமாக ஏற்படுத்தி தொழில் தொடங்க முடியாதவர்கள், நவீனமயமான அறிவுச் சார்ந்த தனிநபர் திறமையை அடிப்படையாகக் கொண்ட கீழ்கண்ட தொழில்களை மேற்கொள்ளலாம்.

E-learning எனப்படும் virtual tuition centre இன்று பெருகிக்கொண்டிருக்கிறது. உலகளவில் கணிதத்தை நல்ல முறையில் போதிப்பதற்கு மிகச் சிலரே உள்ளனர். கணிதத்தில் மேற்படிப்பு படித்த பெண்கள் குறைந்தபட்ச முதலீட்டில் வீட்டிலிருந்து கொண்டே சில கணிணிகளை வைத்துக்கொண்டு உலகளாவிய அளவில் கற்றுக்கொடுக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் கணிதத்தை நல்ல முறையில் கற்றுக் கொடுப்பதற்கு திறமையான ஆசிரியர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் பல பள்ளிகளும் கல்லூரிகளும் மேல்நாடுகளைப் போல் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தலாம். இது போன்ற சமயங்களில் வீட்டிலிருந்தபடியே பல்வேறு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வகுப்புகள் எடுக்கும் வாய்ப்பும் நல்ல வருமானமும் கிடைக்கும்.

வணிகவியலில் முதுகலைப்பட்டம் பெற்ற பெண்கள் ஒன்று கம்ப்யூட்டரில் அக்கவுண்டிங் மென்பொருள் பேக்கேஜ்கள் நிறுவி கடைகள் மற்றும் சிறிய அலுவலகங்களில் நடக்கும் வியாபாரத்தில் வரவு, செலவு திட்ட அறிக்கைகள் தயாரிக்லாம். வணிகவரி, சுங்கவரி, வருமான வரி, சேவை வரி, என பலதரப்பட்ட வரிச்சேவைகளின் தன்மைகளை உணர்ந்து அவ்வப்பொழுது மாறும் சட்டங்களையும் அறிந்துகொண்டு, இந்த சிறு வணிகர்களின் கணக்கு வழக்குகளை வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளலாம். வரி செலுத்துவதற்கும் உதவி செய்யலாம்.

மக்களின் ரசனைகள் பெருமளவில் மாறிக் கொண்டு வரும் இன்றைய சூழலில் விலைவாசிகள் எவ்வளவு உயர்ந்த போதும், உணவு விடுதிகளில் கூட்டம் குறைவதேயில்லை. இன்றியமையாத தொழில்களில் உணவு சார்ந்த தொழில்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. கையேந்தி பவனிலிருந்து நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டல்கள் வரை, எல்லாவற்றுக்கும் அதற்கென்று உரிய வாடிக்கையாளர் கூட்டம் இருக்கிறது. இத்துறையில் சிறு தொழில்களுக்கான சந்தர்ப்பங்கள் என்னவென்பதை சிறிது பார்ப்போம்.

என்னதான் நவீன உபகரணங்கள் சுற்றியிருந்தாலும், சமையல் என்பது பெரும்பாலான பெண்களுக்கு ஒரு சுமையாகவே இருக்கிறது. இன்னும் நம் நாட்டில் சமையலறை என்பது பெண் தொடர்புடைய ஓர் இடமாகவே கருதப்படுகிறது.

சமையல் கலையில் விருப்பமுள்ள திறமையுள்ள பெண்கள், சிறு சிறு உணவு விடுதிகளை சுகாதாரத்துடன் ஏற்படுத்தி, தினசரி காலை மதியம் இரவு உணவு வகைகளைச் சமைத்துக் கொடுத்து, அதை தேவைப்படுவோருக்கு டெலிவரி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். இரு சக்கர வாகனங்களை ஓட்டத்தெரிந்த பெண்கள் தாங்களே டெலிவரியும் செய்யலாம். பிறகு அதற்கென ஆள்களை நியமித்துக் கொள்ளலாம்.

சமீபத்தில் காய்ச்சலால் மூன்று நாள்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. அந்த தருணங்களில் எழுந்து சமையல் செய்வதற்கு உடல்நலம் இடம்கொடுக்கவில்லை. அதே சமையத்தில் மருத்துவர் கொடுத்த மூன்று நான்கு மாத்திரைகளை விழுங்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. எப்பொழுதும் பணி நிமித்தமாக வேலையில் ஈடுபடும் என்னைப் போன்ற தொழிலதிபர்களால், வீட்டில் முடங்கி கிடப்பது சிரமமானது. அப்போது தொலைபேசியிலும் அலைபேசியிலும் பேசிய பலரும், குறிப்பாக பெண்களும் நான் சொல்ல வந்த கருத்தை வலியுறுத்தினர்.

பொதுவாக காய்ச்சலின் போது உட்கொள்ளக்கூடிய உணவு வகைகளான கஞ்சி வகைகள் ரசவகைகள் மற்றும், சூப், சட்னி வகைகள் ஆகியவற்றைப் பிரத்தியேகமாக யாராவது செய்து கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! காய்ச்சல் என்பது குறைந்தபட்சம் 3 அல்லது 4 நாள்கள் நீடிக்கக்கூடியது. அவர்களிடம் உங்கள் தொலைபேசி எண் இருந்தால் உங்களால் வேண்டியதைக் கொடுத்து உதவமுடியும் அல்லவா? மூலிகை கஷாயங்களையும்கூட நல்ல முறையில் தயார் செய்து உணவோடு கொடுத்தனுப்பலாம்.

வீட்டிலுள்ள பல முதியோர்கள் பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படும் இயற்கை மருத்துவத்தில் அனுபவம் கொண்டிருப்பார்கள். இவர்கள் துணையுடன் பல சுவையான, சத்தான உணவு வகைகளை அறிமுகப்படுத்தலாம்.

இன்று பெரும் நகரங்களில் வேலை மாற்றம் மற்றும் கல்வி நிமித்தம் தங்கள் ஊர்களிலிருந்து வெளியூர்களில் அதிக நபர்கள் வாழ்கின்றனர். இவர்களைப் போன்றவர்களுக்கு உடல் அசௌகரியங்கள் ஏற்படும்போது, மேற்கூறிய பொருள்களின் தேவை மிக உதவியாக இருக்கும். அதேபோல் இன்னும் பழமையான உணவுப்பண்டங்களான கைப்பிடி சேவை, கொழுக்கட்டைகள், போளிகள் போன்ற எத்தனையோ வகை தின்பண்டங்கள் மக்களுக்கு தேவைப்படும். அதே சமயத்தில் தரமான தின்பண்டங்கள் கிடைக்காமலும் இருக்கின்றன. இத்தகைய சூழலில் இதைப்போன்ற பண்டிகை சார்ந்த தின்பண்டங்களைத் தயார் செய்யத் திறமையான பெண்கள் முன்வந்து, அதை வீட்டு விநியோகமும் செய்ய முடிந்தால் இதுவும் ஒரு நல்ல தொழிலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய இளைய தலைமுறையினர் உடல் நலம் பேணிக்காப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு சாலட் வகைகளை அறிமுகப்படுத்தலாம். ஊறுகாய்கள், பொடிகள் போன்றவற்றைத் தயாரிப்பதிலும் ஈடுபடலாம். பெரிய நிறுவனங்கள் பல இன்றளவும் தங்களுடைய பண்டங்களை இப்படிப்பட்ட குறுவணிகர்களிடம் இருந்தே கொள்முதல் செய்கின்றனர்.

பதப்படுத்தும் உணவு வகைகளின் பயன்பாடு இன்னும் நம் நாட்டில் வளர்ந்துவரும் ஒரு துறையாகவே உள்ளது. அயல் நாடுகளைப் போல் பிரஸஸ்ட் ஃபுட் வகைகள் நம் நாட்டில் குறைவு என்றாலும் வளர்ந்து வரும் சமுதாயச் சூழலில் இதற்கான தேவை நிச்சயம் எழும். உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கற்று வேண்டிய உபகரணங்களை வாங்கி தொழில் தொடங்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 கலைகள் ஆயிரம்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 16

இன்று உற்பத்தி தொழில்களை உருவாக்கி, அதற்குரிய தகுந்த நபர்களைத் தேர்வு செய்து தொழில்களை நடத்திச் செல்வது கடினமாக உள்ளது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தொழில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது பல தொழிலதிபர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், அறிவு சார்ந்த தொழில்களுக்கு இனிவரும் காலங்களில் வரவேற்பு கூடுதலாக இருக்கக்கூடும்.

அந்த வரிசையில் முதலில், கலை ஆர்வம் உள்ள பெண்களுக்கான வாய்ப்புகளை இனி பார்ப்போம்.

  1. ஓவியம் : கண்ணாடி, பானை, உலோகம் ஆகியவற்றில் வரையும் ஆர்வமும் தேர்ச்சியும் கொண்டவர்கள் பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம். இப்படிப்பட்ட வகுப்புகளுக்கு இன்று நல்ல தேவை உள்ளது. இதற்கு பெரிய முதலீடுகள் தேவையில்லை. வீட்டின் ஒரு பகுதியை வகுப்பறையாக மாற்றி, ஒரு சில உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தினால் நல்ல வருமானம் ஈட்ட முடியும். மற்ற பயிற்சி வகுப்புகளிலிருந்து சிறு வித்தியாசப்படுத்தி கற்பனை வளத்துடன் சொல்லிக் கொடுக்கும்போது நல்ல அறிமுகங்கள் கிடைக்கும்.
  2. இசை வகுப்புகள்: இசையில் பட்டபடிப்பு பெற்றவர்கள் அல்லது முறையாக இசையைக் கற்றவர்கள், அது எந்தப் பிரிவைச் சேர்ந்த இசையாக இருந்தாலும், இசை வகுப்புகள் நடத்தலாம். இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொடுக்கலாம். இன்று டிவியில் பலவித போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதையும் பெற்றோருக்கு அதில் ஆர்வம் அதிகரித்துக்கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். பயிற்சி வகுப்புகள் இவர்களிடையே எளிதில் பிரபலமடையும்.
  3.  யோகா /தியானப் பயிற்சி : பொதுவாக இன்றைய தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். தியானம், யோகா ஆகியவற்றில் முறைப்படி தேர்ச்சி பெற்ற தகுதியானவர்கள் பயிற்சி வகுப்புகள் தொடங்கலாம்.
  4. உடற்பயிற்சிக் கூடங்கள் : உடல் நலம் பேணிக்காப்பதில் நல்ல அறிவுப் படைத்த பெண்கள் ஓரளவுக்கு முதலீடு செய்யவும் முடியும் என்று நினைப்பவர்கள் உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவலாம். வங்கியில் கடன் பெறுவதும் சாத்தியமே. நல்ல இடத்தைத் தேர்வு செய்தல் மற்றும் அந்த இடத்தை அழகாக வடிவமைத்தல், பயிற்சி கூடங்களைக் குளிரூட்டுதல் போன்றவற்றைச் செய்துவிட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். பயிற்சிப் பெற்ற ஒன்றிரண்டு திறமையாளர்களைப் பணியில் வைத்திருப்பது அவசியம். தக்க முறையில் விளம்பரப்படுத்தினால் பலரும் ஆர்வத்துடன் இணைந்துகொள்வார்கள்.
  5. தற்காப்புக் கலைகள் : பல்வேறு சீண்டல்களுக்கு ஆளாகும் இளம்பெண்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள சில தற்காப்புப் பயிற்சிகளைப் பெறுவது இன்று கட்டாயமாகிவிட்டது. அனுபவம் வாய்ந்தவர்கள் இவர்களுக்கு வகுப்புகள் எடுக்கலாம். பள்ளி மைதானங்கள், மாநகராட்சிக் கூடங்கள் போன்றவற்றை குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு வாடகைக்கு எடுத்து பயிற்சி அளிக்கலாம்.
  6. தனிவகைத் திறமைகள்: ஒரு சிலருக்கு காய்கனிகளை வைத்து அலங்காரம் செய்வதிலும் மற்றும் காய்கனிகளைச் செதுக்கி பலவகை உருவங்களை ஏற்படுத்துவதிலும் ஆர்வம் இருக்கும். இவர்களும் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். அதே போல், தோட்டக்கலை தொடர்பான அறிவியல்பூர்வமான அறிவு படைத்தவரும், துறை சார்ந்த தகவல்களை அறிந்து வைத்திருப்பவரும், தோட்டம் அமைப்பதில் வகுப்புகள் நடத்தலாம். தோட்டங்களை நிர்வகிப்பதில் ஆலோசகர்களாகச் செயல்படலாம்.  சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிவரும் நிலையில் நிச்சயம் உங்களுக்கு இத்துறையில் நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
  7. சமையல் கலை  : பேக்கரி, மைக்ரோவேவ் சமையலில்  அனுபவம் வாய்த்தவர்கள் பயிற்சி வகுப்புகள் எடுத்தால் இன்றைய சூழலில் நல்ல வரவேற்பு இருக்கும். பெருநகரங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களில்கூட இத்தகைய பயிற்சி வகுப்புகளுக்கு நல்ல தேவை உள்ளது. ஒரே பகுதியைச் சேர்ந்த இருவரோ அல்லது மூவரோ ஒன்று சேர்ந்து, இத்தகைய பயிற்சி மையங்களில் முறையாகப் பயிற்சி பெற்று cakes, pasteries உள்ளிட்ட பலவகையான பண்டங்களைச் செய்வதிலும் ஈடுபடலாம்.
  8. அலங்காரம் : இண்டீரியர் டெகரேடிங் எனப்படும் வீட்டு அலங்கார கலையில் தேர்ச்சிப் பெற்றவர்களும் பல நூதனமான கலைத்திறனைப் படைத்தவர்களும் தங்கள் திறமையை அறிவுபூர்வமாக செலுத்தி சிறு தொழில் முயற்சியில் ஈடுபடலாம்.
  9. நடன வகுப்புகள் : இசை தொடர்பான பயிற்சிகளைப் போல் இன்று பலவித நடன வகைகளைக் கற்றுக் கொள்வதிலும் பெரும்பாலான இளைய சமுதாயத்தினர் ஆர்வமாக உள்ளனர். பலவித தொலைக்காட்சி ஊடகங்களும் இதற்கென வித்தியாசமானப் போட்டிகளை நடத்தி வருகின்றன. பரதம், ஒடிஸி போன்ற பாரம்பரிய நடன வகுப்புகள் தவிர, மேற்கத்திய பாணியில் பல புதிய நடன பயிற்சிகளுக்கும் பலரிடம் ஆர்வம் பெருகியுள்ளது.

சில பொதுவான விஷயங்கள். மேற்கூறிய பயிற்சி வகுப்புகளை வீட்டிலேயே நடத்துவது ஏற்றதல்ல. வீட்டுக்கு அருகில் ஏதேனும் ஓரிடத்தை அடையாளம் கண்டு அங்குதான் வகுப்புகள் நடத்தவேண்டும். ஒருவேளை வீட்டிலேயே நடத்துவது என்று முடிவு செய்துவிட்டால், அதற்கென தனி அறையை ஒதுக்கவேண்டும்.

பயிற்சிக்கான நேரம், கட்டண விவரம், வயது வரம்பு, பயிற்சித் திட்டங்கள் போன்றவை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். நம் வீட்டில் நடக்கும் வகுப்புதானே என்ற அலட்சியப் போக்கு கூடவே கூடாது. அதே போல் எந்தக் கலையாக இருந்தாலும், சொல்லிக் கொடுக்கும் நபர்கள் தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொண்ட பின்னரே, அதை சுயத்தொழிலாக செய்ய முன்வர வேண்டும். அவ்வப்போது முன்னறிவிப்பின்றி பயிற்சி வகுப்புகளுக்கு விடுமுறை அளித்தல் மற்றும் பயிற்சசி கொடுக்கும்போது கைபேசியில் பேசி கொண்டிருத்தல், வீட்டுக்கு வருபவர்களிடம் அரட்டை அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது சரியல்ல.

பயிற்சி வகுப்புகள் நடக்குமிடங்கள், கற்க வருபவற்கு பாதுகாப்பான உணர்வைக் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களிடம் படித்த மாணவர்களை அவ்வப்போது ஊக்குவித்து பல்வேறு போட்டிகளில் பங்குபெறும்படிச் செய்ய வேண்டும். திறமையாகவும் பொறுமையாகவும் அக்கறையுடனும் வகுப்புகள் எடுத்தால் கற்கும் மாணவர்கள் மூலமே மேலும் பலர் வந்து இணைந்துகொள்வார்கள். மிக எளிதாக உங்கள் தொழில் முயற்சி பிரபலமடைந்துவிடும். சிறிது காலத்துக்குப் பிறகு தங்களிடம் கற்ற மாணவர்களையே பயிற்சியாளர்களாக நியமித்து தொழிலை மேலும் விரிவுபடுத்தலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 சந்தை உங்களை வரவேற்கிறது

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 17

எலக்ட்ரானிகல் துறையில் ஆர்வமுள்ள நபர்களுக்கு சந்தையிலிருக்கும் சில வாய்ப்புகளை காண்போம். சில்லறை அங்காடிகளாகட்டும், பொருள்களைச் சேமித்து வைக்கும் கிடங்குகளாகட்டும், பார்க்கிங் லாட் எனப்படும் வாகனங்களை நிறுத்துமிடத்தை நிர்வகிக்கும் இடங்களாகட்டும், போக்குவரத்து அலுவல்களாகட்டும் – அனைத்து இடங்களிலும் கோட் முறையில் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. இங்கெல்லாம் பிரிண்டர்களோடு ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் பில்லிங் மிஷின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மொபைல் பிரிண்டர் மூலம் எளிமையாக ரசீதுகள் அளிக்கமுடியும். டிக்கெட் கவுண்டர், பெட்ரோல் பங்க், ஷாப்பிங் மால் என்று பல இடங்களில் இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அந்தந்த துறைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இத்தகைய இயந்திரங்கள் 5000 முதல் 10,000 ரூபாய் வரை சந்தையில் கிடைக்கின்றன. இவற்றைப் பராமரிக்க ஆண்டுக்கு 1000 முதல் 1500 வரை செலவாகும். இத்துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் இதற்கு நல்லதொரு சந்தை இருப்பதை உறுதி செய்கின்றனர். உள்நாட்டு வங்கிகளும் இத்தகைய இயந்திரங்களை உபயோகப்படுத்தத் தொடங்கி விட்டன.

வாடிக்கையாளரே எளிதாக இவற்றை கையாள முடியும். இத்தகைய மொபைல் பிரிண்டிங் இயந்திரங்களின் தேவை பல கோடிகளைத் தொடும் என்பது வல்லுனர்களின் கணிப்பு. இத்தகைய இயந்திரங்கள் வைரஸால் பாதிக்கப்படுவதில்லை. இயக்குவதற்கு தொழில்நுட்பம் தெரிந்தவர்களின் தேவையும் இல்லை. இவற்றை உற்பத்தி செய்ய முடியுமானால் அது நல்லதொரு தொழிலாக இருக்கும். அல்லது, வெளிநாடுகளிலிருந்து முழுமையாகவோ, அதன் உதிரிப்பாகங்களையோ இயக்குமதி செய்து, ஒன்றாக இணைத்து விற்பனை செய்ய முன் வந்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

ராகவபாய் ப்ரஜாபதி என்பவர் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபடுபவர். குஜராத் பூகம்பத்தால் சுற்று வட்டாரமே மண்ணோடு மண்ணாகி வாழ்விழந்த சூழலில் குறைந்த விலையில் ஏழைகளுக்கான குளிர்சாதனப் பெட்டியை இவர் உருவாக்கினார். இயற்கை களிமண்ணால் ஆன இந்த குளிர்சாதனப் பெட்டி வேலை செய்வதற்கு மின்சாரம் தேவையில்லை என்பது முதன்மையான விஷயம். காய்கனிகளை சுமார் 5அல்லது 6 நாள்கள் வரை கெடாமல் காக்கக்கூடியது இது. பால் மூன்று நாள்கள் வரை கெடாமல் இருக்கும். பலவிதமான குளிரூட்டும் பெட்டிகளை ஆராய்ந்து பார்த்து 3 ஆண்டுகள் செலவழித்து இதை அவர் வடிவமைத்தார்.

மின்சார சிக்கனத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் இந்நாளில் ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்தது. பல விதமான பெட்டிகளைச் செய்து அவர் குஜராத்தில் விற்பனையும் செய்துள்ளார். துன்பங்களிலிருந்து விடுபட்டு அந்தத் துன்பத்தையே வாய்ப்பாக மாற்றி தொழிலில் முன்னேறியவர்களில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. ஏழைகளுக்குப் பயன்படும் இத்தகைய குளிரூட்டும் பெட்டிகளை கிராமத்தில் விற்பது நல்ல லாபத்தை ஈட்டும்.

LED  எனப்படும் Light  Emitting display விளக்குகள் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் மின் சிக்கனத்தை ஏற்படுத்தும் பல்வேறு வகையான ஒளிர் விளக்குகள் இன்று சந்தைக்கு வந்துள்ளன. இத்தகைய விளக்குகளை உற்பத்தி செய்யவும் முனையலாம். ஆனால் முதலீடு கூடுதலாக தேவை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனையும் செய்யலாம். அதற்கும் வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் தீவிரமாக இத்துறையை ஊக்குவித்தால் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

எலெக்ட்ரானிக்ஸ் துறையைப் பொருத்தவரை, புதிய பொருள்களை உற்பத்தி செய்ய முடியாவிட்டாலும், இருக்கும் பொருள்களை நல்ல விதத்தில் பழுது பார்க்கும் சர்வீஸ் சென்டர்களை உருவாக்கினால் நல்ல வரவேற்பு கிடைக்கும். லேப்டாப், மொபைல், கம்ப்யூட்டர் ஆகியவற்றை சரிசெய்ய தரமான சர்வீஸ் சென்டர் இந்தியாவில் இன்னும் குறைவாகவே உள்ளது. தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் மட்டுமே இதில் நுழையலாம் என்றில்லை. ஒரு தொழிலை தொடங்கி தகுந்த நபர்களை நியமித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்தால் லாபம் நிச்சயம்.

சூரிய சக்தியால் இயங்கும் சாதனங்கள், இன்வர்டர்கள் மற்றும் சில மின்னணுக் கருவிகளின் தேவை நம் நாட்டில் அதிகமாகவே உள்ளது. அதேபோல் கணினி சார்ந்த பொருள்கள் குப்பையாக செயலற்று ஒதுக்கப்படும்போது அவற்றை விஞ்ஞானப்பூர்வமாக மறு சுழற்சி செய்யும் தொழிலும் அதிக அளவில் இனி பேசப்படும்.

பாதுகாப்பு பற்றிய அச்சம் அதிகமாகிக் கொண்டுவரும் இன்றைய சூழலில் உயர் ரிசல்யூஷன் காமிராவின் பயன்பாடுகள் அதிகமாகும். பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் இத்தகைய காமிராக்களை உற்பத்தி செய்கின்றன. இவற்றை வாங்கி விற்பது நல்ல தொழிலாக அமையும். சந்தை பற்றிய புரிதல், விற்பனை செய்யும் திறன் போன்றவை இருந்தால் இத்தகைய தொழில்களில் தாராளமாக இறங்கலாம்.

சிறு தொழிலில் ஈடுபடும் பலருக்கு சிறு சிறு கடைகள் வைத்து அதன் மூலம் காய் கனிகள், அலங்காரப் பொருள்கள், பரிசுப் பொருள்கள், ஃபேன்ஸி மற்றும் ஸ்டேஷனரி பொருள்கள், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் எண்ணம் இருக்கலாம். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில், பெரும் வணிக வளாகங்களால் ஓரளவிற்கு வேலை வாய்ப்பும், போக்குவரத்து வசதியும் பெருகும் என்று எடுத்துக் கொண்டாலும், என் கண்ணோட்டத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. இந்நிலையில் மக்களின் மனோபாவங்களிலும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை நகர்புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் அந்தந்த பகுதிகளுக்கென்று ஒரு சிலர் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு, கணிசமாக அந்தந்த பகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொழிலை நடத்திக் கொண்டிருக்கின்றனர். சிறு வணிகர்களுக்கும் பகுதிவாழ் மக்களுக்கும் உள்ள உறவுமுறை காரணமாக வியாபாரம் தொடர்கிறது. மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் பொருள்களைப் பொறுமையாக நின்று வாங்குகிறார்கள். இந்தக் கடைகள் தங்களுக்குப் பொருத்தமாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். வாங்கும் பொருள்களின் தரத்தைப்பற்றிய நிறை குறைகளை, அந்தந்த கடை முதலாளிகளிடம் தைரியமாக வெளிப்படுத்தமுடியும்.

பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் உருவாகக்கூடிய பெரிய வணிக வளாகங்களால் மத்தியதர, பொருளாதார ரீதியாக கீழ்மட்டத்தில் இருக்கும் மக்கள் உளவியல் ரீதியாகவும் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்தப் பெரும் வணிக வளாகங்கள் சில்லறைப் பொருள்களை அதிக அளவில் கொள்முதல் செய்வதால் குறைவான விலைக்கு பொருள்களை விற்கமுடியும். சுயமாக நூறுகட்டு கீரைகளை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்து தெருக்களில் விற்பனை செய்யும், சுயவேலைவாய்பை செய்யும் பெண்கள், ஒரு கட்டுக்கு ரூ. 3 அல்லது ரூ. 4 நிகர லாபம் வைத்து விற்கும் நிலையில், இந்தப் பெரும் வணிக வளாகங்களில், அதே நிலையில் கீரைக்கட்டை 50 சதவிதம் குறைவான விலையில் விற்பார்கள். இந்தச் சில்லறை வியாபாரிகளோடு அந்த பகுதி மக்களும், உறவு முறையின் அடிப்படையில், சில சமயம் கடனுக்கு, பெருட்களை வாங்கிச் செல்வதும் உண்டு. அதே போல் பணத்தை கட்டிவிட்டு பொருள்களை பின்னர் வாங்கிக் கொள்வதும் உண்டு.

ஆனால் பெரும் வணிக வளாகங்கள் விலையுர்ந்த ஆடம்பரமிக்க, கண்ணாடி தடுப்புகளோடு கூடிய மின் விளக்கு அலங்காரத்தில் கேளிக்கை இடங்களாக விளங்குகின்றன. உள்ளே நுழைவதற்கே சாமான்ய மனிதன் மனத் தயக்கத்துக்கு உள்ளாவான். நம் வீட்டுக்கு அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் செல்லும்போது பெரிதாக நாம் ஒப்பனைகள் செய்துகொள்ளவேண்டிய அவசியமிருக்காது. ஆனால், இத்தகைய ஆடம்பர வளாகங்களுக்கு அப்படிப் போகமுடியாது என்று அவர்கள் நினைப்பார்கள்.

கடை முதலாளிகள் கல்லாவில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு இல்லாததால் வாடிக்கையாளர் தங்கள் குறைகளை நேரடியாகச் சொல்லும் வாய்ப்பு ஏற்படாது. ஆக பொதுமக்கள் ஒரு சில பொருட்களை குறைவான விலைக்கும், விளம்பரம் மிக்க பொருட்களை அதிகமாகவும் வாங்கும் சூழல் அமையும்.

மேலும் தங்கள் கையிருப்பில் உள்ள பணத்திற்கு பொருட்களை வாங்காமல், தங்கள் கௌரவத்திற்கென பொருட்களை வாங்கிக் குவிக்கும் சூழல் ஏற்படும். அடுத்து சாமானியனை மேலும் கடனாளியாக்கக் காத்திருக்கும் பல அயல் நாட்டு வங்கி நிறுவனங்கள் கடன் அட்டையைக் கொடுத்து சாமானியர்களை குறிவைக்கக் காத்துகிடக்கிறார்கள். கடன் அதிகமாகும் போது மன உளைச்சல்களும், அதிகமாகும் என்பது கண்டறிந்த உண்மை.

பன்னாட்டு முதலைகளிடம் இருந்து தொழில்முனைவோர் எப்படித் தப்பிப்பது?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 18

பன்னாட்டு நிறுவனங்களின் சவாலை எதிர்கொள்ள சில மாற்றங்களை நாம் செய்யவேண்டியது அவசியமாகிறது.

  1. விற்கும் பொருள் சாதாரணமாக இருந்தாலும் கடைகள் நல்ல உள் அலங்காரத்தோடு இருக்க வேண்டியது அவசியம். இதனால் இத்தொழிலில் இறங்க விரும்புவோர் தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.
  2. ஒரு கடையை நிறுவுவதற்கு முன்னால் அந்த இடத்தைச் சுற்றி வாழும் பொது மக்களை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
  3. பொருள்களின் அளவை அதிகப்படுத்தும் திறமையும் வசதியும் இருக்க வேண்டும்.
  4. பணப்புழக்கத்துக்குத் தேவையான பின்புலம் இருக்க வேண்டும்.
  5. கொள்முதல் செய்த பொருள்கள் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டால், நவீன முறையில் மறுசுழற்சி செய்ய ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இருக்க வேண்டும்.

ஐந்தாவது அம்சம் எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தாது எனினும், ஒரு சில உணவுப் பொருள்களுக்கு நிச்சயமாகப் பொருந்தும். உதாரணத்துக்கு பழங்களை கண்ணாடி அலமாரிகளில் அலங்காரமாக வைத்து விற்க நினைக்கும், குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய முன் வரும் தொழிலதிபர்கள், விற்பனைக்கு வைத்த பழங்கள் விற்கவில்லையென்றால், அருகிலேயே பழச்சாறு செய்வதற்கான இயந்திரங்களை நிறுவி, விற்பனையைச் சீர்செய்யலாம்.

இன்றைய சூழலில் பன்னாட்டு நிறுவனங்கள் நூதனமான முறையில் இந்தியச் சந்தையில் நுழைந்து தன்னம்பிக்கையுள்ள பல தொழிலதிபர்களுக்கு பெரும் சவால் விடுக்கின்றன. இவர்களோடு போராட நாம் தயாராக இருக்கவேண்டும்.

கொடுக்கும் பொருள் அல்லது சேவை எதுவாக இருந்தாலும் உங்களுக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக்கொள்வது அவசியம். பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் இலக்காக வைத்து முன்னேறும் தன்மை கொண்டவை.சிறுதொழில் மேற்கொள்ள நினைப்பவர்கள் லாபத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், சுற்றியுள்ள சமுதாயச் சூழலுக்கு தீர்வு காணும் விதமாகவும் தொழிலை நகர்த்திச் சென்றால் மக்களிடையே இன்னமும் கூடுதலாக நெருங்க முடியும்.

0

சுயதொழிலில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. தனி நபராக இயங்குவது ஒரு வகை. நிறுவனமாக நடத்த விரும்புவது இன்னொரு வகை. பெரும் நிறுவனங்கள் குறுந்தொழில்களை விழுங்கி வரும் தற்காலச் சூழலில், தனி நபர்களாக நிறுவனங்களை ஏற்படுத்தி நடத்திச் செல்வது கடுமையான சவாலாகவே இருக்கும். போராட்ட குணமுடையவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும்.

இன்று இந்தியாவில் பணம் படைத்தவர்கள் மேலும் மேலும் வளங்கள் பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர். இல்லாதவர்கள் மேலும் மேலும் இல்லாமையை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தொழிலை சமுதாய நோக்கோடு நடத்திச் செல்ல முன்வருவது மட்டுமே நீங்கள் இந்தச் சமூகத்துக்குச் செய்யும் நன்மையாகும். இன்று உலகளவில் நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு (Corporate Social Responsibility) என்பதைப் பற்றிய வாதங்கள் முழு மூச்சாக நடந்து கொண்டிருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒரு சில நிறுவனங்கள், தங்கள் லாபத்தின் குறிப்பிட்ட சதவிகிதத்தை சமூகப் பணிகளுக்காகச் செலவிடுகின்றன. இது இன்னும் இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளரவில்லை. ஆனால் இனி வருங்காலத்தில் இது கட்டாயமாக்கப்படலாம். வருங்காலத்தில் தொழிலதிபர்களாக மாறும் எண்ணம் உடையவர்கள் சமூகப் பணிக்கென தங்கள் வருவாயின் ஒரு பகுதியை முதலிலிருந்தே ஒதுக்கத் தொடங்குவது அவசியம்.

சமீபத்தில் மருத்துவத் துறையில் போலி மருந்துகள் விற்பனையால் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிய பலர் கைது செய்யப்பட்டனர். அப்பொழுது போலி மருந்து உற்பத்தியில் பல குறு மற்றும் சிறு தொழிலதிபர்கள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தனிநபர்களின் பணப் பேராசை தொழிலின் தன்மையை, அதன் நோக்கத்தை அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்றது. ஒருபோதும் இவ்வாறு சமூக அவலங்களுக்குக் காரணமாகக்கூடாது. லாபம் நம் கண்களை மறைக்கக்கூடாது.

அடிப்படை சுகாதாரம், கல்வி, உணவு ஆகிய அடிப்படைத் தேவைகளை ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் இருந்து பெற வேண்டியது அவசியம். இதற்கு மாறாக, விரக்தியையும் ஏமாற்றத்தையும் வறுமையையும் நம்மைச் சுற்றி ஏற்படுத்திக்கொண்டே போனால் நம்மால் அமைதியாக வாழ முடியாது. இன்று உயிர்வாழ தேவையான அத்தியாவசிய பொருள்கள் எட்டாத உயரத்திலும், கேளிக்கை களியாட்டங்களுக்கு தேவையான உபகரணங்கள் மலிவாகவும் விற்கப்படுகின்றன.

0

சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்னைகளை எடுத்துக்கொள்வோம்.

பெண்களுக்கு இயல்பாகவே பல திறமைகள் இருந்தும் அச்சம் அவர்களை முடக்கிவிடுகிறது. உள்ளுணர்வில், பெண்கள் மிக அதிகமாக எதிர்காலம் குறித்து சிந்திக்கிறார்கள். பொதுவாக பெண்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்தக் குணத்தை நாம் பலமாக மாற்ற முயற்சித்து வெற்றி பெற வேண்டுமேயன்றி அதை நம் பலவீனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

குடும்பத்தைக் கவனிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஒவ்வொரு பெண்ணும், தனக்குரிய அறிவைப் பயன்படுத்தி, தன் திறமைகள் வெளிப்படுத்துவதும் சமூகத்துக்குத் தேவையானதே. உங்கள் அறிவு மற்றும் திறமையைப் பற்றிய சுயமதிப்பீட்டை குறைத்துக் கொள்ளாமல், மனமுதிர்ச்சியோடு பணியாற்ற பழகிக் கொள்ளவேண்டும்.

பொதுவாக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நடுத்தர வர்க்கப் பெண்கள் தொழில் செய்ய அணுகும்போது கடன் கொடுக்க எளிதாக முன்வருவதில்லை. அதே சமயம், மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உதவிகள் கிடைப்பது அத்தனை சிரமமில்லை. அவர்கள் பெயரில் அசையாச் சொத்துகள் இருக்கும் நிலையில் கடன் பெறுவது சுலபமே. மேல்தட்டு வர்க்கத்துக்கு உதவி செய்ய வங்கிகள் மறுப்பதில்லை. அடித்தட்டு பெண்களுக்கோ மைக்ரோ கிரெடிட், சுயஉதவிக் குழுக்கள் தொடங்கி கடன் வசதி செய்து கொடுக்க பலர் இருக்கிறார்கள்.

நடுத்தர வர்க்கத்துப் பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்தரமும் கிடையாது, முதலீடு செய்வதற்குப் பணமும் இருக்காது. மணமாகாத பெண்களாக இருந்தால், இன்னும் சிரமம். கேட்பது குறைந்தபட்ச கடன்தான் என்றபோதும் வங்கிகள் உதவுவதில்லை. அவர்கள் பிரச்னை, பணத்தை யாரிடம் இருந்து வசூலிப்பது, பிறந்த வீட்டிலா, புகுந்த வீட்டிலா? ஆக, திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் ஒரு இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது. திருமணம் ஆன பெண்களுக்கோ, வீட்டுப் பொறுப்புகளுக்குதான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. இன்றும் சமூகத்தில் ஆண்களை மட்டுமே பொருளீட்டும் நபர்களாகப் பார்க்கிறார்கள். எதிர்பாராத விதமாக தந்தை அல்லது கணவருக்கு மரணம் சம்பவிக்கும்போது பெண்கள் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதைப் போலவே உணர்கிறார்கள்.

என்னாலும் பொருளீட்டமுடியும், சுயதொழில் முயற்சியில் வெற்றிபெற முடியும் என்று நிரூபிக்க பெண்கள் சிரமப்படவேண்டியிருக்கிறது. உண்மையில் பெண்களால் எளிதாகப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளமுடியும். சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ள அவர்களால் முடியும்.

சுயதொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் பெண்களிடம் பேசும்போது, அவர்களிடையே சில பொதுவான குணாதிசயங்கள் இருந்ததை உணரமுடிந்தது. அவை: 1. தொழிலைப்பற்றிய தெளிவான நிலைப்பாடு, 2. எதையும் புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் 3. சூழலுக்கேற்பத் தன்னை பொருத்திக் கொள்ளும் திறன். 4. விடாமுயற்சி, 5. தன்னம்பிக்கை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 உங்கள் டார்கெட் என்ன?

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 19

கடந்த காலங்களில் வங்கிகள் தொழிலதிபர்களுக்கு அதிக அளவு சாதகமாக இருந்தது. இந்திய வங்கிகளின் கண்ணோட்டம் பெரும்பாலும் தொழிலதிபர்களுக்கு கடன் கொடுப்பதை ஊக்குவிக்கும் விதமாகவே இருந்தது. இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தொழில் கடன்களை கொடுப்பதில் நடுத்தரமான ஒரு கொள்கையைக் கையாண்டு வந்தது. அதாவது கடன் கொடுக்கும்போது மீடியம் ரிஸ்க் உள்ள தொழில்களையே தேர்ந்தெடுத்தனர். இதன் பொருள், தொழில் தொய்வடைந்தாலும், வங்கிக்கு வர வேண்டிய நிலுவைகளைப் பிணையாக அசையாச் சொத்துக்களிலிருந்து பெற்றுக்கொண்டுவிடலாம்.

ஒரு தொழிலைத் தொடங்க நினைப்பவர் எதிர்காலத்தில் வங்கிக் கடனை ஒழுங்காகச் செலுத்துவார் என்ற நம்பிக்கையிலும் அவரது கடந்த கால வங்கிக்கணக்குகளை வைத்தும் ஒரு வங்கி முடிவு செய்கிறது. ஒரு நல்ல கடந்தகாலத்தை உருவாக்கத் தெரியாத தொழிலதிபர்களால் எப்படி ஒரு நல்ல வளமான வருங்காலத்தை உருவாக்கமுடியும்? வங்கி அதிகாரிகள் வங்கிக் கடன் கொடுக்கும்போது பெரும்பாலும் நமது அதிகபட்ச பொறுமையைச் சோதிப்பது வழக்கமாகும். இது தொழிலதிபர்களுக்கு பெரும் சுமையாக இருந்தாலும், ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்றால், உங்கள் தொழிலை நடத்தக்கூடிய அளவு பணத்தை உங்களை வைத்தே புரட்டச் செய்ய வேண்டுமென்பதால், இதை சரியாகப் புரிந்துக் கொள்ளவேண்டும்.

சுயதொழிலுக்கு வருபவர்கள் சவால்களைச் சமாளிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பது அவசியம். அதனால் புதிதாக வரும் தொழில்முனைவோர் தங்கள் கனவுகளை எண்களோடு அதாவது டார்கெட்டோடு தொடர்புப்படுத்தி தொழில் செய்யப் பழகுங்கள். மாதாந்திரத் தொழிலுக்கான குறியீடுகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

இப்படி நிர்ணயித்துக்கொண்டு பணிபுரியும்போது வியாபாரம் நிச்சயமாக விரிவடையும். விரிவடைந்து வரும் தொழில் மூலதனத்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து தனியாக சேமிப்பது அவசியம். இது நிறுவனத்தின் பலமாக உருமாறும்.

உங்கள் தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும் கடன்கள் என்பது (குறுந்தொழில்களைப் பொருத்தவரை) தனிநபர் கடன்களே. ஆகவே தனிநபர்களின் Networth எனப்படும் சுயமதிப்பீட்டை முடிந்தவரை உயர்த்திக்கொள்ளவேண்டும்.

சமீபத்தில் DARE எனப்படும் நாளிதழ் குறுந்தொழிலுக்கான சமூக அறிவை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அதில் சிறு மற்றும் குறுந்தொழில்களைப் பாதிக்கும் இரு பெரும் அங்கங்களாக கடனுதவியும் தொழில்நுட்ப அறிவும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாட்டிலுள்ள சில முக்கிய நகரங்களின் போக்கைப்பற்றி விரிவாக அலசப்பட்டது. அதன் ஒரு சில துளிகளை கீழே பார்ப்போம்.

கோவையைப் பொருத்தவரை பெரும் என்ஜினியரிங் சார்ந்த யூனிட்களின் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிலரங்கில் பேசிய பலரும் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளுதல் தொழிலதிபர்களுக்கு மிக அவசியமானது என்பதையும், இதனால் தொழிலுக்கு ஏதுவாகும் என்றும், பணமும் நேரமும் மிச்சப்படுத்த தொழிலதிபர்களால் இயலும் என்பதையும் எடுத்துக்காட்டினார்கள்.

சென்னையைப் பொருத்தவரை கணினிச் சார்ந்த துறைகள் (ஹார்ட்வேர், சாஃப்ட்வேர்) மிக அதிக அளவில் பொருளீட்டும் வாய்ப்புகள் பெற்றுள்ளன என்று கணிக்கப்பட்டது. திருவனந்தபுரமும் இத்துறைகளில் மிக அதிக அளவில் பேசப்படும் ஒரு வர்த்தக இடமாக மாறிக்கொண்டு வருகிறது.

0

இந்தியாவில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதைப் பதிவு செய்வதற்கு குறைந்தது 20 முதல் 40 நாள்கள் தேவைப்படுகின்றன. தொழில் என்று வரும்பொழுது நிறுவனங்களின் தன்மையையும் அதை பதிவு செய்வதற்கு வேண்டிய சட்டத்தேவைகளையும் அடிப்படையாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

தனி நபர்கள் மட்டும் அங்கத்தினராக இருந்து தொடங்குவதை நிறுவனம் என்று அழைப்பர். இத்தகைய நிறுவனங்களை நடத்துபவர், அதாவது தொழில்முனைவோர் Current Account எனப்படும் வியாபாரக் கணக்கை வங்கியில் தொடங்க வேண்டும். நான் முன்பே சொல்லியது போல் இத்தகைய தனிநபர் நிறுவனங்களுக்கு வருமான வரிக்கான பதிவுகள் மற்றும் சேவை வரிக்கான பதிவுகள் அவசியம். மின்சாரம் வணிகத்துக்குத் தேவையான மறுமதிப்பீடு செய்து, செலுத்த தொடங்கியிருக்க வேண்டும் (Commercial E.B).

அடுத்து பிரைவேட் லிமிடெட் எனப்படும் கூட்டு நிறுவன அமைப்பைப் பற்றி பார்ப்போம். இத்தகைய நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு இயக்குநர்களும் இரண்டு பங்குதாரர்களும் தேவை. அதிகபட்சமாக 50 பங்குதாரர்கள் வரை இருக்கலாம். இயக்குனர்களின் அளவுக்கு உச்சவரம்பு கிடையாது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கென்று Articles of Association என்பதை உருவாக்கி, அதாவது நிறுவனத்துக்குரிய சட்டவிதிகளை ஏற்படுத்தி அதிகபட்ச இயக்குநர்களின் தொகையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இத்தகைய பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச முதலீடு ஒரு லட்சம். பொதுமக்களிடமிருந்து முதலீடு வாங்க முடியாது. எனினும் இயக்குனர்களிடமிருந்தும் பங்குதாரர்களிடமிருந்தும் அவர்களது உறவினர்களிடமிருந்தும் deposit எனப்படும் வைப்புத் தொகைகளை முதலீடாகப் பெற்றுக் கொள்ள முடியும். பங்குதாரர்கள் தங்களுடைய பங்குகளை அந்நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும்.

பப்ளிக் லிமிடெட் எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் அடிப்படை விதிகளைப் பார்ப்போம். இந்த நிறுவனங்களின் குறைந்தபட்ச முதலீடு 5 லட்சமாகும். இயக்குனர்களின் எண்ணிக்கை மூன்றாக இருத்தல் அவசியம். பங்குதாரர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ஏழு, அதிக பட்ச உச்சவரம்பு இல்லை. பொதுமக்களிடமிருந்து முதலீட்டுக்கு பணத்தை வசூலிக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 பதிவு செய்யுங்கள்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 20

இனி, பிரைவேட் லிமிடெட் கம்பெனியைப் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். நம் நாட்டைப் பொறுத்தவரை எல்லா நிறுவனங்களின் பதிவுகளும் கம்பெனி சட்டம் 1956, பிரிவு 609ன் படி அமைக்கப்பட்ட ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனி (ஆர்ஓசி) என்ற அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த அமைப்பின் அலுவலகங்கள் உள்ளன. நிறுவனப் பதிவுகளை மேற்பார்வையிடுவதும் அவை சட்ட ரீதியாக இயங்குகிறதா என்று கண்காணிப்பதும் இதன் வேலை.

முதலில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் DIN என்று அழைக்கப்படும் Director Identification No பெறவேண்டும். அடுத்ததாக நிறுவனத்தின் பெயரை ஆர்ஓசி அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் நான்கிலிருந்து 6 விதமான பெயர்களைப் பரிந்துரைக்கலாம். ஆர்ஓசி ஏற்கெனவே அந்தப் பெயர்களில் ஏதேனும் நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்துவிட்டு அனுமதியளிக்கும்.

நாம் வைக்கும் நிறுவனத்தின் பெயர்கள் ஏற்கெனவே சந்தையிலுள்ள பெரிய நிறுவனங்களின் பெயர்களை எந்த விதத்திலும் ஒற்றியிருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அனுமதி கண்டிப்பாக மறுக்கப்படும். பெயர் அனுமதி பெற்றவுடன் எம்ஓஏ எனப்படும் Memorandom of Association  மற்றும் ஏஓஏ எனப்படும் Articles of Association ஆகியவற்றை உருவாக்கவேண்டும். நிறுவனத்தின் பெயர், அந்த நிறுவனத்தின் தன்மை, குறிக்கோள், நிறுவன இயக்குனரின் முதலீடு (Authorised capital) போன்ற தகவல்களை அளிக்கவேண்டும். இவை மட்டுமல்லாமல் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள், வளர்ச்சியடைந்த பின்பு விரிவாக்க நினைக்கும் மற்ற துறைகள் (Allied Industries) போன்றவற்றையும் குறிப்பிடவேண்டும்.

மேலும், நிறுவன பங்குகளைப் பற்றிய தகவல்கள், நிறுவன இயக்குனர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, பங்குகளை விற்பது மற்றும் டிவிடண்ட் எனப்படும் நிகர லாபத்தின் குறிப்பிட்ட தொகை போன்ற தகவல்களும் அளிக்கவேண்டும். ஏஓஏவில் கொடுக்கப்படும் தகவல்களை மாற்றி அமைக்கும் உரிமை அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு உண்டு. இருப்பினும் அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் நிறுவனத்தின் எல்லா இயக்குனர்களையும் பங்குதாரர்களையும் முழுவதுமாகக் கட்டுப்படுத்தும்.

இவற்றை தீர்மானித்தப்பின்பு, இதன் நகல்களை ஆர்ஓசி எனப்படும் அரசாங்க அமைப்புக்கு அச்சிட்டு அனுப்பப்பட வேண்டும். கொடுத்துள்ள தகவல்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், இந்த அமைப்பு, நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தும். இத்தகைய தகவல்களைத் தொழில் முனைவோர் கம்பெனி செகரட்டரி மற்றும் சார்டர்ட் அக்கவுண்டன்ட் போன்றோரிடம் கொடுத்து வடிவமைத்துக்கொள்வர்.

கம்பெனி சீல் என்பதை உருவாக்கவேண்டும். அதே போல் நிறுவன இயக்குனர்கள் டிஜிட்டல் சிக்னேச்சர் பெறவேண்டும். வருமான வரித்துறையிடமிருந்து பேன் நம்பர் மற்றும் டேன் நம்பர் எனப்படும் டாக்ஸ் அக்கவுண்ட் நம்பர் கண்டிப்பாகப் பெற வேண்டும். இவைத்தவிர, மதிப்புக்கூட்டுவரி எனப்படும் வாட் பதிவு எண்ணை வருமான வரித்துறையிடமிருந்தும், சேவை வரி பதிவை சுங்க வரித்துறையிடமிருந்தும் பெற வேண்டும். பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்தால், அந்தந்த துறைக்கு ஏற்றவாறு இன்னும் சில சட்டப் பதிவுகளை உற்பத்தி பொருட்களுக்கெனச் செய்ய வேண்டியது இன்றியமையாதது. இன்று பெரும்பாலான நிறுவனப் பதிவுகளைக் கணினி மூலமாகச் செய்யும் வசதி இருக்கிறது. இது இன்னமும் எளிமையானது.

Sole Properietorship எனப்படும் தனிநபர் நிறுவனங்களை உருவாக்குவது எளிது. சட்ட விதிமுறைகள் மிகவும் குறைவு. தனி நபரும் நிறுவனமும் ஒன்று என்று கருதப்படுவதால் இவற்றை ஆர்ஓசி என்ற அமைப்பு தணிக்கை செய்யாது.

மற்றொரு வகை நிறுவன அமைப்பு பார்ட்னர்ஷிப் எனப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட பங்குதாரர்கள் இணைந்து உருவாக்கும் நிறுவனங்கள் ஆகும். இத்தகைய நிறுவனங்கள் சட்டம் 1932ன் படி கட்டுப்படுத்தப்படுகிறது. வங்கிப் பணியல்லாத பிறதொழில்களுக்கு அதிகபட்சமாக 20 தனி நபர்கள் முதலீடு செய்து, ஒன்றிணைந்து நிறுவனத்தை உருவாக்க முடியும். இத்தகைய நிறுவனங்களுக்கும் பங்குதாரர்களிடையே ஒப்பந்தம் எழுத்துபூர்வமாக இருக்க வேண்டியது அவசியம். இத்தகைய ஒப்பந்தங்கள் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையோடு உருவாக்கப்பட வேண்டும்.

இந்த நிறுவனங்களின் லாப நஷ்டத்துக்கு பங்குதாரர்களே பொறுப்பேற்க வேண்டும். 2008ம் ஆண்டு எஎல்பிஏ எனப்படும் Limited Liability Partnership ஏற்படுத்தப்பட்டது. இந்தப் புதிய சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நிறுவனச் சட்டம் 1956 மற்றும் பார்ட்னர்ஷிப் சட்டம் 1932 ஆகிய இரண்டுக்கும் இடையில் சில மாற்றங்களைச் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. இது தொழில்முனைவோருக்குச் சாதகமானது.

இந்தச் சட்டத்தின்படி ஒரு நிறுவனத்தின் பங்குதாரர்களின் பங்குகளின் அளவைப் பொறுத்து அந்த நிறுவனத்தின் லாப நஷ்டங்கள் தீர்மானிக்கப்படும். இத்தகைய நிறுவனங்கள் வங்கி கடன் பெற்று வியாபாரம் செய்யும்போது, அவர்கள் கொடுக்கும் அசையா சொத்துக்களின் மதிப்பை வங்கிகள் தேவைப்படும் போது உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு நிறுவனர் செய்யும் தவறுகளுக்கு எல்லோரும் பொறுப்பாகமாட்டார்கள் என்பது கூடுதல் நன்மை. அதே சமயத்தில் அந்த நிறுவனத்தின் பணத்தின் பொறுப்பை அனைவரும் சமமாக ஏற்க வேண்டும். இதற்கு எந்த விதிவிலக்கும் கிடையாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தேவைகளும் வாய்ப்புகளும்

IMG_0816aஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 21

வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து கொள்ள இத்தகைய சமூக வலைத்தளங்கள் பெரிதும் பயன்படுகின்றன. வாடிக்கையாளரின் விருப்பு வெறுப்புகள், மனநிலை போன்றவற்றை எடைப்போடுவதற்கு இவை பெரிதும் பயன்படுகின்றன என்பது வல்லுனர்களின் கருத்து. வர்த்தக உலகிலும் இந்த வலைத்தளங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

வாடிக்கையாளர்களைப் பொருத்தவரை இணையம் ஒரு அறிவுச் சுரங்கம். தாங்கள் வாங்க விரும்பும் பொருள்கள் அல்லது பெறவிரும்பும் சேவை குறித்து வாடிக்கையாளர்கள் இணையத்தில் இருந்து போதுமான தகவல்களைத் திரட்டிக்கொள்ளலாம். தங்கள் அனுபவங்களையும் அவர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

இந்தத் தளங்களை நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்கின்றன. இணையம் வாயிலாக அதிகச் செலவின்றி தங்கள் பொருள்களையும் சேவைகளையும் அவர்களால் சந்தைப்படுத்தமுடிகிறது. குறிப்பாக, சிறு தொழில் செய்வோருக்கு இத்தகைய வலைத்தளங்கள் உதவத் தொடங்கியுள்ளன. ஆகவே தொழில்முனைவோர் தகுந்த வல்லுநர்களளோடு கலந்து பேசி தங்கள் முயற்சியை விரிவுப்படுத்தவேண்டும்.

பெரும்பாலான தொழிலதிபர்கள் இத்தகைய சமூக வலைத்தளங்களை முக்கியமான தொடர்பு ஊடகமாகக் கருதுகின்றனர். எஃப்எம்சிஜி தயாரிப்புகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் சமூக வலைத்தளங்கள் குறிப்பிடத்தக்க பலன்களை அளித்துள்ளன என்பது தெரியவருகிறது. மற்ற பிரிவினரும் அதிக அளவில் இத்தகைய வலைத்தளங்கள்மூலம் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள முயன்று வருகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஏற்றுமதி துறையில் சிறுதொழில்களின் பங்கு கணிசமானது. பொதுவாக தோல் ஆடைகள், ஆயத்த ஆடைகள், ரசாயனப் பொருள்கள், மருந்துகள், உணவு சார்ர்ந்த பொருள்கள், நகைகள் மற்றும் செயற்கை கற்களாலான அணிகலன்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதியில் மரபுவகை சாராத பொருள்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

இந்திய சிறுதொழில் முனைவோருக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. ஏற்றுமதியில் ஈடுபடும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஏற்றுமதிக்கான கடனுதவி, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட உதவிகளை அளிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆயத்த ஆடைகள், கடல் பொருள்கள், பொறியியல் இயந்திரங்கள், விளையாட்டுப் பொருள்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இவைத் தவிர பலவிதமான வருமான வரி சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.
அதே சமயத்தில் எந்த அந்நிய நாட்டு நிறுவனமாவது இந்தியாவில் தரம் குறைந்த மலிவான பொருள்களை இந்திய தொழிலதிபர்களின் துணையோடு விற்பதற்கு முன் வந்தால், அவை கண்காணிக்கப்படுகின்றன. ECGCI எனப்படும் Export Credit Guarantee of Corporation of India என்ற அமைப்பு ஏற்றுமதியாளர்களக்கு, குறிப்பாக சிறுதொழில் அதிபர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கிறது.

இநத இடத்தில், சிறு தொழில் குறுந்தொழில் ஆகியவற்றின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.

பொதுவாக பொருள் உற்பத்தி செய்யும் பிரிவில் வரும் சிறு தொழில்கள் Plant and Machinery எனப்படும் உற்பத்திக்கான இயந்திரங்களின் மதிப்பு ரூ.25 லட்சத்துக்கு அதிகமாகவும் ரூ. 5 கோடிக்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

இதற்கும் கீழே முதலீடு உள்ள தொழில்கள் குறுந்தொழில் எனப்படும்  Tiny sector பிரிவின் கீழ் வரும். இதற்கு அதிகமாக முதலீடு இருந்தால் அவை சிறுதொழில் பிரிவின் கீழ்வராது. அதேபோல் சேவை பிரிவின்கீழ் வரும் நிறுவனங்கள், ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 2 கோடி வரை பொருளீட்டும் வசதி படைத்தவையாக இருந்தால் மட்டுமே சிறுதொழில் நிறுவனங்களாக அங்கீகரிக்கப்படும்.

சிறு தொழில்களை பொருத்தவரை, தவறுகளே இல்லாத வெற்றியை மட்டும் பெற்றுத்தரும் தொழில் என்று எதுவும் இல்லை. அதிகபட்ச ஒழுங்குடன் ஒரு தொழிலை நடத்தி பணம் சம்பாதித்தவர்கள் என்று எளிதாக கூறிவிட முடியாது.

ஏற்கெனவே சந்தையிலுள்ள பொருளாக இருந்தாலும்கூட, நாம் அதை எப்படி சந்தைப்படுத்த முன் வருகின்றோம் என்பதை பொருத்தே, நமது வெற்றி தோல்விகள் அமையும். ஒரு பகுதியில் வெற்றி பெரும் தொழில்கள், வேறுசில பகுதிகளில் பலமான தோல்வியைச் சந்திக்கலாம். ஒருவரது அனுபவங்களிலிருந்து பெறப்படும் பாடங்கள், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்குமென்று சொல்லிவிடமுடியாது.

உதாரணமாக உணவுத் தொழிலில், ஏற்றுமதியில் ஒருவர் முன்னேறுகிறார் என்று வைத்துக் கொண்டால், அத்துறையில் ஈடுபடும் அனைவரும் ஏற்றுமதி செய்தால் மட்டுமே, வெற்றிப்பெற முடியும் என்பது கிடையாது. மாறாக, மற்றவர் உள்ளூர் சந்தைக்கு மட்டும் பொருள்களை விற்று தனக்கென ஒரு நிலையான வியாபாரத்தை ஏற்படுத்திக் கொள்ள இயலும். ஆகவே, தொழில் செய்வோர் தங்கள் அனுபவங்களைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். அப்போதுதான் புதுப்புது உத்திகளை கையாளமுடியும்.

நம் உத்திகள் நாம் தொழில் செய்யும் இடத்துக்கும், நம் வாடிக்கையாளர் இருக்கும் இடத்துக்கும் ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டு இருக்கவேண்டும். நம் இலக்குக்கு உட்பட்ட வாடிக்கையாளரின் தேவைகளையும் பிரச்னைகளையும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும்அவசியம்.

பொறியியல் துறையைப் பொறுத்தவரை புதுபுது உத்திகளை பரீட்சித்து பார்க்கலாம். பலருக்கும் ஒரே பொருளை நாம் விற்றாலும், பலர் தரும் ஒரே சேவையை நாம் செய்தாலும், நமக்கென தனித்துவத்தை சந்தையில் ஏற்படுத்தவேண்டியது மிக அவசியம். USP எனப்படும் Unique Selling Point அவசியம்.

இதற்கு சந்தையில் பல உதாரணங்களை சொல்ல முடியும். இட்லி நமக்குப் புதிதல்ல. இருப்பினும் சரவண பவன் முதன் முதலில் தொடங்கியபோது, அதே இட்லி வகையை சிறுசிறு தட்டுகளில் ஊற்றி கிண்ணத்தில் வைத்த சாம்பாரை தட்டு முழுவதும் நிரப்பி அதில் சிறு இட்லிகளை மிதக்கவிட்டு, 14 இட்லி என்று பெயரிட்டு அறிமுகப்படுத்தினர். அதுவரை எல்லோரும் விற்றுக்கொண்டு வந்த சாதாரண இட்லியை புதிய முறையில் இவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். இட்லி, தோசைக்கான மாவுப் பொட்டலங்கள் கடைகளில் விற்கப்படுவதும் ஓர் உத்திதான்.

பலவித பற்பசைகள் சந்தையில் விற்பனை ஆனாலும், இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் க்ளோஸ் அப்புக்கு தனி மவுசு உண்டு. காரணம் இது காதலர்களுக்கானது என்று சொல்லி அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்பெல்லாம் சராசரியாக அலுவலகம் செல்லும் அனைவருமே, தங்கள் மதிய உணவை கையோடு கொண்டு செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் மாம்ஸ் கிச்சன் என்ற நிறுவனத்தை நிறுவிய இரு இளைஞர்கள், மதிய உணவை அலுவலகங்களுக்கு கொண்டு சென்று கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினர். கணினித் துறையில் மென்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்காக பெரும் உணவுக்கூடங்களை நிறுவி காலை, மதிய, மாலை, இரவு உணவுகளை அளித்து வந்தன.

இருப்பினும், கடினமான செயல்திறனோடு வேலையில் ஈடுபட்டிருக்கும் இத்துறை இளைஞர்கள், ஒரேவிதமான சுவையுடன் கூடிய தங்கள் அலுவலக உணவுக்கு மாற்றுத் தேடினர். அவர்களுடைய மேஜைக்கே மாம்ஸ் கிச்சன் விதவிதமான உணவு வகைகளைக் கொண்டு வந்ததால் நல்ல வரவேற்பு பெற்றது.

ஒவ்வொரு பிரச்னையிலும் புதிய தேவைகள் ஒளிந்திருக்கின்றன. ஒவ்வொரு தேவையும் ஒரு வியாபார உத்தியை உள்ளடக்கியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 சமூக அக்கறையும் தொழில் முயற்சியும்

crylogo-wit-standupஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 22

இன்றைய சூழலில், பன்னாட்டு நிறுவனங்களும் சரி, நம் நாட்டு பெரிய நிறுவனங்களும் சரி, கிடைக்கும் லாபத்தை சமூக சேவைக்காகச் செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். இது உள்ளன்போடு செய்யப்படும் செயலா அல்லது கண்துடைப்பா என்பது அந்தந்த நிறுவனத்தை நடத்தும் இயக்குனர்களைப் பொறுத்தது. எனினும் சமூக அக்கறையோடு கூடிய தொழில் நிறுவனங்களாகவும் அதனை நடத்தும் தொழிலதிபர்களாகவும் அவர்கள் மாறக்கூடும். அல்லது அவ்வாறு மாற விரும்புபவர்களுக்கான உந்துசக்தியாகத் திகழமுடியும்.

சமூகத் தொழில்முனைவோர் என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் களைவதற்கு அல்லது மாற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கு தம்மால் இயன்றதைச் செய்ய முயற்சி செய்பவர்கள் இவர்கள்.

ஒரு தொழிலதிபர் எப்படி ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு நிறுவனத்தை ஏற்படுத்துகிறாரோ, அதே போல் சமூகத் தொழிலதிபர்களும், ஒரு சமூகப் பிரச்னையை மையமாகக் கொண்டு, அதற்கான தீர்வுகளை முறையாக ஏற்படுத்தி, அதையொரு தொழில் போல் நடைமுறைப்படுத்தி வெற்றி காண்கின்றனர். இதற்கு நம் நாட்டில் வினோபா பாவே அவர்களை ஒரு நல்ல உதாரணமாகக் கொள்ள முடியும். பூமி தானத் திட்டத்தை உருவாக்கி சுமார் 7 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை நிலமில்லாத ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்கி, சமுதாயத் தொழிலதிபர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தார். இதைப்போல் பல உதாரணங்களை நாம் கொள்ள முடியும். எனவே, சமூகத் தொழிலதிபர்களாக மாறுவதற்கு ஆண்களும் பெண்களும் முன்வர வேண்டும்.

இன்று அரசாங்கமும் ஏனைய பன்னாட்டு நிறுவனங்களும் சமூக அக்கறையுள்ள இளம் தொழிலதிபர்களை ஊக்குவிக்க ஆர்வமாக உள்ளனர். இத்தொழிலில் இறங்க விரும்புவோர், முதலில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், மூலதனம். அதாவது, நாணயம், நம்பிக்கை, நேர்மை.

இவற்றை அடிப்படையாக அல்லது வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டவர்கள், இந்தத் தொழிலுக்கு வரமுடியும். தாங்கள் வாழும் சமூகத்தில் தங்களைச் சுற்றியுள்ள மக்களின் பிரச்னைகள், தேவைகள் போன்றவற்றை நுணுக்கமாகக் கவனிக்கவேண்டும். அடுத்து அத்தகைய பிரச்னைகளுக்கு அரசாங்கமோ அல்லது மற்ற இயக்கங்களோ என்ன செய்ய முன்வந்துள்ளது என்பதையும் நன்கு கவனிக்க வேண்டும். பின்பு அவற்றிலுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு புதிய வழிவகைகளைத் திட்டமிட வேண்டும். இதைப்போல் செய்தால் அப்பகுதி மக்களின் கவனத்தையும் பெரும் திட்டங்களிலுள்ள நிறுவனத்தின் கவனத்தையும் ஒருசேர ஈர்க்க முடியும்.

இந்நிலையில், சுயதொழில் செய்ய நினைப்பவர்கள், ஒவ்வொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளைத் திட்டவரைவாகத் தயார் செய்து இத்தகைய நிறுவனங்களை அணுகும்போது, அது ஒரு நல்ல சுயவேலை வாய்ப்பாக அமையும்.

இத்தகைய சுயத்தொழில் செய்ய நினைப்பவர்கள், நிர்வாகத்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக எளிமையாக அனைவருடனும் பழகவேண்டும். கிராம மற்றும் நகர்ப்புற அரசாங்க அதிகாரிகளோடு இணக்கமான முறையில் பேசி, வேண்டிய வேலைகளை முடித்துக் கொள்ளும் திறன் வேண்டும். பொறுமையும், ஒரு திட்டத்தை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்களை அவிழ்க்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மக்களின் மாறுபட்ட மனோபாவங்களை அறிந்து கொள்ளும் திறமையுள்ளவர்களாக இருக்கவேண்டும். அரசியல் தலையீடு இருந்தால், அதனால் வரக்கூடிய பிரச்னைகளையும் கையாளத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இத்திறமைகள் அனைத்தும் உள்ள நபர்களுக்கு சமுதாய தொழில் முனைவோராக ஆகும் வாய்ப்பு மிக அதிகம்.

ஒவ்வொரு திட்டத்தையும் (ப்ராஜெக்ட்) நடைமுறைப்படுத்துவதற்கு, இயக்குநர் பொறுப்பில் தனி நபர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் ஒரு தொழிலதிபருக்குரிய அத்தனை சுதந்தரத்தையும் பெற்று, அதே சமயம் அதற்குரிய வருமானத்தையும் ஈட்டலாம்.

இன்றளவும், திறமையான சில தொழிலதிபர்கள் இரண்டு அல்லது மூன்று திட்டங்களைக் கையாண்டு நல்ல பணம் சம்பாதிக்கின்றனர். எனவே சமூக நலனுள்ள தொழில்முனைவோருக்கு, பணத்தோடுகூடிய, அதே சமயத்தில் மனத்திருப்தியும் அளிக்கக்கூடிய தொழிலாக இது அமையும். இன்று பல அரசாங்கங்களும் உலகளவில் இத்தகைய சமுதாய தொழிலதிபர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில நேரங்களில் அரசாங்கம் இத்தகைய தொழிலதிபர்களுக்காக தனி அலுவலகம் அமைத்துக் கொடுத்து, பணியில் உதவி செய்வதற்கு ஆட்களையும் கொடுக்கும். இத்தொழிலில் இறங்குபவர்களுக்கு, அவர்கள் வாழும் இடங்களில் நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு. குடும்ப நலத்திட்டம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, முதியோர் கல்வி திட்டம், சுயவேலை வாய்ப்புத் திட்டம் ஆகிய பல திட்டங்களும் இத்தகைய சமுதாய தொழிலதிபர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. நேர்மையானவர்கள் இத்துறைக்கு வரவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டால் நாடு வளம் பெறும் .

ரிப்பன் கபூர் தன் ஆறு நண்பர்களோடு சேர்ந்து ரூ. 500/- முதலீட்டில் ஆரம்பித்த நிறுவனம் இகீஙு. இந்தத் தொழிலதிபருக்கு எதிர்காலத்தை நன்கு கணிக்கும் ஒரு வியாபார திறமை இருந்தது. அதனால்தான் இந்தியாவின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் 30 வருடங்களுக்கு மேலாக இன்றும் மிக நல்ல முறையில் நடந்து வருகிறது. இந்தியாவில் உருவான பல சமூக நிறுவனங்களைவிட இது மிகவும் வேகமாக வளர்ச்சி கண்டது. பல நல்ல உள்ளங்களின் ஆதரவைப் பெற்று மிகச் சிறப்பாக நடக்கிறது. மேற்படி இயக்குநரின் தீர்க்கதரிசனமே இதற்குக் காரணமாகும்.

முதலில் அவர்கள் வாழ்த்து அட்டைகளை, வீடு வீடாகச் சென்று, விற்று, நிதி திரட்டினர். பின்னர் பெரிய அலுவலகங்களை அணுகி, தங்களுடைய சமூக அக்கறையை எடுத்துரைத்து தங்கள் பணியை விரிவுப்படுத்தினர். கடந்த வருடம்வரை அதன் ஒரு நிறுவனராக இருந்த Ingrid Srimathi என்ற பெண்மணியின் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. வாழ்த்து அட்டைகளிலிருந்து இந்த நிறுவனம், பல பெரிய நிறுவனங்களோடு சேர்ந்து, பலவிதமான பொருட்களை விற்று வருகின்றனர். கைக் கடிகாரங்கள், கைப்பைகள் போன்றவை மிகவும் பிரபலமானவை. டைட்டன், பி அண்ட் ஜி, சிட்டி கார்ப்பரேஷன் ஆகிய பெரும் நிறுவனங்கள் க்ரைக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

படம் காட்டினால் பணம்

photo_slideshow_pptஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 23

நிகழ்ச்சிகள், விழாக்கள் குறித்த மக்களின் கண்ணோட்டம் வெகுவாக மாறியிருக்கிறது. ஒரு எளிய பிறந்த நாள் விழாகூட பலருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு கொண்டாட்ட அனுபவமாக இருக்கவேண்டும் என்று பலர் இன்று விரும்புகிறார்கள். நிறுவனங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு புதிய தயாரிப்பு அல்லது சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றால் அது விமரிசையாக, பலருடைய கவனத்தைக் கவரும் வகையில் இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவது மிகவும் கடினமானது.

இந்தச் சூழலில்தான், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எனப்படும் தொழில் வாய்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துறையில் ஈடுபட விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, நல்ல பேச்சுத் திறமை வேண்டும். சோஷியல் நெட்வொர்கிங் எனப்படும் சமூக தொடர்புகளை நல்லவிதமாக ஏற்படுத்திக்கொள்ளும் திறன் வேண்டும்.

சினிமா துறை (ஒலிநாடா வெளியீடு), கல்லூரி, பள்ளி ஆண்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டு விழாக்கள், திருமணம், விளையாட்டுப் போட்டிகள், கோவில் விழாக்கள், சமூக ஆர்வலர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் என்று பலதரப்பட்ட வாய்ப்புகள் கொடடிக்கிடக்கின்றன.

முதலில் ஒரு பெயரைப் பதிவு செய்து நிறுவனமாக உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். சிறுசிறு நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்தவேண்டும். மக்கள் தொடர்புகளை அதிகப்படுத்திக் கொண்டே வரவேண்டும். எங்கே, எந்த இடத்தில், எந்தப் பொருள், சேவை கிடைக்கும் போன்ற தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். இணையம் இதற்குக் கைகொடுக்கும்.
எந்தெந்த நிகழ்ச்சிகள் எங்கெங்கே நடக்கவிருக்கிறது போன்ற தகவல்களை சிறிது சிறிதாகச் சேகரிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை நடத்த நினைப்பவரை தொடர்புக்கொண்டு, உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு வடிவம் இருக்கும். நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கென்று பிரத்தியேக குணங்கள், ரசனைகள் இருக்கும். இவற்றை நன்கு அறிந்துவைத்துக்கொண்ட பிறகே நிகழ்ச்சிக்கான திட்டமிடல்களைத் தொடங்கவேண்டும். அதே போல், நிகழ்ச்சி நடத்த இருப்பவரின் பட்ஜெட் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒரு சிலர் விழாக்கள் எளிமையாகவும் நளினமாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவர். வேறு சிலரோ நல்ல ஆடம்பரத்துடன் விழா நடைபெறவேண்டுமென்று விருப்பப்படுவர். இடத்துக்கு ஏற்ப, நீங்கள் அளிக்கபோகும் சேவைகளைப் பகுதிவாரியாகப் பிரித்துக்கொண்டு பணியாற்றவேண்டும்.

நிகழ்ச்சியை நடத்துவதற்கு நல்ல கற்பனை வளம் தேவை. நிகழ்ச்சி நடக்கவிருக்கும் அரங்கம், வரும் விருந்தாளிகளின் எண்ணிக்கை போன்றவற்றை மனதில் கொண்டு முடிவு செய்ய வேண்டும். உணவு வழங்கப்படும் நிகழ்ச்சியாக இருப்பின் எத்தகைய உணவு, அதில் பரிமாறப்படும் வகைகள் என்னென்ன ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

குழந்தைகள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில், குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், பரிசுகள் என்று பலவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். நுழைவு வாயில் அலங்காரம், மேடை அலங்காரம், அரங்க அமைப்பு, விழா அழைப்பிதழ், நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்கும் நபர்கள் என்று ஒவ்வொன்றையும் கவனத்தோடு முடிவு செய்ய வேண்டும்.

பல நபர்களை ஒருங்கிணைப்பதன் மூலமே ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடியும் என்பதால் பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களுடைய குணாதிசயங்களையும் அறிந்து கொள்ளவேண்டும். மதம் மற்றும் சமூகத் தொடர்பான நிகழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில், மற்றவர்கள் மனம் புண்படாதவாறு நிகழ்ச்சி நிரலை அமைத்தல் மிக அவசியம்.

உதாரணத்துக்கு, ஒரு திருமண நிகழ்ச்சியாக அல்லது பிறந்த நாள் விழாவாக இருக்கும் பட்சத்தில், அதை நடத்துபவரின் விருந்தாளிகளில் சைவம் உண்பவர்களும் அசைவம் உண்பவர்களும் இருப்பார்கள். அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தனித்தனியே ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

நிகழ்ச்சி நடப்பதற்கு முதல் நாளோ அல்லது நடக்கும்போதோ ஒருசில தடைகள் உருவாகலாம். குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்த்த பொருள்கள் வந்து சேராமல் இருக்கலாம். அல்லது தகுந்த நபர்கள் ஒரு வேலையைச் செய்வதற்கு கிடைக்காமல் போகலாம். எப்படி இருப்பினும், எந்த ஒரு சிக்கலிலும் மாற்று ஏற்பாடுகளை யோசிக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். அந்த மாற்று ஏற்பாடுகளை குறித்த நேரத்தில் சரியாக செய்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் மனம் கோணாதவாறு முடிக்க வேண்டும்.

எழுத்துப்பூர்வமாக தான் செய்யும் ஏற்பாட்டை நிகழ்ச்சி நடத்துபவரிடம் கொடுத்து அவர்களின் சம்மதத்தை எழுத்துப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதன்மூலம் விழாவை நடத்துபவருக்கும் நடத்த முன்வரும் தொழிலதிபருக்கும் கருத்து வேற்றுமையைத் தவிர்க்க முடியும். இத்தொழிலில் உள்ள ஒரு பெரிய அனுகூலம் என்னவென்றால், முதலில் நான்கைந்து நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தி கொடுத்துவிட்டால், ஏனைய நிகழ்ச்சிகள் தாமாகவே தேடிவரும். நிறைவடைந்த வாடிக்கையாளர்களே மக்கள் தொடர்பு அதிகாரிகளாக மாறிவிடுவார்கள்.

ஒரு விழா சிறப்பாக நடைபெறும்போது, விருந்தாளிகளின் கவனத்தைக் கவர்ந்துவிட்டால் யார் இதை நடத்துவது என்று விசாரிதது நிச்சயம் உங்களைத் தேடி அவர்களே வருவார்கள். பெரும் செல்வந்தர்களின் வீட்டில் நிகழ்ச்சிகளும் கேளிக்கை விருந்துகளும் எப்போதும் நடந்துகொண்டே இருக்கும்.

0

கணினி தொழில்நுட்பத்திலும், கணினி மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் டாகுமெண்ட் ரைட்டிங் எனப்படும் தொழில் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்று பல சிறிய/பெரிய நிறுவனங்கள் தங்களைப் பற்றி குறுந்தகடு அல்லது டாகுமெண்டரி படம் உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

விற்பனைப் பிரிவு அதிகாரிகளை வைத்துக்கொண்டு பல மணி நேரம் தங்கள் நிறுவனத்தைப் பற்றியும், தாங்கள் விற்பனை செய்யும் பொருள்களைப் பற்றி பேசுவதை விட, PPT எனப்படும் பவர் பாயிண்ட் பிரஸென்டேஷன் மூலம் பல வாடிக்கையாளரைக் கவரமுடியும்.
வேண்டிய கருத்துக்களை நறுக்கென்று, எளிமையாக ஆனால் புதுமையாக எடுத்துச் சொல்ல இப்படிப்பட்ட முறைகள் பெரிதும் பயன்படுகின்றன. சுயதொழில் செய்ய நினைப்போர் கற்பனைத்திறன் உள்ளவர்களாக இருந்தால் இத்தொழிலில் மிக நல்ல முறையில் இறங்க முடியும்.

சிறு முதலீட்டில் இத்தொழிலை ஆரம்பிக்க முடியும் என்பது இதன் மிகப்பெரிய பலமாகும். விளம்பரங்களுக்கான வாசகங்களை எழுதுதல், விளம்பரப் படங்களுக்கான உட்கருத்துகளை வடிவமைத்தல் போன்றவையும் சுயத் தொழிலுக்கு ஏற்றவையே. அதேபோல் பல நிறுவனங்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை அந்த நிறுவனம் கடந்து வந்த பாதை, சந்தித்த சவால்கள், பெற்ற விருதுகள், தொழிலில் செய்த சாதனைகள் போன்றவற்றை ஒரு திரைப்படத்துக்குரிய நேர்த்தியோடு, வடிவமைக்க முன்வந்தால் அதுவும் நல்ல தொழிலாக அமையும்.

இத்தொழிலில் இறங்குவோர்க்கு மொழிகளின் ஆளுமை, நல்ல தேர்ச்சி போன்றவை மிக அவசியம். இதுவும் மக்கள் தொடர்புடைய தொழிலென்பதால், மக்களின் உணர்வுகளை, விருப்பங்களை, ரசனைகளை எடைபோடத் தெரியவேண்டும். எளிதாக மாநில எல்லைகளைத் தாண்டி நாட்டின் எல்லைகளைத் தாண்டித் தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்புகளும் மிக அதிகம். மேலும் செல்வத்தோடு சேர்த்து பெரும் புகழும் உங்களை வந்தடையும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 டர்கிஷ் காபி

turkishcoffeebackgroundஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 24

பெண்களும் சுயதொழிலும் என்ற தலைப்பில் இரண்டு சர்வதேச கருத்தரங்குகளில் கலந்துகொள்வதற்காக முதல் முறையாக அமெரிக்கா சென்றிருந்தேன். உலகின் பல பாகங்களில் இருந்தும் தொழில்முனைவோர் திரண்டிருந்தனர். நானும் என் தோழி ஒருவரும் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தோம். கருத்தரங்கில் ஓர் அமர்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த ஒரு பெண்மணி வெளிப்படுத்திய கருத்து இது. ஆண்கள் சமைத்தால் சமையல் மேடையை சுத்தமே செய்வதில்லை என்றும், பாத்திரங்களிலிருந்து கரண்டிகளை வெளியில் எடுத்து, பின் அவற்றை மூடி ஃப்ரிட்ஜில் வைக்காமல் கரண்டிகளோடு உள்ளே வைப்பார்கள். துணி மாற்றும்பொழுது அல்லது குளிக்கச் செல்லும் பொழுது, பயன்படுத்திய ஆடைகளை அதற்குரிய கூடையிலோ வாஷிங் மெஷினிலோ போடுவதில்லை.

பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண்கள் இந்தக் கருத்தை ஆமோதித்தார்கள். தங்கள் வீட்டிலும் இப்படித்தான் நடக்கிறது என்றார்கள். இதை ஊன்றி கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். ஆண்களின் மனோபாவம் இனம், மொழி, மதம் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் ஒரே மாதிரியாக இருக்கிறது. பெண்களின் எதிர்பார்ப்புகளும் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கிறது. இது ஒரு முக்கியமான விஷயம் அல்லவா?

வெளிநாட்டு பயணங்களின் பொழுதோ, நாம் அயல் நாட்டவரோடு வியாபாரம் பேசும்பொழுதோ அல்லது உணவருந்தும் வேளைகளிலோ அவர்களுடைய பொதுவான கலாச்சாரத்தை நாம் அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

உதாரணத்துக்கு நான் துருக்கி நாட்டிலிருந்து மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதற்காக அந்த நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லுக்குச் சிலமுறை பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதே போல் கொரியாவின் தலைநகரான சியோலுக்கும் போக வேண்டியிருந்தது. துருக்கி நாட்டில் மரியாதை நிமித்தமாக டர்கிஷ் காபி எனப்படும் ஒரு பானத்தை கொடுத்தார்கள். காபி என்றதும் நானும் இயல்பாக அதை சுவைத்தேன். ஆனால் அது மிகவும் ஸ்ட்ராங்காக இருந்தது. ஒரு சில துளிகள் அருந்துவதேகூட கடினமாக இருந்தது.

வேண்டாம் என்று மறுப்பது மரியாதைக் குறைவான விஷயம். பண்டைய துருக்கியில் மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்த வகை காபி பயன்பட்டிருக்கிறது. யார் வேகமாக குடிக்கிறார்களோ அவரையே மணமகன் தேர்வு செய்து வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பழக்க வழக்கங்களைத் தெரிந்துவைத்துக்கொள்வது தொழில் முனைவோருக்கு அவசியம். எங்கே சைவம், எங்கே அசைவம்? பிறர் மனம் புண்படாதபடி நம் உணவு வழக்கத்தைத் தொடர்வது எப்படி? சைவம் மட்டுமே உண்ணும் நான், ஊர்வன, பறப்பன, மிதப்பன எல்லாவற்றையும் கடித்து ருசித்துச் சாப்பிடுபவர்களுக்கு அருகில் என் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இயல்பாக இருக்க நேர்ந்ததை இங்கே நினைத்துப் பார்த்துக்கொள்கிறேன்.

இருக்கும் இடத்துக்குத் தகுந்தபடி நடந்துகொள்வது முக்கியம். அயல்நாட்டுச் சந்திப்புகளில் நேரம் தவறாமை மிக மிக முக்கியம். வியாபாரச் சந்திப்புகளின் பொழுது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எதுவும் பேசக்கூடாது. ஃபார்மல் டைம், இன்ஃபார்மல் டைம் போன்ற பிரிவுகள் அங்கே உள்ளன. வியாபாரம் தவிர்த்த சந்திப்புகளில் மட்டுமே தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதுவும் பொதுவான சில விஷயங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்.

வியாபார ஒப்பந்தங்கள் முடிந்த பின்பு அவர்களை விருந்துக்கு அழைக்கலாம். நம் நாட்டை நினைவுபடுத்தும் ஒரு சில பரிசுப் பொருள்கள் கொடுப்பது சிறப்பு. எந்தவொரு நாட்டுக்குச் சென்றாலும், வியாபார நோக்கம் நிறைவேறிய பிறகே சுற்றிப்பார்க்கும் படலம் மேற்கொள்ளவேண்டும். இது மிகவும் முக்கியமானது.

0

செல்வத்தின் விதிகளுக்குத் திரும்புவோம். நமது முந்தைய தலைமுறையினர், ஈட்டும் பணம் முழுவதையும் தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காகச் செலவு செய்து, வாழ்ந்து முடித்தனர். பெரும்பாலான குடும்பங்களில் ஒருவர் மட்டும் பணம் ஈட்டுபவராக இருப்பார். தங்கள் ஆசைகளை முதன்மைப்படுத்தி வாழாமல், தங்களுக்கென்று விருப்பங்களை வைத்துக் கொள்ளாமல், எதையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்தனர்.

அதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் ஈட்டும் பணத்தின் ஒரு பகுதியை தங்களுக்காகச் செலவு செய்தனர். வருமானத்தில் ஒரு பகுதி சினிமா, உடைகள், ஹோட்டல் ஆகியவற்றுக்குச் செலவு செய்யப்பட்டன. தான் சம்பாதிப்பதைச் சேமிக்க தனக்கும் உரிமை உண்டு என்று அவர்கள் நினைத்தனர்.

இதற்கு அடுத்த தலைமுறை அதாவது இன்றைய தலைமுறை, நான் சம்பாதிப்பது நான் மகிர்ச்சியாக இருப்பதற்கே என்று கருதுகின்றனர். பணம் நீராகச் செலவழிக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. கேளிக்கைக்கான சாத்தியங்கள் மிகவும் விரிவடைந்திருக்கின்றன. கம்ப்யூட்டர், ஸ்மார்ட் ஃபோன், பைக், கார் என்று வாங்கவேண்டிய சாதனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட தலைமுறைக்குத்தான் இன்றைய வியாபாரிகளும் தொழில்முனைவோரும் சர்வீஸ் செய்துகொண்டிருக்கிறார்கள். விதவிதமான விளம்பரங்கள்மூலம் இவர்கள் இளைஞர்களை ஈர்க்கிறார்கள்.

தனி மனிதனின் சமூக மதிப்பு பணத்தைக் கொண்டு மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதை நாம் மறுக்கக்கூடாது. தனிநபர் அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி போன்ற அம்சங்களும் முக்கியமானவை. ஒருவன் மேலும் மேலும் சம்பாதித்துக்கொண்டே போகலாம். அவன் வாழும் சமூகம் சீர்கெட்டதாக இருந்தால் அவனால் தன் செல்வத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது.

இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் பகிர்ந்து வாழ்பவர்களாக இல்லை. மத்திய தர, கீழ் மத்தியதர குடும்பங்களில் ஒருவர் அல்லது இருவர் என்று சிறு குடும்பங்களாக மாறிவிட்டது. நான், எனது, என்னுடைய பொருள்கள் என்றுதான் பெரும்பாலானோர் சிந்திக்கிறார்கள். இந்தக் கண்ணோட்டம் சமுதாய வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பர மோகம், வறட்டுத்தனமான கௌரவம் ஆகியவற்றால் கடன்,மேலும் கடன் என்று பலர் நிம்மதியிழந்து வருகிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 25

இன்று மத்திய, மாநில அரசுகள் குறுந்தொழில் வளர்ச்சிக்குப் பலவாறான சலுகைகள் அளிக்கின்றன. இருந்தாலும், இன்றைய சூழலில் சுயதொழில் செய்ய யார் முன்வருகிறார்கள்? குறிப்பாக பெண்கள் முன்வருகிறார்களா? இல்லை என்றே பதிலளிக்கவேண்டியிருக்கிறது. காரணம், இன்றும் அரசாங்கச் சூழல் சிறுதொழிலுக்கு அனுகூலமாக இல்லை.

உதாரணத்துக்கு வங்கிகளை எடுத்துக்கொள்வோம். சுயதொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றனவா? பெரும்பாலான வங்கி அதிகாரிகள் கடன் கொடுக்கத் தயங்குகிறார்கள் என்பதே உண்மை. ஒருவேளை கடன் கொடுத்து அது திரும்பி வராமல் போனால் பதில் சொல்லியாகவேண்டும் என்னும் எண்ணத்தில் கடன் கொடுப்பதை இவர்கள் தவிர்க்கின்றனர். வங்கிக் கிளை மேலாளர்களுக்கு தெளிவான வழிமுறைகளையும் 4_8விதிகளையும் அரசாங்கம் முதலில் நிர்ணயிக்க வேண்டும்.

நேர்மாறாக, ஒரு சில வங்கி அதிகாரிகள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சிபாரிசோடு வருபவர்களுக்கும் முன்னுரிமை அளித்து, தகுதியில்லா நபர்களுக்கும் கடன் கொடுக்கின்றனர். அசையாச் சொத்துகள் இல்லாத நபர்களுக்கும் கடன் கொடுப்பதற்கு விதிமுறைகள் உள்ளன. ஆனால், அவற்றை பெரும்பாலும் நடைமுறைப்படுத்துவதில்லை. ஆகவே வங்கிக் கடன் குறித்த தெளிவான விதிமுறைகளை பொதுமக்கள் அறியுமாறு அரசு விளம்பரப்படுத்தவேண்டும். தகுதியுள்ள நபர்களுக்குக் கடன் கிடைப்பதையும் உறுதிசெய்யவேண்டும்.

குறுந்தொழில் அதிபர்களுக்கு திறமையான ஆள்கள் கிடைப்பது அரிதாகி கொண்டுவருகிறது. நல்ல நபர்களைத் தேர்வு செய்யும் பொழுது, பெரும் பணத்தை ஊதியமாக அளிக்க வேண்டி வருகிறது. இதற்கு அரசாங்கம் கீழ்க்கண்டவாறு செய்யலாம்.

  1. அரசாங்க வேலைக்கு பணி நியமனம் செய்யும்போது ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது அங்கீகரிக்கப்பட்ட, நேர்மையாக தொழில் செய்து கொண்டிருக்கும் குறுந்தொழில் அலுவலகங்களில் பணி புரிந்து இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.
  2. குறுந்தொழில், சிறுதொழில் பிரிவுகள் இன்னமும் மேலெழுந்தவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரூ.25 அல்லது 50 லட்சம் டர்ன்ஓவர் செய்யும் கம்பெனிகள் குறுந்தொழில் பிரிவிலும், 5 கோடி டர்ன்ஓவர் செய்யும் கம்பெனிகள் சிறுதொழிலாகவும் பிளாண்ட் அண்ட் மெஷினரியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. குறுந்தொழில் மற்றும் சிறுதொழில் பிரிவுகள் இன்னமும் விரிவாகப் பிரிக்கப்படவேண்டும். அதேபோல் வரிச்சலுகைகளும் இப்பொழுதைவிட அதிகமாக அளிக்கப்பட வேண்டும்.
  3. அரசு டெண்டர்களில் பங்கு பெறும்போது பலவித பெரிய ஆர்டர்களுக்கு அரசாங்கம் விதிக்கும் விதிமுறைகளில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், பங்குபெற முடியாமல் போகிறது. இதற்கு மாறாக மத்திய, மாநில அரசுகள், எந்த தொழிலையும் வாங்குவதற்கு முன், அதன் எண்ணிக்கை மற்றும் அளவுக்கு ஏற்றவாறு அதைப் பிரித்து, அந்தந்த பகுதியிலுள்ள சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்குப் பிரித்து கொடுக்க வழிவகை செய்தால் சிறுதொழில்கள் இன்னும் நன்கு வளரும்.

இன்று பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி அதிகம் செய்வதால் பொருள்களின் விலையை கணிசமான முறையில் குறைக்க முன்வந்துள்ளன. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களால் அவற்றோடு போட்டிப் போட முடியவில்லை.

பொதுமக்களும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனத்தைப் பற்றிய தங்களின் மதிப்பீட்டுகளை மாற்றிக் கொள்ள முன் வரவேண்டும். எந்த தொழில் நிறுவனமும், தொழிலில் நேர்மையோடு பெயர் பெற்று விளங்குமானால், அவற்றின் பொருள்களுக்கு ஆதரவு அளிக்க மக்கள் முன் வர வேண்டும்.

அடுத்ததாக, குறு மற்றும் சிறு தொழில்களுக்கு பெரும்பாலும் விளம்பரம் அளிப்பதற்கு பணப்பற்றாக்குறை இருக்கும். ஆதலால் அரசாங்கம் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக விளம்பரம் செய்வதற்கு அந்த நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இந்த நிறுவனங்கள் தங்கள் விளம்பர வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதன் மூலம் ஈட்டியிருக்க வேண்டும்.
இதை மேம்போக்காகச் செய்யாமல் கட்டாயமாக்கினால் நலிந்துகொண்டிருக்கும் சிறு மற்றும் குறுந்தொழிலின் சந்தை விரிவடையும். இதனால் அத்தொழில்கள் வீழ்ச்சி அடையாமல் வளர்ச்சி அடையும்.

அடுத்ததாக குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, அரசாங்கம் சில சலுகைகளை அளிக்க முன்வரவேண்டும். இதன் மூலம் ஈஎஸ்ஐ மற்றும் பிஎஃப் உட்பிரிவுகளுக்குள் வராத குறுந்தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் நலன் காக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அந்தந்த நிறுவனங்களிலிருந்து அரசாங்கம் வசூலித்துக் கொள்ளலாம்.

குறுந்தொழில் அதிபர்களில் திறமையாகவும் நேர்மையாகவும் செயல்படும் நபர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கலாம். பொதுமக்களின் மத்தியில் அவர்களையும் அவரது நிறுவனப் பொருள்களையும் பிரபலப்படுத்தலாம். அரசாங்க விழாக்கள் மற்றும் அரசாங்கக் கண்காட்சிகள் போன்றவை நடக்கும்பொழுது, இந்தக் குறுந்தொழில் நிறுவனங்களின் பொருள்களை அத்தகைய இடங்களில் விளம்பரப்படுத்துவதற்கு அனுமதிக்கலாம்.
அரசாங்கமே, பல கண்காட்சிகளை வெவ்வேறு பிரிவுகளுக்காக நடத்தலாம். இந்தியாவை பொருத்தமட்டில் முறையாகப் பதிவு செய்து சரியாக வரிகள் செலுத்தி, நிலையாக குறு மற்றும் சிறுதொழிலை நடத்தும் நிறுவனங்கள் இன்னும் குறைவாகவே உள்ளது. (Organised SME Sector) மாறாக, சில விசிடிங் கார்ட்டுகள் மற்றும் லெட்டர் பேடுகள், ஒரு கைப்பேசி எண் இவற்றைக் கொண்டு சிறு தொழில் செய்வதாக பாவனை செய்து கொண்டிருக்கும் நபர்களே அதிகம். அங்கீகாரம் இல்லாமல் தொழில் நடத்தும் நிறுவனங்களால் அரசாங்கத்துக்கு எத்தனையோ கோடி வருமான இழப்பு ஏற்படுகிறது.

என் அனுபவத்தில் பல குறுந்தொழில் அதிபர்கள் எந்த வித பதிவுகளுமின்றி கோடிக்கணக்கில் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். கருப்பு பணப்புழக்கத்தை நாட்டில் அதிகப்படுத்துவதில் இதைப் போன்ற நபர்களின் பங்கு கணிசமானது. இவர்களை அடையாளம் கண்டு, சட்டத்தை கடுமையாக்கி தண்டனைக்கு உட்படுத்தினாலன்றி, இந்தப் பிரச்னை முடிவுக்கு வராது. இந்தச் சூழலில் நாட்டுப்பற்றோடு சமுதாய நோக்கோடு, தானும் வாழ்ந்து பிறரும் வாழ, தொழிலின் துன்பங்களை ஏற்க முன் வரும் நபர்கள் மனச்சோர்வு அடைகிறார்கள்.

பெரும்பாலான சிறு தொழிலதிபர்களுக்கு, போடும் முதலீட்டை திருப்பி எடுக்கவே நெடுங்காலமாகிறது. இத்தகைய நிகழ்கால அச்சுறுத்தலால், தொழில் செய்ய திறமையுள்ள பல தனி நபர்கள் முடங்கிப் போகின்றனர். அதனால் அரசாங்கம் முழு வீச்சாக நடைமுறை சிக்கல்களைக் களைந்து, இன்னும் விழிப்புணர்ச்சியோடு, யதார்த்தமான திட்டங்களைத் தீட்டி குறுந்தொழில் மற்றும் சிறுதொழில் உயிர்ப்புடன் இருப்பதற்கு முனையவில்லையென்றால், இன்னும் சில வருடங்களில், திறமையிருந்தும், தொழில் செய்ய முன்வருவது நின்றுவிடும்.

மக்கள்தொகை பெருக்கமுள்ள இந்தியா போன்ற நாடுகளில், குறுந்தொழில்களின் அழிவு பெரிய பொருளாதாரச் சிக்கல்களையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் ஏற்படுத்தும். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளோ, ஒரு தொழிலின் தன்மை, அதற்குரிய சந்தை போன்றவற்றை நுணுக்கத்தோடு ஆராய்வதை விட்டுவிட்டு, பிணையாக கொடுப்பதற்கு அசையா சொத்து இருக்கும் பட்சத்தில் மட்டும் கடன் கொடுக்க முன் வருகின்றனர். இது ஒரு நகைப்புக்குரிய விஷயமாகும். அதாவது தொழில் உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் கவனத்தைச் செலுத்தாமல், அது தொய்வடைந்து, தோல்வியடையும்போது தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள அசையாச் சொத்துக்கள் உதவும் என்ற தவறான கண்ணோட்டத்தோடு வேலை செய்கின்றனர்.

உதாரணமாக, கடன் கொடுக்கும் சிறுதொழில்கள் எல்லாம் தோல்வியடையும்போது, அவர்கள் கொடுத்த அசையாச் சொத்துகளை அரசாங்கம் விற்று பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு தொழிலதிபரின் தோல்வியின் மூலம், பல புதிய தொழிலதிபர்களை உருவாக்கமுடியாது. புதிய தொழில்கள் உருவாகாத பட்சத்தில், திறமையுள்ள தொழிலதிபர்களின் தொழில்கள் நலிந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். மிக முக்கியமாக அரசாங்கம் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கலந்தாய்வுக் கூட்டங்களை குறைந்தது மாதத்துக்கு ஒரு முறையாவது, அந்தந்த பகுதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்து, வல்லுனர்களை அழைத்து, தொழிலதிபர்களுடன் உரையாடல் செய்தால், தொழிலதிபர்களின் நடைமுறை சிக்கல்களை அறிந்துக் கொள்ள முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கடன் கிடைக்கிறது

Personal_Loanஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 26

சிறு தொழில் அதிபர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இப்பொழுது நாம் சொல்லும் செய்தி, இருபாலருக்கும் பொருந்தும். நல்ல கல்விப் பின்னணி மற்றும் அனுபவத்தோடு தொழிலை மேற்கொள்பவர்கள் முதல் வகை. தகுந்த முன்னேற்பாடுகளோ பின்னணியோ இன்றி சுயதொழிலில் இறங்குபவர்கள் இரண்டாவது வகை. முந்தைய பிரிவினரைவிட இவர்களே அதிகம் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவ்வாறான சிக்கல்களைத் தகுந்த வல்லுனர்களைக் கொண்டு இவர்கள் நிவர்த்தி செய்துகொள்கிறார்கள். தவறான வழிகாட்டுதல்கள் அமைந்துவிட்டால் இவர்களால் பிரச்னையில் இருந்து மீளமுடியாமல் போய்விடுகிறது. இவர்களை மனத்தில் கொண்டு வழிகாட்டும் திறன் கொண்டவர்கள் நிரம்பிய ஓர் ஆய்வுக்கூடங்களை அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும்.

குறுந்தொழில் அதிபர்கள் பெரும்பாலும், சுற்றுப்புறச்சூழலைப் பற்றியோ, தங்கள் நிறுவனங்களால், தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குச் சங்கடங்கள் ஏற்படுவது பற்றியோ கவலைப்படுவதில்லை என்று ஒரு பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. இதைக் குறைப்பதற்கு குறைந்த செலவில் எரிபொருள் சேமிப்பதற்கும், சுற்றுபுறச்சூழலைப் பாதுகாப்பதற்கும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதற்கும் வழிமுறைகளை ஏற்படுத்தி, அவர்களை அதை செயல்படுத்துமாறு கட்டாயமாக்கினால், தொழில் வளர்ச்சியோடு சமுதாயமும் பாதுகாக்கப்படும்.

இதன் மூலம் இன்னொரு அனுகூலமும் உண்டு. சுயதொழிலை தீவிரமாக கையாளாமல் மேம்போக்காக அதில் இறங்குபவர்களுக்கு தெளிவான ஒரு செய்தியை அளிக்கமுடிகிறது. கடுமையான சட்டத்திட்டங்களைக் கருத்தில் கொண்டு கவனமாகத் தொழிலைத் தொடரவேண்டும். அல்லது, விலகிக்கொள்ளவேண்டும்.

பல துறைகளில் பல பொருள்களுக்கு வரிவிகித சதவிகிதங்கள் தாறுமாறாக இருக்கின்றன. நமது நாட்டில் பெரும் நிறுவனங்கள் பட்ஜெட் வருவதற்கு முன்பே வரிகளின் போக்கைத் தீர்மானம் செய்யுமளவுக்குத் திறமை படைத்தவை. ஆனால் இந்த விதத்தில் இன்னும் குறுந்தொழிலதிபர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குக்கூடப் போராடவேண்டியுள்ளது. ஆகவே அரசாங்கம் கலந்தாய்வுக் கூட்டங்கள் மூலம், நேர்மையான அதிகாரிகளை தொழிலதிபர்கள் முன்நிறுத்தி, அவர்களுடைய தொழில் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முயற்சிக்கலாம்.

பட்ஜெட் தொடர்களுக்கு முன்பு நேர்மையான குறுந்தொழில், சிறுதொழில் அதிபர்களை வைத்து கூட்டம் நடத்தி கருத்துக்களை அறிந்துக்கொள்ள அரசு முயற்சி செய்யவேண்டும். மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஈஎஸ்ஐ, பிஎஃப் போன்ற சலுகைகளுக்கு உள்ள விதிமுறைகள் இன்னும் குறுந்தொழிலதிபர்களுக்கு சாதகமாக இல்லை என்றே கூறலாம். ஒரு குறுந்தொழிலதிபர் 10 பணியாளர்களைக் கொண்டு நிறுவனம் நடத்தினால் ஈஎஸ்ஐ பிரிவுக்குள் அவர் வந்துவிடுவார் என்று விதிமுறை இருக்கிறது. அதனால், சிலர் 5 அல்லது 6 நபர்களைக் கொண்டே தங்கள் தொழிலை நடத்துகின்றனர். சில சமயங்களில் தொழிலுக்கு வேண்டிய ஆர்டர்கள் அதிகமாகும்போது, அதிகப் பணியாளர்களை நியமனம் செய்வர். அதனால் சிறு தொழில் நிறுவனத்தின் சம்பளப் பட்டுவாடா தொகை அதிகமாகும். ஆனால் ஆர்டர்கள் குறையும் போது அதே பணியாளர்கள் நிறுவனத்துக்குச் சுமையாகிவிடுகிறார்கள். இதனால் அதிக அளவில் குறுந்தொழில் நிறுவனங்கள் ஈஎஸ்ஐ சலுகைகளை அளிப்பதற்கு யோசனை செய்கின்றனர். ஆனால் ஈஎஸ்ஐ சலுகை இல்லாததால் நல்ல பணியாளர்கள் வேலைக்குக் கிடைப்பதும் கடினமாக உள்ளது. இதற்கு மாறாக கீழ்க்கண்டவாறு செய்யலாம்.

ஒரு குறிப்பிட்ட குறுந்தொழில் நிறுவனம் தொடர்ந்து மூன்று வருடங்கள் அதிக டர்ன்ஓவர் காண்பித்தால், ஈஎஸ்ஐ பிரிவுக்குள் வருமாறு செய்யலாம். தொழில் தொய்வடையும் போது அதிலிருந்து விலக்கு அளிக்கவும், மீண்டும் அது வலுவடையும் போது ஈஎஸ்ஐயில் தன்னை உட்படுத்திக் கொள்ளவும் சட்டத்தில் இடமிருக்கவேண்டும். இது குறுந்தொழில் நிறுவனங்கள் சிறப்பாகப் பணியாற்றவும் நல்ல பணியாளர்களை வேலைக்கு அமர்த்த ஏதுவாகவும் அமையும். இதைப் போல பிஎஃப் பற்றிய விதிமுறைகளும் மாற்றியமைத்தால் நல்ல அங்கீகாரத்துடன் குறுந்தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

0

இன்னும் பெருமளவு பெண்கள் தொழில்முனைவோராக ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பொருளாதார ரீதியாக மட்டுமின்றி சமூக ரீதியாகவும் இந்தச் சம்பாத்தியம் அவர்களுக்குப் பல வழிகளில் உபயோகமாக இருக்கிறது. ஒருவேளை தனித்து செயல்படும் சூழல் உருவானாலும் இது அவர்களுக்குக் கைகொடுக்கும். எனவே பெண்களை அதிக எண்ணிக்கையில் சுயதொழிலில் ஈடுபட வைக்கவேண்டும். அதற்கான உந்துதலை அவர்களுக்கு அளிக்கவேண்டும். வியாபார நுணுக்கங்களையும் பணத்தைக் கையாளும் முறைகளையும் சொல்லித்தர வேண்டும்.

குடும்பத்தினரின் ஊக்குவிப்பு முதன்மையான தேவை. இரண்டாவது, வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளின் உதவி. தொழில்முனைவோராக வளரத் துடிக்கும் பெண்களுக்கு துணைபுரிய வங்கிகள் முன்வரவேண்டும்.

இனி பெண்களுக்குத் தற்போது கிடைக்கும் வங்கிகளின் ஆதரவு குறித்து பார்ப்போம்.

குறு மற்றும் சிறுதொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு பெருமளவில் ஒவ்வொரு மாநிலமும் பணஉதவி செய்வதற்கு தயாராக இருக்கின்றன. தமிழ்நாட்டில் கிராம விடியல் என்ற குறுந்தொழிலுக்குகான நிதி நிறுவனம் பிற சமூக நிறுவனங்களோடு இணைந்து கடன் உதவி செய்கிறது. இது தனிநபர் கடனாகும். இதற்கு கியாரண்டி தேவையில்லை. ஆனால் விண்ணப்பத்தில் எல்லா விதமான தகவல்களும் விரிவாக அளிக்கப்படவேண்டும். கடன் உதவியின் அளவு சுமார் 30 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் வரை இருக்கும். இதுதவிர தேனா வங்கி பெரும்பாலான குறுந்தொழிலுக்கு நிதி உதவி அளிக்கின்றது.

ஸ்ரீ சக்தி என்ற பிரிவின் கீழ் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடனுதவி தொகை குறு மற்றும் சிறு தொழில்களுக்கு அளிக்கிறது. (http.//.www.statebankofindia.com).

பிரியதர்ஷனி என்ற பிரிவின்கீழ் பாங்க் ஆஃப் இந்தியா பெண் தொழில்முனைவோருக்கு சிறு மற்றும் குறுந்தொழில் தொடங்க உதவுகிறது. தொழிலுக்கான இயந்திரங்கள் வாங்க கடன் தொகை அளிக்கிறது. இதில் இரண்டு லட்சத்துக்கு மேல் கடனுதவி பெறுபவர்களுக்கு 1 சதவிகித வட்டி குறைப்புக் கிடைக்கிறது. இவ்வங்கியின் இணையதளத்துக்குச் (www.bankofindia.com) சென்று மேலும் விவரங்கள் அறியலாம்.

கனரா வங்கி கேன் மஹிலா (Canara Bank-Can Mahila) என்ற திட்டத்தின்கீழ் இல்லத்தரசிகள் முதல், பணிபுரியும் பெண்கள் மற்றும் சுயத்தொழில் செய்யும் பெண்களுக்குக் கடனுதவி அளிக்கிறது. வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் கணினி, தங்க ஆபரணங்கள் வரை வாங்கலாம். 18 முதல் 55 வயது வரையுள்ளவர்களுக்கு இந்தக் கடனுதவி அளிக்கப்படுகிறது. பணிபுரியும் பெண்கள் மற்றும் சுயதொழில் முனைவோருக்கு அவரது ஆண்டு வருமானம் 1.5 லட்சத்துக்குள் இருந்தால் ரூ.50,000 வரை கடனுதவி பெறலாம். வங்கியின் இணையதளம் (www.canarabank.in) ஆகும்.

விக்லங் மகிலா விகாஸ் யோஜனா என்ற திட்டத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, உடல் ஊனமுற்ற, மாற்றுத்திறன் பெற்ற பெண் தொழில்முனைவோருக்குக் கடனுதவி அளிக்கிறது. உடல் ஊனமுற்றவரின் குறைபாடுகளைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு மாற்றுத்திறனுக்கான பயிற்சி வழங்கி (Vocational Training) ரூ.25,-000 வரை புதிய தொழில் முயற்சியில் இறங்க உதவி செய்கிறது. இது குறித்து விபரங்கள் வங்கியின் கீழ்கண்ட இணையதளத்தில் காணலாம். (www.unionbankofindia.co.in)

யூகோ வங்கியின் நாரி சக்தி என்ற திட்டத்தின் அடிப்படையில், பணிபுரியும் பெண்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. 5 வருடகாலங்களில் தவணை முறையில் கடனைத் திரும்ப செலுத்துவதிலும், வட்டியில் சில சலுகையும் வழங்குகிறது. வங்கியின் இணையதளம் www.ucobank.com.

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, ‘சென்ட் கல்யாணி’ என்ற திட்டத்தின் அடிப்படையில், பெண் தொழில்முனைவோருக்குக் கடனுதவி அளிக்கிறது. விவசாயம் உள்ளிட்ட தொழில்களுக்கும் வியாபாரம் மற்றும் தொழிற்கல்வி சார்ந்த பணிகளுக்கும் பெண் தொழில் முனைவோர்களை இந்த வங்கி இருகரம் நீட்டி வரவேற்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வாய்ப்புகள், மேலும் வாய்ப்புகள்

women-entrepreneurs-branding-mistakes1ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 27

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் கடன் உதவிகள் குறித்து இனி பார்ப்போம். உணவு விடுதி, நடமாடும் உணவு விடுதி, சுழல் முறையில் செயல்படும் நூலகம், ஆகியவற்றைத் தொடங்கி நடத்த விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு இந்த வங்கி கடனுதவி அளிக்கிறது.

மேலும், தொழிற்கல்வி சார்ந்த பணி, சுயதொழில் வகையில் தேர்ந்த நிபுணத்துவம் கொண்ட சிறந்த மருத்துவர், பொறியாளர், தணிக்கையாளர், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் கடன்  அளிக்கிறது. அதே போல், சில்லறை வணிகத்தில் ஈடுபடுவோருக்கும் உதவி கிடைக்கிறது.

குறுந்தொழில் மற்றும் கிராம குடிசைத் தொழில், கைத்தறி ஆடை தயாரிப்பு நெசவுத் தொழில், உணவு தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு ரூ.50,000 வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.

கிராமங்களில் விவசாயம் மற்றும் சார்புத்தொழில்கள், பயிர் வளர்ப்பு, மீன், தேனி, பட்டுப்பூச்சி வளர்ப்பு, தோட்டக்கலை, பூந்தோட்டங்கள் பராமரிப்பு மற்றும் விவசாய சார்புடைய தொழில்கள் செய்யும் தொழில்முனைவோருக்கு இந்த வங்கி கடனுதவி அளிக்கிறது.

அரசாங்கத் தரப்பில் வழங்கப்படும் மானியம் பெறவல்ல தொழில்களுக்கும் கடனுதவிகள் கிடைக்கப் பெறுகின்றன. இதற்கான முழு விவரங்களைக் கீழ்கண்ட இணையதளத்தின் வாயிலாக அறியலாம். (www.centralbankofindia.co.in)

0

ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் – ஓரியண்டல் மகிலாவிகாஸ் யோஜனா என்ற அமைப்பின் கீழ் பெண் தொழில்முனைவோருக்கு, ரூ. 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை 2 சதவிகித வட்டி குறைப்புடன் கடன் அளிக்கிறது. 10 லட்சத்துக்கு மேலும் கடனுதவி பெறலாம். தொழிலகங்கள் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு, 51% பங்குகள் இருக்கும்பட்சத்தில் மேற்கண்ட கடனுதவி பெறலாம். இணையதளம் : http//obcindia.co.in.

ஐசிஐசிஐ வங்கியின் விமன்ஸ் அக்கவுண்ட் என்ற திட்டத்தின்கீழ் பெண்கள் பயன் பெறவும் வாய்ப்புகள் உள்ளன. மேலதிக விவரங்களுக்கு : http://www.icicibank.com

0

உதவிகள் ஒரு பக்கம் இருக்க, நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம், தொழில் தொடங்குவதற்கு உண்மையிலேயே நமக்கு விருப்பமும் உத்தேவகமும் இருக்கிறதா என்பதுதான்.

பொதுவாக பெண்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வார்கள். அதிலும் இந்தியப் பெண்கள் தங்கள் திறமைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்களது குடும்பத்தினர் முன் வாயடைத்து அமைதி காப்பார்கள். அவர்களுடைய திறமை வெளியில் தெரியாது. குடும்பச் சூழலில் பெண்களின் பங்களிப்பு மிக அதிக அளவில் தேவைப்படுவதாலும், சமூகத்தின் எதிர்பார்ப்பும் அதை ஒட்டியே இருப்பதாலும், பெரும்பாலான பெண்கள் வீட்டுக்குள் அடங்கி இருக்கவேண்டிய நிலையே உள்ளது.

இந்தப் பின்னணியில், சுயதொழிலில் ஈடுபட முன்வரும் பெண்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். வாழ்க்கையில் அவ்வப்போது எழும் பிரச்னைகளுக்கு ஏற்ப, துணிச்சலுடன் தோல்வியின் பயமின்றி வெற்றியை நோக்கி நடைபோடுபவரா நீங்கள்? தனிப்பட்ட முறையில் சில பல நிகழ்வுகளுக்கு பொறுப்பு எடுத்துக் கொள்பவரா? செய்யும் காரியத்துக்கு ஏற்ப அதற்குரிய அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் உடையவரா? பொதுவாக எந்தவொரு சூழலிலும் இயல்பாக எழும் தடைகளை மீறி, நினைத்த காரியத்தை முழு முயற்சியோடு முடிப்பவரா? நிர்வாகத் திறமைப் பளிச்சிடும்படி செயல் திட்டம் வகுப்பவரா? உங்களை நம்பி ஒரு செயலில் இறங்குவீர்களா? அதற்கான துணிச்சலும் தன்னம்பிக்கையும் உங்களிடம் இருக்கிறதா?

மேற்கூறிய எல்லாவற்றுகும் உங்கள் உண்மையான பதில் ‘ஆம்’ என்றால் மட்டுமே நீங்கள் சுயதொழிலுக்கு ஏற்றவர்.

இனிவரும் காலங்களில் என்னென்ன தொழில் செய்தால் முன்னேற்றம் காண முடியும்?
இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வரை சுயதொழில் என்றால் சமையல் பொடி, ஊறுகாய், அப்பளம், தையல் என்றுதான் நினைப்பார்கள். இன்றளவும் இந்தத் துறைகளில் பெண்கள் ஈடுபட்டு வந்தபோதும், அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் இவற்றையும் கடந்து பெருமளவில் விரிவடைந்துள்ளன.

  • கணினிச் சார்ந்த சேவை பிரிவுகள்
  • கணினி வணிகம். இதில் ஏற்றுமதிக்கு அரிய வாய்ப்புகள் உள்ளன.
  • மல்டிமீடியா உள்ளிட்ட வரைகலை துறைகள்.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொருள்கள் உற்பத்தி.
  • ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்.
  • சுற்றுலாத் துறை.
  • பிளாஸ்டிக் மூலப்பொருள்களைக் கொண்டு தொழில் தொடங்குதல்.
  • குடிநீர் வழங்குதல் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவுதல்.
  • உணவு, காய்கறி போன்றவற்றைப் பதப்படுத்தும் தொழில்.
  • பூ அலங்காரம், வீட்டு அலங்காரம்.
  • மூலிகைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பொருள்களை விற்பனை செய்தல்.
  • கல்வி பயிற்சி மையங்களை நிறுவுதல்.
  • இயற்கை உரம் உற்பத்தி செய்தல்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

நம்மைச் சுற்றியுள்ள பிரச்னைகளும்கூட நமக்கான தொழில் வாய்ப்பை வழங்கக்கூடிய திறன் படைத்தவை.   ஒரு பெண் சுமாராகப் படித்தவராக இருந்தாலும், மனித தொடர்பு கலையில் தேர்ச்சி பெற்றிருந்தால் நல்லதொரு வாய்ப்பை அவரால் ஏற்படுத்திக்கொள்ளமுடியும். உதாரணத்துக்கு, வீட்டு வேலைக்கு ஆள்கள் அனுப்பும் சேவை மையம் தொடங்கலாம். இதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம்.

இதை ஒரு தொழிலாக செய்வது எப்படி? உதாரணமாக லட்சுமி என்ற பெண்மணி இதை தொடங்க நினைக்கிறார் என்றால் அவர் முதலில் அக்கம்பக்கத்து வீடுகளிலலும் சுற்றியுள்ள வீடுகளிலும் நல்ல நட்பை நாகரிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது, ஒவ்வொரு வளமுடைய நகர் பகுதிக்கு அருகிலும் அல்லது அதைச் சுற்றியும் வளமையில்லாத குடிசைப் பகுதிகளோ குடிசைமாற்று வாரியமோ இருப்பது இயல்பான ஒன்று.

சென்னை, மும்பை போன்ற பெரும் நகரங்களில் இதைக் கண்கூடாகப் பார்த்திருக்கலாம்.
லட்சுமி செய்ய வேண்டியது, அதைப் போன்ற குடிசைப் பகுதிகளிலும், குடிசைமாற்று வாரியங்களிலும் சரியான நபர்களை அடையாளம் காண்பது. பிறகு அவர்களைப் பணிக்கு அழைப்பது.  நுணுக்கமாக மனிதர்களை எடைபோட பழகிக் கொள்ளுதல் இதற்கு அவசியம். அருகிலுள்ள காவல் நிலைய உயர் அதிகாரிகளை தொடர்பில் கொண்டு, தன்னுடைய சேவை மையத்தின் நோக்கத்தையும், தான் வேலைக்கு அமர்த்தும் பெண்களின் பின்புலத்தையும் கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும்.

அதே போல் சமூகத்தில் பின் தங்கியுள்ள வேலைக்கு அமர்த்தும் பெண்களின் பாதுகாப்பையும் மனதில் கொண்டு, அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் வசதி படைத்தவர்களிடமும் பேச வேண்டும். அவர்களை மனித நேயத்தோடு நடத்துமாறு வற்புறுத்த வேண்டும். பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு முதலில் ஒரு சில நாட்கள், மனிதவள பயிற்சி அளிக்க வேண்டும். மாதம் ஒரு முறையாவது அவர்களைச் சந்தித்து அவர்கள் பிரச்சனைகளைக் கண்டறியவேண்டும். அதேப்போல் அவர்களைப் பணிக்கு அமர்த்தும் வீட்டுத் தலைவர்களையும் தலைவிகளையும் சந்தித்து, இவர்களின் பணி குறித்து ஏதேனும் அதிருப்தி உள்ளதா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

இதைப்போன்று நிர்வாக திறமையோடு செயல்பாட்டால் நிச்சயமாக இவரது சேவை மையம் ஒரு நல்ல நிறுவனமாக மாறும் வாய்ப்பு உண்டு. லட்சுமி இத்தொழில் மூலம், பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாது, சுற்றியுள்ள சமூகத்தின் தேவைக்கும் வழி வகுப்பவராக மாறுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 கணவனும் மனைவியும்

The successful agreementசுயதொழில் பற்றிய கருத்தரங்குகளில் பெருமளவில் கேட்கப்படும் ஒரு கேள்வி இது. கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தொழில் செய்யலாமா? அதன் சாதக பாதகங்கள் என்ன? மேடம், என் மனைவி வீட்டுல சும்மா சீரியல் பார்த்துக்கிட்டிருக்காங்க, அவளுக்கு ஏதாவது தொழில் கத்துக்கொடுங்க என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். பெண்களும் இதே போல் கேட்டிருக்கிறார்கள். நான் என் கணவனோடு இணைந்து தொழில் தொடங்கவேண்டுமா அல்லது தனியாகவே தொடங்கவேண்டுமா?

தொழில் என்பது என்னை பொறுத்தமட்டில் பெருமளவு அறிவு சம்பந்தப்பட்டது. மனிதர்களை எடைபோடவும் சந்தையைப் புரிந்துகொள்ளவும் முடிவுகள் எடுக்கவும் ஆற்றல் படைத்தவர்களே தொழிலில் இறங்கவேண்டும். குடும்பம் என்பது சற்று மாறுபட்ட அமைப்பு. உறவுகளிலும் உணர்வுகளிலும் உண்மை இருந்தால் போதுமானது. புத்திபூர்வமான அணுகுமுறை பல சமயங்களில் குடும்பச் சூழலை இயந்திரத்தனமாக மாற்றிவிடும் அபாயமும் உண்டு.

சமீபத்தில் பத்திரிகையில் படித்த ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. அதிகமான குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டும் மனைவியும், அதிகமாக நிறைகளை மட்டுமே சுட்டிக் காட்டும் நட்பும், ஒருவனை என்றுமே உயர்த்துவதில்லை. தொழிலென்று வரும்போது, கணவனோ மனைவியோ தங்களது பலம் அல்லது பலவீனம் இரண்டையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

தொழிலை வழி நடத்திச் செல்லும் திறமை யாருக்கு அதிகம் என்பதை முதலில் கண்டறியவேண்டும். தலைமைப் பண்பு அதிகமுள்ள அந்த நபரை இன்னொருவர் ஏற்று அங்கீகரிக்கவேண்டும். இதில் ஆண், பெண் பேதம் கிடையாது. ஒருவேளை,  மனைவி தலைமேற்கும் பட்சத்தில், அவரை முன்னிலைப்படுத்தி தொழிலைக் கொண்டு போவதில் கணவனுக்கு எந்தவித ஈகோவும் இருக்கக்கூடாது. நட்புணர்வுடனும் ஆழ்ந்த புரிதலுடனும் இருவரும் ஒன்றிணைந்து இயங்கவேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் அங்கே தொழில் வளர்ச்சி  பெருகும்.

தொழில் நிமித்தமாகத் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அத்தகைய சமயங்களில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கவேண்டியது அவசியம். ஒவ்வொரு தொழிலும், தட்பவெப்ப மாறுதல்களைப் போல் மாறுதலுக்கு உட்பட்டதே. வளமையான வசந்த காலங்களில் லாபத்தை அனுபவிக்கவும் தொழில் நலிவடையும் சமயங்களில், அந்தத் துன்பத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் இருவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.

பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து செய்யும் தொழில்களில் தொழில் வளர்வதை விட, குடும்பச் சூழலில் நிம்மதி பறிபோவதுதான் அடிக்கடி நடந்துவிடுகிறது. இதற்கு தொழில் காரணமல்ல. சமூகத்தின் ஆண் பெண் கண்ணோட்டமே காரணம்.
பொதுவாக, பெண்களின் திறமைகளை மனம் திறந்து பாராட்ட முன்வரும் ஆண் வர்க்கம், தன் மனைவி என்று வரும்பொழுது, பெண்களின் புத்திக்கூர்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆணின் கருத்துக்கு, வீட்டில் பெண் மறுப்பளித்தால் அது அவளுடைய ஆணவமாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.

பெண்களும் பெரும்பாலும் இரண்டு நிலைகளில் செயல்படுகின்றனர். அதிகம் அடங்கிபோவது அல்லது அதிகம் அடக்கப் பார்ப்பது. இரண்டில் இருந்தும் விடுபட்டு, அவரவருக்குரிய இடத்தில் இருந்துகொண்டு அடுத்தவரை மதிக்கக் கற்றுக் கொள்ளும்போதுதான் வாழ்க்கை அமைதியாகச் செல்லும்.

கணவன், மனைவி இருவருமே அறிவுகூர்மையில் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், தொழில்களைத் தனித்தனியாக செய்வதில் தவறில்லை. ஆண், பெண் என்ற பாகுபாட்டை மறந்து, தொழில் என்று வரும்போது, ஒருவர் மற்றவரின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெறவேண்டும். ஒரு தொழிலுக்கு பல திறமையாளர்கள் தேவைப்படலாம். ஆனால் முன்னிலைப்படுத்தப்படும் நபர் ஒருவராக இருப்பது நலம்.

பொதுவாக பணம் என்று வரும்பொழுது, பெண்கள் அதிகபட்ச பாதுகாப்பை மனதில் கொண்டு செயல்படுவர். ஆண்களோ அது சாம்ராஜ்யமாக விரிவடைவதில் அதிகமாகக் கவனம் செலுத்துவார்கள். பெண்கள் தொழில் செய்வதில் பெரும்பாலாலும் ஒரு நேர்த்தி, ஒழுங்கு முறை இருக்கும். ஆனால் பிரம்மாண்டங்களை அவ்வளவு எளிதில் அடைய மாட்டார்கள்.

இதற்கு விதிவிலக்குகளும் இருக்கலாம். பிரம்மாண்டத்தை உருவாக்கும் திறமை இருப்பினும், பெண்கள் பொதுவாக சிறிது அடக்கி வாசிக்கும் மனோபாவத்தை உடையவர்களாக இருப்பர். ஆண்களோ இதற்கு முற்றிலும் வேறாக, தொழில் சாம்ராஜ்ஜியங்களை நிறுவுவதில் அதிக ஆர்வம் காட்டுவர். மனைவிக்கு கணவனைப் போல் சிறந்த பிசினஸ் பார்ட்னர் கிடைப்பது அரிது. அதேபோல் கணவனுக்கும் நேர்மையான தொழில் பங்காளர் அமைவது அரிது.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் திறமையைக் கண்டு அவரை ஊக்குவித்து, உலகப் பாடகியாக்கிய பெருமை திரு. சதாசிவம் அவர்களையே சாரும். இன்றும் திருமதி. சுதா ரகுநாதன், திருமதி. நித்யஸ்ரீ  மகாதேவன், நளினி சிதம்பரம், கவிஞர் தாமரை, சுகாசினி மணிரத்தினம், ஐஸ்வர்யாராய் பச்சன், வாணி ஜெயராம் போன்றோர் உள்ளனர். பெண்களை முடக்காமல், அவர்களை முன்னிலைப்படுத்தி, ஊக்குவிக்கும் பெருந்தன்மை இருக்கும்பொழுது, பெண்கள் சாதனையாளர்களாக வர முடியும்.

குடும்ப வேலைகள் என்று வரும் பொழுது, சமையல், குழந்தை பராமரிப்பு, பெரியவர்களைப் பார்த்துக் கொள்ளுதல் என்று பலவற்றிலும், ஆண் இறங்கி வந்து வேலைகளை சமமாக பங்கிட்டுக் கொள்ளும் போதுதான், பெண் பதட்டமின்றி வெளி வேலைகளைக் கவனிக்க முடியும். ஆனால் ஆண்களில் ஒரு பிரிவினர், ‘நான்  வெளியில் போவதைத் தடுக்கவில்லையே, மேலே படிப்பதைத் தடை செய்யவில்லையே, வேலைக்குப் போவதை மறுக்கவில்லையே, நானும் சுதந்தரம் கொடுத்துதான் இருக்கிறேன்’ என்று சொல்வார்கள்.

ஆனால் இவர்கள் பெண்களிடம் ஓர் அஸ்திரத்தைப் பிரயோகிப்பார்கள். ‘நீ காலையில் எழுந்து எல்லா வீட்டு வேலை, சமையல் இன்றும் பிற வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு, சில்லரை வேலைகள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, மாலை இரவு மெனுவரை  பிளான் செய்தபின்னர், என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்!’

இதை சொல்வது ஆண்களுக்கு எளிதானது. ஆனால் நடைமுறையில் பெண்கள் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும்பொழுது உடலளவிலும் மனரீதியிலும் எளிதில் பலமிழந்துவிடுகின்றனர். அதற்குமேல் தொழில், வேலை போன்றவற்றில் சுமையை ஏற்றுக்கொள்ளும்பொழுது அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதற்கு மாறாக குடும்பப் பொறுப்புகளை சரிசமமாகப் பகிர்ந்து கொண்டு, குழந்தை பராமரிப்பதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, ஆண்கள், பெண்களை முன்னேற்றினால் அதிக அளவு தொழில் மாற்றங்கள் ஏற்படுமென்பதில் சந்தேகமில்லை. கணவன் மனைவி இவர்களுக்கு மட்டும் இவை பொருந்தும் என்பதில்லை. குடும்ப உறவினருக்கிடையே நடக்கும் எந்தத் தொழிலிலும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

இசை உலகில் கொடி கட்டிப் பறக்கும் இரட்டையர்களான சூலமங்கலம் சகோதரிகள், ஹைதராபாத் சகோதரர்கள், பிரியா சகோதரிகள், கணேஷ் குமரேஷ் போன்ற பலரும், சுருதி பிசகாமல் ஒன்றிணைந்து இசையை வெளிப்படுத்தும் பொழுது, அது அதிக பட்ச உத்வேகத்தோடு, திறமைகள் உயர்ந்து வெளிப்படுகின்றன என்பதே உண்மை. சுருதி பிசகாத இசையைப் போல் லாபம் குன்றாத தொழிலும் ஒன்றிணைந்து இயங்குதல் என்பது மிக அவசியம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 கவனம் இங்கே தேவை

shoppingஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 29

எதையாவது இலவசமாகவோ அல்லது டிஸ்கவுண்ட் என்ற பெயரில் சிறிது விலையைக் குறைத்து கொடுத்தாலோ மட்டுமே ஒரு பொருளை வாங்கும் மனோபாவம் பலரிடம் இருக்கிறது. சொல்லும் விலையைக் கொடுத்து ஒரு பொருளை வாங்கும்போது திருப்தி ஏற்படுவதில்லை. தங்கமாக இருந்தாலும் சரி, குண்டூசியாக இருந்தாலும் சரி.

ஒரு பொருள் விற்கப்படும் பொழுது அதனால் விற்பவருக்கு நஷ்டம் ஏற்பட்டால் அந்தப் பொருள் தொழிலுக்குரிய தகுதியை இழந்து விடுகிறது. அப்படியென்றால் டிஸ்கவுண்ட் எப்படிக் கொடுக்கப்படுகிறது? நேர்மையற்ற சிலர் பொருளின் விலையை அதிகப்படுத்தி பின்னர் சிறிது குறைக்கின்றனர். இன்னும் சிலர், தங்களுடைய லாபத்தில் இருந்து குறைத்துக்கொண்டு அதன் பங்கை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பார்கள். இதுவே சரியான நடைமுறையாகும்.

பெரிய ஷாப்பிங் மால்களில் ஃபிக்ஸட் பிரைஸ் எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட விலைப் பலகைகள் தொங்கிக்கொண்டிருக்கும். இந்த வகை கடைகளில் டிஸ்கவுண்ட் கிடைக்காது. வாடிக்கையாளர்களும் மௌனமாக சொன்ன விலைக்குப் பொருள்களை வாங்கிச் சென்றுவிடுவார்கள். பேரம் பேசுவது எல்லாம் சிறு வியாபாரிகளிடம் மட்டும்தான்.

உண்மையில், நிர்ணயித்த விலையைக் காட்டிலும் மிக அதிக அளவில் விலைக் குறைப்பு செய்தால், நாம் உற்சாகப்படக்கூடாது. உஷாராகவேண்டும். ஸ்டாக் க்ளியரன்ஸ் என்று சொல்லி சரக்குகளைத் தீர்ப்பவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம் என்பதும் பொருள் வாங்கினால் மற்றொரு பொருள் இலவசம் என்பது வியாபார உத்திகளே. விற்பனையாகாத அல்லது கொள்முதல் ஆகாத பொருள்களே இவ்வாறு கவர்ச்சிகரமாகத் தள்ளிவிடப்படுகின்றன. எந்தப் பொருள் அதிகம் விற்பனையாகிறதோ அதன் விலையைக்கூட்டி விற்காத பொருளை இலவசம் என்று இணைத்து விற்றுவிடுவார்கள்.

நிறுவனங்களை மக்கள் புரிந்துகொள்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் மக்கள் நிறுவனங்களைப் புரிந்துகொள்வதும். பல கார்பரேட் நிறுவனங்கள் இதற்காக மார்கெட் ரிசர்ச் பிரிவுக்குப் பல கோடிகள் செலவு செய்கின்றன. மக்களின் மனநிலையையும் தேவைகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்பவே ஒரு நிறுவனம் தன் பொருள்களைச் சந்தைப்படுத்துகின்றன. ஒரு பொருள் யாருக்குத் தேவைப்படுகிறது? (டார்கெட் ஆடியன்ஸ்) அவர்களுடைய சமூகப் பின்னணி என்ன? வயது என்ன? பொருளாதாரப் பின்னணி என்ன? எவ்வளவு விலை வைத்தால் அவர்களால் வாங்கமுடியும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொண்டால்தான் வெற்றி கிடைக்கும்.

திரைப்படத் துறையினர் இந்த ரீதியில் வெற்றி பெறுவதை நாம் பார்க்கமுடியும். திறமையான மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்தியே திரைப்படங்களின் வெற்றி இன்று உறுதி செய்யப்படுகிறது. சமீபத்திய கொலைவெறி பாடல் ஹிட் ஆனதை இங்கே பொருத்தமான உதாரணமாகச் சொல்லலாம்.

சில தொழில்கள் அபாரமான வெற்றிகளை அடையாவிட்டாலும்கூட, உயிரோட்டமாக மினிமம் கியாரண்டியுடன் தங்கள் பொருள்களை விற்று சமூகத்தில் நல்ல பெயரைச் சம்பாதித்துக்கொள்கின்றன. பல குறுந்தொழில்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

0

சட்டபூர்வமான அங்கீகாரத்துடன் மட்டுமே எந்தவொரு தொழிலையும் தொடங்கி நடத்தவேண்டும். சிலர் பெயர் பலகை இல்லாமல், உரிய முறையான சட்ட ரீதியான பதிவுகளை மேற்கொள்ளாமல் தமது வேலையில் ஈடுபட்டிருப்பர். பின்னர் வளர்ச்சி அடையும் நிலையில், முன்னரே உரிய பதிப்புகள் மேற்கொள்ளாத காரணத்தால்,சில நல்ல பயன்களை அடையத் தவறிவிடுவர். தமது நிறுவனத்தின் இருப்பிடத்தை வணிக வளாகம் என்ற பிரிவின் கீழ் மின்சார வாரியத்தில் பதிவு செய்யாமல் இருத்தல், அரசாங்கத்துக்குரிய வரிகளைச் சரிவரச் செலுத்தாது இருத்தல் ஆகியவை பின்னாள்களில் மிகுந்த சிக்கல்களை ஏற்படுத்தும்.

சரிவர முறையாகச் செயல்படாததால், அரசாங்கம், சுங்கம், மின்சார வாரியம் ஆகிய பிரிவுகளிலிருந்து திடீர் சோதனைகள் நடைபெற்றால் பிடிபட வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்துவிட்டால் பணம், நேரம் இரண்டையும் மிக அதிகம் செலவு செய்து தவறுகளைச் சரிசெய்துகொள்ள நேரிடும். தேவையற்ற மனச்சோர்வும் ஏற்படும்.

அதேபோல சிறுதொழில் (எஸ்எஸ்ஐ), தனியார் நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), ப்ரொப்பரைட்டர் கன்சர்ன் ஆகியவற்றை உரிய முறையில் பதிவு செய்யவேண்டும். விற்பனை வரி, சேவை வரி, TDS  போன்ற வரிகளைச் சரியான முறையில் செலுத்தவேண்டும்.

தொழிலுக்குப் பொருத்தமான தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதும் நன்மை அளிக்கும். அக்மார்க், ஐஎஸ்ஐ போன்ற தரக்கட்டுப்பாடுகள் அவசியம் எனில், அதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

0

சிறுதொழில்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. அதில் முதன்மையானது உலகமயமாக்கலின் தாக்கம். இன்றைய சூழலில் மிகக் குறிப்பிட்ட சில தொழில்களைத் தவிர, அனைத்தும் தொழில்நுட்பத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. சுதேசி இயக்கத்தைப் போற்றி முன்னிறுத்திய நம் நாடு இன்று பல நாடுகளின் தொழில்நுட்பத்தை நம்பியே இயங்கி வருகின்றன. இப்படிப்பட்ட நிறுவனங்கள் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்வது அவசியம்.

அந்த வகையில் சிறுதொழில் செய்பவர்கள் தங்கள் நிறுவனம் சார்ந்த தொழில் நுட்பம் எந்த வகையில் எல்லாம் மாறி வருகிறது என்பதையும், அந்தந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்திடமிருந்து எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதையும், தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு இணையதளம் பெரிதும் பயன்படும். உலகளவில் நடக்கும் மாற்றங்களைத் தெரிந்துகொண்டு, பொருட்களின் ஏற்றுமதி அல்லது இறக்குமதி சார்ந்த முடிவெடுக்கலாம்.

பிறநாட்டு நிறுவனங்களோடு வணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இவை.
ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் அயல்நாட்டு வணிகத்தில் பெரும் ஈடுபாடு காட்டினாலும், தாங்கள் யாருடன் தொழில் உறவில் ஈடுபடப் போகிறார்களோ, அவர்களுடைய பின்னணியைத் தெரிந்து கொண்ட பின்னரே, தொழில் செய்யத் தொடங்குவர். அதேபோல், நாமும் அந்தந்த நிறுவனத்தின் பின்னணியைப் பற்றித் தெரிந்து கொள்வது இன்றியமையாதது.

எந்தவொரு நிறுவனத்தின் பணபலத்தைவிட, அவர்கள் தங்கள் நாட்டில் பெற்றிருக்கும் நற்பெயரும், வியாபார நாணயமும்தான் மற்றவர்களை ஈர்க்கும். இன்று பிரபலமான பல நிறுவனங்கள், பல்வேறு நாடுகளுக்கிடையே உள்ள நிறுவனங்களை ஒன்றிணைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சில நிறுவனங்கள் இதற்கென உள்ள வணிகச் சந்தையை ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து, தாங்கள் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களுடைய பலம், பலவீனங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தொழில் தொடர்பை விரிவுபடுத்துகின்றன.

தொழிலில் நிலைநிற்பதற்கு அல்லது தொடர்ந்து செல்வதற்கு, நம் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தைக் கண்டு அச்சப்படாமல், அந்த ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க மனதளவில் நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால் நம் தொழில் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சம் மறைய வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் நம் தொழில் நம் கண்முன்பே நொடித்துப்போகும்.

நாம் எந்தந்த நாட்டுடன் வியாபாரத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகின்றோமோ, அந்தந்த நாட்டின் வியாபாரக் குறிக்கோள்கள், வியாபார உத்திகள், கலாசாரம் முதலியவற்றைத் தெரிந்து கொள்வது மிக அவசியம். எந்த நிறுவனத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலும், அந்த நிறுவனத்தின் மனிதர்களோடு பழகுகிறோம். அந்தச் சூழலுக்கும், புதிய மனிதர்களின் விருப்பு வெறுப்புகளை எடைபோட்டுப் பார்த்தும், நம் அணுகுமுறையைத் தக்கவாறு மாற்றிக்கொண்டும் செல்வது இன்றியமையாதது.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களின் வாங்கும், விற்கும் பொருளைப்பற்றி நாம் எவ்வாறு ஆராய்கிறோமோ, அதே போல் கொண்டு செல்லும், கொண்டு வரும் வழிவகைகளையும் நுணுக்கமாக ஆராய்வது முக்கியம். உலக வரைபடத்தை வைத்துக் கொண்டு நாம் பொருட்களைக் கொண்டு வரும் அல்லது கொண்டு செல்லும் மார்க்கங்கள் என்ன? கடல்வழி மார்க்கமா? தரைவழி மார்க்கமா? சுங்கத் தீர்வின் அளவு என்ன? எப்படி பேக்கேஜ் செய்வது? என்று பல கேள்விகளுக்கு விடைகள் தெரிந்துகொள்ளவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 நேர்மையும் செல்வமும்

truthஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 30

சிலர் பத்து, பதினைந்து ஆண்டுகளாக நல்ல பெயருடன் சிறுதொழில் நடத்திக்கொண்டிருப்பார்கள். ஆரம்பித்துவிட்டு திணறுபவர்களும் இருப்பார்கள். பணமுடையால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு, தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் தங்கள் வாழ்வையே சிக்கலாக்கிக் கொண்டவர்களும் உள்ளனர். ஒரு சில செல்வந்தர்களுக்கும் சிறுதொழில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்கான பொறுமை இருக்காது. வேறு சிலரைப் பயன்படுத்தி இவர்கள் தங்கள் கனவைப் பூர்த்தி செய்துகொள்வார்கள்.

சேகர் என்பவர், எலக்ரானிக்ஸ் துறையில் அனுபவம் வாய்ந்தவர். இவரது சிறுதொழில் நிறுவனம் சுமார் இருபது வருடங்களாக மார்க்கெட்டில் நிலைத்து வருகிறது. சுமார் இரண்டு கோடி வரை டர்ன்ஓவர் செய்துவந்தார். ஒரு கட்டத்தில், ஒரேயடியாக லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் தவறான நபர்களை தன் வியாபாரத்தில் இவர் இணைத்துக்கொண்டார். அவர்களோ இவருடைய பலவீனத்தை உணர்ந்து, பணப் பற்றாக்குறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சிறிது சிறிதாக நிறுவனத்தின் அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர்.
சேகர் மன உளைச்சலுக்கு ஆளானார். தொழில் கைவிட்டுப்போவதை அவர் உணர்ந்த பொழுது காலம் கடந்துவிட்டது. இவரை நம்பி, நிறுவனத்துக்குக் கச்சாப்பொருட்களைக் கொடுத்த மற்ற நிறுவனங்கள் நெருக்க ஆரம்பித்தனர். மற்றொரு பக்கம் வங்கிகள் கடனுக்காக அழுத்தம் கொடுக்கத் தொடங்கின. தொழிலாளர்களுக்குச் சம்பள பாக்கி வேறு.

சேகரைப் போன்று பல சிறுதொழிலதிபர்கள் இப்படிப்பட்ட சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொண்டுவிடுகின்றனர். இது போன்று நிகழாமல் தடுப்பது தொழிலதிபரின் தலையாயக் கடமையாகும். குறுந்தொழில்களை மேற்கொண்டு நடத்த முடியாமலும் அல்லது விரிவுபடுத்த முடியாமலும் போகும்போது, நிறுவனம் ஒரு நிலையான இடத்தில் இருக்கும்போதே அதை ஒரு நல்ல விலைக்கு கைமாற்றித்தருதல் நலம்.

தன்னை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கேள்விகுறியாக்கி தொழிலை முடக்கி வைப்பது ஒரு சமுதாயத்துக்கு செய்யும் தீமை. நன்னடத்தையுள்ள தொழிலதிபர்களின் தொழில் முடங்கினாலும் வேறு ஒன்றை தொடங்குவதற்கான வாய்ப்புகள் எளிதாக அமையும். மாறாக தனி நபர் நாணயம் பறிபோனால் மீண்டு வருதல் மிக மிகக் கடினம்.

0

செல்வச் செழிப்புள்ள பலரைப் பார்க்கும்போது நம் எல்லோருக்கும் பொதுவாக ஒரு எண்ணம் தோன்றும். இவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது? நிச்சயம் இது தவறான முறையில் வந்ததாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிடுவோம். ஆனால் நம் அனைவருக்கும் அதே ஆசைகள் இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.

செழிப்புடன் வாழ்ந்து வரும் ஒரு தொழிலதிபர் குடும்பத்தை நான் அறிவோன். அப்பா, மகன், மகள், மருமகள் ஆகியோர் இணைந்து இத்தொழிலை நடத்தி வருகிறார்கள். அவர்கள் நேர்மையானவர்கள் என்பது எந்தவித சீர்கேடும் அற்றவர்கள் என்பதும் முக்கியமானது. மனித நேயத்தோடு பிறரை நடத்துவதிலும் தங்கள் செல்வத்தின் பிரம்மாண்டம் அடுத்தவரின் கண்ணை உருத்தாத அளவுக்கு நடந்து கொள்வதிலும் அவர்கள் திறமையானவர்கள்.
இதில் நான் உணர்ந்த உண்மை என்னவென்றால், பாஸிட்டிவாக உள்ளவர்களிடம் செல்வம் நல்ல எண்ணத்தை மட்டுமே தோற்றுவிக்கிறது. நல்ல உணர்வோடு பணத்தைக் கையாள்பவர்கள் தங்களைச் சுற்றி நல்ல மனிதர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். பணத்தால் பெரிய எதிரிகளை இவர்கள் ஏற்படுத்திக் கொள்ளுவதில்லை.

இதற்கு மாறாக, அதிக சுயநலத்துடன் செல்வத்தை கையாண்டவர்கள், அந்தச் செல்வத்தால் மேன்மேலும் சிறப்புகளைப் பெறுவதில்லை. புத்தியோடு பகிர்ந்தளித்து வாழ்பவர்களிடம்தான் பணம் மீண்டும் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்கிறது.

ராமகிருஷ்ணன் என்பவர் பெரும் பணக்காரர். பொருளை நல்ல வழியில் சம்பாதித்தவர். இறை நம்பிக்கையும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற தாராள சிந்தனையும் உள்ளவர். அதே சமயம் கேட்கும் பொழுதெல்லாம் அள்ளிக் கொடுக்கும் கர்ணனைப் போன்றவர். இவரது வருமானம் காலச்சுழற்சியில் தடைப்பட்டு போன பொழுது, கொடுக்க பணம் இல்லை என்று சொல்லத் தொடங்கினார். இவரிடம் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் இந்தப் பதிலை ஏற்க மறுத்தனர். இருக்கும் போது காசை வச்சுப் பிழைக்கத் தெரியலை. இப்ப நம்மகிட்ட வந்து உதவிக்கு நிற்கிறார் என்று பேசத் தொடங்கினார்.

இந்த நிலைமையை நம்மால் தடுக்கமுடியும். உதவிக்குக் கொடுக்கும்பொழுது சிந்தித்து, முடிவெடுத்து, இன்முகத்தோடு அடுத்தவருக்குக் கொடுங்கள். இல்லையேல் நிதானத்துடன் மறுத்துவிட்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

என் பெற்றோராகட்டும், மாமனார், மாமியாராகட்டும் இவர்கள் வாழ்க்கையில் நான் கண்ட பொதுவான அம்சம், மற்றவர்களுக்கு உணவளிப்பதிலாகட்டும் பரிசுகள் கொடுப்பதிலாகட்டும் அதை நல்ல சிந்தனையோடு அன்புடனும் விருப்பத்தோடு கொடுப்பார்கள். அதனால் தானோ என்னவோ அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் பெரிய வறுமையோ, பொருளிழப்பு அனுபவங்களோ இல்லாமல் வாழ்க்கை நடத்துகின்றனர். சிறு குழந்தைகளுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே, மற்றவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் சுகத்தைப் புரிய வைத்தல் நலமாகும்.

பணம் நம்மிடம் இருக்கும் பொழுது நாம் நல்லவர்களாக நடந்து கொள்வதைப் பொருத்தும் அது அதிக அளவில் பெருகினாலும், நல்லவர்களாகவே இருப்போம் என்று எண்ணுவதிலும்தான் செல்வத்தின் சூட்சமம் இருக்கிறது.

பணக்காரர்கள் கெட்டவர்கள், ஆணவக்காரர்கள், இரக்கமற்றவர்கள், அடுத்தவர்களின் ரத்தத்தை உறிஞ்சுபவர்கள் என்று சொல்லிச் சொல்லியே வளர்ந்துவருகிறோம். சினிமாவிலும் இதே கருத்து. அதிக பணம் ஆபத்தானது, நிம்மதியைக் கெடுத்துவிடும், நாம் கெட்டவர்களாக மாறிவிடுவோம் என்பன போன்ற எதிர்மறை எண்ணங்கள் நமக்குள் ஆழமாக ஊறிப்போயுள்ளன.

ஏன் நாம் நல்லவர்களாக, மனிதாபிமானம் உள்ளவர்களாக, கருணை, இரக்கம் கொண்டவர்களாக இருக்கக்கூடாது? செல்வம்-நன்மை என்று ஏன் நம்மால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிவதில்லை? இது நம்முடைய பலவீனம்.

பணம் வேண்டும் என்று வெளிமனமும், வேண்டாம் ஆபத்து என்று உள்மனமும் இரு வேறு திசையில் பயணிக்கும்பொழுது நம்மால் வளமையை எட்டமுடிவதில்லை. இதற்கு மாறாக மீண்டும் மீண்டும் பணம் வேண்டும், நல்ல விதத்தில் வேண்டும், அடுத்தவர் அழுகையிலிருந்து இல்லாமல் புன்னகையோடு வரவேண்டும். அந்தச் செல்வம் சிரிப்பையும் சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோமானால் நம்மால் செல்வந்தர்களாக நிச்சயம் ஆக முடியும். சுமையாக செல்வத்தை நினைக்கும் மனப்போக்கு மாறி நல்லவர்களோடு பணத்தையும், நன்மையோடு பணத்தையும் தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டும்.

உதாரணமாக நாட்டாமை சினிமாவில் வரும் ஒரு சரத்குமார் பாத்திரத்தைப் போல் அல்லது எஜமான் படத்தில் வரும் பாத்திரத்தைப் போல் பணக்காரர்கள் நல்லவர்களாக வாழும் சூழல் அதிகமாக அதிகமாக பணம் நன்மையாக மாறும். நம் ஊடகங்கள் பெண்களை, அதுவும் படித்த பெண்களை அரக்க குணம் கொண்டவர்களாகவே தொடர்ந்து காட்டி வருகிறது.

பொதுவாக நம் சமூகத்தில் சைக்கிளில் செல்பவன் அல்லது பஸ்ஸில் செல்பவன், ஏழையாகவும், காரில் செல்பவர்கள் அனைவரும் திமிர் பிடித்தவர்களாகவும் நம்பும் குணம் இருக்கிறது. காரில் செல்லும் ஒருவர் மிகுந்த கவனத்தோடு வண்டியை ஓட்டுபவராக இருப்பினும், குறுக்கே முட்டாள்தனமாக ஒருவர் வந்து விழுந்தால், சுற்றியுள்ள கூட்டம் வண்டியைச் சுற்றி நின்று பெரும் சப்தத்துடன் கூச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி பணம் பறிக்கும் அவலம் நிறைய இடங்களில் நடக்கிறது. இதற்காக எல்லா ஏழைகளும் ஏமாற்று பேர்வழிகள் என்றோ அல்லது எல்லாப் பணக்காரர்களும் உத்தமர்கள் என்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால் சைக்கிளில் செல்பவன் பைக் வாங்க ஆசைப்படுகிறான். பைக்கில் செல்பவனோ கார் வாங்க ஆசைப்படுகிறான். காரில் செல்பவனோ ஒரு விமானத்துக்குச் சொந்தக்காரனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவரவரின் தேவைக்கேற்ப பணத்தின் அளவு மாறுகிறதே ஒழிய, பணம் வேண்டும் என்ற எண்ணம் யாரிடமும் கடைசிமட்டும் மறைவதில்லை.

இந்தச் சூழலில் அடுத்தடுத்த நிலைகளுக்கு, பணத்தோடு மேலே போக வேண்டும் என்று நினைப்பவர்கள் நல்ல குணங்களை மட்டும் கீழே விட்டுவிட்டு, மேலே போவது எப்படி சாத்தியம்?

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி வரி ஏய்ப்புச் செய்வதாக எவ்வித உண்மையுமின்றி சில பத்திரிகைகள் எழுதி வந்தன. பல சமயம் அமைதியாக அதை புறம் தள்ளிய நாராயணமூர்த்தி ஒரு சமயம் பதிலடி கொடுக்க விரும்பினார். பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு வருடமும் வருமான வரித்துறையிடமிருந்து வந்த சம்மன்களையும் அவர் ஒழுங்காக வரிகட்டியதற்கான ரசீதுகளையும் தைரியமாக புன்னகையோடு எடுத்து வைத்தார். அவர் மடியில் கனம் இல்லாததாலும், பணத்தைப்பற்றிய தெளிவான அணுகுமுறை இருந்ததாலும் இது சாத்தியமானது.

அவர் மனைவி திருமதி. சுதா, பலவிதமான சமூக சேவைகளுக்கு நிறைய பொருளுதவி செய்வதோடு, சேவை மையங்களையும் நடத்தி வருகிறார். இதைப்போல் விப்ரோ நிறுவனர், மற்றும் குறிப்பிடத்தக்க பெரும் பணக்காரர்கள், சமூக சேவைக்காக நிறைய பணம் செலவழித்துவருவதை நாம் காணலாம். நல்லவர்களோடு தொடர்புகொள்ளும்பொழுது பணம் புனிதமடைகிறது. பெருகவும் செய்கிறது.

0

நினைவு தெரிந்த நாளிலிருந்து நாம் பணத்தின் பின்னால் அலையத் தொடங்கிவிடுகிறோம். ஆனாலும் எப்போதும் நம்மோடு பணம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டே இருக்கிறது. ஒன்றும் இல்லாதவன் கொஞ்சம் கிடைத்தால் போதுமென்கிறான். கொஞ்சம் இருப்பவனோ, தன் எதிர்பார்ப்பின் விளிம்பை உயர்த்திக்கொண்டே போகிறான். அதிகம் இருப்பவனோ அதைப் பெருக்குவதிலும் தக்க வைத்துக் கொள்வதிலுமே தன் வாழ்நாளைச் செலவிடுகிறான்.
எல்லை தெரியாத மைதானத்தில் ஓடி ஓடிக் களைத்த ஒருவன், ஒரு கோடிக்குச் சென்ற பின்பு அங்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் மீண்டும் வந்த வழியே திரும்பி ஓடுவதைப் போல், பணம் நம்மை அலைகழிக்கிறது. அர்த்தமற்ற ஓட்டப்பந்தய வீரர்களாக நம்மை மாற்றிவிட்டது. பணத்தால் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அநேகம். இழந்த உறவுகள் அதிகம். தொலைத்த நட்புகள் அதிகம்.

பணம் ஒருவரையும் திருப்திபடுத்துவதில்லை என்பதே உண்மை. நம்மை மகிழ்விக்கவேண்டிய பணம் உண்மையில் நம்மை மன உளைச்சலுக்குத்தான் ஆளாக்குகிறது. இது ஏன் என்ற கேள்வியை நம்மில் பலரும் கேட்க மறுக்கின்றோம்.

நாம் செய்யவேண்டியது என்ன தெரியுமா? செல்வத்தை அடைவதில் பிழையில்லை. அதனால் வரும் பலன்களை அனுபவியுங்கள். அது கொடுக்கும் வளமையை ஈர்த்துக் கொள்ளுங்கள், தவறில்லை. ஆனால் அது வரும் வழியை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.

சென்னை அண்ணாசாலையில் மிக முக்கிய இடத்தில் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நண்பர்கள் இருவர்- கண்ணப்பன், முருகேசன்- பெரிய கடையெடுத்து கூட்டாகத் தொழில் செய்தனர். தொழில் நன்கு விரிவடைந்து லாபமும் பெருகியது. திடீரென்று ஒரு நாள் எதிர்பாராத விதத்தில் கண்ணப்பன் சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார். அவர் மரணம், அவரது நண்பரை உலுக்கியது. ஆனால் சில மாதங்களிலேயே அவருக்குள் இருந்த சாத்தான் தலை தூக்கி அவரை திசைத் திருப்பியது.

கண்ணப்பன் மறைந்த பின் சில மாதங்கள் வரை அவரது மனைவிக்கு லாபத்தில் சரி பங்கு கொடுத்து, நிர்க்கதியான நண்பரின் குடும்பத்துக்கு ஆதரவு அளித்து வந்த முருகேசன், அதன் பின்னர் குறுகிய புத்தியுடன் செயல்பட்டார். இரண்டே, இரண்டு நண்பர்கள் நடத்தி வந்த நிறுவனத்தில் தனது சொந்தக்காரர்களைப் பங்குதாரர்கள் ஆக்கி, வந்த லாபத்தை பல கூறுகளாகப் பிரித்து, ஒரு சிறு பகுதியை மட்டும் கண்ணப்பனின் மனைவிக்குக் கொடுக்கத் தொடங்கினார். அதிகம் படித்திராத, உலக நடத்தை தெரியாத, சட்ட நுணுக்கம் அறியாத கண்ணப்பனின் மனைவி, அதில் உள்ள சூழ்ச்சியை அறியாமல் நீட்டிய காகிதங்களிலெல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

சிறிது சிறிதாக முழு நிர்வாகத்தையும், லாபத்தையும் முருகேசனே ஆண்டு அனுபவிக்கத் தொடங்கினார். இது நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து, முருகேசன் தன் மகனுக்கு ஆசையாக ஒரு கார் வாங்கி பரிசளித்தார். காரை டெலிவரி எடுத்து வீட்டு வாசலில் நிறுத்தி தன் மகனை அழைத்தார். ஆசையாக ஓடோடி வந்த மகன், (வயது 24, பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த மாணவன்) நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான். மாரடைப்பு. நொடியில் மரணம். முருகேசனை இயற்கை கொடூரமாகவே தண்டித்துவிட்டது.

சம்பந்தம் பிரபல வங்கி ஒன்றில் கிளை மேலாளர். சனிக்கிழமை மதியம், ரத்னம் என்பவர் இவரைத் தேடி வந்தவர். அவர் அந்த வங்கியில் நீண்டகாலமாக கணக்கு வைத்திருப்பவர். சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சம்பந்தத்திடம் கொடுத்து தனது கணக்கில் சேர்ப்பித்துவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இருவருக்கும் நல்ல பழக்கம் என்றபோதும் அலுவலக நேரம் முடிந்துவிட்டதால் பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்தார் சம்பந்தம். ஆனால் ரத்னம், தான் வியாபார விஷயமாக வெளியூர் செல்லவிருப்பதாகவும் எப்படியாவது தன் கணக்கில் பணத்தைச் சேர்ப்பித்து விடுமாறும் வேண்டிக்கொண்டார். சம்பந்தமும் திங்கட்கிழமை காலை பணத்தைச் செலுத்திவிடுவதாகக் கூறி பெற்றுக்கொண்டார்.
நான்கைந்து நாட்கள் கழிந்து ஊர் திரும்பிய ரத்னம், தான் மற்றவர்களுக்குக் கொடுத்த காசோலைகள் கணக்கில் பணம் இல்லாத காரணத்தில் வங்கியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதை அறிந்து சம்பந்தத்தைச் சந்திக்க ஓடினார்.

சம்பந்தம் விடுப்பில் போயிருப்பதாக மற்றவர்கள் சொல்ல அதிர்ச்சி அடைந்து அவரைத் தொடர்பு கொள்ள பலவாறாக முயன்று தோல்வியடைந்தார். பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி ரத்னம் திகைத்து நின்றார். பணம் கொடுத்த நபர்களோ, பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு அவரை நச்சரிக்க ஆரம்பித்தனர். நாணயஸ்தர் என்று பெயர் வாங்கிய ரத்னம் செய்வதறியாது அல்லாடி, புது கடன்கள் வாங்கி தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்து போராடினார்.

entrepreneurசில நாட்கள் கழித்து சம்பந்தம் வங்கியில் விடுப்பு முடிந்து சேர்ந்து விட்டதாக தகவல் கிடைத்து, வங்கியை நோக்கி ஓடினார் ரத்னம். அவரை வரவேற்ற சம்பந்தம், ஒன்றும் அறியாதது போல் ‘என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்?’ என்று கேட்டதும், பெரும் பாறாங்கல் தன் தலையில் விழுந்தது போல் ரத்னம் அலறினார். அவரிடம் தன் கணக்கில் கட்டக் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டார். சம்பந்தமோ தனக்கு எந்தத் தொடர்பும் இல்லாதது போல் ‘பணமா? எப்போது கொடுத்தீர்கள்?’ என்று கேட்டதும் ரத்னம் நொந்து, மனம் அதிர்ச்சியடைந்தார். ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் அவர் பணத்தை கொடுத்ததற்கான அடையாளமாக எந்தப் ஆதாரத்தையும் வாங்கவில்லை. இதற்கு சம்பந்தத்தின் மேலுள்ள நம்பிக்கையும், அவர் வகித்து வந்த பதவியின் மேலுள்ள மதிப்பும் காரணம் ஆகும். நியாயம் கேட்கச் சென்ற அனைவரும் ரத்னத்தைதான் குறைகூறினார்கள்.
இது நடந்து சரியாக நான்கு மாதங்கள் கழித்து சம்பந்தம் தன் குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் சென்றுவிட்டு காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். எதிர்பாராமல் லாரி வந்து காருடன் மோதியதில் சம்பந்தமும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். இரு குழந்தைகளும் விபத்து நடந்த இடத்தில் அநாதைகளாக அழுது கொண்டிருந்தன. காலம் குரூரமாக அவரைப் பழிவாங்கிவிட்டது.

0

பணம் கையில் தங்க வேண்டும் என்று மன உறுதியுடன் நினைப்பவர்கள், முதலில் தங்கள் எண்ணங்களில் தூய்மையைக் காத்தல் வேண்டும். உண்மையான உழைப்பும் நல்ல சிந்தனையும் நிச்சயம் பலன் தரும். செல்வம் அவர்களைத் தேடி வரும்.

முடிந்தது



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard