பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரியாகத் தன்னையே பிரகடனப்படுத்திக்கொண்டவர் ஸ்டாலின். தன் கீழிருந்த மானுட சமுதாயத்தை மட்டுமல்லாது, தனது ஆட்சிப்பரப்பில் இருந்த இயற்கையையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தலைப்பட்டார். இருக்கவே இருக்கிறது – இறைத்தூதர் ஏங்கல்ஸுக்கு வெளிப்படுத்தப்பட்ட சுவிசேஷமான மார்க்சிய டயலட்டிக்ஸ். இயற்கையைச் சம்மட்டியால் அடித்து, பாட்டாளி வர்க்கப் பேரரசுக்கு ஏற்றபடி மாற்றியெடுக்க வேண்டும்.
சோவியத் யூனியனெங்கும் பெரும் தொழிற்சாலைகள், மிகப்பெரிய அணைகள், மாபெரும் கால்வாய்கள் தோன்றின. கூலியில்லா வேலை செய்ய வதைமுகாம்வாசிகள் இருக்கும்போது, சில முக்கியமான முதலாளித்துவ பொருளாதாரப் பிரச்னைகளை சோவியத் எதிர்கொள்ளவேண்டிய அவசியம்கூட இருக்கவில்லை. ‘இதோ பிறக்கிறது புதிய யுகம்’ என்றார்கள் ஸ்டாலினின் பிரசாரகர்கள். அவர்கள் சமானியமானவர்கள் அல்லர். மேற்கத்திய உலகின் மிகச்சிறந்த அறிவுஜீவிகள். ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டங்களால் அழகாக்கப்பட்டு வரும் சோவியத் நங்கையின் மேனி எழிலை வர்ணிக்க, சாலமோனின் உன்னத கீதங்களை உருவிக் கவியெழுதக்கூட திட்டமிட்டார் ஓர் அறிவுஜீவி பிரசாரகர்:
“என் காதலியின் கண்கள் ஸ்டெப்பி ஆலைப் பட்டறைகளின் நெருப்பாக ஒளி விடுகிறதே. வெண்கடல் கால்வாயின் அழகைப் போன்றதே அவள் பற்கள். தெனெப்பேர் அணையின் வளைவாக அழகோடு மிளிருமே அவள் தோள்கள். அவள் முதுகின் நேர்த்தியோ சைபீரிய இருப்புப்பாதை போல… இந்த அழகிய திராட்சை வனத்தை ஒழிக்க முயலும் நரிக்கும்பல் எதிர்ப்புரட்சி வீணர்கள்.”
ஆனால் சோவியத் யூனியனுக்குச் சென்ற பெரும்பாலான வெளிநாட்டு மார்க்சிய ஆதரவாளர்கள், உடனடி விளைவாக தீவிர சோவியத் எதிர்ப்பாளர்களானார்கள். அதற்காக அவர்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் அடிவருடிகளாகவோ, ஆதரவாளர்களாகவோ மாறிவிடவில்லை. ஆனால் சோவியத் எதிர்ப்பாளர்கள்!
காரணம்?
சாலமோனின் உன்னதப்பாட்டை ஸ்டாலினுக்கு மாற்ற நினைத்த அறிவுஜீவியின் பெயர் ஆர்தர் கோய்ஸ்லர். வீடு வீடாக ஏறி வாக்குவம் க்ளீனர் விற்பதுபோல மார்க்சியப் புரட்சியின் பிரசாரத்தை மேற்கொண்டவர். சோவியத் யூனியனுக்குச் சென்ற பிறகு கம்யூனிசத்தைக் கைவிட்டவர். அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார்:
‘ 1932-33 பஞ்சத்தின் உக்கிரத்தை நான் உக்ரைனில் கண்டேன். கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக மக்கள் கந்தல் துணிகளுடன் ரயில்வே ஸ்டேஷன்களில் உணவுக்காகக் கையேந்திப் பிச்சை எடுப்பதைக் கண்டேன். ரயிலின் ஜன்னல்களுக்கு இடையே, எலும்புகளாகத் தேய்ந்திருந்த குழந்தைகளைத் தூக்கி அவர்களின் கரங்களால் பிச்சை கேட்கும் பெண்கள். கருவில் இறந்த குழந்தைகளின் உடல்களைப் பரிசோதனைச் சாலைகளில் ஆல்கஹால் குடுவைகளில் பத்திரப்படுத்தி வைத்ததுபோல இருந்தார்கள் அந்தக் குழந்தைகள்… இவர்களெல்லாம் நிலத்தைப் பொதுவுடமையாக்கும் புரட்சியை எதிர்த்த குலக்குகள் என எனக்குச் சொல்லப்பட்டது..’
ஆர்தர் கோய்ஸ்லர் மட்டுமல்ல, ஸ்டாலினைவிட இருபது வயது இளையவரான ஸ்டாலினின் இரண்டாவது மனைவி, சில கல்லூரி மாணவர்களிடம், உக்ரைனில் நிலவும் தீவிரப் பஞ்சம் குறித்துக் கேட்டறிந்தார். இது குறித்து ஸ்டாலினிடம் விவாதிக்க முயன்றார். விளைவாகக் கடுமையாக அவமதிக்கப்பட்டார். அவரிடம் பஞ்சம் குறித்துப் பேசிய மாணவர்கள் கண்டறியப்பட்டுக் காணாமல் போயினர். ஸ்டாலினின் மனைவி ‘தற்கொலை’ செய்துகொண்டார்.
மனிதர்களைக் கட்டுப்படுத்த முயன்றதால் ஏற்பட்ட பஞ்சத்தை, இயற்கையைக் கட்டுப்படுத்தித் தீர்க்க முயன்றார் ஸ்டாலின். வரலாற்றில் மட்டுமல்லாது, அறிவியலின் வரலாற்றிலும் ஒரு கொடூர அத்தியாயம் சோவியத் பஞ்சத்துடன் தொடங்கியது. இதன் முழுத் தன்மையை அறிய சற்றே பின்னோக்கிச் செல்லவேண்டும்.
1920களில் உயிரியலில் சூழ்நிலையும் மரபணுக் காரணிகளும் எந்த அளவு ஓர் உயிரினத்தின் தன்மையை நிர்ணயிக்கின்றன என்பது குறித்துத் தீவிரமான அறிவியல் விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆஸ்திரியப் பாதிரியான கிரிகோர் மெண்டல், தனது மடாலயத் தோட்டத்தில்பட்டாணிகளில் செய்த பரிசோதனைகள் மூலம் மரபணுவியலின் ஆதார விதிகளைக் கண்டுபிடித்திருந்தார். அடுத்த நூற்றாண்டில் மோர்கன், தொப்ஸான்ஸ்கி போன்ற மரபணுவியலாளர்கள் கடுமையாக உழைத்து நியோ-டார்வினியக் கோட்பாட்டினை உருவாக்கினர். எப்படி மரபணுக்கள் ஓர் உயிரினத்தின் தன்மைகளை முடிவு செய்கின்றன என்பதையும், அந்தத் தன்மைகள் வெளிப்படும் விதத்தைப் பல மரபணு – அகக் காரணிகளும் புறச்சூழல்களும் முடிவு செய்கின்றன என்பதைக் குறித்தும் ஒரு தெளிவான சித்திரம் உருவாகத் தொடங்கியது.
இந்நிலையில் சோவியத்திலோ இந்த அறிவியல் விவாதம் மார்க்சிய மத சித்தாந்தங்களின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டிய ஒன்றாயிற்று. ஜீன்களா? சூழலா? எது மார்க்சியத்துக்கு உகந்தது? எது ஆகாது? – இந்த ரீதியில் மார்க்சிய மத பீடத்தின் அங்கீகாரத்துக்கு ஏங்கியபடி அறிவியலாளர்கள், தத்தம் நிலைபாடுகளே மார்க்சிய அருளாசி கொண்டதும் திரிபுவாதங்கள் அற்றதுமென நிறுவ முயன்றார்கள். இதற்காக, டாஸ் காபிடல் முதல் டயலடிக்ஸ் வரை புனித மூல கிரந்தங்களையும், ஏங்கல்ஸ் முதல் லெனின், ஸ்டாலின் என ஆசாரிய பாஷ்யங்களையும் எடுத்துப் புரட்ட வேண்டியதாயிற்று. அதாவது, பரிசோதனைச் சாலைகளில் உண்மை என நிரூபிக்கிறார்களோ இல்லையோ, பொலிட் பீரோ உறுப்பினர்களின் சித்தாந்த நம்பிக்கைகளுக்குத் தாங்கள் புறம்பாக நடக்கவில்லை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் ஆளானார்கள்.
துரதிர்ஷ்டவசமாக, அதிகாரத்தின் அதி உச்சியிலிருந்த மார்க்ஸிய அதிபதியான ஸ்டாலின் “சூழ்நிலைகளை மாற்றுவதன் மூலம் உயிரினத்தின் அடிப்படையையே மாற்றி அமைத்துவிட முடியும்” எனும் கோட்பாட்டுக்குப் பச்சை கொடி காட்டினார். நியோ-லமார்க்கியானிசம் என சொல்லப்படுகிற அந்தக் கோட்பாடு அறிவியல் அடிப்படை அற்றது என உயிரியலாளர்கள் அப்போதுதான் உலகம் முழுவதும் சொல்லத் தொடங்கி இருந்தார்கள்.
ஆனால் சோவியத் யூனியனிலோ, நிலை வேறாக இருந்தது. “ஜெனிடிக்ஸ் என்பதே முதலாளித்துவ – கருத்துமுதல்வாத பிற்போக்குவாதிகளின் வக்கிரம். உயிரினங்களையே மாற்றி அமைப்பதில் சோவியத் அடையப்போகும் வெற்றியைத் தடுத்து, குழப்பம் விளைவிக்கச் செய்யும் சதி வேலை” என்று கூறினார் ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட லைசென்கோ என்கிற வேளாண்மை அறிவியலாளர்.
ட்ரோஃப்பிம் லைசென்கோ தடாலடி ஆசாமி. வாய்ப்பந்தல் போடுவதில் மன்னன். கூசாமல் அதியற்புத விளைவுகளைத் தான் உருவாக்கியதாகக் கதைவிடுபவர். இவரது வாய்ச்சவடாலில் மயங்கி, இவரது சில செயல்முறைகளைத் தமது மரபணுச் சோதனைகளில் பயன்படுத்தலாம் என நினைத்து, லைசன்கோவை முதலில் பிரபலப்படுத்தியவர் மரபணுவியலாளர் நிகோலாய் வவிலோவ். ஸ்டாலினின் கூட்டுப்பண்ணை முறை, விவசாயத்துக்கே உலை வைத்து, பாரம்பரிய தானிய வகைகளை இல்லாமல் ஒழித்துவிட்டது. இந்நிலையில் 4-5 ஆண்டுகளுக்குள் அதிக விளைச்சல் தரும் புதிய தானிய வகைகளை உருவாக்க உத்தரவிட்டார் ஸ்டாலின். மரபணுவியலாளர்கள் இதை எதிர்த்தனர். அன்றையச் சூழலில் அத்தகைய தானிய வகைகளை உருவாக்கக் குறைந்தது 12 ஆண்டுகளாவது ஆகும். லைசென்கோ இதனை நல்ல வாய்ப்பாகப் பார்த்தார்: “நான் 4 வருடங்களில் அப்படிப்பட்ட தானியங்களை உருவாக்கித் தருகிறேன். ஜெனிடிக்ஸ் ஒரு முதலாளித்துவ ஏமாற்றுத்தனம் என நிரூபிக்கிறேன்.”
1939 இல் லைசென்கோ சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழில் தெளிவாக அறிவித்தார்: “அறிவியலில் இருக்கும் பொய்களையும் குப்பைகளையும் நாங்கள் மறுக்கிறோம். இயக்கமில்லாத மெண்டலிய-மோர்கனிய ஜெனிடிக்ஸை நாங்கள் ஒதுக்கித் தள்ளுகிறோம்.”
ஆகஸ்ட் வெய்ஸ்மான் என்கிற உயிரியலாளர் ஜெனிடிக்ஸின் முக்கியப் பிதாமகர்களில் ஒருவர். உயிரினங்கள் தங்கள் உடற்செல்களில் (somatoplasm) அடையும் மாற்றங்கள் மறு தலைமுறைக்குச் செல்வதில்லை, இனப்பெருக்கச் செல்களில் (germplasm) அடையும் மாற்றங்களே அடுத்தத் தலைமுறைக்குச் செல்லும் என்னும் அடிப்படை விதியை அவர் கண்டுபிடித்திருந்தார். இன்று பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பது போல அடிப்படையான உயிரியல் விதி இது. பள்ளி மாணவர்களுக்குக்கூடத் தெரியும். ஆனால் ஸ்டாலினும் லைசென்கோவும் இதையெல்லாம் திட்டவட்டமாக மறுத்தனர். ஏனெனில், ஸ்டாலினின் புரிதலின்பாற்பட்ட மார்க்சிய சுவிசேஷத்துக்கு ஏற்றதாக இல்லையே.
ஸ்டாலின் 1947 இல் லைசென்கோவுக்கு எழுதினார்: “சுற்றுச்சூழலிலிருந்து பெறும் குணாதிசயங்கள் மரபுவழியாகக் கடத்தப்படுவதில்லை என நினைக்கும் வெயிஸ்மானிஸ்டுகளுக்கும் அவர்களது கோஷ்டியினருக்கும் நீண்ட காலத்துக்கு அவை குறித்தெல்லாம் பேசும் உரிமையே இருக்கக் கூடாது.”
இது வெறும் தத்துவார்த்த அரசியல் சார்பு மட்டுமல்ல, ஏதோ தலைமை மதகுருவுக்குப் பிடித்த ஆசாமியை உளறவைத்துக் கொண்டிருக்கிறார் என்றுவிட்டுவிட. லைசென்கோவை எதிர்த்த, ஜெனிடிக்ஸை ஆதரித்த மரபணுவியலாளர்கள் திறமையுடன் வேட்டையாடப்பட்டனர்.
அதில் முக்கியமானவர் நிகோலாய் வவிலோவ். லைசென்கோவை முதலில் ஆதரித்தவர். மரபணுவியலாளரின் பூர்விகங்கள்
ஆராயப்பட்டன: “நீ குலாக்குகள் சாதியில் பிறந்தவன், அதனால்தான் சாமானியனான லைசென்கோவுக்கு எதிராக நடக்கிறாய்” என்று கட்சி அதிகாரிகளால் அறிவியலாளர்கள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்கள். ‘ஜெனிடிக்ஸ் பொய், முதலாளித்துவ சதி, லைசென்கோ உருவாக்கிய படைப்பாக்கப் பரிணாமமே உண்மை என்று சொல்லுங்கள்’ என அறிக்கையிடும்படி ‘கேட்டுக்கொள்ள’ப்பட்டார்கள். ‘முடியாது’ என்றவர்கள் சைபீரியாவுக்குச் சென்றார்கள். துரோகிகள் என குற்றம்சாட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள். சில அறிவியலாளர்கள் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள். 1948 இல் அதிகாரபூர்வமாக ஜெனிடிக்ஸ் சோவியத் யூனியனில் தடை செய்யப்படுவதாக பொலிட் பீரோ அறிவித்தது.
பஞ்சம் அலையடித்தது. லைசென்கோவால் தான் சொன்னபடி மாய மந்திர விளைச்சல்களைக் காட்டமுடியவில்லை. ஆனால் சித்தாந்த சமாளிப்புகளைச் சளைக்காமல் ஸ்டாலினுக்கு அள்ளி வீசிக்கொண்டிருந்தார். மற்றொருபுறம் பிரசாரப் புள்ளிவிவரங்கள் சர்வதேச நம்பிக்கையாளர்களின் காதுகளில் பூ சுற்ற, இரும்புத்திரை மறைவில் மக்கள் மடிந்து கொண்டிருந்தார்கள். பிரசாரத்துக்கு மட்டுமல்ல, உயரதிகாரிகளிடமிருந்து உயிர் தப்பிக்கவே கீழதிகாரிகள் உண்மையை மறைத்துப் பொய் புள்ளிவிவரங்களைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை.
உண்மையைச் சொன்னால் சைபீரியா, வதை முகாம்கள், சித்திரவதைகள். தனக்கு மட்டுமல்ல, தன் குடும்பத்தினருக்கும்.
இந்த அடியிலிருந்து வெளியில் வர சோவியத் வேளாண்மைக்கு அடுத்த அரை நூற்றாண்டு தேவைப்பட்டது. ஏழுமுறை சோவியத்தின் மிக உயர்ந்த விருதான லெனின் விருது, “பாட்டாளி வர்க்க தீர புருஷன்” விருது என விருதுகளால் கௌரவிக்கப்பட்ட லைசென்கோ 1976 இல் மரணமடைந்தார்.
வவிலோவ்?
“நாங்கள் மரணத்தைத் தழுவுவோம் ஆனால் அறிவியல் உண்மைகளைக் கைவிட மாட்டோம்” என்று சொன்ன அவரது வார்த்தைகளைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்தார் ஸ்டாலின். கலிலியோ போல, இல்லை அதைவிடக் கொடுமையான திறமையுடன் விசாரிக்கப்பட்டார் வவிலோவ். 1700 மணி நேரங்கள் கொண்ட 400 விசாரணைகள். அடிகள். இரவில் எழுப்பிவரப்பட்டு பத்து மணி நேரம் தொடர்ச்சியாக நிற்க வைக்கப்பட்டு விசாரணை. அன்றைய உலகின் விரல்விட்டு எண்ணக்கூடிய தலைசிறந்த தாவரவியல்-வேளாண்மை மரபணுவியலாளர்களில் ஒருவர் வவிலோவ். இறுதியாக அவருக்குத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் தண்டனை அளிக்கப்பட்டது.
ஆனால் இரண்டாம் உலகப்போர் தொடங்கிவிட்டபடியாலும் வேறு சிலரின் முயற்சியாலும் அது இருபதாண்டு வதை முகாம் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
1943 ஆம் ஆண்டின் ஏதோ ஒரு நாள் அது. சோவியத்தின் பஞ்சத்தைக் களைய முனைந்து 200,000 தானிய விதை வகைகளைச் சேகரித்து வந்த நிகோலாய் வவிலோவ் சரியான உணவின்மையால் சிறையில் அனாதரவாக இறந்தார். ஸ்டாலினின் வார்த்தைகள் சத்தியமானவை:
”வறட்சியையும் நாங்கள் எங்கள் அதிகாரத்தில் வைத்திருப்போம்.”
பின்குறிப்பு:
ஸ்டாலின் காலத்துக்குக்கொஞ்ச காலம் கழித்து வவிலோவ் சோவியத் யூனியனால் மீள்-அங்கீகாரம் கொடுக்கப்பட்டார். கலிலியோவின் மரணத்துக்குப் பிறகு அவர் சொன்னது சரிதான் என போப் ஒப்புக்கொண்டது போல.
சோவியத் யூனியனில் வவிலோவுக்கு நினைவு தபால்தலைகூட வெளியிட்டார்கள்.
மேலதிகத் தகவல்களுக்கு:
* · ஆர்தர் கோய்ஸ்லர், Arrow in the Blue (New York:Macmillan, 1952)
* · மார்க் பொபோவ்ஸ்கி, The last days of Nikolai Vavilov, The New Scientist, 16 November 1978.
* · மிகிலோஸ் குன், Stalin: an unknown portrait, Central European University Press, 2003
* · வலேரி என். சோய்ஃபெர், The consequences of political dictatorship for Russian science, Nature Reviews Genetics 2, 723-729 (September 2001),
* ஆன்லைனில்: http://tracerkinetics.engr.iupui.edu/…/lysenko-nature-rev-genetics2001-nrg0901_723a.pdf