மார்க்சியத்தைப் போல் தவறாகப் புரிந்துகொள்ளப்படும், மூர்க்கமாக எதிர்க்கப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் இன்னொரு சித்தாந்தம் கிடையாது. கற்பனைக்கும் எட்டாத பல குற்றச்சாட்டுகள் இன்றுவரை மார்க்சியர்கள் மீது முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, கலை மற்றும் இலக்கிய ரசனை தொடர்பானது.
‘வரட்டுச் சித்தாந்தங்களை முன்வைப்பதைத் தாண்டி இடதுசாரிகளால் வேறு எதையும் ரசிக்கும்படி படைக்கமுடியாது. காரணம் மார்க்சியம் கலை, இலக்கிய ரசனைக்கு எதிரானது. ‘சிவப்பு மை’ கொண்டு இதுகாறும் எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகள் அனைத்தும் ‘அரசியல் பிரசாரங்கள்’ அன்றி வேறில்லை. சோவியத் யூனியனாக இருந்தாலும் சரி, செஞ்சீனமாக இருந்தாலும் சரி. இங்கிருந்து உயர் ரக இலக்கியங்கள் தோன்றியதில்லை.’
இது உண்மையா என்பதை லெனினின் வார்த்தைகளில் இருந்தே அணுகுவது சரியாக இருக்கும். மார்க்சியவாதியும் பெண்ணியவாதியுமான கிளாரா ஸெத்கின் லெனின் பற்றிய நினைவுகளை கட்டுரைகளாக எழுதியுள்ளார். இலக்கியம் குறித்தும் இலக்கிய வடிவங்கள் குறித்தும் பெண்ணியம் குறித்தும் கிளாரா லெனினுடன் மேற்கொண்ட உரையாடல்கள் இந்தக் கட்டுரைகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அத்தகைய மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, ‘என் நினைவுகளில் லெனின்’ என்னும் தலைப்பில் விடியல் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து நம் தேடலைத் தொடங்குவோம்.
பல்வேறு வகையான படைப்புகள் இலக்கியச் சூழலில் வெளிவருகின்றன. சில பாரம்பரிய கலாசார வாசத்துடன் அமைந்திருக்கும். இன்னும் சில மேலைநாட்டு வடிவங்களின் தாக்கத்தில் அமைந்திருக்கும். இவற்றை எப்படி மதிப்பீடு செய்வது? ‘மெய்யாகவே எழில் படைத்த ஒன்றை பழையது என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்கிவிடுவதும்… புதியது என்ற ஒரே காரணத்துக்காகப் புதியதை மறுபேச்சின்றிக் கைகட்டித் தொழ வேண்டிய தெய்வமாக வைத்துக் கும்பிடுவதும்’ அபத்தத்திலும் அபத்தம் என்கிறார் லெனின்.
மேலைநாடுகளில் பிரபலாமாகிவரும் இசங்களை அணுகுவதில் தனக்குள்ள தயக்கங்களையும் அச்சங்களையும் லெனின் பதிவு செய்கிறார். ‘ என்னைப் பொறுத்தவரை இத்துறையில் நான் ஒரு ‘காட்டுமிராண்டியே’ என்பதாகத் துணிவுடன் அறிவிக்க விரும்புகிறேன். Expressionism, futurism, cubism இத்யாதி வாதங்களின் கலைப்படைப்புகளை என்னால் கலைமேதாவிலாசத்தின் தலையாய வெளியீடுகளாகக் கருத முடியவில்லை. என்னால் இவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு இவை இனிமை பயப்பதாயில்லை.’ தன்னுடைய புரிதலின் அடிப்படையில் கீழ்வரும் முடிவுக்கு அவர் வந்து சேர்கிறார். ‘இதில் பெரும் பகுதி வெறும் கபடக் கூத்தும், கலைத் துறையில் மேலைய நாடுகளில் ஆட்சி செலுத்தும் பாணிகளைத் தம்மையும் அறியாமல் வழிபடும் போக்குமேயன்றி வேறில்லை.’
மேலைநாட்டு கலை வாதங்களோடு மக்களின் கலை வடிவத்தை ஒப்பிட்டு எது அத்தியாவசியமானது என்று விவாதிக்கிறார் லெனின். ‘பெருந்திரளான தொழிலாளி, விவசாயி மக்களுக்குச் சாதாரண கறுப்பு ரொட்டியே அவசரத் தேவையாயிருக்கும் ஒரு நேரத்தில் சொற்பச் சிறுபான்மையோருக்கு நாம் அருஞ்சுவை விருந்துணவு தயாரித்தளித்துக் கொண்டிருப்பதா?’
லெனின் தொடர்கிறார். ‘இதனை அதன் நேர்பொருளில் மட்டுமின்றி அதன் உருவகப் பொருளிலும் உணர்ந்து செயல்பட வேண்டுமென்பது தெளிவு. ஏனெனில், எந்நேரமும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் நாம் நம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். நாம் நிர்வகிக்கவும் கணக்கிடவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இவர்களை முன்னிட்டுதான். இது கலை பண்பாட்டுத் துறைக்கும் பொருந்துவதாகும்.’
இலக்கியத் தரத்தை உயர்த்துவதைக் காட்டிலும் முக்கியமான வேறொரு காரியம் இருக்கிறது என்றார் லெனின். ‘கலை மேலும் மேலும் மக்களையும், மக்கள் மேலும் மேலும் கலையையும் நெருங்கிவர வேண்டுமாயின், முதலில் நாம் பொதுவான கல்வி, பண்பாட்டு தரங்களை உயர்த்தியாக வேண்டும்.’
ஏன் என்பதை லெனின் விவரிக்கிறார். ‘நாங்கள் வறுமைப் பிணியால் பீடிக்கப்பட்ட மக்களாகவே, முற்றிலும் ஓட்டாண்டியாகவே இருக்கிறோம். எழுத்தறியாமையை எதிர்த்து மெய்யான, விடாப்பிடியான போõட்டம் நடத்துகிறோம் என்பது உண்மைதான். பெரியவை, சிறியவை என்னும் பேதமின்றி எல்லா ஊர்களிலும் எல்லாக் கிராமங்களிலும் நூலகங்களும் படிப்பறைகளும் நிறுவுகிறோம். எல்லா வகையான பயிற்சித் திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்கிறோம்… ஆனால், சர்வசாதாரண அறிவும் மிகவும் ஆரம்ப நிலைக் கலாசாரமுமின்றி இருளில் வதையும் கோடானு கோடியான எம்மக்களுக்கு இவையெல்லாம் எம்மட்டில்?’
‘லட்சோப லட்சக்கணக்கான குழந்தைகள் தக்கபடி வளர்க்கப்படாமலே, கல்வி இல்லாமலே ஆளாகி வருகின்றனர். இவர்கள் தமது தந்தையரும் பாட்டான்மார்களும் எப்படி இருந்தனரோ அதே போல அறியாமை இருளில் மூழ்கியவர்களாகவே, கலாசார வளர்ச்சி இல்லாதோராகவே இருந்து வருகின்றனர். இதன் விளைவாய் எவ்வளவு ஆற்றல் மலராமலே அழிந்துவிடுகிறது, அறிவொளி பெற வேண்டுமென்ற ஆவல் காலுக்கடியில் மிதிபட்டு நசுக்கப்படுகிறது! பேரபாயம் விளைவிக்கும் நிலைமை இது!’
உயர்ந்த கலை வடிவங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கும் திறன் கொண்டவை என்னும் வாதத்தை லெனின் எதிர்கொள்கிறார். ‘நமது தொழிலாளர்களும் விவசாயிகளும் தமது உழைப்பைக் கொண்டு அரசைப் பராமரித்து வருகிறார்கள். அவர்கள் புரட்சியை உண்டாக்கி, பெருக்கெடுத்து ஓடும்படி தமது இரத்தத்தைச் சிந்தி அளப்பருந்தியாகங்கள் புரிந்து புரட்சியின் இலட்சியத்தைப் பாதுகாத்தனர். நிச்சயம் நமது தொழிலாளர்களும் விவசாயிகளும் கேளிக்கைகளைக் காட்டிலும் சிறப்பானவற்றைப் பெறத் தகுதியுடையவர்கள். எனவேதான் பொதுக்கல்வியையும் போதனையையும் மிகப் பெரும் அளவில் அளித்திடுவதை நாம் தலையாய பணியாகக் கொண்டு பாடுபடுகிறோம்.’
உழைக்கும் மக்களின் கலை வடிவத்தையும் மேட்டுக்குடி மக்களின் கலை வடிவத்தையும் எதிரெதிரே நிறுத்தி ஒன்றோடொன்று மோதவிடுகிறார் லெனின். இரண்டின் அடிப்படைகளையும் அவர் ஆராய்கிறார். இரண்டும் எங்கிருந்து உதிக்கின்றன, யாரைச் சென்றடைகின்றன, யாரால் ரசிக்கப்படுகின்றன என்பதை அவர் கவனத்துடன் பார்க்கிறார். நல்ல கலை வடிவம் மக்களால், மக்களுக்காக உருவாக்கப்படுகிறது என்னும் முடிவுக்கு அவர் வந்து சேர்கிறார். அதே சமயம், இலக்கியத்தைக் காட்டிலும் முக்கியமான பல பிரச்னைகள் நம் உடனடி கவனத்தை ஈர்க்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ‘தானியப் பிரச்னை தீர்க்கப்படுமாயின், இது கலாசாரத்துக்கான அடித்தளத்தின்மீது மெய்யாகவே புதியதான மாபெரும் கம்யூனிசக் கலை உதித்தெழும். இக்கலை அதன் உள்ளடக்கத்துக்கு ஏற்றதொரு வடிவத்தைத் தோற்றுவிக்கும்.’
எனில், கலையெனப்படுவது எது? ‘கலையானது மக்களுக்கு உரியதாகும். உழைப்பாளி மக்கள் திரளிடையே அதன் வேர்கள் ஆழப் பதிந்திருக்கவேண்டும். அது அவர்களுக்குப் புரியக்கூடியதாக இருக்கவேண்டும். அவர்களது நேசத்துக்கு உரியதாக இருக்கவேண்டும். அது அவர்களுடைய உணர்வுகளையும் சிந்தனைகளையும் சித்தத்தையும் ஒன்றிணைத்திட வேண்டும்; உயர்த்திட வேண்டும். அவர்களிடத்தே அது கலை உணர்ச்சியைத் தட்டியெழுப்பிச் செயல்படவைத்து வளர்த்திட வேண்டும்.’
லெனினின் மேற்கூறிய விவாதங்களைத் தொகுத்து பார்க்கும் சிலர் தவறான முடிவுகளுக்கு வந்து சேரும் வாய்ப்பும் இருக்கிறது. அதாவது, லெனின் காலத்தில் சோவியத் யூனியனில் கலை, இலக்கியம் ஆகியவை வளரவில்லை. மேட்டுக்குடி மக்களின் பொழுதுபோக்குகள் தடை செய்யப்பட்டன. அவை வளரவிடப்படவில்லை. கேளிக்கைகள் மறுக்கப்பட்டன. ரசனை அழித்தொழிக்கப்பட்டது. கம்யூனிசம் இலக்கியத்துக்கும் இலக்கியக் கோட்பாடுகளுக்கும் எதிரானது. நுண்உணர்வுகளுக்கு எதிரானது. படைப்பாளிகளுக்கு எதிரானது.
ஆனால், இந்த முடிவுகள் அனைத்தும் பிழையானவை என்பது புலனாகிறது. அடித்தட்டு மக்களின் இலக்கியம் மட்டுமல்ல, மேட்டுக்குடியினரின் கேளிக்கைகளும் செழிப்புற்று வளர்ந்தன. போல்ஷாய்த் தியேட்டரில் அதியற்புத பாலேக்களும் நாடகங்களும் நடத்தப்பட்டன. புதிய, நவீன கண்காட்சிகள் திறக்கப்பட்டன. ஓவியமும் சிற்பக் கலையும் வளர்ந்தது. லெனின் குறிப்பிடுவது போல் இந்த மாற்றங்கள், ‘போல்ஷ்விக்குகளான நாங்கள் வெளிநாடுகளில் பலரும் நினைத்தது போல பயங்கரமான காட்டுமிராண்டிகள் அல்ல என்பதை அங்கு ஏராளமானோருக்குக் கண்கூடாக்கின.’
ஆக, லெனினின் விருப்பு வெறுப்புகள் சோவியத் யூனியனின் அரசுக் கொள்கைகளாகப் பரிணமிக்கவில்லை என்பதை நாம் இங்கே கவனிக்கவேண்டும். அடித்தட்டு மக்களின் கலை வடிவங்களோடு சேர்ந்து, ‘சிறுபிள்ளைத்தனமான முதிர்ச்சியற்ற’ கேளிக்கைகளும் நிறையவே இடம்பெற்றன. ‘இவற்றுக்காக எங்கள் சக்தியும் சாதனங்களும் பெரிய அளவில் செலவாகிவிடுகின்றன.’ என்று தனது வருத்தத்தை லெனின் பகிர்ந்துகொள்கிறார். அவர் தொடர்கிறார்.‘சில கலைக்காட்சிகளில் காட்டப்படும் மிகவும் அற்புதமான கலைப் படைப்புகளையும்விட எங்கோ தொலைவில் ஒரு மூலையிலுள்ள கிராமங்களில் இரண்டு மூன்று ஆரம்பப் பள்ளிகளை அமைத்திடுவதே எனக்கு அதிகமாக மன மகிழ்ச்சி அளிக்கிறதென்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும்.’
கிளாரா ஸெட்கின் குறிப்பிடுவது போல், ‘சாதாரண சின்னஞ்சிறு மனிதனை அளவிலா அன்போடும் நம்பிக்கையோடும்’ அணுகினார் லெனின். எனவே, அவருடைய இலக்கியக் கொள்கை அவர்களையே சார்ந்திருந்தது. லெனின் மட்டுமல்ல மார்க்சியமும் இலக்கியத்தை இப்படித்தான் அணுகுகிறது.