பஞ்ச தந்திரக் கதைகள் / 1
கி.மு. 200ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் மகிழாரூப்பியம் என்ற நகரத்தை அமரசக்தி என்ற அரசர் ஆண்டார். அவருக்கு பஹூசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி என்ற பெயர்களில் மூன்று மகன்கள் இருந்தனர்.
அந்த மூவர்க்கும் உலக அறிவு என்பது சிறிதளவும் இல்லை. சுகபோகங்களில் நாட்டம் கொண்டிருந்த அவர்கள் கல்வியின் மீது கொஞ்சமும் நாட்டமில்லாமல் இருந்தார்கள். வருங்காலத்தில் நாட்டை ஆளவேண்டிய தமது மகன்கள் இப்படி பொறுப்பில்லாமல் திரிவதைக் கண்டு கவலை கொண்ட அரசர் அமரசக்தி அவர்களுக்கு அறிவொளியை ஊட்டுவதற்காக விஷ்ணு சர்மா என்ற பண்டிதரை நியமித்தார்.
கல்வி என்றாலே வேப்பங்காயாக வெறுக்கும் இளவரசர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அவர்களுக்கு உலக அறிவையும், நீதி நெறியையும் புகட்டுவதற்காக விஷ்ணு சர்மா ஒரு புதிய வழியைக் கையாண்டார்.
அவர் ஆறு மாதங்கள் அம் மூவருக்கும் உலக அறிவினை வடமொழியில் ஊட்டினார். வெறும் வார்த்தைகளால் அல்ல, அழகிய கதைகளால். அதுவும் அரசியல் தந்திரங்களை மையப்படுத்திப் பறவை, விலங்குகளைக் கதைமாந்தர்களாக அமைத்து, சுவாரஸ்யம் குறையாமல் கதை சொன்னார்.
அவர் கூறிய கதைகளின் தொகுப்பே ‘பஞ்ச தந்திரக் கதைகள்’.
மித்திரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்கிரகம், அர்த்தநாசம் அல்லது லப்தஹானி, அசம்பிரேக்ஷ்ய காரித்வம் ஆகிய ஐந்தும் இணைந்ததே ‘பஞ்ச தந்திரம்’ ஆகும்.
- முதல் தந்திரம் – மித்திரபேதம் – நட்பைக் கெடுத்துப் பகையை உண்டாக்குதல்.
- இரண்டாம் தந்திரம் – சுகிர்லாபம் – தமக்கு இணையானவர்களுடன் பகையின்றி வாழ்தல்.
- மூன்றாம் தந்திரம் – சந்திவிக்கிரகம் – பகையை உறவாடி வெல்லுதல்.
- நான்காம் தந்திரம் – அர்த்தநாசம் – கிடைப்பனவற்றையெல்லாம் அழித்தல்.
- ஐந்தாம் தந்திரம் – அசம்பிரேக்ஷ்ய காரித்வம் – எவற்றையும் சிந்திக்காமல் செய்தல்.
மொத்தம் ஐந்து பெருங்கதைகள். அவை ஒவ்வொன்றுக்குள்ளும் உப கதைகள் சில. ஆக மொத்தம் 87 கதைகளைக் கூறினார். அக் கதைகளின் வழியே உலகையும் அரசாட்சியின் சூட்சுமங்களையும் இளவரசர்கள் மூவரும் அறிந்து கொண்டனர்.
இக் கதைகளை நாமும் தெரிந்துகொண்டால் தற்கால அரசியலை மட்டுமல்ல, எக்காலத்தின் அரசியலையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். உலகத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் இக்கதைகள் பேருதவி புரியும்.
பஞ்ச தந்திரக் கதைகளைப் பலமொழிகளில் பலரும் எழுதியுள்ளனர். வெளிநாடுகளிலும் இந்தக் கதை பரவலாக உள்ளது. இவை எதிர்காலத்தில் பெரிய ஆளுமைகளாக உருவாகவுள்ள சிறார்களுக்கான கதைகள். பெரியவர்களும் இக் கதைகளைப் படித்து, தங்களின் நிலைப்பாடுகளைச் சீர்செய்து, சிறந்த ஆளுமைகளாக உருமாற முடியும்.
தாண்டவராய முதலியார் ‘பஞ்சதந்திரம்’ என்ற தலைப்பில் இக் கதைகளைத் தமிழில் எழுதினார். அது 115 பக்கங்களில் புத்தகமாக கி.பி.1963ஆம் ஆண்டு வெளிவந்தது. அவர் சைவ சமயப் பற்றுடையவர். அதனால், ‘விஷ்ணு சர்மா’ என்ற பெயரை ‘சோம சன்மா’ என்று பெயர் மாற்றம் செய்தார். ‘அமர சக்தி’ என்ற அரசனின் பெயரினை ‘சுதரிசனன்’ என்று மாற்றினார். இவரைப் பின்பற்றித் தமிழில் இக்கதைகளை எழுதியவர்கள் ‘வர்த்தகர் வர்த்தமானன்’ என்ற பெயரை ‘மருதப்பச் செட்டியார்’ என்று மாற்றினர். ‘செட்டியார்கள் மட்டுமே வணிகத்தில் சிறந்தவர்கள்‘ என்ற நினைப்பும் சாதியுணர்வும் இதற்குக் காரணம். இவற்றையெல்லாம் தாண்டித்தான் நாம் நீதியையும் தர்மத்தையும் கண்டடையவேண்டும்.
***
கதை வழிப் பாடம்
பண்டிதர் விஷ்ணு சர்மாவுக்கு இது சவாலான காரியம்தான்!
அவர் இதுவரை எத்தனையோ அறிவார்ந்த சிறுவர்களுக்கு உலகியல் அறிவினையும் கலை, இலக்கிய அறிவையும் அரசியல் நுணுக்கங்களையும் திறம்படக் கற்றுக்கொடுத்து அவர்களைச் சிறந்த மனிதர்களாக உருவாக்கியுள்ளார். அவர்களுள் யாரும் மன்னராகவில்லையே தவிர, பலர் அரசவையில் பணியாற்றியுள்ளனர். இன்னும் பலர் பெரும் அறிவாளிகளாக, சகலகலா விற்பன்னர்களாக பல நாடுகளையும் சுற்றி வந்து பெயரும் புகழும் பெற்றுத் திகழ்கிறார்கள். அவ்வளவுக்கு பெருமை பெற்றவர் விஷ்ணு சர்மா.
அந்தப் பெருமைக்கெல்லாம் பெரும் சோதனையாக வந்திருக்கிறார்கள் மகிழாரூப்பியம் மன்னரின் புதல்வர்கள்.
மன்னர் அமரசக்தியிடம் வருங்காலத்தில் மன்னராகவுள்ள அவரது மூன்று அறிவற்ற சிறுவர்களுக்கு வாழ்வியலோடுகூடிய அரசியல் பாடம் கற்றுத் தந்து சிறந்த அறிவாளிகளாக உருவாக்குவதாக வாக்களித்து வந்திருக்கிறார் விஷ்ணு சர்மா. அதை செயல்படுத்துவது எப்படி என்பதுதான் அவரது முதல் யோசனையாக இருந்தது.
கல்வி பயிலுவதில் மூவருக்கும் துளியும் ஆர்வமில்லை. அதை கசப்பு மருந்துபோல் பாவித்தார்கள். ஆனால் அந்தக் கசப்பு மருந்தை இவர் கண்டிப்பாக அவர்களுக்கு புகட்டித்தான் தீரவேண்டும். எனில் கசப்பு மருந்தை எந்த இனிப்புடன் சேர்த்துத் தருவது?
பண்டிதர் ஆழ்ந்து சிந்தித்தார். சிறுவர்களுக்கு என்ன பிடிக்கும்? கதை கேட்கப் பிடிக்கும்! எனில் இளவரசர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நீதிகளையும், வாழ்வியல் பாடங்களையும் இவர்களுக்கு கதையாகவே போதித்தால் என்ன?
கதைகளில் மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளும் பறவைகளும் வந்தால், பேசினால், கருத்துக்களைக் கூறினால் சிறார்கள் மேலும் சுவாரஸ்யமாகக் கேட்பார்களே; விஷ்ணு சர்மாவுக்கு பொறி தட்டியது.
உலகியல், அரசியல் ஆகியவற்றில் உள்ள நுணுக்கங்களை விலங்கினங்கள், பறவையினங்கள் வழியாக மனிதர்களுக்குக் கூறுவதுபோல மகா கற்பனைக் கதைகளை ஒரு வரிசையில் தொடர்புபடுத்திக் கூறினால் இளவரசர்கள் ஆர்வமாகக் கேட்பார்கள், தான் சொல்ல வரும் கருத்து அவர்கள் மனத்தில் ஆழமாகப் பதியும் என்று நினைத்தார்.
உலகியல், அரசியல் தொடர்புடைய நீதி, அநீதி சார்ந்த கருத்துக்களை மனத்தில் தொகுத்துக்கொண்டார். தன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டார். அவரின் ஆழ்மனத்திற்குள்ளிருந்து விலங்குகளும் பறவைகளும் பாய்ந்தும் பறந்தும் வந்து அவரின் நாவில் அமர்ந்து குதியாட்டம் போட்டன. பண்டிதர் தன் வெண்தாடியைத் தடவிக்கொண்டு, அந்த மூன்று இளவரசர்களையும் அழைத்தார். பாடத்தை, நல்ல கதைகளின் வழியாகச் சொல்லத் தொடங்கினார்.
முதல் தந்திரம் – மித்திரபேதம்
1. நட்பைக் கெடுத்துப் பகையை உண்டாக்குதல்
அது ஒரு பெரும் நகரம். அங்கு அழகான குளங்களும் குன்றுகளும் இருந்தன. நிறைய கோயில்களும் மாடவீடுகளும் இருந்தன. அங்கே, ஏழைகளும் பணக்காரர்களும் சம அளவில் வாழ்ந்தனர். எங்கும் பசுமை நிறைந்து, செழிப்புடன் அந்த நகரம் விளங்கியது. அங்கு வாழ்ந்த வணிகர்கள் பலர். அவர்கள் செய்த தொழில்கள் மிகப்பல. அவற்றின் வழியாக அவர்கள் ஈட்டிய செல்வங்களை அளந்தறிய முடியாது.
அவர்களுள் ஒரு வணிகன் மட்டும் சற்று வித்தியாசமாகச் சிந்தித்தான். அவன் பெயர் வர்த்தமானன். அவனிடம் செல்வம் மிகுதியாக இருந்தது. அவன் செய்துவரும் தொழில் சிறப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், அவன் மனம் அலைபாயத் தொடங்கியது.
‘இப்போது வைத்திருக்கும் செல்வம் போதுமா? அல்லது இன்னும் வேண்டுமா? ‘போதும்’ என்று முடிவெடுத்துவிட்டால், இனி வணிகம் செய்யவேண்டாமா? ‘இன்னும் வேண்டும்’ என்றால், எப்படி வணிகத்தை விரிவாக்கிக்கொள்வது?’
‘வணிகம் செய்யவில்லை என்றால், இப்போது இருக்கும் செல்வம் அப்படியே குறையாமல் இருக்குமா? செலவு செய்யாமல் இருந்தால் குறையாதுதானே! செலவு செய்யாமல் எப்படி வாழ்வது? ‘இருக்கும் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்து வாழ்வதும் இல்லாதவர்களுக்குக் கொடுத்து வாழ்வதும் சிறந்த புண்ணிய வாழ்வு. அத்தகைய வாழ்வினை வாழ்பவனே மேலுலகத்தில் குறையின்றி வாழ்வான்’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படியானால், என்னிடம் இருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குக் கொடுக்கவேண்டும் அல்லவா?’
‘அப்படிக் கொடுத்தால் செல்வம் குறையுமே! குளத்தில் இருக்கும் தண்ணீர் மழை பொழிந்தால்தானே கூடுதலாகும். குளம் நிறைந்து வழியும்! மழை பொழியவில்லையென்றால் குளத்தில் உள்ள நீர் சூரிய ஒளியாலும் வறண்ட நிலத்தாலும் உறிஞ்சப்பட்டு குளமே வற்றிவிடுமே! அதுபோல செல்வமும் கரைந்துவிடுமே!’
‘செல்வம் இல்லாதவன் இந்த நகரத்தில், ஏன் இந்த உலகத்தில் வாழ்வது சாத்தியமா? பணம் இல்லாதவன் பிணம்தானே! செல்வம் இல்லையென்றால் நான் இறக்கவேண்டியதுதான். அதனால், நிறைய செல்வம் வேண்டும். அதற்கு வணிகத்தை விரிவாக்க வேண்டும்’
‘வணிகத்தை விரிவாக்கிப் பெருஞ்செல்வம் சேர்த்தால் மட்டும் போதுமா? சேர்த்த செல்வத்தை எப்படிக் காப்பாற்றுவது? முறையாகச் செல்வத்தைக் காப்பாற்றத் தவறிவிட்டால், ஏதாவது ஒரு வழியில் மொத்தச் செல்வமும் அழிந்துவிடுமே! ஆகையால் எப்படியாவது செல்வத்தைக் காப்பாற்ற வேண்டும்.’
‘எப்படி வணிகத்தை விரிவாக்குவது? இப்படியே இந்த நகரத்திலேயே வணிகம் செய்தால், குறிப்பிட்ட அளவில்தான் செல்வம் சேரும். இந்த நகரத்தை விட்டு அருகில் உள்ள காட்டைக் கடந்து வேறு சில நகரங்களுக்குச் சென்று வணிகம் செய்தால் அளவுக்கு அதிகமான செல்வம் வந்து சேரும்.’
‘ஆம்! அதுதான் சரியான வழி. வேறு நகரத்திற்குச் சென்று, வணிகம் செய்து, செல்வம் சேர்த்து, அதனைக் கொண்டு செல்வச் செழிப்புடன் இருக்கலாம். ஏழைகளுக்குக் கொடுக்கலாம். அதனால், புண்ணியம் உண்டாகும். அந்தப் புண்ணியத்தை வைத்துக்கொண்டு மேலுலகிலும் நன்றாக வாழலாம். சரி, இன்றே புறப்படலாம்’ என்று ஒரு வழியாக முடிவெடுத்தான் வணிகன் வர்த்தமானன்.
அன்று மாலையில், தன்னுடைய வணிகப் பொருள்களை ஓர் இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றினார் அந்த வணிகர். அந்த மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட ஒரு மாட்டின் பெயர் சஞ்சீவகன். மற்றொரு மாட்டின் பெயர் நந்தகன். இரண்டு வண்டிச் சரக்குகளை ஒரே வண்டியில் ஏற்றினால் எப்படியிருக்கும்? அவை என்ன பஞ்சுப் பொதிகளா? தானிய மூட்டைகள் அல்லவா! பாரம் தாங்காமல் சஞ்சீவகனும் நந்தகனும் திண்டாடின.
புறப்படும்போது அந்த இரண்டு மாடுகளும் திடகாத்திரமாகத்தான் இருந்தன. அதனால்தான், அவற்றை நம்பி இத்தனைச் சுமையுடன் நெடுந்தொலைவு செல்வதற்கு வர்த்தமானன் துணிந்தார். அன்று மாலை வரை எல்லாம் சுமுகமாகத்தான் போனது. மாலை மங்கி இருளத் தொடங்கும்போதுதான் அந்த விபத்து நேர்ந்தது.
வண்டி நகரைக் கடந்து, வெகுதூரம் வந்து, காட்டுவழியில், இருட்டில், தட்டுத்தடுமாறிச் சென்றது. அப்போது ஒரு கல் தடுக்கவே சஞ்சீவகன் தடுமாறிவிட்டது. வண்டியின் பாரம் அதன் கணுக்காலை உடைத்தது. வலியின் காரணமாக அது நொண்டி நொண்டி நடக்கத் தொடங்கி மேலும் வண்டியை இழுக்க முடியாமல் அப்படியே படுத்து விட்டது.
வணிகன் வர்த்தமானனுக்கு வருத்தம் உண்டாகியது. ‘முதன்முதலாக தன் நகரம் விட்டு, வேறு ஒரு நகரம் நோக்கி வாணிகம் செய்யலாம் என்று நினைத்தால், இப்படி ஒரு தடை வந்துவிட்டதே!’ என்று மனங்கலங்கினான்.
காட்டுவழியில் ஓர் அடிமையைத் தேடிப் பிடித்தான். அவனிடம் பணம் கொடுத்து, வேறொரு வண்டி மாட்டினை வரவழைத்தான். அதனை சஞ்சீவகனுக்குப் பதிலாகத் தன் வண்டியில் பூட்டினான். சஞ்சீவகனுக்குத் துணையாக அந்த அடிமையை நிறுத்திவிட்டு, அவனிடம் சிறிதளவு பணத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றான்.
இரண்டு நாட்கள் கழித்து அந்த அடிமை வர்த்தமானனைச் சந்தித்து, ‘உங்கள் மாடு கால் உடைந்ததால் ஏற்பட்ட காயத்தாலும் வலியாலும் துடித்துத் துடித்து இறந்துவிட்டது‘ என்று ஒரு பொய்யினை உண்மையைப் போலச் சொன்னான்.
உண்மையில், வர்த்தமானனிடம் பணம் பெற்றுக்கொண்ட அந்த அடிமை சஞ்சீவகனுக்குத் துணையாக அந்தக் காட்டில் இருக்காமல், காட்டுக்குள் சஞ்சீவனை அப்படியே விட்டு விட்டு வந்துவிட்டான்.. இரண்டு நாள் கழித்து, வர்த்தமானனைச் சந்தித்துப் பொய் கூறினான்.
‘காட்டுக்குள் நொண்டித் திரிந்த சஞ்சீவகன் உயிர் பிழைத்ததா?’ என்று பண்டிதரிடம் மூத்த இளவரசர் பஹூசக்தி கேட்டார். ‘சஞ்சீவகன் பிழைத்துக்கொண்டது!’ என்று கூறிய பண்டிதரிடம், குட்டி இளவரசர் அனந்த சக்தி, ‘எப்படி?’ என்று கேட்டார். காட்டில் வாழும் சஞ்சீவகன் பற்றி அவர்களுக்கு விரிவாகக் கூறத் தொடங்கினார் பண்டிதர் விஷ்ணு சர்மா.