புதிய தொடர் – அத்தியாயம் 1
இயந்திரங்களுக்கு வியர்ப்பதில்லை. அவை ஓயாமல் பணியாற்றுகின்றன. இயந்திரங்களுக்கு ஊதியம் கொடுக்கவேண்டியதில்லை. இயந்திரங்கள் மனிதர்களின் விரோதிகள். இயந்திரங்கள் மனிதர்களின் வேலைகளைப் பறித்து, அவர்களைப் பசியில் தள்ளி, கொல்கின்றன. நூற்றுக் கணக்கானவர்கள் பணியாற்றிய இந்தத் தொழிற்சாலையில் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களும் விரைவில் துரத்தப்பட்டுவிடலாம். நம் கண் முன்னால் நண்பர்களை, அவர்கள் குடும்பங்களை இயந்திரங்கள் சாகடித்திருக்கின்றன. என்ன செய்யலாம்?
இயந்திரங்கள் தொடுத்திருக்கும் இந்தப் போரை நிராயுதபாணியாக எதிர்கொள்வது சாத்தியமில்லை. எனவே, அழித்துவிடலாம். தொழிலாளர்கள் முடிவு செய்தனர். தாக்குதலுக்கு எதிர் தாக்குதலே தீர்வு. அழிவுக்கு அழிவே பதில். 1811-ம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம்ஷயர், லங்காஷயர், யார்க்ஷயர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் துணி ஆலைகளில் ஒன்று கூடினர். ஆவேசத்துடன் இயந்திரங்களைத் தாக்க ஆரம்பித்தனர். வியர்க்காத, உழைக்காத, ஊதியம் கேட்காத இயந்திரங்களுக்குத் திருப்பித் தாக்கவும் தற்காத்துக்கொள்ளவும் தெரியவில்லை. உடைந்து நொறுங்கின. இனி விடியல் என்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.
இவர்கள் லுட்டைட்டுகள் (Luddities) என்று அழைக்கப்பட்டனர். நெட் லுட் (Ned Lud) என்பவரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டதால் இந்தப் பெயர். கேப்டன் லுட், ஜெனரல் லுட் அல்லது கிங் லுட் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த இந்த நெட் லுட், அடிப்படையில் ஒரு நெசவாளி. நெட் லுட் பணியாற்றி வந்த ஆலையின் முதலாளி, ஒரு சமயம் அவரை சாட்டை கொண்டு அடித்துவிட்டார். லுட் வேலை செய்யாமல் சும்மா இருந்ததால் இந்தத் தண்டனை. வெறுப்பும் கோபமும் கொண்ட லுட், ஸ்டாக்கிங் ஃபிரேம் என்று அழைக்கப்பட்ட நெசவாலை இயந்திரத்தை உடைத்துச் சேதப்படுத்தினார்.
1779 வாக்கில் இந்தச் சம்பவம், ஒரு சாதாரண நெசவாளியாக இருந்த நெட் லுட்டை, தொழிலாளர்களின் கதாநாயனாக உயர்த்தியது. முதலாளியின் தண்டனைக்குப் பயந்து பணிந்துபோகாமல், துணிச்சலும் சுயமரியாதையும் கொண்டு நெட் லுட் தொடுத்த பதில் தாக்குதல் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்னொரு பாடத்தையும் அவர்கள் இந்தச் சம்பவத்தில் இருந்து கற்றுக்கொண்டனர். முதலாளிகளுக்குப் பலம் கொடுக்கும் சக்தி எது? நெட் லுட்டை எந்தத் தைரியத்தில் அவர் சாட்டையால் அடித்தார்? இயந்திரங்கள் கொடுத்த துணிச்சல்தானே? எனவேதான், லுட் இயந்திரங்களைத் தாக்கினார். இந்த உண்மை புரிந்தபோது, நெட் லுட் ஆதர்சத் தலைவராக உருவெடுத்தார்.
இங்கிலாந்தில் உள்ள லெஸ்டர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நெட் லுட் இருக்கிறார் என்று அப்போது சொல்லி வந்தார்கள். நெட் லுட்டைப் பார்த்தவர்கள் யாருமில்லை. ஆனால், அவரைப் பற்றிய செய்திகள் உலாவிக்கொண்டிருந்தன. அவரது சாகசங்கள் உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டன. அவரைப் புகழ்ந்து பல பாடல்கள் இயற்றப்பட்டன. நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. உண்மையில், நெட் லுட் என்று யாருமில்லை. அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம். ஆனால், நெட் லுட்டைத் தங்கள் தலைவராக ஏற்று அவர் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் உயிர்த்திருக்கும் ஒரு போராளி.
1811-ம் ஆண்டு நெசவாலை இயந்திரங்களை உடைத்துத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய தொழிலாளர்கள் லுட்டின் வழி வந்தவர்கள். லுட் போலவே இவர்கள் இயந்திரங்களை நொறுக்குவதன் மூலம், முதலாளிகளை எதிர்த்தவர்கள். லுட்டின் அணுகுமுறை, தொழிலாளர்கள் மத்தியில் சிறிது காலம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தது. பிரிட்டனில் பல தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன. நாளடைவில், இந்த இயக்கம் அடக்கப்பட்டது. லுட்டைட்டுகள் ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். பலர், தூக்கில் இடப்பட்டனர். உடைபட்ட இயந்திரங்கள் புதிதாக மாற்றியமைக்கப்பட்டன. உணவு இடைவேளையின்போது மட்டும் நெட் லுட் அவர்களிடம் தோன்றினார். நம்பிக்கையூட்டினார். தைரியம் அளித்தார். தொழிற்சாலை மணி அடித்ததும் அவர் விடைபெற்றுக்கொண்டார். இயந்திரங்கள் தொழிலாளர்களை இயக்க ஆரம்பித்தன.
1780-ம் ஆண்டு தொடங்கி பிரிட்டன் தனித்துவமாக மின்னத் தொடங்கியதற்குக் காரணம், இயந்திரமயமாக்கல். பிரிட்டிஷ் வர்த்தகர்கள் இயந்திர உற்பத்தியில் அதிக முதலீடு செய்தனர். வெப்பத்தாலும் நீராலும் இயங்கக்கூடிய பெரும் இயந்திரங்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டன. விவசாயம், உற்பத்தி, சுரங்கம், போக்குவரத்து, தொழில்நுட்பம் என்று அனைத்துத் துறைகளிலும் இயந்திரங்கள் நுழைந்தன. சமூக, அரசியல் வாழ்வில் இயந்திரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
பிரிட்டனில், பஞ்சு உற்பத்தி 1785-ம் ஆண்டுக்கும் 1850-ம் ஆண்டுக்கும் இடையில் 50 மடங்கு அதிகரித்தது. இரும்பு, எஃகு ஆலைகள் பெருகின. புதிய கண்டுபிடிப்புகளும் வர்த்தக முறைகளும் உருவாயின. தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தியும் அதன் மூலம் லாபமும் பெருகியது. இயந்திரமயமாக்கல் ஒரு புதிய அரசியல், சமூக மற்றும் வர்த்தக சித்தாந்தத்தை முன்மொழிந்தது. வர்த்தகம் செய்ய முன்வருபவர்களை அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும். எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் அவர்களுக்கு விதிக்கக்கூடாது. எந்தவிதமான குறுக்கீடும் கூடாது. முதலாளிகளை சுதந்தரமாக இருக்கவிட்டால் அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார்கள். புதிய தொழிற்சாலைகளை நிர்மாணிப்பார்கள். தொழில்மயமாக்கலைத் துரிதப்படுத்துவார்கள். லாபத்தைப் பெருக்குவார்கள். நாட்டின் வருவாயை உயர்த்துவார்கள். இந்தப் புதிய சித்தாந்தத்தை பிரிட்டனும் பிரிட்டனைத் தொடர்ந்து பிற நாடுகளும் ஏற்றுக்கொண்டன.
அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருந்த அதே சமயம் அபரிமிதமான ஏழைமையும் உருவாகிக்கொண்டிருந்தது. உற்பத்திக் கருவிகளைச் சொந்தமாக வைத்திருந்த முதலாளிகள் செழிப்படைந்து கொண்டிருந்த அதே சமயம், இந்த ஆலைகளில் பணியாற்றிக்கொண்டிருந்த கடைநிலை ஊழியர்கள் வறுமையில் சிக்கித் தவித்தனர். தொழிலாளர்கள் அதிக நேரம் பணியாற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்கள் பணிச்சூழல் அசுத்தமானதாகவும் அபாயகரமானதாகவும் இருந்தது. உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே உணவு சமைக்கலாம். அதற்குத் தேவைப்படும் கூலி மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. தொழில்துறை நகரமாகத் திகழ்ந்த வடக்கு பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் என்னும் நகரம், தொழிலாளர்களின் நரகமாகவும் திகழ்ந்தது.
நிலக்கரிச் சுரங்கங்களில் குழந்தைகள் பெரும் எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டனர். கரி நிரப்பப்பட்ட வண்டிகளை இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு விலங்குகளைப் போல் இழுத்துச்சென்றனர். பணிக்கு இடையில் அவர்கள் காயமுற்றாலோ இறந்துபோனாலோ ஆலை முதலாளிகள் வருந்துவதில்லை. அவர்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய குழந்தைகளைத் தருவித்துக்கொண்டனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் அனைவரும் இயந்திரங்களோடு இயந்திரங்களாக, காலை முதல் இரவு வரை பணியாற்றினால்கூட அவர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச வருமானம் கிடைக்கவில்லை.
தொழிற்சங்கங்கள் அமைத்துக்கொள்வது தடை செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் ஓரணியில் திரள்வதும் விவாதித்துக்கொள்வதும் கண்டிக்கப்பட்டது. இயந்திரங்களை எப்படி வெற்றிகொள்வது? தொழிலாளர்கள் திகைத்து நின்றனர். உடல் உழைப்பு அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை. சமூக வாழ்வின் சவால்கள் அவர்களை மிரட்சிகொள்ள வைத்தது. எப்போது வேண்டுமானாலும் பணியில் இருந்து தூக்கியெறியப்படலாம், கிடைத்துவரும் கூலியும் நின்றுபோகலாம் என்னும் யதார்த்தம் அவர்களை அச்சுறுத்தியது.
மாற்று தேடி பலர் மதத்திடம் தஞ்சம் புகுந்தனர். மார்க்சிய சிந்தனையாளரான ஜார்ஜ் தாம்சன் தொழிலாளர்களின் இந்தக் கையறு நிலையை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்: ‘நாகரிக மனிதனுக்கு இருக்கும் பலவீனத்தின் வெளிப்பாடு மதம் ஆகும். இயற்கையைப் புரிந்துகொள்ளவும் வெல்லவும் முடியாத ஆதிகால மனிதன் மாய வித்தையின் ஆதரவை நாடியதுபோல், வர்க்க சமுதாயத்தைப் புரிந்துகொள்ளமுடியாத நாகரிக மனிதன், சமயத்தின் துணையை நாடுகிறான்.’
மதம் அவர்களை அமைதிப்படுத்தியது. இந்த உலகில் இல்லாவிட்டாலும் மேலுலகில் நிச்சயம் பொற்காலம் உண்டு என்று அவர்கள் காத்திருந்தனர்.
மதம் என்னும் அமைப்பு முதலாளிகளுக்கும் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. தொழிலாளர்களின் விரக்தியையும் மன உளைச்சலையும் ஏக்கத்தையும், மிக முக்கியமாக, கோபத்தையும் மதம் நீர்த்துபோகச்செய்தது. மதம் ஒரு பக்கம் சேவையாற்றிக்கொண்டிருந்த அதே சமயம், முதலாளிகள் சில சீர்திருத்தங்களை அமல்படுத்தினர். தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதைத் தடை செய்யும் சட்டங்களை 1800-களில் பல ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்தன. (அமெரிக்கா, இதற்கு விதிவிலக்காக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட நியூ யார்க்கில் பதினாறு மணி நேரங்கள் குழந்தைகள் கடும் வேலை செய்துவந்தனர்.)
இயந்திரமயமாக்கலையும் முதலாளித்துவத்தின் அடக்குமுறையையும் எதிர்கொள்ள சோஷலிசமே சரியான பாதை என்றார் ராபர்ட் ஓவன். பிரிட்டன் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற சோஷலிச சிந்தனையாளராக ராபர்ட் ஓவன் அறியப்பட்டிருந்தார். ஒரு துணி ஆலையில் உதவியாளராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்த ராபர்ட் ஓவன், பருத்தி ஆலை ஒன்றின் உரிமையாளராக உயர்ந்தார். இதுநாள் வரை முதலாளிகள் நடத்தி வந்ததைப்போன்று இல்லாமல், ஒரு புதிய தொழிற்சாலையை இவர் நிர்மாணிக்க விரும்பினார். இதுநாள்வரை உலகம் கண்டிராத, தொழிலாளர்களைக் கசக்கிப் பிழியாத, அவர்களை அடிமைப்படுத்தாத ஓர் ஆலையை இவர் வடிவமைக்க விரும்பினார்.
ஸ்காட்லாந்தில் உள்ள நியூ லானார்க் என்னும் இடத்தில், ஓவன் ஓர் இயந்திரக் குடியிருப்பை வடிவமைத்தார். இங்கே இரண்டாயிரம் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டனர். சுத்தமான, சுகாதாரமான வாழ்விடமாக அது இருக்கும்படிப் பார்த்துக்கொண்டார்.
இருபத்து நான்கு மணி நேரமும் வேலை செய்யவேண்டிய அவசியம் தொழிலாளர்களுக்கு இங்கே இல்லை. ஆலைக்கும் குடியிருப்புக்கும் அருகே இசை அரங்கமும் நாடக அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன. 1825-ம் ஆண்டு, இன்னமும் மேம்படுத்தப்பட்ட ஒரு சமுதாயக்கூடத்தை இண்டியானாவில் உள்ள நியூ ஹார்மனியில் உருவாக்கினார் ஓவன். எதிர்காலத்தில் அமையவிருக்கும் சமத்துவ சமுதாயத்துக்கு இது முன்மாதிரியாகத் திகழும் என்று ஓவன் நம்பினார்.
ராபர்ட் ஓவனைப் போலவே பிரான்சில் உள்ள சார்லஸ் ஃபூரியயேவும் பல சமத்துவக்கூடங்களை நிறுவினார். தொழிற்சாலையோடு சேர்த்து தொழிலாளர்கள் வசிப்பதற்கான வாழ்விடங்களையும் இவை கொண்டிருந்தன. அரசாங்கங்கள் போதுமான நிலத்தையும் சுதந்தரத்தையும் அளித்திருந்ததால், இப்படிப்பட்ட சமத்துவக் கூடங்களை அமைப்பது எளிதாகவே இருந்தது. ஓவன், ஃபூரியே போன்றவர்களின் சோஷலிச முயற்சிகள் தொழிலாளர்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தன. ஆனால், இந்த முயற்சிகளைப் பிற முதலாளிகள் கண்டுகொள்ளவில்லை. ஓவன் எதிர்பார்த்ததைப்போல் முதலாளிகள் இவற்றை தங்கள் முன்மாதிரியாகக் கொள்ளவில்லை. முதலாளிகள் மனம் மாறி தொழிலாளர்களுக்கு நல்ல பணிச்சூழலையும் நல்ல கூலியையும் வழங்குவார்கள் என்னும் ஓவனின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. நம் தலைவிதியை யாராலும் மாற்றமுடியாது என்று நொந்துகொண்டார்கள் தொழிலாளர்கள்.
பிரிட்டனின் தொழில் வளர்ச்சியைக் கண்டு ஐரோப்பிய நாடுகள் இயந்திரமயமாக்கலை தங்கள் நாடுகளிலும் அமல்படுத்த ஆரம்பித்தன. பிரிட்டனுக்கு அடுத்தபடியாக, (விரைவில்) பிரிட்டனுக்கே போட்டி போடும் அளவுக்கு தொழில் வளம் கொண்ட சாம்ராஜ்ஜியமாக பிரஷ்யா (ஜெர்மனி என்ற நாடு பின்னர் உதயமாகும்போது அதில் பிரஷ்யாவையும் உள்ளடக்கும்…) உயர்ந்தது. ஜெர்மனியின் வளர்ச்சி முதலில் தென்பட்டது ரைன் மாகாணத்தில். மே 5, 1818 அன்று கார்ல் மார்க்ஸ் இங்கே பிறந்தார்.
இரு ஆண்டுகள் கழித்து, நவம்பர் 28, 1820 அன்று பிரெட்ரிக் எங்கெல்ஸ் இங்கே பிறந்தார். மார்க்ஸின் தோழர். மார்க்சியத்தின் தோழர்.