பறையர்கள் / அத்தியாயம் 1
சாதி என்பது தமிழ்ச் சொல், வடமொழியில் ஜாதி என்றானது. சாதி என்னும் தமிழ் சொல்லுக்கு இன்றைக்கு நாம் கொண்டுள்ள பொருள் சங்க காலத்தில் இல்லை.
தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் ஒரே வகையான இனத்தைச் சார்ந்த செடியினம் அல்லது உயிரினம் ஆகியவற்றைக் குறிக்க Family என்ற சொல்லைப் பயன்படுத்துவர். இந்த ஆங்கிலச் சொல்லுக்குக் குடும்பம், குடும்ப உறுப்பினர், தொகுதி, பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச் சிறப்புக் குழு, இனம், நேசத் தொடர்பு கொண்ட இனத்தொகுதி என்று பல்வேறு பொருள்கள் உண்டு. இதே அடிப்படையில் தான் சாதி என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டது.
‘நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே’ (தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல்) என்பது நூற்பா. நீருள் வாழும் இனங்களில் நந்து என்பதும் நாகு என்பதும் பெண்பால் பெயர்பெறும் என்பது இதன் பொருள். இதைப் போன்றே மணிமேகலையிலும் ஒரு குறிப்பு வருகிறது.
பயிலொளி யொடுபொரு ளிடம்பழு தின்றிச்
சுட்ட றிதல்கவர் கோட றோன்றாது
கிட்டிய தேச நாம சாதி
குணக்கிரி யையி னறிவ தாகும்
இன்னோரிடத்தில் இப்படி வருகிறது.
சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி
விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்
இந்த இரு இடங்களிலும் வரும் சாதி என்ற சொல், வகை அல்லது பண்பு என்ற பொருளில்தான் ஆளப்பட்டுள்ளது.
ஆக, சங்க காலத்தில் சாதி என்னும் சொல் வழக்கில் இருந்தாலும் அது மனித இனத்தைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்து, தனிமைப்படுத்தியுள்ள இக்கால சாதி என்ற பொருளில் வழங்கப்படவில்லை என்பது உறுதி.
சாதி என்னும் சொல்லுக்கு நிகராக ஆங்கிலத்தில் வழங்கும் சொல் Caste என்பதாகும். இந்தச் சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி தரும் விளக்கம் இது.
‘சாதி என்ற பொருளை உணர்த்தும் இச்சொல் ஸ்பானிஷ் மொழியில்தான் முதன் முதலில் தோன்றியது. பின்னர் இந்தியச் சமூகத்தில் நிலவும் மிகவும் இறுகிப்போன சமுதாய விதிகளைக் குறிக்கும் சொல்லாக இது 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரால் வழங்கப்பெற்றது.
‘இச்சாதி அமைப்பு (காஸ்ட் சிஸ்டம்) தனி மனிதர்களை அவர்களுடைய பிறப்பு, தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. இவ்வாறு வரிசைப்படுத்தும் முறையும் அச்சமூக அமைப்பில் உள்ள திருமணம் மற்றும் சமூக உறவுகளால் (சோஷியல் இண்டர்கோர்ஸ்) பாதுகாக்கப் பெற்று, இந்து அல்லாத பிற ஆசியச் சமூகங்களிலும் இடம்பெற்று விட்டது.
‘இந்தியாவில் தொன்றுதொட்டு நிலவிய நால் வருணப் பாகுபாடே சாதிகள் தோற்றம் கொள்ளக் காரணமாயின என்ற கருத்து தவறானது. வேத காலத்துக்குப் பின்னர் தோன்றிய வணிகக் குழு, தொழில் குழு (கில்ட்) ஆகியவற்றின் விளைவே சாதியின் தோற்றத்துக்குக் காரணம். (The Oxford Reference Dictionary, பக்கம் 137).
சாதிகளின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன. இந்தியச் சமுகம் பற்றி ஆராயும் மேலைநாட்டு ‘இந்தியவியல்’ அறிஞர்கள் (இன்டாலஜிஸ்ட்) சாதிகளின் தோற்றத்துக்கு ஆரியர்களோ அவர்களின் வேதங்களோ காரணமாக அமையவில்லை என்றும் ஆரியர் இந்தியாவுக்கு வந்து, சிந்துச் சமவெளியிலிருந்து கங்கைச் சமவெளிக்குப் பரவிய பின்னரே இந்தியாவில் சாதிகள் அரும்பத் தொடங்கின என்றும் கருதுகின்றனர்.
இந்தக் கருத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதுதான் மேலே கண்ட சாதிகள் பற்றிய ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் விளக்கம். இத்தகைய கருத்தை உருவாக்கிய அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் Dr. Muir, அமெரிக்க அறிஞரான Henrich Zimmer ஆகியோர்.
சாதிகளின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களின் நான்கு வேதங்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட உபநிடதங்களும் தரும சாத்திரங்களுமே அடிப்படை என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் மற்றொரு பிரிவினர். இவர்கள் பார்ப்பனர்களையும் அவர்களுடைய வேத வேள்விப் பண்பாடுகளையும் எதிர்த்தனர். சாதியின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களே காரணம் என்னும் கருத்தின் அடிப்படையில் அவர்களைக் கண்டித்தும் மறுத்தும் வந்துள்ளனர்.
இந்தியாவில் தோன்றிய அனைத்து மனித நலச் சிந்தனையாளர்களும் அதாவது வள்ளுவர், கபிலர் (சாங்கியக் கோட்பாட்டை நிறுவியவர்) புத்தர் முதல் தந்தை பெரியார், அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபூலே முதலான அனைவரும் இப்பிரிவைச் சார்ந்தோர் எனலாம். இந்தியாவில் நடந்த சாதி ஒழிப்புக்கான போராட்டங்கள் அனைத்தும் பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களாகவே அமைந்துள்ள வரலாற்று உண்மையும் சாதிகளின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களே காரணம் என்பதை உறுதி செய்கிறது.
அம்பேத்கர் சாதிகளை ஆய்வு செய்து, ‘அகமணமே (endogamy) சாதிக்குரிய தனித் தன்மையான ஒரே இயல்பு ஆகும்’. அதாவது கலப்பு மணம் செய்து கொள்வதற்கான தடைகளிலிருந்துதான் சாதிகள் தோன்றுகின்றன என்று விளக்குகிறார். மேலும் :
- இந்திய மக்கள் ஒரு கலவையான உருவாக்கமாக இருந்தபோதிலும்கூட அவர்களிடைய ஓர் ஆழ்ந்த பண்பாட்டு ஒத்திசைவு உள்ளது.
- மிகப்பெரிய பண்பாட்டு அலகைத் தனித்தனிச் சிப்பங்களாக ஆக்குவதே சாதி.
- ஒரு சாதியிலிருந்து மற்றெல்லா சாதிகளும் உதயமாயின.
- பார்த்தொழுகுதல் (imitation) விலக்கி வைக்கப்படுவதாலும் வர்க்கங்கள் சாதிகளாயின.
என்றும் அம்பேத்கர் வகைப்படுத்துகிறார்.
‘தமிழ்நாட்டில் சாதிகளின் தோற்றமும், வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்த முனைவர் கே.ஆர்.அனுமந்தன் பின்வரும் காரணங்களே சாதிகளின் தோற்றத்துக்கு அடிப்படை என்கிறார்.
- அகமணம் – தன் சொந்த சாதிக்குள்ளேயே மணம் செய்தல். அதன் வாயிலாகப் பிறசாதியுடன் மண உறவைத் தடுத்தல்.
- பிற சாதியினருடன் கலந்துண்ணத் தடை.
- பரம்பரைத் தொழில் (கற்பனை அல்லது உண்மை)
- தன் பரம்பரையின் தொடக்கம் குறித்த கோட்பாடு (தெய்வீகத்தன்மை அல்லது மனித மூலம்).
- புரோகித அமைப்பில் பார்ப்பனர்க்கு உயர்வும் சூத்திரர்க்கு தாழ்வும் கற்பித்த சமூக அமைப்பு.
- சாதி நீக்கம் (Ex-communication).
- சமயச் சடங்கின் புனிதம் கற்பித்தல். அத்துடன் தூய்மை அற்றவர் எனச் சிலரைச் சமய சடங்குகளிலிருந்து விலக்கி வைத்தல்.
தமிழ்ச் சமுதாயத்தில் ஐந்திணைகளிலும் இருந்த மக்கள் பெரும்பாலும் இனக்குழுவினராகவே இருந்திருப்பர். தொழில் அடிப்படையில் வேறுபட்ட இந்த இனக்குழுக்கள் பெரும்பாலும் அகமணக் குழுக்களே. அக்காலத்தில் சாதியோ, வர்ணாசிரமமோ இருந்திருக்காது.
நால்வருணம் பற்றிக் கூறும் தொல், பொருள், மரபியல் சூத்திரங்கள் (71-85) இடைச் செருகல் என்பதை அனைவரும் ஏற்கின்றனர்.
ஆரியர்களின் தாக்கம் தமிழ்நாட்டில் கி.மு. 4ம் நூற்றாண்டை ஒட்டியே மெதுவாகத் தொடங்கியிருக்கும். சமணர், புத்தர், பிராமண மதத்தினர் என்ற வரிசையில் இத்தாக்கம் இருந்திருக்கும். பிராமணர் தமது வருணாசிரமக் கொள்கையைத் தன்னல நோக்குடன், திராவிட இனக்குழுச் சமூகத்தை வேதியியல் மாற்றம் அடையச் செய்ய சாதிகளையும் சாதி வேற்றுமைகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் உருவாக்கினர். தமிழகத்தில் இவ்வகையில் ஆரியத்தாக்கம் ஏற்பட்ட காலம் கி.பி. 600க்கும் பின்னர்தான் இருக்க வேண்டும் என்கிறார் பி.டி.சீனிவாச ஐயங்கார்.
0
புத்தர் வாழ்ந்த காலத்தில் சாதி – வருண அடிப்படையிலான சமூக உறவுகள் முழுமையடையாத நிலையில் உற்பத்தி உறவுகள்தான் சமூகத் தகுதியை தீர்மானித்தன. நிலத்தின்மீது ஆளுகை செலுத்தியவர்கள் ‘கஹபதி’கள் என்று அறியப்பட்டனர். அவர்களுக்கென சாதி அடையாளமோ வருண அடையாளமோ இருந்ததாகத் தெரியவில்லை. அதே சமயம் நிலமற்ற உழைப்பாளிகளும், ஏவல் தொழில் புரிந்தவர்களும் குறிப்பிட்ட வருண, சாதி அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை. இவர்கள் ‘தாசர்கள்’ என்றும், ‘கம்ம (கரும)க்காரர்கள்’ என்றுமே பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. உணவையும் ஊதியத்தையும் எதிர்பார்த்தே இவர்கள் உழைத்ததாகத் தெரிகிறது. இக்காலகட்டத்தில் செல்வர் – வரியவர் என்ற அடிப்படையில் சமுதாய உறவுகள் முரண்பட்டிருந்தனவே ஒழிய மேல் – கீழ் வரிசையில் நிறுத்தப்பட்ட சாதி நிலைகளின் அடிப்படையில் அல்ல.
கி.பி. 500-1000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் விவசாய விரிவாக்கம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது. மேலும், ஏற்றத்தாழ்வுகள் சாதியப் பாகுபாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டது. காவேரி ஆற்றுப் பகுதியில்தான் சாதிப் படிநிலை அமைப்பு முதன் முதலில் உருத்திரட்டு பெற்றது. மூவேந்தர்களின் ஆட்சியில்தான் முழுமையாக ஏர்கொண்டு உழுதல் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்பமும், குலக்குழுவும் நிலத்தில் பாடுபட்ட நிலைமை மாறி அடிமைகளையும், கூலிகளையும் கொண்டு விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. முடி மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு மானியங்களாக வழங்கிய நிலங்களில்தான் இந்த அடிமை முறை முதலில் கையாளப்பட்டது.
பார்ப்பனர்களே ஆண்டைகளாக விளங்கியதுடன், நாட்டில் அவர்கள் மேலாண்மையும் செலுத்தி வந்தனர். சமுதாயத்தில் நெறி வகுப்பவர்களாக நிதி, நியாயம் முதலியவற்றை வரையறுத்துத் தீர்மானிப்பவராக தம்மை நிலை நாட்டிக் கொண்டு விவசாயக் கூலிகளையும், ஏனைய தொழில் பிரிவினரையும் சாதிகளாக அடையாளப்படுத்தி அச்சாதிகளை மேல் – கீழ் வரிசையில் நிறுத்தி இன்றுள்ள சாதிப்படிநிலை அமைப்புக்கான வித்துகளை அன்றே அமைத்தனர். தீண்டாமை அன்றே அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்டாய உழைப்பாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் அடிமைகளாக, கூலிகளாக, சேவைப் பணியாளர்களாக வாழ நிர்பந்திக்கப்பட்டனர். இவர்களுக்கென்று தனி வாழ்விடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் அசுத்தமானவர்கள் – கீழானவர்கள் என்று கருதப்பட்டனர். இவர்களது உழைப்பைத் தொடர்ந்து சுரண்டுவதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட தீண்டாமையானது தூய்மையுடன் தொடர்புப்படுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து அவ்வாறே நீடிப்பதற்கான வலுவான நியாயங்களை தீண்டாமை தொடர்பான கருத்தாடல்கள் வழங்கின.
சாதி அமைப்பானது, குறிப்பிட்ட தொழில் புரிவோரைக் குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்தி அத்தொழிலை அந்தச் சாதியும், அதனை ஒத்த சாதிகளும் மட்டுமே புரிய வேண்டும் என்று சட்டம் வகுத்து, அச்சாதியில் பொருளாதார, சமுதாய அந்தஸ்தையும் நிர்ணயம் செய்தது.
குறிப்பிட்ட வருணத்தின் அல்லது சாதியின் தனித்தன்மையையும் அடையாளத்தையும், நிலைநிறுத்த சில சட்டங்களும் கட்டுப்பாடுகளும் வகுக்கப்பட்டன. இன்ன சாதியார் இன்ன தொழிலைத்தான் செய்யலாம்; இன்ன சாதியார் மட்டுமே நிலவுடையாளராக இருக்க முடியும்; இன்னார்தான் அரசாள முடியும், ஆன்மிக அறிவாளிகளாக இருக்க முடியும்; சில சாதிகள் தூய்மையானவை, வேறு சில தீட்டுப்பட்டவை என்ற ரீதியில் அக்கட்டுப்பாடுகளும், சட்டங்களும் அமைந்தன.
தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள், மக்கள் செய்து வந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயிணர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரத்வர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப்பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக்குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமணக்கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓர் உறுப்பாகவே செயல்பட்டு வந்தது.
இனம், நிலம் ஆகிய வேறுபாடுகளால் இடர்பட்டுத் தடுமாறாத தமிழரின் சமூகம் காலப்போக்கில் பல சாதிகளாகப் பிரிந்தது. மக்களுக்குப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. பழந்தமிழகத்தில் திணைப் பிரிவுகளின் படியே வாழ்ந்து வந்த மக்கள் அந்த வாழ்க்கை முறைலிருந்து நழுவினர்.