New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டாளின் சூழலியல்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஆண்டாளின் சூழலியல்
Permalink  
 


ஆண்டாளின் சூழலியல் By அரவிந்தன் நீலகண்டன்  |   Last Updated on : 24th January 2016 03:28

மார்கழி முடியும்போதெல்லாம், ஒரு மென்-வருத்தம் இழையோடும். திருப்பாவையை அதன் சூழலுடன் மீண்டும் அனுபவிக்க இனி ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும். ஆண்டாள் குறித்த பாரம்பரியமான ஐதீகங்களுடன் வளர்ந்த எவருக்கும், அவள் வாழ்வும் அவள் பாடல்களும் மகத்தான அக விரிவை தருபவை. திருப்பாவை, ஒரு சிறுபெண்ணின் வார்த்தைகளாக நமக்குச் சொல்லப்படுபவை. தூக்கத்தில் இருக்கும் தோழியரை எழுப்பும் பாடல்கள். பாரம்பரிய உரைகளில், அந்தத் தோழி தூக்கத்தில் இல்லை. கிருஷ்ணனை சிந்தித்து, அவனுடன் மனமொன்றி சுகானுபவத்தில் இருக்கிறாள். அதிலிருந்து அவளை எழுப்பி வீதிக்கு அழைக்கிறார்கள். ‘வா சேர்ந்து சென்று கண்ணனை பார்க்கலாம்’.

1.jpg 

வட பாரதத்தில், பாகவதத்தில் காணப்படும் புராணக் கதைகள், கிருஷ்ணனின் காளிங்கநர்த்தனம் போன்றவை நிலவியதாக, மெகஸ்தனிஸ் தமது 'இண்டிகா’ பயணக் குறிப்புகளில் கூறுகிறார். கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்றில், நாராயணனின் கோவிலில் வாசுதேவனையும் சங்கர்ஷணனையும் வழிபட்டது குறித்த செய்திகள் உள்ளன. இந்தக் கல்வெட்டு, ராஜஸ்தானின் சித்தூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்தோ கிரேக்க ராஜ்ஜியத்தின் தூதனான ஹிலியோடாரஸ், பாகவத மார்க்கத்தைத் தழுவினான். அதனைக் காட்ட, கருடத்வஜம் என்கிற தூணை வாசுதேவனுக்குச் சமர்ப்பித்தான். இது நிகழ்ந்தது, கி.மு. ஒன்று-இரண்டாம் நூற்றாண்டில். இன்றும் இந்தத் தூண் விதிஷா நகரில் நிற்கிறது. மேற்கத்திய இந்தியவியலாளர்கள், ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் குறித்த கதைகளும் பகவத் கீதையுமே கிறிஸ்தவ தாக்கத்தால் உருவானவை எனக் கூற ஆரம்பித்தபோது, அந்தத் திரிபு வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் மிகத் தெளிவான ஆதாரத்துடன் நின்ற பெரும் பங்கு இந்தத் தூணுக்கு உண்டு. வாசுதேவனின் பாகவத மார்க்கம் குறித்துப் பேசும் இந்தத் தூண், சந்தேகமற கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு எனில், அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னரே பாகவத மார்க்கம் இங்கு உருவாகியிருக்க வேண்டும்.

2.jpg 

இன்று நாம் அறியும் பாகவத பக்தி இயக்கம், அதன் முழு வடிவை அடைவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.

சங்க கால தமிழகத்திலேயே, பாகவத மார்க்கத்தின் விதை நன்றாக உள் சென்றுவிட்டது. ஆழ்வார்கள், அந்தச் சங்கத் தமிழில் வேர் கொண்டே பக்தி இயக்கத்தை வளர்த்தெடுத்தனர். அதனை ஒரு அமைவாக மாற்றி அருளியவர் ஸ்ரீ ராமானுஜர். அதனை வட பாரதத்துக்குக் கொண்டு சென்றவர் ராமானந்தர். கி.மு. காலகட்டத்திலேயே, பாகவத வழிபாடு ராமானுஜருக்கு முன்னரும் வட பாரதத்தில் இருந்தது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஆனால், இன்றைய பாகவதப் பண்பாடு, தமிழ் மண்ணில் தோன்றியதென்றே சொல்லலாம். அதன் உள்ளாற்றலாக விளங்குவது பக்தியே ஆகும்.

பாகவத மகாத்மியம் பக்தியை ஒரு பெண்ணாக உருவகிக்கிறது. அவள் திராவிடப் பிரதேசத்தில் பிறந்து, கர்நாடகத்தில் பருவமடைந்து, மகாராஷ்டிரத்தில் நடந்து, குஜராத்தில் வயோதிகம் அடைந்தாள். பின்னர், பிருந்தாவனத்தில் மீண்டும் இளமை அடைந்தாள் என அது கூறுகிறது. தென்னிந்தியாவில் உருவான பக்தி இயக்கமே, இடைக்கால படையெடுப்புகளின்போது, பாரதப் பண்பாட்டுக்கான பெரும் கவசமாக விளங்கியது. பாரதத்தின் ஆன்மநேய ஒருமைப்பாடே, அதன் மிகச் சோதனையான காலகட்டத்தில் ஆழ்வார்கள் மூலம் உருவான ராமானுஜ பக்தி இயக்கத்தால் காப்பாற்றப்பட்டது எனக் கூறலாம்.

3.jpg

நம்மாழ்வார்

வைணவ பக்தி இயக்கம் வெறும் உணர்ச்சித் தளும்பல் மட்டும் அல்ல. அதன் அடிப்படையில் ஒரு அறிதல் இயக்கியது. பேரறிவான திருமாலிடம் கொண்ட அன்பிலிருந்து, ஒரு பெரும் அக விகசிப்பு புற உலகைத் தழுவியது. ரிக் வேத புருஷ சூக்தத்தில் இதன் தொடக்கத்தைக் காணலாம். பண்டை தமிழ் மரபில், திருமால் குறித்த பாடல்களிலெல்லாம் இப்பார்வை அருமையாகப் பேணப்படுவதையும் காணலாம். பரிபாடல், அனைத்து இயற்கையிலும் அவற்றின் அடிப்படை ஆதார உயிர் பண்பாக இருப்பது திருமாலே என்று சொல்கிறது.

நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;

நின், தண்மையும் சாயலும் திங்கள் உள;

நின், சுரத்தலும் வண்மையும் மாரி உள

நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;

நின், நாற்றமும் ஒண்மையும் பூவை உள;

நின், தோற்றமும் அகலமும் நீரின் உள;

நின், உருவமும் ஒளியும் ஆகாயத்து உள;

நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள:

அன்று எதையெல்லாம் பௌதிகப் பொருட்களின் அடிப்படை ஆதாரத் தன்மைகள் எனக் கருதினரோ, அவையெல்லாம் பெருமாளே எனக் கூறுவது இப்பார்வை.

'நற்றிணை'’யின் இறை வணக்கப் பாடல் கூறுகிறது -

மாநிலம் சேவடி ஆகத் தூநீர்

வளைநரம் பௌவம் உடுக்கை ஆக

விசும்புமெய் ஆகத் திசைகை ஆகப்

பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக

இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய

வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரி யோனே

உலகம் அவன் திருவடிகள், நல்ல நீராதாரமான சங்குகள் கொண்ட கடல் அவன் ஆடை, விசும்பு அவன் மெய், திசைகள் அவன் கரங்கள், சூரிய சந்திரரின் ஒளி அவன் விழிகள், வெளிப்படும் அனைத்தையும் தன்னகத்து கொண்டவன், அவனே அனைத்தின் உள்ளுறையாகவும் இருக்கிறான் என்கிறார் நற்றிணைக் கடவுள் வாழ்த்து சொன்ன, பாரதம் பாடிய பெருந்தேவனார். இப்பாடலில், விஷ்ணுவே பௌதிக உலகின் அனைத்துப் பரிணாம வெளிப்பாடுகளிலும் அந்தர்யாமியாக உள்ளான் எனும் கோட்பாடு உயிர் திரண்டு வருவதைக் காண்கிறோம்.

இதன் நீட்சியாகவே, ஆண்டாளின் பாசுரங்களில் வரும் இயற்கையின் நிலை அழகு, இயக்க அழகு ஆகியவற்றின் வர்ணனைகளைக் காண வேண்டும். மிகவும் தட்டையாக, ஆண்டாள் காலத்திலேயே நீர்ச்சுழல் குறித்த அறிவு இருந்தது எனச் சொல்லிவிடலாம். அப்படித்தான் அவளது ‘ஆழி மழைக்கண்ணா’ பொதுப்புத்தியில் அறியப்படுகிறது. நிச்சயமாக, நம் குழந்தைகளுக்கு நீர்ச்சுழலைக் கற்பிக்கும் அறிவியலுடன் ஆண்டாளின் பாடலை அறிவியலின் அழகியலாகக் கற்றுக்கொடுக்கலாம். ஆனால், அத்துடன் மற்றொன்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், ஆண்டாளின் பாசுரங்களில் இயற்கை குறித்த அவளது தொடர் நுண் விவரணங்கள், இயற்கையின் இருப்பழகை மட்டும் பேசவில்லை; அதன் இயக்க அழகையும் கண்டுணர அழைக்கிறது.

4.jpg 

மேற்கத்திய சூழலியல், அறிவியல் புலங்களிலும் சரி, சூழலியல் இயக்கங்களிலும் சரி, ஒரு பிரச்னை இருந்தபடியே உள்ளது. ஏன் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்? மனிதனுக்காகப் பாதுகாக்க வேண்டுமா? மனித மையமற்று, இயற்கையில் உள்ளார்ந்து இருக்கும் சுயமதிப்பால், அதை மானுடம் அழிக்காமல் இருக்க வேண்டுமா? மானுட மையப் பார்வை என்றும், உயிரி மையப் பார்வையென்றும், இரு தரப்பாக இப்பிரச்னை அணுகப்படுகிறது. உலகத்தையெல்லாம் ஆண்டவன் மானுடத்துக்காகவே படைத்தான் என்பது விவிலியம் சொல்வது. சூழலியல் பார்வை கொண்ட கிறிஸ்தவ இறையியலாளர்கள் மற்றொரு பார்வையை முன்வைக்கிறார்கள். மனிதனை இயற்கை உலகின் தோட்டக்காரனாகவும் யஹீவா தேவன் படைத்தான். எனவே, அவன் இப்புவியின் இயற்கை வளங்களைத் துய்ப்போன் மட்டுமல்ல, அவற்றைப் பாதுகாத்துப் பண்படுத்தி வளர்த்து அறுவடை செய்ய வேண்டிய தோட்டக்காரனும்கூட. இதுவும் மானுட மையப் பார்வைதான். எதைப் பாதுகாப்பதென்றும், எதைக் களையெடுப்பதென்றும் முடிவு செய்யும் அளவுக்கு, இயற்கை நமக்கு வசப்பட்டு, நாம் அமைத்த ஒழுங்குபடுத்திய தோட்டம் அல்ல. அப்படி நினைத்து இயற்கையை அணுகியபோதெல்லாம், மானுடம் பெரும் அடிகளை வாங்கியிருக்கிறது என்பது இதற்கான மாற்றுப் பார்வை.

மானுட மையப் பார்வை Vs இயற்கை மைய பார்வை என்கிற இருமையைத் தாண்டிய ஒரு பார்வைக்கான சாத்தியத்தை ஆண்டாளின் பாசுரம் அளிக்கிறது.

''… தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்”'

இன்றைக்கு ஒருங்கிணைந்த விவசாயம், கொல்லைப்புறத்தையும் வயலையும் இணைக்கும் தொடர்புகள் (Integrated agriculture: homestead-farm integration) என்றெல்லாம் பேசப்படுகிறது. வயலில் அஸோலா என்கிற பெரனியையும், அதை உண்ணும் மீனையும், அதை உண்ணும் வாத்தையும் இணைத்து செய்யும் இயற்கை விவசாய அமைவுகள் குறித்துப் பேசப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை மாட்டினங்களுக்கு அளித்து, மாடுகளிலிருந்து கிடைக்கும் பொருட்களை வயலின் மண் வளத்துக்குப் பயன்படுத்தும் சூழல்கள், இயற்கை விவசாயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. பூச்சிக்கொல்லிகளால் நாம் விரட்டிவிட்ட பூச்சியினங்களால் நடக்கும் மகரந்தச் சேர்க்கை முதல் இயற்கையான பூச்சிக் கட்டுப்பாடு என, பல விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆண்டாளின் பாடலில் இப்படி ஒரு அமைவின் கச்சிதமான இயக்க அழகு கிடைக்கிறது. இந்த அழகில், இயற்கையின் இயக்கவியலை உணர்ந்து, அதனை மானுட நலத்துக்கான மீச்சிறந்த அளவில் பயன்படுத்தும் ஒரு வாழ்க்கை முறை, போகிற போக்கில் காட்டப்படுகிறது. இன்றைக்கு அந்தச் சித்திரம் நமக்கு ஒரு ஆதர்ச தேவையாக மாறியிருக்கும் என்பதை, அன்றே ஆண்டாள் அறிந்திருக்க வழியில்லைதான்.

ஆண்டாளின் அடுத்த பாசுரமான 'ஆழி மழைக் கண்ணா’ - மிகவும் புகழ் பெற்றது; பிரசித்தி அடைந்தது. மானுடம் மையம் கொண்ட விவசாயக் களமல்ல இது. இது, இயற்கையின் மட்டற்ற பெரும் வடிவம். வானம் கறுத்து இடி இடிக்க, மின்னல் வெட்ட, பெருமழை பெய்யும்போது, கடல் பரப்பின் முன் நிற்கும் மானுடன் உணரும் இயற்கையின் பேராற்றல் இங்கு காட்டப்படுகிறது.

…ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்

பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய்…

கடலுள் சென்று நீரினை எடுத்து, அதனால் மேகங்களைக் கறுமையடைய வைத்து, பின்னர் மின்னலும் இடியும் முழங்க, சர மழையாகப் பெய்யும் நீரின் இயக்கத்தைக் காட்டுகிறது பாடல். இப்பெரும் அச்சமூட்டும் இயக்க வடிவத்தைக் காட்டுகிறவளோ, மாடு மேய்க்கும் சிறு பெண்ணாகத் தன்னை நிறுத்திக் காட்டுகிறாள். அவளுக்கு, அப்பேரியக்கத்திடம் அச்சம் இல்லை. ஆனால், மானுடத்தின் சிற்றில் சிதைக்கும் வலிமை அவனுக்கு உண்டு என்பதை அவள் அறிவாள். அழிவை அளிக்கவல்லவன் என்பதை அறிவாள். ஆனாலும், அவளால் கேட்க முடியும். எனவே, எங்கள் சிற்றில் சிதையாமல், அனைத்துயிரும் ‘வாழ உலகினில் பெய்திடாய்’.

5.jpg 

புருஷ சூக்தம் தொடங்கி, பகவத் கீதை, பரிபாடல், நற்றிணை என ஆழ்வார்கள் பாசுரங்கள் என வளர்த்தெடுக்கப்படும் ஒரு தரிசனம் – பௌதிக பிரபஞ்சம் அனைத்தும் இறைவனின் உடல் என்பது. நம்மாழ்வார் கூறுகிறார் - ‘உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்’ – உடலில் உயிராக மறைந்து எங்கும் அந்தர்யாமியாக இருப்பவன். ஸ்ரீமத் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தில், இயற்கை இறைவனின் உடல் எனும் கோட்பாடு முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஸ்ரீ பாஷ்யத்தில், சரீரம் என்பதற்கு ராமானுஜர் அளிக்கும் வரையறை அற்புதமானது. தன்னுணர்வால் இயக்கப்படுவதை உடல் என்கிறார்.

உடலை இறை உடலாகக் கருதி, புவியைப் புனிதப்படுத்தும் கோட்பாடுகள், மேற்கின் பாகனீய உலகிலும் நிலவின. அவை கிறிஸ்தவத்துக்குள் நுழையவும் செய்தன. ஆனால், அவை மைய கிறிஸ்தவ இறையியலாளர்களால் தெளிவாக மறுதலிக்கப்பட்டன. கிறிஸ்தவ இறையியலாளர் புனித அகஸ்டைன், உலகை இறை உடலெனக் கருதினால் அது தேவையற்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் எனக் கருதினார். மேற்கத்திய மரபில், ராமானுஜரின் இப்பார்வைக்கு ஒருவிதத்தில் மிக அருகில் வரும் ஒரு பார்வையாக ஸ்பினோஸாவைக் கூறலாம். அவர் பிரபஞ்சம் முழுவதையுமே இறை உடலாகக் கருதினார். அமெரிக்க தத்துவவியலாளர் ஸ்டீபன் டேவிட் ராஸ் (Stephen David Ross), முடிவுறு சரீரங்கள் முடிவிலி இறையின் உடலாக இருப்பதைக் குறித்துப் பேசும்போது, அச்சரீரங்களை ‘அவதாரங்கள்’ என்கிறார். அவதாரங்கள் என்பது புழங்கு வார்த்தையாக அமெரிக்க ஆங்கிலத்தில் ஏறிவிட்ட ஒன்று என்றாலும், அது அடிப்படையில் ஒரு வைணவக் கோட்பாடு. ஸ்பினோஸாவின் இயற்கையில் காணப்படும் முடிவுறு பௌதிகச் சரீரங்களில், முடிவில் இறை சரீர வெளிப்பாடு ஸ்ரீ வைணவ அவதார கோட்பாட்டுடன் இணைத்துப் பார்க்கத்தக்கதுதான். ('Spinoza's nature is filled with endless finite corporeal avatars of absolute infinity, where every avatar and its avatars are intermediary representational, expressove movements').

6.jpg

ஸ்பினோஸா

இன்றைக்கு, கிறிஸ்தவ இறையியலில் பெண்ணியமும் சூழலியலும் முக்கியமான முன்னெடுப்புச் சக்திகளாக உள்ளன. அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பாட்ரிஷியா ம்யூமி (Patricia Y. Mumme), இந்திய மதங்களை ஆராய்ச்சி செய்யும் சமயவியலாளர். அவரது பார்வைச் சட்டகம், நிச்சயமாக மேற்கத்திய கிறிஸ்தவ உலகு சார்ந்ததுதான். எனவே, ஸ்ரீ வைஷ்ணவத்தை அவர் ‘ஆண் தலைமை கொண்டது’, ’அரசராக இறையை உருவகப்படுத்துவது’ என்றெல்லாம் அடையாளப்படுத்துகிறார். அவரால்கூட, ஒரு விஷயத்தை மறுக்க முடியவில்லை. ஸ்ரீ வைஷ்ணவத்தின் 'இறை உடலாக இயற்கையைக் காணும் பார்வை’ செயலூக்கம் கொண்ட வைணவ ஹிந்து இறையியலை, சூழலியலுக்காக அளிக்கமுடியும் என அவர் கூறுகிறார். இப்படி ஒரு கோட்பாடு இருக்கிறது எனத் தெரிந்தால், இன்றைக்கு சூழலியலுக்கான இறையியலைத் தேடும் கிறிஸ்தவ இறையியலாளர்கள் பொறாமைப்படுவார்கள் என்கிறார்.

7.jpg 

இயற்கை, இறைவனின் உடல். இயற்கையின் அனைத்து இயக்கமும் அவன் உடலின் உயிரியக்கம். அந்த உடலை வணங்குவோம். நீராதாரங்களைப் பெருக்கிடவும், உணவாதாரங்களைப் பெருக்கிடவும் வழி செய்வோம். அவை, அவன் உடலில் நாம் சாத்தும் திருவாபரணங்கள். அதை நாம் ஆண்டாள் எனும் சிறுமியின் காதல் பார்வையுடன் செய்ய முடியும். பணிவுடன், அழகியல் உணர்வுடன் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் திறனுடன் செய்ய முடியும். எனில், நாம் இயற்கையைப் பாழ் படுத்தவும் மாட்டோம். மானுட நல்வாழ்வை மேம்படுத்த, இயற்கையில் நாம் செய்யும் தொழில்நுட்ப ஊடாட்டங்கள், இறை வடிவுக்கு நாம் செய்யும் பூசனைகளாக அமையும். நம் பண்பாட்டில், நீர்நிலைகள் முதல் விவசாயம் வரை, அனைத்திலும் இதே தன்மை உள்ளது. இந்தியாவில், 1970-களில் தெஹ்ரி பகுதியில் மக்களால் நடத்தப்பட்ட சூழலியல் பாதுகாப்பு இயக்கம் சிப்கோ. 1977-ல், டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை, 15 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் உள்ள மரங்களைப் பாதுகாக்க கைகோர்த்தனர். அவர்களின் கூடுதல்களிலும், நிகழ்வுகள் அனைத்திலும், பாகவதக் கதைகளும் பாடல்களும், ஸ்ரீ கிருஷ்ணன் குறித்த நிகழ்கலைகளும் நடத்தப்பட்டன. ஸ்ரீ வைணவம் எப்படி புத்தெழுச்சி கொண்ட ஒரு சூழலியல் இயக்கத்தை நவீன பாரதத்திலும் நடத்த முடியும் என்பதை, அந்தப் பெண்களின் சத்தியாகிரகம் காட்டியது. இந்த இயக்கத்தின் ஆன்மிக அடிப்படையாக, பக்தி இயக்கத்தின் மூலம் வேர் கொண்ட ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தமே இருந்தது.

8.jpg

நம்மாழ்வார்

தமிழ்நாட்டில், அண்மைக்காலத்தில் இயற்கை விவசாயத்தை முதன்மையாக முன்னெடுத்தவரின் பெயர் நம்மாழ்வார் என அமைந்தது தற்செயல் என நீங்கள் கருதுகிறீர்களா?

மேலதிக விவரங்களுக்கு -

 

  • http://dravidaveda.org/

  • பேரா. மு. சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1996.

  • Lance E. Nelson, Purifying the Earthly Body of God: Religion and Ecology in Hindu India, Suny Press, 1998.

  • Ankur Barua, God’s Body at Work: Råmånuja and Panentheism, International Journal of Hindu Studies, April 2010, Volume 14, Issue 1.

  • Stephen David Ross, The Gift of Touch: Embodying the Good, Suny Press, 1998.

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard