New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பி. ஏ. கிருஷ்ணன்-ஈ.வெ.ராமசாமி நாயக்கர் -பெரியார்: ஒரு பார்வை


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பி. ஏ. கிருஷ்ணன்-ஈ.வெ.ராமசாமி நாயக்கர் -பெரியார்: ஒரு பார்வை
Permalink  
 


பெரியார்: ஒரு பார்வை

(8 ஜனவரி 2012 அன்று சென்னையில் ‘சங்கம் 4’ - நாம் மற்றும் தமிழ் மையம் இணைந்து நடத்திய விழாவில் பி.ஏ. கிருஷ்ணன் பேசியதன் திருத்தப்பட்ட முழுவடிவம். வாசகர் கருத்துகளையும் விவாதங்களையும் வரவேற்கிறோம் -ஆ)

I

என்னை இங்கே பேச அழைத்த ஃபாதர் கஸ்பார் அவர்களுக்கும் நண்பர் சுந்தரராஜன் அவர்களுக்கும் எனது நன்றி. இப்பேச்சிற்கு ஒரு வடிவம் கொடுக்க எனக்கு உதவிய நண்பர்கள் கலவை வெங்கட், கற்பகவினாயகம், பழ. அதியமான் ஆகியோருக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றன.

நான் பெரியாரைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் தன்னிலை விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.


நான் பிறந்தது பிராமணக் குலத்தில். ஆனால் என்னிடம் சில கலாச்சார எச்சங்களைத் தவிரப் பிராமணர்களுக்கே உரித்தான எந்த அடையாளமும் இல்லை என்றே நம்புகிறேன். கடவுள் இருக்கிறார் என்பதை நிறுவுவது கடினம் என்ற முடிவை நான் இளமைப் பருவத்திலேயே வந்தடைந்தேன். இல்லை என்று மற்றவர்களிடம் வாதிட்டு அவர்களை என் பக்கம் இழுப்பது அதைவிடக் கடினம் என இப்போது தோன்றுகிறது. கடவுள் இருக்கிறார் என வைத்துக்கொண்டாலும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றே நான் நினைக்கிறேன். எல்லாக் குழுக் கலாச்சாரங்களையும் போலப் பிராமணக் குழுக் கலாச்சாரமும் அழகுகளோடும் அழுக்குகளோடும் அந்தச் சமூகத்தில் பிறந்தவர்களைச் சேர்ந்தடைந்திருக்கிறது. அழுக்குகள் களையப்பட வேண்டுமென்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அழுக்கு எது அழகு எது என்பதைப் பகுத்தறிய குழுவிற்கு வெளியில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கத் தயாராக இருக்க வேண்டுமென்பதிலும் எனக்கு எந்த ஐயமும் இல்லை. 

என்னுடைய குடும்பம் தமிழ்க் குடும்பம். என் தந்தை தன் வாழ்நாள் முழுவதும் - அவர் நீண்ட நாட்கள் வாழ்ந்தவர் - கம்பன் புகழ் பாடியே காலம் கழித்தவர். அவர் காலடியில் அமர்ந்து தமிழ்ப் பயின்றவன் நான். என் தாய்மொழி, தந்தை மொழி, நான் உளமாற நேசிக்கும் மொழி தமிழ். என் மண் தமிழ் மண். சாதியால் வந்த சிறு நெறிகளை ஒதுக்கித் தள்ளியவன் நான். என்னை வந்தேறி என்று மேடையில் முழங்குபவர்களுக்கும் முழங்கியவர்களுக்கும் வரிந்து வரிந்து எழுதுபவர்களுக்கும் எழுதியவர்களுக்கும் இந்த மண்ணின் மீதும் தமிழ்மொழியின் மீதும் எவ்வளவு உரிமை இருக்கிறதோ இருந்ததோ அவ்வளவு உரிமை எனக்கும் இருக்கிறது. அதை நான் யாருக்காகவும் யார் சொன்னாலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. 

நான் இன்று பேசப் போவது பெரியாரின் நீண்ட வாழ்க்கையைப் பற்றியோ தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் அவரால் நேர்ந்த நன்மைகளையோ தீமைகளையோ பற்றி அல்ல. என்னைவிட அவரைப் பற்றியும் அவரது கொள்கைகளைப் பற்றியும் அதிகம் தெரிந்தவர்கள் எழுதியிருக்கிறார்கள், பேசியிருக்கிறார்கள். நான் பேசப்போவது பிராமணர்களால் பெரியார் எப்படிக் கவனிக்கப்பட்டார் என்பது பற்றியே. பிராமணர்கள் பெரியாரைப் பற்றி விமர்சனபூர்வமாக அதிகம் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை. இணையத்தில் பெரியாரைப் பற்றிப் பிராமணர்கள் எழுதிய சில விமர்சனங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த விமர்சனமும் அவரை முழுமையாகப் பார்க்கவில்லை. ஏன், யாருமே அவரை முழுமையாகப் பார்த்ததாகத் தெரியவில்லை. தமிழர் தலைவர் என்று போற்றப்படும் பெரியாரைப் பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவரது வாழ்க்கை முழுவதையும் பேசக்கூடிய வரலாறு ஒன்றுகூட இல்லாதது வெட்கக்கேடு. தமிழகத்தின் பிராமணர்களால் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த பத்திரிகைகள், இதழ்கள் - ஹிந்து, சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், கல்கி, தினமணி போன்றவை - பெரியாரைப் பற்றியும் பெரியார் நடத்திய போராட்டங்களைப் பற்றியும் எழுதிக்கொண்டிருந்திருக்க வேண்டும். இவற்றில் முக்கியமானவற்றைத் தேர்வுசெய்து வெளியிட வேண்டியது வரலாற்று அறிஞர்கள் கடமை. இன்றுவரை இது செய்யப்படாதது வரலாற்றின் மீது நமக்கு இருக்கும் அக்கறையின்மையைக் காட்டுகிறது. எனவே நான் பேசப்போவது பிராமணர்கள் பார்வையில் எனக்குத் தெரிந்த பெரியார். நான் படித்த அளவில் பிராமணர்களால் பார்க்கப்பட்ட பெரியார். நானும் பிராமணன் என மற்றவர்களால் அடையாளம் காணப்படுவதால் என் பார்வையில் பெரியார்.





பெரியார் ஈவேரா 94 வயதுவரை வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அளவில் அவரது அரசியல் வாழ்வு தொடங்கியது 1920இல். அவருக்கு அப்போது வயது 41. அவரைக் காங்கிரஸில் சேரத் தூண்டியவர் கடைசிவரை அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்த ராஜாஜி. 1973இல் மறைந்த பெரியாரின் அரசியல் வாழ்க்கையின் கட்டங்களை இவ்வாறாகப் பிரிக்கலாம். 1920இல் இருந்து 27வரை காங்கிரஸ் கட்சியில் இயங்கியது. 27இல் இருந்து 34வரை சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இயங்கியது. 34இல் இருந்து 1944இல் திராவிடக் கழகத்தைத் தோற்றுவிக்கும்வரை நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இயங்கியது. 44இல் இருந்து 49வரை திராவிடர் கழகத்தின் தலைவர். 1949இல் திராவிடர் கழகம் பிரிவுபட்டு ‘கண்ணீர்த்துளிகள்’ என்று பெரியாரால் அழைக்கப்பட்ட அண்ணா போன்ற தலைவர்களின் முயற்சியால் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. 1952இல் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவு. 1954இல் காமராஜ் ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸுடன் தோழமை. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தோழமை. இந்த எல்லாக் கட்டங்களிலும் அவர் விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தது - ஓரிரு தருணங்களைத் தவிர -இரண்டு கொள்கைகள். ஒன்று பிராமண எதிர்ப்பு. மற்றொன்று கடவுள் மறுப்பு. 


விடுதலைக்கு முந்தைய தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளில் கடவுளை மறுத்தவர்கள் அனைவரும் பிராமண எதிர்ப்பாளர்கள் அல்லர். பிராமண எதிர்ப்பாளர்களில் கடவுளை நம்பியவர் பலர். ஆனால் எனக்குத் தெரிந்து பெரியார் ஒருவர்தான் தனது வாழ்க்கை முடியும்வரை இந்த இரு கொள்கைகளிலும் உறுதியாக இருந்தார். எனவே அவர் பிராமணர்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டார். அவரைப் பிராமணர்கள் எவ்வாறு அளவிட்டனர் என்பதைக் கூறுவதற்கு முன்னால் எனது இரண்டு கணிப்புகளைக் கூற விரும்புகிறேன். முதலாவது பிராமணர்களைப் பற்றிக் கடுமையாகப் பேசினாலும் அவர்கள்மீது வன்முறை செலுத்த அவர் விரும்பிய தாகத் தெரியவில்லை. 1945இல் அவர் கருப்புச்சட்டை இயக்கத்தைத் தோற்றுவித்தபோது பிராமணர்கள் அது தங்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கும் என நினைத்தனர். சுதேசமித்திரன் இந்த அச்சத்தை வெளிப்படுத்தி ஒரு தலையங்கம்கூட எழுதியது. ஆனால் பெரியார் உடனடியாக இயக்கம் வன்முறையில் இறங்காது, அது எந்தச் சமூகத்தையும் தனிப்பட்ட முறையில் எதிர்க்காது என்று ஓர் அறிக்கைவிட்டார். போன நூற்றாண்டின் ஐம்பதுகளில் தூத்துக்குடியில் பிராமணர்கள் சிலர் தாக்கப்பட்டனர். ஆனால் அது திட்டமிட்டு நடைபெற்றதாகத் தெரியவில்லை. அண்ணா தாக்குதலை எதிர்த்துக் கடுமையான அறிக்கைவிட்டார் என நினைக்கிறேன். வன்முறை ஏதும் நடைபெறாததற்கு மற்றொரு முக்கியமான காரணம் தமிழ் மக்களின் உள்ளார்ந்த அற உணர்வு. அது இன்றுவரை பிராமணர்களுக்குத் துணை நின்றிருக்கிறது. இனிமேலும் நிற்கும் என்பது உறுதி. 

இரண்டாவது இன்று பெரியார் தமிழர் தலைவர், இனமானம் காத்தவர் என்று அழைக்கப்பட்டாலும், 1967இல் திமுக ஆட்சிக்கு வரும்வரை தமிழகத்தில் அவர் சொன்னதைக் கேட்டு அவர் வழியில் செல்வோம் என்று நினைத்து, நினைத்ததைச் செயல்படுத்தியவர்கள் மிகச் சிலரே. சுதந்திரத்திற்கு முன்னால் அவர் எல்லா அரசியல் தலைவர்களாலும் மதிக்கப்பட்டாலும் ஒரு சிறு குழுவின் தலைவராகத்தான் இயங்கிக்கொண்டிருந்தார். இந்திய அரசுச் சட்டம் 1935இன் கீழ் 1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றிபெற்றது. பெரியார் ஆதரித்த நீதிக் கட்சிக்கு 18 இடங்களே கிடைத்தன. அவரால் 1944இல் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 1946இல் ஐம்பதாயிரத்தைக்கூடத் தாண்டவில்லை. 1946 தேர்தலில் காங்கிரஸ் 215 இடங்களில் 165 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. திராவிடர் கழகம் தேர்தலில் பங்குபெறவில்லை. போட்டியிட்டால் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்று பெரியாருக்குத் தெரிந்திருந்தது. அதன்பின் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியபின் அதைப் பெரியார் 1967 வரையில் விடாமல் திட்டிக்கொண்டிருந்தார். எனவே திமுகவின் அரசியல் வளர்ச்சியில் பெரியாரின் பங்கு எம்ஜிஆர், கருணாநிதி, அண்ணா பங்குகளைவிட மிகச் சிறிது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்று பெரியார் இந்த அளவிற்குக் கொண்டாடப்படுகிறார் என்றால் அதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.


பெரியார் பிராமணர்களுக்கு எதிராகத் தமிழகத்தில் போர்க்குரல் கொடுத்தது குருகுலப் போராட்டத்தின்போது எனக் கூறப்படுகிறது. இந்தப் போராட்டத்தைப் பற்றி விரிவாகப் பேச நேரமில்லை. வவேசு ஐயர் சாதி வித்தியாசம் பாராட்டாதவர். சேர்ந்துண்பதில் முழுவதுமாக நம்பிக்கை கொண்டவர். குருகுலத்திலும் சேர்ந்துண்பது நடந்துகொண்டிருந்தது. இரண்டு மாணவர்கள் மட்டும் தனியாக உண்ண அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஐயர் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டிருந்தால் இந்தப் பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் இது நடந்தபோது எல்லாப் பிராமணர்களும் ஐயரை ஆதரித்தார்கள் என்று சொல்ல முடியாது. காங்கிரஸின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவரான சீனிவாச ஐயங்கார் ஐயருக்கு எதிரான நிலையை எடுத்தார். காவ்ய கண்ட கணபதி சாஸ்திரி ஒரு தலித்தைக் குருகுலத்தில் சமையற்காரராக நியமிக்க வேண்டுமென்றார். டாக்டர் தி. செ. சௌ. ராஜனும் தனது அறிக்கையில் ஐயரது செயல்கள் முற்றிலும் நியாயமானவை அல்ல என்று குறிப்பிடுகிறார். மாறாக பிராமணர் அல்லாதவரான பக்தவத்சலம் ஆதரித்தார். இந்தப் போராட்டத்திற்குத் தலைவராக இருந்தவர் வரதராஜுலு நாயுடு என்பது மிக முக்கியமான செய்தி. ஐயரே தனது கடிதம் ஒன்றில் வரதராஜுலு நாயுடுவைக் குற்றம்சாட்டுகிறார். பெரியாரைப் பற்றிப் பேசவில்லை. ஐயர் அருவியில் மூழ்கி இறந்த பிறகு சேலத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் ஐயருடன் அனேகமாக எல்லா விஷயங்களிலும் உடன்பாடு ஏற்பட்டிருந்தது எனப் பெரியார் கூறினார். டாக்டர் நாயுடுவும் அவ்வாறே சொன்னார். எனவே குருகுல விவகாரம் டாக்டர் ராஜன் சொன்னதுபோல ஒரு சிறு துரும்பு. பின்னால் அரசியல் காரணங்களுக்காக மலையாக்கப்பட்டது எனப் பிராமணர்கள் கருதினர். பிராமண எதிர்ப்புக்கு ஓர் ஆயுதமாக இதைப் பெரியார் பின்னால் பயன்படுத்தினார் என அவர்கள் கருதினர். 


பெரியாரின் கடவுள் மறுப்பைப் பற்றி நான் என் தந்தையின் நண்பரான பெ. நா. அப்புசாமி அவர்களிடம் பலமுறை பேசியிருக்கிறேன். அவர் ராஜாஜிக்கும் வலதுபுறம். ஆனால் நாத்திகர். பிராமணர்களை இன்னும் நன்றாகத் திட்டுவதற்குப் பெரியார் சமஸ்கிருதம் படிக்க வேண்டுமெனச் சொல்வார். இந்து மரபில் உத்தர மீமாம்சை எனப்படும் வேதாந்தத்தைத் தவிர, யோகம், சாங்கியம், நியாயம் வைசேசிகம், பூர்வமீமாம்சை தத்துவங்களுக்குக் கடவுள் தேவையே இல்லை என்பார். சமஸ்கிருத இலக்கியம் பிராமணர்களைக் கேலிசெய்த மாதிரி யாரும் செய்ய முடியாது என்பார். நாயக்கரின் வாதங்கள் மிக எளிமையானவை. அவற்றால் மக்களைச் சிரிக்கவைக்க முடியும். ஆனால் கடவுள் மறுப்பாளர்களாக மாற்றுவது கடினம் என்பார். ‘அம்மையாய் அப்பனாய் ஆகிய அத்தனே’ என்று சீதை அனுமனை நோக்கிக் கூறுவதைக் கேட்ட ஒருவன் அது எப்படி அனுமன் சீதைக்கு அம்மாவும் அப்பாவும் ஆக முடியும் எனக் கேட்டால் ஒன்று அவன் நேர்மையற்றவனாக அல்லது அடிமுட்டாளாக இருக்க வேண்டும். நாயக்கர் தன்னுடைய சீடர்களையெல்லாம் இப்படித் தான் ஆக்குகிறார் என்பார். ஆனால் அவருக்குப் பெரியார் பெண் விடுதலையைப் பற்றி விடாமல் பேசிக்கொண்டிருந்தது மிகவும் பிடித்திருந்தது. விபச்சாரி என்பது பெண்ணை அடிமை என்று சொல்லும் குறிச்சொல் என்று முதல் முதலாகப் பெரியார்தான் சொன்னார் என்று அவர் சொல்லுவார். அதே போன்று பெண்ணிற்குச் சொத்துரிமை கொடுக்க வேண்டுமென்பதைப் பற்றி வெங்கடராம சாஸ்திரி என்பவர் சொன்னதைப் பெரியார் பாராட்டியிருப்பதாகக் கூறினார். ‘நாயக்கர் ஒரு பாப்பான் சொன்னத லேசுல ஒத்துப்பரா? இது ஆச்சரியம்தான்’ என்றார். எனக்கும் சந்தேகம். ஆனால் இந்தப் பேச்சுக்காகக் குடியரசு இதழ்களைப் புரட்டிப் பார்த்தபோது எனக்குப் புதையல் கிடைத்ததுபோல ‘பெண்கள் சொத்துரிமை’ என்ற தலைப்பில் அவர் 26 அக்டோபர் 1930இல் எழுதிய கட்டுரை கிடைத்தது. அதில் பெரியார் இவ்வாறு எழுதுகிறார்:

‘அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த திரு டி.ஆர். வெங்கடராம் சாஸ்திரியார் என்பவர் மாஜி அட்வொகேட் ஜெனரலும் சென்னை அரசாங்க மாஜி சட்ட மெம்பரும் ஆவார்.

இவரும் இந்தியாவில் எல்லா ஜாதிமதஸ்தர்களுக்கும் பொதுவாக ஒரு சட்டம் செய்ய வேண்டும் என்று பேசியிருப்பதோடு சீர்திருத்த விஷயத்தில் முஸ்லிம்கள் ஒத்து வரமாட்டார்கள் என்று பயப்படுவதாகவும் அதற்காதாரமாய் சாரதா சட்டத்தைப் பற்றிய முஸ்லிம்களின் ஆக்ஷேபணையையும் எடுத்துக்காட்டிவிட்டு,

மேலும் பெண்கள் ஆண்களைப் போலவே சகல விஷயங்களிலும் முன்னேறி இருப்பதாகவும் குறிப்பிட்டுவிட்டு அவர்களுக்குச் சகல உரிமையும் கொடுக்க வேண்டும் என்பதையும் மனப்பூர்வமாய் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் பேசியிருப்பதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் “ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் பெரியோர்கள் செய்த ஏற்பாடு என்பதற்காகக் கண்மூடித்தனமாக ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்பது அறிவுடைமை ஆகாது” என்பதும் இந்த நாகரிகக் காலத்தில் இருந்துகொண்டு, அதாவது 20ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டு 13ஆம் நூற்றாண்டுக் கதைகளைப் பேசிக்கொண்டு அவற்றை மக்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக்குவது மிகவும் பரிகசிக்கத்தக்கதாகும் என்று பேசியிருப்பதாகும்.

இதை பார்ப்பனரும் பார்ப்பனரல்லாத பழமை விரும்பிகளும் கவனிக்க வேண்டுமாய் விரும்புகிறோம்.”




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: பி. ஏ. கிருஷ்ணன்-ஈ.வெ.ராமசாமி நாயக்கர் -பெரியார்: ஒரு பார்வை
Permalink  
 


பெரியாரின் 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்றவர்களில் முக்கியமானவர், காஞ்சி பரவஸ்து ராஜகோபாலாச்சாரியார் என்ற பிராமணர் இவர்தான். நீதிக் கட்சியில் இருந்த ஒரே பிராமணர் என்று கருதுகிறேன். இந்தி திணிக்கப்படுவதைப் பல பிராமணர்கள்கூட விரும்பவில்லை. வெங்கடராம சாஸ்திரி, சாரநாத ஐயங்கார் போன்ற பார்ப்பன அறிஞர்களும் இந்தி எதிர்ப்பை ஆதரித்தனர் என்று குடியரசு கூறுகிறது. என் தந்தைகூட இந்தி திணிக்கப்படுவதை விரும்பவில்லை என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் பெரியார் இந்தி எதிர்ப்பையும் பார்ப்பன எதிர்ப்பையும் ஒன்றாக்கினார். 10 ஜூலை 1938இல் சென்னைக் கடற்கரையில் பேசும்போது பெரியார் சொல்கிறார்:

“இந்தி என்றால் பார்ப்பன பாஷை என்று தான் அருத்தம். இதற்கு வேறு எந்த அருத்தமும் இல்லை. உங்களுக்கு யாருக்காவது சந்தேகம் இருந்தால் வீட்டிற்குப் போய் டிக்ஷனரியை எடுத்துப் பாருங்கள். பார்ப்பன பாஷையை பார்ப்பனரல்லாதாருக்கு கட்டாய மாகப் புகுத்தினால் பார்ப்பனரல்லாதாருக்கு வீரமும் மானமும் அறிவும் இருந்தால் ஒப்புக்கொள்ள முடியுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.”

ராஜாஜிக்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நட்பு எல்லோருக்கும் தெரிந்ததே. ராஜாஜியே இதை மதராஸ் மாகாணச் சட்டமன்றத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாகப் பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டதைப் பற்றிக் கேள்வி எழுந்தபோது சொல்கிறார்:

It is a good jail. I claim to be a personal friend of Mr.Naicker, though a very bitter political opponent. He knows that, I am, as far as I can be, kind and considerate to him. 

(அது ஒரு நல்ல சிறைச்சாலை. திரு. நாயக்கர் என்னுடைய மிகத் தீவிரமான அரசியல் எதிரி. ஆனால் அந்தரங்க நண்பர். என்னால் முடிந்த அளவுக்கு நான் அவரிடம் அன்பும் பரிவும் காட்டுவேன் என்பது அவருக்குத் தெரியும்.)

பெரியாரும் சிறையிலிருந்து வெளியே வந்ததும் I have received exceptionally kind treatment (எனக்கு மிக அருமையான கவனிப்பு கொடுக்கப்பட்டது) என்று சொன்னதாக ஹிந்து பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. இதேபோலவே எனக்குத் தெரிந்த அளவு அன்றைய பிராமணர்களில் பலர் பெரியாரைத் தனிப்பட்ட அளவில் பெரிதும் மதித்தனர். நான் இளைஞனாக இருந்தபோது பெரியாரை அவன் இவன் என்று ஒருமையில் திட்டிய பிராமணர்களைவிட அவருடைய கருத்துகளை விவாதித்த பிராமணர்களைத் தான் அதிகம் சந்தித்திருக்கிறேன். 

என் தந்தை கடுமையாகப் பேசியது பெரியார் கோவில் நுழைவுப் போராட்டத்தின்போது எடுத்த நிலை பற்றித்தான். திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் என் தந்தையும் ஒருவர். பெரியார் இந்தக் கால கட்டத்தில் எடுத்த நிலை பற்றி ஈ.சா. விஸ்வநாதன் தனது The Political Career of E V Ramasami Naicker என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்:

In the face of Sanatanist opposition (காஞ்சிப் பெரியவர் போன்றவர்கள்) to temple entry bill one would have expected Naicker to support Rajaji’s efforts to bring about a social change in the Tamil country. Instead he was quite willing to compromise his own cherished and much advocated social aims like the uplift of the Harijans and accommodate Sanatanist views for immediate political gains. 

(கோவில் நுழைவு மசோதாவிற்குச் சனாதனிகள் காட்டிய எதிர்ப்பை நோக்கும்போது தமிழ்நாட்டில் சமுதாய மாற்றம் ஏற்பட ராஜாஜி எடுத்த முயற்சிகளுக்கு, நாயக்கர் வரவேற்பு அளித்திருப்பார் என்றுதான் ஒருவரால் எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால் அவர் தான் நேசித்து, ஆதரித்து வந்த, ஹரிஜன முன்னேற்றம் போன்ற சமுதாயம் சார்ந்த இலக்குகளை விட்டுக்கொடுத்து, உடனடியான அரசியல் ஆதாரத்திற்காகச் சனாதனிகளின் கருத்துகளுக்கு இடம் அளிக்கத் தயாராக இருந்தார்.)

பெரியார் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் பேசியதைப் பற்றி விஸ்வநாதன் குறிப்பிடுகிறார்:

He maintained that Brahmins would not be chased out of the country nor would he advocate this as a policy of the Justice Party. Brahmins and non-Brahmins should live like brothers peacefully each recognising the rights of the other in public life. To the Sanatanists he said that, in their ‘unfounded suspicion of the Justicites’ they should not support the ‘political Brahmins’ without any convictions other than caste.

(“பிராமணர்கள் நாட்டைவிட்டு விரட்டப்படமாட்டார்கள் என்றும் நீதிக்கட்சியின் கொள்கையாக அது இருக்க, தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார். பிராமணர்களும் பிராமணர் அல்லாதவரும் சகோதரர்கள்போல அமைதியாக, பொதுவாழ்வில் ஒருவர் மற்றொருவருடைய உரிமைகளை மதித்து வாழ வேண்டும் [என்றும் வலியுறுத்தினார்].’ நீதிக்கட்சியின் மீதுள்ள ஆதாரமில்லாத சந்தேகத்தினால், சனாதனிகள் ‘அரசியல் பிராமணர்களை’ எந்தப் பிடிப்பும் இல்லாமல், சொந்தச் சாதிக்காரர்கள் என்பதற்காக, ஆதரிக்கக் கூடாது என்றார்).

இரண்டாவது உலக யுத்தம் தொடங்கிய பின்னர், இந்திய அரசியலின் திசை வேறு பக்கமாகத் திரும்பியது. மார்ச் 1940இல் பாகிஸ்தான் கோரிக்கையை முஸ்லிம் லீக் வைத்த ஒரு மாதத்தில் நீதிக் கட்சி திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்துவிட்டது. இந்த வருடங்களில் பெரியார் பல கூட்டங்களில், குறிப்பாக முஸ்லிம் லீக் கூட்டங்களில், பிரிவினையை ஆதரித்துப் பேசினார். திராவிடர்களும் முஸ்லிம்களும் ஒரே இனம் என்று பெரியார் திரும்பத் திரும்பப் பேசியிருக்கிறார். ஆரியர்கள் உண்மையிலே இந்தியர்களே அல்ல, ஆங்கிலோ - இந்தியர் என்று வெள்ளைக்காரர்களுக்குப் பிறந்தவர்களை அழைப்பதுபோல் பிராமணர்களை ஆரியோ - இந்தியர் என அழைக்க வேண்டும் என்கிறார். பெரியாருடைய பிரதம சீடரான அண்ணா முஸ்லிம்களும் திராவிடர்களும் ஒரே இனம் என்பதை அழுத்தமாகச் சொன்னதை K. V. Ramakrishna Rao â¿Fò The Historic meeting of Periyar, Jinnah and Ambedkar என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்:

‘They are Aryans - we Dravidians. The same research only proved that Muslims are Dravidians with Islamic path. Therefore, the Dravida-Islamic confederation has arisen.’

(அவர்கள் ஆரியர்கள் - நாம் திராவிடர்கள். அதே ஆராய்ச்சி முஸ்லிம்கள் இஸ்லாமியப் பாதையில் செல்லும் திராவிடர்கள் என்பதை நிறுவிவிட்டது. திராவிட - இஸ்லாமியக் கூட்டமைப்பு எழுந்துவிட்டது.)

‘English and Aryans belong to the same race! Race joins with race! Dravidians and Muslims belong to the same race, thus, the same race joins with the same race!’

(ஆங்கிலேயரும் ஆரியர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். இனம் இனத்தோடு சேர்கிறது! திராவிடர்களும் முஸ்லிம்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள், அதனால் இங்கும் இனம் இனத்தோடு சேர்கிறது!)

‘Periyar has categorically declared during Coimbatore Conference that Dravidians may live (under the rule of Muslims) in Pakistan, but not with Aryans! Yes, it is a fact!’

(திராவிடர் முஸ்லிம்களுக்குக் கட்டுப்பட்டுப் பாகிஸ்தானில் வாழ்ந்தாலும் வாழலாமே ஒழிய ஆரியருடன் வாழக் கூடாது என்று பெரியார் ராமசாமி நாயக்கர் கோவை மாநாட்டில் உரைத்தார் என்று சாஸ்திரியார் சோகிக்கிறார். ஆமாம் உண்மைதான்! பெரியார் அங்ஙனம் தான் உரைத்தார். இனம் இனத்தோடு சேரும் என்ற நியதியை எடுத்துரைத்தார்.

இது ஆரியமாயை புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் பிராமணர்களின் நிலைப்பாடு என்ன? 

ராஜாஜிதான் பாகிஸ்தான் தீர்மானத்தை முதலில் ஆதரித்தார் என்பது நாம் அறிந்ததே. வெள்ளையனே வெளியேறு என அழைக்கப்பட்ட Quit India இயக்கத்தையும் அவர் ஆதரிக்கவில்லை. அந்தத் தருணத்தில் சந்தானம், சதாசிவம், கல்கி போன்ற பிராமணர்கள் அவர் பக்கம் இருந்தாலும் பெரும்பான்மையான பிராமணர்கள் காந்தி பக்கமே இருந்தனர். ராஜாஜி செய்வது மிகப் பெரிய தவறு என்றே அவர்கள் கருதினார்கள். கம்யூனிஸ்டுகளும் ராஜாஜியும் பெரியாரும் ஒரே நிலை எடுத்தது இந்தக் காலகட்டத்தில் மட்டும் தான் என நினைக்கிறேன். ஆனால் பெரியார் எல்லாப் பிராமணர்களும், ராஜாஜியை ஆதரிப்பதோடு திராவிட நாடு பிரிவினையையும் ஆதரிப்பார்கள் என ஒரு சமயம் நம்பியதாகத் தெரிகிறது. ஜூன் 23, 1947 அன்று பெரியார் சேலத்தில் பேசியதன் ஆங்கில வடிவத்தை யி.ஙி.றி. விஷீக்ஷீமீ என்னும் அறிஞர் Muslim Identity, Print Culture and the Dravidian Factor in Tamil Nadu என்னும் புத்தகத்தில் தந்திருக்கிறார்.

I am not dependent on our Dravidian comrades alone for the separation of Tamil Nadu. Many may not like what I am going to say. But I will say what is in my heart. We are soon to get the co-operation of my friend and comrade Acharyar for the separation of Dravidanadu. Not only him but all Brahmins… are going to support our demand for separation. Some of my comrades may wonder … When comrade Acharyar and I met he told me forcefully ‘Whether we get Swarajya or not, the trouble given by the North Indians must be got rid off.

(தமிழ்நாடு தனியாவதற்கு நான் என் திராவிடத் தோழர்களை மட்டும் நம்பியிருக்கவில்லை. பலருக்கு நான் இப்போது சொல்லப்போவது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நான் என் நெஞ்சில் இருப்பதைச் சொல்வேன். விரைவில் திராவிட நாடு தனியாவதற்கு நமக்குத் தோழர் ஆச்சாரியரின் ஆதரவு கிடைக்கப்போகிறது. அவர் மட்டும் அல்ல, எல்லாப் பிராமணர்களும் நமது பிரிவினைக் கோரிக்கையை ஆதரிக்கப்போகிறார்கள். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். நானும் தோழர் ஆச்சாரியாரும் சந்தித்தபோது அவர் மிக உறுதியாகச் சொன்னார், ‘சுயராஜ்யம் கிடைக்கிறதோ இல்லையோ, இந்த வட இந்தியர்கள் கொடுக்கும் தொல்லைகள் தொலைய வேண்டும்’ என்று.)

ராஜாஜிக்கும் காங்கிரஸுக்கும் சமரசம் ஏற்பட்டு 1945இல் அவர் மறுபடியும் காங்கிரசில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ‘Swaraj will be fact in six months or at most two years’ (சுயராஜ்யம் ஆறுமாதத்திலோ கூடியபட்சம் இரண்டு வருடங்களிலோ உண்மையாகிவிடும்) என்று 18 மார்ச் 1946இல் அவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்குச் சொன்னதாக ராஜ்மோகன் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாறு தெரிவிக்கிறது. எனவே ராஜாஜி பெரியாரிடம் இவ்வாறு சொல்லியிருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பெரியாரின் இந்தப் பேச்சுக்கு ராஜாஜி மறுப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. ஆனால் பெரியார் விஷயத்தில் ராஜாஜி எப்போதும் மௌனமாகவே இருந்திருக்கிறார்.

1949இல் திமுக திகவிலிருந்து பிரிந்ததன் காரணம் நமக்குத் தெரியும். மணியம்மை அவர்களைப் பெரியார் திருமணம் செய்தது ராஜாஜியின் அறிவுரையால் நிகழ்ந்தது என்றும் பார்ப்பனர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இது ஓர் உதாரணம் என்றும் கழகத்தினர் பல காலம் கூறிவந்தனர். ராஜாஜியும் இதைப் பற்றிப் பேசவேயில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் கி. வீரமணி ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார். அதில் ராஜாஜி இந்தத் திருமணம் வேண்டாம் என்றுதான் எழுதியிருந்தார். இதைப் பற்றியும் ராஜாஜி தான் உயிருடன் இருந்தவரை பேசவில்லை. பெரியாரும் பேசவில்லை. 

திமுக அமைக்கப்பட்ட பிறகு பெரியார் ஒதுக்கப்பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ‘கடவுளை மற’ என்றால் இவர்கள் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார்கள். அவர் ‘பிள்ளையார் சிலையை உடை’ என்றால் இவர்கள் ‘நாங்கள் பிள்ளையாரையும் உடைக்கமாட்டோம் அவர் முன் தேங்காயும் உடைக்கமாட்டோம்’ என்றார்கள். பிராமணர்கள் பெரியாரைக் கவனிப்பதைவிடத் திமுக தலைவர்களை அதிகம் கவனிக்கத் தொடங்கினார்கள். 

பெரியாரைத் திராவிட ஆட்சி உயர்த்திப் பிடித்து நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. இன்று பிராமணர்கள் மத்தியில் அவரைப் பற்றி முக்கியமாக மூன்று நிலைகள் இருக்கின்றன. சிலர் அவரை வெகுவாகக் கண்டித்து, குறிப்பாக இணையத்தில், எழுதத் தொடங்கியிருக்கின்றனர். சிலர் அவரை மீளுருவாக்கம் செய்து மகரிஷி என்று அழைக்கின்றனர். பெரியாரின் பேச்சைக் கேட்டுத்தான் காஞ்சிப் பெரியவர் பல்லாக்கில் செல்வதைவிட்டு நடந்து செல்லத் தொடங்கினார் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். மூன்றாவதாகச் சில பிராமணர்கள் காங்கிரஸ்காரர்கள் காந்திக்கு என்ன செய்தார்களோ அதையே திராவிட இயக்கத்தினர் பெரியாருக்குச் செய்தனர் என்கிறார்கள். கொள்கைகள் பறந்துபோயின. தரையில் இருப்பவை சிலைகள்தாம் என்கிறார்கள்.

சோ ராமசாமி பெரியாரைப் பற்றி எழுதும்போது The man was greater than his message (அவரது சிந்தனை மதிக்கப்படுவதைவிடத் தனிமனிதனாகத்தான் அவர் அதிகம் மதிக்கப்படுகிறார்) என்கிறார். எனக்கு இந்தக் கருத்தோடு உடன்பாடு இல்லை. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஆளுமையார் என்ற கேள்வி எழுப்பப்பட்டால் சாதாரண மக்கள் மத்தியில் எம்ஜிஆர் பெயர் முதலாவதாகச் சொல்லப்படும். படித்தவர்கள் மத்தியில் பெரியார் பெயர் சொல்லப்படும். காமராஜ், அண்ணா, பாரதி, போன்ற பெயர்கள் பின்னால்தான் வரும்.

பெரியார் தனிப்பட்ட முறையில் எளிமையானவர், பழகுவதற்கு இனியவர் என்பதால் அவர் இன்று தமிழகத்தில் கொண்டாடப்படவில்லை. அவரது கருத்துகளுக்காகவே உயர்த்தப்படுகிறார் - அவை என்ன என்பது படித்தவர்களுக்கும் தெளிவாகத் தெரியாமல் இருந்தாலும். 




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நான் பெரியாரைப் பற்றி என்ன நினைக்கிறேன்? 

தனது நீண்ட வாழ்வில் பெரியார் சமூக நீதி, பெண் விடுதலை, அரசியல், தமிழ்மொழி, இந்திய ஒருமைப்பாடு, கடவுள், கலாச்சாரம் போன்ற பல பொருள்களைப் பற்றி எழுதியிருக்கிறார். பேசியிருக்கிறார். 

இந்தியாவிலேயே முதல்முதலாக நீதிக் கட்சி 1921இல் இட ஒதுக்கீட்டை அரசு வேலைகளில் கொண்டுவந்தது. அந்தச் சமயத்தில் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இருந்தாலும், இட ஒதுக்கீட்டுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர் அவர்தான். சில நாட்களுக்கு முன்னால் ஒரு புள்ளிவிவரத்தைக் காண நேர்ந்தது. அதை உங்கள் முன் வைக்கிறேன். 2012ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் மதிப்பெண்கள்: சென்னை மருத்துவக் கல்லூரி FC Maximum 200 Minimum 200 BC 200 199.75 BCM 199.75 199.50 MBC 200 199.50 SC 199 198.50 ST 199.00 199.00. எல்லாக் கல்லூரிகளிலும் இதே மாதிரிதான். கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் எஸ்டி மாணவர்தான் மிகக் குறைவான மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார். அவரது மதிப்பெண்கள் 189.50. இட ஒதுக்கீட்டால் தரம் குறைந்துவிடும் என்று கூறிவருகிறவர்களுக்கு முற்றிலும் மறுப்புச் சொல்லும் வகையில் இந்தப் புள்ளிவிவரம் அமைகிறது. இந்தியா முழுவதும் இந்த நிலை ஏற்படும் நாள் வெகுதூரம் இல்லை. மக்கள் ஆட்சியின் முக்கியமான விளைவுகளில் இதுவும் ஒன்று. ஆனால் இந்தியாவிற்கே தமிழ்நாடு எடுத்துக்காட்டாக இருப்பதற்குக் காரணம், முக்கியமாக, பெரியார். 

அடுத்தது பெண் விடுதலை. இந்த விஷயத்தில் மற்றைய எல்லாத் தலைவர்களைவிடப் பெரியாரின் நிலைப்பாடு உளமார்ந்தது. அவரது காலத்தின் நிலையைக் கணக்கில்வைத்துப் பார்க்கும்போது மிக அதிசயக்கத்தக்கது.

மூன்றாவது அறிவியலின் மீதும் அறிவியலால் மனிதனுக்குக் கிடைத்த கருவிகளின் மீதும் அவருக்கு இருந்த நம்பிக்கை. தனது கடைசிப் பேச்சில்கூட அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் தொலைபேசியில் உடனடியாகப் பேச முடிகிறது என்பதை ஒரு குழந்தையின் குதூகலத்தோடு குறிப்பிடுகிறார்.

நான்காவது அவருக்கு இருந்த நகைச்சுவை உணர்வு. உதாரணமாக மாநில சுயாட்சி என்றால் அவருக்குக் கடும் கோபம். அவர் சொல்வதைக் கேளுங்கள். இது 1969இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு.

‘சில மேதாவிகள், பிரகஸ்பதிகள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இதன் கருத்து என்ன? செருப்பால் அடிக்காதே. அந்தச் செருப்புக்கு பட்டுச் சரிகை கொண்டு குஞ்சங்கள் கட்டி அதனால் அடி என்று கேட்பது போலத்தானே இருக்கிறது.’

பெரியாரின் குறைபாடுகளில் முதலாவதாக நான் நினைப்பது அவருக்கு ஜனநாயக முறைகளில் அதிகம் பிடிப்பு இல்லாமைதான். திரு. விஸ்வநாதன் கூறுகிறார்: 

n handling political issues, in taking decisions, and executing them he was an autocrat, caring little for the views of the others. His disdain for democratic approach… had a disruptive effect on his party organization. 

(அரசியல் பிரச்சினைகளைக் கையாளுவதில், முடிவுகள் எடுப்பதில், அவற்றை நிறை வேற்றுவதில் அவர் மற்றவர்களின் கொள்கைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத சர்வாதி காரியாக இருந்தார். ஜனநாயக வழிமுறையின் மீது அவருக்கு இருந்த அவநம்பிக்கை கட்சி அமைப்பில் சீர்குலைவை ஏற்படுத்தியது.) 

உதாரணமாக 1944 சேலம் மாநாட்டில் பெரியார் கூறியதன் ஆங்கில வடிவம்:

IIn a way, I was doing things as I pleased as president, and I could not be consulting too many opinions. I believed myself to be right and I had no reason to change my views. As a president I could only take the lead and it was for others to do the work. 

(பார்க்கப்போனால் நான் தலைவராக இருந்தபோது எனக்கு என்ன பிடித்ததோ அதைச் செய்துகொண்டிருந்தேன். பல ஆலோசனைகளைக் கேட்க என்னால் முடியாது. நான் செய்வதுதான் சரி. என்னுடைய கொள்கைகளை மாற்றிக்கொள்ள எந்தக் காரணமும் இல்லை. ஒரு தலைவன் என்ற முறையில் நான் வழி நடத்த வேண்டும் மற்றவர்கள் சொன்ன வேலையைச் செய்ய வேண்டும்.)

பெரியாரின் இந்தத் தன்மை அவர் 1942இல் Sir Stafford Cripps ஐச் சந்தித்த சம்பவத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. நீதிக் கட்சியின் சார்பில் சென்னை மாகாணத்தை இந்தியாவிலிருந்து தனியாகப் பிரித்துத் தர வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக ஓட்டெடுப்பு நடந்தால் மக்கள் சாதகமாக வாக்களிக்கமாட்டார்கள் என்பது நீதிக் கட்சிக்குத் தெரிந்திருந்தது. எனவே க்ரிப்ஸிடம் எங்களுக்குத் (அதாவது பிராமணர் அல்லாதவர்களுக்கு) தனித் தொகுதிகள் ஒதுக்கித் தாருங்கள், எவ்வளவு தந்தால் எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்குமோ அவ்வளவு தாருங்கள் என்று நீதிக் கட்சி கேட்டது. இதற்கு க்ரிப்ஸ் கூறிய பதில் பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்ட The Transfer of Power புத்தகத்தில் இருக்கிறது.

This was a wholly impractical suggestion… until such time as they could persuade the people of Madras to vote in their favour it was not possible within any democratic method at all to give them that majority which they desired. They appreciated this situation but were nevertheless insistent that something should be done to assist them. I pointed out, as sympathetically as possible, in existing circumstances there was nothing we could do. 

(இது முற்றிலும் சாத்தியமற்ற கருத்து. மதராஸ் ராஜதானி மக்களைத் தங்களுக்குச் சாதகமாக ஓட்டளிக்கச் சம்மதிக்க வைக்கும்வரை, பெரும்பான்மை [அடைய வழி] வேண்டும் என்று அவர்கள் கேட்பது எந்த ஜனநாயக வழிமுறைக்கும் ஒத்துவராது. அவர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். நான் இப்போது உள்ள நிலையில் எங்களால் ஏதும் செய்ய முடியாது என்று பரிவோடு சொன்னேன்.)

பிராமணர்களைப் பற்றியும் அரசியல் பற்றியும் பெரியார் பல தருணங்களில் எடுத்த நிலைப்பாட்டிற்கும் இன்றைய மெகாத் தொடர்களின் வில்லன்கள் அல்லது வில்லிகள்மீது இத்தொடர்களைக் கண் கொட்டாமல் பார்க்கும் பார்வையாளர்களுக்காக வடிவமைக்கும் எழுத்தாளர்களுக்கு இருக்கும் நிலைப்பாட்டிற்கும் அதிக வித்தியாசம் இல்லை என எண்ணுகிறேன். தனக்குத் தோன்றியதுதான் சரி அதற்காக வரலாற்றையும் உண்மைகளையும் வளைத்துத் தட்டி, நிமிர்த்தித் தான் விரும்பிய வடிவங்களை அமைத்துக்கொள்ளலாம் என்று அவர் நினைத்தார். தன்னோடு வராதவர்கள் செய்வதெல்லாம் அவருக்குச் சூழ்ச்சியாகத் தெரிந்தது. காந்தி, சுபாஷ் சந்திர போஸ், படேல் போன்ற தேசியத் தலைவர்கள் எல்லாம் பார்ப்பனச் சூழ்ச்சிக்குப் பலியானவர்கள் என்று அவர் சொன்னார். எழுதினார். பெரியாரின் இந்தத் தாக்கம் இன்றுவரை பிராமணரைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். இந்தப் பேச்சிற்காக இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அகப்பட்டது இது. 

Brahmin conspiracy against AishwaryaRai!

AishwaryaRai is of the Bunt / Shetty caste of Karnataka..... Bunts are shudras. The oppressed people who have come from the feet of God.Aishwaraya proved to the world that she is the smartest and beautiful when she won the Miss World title. Brahmins, the most cruel race in the world,could never digest it. When AishwaryaRai joined movies the brahmin and Bania toilet papers like Times of India, Hindu and Indian Express were seething with jealousy. They made claims that she does not know any acting. They always sided with their jatwallah actress like the maharistrianbrahminsMadhuri Dixit and SonaliBendre.

They hatched a conspiracy in UP and got the manuwadi Amar Singh to get Aishwarya married to Abhishek Bachan, a half upper caste sikh and brahmin. 

(ஐஸ்வர்யா ராய்க்கு எதிராகப் பிராமணர்களின் சூழ்ச்சி!

ஐஸ்வர்யா ராய் கர்நாடகத்தில் பண்ட் சாதியைச் சேர்ந்தவர். பண்ட் சாதியினர். சூத்திரர்கள். ஒடுக்கப்பட்டவர்கள். கடவுளின் காலிலிருந்து வந்தவர்கள். ஐஸ்வர்யா உலக அழகி போட்டியை வென்றபோது தான் மிக அழகோடு திறமையும் உள்ளவர் என்று உலகத்திற்குச் சான்றளித்தார். உலகத்திலேயே, மிகக் கொடியவர்களான பிராமணர்களுக்கு இது சீரணமாகவில்லை. அவர் சினிமாவில் சேர்ந்தபோது டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற மலம் துடைக்க உதவும் பிராமண, பனியா பத்திரிகைகள் பொறாமையால் துடித்தன. அவருக்கு நடிக்கத் தெரியாது என்றன. இடுப்பை ஆட்டி நடிக்கும் மகராஷ்டிரீயப் பிராமண நடிகைகளான மாதுரி தீட்சித், சோனாலி பிந்த்ரே போன்றவர்கள் பக்கம் சாய்ந்தன.

பெரிய சூழ்ச்சி ஒன்றை உத்திரபிரதேசத்தில் செய்து, மனுவாதியான அமர்சிங்கின் உதவியால் ஐஸ்வர்யாராயைப் பாதி பிராமணன் பாதி உயர்சாதிச் சீக்கியனான அபிஷேக்பச்சனை மணமுடிக்கவைத்தனர்.)

இந்த ஆரிய திராவிடச் சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால் இன்று உலகில் இருக்கும் மனிதர்கள் எல்லோரும் ஆப்பிரிக்காவிலிருந்தோ மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தோ வந்தவர்கள்தாம் என்று அறிவியல் கூறுகிறது. நாம் எல்லோருமே வந்தேறிகள்தாம். பெரியாருக்கு இந்த மரபணு ஆராய்ச்சியில் பிறந்த உண்மை தெரிந்திருக்க நியாயம் இல்லை. 

பிராமணர்கள் ஆதிக்க சாதி வகையைச் சேர்ந்தவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவர்கள் சாதி மட்டும் இந்த வகையைச் சேர்ந்தது அல்ல. உதாரணமாக டாக்டர் சுப்பராயுலு அவர்கள் சமீபத்தில் வெளியான South India under the Cholas என்ற நூலில் சோழர் காலத்தில் இருந்த அரசு ஊழியர்களில் பிராமணர்களின் சதவீதம் 7% மட்டுமே என்று கூறுகிறார். David Ludden தனது Peasant History in South India என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்:

The very highest positions in the regional officer corps were filled by urban descendants of the Nayaka regional elite. Many were Brahmins …(but) looking at the whole range of native officers in the taluk and district headquarters of the Tinnevelly district, however we find that the Brahmins dominated only the very highest posts and that the overall official power remained concentrated in the PandyaVellala-Brahman elite.

(பிராந்திய அதிகாரப் பதவிகளில் மிகவும் உயர்ந்தவை நாயக்கர் ஆட்சியில் பிராந்தியத்தில் இருந்த ஆதிக்கவர்க்கத்தினரின் சந்ததிகளால் நிரப்பப்பட்டன. இவர்களில் பலர் பிராமணர்கள். (ஆனால்) திருநெல்வேலி மாவட்டத்தின் தாலுகா மற்றும் மாவட்ட தலைமையகங்களில் இருந்த உள்ளூர் அதிகாரிகளைக் கணக்கில் கொண்டால் பிராமணர்களின் எண்ணிக்கை மிக உயர்பதவிகளிலேயே அதிகமாக இருந்தது. மொத்த அரசு அதிகாரம் பாண்டிய வெள்ளாள, பார்ப்பன உயர்குழுவின் கையில் தான் இருந்தது)

தமிழகத்தில் சாதி பற்றிப் பேசுபவர்கள் 20 நூற்றாண்டுத் தொடக்கம் வரை புகைந்துகொண்டிருந்த இடங்கை, வலங்கைப் போராட்டங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. 

இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பது ஆண்டுகள்வரை அரசு பதவிகளில் பிராமணர்கள் அதிகம் இருந்தார்கள் என்பது உண்மை. இது பிராமணர்கள் ஆட்சியில் இருந்ததால் ஏற்படவில்லை. ராஜாஜி ஆண்டது இந்தக் காலக்கட்டத்தில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. எனவே அவரது சூழ்ச்சியால் இது நேர்ந்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம் பிராமணர்களில் ஆங்கிலம் படித்தவர்கள் அதிகம் இருந்ததால். 1921ஆம் வருடம் ஆங்கிலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பிராமணர்களின் சதவீதம் (தெலுங்கு பிராமணர்கள் உட்பட) 45.5%. 1918இல் மெட்ராஸ் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் பிராமணர்களின் சதவீதம் 67%. இந்த நிலை 1927இலிருந்தே மாறத் தொடங்கிவிட்டது. 1927இம் ஆண்டு அரசு ஆணையின்படி அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன்படி பிராமணர்கள் 17 சதவீதமும் பிராமணர் அல்லாதார், முஸ்லிம்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயம் அடங்கிய பிற மக்களுக்கு முறையே 42, 17, 17, 7 சதவீதங்கள் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. எனவே பெரியார் காங்கிரஸிலிருந்து விலகிய வருடத்திலேயே பிராமணர்கள் அரசு பதவிகளில் அதிகம் சேர்வது ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் ஜனநாயகம் மலர்ந்த உடன், கல்வி எல்லா மக்களையும் சென்றடைந்தவுடன், இந்த நிலை மேலும் சீரடைந்துவிட்டது. சீரடைந்ததற்குப் பெரியாரின் பங்கு முக்கியமானது என்பது மறுக்க முடியாதது. ஆனால் சீரடையவிடாமல் பிராமணர்கள் தடையாக இருந்தார்கள் என்று கூறுவது முழுவதும் உண்மையல்ல. 

உதாரணமாக இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது திருத்தத்தில் ஒரு பகுதி இட ஒதுக்கீடு பற்றியது. இது வந்த காரணம் மிக முக்கியமானது. சம்பகம் துரைராஜன் என்ற சென்னையைச் சேர்ந்த பிராமணப் பெண் தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதது குறித்து வழக்கு தொடர்ந்தார். அப்போது 14 இடங்களில் பிராமணருக்கு 2 என்ற வீதத்தில் இடங்கள் வழங்கப்பட்டு வந்தன. (6 பிராமணர் அல்லாதவருக்கு, 2 தலித்துகளுக்கு 2 பிற்படுத்தப்பட்ட பிராமணர் அல்லாதவருக்கு, 1 கிறித்துவர்களுக்கு, 1 முஸ்லிம்களுக்கு) உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் இந்தப் பெண்ணுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்யலாம் என்ற அரசியல் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர் ஜவகர்லால் நேரு. ஆதரித்துப் பேசியவர்களில் ஒருவர் டாக்டர் அம்பேத்கர். இந்த விவாதம் நடக்கையில் முதல் திருத்தத்தில் இருந்த socially and educationally backward classes (சமூக, கல்வி அடிப்படையில் பின்தங்கியவர்கள்) என்ற சொற்களுடன் economically (பொருளாதார அடிப்படையில்) என்ற சொல்லையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று வாதிட்டவர் அனந்தசயனம் அய்யங்கார். சமூகம் என்ற சொல் பொருளாதாரத்தையும் உள்ளடக்கியது என்று அப்போது நாடாளுமன்றத்தில் சொல்லப்பட்டது. 

பெரியார் திரும்பத் திரும்பச் சொல்கிறார் மனுவில் சொல்லியிருக்கிறது சூத்திரன் பிராமணனுடைய வைப்பாட்டி மகன் என்று. எட்டாவது அத்தியாயத்தில் 415ஆம் சுலோகம் அவ்வாறு சொல்கிறது என்கிறார். மனு சூத்திரர்களைப் பற்றி மிகக் கோபமூட்டும் அளவில் எழுதியிருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. மனு நூல் நமக்குத் தேவையில்லை. ஆனால் மனு இவ்வாறு கூறியிருக்கிறாரா?

எனக்குக் கிடைத்த இரு மொழிபெயர்ப்புகளில் ஒன்று பழையது. 1886 ஆம் வருடத்தில் ப்யூலர் மொழிபெயர்த்தது. அதில் சுலோகம் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது:

There are slaves of seven kinds, he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in the house, he who is bought and who is given, he who is inherited from ancestors and he who is enslaved by way of punishment.

(அடிமைகளில் ஏழு வகைகள் - போரில் அடிமைப்பட்டவன், தின உணவிற்காக வேலை செய்பவன், வீட்டில் பிறந்தவன், வாங்கியவன், கொடுக்கப்பட்டவன், மூதாதையர்களால் தரப்பட்டவன், தண்டனையாக அடிமைப்படுத்தப்பட்டவன்.)

அடுத்த மொழிபெயர்ப்பு வெண்டி டொனிகருடையது. 1991இல் வந்தது.

There are seven ways that slaves come into being; taken under a flag (of war), becoming a slave in order to eat food, born in the house, bought, given, inherited from ancestors or enslaved as punishment.

(அடிமைகள் ஏழு வகைகளில் வருகிறார்கள் - போரில் அடிமைப்பட்டவன்,
 உணவிற்காக வேலை செய்பவன், வீட்டில் பிறந்தவன், வாங்கியவன், கொடுக்கப்பட்டவன், மூதாதையரால் தரப்பட்டவன், தண்டனையாக் அடிமைப்படுத்தப்பட்டவன்.)

இதில் வைப்பாட்டி மகன் எங்கு வருகிறது? நான் தவறாகச் சொல்லியிருந்தால் திருத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். 




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பெரியாருக்கு அறிவியல்மீது காதல் இருந்தாலும், அறிவியலுக்கு அடிப்படையான objectivity - பாரபட்சமின்மை - அவருக்கு இல்லாமல் போனது தமிழகத்தின் இழப்பு என்றுதான் கூற வேண்டும். காந்தி இறந்தபோது இந்தியாவைக் காந்திதேசம் என்று அறிவிக்க வேண்டுமென்று எழுதினாலும், காந்தியை அவரைப் போலத் திட்டியவர்கள் இந்தியாவில் மிகக் குறைவானவர்களே இருப்பார்கள். காந்தியைக் கபட சன்யாசி என்கிறார். ராஸ்புடீன் என்கிறார். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இவருக்குத் தோன்றிய காரணம் ஒன்றைச் சொல்லி அவரை விமர்சித்தார். ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைவர் அனைத்துத் தரப்பு மக்களையும் அணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்துகொண்டே இருக்கும் என்பதை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இன்றும் பெரியாரின் தொண்டர்கள் சிலர் அவர் இந்தியாவைக் காந்திதேசம் என்று அழைக்கச் சொன்னதற்குக் காட்டும் காரணம் இது:

‘காந்தி கொல்லப்பட்டபோது பெரியார், இந்தியாவிற்குக் “காந்திதேசம்” என்று பெயர் வைக்கச் சொன்னார். காரணம், காந்திமேல் கொண்ட அன்பினால் அல்ல. காந்தியைக் கொன்ற பார்ப்பன இந்து மதவெறியர்கள், காந்தியைத் தங்களுக்கு எதிராகக் கருதிக் கொன்றார்கள் என்பதால். காந்தி கொலைசெய்யப்படுவதற்கு முதல்நாள்வரை, காந்தியைக் கடுமையாக எதிர்த்த பெரியார்தான் காந்திதேசம் என்று பெயர் வைக்கச் சொன்னார்.

காந்தி கொலைக்கு முன்னும் பின்னும்கூடக் காந்தியைப் பெரியார் ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, கடுமையாக எதிர்க்கவும் செய்தார். 1956இல் ‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவிற்கு அவமானம்’ என்று அறிவித்தார். காங்கிரசின் காமராஜர் ஆட்சியின்போதுதான் ‘காந்திப் பட எரிப்பு’ போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் காந்தி செய்த சதிக்கு, காந்தி கொலைசெய்யப்பட்டிருந்தாலோ மாவீரன் பகத்சிங்கிற்குச் செய்த துரோகத்திற்குப் பகத்சிங்கின் தோழர்கள் அல்லது புரட்சிகர இளைஞர்கள் காந்தியைக் கொலைசெய்திருந்தாலோ பெரியார் அவர்களைக் கண்டித்திருக்கமாட்டார். அந்தக் கொலையை ஆதரித்துதான் இருப்பார்.’ (பேச்சு மதிமாறனுடையது. பெரியார் திராவிடக் கழகத்தின் சார்பில் 23.1.2010இல் ஷெனாய் நகரில் பேசியது. http://mathimaran.wordpress.com/2010/02/10/artical-279/)

அவரை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டிருந்த இந்த வெறுப்பினாலேயே அவர் ஜின்னாவின் பின்னால் சென்றார். பாகிஸ்தான் இயக்கம் மும்முரமாக இருந்த காலத்தில், முஸ்லிம்களும் - தமிழக முஸ்லிம்கள் மட்டும் அல்ல எல்லா முஸ்லிம்களும் - திராவிடர்களும் ஒரே இனம் என்று சொன்னார்.

Muslims are following the ancient philosophies of Dravidians. The Arabic word for the Dravidian religion is Islam. When Brahminism was imposed in this country, it was Prophet Mohammad who opposed it, by instilling the Dravidian religious policies in the minds of the people. 

(முஸ்லிம்கள் திராவிடர்களின் பழமையான தத்துவங்களையே கடைப்பிடிக்கிறார்கள். திராவிட மதத்திற்கு அரபியச் சொல் இஸ்லாம். இந்த நாட்டில் பார்ப்பணியம் திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்தவர் இறைத்தூதர் முகம் மது அவர்கள். திராவிட மதக் கொள்கைகளை மக்கள் மனத்தில் பதியச் செய்தவர் அவர்.)

பெரியார் திருச்சியில் 15 ஜூலை 1947இல் பேசியது இது. 

இது மாத்திரம் அல்ல. இந்தப் பேச்சை முழுவதும் வெளியிட்ட விடுதலைத் தலையங்கம் திராவிட நாடு பிறந்தால் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற பழந்தமிழர் கொள்கை கடைப்பிடிக்கப்படும் இஸ்லாம் கைகோத்து இணைந்து ஒன்றாகலாம் என்றது எனத் திரு. மோரே தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

பெரியார் 9 ஆகஸ்டு 1944இல் ஜின்னாவிற்குப் பாகிஸ்தான் கோரிக்கையையும் திராவிடஸ்தான் கோரிக்கையையும் ஒன்றாக இணைத்துக் காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்துமாறு ஒரு கடிதம் எழுதினார்.
இதற்கு ஜின்னா கறாராக ஒரு பதில் எழுதினார்.

I have always had much sympathy for the people of Madras, 90 percent of whom are non Brahmins and if they desire to establish their Dravidastan it is entirely for your people to decide on this matter. I can say no more, and certainly I cannot speak on your behalf... I have noticed that in your activities you have been indecisive.

(எனக்கு எப்போதுமே மதராஸ் மக்கள்மீது பரிவு உண்டு. அவர்களில் தொண்ணூறு சதவீதத்தவர் பிராமணர் அல்லாதவர். அவர்கள் திராவிடஸ்தானத்தை அமைக்க நினைத்தால் அதைப் பற்றி அவர்களே முடிவுசெய்ய வேண்டும். இதற்கு மேல் என்னால் ஏதும் சொல்ல முடியாது. உங்களுக்காக நான் பேச முடியாது . . . உங்களுடைய நடவடிக்கைகளை நான் கவனித்திருக்கிறேன். உங்கள் செயல்பாடுகளில் உறுதியில்லை.)

பெரியார் இந்தக் கடிதத்தில் தனக்குச் சாதகமான உள்ள பகுதிகளை மட்டும் வெளியிட்டதாகவும் அதைக் கேள்விப்பட்ட ஜின்னா தனக்கும் பெரியாருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்ததாகவும் விஸ்வநாதன் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

பெரியார் தனது 85ஆம் பிறந்த நாள் மலரில் நான்கு எதிரிகளாகக் குறிப்பிட்டது பிராமணர்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் தலித்துகள் என்று சொல்கிறார்கள். எனக்கு இந்த மலர் கிடைக்கவில்லை. காலச்சுவடு செப்டம்பர் - அக்டோபர் 2000 இதழில் நேர்காணலில் ரவிக்குமார் இவ்வாறு கூறுகிறார்:

‘சாதி ஒழிப்பு குறித்து பெரியார் பேசியவை கூடப் பிரக்ஞைபூர்வமாகப் பேசப்பட்டவையா என்ற ஐயம் உண்டாகிறது. தனது 85ஆவது பிறந்த நாள் செய்தியாக அவர் சொன்னவற்றைப் பார்த்தால் நாம் வேறுவிதமாக எண்ணத் தோன்றுகிறது. ‘நமக்கு சமுதாய எதிரிகளாக நான்கு கூட்டங்கள் இருக்கின்றன - பார்ப்பனர்கள், நம்மில் கீழ்த்தர மக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள்’ எனப் பெரியார் அதில் குறிப்பட்டிருக்கிறார்.’ ‘நமது லட்சியங்கள் நிறைவேறுவதற்கு இந்த நான்கு குழுவினரும் பெரும் கேடர்களாக இருக்கிறார்கள்’ என்று கூறுகிறார். ‘ஒரு கூட்டத்தினர் நம்முடைய இழி நிலை பற்றியும் ஏன் தங்களுடைய இழிநிலை பற்றியும்கூடக் கவலை இல்லாமல் சோறு -சீலை - காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டவர்கள்’ என்று தலித் மக்களைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் பெரியார்.

பெரியாருடைய கடைசிப் பேச்சு இணையத்தில் கிடைக்கிறது. இறப்பதற்குச் சில நாட்கள் முன்னால் பேசிய பேச்சு. பெரியாரின் மரண சாசனம் என அவருடைய தொண்டர்களால் அழைக்கப்படும் பேச்சு. நீங்கள் எல்லோரும் கேட்க வேண்டும். பெரியார் என்ற தனி மனிதனின் கொள்கைப் பிடிப்பை எடுத்துக்காட்டும் பேச்சு. வலியால் பேச்சுக்கு இடையில் துடித்தாலும் மன உறுதி தளராமல் பேசுகிறார். இந்தப் பேச்சில்தான் பாப்பானைப் பார்த்தால் ‘வாப்பா தேவடியாள் மகனே எப்போ வந்தே’ என்று கேட்க வேண்டுமென்கிறார்.

இந்தப் பேச்சில் சுயமரியாதை இயக்கத்திற்கு அன்றிலிருந்து இன்றுவரை ஐந்து கொள்கைகள்தாம் என்கிறார். அவை: கடவுள் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் ஒழிய வேண்டும், பார்ப்பான் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிந்துவிட்டது, காந்தி ராமசாமி ஆகிவிட்டதால் அவரை ஒழித்துவிட்டார்கள் என்கிறார். காந்தி எப்போது ராமசாமி ஆனார் என்பது எனக்குத் தெரியவில்லை. கடவுள், மதம் பற்றி அவர் வழிகாட்டும் பாதை வெறுப்பால் அமைக்கப்பட்ட பாதை. அந்தப் பாதையில் நடக்க எனக்கு விருப்பம் இல்லை. நான் பிராமணனாகப் பிறந்ததால் இதைக் கூறவில்லை. இவை ஒழிய, ஒழி ஒழி என்று தினமும் சொல்லும் அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மனித குலத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது. அது வளர, வளரத் தனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளும், தேவையற்றதை உதறித்தள்ளிவிடும். 

C.S. Lewis எழுதிய Chronicles of Narnia புத்தகத்தில் ஒரு வரி வருகிறது. We have nothing if not belief - நம்பிக்கை இல்லாவிட்டால் நம்மிடம் ஏதும் இல்லை. இன்று நமது நாட்டில் 99% மக்கள் அவ்வாறுதான் நினைக்கிறார்கள். உலகம் முழுவதும் பெரும்பான்மையானவர்கள் அவ்வாறு நினைக்கிறார்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை என்பதால் மக்களிடம் சென்று நீங்கள் முட்டாள்கள் என்று சொல்லலாம் என நான் நினைக்கவில்லை. 

பெரியார் பிராமணர்களைப் பற்றி இப்படியும் பேசியிருக்கிறார்.
‘பார்ப்பனத் தோழர்களே!

நான் மனிதத்தன்மையில் பார்ப்பனருக்கு எதிரி அல்லன். பார்ப்பனப் பிரமுகர்கள், பெரியோர்கள் ஆகியோருக்கு நான் அன்பனாகவும் மதிப்பிக்குரியவனாகவும் நண்பனாகவும்கூட இருந்துவருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது.’

இந்த வெறுப்பு நியாயமானது.

ஆனால் பிராமணர்கள்மீது கொண்டிருந்த அடிப்படை எதிர்ப்புத் தன்மை (visceral hatred) அவரைப் பல நிலைகளை எடுக்கவைத்தது. பிராமணர்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த பெரியார் ஹிட்லர் யூதர்களை நடத்தும் முறையைப் பார்த்து, பிராமணர்கள் யூதர்களே என்றும் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் பலவற்றில் இரண்டு இவை:

யூதர்களுக்கு குடியிருக்க நாடும் இல்லை, நாட்டுப்பற்றும் இல்லை என்பதற்கும் பிராமணர்களுக்குக் குறிப்பிட்ட நாடும் இல்லை நாட்டுப்பற்றும் இல்லை என்பதற்கும் ஒற்றுமை இருக்கிறதா இல்லையா?

யூதர்கள் சிறிதும் தங்களைத் தவிர வேறு எதிலும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களைச் சுவாதீனம் செய்துகொண்டு, ஆளுவதில் கலந்துகொண்டு தந்திரங்கள் செய்து மற்ற குடிகளை வாட்டி வதக்கி உயிர்வாங்க வாழுகிறவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்களும் சிறிதும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுபவர்களைச் சுவாதீனம் செய்துகொண்டு ஆட்சியில் புகுந்து ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறார்கள் என்பதற்கும் சரியான பொருத்தம் இல்லையா?

இது பெரியார் பேசியதா ஹிட்லரின் இந்திய அனுதாபி ஒருவர் பேசியதா என்று சந்தேகமாக இருக்கிறது.

பெரியார் தமிழைப் பற்றிக் கூறியிருப்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். தமிழ் இலக்கியத்தைப் பற்றி அவர் பலவாறாகப் பேசியிருக்கிறார். கம்பனின் நல்ல பாடல்கள் இருக்கின்றனவே என்ற கேள்விக்கு இது மலத்தில் அரிசி பொறுக்கும் வேலை என்றிருக்கிறார். திருவள்ளுவரைப் பற்றி, தொல்காப்பியரைப் பற்றி, ஆழ்வார்களைப் பற்றி நாயன்மார்களைப் பற்றி அவர் சொல்லியிருப்பதைத் திருப்பிச் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. தமிழின் மீது அன்பு வைத்திருக்கிறவர்கள் மட்டுமல்ல, இலக்கியம் பற்றிச் சிறிது அறிந்தவர்கள்கூட அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மொழி, கலை மற்றும் இலக்கியம் குறித்த அவரது புரிதல் பரிமாணங்கள் இல்லாதது.

பெரியார் இராமாயணத்தைப் பற்றி மிகக் கடுமையாகப் பேசியிருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் சமீபத்தில் சீதையின் இரண்டாவது மகனான குசன் இராமனுக்குப் பிறந்தவன் அல்ல, வான் மீகிக்குப் பிறந்தவன் என்று அவர் கூறியதாகப் படிக்க நேர்ந்தபோது. எனக்கு சீதை தீ புகுமுன் சொன்னது நினைவிற்கு வந்தது:

‘மனத்தினால், வாக்கினால், மறு உற்றேன் எனின்,

சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா என்றாள்.’

சினத்தின் வெம்மையைவிட வெறுப்பின் வெம்மை மிகக் கொடியது. 

கடைசியாக, பெரியார் சொன்னதை வைத்து விடுதலை 22 செப்டம்பர் 2010இல் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதி இது:

‘ஒரு வெள்ளைக்காரனைப் பார்த்து உனக்கு இங்கிலாந்து வேண்டுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? என்று கேட்டால், எனக்கு இங்கிலாந்து வேண்டாம்; ஷேக்ஸ்பியர்தான் வேண்டும் என்று கூறுவான் என்று தந்தை பெரியார் பச்சையப்பன் கல்லூரியில் கூறியதை எடுத்துக்காட்டி, அடுத்து அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் சொன்ன கருத்து அவையில் வெடிச் சிரிப்பையும், அத்தோடு விவேக அலையையும் எழுப்பியது.

உனக்கு இந்தியா வேண்டுமா? இராமாயணம் வேண்டுமா? என்று நம்மைப் பார்த்துக் கேட்டால், இந்த இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்ல முடியும் என்று தந்தை பெரியார் சொன்னதற்கு ஆமாம் போடுவதைத் தவிர வேறு வழி என்ன?’
எனக்கு இரண்டும் வேண்டும். 

இராமாயணம் எனக்குத் தமிழின் அழியா அழகைப் புரியவைத்த கம்பன் விட்டுச் சென்ற சொத்து. 

இந்தியா எனது நாடு. 

குறிப்பு: தமிழில் பேசியவற்றை, எழுதியவற்றை ஆங்கிலத்தில் படித்து அவற்றைத் திரும்பத் தமிழுக்குக் கொண்டுவரும் கட்டாயம் சில இடங்களில் எனக்கு இருந்தது. இதனால் சொன்ன கருத்துகள் மாறும் வாய்ப்புகள் இல்லை என்றே நான் எண்ணுகிறேன். ஆயினும், ஏதாவது தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்ளத் தயங்கமாட்டேன். =



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பெரியாரும் பாசிசத்தின் கூறுகளும்

http://solvanam.com/?p=41831

பொதுவாகச் சொன்னால், இந்த இதழ் வரையில் சொல்வனம் தமிழகத்தின் பல அரசியல் இழுபறிகள், பண்பாட்டுச் சர்ச்சைகள் போன்றனவற்றில் அனேகமாக ஈடுபடவில்லை. ஆக்க பூர்வமானவற்றையே கவனித்திருந்தால் போதும் என்று நினைத்தது ஒரு காரணம்.

ஓரளவு இந்திய அரசியல்பொருளாதார நிலைகள் பற்றியும், பெருமளவு பன்னாட்டுத்தளத்து நிகழ்வுகளையும் பற்றி மட்டும் கவனித்திருந்தோம். இந்த இதழில் ஈ.வெ.ராமசாமி அவர்களின் இயக்கம் பற்றிய ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கிறோம். இது போன்ற சில கட்டுரைகளை அவ்வப்போது பிரசுரிக்கலாம் என்று ஒரு யோசனை எழுந்ததால் இப்படித் துவங்கி இருக்கிறோம்.

இங்கு வாசகர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.

இந்தக் கட்டுரைகள் சொல்வனம் குழுவினரின் கருத்துகள் அல்ல. இவை அந்தந்தக் கட்டுரைகளை எழுதும் ஆசிரியர்களின் கருத்துகளே.

இக்கட்டுரைகள் குறித்து வாசகர்களின் மறுவினைகள் கட்டுரை ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்தப்படும், அவர்கள் ஏதும் பதில் தெரிவித்தால் அவற்றை வாசகர்களுக்குக் கொடுப்போம். பொதுவாகக் கட்டுரைகளுக்கான மறுவினைகள், பதில்கள் ஆகியனவற்றை ஓரிரு இதழ்களைத் தாண்டி நீடிக்கச் செய்யவியலாது என்பதையும் கவனிக்கக் கோருகிறோம்.

வாசக மறுவினைகளைச் சுருக்கவோ, குறுக்கவோ நேரலாம் என்பதையும் தெரிவிக்கிறோம். ஏற்கக் கூடிய விதமான வெளிப்பாடுகளை மட்டுமே பிரசுரிப்போம் என்பதும், சொல்வனம் பதிப்புக் குழுவின் முடிவுகளே இறுதியானவை என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.
– பதிப்புக் குழு

Periyar_Evr_Anna

பெரியார் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தாரா என்ற கேள்விக்கு தெளிவான பதில்கள் அவரது வாழ்க்கையிலிருந்து கிடைக்கின்றன.

ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது?

இந்தியா ஒரு முழு ஜனநாயக நாடு ஆக வேண்டும்  என்று 1928 ம் ஆண்டு வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை   கூறியது.  நாடு முழுவதும் மக்கள் கண்ட கனவும் அதுவாகவே இருந்தது.

ஆனால் பெரியாரின் நிலைப்பாடு என்ன?

19 நவம்பர் 1930 குடி அரசு இதழில் இரு கேள்விகளுக்கு பெரியார் இவ்வாறு பதில் அளிக்கிறார்:

  • இந்தியாவிற்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது?

இந்தியாவில் 100க்கு 90 பேர் கல்வி அறிவில்லாத எழுத்துவாசனைகூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்களுக்கு நன்மை தீமைஇன்னதென்று அறிய முடியாதவர்களாக இருப்பதால் தான்.

  • ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதுதான் ஜனநாயக ஆட்சி

கிரிப்ஸ் குழு

பெரியாரின் திராவிடக் கழகம் தேர்தல்களில் பங்கு பெறவில்லை அதனால் அதில் ஜனநாயக நடைமுறைகளை எதிர்பார்ப்பது தவறு என்று கூறுபவர்கள், திராவிடக் கழகம் 1944ம் ஆண்டுதான் பிறந்தது என்பதையே மறந்து விடுகிறார்கள். அதற்கு முன்னால் பெரியார் நீதிக் கட்சியின் தலைவராக இருந்தார். நீதிக் கட்சியிலிருந்து திராவிடக் கழகம் உருவானதே ஒரு சுவாரசியமான நிகழ்வு.

1942 ம் வருடம் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமையில் பிரித்தானிய அரசு  இந்தியாவிற்கு சுய ஆட்சி வழங்குவது குறித்து இந்தியத் தலைவர்களின் கருத்தை அறிவதற்காக ஒரு குழுவை அனுப்பியது. நீதிக் கட்சியின் சார்பில் பெரியார் தலைமையில்  சில தலைவர்கள் கிரிப்ஸைச் சந்தித்தார்கள். அவரிடம் என்ன பேசினார்கள் என்பது பற்றிய விவரம் The Transfer of Power என்ற தலைப்பில் 1970 ஆண்டு வெளிவந்த ஆங்கிலபுத்தகத்தின் முதல் தொகுதியில் கிடைக்கிறது.  பார்ப்பனர் பிடியிலிருந்து மீள்வதற்காக மதராஸ் மாகாணம் இந்திய யூனியனிலிருந்து பிரிந்து தனிநாடாக  ஆக வேண்டும் என்று அவர்கள்  விரும்பினார்கள். ஆனால் அதற்கான ஆதரவு மதராஸ் மாகாணச் சட்டப் பேரவையிலிருந்தோ அல்லது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியோ பெற முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லை. எனவே அவர்கள் கிரிப்ஸிடம் விடுத்த கோரிக்கை விசித்திரமானது.  எங்களுக்குத்  தனி வாக்குரிமை கொடுங்கள்,  எந்த அளவில் கொடுத்தால் பெரும்பான்மை பெற முடியுமோ  அந்த அளவில் கொடுங்கள் என்று கேட்டார்கள். கிரிப்ஸ் சொன்ன பதிலின் சாரம் இது: நீங்கள் சென்னை மாகாண மக்களை உங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கும் வரை, ஜனநாயக முறைப்படி நீங்கள் விரும்பும் பெரும்பான்மையை உங்களுக்குத் தர இயலாது.

கிரிப்ஸுடன் நடந்த கூட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பெரியார் கட்சிக்குத் தெரிவிக்கவில்லை.  எனவே நீதிக் கட்சியில் பெரியார் ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ளவில்லை என்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மே 1942ம் ஆண்டு இளம் நீதிக் கட்சியினர் பெரியார் கட்சி வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை, கட்சி கூட்டங்களை நடத்துவதில்லை  போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து கட்சியின் தலைமை மாற வேண்டும், சண்முகம் செட்டியார் தலைமை ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றினர். அண்ணாவும் சண்முகம் செட்டியார் தலைமை ஏற்பதைப் பெரியாரே விரும்புவார்  என்று திராவிட நாடு பத்திரிகையில் எழுதினார்.  பல திருப்பங்களுக்குப் பின்னால் திராவிடக் கழகம் பிறந்தது. நீதிக் கட்சியின் பழுத்த தலைவர்கள் பெரியார் ஜனநாயக முறைகளைப் பின்பற்றவில்லை என்று குறை கூறிக் கொண்டிருந்தாலும், கட்சித் தொண்டர்களுக்கு இடையே பெரியாருக்கே செல்வாக்கு இருந்தது என்பதை மறுக்க முடியாது.

சேலம் மாநாடு

திராவிடக் கழகத்தின் தலைமையை ஏற்ற பிறகும், அவர் மாறவில்லை.  பெரியார் பெரியாராக இருந்ததால் அவரிடம் ஒளிவு மறைவு இல்லை.

1944ம் ஆண்டு நடந்த சேலம் மாநாட்டில் அவர் பேசியதின் சாரம்:

நான் தலைவராக இருந்தபோது எனக்குத் தோன்றியதைச் செய்தேன். யாருடைய கருத்தையும் நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் நினைத்தது  எப்போதுமே சரியென்றுதான் இருந்தேன். என்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ள எந்தத் தேவையும் ஏற்படவில்லை. நான் தலைவனாக இருக்கிறபடியால் மற்றவர்கள் நான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்.

இந்தக் கெடுபிடி அண்ணாவிற்குப் பிடிக்கவில்லை.

1947 ஆகஸ்டு பதினைந்தாம் நாளை “திராவிடருக்குத் துக்கநாள் என்று பெரியார் எவரையும் கலக்காமல் உள்ள நிலையை ஆராயாமல் அறிக்கை விடுத்தார்.  இவ்வறிக்கையை அண்ணா வரவேற்கவில்லை. மாறாக தனது எண்ணத்தை திராவிடநாடு இதழில் எழுதி பெரியாரின் பகைமையைத் தேடிக் கொண்டார்” என்று பார்த்தசாரதி தனது ‘திமுக வரலாறு’ நூலில் சொல்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகம்

இருவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் போராக மாறியது மணியம்மையாரைப் பெரியார் திருமணம் செய்தபோது.

தானே தலைவனாய், எழுத்தாளனாய் பேச்சாளனாய், என்று தான் ஒருவரால் மட்டுமே இயக்கம் வளர்வதாகப் பெரியார் இதுவரை கூறிவந்தார். அவரது மதிப்பைக் காலிழந்தும், கண்ணிழந்தும் பொருளிழந்தும் தியாகத் தழும்புகளைப் பெற்ற தொண்டர்கள்  பெற்றதில்லை. கட்சியின் வளர்ச்சி தன்னால் தான் என்று சொல்லி வந்தாரே தவிர உண்மையாக யாரால் என்பதை அவருடைய உள்ளம் உரைத்தது கிடையாது.  கழகத் தொண்டர்களை அவர் பாராட்டியது இல்லை என்பது மட்டுமல்ல; அவரது மிரட்டலுக்கும் ஆடும்படியும் வைத்து வந்தார்.” என்று அண்ணா எழுதினார்.

இதுமட்டுமல்ல, பெரியாரை ஒரு பாசிசவாதி என்றும் அண்ணா சொன்னார்.

பாசிசத்தையும் பழைமையையும் நாட்டிலே படையெடுக்க விடக்கூடாது – அது போல கழகத்தில் பாசிசத்தை வளர்த்துள்ள தலைமையில் இனியும் இருந்து பணியாற்றவும் கூடாது. நாட்டைப் பாழ்படுத்தும் சக்திகளை எதிர்த்துப் போராடும் செயலையும் மறக்கக் கூடாது – அதுபோல், ஜனநாயகத்தை – தன்மானத்தை அழிக்கும் போக்கினை மேற்கொண்டுவிட்ட தலைவரிடம் இனிக்கூடிப் பணியாற்றுவது என்பது முடியாத காரியம்.

ஏன் நம்பிக்கை இல்லை?

ஜனநாயகத்தின் மீது அவருக்கு ஏன் நம்பிக்கை இல்லை என்ற கேள்விக்கு அவரது எழுத்துக்களில் விடை இருக்கிறது.

1931ம் ஆண்டில் சொன்னது: ”இன்றைக்கு வெள்ளைக்கார ஆட்சியோ ஆதிக்கமோ ஒழிய வேண்டும் என்று சொல்கிறவர்களில்  காந்தி அவர்கள் உட்பட 100க்கு 90 பேரின் எண்ணமெல்லாம் மனித தர்ம ஆட்சியை இந்த நாட்டில் தலைகாட்டச் செய்யாமல் இருக்கச் செய்யவும் மனுதர்ம ஆட்சியை நிலைநிறுத்தச் செய்யப்படும் முயற்சியில்தான் உள்ளது எனச் சொல்ல வேண்டும். இதைப் பாமர மக்கள் சரிவர உணராமல் மோசம் போய்க் கொண்டிருப்பதனால் இந்த நிலைமை வளர்ந்து கொண்டே இருக்கின்றது

தன்னைச் சுற்றியிருப்பவர்கள்  மனுதர்மத்திற்குப் பலிகடா ஆகிவிடுவார்களோ என்ற எண்ணம் அவருக்குக் கடைசி வரைப் போனதாகத் தெரியவில்லை. மனுவின் மாறுவேடம் ஜனநாயகமாக இருக்கலாம் என்ற  அடிப்படைச் சந்தேகம் அவருக்கு இருந்தது.

அந்தச் சந்தேகமே அவரை வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் விடாப்பிடியான நிலைப்பாடுகளை எடுக்க வைத்தது என்று கருத இடம் இருக்கிறது.  இது அவர் கீழ்வெண்மணிக் கொலைகள் நடந்தபோது சொன்னது:

ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது.

இதுவும் அவர் பார்ப்பனருக்கு மத்தியில் பேசும்போது சொன்னது:

பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

ஆங்கில நாட்டுத் தன்மையை ஜனநாயகம் இல்லாமல் எப்படிக் கொண்டுவருவது?  இரண்டு வழிகள் அவர் காலத்தில் பேசப்பட்டன. ஒன்று கம்யூனிசம். மற்றொன்று பாசிசம். பெரியார் கம்யூனிஸ்டுகளைப் பற்றி என்ன நினைத்தார் என்பதை அறிய அவரது கடைசிச் சொற்பொழிவைக் கேட்கலாம்.

இது மற்றொரு தருணத்தில் சொன்னது:

கம்யூனிஸ்டுகள் என்போர் ஏதோ சில பணக்காரர்களைத் திட்டுவதும், அதிலே கஷ்டப்படும் தொழிலாளி ஜே போடுவதையுந்தான் பொதுவுடைமை என்று இந்நாட்டிலே கருதப்படுகிறதேயன்றி, பார்ப்பனர்களில் மட்டும் ஏன் பாடுபடும் தொழிலாளி இல்லை என்பதற்குக் காரணங்கள் என்ன கற்பிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவைகளை ஒழித்து யாவரும் சரிநிகர் சமானமாயிருக்க வழி வளரச் செய்தார்களா?

மிஞ்சியிருப்பது எது?

ஒரு குறிப்பிட்ட குழுவினரை வெறுப்பதின் மூலமே எல்லாம் சரியாகி விடும் என்று அவர் திடமாக நம்பினார். யூதர்களை அழித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று ஹிட்லர் நம்பியது போல.

அவர் தெளிவாகச் சொல்கிறார் நான் வெறுப்பது பிராமணர்களைத்தான் என்று:

நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன். திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பதுபோல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன்திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுத் தனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான்பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப் பாடுபடுகிறேன்.

இன்னும் தெளிவு வேண்டுமா? இதைப் படியுங்கள். 1968ல் அவர் சொன்னது:

அரசர்களை ஒழிப்பதற்கென்று பல நாளாகக் கிளர்ச்சிகள் குடிமக்களாலேயே செய்யப்பட்டு, சில அரசரைக் கொன்றும் சிலரை விரட்டியும் விட்டு, அரசனல்லாத ஆட்சியையே உலகில் பெரும்பாகத்தில் மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்றாலும், அதாவது அரசன் ஒழிக்கப்பட்டு விட்டான் என்றாலும், அரசன் செய்து வந்ததுபோல் மக்களை அடக்கி ஆளும் ஆட்சி என்பதாக ஒன்று இன்று மக்களுக்கு அவசியம் வேண்டியதாகவே இருக்கிறது.

இப்படி தேவையிருக்கும் ஒரு ஆட்சிக்கு “அரசன் என்பதாக ஒருவன் தேவை இல்லை. மக்களாகிய நாமே ஆட்சித் தலைவனாக இருந்து கொண்டு ஆட்சி நடத்திக் கொள்ளலாம்” என்று மக்கள் கருதியது அல்லது யாரோ சிலர் கருதியது என்பது மாபெரும் முட்டாள்தனம் அல்லது அயோக்கியத் தனமேயாகும். இதன் பயன் என்னமாய் முடியுமென்றால், மக்களுக்கு ஏற்கெனவே இருந்து வரும் கெட்ட குணங்கள், கூடாத குணங்கள் என்று சொல்லப்படுபவையான பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றுதல், வஞ்சித்தல், கொலை, கொள்ளை, பலாத்கார காலித்தனம், அமைதி இன்மை, குழப்பம் முதலிய சமுதாய வாழ்வுக்குக் கூடாததான காரியங்கள் நடைபெறவும், நாளுக்குநாள் மக்கள் இவற்றில் ஈடுபடவுமான, மக்களின் சமூக வாழ்வுமுறை கெடவுமான நிலை ஏற்பட்டுத் தாண்டவமாடு வதுதான் விளைவாக இருக்கும், இருந்தும் வருகிறது.

இவற்றைப்  பாசிசத்தின் கூறு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

பெரியார் ஹிட்லர் நடந்த பாதையில் நடக்கவில்லை என்பது உண்மை. அவர் தனிப்பட்ட முறையில் நயத்தக்க நாகரீகத்தைக் கடைப்பிடித்தவர் என்பது உண்மை. வன்முறையை என்றுமே விரும்பாதவர் என்பதும் உண்மை. கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதெல்லாம் கோபத்தில் கூறியது.

ஆனால் ஜனநாயகத்தின் மீது அவருக்கு இருந்த அடிப்படை அவநம்பிக்கையும் சந்தேகமும் அவரை பாசிஸ்டுகள் எடுத்த நிலைப்பாட்டை, அவரை அறியாமலே, எடுக்க வைத்தது என்று நான் கருதுகிறேன்.  ஆனால் அவரது இன்றையத் தொண்டரடிப்பொடிகள், அத்தகைய நிலைப்பாட்டை அறிந்தே எடுக்கிறார்கள். தாங்கள் இதுநாள் வரை நடத்தி வந்த சமதர்ம நாடகம் மக்களுக்குப் புரிந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக எடுக்கப்படும் நிலைப்பாடு அது.  இவர்களுக்கும் பெரியாரைப் போல ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. உண்மையில் நம்புவது பாசிசம்தான். அவர் அறியாமல் வெளிப்படையாகச் சொன்னார். நம்பினார். இவர்கள் அறிந்து மறைமுகமாகச் சொல்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பூவண்ணன் said:

பாசிசம் என்றால் என்ன என்று இதுவரை இருந்து வரும் அர்த்தத்திற்கு நேர்மாறான ஒரு அர்த்தத்தை தரும் கட்டுரையை எழுதி உள்ளது வியப்பை தருகிறது
1930 களில் யார் யாருக்கு வோட்டுரிமை இருந்தது,வோட்டுரிமை பெற அடிப்படை தகுதிகள் எவை ,வோட்டு போடும் உரிமை பெற்றவர்கள் எத்தனை சதவீதம் என்பதை விளக்கி இருந்தால் பல உண்மைகள் விளங்குமே.மக்கள் தொகையில் மிக குறைந்த மக்களுக்கே வோட்டுரிமை இருந்த காலகட்டம் அது. உலகெங்கும் வோட்டுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை வெகு குறைவு.வோட்டுரிமைக்கு தகுதி இல்லாதவர்கள் தான் மிக பெரும்பான்மை.பெண் என்பதால்,சொத்து இல்லாததால்,குறிப்பிட்ட பகுதி,கூட்டத்தை சார்ந்தவர்கள்,குற்ற பரம்பரையினர்,பழங்குடிகள் என்று வோட்டுரிமை மறுக்கப்பட்டவர்கள் தான் அதிகம்.
வோட்டுரிமையை பெரும்பான்மை மக்களுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை திரித்து அன்று இருந்த சிறுபான்மை மக்களுக்கு மட்டுமான வோட்டுரிமையை உண்மையான மக்கள் ஆட்சி,அனைத்து மக்களுக்குமான ஒன்று போல எழுதுவது நியாயமான செயலா.அனைவருக்கும் வோட்டுரிமை இருப்பது போலவும் அதை மாற்ற வேண்டும் என்று பெரியார் கூறியதற்கு வெள்ளைகார துரை நியாயமற்ற கோரிக்கை என்று மறுத்தார் என்று எழுதுவது நல்ல நகைச்சுவை
பெரியார் பெரும்பான்மை மக்கள் நம்பிய பல விஷயங்களுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தவர்.இன்றும் சாதி கடந்த திருமணம்,பெண்களுக்கு சொத்துரிமை ,ஒரே கோத்திர திருமணம் ,ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம்,எளிதான மணவிலக்கு மதம் மாறும் உரிமை வேண்டுமா வேண்டாமா என்றால் பெரும்பான்மையினர் வேண்டாம் என்று தான் முடிவு எடுப்பார். அப்படி அவர்கள் முடிவு எடுத்தால் அது சரி என்று ஆகி விடுமா
இன தூய்மைக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்தவருக்கு எதிராக எவ்வளவு வன்மம்.இதை அவர் சொன்னவற்றிற்கு எதிரானவன் என்பவர் செய்தால் புரிந்து கொள்ளலாம்.ஆனால் இட ஒதுக்கீடு,பெண் விடுதலை,மதம் மாறும் உரிமை,சாதி கடந்த திருமணங்கள் ,மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவன் என்று சொல்லி கொள்ளும் கடவுள் நம்பிக்கை அற்ற ஒருவர் செய்வதை தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
பெரியார் வெள்ளையர்களிடம் இருந்து ஆட்சி மத வெறியர்களிடம் செல்வது பெரும்பான்மையான ஏழை,எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கும் என்று நம்பினார். அதை வெளிப்படையாக சொல்லவும் செய்தார் . நீங்களும் பெரியார் வழியில் தமிழ் தேசியம்,தனி தமிழ்நாடு என்பது ஏழை எளிய மக்களுக்கு தீங்காக தான் இருக்கும் என்று நம்புவது போல.
பெரும்பான்மையான நாக இன மக்களோ,கஷ்மீரிகளோ ,தமிழர்களோ தங்கள் இன தூய்மையை பாதுகாக்க வெளியாட்களை வெளியேற்ற வேண்டும் எனு பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தீர்மானம் இயற்றினால் அதை எதிர்ப்பவர்கள் மக்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள் ,பாசிஸ்ட்கள் என்பீர்களா . நீங்கள் இன்று இந்தியாவோடு இருப்பது தான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள,ஏற்று கொள்ள முடிகிறது.அதே தான் மத வெறியர்களின் கையில் ஆட்சி சிக்குவதை விட neutral umpire வெள்ளையன் மேல் என்று பெரியார் எண்ணியதன் பின் உள்ள நியாயமும் என்பதை உங்களால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை
தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று எழுதிய பாரதியை உலகையே அழிக்க எண்ணிய கொலைக்காரன், ஒரு வேலை உணவு கிடைக்கவில்லை என்பதற்காக அனைவரையும் கொல்ல வேண்டும் என்று பாடியவன் என்று வசைபாடுவதற்கும் நீங்கள் பெரியார் மீது பொழியும் வசைகளுக்கும் வித்தியாசம் கிடையாது.

சொ.பிரபாகரன் said:

ஜனநாயத்தை அறவியலுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதிகாரம் கையில் இருப்பவர்கள் மறைமுகமாக தங்கள் காரியங்களுக்கு ஜனநாயகப்பூர்வமாக ஒப்புதலை வாங்கி விடுவார்கள். பாசிசத்தின் நிகழ் உதாரணமாகக் காட்டப்படும் இட்லர் கூட, ஜனநாயகப்பூர்வமாக ஜெர்மானிய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவன்தான்.

ஒருவரிடம் இருக்கும் பாசிச கூறுகளை அவரது அறவியலை வைத்துதான் மதிப்பிட முடியம். அவர் பெறும் வாக்குகளை வைத்தல்ல. இன்று ஜனநாயகத்தை manipulate செய்து அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும், உண்மையில் அராஜகவாதிகள்.

ஜனநாயகம் என்பதே மாற்றுக் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்கும் பண்புதான். அதன் மூலம் தனது கருத்துகளை சீர்தூக்கிப் பார்த்துச் செம்மைப் படுத்திக் கொண்டிருப்பதுதான். அதைப் பெரியார் செய்து கொண்டுதான் இருந்தார்
.

  • RV said:

    என் நண்பர்கள் சிலர் சொல்வனத்துக்கு இந்த அரசியல் அக்கப்போர் எல்லாம் தேவையா என்று அலுத்துக் கொண்டார்கள். ஆனால் சொல்வனம் இந்தக் கட்டுரையைப் பதித்தது என் கண்ணில் சரியே.

    ஆம் இதனால் அக்கப்போர் உருவாகும்தான். ஆனால் ஒரு பத்து பேராவது பிஏகே சொல்வதில் உள்ள உண்மைகளைப் புரிந்து கொள்ள மாட்டார்களா? சொல்வனத்தின் குறிக்கோளே அந்தப் பத்து பேர்தான் என்று நினைக்கிறேன், அது நல்ல விஷயம்தான்.

    ஒரு காலத்தில் ஈவெராவால் தமிழகத்தில் ஜாதி உணர்வு வட மாநிலங்களை ஒப்பிடும்போது ஓரளவாவது குறைந்தது என்று நினைத்திருந்தேன். இப்போது அவரால் ஒன்றும் கிழிக்க முடியவில்லை, ஜாதி உணர்வு ஓரிரு தலைமுறைக்கு மறைக்கப்பட்டிருந்தது, இப்போது இன்னும் தீவிரமாக வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். அவரால் முடிந்தது ஒன்றுதான் – அரசியல் தலைமை இடைநிலை ஜாதிகளுக்கு மாறுவதை கொஞ்சம் விரைவுபடுத்தினார். அதை விரைவுபடுத்த தடாலடியாக நிறைய பேசி இருக்கிறார், அது வெறுப்பு அரசியலாகத்தான் உருவாகி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அவர் ஒரு “புனிதப்பசு”, ஏறக்குறைய இறைத்தூதர், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர். இங்கே கூட அவரை ஆதரித்து எழுதும் எவரும் பிஏகேவின் மேற்கோள்களைப் பற்றி வாயைத் திறக்கமாட்டார்கள், அவர் நல்லவர்-வல்லவர் அதை செய்தார்/இதை செய்தார் என்று மட்டும்தான் எழுதுவார்கள். பிஏகே மாதிரி நாலு பேர் முன்வந்தால்தான் அவர் சொன்னதில் எதை நிராகரிக்க வேண்டும் என்று கொஞ்சமாவது பிரக்ஞை இருக்கும்.

    கோல்வால்கர் தேசபக்தர்தான், ஆனால் அவரது வெறுப்பு அரசியல் பற்றிய பிரக்ஞை இருக்கிறது. ஈவெராவால் இரண்டு மூன்று தலைமுறைக்காவது ஜாதியை மறந்துவிட்ட மாதிரி நடித்தார்கள், ஜாதி அரசியலை வெளிப்படையாக செய்ய முடியாத நிலை இருந்தது, ஆனால் அவரது வெறுப்பு அரசியல் பற்றி பிராமணர்கள் தவிர வேறு யாரும் பேசுவதாக எனக்குத் தெரியவில்லை. சரி அவர்களாவது தொடரட்டுமே! பிஏகேவை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன், அவர் பிராமண ஜாதியில் பிறந்தவர், பிராமணர் அல்லர். ஆனால் இங்கே அவரை மறுத்துப் பேசுபவர்கள் பலரும் அவர் ஜாதியை இழுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    # 22 September 2015 at 5:41 am
  • பூவண்ணன் said:

    பெரியாரை பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் தன் வாழ்வின் பெரும்பகுதியை கழித்த பிராமணராக பிறந்த விடுதலைக்காக பாடுபட்ட தியாகி ஒருவரின் கருத்து. அவர் பெரியாரை பற்றி கூறும் வார்த்தைகளில் இருந்து அவர் பெரியாரை பற்றி வைத்திருந்த எண்ணம் விளங்கும்

    http://gandhiashramkrishnan.blogspot.in/2011/09/blog-post_3020.html

    நான் பிறந்ததும் 20 வயது வரை வாழ்ந்ததும் சன்னியாசிக் கிராமம் என்ற அக்கிரகாரத்தில். மிகுந்த வைதிக எண்ணங் கொண்ட பிராமணர்கள் (அய்யர், அய்யங்கார்கள்)தான் அந்த இரட் டை வரிசையான சுமார் அறுபது வீடுகளில் வாழ்ந்தார்கள். நாடார்கள், பள்ளர் கள், சக்கிலியர் போன்றவர்கள் அந்தத் தெரு வழியாக நடந்து போகக் கூடாது. இந்த இனத்தவர் யாவரும் பாடுபட்டு உழைத்து ஜீவனம் செய்பவர்கள். கண்ணியமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள். இந்தத் தெருவும் நெல்லை நகராட்சிக்கு உட்பட்டது. குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றின் கரை யோரமாக வசிப்பவர்கள். அக்கிரகார வீடுகளில் சாப்பிட்ட பின் வெளியே தூக்கியெறியும் எச்சில் இலைகளில் ஏதாவது மிச்சம் கிடைக்குமா என நாய்களுடன் போட்டி போட்டுக் கொண்டு எவ்வித அவமான உணர்ச்சியும் இல்லாது வாழ்ந்தவர்கள். இவர்கள் அக்கிரகாரத்துக்குள் வந்து போவதில் அந்தத் தெருக்காரர்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஒரு முறை அந்தத் தெருவுக்கு ரோடு போட நகராட்சி ஏற்பாடு செய்தது. குறவர்கள் மற்றும் அந்தத் தெருவுக்குள் வரத் தகுதி பெற்றிருந்த இதர வகுப்பினரைக் கொண்டுதான் ரோடு போட வேண்டும் என்றும் வரத் தகாதவர்களைக் கொண்டு ரோடு கூடாதென்றும் தங்கள் ரோட்டுக்கு சரளைக்கல் போட வேண்டாமென்றும மூர்த்தண்யமாக மறுத்து விட்டார்கள். இது 1921 ஆம் ஆண்டில் நடந்தது. Modern Review என்ற ஆங்கிலப் பத்திரிகையில் (கல்கத்தாவிலிருந்து வெளியிடப்பட்டது) The Holy Lunatics of Sannyasigramam – Tirunelveli do not want any civic amenities because of their caste bigotry என்று எழுதிற்று.

    இன்று அப்படியா? பிராமணப் பெண்கள் பலர் அன்றைய தீண்டத் தகாத இனத்தவர் மனைவிகளாக உள்ளனர். அந்தத் தெரு வீட்டு மாடிகளில் இதர இனத்துப் பையன்கள் வாடகைக்குத் தங்கி கல்லூரிகளில் படிக்கின்றார்கள். எத்தனையோ சீர்திருத்த வாதிகள் அவ்வப்போது தோன்றி ‘குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று வலியுறுத்தி வந்திருக்கி றார்கள். காந்தி யடிகளின் அறிவுரைகளால் அகில இந்திய ரீதியிலும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினால் தமிழகத்திலும், மற்றும் மத்திய மாநில சட்டங்களாலும் சாதி ஏற்றத் தாழ்வு வெளித் தோற்றத்தில் வெகுவாகக் குறைந்துதான் காணப்படுகிறது. ஆயினும் அன்று அத்தனை சாதி ஏற்றத் தாழ்வுகளுக் கிடையேயும் அன்பும் மரியாதையும் பரஸ்பரம் இருந்து வந்தது. ஆனால் இன்றோ துவேஷ உணர்ச்சியும் மரியாதைக் குறைவும் வெளிப்படை யாகக் காணப்படுகின்றது. இவையெல்லாம் இயற்கையின் வளர்ச்சிப் பரிமாணங்கள் (Evolution) என்றே கொள்ள வேண்டும். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக ரயில் பஸ் பயணங்கள், சினிமா, காப்பி ஓட்டல், பொருளாதார ஏற்றங்கள் போன்றவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன வென்றும் காந்திஜிக்கோ, தந்தை பெரியாருக்கோ, அறிஞர் அண்ணாவுக்கோ விசேஷ ஏற்றங்கள் காட்டித் துதிக்க வேண்டியதில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. It is a natural social evolution due to various causes but these leaders have quickened the pace.

    # 22 September 2015 at 10:51 am
  • பூவண்ணன் said:

    இடைநிலை சாதிகள் என்று பொதுவாக எந்த எந்த சாதிகளை சொல்கிறீர்கள்.மொத்தம் முன்னூறுக்கு அதிகமான சாதிகள் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கின்றன.

    இதில் எந்த எந்த சாதிகள் வன்கொடுமைகளில் முன் நிற்கின்றன.எந்த சாதிகள் மிகவும் பாதிக்கபடுகின்றன .நீங்கள் மிகவும் வியந்தோந்தும் அதிக வோட்டுக்கள் கிடைத்தால் அவர்கள் செய்வது அனைத்தும் சரி,அந்த முறையை எதிர்ப்பவர்கள் பாசிட்டுகள் எனும் மக்கள் ஆட்சி முறை வன்னியர்,முக்குலத்தோர்,கொங்கு கௌண்டர் போன்ற 3.4 சாதிகளுக்கு மட்டும் தான் எண்ணிக்கை பலத்தின் காரணமாக ,குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் பெரும்பான்மை காரணமாக அதிக அரசியல் அதிகாரம் கிடைக்க காரணமாக இருக்கிறது.

    எப்படி ஹிந்து மத வெறியை தூண்டி 20 ஆண்டுகளில் குஜராத்தில் ஒரு இஸ்லாமியர் கூட தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் ஆளும் கட்சியாக பா ஜ க இருக்க முடிகிறதோ அதே போலே தன்னால் ஒடுக்கப்படும் சாதிகளின் வோட்டுக்கு அவசியமே இல்லாமல் தர்மபுரியிலும்,உசிலம்பட்டியிலும்,தொண்டாமுதூரிலும் வெற்றி பெற முடிகிறது.
    மேலே கூறப்பட்ட சாதிகளின் முக்கிய எதிரி பெரியார் தான்.மற்ற அனைத்து மாநிலங்களிலும் உயர்சாதி அல்லது அதிக எண்ணிக்கை இருக்கிற இடைநிலை சாதிகளில் இருந்து பெரும்பாலான கட்சிகளின் தலைமை மற்றும் முக்கிய பொறுப்புக்கள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் மிக குறைவான எண்ணிக்கை கொண்ட போட்டு கட்டி விடும் வழக்கத்தை கொண்ட சாதிகளில் இருந்து அண்ணாதுரை மற்றும் கலைஞர்,சாதிவிலக்கம் செய்யப்பட்டு சண்டாளராக மாற்றபட்டவருக்கும் அன்றைய தீண்டத்தகாத சாதியான ஈழவருக்கும் பிறந்த எம் ஜி ஆர் தலைமைக்கு வர முக்கிய காரணம் பெரியார் என்பதே எண்ணிக்கை அதிகம் உள்ள சாதிகளின் சாதி தலைவர்களின்,சாதி வெறியர்களின் எரிச்சல்.

    குறிப்பிட்ட பகுதிகளில் எண்ணிக்கை அதிகம் உள்ள சாதிகள் மற்ற அனைத்து சாதிகளையும் அடக்கி ஆள முயற்சித்து வருவது,சில இடங்களில் வெற்றியும் பெறுவது தான் இன்றைய கட்சிகளில் இட ஒதுக்கீடு இல்லாத தேர்தல் ஜனநாயகத்தின் சாதனை.அவர்களுக்கு எதிராக போராடும் அளவுக்கு எண்ணிக்கையும் துணிவும் இருக்கின்ற சாதி குழுக்கள் பட்டியல் இனத்தின் கீழ் வரும் சாதிகள் தான்.

    கட்சிகளுக்குள் இட ஒதுக்கீடு வரும் போது,ஒவ்வொரு கட்சியும் கட்டாயம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறுபான்மையினருக்கு ,சாதி குழுக்களுக்கு ,பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்.கட்சியின் முக்கிய பொறுப்புக்கள்,பொது குழுவில் குறிப்பிட்ட சதவீதமாவது இவர்களில் இருந்து கட்டாயம் இருக்க வேண்டும்.அமைச்சரவையில் குறிப்பிட்ட சதவீதம் இவர்களில் இருந்து இருக்க வேண்டும் என்ற மாற்றங்கள் வரும் போது ஒரு சாதி,ஒரு மத கட்சிகளான முஸ்லிம் லீக் ,பா ஜ க,பா ம க,கொங்கு மக்கள் கட்சி போன்ற கட்சிகள் மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    மற்ற மாநிலங்களில் அதிக எண்ணிகையில் இருக்கும் சாதிகளின் கீழ் தேசிய கட்சிகளும் ,மாநில கட்சிகளும் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் அது இல்லாத நிலைக்கு யார் காரணம் என்று ஆராய்ந்தால் பெரியாரால் ஏற்பட்ட மாற்றம் விளங்கும்.ஆர் எஸ் எஸ் இல்,பா ஜ க வில் பல ஆண்டுகள் இருந்தாலும் எடியுரப்பா பின் செல்பவர்,வருபவர் அவர் சாதி மக்கள் தான். அவருக்கு பின் முதல்வரான ஆர் எஸ் எஸ் காரர் கௌடா பின் கட்சிக்கு உள்ளேயே ஆதரவு இருப்பது அவர் சாதி மக்களிடம் மட்டும் தான்.முன்னாள் முதல்வராக,பிரதமராக இருந்தாலும் தன் மாநிலத்திற்கு என்று பலவற்றை கொண்டு வந்தாலும் தேவ கௌடா பின் பெரும்பான்மையாக இருப்பவர்கள் அவர் சாதியை சேர்ந்தவர்கள் தான்

    சாதிகளை கடந்து பல்வேறு சாதிகளை சார்ந்தவர்களால் தலைவர் என்று கொண்டாடப்படும் தலைவர்கள் இங்கு தான் உண்டு. மற்ற மாநிலங்களில் சினிமா நடிகர்களுக்கு கூட சாதி சார்ந்த ஆதரவு தான் அதிகம்.

    மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது பொது பிரிவினர் ,பின்தங்கிய வகுப்பு,பட்டியல் இனத்தவரின் வளர்ச்சி இங்கு அதிகம். இதில் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்களின் வளர்ச்சி /அரசியல் அதிகாரம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மிக அதிகம் என்பதற்காக பெரியார் தூற்றபடுவது தான் விளங்கி கொள்ள முடியாத ஒன்று.

    ஒரு சில சாதிகள் அதிக அளவில் அரசியல் அதிகாரம் பெற ,மற்றவர்களின் உதவி தேவைபடாததால் அவர்களை மதித்து உறவாட வேண்டிய அவசியம் இல்லாத நிலை இருக்க முக்கிய காரணம் நாம் இன்று பின்பற்றும் தேர்தல் முறை தான்

    # 22 September 2015 at 10:57 am
  • பூவண்ணன் said:

    பெண்கள் ,பெண் விடுதலையை நோக்கி போராடியவர்கள் ஆண்களை பற்றி எழுதியதை ,கூறியதை படித்தால் இதை விட பலமடங்கு ஆண்களின் மீதான ஆத்திரம் வெளிப்படும்.

    மற்ற சாதிகளோடு சேர்ந்து பிராமண மாணவர்கள் உணவு அருந்த தடை இருந்த காலகட்டம் அது.எந்தெந்த சாதிகள் அக்கிரகாரத்தில் நுழைந்து சாலை போடலாம் என்று பிராமணர்கள் போராடிய காலகட்டம் அது.குறிப்பிட்ட சாதிகள் வந்து தான் சாலைகள் போட வேண்டும் என்றால் எங்களுக்கு சாலைகளே வேண்டாம் என்று போராடிய காலத்தில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து பாராமுகமாக இவற்றை ஆதரித்த,தேவதாசி முறையை எங்கள் கலாசாரம் அதில் தலையிடாதா என்று கூக்குரலிட்ட பிராமண தலைவர்களுக்கு எதிராக எழுந்த குரல் அது

    கைம்பெண்ணான தன் மகள்,தங்கை,அக்காவிற்கு,தோழிக்கு மீண்டும் திருமணம் நடைபெற தடையாக இருந்தவர்களை,அவர்கள் சொல்லை கடவுளின் வாக்காக பார்த்து பெண்களை இழிவாக நடத்துவதை பார்த்து பொங்கி எழுந்த குரல் அது

    எனக்கும் Ananthakrishnan Pakshirajanஅவர்களுக்கு மிகவும் பிடித்த அல்லோபதி மருத்துவத்தை தந்த ,கீழ்சாதி என்று இருந்த புலையர்,ஈழவர் ,மஹர்,பள்ளி,பள்ளர்,பறையர் இனத்தில் இருந்து ராணுவ வீரர்களை உருவாக்கிய வெள்ளையனை எதிர்த்து பிராமண தலைவர்கள் பேசாத பேச்சா

    கைம்பெண் மணம் எவ்வளவு பெரிய பாவம் ,தரிசு நிலம்,கைம்பெண் எப்படி வாழ வேண்டும் என்று இன்றுவரை பேசும் எழுதும் பிராமணர்களுக்கு ,ஆச்சாரியர்களுக்கு குறைவு கிடையாது.

    கேவலம் மாட்டு கறி உண்ணும் மிலேச்சன் ,பஞ்சமன் என்று தானே அரசு அதிகாரியை சுட்டு கொன்ற வாஞ்சிநாதன் ஐயர் தன் கடிதத்தில் எழுதி இருந்தார்.கேவலம் மாட்டு கறி உண்பவன்,மாமிசம் உண்பவன் என்று சொல்பவர்களை கடவுள் என்று எண்ணாதே அவர்களும் மனிதர்கள் தான்,கடவுள் அல்ல என்று அறியாமையில் இருந்த மக்களுக்கு எப்படி உணர்த்துவது.

    ஆண் இனத்தை திட்டாமல் ,அவர்கள் தேவையே இல்லை ,எந்த ஆணும் வாய்ப்பு கிடைத்தால் பெண்ணிடம் வன்முறையை பிரயோகிக்க தயங்க மாட்டான் என்று கடிந்து கொள்ளும் பெண்ணிடம் உள்ள நியாயத்தை உணர்ந்து கொள்பவர்கள் பெரியாரை புரிந்து கொள்ள முடியும்.ஆனால் சாதி பெருமை கொண்டவர்களை ,பொட்டு கட்டி விடுதல் ,குழந்தை திருமணம் , எங்களின் பெருமைமிகு கலாசாரம் என்றவர்கள்,வெள்ளையனை ,பிறரின் உணவை வைத்து அவர்களை இழிவாக எண்ணியவர்களை ,பிலேகு நோய் பரவ காரணமான எலிகளை ஒழித்த வெள்ளைய அரசு அதிகாரிகளை கொன்றவர்களை ,இது போன்ற கொலைபாதக செயல்களை செய்ய தூண்டியவர்களை தியாக சீலர்களாக கொண்டாடுபவர்களுக்கு பெரியார் மிக பெரிய மூர்க்கராக/பாசிஸ்டாக தான் தெரிவார்.

    வெள்ளைய அதிகாரிகளை, வெள்ளையர்களின் மனைவி ,குழந்தைகளை வெறிகொண்டு அழிதவர்களில் பெரும்பான்மையானோர் எந்த சாதி குழுவை சார்ந்தவர்கள் என்று பார்க்கலாமா



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

This is one of your post sir and I will quote your reply where you eulogise people who attacked ,killed whites including women and families just because they where whites

https://www.facebook.com/pakshir…/posts/931163116909873…

Ananthakrishnan Pakshirajan This is not a complete list, but there are Bengalis, Mahrashatrians, UP wallahs, Punjabis, Manipuris, Assamese, and Biharis, A in it. The sentences were carried out in several jails. Any person who has patience may check the list and point out errors. I am sure there are a few. Nobody is making heroes of these persons. All of them were driven by the idea of Freedom and their hatred of the British and their rule. They also saw the collaborators with the British as enemies of the Nation. Almost all of them were hopeless amateurs and were swatted like flies. I, for one, would never approve of their acts. But it is good to remember them on this day, if one believes in the idea of India and the complexities involved in its birth. It is your choice if you don’t want to remember them. Allow at least others to do so.

படுகொலை புரிந்தவர்களை புரிந்து கொள்ள முடிகிறது.அவர்களின் அடிப்படை எண்ணம் எவ்வளவு ?உயர்ந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் அதிகாரத்தை கையில் வைத்திருந்த ஒரு சாதி குழுவை நோக்கி வீசப்பட்ட சில கேள்விகள் பெரும் குற்றமாக இருப்பது ஞாயமா .மேலே உள்ளது போல பெரியாரின் காரணமாக ஏற்பட்ட குற்றங்கள் என்று ஒன்றையாவது சுட்டி காட்ட முடியுமா



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

kumar said:

கேவலம் மாட்டு கறி உண்ணும் மிலேச்சன் ,பஞ்சமன் என்று தானே அரசு அதிகாரியை சுட்டு கொன்ற வாஞ்சிநாதன் ஐயர் தன் கடிதத்தில் எழுதி இருந்தார்.கேவலம் மாட்டு கறி உண்பவன்,மாமிசம் உண்பவன் என்று சொல்பவர்களை கடவுள் என்று எண்ணாதே அவர்களும் மனிதர்கள் தான்,கடவுள் அல்ல என்று அறியாமையில் இருந்த மக்களுக்கு எப்படி உணர்த்துவது. ///////

வெள்ளைகாரனக்கு சொம்பு எடுத்தவன் தானே இங்கே தியாகி …
அதே வெள்ளைக்காரன் வா.வு.சி , மற்றும் தியாகி சிவாவை மற்றும் திருப்பூர் குமரனை என்ன பாடு படுத்தினார்கள்…
ஓஹோ … வெள்ளைக்காரன் செய்தால் தப்பில்லை .. வாஞ்சி மற்றும் பகத் சிங்க் செய்தால் தப்பா?

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

  • K.MUTHURAMAKRISHNAN said:

    திரு பூவண்ணன் மேற்கோள் காட்டியுள்ள மறைந்த காந்திஆசிரமம் கிருஷ்ணன்
    அவர்களின் இளைய மகன் நான்.

    என் தந்தையாரின் சாதி பற்றிய நாட்குறிப்புக் கருத்து பிராமணர்களிடம் ஏற்பட்ட மன மாற்றத்தையே சுட்டுகிறது.அந்த மன மாற்றம் ஏற்படக் காரணமாக சொல்லியுள்ள கீழ்க்கண்ட செய்திக்குத்தான் அழுத்தம் கொடுக்க வேண்டுமே அல்லாது, பிராமணர்கள் சாலை போட தலித்களை அனுமதிக்கவில்லை என்பதற்கல்ல!

    “ஆயினும் அன்று அத்தனை சாதி ஏற்றத் தாழ்வுகளுக் கிடையேயும் அன்பும் மரியாதையும் பரஸ்பரம் இருந்து வந்தது. ஆனால் இன்றோ துவேஷ உணர்ச்சியும் மரியாதைக் குறைவும் வெளிப்படை யாகக் காணப்படுகின்றது. இவையெல்லாம் இயற்கையின் வளர்ச்சிப் பரிமாணங்கள் (Evolution) என்றே கொள்ள வேண்டும். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக ரயில் பஸ் பயணங்கள், சினிமா, காப்பி ஓட்டல், பொருளாதார ஏற்றங்கள் போன்றவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன வென்றும் காந்திஜிக்கோ, தந்தை பெரியாருக்கோ, அறிஞர் அண்ணாவுக்கோ விசேஷ ஏற்றங்கள் காட்டித் துதிக்க வேண்டியதில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. It is a natural social evolution due to various causes but these leaders have quickened the pace. –

    # 28 September 2015 at 6:03 am
  • K.MUTHURAMAKRISHNAN said:

    திரு பூவண்ணன் குறிப்பிட்டுள்ள‌ என் தந்தையாரின் சொற்களுக்கு முன்புள்ள பத்தி இது.திருச்செங்கோடு காந்திஆசிரமத்தில் தந்தயாருடைய முதல் நாள் அனுபவம்:

    “ராகி(கல்கி) இரண்டு தினங்களுக்கு முன் மாயவரம் திருத்துறைப் பூண்டி முதலிய இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் மறு நாளோ அதற்கு அடுத்த நாளோ வந்து விடுவாரென்றும், அது வரை தன் ரூமில் தங்கலாமென்றும், தன் ரூமைக் காட்டினார். சாமான்களையெல்லாம் அவர் ரூமில் வைத்தேன். அவர் தன் பெயர் ஏ.கே. ஸ்ரீனிவாஸன் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
    தன் வேலையை முடித்துக்கொண்டு ஸ்ரீனிவாஸன் ரூமுக்கு வந்தார். ‘சாப்பிடலாமா?’ என்றார். ‘நான் குளிக்க வேண்டுமே!’ என்றேன். தலை யைச் சொறிந்தார் நண்பர். பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்டு, ‘முனுசாமி’ என்று குரல் கொடுத்தார். ஒருவர் வந்தார். ‘ஏன் முனுசாமி, எல்லைக் கிணற்றிலே ஏத்தக் குழியிலே தண்ணீர் இருக்குமா? இவர் புதிதாக வந்திருக்கி றார். ஒரு குவளையை எடுத்துக் கொண்டு இவருடன் சென்று வருகிறாயா?’ என்றார். நான் முனுசாமி என்பவருடன் புறப்பட்டேன். ஒரு ஃபர்லாங் தூரம் நடந்து சென்று அங்கு ஒரு கிணற்றைக் காட்டினார். சுமார் இருபதடிக்கு இருபதடி சதுரமான நாற்பதடி ஆழமான ஒரு கிணற்றைக் காட்டினார். ஒழுங்காகப் படிகளில்லை. எட்டிப் பார்த்தேன். அடியில் சிறிது நீர் இருப்பது தெரிந்தது. இம்மாதிரிக் கிணறுகளை நான் எனது இருபத்திரண்டு வயது வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. ‘நீங்க இறங்கி தண்ணி வாத்துக்கிட்டு வாங்க. நான் இங்கே குந்திக்கிட்டு இருக்கேன்.’ என்றார். நான் உயிரைப் பிடித்துக் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் கிணற்றுக்குள் இறங்கினேன். 4’ X 4’ சதுரம் 2’ ஆழம் குழியில் சிறிது தண்ணீர் இருந்தது. குளிக்கும் தொட்டியில் உட்கார்ந்து குளிப்பது போல் கையில் கொண்டு போயிருந்த குவளையால் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றிக் குளித்தேன். ஒருவாறு குளிப்பு நடந்தது. அங்கு குழியில் 12 மணி வெய்யிலிலும் வெளிச்சம் இல்லை. மீண்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் சிரமப்பட்டு மேலே ஏறி வந்து பார்த்தால், உடம்பெல்லாம் – இரவில் நக்ஷத்தி ரங்கள் மின்னுவது போல் – சிறு சிறு துளிகள் மினுமினுத்தன. அவை மைக்கா – அபரேக் – துகள்கள் என முனுசாமி சொன்னார். பின்னர்தான் தெரிந்து கொண்டேன். அப் பகுதிகளில் மைக்கா படிவங்கள் உண்டு என.

    சில நாட் களுக்குப் பின்னர்தான் முனுசாமி அரிசன வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் குடியானவர்கள் – கொங்கு வேளாள கவுண்டர்கள் – புழங்கும் கிணறுகளில் அரிசனங்கள் இறங்கக் கூடாதென்றும், அது காரணமாகத்தான் அவர் என்னுடன் அக்கிணற்றில் இறங்கவில்லை யென்றும், தெரிந்து கொண்டேன்.”
    நான்:
    இன்று பிராமணர்களிடம் கலப்புத் திருமணங்கள் மிக சகஜமாகிவிட்டது.
    நாயக்கர்கள், நாயுடுக்கள், க‌வுண்டர்கள், தேவர்கள் மறவர்களிடம் இதைப்பற்றி பேசினால் ‘திருப்பாச்சி’தான் திரும்பப் பேசும்.

    சென்ற வருடம் ப‌ள்ளர் மணமகன், பறையர் மணமகள் காதலர்களைச் சேர்த்து
    வைக்க என் மகள் நடையோ நடையென இரு வீட்டார்களிடையே நடந்து அவர்களின் சுடு சொற்களையெல்லாம் தாங்கிக்கொண்டு திருமணத்தை முடித்துவைத்தாள்.

    மாற்றம் இன்னும் மற்ற சாதியினரிடம் வர வேண்டும். பூவண்ணன் is barking the wrong tree.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

  • பூவண்ணன் said:

    சார் நான் சொல்ல வந்தது உங்கள் தந்தை பெரியாரை பற்றி எழுதும் முறை.அவர் மீது எந்த வெறுப்பும் இல்லாமல் அவரை,அவர் முயற்சிகளை அலசும் விதம் தான்.பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பிராமணர்களை விட பல மடங்கு அதிக வெறுப்பு இன்று இருப்பது ஏன் எனபது தான் விளங்கவில்லை.

    எண்ணிக்கை அதிகம் இருக்கும் சாதிகள் ஆடும் ஆட்டதிற்கு இன்றைய தேர்தல் முறையில் அவர்கள் எண்ணிக்கை தரும் மிருகபலம் தான் காரணம். எண்ணிக்கை அதிகம் இல்லாத பல நூறு சாதிகள் பிராமணர்களை போல சாதி தாண்டிய காதல் என்றால் கத்தியை எடுக்காமல் அமைதி வழிகளை கொண்டு தான் காதலை எதிர்க்கிறார்கள்.

    பிராமணர்கள் வலுவாக உள்ள ,அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மாநிலங்களான பீகார்,உதர்ப்ரதேசம் போன்றவற்றில் அரிவாள் தான் காதலுக்கு எதிராக பேசுகிறது.உதர்ப்ரதேச பிராமணர் ஊர் விட்டு ஊர் வந்து மும்பையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவை மணந்து கொண்ட தங்கையை,அவள் கணவனின் குடும்பத்தை கொலை செய்வதும் நடக்கிறது.

    நாகா,குக்கி,மீனா என பழங்குடி இனத்தவரும் தங்கள் இன பெண்களின் வேறு இனத்தவர் உடனான காதலுக்கு அருவாள் தான் தூக்குகிறார்கள்.பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து சுயமாக முடிவு எடுக்கும் நிலையை அடைவதை எந்த சாதி/மத குழுவும் விரும்புவது இல்லை.இந்த உரிமைக்காக போராடிய பெரியாரை இந்த நிகழ்வுகளை வைத்து கொண்டு எப்படி திட்ட முடிகிறது என்று தான் விளங்கி கொள்ள முடியவில்லை.

    எந்த சாதியினரும் இந்த தொழில் நாங்கள் மட்டும் தான் செய்வோம் என்று மற்றவரை உள்ளே விடாமல் தடுக்கவில்லை.ஒரு சாதியை தவிர்த்து.விவசாயமோ,ராணுவம் ,காவல் துறையில் பணியோ,முடி வெட்டுதலோ,துணி,நகை கடை,உணவகம் துவங்குதலோ நாங்கள் மட்டும் தான் செய்வோம் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று இன்று வரை தங்கள் சாதிக்கு மட்டுமே குறிப்பிட்ட பணியை வைத்து கொண்டு இருக்கவில்லை.

    எங்கள் தெருவில் தேர் வர கூடாது உங்கள் பகுதிக்குள் வேண்டுமானால் விட்டு கொள்ளுங்கள் என்று சொல்வது தவறு எனபது அனைவருக்கும் புரிகிறது.ஆனால் நான்,என் சாதி மட்டும் தான் பூசை செய்வேன் என்று சொல்வது ஞாயம் ,வேண்டுமானால் புதிதாக கோவில் கட்டி நீங்கள் பூசாரி ஆகுங்கள் என்று சொல்வது மாறி வீட்ட சமுதாயம் எனபது நியாயமான ஒன்றா

    தீண்டாமை அதிகமாக இருக்கும் கிராமங்களில்,கீரிபட்டியில் ,தேர் கொளுத்தப்பட்ட கிராமத்தில் இருந்து பலரை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து திருபதியிலும்,ஸ்ரீரங்கத்திலும் ,கடலூர் திருவந்திபுரதிலும்,மயிலாபூரிலும் அர்ச்சகர் ஆக்குவதை விட அதிகமாக தீண்டாமையை கடைபிடித்தவர் முகத்தில் கரி பூசமுடியுமா ,அவர்களை வெட்கி தலைகுனிய வைக்க முடியுமா

    இதை செய்ய விடாமல் தடுப்பது அரசா,திராவிட கட்சிகளா,

    கொளுத்தப்பட்ட தருமபுரி கிராமத்தில் 9 சாதிமறுப்பு திருமணம் செய்த சோடிகள் வாழ்ந்து வந்தனர்.2000 வன்னியர் 80 தலித் மக்கள் வாழ்ந்து வந்த சேஷசமுத்திரம் கிராமத்திலும் வன்னிய பெண்ணை சாதிமறுப்பு காதல் திருமணம் செய்த ஒரு குடும்பமும் உண்டு. கடவுளின் பெயரால் வெறியேற்றி பழி தீர்த்து கொள்ளும் நிகழ்வுக்கு பெரியார் எப்படி பொறுப்பாவார்.

    குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே வகித்து வந்த பதவிகள்,கோவில் அறங்காவலர்கள்,செய்து வந்த தொழில்கள் அனைத்திலுமே இன்று அனைத்து சாதியினரும் காணப்படுகின்றனர்,அதிக எண்ணிக்கை இருக்கும் சாதிகளும் தாங்கள் மிருக பலத்தோடு இருக்கும் இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் அடங்கி விட்டனர்.

    விடாபிடியாக தன் சாதிக்கு மட்டுமே சொந்தம் என்று இருப்பவர்களை பார்த்து பார்கிங் அட் the wrong tree எனபது ஞாயமா .உதர்ப்ரதேசம் போல இங்கு பிராமணர் எண்ணிக்கை இருந்து இருந்தால் வன்னியர்,தேவர் எல்லாம் பிச்சை வாங்கும் அளவு வன்முறை இருந்திருக்கும் என்பதை தானே அந்த மாநில நிகழ்வுகள் காட்டுகின்றன

    பெரியார் சாதி ஒழிய வேண்டும் என்று தானே வாழ்நாள் முழுவதும் கத்தி வந்தார்.எதை வைத்து தலித் மக்கள் மீதான வன்முறைகளுக்கு அவர் தான் காரணம் என்ற குற்றசாட்டு வீசபடுகிறது என்பதை யாரவது விளக்குங்களேன்.

    # 3 October 2015 at 10:10 pm
  • K.MUTHURAMAKRISHNAN said:

    உத்திரப் பிரதேசத்தில் சுமார்9‍=10 சதவிகிதத்தினரே பிராமண‌ர்கள்.வோட்டு வங்கி அரசியலில் மாயாவதி பிராமணர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதுபோல காட்டிக் கொண்டு, மேளாவெல்லாம் நடத்தி, வெற்றி பெற முடிந்தது.இன்று சாதியை நிலை நிறுத்துவது அரசியலும்,அரசியல்வாதிகளுமே.

    உத்திரப் பிரதேசத்திலோ மற்ற மாநிலங்களிலோ ஓரிரு இடத்தில் நடந்த‌ நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி இங்கும் அப்படித்தானே நடந்திருக்கும் என்று கூறுவது ‘ஹைபதெடிக‌ல்’

    ஸ்ரீரங்கத்தில் பி ஜி நாயுடு ஸ்வீட்ஸ் ஸ்டால் இருக்கும் தெருவிலேயே பிராமணாள் ஹோட்டலுக்கு எதிரான போராட்டம் திக நடத்தும். திருச்சி மாவட்டம் முழுவதும் ‘ஐயங்கார் பேக்கரி’என்ற பெயரில் மற்ற சாதியினர் நடத்தும் கடைகள் முன்னால் சாதி ஒழிப்புப் போராட்டம் கிடையாது.இப்ப்டி சாதி ஒழிப்பில் குழப்பமான நிலைப்பாட்டினை திக எடுப்பது, பெரியார் எடுத்த குழப்பமான நிலைப்பாட்டின் தொடர்ச்சியே என்று நினைக்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அ மார்க்ஸ் என்ற நபர் என்னுடைய ‘பெரியாரும் பாசிசத்தின் கூறுகளும்’ என்ற கட்டுரையைப் பற்றி விமரிசித்திருக்கிறார் என்று நண்பர் ஒருவர் சொன்னார். என்ன விமரிசனம் என்பதை இன்றுதான் பார்த்தேன்.
“இந்த அற்புதமான மனிதனை (பெரியாரை) ஒரு ஜனநாயக விரோதி என்றும் ஃபாசிஸ்ட் என்றும் பி.ஏ.கிருஷ்ணன் என்கிற பெரியாரை ஜென்மப் பகையாக நினைக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் ஒரு கட்டுரை எழுதியதையும், அதை ஒரு இணைய இதழ் ஆர்பாட்டமாக வெளியிட்டு பதில்கள் எழுதுவதற்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்ததையும் நினைத்துப் பார்த்துச் சிரிக்கிறேன். இவர் 'தி இந்து' இதழின் ஆஸ்தான எழுத்தாளர் வேறு.”

முதலாவது பாசிசக் கருத்துக் கொண்டிருப்பவர் தனிப்பட்ட முறையில் நல்லவராக இருக்க முடியாது என்று எந்த விதியும் இல்லை. பெரியார் தனிப்பட்ட முறையில் நயத்தக்க நாகரீகத்தைக் கடைபிடித்தவர் என்று நானே கட்டுரையில் எழுதியிருக்கிறேன். ஆனால் படிக்காமலே எழுதுவது இவர் போன்ற நபர்களுக்கு கைவந்த கலை.

இரண்டாவது நான் பெரியாரைப் பற்றிச் சொன்னவை அவரது எழுத்துக்களிலிருந்து எடுத்தவை. அல்லது அவரது அணுக்கத் தொண்டர் சொன்னவை. இவர் சொல்லுவது போல மூன்றாமவர் சொன்ன கதை அல்ல. ஆனால் எனக்கு இவர் இப்படி எழுதுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கதை விட்டே காலம் கழித்தவர்களால், கதைகளைத்தான் நாட முடியும்.

மூன்றாவது இவருக்கு இருக்கும் பாசிச இன வெறி ‘பெரியாரை ஜென்மப்பகையாகக் கொண்ட கும்பலைச் சேர்ந்த நபர்’ என்று என்னைக் குறிப்பிட்டதிலிருந்தே தெரிய வருகிறது. எனக்கு பெரியாருடன் எந்தப் பகையும் இல்லை. அவருடைய வெறுப்பு அரசியல் மீதுதான் பகை. அவர் துவக்குவித்த அரசியலின் ஓர் உதாரணம் இந்த நபர். இது இவர் எழுதியது: “பார்ப்பனர்களில் பார்ப்பனத் தன்மை, தந்திரம் இல்லாதவர்கள் வெகு வெகு அபூர்வம் என்பதுதான். இப்போது கூடச் சொல்கிறேன் “வெகு அபூர்வம்”. அவ்வளவுதான் நூறு சதம் இல்லை என நான் சொல்ல வில்லை. ஒரு அய்ந்து சதம் ஆறு சதம் இருக்கலாம். ஆனால் அவ்வளவுதான்.” இந்த அருமையான சமூக அறிவியல் கூற்றைக் கண்டு பிடித்து அதற்காக நோபல் பரிசு வாங்கக் காத்துக் கொண்டிருக்கும் நபர் மற்றவர்களின் மீது இன வாதக் குற்றம் சாட்டுவது எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது. இவரைப் போன்றவர்கள்தான் நாசிக் கட்சியில் அன்று இருந்தார்கள். யூதர்களைப் பற்றி இது போன்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்று இவர் ஜனநாயக வேஷம் போடுகிறார். அவ்வளவுதான் வித்தியாசம்.

நான்காவது நான் தி இந்து இதழின் ஆஸ்தான எழுத்தாளர் என்று அவர்களும் சொல்லவில்லை. நானும் சொல்லவில்லை. இந்த நபர் பெரியாரியவாதி என்பதால் எதை வேண்டுமானாலும் சொல்ல தனக்கு உரிமை உண்டு என்று நினைப்பவர். எனவே இதுவும் எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. இவரைப் போன்றவர்களுக்கும் நேர்மைக்கும் இருக்கும் இடைவெளி பெரியாருக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் இருந்த இடைவெளியை விட அதிகம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard