தமிழ் உலக மொழி ஆகுமா?
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6535893.ece
சிறந்த எழுத்துகள் பழந்தமிழில் மட்டும் இருந்தால், இன்றைய தமிழுக்குக் காலி பெருங்காய டப்பா என்ற பெயரே இருக்கும்.
‘தமிழ் கூறு நல்லுலகு’ என்னும் தொடர் தமிழ் உலகத்தைக் குறிக்கிறது. தமிழ் உலகம் என்பது பூமியில் தமிழ் வழங்கும் பகுதி. இந்தப் பகுதி உலகம் முழுவதிலும் பரவியிருக்கிறது என்னும் பொருளில் ‘உலகளாவிய தமிழ்’ என்னும் தொடர் வழங்குகிறது.
இதிலிருந்து பிறந்ததுதான் உலகத் தமிழ் என்று புதிதாக வழக்குக்கு வந்துள்ள தொகைச்சொல். தமிழ் உலகத்தை உலகத் தமிழ் என்று மாற்றிப் போட்ட சொல்.
தமிழர்கள் பிழைப்பைத் தேடி உலகம் முழுவதும் சென்று குடியேறியிருக்கிறார்கள் என்னும் நிதர்சனத்தைப் பிரகடனப்படுத்தும் சொல். தமிழர் வரலாற்றில் புலப் பெயர்வு புதிது அல்ல. ஆனால், பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய பிறகே, உலகத் தமிழ் என்ற சொல் வழக்கில் பெருகிவருகிறது. இந்த நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலும் பொருளாதார வகையில் அந்த நாடுகளில் மத்தியதர வர்க்கத்தினர்.
தாய்நாட்டில் வாழ்ந்த முறையாலும், கல்வியால் தமிழ் இலக்கியக் கலாச்சாரத்தோடு பெற்ற பிணைப்பாலும் இவர்களுக்குத் தமிழோடு உள்ள உறவு உணர்ச்சிபூர்வமானது மட்டுமல்ல, அறிவு பூர்வமானதும் கூட. தமிழ் இலக்கியம் இவர்கள் வசிக்கும் நாட்டின் மத்தியதர வர்க்கத்தினரிடமிருந்து தனித்து அடையாளம் காட்டும் குறியீடும் ஆகும். இவற்றால், உலகத் தமிழ் என்னும் சொல்லுக்கு உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் என்னும் பொருளுக்கு மேலாக, உலகத் தகுதிபெற்ற மொழி என்னும் பொருளையும் இவர்கள் தருகிறார்கள். இந்தப் பொருள் நிலைபெற உலகின் பல பகுதிகளையும் இணைக்கும் இணையம் போன்ற புதிய தொழில்நுட்பம் துணைசெய்கிறது.
உலக மொழி
உலக மொழி என்றால் உலகளாவிய ஆட்சிமை உடைய மொழி என்று பொருள். உலக ஆட்சிமை என்பது நாடு கடந்து அறிவு, அறிவியல், தொழில்நுட்பம், பெருவணிகம் ஆகிய துறைகளில் ஒருவர் பங்குபெறத் தேவை என்று கருதப்படும் தகுதி. நாடுகளுக்கிடையே அரசியல் உறவுக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் பயன்படும் தகுதி உடைய மொழி என்று பொருள். இந்தத் தகுதி இன்று ஆங்கிலத்துக்கு இருக்கிறது. இந்தப் பொருளில் தமிழை உலக மொழி என்று சொல்ல முடியாது. உலக ஆங்கிலம் என்பதில் உள்ள பொருள் உலகத் தமிழ் என்பதில் இல்லை.
கவன ஈர்ப்பு
பிற நாட்டு மொழி பேசுபவர்கள் ஒரு மொழியை நாடி வரும்போது அந்த மொழியின்மீது உலகம் கவனம் செலுத்துகிறது எனலாம். ஒரு மொழி உலகக் கவனம் பெறுவதற்கு, பிற மொழி பேசுபவர்களுக்கு அந்த மொழியின்மீது நாட்டம் ஏற்படுவது முதல் படி. அரசியல், பொருளாதார பலம் இல்லாத ஒரு மொழி, உலக அளவில் நாட்டம் பெற அதனிடம் என்ன இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
ஒரு மொழியின் முற்காலத்தில் இலக்கியம், தத்துவம், அறிவியல் முதலான துறை சார்ந்த சிறந்த எழுத்துகள் இருப்பது அந்த மொழிக்கு இருக்கும் ஈர்ப்புச் சக்திகளில் ஒன்று. இவை கிரேக்கம், லத்தீன், அரேபியம், சமஸ்கிருதம் முதலிய செம்மொழிகளில் உண்டு. பழந் தமிழுக்கும் இந்த ஈர்ப்புச் சக்தி உண்டு. ஆனால், இத்தகைய மொழிகளில் ஏற்படும் நாட்டம் கல்வித் துறையில் உள்ளவர்களிடமே முடங்கிவிடுகிறது; பொதுமக்களைப் பற்றுவதில்லை. மேலும், சிறந்த எழுத்துகள் பழந்தமிழில் மட்டும் இருந்தால், இன்றைய தமிழுக்குப் பெருங்காயம் இருந்த டப்பா என்ற பெயரே இருக்கும்.
மொழியில் உள்ள எழுத்துகள்
எனவே, இன்றைய தமிழில் உலகைக் கவர என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அறிவியலில் ஒற்றை மொழி ஆதிக்கம் உள்ள இன்றைய சூழ் நிலையில், தமிழில் வெளிவரும் அறிவியல் எழுத்து களுக்கு உலகக் கவர்ச்சி இருக்காது; இருக்க முடியாது. ஆனால், பிற அறிவுத் துறைகளில் அது இருக்கலாம். இவற்றில் சுயமான சிந்தனைகளுக்கு - தமிழ் அனுபவத்தில் பிறக்கும் சிந்தனைகளுக்கு - உலகை ஈர்க்கும் வாய்ப்பு உண்டு. பிரான்ஸைச் சேர்ந்த சார்த்தருடையதுபோல் புதிய தத்துவச் சிந்னைகள் தமிழில் தோன்றினால், தெரிதாவைப் போல் இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் விளங்கிக் கொள்ளத் தமிழில் புதிய வழிமுறை ஏற்பட்டால், இத்தாலியைச் சேர்ந்த கிராம்சியின் பார்வையைப் போல் புது நோக்குள்ள அரசியல் தத்துவம் தமிழில் எழுந்தால், பிரேசிலைச் சேர்ந்த பாலோ ஃபிரைரே சிந்தித்ததைப் போல் கீழிருந்து பார்க்கும் கல்விச் சிந்தனைகளைத் தமிழில் எழுதினால், உலகம் தமிழின் பக்கம் திரும்பிப் பார்க்கும். இப்படி இன்னும் இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
நம் நாட்டிலேயே காந்தியின் அரசியல் போராட்டச் சிந்தனைகள் போன்றவை சுயமாகத் தமிழில் தோன்றுவது சில உதாரணங்கள். இத்தகைய கவன ஈர்ப்பு பிற மொழி பேசும் அறிவுஜீவிகளிடமே முதலில் தோன்றலாம்; ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமே அவர்கள் அதைப் பெறலாம்.
உலகத் தகுதி பெறும் மொழி
தமிழ்ச் சமூகம் இப்படிப்பட்ட சிந்தனையாளர்களை ஏன் படைக்க முடியவில்லை? மேலே சொன்னது போன்ற அறிவுத் துறைகளில் தமிழ் பேசும் புலமை யாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலத்தின்வழி கல்வி கற்றிருந்தாலும், முற்றும் கற்ற தங்கள் துறைசார்ந்த அறிவிலிருந்து புதிய சிந்தனைகளைத் தமிழில் தர அறிவுத்தடை இருக்க முடியாது; சுய சிந்தனைகளுக்குக் கலைச்சொல் தடையும் இருக்க முடியாது; மனத்தடையே இருக்க முடியும். நம்முடைய கல்வி அமைப்பு, ஆங்கிலத்தில் எழுதினாலே பதவி முன்னேற்றம், உலக அரங்குகளில் பங்கேற்பு என்று செயல்படுகிறது. தமிழில் புதிய சிந்தனைகளைத் தர இந்த நிலை மாற வேண்டும் என்று காத்திருக்கத் தேவை இல்லை. தருவதற்குச் சிலரே போதும். மேலே சொன்ன எடுத்துக்காட்டுகளில் சிந்தனையாளர்கள் அவரவர் மொழிகளில் சிலரே. எத்தனையோ கோடித் தமிழரில் திருவள்ளுவர் ஒருவரே. தமிழ்ச் சமூகத்திலிருந்து ஆழச் சிந்திப்போர் சிலர் உருவானால், அவர்கள் தங்கள் சிந்தனைகளைத் தமிழில் எழுதினால், இது முடியும். தமிழ் உலகத் தகுதி பெற்ற மொழியாக முன்னேறும்.
பல துறைகளிலிருந்தும் வரும் புதிய அறிவுச் சிந்தனையால் மட்டுமல்ல, சிறந்த இலக்கியப் படைப்பும் தமிழ் உலகக் கவனம் பெற உதவும். கொலம்பியாவின் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸின் இலக்கிய எழுத்துகள் ஸ்பானிய மொழிப் படைப்பை உலகம் தேடச் செய்கின்றன. இதைப் போன்றே துருக்கியைச் சேர்ந்த ஒரான் பாமுக் முதலானோரின் எழுத்துகள் அவர்களுடைய மொழிகளை, மொழிப் பன்மை குறைந்துவரும் நிலையிலும், உலக அளவில் இடம்பெறச் செய்கின்றன. இதைச் செய்யத் தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு நல்ல ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டும்; அதன் வழியே அவை மற்ற மொழிகளுக்குப் போய்ச்சேரும். உலகளாவிய ஆங்கில ஆதிக்கத்தின் ஒரு நன்மை இது.
இந்த வழிகளில் இன்றைய தமிழ், உலகக் கவனம் பெற்று உலகத் தகுதி பெறும்போதே தமிழை உலக மொழி என்று சொல்வதில் நியாயம் இருக்கும். இந்த நிலை வருவதற்கு அரசின் ஆதரவு அவசியம் இல்லை. இது தமிழர்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய ஒன்று; செய்ய முடிகிற ஒன்று. இதைச் செய்ய முயலாமல், தங்கள் குறையை மற்றவர்மேல் - வேறு மொழி மேலோ, வேறு சமூகத்தின் மேலோ - சுமத்துவதைச் சொந்தக் குறையை மறைக்கும் செயலாகவே கொள்ள வேண்டும்.
- இ. அண்ணாமலை,
சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசியத் துறையில் வருகைதரு பேராசிரியர்.
தொடர்புக்கு: eannamalai38@gmail.com