New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்
Permalink  
 



 

மேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்

அன்புள்ள ஜெ,

அய்யனார் விஸ்வநாத் ,கூகிள் பஸ்ஸில் இப்படி ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று அறிய விரும்புகிறேன்

மஞ்சூர் ராசா

முப்பதாண்டுகளாக ஒரு இடதுசாரி மனித விரோதக் கும்பலால் மனசாட்சியே இல்லாமல் சீரழிக்கப் பட்ட நரகம் இது. இதை எப்படி மீட்டெடுப்பதென்பது எவருக்கும் தெரியவில்லை. கல்கத்தா அதன் சணல் தொழில், துறைமுகம் இரண்டையும் மட்டுமே நம்பி இருந்த நகரம். இரண்டுமே தொழிற் சங்க குண்டர் அரசியலால் முழுமையாக அழிக்கப் பட்டு விட்டன. கிராமங்களில் நில உடைமைச் சமூக அமைப்பு இடதுசாரி பௌடர் பூச்சுடன் அப்படியே பேணப் பட்டமையால் தலித்துக்கள் கூட்டம், கூட்டமாகக் கிளம்பி அவர்களுக்கு இருக்கும் ஒரே பெருநகரமான கல்கத்தாவை நிரப்பி அதை மாபெரும் சேரியாக ஆக்கி விட்டார்கள்/

மேற்கண்ட வரிகளை ஜெயமோகனின் கல்கத்தா நகரத்தைப் பற்றிய பதிவில் படித்த போது நிஜமாகவே இரத்தம் கொதித்தது. மிகச் சிரமப் பட்டுக் கோபத்தை அடக்கிக் கொண்டு இரண்டு நாள் கழித்து இதை எழுதுகிறேன்.
என் வாசிப்பின் மீது எனக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. இதுவரை நான் வாசித்த எழுத்தாளர்களிலேயே மிக வன்மமும், வக்கிரமும் கொண்ட எழுத்து ஜெயமோகனுடையதுதான். தான் நம்பும் ஒன்றிற்காக மற்ற எல்லாவற்றையும் தரை மட்டமாக்கி, வேரோடு பிடுங்கி எறிவதில் ஜெயமோகன் விற்பன்னர்.

தலித்துகள் நகரத்திற்குள் வந்ததால் நகரம் சேரியானதாம். என்ன மாதிரியான சாதி வெறி இது. வார்த்தைகள் தடித்து விடுமோ என பயந்து கொண்டேதான் எழுத வேண்டியிருக்கிறது. இந்தத் தீட்டு மனப்பான்மையைக் கூட விட்டொழிக்க முடியாத ஒரு நபரை எந்தக் கெட்ட வார்த்தையால் திட்டுவது எனக் குழம்பிப் போய் இருக்கிறேன்.

கல்கத்தாவில் என்ன மன்னராட்சியா நடந்தது? மக்கள் விரோத ஆட்சியென்றால் அதை மக்களே களைந்திருப்பார்களே. முப்பது ஆண்டுகளாக ஒரே ஆட்சி நடைபெறுவது சாதாரணமான விஷயமில்லையே. அதை சாதித்துக் காட்டியவர்கள் எப்படி மனித விரோத கும்பலாவர்? என்னய்யா எழுதுறீங்க உங்களுக்கு ஒரு சித்தாந்தத்தைப் புடிக்கலனா அத புடிச்சவன்லாம் மனுச விரோதியா?

ஜெயமோகன் இந்தியாவின் எந்தப் பெருநகரத்திற்கும் போனதில்லையா என்ன? புனிதர்களாலே ஆளப்பட்டு வரும் மும்பை பக்கம் ஒரு நடை போய் வந்தாலாவது இந்தியா வறுமை மிக்க, பிச்சைக்காரர்களாலும், சாலையோர மனிதர்களாலும் நிறைந்திருக்கக் கூடிய நாடு என்பது அவரின் தூய மனதிற்குத் தெரிந்திருக்கலாம். அல்லது அவரின் நெருங்கிய நண்பரான நாஞ்சில் நாடனிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம்.

பயணங்கள் மூலம் புதிய பார்வையை அடைய முடியும் என்பார்கள். ஜெ எவ்வளவு தூரம் பயணித்தாலும்,எழுதியே எண்ணற்ற காடுகளை அழித்தாலும் அவரால் தன் வக்கிரங்களிலிருந்து வெளிவர முடியாது என்பதுதான் உண்மை. இப்படி ஒரு வக்கிரத்தைக் கொட்டுவதற்குக் கல்கத்தா போக வேண்டியதில்லை. வழக்கமான அவரது குருகுல பஜனையே போதுமானது.

===============================

அன்புள்ள மஞ்சூர் ராசா,

இந்த அய்யனார் என்பவர் யாரெனக் கேள்விப்பட்டதில்லை. ஓர் இடதுசாரியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள விழையும் ஒருவராக இருக்கலாம், அல்லது இடதுசாரிக் கட்சித்தொண்டர் எவராவது இப்பெயரில் எழுதலாம். இம்மாதிரி அடிப்படை வாசிப்போ, புரிதலோ இல்லாமல் உள்நோக்குடன் நடத்தப்படும் வெட்டி விவாதங்கள் பிரசுரமாவதும், கவனம் பெறுவதும் இணையம் அளிக்கும் தீய விளைவுகளில் முக்கியமானது. பெரும்பாலும் நேர விரயம். ஆகவேதான் நான் இந்த ’பஸ்’ போன்ற விஷயங்களுக்குள் நுழைவதே இல்லை.

இந்த விஷயத்தில் எனக்கே சில சொல்ல இருக்கிறதென்பதனால் என் விளக்கத்தைச் சொல்கிறேன். அது பெரும்பாலும் வங்க அரசியல் சார்ந்த விளக்கம்தான். ஆனால் இக்குரலுடன் பெரிய விவாதங்களுக்கெல்லாம் நான் தயாராக இல்லை.

*

முதல் விஷயம் இந்தக் குற்றச்சாட்டில் உள்ள தொனி. ’தான் நம்பும் ஒன்றிற்காக மற்ற எல்லாவற்றையும் தரைமட்டமாக்கி, வேரோடு பிடுங்கி எறிவது’ என்னவென்று இந்தக் குறிப்பே காட்டுகிறது. இதில் மேற்கோளிடப்பட்டிருக்கும் என் வரிகளே தெளிவாக உள்ளன. பொதுவாக இந்த மாதிரி வெட்டித் தர்க்கங்களைப் பார்த்துப் பார்த்துத் தெள்ளத் தெளிவாக எழுதப் பழகி விட்டிருக்கிறேன். சம்பந்தமில்லாமல் வெட்டி எடுத்து வசை பாடும் கும்பலுக்குக்கூட வாகான வரிகள் எளிதில் பிடிபடுவதில்லை.

நான் சொன்னது என்ன? வங்காளத்தில் இன்னும் கிராமங்களில் இடதுசாரிப் பூச்சுடன் நிலப் பிரபுத்துவம் பேணப்படுகிறது. ஆகவே அங்கே நில அடிமைகளாக இருந்த தலித்துக்கள் வேறு வழியில்லாமல் அவர்களுக்கு இருக்கும் ஒரே நகருக்குப் பிழைப்புத் தேடி வந்து குழுமுகிறார்கள். கல்கத்தாவிலும் வாழ வழியில்லாமல் அவர்கள் ஏற்கனவே வாழ்ந்திருந்த சேரிகளையே கல்கத்தாவிலும் உருவாக்கிக் கொண்டு அதில் வாழ்கிறார்கள். அக்கட்டுரை முழுக்க அந்த மக்களின் அன்றாட அவலத்தின் சித்திரம் உள்ளது. அதன் நீட்சியாக இந்த வரி அம் மக்களின் அவலம் கண்டு, அதற்கான காரணம் உணர்ந்து, அதன் குமுறலாக வெளிப்பட்டிருக்கிறது.

தலித் மக்கள், பொருளியல் வளர்ச்சியாலும், புது வாய்ப்புக்களுக்காகவும் கல்கத்தா வந்து தங்கி வாழ, அப்படி அவர்கள் தங்கியதனால் கல்கத்தா தீட்டுப் பட்டுவிட்டதாக நான் சொல்வதாக இந்த வரி திரிக்கப் பட்டுப் பொருள் கொள்ளப் படுகிறது. அதற்கான முகாந்தரம் அக்கட்டுரைகளிலோ, வேறு கட்டுரைகளிலோ காண முடியாது.  சேரி என்ற சொல்லுக்குத் தலித் குடியிருப்பு என்றல்ல பொருள். ஆங்கிலத்தில் ஸ்லம் என்று சொல்லின் தமிழ் அது.

தெளிவாகவே கட்டுரையில் என் எண்ணம் சொல்லப் பட்டுள்ளது. இருந்தாலும் இந்தத் திரிபு ஏன் செய்யப் படுகிறது?

இது நம் சூழலில் உள்ள ஓர் உத்தி. ஒரு விஷயத்தைத் தர்க்கபூர்வமாக எதிர் கொள்ள முடியவில்லை என்றால் ஒர் அதீத அற நிலைப்பாட்டை பாவனை செய்வது. அந்த நிலைப்பாட்டில் நின்று கொண்டு எதிர்த்தரப்பின் ஒரு வரியைப் பிடுங்கி  உச்சகட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பை நடிப்பது, மனிதாபிமானம் கசிவது, அறச்சீற்றமாக எரிவது. அந்த சந்தடியில் தன்னுடைய சுய நலங்களை, அற்பத் தனங்களை, இரட்டை வேடங்களைத் திறமையாக மறைத்துக் கொள்வது. அதுதான் இது.

அதிலும் இந்த மாதிரி மாற்றுக் கருத்தைப் பீராய்ந்து அதில் தலித் விரோதத்தைக் ’கண்டுபிடித்து’  தர்மத்தின் தலைமகனாகக் கொந்தளிப்பது தமிழக நடுநிலைச் சாதிகளைச் சேர்ந்த சாதி வெறியர்கள் பல காலமாகச் செய்து வரும் ஒரு கேவலமான உத்தியே அன்றி வேறல்ல. அந்த பருப்பு,சென்ற சில வருடங்களாக வேகாமலாகி விட்டிருக்கிறது.  இந்த மனிதாபிமானக் கொந்தளிப்புகளுக்குப் பின்னால் உள்ளது வெறுப்புக்குரிய சாதி வெறியும், அதிகார நோக்கும் மட்டுமே என அவர்களுக்கு இன்று தெரியும்.

ஒரு போதும் ஒரு தலித், என் வரிகளை இப்படிப் பொருள் கொள்ள மாட்டார். இன்று வரை தமிழக தலித் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் நட்புக்கும், மதிப்புக்கும் உரியவனாகவே, அந்தரங்க நண்பனாக இருந்து கொண்டிருக்கிறேன் என்பதே அதற்குச் சான்று. ஏனென்றால் நான் என்ன சொல்கிறேனோ அதுவே நான். அது முற்போக்கோ, பிற்போக்கோ ஒருபோதும் பாவனை இருக்காது.  தலித் நண்பர்களைப் பொறுத்தவரை அவர்கள் அருவருப்பதே இந்த வகையான போலிக் கரிசனங்களுக்குள் இருக்கும் அரசியல் சதிகளைத்தான் என்பதைக் கண்டிருக்கிறேன்.

இந்த இணையத் தளத்திலேயே மேற்கு வங்க இடதுசாரி ஆட்சி எப்படி தலித் ஒடுக்குமுறை அரசாக இருந்தது என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். அதை விரிவாகச் சொன்ன முதல் தமிழ் எழுத்தாளனும் நானே. சொல்லப் போனால் நூற்றுக் கணக்கான தலித்துக்கள் படுகொலை செய்யப் பட்ட, இந்திய வரலாற்றின் மிகப் பெரிய தலித் படுகொலையான, மரிச்சபி நிகழ்வு பற்றி அரை நூற்றாண்டுக் காலத்தில் முதலில் தமிழில் எழுதியவனே நான் தான் என நினைக்கிறேன். அதைப் பற்றி ஒரு சொல் விளக்கம் சொல்ல இவர்களால் முடியவில்லை, இன்றுவரை.

அப்படிச் சொல்ல ஏதுமில்லாத போது இவர்கள் செய்யும் உத்திதான் இது. அதைச் சுட்டிக் காட்டுபவனை தலித் விரோதி என்று கை நீட்டுவது. அதற்காக வரிகளைப் பிடுங்கி விளக்கம் கொடுப்பது. அதைத்தான் அரை நூற்றாண்டாக மீண்டும், மீண்டும் செய்து வருகிறார்கள்.

நூற்றுக்கணக்கில் தலித்துக்கள் தங்கள் சொந்த கட்சிக் குண்டர்களால் கொல்லப் பட்ட நிகழ்வுகளைக் கேட்கையில் கொதிக்காமல், குளிர்ந்து வாய் மூடிக் கிடந்த ரத்தம், பல லட்சம் தலித்துக்கள் நகரத் தெருக்களையே சேரிகளாகக் கொண்டு நரக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் செய்த ஆட்சியைக் கண்டு கொதிக்காமல் அதை நியாயப்படுத்த நுரைத்துக் கொந்தளிக்கும் அந்த ரத்தம் , அந்த அநீதியைச் சுட்டிக் காட்டுபவனின் ஒரு வரியை மனம் போலப் பொருள் கொண்டு,கொதியோகொதி என்று கொதிக்கிறது.

மரிச்சபி பற்றிய நிகழ்வுகளை ஒருவருடம் முன்னால் விரிவாக இந்தத் தளத்தில் எழுதியிருந்த போது இணைய உலகில் கொஞ்சமாவது அசைவு இருக்கும் என  எதிர் பார்த்தேன். ஆழமான மௌனம் தான் காணக் கிடைத்தது. அவ்வளவு பெரிய தலித் படுகொலை நடந்திருப்பதும் அது முழுமையாக மறைக்கப் பட்டிருப்பதும் எவருக்குமே ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை. ஆனால் இப்போது இந்தத்திரிபைக் கையில் எடுத்துக் கொண்டு கொந்தளிக்கிறார்கள்.

நம்முடைய  நடுநிலை ஆதிக்க சாதிகளின் மனநிலையே அதுதான். அவர்களுக்கு இந்தியாவின் ஒட்டு மொத்த தலித்துக்களும் கொல்லப் பட்டாலும் எந்த மனசாட்சிப் பிரச்சினையும் இருக்காது. அமைதி காக்க முடியும். ஆனால் அவர்களின் ஆதிக்கத்துக்கும், தந்திரங்களுக்கும் எதிராக ஒருவர் பேசமுயன்றால் அவரை தலித் விரோதி என்று அடையாளம் காட்டிக் கொந்தளிப்பார்கள். இவர்கள் பேசும் தலித்திய ஆதரவு என்பது இந்தக் கீழ்த்தர அரசியல் தந்திரம் மட்டுமே.

உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது, இந்த ஆசாமிகளுக்கெல்லாம் மனசாட்சியோ, வெட்கமோ கிடையாதா? தங்கள் சாதிக் கூட்டத்துடன் தனியே இருக்கும் போதாவது இதைப் பற்றிக் கொஞ்சம் குற்றவுணர்ச்சியுடன் பேசிக் கொள்ள மாட்டார்களா?

*

இந்தப் பதிவில் அவர் சொல்லும் இரு கருத்துக்கள். ஒன்று, கல்கத்தாவிலும் பிற இந்திய நகரம்போல வறுமை இருக்கிறது அவ்வளவுதான். இரண்டு, மக்களாதரவால் மேற்கு வங்கத்தில் இது வரை இடதுசாரிகளின் ஆட்சி நீடித்தது. இந்த இரு பொய்களை நிலை நாட்டவே முதலில் சொல்லப் பட்ட போலியான உணர்ச்சிக் கொந்தளிப்பு நடிக்கப் படுகிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளலாம்

கொஞ்சம் வாசிப்பவராக இருந்தால் கல்கத்தாவின் குடிசைப் பகுதிக்கும், தெருவாழ்க்கைக்கும், வறுமைக்கும் சீரழிவுக்கும் வேறெந்த இந்திய நகரத்திலும் இணை கிடையாதெனத் தெரிந்து கொண்டிருப்பார். டி என் சேஷன் முதல் இந்திய தேர்தல் கமிஷனர்களே மேற்கு வங்கத்தில் இன்று வரை  வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவதன் மூலமே தேர்தல்கள் வெல்லப் பட்டிருக்கின்றன என்பதை மீண்டும், மீண்டும் பதிவு செய்திருப்பதை வாசித்திருப்பார்.

இது அப்பாவித்தனமெல்லாம் இல்லை. மோசடி. அந்த மோசடிக்குத் தீவிரம் கூட்ட ஒரு கலை நிகழ்ச்சி. உணர்ச்சி நாடகம்.

*

மேற்கு வங்கச் சூழலைப் பற்றி நான் சொன்ன அந்த வரிகளுக்குப் பின்னால் இதுகாறும் நான் பேசி வந்த விஷயங்கள் உள்ளன. அவற்றை வாசிப்பவர்களுக்காகவே நான் மேலே பேசுகிறேன். இந்தத் தருணத்தில் அவற்றை மீண்டும் தொகுத்துச் சொல்லலாமென நினைக்கிறேன்.

இந்திய மாநிலங்களில் வேறெந்த மாநிலத்துக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு மேற்கு வங்கத்திற்கு உண்டு. அங்கே பிராமணர்களின் சதவீதம் பிற மாநிலங்களை விட  அதிகம். ஆகவே அவர்கள் ஒரு அதிகார சக்தி.  பொதுவாகத் தென்னிந்திய பிராமணர்களுக்கும், வட இந்திய பிராமணர்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. இங்கே பிராமணர்கள் குத்தகை வாங்கும் நில உடைமையாளர்களே ஒழிய நிலக் கிழார்கள் அல்ல. ஆனால் வடக்கே பூமிகார் பிராமணர்கள் நிலக்கிழார்கள். அதாவது வேளாளர் பண்பாடுள்ள பிராமணர்கள்.

மேற்கு வங்கத்தில் விளை நிலம் கணிசமான அளவுக்கு பிராமண நிலக் கிழார்களிடம் இருக்கிறது. அடுத்த படியாகக் காயஸ்தர்களிடம். மேற்குவங்கத்தில் இரு ஆதிக்கச் சாதிகள் இவர்களே. வங்காள பிராமணர்கள் ஆரம்ப காலத்தில் காங்கிரஸில் செல்வாக்கு செலுத்தினர். ஆனால் அவர்களின் தலைவரான சுரேந்திரநாத் பானர்ஜி காந்தியிடம் முரண்பட்டு விலகிச் சென்ற போது அவர்களும் காங்கிரஸிடம் அன்னியமாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாகவே நீடித்தனர். பிரிட்டிஷாருக்காக ஒரிஸாவையும், அஸ்ஸாமையும், பீகாரையும் ஆண்டவர்கள் அவர்கள்தான். வங்காள பிராமணர்கள் மேல் அந்தக் கசப்பு இன்னும் அஸ்ஸாமிலும், பீகாரிலும், ஒரிஸாவிலும் உள்ளதைக் காணலாம்.

ஆகவே வங்க காங்கிரஸ்  பெரும்பாலும்  காயஸ்தர்களின் கட்சியாக இருந்தது. ஆனால் ஒருபோதும் வலுவான நிலையில் இருக்கவில்லை. சுதந்திரத்துக்குப் பின்னர் பல்வேறு மாநிலக் கட்சிகளைத் திரட்டி மத்திய அரசின் பலத்தில் ஒரு அரசு அங்கே அமைந்தது. காயஸ்தரான விதான் சந்திர ராய் 62 வரை முதல்வராக இருந்தார். இக்காலகட்டத்தில் மெல்ல, மெல்ல வங்க பிராமணர்கள் இடதுசாரிகளாக ஆனார்கள். காயஸ்தர்களுக்கு எதிரான சமூகத் துருவப் படல் தான் அது. இடதுசாரிக் கட்சிகளில்  இன்று வரை இருக்கும் பிராமண ஆதிக்கம் அவ்வாறு உருவானது.

பங்க்ளா காங்கிரஸ் பார்ட்டி போன்ற மாநிலக் கட்சிகள் வழியாகவும், பிராமண நிலப்பிரபுக்கள் இடதுசாரி அரசியலுக்குள் நுழைந்தனர். அறுபதுகளுக்குப் பின் அரசியல் சமநிலை குலைய ஆரம்பித்தது. கூட்டணி ஆட்சிச் சதுரங்கம் ஆரம்பித்தது.  ஒருவருடம் கூட நீளாத கூட்டணி ஆட்சிகள். கட்சித் தாவல்கள். ஆளுநர் ஆட்சிகள். ஒரு கட்டத்தில் வங்க அரசியல் இந்திய அரசியல் சூழலில் ஒரு பெரிய கேலிக் கூத்தாக ஆகியது.

இந்நிலையில் இரு முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் அரசியலைப்  பாதித்தன. ஒன்று, நக்சலைட் எழுச்சி. அறுபத்தேழில் சந்தால் போராட்டமாக வெடித்த அந்தக் கலகம் மெல்ல நகர்ப்புற இளைஞர்களின் கிளர்ச்சியாக ஆகியது. அவர்கள் பெரும்பாலும் முன்னாள் இடதுசாரிக் கட்சியினர். அவர்கள் சொன்ன முக்கியமான குற்றச் சாட்டே இடதுசாரிக் கட்சிகள் பிராமண நிலச்சுவான்தார்களால் கைப்பற்றப் பட்டு விட்டன, அந்நிலக்கிழார்கள் தலித்துக்களை மோசமாக அடக்கிச் சுரண்டுகிறார்கள் என்பதுதான்.

இத்தருணத்தில் 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போர் வெடித்தது. இந்தியாவுக்கு வங்க தேச அகதிகள் பெருகி வந்தனர். அவர்களைக்  காங்கிரஸ் ஊக்குவித்தது. பாகிஸ்தானை உடைக்க முடிவெடுத்திருந்த இந்திரா காந்தி, அவர்களை முன்னிறுத்தி ஒரு போரை ஆரம்பித்துக் கிழக்கு வங்கத்தைத் தனி நாடாக்கினார். இந்தத் தருணத்தைப்  பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் மாநிலத்தில் ஆளுநர் அரசை கொண்டு வந்தது. சித்தார்த்த சங்கர் ரே ஆளுநரானார்.

ரே 1972ல் தேர்தலில் வென்று முதல்வரானார். அந்த வெற்றிக்கான காரணங்களில் பாகிஸ்தான் போருக்குப் பின் இந்திரா காந்திக்கு இருந்த பிம்பம் ஒரு காரணம். ஆனால் அதற்கு இணையான இன்னொரு காரணம் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியைக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டது. ஆனால் அனைத்தையும் விட முக்கியமான காரணம் ஒன்றுண்டு. வந்து கொண்டே இருந்த வங்க அகதிகளுக்கு இடமளித்து சட்டபூர்வமற்ற முறையில் குடியுரிமை அளித்து அவர்களை வாக்கு வங்கியாக ஆக்கிக் கொண்டது காங்கிரஸ். அந்த உத்தி இன்று வரை அஸ்ஸாமில் காங்கிரஸுக்குக் கைகொடுக்கிறது.

ரே, நக்சலைட் புரட்சியைக் கொடுமையான முறையில் ஒடுக்கினார். இந்திய அரசு,இந்தியக் குடிமக்களை அதிகளவில் கொன்றது அப்போதுதான். கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் இளைஞர்களை ரேயின் அரசு கொலை செய்தது. 1975ல் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்படவே ரே ஒரு முக்கியமான காரணம் எனப்படுகிறது.

பலரும் அறியாத ஒன்றுண்டு. இந்தக் கொலைகளில் இடதுசாரிகள் ரேவுக்குத் துணை நின்றனர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, ரேயுடன் கூட்டணி ஆட்சியில் இருந்தது அப்போது. நக்சலைட்டுகள் பெரும்பாலும் முன்னாள் கம்யூனிஸ்டுக் கட்சிக்காரர்கள் என்பதனால்  அவர்களை, இவர்கள் அடையாளம் காட்டமுடிந்தது. வேட்டை வண்டிகளில் ஒரு உள்ளூர் தோழர் எப்போதும் இருப்பார் என்பதை எத்தனையோ நினைவுக் குறிப்புகளில் இன்று வாசிக்கலாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: மேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்
Permalink  
 


ரே,இடதுசாரிகளைப் பயன்படுத்திக் கொண்டார். உண்மையில் இடதுசாரிகள்,ரேயைப் பயன்படுத்திக் கொண்டார்கள். நக்சலைட்டுகள் அவர்களின் முதல் எதிரிகளாக அன்றும், இன்றும் கருதுவது இடதுசாரிகளையே. ஆகவே இடதுசாரிகள் தங்கள் எதிரிகளான  ரேயுடன் ஒத்துழைத்து நக்சலைட்டுகளை அழித்தனர். பலநூறு நூல்கள் வழியாக இன்று இது பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதற்கொரு சமூகத் தளம் உண்டு. இடதுசாரிகளான பிராமண நிலச் சுவான்தாரர்கள் தலித் உழைப்பை நம்பியே வேளாண்மை செய்து வந்தனர். தலித்துகளுக்கான கூலி, நில உரிமைக் குரல்கள் எழுந்து வந்ததை அவர்கள் ஒடுக்கினர்.  அவ்வாறு ஒடுக்கப் பட்ட தலித்துக்களின் குரலாகவே நக்சலைட்டுகள் எழுந்து வந்தனர். மேற்கு வங்கத்தில் இன்றும் அவர்களே தலித்துக்களின் குரல். அக்குரலை அழிக்க ரேயும் இடதுசாரிகளும் கைகோர்த்தனர்.

இந்திய அரசியலில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் நெருக்கடி நிலையின் போது இந்திரா காந்தியுடன் கைகோர்த்து நின்று, மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் அதிகாரத்திலும் பங்கெடுத்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, நெருக்கடி நிலை முடியும் நிலையில் சட்டென்று எதிர்த் தரப்பாக ஆகிப் பழியில் இருந்து தப்பியதுதான். ரே நடத்திய படுகொலைகளால் வங்கத்தில் காங்கிரஸ் அழிந்தது. இடதுசாரிக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பெருங்கூட்டணியை அமைத்தன. 1977 தேர்தலில் ஜோதிபாசு முதல்வரானார். அன்றுமுதல் இவ்வருடம் வரை அங்கே நிகழ்ந்தது இடதுசாரிக் கூட்டணி ஆட்சிதான்.

நெருக்கடி நிலைக்கு எதிரான கோஷங்கள் ஜோதிபாசுவுக்கு உதவின. ஆனால் மிக முக்கியமான கோஷமாக இருந்தது ‘வங்காளம் அனைத்து வங்காளிகளுக்கும் தாய் நாடு’ என்ற கோஷம். வங்க அகதிகளின் வாக்குகளை அவருக்குச் சாதகமாக திருப்பியது அது. ஆட்சிக்கு வந்தபின் அந்த வாக்கு வங்கியைப் பெருக்குவதை இடதுசாரிகள் திட்டமிட்டுச் செய்தார்கள். எல்லைப்புற நிலம் முழுக்க வங்க அகதிகளுக்கு அளிக்கப் பட்டது. குடியுரிமை உட்பட எல்லாமே சட்ட விரோதமாக அளிக்கப் பட்டன. அது மிக வலுவான ஒரு வாக்கு வங்கியாக ஆகியது.

வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி வந்து அந்த நாடு அரசியல் சிக்கலுக்கும், பெரும் வறுமைக்கும் செல்லச் செல்ல அகதிப் பிரவாகம் அதிகரித்தது. இந்த சட்ட விரோதக் குடியேற்றத்தை இருபதாண்டுக் காலம் திட்டமிட்டு செய்தது வங்க அரசு. அது மேற்கு வங்க கிராம அமைப்பில் உருவாக்கிய விளைவு தான் இடதுசாரிச் செல்வாக்கை முப்பதாண்டுக் காலம் நிலை நாட்டியது.

மேற்கு வங்க கிராமப்புற பிராமண நிலச் சுவான்தாரர்கள், வந்து குடியேறிய வங்க தேச அகதிகளைக் கொண்டு ஒவ்வொரு ஊரிலும் ஒரு குண்டர் படையை அமைத்துக் கொண்டார்கள். மேற்கு வங்கத்தில் சென்ற கால கட்டத்தில் நிலச் சீர்திருத்தம் என்ற பேரில் வழங்கப் பட்ட நிலம் முழுக்கக் குடியேறிகளான வங்க தேசத்தார்களுக்கே கொடுக்கப் பட்டது. தலித்துக்கள் அதே ஒடுக்கு முறைக்குள் நில அடிமைகளாகவே வைக்கப் பட்டார்கள். மொத்த கிராமமே நிலக்கிழார்களின் கட்டுப் பாட்டுக்குள் கால் நூற்றாண்டுக் காலம் இருக்க நேர்ந்தது.

மேற்கு வங்கத்தில் நிலவிய சூழல் பற்றி இப்போது விரிவாகவே எழுதப் பட்டு விட்டது. நில உடைமையாளர்கள், அரசு இயந்திரம், கட்சி ஆகிய மூன்றும் ஒன்றே ஆக மாறிய நிலை. காவல் நிலையங்களே உள்ளூர் மார்க்ஸியத் தலைவரான நிலப்பிரபுவின் கட்டுப் பாட்டில் செயல் பட்டன. மேற்கு வங்கத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அளவில் சட்ட விரோத வெடி ஆயுதங்கள் உள்ளன என்பது இந்திய உளவுத் துறை அறிக்கை. மம்தா பானர்ஜியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியே அந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவேன் என்பதே- செய்யவே முடியாதென்று அங்கே இதழாளர்கள் சொல்கிறார்கள்.

எதற்காக இத்தனை ஆயுதங்கள்?  சட்டம் ஒழுங்குப் பராமரிப்பை அரசே அந்தந்த ஊர் நிலக்கிழார்களுக்கு விட்டு விட்டது. அவர்களின் ஆதிக்கத்துக்கு கீழே அடிமைப் பட்டுக் கிடக்கும் மக்களைச் சுரண்டவும் ஒடுக்கவும்தான் அந்த ஆயுதங்கள். பீகாரில் கூட அப்படி ஒரு நிலை இருந்ததில்லை.

இந்தச் சூழலில் அங்கே தேர்தல் எப்படி நிகழ்ந்திருக்கும்? கணிசமான மேற்கு வங்க கிராமங்கள் நீர் சூழ்ந்து துண்டிக்கப்பட்டவை. ஒரு தீவு ஒருவர் கையில் இருக்கிறது. அங்கே வேறு கட்சியே இருக்க முடியாது. காங்கிரஸ் சின்ன நகரங்களில்தான். ஒட்டு மொத்த ஓட்டே குண்டர்களால் மொத்தமாகப் போடப்படும். தொழிற் சங்க அரசியலால் முழுக்க, முழுக்கக் கைப்பற்றப்பட்டுள்ள அரசு இயந்திரமும் அதனுடன் இணைந்து கொள்ளும் போது ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு சுதந்திர தேர்தலை நடத்த முயன்று தோற்ற சேஷன், அதைச் சொல்லிச் சொல்லிப் புலம்பியிருக்கிறார். தேர்தல்களில் எப்போதுமே தலித்துக்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப் பட்டதே இல்லை என நக்சலைட்டுகள் எழுதுகிறார்கள்.

இப்போது என்ன நிகழ்ந்தது? முக்கியமான ஒரு திருப்பம், இடதுசாரிகளின் ஆயுத பலமாக இருந்த குடியேறிகளிடம் வந்த மனநிலை மாற்றம். அவர்களின் இரண்டாவது தலைமுறைக்கு முந்தைய தலைமுறையின் ’நன்றி உணர்ச்சி’ இல்லை. அவர்களைக்  குடியேற அனுமதித்த இடதுசாரிகளிடம் அவர்களுக்குக் கடப்பாடு ஏதும் இல்லை. அவர்கள் வேரூன்றி விட்டார்கள். ஆகவே அடுத்த கட்ட உரிமைக் குரல் எழுந்தது. இம்முறை அது மதவெறி சார்ந்தது.

இந்தக் குடியேறிகளிடம் வங்க தேசம் வழியாக வந்த ஜிகாதி அமைப்புகள் மத வெறியை ஊட்டின. அவை முழுக்க இன்று உள்நாட்டுத் தீவிரவாதத்தின் விளைநிலங்கள். இயல்பாகவே வங்க தேச பிராமண நிலச்சுவான்தார்கள் இதைக் கண்டு அஞ்சினார்கள். அவர்கள் பிரிவினையின் ரத்தத்தை அறிந்தவர்கள். ஆகவே குடியேறிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் வங்கம் முழுக்க மோதல்கள் உருவாயின.

சீனப் பின்புல ஆதரவுடன் வட கிழக்கில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக மாவோயிசம் கொஞ்சம், கொஞ்சமாக வங்கத்தில் செலுத்தப் பட்டது. வங்கத்தில் தலித் பகுதிகளில் எப்போதுமே நக்சலைட் அரசியல் உண்டு. அது மீண்டும் வளர்த்தெடுக்கப் பட்டது.  எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் மாவோயிஸ்டுகள் வங்க தேசக் குடியேறிகளின் மதவாத அரசியலுடன் கைகோர்த்துக் கொண்டனர்.

இந்தப் புதிய அரசியல் நகர்வு,திருணமூல் காங்கிரஸை உற்சாகம் கொள்ளச் செய்தது. அது முழுக்க, முழுக்க ஒரு நகர்ப்புற வணிகர் கட்சி.  அது கிராமத்துக்குள் ஊடுருவ இடதுசாரி நிலக் கிழார்கள் அனுமதித்ததே இல்லை. இப்போது இடதுசாரிகளின் கையில் இருந்த  குடியேறிகளின் குண்டர் படைத் தரப்பு மாறுவதைத் திருணமூல் காங்கிரஸார் கண்டார்கள். அவர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஆக, மார்க்ஸிஸ்ட் நிலப் பிரபுத்துவத்துக்கு எதிராக ஒரு பெருங்கூட்டணி உருவானது.

சிறந்த உதாரணம், நந்தி கிராமம். அங்கே 60 சதவீதம்பேர் குடியேற்ற முஸ்லீம்கள். ஆனால் நில உடைமையாளர்கள் இடதுசாரிகளான பிராமணர்கள். ஓரு ரசாயன ஆலைக்கான நிலம் கையகப் படுத்தப் படுவதற்கு எதிராக எழுந்த பிரச்சினையை ஜமாயத் உலமா இ ஹிண்ட் என்ற [வங்க தேசத்தை மையமாக்கிய] இஸ்லாமிய தீவிரவாத அமைப்பும், மாவோயிஸ்டுகளும் சேர்ந்து கிளர்ச்சியாக ஆக்கினார்கள்.’ நந்தி கிராமம் ’விடுவிக்க’ப் பட்டது. அங்கே வாழ்ந்த மார்க்ஸிய நிலப்பிரபுக்கள் கொன்றே ஒழிக்கப் பட்டார்கள். பிறர் அடித்துத் துரத்தப் பட்டார்கள். அதை மார்க்ஸிய அராஜகத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி என்று சித்தரிக்க நம்முடைய ஊடகங்கள் சிரத்தை எடுத்துக் கொண்டன.

இப்போது திருணமூல் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி என்பது மாவோயிஸ்டுகளுடனும், இஸ்லாமிய அடிப்படைவாதக் குடியேறிகளுடனும் செய்து கொண்ட சமரசத்தின் விளைவே. இன்று வரை மார்க்ஸிய ஆதிக்கத்தை நிலை நாட்டி வந்த குண்டர் படை இப்போது இந்த அம்மாளின் கைக்கு வந்து விட்டிருக்கிறது. எந்த நிர்வாகத் திறனும் இல்லாத, வறட்டுப் பிடிவாதமும் நிலையற்ற புத்தியும்கொண்ட, சந்தர்ப்பவாதியான மம்தா மேற்கு வங்கத்தை மேலும் இருளுக்குக் கொண்டு செல்லவே வாய்ப்பு.

*

மரிச்சபி, நந்தி கிராமம் இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுக் கொண்டு என்ன நிகழ்ந்திருக்கிறது எனப் புரிந்துக் கொள்ளலாம். மரிச்சபி என்பது மேற்கு வங்காளத்தில் சுந்தரவனக் காடுகளில் உள்ள ஒரு ஆற்றிடைக்குறை நிலம். அங்கே தான் இந்திய வரலாற்றின் ஆகப்பெரிய தலித் படுகொலை,இந்திய கம்யூனிஸ்டு[மார்க்ஸிஸ்ட்] கட்சித் தொண்டர்களால் செய்யப் பட்டது.

அந்த வரலாறு இது தான். 1971ல் இந்திய பாகிஸ்தான் போரின் போது ஏராளமான அகதிகள் இந்தியாவுக்கு வங்காள தேசத்தில் இருந்து வந்தார்கள். அவர்களில் கணிசமானவர்கள் தலித்துக்கள். அவர்கள் தேசப் பிரிவினையின் போது கிழக்கு வங்கத்தில் தங்க நேர்ந்தது,ஒரு சோகமான விதி விளையாட்டு. வங்காளம் தீவிரமான தலித் எழுச்சியை 1920களிலேயே உருவாக்கிக் கொண்ட நிலம். நாம சூத்திரர்கள் என அழைக்கப் பட்ட தலித்துக்கள், வலுவான ஓர் அரசியல் அமைப்பாகத் திரண்டார்கள். அவர்களின் தலைவர்,ஜோகேந்திரநாத் மண்டல்.

இந்திய சுதந்திரப் போரின் அரசியல் சதுரங்கத்தில் ஜோகேந்திரநாத் மண்டல்  ஒரு நிலைப்பாடு எடுத்தார். வங்காளத்தின் நிலப்பிரபுக்கள் பிராமணர்களும், காயஸ்தர்களும்தான். முஸ்லீம்கள் நிலத்தில் வேலை செய்பவர்கள். தலித்துக்கள், நில அடிமைகள். ஆகவே நிலப்பிரபுக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் சேர்ந்து கொண்டார் ஜோகேந்திரநாத் மண்டல்.   முஸ்லீம் லீக் தலைவராக ஆனார். தேசப் பிரிவினையின் போது கிழக்குப் பாகிஸ்தானிலேயே இருந்தார். அங்கே சட்ட அமைச்சராகவும் பணியாற்றினார். அவரை நம்பி நாமசூத்திரர்கள் பெரும்பாலும் கிழக்குப் பாகிஸ்தானிலேயே இருந்தார்கள்.

ஆனால் மெல்ல, மெல்ல நாம சூத்திரர்கள் முஸ்லீம் பெரும்பான்மையின் தாக்குதலுக்கு ஆளானார்கள். கூட்டம் கூட்டமாகக் கொல்லப் பட்டார்கள். அதைப் பலமுறை முறையிட்டும் ஏதும் நடக்காததனால் மனமுடைந்து தன் குமுறலைக் கடிதமாக எழுதி அறிவித்து விட்டு இந்தியா வந்தார் ஜோகேந்திரநாத் மண்டல் . இங்கே அரசியல் அனாதையாகக் குற்றவுணர்ச்சியுடன் வாழ்ந்து மறைந்தார். கைவிடப் பட்ட நாம சூத்திரர்கள்,அங்கே சிறுகச் சிறுக அழிக்கப் பட்டார்கள். பலநூறு கலவரங்கள் மூலம் அச்சுறுத்தப் பட்டுத் தோட்டிகளாக மட்டுமே வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

கிழக்கு வங்கத்தில் 1971இல் உருவான   கலவரங்களில் அதிகளவில் கொல்லப் பட்டவர்கள் அவர்களே. அவர்களே அதிகளவில் அகதிகளாக வந்தார்கள். அவர்களை அன்றைய காங்கிரஸ் அரசு,பீகாரில் தண்ட காருண்யப் பகுதியில் குடியேற்றியது. 1973-75ல் தண்டகாருண்யம் பெரும் வறட்சியால் தவித்தது. பிழைப்புக்கு வழியில்லை. 1977ல் ஜோதிபாசு அரசு ஆட்சிக்கு வந்த போது எழுப்பப்பட்ட ‘வங்காளிகள் அனைவருக்கும் வங்களம் சொந்தம்’ என்ற கோரிக்கையால் கவரப் பட்டு அந்த தலித் மக்கள் சுந்தரவனக்காடுகளில் உள்ள சதுப்புகளுக்குக் குடியேறினார்கள். மரிச்சபி அதில் ஒன்று.

இந்த நிலப் பகுதிகள் நாற்பத்தேழு கால கட்டத்தில்  கிழக்கு வங்கத்தில் இருந்து வந்த பெரும்பாலும்  பிராமண நிலக்கிழார்களான அகதிகளால் சொந்தம் கொண்டாடப் பட்டவை. அவர்கள் நிலக்கிழார்களாக இருந்தார்கள். அவர்கள் அந்நிலத்தைத் தங்கள் குண்டர் படையான புதிய  வங்கதேச அகதிகளுக்குக் கொடுக்க விரும்பினார்கள்.  தலித் மக்கள் காங்கிரஸின் வாக்காளர்கள். இடதுசாரிகளுக்கு எதிரானவர்கள். ஆகவே அந்த தலித் மக்களை சுந்தரவனக்காடுகளில் இருந்து துரத்தினார்கள் இடதுசாரிகள். மரிச்சபி அதில் முக்கியமான நிகழ்வு

மரிச்சபியில் முப்பதாயிரம் தலித் மக்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லப் படுகிறது. அவர்கள் அங்கே வளமான வெற்றிலைத் தோட்டங்களை உருவாக்கியிருந்தார்கள். இடதுசாரிகளின் நெருக்கடிகளை அந்த மக்கள் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நின்றார்கள். நக்சலைட்டுகள் அவர்களுக்குத் தலைமை தாங்கியதாகச் சொல்லப் படுகிறது – ஆதாரம் இல்லை. 1978 ஆகஸ்ட் இருபதாம் தேதி மாலையில் முப்பது நீராவிப்படகுகளில் இடதுசாரி நிலப் பிரபுக்களும், அவர்களின் அடியாட்களும் மரிச்சபிக்குள் நுழைந்தார்கள். துணைக்குப் போலீஸ் படையும் இருந்தது.

ஒரு முழு நாள் தொடர்ந்து தாக்குதல் நிகழ்ந்தது.  எட்டாயிரம் குடிசைகள் எரிக்கப் பட்டன. நூற்றுக்கும் மேலான படகுகள் நொறுக்கப் பட்டன. வயல்கள் அழிக்கப் பட்டன. குறைந்தபட்சம் நானூறு பேர் கொலை செய்யப்பட்டார்கள். பல ஆயிரம் பேர் அனாதைகளாக இடம் பெயர்ந்து காணாமலானார்கள். மரிச்சபி காலி செய்யப்பட்டது. மரிச்சபி நிகழ்வு, ஊடகக் கவனத்திற்கு வராமல் தடுக்கப் பட்டது. ஒருசில செய்திகள் வந்தபோது அவை ஆதாரமற்றவை என மறுக்கப் பட்டன. ஜோதிபாசு,அந்த மக்கள் முழுக்க முழுக்க வங்க தேச ஊடுருவலாளர்கள் என்று விளக்கம் கொடுத்தார். பின்னர் மரிச்சபியின் நிலம் முழுக்கக் கொஞ்சம், கொஞ்சமாக மார்க்ஸியக் கட்சி ஆதரவாளர்களான வங்க தேசக் குடியேறிகளுக்கு வழங்கப் பட்டது.

இவ்வாறு வழங்கப் பட்ட எல்லையோர நிலம், மொத்த மேற்கு வங்காள விளைநிலத்தில் கால்பங்குக்கு மேல் இருக்கும் என சொல்லப் படுகிறது. இந்த சலுகைக்கான நன்றிக் கடனாகவே இஸ்லாமிய குடியேறிகள் மார்க்ஸியர்களை அதிகாரத்தில் வைத்திருந்தார்கள்.

இதற்கு நேர் எதிரான நிகழ்வு நந்தி கிராமம். அங்கே வாழ்பவர்கள் வங்க தேச சட்ட விரோதக் குடியேறிகள். மார்க்ஸியர்களால் அங்கே குடியேற்றப் பட்டவர்கள். அவர்கள்  மார்க்ஸியர்களுக்கு எதிராகத் திரும்பி தலித் மக்களைத் தலைமை தாங்கிய மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு மார்க்ஸியர்களை அங்கிருந்து விரட்டி அடித்தார்கள். இந்த இரு நிகழ்வுகளுக்கு இடையேயான பரிணாமமே வங்க அரசியல் என்றால் மிகையல்ல.

*

நான் கல்கத்தா தலித்துக்களைப் பற்றிச் சொன்னது இந்த விரிவான பின்னணியிலேயே.

கல்கத்தாவின் சமகால அவலம் என்பது வழக்கமாக இந்திய நகரங்களின் அவலம் அல்ல. எல்லா இந்திய நகரங்களும் நகர்ப்புறச் சேரிகளால் நிறைந்துள்ளன என்பது உண்மை. காரணம் இந்தியாவில் வேலை வாய்ப்பு, நகரங்களில்தான். ஒரு கிராமத்தில் இரண்டு நாவிதர் இருந்தால் ஒருவர் நகரத்துக்குத்தான் சென்றாக வேண்டும். வேளாண்மையில் வேலை வாய்ப்புகள் குறையக் குறைய மக்கள் நகரங்களுக்குத் தொழில் தேடச் செல்வது இயல்பே. அவர்களில் கணிசமானவர்கள் தலித்தாகவே இருப்பார்கள். காரணம் அவர்களே நிலமற்றவர்கள். சென்னையும் அப்படித்தான்.

மும்பையிலும் சரி, சென்னையிலும் சரி, இந்த நகர்ப்புறச் சேரிகளின் பிரச்சினை – முக்கியமாக – இடம்தான். அதை ஒட்டிய சுகாதாரச் சிக்கல்கள் உண்டு. ஆனால் அதே சமயம் அங்கே கிராமப்புறச் சேரிகளில் உள்ள கொடுமையான வறுமை இருப்பதில்லை. நான் தாராவியில் வாழ்ந்திருக்கிறேன். சென்னை குடிசைப் பகுதியிலும் இருந்திருக்கிறேன். அங்குள்ள சிக்கல்கள் வேறு. கடுமையான வாழ்க்கைச் சூழல் இருந்தாலும் அங்கே நிராதரவான வறுமை இல்லை. மேலும் மிக, மிக அசிங்கமான லக்னோ போன்ற நகரங்களிலேயே தெருவில் வாழ்பவர்களின் சதவீதம் குறைவுதான்.

அதுவல்ல கல்கத்தா. அங்கே லட்சக்கணக்கில் மக்கள் தெருவிலேயே வாழ்கிறார்கள்.  எந்த ஒரு தொழிலும் இல்லை.  முழுமையாகவே கைவிடப் பட்ட நிலை.  அன்றாடப் பட்டினி. கல்கத்தா அளவுக்கு வெறும் சுமை தூக்கிகளை, கை ரிக்‌ஷா இழுப்பவர்களை வேறெந்த இந்திய நகரத்திலும் காண முடியாது. மொத்த நகரில் பெரும்பகுதி இடிந்து சரிந்து கைவிடப்பட்ட கட்டிடங்கள். வருடக் கணக்காக அள்ளப் படாத குப்பை மேடுகள். எந்தத் தொழில் வாய்ப்பும் இல்லாத நிலை. மையத் தெருக்களிலேயே திறந்த வெளியில் வாழும் பல லட்சம் மக்கள். ஆகவே தான் மொத்தக் கல்கத்தாவே ஒரு பெரும் சேரியாக உள்ளது என்றேன்.

ஒரு சிறு உதாரணம் மட்டும் சொல்கிறேன். இன்றும்கூட மக்கள் மும்பைக்குப் பிழைப்புத் தேடிச் செல்கிறார்கள். அங்கே பிழைப்பு இருக்கிறது. ஆனால் கல்கத்தா என்ற பெருநகரில் இருந்து மக்கள் கூலி வேலை தேடி இங்கே  வருகிறார்கள். பல்லாவரம் கற்குவாரிகள் முதல் மார்த்தாண்டம் செங்கற்சூளைகள் வரை தினசரி நூறு ரூபாய்க்கு வேலை செய்பவர்கள் கல்கத்தா நகரில் இருந்து இங்கே வந்த வங்காளிகள். அந்த வேறுபாட்டையே நான் சுட்டிக் காட்டுகிறேன்.

கல்கத்தாவின் இன்றைய அவலத்துக்குக் காரணம் ,எப்படி கிராமப்புறத்தில் இடதுசாரிகள் என்ற பேரில் நிலப்பிரபுத்துவ குண்டர் படையை உருவாக்கி நிலை நாட்டினார்களோ அப்படியே நகரங்களில் தொழிற் சங்க குண்டர் படையை உருவாக்கித் தொழில்களை முழுக்க அவர்களின் ஆதிக்கத்துக்கு விட்டுக் கொடுத்தார்கள் என்பதே. தொழிலும், வணிகமும் நசித்துக் கல்கத்தா அழிந்தபோது இந்தக் கும்பல் மட்டும் கொழுத்துச் செழித்தது.

இந்தச் சீரழிவின் முதல் பலியாடுகள் தலித்துக்கள் என்பதே நான் என் கட்டுரையில் சுட்டிக் காட்டுவது. மாபெரும் மானுட அவலம் எப்படி நிகழ்ந்தது , அதற்கான பொறுப்பை யார் ஏற்பது என்பதே என் வினா. அதற்கான முழு முதல் பொறுப்பும் இடதுசாரிகளுக்கே. இந்தியா முழுக்கக் கடந்த ஐம்பதாண்டுகளில் மெல்ல, மெல்ல நிலப் பிரபுத்துவம் இல்லாமலாயிற்று. அதுவே தலித்துக்களின் விடுதலையை உருவாக்கியது. ஆனால் மேற்கு வங்கம், கிராமங்களை நிலப் பிரபுத்துவத்திலேயே மூழ்கடித்து வைத்திருந்தது. கிராமப்புற சேரிகளில் இருந்து தப்பி நகர்ப்புறச் சேரிகளில் அவர்கள் வாழ வேண்டிய நிலை அவர்களுக்கு உருவாயிற்று.

அந்த சுடும் உண்மையைத் தான் அந்தச் சொற்றொடரில் நான் சொல்லியிருக்கிறேன்.  ‘கிராமங்களில் நில உடைமைச் சமூக அமைப்பு இடதுசாரிப் பௌடர் பூச்சுடன் அப்படியே பேணப் பட்டமையால் தலித்துக்கள் கூட்டம், கூட்டமாகக் கிளம்பி அவர்களுக்கு இருக்கும் ஒரே பெருநகரமான கல்கத்தாவை நிரப்பி அதை மாபெரும் சேரியாக ஆக்கி விட்டார்கள்’ என்று

அந்த அப்பட்டமான உண்மையை எதிர் கொள்ள முடியாமல், அதில் உள்ள ஆதிக்க அரசியலில் பங்கு வகிக்கும் ஒரு தந்திர மனத்தால் இந்தத் திரிபு செய்யப்படுகிறது. கால் நூற்றாண்டுக் காலம் தலித் மக்களின் குருதியைக் குடித்து வாழ்ந்த ஒரு தரப்பு, அந்த ஆதிக்கத்தை நியாயப்படுத்தும் பொருட்டு உருவாக்கும் மாய் மாலம் இது.

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மார்க்ஸ் கண்ட இந்தியா

அன்புள்ள ஜெமோ

நீலகண்டன் அரவிந்தன் தமிழ்ப்பேப்பரில் எழுதிவரும் கட்டுரைத்தொடரை சுட்டிக்காட்டியிருந்தீர்கள் .இப்போதைக்கு தினமும் எழுதுபவர்கள் அவரும் நீங்களும்தான் போல் இருக்கிறது. அவரது பத்தியை இந்துத்துவா என்று சொல்லி இணையம் முழுக்க வசைபாடுகிறார்கள். ஆனால் அறிவியல் மற்றும் சமூக விஷயங்களை ஏராளமான ஆதாரங்களுடன் எழுதுகிறார் என்றே நினைக்கிறேன். அவரது எண்ணங்கள் நிறைய எனக்கு ஒத்துக்க கூடியவையாக இல்லை. ஆனால் மறுதரப்பாக யாராவது பொருட்படுத்தும்படி எழுதுகிறார்களா என்று தேடினால் வசைகள்தான் காணக்கிடைக்கின்றன.

அதில் இந்தவரியை பார்த்தேன். [ http://www.tamilpaper.net/paper/?cat=11]


’இங்கிலாந்தின் குற்றங்கள் என்னவாக இருந்தாலும் வரலாற்றின் கையில் உணர்வற்ற கருவியாக (இந்துஸ்தானில்) ஒரு சமுதாயப் புரட்சியைக் கொண்டு வருகிறாள்.’

‘காட்டுமிராண்டித்தனம் கொண்ட இயற்கை வழிபாடு, அதன் சீரழிந்த தன்மை எப்படி வெளிப்படுகிறதென்றால், மனிதன் – இயற்கை அனைத்துக்கும் அரசனான அவன், ஹனுமான் என்கிற குரங்கின் முன்னரும் சபாலா என்கிற பசுவின் முன்னரும் மண்டியிடுவதில்.’

உண்மையிலேயே மார்க்ஸ் சொன்ன கருத்துதானா இது? இல்லாவிட்டால் திரிக்கிறாரா? இல்லை ஒரு பெரிய விவாதத்தின் ஒரு அம்சமாக இதை போகிற போக்கிலே சொன்னாரா?

சத்யநாராயணன், சென்னை

அன்புள்ள சத்யநாராயணன்,

மார்க்ஸின் அந்த மேற்கோள் சரியானதுதான். மிக விரிவாக இன்னமும் தீவிரமாக அவர் சொன்ன விஷயங்களை சரியாக பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய வரிகள்தான் அவை.[போகிற போக்கைப்பார்த்தால் மார்க்ஸை மேற்கோள் காட்டினாலே இந்துத்துவா முத்திரை வந்துவிடும்போல படுகிறது!]

மார்க்ஸியம்போன்ற ஒரு தரிசனத்தை நாம் பல கூறுகளாகப் பிரித்து பார்க்கவேண்டும். அதன் மெய்யியல், தத்துவம், சமூகநோக்கு, அழகியல், அரசியல்திட்டம் ஆகியவற்றை அவ்வாறு பிரித்து ஆராய்வோமென்றால் அதன் மெய்யியல் என்பது ஒரு ஆயிரம் வருடம் பழைய செமிட்டிக் மதத்தின் அளவேயானது என்று சொல்ல முடியும். செமிட்டிக் மதங்களின் நான்கு அடிப்படைகள் மார்க்ஸியத்துக்கும் உண்டு.

1. மனிதமையப் பார்வை. 
இயற்கை அனைத்துக்கும் அரசன் மனிதன் என்ற மார்க்ஸின் வரி அதையே சுட்டுகிறது. இயற்கையின் பரிணாமத்தின் உச்சம் மனிதனே என்றும் மனிதனை வந்தடையவே இயற்கையில் பரிணாமமே நிகழ்ந்திருக்கக்கூடும் என்றும் மார்க்ஸியம் நம்புகிறது. அந்த பரிணாமத்தையும் மனித உழைப்பே நிகழ்த்தியது என்று அது வாதிடுகிறது.

இது கடவுள் தன் வடிவில் மனிதனைப்படைத்தான் என்ற செமிட்டிக் மதங்களின் வரியில் இருந்து வேறுபட்டது அல்ல. கீழைமதங்கள் பிரபஞ்ச மைய நோக்கு கொண்டவை. பிரபஞ்சம் என்ற பிரம்மாண முழுமையின் ஒரு துளியே மனிதன் என அவை நினைக்கின்றன

2. இருமைநோக்கு. 
அனைத்தையும் கறுப்பு வெளுப்பு என முழுமையாக பிரித்துக்கொள்ளும் பார்வை என அதைச் சொல்லலாம். எல்லா ஆதி நம்பிக்கைகளும் இருமையையே முதலில் கண்டடையும். ஆனால் தத்துவசிந்தனையும் மெய்ஞானமும் அந்த இருமை என்பது தற்காலிகமானது, நம் அறிதல் மற்றும் இருப்பை மட்டுமே சார்ந்தது, மாயையானது என்று அறிந்து மேலே செல்லும். அந்தப் பயணத்தை இந்து,பௌத்த மதங்களில் காணலாம்.

3. ஒற்றை மையம் 
நோக்கி செல்லும் நோக்கு. இந்நோக்குதான் ஒரே கடவுள், ஒரே தீர்க்கதரிசனம், ஒரே தீர்வு என்றெல்லாம் வளர்கிறது. ஐரோப்பிய பாகன் மதங்களிலும் கீழைமதங்களிலும் பன்மையை மையமாக்கும்போக்கை காணலாம்.

4. ஒட்டுமொத்தமான இறுதி உண்மை,
 இறுதித் திருப்புமுனை பற்றிய நம்பிக்கை. அதாவது ஒரு நியாயத்தீர்ப்பு நாள் வரும் என்ற நம்பிக்கை. ஒரு முழுமையான இறுதி மாற்றம் அதாவது புரட்சி வரும் என்ற மார்க்ஸிய நம்பிக்கை அதில் இருந்து உதித்ததே. தத்துவ அடிப்படை கொண்ட கீழை மதங்கள் அப்படி ஒரு ஒற்றைப்புள்ளி நோக்கி வாழ்க்கையை கொண்டுசெல்ல முயல்வதில்லை. வாழ்க்கையை அவை ஒரு முடிவில்லாத சுழற்சி [பவ சக்கரம்] என்றே உருவகிக்கின்றன.

மார்க்ஸியத்தின் சாரத்தில் மனிதமையவாதமும், எளிமையாகத் திரிக்கப்பட்ட பத்தொன்பதாம்நூற்றாண்டுப் பரிணாமவாதமும், வரலாற்றை விருப்பப்படி கட்டமைத்துக்கொள்ளும் வரலாற்றுவாதமும் உள்ளது. அதில் இருந்தே மார்க்ஸிய நம்பிக்கைகள் பல உருவாகின்றன. சிக்கலாகச் சொல்வதன் வழியாகவே மிக எளிமையான நம்பிக்கைகளுக்கு ஓர் அறிவார்ந்த கனத்தை கொடுப்பதை மார்க்ஸ் பதினெட்டாம்நூற்றாண்டு ஜெர்மனிய தத்துவசிந்தனையாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். அதை மார்க்ஸியர்களும் கடைப்பிடிக்கிறார்கள். அந்த சொற்சிக்கல்களை எளிமையாக்கி புரிந்துகொண்டோமென்றால் மார்க்ஸியம் பலசமயம் பெந்தெகொஸ்தே கிறித்தவம் போல ஒலிக்கும்.

மார்க்ஸியம் மனிதவரலாற்றைப்பற்றிச் சொல்வதை இப்படி தொகுத்துக்கொள்ளலாம். மனிதனே இந்த பூமியின் அதிபன். ஏனென்றால் அவன் பரிணாமத்தின் உச்சம். பல லட்சம் வருடங்களாக இயற்கையில் பரிணாமம் நிகழ்ந்து அதன் விளைவாக மனிதன் உருவாகியிருப்பது பரிணாமத்தின் நோக்கமே அவன்ந்தான் என்பதற்கான ஆதாரம். இதுதான் அவர்களின் மனித மையவாதம்.

மனித வரலாற்றிலும் அதே பரிணாமவாதத்தை போட்டுப்பார்க்க முடியும். மனித இனங்கள் படிப்படியாக பண்பாட்டு ரீதியாகவும் பரிணாமம் அடைந்து வருகின்றன. மனிதனின் பிரக்ஞையும் சிந்தனையும் அழகுணர்ச்சியும் எல்லாமே அவ்வாறு பரிணாமம் மூலம் உருவானவைதான். பழங்குடிகள் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு பரிணாமம் அடைகிறார்கள். நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவம். அதில் இருந்து கம்யூனிசம். இந்த பரிணாமகதியில் உருவானவையே இனக்குழுகக்ள், அரசாங்கம், குடும்பம் போன்ற எல்லா அமைப்புகளும். இது மார்க்ஸியத்தின் முதிரா பரிணாமவாதம்.

இந்தப்பரிணாமம் இயற்கைக்கு வெளியே உள்ள எந்த ஆற்றலாலும் நிகழ்த்தப்படுவதில்லை. இயற்கையில் உள்ள பொருண்மையான சக்திகள் தங்களுக்குள் முரண்பட்டு மோதிக்கொள்ளும் முரணியக்கம் வழியாக நிகழ்கிறது. வரலாறெங்கும் நிகழ்ந்துள்ள மோதல்கள் எல்லாமே இந்த முரணியக்கத்தையே காட்டுகின்றன. இவ்வாறு வரலாறு முன்னகர்ந்து வளர்ந்து பரிணாமம் அடைவதை வரலாற்றை ஆராய்ந்தால் காணலாம். இவ்வாறு வளர்ந்து செல்லும் வரலாற்றுக்கு ஒரே திசைதான் இருக்க முடியும். இதுவரை வந்த திசையை வைத்து இனிமேல் போகும் திசையை கணிக்கலாம். இனிமேல் அது போகும் திசை கம்யூனிச அமைப்புதான். இது அவர்களின் வரலாற்று வாதம்.

இந்த விளக்கம் இயல்பாக அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்லும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். மனிதனின் ’பரிணாமத்தில்’ உச்சத்தில் இருப்பது முதலாளித்துவம் நிகழ்ந்துவிட்ட பகுதியான ஐரோப்பா. ஆகவே ஐரோப்பிய மனிதன் பரிணாமத்தில் முதலாளித்துவம் நிகழாத ஆசியர்களை விட பலபடிகள் மேலே நிற்பவன். ஜெர்மனியரான மார்க்ஸ் ஜெர்மனியே ஐரோப்பாவின் உச்சம் என்றும், அங்கேதான் முதலில் புரட்சி வந்து கம்யூனிசம் வரும் என்றும் நம்பினார். ஆக அவரது நோக்கில் அவர் நின்றது பரிணாமத்தின் உச்சத்தின் உச்சிப்புள்ளியில். நாம் நின்றது பல படிகள் கீழே.

எவ்வளவு கீழே? மார்க்ஸ் ஆசிய உற்பத்திமுறை [Asiatic mode of production (AMP)] என ஒன்றைப்பற்றி பேசியிருக்கிறார். இதைப்பற்றி விரிவான விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பெரும்பாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்தினரின் குறிப்புகளை அப்படியே நம்பி மார்க்ஸ் இந்தியச்சூழலைப்பற்றிய முடிவுகளுக்கு வந்தார். அதன்படி அவரது கருத்தில் இந்தியாவில் நிலப்பிரபுத்துவமே கூட வரவில்லை. இந்தியா இருந்தது அதற்கும் பிற்பட்ட நிலையில்! இந்திய மக்களில் மிகப்பெரும்பகுதியினர் பழங்குடிகளாகவே இருந்தனர் என்கிறார் மார்க்ஸ்.

அப்படியானால் எப்படி இந்தியாவில் அரசுகளும் மதங்களும், சிந்தனைகளும், கலைகளும் உருவாயின? அதை விளக்கவெ அவர் ஆசிய உற்பத்தி முறை என்ற கருதுகோளை உருவாக்கினார். அதன்படி பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வரும்போது இங்கே இருந்தவை விவசாயம், மேய்ச்சல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த மக்கள் வாழ்ந்த கிராமங்கள். இங்கே மிகச்சிறிய அளவில் தேவைக்கு ஏற்ப மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. கிராமங்கள் வணிகத்தாலும் அரசியல் தொடர்புகளாலும் பிணைக்கப்படவில்லை. ஆகவே அவை தனித்தீவுகள் போல பற்பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியில்லாமல் உறைந்து கிடந்தன்.

இந்த கிராமங்களை சிறிய படைகள் வழியாக கொள்ளையடித்து நிதியை சேர்த்துக்கொள்ளும் சிறிய அதிகாரக்குழுக்கள் இருந்தன. இவர்கள் சிறு நகரங்களை உருவாக்கிக்கொண்டார்கள். இந்நகரங்களிலேயே மதங்களும் கலைகளும் இலக்கியங்களும் உருவாயின. இப்படி தேங்கி கிடந்த இந்தியாவில்தான் பிரிட்டிஷ் ஆட்சி வந்தது. அவர்கள் இந்திய கிராமங்களை வணிகம் மூலமும் ஆட்சி மூலமும் இணைத்தார்கள். அவர்கள் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை கொண்டுவந்தார்கள். ஆகவே அவர்கள் இந்தியாவை முன்னேற்றிய சக்திகள்! – இதுதான் மார்க்ஸ் சொன்னது.

உங்களுக்கு கொஞ்சமாவது தமிழக வரலாறு தெரிந்திருந்தால் ’இது என்ன பேத்தல்!’ என்று கூவிவிடுவீர்கள். இங்கே இருந்த மாபெரும் ஏரிகளையும் பாசனநிர்வாகத்தையும் பற்றி அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவரால் எழுதப்பட்டது என்பீர்கள். ஆனால் இந்த ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்து மார்க்ஸ் சொன்னது என்பதனாலேயே முடிவான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டு ஐம்பதாண்டுக்காலம் இந்திய வரலாறும் இந்தியப்பண்பாடும் அதன் அடிப்படையில் நம் மார்க்ஸியர்களால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

இன்று நூற்றுக்கணக்கான ஆய்வுகள் வந்துவிட்டன. பழைய இந்திய பொருளியல் அமைப்பு பற்றியும் , நிதி நிர்வாகம் பற்றியும் நீங்கள் வாசிகக் ஆரம்பித்தால் மலைமலையாக இருக்கின்றன நூல்கள். இங்கிருந்த கிராமப்பொருளியல் அமைப்பு பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்தும்கூட சிதையாமல் இருந்தது என்பது வரலாறு. அவற்றில் பஞ்சம்தாங்கும் சமூகஅமைப்புகள் இருந்தன. பிரிட்டிஷாரின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான சுரண்டல் மூலமே கிராமப்பொருளியல் அழிந்தது. பெரும் பஞ்சங்கள் வந்தன. அந்தப் பஞ்சங்களைப் பயன்படுத்தி இந்திய மக்களை அடிமைகளாக உலகமெங்கும் கொண்டுசென்று தோட்டத்தொழிலை உருவாக்கினர் பிரிட்டிஷார்.

இங்கிருந்தது மேலை நிலப்பிரபுத்துவம் அல்ல. அந்த நிலப்பிரபுத்துவம் என்பது விவசாயிகளை முழுமையாக அடிமைகளாக வைத்திருந்து நிலப்பிரபுக்கள் மொத்த உபரியையும் சுரண்டி கொழுத்த அமைப்பு. இங்கிருந்தது சுதந்திர விவசாயிகளினாலான கிராம சமூகங்களின் கூட்டமைப்பு. இன்றும்கூட அந்த அமைப்புகள் நீடிக்கின்றன -சினிமாவில்கூட கேட்கிறோமே பதினெட்டுபட்டி என்று.

அது ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தை விட பல மடங்கு பண்பட்டது. சீரான உபரிசேமிப்பு முறை கொண்டது. ஆகவே மேலான பண்பாட்டை உருவாக்கி நிலைநிறுத்தியது. நாமே கண்கூடாக பார்க்கக் கூடிய விஷயம், ஒரு சராசரி இந்தியக் கிராமம் என்பது வெறும் அடிமைகளின் தேங்கிப்போன முகாம் அல்ல. அதில் கல்விக்கு, கலைகளுக்கு, மதத்துக்கு, பொதுக்கொண்டாட்டங்களுக்கு எல்லாம் இடமிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிராம அமைப்பு நொறுங்கும் வரை இலக்கியம், கலைகள், மருத்துவம், கைத்தொழில்கள், கோயில்சடங்குகள் அனைத்தையுமே கிராமசமூகம் மிக வெற்றிகரமாகப் பேணி வந்தது. இன்று பல்லாயிரம் ஆவணங்கள் மூலம் இதெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆக, மார்க்ஸ் கண்ட இந்தியா அவர் கற்பனைசெய்துகொண்ட ஒன்று. அவரது சொந்த சமூகப்பரிணாமவியலின்படி அவரும் அவரது சமூகமும் வளர்ந்து பரிணாமத்தின் உச்சியில் நின்றார்கள். மேலே செல்ல முயன்றுகொண்டிருந்தார்கள். கீழே குனிந்து நம்மை பார்த்தார் மார்க்ஸ். அவரது காலகட்டத்தில் கணிசமான ஐரோப்பிய சிந்தனையாளர்களிடம் இந்த ஐரோப்பியமைய நோக்கு இருந்தது. இப்போதும்கூட ஏராளமான சிந்தனையாளர்களிடம் அது இருக்கிறது. ஐரோப்பாவே உலகை வழிநடத்தும் என்ற எண்ணம்.

என்ன சிக்கல் என்றால் நாம் அதை அப்படியே நம்பி நம் விசுவாசத்தைக் கொடுப்பதே. சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் இங்கே மார்க்ஸ் மேற்கோள்தான் காட்டப்ப்பட்டிருக்கிறார்– ஆராயப்படவில்லை. விதிவிலக்காக மிகமிகச் சிலரையே நம்மால் சுட்டிக்காட்ட முடியும். ஓர் இஸ்லாமியர் குரானையும் கிறித்தவர் பைபிளையும் கொள்வது போலவே நம் மார்க்ஸியர் மூலதனத்தை கொள்கிறார்கள். சராசரி மார்க்ஸியர்க்ளுக்கும் வகாபிகளுக்கும் நம்பிக்கையைப் பொறுத்தவரை பெரிய வேறுபாடேதும் நம்மால் பார்க்கமுடிவதில்லை.

ஒரு நிகழ்ச்சி. மார்க்ஸியத்தை நித்ய சைதன்ய யதியிடம் நடராஜ குரு விவாதிக்கிறார். மனிதனின் கையை ஒரு முக்கியமான குறியீடாக மார்க்ஸ் முன்வைக்கிறார். செயல் மூலம், உழைப்புமூலம் அவனுடைய கை உருவானது என்றும் அதுவே மானுடவரலாறு என்றும் சொல்கிறார். நடராஜகுரு சொல்கிறார் ‘நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கையை முன்வைக்கையில் ஒரு புதிய மதத்தை நிறுவும் உற்சாகம் தெரிகிறது. ஏன் கண்ணை எடுத்துக்கொண்டு அதன் பரிணாமமாக வரலாற்றைப் பார்ப்பதுதானே?’ [குருவும் சீடனும். எனி இண்டியன் வெளியீடு. ப.சாந்தி மொழியாக்கம்]

ஆனால் அரவிந்தன் நீலகண்டனைப்போல நான் மார்க்சை முழுமையாக நிராகரிக்க மாட்டேன். மார்க்ஸை பத்தொன்பதாம்நூற்றாண்டு சிந்தனையாளர்களில் முக்கியமான ஒருவராகவே எண்ணுகிறேன். வரலாற்றை பொருளியல் அடிப்படையில் நோக்கும் பார்வையை அவர் உலகுக்கு அளித்தார். அந்த பார்வை முழுமையானது அல்ல. ஆனால் வரலாற்று நிகழ்ச்சிகளை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள உதவிகரமான கருவி அது. சமூகப்பரிணாமவியலை ஆராய்வதற்கு மார்க்ஸின் வாதங்களை இன்றைய புரிதல்களையும் கணக்கெடுத்துக்கொண்டு பயன்படுத்தலாம்

மார்க்ஸுக்கு அவரது காலகட்டம் சார்ந்தும், அவரது ஐரோப்பியமைய நோக்கு சார்ந்தும், அவரது யூதமதப்பின்னணி சார்ந்தும், அவரது சொந்த காட்சிப்பிழைகள் மற்றும் முன்முடிவுகள் சார்ந்தும் பல எல்லைகள் இருந்தன. அவர் தீர்க்கதரிசியோ ஞானியோ அல்ல. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த முக்கியமான சிந்தனையாளர் மட்டுமே. அந்த குறைபாடுகளை முழுமைசெய்துகொண்டு மார்க்ஸிய சிந்தனைகளை நாம் வரலாற்றையும் சமூகத்தையும் ஆராய பயன்படுத்தலாம். அவரது சிந்தனைகளை நவீன சிந்தனைகளின் ஒட்டுமொத்தப் பரப்பில் வைத்து ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அதற்கு முதலில் அவரை மார்க்ஸியர்களிடமிருந்து மீட்டாக வேண்டும்

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மார்க்ஸியம் இன்று தேவையா?அன்புள்ள ஜெ.எம்,

மீண்டும் அன்பு. உங்கள் கடிதத்தை வாசித்து முடிக்கவே எனக்கு ஒருநாள் ஆகியது. அதற்குள் அந்த கடிதத்துக்கு மூன்று வடிவங்கள் வந்து சேர்ந்து விட்டன. அதில் பாதி எனக்கு இன்னும் புரியாததாகவே இருக்கிறது. நான் இன்னும் மார்க்ஸியத்தின் மீது ஒரு நம்பிக்கை கொண்டவனாகவே இருக்கிறேன். நீங்கள் மார்க்ஸியத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டீர்கள். மார்க்ஸியத்துக்கு இன்று எந்த பயனுமே இல்லையா? அது வரலாற்றுக்குமேல் நிகழ்ந்த ஒரு வன்முறை மட்டும்தான் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா என்ன?

கெ.அன்புராஜ்

அன்புள்ள அன்புராஜ்,

பலநாட்களாகப் பலர் கேட்ட கேள்விகளுக்கான பதில் அது. பல நிலைகளில் பலரிடம் உரையாடியதன் விளைவு. ஆகவே சொல்லிச் சொல்லி முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. அதில் பல கேள்விகள், பல பதில்கள் உள்ளன. அத்தனையையும் ஒரு கட்டுரையாக்கும்போது கட்டுக்கோப்பை உருவாக்க பெரிதும் சிரமப்படவேண்டியிருக்கிறது.

நான் மார்க்ஸியத்தைப் பற்றி கொண்டிருக்கும் எண்ணத்தை முன்னரும் பலமுறை சொல்லியிருக்கிறேன். இங்கே நாம் மார்க்ஸியத்தை அதன் அரசியல்தளப் பிரச்சாரகர்களிடமிருந்து மட்டுமே தெரிந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அன்றாட அரசியல் நடவடிக்கைக்கு ஏற்பவும் அவர்கள் தொடர்ச்சியாக மாற்றி வளைத்து ஒடித்து திரித்துக் கொண்டே இருக்கும் மார்க்ஸியத்தை புரிந்து கொள்வது எளிதல்ல.

இந்த அரசியல்வாதிகளால் செய்யப் பட்டுள்ள முக்கியமான ஒரு திரிபை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்ஸ் முன்வைத்த மார்க்ஸியம், அதற்கு லெனின் அளித்த அரசியல் விளக்கம், அதன் விளைவாக உருவான சோவியத் அரசு உருவாக்கிய ஆட்சியமைப்பின் செயல்பாடுகள் ஆகிய மூன்றையும் சேர்த்து ஒன்றாகவே அவர்கள் நம்மிடம் சொன்னார்கள். அதில் இருந்தே எல்லா சிக்கல்களும் ஆரம்பமாகின்றன.

மார்க்ஸ் சொன்ன மார்க்ஸியம் என்பது ஒரு வரலாற்றுவாதம். அன்றைய சமூகவியல் தரவுகளின் அடிப்படையில் மனித குலத்தின் வரலாற்றை ஒட்டுமொத்தமான நகர்வாக உருவகித்துக்கொண்ட மார்க்ஸ் அந்த வரலாற்றுக்குள் உள்ளுறையாக ஒரு வளர்ச்சிப்போக்கு இருப்பதாக ஊகித்தார். அது பழங்குடி வாழ்க்கையில் இருந்து நிலப்பிரபுத்துவத்துக்கும் அதில் இருந்து முதலாளித்துவத்துக்கும் நகர்கிறது.

முதலாளித்துவத்தின் அன்றைய சிக்கல்களை வைத்து அவர் முதலாளித்துவத்தில் இருந்து அடுத்த கட்டமாக அது கம்யூனிசம் நோக்கிச் செல்லும் என்று ஊகித்தார். நிலப்பிரபுத்துவத்தின் போதாமைகளை தீர்க்கப் பண்ணையடிமைகள் போராடியதன்மூலம் முதலாளித்துவம் வந்தது. முதலாளித்துவத்தின் போதாமைகளைத் தாண்ட தொழிலாளர்கள் போராடி கம்யூனிசம் வரவேண்டும். இதுவே மார்க்ஸ் முன்வைத்த வரலாற்றுவாதம். இதுதான் உண்மையில் மார்க்ஸியம் என்ற சொல்லால் உத்தேசிக்கப்படுகிறது.

விழிப்புணர்ச்சி கொண்ட அரசியல் செயல்பாட்டாளர்கள் தொழிலாளர்களுக்கு அரசியல் உணர்ச்சி ஊட்ட வேண்டும். தொழிலாளர்கள் திரண்டு உற்பத்திச் சக்திகளை கைப்பற்றி, சமூக அமைப்புகளைச் சொந்தமாக்கிக்கொண்டு சமூகத்தைத் தன்வயப்படுத்தவேண்டும். விளைவாக முதலாளித்துவ உற்பத்திமுறை நெருக்கடிக்குள்ளாகும். அது கம்யூனிச அமைப்புக்கு வழிவிடும். அதாவது மாற்றம் தொழிலாளர்களிடம் இருந்து அரசை நோக்கிச் செல்லும்.

லெனின் ருஷ்யாவின் அன்றையநிலைக்கு ஏற்ப ஒரு விளக்கம் அளித்தார். அன்று அரசு பலவீனமானதாக இருந்தது. படைவீரர்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தார்கள். அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவர்கள் விரும்பிய கோஷத்தை எழுப்பிச் சட்டென்று தலைநகரைத் தாக்கி அரசைக் கைப்பற்றினார் லெனின். உற்பத்தி சக்திகளில் உற்பத்தி உறவுகளில் எந்த மாற்றமும் உருவாகவில்லை. தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வியும் அளிக்கப்படவில்லை.

அரசைக் கைப்பற்றியபின் இந்த மாற்றங்களை அரச அதிகாரத்தின் துணையுடன் மேலிருந்து கீழே கொண்டு செல்லலாம் என்றார். அதாவது மார்க்ஸ் சொன்னதற்கு நேர் தலைகீழ். இதுவே லெனினியம். லெனின் செய்தவற்றை மார்க்ஸ் அறிந்தால் கல்லறையில் நெளிவார் என்ற ஃபூக்கோவின் சொற்றொடரின் பின்புலம் இதுவே.

லெனின் காட்டிய வழியில் சர்வாதிகாரம் மூலம் சமூகத்தை வெட்டித்திருத்த ஸ்டாலின் முயன்றார். கோடிக்கணக்கானவர்களைக் கொன்றழித்தார். அவரது முன்மாதிரியைக் கொண்டு உலகம் எங்கும் மார்க்ஸிய சர்வாதிகாரிகள் ராணுவ ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றி விருப்பப்படி சமூகத்தை உருவாக்க முயன்று அழிவை உருவாக்கினார்கள். மாவோ, போல்பாட் முதல் இன்று கொரியாவின் கிம் இல் சுங் வரை

இம்மூன்றும் ஒன்றல்ல. நான் மார்க்ஸிய அரசியல் என்று சொல்வது லெனின் உருவாக்கிய அரசியலை. மார்க்ஸிய அரசமைப்பு என்று சொல்வது ஸ்டாலினும் மாவோவும் போல்பாட்டும் கிம் இல் சுங்கும் உருவாக்கிய அரசுவடிவங்களை. அவை முழுமையாகவே தோற்றுப்போனவை. பேரழிவுகளை உருவாக்கியவை.

நம்மை சிந்திக்கவே விடாமல் இடைவிடாத வசைகள் மற்றும் அவதூறுகள் என வெற்றோசை எழுப்பிக்கொண்டே இருக்கும் நம்மூர் மார்க்ஸியர்களை மீறிச்சென்று இதையெல்லாம் பகுத்து பார்ப்பது சாதாரண வேலை அல்ல. அவர்களுக்கு மார்க்ஸியம் என்பது ஒரு மத நம்பிக்கை . அது ஒரு வகை வெறி மட்டுமே. அதில் சிந்தனைக்கு, வரலாற்று நோக்குக்கும் இடம் இல்லை. ஆனால் நாம் இவற்றைச் செய்தாகவேண்டும்.

ஆக இந்தத் திரிபுகளை தள்ளிவிட்டு பார்த்தால் மார்க்ஸியம் என்பது இன்னொன்று. அதில் மூன்று கூறுகளை நான் காண்கிறேன். ஒன்று, அதன் இலட்சியவாதம். இரண்டு, அதன் தத்துவநோக்கு. மூன்று, அதன் அரசியல்

மானுடர்கள் அனைவரும் இந்தப் பூமியின் செல்வங்கள் மேல் சமமான உரிமைகொண்டவர்கள் என்ற நம்பிக்கையே மார்க்ஸிய இலட்சியவாதத்தின் மையம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும் என்ற அறைகூவல் அதன் வெளிப்பாடுதான். ஒருநாள் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குபவர்கள் என்ற பேதம் இல்லாத சமூகம் அமையும் என்ற கனவு அதன் உச்சம்

மானுட வரலாற்றில் உருவான ஒரு முக்கியமான மெய்யியல்தரிசனமாகவே மார்க்ஸிய இலட்சியவாதத்தை நான் காண்கிறேன். அது பிறந்திருக்கவில்லை என்றால் இன்றைய உலகம் உருவாகியிருக்காது. ஜனநாயகத்தின் உள்ளுறையாக சமத்துவம் அமைந்திருக்காது. இன்றைய நவீன நலம்நாடும் அரசுகள் அனைத்துக்கும் கருத்தியல் தொடக்கம் அதுவே. இன்றைய மக்கள் அமைப்புகள் அனைத்துக்கும் வழியமைத்தது அதுவே.

மார்க்ஸிய தத்துவம் என்பது முரணியக்கப் பொருள்முதல்வாதம். வரலாறு அதன் பொருண்மைச் சக்திகளின் முரணியக்கம் மூலம் முன்னால்செல்கிறது என்ற விளக்கம்,  வரலாற்றின் உள்ளுறையாக மானுடமுன்னேற்றம் என்ற கருத்து உள்ளது என்ற ஹெகலின் தரிசனத்துக்கு இவ்வாறு மார்க்ஸ் ஒரு பொருள்முதல்வாத விளக்கம் அளித்தார்.

இந்தத் தத்துவநோக்குச் சிந்தனைகளை, பண்பாட்டை, சமூக மாற்றங்களை, தொழில்நுட்பத்தை மானுட வரலாற்றின் பரந்த வெளியில் வைத்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதற்கு மிகமிக உதவியானது. வரலாற்றைப் புரிந்துகொள்ள, அதைவிட அதைப் பயன்படுத்திக்கொள்ள, முரணியக்க பொருள்முதல்வாதம் போல உதவியான இன்னொரு தத்துவ நோக்கு இன்று இல்லை.

தொழிலாளர்கள் உற்பத்திசக்திகளைக் கைப்பற்றுவது என்ற மார்க்ஸிய அரசியல் அன்றைய ஐரோப்பிய தொழிற்சூழலை வைத்து மார்க்ஸால் உருவகிக்கப்பட்டது. அதற்கு இன்று எந்த பொருளும் இல்லை. மார்க்ஸ் ஊகித்ததை விட முற்றிலும் வேறான ஒன்றாக, மாபெரும் தனி ஆற்றலாக, தொழில்நுட்பம் வளார்ந்துள்ளது இன்று. மேலும் மூலதனம் இன்று செயல்படும் முறையும் மார்க்ஸ் எண்ணிய வகையில் அல்ல. ஆகவே மார்க்ஸிய அரசியலுக்கு இன்று பொருத்தப்பாடு இல்லை.

மார்க்ஸ் சொன்ன அரசு இல்லாத சமூக அமைப்பும் அதைச் சாத்தியமாக்கும் தொழிலாளர்வர்க்க சர்வாதிகாரமும் இன்றைய நோக்கில் வெறும் கனவுகள். முழுக்க முழுக்க மனிதனின் நல்லியல்புகளை மட்டும் நம்பி, இலட்சியவாத நோக்கம் மட்டுமே கொண்டு உருவகிக்கப்பட்டவை. அதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு பொற்கனவு என்று மட்டுமே சொல்வேன். வரலாறு செல்லும்திசை வேறு. நாளை சாத்தியமான ஒரு அரசு என்பது எப்போதும் மானுடசமூகத்தில் இயங்கும் பல்வேறு விசைகளின் சமரசமாக அமைவதாகவே இருக்கும். அந்த விசைகளில் முக்கியமாக அமைவது தொழில்நுட்பம்.

ஆனால் மார்க்சிய இலட்சியவாதமும், மார்க்ஸிய தத்துவமும் இன்றும் முக்கியத்துவமிழக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஒரு நவீன ஜனநாயக அமைப்புக்குள் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதிலேயேகூட மார்க்ஸிய இலட்சியங்களுக்கு பெரும் பங்களிப்பு உண்டு. இன்று நான் பயன்படுத்தும் வரலாற்றாய்வு நோக்கு மார்க்ஸியம் சார்ந்ததே.

அடிப்படையான தத்துவ சிந்தனைகள் எவையும் காலாவதியாவதில்லை. அவை மானுட சிந்தனையின் முரணியக்கத்தில் தங்கள் பங்களிப்பை ஆற்றுகின்றன.ஒருவேளை மார்க்ஸிய இலட்சியவாதம் மற்றும் தத்துவத்தின் பங்களிப்பு காலம்செல்லச் செல்லக் குறையலாம். ஆனாலும் மானுடச் சிந்தனையின் வளர்ச்சியில் அதன் பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது. நாளை இன்றைய முதலாளித்துவத்தின் வீழ்ச்சியில் இருந்து தொழில்நுட்பம் மூலம் இன்னொரு புதியசமூக அமைப்பு உருவகிக்கப்பட்டால் கூட அதிலும் மார்க்ஸியத்தின் பங்களிப்பு உண்டு என்றே சொல்ல முடியும்.

ஜெ

கலாச்சாரம் இரு புதுவரலாற்றுவாதக் கருதுகோள்கள்…

[மறுபிரசுரம்/முதற்பிரசுரம் டிசம்பர் 2010]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்

நான் நம் பெரும்பான்மை மார்க்ஸியர்கள் மேல் சொல்வது இதே குற்றச் சாட்டைத்தான். அவர்கள் தங்கள் மூடத்தனத்தால் ஒரு பழம் பெரும் பாரம்பரியம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளால் வேருடன் கெல்லி அழிக்கப்படும் கொடூரமான வரலாற்று அநீதிக்கு துணை நிற்கிறார்கள். அதன் கருவியாகச் செயல்படுகிறார்கள். ஒருநாள் இதற்காகவும் அவர்கள் வருந்துவார்கள்.

இது நீங்கள் எழுதிய வரி. இதை என்னால் சரியாகப்புரிந்துகொள்ள முடியவில்லை. மார்க்ஸியர்கள் பழபெரும்பாரம்பரியத்தை அழிக்கிறார்கள் என்றால் எந்தப்பாரம்பரியத்தை?

அஸீஸ்

அன்புள்ள அஸீஸ்,

இந்துமதம், இந்துசிந்தனை மரபுதான். இந்தச் சொல் காதில் விழுந்த உடனே உங்களுக்குள் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை மட்டும் தொகுத்துப்பாருங்கள். எவர் ,எந்த அடிப்படையில், எந்த நோக்குடன் இவற்றை உருவாக்கி கடுமையான பிரச்சாரம் மூலம் நிலைநிறுத்தினார்கள்? வலுவாக முன்னெடுக்கிறார்கள்? அவர்களுக்கு இந்துமதம் குறித்தோ இந்துப்பண்பாடுகுறித்தோ இருக்கும் புரிதல் என்ன?

இந்துமதம், இந்துச்சிந்தனைமரபு புனிதமானது, குறையற்றது என நான் சொல்லமாட்டேன். அதன் முதன்மையான ஞானிகள் அனைவருமே அதன்மேல் கடும் விமர்சனங்களை முன்வைத்த சீர்திருத்தவாதிகளே. சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், நாராயணகுரு ,வள்ளலார், காந்தி அனைவருமே. ஒரு தொன்மையான பாரம்பரியம் என்பதனாலேயே அது பொருத்தப்பாடு இழந்த கடந்தகாலத்து நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் கொண்டிருக்கிறது. களைந்தாகவேண்டிய மூடநம்பிக்கைகளையும், அநீதிகளையும் கொண்டிருக்கிறது.

ஆனால் அத்தகைய குறைகள் இல்லாத மதங்கள் எதுவும் இந்த மண்ணில் இல்லை. மதம் என்பது ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் சார்ந்தது என்பதனாலேயே அப்படி இல்லாமலிருக்க வழியும் இல்லை. ஆனால் அதன்பொருட்டு மதத்தை நிராகரிக்க முடியாது. ஏனென்றால் ஒரு மரபின் கலை, இலக்கியம், சிந்தனை, பண்பாட்டுச்செல்வம் அனைத்துமே மதமாகவே தொகுக்கப்பட்டுள்ளது. மதத்தை இழப்பவன் மரபை இழக்கிறான்.

வேறெந்த மதத்தை விடவும் இந்துமதம் சில அடிப்படை ஜனநாயக அம்சங்களில் மேம்பட்டது என்பது சற்றேனும் திறந்த மனத்துடன் சிந்திப்பவர்களுக்குத்தெரியும். அது ‘மாற்றுநிலைபாடுகளை’ அழித்தொழிப்பதில்லை. அவற்றின்மேல் வெறுப்பைக்குவிப்பதில்லை. அவற்றுடன் உரையாடவும் அவற்றில் உள்ள ஏற்புள்ளவற்றை எடுத்துக்கொள்ளவும் தான் முயல்கிறது.

வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் எந்த ஒரு நிலப்பகுதியிலாவது ஆதிக்கம் செலுத்திய ஒரு மதம் இன்னொரு பெருமதத்தை இணையாக வாழவிட்டிருக்கிறது என்றால், பிற பெருமதங்களும் ஆயிரமாண்டுக்காலம் அந்த மதத்துடன் இணைந்து நீடித்தன என்றால் இந்தியாவில் இந்துமதம் திகழ்ந்த காலகட்டத்தில் மட்டும்தான். பௌத்தமும் சமணமும் கிமு ஒன்றாம் நூற்றாண்டு முதல் கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இணையான இடத்தில் இங்கே இருந்தன. இதற்கு வேறு ஒரே ஒரு உதாரணம் கூட உலகவரலாற்றில் கிடையாது.

அத்தனை மதங்களும் ஒருங்கிணைந்த சமூக உருவாக்கத்திற்காகவே பிறவிகொண்டவை. ஆகவே உதிரிவழிபாட்டுமுறைகளை, தனித்தனி குலஆசாரங்களை இணைப்பதை அவை அனைத்துமே செய்தாகவேண்டும். பிற அத்தனை மதங்களும் அந்தச் உதிரிவழிபாடுகளை . தனித்தனிக் குலஆசாரங்களை முழுமையாக மறுத்து முற்றாக அழித்து தன்னை மட்டுமே நிறுவிக்கொள்பவை. இந்து, பௌத்த, சமண மதங்கள் மட்டுமே உலகவரலாற்றிலேயே உதிரிவழிபாடுகளையும் குலஆசாரங்களையும் உள்ளிழுத்துக்கொண்டு அவற்றுக்கான இடத்தை அளித்து வைத்துக்கொண்டவை. ஆயிரமாண்டுகளுக்குப்பின்னும் அவற்றின் தனித்தன்மையை அழியாமல் வைத்திருந்தவை.

இந்தப்பன்முகத்தன்மை, உரையாடல்தன்மை காரணமாகவே இந்துமதம் மாறக்கூடியதாக எப்போதும் இருந்துவருகிறது. அதில் உருவான ஞானிகளால் அது தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. ஒருபோதும் அது முற்றுமுடிவாக எந்த நூலையும் எந்த ஞானத்தையும் முன்வைப்பதில்லை. ஏதேனும் ஒரு காலகட்டத்தில், ஏதேனும் ஒரு ஞானியில் அது மானுட ஞானத்தின் பெருக்கைக் கட்டிப்போடுவதில்லை.

ஆகவே ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனுக்கான ஆன்மீகசுதந்திரத்தை அது அளிக்கிறது. அவன் தன் அகத்தேடலை முன்னெடுக்கவும் முழுமைசெய்துகொள்ளவும் அது வழிவகுக்கிறது. அவன் மேல் இந்துமதம் விதிக்கும் கட்டுப்பாடுகள் என எவையும் இல்லை.தனிமனிதனாக ஓர் இந்துவுக்கு இருக்கும் சுதந்திரம் இன்று உலகிலிருக்கும் எந்த ஒரு மதநம்பிக்கையாளனுக்கும் இல்லை

இந்தத் தனிமனிதத் தேடலை அனுமதிப்பதனாலேயே இந்துமதம் கிளைவிடும் தன்மைகொண்டிருக்கிறது . அதன் மையத்தரிசனத்தை எல்லா வகையிலும் விரித்தெடுக்க, எந்தவகையான மீறலையும் முன்னெடுக்க அதில் இடம் உள்ளது. ஆகவே நூற்றுக்கணக்கான துணைமதங்களாக அது பிரிந்து வளர்கிறது

இந்த இயல்புகளினால் பல்வேறு ஞானநிலைகளின் வெளிப்பாடுகளைக் கொண்டதாக, மிகமிகநுட்பமான தத்துவசிந்தனைகளின் பெருந்தொகையாக, அழகியல்களின் வெளியாக இந்துமதம் உள்ளது. உலகநாகரீகத்திற்கு இந்துமதம் ஒருபெருங்கொடை. ஒரு மானுட சாதனை.

ஆனால் வெறும் ஆதிக்கநோக்கில் நூற்றாண்டுகளாக இந்துமதம் வேட்டையாடப்படுகிறது. குறைந்தது எழுநூறாண்டுக்காலமாக அது தொடர்ந்து ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. குறுகியகாலத்தில் ஒரு மறுமலர்ச்சி அதற்கு வந்தது, பதினெட்டாம்நூற்றாண்டில். ஆனால் அதன்பின் இன்றும் அது அறிவுலகில் சூழ்ந்து தாக்கப்பட்டு வரும் ஒரு மதம், ஒரு பண்பாடுதான்

நான் என்றுமே வேதனையும் வியப்பும் அடையும் ஒருவிஷயம் இது. உலகில் ஒரே நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரு மதம், எந்தவகையான ஆதிக்கநோக்கும் அற்றது, பிறிது என எதையும் வெறுக்காத தத்துவம் கொண்டது ஏன் மேலைநாடுகளால் இந்த அளவுக்கு வெறுக்கப்படுகிறது என. என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆதிக்கம் என்பதைத்தவிர வேறு காரணமே தென்படவில்லை.

ஓரளவு வாசிக்கிறவர்கள் அறிவார்கள் இந்துவெறுப்பு என்பது மேலைநாட்டு பண்பாட்டாய்வாளர்களில் அனேகமாக அனைவரிடமும் இருக்கும் ஒரு மனச்சிக்கல். அருவருப்பின் வெறுப்பின் அடித்தளம் அவர்களின் மொழிக்குள் வாழும். அவர்கள் இலக்கியமேதைகளாக இருப்பார்கள், தத்துவ அறிஞர்களாக இருப்பார்கள். நாம் அவர்களை வழிபடுவோம். ஆனால் அவர்களில் இந்த அகஇருளையும் பார்ப்போம். சமீபத்தில் நான் வாசித்து வருந்திய உதாரணம் மானுடவியலாளரான ஆலன் டண்டிஸ்.

நூறாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவில் செய்யப்பட்ட இந்து எதிர்ப்புப் பிரச்சாரம் இதற்கு ஒரு காரணம். அத்துடன் ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் பிறன் என்றும், பிறிது என்றும் நினைப்பதைபுரிந்துகொள்ளும் மனநிலையை அவர்களின் மதப்பின்னணியில் இருந்து பெறவில்லை என்பது இன்னொரு காரணம்.

இந்துமதம் ஐரோப்பியப் பண்பாட்டாய்வளர்களால் இழிவுசெய்யப்பட்டு, வெறுக்கப்பட்டு ,திரிக்கப்பட்டு அனைத்து வகையிலும் சூழப்பட்டு தாக்கப்படுகிறது. தொடர்ந்து இங்கு கல்வித்துறையையும் அறிவுச்சூழலையும் ஆக்ரமித்துள்ள ஐந்தாம்படை அறிவுஜீவிகள் அச்சிந்தனைகளை நவீனச்சிந்தனைகளாக இங்கே முன்வைக்கிறார்கள். அவற்றை எதிரொலித்துப் பேசுவதே நவீனச்சிந்தனையின் அடிப்படை என்ற நம்பிக்கை இங்கு வலுவாக வேரூன்றப்படுகிறது.

இந்துமதத்தை சற்றேனும் ஏற்றுப்பேசினால் அவன் மதவாதி என்றும் பிற்போக்காளன் என்றும் முத்திரைகுத்தப்படுகிறான். அவன் கல்வித்துறையைச்சேர்ந்தவன் என்றால் முழுமையாகவே ஒதுக்கப்படுவான். எந்தவகையான அங்கீகாரமும் வாய்ப்புகளும் அவனுக்கு அளிக்கப்படமாட்டாது. எழுத்தாளன் என்றால் அவன் முழுமையாகவே அனைத்துவகை அமைப்புகளாலும் நிராகரிக்கப்படுவான். ஒரு எளிய அங்கீகாரத்தைக்கூட அவனால் பெறமுடியாது.

ஆகவே இளைஞர்கள், எதிர்காலக்கனவுகள் கொண்டவர்கள் இந்துஎதிர்ப்பு நிலைபாட்டை மட்டுமே எடுக்கமுடியும் என்ற நிலை இன்றுள்ளது. அதுவே முற்போக்கு, அதுவே நவீனத்தன்மை, அதுவே வெற்றிக்கு வழி. ஐயமிருந்தால் இங்கே விருதுகள், கல்வித்துறை பதவிகள், கருத்தரங்கப்பயணங்கள், மொழியாக்க வசதிகள்பெற்ற எவரை வேண்டுமென்றாலும் எடுத்துப்பாருங்கள். விதிவிலக்கே இருக்காது.

கவனியுங்கள், இந்து என்ற சொல்லே எத்தனை அருவருப்புடன் சொல்லப்படுகிறது. ஒர் அறிவுஜீவி இந்து என தன்னைச்சொல்லிக்கொள்வதற்கு எத்தனை சங்கடப்படவேண்டியிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் மனிதநேய மக்கள் தலைவர்களாக முற்போக்காலர்களால் தூக்கிச்சுமக்கப்படும் சூழலில் இதைப்பொருத்திப்பார்க்கவேண்டும்.

இவ்வாறு நவீனச்சிந்தனைகொண்டவர்களால் முழுமையாக நிராகரிக்கப்படும் நிலையில் எந்தச்சீர்திருத்தமும் சென்று சேராத வெற்று ஆசாரத்தின் குரல்கள் மதத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்குகின்றன. மேலும் அது தேங்கிச்சீரழியத்தொடங்குகிறது.

தென்கொரியா ஐம்பதாண்டுகளுக்கு முன் ஒரு பௌத்தநாடு. இன்று கிராமப்புறங்களில் மட்டுமே பௌத்தம் எஞ்சியிருக்கிறது. இருபதாண்டுகளுக்குள் அங்கே பௌத்தம் முழுமையாக அழியும். இங்கு இந்துமதத்திற்கு நிகழ்வதே அங்கு பௌத்ததிற்கும் நிகழ்ந்தது. பௌத்தம் ஐரோப்பிய அறிவுச்சக்திகளாலும், அவர்களின் உள்ளூர் கூலிப்படையினராலும் சூழ்ந்து தாக்கப்பட்டது. அவதூறு செய்யப்பட்டது. அதன் சாரம் திரிபுபடுத்தப்பட்டது.

விளைவாக பௌத்த நம்பிக்கைக்கு எதிராகப்பேசுவது என்பது ‘நவீனமானது’ என்ற எண்ணம் எண்பதுகளில் வேரூன்றியது. பௌத்தனாகச் சொல்லிக்கொள்வது ஒருவனை நவீனவாழ்வுக்கு எதிரானவன் என்று காட்டும்படி சூழல் மாற்றப்பட்டது. நவீனத்தொழில்நுட்ப உலகுக்கு ஒத்துப்போக பௌத்தத்தை உதறியாகவேண்டும் என்று கற்பிக்கப்பட்டது. விளைவாக பௌத்தம் மெல்ல மெல்ல கைவிடப்பட்டது.

இன்று தென்கொரியா கிறிஸ்தவநாடு. செறிவான தத்துவ அடித்தளம் கொண்ட பௌத்தம் அழிக்கப்பட்ட இடத்தில் மிகமூர்க்கமான மூடநம்பிக்கைகள் மிகுந்த கிறிஸ்தவ மதமரபுகள் வந்து சேர்ந்துள்ளன. கிறிஸ்தவமதத்திற்குள்ளேயே ஐரோப்பா அடைந்த எந்த மறுமலர்ச்சியும் நிகழாத பதினாறாம்நூற்றாண்டுக் கிறிஸ்தவமே அவர்களுக்கு வந்தது. ஏனென்றால் அதுவே தாக்கும்தன்மை கொண்டது. பிற பண்பாடுகளை வெல்லும் வேகமும் ஆதிக்க சக்திகளின் ஆதரவும் கொண்டது. இன்று ஆசியா முழுக்க ஆவிக்குரிய எழுப்புதல்களையும் பேயோட்டுதல்கலையும் செய்யும் பாதிரிகளை கொரியா தயாரித்து அனுப்புகிறது.

இந்தியாவில் அடுத்த ஐம்பதாண்டுகளில் இந்துமதம் அழியவோ, செயலற்ற நிலையை அடையவோ வாய்ப்புண்டு என நான் நினைக்கிறேன். இப்போதே இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்தவமயமாக்கம் மிக வலுவாக நிகழ்கிறது. வடகிழக்கு பெரும்பாலும் கிறிஸ்தவ நிலம்.ஆந்திரா, சட்டிஸ்கர், பிகார் போன்ற மைய மாநிலங்கள் பெரும் மாற்றத்துக்குள்ளாகின்றன. அரசின் கணக்குகள் பெரும்பாலும் பொய்யானவை. இந்துமதம் அழியும் என்ற எண்ணத்தைத்தான் என் பயணங்கள் காட்டுகின்றன.

இருதலைமுறைக்குப்பின் மிகச்சிறுபான்மையினரின் ஆசாரநம்பிக்கையாக இந்துமதம் எஞ்சும். அதன் ஞானத்தொகை எகிப்தியவியல் போன்ற ஒரு சிறப்பு ஆய்வுப்பொருளாக அறிஞர் நடுவே இருக்கும். ஒரு சுற்றுலாக்கவர்சியாக அதன் ஆலயங்கள் மாறும். இன்றைய நிலையில் நாம் செல்லும் பாதை இதுவே

அப்படி ஓர் அழிவு நிகழுமென்றால் அது மானுடத்திற்கு இழைக்கப்படும் அழிவு. உலகசிந்தனைக்குப் பேரிழப்பு. அதற்காக ஒருநாள் உலகம் வருந்தும் என்றே நினைக்கிறேன்.

என் குற்றச்சாட்டு இதுதான். இந்த ஒட்டுமொத்தத் தாக்குதலில், ஏகாதிபத்தியம் நிகழ்த்தும் போரில், கூலிப்படையினருடன் இணைந்து செயல்படுகிறார்கள் இங்குள்ள மார்க்ஸியர்கள். அதற்காக அவர்கள் வருந்துவார்கள். பொதுவாக இடித்துக்குவித்துவிட்டு பின்னர் அது ஒரு தவறான கொள்கைமுடிவு என்று சொல்வதே அவர்களுக்கு வழக்கம்

ஜெ



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard