உலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி அடையப்போகும் முதல் மனிதன் நான்தான். ஆனால் அறிவியல்பூர்வமாகப் பார்க்கும்போது இதில் சற்றும் உண்மை இல்லை என்பதுதான் நிஜம். உலகின் முதல் மொழி எது என்ற ஆராய்ச்சியை மொழி அறிவியலாளர்கள் கிட்டத்தட்ட விட்டுவிட்டனர். கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது.
கிடைத்திருக்கும் சான்றுகளில் சுமேரிய மொழிக்கான சான்றுகள்தான் மிகவும் பழமையானது (கி. மு. 2900). இதனால் சுமேரிய மொழிதான் பழமையான மொழி என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. மற்ற மொழிகளுக்கு இதைவிட பழமையான சான்றுகள் கிடைக்கவில்லை. உலகில் தொன்மையான ஒருசில மொழிகளில் தமிழும் ஒன்று. ஆனால் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்று. சமஸ்கிருதம்தான் தொன்மையான மொழி, கிறேக்கம்தான் தொன்மையான மொழி என்று யாராவது நம்மிடம் சொன்னால் நமக்கு எவ்வளவு எரிச்சலாக இருக்கும். அதே போல்தான் தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என்றால் மற்ற மொழியைச் சேர்ந்தவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். சமஸ்க்ருதம் நவீன கிரேக்கம், சீனம், பாரசீகம் போன்ற மொழிகளைச் சேர்ந்த பலரும் இதேபோல்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் நான் சந்தித்த ஈரானியர் ஒருவர் உலகின் முதல் மொழி பாரசீகம்தான் என்றும் உலகின் எந்த மொழி அழிந்தாலும் பாரசீகம்தான் அழியாமல் இருக்கக் கூடிய ஒரே மொழி என்றும் என்னிடம் கூறியபோது எனக்குத் தோன்றியது இதுதான் 'கிணற்றுத் தவளைகள் தமிழுக்கு மட்டும்தான் சொந்தமா என்ன?' என் கிணறுதான் உலகிலேயே பெரிய கடல் என்று சொல்லும் தவளைகள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கவே செய்கிறார்கள். இந்தத் தன்மைக்கு ethnocentirism அதாவது இனமைய வாதம் என்று பெயர். இதுதான் மற்ற மொழிகளையும் இனங்களையும் அடிமைப்படுத்துவதற்கும் அழிக்க நினைப்பதற்கும் அடிப்படை. ஆரிய இனம்தான் உலகின் உன்னத இனம் என்ற ஹிட்லரின் எண்ணம் கோடிக்கணக்கிலான உயிர்களைக் (குறிப்பாக யூதர்களை) காவுவாங்கியது. அப்படிப் பாதிக்கப்பட்ட யூதர்களே இன்று பாலஸ்தீன மக்களை அழிப்பவர்களாக மாறிவிட்டனர். சிங்களவர்கள்தான் உயர்ந்தவர்கள், தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் இலங்கையில் இனப் படுகொலைக்கு வழிவகுத்தது. வரலாறு முழுக்க இதுபோல் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. தமிழ் இனமும் அது போன்ற இனமைய வாதத்திற்கு அடிமையாக வேண்டாம்.
உலகில் உள்ள மொழிகளிலேயே தமிழ்தான் தொன்மையானது, சிறந்தது என்றெல்லாம் சொல்ல நாம் உலகின் அத்தனை மொழிகளையும் கற்றாக வேண்டும். அது சாத்தியமல்ல. அவரவருக்கு அவரவர் மொழி சிறந்தது. தமிழின் சங்க இலக்கியம் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருப்பவன் என்கிற முறையிலும் உலகின் பிற மொழி இலக்கியங்களை ஆங்கிலம் வாயிலாகப் படித்துக்கொண்டிருப்பவன் என்கிற முறையிலும் என்னால் தமிழ் இலக்கியத்தைக் குறித்து மிகவும் பெருமை கொள்ள முடியும். வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு 'கல் தோன்றி மண் தோன்றக் காலத்து...' என்று சொல்லிக்கொண்டிருக்கும் நண்பர்களில் பலர் பழந்தமிழ் இலக்கியத்தை சிறிதளவுகூட வாசிக்கவில்லை என்பதுதான் உண்மை (பள்ளிப் பருவத்தில் மனப்பாடப் பகுதியில் அர்த்தம் தெரியாமல் மக்கப் பண்ணியதோடு பலருக்கும் பழந்தமிழ் இலக்கியத் தொடர்பு முடிந்துவிட்டது.) பழந்தமிழ் இலக்கியத்தை வாசியுங்கள். நம் சிற்பக் கலைகளின் பெருமையைப் பற்றி நேரே சென்று பார்த்து அறியுங்கள். அப்போது பெருமை கொள்ளுங்கள். அதில் ஓர் அர்த்தம் இருக்கும். கூடவே பிற மொழிகளின் வளத்தையும் சிறப்பையும் உரிமையையும் அங்கீகரியுங்கள். தமிழ் எவ்வளவு பழமையான மொழி என்பதைவிட தமிழ் எவ்வளவு காலம் வாழப் போகிறது என்பதுதான் தமிழுக்கு முக்கியம். அதுதான் எனது பிரதானமான அக்கறை. என்னைத் தமிழ்த் துரோகி என்றழைக்கப் போகும் நண்பர்களுக்கு: தயவுசெய்து அறிவியல் பூர்வமாக இதைப் பாருங்கள்.
மனித இனம் எங்கு தோன்றியது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆப்பிரிக்காவில்தான் உலகின் முதல் மனித இனம் தோன்றியது. சந்தேகம் இருப்பவர்கள் தயவுசெய்து மரபணு விஞ்ஞானிகளிடம் கேட்டுத் தெளிந்துகொள்ளவும். தயவுசெய்து உங்கள் முடிவுகளுக்கு இலக்கியத்தை ஆதாரமாகக் காட்டாதீர்கள்.
(உலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் facebookஇல் அடிக்கடி போடப்படும் வெற்றுக் கூச்சலுக்கு நான் அளித்த எதிர்வினை)