New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான் வெளிநாட்டு தமிழன்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
நான் வெளிநாட்டு தமிழன்
Permalink  
 


 

 
 
 

Saturday, September 17, 2011

நான் வெளிநாட்டு தமிழன் -- கதையின் தொடக்கம்

பிரிட்டீஷ் ஆட்சியின் போது அயல்நாடுகளுக்கு குடிபெயர்தல் என்பது தமிழகமெங்கும் பிரபல்யமாக இருந்தது. ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லத் துவங்கினர். சிலர் குறிப்பிட்ட காலம் பொருளீட்டி திரும்பி வந்து சமூக அந்தஸ்தில் உயர்ந்து இருந்தனர். இவர்களின் வீடுகளை வாழ்ந்த நாடுகளின் அடிப்படையில் ரங்கூன் வீடு, சிலோன் வீடு, பர்மா வீடு என்று பெயரிட்டு அழைத்தனர்.
 
இவர்களின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு பலருக்கும் அயல்நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது. இதற்கான அடிப்படைக் காரணங்களையும் வெள்ளை அரசாங்கமே மறைமுகமாக உருவாக்கியது.
 
இங்கு வாழ முடியாதவர்களும், வாழ வழியில்லாதவர்களுக்கும் இருந்தே ஒரே வாய்ப்பு இது போல பல நாடுகளுக்கு செல்லுதலே ஆகும்.
 
ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரட்சி உருவாக ஒவ்வொரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடையத் தொடங்கின.  இதற்காகவே காலணி பகுதிகளை கைப்பற்றி, அங்கிருந்த மூலப் பொருட்களை கைப்பற்றுவது வரை தங்களுக்கான தொழில் கூடங்களை உருவாக்கத் தொடங்கினர். 
 
எல்லாநிலைகளிலும் தங்களுக்கான ஆதார வேர்களை உலகம் முழுக்க பரப்பத் தொடங்கினர். 
 
வெள்ளையர்கள் தாங்கள் கைப்பற்றிய நிலப்பகுதிகளை வளமாக்க அடிமைகளாகக் கொண்டு வந்த கருப்பின மக்களை பயன்படுத்திக் கொண்டனர்.  ஆனால் 1833 ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அடிமை வணிகம் தடைசெய்யப்பட ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருந்த அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட அடிமைகள் மீண்டும் அந்த வாழ்க்கையை வாழத் தயாராய் இல்லை.
 
இந்த இக்கட்டான தருணத்தில் தான் இங்கிலாந்து அரசாங்கம் தங்கள் ஆளுமையில் இருக்கும் காலணி நாடுகளில் இருக்கும் மக்களை ஒப்பந்த கூலிகளாக தேவைப்படும் நாடுகளுக்கு வரவழைக்கத் தொடங்கினர்.  வெள்ளை அரசாங்கத்தின் எந்த திட்டமென்றாலும் நீண்ட காலம் பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும் எனபது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
 
இந்த நோக்கத்தில் தான் இந்தியாவில் பல மறைமுக திட்டங்களை பிரிட்டன் அரசாங்கம் நிறைவேற்றத் தொடங்கியது.
 
இந்தியா என்பது பிரிட்டன் பொருட்களை மட்டும் இறக்குமதி செய்யப்படும் நாடாக மாற்றப்பட்டது,  இங்குள்ள எந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியாது. இதன் காரணமாகவே இங்குள்ள தொழில்கள் நசிவுறத் தொடங்கின. சிறு தொழில்களை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தெருவுக்கு வரத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக ஆங்கிலேய அரசாங்கம் போட்ட நிலவரிக் கொள்கையும் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்தவர்களையும் பாதிக்கத் தொடங்கியது.
 
அதிகமாக விளையும் நிலங்களுக்கு வரியை அதிகமாக்கினர்.  விளைபொருட்களைப் பொறுத்து மூன்றில் ஒரு பங்கை வரியாக அதையும் பணமாக செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தனர்.  விளையாத நிலங்களுக்கும் வரி என்ற பெயரில் அடாவடி வசூல் செய்தமைக்கு முக்கிய காரணம் செயற்கையான பஞ்சத்தை உருவாக்கினர்.
 
வெள்ளையர்கள் உருவாக்கிய பஞ்சத்திற்கான திட்டமிடுதல் நன்றாக வேலை செய்யத் தொடங்கியது.  வட்டிக்கு வாங்கி வரியாக கட்டியவர்கள் ஒரு அளவுக்கு மேல் செயல்படமுடியாமல் முடங்கிப் போகத் தொடங்கினர்.
 
 
அடிமை சட்டத்தை நீக்குதலை நிறைவேற்றிய வெள்ளையர் அரசாங்கம் 1861 ல் இந்திய குற்றவியல் சட்ட திட்டத்தை அறிமுகம் செய்தது.  அடிமைகளை வைத்திருப்பவர்கள் மேல் கடும் தண்டனை என்று அறிவிக்க பண்ணையடிமைகளாக இருந்தவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினர்.  ஆனால் பண்ணையடிமைகள் சுவாசித்த சுதந்திரக் காற்றே குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் அவர்களின் மூச்சை நிறுத்தவும் வைத்தது.  காரணம் ஆண்டில் 6 மாத காலமே விவசாயப் பணிகள் இருக்கும்.  வறட்சி காலங்களில் எந்த பணியும் இருக்காது.  வறட்சி காலங்களில் ஆதரித்த நிலபிரபுகளும் இப்போது சீந்துவார் இல்லாமல் போக பண்ணையடிமைகளுக்கு இருண்ட வாழ்க்கை அறிமுகமாகத் தொடங்கியது.
 
 
பண்ணையடிமைகளுக்கு உருவான பாதக சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் வெள்ளையர்கள்.  வெள்ளையர்கள் தாங்கள் உருவாக்க நினைத்த காபி, தேயிலைத் தோட்டங்களுக்கு அனுப்பத் தொடங்கினர்.  1917 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு அறிக்கையின்படி பள்ளர், பறையர்,அருந்ததியர், படையாட்சி  ஆகிய ஓடுக்கப்பட்ட இனத்தினரே அதிக அளவில் புலம் பெயரத் தொடங்கினர்.
 
இதன் தொடர்ச்சியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான குடநாடு, கூர்க், மைசூர், நீலகிரி, ஆனைமலை போன்ற பகுதிகளில் உருவாக்கப்பட்ட தோட்டங்களிலும் நிலமற்ற ஏழை மக்களை கூலியாக மாற்றி குடியமர்த்தத் தொடங்கினர்.  சென்னை வழியாக ஸ்ரீலங்கா, பர்மா, சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, மொரிசியஸ், ரீயூனியன் மேற்கிந்திய குடியேற்றங்களை கர்மசிரத்தையாக நடந்தேறத் தொடங்கியது.
 
1876 ல் உருவான தாதுப் பஞ்சம் தமிழ்நாட்டை புரட்டிப் போட்டது. பல்வேறு சாதியினரும் வெளியேறத் தொடங்கினர்.
 
1875 ஆம் ஆண்டுக்கு முன்னால் வருடத்திற்கு ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் வெளியேறத் தொடங்கினர். ஆனால் இருபதாம் ஆண்டு முடிவதற்குள் ஒவ்வொரு ஆண்டும் 2,50,000 பேர்கள் புலம் பெயரத் தொடங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் அதிக அளவு மக்கள் பல நாடுகளுக்குச் செல்லத் தொடங்கினர். காரணம் இதே காலகட்டத்தில் தான் கிழக்கிந்திய கம்பெனியின் கைககளில் தமிழ்நாடு வந்தது
 
இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மிட்டா, மிராசு, ஜமீன்தார்கள்கள் கட்டுப்பாட்டில் உள்ள பண்ணையடிமைகளை ஆங்கிலேர்கள் ஒப்பந்தக்கூலிகளாக அயல்நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கினர்.
 
 
 
 
 
 
 
%25E0%25AE%2586%25E0%25AE%2599%25E0%25AF
 
ஜாவா, சுமத்ரா போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளை வளமான கரும்பு வயல்களாக மாற்றியவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்களே. தமிழர்கள் சென்ற நாடுகள் ஒவ்வொன்றும் வளம் கொழிக்கத் தொடங்கியது.  ஆனால் சென்ற இடங்களிலும் எந்த அடிப்படை உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் அவதிப்பட்டவர்களும் தமிழர்களே. வெள்ளையர்கள் தமிழர்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காலணி நாடுகளுக்கு அனுப்ப முக்கிய காரணங்களில் சில இருந்தது. 
 
மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளிலும் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள், எதற்கும் எதிர்ப்பு காட்ட துணியாதவர்கள், பல காலம் அடிமைகளாகவே வாழ்ந்தவர்கள் போன்ற காரணங்களே முக்கியமானதாக இருந்தது.
 
இந்தியாவில் வடக்கே நாக்பூர் முதல் தெற்கே கன்யாகுமரி வரையிலும் உள்ள லட்சக்கணக்கான கிராம மக்களை பிரிட்டீஷ் அரசாங்கம் ஒப்பந்தக்கூலிகளாக அயல்நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
 
1820 ஆம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த ஐம்பது ஆண்டுகளில் மக்கள் தொகை அபரிமிதமாக பெருகத் தொடங்கியது. ஆனால் இணையாக உணவு உற்பத்தி பெருகவில்லை. பற்றாக்குறையும், விலையேற்றமும் அடித்தட்டு மக்களை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது.  வறுமையாலும், நீக்க முடியாத நோய்களாலும் வாடத் தொடங்கினர்.  அடுத்தடுத்து வந்த பஞ்சமும், தட்டுப்பாடுகளும் ஒவ்வொருவரையும் புலம் பெயர வைத்துக் கொண்டிருந்தது.
 
ஓடுக்கப்பட்ட மக்கள் ஊருக்குள் நடமாட முடியாது.  பொது கிணற்றை பயன்படுத்த முடியாது.  சொந்த நிலம் வாங்க முடியாது. கல்வி கற்க முடியாது.  எல்லாவற்றிலும் தடை என்று உருவாக்கப்பட்ட காரணமே அவர்களை எந்த பக்கமும் நகர முடியாத அளவிற்கு நரக வாழ்க்கையை அறிமுகப்படுத்தியது. 
 
சாதி அடிப்படையிலே ஒவ்வொருவரும் தங்கள் தொழிலை பார்க்கவேண்டியதாக இருந்து.  நாவிதர், ஒட்டர், கல்தச்சர், ஆசாரி, குயவர், கொல்லர், கம்மாளர், வேளாளர் என்று அவரவர் பணியால் மட்டுமே அவர்களின் ஜாதி முன்னிலைப்படுத்தப்பட்டு அந்த தொழில் மட்டுமே பார்க்கும்படி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர்.
 
வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த சாலை வசதிகளும், பிற வசதிகளுமாய் அருகே இருந்த துறைமுகங்களுக்கும், சிறு நகரங்களும் ஒவ்வொருவரையும் நகர வைத்துக் கொண்டிருந்தது.  மதுரை, திருநெல்வேலியைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் மண்டபம், தூத்துக்குடி வழியாக இலங்கைக்குச் செல்லத் தொடங்கினர்.  இதைப் போலவே தென் ஆற்காடு, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மக்கள் நாகபட்டிணம் வழியாக மற்றும் சென்னை வழியாக வெளியேறத் தொடங்கினர்.
 
விவசாய பணிகள் இல்லாத மார்ச் முதல் ஜுலை மாதங்கள் வரை மற்ற நாடுகளில் பணிபுரிந்து உள்ளே வந்த ஓடுக்கப்பட்ட இன மக்களின் வசதி வாய்ப்புகளைப் பார்த்து மற்றவர்களும் பொருளீட்டும் ஆசை உந்தித்தள்ள அவரவரும் விருப்பம் போல பல நாடுகளுக்கும் நகரத் தொடங்கினர்.
 
ஆனால் பல ஆண்டுகளாக தாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் இருந்து மீள முடியாத சிந்தனைகளில் இருந்த மக்களை கூலிகளை அயல்நாடுகளுக்கு அனுப்பும் கங்காணிகள் ஆசை வார்த்தைகள் கூறி அனுப்பி வைத்தனர். தங்குமிடம், சாப்பாடு இலவசம். குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும் பொருளீட்ட முடியும் என்பது போன்ற பல சாகச வார்த்தைகளைக் கூறி வளமாக வாழ இந்த வாய்ப்பு என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.
 
%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE
 
பல்லாயிரக்கணக்கான தொலைவில் உள்ள அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுக்கம், ஆப்ரிக்காவின் தொன் பகுதிகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பிஜி தீவுக்கூட்டங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளுக்கு கூலிகளாக அனுப்பி வைக்கப்பட்டனர்.  சிலர் மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்தில் பொருளீட்டி தாயகத்திற்கு திரும்பி வந்தனர். பெரும்பாலோனார் அங்கேயே தங்கள் வாழ்க்கையை வாழத் துவங்கினர்.
 
பிரிட்டீஷ் ஆட்சியில் போது தமிழர்கள் பெருமளவில் குடியேறியது சிங்கப்பூரில் தான்.  ஆங்கிலேயர்களின் இந்த குடியேற்ற நாட்டை ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டில்மெண்ட்ஸ் என்றழைக்கப்பட்டது. 1815 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவிற்கு தோட்டத் தொழிலாளர்களை அனுப்பி வைக்க தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் முயற்சித்த போது அது தோல்வியில் தான் முடிந்தது.  அதன் பிறகே ஆட்களை திரட்டும் தரகர்களின் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தத் தொடங்கியது. 1828 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் உள்ள தோட்டங்களில் பணிபுரிய முதல் முறையாக 150 கூலிகள் ஓப்பந்த அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு உருவாக்கப்பட்ட காபி தோட்டங்களுக்கு 1939 முதல் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது.
 
சர்க்கரைத்தீவு என்றழைக்கப்பட்ட மொரீசியசுக்கு 1819 ஆம் ஆண்டு முதல் இந்தியர் போகத் தொடங்கினர். ஆனால் தோட்டத்தில் பணிபுரிய ஒப்பந்தக் கூலிகளாக 1834 ஆம் ஆண்டு முதல் தான் பெருவாரியாக கல்கத்தா துறைமுகத்தின் வழியாக செல்லத் தொடங்கினர்.  இந்த ஆண்டு மட்டும் 7000 பேர்கள் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து 1838 ல் இரு கப்பல்களில் 400 பேர்கள் பிரிட்டீஷ் கயானாவிற்கும், 1844 ல் டிரினிடாட், 1845 ல் ஜமாய்கா போன்ற நாடுகளுக்கும் செல்வது தொடர்ச்சியாக நடக்கத் தொடங்கியது.
 
ஆறு மாதங்களுக்குரிய ஊதிய முன்பணம், உடைகள், உணவு என்பதற்காக ஒவ்வொரு ஒப்பந்தகூலிக்கும் 10 பவுண்டுகள் செலவிடப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்த அடிமைகள் கொண்டுவரப்பட்ட அவலத்தைப் போலவே இந்த ஒப்பந்தக்கூலிகளும் நடத்தப்பட்டது. இந்த கொடூர வாழ்க்கையில் உயிர் இழந்தவர்களும், தப்பி வர முயன்ற போது சிறையில் அடைக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் அநேகம் பேர்கள்.
 
1837 ஆம் ஆண்டு குடிபெயர்வுச் சட்டம் அமுலுக்கு வந்தாலும் பிழைப்புக்காக சென்றவர்களின் அவல வாழ்க்கை மட்டும் முடிவுக்கு வந்தபாடில்லை. கல்வியறிவற்ற அடித்தட்டு மக்களுக்கு தாங்கள் செல்லும் நாடுகளின் பூகோள அறிவோ, செல்லக்கூடிய நாட்டின் தூரம் குறித்தோ எந்த அறிவும் இல்லாமல் ஆசை வார்த்தையின் அடிப்படையில் நகர்ந்து சென்று அல்லல்பட்டர்வர்களில் அநேகம் பேர்கள்.தமிழர்களே, 
 
%25E0%25AE%25AA%25E0%25AE%259E%25E0%25AF
 
தமிழ்நாட்டுக்குள் தாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த இழிநிலையை மாற்றிக் கொள்ள வாய்ப்பாக புலம் பெயர்தலை கருதிக் கொண்டனர்.  ஆனால் காலம் அவர்களை பண்ணையடிமையில் இருந்து இழிமக்கள் என்ற தகுதியை உருவாக்கி அவ்வாறே தென் ஆப்ரிக்காவில் குடியேறிய மக்களை வெள்ளையர் அரசாங்கம் அரசாங்க ஆவணத்திலும் இடம் பிடிக்க வைத்தது.
 
உள்ளூரில் பண்ணையடிமைகளாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேறொரு பெயர் உருவானது. கூலி என்றே அழைக்கத் தொடங்கினர்.  பெயர் மட்டும் தான் மாறியதே தவிர இவர்களின் அவல வாழ்க்கை மாறவில்லை. இவர்களின் சமூக அந்தஸ்த்து உயரவில்லை.
 
தென்னாப்பிரிக்காவில் கூலிகளை சுவாமி என்றே அழைத்தனர்.  இந்து மதத்தில் கடவுளைக் குறிப்பிடும் இந்த சொல் இழிசொல்லாக மாறியது.  இங்கிருந்து செல்லும் ஒவ்வொரு தமிழரின் பெயரும் முனுசாமி, மாரிச்சாமி, பழனிச்சாமி என்று சாமியில் முடிய இந்த பெயரையே பயன்படுத்தத் துவங்கினர். மொத்தத்தில் வெள்ளையர்கள் தமிழர்களை ஒட்டு மொத்தமாக சுவாமி என்றே அழைத்தனர்.
 
வெள்ளையர்களின் ஆட்சியில் தமிழ்நாட்டில் சென்னை மாநிலமென்பது மிக பெரிதாக இருந்தது. இப்போதுள்ள கேரளாவின் மலபார் மாவட்டம் வரைக்கும் ஒன்றாக இருந்தது. இதற்குள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, ஆகிய மொழி பேசுவோர்கள் இருந்தாலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளில் இருந்து தான் அதிக புலம் பெயர்தல் நடக்கத் தொடங்கியது.  சென்னை துறைமுகத்தின் வழியாக புலம் பெயர்ந்தோர் பெரும்போலோனார் தமிழர்களே. அக்காலத்தில் மலையாளிகள் புலம் பெயர்வதில் அதிக அக்கறை காட்டவில்லை.  தெலுங்கு மக்கள் அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கும், பர்மாவிற்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
 
இலங்கையில் உள்ள தோட்டத்தில் பணிபுரிய தேவைப்படும் ஒப்பந்தக்கூலிகளை முறைப்படுத்தப்பட்ட சட்டத்தின் படி உருவாக்க முதல்முறையாக திருச்சியில் 1904 ஆம் ஆண்டு சிலோன் தொழிலாளர் ஆணையம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. வெள்ளையர்கள் முக்கிய பதவியிலும், தோட்டத்தின் சார்பாளர்களுக்கிடையே இங்குள்ளவர்கள் பணியாளர்களாகவும் இருந்தனர்.
 
இந்த ஆணையத்திற்கு முதல் முறையாக பொறுப்புக்கு வந்த நார்மன் ரோசல் என்பவ்ர் கங்காணி முறையில் ஆள்திரட்டும் புனிதப்பணியை துவங்கினார்.
 
சென்னை மாநில அரசின் உத்தரவின்படி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இவர்களுக்கு உதவி புரிந்தது.  இந்த காங்காணிகளுக்கு பெரிதான முன் அனுபவம் தேவையில்லை.  என்னவொன்று இவர்கள் ஏற்கனவே இலங்கையில் ஏதோவொரு தோட்டத்தில் பணிபுரிந்தவர்களாக இருப்பார்கள். இவர்களை கங்காணி என்ற பெயரில் ஆள் திரட்ட (ஆள் பிடிக்க) ஏற்பாடு செய்யப்பட்டது.  தமிழ்நாட்டிற்குள் வந்து சேரும் கங்காணிகளுக்கு தேவைப்படும் செலவுத் தொகையையும் இவர்களின் அடையாளத் தகடுகளும் ஆணையத்தில் இருந்து பெற்றுக் கொள்வர்.  இவர்கள் ஒரு குழுவாக ஆட்களை சேர்த்த பிறககு தட்டப்பாறைக்கோ மண்பத்திற்கோ அழைத்துச் செல்வர்.
 
நாள்பட இந்த தொழிலாளர் ஆணையம் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட இந்த ஆணையத்தில் கங்காணிகள் உதவியின்றி நேரிடையாக வந்து சேர வசதிகளையும் உருவாக்கப்பட்டது. மண்டபம் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு இங்கிருந்து தனுஷ்கோடி அல்லது தலைமன்னாருக்கு அழைத்துச் சென்று இறுதியாக இலங்கைக்குள் கொண்டு சேர்த்தனர்.  இடையிலே எவரும் தப்ப முடியாத அளவிற்கு கெடுபிடியாக இதற்கென்று பயிற்சியில் இருக்கும் காவல்ர்கள் இருந்தனர்.
 
 
 
 
1917 ஆம் ஆண்டு இலங்கை தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் சம்பளம் ஆணுக்கு 8 முதல் 10 சென்ட்.  பெண்களுக்கு 4 முதல் 6 சென்ட் வரைக்கும் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கு 3முதல் 5 சென்ட் வரைக்கும் கொடுக்கப்பட்டது.
 
%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE
 
1886/87 வறட்சி வருடங்களில் சேலம் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நடைபயணமாக திருச்சியில் இருந்த சிலோன் தொழிலாளர் ஆணையத்திற்குச் சென்று தங்களை குடிபெயர பதிவு செய்து கொண்டனர். முறைப்படி பதிவு செய்யாமல் கள்ளத்தோணி மூலம் சென்றவர்கள் இதை விட பல மடங்கு அதிகம்.  1931 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்த இந்திய வம்சாளி மக்களின் எண்ணிக்கை பத்து லட்சமாகும். 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

 
 
 

Sunday, September 18, 2011

திரைகடலோடியும் திரவியம் தேடிய கதைகள்

 
1858 இல் இந்திய ஆட்சி பிரிட்டீஷ் பாராளுமன்றத்தின் நேரடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியர் குடிபெயர்வு வேகமாக நடக்கத் தொடங்கியது. பிரிட்டீஷ் ஆளுமைக்குள் இருந்த பகுதிகளில் இருந்தவர்களை பிரிட்டன் அரசாங்கம் மற்ற நாடுகளுக்கு கூலிகளாக அனுப்ப விரும்பவில்லை.  முடிந்தவரைக்கும் தங்கள் காலணிகளாக இருந்து தேர்ந்தெடுத்து தங்களுக்குத் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
 
குறிப்பாக இந்தியாவிலிருந்து அருகேயிருந்த சிலோனுக்கு, மலேசிய குடியரசுக்கு அதிகமானோர் ஒப்பந்தக்கூலிகளாக அனுப்பப்பட்டனர். வெவ்வேறு தூர கண்டங்களில் இருந்த குடியேற்றங்களுக்கு இங்குள்ளவர்களை பிரிட்டீஷ் அரசாங்கம் அனுப்ப  மறுத்தது, இதற்கும் வேறொரு முக்கிய காரணம் ஒன்றுண்டு.  அங்குள்ள பாதுகாப்பு மற்றும் வசதி குறைபாடுகளே முக்கிய காரணமாக இருந்தது.  குறிப்பாக பிரெஞ்சு நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்த ரீயூனியன் தீவுக்கு சென்ற தமிழர்களில் பெரும்பாலோனார் இறந்துபோயினர். 

 
old+tamil+nadu+map+deviyar+illam.jpg
 
ஆனால் பிரான்சு நெதர்லாந்து, டென்மார்க் அரசின் கட்டிப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசங்களின் பின்னால் உருவான் உடன்பாட்டின் அடிப்படையில் இங்குள்ளவர்களை பிரிட்டன் அரசாங்கம் செல்ல அனுமதி கொடுத்தது. 1860 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசு பிரான்ஸ அரசுடனும் அதனைத் தொடர்ந்து டென்மார்க், நெதர்லாந்துடனும் உடன்படிக்கை ஏற்பட்டு 1861 ல் அனைத்து பிரெஞ்சு குடியேற்றங்களுக்கும் குடிபெயர்வோர் நலம் காக்க அங்கங்கே அலுவலகமும், பிரிட்டீஷ் தூதர்களும் நியமிக்கப்பட்டனர்.  குடிபெயர்தலுக்கான ஆட்களை மூன்று விதமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


ஒப்பந்தக்கூலி முறை, கங்காணி மற்றும் மேஸ்திரி முறை,     இதன்படி ஒவ்வொரு கிராமத்திலிருந்து ஆட்களை சேகரித்தனர். ஆமாம் உண்மையிலேயே பொருட்களை சேகரிப்பது போலவே நடந்து கொண்டனர். அதற்கும் காரணங்கள் உண்டு.  தொத்தல், வத்தல், உழைக்க முடியாத வலுவில்லாதவர்களை திருப்பி அனுப்பி விடுவர்.  இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மூளைச்சலவை செய்ய தனிநபர்கள் இதற்கென்று இருப்பார்கள். பெரும்பாலும் நல்ல சம்பளம், சாப்பாடு மற்றும் தங்குமிடம் இலவசம் என்பதோடு சென்று வரக்கூடிய கப்பல் பயணக்கட்டணமும் இலவசம் என்று பலவிதமான ஆசை வார்த்தைகளால் ஆட்கள் சேகரிக்கப்பட்டது..


ஓப்பந்தக்கூலி மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் செல்லும் இடங்களில் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். முதலில் சேர்ந்த வேலையிலிருந்து வேறு வேலைக்கு மாற்றிக் கொள்ள முடியாது. மனைவி மக்களையும் அழைத்துச் செல்லலாம்.  ஐந்து ஆண்டு காலம் முடிந்தவுடன் ஒப்பந்தத்தை புதுபித்துக் கொள்ளலாம்.  விரும்பாவிட்டால் சொந்த நாட்டுக்கே திரும்பி விடலாம்.
 
%25E0%25AE%2585%25E0%25AE%2595%25E0%25AE
 
 
ஆனால் கங்காணி முறையென்பது பெரும்பாலும் சிலோனுக்கு அங்குள்ள காபி தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய ஆட்களை தேர்ந்தெடுக்க பயன்பட்டது ஏற்கனவே அங்கே தோட்டத்தில் பல வருடங்கள் பணிபுரிந்தவர்கள் இங்கே கங்காணிகளாக இருந்தனர்.  கங்காணி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கான ஒப்பந்தங்கள் செல்லும் இடங்களிலேயே உருவாக்கப்பட்டது.  பெரும்பாலும் இதன் மூலம் இடைத்தரகர்களாக இருந்தவர்களே பயன்பெற்றனர். இங்கேயிருந்து தேர்ந்தெடுத்து சென்றவர்களுக்கு அங்கே சென்ற பிறகே அது வாழும் நரகம் என்பதை உணர்ந்து கொண்டனர்.  ஆனால் எக்காரணம் கொண்டும் திரும்பி வர முடியாது.  அதற்கென்று அங்கங்கே ஆப்பு அடித்து வைத்திருந்தனர்.  வேலை செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொண்டு மேலோகம் சென்று விட வேண்டியதுதான்.
 
பிரிட்டன் அரசாங்கம் பிரெஞ்சு நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவுடன் தமிழ்நாட்டில் ஆங்காங்கே குடிபெயர்வு முகவர் மையங்கள் உருவாக்கப்பட்டது.  இது முதல் முதலாக சென்னையிலும், பாண்டிச்சேரியிலும் திறக்கப்பட்டது.


சென்னை மாகாணத்தில் இணைந்திருந்த தெலுங்கு மக்கள் பெரும்பாலும் பர்மா, அசாம் பகுதிகளுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டியதால் பெரும்பாலான பிரெஞ்சு குடியேற்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் தமிழர்களாகவே இருந்தனர்.  1861 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் பிரெஞ்சு ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு வருடமும் 12000 பேர்களை பிரெஞ்சுகாரர்கள் கொண்டு செல்ல முயற்சித்தாலும் அடுத்த ஐந்து வருடங்களும் ஏறக்குறைய பாதி அளவுக்குத்தான் ஆட்களை திரட்ட முடிந்தது,.  இதன் தொடர்ச்சியாக வலுக்கட்டாயமாக, ஏமாற்றி அழைத்துச் செல்லுதலும் நடைபெற்த் தொடங்கியது.
 
குடிபெயர்வோர் தங்கிச் செல்ல துறைமுக நகரங்களில் கூலி முகாம் இருந்தன.  இதனை டெப்போ என்றழைக்கப்பட்டது.  ஒவ்வொரு பகுதியிலும் இருந்து கொண்டு வரப்படுவர்களை இங்கே தான் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களை கொண்டு செல்லும் கப்பல்கள் தாமதமாக வரும் போது பல சமயங்கள் ஒரு வாரங்கள் முதல் பத்து நாடகள் வரைக்கும் இங்கே தான் தங்கியிருக்க வேண்டும். இதுவும் ஒரு வகையில் வாழப்போகும் நரக வாழ்க்கைக்கு தேவைப்படும் ஒரு பயிற்சி களமாகவே இருந்தது. 
 
இங்கே கொண்டு வரப்படுவர்களை கடல் பயணத்திற்கு ஏற்றபடி இவர்கள் உடல் நலன் இருக்கிறதா என்பது தொடங்கி உடல் வலு, வேறு எந்த தொற்று நோயும் இருக்கிறதா என்பது வரைக்கும் இங்கு இதற்கென்று இருக்கும் மருத்துவர்களால் சோதிக்கப்படும்.  இதில் தகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மட்டுமே கடல் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  

தொடக்கத்தில் பிரிட்டீஷ் ஆளுமையில் இருந்த பகுதிகளில் செல்பவர்களின் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருப்பதாக உருவாக்கப்பட்டது. காரணம் செல்லும் இடங்களில் பெண்கள் இல்லாத காரணத்தினால் பல பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியது.  அவரவர்களும் காஞ்ச மாடு கம்புல விழுந்த கதையாய் பல அல்லோகல்லமாய் வினோத செயல்பாடுகள் உருவாகியது.  இதற்காகவே பெண்கள் இத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தனர்.


ஆனால் கிராமங்களில் இருந்த ஆணாதிக்க வாழ்க்கை முறையில் பெண்களை திரட்டுவது கடினமாக இருந்தது. இதற்கும் தரகர்கள் அடுத்த பைபாஸ் வழியை கண்டுபிடித்தனர். வெவ்வேறு பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் தாங்களே முன்வந்து இது போன்ற டெப்போவுக்கு வரத் துவங்கினர். ஏற்கனவே வந்த ஆண்களுக்கு இந்த பெண்களை மனைவியாக மாற்றி சான்றிதழ் தயார் செய்து அனுப்பினர்.  இதற்கு பெயர் டெப்போ திருமணம் என்றழைக்கப்பட்டது. 

ஒரு டெப்போ எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டதிட்ட்ங்கள் பெயருக்கென்றே தான் இருந்தது.  சிறைச் சாலையை விட கொடுமையாக இருந்தது. இங்கேயே சுகாதார கேட்டினால் பலரும் இறந்து விடுவதும் வாடிக்கையாக இருந்தது. 
 
 
 
1859 ஆம் ஆண்டு சென்னையில் ராயபுரம் பகுதியில் இருந்து மொரீசியஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லும் டெப்போ தான் மிகப் பெரிதாக இருந்தது.  இங்கேயிருந்து மாதமொன்றுக்கு 3500 பேர்கள் சென்றுகொண்டிருந்தனர்.  இராயப்பேட்டை சாலையில் இருந்த மற்றொரு டெப்போவிலிருந்து டிரினிடாட் நாட்டுக்குச் செல்பவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த டெப்போ ஒரு இஸ்லாமியருக்குச் சொந்தமான இடம்.  அடர்ந்த மரங்களும், புதர்களும் நிறைந்த காடு போல இருந்த காரணத்தால் நரிகளும் பாம்புகளும் சர்வசாதாரணமாக இருந்தன.
 
பிரெஞ்சு காலணி நாடுகளுக்குச் செல்பவர்களுக்காகவே சென்னையில் தண்டையார்பேட்டையில் 1863 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இது மொரீசியஸ் டெப்போ இருந்த தண்டையார்பேட்டை நெடுஞ்சாலைக்கு அருகே  2 கிலோ மீட்டர் தொலைவிலும் துறைமுகத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலும் மூன்று கூரைக் கொட்டகைகள் மூலம் உருவாக்கப்பட்டது.  1864 ஆம் ஆண்டு மட்டும் இதே டெப்போவில் மட்டும் இருந்து கிளம்பிய 1780 பேர்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்களே.  இவற்றைத் தவிர நாகபட்டிணத்தில் இருந்த டெப்போக்கள் மூலம் சென்றவர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியா, பினாங்கு பகுதிகளுக்கு சென்றவர்களே அதிகம்.
 
18th+century+ship+deviyar+illam.jpg
 
 
இந்திய பெருங்கடல் இந்திய எல்லைகளிலிருந்து தென்மேற்காக 4000 கீமீ தொலைவில் மொரிசீயஸ் அமைந்துள்ளது. ஆப்ரிக்கக் கண்டத்தின் அருகில் உள்ள 2100 ச கீ மீ பரப்பளவு கொண்ட குடியேற்றம் இது.  இந்தியாவிற்கச் செல்லக் கடல் வழியின் நுழைவாயிலாகக் கருத்ப்பட்ட இந்த நிலத் திட்டினை முதலில் கண்டவர்கள் போர்த்துக்கீசிய மாலூமிகள். 1498 இல் வாஸ்கோடகாமா இத்தீவினைக் கடந்த பீன்னரே அரபிக்கடலில் பயணம் செய்து கோழிக் கோட்டை அடைந்தார். 
 
1598 இல் டச்சுக்காரர்கள் மொரீசியஸை ஆக்கிரமித்துக் கொண்டனர்.  அப்போது ஒரு குடியேற்றத்ததை அங்கே அவர்களால் உருவாக்க முடியவில்லை. 1715 இல் பிரெஞ்சுக் காரர்கள் இத்தீவினை கைப்பற்றினர். ஸாபர்தனாய் முதலாவது ஆளுநராக 1735ல் பொறுப்பேற்றார். அவர் பாண்டிச்சேரியில் இருந்து முதல் முறையாக 169 தமிழர்களைக் கொண்டு சென்று குடியேற்றினார். கட்டிடம் கட்டுபவர்களையும், தச்சுத் தொழிலில் இருந்தவர்களையும் கொண்டு சென்றவர் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்களை கொண்டு போய் சேர்த்தார்.


1810 இல் இத்தீவு பிரிட்டீஷார் கைவசம் வந்த போது 45000 தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஓரளவுக்கு பொருளீட்டியவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வந்து விட பிரிட்டீஷ் அரசாங்கம் அதையும் தடுக்க அடுத்த ஏற்பாடு செய்தது. வருகின்ற கூலியாட்கள் தங்களது சொந்த ஊருக்கே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறக சென்று விடுவதைப் பார்த்த மொரீசஸ் ல் இருந்து தங்களது நாட்டுக்கு திரும்பி செல்வதற்காக வழங்கப்பட்டுக் கொண்டிருந்த இலவச கப்பல் பயண சீட்டை ரத்து செய்தது.
 
பிரிட்டன் அடிமை ஒழிப்பு முறையை கொண்டு வருவதற்கு முன்பே இங்கு குடியேற்றம் தொடங்கி விட்டது. தமிழர்களைத் தொடர்ந்து இங்கு ஆந்திரரும், பீகாரிகளும், வங்காளிகளும், சோடா நாகவுரி மலை நாட்டவரும் குடியேறினர். கல்கத்தா சென்னை போன்ற துறைமுகங்களில் இருந்து போர்ட் லூயி துறைமுகத்தை சென்றடைய 45 முதல் 60 நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது.  ஆனால் நவீன விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சிறிய ரக மற்றும் விரைவு கப்பல்கள் தோன்ற 1865 ஆம் ஆண்டு முதல் பயண நாட்கள் 35  தினமாக குறைந்தது. .
 
மொரீசஸில் 1839 முதல் 1910 வரையிலும் இந்த குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடந்தது. அளவுக்கு அதிகமான ஒப்பந்த கூலிகளாக தமிழர்கள் கொண்டு செல்லப்பட்ட இனி இங்கு வேலை வாய்ப்பு இல்லை என்றதும் குடிபெயர்வுகள் நிறுத்தப்பட்டது.  இதே ஆண்டில் மொரீசஸில்13 636 கூலியாட்களை 46 கப்பல்களில் கொண்டு சென்றனர். அக்காலத்தில் மொரீசியஸில் கடுமையான உணவுப் பஞ்சம் உருவாக ஏற்கனவே அங்கிருந்தவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.  இந்திய துறைமுகங்களில் மொரீசியஸ்க்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் வசதியற்ற கொட்டடிகளில் தங்க வைக்கப்பட்டனர்.  60 பேர்கள் காலரா நோயினால் பாதிக்கப்பட்டனர். 


ஏறக்குறைய இன்று உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருககும் அத்தனை தமிழர்களும் ஆறு தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த தங்களின் மூதாதையர்களுக்கு ரொம்பவே நன்றிகடன் பட்டிருக்க வேண்டும்.  அவர்களின் ரத்தம் தோய்நத உழைப்பு அந்த நாட்டை வளர்த்தது.  கூடவே இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் தலைமுறைகளும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை நவீன வசதிகளுக்கும் இவர்களே காரணம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 


ஒரு வேளை இவர்கள் அப்போதே இறந்து போயிருந்தால்? அல்லது அன்று இவர்கள் வெளிநாடு செல்லாமல் இருந்திருந்தால்?


இன்று பலநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறைகளும்  தமிழநாட்டுக்குள் ஏதோவொரு மூலையில் தான் வாழ்ந்திருக்க முடியும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

Tuesday, September 20, 2011

பிழைப்புத்தேடிச் சென்று பிழையாய் மாறியவர்கள்

 
1830 ஆம் ஆண்டு
.
பாண்டிச்சேரி., பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான பகுதியாக இருந்தது.  அடிமைமுறை ஒழிக்கப்பபடும் முன்பே பிரான்சு அரசு இந்தியர்களை தங்கள் நாடுகளுக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தது, ஒவ்வொரு வருடமும். பாண்டிச்சேரியிலிருந்து ஏராளமானவர்கள் சென்று கொண்டேயிருந்தனர். பாண்டிச்சேரிக்கு அருகே இருந்த தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் இருந்தும் தரகர்கள் மூலம் ஆள்திரட்டி அழைத்துச் சென்றனர்.  முதலில் பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று அதன் பிறகு தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் முறையற்ற வழியில் தான் இது நடந்து கொண்டிருந்தது.  
 
1839 ஆம் ஆண்டு இந்திய அரசு பாண்டிச்சேரி வழியாக இந்தியர்கள் வெளியேறுவதை தடுக்க சட்டதிட்டங்கள் கொண்டு வந்த போதிலும் நிறுத்த முடியவில்லை. வினாஸ் என்ற பிரஞ்சுக்காரன் முதன் முதலாக தென் ஆற்காடு மாவட்டங்களின் உள்ள விவசாய கூலிகளை ஒன்று திரட்டி மொரிசீயஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்க இந்திய அரசு ஈடுபட்ட தரகரையும் பிரஞ்சுகாரரையும் சட்டத்திற்கு புறம்பான செயல் என்று சொல்லி சிறையில் தள்ளியது. பிரான்ஸ் நாட்டுக்கு அருகேயிருந்த பிரஞ்சுக் காலனியான ரீயூனியன் தீவுக்கு சென்னை மாநிலத்தில் இருந்து தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
 
slave+work+deviyar+illam.jpg

தொடக்கத்தில் நீக்ரோ அடிமைகள் பட்ட கஷ்டஙகளைப் போல ரீயூனியன் தீவுக்குச் சென்ற படிப்பறிவற்ற தமிழர்கள் அவதிப்பட்டனர்.  ஆனால் 1861 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசாங்கம் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முறைப்படியாக தமிழர்கள் பிரான்ஸ நாட்டின் ஆளுமையில் இருந்த ரீயூனியன், மார்டினிக், குவாடலுப் போன்ற நாடுகளுக்கு செல்லத் துவங்கினர்.
 
ஆனால் பிரெஞ்சுகாரர்கள் விதிமுறைகளைப் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் தரகர்கள் மூலம் ஆள் திரட்டப்படும். மொத்தமாக ஒரு இடத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். கொண்டு வந்து சேர்த்த கூலியாட்களை மொத்தமாக ஒன்று திரட்டி அவர்களைச் சுற்றி நான்கு புறமும் கயிற்றால் கட்டி விலங்குகளை மந்தை போல் தெருவில் அழைத்துச் சென்று கப்பலில் ஏற்றினர்.
 
ரீயூனியன்
 
64 மைல்கள் நீளமும் இதில் பாதியளவு அகலமுமாக நீள்வட்ட பரப்பில் உள்ள ஒரு தீவு. 
 
reunion+map+deviyar+illam.gif


ஆப்ரிக்கா கண்டத்தின் தென் கிழக்காக மடகாஸ்கரிலிருந்து 640 கீமீ கிழக்கேயும், மொரீசியஸ்க்கு 104 கீமீ தெற்கேயும் உள்ள தீவு. தான் ரீயூனியன்.  
 
ஒரு எரிமலை வெடித்துச் சிதறிய அமைப்பால் உருவானது இந்த தீவு. இத்தீவினை 1646 ஆம் ஆண்டு பிரெஞ்ச மாலுமிகள் கண்டுபிடித்து பூர்பன் தீவு என் பெயரிட்டார். 1665 முதல் குடியேற்றங்களை தொடங்கிய பிரெஞ்சுகாரர்கள் ஆப்ரிக்க நீக்ரோ அடிமைகளைக் கொண்டு வந்தனர்.  1789 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்குப் பினனால் இத்தீவு ரீயூனியன் என்ற பெயர் பெற்றது. 1810 இல் இதனை கைப்ப்ற்றிய பிரிட்டன் மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து பிரான்ஸிடம் கொடுத்தது. 
 
அன்று முதல் இத்தீவு பிரான்சின் குடியேற்ற நாடாகவே விளங்குகிறது.
 
ரீயூனியனின் மைய்ப்பகுதி எரிமலை. 
 
அதனைச் சுற்றியுள்ள கடற்கரையோரச் சமவெளியில் தான் விவசாயம் செய்ய முடியும்.. செயின்ட் செடனிஸ் துறைமுகமே இத்தீவின் தலைநகர்.  
 
அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின் உருவான கூலியாட்கள் தட்டுப்பாட்டினனைப் போக்குவதற்கு பாண்டிச்சேரியில் இருந்து இங்கே ஆட்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டனர்.
 
1830 ஆம் ஆண்டு ஜோசப் அர்கண்டு என்ற வணிகர் தமிழ்நாட்டில் இருந்து 130 கைவினைஞர்களை ரீயூனியர் தீவுக்கு கொண்டு போயிருந்தார். இங்குள்ள தட்ப வெட்ப நிலைக்கு தமிழர்களே பொருத்தமாக இருந்தனர். ஆனால் இங்கு பண்ணையடிமை முறைகளை விட கேவலமாக இருக்க சென்ற தமிழர்களின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயினர். 1882 முதல் இந்திய அரசு தமிழர்கள் ரீயூனியனுக்கு செல்வதை தடை போட்டது.
 
பிரெஞ்சு கயானா 
 
தென் அமெக்கக் கண்டத்தின் வடமேற்கில் பிரிட்டீஷ், டச்சு கயானாக்களக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. கேயேன் என்றும் அழைக்கப்படும் இந்த குடியேற்ற நாட்டின் பெரும் பகுதி சதுப்புநிலமேயாகும். கடற்கரையோரமாக இருந்த பகுதிகள் மட்டும் விவசாயத் தொழில் நடைபெற்றது.  தேவையான உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுயது. பிரேசில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து 
 
பெருங் குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டு இங்கே அனுப்பப்பட்டனர்.. இவ்வாறு வந்த 6000 பேரைப் பயன்படுத்தி பெரும் பண்ணைகள் துவங்கப்ட்டன. இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு சரியான வேலை இல்லாத காரணத்தால் ஆபத்து நிறைந்த தங்கச் சுரங்கங்களுக்கு அனுப்பப்பட்டனர்.  சதுப்பு நில பள்ளத்தாக்கில் முழங்கால் அளவு சேற்றில் நெடுந்தூரம் நடந்து சென்றே அச்சுரங்கங்களை அடைய வேண்டும். நாள் முழுக்க சேற்று மண்ணை அள்ளி வந்து தங்கத்துகள்களை வடிகட்டிப் எடுப்பதே தமிழர்களின் முக்கிய பணியாகும். 
 
ஒப்பந்தக் கூலிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் 1862 ஆம் ஆண்டு இந்திய அரசு இங்கே செல்வதையும் தடை செய்தது.
 
மத்திய அமெரிக்காவின் கரிபியன் கடலில் அமைந்துள்ள மார்டினிக் ஒரு தீவாக இருந்தது. இதனருகில் குவாடலுப் தீவு உள்ளது.
 
1635 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர் வசம் வந்து பல முறை பிரட்டீஷார் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இறுதியில் பிரெஞ்சுக்காரர் வசம் வந்தது.  1814 ஆம் அடிமைமுறை ரத்து செய்யப்பட்ட பின்னர் இத்தீவில் தமிழர்களே ஒப்பந்தக்கூலிகளாக குடியேறினர்.  ரீயூனியன் தீவுக்கு ஆள் பிடித்த பிரெஞ்சு குடிபெயர் முகவர் கேப்டன் பிளாங்க் என்பவே இங்கும் ஆட்களை அனுப்பியவன்.  தலைக்கு 250 பிராங்குகள் தரகுத் தொகையை பெற்றுக்கொண்டு 4000 பேர்களை 6 ஆண்டுகளில் குடியேற்ச் செய்தான்.  முதல் கூலிக்கப்பல் 1853 மே 6 ஆம் நாள் காரைக்காலில் இருந்து சென்றது. 
 
இந்த கூலிக்கப்பல் 318 பேருடன் சென்றது. இங்கு பரவிய காலரா நோயினால் 25 சதவிகித மக்கள் இறந்து போனதால் 1884 ஆம் ஆண்டோடு இதுவும் நிறுத்தப்பட்டது.
 
குவாடலூப். தீவில் 1876 ஆம் ஆண்டு முதல் குடியேற்றம் நடக்கத் தொடங்கியது. நிலப்பரப்பில் பாதிப் பகுதி உயரமான மலைத் தொடர்கள் ஆக்ரமித்து இருந்தது. எரிமலைக்குழம்பு உறைந்து வேளாண்மைக்கு வளம் சேர்க்கும் 
 
இங்கேயிருந்த 95000 ஹெக்டர் நிலப்பரப்பில் கருப்பு காப்பி கோககோ, பருத்தி போன்றவை சாகுபடி செய்யப்பட்டது. 1854 முதல் 1861 பிரிட்டிஷ் பிரான்சு ஒப்பந்தம் ஏற்பட்ட பின்பு தமிழர்களே குடியேற்றப்பட்டனர்.  1874 முதல் பாண்டிச்சேரி வழியாக தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டனர். பிறகு கல்கத்தாவிலிருந்தும் ஒப்பந்தக்கூலிகளை கொண்டு வரப்பட்டனர். 
 
ஆப்ரிக்க கண்டத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது மடகாஸ்கர் தீவு. பெரும் நிலப்பரப்பைக் கொண்டது. 1901 ஆம் ஆண்டு மாதம் ரூபாய் 12 இலவச உடை உணவு தங்குமிடம் என்று ஒரு குடிபெயர்வு முகவர் ஏமாற்றி 735 பேர்களை முதல் முதலாக அனுப்பி வைத்தார். மடகாஸ்கருக்கு குடிபெயர அனுமதி இல்லாத போதும் கூட.
சென்னை துறைமுகத்தில் இருந்து அஸ்ரப் என்னும் கப்பல் வழியாக மடகாஸ்காரில் உள்ள தமத்தவே நகருக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர். அங்கிருந்து தன்னுவரி என்று இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பாறைகளை உடைத்து இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
இரண்டு ஆண்டுகள் பாடுபட்ட தமிழர்கள் ஊதியமின்றி சரியான வசதிகள் இன்றி 700 பேர்கள் இறந்து போனர். மீதியுள்ளர்வர்கள் அங்கிருந்து தப்பி மஞ்சுகா என்னும் இடத்தை அடைந்தனர். வழியெங்கும் பிச்சை எடுத்து அலைந்து திரிந்து கொண்டிருந்தவர்களுக்கு மீண்டும் கல் உடைக்கும் பணியே கிடைத்தது.  
 
அங்கிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜான்சிபார் பகுதிக்கு நாட்டுப்படகு மூலம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு  சென்றடைந்தனர். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர் துணை கொண்டு பம்பாய் வந்தடைந்தனர். அவர்களின் கண்ணீர் கதைகள் ஒவ்வொன்றும் கல்வெட்டு போலவே தமிழர்களின் அவல வாழ்க்கையை நமக்கு நினைவு படுத்தக்கூடியது.
 
slave+tamil+peoples+deviyar+illam.jpg


இன்று காலம் மாறியுள்ளது.  நவீன விஞ்ஞானம் எத்தனையோ மாறுதல்களை நமக்கு வழங்கியுள்ளது.  ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களின் முன்னேற்ற வாழ்வினைப் போலவே முட்டுச்சந்துக்குள் சிக்கிய தமிழினத்தின் எண்ணிக்கையம் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 

 
 
 

Monday, September 26, 2011

வாழ்ந்து கெட்டவர்களின் சரித்திரம்

 

சென்ற அத்தியாயத்தில் தமிழர்கள் பிழைப்புக்காக புலம் பெயர்ந்து அடிமையாக மாறிய அவலத்தைப் பார்த்தோம்.  இந்தியாவில் கல்கத்தா முதல் எல்லா மாநிலங்களில் இருந்தும் பல இடங்களுக்கு புலம் பெயர்ந்தார்கள். முக்கிய காரணம் வறுமை. ஆனாலும் முன்பின் கேள்விபட்டிராத நாடுகளுக்கு ஆட்டு மந்தைகள் போலவே அழைத்துச் செல்லப்பட்ட அத்தனை பேர்களுமே தமிழர்களாகத்தான் இருந்தார்கள்.  
 
இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி நம்முள் எழ வேண்டும்.  எல்லா வசதிகளும் இங்கு இருந்தது. மன்னர்கள் ஆண்ட நாடிது. கங்கை கொண்டான், கடாராம் கொண்டான் என்று இன்று வரைக்கும் பல மன்னர்களின் புகழ்பாடும் சரித்திர குறிப்புகளும் அவர்களின் பெருமையை பறைசாற்றுகின்றது. 
 
ஏனிந்த அவலம் உருவானது?
 
அபரிமிதமான மனித சக்திகளும், மற்ற நிலவள, நீர்வள ஆதாரங்களும் இருந்த போதிலும் ஏன் இந்தியாவில் குறிப்பாக தமிழர்கள் தங்களின் வாழ்க்கைகாக அடிமையாக மாறினார்கள்? 
 
சற்று பின்னோக்கி பார்த்து விட்டு வந்து விடலாம். 
 
இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல் என்ற வஸ்துவுக்காகவும், இன்னபிற தங்களின் சுயலாபத்துக்காவும்  அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகள் எந்த அளவுக்கு கீழ்தரமாக இறங்கி, வலிமை குறைந்த நாடுகளின் மேல் தங்கள் அரசியல் அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  அந்தந்த நாடுகளையும், நாட்டு மக்களையும் பாடாய் படுத்திக் கொண்டிருப்பதையும் நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டுருககிறோம் என்பதையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். 
 
இதே வேலையைத்தான் பிரிட்டன் அரசாங்கம் அப்போது இந்தியாவில் தொடங்கி வைத்தது.  
 
எப்படி தொடங்கினார்கள் என்பதை பார்த்து விட்டு நகரும் போது நமக்கு இந்த அடிமைகள் எப்படி உருவானார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

indian+village+deviyar+illam.jpg

ஆரியர், யவனர், சகர், கூர்ஜரர், ஜாட், ஆபிரர், ஹுணர்கள், அராபியர், துருக்கியர் முதல் பின்னால் வந்த எத்தனையோ சிறு சிறு இனங்கள் கால மாற்றத்தில் இந்தியாவிற்குள் வந்தனர். ஒவ்வொருவரும் உள்ளே வந்ததும் முடிந்தவரைக்கும் தங்களது காலணியை உருவாக்கிய போதிலும் அடுத்து வந்தவர்களிடம் ஆட்சியை பறிகொடுத்து விட்டு நடையை கட்டத்தொடங்கினர்.  ஆட்சி பறிபோனதும் தங்களை ஒரு இனமாக கருதிக் கொண்டு உள்ளே வாழ்ந்து கொண்டிருந்த மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்டனர். 
 
இந்தியா என்பது எப்போதும் போலவே அகண்ட தேசமாகவே இருந்தது.  உள்நாட்டுப் போர்கள் முதல் வெளிநாட்டில் இருந்து வந்து யுத்தம் தொடுக்கும் அந்நிய படையெடுப்பாளர்கள் வரைக்கும் ஒவ்வொன்றையும் சந்தித்துக் கொண்டேயிருந்தாலும் அடிப்படை கிராம அமைப்பில் எந்த மாற்றமும் நடந்து விடவில்லை.  இங்கு பசி, பட்டினி, பஞ்சம், புயல் என்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் பஞ்சமில்லை.  
 
மக்களும் பல சமயங்களில் பஞ்சை பராரி போலவே தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டு இதுவும் கடந்து போகும் என்பதாகத்தான வாழ்ந்து கொண்டிருந்தனர். இயற்கை மற்றும் செயற்கை காரணங்களினால் எத்தனை பிரச்சனைகள் இந்தியாவை தாக்கிக் கொண்டிருந்தாலும் 19 ஆம் நூற்றாண்டு வரைக்கும் இந்தியாவின் உள்கட்டமைப்பு கலாச்சாரத்தை பெரிய அளவுக்கு சிதைத்து விடவில்லை என்பதும் உண்மையே. 
 
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் இருந்து சுற்றிக் கொண்டே கைராட்டினமும், கைத்தறியும் தொடந்து ஓடிக் கொண்டேதான் இருந்தது.  இயக்குவதற்கு தேவைப்படும் மனித சக்திகளுக்கும் பஞ்சமில்லை.
 
பழைய காலத்தில் ஃபினிஷியன், கிரேக்க, ரோமனிய, அரேபிய வியாபாரிகளின் மூலம் இந்தியத் துணிகளையும், மற்ற உபயோகப் பொருட்களையும் ஐரோப்பா வாங்கிக் கொண்டு விலையுயர்ந்த ரத்தினங்களையும், பல்வேறு விதமான கனிமப் பொருட்களையும் இங்கே கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தனர்.  எல்லாமே பண்டமாற்று முறையில் நடந்த கொண்டிருந்தது. 
 
mughal_empire+deviyar+illam.jpg

தங்கத்தின் மீதிருக்கும் ஆசை இன்று நேற்றல்ல ஆதிகாலம் தொட்டே இருந்தது.  மன்னர்கள் முதல் வேத புரோகிதர்கள் வரை ஒவ்வொருவருக்கும் இருந்த இந்த ஆசைகளே பலரையும் இங்கே வரவழைத்தது. இந்தியாவிற்குள் வந்திறங்கும் ஒவ்வொரு வணிகர்களின் நோக்கமும் பண்டமாற்று முறை மூலம்  நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.  
 
ஆனால் நம்ம பிரிட்டன் மக்கள் கெட்டிக்காரர்கள் தானே?  
 
வைத்தார்கள் ஒரு பெரிய ஆப்பு.  
 
ஒவ்வொரு இடமாக கைவைத்து கலகலக்க வைப்பதை விட மொத்தமாக ஒரே இடத்தில் கைவைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தனர்.  
 
அதைத்தான் செயல்படுத்தத் தொடங்கினர்.
 
இதைப்பற்றியும் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள சில ஆதார சரித்திர குறிப்புகள் இருக்கிறது. 
 
1853 ஜுன் மாதன் 25ல் நியூயார்க் ட்ரிப்யூன் பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளியானது.  ஏறக்குறைய இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட சிப்பாய்கள் கலகம் நடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலே வெளிவந்தது. கட்டுரையின் தலைப்பு " இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி " என்ற பெயரில் வெளிவந்தது.  அதில் வந்துள்ள கட்டுரை பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியது. 
 
கட்டுரையில் என்ன இருந்தது என்பதை கடைசியில் பார்க்கலாம்.  
 
முதலில் நமது இந்தியாவில் இருந்த சமூக அமைப்பு எப்படியிருந்தது என்பதை பார்த்து விடலாம்.
 
ஒரு கிராமம் என்பது பூகோள ரீதியில் நூறு ஏக்கர் முதல் ஆயிரத்திற்கும் மேற்றபட்ட ஏக்கர்களை கொண்டதாக இருந்தது.  இதில் விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் இருந்தது.  ஏறக்குறைய இது போன்ற சிறுசிறு கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டதாக ஒரு சிறுநகரம் உருவாகியிருந்தது.  ஒரு கிராமத்தின் நிர்வாக அமைப்பினை கிராம முன்சீப் கவனிக்கின்றார்.  இவரே கிராமத்தின் அத்தனை பிரச்சனைகளையும் கவனிக்கின்றார்.  மேலும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் பழகி வைத்திருப்பதன் காரணமாக இவருக்கு நிர்வாகம் செய்வதில் எந்த பிரச்சனையும் உருவாவதில்லை. உடனடி தீர்வுகள் மூலம் ஒவ்வொரு கிராமத்தின் அமைதியும் நிலைநாட்டப்படுகின்றது.  
 
முறைப்படியான வரிவசூல் முதல் தனிப்பட்ட விரோதங்களை நீக்குவது முதல் இந்த கிராம முன்சீப் சிறப்பாகவே செயல்பட்டன்ர்.  கிராமத்தில் உள்ள கணக்குபிள்ளைகளை கர்ணம் என்று அழைக்கப்படுகின்றார். இவரே அந்த கிராமத்தில் இருக்கும் மொத்த வயல்களின் நீளம் அகலம் போன்ற கணக்கு வழக்குகளை கையாண்டு கொண்டிருப்பவர்.  இது தவிர கிராமத்திற்கென்று இருக்கும் வெட்டியான்கள் தனிப்பட்ட முறையில் உள்ளே நடக்கும் சங்கதிகளை உளவு பார்த்து கிராம முன்சீப்பிடம் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தனர்.  இது தவிர தோட்டி என்பவன் தனியாக உண்டு.  
 
இவன் இரண்டு கிராமங்களுக்கும் இடையே உள்ளே எல்லைகள் முதல் வயல்களுக்கு பாதுகாப்பு வரைக்கும் போன்ற மற்ற விசயங்களுக்கு ஆதாரமாக இருந்து தனது பணியை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருந்தான். 
 
old+indian+peoples+deviyar+illam.jpg

இரண்டு கிராமங்களுக்கிடையே எல்லைப் பிரச்சனை மற்றும் நீர் சம்மந்தமான பிரச்சனைகள் உருவானால் இவனே சாட்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்தான்.  ஏரிகளை, நீர்நிலைகளை காவல் காப்பதும் இவனின் பொறுப்பாகும்.  ஒவ்வொருவரின் வயல்களுக்கும் நீரை பங்கீட்டு அளிப்பது முதல் கண்மாய் பாதுகாப்பது வரைக்கும் இவனின் பொறுப்பாகும்.
 
பிராமணன் மொத்த கிராமத்து மக்களுக்கு பூஜை செய்பவன்.  கிராம ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு மணலில் எழுத்துக்களை எழுதி கற்றுக் கொடுப்பவர். ஊருக்குள் இருக்கும் ஜோதிடர் கிராமத்து மக்களுக்கு சகுனங்களை தெரிவிப்பவர்.  
 
மொத்ததில் ஒவ்வொரு கிராமத்திலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு வெளியே என்ன நடக்கின்றது என்பது குறித்து கவலைப்பட்டுக் கொள்வதில்லை.  அந்நிய படையெடுப்பா, மன்னரா, குறுநில மன்னரா என்பது போன்ற தேவையில்லாத விசயங்களில் கவனம் செலுத்துவதும் இல்லை அது குறித்து அலட்டிக் கொள்வதும் இல்லை.  
 
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலையில்லை என்பது போலவே அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்னர்.
 
இடையில் வரும் பஞ்சம், வறுமை, கொடிய நோய்கள் என்று ஒவ்வொன்றாக கிராமத்தை தாக்கிவிட்டு ஏராளமாக மனித உயிர்களை காவு வாங்கிய போதில் அடிப்படை கிராம மக்களின் சிந்தனைகளில் எந்த மாற்றமும் உருவாகவில்லை.  கட்டுக்கோப்பு என்பதாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர்.  
 
மேல்மட்ட அளவில் உள்ளவர்கள் அடித்துக் கொண்டு செத்தனரே தவிர அது போன்ற எந்த விசயங்கள் கிராமத்திற்குள் வருவதுமில்லை. கிராமத்தின் உள்ளே வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு எந்த தாக்கத்தையும் உருவாக்கவுமில்லை. 
 
ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து ஒவ்வொரு பகுதியை சுற்றிப் பார்த்த போது தான் இந்த அருமை பெருமைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கினர்.  
 
இப்போது மேலே சொன்ன கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த முக்கிய சராம்சத்தை பார்த்துவிடலாம்.
 
" இந்தச் சிறய அசைவற்ற சமுதாய அமைப்பு இப்பொழுது பெரும் பகுதி அழிந்து விட்டது.  அல்லது அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு காரணம் பிரிட்டனின் வரி வசூலைக் காட்டிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களை விடவும் பிரிட்டிஷாரின் நீராவி இஞ்சினும், சுதந்திர வணிகக் கொள்கையுமேயாகும் என்று நியூயார்க் ட்ரிப்யூன் பத்திரிக்கையில் கட்டுரையாக வந்தது. 
 
இது போன்ற ஒரு அமைப்பில் வாழ்ந்து கொண்டிருந்த கிராமத்து மக்களை ஒரே நாளில் அடிமையாக்கி விட முடியுமா?  கிராமத்து அடித்தள விசயங்களில் கைவைக்காமல் சுற்றிலும் உள்ள விசயங்களில் கவனம் செலுத்தினர். மெதுமெதுவாக இந்த சமூக அமைப்பை குளறுபடியாக்கி தெளிந்த குளத்தை சேறாக மாற்றத் தொடங்கினர்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard