New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழந்தமிழர் கடல் வணிகம்- கணியன்பாலன்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
பழந்தமிழர் கடல் வணிகம்- கணியன்பாலன்
Permalink  
 


 


-- Edited by Admin on Monday 14th of March 2016 11:46:52 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

தமிழர் வணிகம்-திருமதி. இலட்சுமி:

 பண்டைய தென்னிந்திய வணிகம் குறித்த தனது கட்டுரையில் திருமதி இலட்சுமி அவர்கள், தொல்லியல், கல்வெட்டுகள், மொழியியல் சான்றுகள், வரலாற்று நூல்கள், மனித இன ஆய்வு, சமயத் தொடர்பு போன்ற பலகோணங்களில் ஆய்வு செய்து, மிகப் பழங்காலத்தில் இருந்தே தமிழகம் கடல் வணிகம் செய்து வருகிறது என உறுதிபடக் கூறுகிறார். அவரது தரவுகள் சிலவற்றை காண்போம்.

எகிப்தின் 17 ஆவது அரச வம்சம் நிறைய யானைத் தந்தங்களைப் பெற்ற தற்கான ஆவணங்கள் உள்ளன. மேலும் அதனால் ஆன பொருட்களான மேசை, நாற்காலி, சிலை போன்றவற்றைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. ஆப்பிரிக்கக் காடுகளை விட தென்னிந்தியக் காடுகளில் யானைகளைப் பிடிப்பது எளிது. எனவே இவை தென்னிந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் வந்துள்ளன. எகிப்திய 18வது அரச வம்சம் மதிப்பு மிக்க கற்கள், வாசனைப் பொருட்கள், தந்தங்கள், தங்கம், கருவேலம்பட்டை, மனிதக்குரங்கு, குரங்கு, நாய், புலித்தோல் முதலியவற்றை அரேபியர்கள் மூலம் பெற்றதற்கான குறிப்புகள் உள்ளன.

 இந்தியாவோடு அசீரியா கொண்ட வணிகத் தொடர்பு குறித்து, கிட்டிட்டி (Hittiti) அரசனான மிட்டானியுடைய (Mitani) கி.மு.14ஆம், 15ஆம் நூற்றாண்டை சார்ந்த கியூனிபார்ம் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. அதே காலத்தைச் சார்ந்த அசீரிய அரசனான டிக்ளத் பைல்சர்-3 (Tiglath pileser) உடைய நிம்ருட் (Nimrud) எழுத்துப் பொறிப்புகளில், இந்தியப் பொருட்களான துணிகள், நறுமணப் பொருட்கள் முதலியனவற்றை யக்கிம் (Yakim) என்ற அரசன், அசீரிய அரசனுக்கு பரிசாக வழங்கியதற்கான குறிப்புகள் உள்ளன.

எகிப்தின் 20 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்த இரமேசஸ்-3 (கி.மு.1198-1167) என்பவரும், எகிப்தின் 28 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்தவர்களும் தென்னிந்திய பொருட்களை பெற்றதாகக் குறிப்புகள் உள்ளன. திருமதி இலட்சுமி அவர்கள் தந்துள்ள தரவுகள் பல முன்பே தரப்பட்டுள்ளதால் அவை இங்கு தவிர்க்கப் படுகின்றன்.

 தமிழகப் பரதவர்கள் தங்கள் படகுகள் அல்லது சிறு கப்பல்கள் மூலம் பாரசீக வளைகுடா, ஏடன், கிழக்கு ஆப்பிரிக்கத் துறைமுகங்களுக்கு தமிழக, தென்கிழக்கு ஆசிய பொருட்களைக் கொண்டு சென்று ஒப்படைக்க, அதனைப் பெற்றுக் கொண்ட பொனீசியர்களும், அரேபியர்களும் அவைகளை எகிப்துக்கும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் மிகப் பழங்காலத்திலேயே கொண்டு போய்ச்சேர்த்தனர் என்பதை சில ஆதாரங்களுடன் திருமதி. வி.டி. இலட்சுமி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.(Source: E- Document-Trade, Ancient south Indian commerce – Srimathi. V. T. Lakshmi)

பெருங்கற்கால குறியீடுகள்:

 தமிழத்தில் உள்ள பெருங்கற்படை சின்னங்களிலும், முதுமக்கள் தாழிகளிலும் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகள், மட்பாண்டங்கள், அணிகலங்கள், முத்திரைகள் போன்ற பொருட்களிலும், நாணயங்களிலும், கல்வெட்டுகளிலும், தமிழி எழுத்துகளோடும் குறியீடுகள் உள்ளன. இக்குறியீடுகள் பண்டைய நாகரிகங்களில் உள்ள குறியீடுகளோடு ஒப்புமை கொண்டுள்ளன. இவை முக்கியமாக சிந்துவெளி எழுத்துக்களோடு நெருங்கிய தொடர்பு உடையனவாக உள்ளன.

 இவை குறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “பண்டைத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும் “ என்ற நூலில் கீழ்க்கண்ட தரவுகளை வழங்குகிறார் முனைவர் இராசு பவுன்துரை அவர்கள்.

சுமேரியன், அக்கேடியன், ஹிட்டடைட் ஆகிய மூன்று தொன்மையான மொழி எழுத்து மரபுகளுடன் பெருங்கற்காலத் தமிழகக் குறியீடுகளின் வடிவங்கள் ஒப்புமை உடையனவாக உள்ளன. (பக்:237)

சுமேரிய-எகிப்து மொழியில், இலினியர்(Linear-B) எழுத்துமுறை கலந்திருப்பதாகவும், இலினியர் எழுத்துக்களில் 87 குறியீடுகள் உயிர்மெய் எழுத்துக்கள் எனவும், அந்த 87 எழுத்துக்களும் தென்னிந்தியக்குறியீடுகள், வரிவடிவங்களோடு ஒப்புமை உடையனவாக உள்ளன. (பக்: 248)

தமிழகத்தில் கண்டறியப்பட்ட பண்டைய குறியீடுகளையும், சிந்து வெளிக் குறியீடுகளையும் தொகுத்துக் காணும் பொழுது அவற்றிற்கு இடையே காணப்படும் வரைவு ஒற்றுமைகளும், மொழி, எழுத்து குறித்த சிந்தனைகளும் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்றுத் திகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது. (பக்:252.) மேலும் சிந்து வெளிக் குறியீடுகளின் எழுத்துரு அமைப்பில் தமிழின் தொடர்பையும், தொல் குறியீடாகிப் பின்னர் மொழியாக்கம் பெற்ற தமிழியில் சிந்து வெளிக் குறியீடுகளின் ஒப்புமையும் காணமுடிகிறது. (பக்:253)

தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுக்கும், கி.மு. 500 - கி.பி. 200 ஆம் காலத்திய ஜப்பானிய யாயோய் (Yayoi) பண்பாட்டு மட்பாண்டக் குறியீட்டு வரைவுகளுக்கும் இடையே தெளிவான வடிவ ஒற்றுமை இருக்கிறது.(பக்:230)

சீனம், எகிப்து, இலங்கை, ஜப்பான், கிரேக்கம் ஆகிய நாடுகளின் 130 பழங்காலக் குறியீடுகள் தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.(பக்: 239-244) அதில் எகிப்து நாட்டுக் குறியீடுகளோடு 121 குறியீடுகளும், சீனத்தோடு 103 குறியீடுகளும், ஜப்பானோடு 94 குறியீடுகளும், கிரேக்கத்தோடு 64 குறியீடுகளும் ஒப்புமை கொண்டுள்ளன என்பது கணக்கிட்டு அறியப்பட்டது.

பண்டைய உலக நாகரிகங்களின் சமகாலத்துப் பண்பாட்டிற்கு இணை -யாகவே சங்ககாலத் தமிழகம் திகழ்ந்தது என்பதை, உறுதி செய்யும் வண்ணம் இப்பெருங்கற்காலக் குறியீடுகள் அமைகின்றன(பக்:262).

மேலே தரப்பட்ட முனைவர் பவுன் துரை அவர்களின் தரவுகள் கி.மு.3000 முதல் கி.மு.1500 வ்ரையும், கி.மு.800 முதல் கி.மு. 200 வரையுமான இரு காலத்தைக் கொண்டவை என்றும், இதில் எகிப்து, சிந்து, சீனம், சுமேரியா போன்ற பண்டைய நாகரிகங்கள் முதல் காலத்தையும், இலங்கை, ஜப்பான், கிரேக்கம் போன்ற நாடுகள் இரண்டாம் காலத்தையும் சார்ந்தவை ஆகும் என்றும் அவரே தெரிவித்துள்ளார். (பக்:263)

பண்டைய நாகரிக நாடுகளின் குறியீடுகளோடு கொண்டுள்ள இந்த ஒப்புமையை தற்செயலானவை எனக் கருத இயலாது. பண்டைய தமிழகம் இந்த நாடுகளோடு கி.மு. 3000 முதல் வணிகப் பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டிருந்தன என்பதற்கு இக்குறியீடுகளின் ஒப்புமை ஒரு ஆதாரமாகத் திகழ்கிறது எனலாம்.

தமிழக இலங்கைத் தொல்பொருள் ஆய்வு:

 பண்டைய வணிகம் குறித்து மேலே சொல்லப்பட்ட தரவுகளில், குறிப்பிடப்பட்ட வாணிப பொருட்களில் பெரும்பாலானவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் விளைகிற, உற்பத்தி ஆகிற பொருட்களே ஆகும். பண்டைய காலத்தில் இவை அனைத்தும் சிந்து வெளிப் பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், மேற்குலக நாடுகள் ஆகியவைகளுக்கு தமிழகம் வழியாகவே அனுப்பி வைக்கப்பட்டன.

 தமிழகத்தில் உலோக காலத்துக்கு முந்தைய, மூன்றாம் நிலைக் கற்காலக் கருவிகள் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் கிடைத்துள்ளது. அதன் காலம் கி.மு. 4000 ஆகும். அதன் பின் உலோக காலம் தொடங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை உலோக காலம் பிற இடங்களைப் போல் அல்லாமல், நேரடியாக இரும்புக் கால நாகரிகமாகவே தொடங்குகிறது.( தமிழக வரைவுகளும், குறியீடுகளும்- இராசு பவுன்துரை, பக்: 85-86.)

 இலங்கையின் அநுராதபுரத்தில் ஆதிகால இரும்புப் பண்பாட்டின் தொடக்கக் குடியிருப்புகளின் காலம் கி.மு. 1000 என சிரான் தரணியகல (இலங்கை தொல்லியல் ஆய்வாளர்) தெரிவித்துள்ளதாக, “இலங்கையில் தமிழர்” என்ற தனது நூலில் இந்திரபாலா குறிப்பிட்டுள்ளார்.( பக்.113.) இலங்கையின் வடமேற்குக் கரைக்குத் தமிழ் நாட்டிலிருந்து பரவிய புதிய ஆதி இரும்புக் காலப் பண்பாடு, அவ்விடத்தில் நன்கு வேரூன்றிய பின், உள்ளே பரவத் தொடங்கி அநுராதபுர இரும்புக் காலக் குடியிருப்பு தோன்றியது எனலாம் என்கிறார் இந்திர பாலா. (பக்:110). புதிய ஆதி இரும்புக்கால நாகரிகம் தமிழ் நாட்டில்(ஆதிச்ச நல்லூர்) நன்கு வேரூன்றிய பிறகே, இலங்கையின் வடமேற்கு கரைக்கு(பொம்பரிப்புப் பகுதி) பரவியிருக்க வேண்டும்.

 பொம்பரிப்பு பகுதியில் நன்கு வேரூன்றிய பிறகே அநுராதபுரத்திற்கு பரவி இருக்கவேண்டும். இதற்கு சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். ஆக அநுராதபுர இரும்புப் பண்பாட்டின் தொடக்கக் குடியிருப்பு காலம் கி.மு. 1000 எனில், இலங்கையின் வடமேற்கில்(பொம்பரிப்புப் பகுதி) பரவிய ஆதி இரும்பு பண்பாட்டின் தொடக்க குடியிருப்பு காலம் கி.மு. 1200 ஆக இருக்கவேண்டும். இலங்கையின் இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1200 என்றால், அதற்கு முன் தமிழகத்தின் ஆதிச்ச நல்லூரில் அப்பண்பாடு நன்கு வேரூன்றிய பிறகே இலங்கைக்கு பரவியிருக்க வேண்டும்.

 எனவே தமிழக ஆதி இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இரும்புப் பண்பாடு, தென்னிந்தியாவில் கி.மு. 1200 அளவில் தோன்றியதாகவும், இலங்கையில் கி.மு. 1000ல் தோன்றியதாகவும் கருதப்படுகிறது என்கிறார் இந்திரபாலா.(பக்: 114).

ஆதிச்ச நல்லூர்:

 தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் பெருங்கற்படை சின்னங்களும், தென்கிழக்கு பகுதியில்( ஆதிச்ச நல்லூர்) முது மக்கள் தாழிகளும் தமிழகத்தின் இரும்புப் பண்பாட்டு காலச் சின்னங்களாக உள்ளன. தக்காணத்தில் உள்ள வடபகுதி பெருங்கற்படைச் சின்னங்களின் அகழாய்வு கொண்டுதான் தென்னிந்திய இரும்புக் காலப் பண்பாடு கி.மு. 1200 எனக் கொள்ளப்படுகிறது ஆனால் தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஆதிச்ச நல்லூரில் இது வரை 1%க்கு குறைவான அகழாய்வே நடத்தப்பட்டுள்ளது(தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-கா.ராஜன், பக்:26). அலெக்சாண்டர் ரே அவர்கள் சுதந்திரத்திற்கு முன்பு நடத்திய அகழாய்விற்குப்பின், 2004 இல் தான் மீண்டும் அகழாய்வு தொடங்கப்பட்டது. அதுவும் முழுமையாக நடத்தப்படவில்லை

 ஆதிச்ச நல்லூர் அகழாய்வு இயக்குநர் டாக்டர் சத்யமூர்த்தி அவர்கள், 25.5.2007 இந்து நாளிதழில், பொருள் உற்பத்தி பண்பாடு தெற்கிலிருந்து வடக்கே சென்றிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக, ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த( 1% ஆய்வில்) பொருட்களின் தயாரிப்பில் உள்ள உயர்தொழில்நுட்பம் இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார். தென்னிந்தியாவின் வடபகுதியில் கி.மு 1200ல் தோன்றிய இரும்பு பண்பாடு தெற்கே பரவியதாகவே முன்பு கருதபட்டது.

 தெற்கிருந்து வடக்கே பொருள் உற்பத்தி பண்பாடு பரவியது என்றால், இரும்பு பண்பாடு முதலில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் துவங்கி இருக்க வேண்டும் என்பதோடு அதன் காலம் கி.மு 1200க்கு முன்பாக இருக்க வேண்டும்.. ஆதிச்ச நல்லூர் மற்றும் பிற முதுமக்கள் தாழி உள்ள இடங்களில் அகழாய்வு முழுமையாக நடத்தப்பட்டால் , தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு.1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. இலங்கை, ஆதிச்ச நல்லூர் தொல்லியல் ஆய்வுகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

 இரும்பு காலத்திற்கு முன்பே, புதிய கற்காலத்திலேயே, மனிதர்கள் கடல் பயணம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் மூன்றாம்நிலை புதிய கற்காலம் கி.மு 4000 ஆகும். இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு. 1500ஆகும். ஆக, கி.மு. 4000த்துக்கும், கி.மு. 1500க்கும் இடைபட்ட காலத்தில், தமிழர்கள் கடல் வணிகத்தைத் தொடங்கிவிட்டனர் எனலாம். இரும்பு பண்பாட்டின் துவக்க காலத்தில் இருந்து, இக்கடல் வணிகம் ஒரு வளர்ச்சி பெற்ற வணிகமாக மாறுவதோடு, ஒரு நிலையான, தொடர்ச்சியான வணிகமாகவும் மாறியிருக்கும். அதற்கு பின்னரே இரும்பு பொருட்களின் ஏற்றுமதி தொடங்கி இருக்க வேண்டும்.

 ஆக, பண்டைய தமிழர் கடல் வணிகம் மிகப்பழங்காலத்தில் இருந்து நடந்து வருகிறது என்பதற்கான சில ஆதாரங்களும் காரணங்களும் வருமாறு,

1.பண்டைய நாகரிக நாடுகள் பயன்படுத்திய பொருட்களில் (தரவுகளில் சொல்லப்பட்டவை) பெரும்பாலனவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைகளில் மட்டுமே கிடைப்பவை. ஆகவே, அவை அனைத்தும் தமிழகம் வழியாகவே, தமிழர் கடல் வணிகம் மூலமே மேற்குலக நாடுகளுக்கு கிடைத்துள்ளன.

2.தமிழக பெருங்கற்கால குறியீடுகள், பிற தொன்மையான நாகரிகங்களின் குறியீடுகளோடு ஒப்புமை கொண்டிருப்பது, பண்டைய தமிழகத்திற்கும் பிற தொன்மையான நாகரிக நாடுகளுக்கும் இடையே இருந்த வணிகப் பண்பாட்டுத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

3.பண்டைய தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையும், அதன் பரந்த விரிந்த பரப்பும், தமிழகப் பரதவர்களின் கடலோடும் தன்மையும், பண்டைய தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழ்நிலையும் தமிழகக் கடல் வணிகம் பழங்காலம் தொட்டு நடைபெற ஒரு முக்கிய காரணியாகும்.

4.சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை போன்ற கிழக்குலக நாடுகளுக்கும், சிந்துவெளிப்பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, எகிப்து, பாலஸ்தீனம், ரோம் போன்ற மேற்குலக நாடுகளுக்கும் இடையே ஒரு கேந்திரமான இடத்தில் தமிழகம் அமைந்திருப்பதும் ஒரு காரணமாகும்.

5.தமிழகத்தில், புதிய கற்காலத்தின் மூன்றாம்நிலை காலம் கி.மு. 4000 என்பதும், தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1500 என்பதும், தமிழகம் மிகப் பழங்காலத்தில் இருந்தே கடல் வணிகம் செய்வதற்கேற்ற சூழ்நிலையைக் கொண்டிருந்தது எனலாம்.

 மேற்கண்ட 5 ஆதாரங்களும், காரணங்களும் போக வேறு பல இருக்கலாம் எனினும், இவையே பிரதானமானவைகளாகும்.

 - கணியன்பாலன் 



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

See Below. for the post 

 

Many assumptions. 

Jews of Old Testament is a myth. Israel of  Bible never existed.

 The Temple of Solomon was never constructed. That portion of Jerusalem was occupied only 250 years after Solomon as per Archaeology. 

Read "Bible Unearthed " by Tel Aviv University Archaeology Dept Director's Book. WHICH Says entire OLD Testament is a fertile imagination. 

images?q=tbn:ANd9GcRynyxlKCQ4aj2jBxnauDq7m1mxXbtL8XkF4ilPQEPeXrMvC_Yc



-- Edited by Admin on Monday 14th of March 2016 11:46:16 AM



-- Edited by Admin on Monday 14th of March 2016 11:48:46 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

பழந்தமிழர் கடல் வணிகம் - 3

பழந்தமிழர்களின் வணிகத்தை, முக்கியமாக அவர்களின் கடல்வணிகத்தை அறிந்து கொள்ளவேண்டுமானால் தமிழ் அரசுகள் வெளியிட்ட நாணயங்கள் குறித்தும், தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் குறித்தும் அறிந்துகொள்வது அவசியமாகும். அந்த அடிப்படையில் இக்கட்டுரை தமிழகத்தில் கிடைத்த நாணயங்கள் குறித்துப் பேசுகிறது. அத்துடன் வடநாட்டுடன் தமிழகம் நடத்திய வணிகம் குறித்தச் சில தரவுகளையும் இக்கட்டுரை தருகிறது.

தொன்மையான தமிழக நாணயங்கள்:

தொன்மையான தமிழக நாணயங்கள் குறித்து நாணய வியல் ஆய்வாளரும், தினமலர் ஆசிரியருமான இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது ‘செழிய, செழியன் நாணயங்கள்’ என்கிற நூலில்(முதல் பதிப்பு, ஏப்ரல்-2014) தந்துள்ள பல தரவுகள் குறித்துக் காண்போம். காசுகள் என்பது பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகும். சங்க நூல்களில் இச்சொல் பல முறை வருகிறது. அன்று இக்காசு ஒருவகை அணிகலனாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்காசு வேப்பம் பழம் போன்றும், நெல்லிக்காய் போன்றும் இருந்ததாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. சிறியதாகவும் கோளவடிவிலும் இருந்த பொன்னாலான இக்காசுகள் அன்று வணிகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தொண்மையான நாணயங்கள் குறித்து வால்டர் எலியட் அவர்கள், “தொண்மையான தங்க நாணயங்கள் அனைத்தும் வழுவழுப்பான உருண்டை வடிவில் காணப்பட்டன. இன்னதென்று இனங் காண முடியாத ஒரு சிறு முத்திரைப் பதிவே அவற்றில் இருந்தது. இந்தத் தங்க நாணயங்கள் மிக நீண்ட நெடுங்காலமாகவே வழக்கில் இருந்து வந்திருக்க வேண்டும். அலாவுதீனின் படைகளும் அவனுக்குப்பின் வந்தவர்களும் டெல்லிக்குக் கொள்ளையடித்துச் சென்றவற்றில் பெரும்பகுதி இந்த நாணயங்களாகவே இருந்திருக்கின்றன” என்கிறார் (1.இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களது ‘செழிய, செழியன் நாணயங்கள்’ நூல், பக்: 15; 2.வால்டர் எலியட் - தென்னிந்தியக் காசுகள், பக்: 53) 

தமிழகத்தில் திருநெல்வேலியில் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வாங்கிய தொகுப்பில் தொண்மையான ஆறு சிறிய கோள வடிவ முடைய செப்பு நாணயங்களும், ஒரு வெள்ளி நாணயமும் இருந்ததாகக் குறிப்பிட்டு அதன் முழுத் தரவுகளையும் தனது நூலில் அவர் வெளியிட்டு உள்ளார். இதன் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என்கிறார் அவர். இவை தாமிரபரணி ஆற்றுப் படுகையில் கிடைத்தவை. இந்தச் சிறிய கோளவடிவில் உள்ள நாணயங்களின் விளிம்புப் பகுதியில் ஒரு சிறிய சின்னம் உள்ளது. அதே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் முன்புறம் யானைச் சின்னம் உள்ள தொண்மையான ஐந்து நாணயங்கள் கிடைத்துள்ளன. அதன் பின்புறம் எந்தச் சின்னமும் இல்லை. இந்த ஐந்து நாணயங்கள் குறித்தத் தரவுகளை இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது அதே நூலில் வெளியிட்டுள்ளார். இதன் காலம் சுமார் கி.மு. 5ஆம் 4ஆம் நூற்றாண்டு என்கிறார் அவர். இவைபோக முன்புறம் செழிய என்கிற பெயரும் பின்புறம் யானைச் சின்னமும் உள்ள வெள்ளீயம், செம்பு, பித்தளை, வெண்கலம் ஆகிய உலோகங்களால் ஆகிய 50 நாணயங்களின் தரவுகளையும் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிழற் படங்களோடு தனது அதே நூலில் வெளியிட்டு உள்ளார்கள். இவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என அவர் கருதுகிறார்(அதே நூல், பக்: 18-54).

நீலகிரி வெண்கலக் கிண்ணம் (கி.மு. 500)

coins 211தாமிரபரணியில் கிடைத்த, கி. மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, முன்புறம் செழிய என்கிற பெயரும் பின்புறம் யானைச் சின்னமும் உள்ள வெள்ளீய நாணயம் ஒன்று கல்பாக்கம் அணுசக்தி ஆய்வு நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது எனவும், அதன்படி அந்நாணயத்தில் பெரும்பகுதி வெள்ளீயமும், இரும்பு, நிக்கல், செம்பு முதலியன தலா ஒரு விழுக் காட்டிற்கும் குறைவாகவும் இருப்பதாக அறியப் பட்டுள்ளது எனவும், இந்த வெள்ளீய நாணயங்களை கொற்கைப் பாண்டியர்கள் வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறார் இரா.கிருஸ்ணமூர்த்தி அவர்கள். ஆதிச்சநல்லூரில் பல வெண்கலக் கிண்ணங்கள் கிடைத்துள்ளன. இதனை ஆய்வு செய்த ஆய்வாளர் டாக்டர் சாரதா சீனிவாசன் அவர்கள் இவைகளின் காலம் கி.மு. 1000 ஆம் ஆண்டுவரை இருக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளார். நீலகிரி அகழாய்வில் ஒரு அழகிய வெண்கலக் கிண்ணம் கிடைத்துள்ளது. அதனை ஆய்வு செய்த ஆய்வாளர் டாக்டர் சாரதா சீனிவாசன் அவர்கள் அதன் காலம் கி.மு. 500 க்குள் இருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். (SRINIVASAN, S., HIGH TIN BRONZEBOWL MAKING FROM KERALA, SOUTH INDIA AND ITS ARCHAEOLOGICAL IMPLICATIONS IN SOUTH ASIAN ARCHAEOLOGY, 1993, PP.695, 705).

இந்த வெண்கலக் கிண்ணங்கள், இந்த வெள்ளீய நாணயம் முதலியவற்றுக்கான மூலப் பொருட்களான வெள்ளீயம், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே நேரடியாகக் கொற்கை துறை முகத்திற்குக் கொண்டுவரப் பட்டிருக்க வேண்டும் எனவும், அதற்கு தாய்லாந்து, மலேசியா நாடுகளில் மிகப் பழங்காலத்தில் இருந்து இந்த வெள்ளீயம் மிக அதிக அளவில் கிடைத்து வருவதே காரணம் எனவும், கூறுகிறார் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்(அதே நூல், பக்: 54-57)

முதுகுடுமிப் பெருவழுதியின் நாணயம்:

பிரித்தானிய-ஜெர்மன் ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட இலங்கை அநுராதபுரம் அகழாய்வில் ‘பெருவழுதி’ நாணயங்கள் சில கிடைத்துள்ளன எனவும் அதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும், அந்நாணயங்கள் எல்லாம் சம காலத்தவை எனவும் யாழ்ப்பாணப் ப. புஸ்பரட்ணம் என்பவர் தமிழகக் கடல்சார் வரலாறு என்கிற நூலில் தெரிவித்துள்ளார்(பக்: 24). இந்த நாணயங்கள் பெருவழுதி என்கிற பெயர் பொறித்த நாணயங்களாகும். அதாவது பெருவழுதி என்கிற பாண்டிய வேந்தனால் வெளியிடப்பட்ட நாணயங்களாகும். பெருவழுதி என்கிற பெயர் கொண்ட பாண்டியர்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிலர் இருந்துள்ளனர். ஆனால் நாணயங்கள் எல்லாம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனும்பொழுது, கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெருவழுதி என்கிற பெயர் பெற்றவன் முதுகுடுமிப்பெருவழுதி மட்டுமே ஆவான். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் இவனுக்கு முன் பெரும்பெயர் வழுதி என்கிற ஒருவன் பாண்டிய வேந்தனாக இருந்துள்ளான். அவனது பெயர் பெருவழுதி அல்ல. பெரும் பெயர்வழுதி. அவனுக்குப்பின் வந்தவனே இந்த முதுகுடுமிப் பெருவழுதி ஆவான். இவன் அதிக வேள்விகளையும் செய்தவனாகக் கருதப்படுகிறான்.

ஆதலால் இந்தப் பெருவழுதி நாணயங்கள் முதுகுடுமிப் பெருவழுதி வெளியிட்ட நாணயங்களே ஆகும். முதுகுடுமிப் பெருவழுதி நாணயங்களைத் தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களும் தமிழகத்தில் கண்டறிந்துள்ளார். இதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்கிறார் அவர். முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள், ஆட்சியாளனின் உருவம் பொறிக்கப்படாததாலும், அதன் எழுத்தமைதியைக் கொண்டும் இந்நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என்கிறார். நமது இலக்கியக் கணிப்புப்படி இவனது காலம் கி.மு. 320-280 ஆகும். அதாவது கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு எனலாம்(ஆதாரம்: 1.பாண்டியர் பெருவழுதி நாணயங்கள் – டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி, டிசம்பர்-2013, பக்: 18, 2.Natana Kasinathanan-Tamils Heritage page: 45).

மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள்:

யானைக்கண் சேய் மாந்தரஞ்சேல் இரும்பொறை என்பவன் தான் பத்தாவது பதிற்றுப்பத்தின் பாட்டுடைத்தலைவன் எனக் கருதப்படுகிறான். இவனுக்குப்பின் வந்தவன் பொறையர்களின் இறுதி வேந்தனாக இருந்த கணைக்கால் இரும்பொறை ஆவான். கணைக்கால் இரும்பொறைக்குப்பின் வாரிசுகள் இல்லை என்பதால், கோதைகுல வேந்தர்கள் சேர வேந்தர்களாக ஆகின்றனர். முதல் கோதை குல சேர வேந்தன் கோக்கோதை மார்பன் ஆவான். அவனுக்குப்பின் வந்தவன் தான் கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை என்கிற இரண்டாவது கோதை வேந்தன் ஆவான். இவன் தனது மனைவி இறந்தபின்பும் தான் வாழவேண்டிய துக்ககரமான சூழ்நிலை குறித்தும், உதியன் சேரலாதன் குறித்தும் புறத்தில் பாடியுள்ளான். நமது இலக்கியக் கணிப்புப்படி, கணைக்கால் இரும்பொறைக்கும், கோக்கோதை மார்பனுக்கும் பின் ஆட்சிக்கு வந்த இவனது காலம் சுமார் கி.மு. 135-100 ஆகும்.

coins 424

இவனுக்குப் பின் வந்தவன் தான் குட்டுவன் கோதை ஆவான். இவனே சங்ககால இறுதிச் சேர வேந்தன். இவன் முத்தொள்ளாயிரப்பாடலில் இடம் பெற்றவன். இவனது பெயரில் குட்டுவன், கோதை ஆகிய இரு சேர குலங்களும் சேர்ந்து வந்துள்ளன. நமது இலக்கியக்கணக்குப்படி, இவனது காலம் கி.மு. 100-70 ஆகும். கிரேக்கத் தலைவடிவ நாணயங்களின் மாதிரியில் ஆட்சியாளனின் உருவம் பொறிக்கப் பட்டிருப்பதாலும் அதன் எழுத்தமைதியைக்கொண்டும் தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களும் முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்களும் மாக்கோதை, குட்டுவன்கோதை நாணயங்களின் காலம் முறையே கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டு, கி.மு. 1ஆம் நூற்றாண்டு என்கின்றனர்.( Source: 1.paper on Makkothai coins presented at the first oriented numismatic conference, held at Nagpur, date: 29.10.1990. 2.Natana Kasinathanan-Tamils Heritage page: 45).

தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்:

இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் “பாண்டியர் பெருவழுதி நாணயங்கள்” என்கிற தனது நூலில் (மூன்றாம் பதிப்பு, டிசம்பர் 2013), பல பெருவழுதி நாணயங்கள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் குறித்தும் கூறியுள்ளார். தலைவடிவ நாணயங்களை முதன் முதலில் வெளியிட்டவர்கள் கிரேக்கர்களே எனவும்(பக்: 85), அயோனியன் என்கிற கிரேக்கச் சொல்லில் இருந்துதான் யவனர் என்கிற பெயர் வந்தது எனவும் கிரேக்கத்தொடர்பின் அடிப்படையில் தலைவடிவப் பெருவழுதி நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலமாகக் கருதலாம் எனவும் கூறுகிறார்(பக்: 91). நமது இலக்கியக்கணக்குப்படியும், கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி (கி.மு. 145-130), வெள்ளியம்பலத் துஞ்சிய பெருவழுதி(கி.மு. 115-105) ஆகியவர்களது காலம் கி.மு 2ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலமே ஆகும். ஆகவே இந்த உக்கிரப் பெருவழுதியும், வெள்ளியம்பலத் துஞ்சிய பெருவழுதியும் வெளியிட்டது தான் இந்தத் தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் எனலாம்.

தமிழகத்தின் இதர நாணயங்கள்:

சங்ககாலப் பாண்டியரின் பண்டைய செப்பு நாணயங்களை ஆறு வகையாகப் பிரிக்கலாம். பாண்டியரது நாணயங்களில் ஒருபக்கம் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். 1990-91 ஆம் ஆண்டில் அழகன் குளத்தில் திமிலோடு கூடிய காளை உருவம் நின்ற நிலையில் உள்ள ஒரு நாணயம் கிடைத்துள்ளது. காளையின் முகத்திற்கு கீழே தொட்டி காணப்படுகிறது. இது சிந்துவெளி நாகரிகக் காளையின் உருவத்தோடு ஒப்பிடத்தக்கதாக உள்ளது. இதன் காலம் கிமு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு எனலாம். பாண்டியர்களின் பெருவழுதி நாணயங்கள் குறித்து முன்பே பார்த்தோம். பாண்டிய அரசனது தலைவடிவ உருவம் கொண்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. அதன்காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு எனலாம்(தொல்லியல், பேரா. முனைவர் நா. மாரிசாமி, பக்:257-261)

சங்க கால சேரர்கள் ஐந்து முத்திரைகளைக்கொண்ட வெள்ளி முத்திரை நாணயங்களை வெளியிட்டுள்ளனர். சேரர்களின் நாணயங்களின் பின்புறம் அவர்களின் சின்னமான வில்லும் அம்பும் இருக்கும். இந்த முத்திரைக் காசுகள் அச்சுக்குத்தப்பெற்ற காசுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. சேரர்கள் ஏராளமான பழங்காலச் செப்புக்காசுகளையும் வெளியிட்டுள்ளனர். இவைகளில் ஆறு வகைகள் உள்ளன. கரூரில் மட்டும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட சேரரது செப்புக்காசுகளும், 200க்கும் மேற்பட்ட வெள்ளிக்காசுகளும் கிடைத்துள்ளன. சேரர்களது செப்புக்காசுகளிலும் காளை உருவம் பொறித்தவை உள்ளன. இவைகளின் காலத்தை பாண்டியர் காசுபோல் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு என்லாம். எழுத்து பொறிக்கப்படாத இவைபோன்ற செப்புக்காசுகள் முதல் வகையாகும். இவைபோக மாக்கோதை, இரும்பொறை, கொல்லிப்பொறை கொல்லிரும்பொறை, குட்டுவன் கோதை காசுகள் கிடைத்துள்ளன. சேரர்களின் தலைநகரான் கரூரில் சீனம், கிரேக்கம், உரோம், சிரியா, பொனிசியா போன்ற நாடுகளின் நாணயங்கள் கிடைத்துள்ளன.(தொல்லியல், பேரா. முனைவர் நா. மாரிசாமி, பக்:265-269)

சங்க காலச் சேர, பாண்டியரைப் போன்று அதிக நாணயங்களைச் சங்ககாலச் சோழர்கள் வெளியிடவில்லை. இவர்கள் நாணயத்தின் ஒரு புறம் புலிச் சின்னம் இருக்கும். எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட சோழ நாணயங்கள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. பழங்காலச் செப்பு நாணயங்களே கிடைத்துள்ளன. அவைகளின் காலத்தை கி.மு. 2ஆம், 1ஆம் நூற்றாண்டு எனலாம்(தொல்லியல், பேரா. முனைவர் நா. மாரிசாமி, பக்:278-279)

தாய்லாந்தில் சோழர் நாணயம்:

சோழர்களின் சதுரச் செம்பு நாணயம் ஒன்று தாய்லாந்திலுள்ள இலுக்பாட் என்கிற பண்டைய துறைமுக நகரத்தில் கிடைத்துள்ளது. அதன் முன் பக்கத்தில் குதிரைகள் இழுத்துச்செல்லும் தேர் ஒன்றும் யானை ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பின் பக்கத்தில் சோழர்களின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற நாணயம் தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் தமிழகத்தில் கண்டறியப் பட்டுள்ளது. இந்த நாணயத்தின் காலம் கிமு. 5ஆம் 4ஆம் நூற்றாண்டு ஆகும் என்கிறார், முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள். (Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, p. 46 & Dr. P. Shanmugam, Avanam no: 111, p.82).

எகிப்திய டாலமிகளின் பதக்கம்:

எகிப்திய பதக்கம் (MEDALLION) ஒன்றும் அத்துடன் இரண்டு தங்க மோதிரங்களும், தங்க செயின் ஒன்றும், 6 இரோம நாண்யங்களும் 1932இல் நெல்லை மாவட்டத்தில் கிடைத்தன. இந்த பதக்கம் கி.மு. 284-81 வரை ஆண்ட கிரேக்க டாலமி அரச வம்சத்தார்களது என அதனை ஆராய்ந்து அறியப்பட்டுள்ளது. இதர பொருட்கள் கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளை சேர்ந்தது ஆகும். டாக்டர் சன்னாசு(DR.ZANNAS) என்பவர் எகிப்துக்கும் தென்னிந்தியாவிற்கும், ஆன வணிகத்தைத் தொடங்கியவர்கள் உரோமர்கள் அல்ல எனவும் அதற்கு முன்பே இந்த வணிகம் எகிப்திய டாலமிகளால் தொடங்கப்பட்டு நன்கு வளர்க்கப்பட்டிருந்தது எனவும் இதனை உரோமர்கள் பின் பற்றினார்கள் எனவும் தெவிவித்துள்ளார். ஆகவே எகிப்தியர்களோடு கொண்ட தமிழர்களின் வணிகம் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து நேரடியாக நடந்து வந்துள்ளது எனலாம்( Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, P: 41, 42).

Source: DR. ELKI LAS CARIDES-ZANNAS, GREECE AND SOUTH INDIA, PROCEEDINGS OF THE 5TH INTERNATIONAL CONFERENCE- SEMINAR OF TAMIL STUDIES (1981) VOL.1 SECTION 6, P-25.

DR. R.NAGASAMY SOUTH INDIAN STUDIES(1978) EDITED P-107.

உரோமக் குடியரசு நாணயங்கள்:

கி.மு. 195 முதல் கி.மு. 35 வரையுள்ள 8 உரோமக் குடியரசு நாணயங்களான வெள்ளி நாணயங்கள் நெடும்கண்டம் (NETUMKANDAM) என்ற இடத்தில் கிடைத்துள்ளன. அதுபோன்றே கேரளாவில் கி.மு.2ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த பல உரோமக் குடியரசு நாணயங்கள் கிடைத்துள்ளன என்கிறார் டாக்டர் பி.எல்.குப்தா (DR.P.L. KUPTA) அவர்கள். தமிழகத்தில் கி.மு. 79ஆம் ஆண்டு உரோம நாணயம் ஒன்று கிருட்டிணகிரியிலும், கி.மு. 46ஆம் ஆண்டு உரோம நாணயம் ஒன்று திருப்பூரிலும் கிடைத்துள்ளது என்கிறார் நடனகாசிநாதன் அவர்கள். கி.மு. 300-80 ஆம் காலத்தைச் சேர்ந்த சிசிலி நாட்டு செம்பு நாணயம் ஒன்று தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குக் கிடைத்துள்ளது எனக் கூறுகிறார், முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள். இவைகளின் மூலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்துக்கும் உரோமுக்கும் நேரடி வணிகம் நடந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. அகஸ்டஸ் காலத்திலும் அதன் பின்னரும் நான்குமுறை தமிழகத் தூதர்கள் உரோம் சென்று தமது வணிகத்தை விரிவு படுத்தியுள்ளார்கள் எனத் தெரிகிறது.

1.NETUMKANDAM HOARDS OF ROMAN ‘DINANRII’, PAPER PRESENTED AT V.ANNUAL CONFERENCE OF S.I.N.S HELD AT TRICHY ON 18-19 FEB. 1995 2.DR.P.L. KUPTA , THE EARLY COINS FROM KERALA P.4. DR.T. SATHYA MURTHY. GOLD COINS OF TRAVAN CORE STATE STUDIES IN SOUTH INDIA COINS VOL-2 P.117. DR. T. SATYAMURTHY 3. 3.STUDIES TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 44, 56

இதர வெளிநாட்டு நாணயங்கள்:

இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கரூரில் கிடைத்த கிரேக்க பொனீசியன் நாணயங்கள் குறித்து ஒரு ஆங்கில நூலை (ANCIENT GREEK AND PHOENICIAN COINS FROM KARUR, TAMIL NADU, INDIA.-R. KRISHNAMURTHY, CHENNAI-2009) வெளியிட்டுள்ளார். அதில் உள்ள நாணயங்கள் குறித்து இங்கு காண்போம்.

1. கி.மு. 300ஆம் ஆண்டைச் சேர்ந்த தெராசியன்(THRACIAN) செம்பு நாணயம் ஒன்றும், தெசாலியன் (THESSALIAN) செம்பு நாணயம் ஒன்றும் கரூர் அமராவதி ஆற்றுப் படுகையில் கிடைத்துள்ளன(பக்: 20-23).

2. கிரீட்(CRETE) நாட்டு இரு செம்பு நாணயங்கள் கரூர் அமராவதி ஆற்றுப் படுகையில் கிடைத்துள்ளன (பக்: 25, 26). இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு ஆகும்.

3. நான்கு இரொடியன்( RHODIAN ) செம்பு நாணயங்கள் கரூர் அமராவதி ஆற்றுப் படுகையில் கிடைத்துள்ளன (பக்: 29-31). இந்த நாணயங்களின் காலம் கி.மு. 200ஆம் ஆண்டு ஆகும்.

4. 15 செலூசிட்(SELEUCID) செம்பு நாணயங்கள் கரூர் அமராவதி ஆற்றுப் படுகையில் கிடைத்துள்ளன (பக்: 36-45). இந்த நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு ஆகும்.

5. 11 பொனீசியன்(PHOENICIAN) செம்பு நாணயங்கள் கரூர் அமராவதி ஆற்றுப் படுகையில் கிடைத்துள்ளன (பக்: 49-58). இந்த நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம், 1ஆம் நூற்றாண்டு ஆகும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

கிரேக்க நாணயங்கள்:

கி.மு. 350 முதல் கி.மு. 100 ஆம் ஆண்டு வரை சுமார் 50 கிரேக்க நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன. அவை, கி.மு. KI3AAஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 10 செலூக்கசு-2 (SELEUKOS) நாணயங்களும், கி.மு. 350ஆம் ஆண்டைச் சேர்ந்த சுகைத்தாசு (SKIATHOS) நாணயம் ஒன்றும் (இதுவே மிகப் பழமையான நாணயம்), இவை போக 35 முதல் 40 வரையான கிரேக்க நகர அரசு நாணயங்களும், கிரேக்க அரசர்களின் நாணயங்களும் ஆகும். அதன்பின் கி.மு. 25 வரை கிரேக்க நாணயங்களோ, உரோம நாணயங்களோ தமிழகத்தில் கிடைக்க வில்லை. கி.மு.25க்குப்பின் மீண்டும் உரோம நாணயங்கள் தமிழகத்தில் நிறையக் கிடைக்கின்றன என்கிறார் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். கி.மு. 100க்குப் பிந்தைய உரோமக் குடியரசு நாணயங்களும் தமிழகத்தில் கிடைக்கவில்லை.

கி.மு. 100வரை கிடைத்த கிரேக்க, உரோம நாணயங்கள், அதன்பின் கி.மு. 25வரை கிடைக்காததற்குக் காரணம், கிழக்கு மத்தியதரைக் கடல் நாடுகளில் நடைபெற்றப் போர்களும், இதர அரசியல் பிரச்சினைகளும் சேர்ந்து அங்கு ஒரு நிலையற்ற சூழ்நிலை உருவாகி இருந்ததே ஆகும். அதனால் முறையான வணிகம் நடைபெறவில்லை. ஆதலால் அக்காலத்திய நாணயங்கள் கிடைக்கவில்லை. இவை இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தரும் தவல்கள் ஆகும்(பக்:67-69). தமிழகத்தில் அக்காலகட்ட கிரேக்க நாணயங்கள் கிடைக்கவில்லை, ஆனால் உரோம நாணயங்கள் ஒன்றிண்டு கிடைத்துள்ளன. இவ்விடயம் கி.மு. 100க்கு முன்பே, கி.மு. 2ஆம் 3ஆம் நூற்றாண்டுகளில் கிரேக்க நாடுகளுக்கும் தமிழகத்திற்கும் இடையே நடைபெற்ற நேரடி வணிகத்தை உறுதிப் படுத்துகின்றன எனலாம்.

வட இந்திய வணிகம்:

தலைவன் பொருள் தேடுவதற்காக தலைவியைப் பிரிந்து மொழிபெயர்தேயம்(இன்றைய கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்கள்) கடந்து வடநாடு சென்று பல மாதங்கள் தங்கி இருந்து, வணிகம் செய்தான் என்கிற தகவல் நூற்றுக்கணக்கான சங்ககால அகப்பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாகப் பாலைப் பாடல்கள் பாடிய மாமூலனார் போன்ற சங்ககால புலவர்கள் இச்செய்தியை மிக விரிவாகவும், விளக்கமாகவும் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே மகதப் பேரரசு மட்டுமில்லாமல், இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் தமிழ் வணிகர்கள் நேரடியாகச் சென்று அங்கு தங்கி வணிகம் செய்து வந்துள்ளனர் என்பதை சங்ககால அகப்பாடல்களில் உள்ள குறிப்புகளும், சாணக்கியரின் அர்த்தசாத்திரமும் உறுதி செய்கின்றன. 

தமிழகத்திலிருந்து வணிகம் செய்ய வடநாடு செல்பவர்கள், முதலில் வெய்யூர்(இன்றைய வேலூர்) வழியாக அல்லது கொங்கு நாட்டில் உள்ள தகடூர்(இன்றைய தர்மபுரி) வழியாக வடக்கே சென்று, இன்றைய கர்நாடகத்தைக் கடந்து சாதவ கன்னர்களின் தலைநகராக இருந்த படித் தானம் போய்ச் சேர்ந்தனர். பின் படித்தானத்திலிருந்து தக்காணப் பாதை வழியாக உஜ்ஜயினி முதல் பாடலிபுத்திரம் வரையான வடநாட்டு நகரங்களுக்குச் சென்று வந்தனர். சங்ககாலத்தில் ஆந்திரம், கலிங்கம் வழியாக வடநாடு செல்லும் பாதையும் இருந்துள்ளது. மாமூலனார் தனது அகம்-61, 295, 311, 359, 393 ஆகிய பாடல்களில் புல்லி என்கிற குறுநில மன்னனின் வேங்கட மலையைக்(இன்றைய திருப்பதி) கடந்து மொழி பெயர் தேயம் வழியாக தமிழர்கள் சென்றது குறித்துப் பாடியுள்ளார்.

இவ்வழியில் செல்பவர்கள் கலிங்கத்துக்கு வணிகம் செய்யச் சென்றவர்களாக இருத்தல் வேண்டும். பின் கலிங்கத்திலிருந்து வடநாடு செல்லப் பாதைகள் இருந்தன. ஆனால் கர்நாடகம் வழியாக படித்தானம் சென்று, பின் வடநாடுகள் போகும் பாதையே புகழ் பெற்றத் தக்காணப் பாதையாக இருந்துள்ளது. இந்த ஆந்திர, கன்னட நாடுகளைக் கொண்ட தக்காணப் பகுதியும், இந்த வணிகப் பாதைகளெல்லாம் தமிழகத்தின் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்தது என்றும், இந்தத் தக்காணப் பகுதியில் கொடுந்தமிழே மக்கள் மொழியாக இருந்தது என்றும், தமிழகத்தின் வட எல்லைக்கு அப்பால் வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழி கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொடுந்தமிழாக மாறியது என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

மெகத்தனிசும் சாணக்கியரும் :

சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலத்தில், இந்தியா வந்திருந்த கிரேக்க தூதர் மெகத்தனிசின் காலம் கி.மு.350 முதல் கி.மு.290 வரை எனக் கருதப்படுகிறது. அதே காலகட்டத்தில்(கி.மு.350 முதல் கி.மு.283 வரை) வாழ்ந்தவர் தான் நந்தர்களிடமிருந்து மகத அரசைக் கைப்பற்ற சந்திரகுப்த மௌரியருக்கு உதவிய கௌடில்யர் எனப்படும் சாணக்கியர். மெகத்தனிசு மற்றும் அர்ரியன் என்பவர்கள் எழுதிய தகவல்களைக் கொண்டு 1877ல் “மெகத்தனிசு மற்றும் அர்ரியன் அவர்களால் விவரிக்கப்படும் பழமை இந்தியா” (Ancient India as described by Megasthenes and Arrian” By J.W. Mccrindle, M.A.,) என்kகிற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.

அந்நூலில் “எராக்கிளிசு”(Herakles) என்பவருக்குப் பல மகன்களும், பாண்டைய் (Pandai) என்கிற ஒரு மகளும் இருந்தனர் என்றும், தனது அன்புக்குரிய மகளுக்கு தென்பகுதியிலுள்ள முத்து விளைகிற பாண்டிய நாட்டைக் கொடுத்து விட்டு, இந்தியாவின் வேறு சில பகுதிகளைத் தமது மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டு, தான் பாடலிபுத்திர அரசை வைத்துக் கொண்டார் என்றும், மெகத்தனிசு குறிப்பிட்டுள்ளார். அந்தப் பாண்டிய அரசின் சந்ததிகள் 300 நகரங்களும், 1,50,000 காலாட் படை வீரர்களும், 4000 குதிரைப் படைகளும், 500 யானைகளும் கொண்ட அரசை ஆண்டு வருகின்றனர் என்றும், அங்கு முத்து விளைகிறது என்றும், பாடலிபுத்திர அரசு 6,00,000காலாட்படைகளும், 30,000 குதிரைப் படைகளும், 9000 யானைகளும் கொண்டு ஆண்டு வருகிறது என்றும் குறிப்பிடுகிறார். (நூலின் பக்கங்கள் : 39, 114, 147, 156, 158, 201 to 203)

“மெகத்தனிசும், இந்திய மதமும்” (Megasthenes and Indian Religion) என்கிற நூலை எழுதிய ஆலன் (Allan Dahlaguist) என்பவர் தனது நூலில் மெகத்தனிசு குறிப்பிட்டுள்ள எராக்கிளிசு என்பவன் இந்திரனே என்றும், பாண்டைய் என்ற இளவரசிக்கு வழங்கப்பட்டது பாண்டிய நாடே என்றும், அது கி.மு.400க்கு முன்பிருந்தே இருந்து வருகிறது என்றும், அன்று அங்கு இந்திர விழா கொண்டாடப்பட்டு வந்தது என்றும் விரிவான ஆதாரங்களுடன் நிறுவுகிறார். மேலும் இந்திய வரலாற்றின் தந்தை எனக் கருதப்படும் மெகத்தனிசு பயணம் செய்த இந்தியப் பகுதிகள் குறித்த உறுதியான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவர் பாண்டிய அரசின் தலைநகர் மதுரைக்கு பயணம் செய்ததற்கான தகவல் குறிப்புகள் உள்ளதாகவும் (மதுரை அப்பொழுது வளர்ச்சி பெற்ற விறுவிறுப்பான நகரமாக இருந்தது) விக்கிபீடியா குறிப்பிடுகிறது. அர்ரியன், மெகத்தனிசு, ஆலன் ஆகியவர்களின் மேற்கண்ட பல ஆதாரக் குறிப்புகள் இந்தியாவில் கி.மு.4 ஆம் நூற்றாண்டளவில் மகதப் பேரரசுக்கு அடுத்த நிலையில் பாண்டிய அரசு இருந்தது என்பதையும், கி.மு.4 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பாண்டிய அரசு இருந்து வருகிறது என்பதையும் உறுதி செய்கின்றது.

சாணக்கியன் தனது அர்த்தசாத்திரம் என்கிற நூலில் பாண்டிய நாட்டிலிருந்து பாண்டிய கவாடகா, தாமிரபரணிகா எனப்படும் பல்வேறு வகை முத்துக்களும், பல்வேறு வகை கல்மணிகளும், முசிறி துறையிலிருந்து சௌர்ணியா என்கிற கல்மணிகளும், முத்துக்களும் மகதத்துக்கு விற்பனைக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெண்மையும், மென்மையும் உடைய ‘துகுளா’, ‘வங்கா’ (துகில், வங்கம் ஆகிய தமிழ் சொற்களுக்கு துணி என்பது பொருள்) என்கிற பலவகைப் போர்வைத் துணிகளும்(Wool Fabrics), கருப்பாகவும் மதிப்பு மிக்க நவரத்ன கல்மணிகளின் மேற்பகுதி போன்று மிகவும் மென்மையாகவும் உள்ள “பாண்ட்ரகா” என்கிற போர்வைகளும், கசௌமா, பாண்ட்ரகா, சௌர்ணா குடியகா என்கிற பல்வேறு வகையான ஆடை வகைகளும் (Garments) தமிழ் நாட்டில் உற்பத்தியாகி, மகதத்துக்கு விற்பனைக்கு வருவதாகவும் சாணக்கியர் தனது நூலில் குறிப்பிடுகிறார் (ஆதாரம்: ஆங்கில நூல் கௌடில்யரின் அர்த்த சாத்திரம் (Kautilya’s Arthashastra), ஆங்கில மொழிபெயர்ப்பு திரு. R.சாம சாத்திரி அவர்கள் பக் : 101, 107, 109, 110)

ஆகவே, கி.மு.4-ம் நூற்றாண்டு அளவிலேயே பல்வேறு வகையான முத்துக்களும், நவரத்ன கல்மணிகளும், பல்வேறு வகையான போர்வைத் துணிகளும், பல்வேறு வகையான ஆடை வகைகளும், பல்வேறு வகையான வாசனைப் பொருட்களும் தமிழகத்திலிருந்து முக்கியமாக பாண்டிய நாட்டிலிருந்து பெருமளவில் உற்பத்தியாகி மகதப் பேரரசின் சந்தைகளுக்கு விற்பனைக்கு போயின என்பதை சாணக்கியரின் அர்த்தசாத்திரம் தெரிவிக்கிறது. எனவே, சங்க இலக்கியங்கள் மகத அரசு மற்றும் அதன் தலைநகர் பாடலிபுத்திரம் குறித்தும், அதன் அரச வம்சங்களான நந்தர்கள், மௌரியர்கள் குறித்தும் பேசுகின்றன. அசோகரின் கல்வெட்டும், சாணக்கியரின் அர்த்தசாத்திரமும், மெகத்தனிசின் இண்டிகாவும் தமிழரசுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. அன்று வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்குமிடையே மிக நெருங்கிய வணிகத் தொடர்பும், பண்பாட்டுத் தொடர்பும் இருந்து வந்துள்ளது என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.

மேற்கண்ட தரவுகள் கி.மு. 5ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழகம் மேலைநாடுகளோடும், கீழை நாடுகளோடும், வட இந்தியாவோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

ஆசிரியர் குறிப்பு: வரலாற்றுப்பெரும்புலவர் மாமூலனார் அவர்கள் நந்தர்கள் காலத்திலும், அதன்பின் ஆட்சிக்கு வந்த மௌரியர்கள் காலத்திலும் வாழ்ந்து வந்தவர் ஆவார். அவரது காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு ஆகும். அவரது காலத்தை அடிப்படையாகக் கொண்டும் கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வு முடிவுகள் ஆகியனவற்றைக் கொண்டும் சங்க இலக்கிய நூல்களை ஆதாரமாகக் கொண்டும் கணிக்கப்பட்ட காலமே இங்கு இலக்கியக் கணிப்புக் காலமாகச் சொல்லப்பட்டுள்ளது. சங்ககாலச் சமுதாயமும் அதன் வரலாற்றுக் காலமும் என்கிற எனது ஆய்வு நூலில் இவை குறித்த விரிவான தரவுகள் தரப்பட உள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

பழந்தமிழர் கடல் வணிகம் - 4

சங்க இலக்கியத்தில் வணிகம்: பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து அறிந்து கொள்ள சங்க இலக்கியத்தில் வணிகம் குறித்தும், கடல் வணிகம் குறித்தும் சொல்லப்பட்ட தரவுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆதலால் சங்க இலக்கியத்தில் வணிகம், கடல்வணிகம் முதலியன குறித்துப் பேசப்பட்ட விடயங்களை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

புகார் வணிகர்கள்:

  நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நல்நெஞ்சினோர்

  வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி

  கொள்வதூம் மிகைகொளா கொடுப்பதூம் குறைகொடாது

  . . . . . . . . . . . . . மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

  புலம்பெயர் மாக்கள் கலந்துஇனி துறையும்    

    -பட்டினப்பாலை(வரிகள்: 206-217)

  shipசோழ வேந்தன் இரண்டாம் கரிகாலன் குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது தான் பட்டினப் பாலை. இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு. “உழவர்களின், நீண்ட நுகத்தடியின் நடு போல, நடுவுநிலைமை தவறாத மனம் உடையவர்களாகவும், பழி அஞ்சி பொய்பேசாது மெய்யேபேசி, தம்மையும் பிறரையும், ஒன்றாக மதிப்பவர்களாகவும் இருப்பவர்கள் புகார் வணிகர்கள். தம்முடைய பொருட்களையும், பிறருடைய பொருட்களையும் ஒன்றாக மதிப்பவர் களாகவும் வாங்குகிறபோது அதிக அளவாக வாங்காமலும், கொடுக்கிறபோது குறைந்த அளவாகக் கொடுக்காமலும், பல பொருட்களையும் நியாயமான விலை கூறி விற்கின்றவர்கள் புகார் வணிகர்கள்.

  இவ்வளவு சிறப்புடைய வணிகர்கள் வாழுகின்ற தொண்மையான புகழையுடையது புகார் நகரம். புகழ் சிறந்த, பல நாடுகளில் இருந்து வந்துள்ள, பல மொழிகள் பேசுகின்ற, பல்வேறு மக்களும் ஒன்றுகூடி, உறவாடி மகிழ்ந்து, இனிதுறையும் பெரும்புகழ்ப் பேரூர் காவேரிப்பூம்பட்டினம்” என்கிறார் புலவர். நடுவு நிலைமையும், நேர்மையும், உண்மையும் உடையவர்களாய், நியாய விலைக்கு விற்கின்றவர்களாய் வணிகர்கள் இருக்கவேண்டும் என்கிறார் புலவர். தமிழ் வணிகர்கள் அப்படி இருந்ததால் தான் 500 வருடங்களுக்கும் மேலாக, மேற்கிலும் கிழக்கிலுமாகிய உலகளாவிய வணிகத்தைத் தொடர்ந்து செய்ய முடிந்தது. கி.மு. 500க்கு முன் தொடங்கிய தமிழர்களது உலகளாவிய வணிகம் கி.பி 200 வரை இடைவிடாது தொடர்ந்து நடைபெற்றது எனலாம். பல நாடுகளில் இருந்து, பல மொழி பேசும் மக்கள் வந்து புகாரில் ஒன்றாகத் தங்கி வாழ்ந்தனர் என்கிறார் புலவர். வணிகம் உலகளாவிய அளவில் நடைபெற்றது என்பதை இச்செய்தி உறுதிப்படுத்துகிறது.

புகார் நகரம்:

 பல்வேறு பொருட்கள் நீரின் மீதும் நிலத்தின் மீதும் தமிழகம் வந்தன என்பதைப் பட்டினப்பாலை(வரி: 185-193) ஆசிரியர்,

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும்

அகிலும் தென்கடல் முத்தும் குணகடல்துகிரும் கங்கை வாரியும்

காவிரிப்பயனும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் அரியவும்

பெரியவும் நெரிய ஈண்டி வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு”

  -என்கிறார். அதாவது, “வெளி நாடுகளில் இருந்து கடல்வழி வந்த குதிரையும், உள்நாட்டில் இருந்து தரை வழி வந்த கருமிளகும், வடமலையில் இருந்து வந்து, இங்கு மெருகிடப்பட்ட பொன்னும், மணிக்கற்களும், மேற்கு மலையில் இருந்து வந்த சந்தனமும், ஆரமும், தென்கடலில் தோன்றிய முத்தும், கீழ்க்கடலில் விளைந்த பவளமும், கங்கைக்கரையில் இருந்து வந்த பொருட்களும், காவிரிக்கரை வழங்கிய வளங்களும், ஈழத்து உணவுப் பொருட்களும், கடாரம் தந்த பண்டங்களும், இன்னும் பல நாடுகளில் இருந்து வந்த பல பொருட்களும் கலந்து நிறைந்திருக்கும் அகன்ற பரந்த தெருக்களைக் கொண்ட புகார் நகரம்” என்கிறார் பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

 இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், கிழக்கு மேற்கு நாடுகளில் இருந்தும் பல்வேறு பொருட்கள் தமிழகத்துக்குக் தமிழ் வணிகர்களால் கொண்டுவரப்பட்டு, மதிப்பு ஏற்படுத்தப்பட்டும், நேரடியாகவும் அவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின எனலாம்.

 நீரினின்று நிலத்துஏற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்

 அளந்தறியாப் பலபண்டம் வரம்புஅறியாமை வந்துஈண்டி

 அருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்அணங்கினோன்

 புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிமண்டபம்

 பொதிமூடைப் போர் ஏறி  -பட்டினப்பாலை(வரிகள்: 129-137)

 “பல்வேறு நாடுகளிலிருந்தும் கடல் வழியாகக் கப்பல்கள் மூலம் வந்து இறங்கிய பொருட்களும் (இறக்குமதி), வெளிநாடுகளுக்கு கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவதற்காக உள்நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வந்துள்ள பொருட்களும் என, எண்ணமுடியாத அளவுக்கு பொருட்கள் குவிந்திருக்கும் புகார் நகரத்தில், காவல் மிகுந்த சுங்கச்சாவடி இருக்கும் சாலையில், சுங்கத்தீர்வையைப் பெற்றுக்கொண்டு, சோழப் பேரரசின் இலட்சினையான புலிச் சின்னத்தை அடையாளமிட்டு வெளியே அனுப்புவதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் மலைபோல் தோற்றம் தரும்” என்கிறார் அவர்.

புகார்த் துறைமுகம்:

  ஒரு துறைமுகத்தின் செயல் திறனைக் குறிப்பிடக் கப்பல்கள் வந்து தமது ஏற்றுமதி இறக்குமதி வேலைகளை முடித்துவிட்டுத் திரும்ப ஆகும் நேரத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். அதனை “கப்பல் வந்து திரும்ப ஆகும் நேரம்(SHIP TURN ROUND TIME)” என்கின்றனர். இதற்கென இன்று நமது துறைமுகங்களில் ஒற்றைச் சாளார முறை(SINGLE WINDOW SYSTEM )கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறார் நரசய்யா அவர்கள். இதுபோன்ற ஒருமுறை புகாரில் கையாளப்பட்டது போலத் தெரிகிறது. பெருந்துறைகளுக்கு(BIG WHARF AND BERTHS) அருகிலேயே ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க நல்ல விசாலமான கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன என்றும், பொருட்களுக்குச் சுங்கத் தீர்வைகள் அங்கேயே வசூலிக்கப்பட்டு, புலிச்சின்னம் பொறிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டன என்றும் பட்டினப்பாலை தெரிவிக்கிறது என்கிறார் நரசய்யா அவர்கள்.(நரசய்யா-கடல்வழி வணிகம், பக்: 52,53)

 பலதரப்பட்ட வணிகச் சரக்குகள், வங்கம் என்ற பெருவகைக் கப்பல்களில் வந்திறங்குகையில் எழும் ஓசையை வருணிக்கும், மதுரைக்காஞ்சியின் பாடல், இன்றைக்கும் பெரும் ஓசையுடன் பொருள்களைக் கப்பல்கள் இறக்குவதையே நினைவு படுத்தும் என்கிறார் நரசய்யா அவர்கள்(பக்: 49, 50). மதுரைக்காஞ்சியை எழுதிய மாங்குடி மருதனார் கப்பல்களை நன்கு அறிந்திருக்காவிடில் இவ்வாறு எழுதி இருக்க முடியாது எனவும், கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்குதல் என்பது மக்கள் வாழ்வில் ஒரு சாதாரணமான நிகழ்ச்சியாய் அமைந்திருந்தது எனவும் தெரிவிக்கிறார் நரசய்யா அவர்கள்(பக்: 49, 50). மதுரைக்காஞ்சியை எழுதிய மாங்குடி மருதனாரின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு ஆகும்.

  துறைமுகப் பணித்துறையையும், கப்பல்கட்டுதலையும் அறிந்திருந்த தமிழர், அவற்றை நன்முறையில் வைத்திருக்கவும் கற்றிருந்தனர். பெரும்பாணாற்றுப்படை, பிற நாட்டுக்கப்பல்கள் நம் துறைமுகங்களை அடைய வழிகாட்டியாய் அமைக்கப்பட்டிருந்த கலங்கரை விளக்கங்கள் குறித்துக் கூறுகிறது எனவும், வெளிநாட்டு மாலுமிகள் ஓய்வு எடுத்து தங்குவதற்கு மாலுமி இல்லங்களும், கப்பல்களைச் செப்பனிட கப்பல்பணிமனைகளும், உலர்துறைகளும்(DRY-DOCKS ) இருந்தன எனவும் கூறுகிறார் நரசய்யா அவர்கள்(பக்: 51, 52)

“............கூம்பொடு மீப்பாய் களையாது மிசைபரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலத் தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடல்பல் தாரத்த நாடுகிழ வோய!” -புறம், 30, வரி: 10-15.

  “ஆற்றுமுகத்துவாரத்தில் புகுந்த பெருங்கப்பல்களை, கூம்புடன் மேற்பாயைச் சுருட்டாமலும், பொருட்களின் பாரத்தைக் குறைக்காமலும் இடைவழியில் கொண்டு செல்லும்பொழுது பெருங்கப்பலில் இருந்த பல பண்டங்கள் கடலில் கொட்டுகின்ற வளமிக்க நாட்டினை உடைய சோழ வேந்தனே” என்கிறார் சோழன் நலங்கிள்ளி குறித்துப் பாடிய உறையூர் முதுகண்ணன சாத்தனார். இவரது காலம் கி.மு. முதல் நூற்றாண்டாகும்.

  வரலாற்று ஆராய்ச்சியாளர் இராதா குமுத் முகர்ஜி(Radha kumud Mukherji) அவர்கள், இந்தியக் கப்பலியல்(Indian Shipping) என்கிற நூலில் சங்க இலக்கியத்தின் முக்கியத்துவத்தைக் கூறுகையில், “ சங்க இலக்கியங் களிலிருந்து புகார்த் துறைமுகத்தின் பெருமையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் வாயிலாகத் துறைமுகத்தின் நீள அகலங்களும் நமக்குத் தெளிவாகுகின்றன. இத்துறைமுகத்தில் பெரிய பாய்மரக்கப்பல்கள், தமது பாய்களைத் தளர்த்தாமலேயே நுழைந்தன” என்ற விபரத்தைத் தருகிறார். பாய்மரக் கப்பல்கள், தமது பாய்களைத் தளர்த்தாமலேயே நுழையும் பொழுது, அவற்றின் வேகம் அதிகமாக இருக்கும் சரக்குகளுடன் கப்பல்கள் பளுவாகவும், ஆழமாகவும் மிதக்கும். அவற்றைச் சுலபமாகக் கட்டுப்படுத்த முடியாது. அன்றே பாய்களைத் தளர்த்தாமலேயே நுழைய முடிந்ததெனின் அத்துறைமுகங்கள் நல்ல ஆழமும், பெரிய பரப்பளவும் கொண்டவையாக இருந்திருக்கவேண்டும். ஆகையால் பூம்புகார் மிகப் பெரியதொரு துறை முகமாகத்தான் இருந்திருக்கும் என்கிறார் நரசய்யா அவர்கள்(பக்: 48, 49)

கங்கை ஆற்றில் வணிகப் பயணம்:

 சங்க இலக்கியங்களில் தமிழர் வெளி நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்ததைப் பற்றிய குறிப்புகள் பல உள்ளன எனவும், இவை அயல் நாட்டுப் பயணிகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளன எனவும் அயல்நாடு மட்டுமின்றி தமிழர்கள் கடல்மூலமாக வங்க நாட்டில் கங்கை நதி கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள தாமரலிபதி(TAMRALIPTI) என்ற துறைமுகத்தை அடைந்து, கங்கைநதியில் தமது கலங்களைச் செலுத்தி, வட நாட்டிலுள்ள உள்நாட்டுத் துறைமுகங்களை அடைந்து அங்கும் தமது வணிகத்தை நிலை நாட்டினர் எனவும் தெரிவிக்கிறார் நரசய்யா அவர்கள்(பக்: 59, 60).

  கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பட்டினப்பாலையில் “கங்கைவாரியும் காவிரிப்பயனும்”(வரி: 190) என வரும் வரிகள் கங்கைப் பகுதியில் விளைந்த பொருட்கள் தமிழகம் வந்தன என்பதை உறுதிப் படுத்துகின்றன. அவைகளை நிலவழியாகக் கொண்டு வருவதைவிடக் கடல் வழியாகக் கொண்டு வருவது எளிது என உணர்ந்த தமிழர்கள் தங்கள் கப்பல்கள் மூலம் அதனைக் கொண்டு வந்தனர். கங்கை ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் இருந்த துறைமுக நகரமான தாமரலிபதி என்பதன் வழியே கங்கை ஆற்றில் நுழைந்து, கங்கை ஆற்றில் இருந்த பாடலிபுத்திரம், காசி போன்ற நகரங்களை தமிழர்கள் சென்றடைந்தனர் என்பதை நற்றினையின் பாடல் வரிகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

 “கங்கை வங்கம் போகுவர் கொல்லோ” – நற்றினை – 189, வரி: 5 இப்பாட்டின்படி, தலைவன் பொருள் தேட சூரைக்காற்றடிக்கும் கானகம் கடந்து தமிழகத் துறைமுகம் அடைந்து கடலில் செல்லும் வங்கம் என்ற பெரும் கப்பலில் ஏறி இனிய குரலை உடைய நாரைகள் வாழும் கங்கை ஆற்றுக்கு சென்றிருப்பார் எனவும் வேறு எதையும் செய்யாதவர் எனவும் வேறு இடத்துக்கும் போகாதவர் எனவும் அவர் விரைவில் வந்து விடுவார் எனவும் தோழி, THALAIVANPORUlTHAETAS SENrA KAnAVபொருள் தேடச்சென்ற தலைவன் உரிய காலத்தில் வந்து சேராததால் கவலையடைந்த தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். இந்த கங்கை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த துறைமுக நகரமான தாமரலிபதி என்பது தாமிரபரணி என்கிற தமிழக ஆற்றின் பெயரில் இருந்து தோன்றியதாக இருக்கலாம். தம்பப்பண்ணி என்ற இலங்கைத் துறைமுக நகரம் தாமிர பரணியின் பெயரில் இருந்து தான் தோன்றியதாகும். தாமரலிபதி(TAMRALIPTI) என்கிற இந்த நகரம் அன்று கலிங்க நாட்டின் கீழ் இருந்து வந்தது.

   கலிங்கத்தில் பண்டைய காலத்தில் இருந்த கலிங்கப் பட்டினம், பாளூர், மாணிக்கப்பட்டினம் போன்ற பல துறைமுகங்கள் தமிழ் பெயரோடு தொடர்புடையவை ஆகும். ‘பண்டைய ஒரியாவின் கடல்வணிகப் பெருமை’ என்கிற கட்டுரையை ஒரிசா ரிவியூ என்கிற மாத இதழில் எழுதிய பாலபத்ர காதை என்கிற எம்.கே. கல்லூரியின் பேராசிரியர் அவர்கள், ‘தந்தபுர’ என சமண, புத்த நூல்களில் குறிப்பிடப்படும் பண்டைய கடற்கரை துறைமுகம் என்பது பண்டைய பாளூர் துறைமுகமாகும் எனவும், தமிழில் பல்+ஊர்= பாளூர் என்பதன் வடமொழிப்பெயர் தான் ‘தந்தபுர’ என ஆயிற்று எனவும், அதாவது தமிழில் பல் என்பது வடமொழியில் தந்த எனவும் தமிழில் ஊர் என்பது வடமொழியில் புரம் எனவும் ஆகியது எனவும் குறிப்பிட்டுள்ளார். (Maritime Heritage of Orissa – Orissa Review , July- 2009, Balabhadhra Ghadai, Principal M.K. College Khiching Mayurbhanj P. 62-64). gaghadai

  கலிங்கத்தின் இரண்டாவது பெரிய துறைமுக நகரான பித்துண்டா நகரம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதைக் கலிங்க மன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு குறிப்பிடுகிறது. (சிரீகாரவேலா-சதானந்தா அகர்வால்). ஆகவே தாமரலிபதி(TAMRALIPTI) என்கிற பெயர் தாமிரபரணியில் இருந்து தோன்றி இருக்கலாம். மேலே கண்ட தரவுகள் மூலம், கங்கை நதியில் இருந்த வட இந்திய நகரங்களுக்கு, தமிழர்கள தங்கள் சொந்த கப்பல்களில் சென்று வணிகம் செய்தனர் என்பது உறுதிப் படுத்தப்படுகிறது எனலாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

வணிகத்துக்கான நீண்ட கடல் பயணம்:  

 கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரை மருதனிள நாகனார் என்கிற புலவர் பொருள் தேடி ஆழ்கடலில், மிகப்பெருங்கப்பலில் நீண்ட பயணம் செய்த தலைவன் குறித்து அகநானூற்றுப் பாடல் ஒன்றினைப் பாடியுள்ளார்(அகம்-255, வரி: 1-9).

“உலகுகிளர்ந்தன்ன உருகெழுவங்கம், புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ, இரவும் எல்லையும் அசைவின்றி ஆகி, விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக், கோடூயர் திணிமணல் அகன்துறை, நீகான் மாடஒள்எரி மருங்கு அறிந்து ஒய்ய, ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல கழியாமையே, அழிபடர் அகல் வருவர் மன்னால்-தோழி!”

  ‘புலால் மணமுடைய கடலின் அலைகளில், உலகமே பெயர்ந்து வந்தது போன்று அச்சம்தரும் மிகப்பெரிய கப்பலை, இயற்கையான பருவக் காற்று வீசி, இரவு பகல் பாராது, எங்கும் நிற்காது, வேகமாக அதனைக் கொண்டு செல்ல, அப்பெருங்கப்பலை இயக்குபவனாகிய நீகான், கடற்கரைத் துறைமுகத்தில் இருக்கும் உயர்ந்த கட்டிடத்தின் மீதுள்ள கலங்கரை விளக்கத்தின் ஒளிகண்டு திசை அறிந்து அதனைச் செலுத்த, பொருள் ஈட்டும் பணி காரணமாக அக்கப்பலில் நெடு நாட்களுக்கு முன்சென்ற நமது தலைவர் மேலும் அதிக நாட்கள் அங்கு தங்காது, நமது துன்பம் நீங்குமாறு விரைவில் திரும்பி வருவார்’ எனத் தனது தோழியிடம் கூறி ஆறுதல் பெறுகிறாள் சங்ககாலத் தலைவி. தலைவனின் இப்பிரிவு கடலிடைப் பிரிவு என்றே சொல்லப்பட்டுள்ளது. இப்பாடல் அன்று தமிழர்கள் மிகப்பெருங் கப்பல்களில் வெளிநாடுகள் சென்று வணிகம் புரிந்து பொருள் ஈட்டினர் என்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது எனலாம்.

  புறம் 400ஆம் பாடலில் கடல்வணிகம் குறித்துக் கோவூர்கிழார்,

“இருங்கழி யிழிதரும் ஆர்கலிவங்கம் தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்துய்த்துத்

துறைதோறும் பிணிக்கு நல்லூர், உறைவின் யாணர், நாடுகிழ வோனே”

 என்கிறார். ‘ஆற்று நீர் கடலில் கலக்கும் துறைகளைச் செம்மை செய்து உருவாக்கப்பட்டிருக்கும் கடற்கரை நகர் தோறும் கடலில் செல்லும் வங்கம் எனப்படும் பெருங்கப்பல்கள் மூலம் சென்று வணிகம் செய்யும் நல்ல ஊர்களையும் வணிகத்தையும் உடையவன் இவன் எனவும் அதன் மூலம் கிடைக்கும் புதுவருவாயை உடைய நாடு இவனுடையது எனவும் கூறுகிறார் புலவர். அதாவது கடலோரமாக இருக்கும் நகர்களில் எல்லாம் இவனது நாட்டுப்பெருங்கப்பல்கள் மூலம் வணிகம் நடைபெறுகிறது எனவும் அதனால் கிடைக்கும் வருவாயை உடையவன் இவன் எனவும் கூறுகிறார்’ புலவர். இவரது காலம் கி.மு. 2ஆம், 1ஆம் நூற்றாண்டு ஆகும்.

கடற்படையெடுப்பு:

 பாண்டியன் முதுகுடுமிப் பெரு வழுதியைப் பாட வந்த காரிகிழார்,

  “செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்

  கடற்படை குளிப்ப மண்டி” என்கிறார்(புறம்-6, வரி: 11, 12).

 இதற்குச் ‘செய்யும் தொழிலுக்கு எதிராக இருந்த பகைவர் தேயமே மூழ்கும் அளவு பெரும் கடற்படையை அனுப்பினான்’ எனலாம். பொதுவாக தமிழக வேந்தர்களை, பிற தமிழகச் சிறுகுறு ஆட்சியாளார்களை பகைவர் அல்லது எதிரி என மட்டுமே குறிப்பதுண்டு. அவர்களின் தேயத்தை, அது தமிழ் தேயமாக இருப்பதால், எதிரிகள் தேயம் எனக் குறிப்பதில்லை. சங்க இலக்கியங்கள் தமிழகம் தவிர பிற தேயங்களை மட்டுமே எதிரிகள் தேயம் எனக் குறிப்பிடுகின்றன. மேலும் தமிழரசுகளிடையே முதுகுடுமிப் பெருவழுதி காலத்தில் நல்ல ஒற்றுமை இருந்தது. ஆதலால் முதுகுடுமிப் பெருவழுதி இங்கு தமிழகம் அல்லாத பிற தேயத்து எதிரிகளின் மீது பெரும் கடற்படைகொண்டு தாக்குதல் நடத்தினான் என இப்பாடல் கூறுகிறது எனலாம். எதிரிகள் தேயமே மூழ்கும் அளவு அவ்வளவு அதிகமான கடற்படையை முதுகுடுமிப் பெருவழுதி அனுப்பினான் என்கிறார் புலவர். அன்று தமிழர்கள் வணிகத்தைப் பிற நாடுகளில் பெருமளவு மேற்கொண்டிருந்தனர். வணிகத்துக்கான அதிகப் பொருள் உற்பத்தியும், உயர் தொழில்நுட்ப மேன்மையும், வணிக மேலாண்மையும் கொண்டதாக அன்றைய தமிழகம் இருந்தது. இந்தப் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டாகும்.

   புறம் 382ஆம் பாடலில் கோவூர்கிழார், கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ வேந்தன் நலங்கிள்ளியின் கடற்படையெடுப்பு குறித்து, “கடல்படை அடல்கொண்டி” என்கிறார். இதற்கு, கடலில் படை செலுத்திப் பகைவரை அழித்துப் பெரும் பொருளைக்கொண்டு வந்தவன் எனப் பொருள் கொள்கிறார் அ.ப.பாலையன் அவர்கள். ‘கடலிற் படைகொண்டு சென்று பகைவரை அடுதலாற் கொள்ளலாகும் பெரும்பொருள்’ எனப் பொருள் கொள்கிறார் ஔவை துரைசாமிபிள்ளை அவர்கள்(புறநானூறு, இரண்டாம் பாகம் பதிப்பு-2010). மேலே உள்ள இரு பாடல்களையும் இணைத்துப் பார்க்கும் பொழுது பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதிக்கு முன்பிருந்தே சோழர்களும், பாண்டியர்களும், சேரர்களும் இந்த நலங்கிள்ளி வரை தமிழ் அரசுகள் பலவும் கடற்படைகொண்டு தமிழர் அல்லாத பிற தேயக் கடற்கரை நகரங்களைத் தாக்கித் திரையாகவும், வணிகம் செய்தலின் மூலமும் பெரும்பொருள் பெற்றுவந்துள்ளனர் என்பதையும், இந்தியாவின் மேற்குக், கிழக்குக் கடற்கரையின் கடல் வணிகம் சங்ககாலம் முழுவதும் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதையும் இப்பாடல்கள் உறுதி செய்கின்றன.

தமிழர்களின் கடலாதிக்கம்:

  கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்ணிக்குயத்தியார் என்கிற பெண்பாற் புலவர் சோழன் முதல் கரிகாலன், சேரன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனை இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போரில் தோற்கடித்தான். அப்போரில் தோற்றதாலும், போரில் முதுகில் விழுப்புண் பெற்றதாலும் சேரலாதன் நாணி வடக்கிருந்து உயிர் துறந்தான். இந்நிகழ்வை, ‘இப்பாடலில் தோற்ற சேரலாதன் உன்னை விட நல்லவனும் புகழ் பெற்றவனும் ஆவான்’ என வெற்றிபெற்ற கரிகாலனிடமே நேரடியாகப் பாடியவர் இவர். இவர் ஒரு குயத்தி வகுப்பை சேர்ந்த பெண்பாற் புலவர். அதே சமயம் நேர்மையும், தைரியமும், புலமையும் உடையவர். அவர்,

‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக”

எனப் பாடலைத் தொடங்கிப் பாடியுள்ளார்(பு-66). “பெருங்கடலில் காற்றின் தொழில்நுட்பம் அறிந்து அதனைக் கட்டுப்படுத்தி ஆள்வதன் மூலம் பெரும் மரக்கலங்களைச் செலுத்தி வருகிற மரபில் வந்தவனே” எனச் சோழ மரபின் கடலாதிக்கப் பெருமையைப் இவ்வரிகளில் பாடியுள்ளார் வெண்ணிக் குயத்தியார். அதன்மூலம் சோழர்கள் மிக நீண்ட காலமாகவே கடலோடிகளாக இருந்தவர்கள் என்பதையும், சோழ மண்டலத்தை ஒட்டிய கடல்பரப்பையும், இந்தியாவின் மேற்குக் கடற்பரப்பு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தவர்கள் என்பதையும் நாம் அறிய முடிகிறது. பெருங்கடலில் வீசும் காற்றின் தொழில் நுட்பம் அறிந்து அதனைக் கட்டுப்படுத்தி, பெரும் மரக்கலங்களைச் செலுத்தி வருகிற மரபில் வந்தவன் இந்தச் சோழன் என்கிறார் புலவர். இப்பாடலின் மூலம் பருவக்காற்று குறித்தும், கடல் நீரோட்டம் குறித்தும் அறிந்து கடலில் பெரும் மரக்கலங்களை செலுத்திய மரபில் வந்தவர்கள் சோழர்கள் என்பதைப் புலவர் தெரிவிக்கிறார்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறோக்கத்து நப்பசலையார் என்கிற இன்னொரு பெண்பாற்புலவர், மலையமான் குறித்தத் தனது பாடலில்(பு-126, வரி: 14-16), சேரர்களின் கடலாதிக்கம் குறித்து

“சினமிகு தானை வானவன் குடகடல்பொலந்தரு நாவாய் ஓட்டிய

அவ்வழிப்பிறகலம் செல்கலாது அனையேம்” என்கிறார்.

 சங்ககாலப் பெரும்புலவன் கபிலன் அறிவில் சிறந்தவன். பெரும்புகழ் பெற்றவன். அவன் இனி யாரும் பாடமுடியாதபடி மலையமானைப் புகழ்ந்து உயர்த்திப் பாடியுள்ளான். மேற்குக்கடலில் சேரன் தனது பெருங்கப்பல்களை செலுத்தும்பொழுது வேறு யாரும் அவனது ஆணையை மீறி மேற்குக் கடலில் கப்பல்களைச் செலுத்த இயலாது. அதுபோன்று கபிலன் பாடிய பிறகு பிறர் யாரும் மலையமானை அந்த அளவு உயர்த்திப் பாட முடியாது என்கிறார் புலவர். மேற்குக்கடலில் சேரர்கள் கடலாதிக்கம் உடையவர்களாக இருந்தனர் என்பதை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. சேரர்களது அனுமதி இன்றி யாரும் மேற்குக்கடலில் கப்பல்களை செலுத்த முடியாது என்பதும், மேற்குக் கடலில் சேரர்கள் கடலாதிக்கம் உடையவர்களாக இருந்தனர் என்பதும் இப்பாடலின் அடிக் கருத்தாக உள்ளது எனலாம்.

  மேற்கண்ட இரு பெண்பாற் சங்ககாலப் புலவர்களின் பாடல்களும் சேரர்கள் மேற்குக்கடலிலும், சோழர்கள் கிழக்குக் கடலிலும் கடலாதிக்கம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதையும், பருவக் காற்றையும், கடல் நீரோட்டத்தையும் பற்றிய தொழிநுட்பத்தை அறிந்து பெருங்கப்பல்களை கடலில் செலுத்தும் திறனைத் தமிழர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பே பெற்றிருந்தனர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

கங்கை முகத்துவாரத்தில் இருந்த தாமரலிபத(Tamaralipta) எனப்பட்ட துறைமுக நகரம் பண்டைய கலிங்க அரசில் இருந்தது. அதன் பெயர் தமிழகத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் பெயரில் இருப்பது போலிருக்கிறது. இந்த ஆற்றின் பெயரில் இலங்கையின் வடமேற்கே அமைந்திருந்த தம்பப்பண்ணி எனப்படும் நகரம் கி.மு.500 வாக்கில் புகழ் பெற்றதாக இருந்தது. அதே காலகட்டத்தில் இந்தத் தாமிரலிபத(Tamaralipta) நகரமும் புகழ் பெற்றதாக இருந்துள்ளது. மெகத்தனிசு இந்த தாமிரலிபத என்கிற நகரம் குறித்து எழுதியுள்ளார். oriyaaஒரியா இரிவியு(ORISSA REVIEW) என்கிற மாத இதழில் 2011 நவம்பரில் டாக்டர் பிரபுல்லா சந்திர மொகந்தி(DR.PRAFULLA CHANDRA MOHANTY) என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் ஒரிசாவில் உள்ள பாளூர் என்கிற பண்டைய துறைமுகத்தின் பெயரானது தந்தபுரா என்ற வடமொழிப் பெயருக்கு இணையான தமிழ் பெயராகும் என PAEபேராசிரியர் எஸ். இலெவி (PROF. S. LEVY) என்பவர் கருதுவதாகச் சொல்லியுள்ளார். SOURCE: MARITIME TRADE OF ANCIENT KALINGA –DR.PRAFULLA CHANDRA MOHANTY, ORISSA REVIEW, NOV-2011, PAGE: 41.

 அதுபோன்றே அதே மாத இதழில் டாக்டர் கார்த்திக் சந்திரா இரூட் (DR.KARTIK CHANDRA ROUT) என்பவர் எழுதிய கட்டுரையில் பாளூர் என்பது தமிழர்கள் தந்த பெயர் எனச் சில விமர்சகர்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காரவேலன் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியிடம் இருந்து கைப்பற்றிய கலிங்கத்தின் முக்கியத்துறைமுக நகராக இருந்த பித்துண்டா நகரம் சிறிதுகாலமே காரவேலனுடைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் மீண்டும் அது தமிழர்களின் பொறுப்பில் வந்துவிட்டது எனப் பொருள் கொள்ளலாம். SOURCE: MARITIME HERITAGE OF GANJAM- DR.KARTIK CHANDRA ROUT, ORISSA REVIEW, NOV-2013, PAGE: 42, 43.

  மேற்கண்ட இரு தரவுகளின் படி, பண்டைய கலிங்கத்தின் மிக முக்கிய துறைமுகம் ஆன ‘பாளூர்’(PALUR) என்பது தமிழ் பெயர்(பல்+ஊர்= பாளூர்) என்பதும், அதன் வடமொழிபெயர் தான் தந்தபுரா என்பதும் இந்தப் பாளூர் என்பது தமிழர்கள் வைத்த பெயர் எனச் சில ஒரியா அறிஞர்கள் கருதுகின்றனர் என்பதும் தெரிய வருகிறது. பாளூர் மட்டுமல்ல கலிங்கத்தில் இருந்த பண்டைய முக்கியத் துறைமுகங்களான கலிங்கப்பட்டினம், மசூலிப்பட்டினம், மாணிக்பட்டினம், கல்கதா பட்டினம், தாமரலிபத (KALINGA PATANAM, MASULI PATANAM, MANIK PATANA, KHALKATA PATANA, TAMARAL IPTA) ஆகிய அனைத்தும் தமிழ் பெயரோடு தொடர்புடையனவாகும். MARITIME TRADE OF ANCIENT KALINGA, MARITIME HERITAGE OF GANJAM ஆகிய இரு ஆங்கிலக் கட்டுரைகளில் சொல்லப்பட்ட பண்டைய கலிங்க நகரங்கள் தான் இந்த 5 நகரங்களும் ஆகும். இந்நகரங்களில் ‘தாமிரலிபத’ தவிர பிற அனைத்துத் துறைமுக நகரங்களும் இறுதியில் ‘பட்டினம்’ என்கிற தமிழ் பெயரைக் கொண்டுள்ளன.

 பொதுவாகத் தமிழில் நெய்தல் நிலத்து ஊர்கள் பட்டினம் என்கிற பெயரைப் பெரும். தமிழில் பட்டினம் என்றால் நெய்தல் நில ஊர் என்பது போக, பட்டினர் என்பது நெய்தல் நிலத்தில் வசிக்கும் மீனவரையும், பட்டினச்சேரி என்பது நெய்தல் நில மீனவர் வசிக்கும் ஊர் அல்லது அவர்களது தெருவையும், பட்டினவாசி என்றால் நகர மக்களையும் குறிக்கும். ஆகப் பட்டினம் என்பது மூலத்தில் ஒரு தமிழ் பெயராகும். ஆகவே கலிங்கத்தில் உள்ள பட்டினம் என்கிற பெயர்கொண்ட பண்டைய பெயர்கள அனைத்தும் தமிழோடும், தமிழர்களோடும் தொடர்புடையன எனலாம்.  அதுபோன்றே தாமிரலிபத(Tamaralipta) என்பது இலங்கையின் தம்பப்பண்ணி போன்று தாமிரபரணி என்கிற தமிழக ஆற்றின் பெயரில் அமைந்த பெயராகத் தோன்றுகிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் கலிங்கத்தின் பித்துண்டா நகரம் தமிழரசுகளின் காவல் அரணாக இருந்தது எனக் குறிப்பிட்டதும், தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி 1300 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்லியதும், கங்கை நதிவரை இருந்த கலிங்கத்தின் பண்டைய நகரங்கள் தமிழ்ப் பெயர்களோடு இருப்பதும் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தையும், வணிக மேலாண்மையையும் பறைசாற்றும் சான்றுகளாகும்.

  சங்க இலக்கியத்தரவுகளும், வெளி நாட்டினரின் குறிப்புகளும், நவீன எழுத்தாளர்களின் நூல்களும், கல்வெட்டுகளும், நாணயங்களும், தொல்லியல் சான்றுகளும், இன்னபிறத் தரவுகளும் தமிழர்கள் கிமு. 6ஆம் நூற்றாண்டு முதலே உலகின் பல நாடுகளுக்கும் சென்று அங்கு தங்கி வணிகம் செய்து வந்தனர் என்பதை, அவ்வணிகத்தைப் பாதுகாக்கத் தமிழரசுகள் பெரும் கடற்படைகளைப் பராமரித்து வந்தன என்பதை, தமிழகம் கி.மு. 600 முதல் கி.பி.200 வரை இடைவிடாத உலகளாவிய வணிகத்தை மேற்கொண்டிருந்தது என்பதை, இவ்வுலக வணிகத்தால் தமிழகம் பெரும் செல்வத்தைப் பெற்றது என்பதை உறுதி செய்கிறது எனலாம். பண்டையச் சங்ககாலத் தமிழகம் பொருள் உற்பத்தியிலும், தொழிநுட்பத்திலும், வணிக மேலாண்மையிலும் வேளாண்மையிலும் உயர்நிலையில் இருந்ததன் காரணமாகவும் தமிழரசுகள் இடையே இருந்த ஐக்கியக் கூட்டணியின்(தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த-மாமூலனார், அகம்-31, வரி: 14,15) காரணமாகவும் தான், உலகளாவிய வணிகத்தில் 800 வருடங்களாக இடைவிடாது, தமிழகம் உயர்ந்து நின்று தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருந்தது எனலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

 

பழந்தமிழர் கடல் வணிகம் - 5

தமிழக மக்களின் வணிகக் கண்ணோட்டம்

 தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்றவற்றில் தலைவன் பொருள்வயிற்பிரிவு மேற்கொள்வதாக ஒரு செய்தி குறிப்பிடப்படுகிறது. இது குறித்து பொ. வேல்சாமி என்பவர், இச்செய்தி அக்காலகட்டத் தமிழ் இளைஞர்கள் பொருள் ஈட்டுவதற்காக அக்கம்பக்கத்து நாடுகளுக்குப் பயணம் செய்தார்கள் என்பதைக் குறிப்பதாகும் என்கிறார். மேலும் அவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மாக்கோபோலோகூட, “ஆண் மக்களுக்கு பதின்மூன்று வயதாகிவிட்டால் பெற்றோர்கள் அவர்களை வீட்டில் வைத்துக்கொள்வது இல்லை. அந்த வயதில் வணிகம் செய்து பொருள் ஈட்டும் ஆற்றலை அவர்கள் பெற்றுவிடுகிறார்கள் என்றும் அவர்களை வளர்க்கும் பொறுப்பு அதற்குமேல் தங்களுக்கு இல்லை என்றும் பெற்றோர்கள் கருதுகிறார்கள். எனவே அந்தப் பிள்ளையின் கையில் 20 அல்லது 24 குரோட்டோ அளவிற்குச் சமமான பணம் கொடுத்து அவர்களை வெளியில் அனுப்பிவிடுகிறார்கள். தங்கள் பெற்றோர்களது வருமானத்தில் கிடைக்கும் சோற்றில் ஒரு பருக்கையும் அவர்கள் தொடுவதில்லை எங்கிறார் அவர். கி.பி. 13ஆம் நூற்றாண்டுத் தமிழ் இளைஞர்கள் கூட வணிகம் செய்து பொருள் ஈட்டியுள்ளனர் என்பதற்கு இக்கூற்று ஒரு வரலாற்று ஆதாரமாக உள்ளது எனவும், இத்தகைய ஒரு பொது மனோபாவம் சிலப்பதிகார காலத்திற்கு முன்பிருந்தே வேரூன்றி வளர்ந்து வந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார் (ஆதாரம்: தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் மார்க்சிய ஆய்வுகள், கோவை வாணன், செப்டம்பர் 2011, பக்: 10, 11, NCBH).

ship 270 சிலப்பதிகாரக் காப்பியத்தில் கோவலன் தான் தொழில்செய்து சம்பாதித்த பணத்தை மாதவியிடம் இழந்த பின்னர் சொந்தமாக வணிகம் செய்து பொருள் சம்பாதிக்கவே கண்ணகியோடு மதுரை போகிறான். அனால் அப்பொழுது அவனது தந்தையும் சரி, கண்ணகியின் தந்தையும் சரி பெரும் பணக்காரர்களாகவே உள்ளனர், எனினும் அவர்களிடம் பொருள் கேட்டுப் பெறுவது இழுக்கு என்பதால்தான் அவன் சுயமாகப் பொருள் சம்பாதிக்க மதுரை போகிறான். அன்றைய தமிழ்ச் சமுதாய மரபுப்படி சுயமாகப் பொருள் சம்பாதித்து வாழ்வது தான் ஒரு ஆண்மகனின் கடமை ஆகும். தனது குடும்பச் செலவுக்குத் தன் தந்தையிடம் பணம் வாங்குவது இழுக்கு என்றே அன்றையத் தமிழ்ச் சமுதாயம் கருதியது. பொருள்வயிற் பிரிவு என்பது திருமணத்திற்கு முன் தனது குடும்ப வாழ்விற்குத் தேவைப்படும் பொருளை ஒரு ஆண்மகன் சுயமாகச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் எங்கிற தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படைக் கருத்தில் இருந்து உருவான ஒரு இலக்கியக் கருத்தாக்கம் எனலாம். 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இக்கருத்து தமிழர்களிடம் இல்லாது போய்விடுகிறது.

யூதன் பெற்ற வணிக உரிமை:

 யூதர்கள் குறித்துச் சங்க இலக்கியம் எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் யூதன் ஒருவன் பண்டையச் சேர வேந்தனோடு தொடர்பு கொண்டு சில உரிமைகளைப் பெற்றதாகப் பாஸ்கர ரவிவர்மன் லோகன் அவர்களின் மலபார் மேன்யுவல் தெரிவிக்கிறது என்கிறார் நரசய்யா அவர்கள். அந்த யூதனின் பெயர் சோசஃப் ரப்பன் என்பதாகும். அவன் கி.மு. 192 ஆம் ஆண்டு சில உரிமைகளைச் சேர அரசரிடமிருந்து பெற்றான் எனத் தெரிகிறது என்கிறார் நரசய்யா அவர்கள் (கடல்வழி வணிகம், பக்: 65). இத்தகவல் மிக முக்கியமானதாகும். இன்றைக்கு 2200 வருடங்களுக்கு முன்பு யூதன் ஒருவன் வணிக உரிமைகள் சிலவற்றைச் சேர அரசன் ஒருவனிடம் பெற்றிருப்பதும் அதுகுறித்தத் தகவல் இதுவரை பாதுகாக்கப் பெற்றிருப்பதும் மிகப் பெரிய வியப்புக்குரிய செய்தியாகும்.

இந்திய வணிக நெறி:

 மோதி சந்திரரின் இந்திய வணிக நெறி (பக்: 222-223) என்ற நூலில் கீழ்க்கண்ட குறிப்புகள் உள்ளன என்கிறாய் நரசய்யா அவர்கள்(பக்; 62).

 “கி.பி.முதலாம் நூற்றாண்டில் இந்தியக் கப்பல் வியாபாரம் மிகவும் முன்னேற்றமடைந்திருந்தது எனத்தெரிகிறது. மிகப் பண்டைய காலத்திலிருந்து இந்தியக் கப்பல்கள் மலேயா, கிழக்கு ஆப்ரிக்கா, பாரசீக வளைகுடா முதலான நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தன. ஆனால் அரபு நாட்டவர்கள் தடை செய்திருந்ததால் அதற்கு மேலும் முன்னேறிச் செல்ல இயலவில்லை. இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரையிலிருந்து சென்ற சில பெரிய கப்பல்கள் வடகிழக்கு ஆப்ரிக்காவிலுள்ள கர்தாபுயிவரை சென்று வியாபாரம் செய்து வந்தன. ஆனால் இதற்கு அரேபியர்களிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது

 இன்னும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. இதில் தென்மேற்கு கடற்கரை என்பது தமிழ் நாட்டுக்கடற்கரையையே குறிக்கும். அரபு நாடுகளின் தடை என்பதெல்லாம் கி.பி 7ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே ஆகும். சங்ககாலத்தில் தமிழகக் கப்பல்கள் எகிப்து மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா வரை தடையில்லாமல் சென்று வந்தன என்பதோடு அரபியர்களோடு தமிழர்கள் நல்ல உறவு கொண்டிருந்தனர். மேற்குலக நாடுகளுக்குத் தேவைப்பட்ட பெரும்பாலான பொருட்கள் தமிழகம் மூலமே அரேபியர் பெற்று வியாபாரம் செய்து வந்தனர் என்பதும், தமிழர்கள் பெரும் கடற்படைகளைப் பராமரித்து வந்தனர் என்பதும், தமிழ் மூவேந்தர்களிடையே வணிகத்தைப் பாதுகாக்க ஒரு ஐக்கிய கூட்டணி இருந்தது என்பதும் தமிழகக் கப்பல்கள் தடையின்றி சென்று வந்ததற்கான முக்கியக் காரணங்களாகும்.

ஜவகர்லால் நேரு:

 நேரு அவர்கள் தனது ‘உலக சரித்திரம் என்கிற நூலில், “வட இந்தியாவைவிடத் தென் இந்தியா கடலோடு அதிக உறவு கொண்டாடியது. வெளிநாட்டு வியாபாரம் பெரும்பாலும் தென் இந்தியாவுடன் தான் நடைபெற்று வந்தது. பழந்தமிழ்பாடல்களிலே யவனர்களைப்பற்றிய குறிப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. யவன தேசத்து மதுவகைகள், பூந்தாழிகள், அணிவிளக்குகள், முதலியனவற்றைப்பற்றி தமிழ் நூல்கள் கூறுகின்றன (பக்: 184). தென்இந்தியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நல்ல வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. முத்து, பொன், தந்தம், அரிசி, மிளகு, முதலியவைகளும், மயில்களும் குரங்குகளும் பாபிலோன், எகிப்து, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கும், உரோமாபுரிக்கும் அனுப்பப்பட்டன. திராவிடர்களால் ஓட்டப்பட்ட இந்தியக் கப்பல்களிலே இப்பொருள்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலும் கொண்டுபோகப்பட்டன. புராதன உலகத்தில் தென்இந்தியா எத்தகைய உன்னத இடத்தை வகித்ததென்று இதன்மூலம் அறிந்துகொள்ளலாம் (தமிழாக்கம்- ஓ.வி. அளகேசன், 3ஆம் பதிப்பு, அக்டோபர்- 2006, பக்: 153) எனக் குறிப்பிடுகிறார். நேரு அவர்களும் தமிழர்கள் தங்கள் சொந்தக்கப்பல்களில் பாபிலோன், எகிப்து, கிரீஸ், உரோமபுரி போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து வணிகம் புரிந்தனர் என்பதையும், பெரும்பாலான பண்டைய வெளிநாட்டு வியாபாரங்கள் வட இந்தியாவைவிட, தென் இந்தியாவுடன் தான் நடைபெற்றன என்பதையும் இதன்மூலம் உறுதிப்படுத்துகிறார் எனலாம்.

ஆர்.எசு. சர்மா :

 “பண்டைக்கால இந்தியா (ANCIENT INDIA) என்கிற ஆங்கில நூலை வரலாற்றுத்துறையில் புகழ்பெற்றுள்ள வரலாற்று ஆய்வாளர் ஆர்.எசு. சர்மா (RRRAM SHARAN SHARMA) அவர்கள் எழுதியுள்ளார். அவர் தனது நூலில் தமிழ் நாடுகள் தமது இயற்கை வளங்களாலும், அயல்வணிகத்தாலும் பெரிதும் ஆதாயமும், அனுகூலமும் அடைந்தன எனவும், அவை செல்வச்செழிப்புடன் மிளிர்ந்தன எனவும் அவை மிளகு போன்ற வாசனைப்பொருள்கள், யானைத்தந்தங்கள், அரிய முத்துக்கள், அருமந்த மணிக்கற்கள் முதலிய மிகுந்த கிராக்கியும், பெரிதும் விலை மதிப்புமுடைய பொருட்களை தமிழகத்திலிருந்து மேலைய நாடுகளுக்குப் பெருமளவில் அனுப்பின எனவும் கூறுகிறார் (பக்: 282). அவர் மேலும், “இவையன்றி அவர்கள் மசுலின் எனப்படும் மென்துகில் வகைகளையும், பட்டையும் உற்பத்தி செய்தனர். பாம்புச்சட்டையைப்போன்ற மிகமெல்லிய பருத்தித் துணியையும் அவர்கள் தயாரித்ததாக அறிகிறோம். கலைவண்ணம் மிளிரும் பலபாணிகளில், பலதோரணைகளில் பட்டு நெய்யப்பட்டதாக ஆரம்பகாலச்செய்யுள்கள் குறிப்பிடுகின்றன. உறையூர் அதன் பருத்தி வணிகத்துக்குப் புகழ் பெற்றது. பண்டைக்காலத்தில் ஒருபுறம் கிரேக்கர்களுடனும், அச்சமயம் எகிப்தை ஆண்டுவந்த கிரேக்க இனமக்களுடனும், இன்னொருபுறம் மலாயத்தீவுக் கூட்டங்களுடனும், அங்கிருந்து சீனாவுடனும் தமிழர்கள் வணிகம் செய்து வந்தனர். இந்த வணிகத்தின் விளைவாக நெல், இஞ்சி, இலவங்கப்பட்டை, மற்றும் இதர பலபொருள்களின் தமிழ்ப்பெயர்கள் கிரேக்க மொழியில் இடம்பெற்றன என்கிறார் அவர் (தமிழில் இரா. இரங்கசாமி என்கிற மாஜினி அவர்கள், ஜூன்-2004, பக்:282).

டி.என். ஜா:

 பேராசிரியர் ஜா அவர்கள் இந்திய வரலாற்றுப் பேரவையின் தலைவராகவும், பண்டைய இந்திய வரலாற்றுத்துறையின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இருந்தவர் ஆவார். இவரது முழுப்பெயர் திவிஜெந்திரா நாராயண் ஜா (DWIJENDRA NARAYAN JHA) ஆகும். “பண்டையக்கால இந்தியா (ANCIENT INDIA IN HISTORICAL OUTLINE)” என்கிற அவரது ஆங்கில நூலில் தமிழகம் குறித்து, தமிழர்கள் வெகுகாலத்திற்கு முன்பாகவே கடற்பயணம் மேற்கொண்டவர்கள் எனவும், கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்குள்ளாகவே அவர்கள் இலங்கையின் மீது இருமுறை படையெடுத்தார்கள் எனவும் கூறுகிறார் (தமிழில் அசோகன் முத்துசாமி, டிசம்பர்-2011, பாரதி புத்தகலாயம், பக்:149). மெகத்தனிசு பாண்டியர்களைக் குறிப்பிடும் கி.மு. 4ஆம் நூற்றாண்டிலிருந்து வடக்கிற்கும் தெற்கிக்கும் இடையிலான தொடர்புக்கான சான்றுகள் கிடைக்கின்றன எனவும், சோழர்கள், பாண்டியர்கள், கேரளபுத்திரர்கள், சத்திய புத்திரர்கள் ஆகியோர் தனது பேரரசிற்கு வெளியே இருந்தார்கள் என்பதை அசோகரின் கல்வெட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றிக் குறிப்பிடுகின்றன எனவும் தமிழ் அரசுகளின் கூட்டமைப்பைத் தோற்கடித்தது குறித்து காரவேலா(கலிங்கமன்னன்) பேசுகிறான் எனவும் அந்தக் கூட்டமைப்பு இந்த மூன்று இராச்சியங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம் எனவும் அவர் கூறுகிறார் (பக்:150).

 தந்தம், ஆமை ஓடு, இதர வர்த்தகப்பொருட்கள் இலங்கை யிலிருந்து இந்தியச் சந்தைக்கு ஏராளமாகக் கொண்டுவரப்பட்டன என சுடிராபோ (கி.மு.63-கி.பி.20) கூறுகிறார். கிழக்கு இந்தோனேசியாவிலிருந்து சந்தன மரமும், தென்கிழக்கு ஆசியாவின் பெருநிலப்பரப்பிலிருந்து இலவங்கம், பட்டை ஆகியவையும், மலேசியாத் தீபகற்பம், சுமத்ரா, போர்னியே ஆகிய இடங்களிலிருந்து கற்பூரமும் தருவிக்கப்பட்டன. கிறித்து பிறப்பதற்கு முன்னரும் பின்னருமான ஆரம்ப நூற்றாண்டுகளில் இந்த வர்த்தகம் நடைபெற்றது எனவும் அவர் கூறுகிறார் (பக்:158, 159). இங்கு இந்தியா என்பது தமிழகத்தையே குறிக்கும். அந்நிய வர்த்தகத்தால் செழித்த தென்னிந்தியாவின் நகர மையங்கள் பெரும்பாலானவற்றிலும் அப்போது கணிசமான எண்ணிக்கையில் யவனர்கள் வசித்தனர். சங்கப்பாடல்கள் அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றன. காவேரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ள காவேரிப்பூம்பட்டினம் நகரத்தில் அவர்களது வசிப்பிடங்கள் இருந்தன (பக்: 166, 167). இவை ஜா தரும் தகவல்கள் ஆகும். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பல்வேறு பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு, பின் அங்கிருந்து மேற்குலக நாடுகளுக்கு AVAIஅவை ஏற்றுமதியாகின என்பது இத்தரவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

சில பண்டைய தமிழக வணிக நகரங்கள்; அழகன்குளம்:

 சங்ககாலப் பாண்டியர் துறைமுகமாக இந்நகரம் இருந்துள்ளது. இவ்வூருக்குப் பக்கத்தில் தான் வைகை நதி கடலில் கலக்கிறது. இவ்வூர்தான் மருங்கூர்ப்பட்டினமாய் இருக்கவேண்டும் என்கிறார் நரசய்யா அவர்கள். புகார் போன்றே இதுவும் மருங்கூர்பட்டினம், ஊணூர் என இரு ஊர்களாகப் பிரிந்திருந்ததது எனவும் மதிலையும் அகழியையும் கொண்டிருந்தது எனவும் மயிலை சீனி வெங்கடசாமி மருங்கூர்பட்டினம் குறித்துக் கூறுவதாக நரசய்யா குறிபிடுகிறார். இங்கு கி.மு.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எகிப்து பெண்ணுருவ ஓடுகளும், குடுவை ஏந்திய பெண்சித்திர ஓடு, விசிறி, கண்ணாடி ஏந்திய பெண் சித்திர ஓடு முதலியனவும் கிடைத்துள்ளன எனவும், இந்நகரம் ஒரு சிறந்த தொழிற்கூடமாய் இருந்திருக்கவேண்டும் எனவும் கூறுகிறார் நரசய்யா அவர்கள்(பக்:115-118).

 வடக்குக் கருப்புப் பளபளப்புப் பானைகள் (NORTHERN BLACK POLISHED WARE) வட இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, கி.மு.6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 3ஆம் நூற்றாண்டு வரை பயன் படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை அழகன் குளத்தில் கிடைத்துள்ளன. Aஅழகன் குளத்தில் கிடைத்துள்ள பானைகளின் காலம் கிமு 6ஆம் 5ஆம் நூற்றாண்டு என்கிறார் புகழ்பெற்ற இந்திய அகழாய்வாளர் டாக்டர் பி.பி. இலால் (DR. B.B. LAL) அவர்கள்(TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 43). அப்துல் மசீத் அவர்கள், தமிழகக் கடல் சார் வரலாறு என்கிற நூலில், இங்கு கிடைத்த தொல்பொருட்கள் சிலவற்றைக் கரிமப் பகுப்பாய்வு செய்ததில் இத்துறைமுகத்தின் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை ஒரு தொடர்ச்சியான வரலாறு இதற்கு இருப்பதாகத் தெரிகிறது (பக்: 9) எனவும். நந்த அரசர்களால் வெளியிடப்பட்ட கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அச்சுக்குத்தப்பட்ட வெள்ளிக்காசு ஒன்றும் மொளரியப் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன (பக்: 12) எனவும் கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் உருவம் பொறித்த மட்பாண்டம் ஒன்றும் இங்குக் கிடைத்துள்ளது(பக்: 21) எனவும் இங்கு கிடைத்தத் தொல்பொருட்கள் இவ்வூர் எகிப்து, உரோம், அரேபியா, இலங்கை போன்ற அயல் நாடுகளுடனும், உள்நாட்டுடனும் கொண்டிருந்த வணிகப், பண்பாட்டுத் தொடர்பை வெளிப்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்கள். (பக்; 12)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

அரிக்கமேடு:

 சோழர்களின் துறைமுக நகரமாக இது இருந்துள்ளது. அகழாய்வில் இங்கு பல அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மெல்லிய உயர்தர வகையைச் சேர்ந்த துணிகள் தயாரிப்பதற்கும், சாயம் தோய்க்கவும் ஆன தொட்டிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. மெல்லிய துணிவகைகள் மேற்கத்திய நாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சோழ மண்டலக் கடற்கரையின் ஒரு நிலையான துறைமுகமாக இது இருந்துள்ளது. இங்கு தங்கம், அரிய கல்வகைகள், கண்ணாடி ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட மணிகள் இங்கு ஏராளமாய்க் கிடைத்துள்ளன. இத்துறைமுகப்பகுதி ஒரு சிறந்த தொழிற்கூட நகராய் இருந்துள்ளது. (கடல்வழி வணிகம், பக்: 101-106)

 பென்சில்வேனியா பல்கலைக்கழக விமலா பெக்ளி (VIMAL BEGLY), அவர்கள் 1989முதல் 1992 வரை மூன்று வருடங்கள் அரிக்கமேட்டுப் பகுதியில் ஆய்வு செய்தார். “கல், மணி ஆகியவை செய்யும் திறமை ஐரோப்பியர்கள் அறிவதற்கு சுமார் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அரிக்கமேட்டினருக்குத்(தமிழர்களுக்கு) தெரிந்திருந்தது என்கிறார் அவர். அரிக்கமேடு மத்தியதரைக்கடல் நாடுகளுடன் வணிகத் தொடர்பை கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்திருக்கவேண்டும் என்கிறார் பெக்ளி அவர்கள். புலி உருவம் ஒரு புறமும், யானை உருவம் ஒரு புறமும் கொண்ட சங்ககாலச் சோழர்காசு ஒன்று இங்கு கிடைதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலை நாடுகள் விரும்பிய கற்களும், மணிகளும் இங்கு தயாரிக்கப்பட்டன. பிலிப்பைன்சில் கிடைத்த இப்பொருட்களில் பெரும்பாலானவை இங்கிருந்து வந்தவையே ஆகும். இம்மணிகளையும், கற்களையும் கிழக்கு ஆப்ரிக்காவுக்கும், வட ஆப்ரிக்கவுக்கும் அரேபியர்கள் இங்கிருந்து கொண்டு சென்றனர்.

 உரோமர்கள் இதனைத் தங்கள் தொழிற்கூடமாகக் கொண்டிருந்தனர் என சில அறிஞர்கள் கருதினர். ஆனால் பெக்ளி அவர்கள் உரோமர்கள் வருவதற்கு முன்னரே கி.மு. 2ஆம் நூற்றாண்டிலேயே இந்நகரம் ஒரு சிறந்த தென்னிந்தியத் தொழிற்கூட நகரமாக இருந்தது எனவும் உரோமர்கள் சென்ற பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மது வியாபாரத்திலும், அம்போரா பண்டங்கள் தயாரிப்பதிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தனர் எனவும் கூறுகிறார் பெக்ளி அவர்கள். இவர்கள் அரிய கல்வகைகள், மணிகள் செய்வதில் புகழ் பெற்றவர்களாக இருந்ததால் ஐரோப்பியரின் இரூட்லெட் மண்பாண்டங்களை ஐரோப்பியரிடமிருந்து தாங்களே செய்யக் கற்றுக் கொண்டனர் என்கிறார் பெக்ளி அவர்கள். இதன்மூலம் இங்குத் தொழிநுட்பக் கைமாற்றம் (Transfer of Technology Knowledge) நடந்ததாகச்s சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (நரசய்யா-கடல்வழி வணிகம், பக்:101-109).

 ஐரோப்பியரின் இரூட்லெட் மண்பாண்டங்களை கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இறக்குமதி செய்த தமிழர்கள், கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து அரிக்கமேட்டில் சொந்தமாகத் தயாரித்து அதன்மேல் இறக்குமதி செய்யப்பட்டது எனக் குறியிட்டு விற்றனர் என்கிறார் விமலா பெக்லி அவர்கள்(DR. VIMALA BEGLY, ROME AND TRADE, CERAMIC EVIDENCE FOR PRE-PERIPLUS TRADE ON THE INDIAN COASTS, P-176, & TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 58).எலிசபெத் லிடிங்வில்(ELIZABETH LYDING WILL) அவர்கள் அரிக்கமேட்டில் கிடைத்த அம்போரா பண்டங்களை ஆய்வு செய்து, இரு கைப்பிடி அம்போரா பண்டங்களில் பாதிக்கு மேல் கிரேக்கக் கோயன்(Greek Koyan Amphoras)அம்போரா பண்டங்கள் எனவும் இவை கிரேக்கத்தீவில் உள்ள ஏஜியன் கடலில்(Agegean sea) இருக்கும் கோச்(kos) தீவில் கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை எனவும் மீதியுள்ளவை கி.மு. 2ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரோமில் உற்பத்தி செய்யப்பட்டவை எனவும் கூறியுள்ளார். (Source: Elizabeth Lyding will- The Mediterraneian Shipping Amphorae from Arikkamedu p.isi &TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 43).

பூம்புகார்:

 காவிரிப்பூம்பட்டினம் எனப்படும் சோழர்களின் தலைநகரம் இதுவாகும். 1965இல் நடந்த அகழாய்வில் இங்கு இரண்டு மரத்தூண்கள் கிடைத்துள்ளன. அவற்றை கார்பன் பகுப்பாய்வு முறையில் அறிவியல் ஆய்வுக்குட்படுத்தி அதன் காலம் கி.மு. 5ஆம் 4ஆம் நூற்றாண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள். (Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 58, 59, & S.R. RAO JOURNAL OF MARINE ARCHAEOLOGY, vol-2, 1991 page-6) இங்கு மெகாலிதிக் கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அவைகளின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.4ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் என்கிறார் நடன காசிநாதன் அவர்கள் (Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 71). நடன காசிநாதன் அவர்கள் தனது நூலில் பக்கம் 69 முதல் 76 வரை இந்த பூம்புகாரில் நடைபெற்ற பல்வேறு அகழாய்வுகள் குறித்தும் அதன் விடயங்கள் குறித்தும் விரிவாகச் சொல்லியுள்ளார். இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு (கி.மு 500 வாக்கில்) முன் இந்த பூம்புகார் நகரம் கடலுக்குள் 5 கி.மீ வரை பரவி இருந்துள்ளது என்கிறார் அவர்(Source: TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 72).

பூம்புகார் நகர நாகரிகம்:

 1991, 1993 ஆகிய ஆண்டுகளில் கோவாவில் உள்ள தேசியக் கடலியல் கழகம் பூம்புகார்க் கடற்கரை அருகே கடலில் அகழாய்வை மேற்கொண்டு இறுதியில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. “இலாட வடிவில் (U) உள்ள கட்டிட அமைப்பு பூம்புகார்க் கடற்கரையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் 23 மீட்டர் ஆழத்திலும் காணப்பட்டது. இந்த அமைப்பின் மொத்த நீளம் 85 மீட்டர்; இரண்டு சுவர்களுக்கு இடையே 13 மீட்டர் இடைவெளி, சுவர்களின் அதிக அளவு உயரம் 2 மீட்டர்; மேற்குச் சுவரைவிடக் கிழக்குச் சுவர் உயரம் அதிகம்; சுவரில் கடற்பாசிகள், செடிகள் படர்ந்திருந்ததாலும் சில இடங்களில் கட்டுமான வேலைகளும் காணப்பட்டனஎன்பது அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.

 அதன்பின் 2001 ஆண்டு கிரகாம் ஆன்காக் என்கிற இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர் இங்கிலாந்து 4ஆவது தொலைக்காட்சி, அமெரிக்கத் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிதி உதவியுடனும், கோவாவில் உள்ள தேசியக் கடலியல் கழகத்தின் உதவியுடனும் பூம்புகார்க் கடல்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த இலாட வடிவில் (U) உள்ள கட்டிட அமைப்பு படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது 100 அடிகள் ஆழத்தில் மேலும் 20 பெரிய கட்டுமான அமைப்புகளைக் கண்டதாக கிரகாம் ஆன்காக் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாய்வு பற்றிய நூலின் 14ஆவது இயல் பூம்புகார் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வை விவரிக்கிறது. 11000 ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதை அவ்வாய்வறிக்கையில் கிரகாம் ஆன்காக் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

 இங்கிலாந்து டர்காம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் ஆராய்ச்சியாளர் கிளீண் மில்னே அவர்கள், கிரகாம் ஆன்காக் அவர்களின் கருத்து சரியானது தான் என்கிறார். ஆனால் கோவா-தேசியக் கடலியல் கழகத்தின் ஆய்வாளர் முனைவர் ஏ. எசு. கவுர் அவர்கள், “இலாட வடிவில் (U) உள்ள அமைப்பைக் கட்டுவதற்கு மாபெரும் தொழில்நுட்பம் தேவை... 11500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த பண்பாடுகளின் திறமைக்கு அப்பாற்பட்டது அது எனக் கூறியுள்ளார். கிளீண் மில்னே, கிரகாம் ஆன்காக் அகியோர்களின் கருத்துப் படி பூம்புகார் நகர நாகரிகம் மெசபடோமியாவில் இருந்த சுமேரிய நாகரிகத்திற்கும் முற்பட்டது. பூம்புகார் நகர நாகரிகம் குறித்த இத்தரவுகள், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தெரிவித்துள்ள தரவுகளாகும் (அவரது நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 22-24.)

மரக்காணம் & பந்தர்பட்டினம்:

 தமிழ்நாட்டுத்தொல்லியல் துறையினரின் காலாண்டிதழில் (ஜூலை-2004), திருமதி வசந்தி என்கிற அகழாய்வாளர், எயிற்பட்டினம் என்கிற சங்ககால ஊராகக் கருதப்படுகிற இந்நகரம் கி.மு. 300ஆம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு சங்ககாலத் துறைமுக நகரமாகத் திகழ்ந்துள்ளது எனக் குறிப்பிடுள்ளார் என்கிறார் நரசய்யா அவர்கள். மேலும் அவர் பெரிப்ளஸ் என்கிற கிரேக்கர் எழுதிய நூலில் இதனை சோபட்மா என அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும், நல்லியக்கோடன் என்கிற சிற்றரசனின் துறைமுகமாக இந்நகரம் இருந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார் (பக்: 125). அதுபோன்றே தஞ்சாவூருக்கு அருகிலுள்ள பந்தர்பட்டினம் என்கிற நகரம் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது எனவும் இங்கு முத்து, மணி, இரோம நாணயங்கள் முதலிய நிறைய பொருட்கள் கிடைத்துள்ளன எனவும் நரசய்யா அவர்கள் தெரிவிக்கிறார் (பக்: 172)

கரூர்:

 பொறையர்குலச் சேர அரசர்களின் தலைநகராக இந்நகர் இருந்துள்ளது. இங்கு கி.மு. 3ஆம் நூற்றாண்டு நாணயங்கள் கிடைத்துள்ளன என்கிறார் நரசய்யா அவர்கள் (பக்: 166). தினமலர் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இப்பகுதியில் இருந்து கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொல்லிப்பொறை, மாக்கோதை என்கிற எழுத்துப் பொறிப்புகளைக்கொண்ட சேர நாணயங்களையும், குட்டுவன் கோதை என்கிற கி.மு. 1ஆம் நூற்றாண்டு சேர நாணயம் ஒன்றையும் கண்டறிந்துள்ளார். மாக்கோதை என்பவன் கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை என்கிற கோதை குலச் சேர வேந்தன் ஆவான்.

 கரூரின் வணிகச் சிறப்பு குறித்தக்கட்டுரையில் திரு. இராசசேகர தங்கமணி அவர்கள் பல விடயங்களைத் தந்துள்ளார். பல வணிகப் பெரு வழிகள் சந்திக்கும் இடத்தில் கரூர் அமைந்திருந்தது. முசிறித் துறைமுகத்திலிருந்து தரைவழியாகப் பாலக்காட்டுக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டில் புகுந்து கரூர், உறையூர் வழியாகப் பூம்புகாருக்குச் செல்ல முடியும். இதனால் கரூரின் வணிகம் நன்கு நடந்தது. இப்பாலஸ் பருவக்காற்றினை அறிந்து கொண்ட பின் (கி.பி.45) இரோம வணிகம் பெருகியது. ஆனால் அதற்கு முன்னரே கி.மு. 25 வாக்கில் ஆர்மஸ் துறைமுகத்தில் இருந்து 125 கப்பல்கள் இந்தியாவிற்கு புறப்படத்தயாராக இருந்ததை தான் கண்டதாக ஸ்டிராபோ எழுதியுள்ளார்(SOURCE: Srinivasa Iyengar, P.T., 1982, History of the Tamils Asian Educational Services Chennai, p.195). கரூரில் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த SILAசில செலூசிடியன் நாணயங்களும், கி.மு. 2ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த சில பொனீசியன் நாணயங்களும் கிடைத்துள்ளன என்கிறார் நடன காசிநாதன் அவர்கள். (SOURCE: R.KRISHNAMURTHY, CELEUCID COINS FROM KARUR, STUDIES IN SOUTH INDIAN COINS VOL-3 PP.19-28 TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, PAGE: 44).

வட இந்தியாவிலுள்ள தட்சசீலத்தில் நடந்த அகழாய்வில் கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்குரிய பால நிலையில் இருந்த கொங்கு நாட்டின் நன்கு பட்டை தீட்டப்பட்ட ‘பெரில் கற்கள் மௌரியர்களுக்கு முற்பட்ட காலத்திய மண்ணடுக்குகளில் கிடைத்துள்ளன(Nagasamy R. (ed) Dmilica Tamil Nadu State Department of Archaeologychennai, Vol. 1. 1970, p.58). மேலும் கி.மு. 200- கி.பி.200 காலகட்டத்தில் தென்சீனாவை ஆண்ட ‘அன் அரச மரபினரின் ஈமச் சின்னங்களில் தமிழ் நாட்டு மணிக்கற்கள் கிடைத்துள்ளன. ஆகவே இங்கிருந்து வெளி நாடுகளோடு கி.மு. 4ஆம் நூற்றாண்டிலிருந்தே வணிகம் நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. அதற்குச் சான்றாக ஆயிர்க்கணக்கான உரோமனிய நாணயங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட கிரேக்க நாணயங்களும், நூற்றுக்கணக்கான சீன நாணயங்களும், இருபதுக்கும் மேற்பட்ட பொனீசிய நாணயங்களும் அமராவதி ஆற்றுப்படுகையில் கிடைத்துள்ளன. (source: Nagasamy. R. 1995, Roman Karur, Prakat Prakasaham, Chennai; 2.Krisnamurthy. R., 2000, Non Roman Ancient Foreign Coins from Karur, India, Garnet Publishers, Chennai; 3.Krishnamurthy.R., 2009, Ancient Greek and Phoenician Coins from Karur, Tamil Nadu, India, Garnet Publishers, Chennai; 4.இராசசேகரதங்கமணி, ம., 2006, தமிழ் நாட்டு வரலாற்றில் புதிய கண்டு பிடிப்புகள்; 5.தமிழ் நாட்டில் அயல் நாட்டார் நாணயங்கள், கொங்கு பதிப்பகம், கரூர், பக்: 8-18), (நிகமம்-வணிக வரலாற்றாய்வுகள், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, பக்: 39-46).

 அழகன் குளம், அரிக்கமேடு, பூம்புகார், மரக்காணம், பந்தர்பட்டினம், கரூர் ஆகிய தமிழகத்தின் ஒரு சில நகரங்கள குறித்த ஒரு சில தரவுகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளன. இவைபோக மதுரை, வஞ்சி, மாந்தை, உறையூர், கொற்கை, தொண்டி, முசிறி, நரவு போன்ற பல இலக்கியப் புகழ் பெற்ற பெரு நகரங்களும், கொடுமணல் போன்ற அகழாய்வு நடந்த சிறு இடங்களும் உள்ளன. ஆகவே தரப்பட்டுள்ள சில நகரங்களின் தரவுகளை மாதிரியாகக் கொண்டு சங்ககாலத் தமிழகத்தில் அன்று நடந்து வந்த வணிகத்தின் அளவு, அதன் சிறப்பு குறித்த ஒரு பார்வையைப் பெற முடியும்.

தமிழரசுகளின் கடல் வல்லமை :

தமிழரசுகள் அன்று மாபெரும் கடல் வல்லரசுகளாகவும் இருந்தன. இது குறித்து வின்சென்ட் ஆர்தர் சுமித் என்கிற புகழ்பெற்ற வரலாற்றறிஞர், “தமிழ் அரசுகள் வல்லமை மிக்கக் கடற்படைகளை வைத்திருந்தனர். கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வணிகக் கப்பல்கள் தமிழகம் நாடி வந்தன எனத் தனது இந்திய வரலாறு என்கிற நூலில் குறிப்பிடுவதாகக் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பண்டையத் தமிழ் சமூகம் என்கிற தனது நூலின் முன்னுரையில் தெரிவிக்கிறார். வின்சென்ட் ஆர்தர் சுமித் அவர்கள் தனது அசோகர் என்கிற மற்றொரு நூலில் “தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகளாக பராமரித்து வந்துள்ளன எனக் குறிபிடுகிறார் (ஆதாரம்: “அசோகர்வின்சென்ட் ஆர்தர் சுமித், தமிழில் சிவமுருகேசன் பக் :79) அன்று தென்னிந்திய நாடுகள் என்பன தமிழக நாடுகளே ஆகும்.

பண்டையத் தமிழக அரசுகள் வலிமை மிக்கக் கடற்படைகளைக் கொண்டிருந்த போதிலும் அவர்களிடையே நடைபெற்ற போர்கள் அனைத்துமே நிலப் போர்களாக இருந்தன. அவர்களுக்கிடையே கடற்போர்கள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் இமயவரம்பன் நெடிஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் கடம்ப மன்னர்களை, அவர்களின் கடற்கொள்ளைகளைத் தடுக்கும் பொருட்டு, தங்கள் கடற்படை கொண்டு அவர்களைத் தாக்கி அடக்கினர். தமிழகக் கடல் வணிகத்துக்குத் தடையாக இருந்த கடற் கொள்ளையர்களையும் தாக்கி அடக்கினர் எனப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. அதுபோன்றே சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்செட் சென்னியும், தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும் தென் பரதவர்களை, அவர்களின் கடல் வல்லமையை, தங்கள் கடற்படை கொண்டு தாக்கி அடக்கினர் எனச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

ஆக கடற் பகுதியையும், கடல் வணிகத்தையும் பாதுகாக்க மட்டுமே கடற்படை பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. கடல் வணிகத்தை பாதுகாப்பதில் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்ததாகவும் தெரிகிறது. அதனால் தான் தமிழரசுகளுக்கிடையே கடற்போர் எதுவும் நடைபெறவில்லை. வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல் வணிகத்தை பாதுகாக்கவும், வடக்கிலிருந்து வடுகர்கள் போன்ற அநாகரிக மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும், மொழி பெயர் தேயப் பகுதியைப் பாதுகாக்கவும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. புகழ்பெற்ற நெடியோன் எனப்படும் நிலந்தரு திருவிற்பாண்டியன் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரும் கடற்படை வைத்திருந்தான் எனவும் “சாவகம் (இன்றைய இந்தோனேசியா தீவுகள்) அன்றே அவனது கடற்படை கொண்டு கைப்பற்றப்பட்டது எனவும், அப்பாதுரை அவர்கள் குறிப்பிடுகிறார். அதன்மூலம் “கிராம்புஎனப்பட்ட வாசனைப் பொருள் வணிகம் தமிழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. கிராம்பு என்பது உலகிலேயே இந்தோனேசியாவில் மட்டுமே விளைந்தது எனவும், உலகம் முழுவதும் அதற்கு மிக அதிகத் தேவை இருந்தது எனவும் அறிகிறோம்.

 கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே அத்தேவை கடல் வணிகம் மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. அதனால் தான் அவ்வணிகத்தைத் தமிழர்கள் தமது கடற்படை கொண்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். சங்ககாலத்தில் சாவகத்தில் தமிழ் பேசப்பட்டதாக மணிமேகலை காப்பியத்தின் கூற்று அச்செய்தியை உறுதிப் படுத்துகிறது(ஆதாரம் : கா.அப்பாதுரை அவர்களின் “தென்னாட்டுப் போர்க்களங்கள் பக்: 43 முதல் 48 வரை). மேலும் நரசய்யா அவர்களின் “கடல் வழி வாணிகம் என்கிற நூல் தமிழர்களின் பண்டையக் கடல் வணிகம் குறித்துப் பல விரிவான தகவல்களைத் தருகிறது. கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே பண்டையத் தமிழக அரசுகள் கடற்போரிலும், கடல்வணிகத்திலும் புகழ் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக இருந்து வந்துள்ளனர்.

ஆதலால் தான் கி.மு. 500 முதல் கி.பி. 250 வரையான 750 வருடங்களாக தமிழக வணிகம் இடைவிடாது உலகளாவிய அளவில் நடைபெற்று வந்தது. பண்டைய வணிகம் குறித்துக் குறிப்பிடப்படும் வணிகப் பொருட்களில் பெரும்பாலானவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் விளைகிற, உற்பத்தி ஆகிற பொருட்களே ஆகும். பண்டைய காலத்தில் இவை அனைத்தும் சிந்துவெளிப் பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், மேற்குலக நாடுகள் ஆகியவைகளுக்குத் தமிழகம் வழியாகவே அனுப்பி வைக்கப்பட்டன.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

http://sellankoottam.blogspot.in/2012/07/blog-post.html



__________________


Newbie

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

எனது கட்டுரைகளைப் பதிவேற்றியதற்கு நன்றி.  எழுத்துக்கள் நன்கு தெரியவில்லை. அதனை முறைப்படுத்தக்கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

பேச: 98427 29157. கணியன்பாலன், ஈரோடு.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

தமிழர் கடல் வணிகம்-பழைய ஏற்பாடு:

 யூதர்களின் ஆதிசமயத் தலைவரான மோசஸ்(MMOSES), தாம் நிகழ்த்திய இறை வழிபாட்டில் வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிக அதிக அளவில் பயன்படுத்தினார் என பழைய ஏற்பாடு தெரிவிக்கிறது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்த ஆண்டு கி.மு. 1490 ஆகும். மோசஸ் அவர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டிய தங்கம் முதலான பொருட்களோடு, இறுதியாக வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் குறிப்பிடுகிறார்.

 மேலும் வாசனைத் திரவியங்களை எப்படி ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அந்த புனிதமான வாசனைத் திரவியங்களைக் கொண்டு எந்தெந்த பொருட்களை புனிதப் படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். குருமார் மற்றும் அவரது புதல்வர்களைக்கூட இந்த வாசனைத் திரவியங்களைக் கொண்டே புனிதப்படுத்த வேண்டும் என்கிறார் மோசஸ். (ஆதாரம்: 1. பழைய ஏற்பாடு- EXODUS, 35: 4-9, 37: 29 & 40: 9-15. 2. தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- டாக்டர் கே.கே. பிள்ளை பக்: 50,51).

 ஆக கி.மு. 15ஆம் நூற்றாண்டில், வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிகச்சிறந்த புனிதப் பொருட்களாக யூதர் களின் சமயத்தலைவரான மோசஸ் கருதி, அவைகளை அன்றே பெருமளவு பயன் படுத்தியுள்ளார் என்பதை பழைய ஏற்பாடு மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும் குறிப்பிடுகிறது.

 கி.மு. 1000 வாக்கில், இஸ்ரேலை ஆண்ட சாலமன்(SSOLOMON) மன்னனுக்கு தென் அரேபிய நாட்டு அரசி சேபா(SHEBA), மிக அதிக அளவான வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும், தங்கத்தையும், மதிப்புமிக்க கற்களையும் பரிசாக வழங்கினார். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை டயர் நாட்டு மன்னன் கிராம்(HHIRAM) அவர்களின் கப்பல்களுடன், சாலமனின் தார்சிஸ்(TARSHISH) கப்பல்களும் சேர்ந்து ஒபீர்(OOPHIR) துறைமுகம் சென்று நிறைய தங்கத்தையும், அகில் மரங்களையும், மதிப்புமிக்க கற்களையும், வெள்ளி, குரங்குகள், மயில்கள், தந்தங்கள், முதலியனவற்றையும் கொண்டு வந்தன ( ஆதாரம்: பழைய ஏற்பாடு-KINGS 1, 9:27,28, & 10:2,10,11,22,25).

சாலமன் மன்னனுக்கு வந்து சேர்ந்த பண்டங்களில் பல தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே என்கிறார் கே.கே.பிள்ளை அவர்கள். உதாரணம்: 1.துகிம்- தோகை, மயில்தோகை; 2.ஆல்மக் மரங்கள்- அகில் மரங்கள் 3.Kகஃபி- கவி, (பழந்தமிழில் கவி என்பது குரங்கு என பொருள்படும்). முதலியன ஆகும்(தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- பக்: 50,51).

 பாண்டிய நாட்டின் தலைநகராய், துறை முகமாய் கடலைத் தொட்டுக் கொண்டிருந்த கொற்கை நகரம் இப்போது கடலிலிருந்து ஏழு மைல் தூரத்தில் உள் நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. ஓஃபிர் அல்லது உவரி இவ்வூரின் பகுதியாகும். இப்போதும் இதே பெயரில் இங்கிருக்கும் மீனவர் கிராமத்தில் மணல் மேடுகள் உள்ளன. இம் மணல மேடுகள் ஒரு காலத்தில் தங்கச் சுரங்கங்களாய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மழை பெய்தபின்னர் கிராமவாசிகள் அங்கு சென்று தங்கப் பொடியைப் பொறுக்குகின்றனர் என்கிறார் நரசய்யா அவர்கள்.( கடல் வழி வணிகம், பக்:63.)

 ஆக சாலமன் மன்னனுக்கு வந்த பொருள்களில் பல பெயர்கள், தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளாக இருப்பதும், ஒஃபீர் (அ) உவரி என்ற பகுதி இன்றும் கொற்கைத் துறை அருகே இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய தரவுகளாகும்.

பண்டைய தமிழகம்:

 பண்டைய தமிழகம் இன்றைய தமிழகம் போன்று மூன்று மடங்கு நிலப்பரப்பு கொண்டதாகவும், இன்றைய தமிழகக் கடற்கரை போல மூன்று மடங்கு நீளம் கொண்டதாகவும் இருந்த, ஒரு பரந்த விரிந்த மாபெரும் பரப்பாகும். இன்றைய தமிழகம் முழுமையும், இன்றைய கேரள மாநிலம் முழுமையும், அதன் கடற்கரைகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தன. இவை போக இன்றைய கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கோவா வரையிலான துளு நாடு முழுமையும் அதனை ஒட்டிய கடற்கரையும் (பழந்தமிழகத்தில் இதனை நன்னர்கள் ஆண்டனர்), கர்நாடகத்தின் தென் பகுதியும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள ஒரு சில மாவட்டங்களும், அதனை ஒட்டிய கடற்கரையும் பண்டைய தமிழகத்தில் இருந்தன.

 இவை போக இன்றைய இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு, தென் கிழக்குப் பகுதிகளும், அநுராதபுரத்தை ஒட்டிய பகுதிகளும், இலங்கைக் கடற்கரையில் 75 விழுக்காட்டுக்கு மேற்பட்டவைகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தன. ஆக ஒட்டு மொத்தமாக பண்டைய தமிழகத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும், கிட்டத்தட்ட 2500 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையும் இருந்தன.

 இவைகளை ஒப்பிட, கீழ்க் கண்ட சில தரவுகளை அறிவது நலம். நமது இன்றைய தமிழகத்தின் பரப்பு சுமார் 1.3 இலட்சம் சதுர கிலோ மீட்டர். இன்றைய தமிழக கடற்கரையின் நீளம் சுமார் 800 கி.மீ. இன்றைய இந்திய நாட்டின் பரப்பு சுமார் 33 இலட்சம் சதுர கிலோ மீட்டர். இன்றைய இந்திய கடற்கரையின் நீளம் சுமார் 6000 கி.மீ. பிற்கால சோழப்பேரரசு உச்ச நிலையில் இருந்தபொழுது, அதாவது இராசேந்திர சோழன் காலத்தில் அதன் ஆட்சிக்குட்பட்ட பரப்பு சுமார் 16.5 இலட்சம் சதுர கிலோ மீட்டர். பண்டைய தமிழகத்தின், சுமார் 2500 கி.மீ நீளக்கடற்கரை, தமிழர்களை கடலோடிகளாகவும் கடல் வணிகத்தில் தலை சிறந்தவர்களாகவும் ஆக்கியது எனலாம்.

தமிழர் கடல் வணிகம்- இணையதளத் தரவுகள்:

 கி.மு.3000வாக்கில் அசீரியர்களின் தொன்மக்கதை ஒன்றில் அவர்களது கடவுள் நல்லெண்ணையைக் குடித்த பின் தான் (எள் விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய்) உலகத்தைப் படைத்தார் என்ற பதிவு உள்ளது. இந்த எள் செடியின் மூலம்(ORIGIN) இந்தியத் துணைக்கண்டம் என்று கருதப்படுகிறது. ஆக அன்றே இந்தியாவிலிருந்து இந்த எண்ணெய் அசீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 கி.மு.2500க்கு முந்திய எகிப்து அரசன் சியொப்ஸ் (Cheops) அவர்களின் மிகப்பெரிய பிரமிடுகளைக் கட்டிய தொழிலாளர்களுக்கு ஆசியக்கண்டத்து வாசனைப்பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வலிமையூட்டப்பட்டது என எகிப்திய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

 கி.மு.2400இல் சுமேரியாவில் கிராம்பு(Cloves) பயன்படுத்தப்பட்டதாக தொல்பொருள் ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கிராம்பு (வாசனைப்பொருள்) அன்று உலகிலேயே இந்தோனேசியாவில் உள்ள மொலுக்கஸ்(Moluccas) தீவில் மட்டுமே கிடைத்தது. இத்தீவிற்கு வாசனைத்தீவு என்றே பெயரிடப்பட்டுள்ளது. இத்தீவுடன் நடத்தப்பட்ட வணிகமே மிகப்பழமையான வணிகம் ஆகும்.

பாபிலோனிய மன்னன் ஹமுராபி(HHAMMURABI) (கி.மு.1792-1750) தனது சட்டத்தில் அறுவை மருத்துவத் தோல்விக்கு கடுமையான தண்டனை விதித்ததால் அங்கு மிகப்பெரிய அளவில் வாசனைத்திரவியங்களும் வாசனைப் பொருட்களும் தேவைப்பட்டன.

 எகிப்திய ஆவணங்களின் படி கி.மு.1550 இல் மருத்துவத்திற்காகவும், உடலை அழிவிலிருந்து பாதுகாக்கவும் வாசனைத் திரவியங்கள் பயன் படுத்தப்பட்டன. இலவங்கப்பட்டை(Cassia), கருவேலம்பட்டை(Cinnamam) முதலியன மனித உடலை அழியாமல் பாதுகாக்க அவசியமாகக் கருதப்பட்டது. இவை தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே கிடைக்கின்றன.

 எகிப்தில் கி.மு.1473-1458 வரை ஆண்ட இளவரசி ஹட்செப்சுட்ஸ் (Hatcepsuts) , “ பண்ட்” என்ற இடத்திற்கு கப்பல் பயணம் செய்து கருவேலம்பட்டை, வாசனைப் பொருட்கள் போன்றவைகளை எகிப்துக்குக் கொண்டுவந்ததாக எகிப்திய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

 எகிப்தில் கி.மு.1213 இல் இறந்த இரமேசஸ்-2(Ramasses) உடைய மம்மியின் இரு மூக்குத் துவாரங்களிலும் மிளகுப்பொருள்(Peppercorn) செருகி வைக்கப்பட்டிருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (Source; E-Document-Trade,History of the spice trade, introduction page )

தமிழர் வணிகம்-திருமதி. இலட்சுமி:

 பண்டைய தென்னிந்திய வணிகம் குறித்த தனது கட்டுரையில் திருமதி இலட்சுமி அவர்கள், தொல்லியல், கல்வெட்டுகள், மொழியியல் சான்றுகள், வரலாற்று நூல்கள், மனித இன ஆய்வு, சமயத் தொடர்பு போன்ற பலகோணங்களில் ஆய்வு செய்து, மிகப் பழங்காலத்தில் இருந்தே தமிழகம் கடல் வணிகம் செய்து வருகிறது என உறுதிபடக் கூறுகிறார். அவரது தரவுகள் சிலவற்றை காண்போம்.

எகிப்தின் 17 ஆவது அரச வம்சம் நிறைய யானைத் தந்தங்களைப் பெற்ற தற்கான ஆவணங்கள் உள்ளன. மேலும் அதனால் ஆன பொருட்களான மேசை, நாற்காலி, சிலை போன்றவற்றைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. ஆப்பிரிக்கக் காடுகளை விட தென்னிந்தியக் காடுகளில் யானைகளைப் பிடிப்பது எளிது. எனவே இவை தென்னிந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் வந்துள்ளன. எகிப்திய 18வது அரச வம்சம் மதிப்பு மிக்க கற்கள், வாசனைப் பொருட்கள், தந்தங்கள், தங்கம், கருவேலம்பட்டை, மனிதக்குரங்கு, குரங்கு, நாய், புலித்தோல் முதலியவற்றை அரேபியர்கள் மூலம் பெற்றதற்கான குறிப்புகள் உள்ளன.

 இந்தியாவோடு அசீரியா கொண்ட வணிகத் தொடர்பு குறித்து, கிட்டிட்டி (Hittiti) அரசனான மிட்டானியுடைய (Mitani) கி.மு.14ஆம், 15ஆம் நூற்றாண்டை சார்ந்த கியூனிபார்ம் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. அதே காலத்தைச் சார்ந்த அசீரிய அரசனான டிக்ளத் பைல்சர்-3 (Tiglath pileser) உடைய நிம்ருட் (Nimrud) எழுத்துப் பொறிப்புகளில், இந்தியப் பொருட்களான துணிகள், நறுமணப் பொருட்கள் முதலியனவற்றை யக்கிம் (Yakim) என்ற அரசன், அசீரிய அரசனுக்கு பரிசாக வழங்கியதற்கான குறிப்புகள் உள்ளன.

எகிப்தின் 20 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்த இரமேசஸ்-3 (கி.மு.1198-1167) என்பவரும், எகிப்தின் 28 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்தவர்களும் தென்னிந்திய பொருட்களை பெற்றதாகக் குறிப்புகள் உள்ளன. திருமதி இலட்சுமி அவர்கள் தந்துள்ள தரவுகள் பல முன்பே தரப்பட்டுள்ளதால் அவை இங்கு தவிர்க்கப் படுகின்றன்.

 தமிழகப் பரதவர்கள் தங்கள் படகுகள் அல்லது சிறு கப்பல்கள் மூலம் பாரசீக வளைகுடா, ஏடன், கிழக்கு ஆப்பிரிக்கத் துறைமுகங்களுக்கு தமிழக, தென்கிழக்கு ஆசிய பொருட்களைக் கொண்டு சென்று ஒப்படைக்க, அதனைப் பெற்றுக் கொண்ட பொனீசியர்களும், அரேபியர்களும் அவைகளை எகிப்துக்கும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் மிகப் பழங்காலத்திலேயே கொண்டு போய்ச்சேர்த்தனர் என்பதை சில ஆதாரங்களுடன் திருமதி. வி.டி. இலட்சுமி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.(Source: E- Document-Trade, Ancient south Indian commerce – Srimathi. V. T. Lakshmi)

பெருங்கற்கால குறியீடுகள்:

 தமிழத்தில் உள்ள பெருங்கற்படை சின்னங்களிலும், முதுமக்கள் தாழிகளிலும் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகள், மட்பாண்டங்கள், அணிகலங்கள், முத்திரைகள் போன்ற பொருட்களிலும், நாணயங்களிலும், கல்வெட்டுகளிலும், தமிழி எழுத்துகளோடும் குறியீடுகள் உள்ளன. இக்குறியீடுகள் பண்டைய நாகரிகங்களில் உள்ள குறியீடுகளோடு ஒப்புமை கொண்டுள்ளன. இவை முக்கியமாக சிந்துவெளி எழுத்துக்களோடு நெருங்கிய தொடர்பு உடையனவாக உள்ளன.

 இவை குறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “பண்டைத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும் “ என்ற நூலில் கீழ்க்கண்ட தரவுகளை வழங்குகிறார் முனைவர் இராசு பவுன்துரை அவர்கள்.

சுமேரியன், அக்கேடியன், ஹிட்டடைட் ஆகிய மூன்று தொன்மையான மொழி எழுத்து மரபுகளுடன் பெருங்கற்காலத் தமிழகக் குறியீடுகளின் வடிவங்கள் ஒப்புமை உடையனவாக உள்ளன. (பக்:237)

சுமேரிய-எகிப்து மொழியில், இலினியர்(Linear-B) எழுத்துமுறை கலந்திருப்பதாகவும், இலினியர் எழுத்துக்களில் 87 குறியீடுகள் உயிர்மெய் எழுத்துக்கள் எனவும், அந்த 87 எழுத்துக்களும் தென்னிந்தியக்குறியீடுகள், வரிவடிவங்களோடு ஒப்புமை உடையனவாக உள்ளன. (பக்: 248)

தமிழகத்தில் கண்டறியப்பட்ட பண்டைய குறியீடுகளையும், சிந்து வெளிக் குறியீடுகளையும் தொகுத்துக் காணும் பொழுது அவற்றிற்கு இடையே காணப்படும் வரைவு ஒற்றுமைகளும், மொழி, எழுத்து குறித்த சிந்தனைகளும் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்றுத் திகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது. (பக்:252.) மேலும் சிந்து வெளிக் குறியீடுகளின் எழுத்துரு அமைப்பில் தமிழின் தொடர்பையும், தொல் குறியீடாகிப் பின்னர் மொழியாக்கம் பெற்ற தமிழியில் சிந்து வெளிக் குறியீடுகளின் ஒப்புமையும் காணமுடிகிறது. (பக்:253)

தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுக்கும், கி.மு. 500 - கி.பி. 200 ஆம் காலத்திய ஜப்பானிய யாயோய் (Yayoi) பண்பாட்டு மட்பாண்டக் குறியீட்டு வரைவுகளுக்கும் இடையே தெளிவான வடிவ ஒற்றுமை இருக்கிறது.(பக்:230)

சீனம், எகிப்து, இலங்கை, ஜப்பான், கிரேக்கம் ஆகிய நாடுகளின் 130 பழங்காலக் குறியீடுகள் தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.(பக்: 239-244) அதில் எகிப்து நாட்டுக் குறியீடுகளோடு 121 குறியீடுகளும், சீனத்தோடு 103 குறியீடுகளும், ஜப்பானோடு 94 குறியீடுகளும், கிரேக்கத்தோடு 64 குறியீடுகளும் ஒப்புமை கொண்டுள்ளன என்பது கணக்கிட்டு அறியப்பட்டது.

பண்டைய உலக நாகரிகங்களின் சமகாலத்துப் பண்பாட்டிற்கு இணை -யாகவே சங்ககாலத் தமிழகம் திகழ்ந்தது என்பதை, உறுதி செய்யும் வண்ணம் இப்பெருங்கற்காலக் குறியீடுகள் அமைகின்றன(பக்:262).

மேலே தரப்பட்ட முனைவர் பவுன் துரை அவர்களின் தரவுகள் கி.மு.3000 முதல் கி.மு.1500 வ்ரையும், கி.மு.800 முதல் கி.மு. 200 வரையுமான இரு காலத்தைக் கொண்டவை என்றும், இதில் எகிப்து, சிந்து, சீனம், சுமேரியா போன்ற பண்டைய நாகரிகங்கள் முதல் காலத்தையும், இலங்கை, ஜப்பான், கிரேக்கம் போன்ற நாடுகள் இரண்டாம் காலத்தையும் சார்ந்தவை ஆகும் என்றும் அவரே தெரிவித்துள்ளார். (பக்:263)

பண்டைய நாகரிக நாடுகளின் குறியீடுகளோடு கொண்டுள்ள இந்த ஒப்புமையை தற்செயலானவை எனக் கருத இயலாது. பண்டைய தமிழகம் இந்த நாடுகளோடு கி.மு. 3000 முதல் வணிகப் பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டிருந்தன என்பதற்கு இக்குறியீடுகளின் ஒப்புமை ஒரு ஆதாரமாகத் திகழ்கிறது எனலாம்.

தமிழக இலங்கைத் தொல்பொருள் ஆய்வு:

 பண்டைய வணிகம் குறித்து மேலே சொல்லப்பட்ட தரவுகளில், குறிப்பிடப்பட்ட வாணிப பொருட்களில் பெரும்பாலானவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் விளைகிற, உற்பத்தி ஆகிற பொருட்களே ஆகும். பண்டைய காலத்தில் இவை அனைத்தும் சிந்து வெளிப் பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், மேற்குலக நாடுகள் ஆகியவைகளுக்கு தமிழகம் வழியாகவே அனுப்பி வைக்கப்பட்டன.

 தமிழகத்தில் உலோக காலத்துக்கு முந்தைய, மூன்றாம் நிலைக் கற்காலக் கருவிகள் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் கிடைத்துள்ளது. அதன் காலம் கி.மு. 4000 ஆகும். அதன் பின் உலோக காலம் தொடங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை உலோக காலம் பிற இடங்களைப் போல் அல்லாமல், நேரடியாக இரும்புக் கால நாகரிகமாகவே தொடங்குகிறது.( தமிழக வரைவுகளும், குறியீடுகளும்- இராசு பவுன்துரை, பக்: 85-86.)

 இலங்கையின் அநுராதபுரத்தில் ஆதிகால இரும்புப் பண்பாட்டின் தொடக்கக் குடியிருப்புகளின் காலம் கி.மு. 1000 என சிரான் தரணியகல (இலங்கை தொல்லியல் ஆய்வாளர்) தெரிவித்துள்ளதாக, “இலங்கையில் தமிழர்” என்ற தனது நூலில் இந்திரபாலா குறிப்பிட்டுள்ளார்.( பக்.113.) இலங்கையின் வடமேற்குக் கரைக்குத் தமிழ் நாட்டிலிருந்து பரவிய புதிய ஆதி இரும்புக் காலப் பண்பாடு, அவ்விடத்தில் நன்கு வேரூன்றிய பின், உள்ளே பரவத் தொடங்கி அநுராதபுர இரும்புக் காலக் குடியிருப்பு தோன்றியது எனலாம் என்கிறார் இந்திர பாலா. (பக்:110). புதிய ஆதி இரும்புக்கால நாகரிகம் தமிழ் நாட்டில்(ஆதிச்ச நல்லூர்) நன்கு வேரூன்றிய பிறகே, இலங்கையின் வடமேற்கு கரைக்கு(பொம்பரிப்புப் பகுதி) பரவியிருக்க வேண்டும்.

 பொம்பரிப்பு பகுதியில் நன்கு வேரூன்றிய பிறகே அநுராதபுரத்திற்கு பரவி இருக்கவேண்டும். இதற்கு சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். ஆக அநுராதபுர இரும்புப் பண்பாட்டின் தொடக்கக் குடியிருப்பு காலம் கி.மு. 1000 எனில், இலங்கையின் வடமேற்கில்(பொம்பரிப்புப் பகுதி) பரவிய ஆதி இரும்பு பண்பாட்டின் தொடக்க குடியிருப்பு காலம் கி.மு. 1200 ஆக இருக்கவேண்டும். இலங்கையின் இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1200 என்றால், அதற்கு முன் தமிழகத்தின் ஆதிச்ச நல்லூரில் அப்பண்பாடு நன்கு வேரூன்றிய பிறகே இலங்கைக்கு பரவியிருக்க வேண்டும்.

 எனவே தமிழக ஆதி இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இரும்புப் பண்பாடு, தென்னிந்தியாவில் கி.மு. 1200 அளவில் தோன்றியதாகவும், இலங்கையில் கி.மு. 1000ல் தோன்றியதாகவும் கருதப்படுகிறது என்கிறார் இந்திரபாலா.(பக்: 114).

ஆதிச்ச நல்லூர்:

 தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் பெருங்கற்படை சின்னங்களும், தென்கிழக்கு பகுதியில்( ஆதிச்ச நல்லூர்) முது மக்கள் தாழிகளும் தமிழகத்தின் இரும்புப் பண்பாட்டு காலச் சின்னங்களாக உள்ளன. தக்காணத்தில் உள்ள வடபகுதி பெருங்கற்படைச் சின்னங்களின் அகழாய்வு கொண்டுதான் தென்னிந்திய இரும்புக் காலப் பண்பாடு கி.மு. 1200 எனக் கொள்ளப்படுகிறது ஆனால் தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஆதிச்ச நல்லூரில் இது வரை 1%க்கு குறைவான அகழாய்வே நடத்தப்பட்டுள்ளது(தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-கா.ராஜன், பக்:26). அலெக்சாண்டர் ரே அவர்கள் சுதந்திரத்திற்கு முன்பு நடத்திய அகழாய்விற்குப்பின், 2004 இல் தான் மீண்டும் அகழாய்வு தொடங்கப்பட்டது. அதுவும் முழுமையாக நடத்தப்படவில்லை

 ஆதிச்ச நல்லூர் அகழாய்வு இயக்குநர் டாக்டர் சத்யமூர்த்தி அவர்கள், 25.5.2007 இந்து நாளிதழில், பொருள் உற்பத்தி பண்பாடு தெற்கிலிருந்து வடக்கே சென்றிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக, ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த( 1% ஆய்வில்) பொருட்களின் தயாரிப்பில் உள்ள உயர்தொழில்நுட்பம் இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார். தென்னிந்தியாவின் வடபகுதியில் கி.மு 1200ல் தோன்றிய இரும்பு பண்பாடு தெற்கே பரவியதாகவே முன்பு கருதபட்டது.

 தெற்கிருந்து வடக்கே பொருள் உற்பத்தி பண்பாடு பரவியது என்றால், இரும்பு பண்பாடு முதலில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் துவங்கி இருக்க வேண்டும் என்பதோடு அதன் காலம் கி.மு 1200க்கு முன்பாக இருக்க வேண்டும்.. ஆதிச்ச நல்லூர் மற்றும் பிற முதுமக்கள் தாழி உள்ள இடங்களில் அகழாய்வு முழுமையாக நடத்தப்பட்டால் , தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு.1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. இலங்கை, ஆதிச்ச நல்லூர் தொல்லியல் ஆய்வுகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

 இரும்பு காலத்திற்கு முன்பே, புதிய கற்காலத்திலேயே, மனிதர்கள் கடல் பயணம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் மூன்றாம்நிலை புதிய கற்காலம் கி.மு 4000 ஆகும். இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு. 1500ஆகும். ஆக, கி.மு. 4000த்துக்கும், கி.மு. 1500க்கும் இடைபட்ட காலத்தில், தமிழர்கள் கடல் வணிகத்தைத் தொடங்கிவிட்டனர் எனலாம். இரும்பு பண்பாட்டின் துவக்க காலத்தில் இருந்து, இக்கடல் வணிகம் ஒரு வளர்ச்சி பெற்ற வணிகமாக மாறுவதோடு, ஒரு நிலையான, தொடர்ச்சியான வணிகமாகவும் மாறியிருக்கும். அதற்கு பின்னரே இரும்பு பொருட்களின் ஏற்றுமதி தொடங்கி இருக்க வேண்டும்.

 ஆக, பண்டைய தமிழர் கடல் வணிகம் மிகப்பழங்காலத்தில் இருந்து நடந்து வருகிறது என்பதற்கான சில ஆதாரங்களும் காரணங்களும் வருமாறு,

1.பண்டைய நாகரிக நாடுகள் பயன்படுத்திய பொருட்களில் (தரவுகளில் சொல்லப்பட்டவை) பெரும்பாலனவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைகளில் மட்டுமே கிடைப்பவை. ஆகவே, அவை அனைத்தும் தமிழகம் வழியாகவே, தமிழர் கடல் வணிகம் மூலமே மேற்குலக நாடுகளுக்கு கிடைத்துள்ளன.

2.தமிழக பெருங்கற்கால குறியீடுகள், பிற தொன்மையான நாகரிகங்களின் குறியீடுகளோடு ஒப்புமை கொண்டிருப்பது, பண்டைய தமிழகத்திற்கும் பிற தொன்மையான நாகரிக நாடுகளுக்கும் இடையே இருந்த வணிகப் பண்பாட்டுத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

3.பண்டைய தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையும், அதன் பரந்த விரிந்த பரப்பும், தமிழகப் பரதவர்களின் கடலோடும் தன்மையும், பண்டைய தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழ்நிலையும் தமிழகக் கடல் வணிகம் பழங்காலம் தொட்டு நடைபெற ஒரு முக்கிய காரணியாகும்.

4.சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை போன்ற கிழக்குலக நாடுகளுக்கும், சிந்துவெளிப்பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, எகிப்து, பாலஸ்தீனம், ரோம் போன்ற மேற்குலக நாடுகளுக்கும் இடையே ஒரு கேந்திரமான இடத்தில் தமிழகம் அமைந்திருப்பதும் ஒரு காரணமாகும்.

5.தமிழகத்தில், புதிய கற்காலத்தின் மூன்றாம்நிலை காலம் கி.மு. 4000 என்பதும், தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1500 என்பதும், தமிழகம் மிகப் பழங்காலத்தில் இருந்தே கடல் வணிகம் செய்வதற்கேற்ற சூழ்நிலையைக் கொண்டிருந்தது எனலாம்.

 மேற்கண்ட 5 ஆதாரங்களும், காரணங்களும் போக வேறு பல இருக்கலாம் எனினும், இவையே பிரதானமானவைகளாகும்.

 - கணியன்பாலன் 



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

 

  பழந்தமிழர்களுடைய கடல்வணிகம் குறித்து இரு வருடங்களுக்கு முன் எழுதிய முதல் கட்டுரையில் பண்டைய காலம் முதல் கி.மு. 7ஆம் நூற்றாண்டுவரையான பழந்தமிழர்களின் கடல்வணிகம் குறித்து எழுதியிருந்தேன். கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதில் இது முதல் கட்டுரையாகும். இரண்டாவது கட்டுரை தமிழக வணிகத்தின் அளவீடைத் தெரிந்துகொள்ள நாணயங்கள் குறித்தும் வட இந்திய வணிகம் குறித்துமான கட்டுரையும், மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியத்தில் கடல்வணிகம் குறித்த கட்டுரையும் ஆகும்.

ship 270 “தங்களின் பண்டைய உருவாக்கமான சொந்தக் கப்பல்களைக் கொண்டு தமிழர்களின் கடல்வணிகம் பாதுகாப்பான முறையில் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றிருந்ததோடு, இந்த வணிகத்தோடு கருத்துப்பரிமாற்றங்களும் தென்னிந்தியாவில் மட்டுமில்லாது, பாரசீக வளைகுடா, அரேபியக்கடற்கரை, ஆப்ரிக்க ஆகிய நாடுகளோடு தொடர்ந்து நடத்தப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்தன. புத்தமத, பிராமண நூல்கள் இந்த கடல்வணிகத்தின் காலத்தை கி.மு. 5ஆம் நூற்றாண்டு எனச்சொல்வதற்கு, இந்நூல்கள் வட ஆரியர்களுடையது என்பதும், உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்களது என்பதும், தமிழர்கள் நன்கு வளர்ச்சியடைந்த பின்னரே இவர்கள் தென்னிந்தியாவிற்கு வந்தனர் என்பதும் தான் காரணமாகும். ஆனால் இக்கடல்வணிகத்தின் காலம் மிக முந்தையது ஆகும்(R. SEWELL, HINDU PERIOD OF SOURTHERN INDIA, IN IMP. GAZ.., -2, 322)”

 “ஆரியமொழி இங்கு நுழையவில்லை. வட இந்தியாவிலிருந்து முழுமையாக வேறுபட்டு, இந்த நாடுகள் தங்கள் சொந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். பிற உலக நாடுகளோடு கடல்வணிகம் மூலமாகத் தொடர்பு கொண்டிருந்தனர். மிக ஆரம்பகாலம் முதல் அவ்வணிகம் மிகப்பாதுகாப்போடு நடைபெற்றுவந்தது. மன்னார் வளைகுடாவின் மிகச் சிறந்த முத்துக்களும், கோயமுத்தூரின் மணிக்கற்களும், மலபாரின் மிளகும் உலகின் வேறு எங்கும் கிடைக்காது, இங்குமட்டுமே கிடைக்கும். வெளிநாடுகளில் கி.மு. 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் இருந்து இவைகளுக்கு மிகப்பெரிய தேவை இருந்து வந்தது(VINVINCENT SMITH, EARLY HISTORY, 334)”.

  எரித்ரேயக்கடலில் பெரிப்ளஸ் என்கிற கிரேக்க நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் திரு.சுகாப் அவர்கள் (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.3), தனது நூலில்(பக்: 209, 210) பண்டைய தமிழர்களின் கடல்வணிகச் சிறப்பை வெளிப்படுத்துவதற்காக மேற்கண்ட இரு பகுதிகளை சுவெல், வின்சென்ட் சுமித் ஆகிய இரு புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களிடமிருந்து எடுத்து மேற்கோள்களாகத் தந்துள்ளார்.

திரு.சுகாப் அவர்களுடைய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளஸ்” என்கிற ஆங்கில நூல் மொத்தம் 325 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிப்ளஸ் அவர்களுடைய மூல நூலின் பக்கங்கள் 28 ஆகும்.(பக்:22-49). மீதி உள்ள பக்கங்களில் 234 பக்கங்கள்(பக்:50-283), சுகாப் அவர்களின் விரிவான விளக்கக் குறிப்புகளைக் கொண்டவை. பண்டையத் தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப்பொருட்கள் பற்றி மட்டும் 40 பக்கங்கள்(பக்:203-242) உள்ளன. பெரிபுளுசு அவர்கள் ஒரு கிரேக்கர். எகிப்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு உரோமக் குடிமகன். எகிப்திலிருந்து கங்கைவரையான அவரது பயணம் குறித்த குறிப்புகளை விட்டுச்சென்றவர். அக்குறிப்புகளுக்கு, பெரிப்ளஸ் காலத்தில் இருந்த நாடுகள், நகரங்கள், வணிகப் பொருட்கள் குறித்த முழுமையான வரலாறுகளையும், நிலவியல் தரவுகளையும், இன்ன பிறவற்றையும் திரு.சுகாப் அவர்கள் நன்கு அறிந்து, விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார். தமிழகம் குறித்துப் பல்வேறு நூல்களை நன்கு படித்து, ஆழ்ந்து புரிந்து கொண்டு சுகாப் எழுதியுள்ளார். ஆகவே பொதுவாக அவரது இந்த நூல், பண்டைய காலத்தியக் கடல் வாணிகம் குறித்த, முக்கியமாகத் தமிழர் கடல்வணிகம் குறித்த ஒரு அதிகாரபூர்வமான ஆவணம் எனலாம்.

  பிளினி, சுட்ராபோ, டாலமி போன்ற பண்டைய நூலாசிரியர்களை மட்டுமல்லாது வின்சென்ட் சுமித், சுவெல், கென்னடி போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்களையும் நன்கு ஆழ்ந்து படித்தே விளக்கக் குறிப்புகளை திரு. சுகாப் அவர்கள் எழுதி உள்ளார். அதனால்தான், சுகாப் என்னும் அறிஞரின் முடிவுகளை உண்மை என ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என கே.ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள் தனது சோழர்கள் என்கிற நூலில் குறிப்பிட்டுள்ளார்(சோழர்கள், புத்தகம்-1, தமிழாக்கம்: கே.வி. ராமன், மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2009, பக்: 114).

 தமிழர்கள் தொடக்ககாலத்திலிருந்தே மிகப்பெரியக் கடல்வணிகத்தை வளர்த்து வந்தனர் என்றும் அன்றைய வட இந்தியர்கள் மாலுமித் தொழில் தெரிந்தவர்களல்லர் என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார்(தமிழக வரலாறு, பக்.32). கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதலே மேலை நாடுகளுக்கும், சீனம் வரையிலுள்ள கீழை நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வணிகத் தொடர்பில் தென்னிந்தியாவின் பெரும்பங்கு நன்கு தெரிந்ததாகும் எனவும், தென்னிந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் கடல் வாணிகத் தொடர்பு கி.மு 6 அல்லது 7ஆம் நூற்றாண்டு முதலே இருந்திருக்க வேண்டும் என்கிற கென்னடியின் முடிவு சரியானதாகவே தோன்றுகிறது என கே.ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள் தனது சோழர்கள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்( பக்: 28, 38,).

  இந்தியாவில், கடல்வணிகத்தின் வளர்ச்சி என்பது அடிப்படையில் திராவிடர்களுடையது என்கிறார் சுகாப் அவர்கள்(பக்: 229). பழங்காலத்தில் வட இந்தியர்கள் கடல் வணிகம் செய்ததில்லை என்பதை, திராவிடியர்களே அதாவது தமிழர்களே கடல் வணிகம் செய்தனர் என்பதை வின்சென்ட் சுமித், சுகாப், கென்னடி, சுவெல் போன்ற பல உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். மேலும் சுகாப் அவர்கள், தனது நூலில் தமிழரச வம்சங்கள் இந்திய வரலாற்றில் 2000 வருடங்களுக்கும் மேலான மிக நீண்ட இடைவிடாதத் தொடர்ச்சியைக் கொண்டவைகளாக இருந்துள்ளன என்கிறார் (பக்:238).

ஜவகர்லால் நேரு:

  நேரு அவர்கள் தனது ‘உலக சரித்திரம்’ என்கிற நூலில், “வட இந்தியாவைவிடத் தென் இந்தியா கடலோடு அதிக உறவு கொண்டாடியது. வெளிநாட்டு வியாபாரம் பெரும்பாலும் தென் இந்தியாவுடன் தான் நடைபெற்று வந்தது. பழந்தமிழ்பாடல்களிலே யவனர்களைப்பற்றிய குறிப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. யவன தேசத்து மதுவகைகள், பூந்தாழிகள், அணிவிளக்குகள், முதலியனவற்றைப்பற்றி தமிழ் நூல்கள் கூறுகின்றன(பக்: 184). தென்இந்தியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நல்ல வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. முத்து, பொன், தந்தம், அரிசி, மிளகு, முதலியவைகளும், மயில்களும் குரங்குகளும் பாபிலோன், எகிப்து, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கும், உரோமாபுரிக்கும் அனுப்பப்பட்டன. திராவிடர்களால் ஓட்டப்பட்ட இந்தியக்கப்பல்களிலே இப்பொருள்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலும் கொண்டுபோகப்பட்டன. புராதன உலகத்தில் தென்இந்தியா எத்தகைய உன்னத இடத்தை வகித்ததென்று இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்(பக்: 153)” எனக் குறிப்பிடுகிறார். நேரு அவர்களும் தமிழர்கள் தங்கள் சொந்தக்கப்பல்களில் பாபிலோன், எகிப்து, கிரீஸ், உரோமபுரி போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து வணிகம் புரிந்தனர் என்பதையும், பெரும்பாலான பண்டைய வெளிநாட்டு வியாபாரங்கள் தென் இந்தியாவுடன்தான் நடைபெற்றன என்பதையும் இதன்மூலம் உறுதிப் படுத்துகிறார் எனலாம்.

கே. ஏ. நீலகண்ட சாத்திரி:

  “கிழக்கே மலேயா தீபகத்திற்கும், சுமத்திராவிற்கும், மேற்கே மலபார் பகுதிகளுக்குமிடையேயான வணிகமானது தமிழரிடமே இருந்தது” என கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள், ‘வார்மிங்டன் என்பவரது தி காமர்ஸ் பெட்வீன் தி ரோமன் எம்பயர் அண்ட் இந்தியா(கேம்பிரிட்ஜ், 1928) பக். 128-131’ என்கிற நூலை ஆதாரமாகக் காட்டி தனது ‘சோழர்கள்’ என்கிற தனது நூலில்(பக்: 112)’ குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பெரிபுளூசின் ஆசிரியர்(THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF ) கூறுவதாகக் கீழ்கண்ட தரவுகளைக் குறிப்பிடுகிறார்.

  மூவகைக்கப்பல்கள் தமிழகத்தில் இருந்தன. 1.கரையோரமாக உள் நாட்டுப்பகுதிகளுக்கு அதிகக் கனமில்லாத பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள்; 2.இவற்றைவிடச் சற்று பெரிய அளவில் கட்டப்பட்டு கூடுதலான பொருள்களை ஏற்றிச் செல்ல உதவும் சரக்குக் கப்பல்கள்; 3.கடல்கடந்து, மலேயா, சுமத்ரா, போனற நாடுகளுக்கும், கங்கை நதிவரையிலும் செல்லக்கூடிய பெரும் கப்பல்கள் ஆகிய் மூன்றுவகைக் கப்பல்கள் அன்று தமிழகத்தில் இருந்தன. அவர் பழந்தமிழ் இலக்கியங்களும், பெரிபுளுசின் ஆசிரியரும் ஒன்றுபோல் குறிப்புகளைத்தருவது மிகுந்த வியப்புக்குரிய சான்றாகும் என்கிறார். மேலும் அவர் “தென்னிந்தியா(தமிழகம்), ஈழம் ஆகிய நாடுகளின் துறைமுகங்கள், பெரிபுளுசு கூறுவதைப்போல, தூரக்கிழக்கு நாடுகளுடலான வணிகத்தின் கேந்திரங்களாக விளங்கி, எகிப்திலிருந்து வந்த கலங்களைவிட அதிக அளவிலும், மிகப்பெரிய கலங்களையும் பயன்படுத்தின” என்கிறார்( சோழர்கள், புத்தகம்-1, தமிழாக்கம்: கே.வி. ராமன், மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2009, பக்: 110-114).

  அதாவது அன்றைய மேற்கத்திய நாடுகளான, உரோம், எகிப்து, கிரேக்கம், அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த கப்பல்களைவிடப் பெரியகப்பல்களைத் தமிழகம் பயன்படுத்தியது. மேலும் அப்பெருங்கப்பல்கள் எண்ணிக்கையிலும் மேற்கத்திய நாடுகளைவிட அதிக அளவில் தமிழகத்தில் இருந்தன என்கிறார் பெரிபுளுசு அவர்கள். பெரிபுளுசு அவர்கள் ஒரு கிரேக்கர். எகிப்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு உரோமக் குடிமகன். எகிப்திலிருந்து கங்கைவரையான அவரது பயணம் குறித்த குறிப்புகளை விட்டுச்சென்றவர். அதாவது அன்றைய உலகில் தமிழர்களே மிகப்பெரிய கடலோடிகளாகவும், அதிக அளவிலான கடலாதிக்கமும், வணிக மேலாண்மையும் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்பதை இக்கூற்றுக்கள் வெளிப்படுத்துகின்றன எனலாம்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வின் காலம் தற்பொழுது கி. மு. 2000வரை செல்கிறது என அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தனது தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு என்கிற நூலில் தெரிவித்துள்ளார்கள்(பக்: 61, 62). கொற்கை அதன் அருகில் தான் உள்ளது. ஆதலால் கொற்கைத் துறைமுகம் கி.மு. 1000 வாக்கில் இருந்துள்ளது என்பது உறுதியாகிறது. ஆகவே சாலமனின் கப்பல்கள் இங்கு வந்து பிற பொருட்களோடு 1)துகிம்-தோகை, அதாவது மயில்தோகை, 2). ஆல்மக் மரங்கள்-அகில் மரங்கள், 3.)கஃபி-கவி எனப்படும் குரங்கு ஆகியத் தமிழகப் பொருட்களைக் கொண்டு போனது உறுதிப்படுத்தப் படுகிறது எனலாம்.

 கால்டுவல், மேனாட்டார் மயிலுக்கு பயன்படுத்தும் துகி என்ற சொல் தோகை என்ற தமிழ் சொல்லிலிருந்து வந்தது எனவும், இது உவரித்(OOPHIR) துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது எனவும் இதற்கு பழைய ஏற்பாட்டில் ஆதாரம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்(திருநெல்வேலியின் சரித்திரம், பக்:23). இங்கு உவரித்துறைமுகம் என கொற்கையைக் கால்டுவல் குறிப்பிடுகிடுறார். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல் நங்கூரம் ஒன்றினை தமிழகத்தின் குருசேடைத் தீவில்(CRUSADAI ISLAND) இருந்து கைப்பற்றியுள்ளது. சிசிலியைச்(SSICILY) சேர்ந்த வல்லுநர்கள் இதனை ஆராய்ந்து இந்நங்கூரம் பர்சியன்(PPERSIAN) வகையைச் சேர்ந்தது எனவும் இதன் காலம் கி.மு. 1000 எனவும் குறிப்பிட்டுள்ளனர் (TAMILS HERITAGE-102) . இஸ்ரேலை ஆண்ட சாலமனின் காலம் கி.மு. 1000. ஆகவே அதே கால கட்டத்தைச் சேர்ந்த கல் நங்கூரம் தமிழகத்தில் கிடைத்திருப்பது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

 கி.மு. 1000 அல்லது அதற்கும் சற்று முற்பட்ட காலகட்டத்தில் தொடங்கி கி.மு. 500 ஆண்டளவில் நன்கு மிளிர்ந்து படிப்படியாக பல்வேறு நிலைகளில் தமிழர் நாகரிகம் உயர்நிலையை அடைந்தது என்கிறார் தொன்மைத் தமிழகத்தின் செங்கடல் வணிகத்தொடர்பு என்ற கட்டுரையை எழுதிய சு.இராசவேல் அவர்கள்(நிகமம்-வணிக வரலாற்றாய்வுகள், தமிழ் பல்கலைக்கழக வெளியீடு, பக்: 13). அதே நூலில் சங்ககாலத் தமிழகத்தில் வெளி நாட்டு வணிகம் என்கிற கட்டுரையை எழுதிய மா.பவானி என்பவர், கி.மு. 500 ஆண்டுகளில் ஐரோப்பாவுடனான இந்திய வணிகத்தில் கிரேக்கர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டனர் எனவும் பல நாடுகளுக்கு இடையிலான இப்பரிமாற்றத்தால் வணிகப்பண்டங்களின் தமிழ் பெயர்கள் கிரேக்க மொழியில் இடம் பெற்றுள்ளன எனவும் அரிசி, ஒரைஸ் ஆகவும் கருவா, கார்பியென் ஆகவும் இஞ்சி, ஜிஞ்சிபெரோஸ் ஆகவும் கிரேக்க மொழியில் வழங்கப்பட்டது எனவும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் கி.மு. 2ஆம் நூற்றாண்டு வரை பெரும்பாலும் உரோமுக்குச் செல்லாமல் கிரேக்கத்திற்கே சென்றன எனவும் அதன் பின்னரே அவை இரோமுக்கு நேரடியாகக் கொண்டு செல்லபட்டன(சீனிவாச ஐயங்கார். பி.டி., 1989 மு.சு.நூ) எனவும், கிரேக்கர்கள் தமிழகத்தோடு வணிகம் செய்ததற்கு அடையாளமாக கிரேக்க நாணயங்கள் பல தமிழகத்தில் கிடைத்துள்ளன(R. Krisnamurthy.R. 1994coins from Greek islands, Rhotes and Crete found at Karur Tamil Nadu studies in South India coins vol. 4.p. 95) எனவும் அவர் கூறியுள்ளார்.

  மேலும் பவானி அவர்கள் கிறித்துவ சகாப்தத்திற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே நறுமணப்பொருட்கள், சிறுத்தைப்புலி, தந்தம், நூலாடை, கருங்காலி, அரிசி முதலான பொருட்களை எகிப்தியர்கள் விரும்பி வாங்கினார்கள் எனவும் எகிப்தியர்களோடு தமிழர்கள் வணிகம் செய்ததற்குச் சான்றாக எகிப்தின் செங்கடல் துறைமுகங்களான குசிர் அல் குவாதிம், பெரனிகே ஆகிய இடங்களில் கி.மு. 1ஆம், கி.பி.1ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ள ஓடுகள் கிடைத்துள்ளன(சாதன், கணன், கொற்றப்பூமான், பனைஒறி என்கிற ‘தமிழி’ பொறிப்பு ஓடுகள்) எங்கிறார் அவர்(SOURCE: Iravatham Mahadevan, 2003, Early Tamil Epigraphy from the Earliest to the 6th Century A.D. Cre-A, Chennai p-16). மேலும் அவர், தமிழர்கள் கங்கையாறு கடலில் கலக்கிற துறைமுகத்தின் வழியாகக் கங்கையாற்றில் நுழைந்து பாடலிபுரம், காசி ஆகிய ஊர்களில் வணிகம் செய்துள்ளனர் என்பதை ‘கங்கை வங்கம் போகுவர் கொல்லோ’ என்கிற நற்றினைப் பாடல்(189:5) வெளிப்படுத்துகிறது என்பதையும் சீனா, தாய்லாந்து, சாவகம் போன்ற கிழக்கத்திய நாடுகளோடும் தமிழர்கள் மிக நீண்ட காலம் முதல் வணிகம் புரிந்து வந்துள்ளனர் என்பதையும் தக்க சான்றுகளோடு கூறியுள்ளார்(நிகமம்-வணிக வரலாற்றாய்வுகள், தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு, பக்: 25-36).

   தமிழகத்தில் புதிய கற்காலத்துக்கு முந்தைய, கடைக் கற்காலக் கட்டத்துக்கு உரிய கருவிகள் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் கிடைத்துள்ளது. அதன் காலம் கி.மு. 4000 ஆகும். கடற்பயணம் மேற்கொள்வதற்குரிய திறமை ஏதோ ஒரு வகையில் இக்கடைக்கற்காலத் தமிழக மக்களிடம் அமைந்திருந்தது என்றும், கடற்கலங்கள் இவர்களிடம் இருந்திருக்க வேண்டும் எனவும் தமிழகத் தொல்பழங்காலம் குறித்து ஆய்வு செய்த ஆல்சின்அம்மையார் கருதுகிறார்(தமிழ்நாட்டு வரலாறு-தொல்பழங்காலம், பக்:181). அதாவது கி.மு. 4000 வாக்கிலேயே கடற்பயணம் மேற்கொள்வதற்குரிய திறமை ஏதோ ஒரு வகையில் தமிழக மக்களிடம் அமைந்திருந்தது என்றும், கடற்கலங்கள் அவர்களிடம் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் ஆல்சின் அம்மையார் அவர்கள். அதன் பின்னரே உலோகக் காலம் தொடங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை உலோக காலம் பிற இடங்களைப் போல் அல்லாமல், நேரடியாக இரும்புக் கால நாகரிகமாகவே தொடங்குகிறது(தமிழக வரைவுகளும், குறியீடுகளும்-இராசு பவுன்துரை, பக்: 85-86). அப்பொழுதே கடல் வணிகமும் தொடங்கி விட்டது எனலாம். 

(தொடரும்)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard