நீலகிரி அருகே ஹாஸ்டல் நடத்தி பெண்கள் பாலியல் பலாத்காரம் : மதபோதகர் சிறையில் அடைப்பு
9/1/2015 2:27:26 PM
கோத்தகிரி: நீலகிரி அருகே ஹாஸ்டல் நடத்தி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவந்த மத போதகரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் வசிப்பவர் அருள்தாஸ் (40). கிறிஸ்தவ மத போதகர். மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் ஹாஸ்டல் நடத்தினார். கோத்தகிரி அருகிலுள்ள வெஸ்ட்புரூக் குண்டாடா பிரிவை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 19 வயது மகளை 2 ஆண்டுக்கு முன்பு தத்தெடுத்துள்ளார் பாதிரியார். அவரை படிக்க வைப்பதாக கூறியதால் பெற்றோரும் சம்மதித்துள்ளனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஹாஸ்டலுக்கு வந்த தந்தையிடம் இளம்பெண் கதறி அழுதுள்ளார். காரணம் கேட்டபோது, அருள்தாஸ் பலாத்காரம் செய்து வந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கோத்தகிரி போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மதபோதகர் அருள்தாசை போலீசார் கைது செய்தனர். அவர் ஊட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். பாதிரியாரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.அருள்தாஸ் ஏற்கனவே கோத்தகிரியை அடுத்த கன்னேரிமுக்கு என்ற இடத்தில் ஹாஸ்டல் நடத்தியுள்ளார். அங்கு இதுபோல் பிரச்னை ஏற்படவே 2 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையத்திற்கு ஹாஸ்டலை மாற்றியுள்ளார். பெண் குழந்தைகள் உள்ள ஏழை குடும்பத்தினரை அணுகி, மூளைச் சலவை செய்து படிக்க வைப்பதாக கூறி அவர்களை ஹாஸ்டலில் சேர்த்துள்ளார். கடந்த 2 ஆண்டாகவே பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு பல முறை அபார்ஷன் செய்யப்பட்டுள்ளது.
மனைவி பிரிந்து விட்டார் பாதிரியார் அருள்தாசுக்கு திருமணமானது. ஆனால் குழந்தைகள் இல்லை. கருத்து வேறுபாட்டால் மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண், கடந்த 3 மாதத்துக்கு முன்பு கோத்தகிரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. 2 மாதம் கழித்த நிலையில் இப்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தப் பெண் மட்டுமின்றி ஹாஸ்டலில் தங்கியுள்ள வேறு பெண்களிடமும் அருள்தாஸ் தவறாக நடந்திருக்கலாம் என மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் கூறுகின்றனர்.எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹாஸ்டலில் இப்போது 15 சிறுமிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பலர் பள்ளி மாணவிகள். போலீசார் விசாரணைக்கு சென்றபோது புகார் கொடுத்த ஒரு சிறுமி மற்றும் கூடலூரை சேர்ந்த இன்னொரு சிறுமி மட்டுமே இருந்துள்ளனர்.
ஹாஸ்டலுக்கு அங்கீகாரம் இல்லை அருள்தாஸ் நடத்தி வந்த ஹாஸ்டலுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்று கூறப்படுகிறது. அங்கீகாரம் இல்லாத நிலையில் ஏழை பெண்களை, சிறுமிகளை அவர் எப்படி ஹாஸ்டலில் சேர்த்தார். இதற்கு முன்னதாக அவர் ஹாஸ்டல் நடத்திய பகுதியில் இதேபோன்று குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் அதே மாவட்டத்தில் மீண்டும் அவர் ஹாஸ்டல் நடத்தியது எப்படி? என்றும் மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
-- Edited by Admin on Friday 4th of September 2015 09:08:56 PM