மெர்வின் ஹாரிஸின் பசுக்கள் பன்றிகள் போர்கள் மற்றும் சூனியக்காரிகள் என்னும் கலாச்சாரப்புதிர்கள் என்ற நூல் வாசிப்பு.
ஒரு வருடத்துக்கும் மேலாகவே எனக்கு ஒரு சிக்கல். நள்ளிரவில் செல்போனில் அழைப்பு வரும் .எடுத்தால் ஒரு கிராமத்துக்குரல், ”மொதலாளி லோடு வந்திருக்கு, சம்முகத்த வரச்சொல்லுங்க”நான் பொறுமையாக அது தவறான எண் என்று சொல்லி விளக்குவேன்.”சரிங்க மொதலாளி, லோடை எறக்கிரலாமா? முந்நூத்தெட்டு பீஸ் இருக்குதுங்க”ஒருநாள் என்று இல்லை, தொடர்ந்து இதுதான். விடியற்காலையில் ஆழ்ந்த தூக்கத்தில் எழுப்பி ”மொதலாளி, தென்காசி குடோன் சாவி யாரிட்ட இருக்கு? இங்க வாச்மேன் இல்லேன்னு சொல்லுதான்”
அந்த டிரைவரிடம் நான் விரிவாக விளக்கினேன். என் எண்ணை அவர் தவறாக பதிவுசெய்து வைத்திருக்கிறார், அதை மாற்றி பதிவுசெய்யச் சொல்லி கெஞ்சி மன்றாடினேன். இப்படி நள்ளிரவில் எழுப்பி தொந்தரவு செய்வது நியாயமா என்று கல்லும் கரையும்படி கேட்டேன்.
அவரும் மனமுருகி ”சரிங்க சார். சாரி சார்…” என்றார். மறுநாளே இரவு இரண்டரை மணிக்கு அழைப்பு ”மொதலாளி அருப்புக்கோட்டையிலே இருக்கோமுங்க…”
நான்குமாதம் முன்னால் துணிந்துவிட்டேன். அந்த டிரைவர் அதிகாலையில் ”மொதலாளி கண்ணாடி லோடு வந்திருக்குங்க”என்றான். நான் ”சரி நேரா தென்காசி குடோனிலே எறக்கிரு”என்றேன்.
”ஆ, இருக்கும்” என்று செல்போனை அணைத்துவிட்டு தூங்கிவிட்டேன்
பிறகு நான்குமாதம் அழைப்பே இல்லை. போனவாரம் மீண்டும் அழைப்பு.”மொதலாளி சிமெண்டு லோடு வந்திருக்கு…”
”சரி, நேரா நான்குநேரிக்கு கொண்டு போயிரு”
ஆழ்ந்த அமைதி. பின்னர் ஒரு மெல்லிய கேள்வி ”சார் நீங்களா?”
நான் ”ஆமாம்”என்றேன் சிரித்தப்டி.
”ஏன்சார் இப்பிடிச் செய்றீங்க? பாருங்க, போனவாட்டி கண்ணாடி லோடை தென்காசியிலே எறக்கின பஞ்சாயத்தே இன்னும் தீரலை. மொதலாளி ரெண்டாயிரம் ரூபா கேக்கிறார்…”
”ஏன்யா, நாந்தான் உங்காலைப்பிடிச்சு கேட்டேன்ல விட்டுருன்னு. உனக்கு பணம் போச்சுன்னா எனக்கு எத்தனை நாள் தூக்கம் போச்சு? அதை யோசிச்சியா?”
”சாரி சார். மாத்திடறேன் சார்”
நேற்று நான் சென்னை வருகையில் ரயிலில் விடிகாலை மூன்று மணிக்கு செல் அடித்தது ”மொதலாளி மதுரைக்கு வந்திட்டோம்,சம்முகம் கூட இருக்கான்..”
*
நேற்று நினைத்துக் கொண்டேன். நம் பண்பாட்டிலும் இப்படி பல விஷயங்கள் தவறாக பதிவுசெய்யபபட்டுள்ளன என்று. அவற்றை மாற்றவே முடியாது. அவற்றை வைத்துக்கொண்டு எந்த வண்டியையும் எங்கும் திசைதிருப்பி விட்டு விடலாம்.
சமீபத்தில் மதுரை நாயக்கர் வரலாறை படித்துவருகிறேன். மதுரையை ஆண்ட மங்கம்மாள் தமிழ் வரலாற்றில் மறக்கமுடியாத பேரரசி. சாலைகள் அமைத்து தமிழ்நாட்டின் பெரும்பகுதியை இணைத்தவள். இன்றும் நீடிக்கும் பல சந்தைகளை உருவாக்கி பொருளாதார மறுமலர்ச்சியை உர்ண்டுபண்ணியவள். இன்றுள்ள தென்னாட்டு நகரங்கள் பல உருவாகக் காரணமாக அமைந்தவள். பல்வேறு சாதிகளுக்கு இடையே சமரசத்தை உருவாக்கியவள்.
ஆனால் அவளை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்ட சிலர் அவள் மீது அவதூறை கிளப்பி விட்டனர். பெண்ணை வீழ்த்தவேண்டுமென்றால் அன்றும் இன்றும் ஒழுக்கம் சம்பந்தமான அவதூறுதானே கிளப்பவேண்டும்?
ஒரு சோட்டா தெலுங்குக் கவிஞனைப்பிடித்தார்கள். அவர் பெயர் விகடகவி கோபால ராயர். பிராமணர். அவர் சென்ன வெங்கண்ணா என்ற பேரில் ”மதுரா மங்க பும்ஸ்சலீ லீலா விலாசமு” என்று ஒரு நூலை இயற்றினார். அது ஒரு ஆபாச நூல். மங்கம்மாவின் காதல் லீலைகளை கீழ்த்தரமாக வர்ணிப்பது. அந்த நூல் பிரபலமடைந்தது. வதந்தி தீ போல பரவுமே.
மங்கம்மாளை சிறையில் அடைத்து அவள் பேரன் விஜயரங்க சொக்கநாத நாயக்கனை மன்னனாக்கினார்கள். மங்கம்மாள் சிறையில் பட்டினி போட்டு கொல்லப்பட்டதாக சொல்லபப்டுகிறது. அதற்கு மக்களிடையே எதிர்ப்பே எழவில்லை. காரணம் அவளை மக்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள்.
இது நடந்தது ஏறத்தாழ முந்நூறு வருடம் ஆகிவிட்டது. இன்றும் நாகர்கோயில் மதுரை தேசிய நெடுஞ்சாலையை மங்கம்மா சாலை என்றுதான் சொல்கிறார்கள். சமீபத்தில் நான் ஒரு கிழவரை சந்தித்தேன். அவர் சொன்னார், மங்கம்மா அன்னிய புருஷர்களை புணர்ந்த பாவத்தைப்போக்க அந்தச்சாலையை போட்டாள் என்று.
இதற்கெல்லாம் ஒரு ஆதாரம் இல்லை. மங்கம்மாள் கால நிகழ்வுகளை துல்லியமாக ஜெசூட் பாதிரிகள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் எவரும் இப்படியெல்லாம் சொல்லவில்லை. மேலும் இப்படி அவதூறு கிளப்பபட்டபோது மங்கம்மாளுக்கு வயது ஐம்பத்தைந்துக்குமேல். ஆனால் அது பண்பாட்டில் பதிந்து விட்டது. இனி மாற்ற முடியாது. அவ்வளவுதான்.
நம் பண்பாடு என்பது அனிச்சையான நம்பிக்கைகளாலும் செயற்கையான கட்டுக்கதைகளையும் அடிபப்டையாகக் கொண்டது என ஒருவர் சொன்னால் நம்மால் எளிதில் மறுத்துவிடமுடியாது.
*
இத்தகைய சூழலில்தான் பண்பாட்டு மானுடவியல் போன்ற ஓர் அறிவுத்துறையின் முக்கியத்துவம் நமக்கு புரிகிறது. நமது பண்பாடு புறவயமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. உள்நோக்கம் கொண்ட தர்க்கங்களையே நாம் ஆய்வு என்ற பேரில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்– எல்லா தரப்பிலும்.
பண்பாட்டு மானுடவியல் என்பது மிகவிரிவாக தகவல்களை திரட்டிக் கொண்டு அவற்றை ஒழுங்குபடுத்தி கலாச்சாரப் புதிர்களை அவிழ்க்க முயல்வதாகும். ஒரு பண்பாட்டு அம்சம் எப்படி உருவாகிறது, எப்படிச் செயல்படுகிறது, அதனுடன் ஒட்டிய மனநிலைகள் என்ன என்பதெல்லாம் அதன் வினாக்கள் ஆகின்றன.
மெர்வின் ஹாரீஸின் ‘பசுக்கள் பன்றிகள் சூனியக்காரிகள் மற்றும் கலாச்சாரப்புதிர்கள்” என்ற நூல் பண்பாட்டு மானுடவியலை நமக்கு அறிமுகம் செய்கிறது. ஒரு பாடமாக தகவல்களை அளிக்கவில்லை. பண்பாட்டு மானுடவியல் எப்படிச் செயல்படும், என்னென்ன முறைகளில் அது தகவல்களை ஆராயும் என்று செய்து காட்டுகிறது.
நமக்கு மிக ஆர்வமூட்டும் ஒன்றாக இதில் உள்ள பசுக்கொலை பற்றிய கட்டுரை அமையலாம். ஏன் இந்தியாவெங்கும் பசுக்கொலை தடைசெய்யப்பட்டுள்ளது? நீண்ட காலமாக இருந்துவரும் இந்த தடை நம்பிக்கையாகவும் மத கோட்பாடாகவும் மாறி வேரூன்றிவிட்டிருக்கிறது.
பசுக்கொலைத்தடையை ஒரு வகை மூடநம்பிக்கை என்று எளிதில் முத்திரை குத்திவிடுவதே நாம் இங்கே செய்யும் பண்பாட்டு ஆராய்ச்சியாக இருக்கும். அல்லது அதை தாழ்ந்த சாதியினரை ஒடுக்க உயர்சாதியினர் செய்யும் ஒரு வகை சதி என்று முத்திரை குத்தி விடுவோம்.
மெர்வின் ஹாரீஸ் இந்தியச்சூழலில் இந்த தடைக்கு ஏதேனும் பொருளியல் அடிப்படை இருக்க வாய்ப்புண்டா என ஆராய்கிறார். இத்தகைய ஒரு விஷயம் நூற்றாண்டுகளாக நீடித்தது என்பதே இதற்கு பொருளியல் அடிப்படை இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும் என்கிறார்.
இது ஒரு செவ்வியல் மார்க்ஸிய நோக்கு என்பதை நாம் அறிவோம். செவ்வியல் மார்க்ஸியத்தின் இயல்பே இத்தகைய பண்பாட்டு, அரசியல் செயல்பாடுகளுக்குள் ஒளிந்திருக்கும் பொருளியல் உள்ளுறையை வெளிக்கொணர்வதுதான்.
ஆனால் தமிழக மார்க்ஸியர்களிடம் நாம் இதை எதிர்பார்க்க இயலாது. அவர்கள் மார்க்ஸியம் என்ற மகத்தான ஆய்வுக்கருவியை தூக்கி வீசிவிட்டு எந்தவிதமான ஆய்வு முறைமையும் இல்லாத மட்டையடியான பெரியாரியத்தை சுமக்க ஆரம்பித்து நெடுநாட்களாகின்றன. காரணம் உழைப்பு தேவையில்லை, ஜனக்களுக்கும் சொல்வது புரியும். மெனக்கெட வேண்டாம்.
பசுவதை தடை பற்றி ஆராயும் மெர்வின் ஹாரீஸ் எப்படி படிப்படியாக அந்த ஆய்வை விரித்துச் செல்கிறார் என்பதை பார்க்கும் ஒரு வாசகன் பண்பாட்டு மானுடவியலின் செயல்முறையை எளிதாக புரிந்துகொள்ள முடியும். இந்தியாவின் வரட்சியும் அடிக்கடி வரும் பஞ்சங்களுமே பசுக்கொலைக்கான தடைக்குக் காரணம் என்ற முடிவுக்கு வருகிறார் மெர்வின் ஹாரீஸ். பசுக்கொலை அனுமதிக்கப்பட்டிருந்தால் ஒரு பஞ்சத்துக்குப் பின் கால்நடைகளே இருக்காது.
மேலும் பசுவுக்க்கான உணவே மனித உணவாக இருக்கிறது இந்தியாவில். கம்பு, சோளம், தினை போன்ற ‘ஏழைகளின் உணவு’கள் பெரும்பாலும் புல்லில் விளைபவை. பசுக்களை மேய்க்க புல்வெளிகளை வைத்திருப்பது இந்தத்தானிய விளைச்சலை பாதிக்கும். அதாவது பசுவுக்கு உணவிட்டு வளர்த்து அப்பசுவை தின்பதை விட அந்த பசுவின் உணவைத் தின்பது லாபகரமானது.
பசுக்கொலை பற்றி ஒட்டியும் வெட்டியும் தமிழ்நாட்டில் எப்படிப்பார்த்தாலும் பத்தாயிரம் பக்கம் எழுதப்பட்டிருக்கும். இபப்டி ஒரு கோணம் நம்மில் எவருக்கேனும் உருவானதா என்று நாம் யோசிக்க வேண்டும். இதை சிந்தித்திருக்க வாய்ப்புள்ளவர்கள் மார்க்ஸியர்களே. டி.டி.கோஸாம்பி தவிர எவருமே அந்த வகையான உழைப்புக்கு தயாராக இல்லை. அவ்வப்போது உருவாகும் கட்சி கோஷங்களுக்கு ஆய்வு வேடம் போடுவதற்கே அவர்கள் முயன்றார்கள்.
இதேபோலத்தான் பன்றிகளுக்கான இஸ்லாமிய தடையையும் மெர்வின் ஹாரீஸ் ஆராய்கிறார். பன்றி மனிதனின் அதே உணவை உண்பது. உணவு அரிதான பாலைநிலப் பொருளியலில் பன்றியை உண்பதென்பது ஏராளமான மனிதர்களை பட்டினி போட்டு நாம் உண்பது போல. இன்றுகூட அதுதான் நிலை. அமெரிக்கப் பன்றிகள் உண்ணும் மக்காச்சோளம் பல ஆப்ரிக்க நாட்டு குழந்தைகளை வாழவைக்கக் கூடும்.
இத்துடன் ஒட்டி ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நண்பர் பெருமாள் முருகனின் மாணவரான மு நடராசன் பெரியார் பல்கலைக்காக நடத்திய முனைவர் பட்ட ஆய்வேடு ‘தொட்டியர் நாயக்கர் குலதெய்வ வழிபாடு’ ல் ஒரு தகவல் வருகிறது. தமிழ்நாட்டில் பகடைகள் என்று சொல்லப்படும் சாதியினர் தோல்வேலைகள் செய்கின்றனர். தமிழகச் சாதிப்படிநிலையில் மிகத்தாழ்ந்த நிலையில் உள்ள இவர்கள் எந்த அரசியலமைப்பாலும் கவனிக்கப்படாதவர்கள். பிற தாழ்த்தப்பட்டவர்களாலேயே தீண்டாமையுடன் இன்றும் நடத்தபப்டுகிறவர்கள். பழைய விஜயநகரமான ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியிலிருந்து தமிழ்நாட்டில் குடியேறிய இவர்களுக்கு அங்கே ‘கொல்லவார் மாதாரியர்’ என்று பெயர். இவர்களுடைய பெயரின் பொருளை வைத்துப் பார்த்தால் இவர்கள் இடையர்கள். தொட்டியர் குலத்தில் ஒன்பது சாதி. அதில் முதலாவது சாதி இது என்றும் புராணம் சொல்கிறது.
ஆனால் ஒன்பது தொட்டியர் சாதியினரும் சேர்ந்து தங்கள் தந்தையரான நவநாயகர்களை கும்பிடச் சென்றபோது அவர்கள் இவர்களுக்கு ஆளுக்கொரு பசுவைக் கொடுத்தார்களாம். வரும் வழியில் மாதாரியினர் பசி தாங்காமல் பசுவை தின்றுவிட்டனர். ஆகவே அவர்கள் சபிக்கப்பட்டார்கள். பிற எட்டு குலங்களுக்கும் சேவகம் செய்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. தீண்டத்தகாத சாதியினராக இவர்கள் உருமாறினார்கள். இது தொட்டியர்களில் வழங்கும் கதை
தொட்டிய நாயக்கர்கள் தமிழகத்தின் ஆதிக்கசாதிகளில் ஒன்று. முந்நூறு வருடம் தமிழகத்தை ஆண்டவர்கள். பல ஜமீந்தார்ர்கள் தொட்டியர்களே. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர் தமிழக சாதியடுக்கில் ஆகக் கடைசியில் நிற்கிறார்கள். காரணம் பசு.
இங்கே பசு ஒரு குறியீடாக இருக்கிறது. அக்குறியீட்டின் பண்பாட்டு உள்ளுறைகள் என்ன என்று நாம் யோசித்திருக்கிறோமா? ஒருவேளை இஸ்லாமிய மதத்துக்குள் சென்று மீண்டவர்களை இவ்வாறு குறிப்பிடுகிறார்களா? அவர்கள் சாதிப்படிநிலையில் கீழே தள்ளப்பட்டார்களா?
சமானமான உதாரணம் உள்ளது. திப்புசுல்தான் மலபார் பகுதியைக் கைப்பற்றியபோது வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட நம்பூதிரிகள் பின்னர் தப்பி திருவிதாங்கூருக்கு ஓடிவந்தார்கள். அவர்கள் திரும்பி இந்துவாக ஆனாலும் நம்பூதிரிகளாக ஆக முடியவில்லை. அவர்கள் ‘இளையது’ என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஒருவகை சவண்டிகள். நீத்தார்கடன்களை செய்விப்பதும் சிற்சில சிறுதெய்வக் கோயில்களில் பூசை செய்வதும் அவர்களின் வேலை.
பௌத்த மதத்தில் இருந்து திரும்பிவந்தமையால் நிலமிழந்து தாழ்த்தப்பட்டவர்கள் ஆனவர்களே பறையர்கள் என்று அயோத்தி தாச பண்டிதர் சொல்கிறார்.
ஆனால் இப்படியெல்லாம் புதுவழி தேடி யோசிக்க நமக்கு இங்கே அபாரமான துணிவு தேவை. இங்குள்ள பண்பாட்டுச் சிந்தனை என்பது ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்கப்பட்ட ‘சா·ப்ட் வேர்’ அது அதற்குரிய முறையில் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ளும். மீறிச்சிந்திக்க அனுமதிக்காது. பின் நவீனத்துவம் ,கட்டவிழ்ப்பு எதுவானாலும் அது தனக்கேற்ப மாற்றிக்கொள்ளும்.
ஒரு நிகழ்ச்சி. குமரிமாவட்டத்து கடற்கரைகளில் பங்கிராஸ் என்ற பெயர் உண்டு. ஒருவர் அலுவலகத்தில் ஒரு சேவைக்காக பெயர் பதிவுசெய்திருந்தார். மைக்ரோ சா·ப்ட் வேர்ட் பக்கத்தில் அதை அடித்தபோது அது சிவப்பு கோடு போட்டு காண்பித்தது. பெயர் தப்பு.
என்ன சரி என்று குமாஸ்தா பார்த்திருக்கிறார். Pancreas என்று காட்டியிருக்கிறது. சரி என்று சொல்லிவிட்டார்.
பங்கிராஸ் ஒருநாள் காலையில் வந்து கேட்டார். ”சார் இனிமே இப்பிடியே கிட்னி, ஹார்ட்,லிவர்னு தனித்தனியா பதிவு செய்வேளா?”
இதுதான் இங்குள்ள பண்பாட்டுச் சூழல். எதையும் இங்கு ஏற்கனவே உள்ளதாக ஆக்கிக் கொள்ளும். இங்கே சிந்திப்பது என்றாலே இந்த கருத்துவன்முறையை மீறி சிரமப்பட்டுச் செய்யவேண்டிய ஒன்று. இந்த ‘சா·ப்ட் வேருடன்’ போர் புரிவதிலேயே சோர்ந்து போய்விடுவோம்.
உண்மையில் இன்று இங்கே உள்ளது இரண்டே இரண்டு பண்பாட்டு வாய்ப்பாடுகள்தான்.
ஒன்று எல்லா சமூக, பண்பாட்டு அமைப்பும் உயர்சாதிச் சதியால் தாழ்ந்த சாதிகளை ஒடுக்கும்பொருட்டு உருவானவை. அதிலும் மேலே உள்ள இரண்டுமூன்று சாதிகளால். மற்ற சாதிகள் அவர்களுக்கும் கீழே உள்ளவர்களை ஒடுக்குவதற்கும் இவர்களே காரணம்.
இரண்டு, எல்லாமே ஆரிய இனம் என்ற வடவர் திராவிட இனம் என்ற தென்னவரை ஒடுக்கும் பொருட்டு உருவான சதி.
ஆகமொத்தம் பண்பாட்டில் உள்ள எல்லா அம்சங்களும் ஏதேனும் ஒரு ‘சதி’ மூலம் உருவாக்கபப்ட்டவையே. தானாக எதுவும் உருவாகாது. எதற்கும் வேறு காரணமும் இருக்காது. எல்லா சமூக அமைப்புகளும், பண்பாட்டு முறைகளும் யாரோ சிலர் கூடி உக்கார்ந்து பேசி உருவாக்குவது. வடிவேலு பாஷையில் சொல்லப்போனால் ‘ரூம்பு போட்டு யோசிச்சு’ அமலாக்கம் செய்வது. நான் வேடிக்கையாகச் சொல்லவில்லை, சென்ற அரை நூற்றாண்டில் இங்கே பேசப்பட்ட விஷயங்களை கவனித்துப் பாருங்கள் தெரியும்.
என்னைப் பொறுத்தவரை மதம், இனம்,மொழி,சாதி சார்ந்து ‘அன்னியர்களை’ கட்டமைப்பதும் அவர்களின் சதியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று வரலாறுகளை உருவாக்குவதும்தான் வரலாற்றில் பேரழிவுகளை உருவாக்குகிறது. அறிவுஜீவி என்பவன் அவற்றுக்கு எதிரானவனாகவே எப்போதும் இருப்பான்.
அத்தகைய நிலைபாடு கொண்ட ஒருவருக்கு ஆயுதமாகும் நூல் இது. இதன் பாரபட்சமற்ற புறவயமான ஆய்வுமுறையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளமாக இருக்கிறது.
இந்நூலில் சரக்குபெட்டி மதம் [ கார்கோ கல்ட் ] பற்றியுள்ள பகுதிகளை மீண்டும் மீண்டும் படித்தேன். நம்ம்முடைய மதச் சூழலைப் புரிந்துகொள்ள மிகவும் உதவியாகக் கூடிய ஒரு பகுதி இது. ஒரு நடைமுறைச் செயல்பாடு எப்படி படிப்படியாக மூடநம்பிக்கையாகி குறியீடாக மாறி பண்பாட்டை தீர்மானிக்கிறது என்பதை இதில் வியப்பூட்டுமளவு விரிவாகக் காண்கிறோம்.
உலகப்போரின்போது கப்பலில் இருந்து வந்து இறங்கிய வெள்ளையர் தீவுகளில் இருந்த ஆதிவாசிகளுக்கு பொருட்களை அளித்தார்கள். கப்பல்கள் கரைசேர அடையாளம் காட்டும்பொருட்டு அவர்கள் சில அமைப்புகளை உருவாக்க வேண்டியிருந்தது. போர் நின்று வெள்ளையர் கப்பல்கள் வராமலான போதும் அதே அமைப்புகளை உருவாக்கி வைத்து தெய்வங்கள் வந்து சரக்குபெட்டிகளை அளிக்கும் என்று எண்ணுகிறார்கள். பிறகு அந்த அமைப்பு ஒரு தெய்வ வடிவமாக ஆகிறது. அதை உருவாக்குவது சடங்காகவும் வழிபாடாகவும் மாறுகிறது.
இதை வாசித்து நாம் சிரிப்போம். ஆனால் நம் மதங்களிலும் இதே தான் நடக்கிறது. இதற்கு நிகரான ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன்.
பதஞ்சலி யோக சூத்திரம் புராதனமான ஒரு நூல். தெய்வவழிபாட்டுடன் நேரடியாகச் சம்பந்தமில்லாத ஒரு உளப்பயிற்சி நூல் இது. மனித மனதை பலவகையாகப் பகுத்து ஆராய்கிறது. மேல்மனதின் அலைகளை தவிர்த்து ஆழ்மனதை அறிவதை பல பயிற்சிகள் வழியாக முன்வைக்கிறது. யோகம் என்றால் என்ன என்பதை இவ்வாறு சுருக்கமாகச் சொல்கிறது ”யோக சித்தவிருத்தி நிரோதக:” [யோகம் என்பது உளச்செயல் ஒறுத்தல்]
இந்த யோக மார்க்கம் பல வகைகளில் வளர்ந்தது. அத்துடன் உள்ளூர் கற்பனைகளையும் கலந்துகொண்டே இருந்தார்கள். இது மிக அகவயமான விஷயமாதலால் பெரும்பாலும் உருவகமாகவே சொல்ல முற்பட்டார்கள் யோகிகள்.
அப்படி அவர்கள் உருவகித்த ஒன்றுதான் ஒன்பது சக்தி மையங்கள். இவை உடலில் நுண்வடிவில் உள்ளன என்றார்கள். அதாவது முதலில் உள்ளது மூலாதாரம். இது குறிக்கு பின்னால் உள்ளது. அதாவது காமத்தின் சக்திதான் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. அடுத்தது வயிற்றில் உள்ள பசி என்ற சக்தி.இது மணிபூரம். இவ்வாறு மூச்சு சக்தி, இதய சக்தி, பேச்சு சக்தி என சென்று நெற்றிமையத்தில் உள்ள சிந்தனை என்ற சக்தியை அடையும். அது சகஸ்ரம் எனப்பட்டது. இங்கெல்லாம் மனித ஆற்றலின் ஊற்றுமுகங்கள் உள்ளன என்பது யோக நம்பிக்கை. இவற்றை ஒன்பது தாமரைகளாக உருவகித்தார்கள்.
தியானம் செய்தால் அடிப்படைசக்தியான காமத்தில் உள்ள உயிராற்றல் எழுந்து பிற சக்திகளில் உள்ள உயிராற்றலை வளர்த்து சிந்தனை சக்தியாக மாறி அதை மீறிய பிரபஞ்ச சக்தியை கண்டடையும் என்பது யோகநூல்கள் சொல்வது. இப்படி உயிராற்றல் எழுவதை தன் வாலை தானேகவ்வி விழுங்கி கிடக்கும் ஒரு பாம்பு சுருளவிழ்ந்து மரத்தின் மேல் ஏறுவது போன்றது என்று உருவகமாகச் சொன்னார்கள்.
இந்த உருவகங்களை எல்லாம் ‘அப்படியே’ எடுத்துக்கொண்டு இங்கே ஏகபப்ட்ட யோகப்பள்ளிகள் இன்று செயல்பட்டு வருகின்றன. சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒரு யோகப்பள்ளியில் தியானம் செய்பவர்களுக்கு பின்னணி இசையாக மகுடி இசைக்கப்படுகிறது. பாம்பை எழுப்புகிறார்களாம். ஒரு தியானகுரு பிருஷ்டத்தில் கையை வைத்து பாம்பை நோண்டி எழுப்பி விடுவாராம்.
ஒரு மூத்த பள்ளி ஆசிரியர் என்னிடம் சொன்னார், அவர் தியானம் செய்து தாமரைகளைப் பார்த்தாராம். மூலாதார தாமரையில் ஒரு இதழ்மட்டும் விரிந்து இருந்ததாம். ”நல்ல அழகு சார். சூப்பர் மணம் பாத்துக்கிடுங்கோ”
சரக்குபெட்டி மதம் எல்லா மதங்களிலும் உள்ளடங்கியிருக்கிறது. நமது பண்பாடு என்பதே இப்படி ஆயிரக்கணக்கான தற்செயல்களும் முட்டாள்தனங்களும் அபத்தங்களும் கலந்த ஒன்று. அந்த நுண்ணிய தளங்களை அறுவை சிகிழ்ச்சைக் கத்தியின் துல்லியத்துடன் பிரித்து ஆராய நம்மிடம் உண்மையான பண்பாட்டு மானுடவியல் வளர வேண்டும். அதற்கு வழிகாட்டும் நூல் இது.
பண்பாட்டு மானுடவியலை கையாளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் இந்நூலே காட்டுகிறது. ஜெர்மனிய ·பாசிய மானுடவியலாளர்கள் செய்தது போல இனவாதத்தை கட்டி எழுப்ப அதை கையாள முடியும். இன்று இந்தியாவில் சாதிமேன்மைகளை உருவாக்க பண்பாட்டு ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அதற்கான கருவியாக பண்பாட்டு மானுடவியல் அமையக்கூடும்.
இன்று மேலை நாட்டு பண்பாட்டு ஆய்வுகள் ஆசியாவையும் அரேபியாவையும் பண்பாட்டுரீதியாக சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டு செய்யப்படுகின்றன.சமீபத்தில் நண்பர் நீலகண்டன் அரவிந்தன் என் கவனத்துக்கு கொண்டுவந்த விஷயம் இது. இந்து தெய்வ உருவகங்களை எல்லாமே காமம் சார்ந்த குறியிடுகளாக விளக்கும் ஒரு வகை ஆய்வுகள் இன்று மேலை நாடுகளில் பிரபலமடைந்து வருகின்றன.
பால் கோர்ட்ரைட் [Paul Courtright] எழுதிய கணேசா ‘த லார்ட் ஆ·ப் அப்ஸ்டாகிள்ஸ்’ [Ganesa the Lord of Obstacles] என்ற நூலில் பிள்ளையார் ஓர் அலி என்றும் ஆகவே சிவனின் அந்தபுரத்தில் அவர் வாசல்காவலுக்கு அமர்த்தப்பட்டார் என்றும் எழுதியிருக்கிறார். பிள்ளையாரின் துதிக்கை தளர்ந்த ஆண்குறி அவரது உடைந்த கொம்பு அவர் விதைநீக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான ஆதாரம் அவரது கையில் உள்ள மோதகம் அவர் ஒருபாலுறவை நாடுகிறார் என்பதற்கு குறியீடு.
அமெரிக்காவில் அட்லாண்டா மியூசியத்தில் பிள்ளையாரின் சிலை வைக்கப்பட்டு இந்த தகவல்கள் எழுதியும் வைக்கப்பட்டுள்ளன. இந்நூல் ஆக்ஸ்போர் பல்கலையால் வெளியிடப்பட்டு, மிகச்சிறந்த இந்தியவியல் ஆய்வுக்கான விருது பெற்றது.
இருபது நூற்றாண்டுக்கால இந்து படிம மரபில் இதற்கென எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியாது என்பது இந்த ஆய்வாளர்களுக்கு பொருட்டே அல்ல. அவர்கள் வெள்ளையர்கள் அல்லவா? வர்களுக்குத்தெரியாதா?
அவர்களின் பணத்தை வாங்கிக்கொண்டு இங்கே பண்பாட்டு ஆய்வு செய்யும் ‘அறிஞர்கள்’ அவற்றை இங்கே மேற்கோள் காட்டி பரப்புவார்கள். நமது சமூகப்பணியாளார்கள் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு மக்களிடையே கொண்டுசெல்வார்கள்.
விசால் அகர்வால், அண்டோனியோ டி நிகோலஸ், கலவை வெங்கட் சேர்ந்து எழுதிய Invading the sacred என்ற நூலில் இந்த பண்பாட்டு மோசடி ஆய்வுகளைப்பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளனர். http://www.invadingthesacred.com என்ற இணையதளத்தில் இதை வாசிக்கலாம்.[Invading The Sacred: An Analysis of Hinduism Studies in America,Editors: Krishnan Ramaswamy, Antonio de Nicolas and Aditi Banerjee,Publisher: Rupa & Co., Delhi,Number of Pages: 558,Price (India): Rs. 595]
தெளிவாகவே அரசியலாதிக்க உள்நோக்கம் கொண்ட, மதக்காழ்ப்பு கொண்டஇத்தகைய ஆய்வுகளே நாம் மேலை நாட்டில் நம்மைப்பற்றி அதிகமாக நடத்தியிருக்கக் காண்கிறோம்.
மெர்வின் ஹாரீஸ் மானுட சமத்துவத்திலும் மானுட நேயத்திலும் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருக்கிறார். அந்த மையத்திலிருந்தே அவரது ஆய்வுகள் பிறக்கின்றன. தான் சார்ந்த சமூகத்தின் குறைகளைக் கண்டடைவதில் அவற்றை பகுப்பாய்வுசெய்வதில் அவரில் எந்தவிதமான தயக்கமும் இல்லை. அந்த துணிவும் நேர்மையும் இருந்தால் மட்டுமே நாம் இத்துறைக்குள் நுழைய முடியும்.
துகாராம் கோபால்ராவ் தெளிவான மொழியில் சிறந்த வாசிப்பனுபவம் அளிக்கும்படியாக இதை மொழியாக்கம்செய்துள்ளார். வாழ்த்துக்கள்
[25-8-07ல் சென்னை தக்கர்பாபா பள்ளி வளாகத்தில் எனி இண்டியன் பதிப்பகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆற்றிய உரை]