பொதுவாக ஆபத்து நேரிடும்போது மனிதர்கள் அவரவர் தெய்வத்தின் பெயரை உச்சரிப்பது வழக்கம். கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவே என்று அழைப்பதும் கர்த்தாவே என்ன இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் என்று ஜெபிப்பதும் சகஜம். (யோனா 1:6) ல்கூட மாலுமி யோனாவினிடத்தில் வந்து தேவனை நோக்கி ஜெபிக்க சொல்கிறான்.
தேவன் சொல்கிறார் ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் என்று அவருடைய பிள்ளைகளுக்கு வாக்குத்ததம் கொடுக்கிறார். யாருக்கு? கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிறவர்களுக்கு மட்டுமே இந்த வாக்குத்தத்தம்.
(சங் 50:15) ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
அதேபோல் தன் தவறுகளை உணர்ந்து திருந்துகிறவர்களையும் கர்த்தர் விடுவிக்கின்றார் என்று வேதத்தில் நாம் பார்க்கிறோம்.
ஆனால் தேவனுடைய வார்த்தைகளை அறிந்தும் அவைகளுக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு தேவன் சொல்கிறதாவது
(நீதி 1:25-28) என் ஆலோசனையையெல்லாம் நீஙகள் தள்ளி என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். ஆகையால் நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன். நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும் ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும் நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும் ஆகடியம்பண்ணுவேன். அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள் நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன் அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள் என்னைக் காணமாட்டார்கள்.
வேதம் இப்படிதான் போதிக்கின்றது. ஆனால் இயேசுவே இயேசுவே என்று ஐந்து முறை அழைத்தால் பரிட்சை ஹாலில் 5 முறை யேசு யேசு என்று கையை உயர்த்தி சொன்னால் ஞாபகம் வந்துவிடும் என்று உமா சங்கர் போதிக்கிறார். அது வேத வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடானது அது 100% மூடநம்பிக்கைதான். காரணம் தேவனை அறியாத பிள்ளைகள் பரிட்சையில் பாஸ் பண்ணுவதற்காக ராமஜெயம் என்று 108 முறை எழுதுவர். அதை நாம் மூட நம்பிக்கை என்று சொல்கிறோமே.
தேவ மனிதர்களைபார்த்து (அப் 19:13) கண்டகண்ட இடத்தில் துணிகரமாக இயேசுவின் நாமத்தை பயன்படுத்தியவர்களின் நிலைமையை உணர்ந்தவர்கள் இயேசு என்பது மந்திர வார்த்தை இல்லலை என்பதை அறிந்து இப்படிப்டட மூடநம்பிக்கையை புகுத்தமாட்டார்கள்.
ஞாபகசக்தி என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடுகின்றது வயதுக்கு வயது மாறுபடுகின்றது. அதற்கு பல வழிகள் உணவு முறைகள் எல்லாம் இருக்கின்றது.
பரிட்சையில் நல்ல மார்க் வாங்குகின்ற மாணவ மாணவிகள் எத்தனை மணி நேரம் செலவழிப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதாவது பரிட்சையில் நல்ல மார்க்குகள் வாங்க கடின உழைப்பு மிகவும் அவசியம். உண்மையான கிறிஸ்தவ போதகர்கள் மூடநம்பிக்கையை ஒருபோதும் போதிக்க்க மாட்டார்கள். நன்றாக படித்து பிராக்டீஸ் பண்ணினால் ஞாபகம் வரும். அதனால் தங்களுடைய நேரத்தை சரியாக மேனேஜ் பண்ணி நேரம் எடுத்து கான்சன்ட்ரேட் பண்ணி படிப்பதற்கு சரியான ஆலோசனைகள் கொடுக்க வேண்டும்.
மாறாக, மந்திர வார்த்தை ரகசியம் என்று சொல்லி, பாடங்களை படித்தும் படிக்காமலும் அறைகுறையாக படித்துவிட்டு பரிட்சையில் 5 முறை ஏசுஏசுன்னு சொல்லிடிருந்தா பரிட்சையில எல்லாம் ஞாபகத்துக்கு வரும் என்று எந்த கிறுக்குப்பயலும் இப்படி கேவலமாக போதிக்க மாட்டார்கள் !!!!
ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் தன் அரசு பதவியில் நேர்மையானவர் என்பதை மறுக்க முடியாது. அரசு ஸ்காலர்ஷிப்புக்காக தன்னுடைய பெயரையும் மதத்தையும் 10ம் வகுப்பில் மாற்றினார் என்பது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக வழக்கு நடந்துகொண்டிருக்கின்றது. ஜாதி சங்கங்களின் சப்போர்ட்டில் ஓட்டு வங்கிகளை நம்பியிருக்கும் அரசியல்வாதிகளை மிரட்டிவருகிறார் என்று பரவலாக பேசப்படுகின்றது. ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசர் கிறிஸ்தவ மதத்தை பரப்பலாமா கூடாதா என்று இந்தியா முழுவதும் விவாதங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதற்குள் நுழைய நான் விரும்பவில்லை.
ஆனால் அவர் கிறிஸ்தவ போதகர் சுவிசேஷம் அறிவிக்கிறார் என்பதை மட்டும் எந்த ஒரு கிறிஸ்தவனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் இவர் ஏதோ ஒரு (ஒன்லி ஜீஸஸ் - வில்லியம் பிரன்ஹாம்) போன்ற கல்ட் குரூப்பில் சிக்கிக்கொண்டு தன்னுடைய தவறான போதனைகள் மூலமாக கிறிஸ்துவையும் கிறிஸ்தவர்களையும் உண்மையான கிறிஸ்தவத்தையும் விவாதப்பொருளாகவும் கேலிப்பொருளாகவும் ஆக்கிவருகின்றார் என்பதுதான் வேதனைக்குறிய விஷயம். இவர் மூலமாக தேவநாமம் தூஷிக்கப்படுகிறது என்பதை ஜாதி வெறியர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் தேவபிள்ளைகள் வேதனைப்படுகிறார்கள் என்பதுமட்டும் உண்மை.
(மத் 5:16) மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
நம்முடைய சாட்சி ஜீவியத்தின் மூலமாக நாம் தேவனை மகிமைப்படுத்த முடியும். நேர்மையான ஒரு கிறிஸ்தவ அதிகாரி என்பது மட்டுமே மிகப்பெரிய சாட்சியாக இருக்க முடியும். ஆனால் இவரோ தவளையும் தன் வாயாலே கெடும் என்ற பழமொழிக்கேற்ப தன்னைக்கெடுத்து கிறிஸ்தவத்தையும் கேலிப்பொருளாக்கிக்கொண்டு திரிகின்றார்.
"The Formula For Success In Career and Life" என்கின்ற தலைப்பில் ஒரு ஐ.ஏ.எஸ். ஆபிசர் உமா சங்கர் அவர்களை மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவதற்காக பள்ளி நிர்வாகம் அழைத்திருக்கின்றது.
ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து உயர் பதவிக்கு வந்திருக்கின்ற ஒருவரிடம் கல்லூரி மாணவ மாணவிகளிடம் தான் படிப்பில் கடந்து வந்திருக்கின்ற பாதையின் வெற்றியின் ரகசியங்களை குறித்தும் பின்னர் உயர் பதவியில் தான் சந்தித்துக்கொண்டிருக்கின்ற தடைகளை எப்படியெல்லாம் சமாளித்துக்கொடிருக்கின்றார் என்பதை குறித்தும் அதிகம் எதிர்பார்த்திருப்பர். ஆனால் நல்ல ஆலோசனைகள் கிடைக்கும் என்று நம்பி வந்த கல்லூரி ஸ்டூடன்ட்ஸ்களுக்கு ஏமாற்றம்தான்.
என்னதான் இடஒதுக்கீட்டில் பதவிக்கு வந்திருந்தாலும் ஒரு ஐ.ஏ.எஸ். என்ற பதவிக்கு வருவது அவ்வளவு எழிதல்ல. அடுத்து ஊழல் அரசியல்வாதிகளை சமாளிப்பதும் அவ்வளவு ஈசியல்ல. இவைகளையெல்லாம் வெற்றிகரமாக எப்படி தாண்டிவந்துகொண்டிருக்கின்றார் என்பதை பகிர்ந்துகொண்டு அதோடு சுவிசேஷத்தையும் சொல்லியிருந்தால் மாணவர்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாயிருந்திருக்கும்.
ஆனால் அவர் அங்கு சென்று மாணவ மாணவிகளோடு கலந்துறையாடல் என்ற பெயரில் மதங்களை குறித்து வாக்குவாதங்கள் செய்கின்றார். இதன் மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படுகின்றதா? அல்லது தூஷிக்கப்படுகின்றதா என்பதை நாமே நிதானித்துக்கொள்ளலாம்.
உமா சங்கரின் வாக்குவாதங்கள் நண்பர்களாக இருக்கின்ற மாணவமாணவிகளுக்குள் மதவிரோதங்களை தூண்டுவதாகதான் இருக்கின்றது என்பது இந்த வீடியோ மூலமாக புரிகின்றது. யேசுவின் பெயரில் நடக்கின்ற தேவையில்லாத வேதனையான இந்த காரியம் உண்மையான கிறிஸ்தவர்களுக்கு தலைகுனிவே. பிற மதங்களை குறைசொல்லிதான் கிறிஸ்தவ மதத்தை வளர்க்க வேண்டிய அவசியமில்லை.
ஈராக்கி ஜிகாதிஸ் என்ற தீவிரவாத அமைப்பின் கருத்தை முஸ்லீம்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அதுதான் முஸ்லீம் மதம் என்று சொல்லி உமா சங்கர் முஸ்லீம் மாணவமாணவிகளை அங்கே இழிவு படுத்துவது மதவெறியை தூண்டிவிடுவதுதான். அவர்களின் கோபத்தை கிண்டிவிடுவதுதானே. இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியம்.
டைவர் பண்ணாமலே ஒரேயொரு மனைவியோடு சந்தோஷமாக வாழ்கின்ற எத்தனை முஸ்லீம்கள் இன்றைக்கு இருக்கின்றனர். அப்படியிருக்கையில் முஸ்லீம்கள் அனைவரும் பல மனைவிகளை யுடையவர்கள் என்று சொல்லி மாணவமாணவிகள் மத்தியில் முஸ்லீம்களை இளிவுபடுத்துவது அவர்களின் கோபத்தை கிளராதா? .
கிறிஸ்தவத்தில் டைவர்ஸே இல்லையா என்ற கேள்விக்கு டைவர்ஸ் பண்ணுகிறவன் கிறிஸ்தவனே அல்ல என்று மழுப்பி அவர்களை புறமதஸ்தர் என்று சொல்லி தப்பிப்பது கோழைத்தனம். டைவர்ஸ் பண்ணிய பாஸ்டர்கள் இல்லையா? பாஸ்டர்களின் பிள்ளைகள் இல்லையா? விசுவாசிகள்தான் இல்லையா? அதை ஏன் மறுக்கவேண்டும்.
கட்டிய மனைவியை பரிந்து வருடக்கணக்கில் இருக்கின்ற கிறிஸ்தவ பாஸ்டர்கள் தான் எத்தனை!! எத்தனை !!! அம்பானிகள் தங்கள் மனைவியுடன் 5 நிமிடம்கூட சந்தோஷமாக இல்லை என்பது உமாசங்கரின் கற்பனையே. உண்மையை சொல்லப்போனால் கிறிஸ்வரல்லாதோரே இவ்வுலக இன்பங்களை நன்றாக அனுபவிக்கிறவர்கள்.
மோடி போன்றவர்கள் பதவியை அனுபவிக்க முடியாது என்று சொல்கிறார் அப்படியானால் அரசு உதவிக்காக தன் சர்டிஃபிகேட்டில் ஜாதி மதத்தை மாற்றி பிடிபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது தற்கொலை செய்வேன் என்று பேட்டிகொடுத்தாரே அப்போது இவர் கிறிஸ்தவரில்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மொத்தத்தில் பிறமதத்தவர்களை இளிவுபடுத்தி மதத்தின் பெயரால் அவர்களை புண்படுத்தியது தலைகுனிவு. அது புறமதஸ்தரின் கோபத்தைதான் கிண்டிவிட்டிருக்கும் அவர்கள் தேவனுடைய நாமத்தை தூஷிக்க காரணமாகிவிட்டார்..
மாணவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்காக அழைக்கப்பட்ட நபருக்கு அவருடைய மகளுக்கொத்த வயதையுடைய பெண்பிள்ளை ஆலோசனை சொல்லவேண்டிய நிலைமைக்கு தன் வாயாலே தள்ளப்பட்டதுதான் கேவலத்தின் உச்சக்கட்டம்.
பிறமதத்தவரை புண்படுத்துவது எந்தவிதத்திலும் சுவிசேஷம் ஆகாது. கிறிஸ்தவனுக்கு நற்சாட்சிதான் முக்கியம். கிறிஸ்துவை அறிவிக்கிறேன் என்ற பெயரில் பிறமத மாணவமாணவிகளை வெறுப்பேத்திவிட்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு திக்கித்திணறி சம்பந்தமே இல்லாத பதில்களை சொல்லி சொதப்பி "அண்ணன் கலக்கிட்டாருல" என்று சொல்லி மார்தட்டிக்கொள்வதுதான் வேடிக்கை.
பரலோக இராஜ்யத்தை குறித்தான அடிப்படை அறிவே இல்லாமல் உலக பதவி, சொத்துக்ள், தரிசனங்கள், இயேசு தருகின்றார், என்று போதிக்கின்ற வில்லியம் பிரன்ஹாம் சீடர்களின் போதனைகளை பின்பற்றுகின்ற, சுவிசேஷமே தெரியாத இந்த உமாசங்கர் கல்லூரி மாணவமாணவிகளுக்கு சுவிசேஷம் சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சுவிசேஷம் தெரிந்த உண்மையான தேவ மனிதர்கள் யாருக்ககாவது இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருந்தால் மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கேற்றவிதமாக சுவிசேஷத்தை அழகாக சொல்லியிருப்பார்கள்.
குறிப்பு : இங்கு கருத்துக்களை பதிவிடும் நண்பர்கள் தயவு செய்து ஜாதீய அடிப்படையில் வெறுப்புகளை காட்டாமல் நிதானமாக கருத்துக்களை பதிவிடவும். கெட்ட வார்த்தைகளை எழுதி அசிங்கப்படுத்த வேண்டாம். அவைகள் நீக்கப்படும்.