New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இல்வாழ்வான்


Guru

Status: Offline
Posts: 23616
Date:
இல்வாழ்வான்
Permalink  
 


 IlvalvaninDarmangal2.png

வேதங்களினால் விளக்கப்பட்ட ஸனாதந தர்மம் எனும் வ்ருக்ஷத்திற்கு ஆணிவேராக திகழ்பவை வர்ணதர்மங்கள், ஆஸ்ரமதர்மங்கள் என்னும் இரண்டு தர்மங்கள் ஆகும்.

வர்ணதர்மங்கள் ப்ரஹ்ம, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர பேதத்தினால் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்ரம தர்மங்கள் ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ எனும் பேதத்தினால் நான்காகப் பகுக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் சிறந்தது (க்ருஹஸ்த தர்மம்) எனும் இல்லற வாழ்வு. இல்வாழ்க்கையைப் பற்றி திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளில்

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை.

என்று கூறுகின்றார். அதாவது இல்லறத்தில் வாழ்பவன் அறத்தின் இயல்புகளை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாக இருக்கின்றான் என்பதாகும்.

IlvalvaninDarmangal3.png

உபநயனம் ஆனபிறகு ப்ரஹ்மசாரியானவன் குருவினிடத்தில் முறையாகக் கல்விகற்க வேண்டும். மனுஸ்மிருதி இவ்வாறு கூறுகின்றது -(வேதானதீத்ய வேதௌ வா வேதம் வா அபி யதாக்ரமம்

அவிலுப்தப்ரஹ்மசர்யேள க்ருஹஸ்தாஸ்ரமமாவஸேத்)

முறை பிறழாமல் ஒழுக்கத்துடன் குருகுலவாஸம் புரிந்த சீடனானவன் தனது வேதத்தினை முதலில் தெளிவுறக் கற்று பின்னர் மற்றைய மூன்று வேதங்களையோ, அல்லது இரண்டு வேதங்களையோ, அல்லது ஒரு வேதத்தையோ தெளிவுறக் கற்றுத் தேர்ந்த பின் இல்லற வாழ்வினை மேற்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடைய தந்தை அல்லது ஆசார்யனுடைய அனுமதியுடன் தன்னுடைய வர்ணத்தைச் சேர்ந்த அழகுடைய பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும்.

(அஸபிண்டா ச யா மாதுரஸகோத்ரா ச யா பிது:
ஸா ப்ரசஸ்தா த்விஜாதீனாம் தாரகர்மணி மைதுனே)

அப்பெண்ணானவள் அதாவது மணப்பெண்ணானவள் தன் தாயின் ஏழு தலைமுறைகளுக்குட் படாதவளாயும், தன்னுடைய கோத்ரத்தில் பிறவாதவளாயும், வைதிக கார்யங்கள் மற்றும் மக்கட்பேறு ஆகியவற்றிற்கு உகந்தவளாயும் இருக்கின்றாளா? என்பதை அறிந்து அக்கன்னிகையை மணம் புரிந்து கொள்ள வேண்டும். மணந்து கொள்ள வேண்டிய கன்னிகையானவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றால்

(அவ்யங்காங்கீம் ஸௌம்யநாம்னீம் ஹம்ஸவாரணகாமிநீம் 
தனுலோமகேசதசனாம் ம்ருத்வங்கீமுத்வஹேத்ஸ்திரியாம்)

அழகு மிகுந்தவளும், நற்பெயருடையவளும், அன்னம், பெண்யானையின் நடையினை உடையவளும், மென்மையான உடலினை உடையவளும், மென்மையான பற்கள், மென்கூந்தல், மென்மையான குரலினை உடையவளுமான கன்னிகையை மணந்து கொள்ள வேண்டும்.

திருமணமானது வேதநெறிப்படி செய்யப்பட வேண்டியதாகும். ப்ராஹ்மணர்களுக்கு “ப்ராஹ்மம்” எனப்படும் திருமணமே உயர்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

IlvalvaninDarmangal1.png

சாஸ்த்ரோக்தமாக திருமணம் ஆன பின்னர் இல்வாழ்க்கையில் ஈடுபடுபவன் விரிக்கப்பட்ட இல்லற தர்மங்களை செவ்வனே கடைப்பிடித்து வரவேண்டும். ஸந்த்யாவந்தனம், ஔபாஸனம், அக்நிஹோத்ரம் முதலியவற்றை க்ருஹஸ்தன் விடாது செய்து வரவேண்டும்.

(பஞ்சஸுநா க்ருஹஸ்தஸ்ய சுல்லீ பேஷண்யுபஸ்கர:
கண்டநீ சோதகும்பச்ச்ச பத்யதே யாஸ்து வாஹயன்)

எந்திரம், முறம், அம்மி, துடைப்பம், உரல், உலக்கை, நீரக்குடம், ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் ஐந்து கொலைக்குற்றங்கள் இல்லறத்தானை வந்தடைகின்றன.

அவை நீங்குவதற்கு மஹர்ஷிகளால் கீழ்வரும் உபாயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

(அத்யாபனம் ப்ரஹ்மயக்ஞ: பித்ருயக்ஞஸ்து தர்பணம் 
ஹோமோ தைவோ பலிர்பௌதோ ந்ருயஞோ அதிதிபூஜனம்)

அவையாவன:

1. ப்ரஹ்ம யக்ஞம் 
தினந்தோறும் தான் கற்றறிந்த வேதத்தினை ஓதுதல் வேண்டும்.

2.பிதுர்யக்ஞம் 
அன்னம் படைத்தோ அல்லது புனல் வார்த்தோ தென்புலத்தார்க்கு அதாவது பித்ருக்களுக்கு வழிபாடு செய்தல் வேண்டும்.

3. தேவயக்ஞம் 
அக்னியில் அவி சொரிந்து (ஹவிஸினை இட்டு) தேவர்களை வழிபடுதல்

4. பூதயக்ஞம் - அன்னத்தினால் பலியிடுதல்

5. ந்ருயக்ஞம்- விருந்தோம்பல் முதலியன ஆகும்.
(யதா வாயும் ஸமாஸ்ரித்ய வர்தந்தே ஸர்வஜந்தவ:
ததா க்ருஹஸ்தமாஸ்ரித்ய வர்தந்தே ஸர்வ ஆஸ்ரமா:)
எல்லா உயிர்களும் பிராண வாயுவினால் வாழ்ந்திருப்பதைப் போன்று ப்ரஹ்மசாரி, வானப்ரஸ்தன், ஸந்யாசி மூவரும் இல்வாழ்வானைச் சார்ந்து வாழ்கின்றனர். எனவே இல்லற தர்மம் மிகவும் சிறந்ததாக விளங்குகின்றது.
மேற்கண்ட ஐந்து யக்ஞங்களைப்பற்றி மனுஸ்மிருதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. விரிவஞ்சி சுருக்கமாக இங்கு எழுதப்பட்டது. மேலும் ப்ராஹ்மணனாக இருக்கும் ஒருவன் தன்னுடைய நித்ய கர்மானுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டும், எல்லா உயிர்களிடத்திலும் கருணை உள்ளத்தோடு, புத்திரர்களை கல்விமான்களாகவும், பண்புடையவர்களாக ஆக்குவதிலும், பிறன்மனை விழையாமலும், பெரியவர்களைப் போற்றியும், வேதாந்த விசாரங்களைச் செய்து கொண்டு சாஸ்த்ரங்கள் மற்றும் நீதிநூல்களை தினந்தோறும் பயின்றும், இறைவனை இடைவிடாது த்யானித்துக் கொண்டும், பசித்தவர்களுக்கு உணவளித்தும் உறவினர்களைப் போற்றியும், வறியவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தும், பித்ரு கார்யங்களான, தர்ப்பணம், ச்ராத்தம் முதலியவற்றைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டும், சிற்றின்பங்களில் பற்றின்றியும் இருக்க வேண்டும். கணவனும் மனைவியும் இணைந்து இல்லறத்தைச் செவ்வனே நடத்தி வரவேண்டும். அவ்வாறு இம்மண்ணுலகில் செவ்வனே இல்லறத்தை நடத்திய ஒருவன்

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்”

எனும் குறளுக்கேற்ப வானுலகத்தில் தேவனாக மதிக்கப்படுவான்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard