New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திராவிட இயக்கமும் தலித் விடுதலையும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திராவிட இயக்கமும் தலித் விடுதலையும்
Permalink  
 


திராவிட இயக்கமும் தலித் விடுதலையும் ஸ்டாலின் ராஜாங்கம்

Veermani.jpg1990களில் தமிழகத்தில் உருவான தலித் எழுச்சி, தலித்துகளின் அரசியல் உரிமைகளைக் கோரியது மட்டுமல்லாமல், சாதிபற்றி வழமையான நோக்கில் நம்பவைக்கப்பட்டு வந்த கருத்தியல்களையும் பரிசீலனை செய்து பார்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக இதுவரை சொல்லப்படாதிருந்த தலித்துகளின் கடந்தகாலப் போராட்ட மரபைத் தொகுத்தெடுக்கும் முயற்சியும் கால்கொண் டது. ஆனால் இந்தப் போராட்ட மரபை அங்கீகரிப் பதுகூட சாதிபற்றிய பழைய நம்பிக்கைகளை மாற்று வதாகிவிடும் என்பதால் தலித் அடையாளத்தை அங்கீகரிப்பது போன்று முயற்சிகள் நடந்தாலும் அவற்றைப் பிராமணரல்லாதோர் அரசியலின் அங்கமாக்கும் முயற்சி தொடர்ந்து பல்வேறு தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் படி தலித் வரலாற்றியல் முன்வைக்கும் புதிய வாதங்களை முற்றிலுமாக மறைக்கும் முயற்சியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கான அண்மைய உதாரணம், கி. வீரமணி தந்தி டிவி நேர்காணலில் தலித்துகள் பற்றிக் கூறிய வாதங்கள்.

கடந்த மார்ச் 29ஆம் தேதி மதுரை நகருக்குள் பேருந்தை விட்டிறங்கி உண்ணாவிரதப் பந்தலொன்றைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, “உனக்கு என்ன தைரியமிருந்தால் ஆசிரியரை வீரமணி என்று பெயர் சொல்லி அழைப்பாய்” என்ற குரல் காதில் விழுந்தது. பிறகு உற்றுக் கேட்டபோது தந்தித் தொலைக்காட்சிச் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேதான் இவ்வாறு வசைபாடப்படுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. சில வாரங்களுக்கு முன்புதான் திராவிடக் கட்சிகளின் காலத்தில் குலைந்து போய் விட்ட அரசியல் பண்பாடு பற்றி கி. வீரமணியின் அறிக்கையொன்று வெளியாகியிருந்தது. ஆனால் இங்கு அவரின் பெயரைச் சொல்லி யதற்காக அவரது ஆதரவாளர் ஒருவரால் பாண்டே வறுத்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தார். பிறகு முகநூல் பக்கங்களில் அலைந்து கொண்டிருந்தபோது முந்தைய நாள் தந்தி டிவியில் கி. வீரமணியை ரங்கராஜ் பாண்டே எடுத்த பேட்டி ஒளிபரப்பப்பட்டிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அந்த உஷ்ணம் அடுத்தடுத்த நாள்களில் வலைதளங்களில் வீசிக் கொண்டிருந்தது. இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாகத் தொகுப்பாளர் ஒருவர் இந்த அளவிற்கு வசைபாடப்பட்டது இதுவாகத்தானிருக்கும். தொலைக்காட்சி ரேட்டிங் நிலை, பேட்டிக்கான கேள்விகளைத் தயாரிக்கும் குழு பற்றியெல்லாம்கூட யோசிக்க வாய்ப்பிருந்தும் அவற்றையெல்லாம் கணக்கி லெடுக்காமல் இது பாண்டேயின் தந்திரமாக மட்டுமே சித்திரிக்கப்பட்டது. பிரச்சினையொன்றை முழுமையாகப் பார்க்க வேண்டாமெனில் அதோடு தொடர்பு கொண்டவர் பிராமணராக இருந்து விட்டால் போதும். இங்கு பாண்டே பிராமணராக இருந்துவிட்டார். அது போதுமானதாகிவிட்டது. ஒரு பிரச்சினையில் பிராமணரும் இருக்கிறார் என்று துப்பு கிடைத்துவிட்டால் அதுவரை தான் வெறுப்பதாகக் கூறிவந்த எந்த அடையாளத்தையும் அவர்மீது சுமத்தலாம் என்ற தமிழ்நாட்டு அரசியல் வழமையின்படி பாண்டே ஒரு பீகார் பார்ப்பனர் என்ற கூடுதல் உண்மையை அ. மார்க்ஸ் கண்டறிந்து சொல்லியிருந்தார்.

இதில் கவனிக்கவேண்டிய மற்றொரு செய்தியும் இருக்கிறது. இதுபோன்ற விவாதங்களை மதிப்பிடும்போது தேவையெழுமெனில் பேட்டியெடுப்பவரின் சாதியடையாளம் பற்றிய தரவும் ஒரு அம்சமாகக் கருதப்படுவதை ஏற்கலாம். ஆனால் அ. மார்க்ஸ் உள்ளிட்ட எல்லோருடைய பதிவும் பாண்டேயின் சாதியை மட்டுமே தரவாகக் கொண்டிருந்தன. செய்தி நிறுவனம், நிறுவனத்தின் சாதிப் பின்னணி என்பதைப் பற்றி ஒருவரும் கேள்வியெழுப்பவில்லை. இந்து நாளேட்டின் செய்தியாளர் எழுதும் செய்தி உவப்பாக இல்லையென்றால், உடனே அதைப் பார்ப்பன நிறுவனத்தின் கருத்திய லாகக் கருதி விமர்சிக்கும் இங்கு, ‘தந்தி’ நிறுவனத் தின் நிகழ்ச்சி பற்றிய விமர்சனம் நிறுவனத்தின் சாதியப் பின்னணியோடு இணைக்கப்படாமல் பேட்டியெடுத்தவரின் பிரச்சினையாக மட்டும் சொல்லப்படுகிறது. இதுவும் பொதுப் புத்திதான். பாண்டேவைத் தனியாக்கி அவரின் பிரச்சினையாக மட்டுமே இதைச் சொன்னால்தான் இதற்குப் பார்ப்பன அடையாளம் தர முடியும் என்பதே இதன் நுட்பம். உண்மையில் இதில் காப்பாற்றப்படுவது பிராமணரல்லாத சூத்திர சாதிகளின் இருப்பு தான். இது தமிழக பிராமணரல்லாதோர் அரசியலின் வழமையான போக்குதான்.

T-P-Kamalanathan.jpgஉண்மையிலேயே நம்முடைய கருத்தியல்வாதிகளால் முரண்படுகிற சக்திகளென்று கூறப்படும் பிராமணர்களும் பிராமணரல்லாதோரும் எதார்த்தத்தில் இணைந்து நிற்கிற புள்ளியை யாரும் பேசுவதில்லை. இத்தகைய இடம் உருவாவதன் பின்னணி என்ன என்று யாரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. சாதியமும் இந்துத்துவமும் இக்கூட்டின் முழுமையில் தான் இயங்குகின்றன. இந்நிலையில் சாதி ஆதிக்கத்தை விமர்சிப்பதாகக் கருதிக்கொண்டு பிராமணரை மட்டுமே காரணமாக்கிவிட்டு சாதி இந்துக்களை காண மறுப்பது ஏன்? இந்த இணைவை விவாதித்தால்தான் இந்துத்துவத்தின் இன்றைய சமூக இயங்கியலைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் கருத்தியல்வாதிகள் பலரும் அப்படியொரு விவாதமே வந்துவிடக் கூடாதென்பதற்காகத்தான் படாதபாடுபடுகிறார்கள். பிராமணர் ஜ் பிராமணரல்லாதோர் என்கிற பழைய எதிர்வைக் கடந்தும் சாதியம் செயற்படுகிற வெவ் வேறு நுட்பமான புள்ளிகளைப் பேசும் வாய்ப்பு, கடந்த இருபதாண்டுகால தலித் எழுச்சி போன்ற போக்குகளால் உருவான பின்பும் இங்கு பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் பழைய வார்த்தைகளில் ஒற்றையாக ஆக்கப்படுகிறதென்றால் நிலைமையை என்னவென்று சொல்வது?

தமிழில் முழுநேரச் செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் அதிகரித்துவிட்ட நிலையில் செய்திகளும் விவாதங்களுக்கான கருப்பொருட்களும், புதிது புதிதாகத் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. விவாதங்களில் அரிதாக வெளிப்படும் ஆக்கபூர்வமான கருத்துகள்கூட அவைகளின் வாதமுறை, ரேட்டிங் போன்ற நோக்கங்களுக்கு முன் வெற்றுக் கூச்சல்களாகச் சுருங்கிவிடுகின்றன. ஆனால் கி. வீரமணியின் ‘தந்தி டிவி’ பேட்டி, அவரைப் பற்றிய வலைதளப் பதிவுகள், தொல். திருமாவளவன், தந்தி டிவி பேட்டியாளரைக் கண்டித்தும் (நிறுவனத்தை அல்ல) கி. வீரமணியை ஆதரித்தும் விடுத்திருந்த அறிக்கை போன்றவை இப்பிரச்சினைக்கு வேறுவகை அர்த்தங்களை உருவாக்கு வதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதாவது, இது

கி. வீரமணி, பாண்டே சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தலித்துகள் கருத்தியல் மற்றும் அரசியல் தளத்தில் ஏற்படுத்தி வந்திருக்கும் தனித்துவத்தையும் அதனூடான புதிய கேள்விகளையும் முடக்கும் முயற்சிகள் வெகுநுட்பமாகச் செயற்படுகின்றன என்ற விதத்தில் இப்போக்கைக் கவனமாக அணுக வேண்டியுள்ளது.

பாண்டே நடத்திய நேர்காணல்களை ஓரிருமுறை பார்த்த தருணங்களில்கூட அவரின் அணுகுமுறை என்னை ஈர்த்ததில்லை. எதிராளியைக் கோபமூட்டி அடுத்தடுத்துக் கேள்விகளையெழுப்பிக் கொந்தளிக்கச் செய்வது வாதமுறைக்குள்ளேயே அடங்காது. ஆனால் இன்றைய சேனல்களின் சட்டகம் அதுதான். அதே வேளையில் வழக்கறிஞருக்கே உரிய தன்மையோடு கி. வீரமணி பேசும் வாதங்களைக் கடந்தகால மேடைகளில் கேட்டிருக்கிற எனக்கு இம்முறை அவரின் அணுகுமுறை ஏமாற்றமளித்தது. நிதானமிழந்து பாண்டேவைப் போன்றே அவரும் மாறிவிட்ட தருணங்கள் இப்பேட்டியில் அதிகம். தலித்துகள் பற்றிய கேள்விகளுக்கு அவரளித்த பதில்கள் மிக மிக மேலோட்டமானவை. அடையாள ரீதியானவை. சிலவேளைகளில் சமாளிப்பாகவும் சிலவேளைகளில் அரைப் பொய்யாகவும் சற்றே நீண்டு முழுப்பொய்யாகவும் வெளிப்பட்டன. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அதை உண்மையாக்கிவிட முடியும் என்பதற்கு மதவாதிகள் மட்டுமல்ல இப்‘பகுத்தறிவுவாதி’களும் உதாரணம் போலும்.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் நடமாடும் உரிமையைப் பெற்றதே தங்களால்தான் என்ற கருத்தை கி. வீரமணி பேட்டியில் முன்வைத்தார். நிகழ்காலத் தரவுகளிலிருந்தும் கடந்தகால அனுபவங்களிலிருந்தும் இக்கூற்றை மறுக்க நம்மிடம் ஏராளமான ஆதாரங்களுண்டு. பெரியார் காலத்திலிருந்தே திராவிடர் கழகத்திற்குத் தாழ்த்தப்பட்டோர் விசயத்தில் வரையறைகள் இருந்தன. அடிப்படையில் திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான இயக்கம் கிடையாது. பிராமண எதிர்ப்பில் நியாயமே இல்லை என்று கூறமுடியாது. ஆனால் அதன் முதன்மை நோக்கோ, நிகழ்ச்சி நிரலோ தாழ்த்தப்பட்டோருக்கானதாய் இல்லை. அக்கட்சியின் பிராமண எதிர்ப்புக் கருத்து தலித்துகளுக்கும் ஒருபுடை அரசியல்ரீதியாக உதவியது என்பதைத் தாண்டி மற்றபடி அதில் சொல்வதற்கு ஏதுமில்லை. பெரியார் காலத்திலேயே அது பிரதி

நிதித்துவப்படுத்திய சூத்திரர்களின் ஆதிக்கத்திற்கும் வன்முறைகளுக்கும் எதிராக தலித்துகள் தனித்துதான் போராடி வந்தனர். தலித்துகளுக்குத் தனி அமைப்புகள் இருந்தன. சில இடங்களில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உழைக்கும் தொழிலாளர்களாகத் திரண்டிருந்தனர். வேறு தளங்களில் தாங்கள் புரிந்து கொண்ட கருத்தியலுக்கு ஏற்ப காந்திய இயக்கத் தினரும் செயற்பட்டனர். இவற்றையெல்லாம் திரட்டிப் பார்த்தால்தான் தலித்துகளுக்கு ஏதாவ

தொரு ஒற்றைக் கட்சியையோ, தலைமையையோ வழிகாட்டியதாகக் கூறுவதை எதிர்கொள்ள முடியும். ஆனால் அப்படியான ஆதாரங்கள் ஏதும் இங்கு திரட்டப்படவில்லை என்பது பலருக்கும் வசதியாக இருக்கிறது. தலித்துகள் தனித்து நடத்திய போராட்டங்களில் திராவிடர் கழகத்திற்கு எந்தப் பங்கும் இருந்ததில்லை. கி. வீரமணி பேட்டியில் பூசிமெழுகிய வெண்மணி பிரச்சினையில் பெரியாரின் செயல்பாடு ஒரு அறிக்கை மட்டும்தான். அதுவும் தலித்துகளுக்கு ஆதரவானதில்லை. கொடுக்கும் கூலியை வாங்கிக்கொள்ள வேண்டுமென்றும், அது கம்யூனிஸ்டுகளின் தூண்டுதல் என்றும் பேசியிருக்கிறார். ஏறக்குறைய நிலவுடைமைச் சூத்திரர்களைக் காப்பாற்றும் தொனிதான் அறிக்கையில் இருக்கிறது.

thirumavalavan.jpgமுதுகுளத்தூர் கலவரத்தின்போதுகூட திராவிடர் கழகத்தின் பணியேதும் இல்லை. அதே வேளையில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிரான நிலையெடுத்து அறிக்கை வெளியிட்டார். ஆனால் குறிப்பான இந்த இரண்டு பிரச்சினைகளிலும் பிரச்சார இயக்கமோ தொடர்ச்சியான கருத்தோ அவரிடம் இருந்ததில்லை. தாழ்த்தப்பட்டோரின் அரசியல் பாதையில் முக்கிய நிகழ்வுகளான இந்தச் சம்பவங்கள் அவருடைய அரசியல் பார்வையில் எந்த அசைவையும் உருவாக்கவில்லை. அவர் தொடர்ந்து சூத்திர இழிவுக்கு எதிராகப் பார்ப்பனர்களை எதிரியாகக் காட்டும் அரசியலையே செய்து வந்தார். முத்துராமலிங்கத் தேவரை மறுத்ததுகூட அப்போது அவர் எடுத்திருந்த அரசியல் நிலைபாட்டில் எந்த இடையூறையும் உருவாக்கவில்லை. அதாவது, அப்போது காமராசரை ஆதரித்து வந்த பெரியாருக்கு காமராசரின் எதிரியான முத்துராமலிங்கத் தேவரைக் கண்டிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்றைக்குத் தமிழ்த் தேசியத்திடமிருந்து திராவிடத் தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக தலித் பிரச்சினைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் மௌனத்தை எடுத்துக்காட்டி எதிர்கொள்ளப்படுகிறது. ஆனால் தலித் பிரச்சினைகளில் இன்றைய தமிழ்த் தேசியக் கட்சிகள் மேற்கொள்ளும் நிலைபாட்டிற்கும், திராவிடர் கழகத்தின் நீண்டகால நிலைபாட்டிற்கும் பெரிய வித்தியாசங்கள் இருந்ததில்லை.

அதேபோல தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாடு தொடர்பானதல்ல. அது இந்திய அளவிலானது. இந்திய அரசியல் சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டது. எனவே திராவிடர் கழகம் இல்லையெனினும் தலித்துகளுக்கு ஒதுக்கீடு இருந்திருக்கும். சமூகநீதி பேசும் மாநிலத்தில் ஒரு தலித் சுய அதிகாரமுடைய அமைச்சுப் பணியிலோ கட்சிகளின் மாவட்ட - ஒன்றிய - நகரப் பொறுப்புகளிலோ இல்லை. ஆனால் சமூக நீதி பேசாத மகாராஷ்டிரம், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில்கூட சற்றே அதிகாரமுடைய விதத்திலோ அடையாள ரீதியாகவோ முதலமைச்சர் ஆக முடிகிறது. தமிழகத்தில் அப்படியொரு கற்பனைகூட பண்ண முடியாது என்பது பொய்யா? திராவிடக் கட்சி ஆட்சிகளில்தான் தலித்துகளுக்குச் சட்டப்படி ஒதுக்கப்பட்ட லட்சக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. மைய அரசையும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு இல்லாத நிறுவனங்களையும் எதிர்த்துப் பேசும் திராவிடர் கழகம், தலித்துகளுக்கு நிரப்பப்பட்டிருக்க வேண்டிய ஒதுக்கீட்டிற்காக உள்ளூரில் போராடியதுண்டா? உள்ளூர் நிறுவனங்கள் ஆதிக்கச் சாதிமயமாகியுள்ளன. இடைநிலை வகுப்பினராலேயே தலித்துகளுக்கான இடங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன. இட ஒதுக்கீடுப்படி என்றாலும் கூட ஒவ்வொரு கட்சியிலும் தலித்துகளுக்கான பிரதிநிதித் துவம் இருந்திருக்க வேண்டும். இதற்காகத் திராவிடர் கழகம் போராடியதில்லை, பேசியதில்லை. மாறாக இந்த ஆதிக்கம் திராவிடக் கட்சிகளால் உருவானது என்பதுதான் உண்மை. இதைச் சுட்டிக்காட்டாமல், எதிர்த்துப் போராடாமல் தொடர்ந்து எல்லா நிலைகளிலும் பிராமணரை மட்டுமே குற்றம் சாட்டுவதன் மூலம் இடைநிலைச் சாதி ஆதிக்கத்தைக் காப்பாற்றும் வேலையைத்தான் இக்கட்சி செய்கிறது. கல்வி வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அரசு சார்பான சிறுகுறு தொழில் வாய்ப்புகள் மற்றும் பெரும் சலுகைகள் போன்றவற்றையும் இடைநிலைப் பெரும்பான்மைச் சாதிகளே கைப்பற்றியுள்ளன. இந்தப் புள்ளி விவரங்கள் எல்லாம் இங்கு சேகரிக்கப்படுவதில்லை, பேசப்படுவதுமில்லை. இவை தவிர சமூக மூலதனம் கொண்ட பொதுச் சொத்து ஏலம், நிலம் உள்ளிட்ட பகிர்மானம் போன்றவற்றில் தலித்துகள் நுழையவே முடிவதில்லை. நுழைய முயற்சிக்கும்போது கொலை போன்ற வன்முறைகள் சாதாரணமாக நடக்கின்றன. உண்மையில் தலித்துகளின் உரிமைகள் மறுக்கப்படுவதை மறைக்கும், உரிமை மறுப்போரைக் கருத்தியலின் பெயரால் காப்பாற்றும் வேலையைத்தான் திராவிடர் கழகம் செய்கிறது.

அதேபோல தலித்துகளுக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கும் சலுகைகள் அவர்கள் தொடர்ந்து போராடி வந்ததின் தொடர்ச்சியில் கிடைத்தவை. இப்போராட்டங்களும் சலுகைகளும் திராவிடர் கழகத்திற்கும் முந்தியவை. தலித்துகளின் போராட்ட அனுபவத்திலிருந்துதான் பிராமணரல்லாதோர் அரசியல் முன்னுதாரணத்தைப் பெற்றுக் கொண்டனர் என்பது மட்டுமல்ல, தலித்துகளின் அரசியல் தொடர்ச்சியை உள்வாங்கி வீரியம் குன்றச் செய்தது என்பதும் வரலாறு. இப்படித்தான் பிராமணரல்லாத பெரும்பான்மைச் சாதி அரசியலுக்கு இங்கு வழி பிறந்தது. இத்தளத்தில் கி. வீரமணியோடு வைத்துப் பேசத்தக்க இரண்டு ஆதாரங்களை மட்டும் இங்கு முன்வைக்கிறேன்.

1984ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டிற்கு நீதிக்கட்சியே காரணம் என்று கி. வீரமணி ஒரு கருத்தைச் சொன்னபோது அதை மறுத்து தலித் வரலாற்று அறிஞர் தி.பெ. கமலநாதன் ஒரு நூல் எழுதினார். அதில் திராவிடர் இயக்கத்திற்கு முன்பே தலித்துகள் நடத்திய போராட்டங்களையும் பெற்ற சலுகைகளையும் வரிசைப்படி ஆதாரப்பூர்வமாகக் காட்டியிருந்தார். நூலின் தலைப்பிலேயே கி.வீரமணியை விளித்து துணிச்சலாக எழுதப்பட்ட நூல் அது. அந்நூலின் தலைப்பு இதுதான். Mr.K.Veeramani, MABL., is Refuted and the Historical facts about the scheduled caste’s struggle for Emancipation in South India. இது தமிழில் ‘தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்’ என்ற தலைப்பில் எழுத்து பதிப்பக வெளியீடாக (2009) வந்துள்ளது. இந்த நூலின் ஆதாரங்களை மறுத்து இதுவரை வீரமணி எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் கி. வீரமணி ‘தந்தி டிவி’ பேட்டியிலும் அதே பழைய கருத்தையே திரும்பச் சொல்லியிருக்கிறார். அடுத்த ஆதாரம் கல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜசேகர் பாசு தமிழக தலித் வரலாற்றை அடியொற்றி எழுதியிருக்கும் ‘Nandanar’s Children : The Paraiyar’s tryst with Destiny: Tamilnadu 1850 – 1956’ என்ற ஆங்கில நூலாகும். இந்த நூல் தலித்துகளின் நவீன அரசியல் போராட்ட மரபை 1850லிருந்து தொடங்குகிறது. இது திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கு 65 ஆண்டுகளுக்கு முந்தியதாகும். இந்த ஆதாரங்களுக்குப் பதில் சொல்லாமல் இத்தரவுகள் வந்ததையே காட்டிக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பழைய பொய்யையே புதிய தலைமுறையினரிடம் விற்பதுதான் வீரமணியின் பகுத்தறிவா? இப்போதும் குடிமுழுகிப் போய்விடவில்லை. வீரமணியோ அவரின் புதிய ஆதரவாளர்களோ இவ்விரண்டு நூல்களுக்கும் முடிந்தால் ஆதாரபூர்வமாக பதில் எழுதட்டும். அதனூடாகப் பிறவற்றையும் விவாதிக்கலாம்.

வீரமணியின் இப்பேட்டியில் அடுத்த அம்சமாக இடம்பெறுவது திருமாவளவன் மற்றும் அவர் குழுவினர் எடுத்த பெரியார் மற்றும் திராவிட இயக்கம் பற்றிய நிலைபாடு மீதான கருத்து. திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1990களில் கிராமப்புற ஒடுக்கப்பட்ட சாதியினரின் குரலாக வெளிப்பட்டது. உள்ளூர் அளவில் தங்களை ஒடுக்கும் ஆதிக்கச் சாதியினருக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிபலிப்புதான் அக்கட்சியும் புதிய தமிழகம் போன்ற பிற தலித் கட்சிகளும். இதன்படி 1990களின் தலித் எழுச்சியென்பது உள்ளூர் சூத்திரப் பெரும்பான்மைச் சாதியினருக்கு எதிரான தலித்துகளின் வெளிப்பாடுதான். இவ்விடத்தில் பிராமணர்களைக் கொணரவேண்டிய எந்த அவசியமும் இருந்திருக்கவில்லை. அதனால்தான் திருமாவளவனின் தொடக்ககாலப் பேச்சுகளில் உள்ளூர்க் கள எதார்த்தம், அதை எதிர்ப்பதற்கான ஆவேச முழக்கம் போன்றவை இடம் பெற்றனவே தவிர நாத்திகம், பிராமணர் எதிர்ப்பு போன்றவை முதன்மையானவையாக இடம் பெறவில்லை. நிகழும் கள எதார்த்தத்தைப் பிரதிபலித்ததால்தான் இக்கட்சிகளில் தலித் மக்கள் திரண்டனர். மாறாக உள்ளூர் ஒடுக்கும் சாதியினருக்கு அதிகாரம் வந்தடைந்ததற்குக் காரணமாக இருந்ததோடு, ஒடுக்கும்போது மௌனம் காத்தும், சட்டம் உள்ளிட்ட விசயங்களில் பாதுகாத்தும் செயல்பட்டது திராவிடக் கட்சிகள்தாம். திராவிட அரசியல் அதிகாரம் என்பதே சூத்திரப் பெரும்பான்மைவாதத்திற்கு ஆதரவானதுதான். இதன் தொடர்ச்சியாகவே கலவரங்கள், இழப்புகள் போன்றவற்றை தலித் மக்கள் பெருமளவில் சந்தித்தனர். இதுபோன்ற எந்த தருணத்திலும் திராவிடர் கழகம் களத்திற்கு வந்த வரலாறே கிடையாது. தலித் மக்கள் உள்ளூரில் புதிய எதார்த்தங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது அக்கட்சி மேலே இருந்துகொண்டு பிராமணர்களையே பழையபடி சாடிக் கொண்டிருந்தது. திராவிடர் கழகம் வெளியே வந்தது 2012 தர்மபுரி வன்முறையின்போதுதான். அதிலும் வன்முறையைக் கண்டித்து ஒரு கூட்டம் நடத்தியது. பிறகு வழக்கம்போல் அதிலேதும் தொடர்ச்சி இல்லை. அத்தருணத்தில் பாமக தலைவர் ராமதாஸ், வீரமணியையும் திராவிடக் கட்சிகளையும் தாக்கியிருந்தார் என்ற கோபம் அவர்களுக்கு இருந்தது. ஆனாலும் அக்கூட்டத்தில் கி. வீரமணி வர்ணாசிரமத்தைத்தான் கண்டித்துப் பேசினார். கள எதார்த்தமும் மாறி வந்திருக்கும் அனுபவங்களும் எந்த வகையிலும் அவர்களின் சிந்தனையில் மாற்றத்தை உண்டு பண்ணவில்லை.

1990களில் திருமாவளவன் மேடைகளில் திராவிடக் கட்சிகளின் அரசியல் அதிகாரத்தைக் கடுமையாகவே விமர்சித்து வந்தார். பிறகு அக்கட்சி தேர்தலில் நுழைந்து இரண்டு தேர்தல் அனுபவத்திற்குப் பின் தாம் வெற்றிபெற பிற வகுப்பினரின் ஓட்டும் தேவை என்பதை உணர்ந்து வேறுபாதையில் இறங்கியது. அதற்கான அடையாளமாகத் தமிழ் அடையாளம் பயன்படமுடியும் என்று கருதி தன்னுடைய விருப்பத்தை அமைப்பின் பிரதான செயல்திட்டமாக மாற்றினார் திருமாவளவன். மெல்ல மெல்ல சாதிப் பிரச்சினைகளில் வேகத்தைக் குறைத்தார் அல்லது தொடர்ச்சியாக எடுத்துச் செல்லாமல் அடையாளத்திற்காகப் பேசினார். அதாவது வெகுஜனக் கட்சியாக மாறி மைய நீரோட்டக் கட்சிகளுக்குரிய அத்தனை ஏற்ற இறக்கங்களையும் அது உள்வாங்கி நிற்கிறது.

nandanarchildren.jpgஅக்கட்சி தேர்தல் அரசியலில் நுழைந்த தொடக்க காலத்தில்கூட தலித்துகளுக்கு உதவாமல் இருந்தபோதும் அரசியல் நம்பிக்கையாக ஏதோவொரு விதத்தில் அம்மக்களாலேயே ஏற்கப்பட்டிருந்த திராவிடக் கட்சிகளின் அதிகாரத்தை மறுக்க வரலாற்றுரீதியான அனுபவங்களோடும் தரவுகளோடும் சில விமர்சனங்களை முன்வைத்தது. அவற்றில் ஒன்றுதான் திராவிட அரசியல் விமர்சனம் அல்லது பெரியார் விமர்சனம். சில குறைபாடுகளைத் தாண்டி அந்த விமர்சனங்கள் முக்கியமானதாகவும் உண்மையானதாகவும் இருந்தன. அதுவரையிலான பிராமணர் அல்லாதோர் அடையாளம் சார்ந்து நடைபெற்ற மாற்றங்களைப் பரிசீலித்து பார்ப்பதற்கான கேள்விகளாக அவை இருந்தன. தலித்துகளிடமிருந்து வெளிப்படும் இந்த விமர்சனங்களின் வீர்யம் மற்றும் வரலாற்று நியாயம் தெரிந்துதான் திராவிட இயக்க அமைப்புகளும் அறிவுஜீவிகளும் பதற்றமடைந்தனர். இதனை விவாதிப்பதற்குப்பதில் அவதூறு செய்தனர் அல்லது விமர்சனங்களை நிறுத்திவைக்க முயற்சித்தனர். இதற்கு திருமாவளவன் வெகுஜன அரசியல் கட்சியாக பலரோடு கூட்டணியில் இணைய வேண்டியிருக்கிற நிர்ப்பந்தத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். கட்சியும் அதனளவில் பல்வேறு சீரழிவுகளைச் சந்தித்துத் தன்னைத் தக்க வைப்பதற்குச் செயலாற்றி வருகிறது. திராவிட இயக்கம் மீதான விமர்சனம் அரைகுறையாக வெளியானது தாண்டி விரிந்த விவாதமாகப் பரிணமிக்கவில்லை.

கடந்த பத்தாண்டு காலமாக அக்கட்சியின் நிலை அதுதான். இப்போது கூட 2016இல் வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி அரசியல்பற்றி முடிவெடுக்க வேண்டிய நிலையிலிருக்கும் திருமாவளவன் கடந்த முறை திமுகவோடு கூட்டணியிலிருந்த போதிலிருந்தே தொடர்பிலிருக்கும் வீரமணி போன்றோரைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. 2003ஆம் ஆண்டு ராமதாஸோடு தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடங்கியதிலிருந்தே ராமதாஸ், கருணாநிதி, வீரமணி போன்றோரிடம் அரசியல் கூட்டணிக்காக அவர்களின் நோக்கு சார்ந்து செயல்பட வேண்டிய, பேச வேண்டிய திசையில் அவர் இருக்கிறார். இதற்காக திராவிட இயக்கம்பற்றிக் கடந்த காலங்களில் தான் பேசிய விசயங்களை மறக்கவும், யாராவது சுட்டிக்காட்டினால் மறுக்கவும் கூடத் தயாராக இருக்கிறார். அப்படித்தான் தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ‘தந்தி டிவி’ பேட்டியில் கி. வீரமணியை நோக்கிச் செய்தியாளர் கேட்ட கேள்விக்காக திருமாவளவன் மறுப்பு அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிட வேண்டியிருக்கிறது. இப்போது இக்கட்டுரையின் வாதத்தைக்கூட அவர் மறுக்கலாம். அவர் மறுக்கிறாரா என்பது இங்கு பிரச்சினை இல்லை. இது உண்மையா, இல்லையா என்பதே ஆய்வின் வழி அறிய வேண்டியது. இங்கு அரசியல் கூட்டணிக்காகக் கருத்தியல் சமரசத்தை எதிர்பார்க்கிறார்கள். அது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையே இப்போக்குகள் காட்டுகின்றன. இன்றைய பிராமணரல்லாத பெரும்பான்மைச் சாதி அரசியலில் ஒடுக்கப்படும் மக்களுக்கான தனித்துவமான கருத்தியலைக் கைக்கொள்ளாமல் திமுக, திக போன்ற கட்சிகளின் கருத்துகளை அப்படியே வழிமொழியும் நிலையில் இருக்கிறது இக்கட்சி.

திராவிட இயக்கங்களின் போதாமையினால் உருவானதுதான் தலித் இயக்கங்கள். திராவிடக் கட்சிகளின் கருத்தியல்தான் தலித் அமைப்புகளின் கருத்துகளாக இருக்குமானால் தனி அமைப்புகளே கூடத் தேவையில்லாது போகலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் குறிப்பான பிரச்சினைகளுக்காக எந்தக் கட்சிகள் பணியாற்றவில்லையோ, எந்தக் கட்சிகளால் அதிகாரம் பெற்றோர் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது வன்முறை நிகழ்த்துகின்றனரோ, எந்தக் கட்சிகள் இவற்றிற்கெல்லாம் முகம் கொடுக்கவில்லையோ, எந்த இயக்கங்கள் கற்றுத் தந்த கருத்துகள் புதிய எதார்த்தங்களைக் கணக்கெடுக்கத் தடையாக இருக்கிறதோ அந்தக் கட்சிகளை - இயக்கங்களைக் கருத்தியல் தளத்திலும் தாங்கிப்பிடிக்க வேண்டிய நிலையில் ஒடுக்கப்பட்டோர் கட்சி இருப்பதும், இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நியாயம்தானா? ஒடுக்கப்பட்டோர் கட்சிக்குத் தேவைப்படும் வெகுஜன வாய்ப்பைக்காட்டி உருவாகும் சமரசங்களை - பேசும் கருத்துகளை அவற்றின் பின்னணி பற்றிய ஆராய்ச்சி சிறிதும் இல்லாமல் அறிவுஜீவிகள் பலரும் மேற்கோளாகக் காட்டி தலித் இயக்கமே ஆதரிக்கிறது, தலித் அறிவுஜீவிகள் சொல்வதை அது மறுக்கிறது என்று சொல்லி பிராமணரல்லாதோர் என்ற ஒற்றை அடையாள அரசியலை நியாயப்படுத்துவது சரிதானா? இங்கு தலித்துகளுக்குச் சுயமான அரசியல் அமைப்புகள் மட்டுமல்ல, சுயமான கருத்தியல்களையும் வைத்துக்கொள்ள உரிமை இருக்கக்கூடாது அல்லது தாங்கள் சொல்வதை அப்படியே கேள்வியின்றி ஏற்றுப் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? தவறானதாக இருந்தாலும் அதைப் பேசுவதற்கும் விவாதத்தின்வழி மேம்படுத்துவதும்தான் கருத்துரிமை. அத்தகைய கருத்துரிமை இங்கே மறுக்கப்படுகிறது.

சிவில் சமூகத்தில் தலித் மக்கள்மீது நடத்தப்படும் வன்முறையைக் காட்டிலும், தலித் இயக்கம்மீது அரசியல் தளத்தில் ஏவப்படும் இந்த வன்முறைதான் அதிக அபாய முடையது. அரசியல் தளத்தில் திருமாவளவன் உருவாக்கும் கூட்டணி என்பது பெரிய சமரசமல்ல. மாறாக அரசியலுக்காகக் கருத்தியல் தளத்தில் மேற்கொள்ளும் சமரசம்தான் அதிக பிரச்சினை கொண்டதாய் இருக்கிறது. பிற கட்சிகளிடம் அரசியல் சமரசத்தை மட்டும் எதிர்பார்க்கும் திராவிடக் கட்சிகள் தலித் கட்சிகளிடம் கருத்தியல் சமரசத்தையும் எதிர்பார்க்கின்றன. திராவிட இயக்க ஆதரவு அறிவுஜீவிகள் சிலரும் திராவிட இயக்கச் சிறு அமைப்புகளும் தலித் மேடைகளில் இடம்பெறுவதும் தலித் பிம்பங்களைத் தங்கள் மேடைகளுக்கு அழைப்பதும் இதற்காகத்தான். இவர்களில் ஒருவரும் தலித் கருத்தியலை மாற்றுவிவாதமாக ஏற்றுக்கொண்டு ஒரே மேடையில் தோன்றுவதில்லை. நிலைமை கடும் சிக்கலாய் இருக்கிறது. இங்கு நேர்மையான விவாதத்திற்கு இடமில்லாமல் இருக்கிறது. உண்மையிலேயே திராவிட அரசியலை விமர்சிக்கும் வரலாற்று நியாயம் கொண்டவர்கள் தலித்துகள் என்பதைப் புரிந்து கொண்டிருப்பதாலேயே பிராமணரல்லாதோர் சாதிகளின் நலனைக் காப்பதற்காக இம்முயற்சிகளில் இறங்குகின்றனர். மோசமான அரசியல் கூட்டணிகளை ஏற்படுத்திக் கொண்டாலும், தங்களின் ஆதாரமான கருத்தியல்களைத் தக்கவைத்துக்கொள்ளும் போக்கை இப்போதும் ஓரளவு இடதுசாரிக் கட்சிகளிடம் பார்க்கலாம். அப்போக்கு இங்கு இல்லை.

அரசியல் நிர்பந்தத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய நிலையிலிருக்கும் திருமாவளவனின் அறிக்கை அவர்களுக்கு உதவலாம்.அதைவிட கருத்தியல் சுதந்திரத்தோடு எழுதப்பட்ட தி.பெ.கமலநாதனின் முந்தைய பிரதியும் இருக்கிறது.அதை எதிர்கொள்வதே நேர்மையாக இருக்கும்.

மின்னஞ்சல்: stalinrajangam@gmail.com

உள்ளடக்கம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard