இந்து மதத்தில் இயேசுவைக் காணப்புறப்பட்டிருக்கும் சிலரைப் பற்றி இந்தப் பத்திரிகையில் நாம் இதற்கு முன்பு எழுதியிருக்கிறோம் (4/2, 98; 6/3-4, 2000). தமிழகத்தைச் சேர்ந்த புலவர் தெய்வநாயகம், சாது செல்லப்பா ஆகியோர் இந்து மத வேதங்களுக்கும், சடங்குகளுக்கும் கிறிஸ்தவ விளக்கம் அளித்து இந்து மதத்தவர்கள் தங்கள் மதத்திலிருந்தே சுவிசே ஷத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற தவறான போலிப்போதனையை அளித்து வருவதை “இந்து மதத்தில் இயேசுவா?” என்ற நூலிலும் விளக்கி எழுதியிருக் கிறேன். வேத அடிப்படையிலான திருச்சபைகள் பெருமளவுக்கு இல்லாத தமிழினத் தில் வேதத்தின் அதிகாரமும், போதுமான தன்மையும் அனேகருக்கு புலப்படாத நிலையில் ‘ஆலையில்லாத ஊரில் இலுப்பைப்பூ சக்கரை’ என்ற மொழிக்கிணங்க இத்தகைய போலிப்போதனைகள் கேட்பாரின்றி தலைவிரித்தாடுவது இயற்கையே.
சமீபத்தில் நான் தமிழகத்தில் கன்னியாகுமாரி மாவட்டத்திற்குப் போயிருந்த போது அங்கே ‘திருவள்ளுவர் திருச்சபை’ என்ற பெயரில் ஒரு திருச்சபை உருவாகியிருப்பதாக அறிந்தேன். இது புலவர் தெய்வநாயகத்தின் போதனையில் மயங்கி உருவாயிருக்கின்ற ஒரு போலிச்சபை. திருவள்ளுவர் தமிழினத்திற்கே சொந்தமான ஒரு புலவராகவும், சிறந்த கவிஞராகவும் இருந்தபோதும் இல்லாத தைச் சொல்லி அவரைக் கிறிஸ்தவத்தோடு தொடர்புபடு¢த்துவது கிறிஸ்துவுக்கே அடுக்காது. நெஞ்சில் ஈரமின்றி இன்று இதைச் சிலர் செய்து வருகிறார்கள்.
புலவர் தெய்வநாயகத்தின் போலித்தனமான விளக்கங்களுக்கு வக்காலத்து வாங்கி சென்னையைச் சேர்ந்த பொன் இலாசரசு என்பவர் “ரெட்டுளிப்” என்ற தனது சிறு பத்திரிகையில் எழுதிவந்துள்ளதை நாம் முன்பே இப்பத்திரிகையில் சுட்டிக் காட்டியுள்ளோம் (மலர் 7 இதழ் 3, 2001). கல்வின் ஆர்வலராக தம்மை இனங்காட்டிக்கொள்ளும் இவர் சீர்திருத்தக் கிறிஸ்தவத்திற்கும், கல்வினுக்கும் சம்பந்தமில்லாத இந்து மதத்தில் இயேசுவைக் காணும் முயற்சியில் இறங்கியிருப்பது அதிசயமே. இவர் பாப்திஸ்து சபையைச் சேர்ந்தவராக இருப்பது இன்னுமொரு அதிசயம். தொடர்ந்தும் இந்து மதப்போதனைகளுக்கு கிறிஸ்தவ விளக்கம் கொடுத்துவரும் இவரை அச்சபைகள் பிரசங்கிக்கவும், போதிக்கவும் அனுமதித்து வருவது வருந்தத்தக்கது. வேத அதிகாரத்தைப் புறக்கணித்து, பாரம்பரியத்துக்கும், சம்பிரதாயங்களுக்கும் அடிமைப்பட்டு முகத்தாட்சிணியம் பார்த்து வரும் சபைகள் எந்தளவுக்கு சத்தியத்துக்குப் புறம்பாக நடப்பவர்கள் மீது சபை ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதைக்கூட தள்ளிவைத்துவிட்டு இயேசுவின் பெயரில் காலந் தள்ளிவிட முடியும் என்பதை இச்சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.
பொன் இலாசரசு சம்பத்தில் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு அதில் புலவர் தெய்வநாயகத்தின் போதனையை ஆதரித்தும், திருக்கார்த்திகைக்கு கிறிஸ்தவ விளக்கம் கொடுத்தும் எழுதியிருக்கிறார். ‘சீயோன் மலை” என்ற தலைப்பில் ஒரு பக்கத்திலும், “அண்ணாமலை” என்ற தலைப்பில் இன்னொரு பக்கத்திலும் இவரது விளக்கங்கள் காணப்படுகின்றன.
இதில் அண்ணாமலை என்ற தலைப்பின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்த பகுதியில் அருணாசலம் என்றழைக்கப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் நடத்தப்படும் பண்டிகைக்கு கிறிஸ்தவ விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, திருவண்ணாமலை என்பதற்கு “பரிசுத்த சூரிய மலை” என்பது பொரு ளாம். கடவுளைப் பேரொளியாகத் தரிசிப்பதே இப்பண்டிகையின் நோக்கமாம். இதற்காக பெருந்தீபத்தை மலையில் ஏற்றி கடவுளைக் கார்த்திகைத் தீபமாக வணங்குகிறார்களாம். அதுமட்டுமல்லாமல் இன்னொரு நாளில் வீடுகளுக்குப் பக்கத்தில் உள்ள குப்பைமேடுகளில் விளக்கேற்றி குப்பைக் கார்த்திகையையும் கொண்டாடுகிறார்களாம். இந்தக் குப்பைக் கார்த்திகையில் மறைஞான விளக்கத்தைப் பார்க்கிறார் அருட்கலைஞர். இவர் சொல்லுகிறார், ‘குப்பை’ என்று சற்று வித்தியாசமாகக் கூறினாலும் அநேகர் அகல் விளக்குகளை பொதுக் கழி வறைகளில் வரிசையாக வைப்பதுண்டு. இதென்ன? பரிசுத்த மலையின் ஒளி நாற்றத்தின் மேல் வருவதற்குப் பொருளென்ன?” என்று கேட்கும் பொன் இலாசரசு அதற்கு சைவசித்தாந்தத்தில் இருந்து ஒரு பாடலை உதாரணங்காட்டி பின்வருமாறு விளக்கந் தருகிறார். “சைவ சித்தாந்தம் பாவத்தை மும்மலமாக விளக்கும். ஆணவ மலம், கன்மமலம், மாயைமலம் என்னும் மும்மலங்களாக கூறுவதோடு ‘சகசமல மென்றும்’ தீர்க்கும். திராவிடர்கள் பாவத்தை நாற்றமான மலமாகத் தீர்¢த்தனர்” என்கிறார். அத்தோடு நிறுத்தாமல், “அவன் (ஆதாம்) அவள் (ஏவாள்) அது (உலகம்) எனப்படும் மனிதர்களும் மற்ற உயிர்களும் உலகமும் கடவுளால் படைக் கப்பட்ட நிலையிலிருந்து ஒடுங்கி பாவ மலத்துக்குள்ளே வீழ்ந்தது” என்கிற புலவர் தெய்வநாயகத்தின் விளக்கத்தையும் தம்முடைய திராவிட-கிறிஸ்தவ திரிபுபடுத் தலுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார். இலாசரசுவின் இந்தவிளக்கமெல்லாம் இப்படிப் போய் முடிகிறது – “பண்டிகையின் பொருள் பரிசுத்த மலையின் பேரொளி யானது மலமாகிய நாற்றத்தில், இருளில் கிடக்கின்ற மனுமக்கள் மேல் வந்து மலம் கழுவி, மீட்டெடுத்து இருளிலிருந்து விடுதலை செய்து அவர்களை தன்னைப் போல ஒளிரச் செய்கிறது.” இதற்கு அவர் தரும் ஆதார வேதவசனம், “அவர் தீபம் என் தலைமேல் பிரகாசித்தது.” யோபு 29:3. எப்படி இருக்கிறது கதை? மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் எப்படி முடிச்சுப் போடுகிறார் இலாசரசு பார்த்தீர்களா? யோபுவில் கூறப்படுகிற வசனத்துக்கும் அண்ணாமலை தீபத்துக்கும் இப்படி இல்லாததொரு தொடர்பை ஏற்படுத்துகிறார். இப்படி முடிச்சுப்போடுகிற வேலை நம்மினத்தில் சகஜம் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இந்த இருபத்தி யோராம் நூற்றாண்டில் இதையெல்லாம் அழகாகக் கேட்டு நம்புகிற கூட்டத்தை நம்மினத்தில்தான் பார்க்கலாம்.
இனி “சீயோன் மலை” என்ற தலைப்பில் அடுத்த பக்கத்தில் பொன் இலாசரசு எழுதியிருப்பதைப் பார்ப்போம். இங்கே ஒரு பெரிய உண்மையைக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறார் சென்னைக்காரர். அதாவது, “கிறிஸ்தவ அன்பர்கள் கடவுளின் உறைவிடமாகக் காணும் சீயோன் மலையின் பொருளும் ‘சூரிய மலை’ என்பதே” என்று அட்டகாசமாக எழுதியிருக்கிறார். சீயோன் மலைக்கு அவர் இப்படி ஒரு பொருளைக் காட்டுவதற்குக் காரணமென்ன? அதைக் கண்டுபிடிப்பதற்கு நமக்கு கல்லூரி டிகிரி தேவையில்லை. இந்து/திராவிடப் போதனைகளுக்கு கிறிஸ்தவ விளக்கம் கொடுப்பதற்கு அது அவசியமானதால்தான் இலாசரசு இப்படி ஒரு பொருளை முன்வைக்கிறார். சீயோன் மலைக்கு அப்படியொரு பொருள் இருக் கிறதா என்பதை பின்பு பார்ப்போம். இப்போது தொடர்ந்து சென்னைக்காரரின் மணலில் கயிறு திரிக்கும் பணியைப் பார்ப்போம். அவர் சொல்லுகிறார், “பரலோகில் உள்ள இந்த மலையாகிய பேரொளி மனிதர்களுக்கு ஒளியாக திகழ்கிறது. அவனாகிய ஆதாமும், அவளாகிய ஏவாளும், அதுவாகிய உலகமும் பாவத்தின் பலனாக ஒடுங்கி இருளின் நாற்றத்தில் வாழ்ந்தபோது சாவுக்குள் ளானது.” இதற்கு என்ன வேத ஆதாரம்? எடுத்து வீசுகிறார் வசனத்தை சென்னைக்காரர் – “அருவருப்பும், குப்பையுமானோம்.” புலம்பல் 3:45. ‘குப்பை’ என்ற வார்த்தை இங்கிருப்பதைக் கவனிக்கத் தவறாதீர்கள். குப்பைக் கார்த்திகைக்கு கிறிஸ்தவ விளக்கம் கொடுக்க சென்னைக்காரருக்கு இது உதவப் போகிறது. தொடர்ந்து அவர் சொல்லுகிறார், “ஒளியாகிய கடவுள் மனிதர்களை மீட்க சீயோன் மலை யாகிய பரலோகைவிட்டு பாவநாற்ற இருளுக்குள் குப்பையாக கிடக்கும் மனுமக்களை தேடி இறங்கி வந்து மலத்திற்குள் கிடந்த மனிதனை தூக்கி எடுத்து பாவம் கழுவி பரிசுத்தமாக்கினார். இதுவே குப்பைக் கார்த்திகையின் பொருள்”. ஒருவழியாக விஷயத்துக்கு வந்துவிட்டார் பொன் இலாசரசு. குப்பைக் கார்த்திகைக்கான விளக்கத்தைப் பார்த்தீர்களா? உண்மையில் இந்த விளக்கத்தைக் கேட்டு சங்கராச்சாரியாரே திகைத்துப் போய்விடுவார். (பாவம், அவருக்கு இப்போது கோர்டுக்கும் மடத்துக்கும் அலையவே நேரம் சரியாக இருக்கிறது.)
மனிதனின் கழிவுப் பொருளான மலத்தையும், அண்ணாமலையிலும் குப்பை மேட்டிலும் ஏற்றப்படும் கார்த்திகைத் தீபத்தையும், இந்துமத சிவஞான போதம் சொல்லுகிற மும்மலத் தத்துவத்தையும் இரசாயன கூடத்தில் குப்பியில் இரசாயனங் களைச் சேர்த்து விஞ்ஞானி உருவாக்கும் பொருளைப் போல ஒரு புது தத்துவமாக உருவாக்கி அதை வேதமாக்கி நம்மை நம்பச் சொல்லுகிறார் சிருஷ்டிகருக்கே சவால்விடும் பொன் இலாசரசு.
இனி சீயோன் மலைக்கு “சூரிய மலை” என்ற பொருளிருக்கிறதா என்பதை ஆராய்வோம். இதை வைத்தே இதுவரை கயிறு திரித்திருக்கிறார் இலாசரசு. வேதத்தில் உள்ள வார்த்தைகளுக்கு நாம் நினைத்தவிதத்தில் பொருள் கொடுக்க முடியாது. அந்த வார்த்தைகளுக்கு வேதம் தரும் அர்த்தமே முடிவானதாகும். அப்படிப் பார்க்கிறபோது “சீயோன்” என்ற இடத்துக்கு “கோட்டை” என்றதொரு (tsiyon – Citadel) பொருள் இருப்பதைப் பார்க்கிறோம். அது முதன் முதலாக 2 சாமுவேல் 5:6-9ல் எபூசியரின் கோட்டையைக் குறித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது (Pictorial Bible Dictonary). “சீயோன்” என்ற வார்த்தைக்கு “காய்ந்த நிலம்” என்பது எழுத்துபூர்வமான அர்த்தமாகும் (Bible Works). அத்தோடு, முழு எருசலேமைக் குறித்தும், உருவகமாக பரலோகத்தைக் குறித்தும் இது பயன்படுத்தப் படுகிறது. இவற்றைத் தவிர வேறு எந்த அர்த்தத்திலும் “சீயோன்” என்ற வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்படவில்லை. சீயோனுக்கு “சூரிய மலை” என்ற பெயரிருப்பதாக சொல்லுவது வெறும் கட்டுக் கதையே தவிர வேறில்லை. இப்படிக் கேட்பார் யாருமில்லை என்ற தைரியத்தில் விளக்கம் கொடுப்பவர்கள் நம்மினத்தில் இன்று நேற்றென்றிராமல் இருந்து வருகிறார்கள். அண்ணாமலைக்கும், சீயோனுக்கும் எந்தத் தொடர்புமில்லை. இந்துப் பண்டிகையான கார்த்திகைத் தீபம், அது குப்பையில் இருந்தாலும் சரி. கழிவறையில் இருந்தாலும் சரி கிறிஸ்தவத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாதது.
வாய்வழிச் சொல்லப்பட்டு வரும் கதைகளுக்கும், கர்ணபரம்பரைக் கதைகளுக்கும் காதும் மூக்கும் வைத்து அவற்றை வரலாறாக மாற்றி நாட்டுமக்கள் நம்பி வருவது நம் நாட்டில் ஒன்றும் புதிதல்ல. வெறும் குறுநில மன்னனாக இருந்த இராமனை கிருஷ்ணாவதாரங்களில் ஒன்றாக்கி அவனுக்கு இராமாயணத்தையும் படைத்து அதை நம்பி வரும் மக்கள் வாழும் தேசம் நம்முடையது. நாளைக்கு எம். ஜி. யாரும், குஷ்புவும் கூட இந்நாட்டில் குட்டித் தெய்வங்களாக, அவர்கள் மனிதர்கள் என்பதையே மறந்து மக்கள் வழிபடப்போவது நிதர்சனமான உண்மை. அந்தளவுக்கு மூட நம்பிக்கையும், குருட்டுத்தனமாக எதையும் பின்பற்றும் போக்கும் இந்நாட்டில் இருந்து வருகிறது. இந்தளவுக்கு வெறும் கற்பனைக் கதைகளை வைத்து மட்டுமே உருவாக்கப்பட்டு, கண்மூடித்தனமாக மக்களால் பின்பற்றப்பட்டு வரும் இந்து மதத்திற்கும், அதைப்பற்றி விளக்கும் நூல்களுக்கும், சமயப் பாடல் களுக்கும் கர்த்தர் தந்துள்ள வெளிப்பாடான சத்திய வேதத்தின் அடிப்படையில் விளக்கம் கொடுப்பவர்களின் ஆத்துமா மிகவும் ஆபத்தில் இருக்கிறது என்று மட்டுமே சொல்ல முடியும்.
வேதம் மனிதனிடம் இருந்து புறப்படாமல் பரிசுத்த ஆவியின் மூலமாக கர்த்தரால் அருளப்பட்டது. அது கர்த்தரின் சித்தத்தை நமக்குத் தெரிவிக்கிறது. அதில் மட்டுமே நாம் பரலோகத்தை அடைவதற்கு அவசியமான சுவிசேஷச் செய்தியையும், பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு அவசியமான போதனைகளையும் பார்க்கலாம். அதற்கு வெளியில் இருந்து இன்று வெளிப்படுத்தலை பெற்றுக்கொள்ள முடியாது. வேதத்தைப் பயன்படுத்தி இந்து மதத்திற்கு கிறிஸ்தவ விளக்கம் கொடுப்பது விபச்சார ஊழியமாகும். பவுல் சொல்லுகிறார், “அநேகரைப் போல நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்ட பிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.” இங்கே ‘கலப்பாய்” என்று இருக்கின்ற வார்த்தைக்கு மூலத்தில் வார்த்தையை வைத்து வியாபாரம் செய்வது, விபச்சாரம் செய்வது என்ற பொருள் இருக்கிறது. விசுவாசி களும், ஊழியக்காரர்களும் அதை ஒருபோதும் செய்யக்கூடாது.
மேலும் கொலோசெயர் 2:8ல் பவுல் கூறுவதைக் கவனியுங்கள். “லௌகீக ஞானத்தினாலும், மாயமான தந்திரங்களினாலும் ஒருவனும் உங்களைக் கொள்ளை கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.” 1 தீமோத்தேயு 6:3-5 வரையுள்ள வசனங்களில் பின்வருமாறிருக்கிறது, “ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல் வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால் அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும், வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவர்களாலே . .மாறு பாடான தர்க்கங்களும் பிறக்கும். இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகு.” பவுல் தீத்துவுக்கு தந்துள்ள உபதேசத்தைப் பாருங்கள், “அநேகர், . . . மனதை மயக்கு கிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய வாயை அடக்க வேண்டும்; அவர் கள் இழிவான ஆதாயத்துக்காக தகாதவைகளை உபதேசித்து முழுக்குடும்பங் களையும் கவிழ்த்துப் போடுகிறார்கள். . . . கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல் விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய் கடிந்து கொள்.” (தீத்து 1:10-14).
பவுல் அப்போஸ்தலனின் மேற்கூறிய வார்த்தைகள் வேதத்தோடு நாம் எந்த விதத்திலும் விளையாடக்கூடாது என்பதையும் அதை விலைமாதைப்போல நாம் பயன்படுத்தக்கூடாதென்பதையும் தெளிவாக விளக்குகிறது. அதுமட்டுமல்லாமல் வேதத்தோடு விளையாடுகிறவர்களையும், அதைக் கலப்படப்பொருளாக்கி விற்பனை செய்கிறவர்களையும் கடிந்து கொள்வதோடு, அவர்களைவிட்டு விலகியோட வேண் டும் என்றும் பவுல் அழுத்திச் சொல்கிறார். போலிப் போதனைகளினால் ஆத்துமாக் கள் சீரழிந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில், ஒரு மெய்ப் போதகருக்குரிய ஆழ்ந்த அக்கறையோடு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியிருக்கிறார்.
போலிப்போதனைகளை ஆராய்ந்து கண்டுபிடிக்கும் பக்குவமில்லாமல் அவற்றிற்கு இடம்கொடுத்துவரும் சபைகள் ஆத்துமரீதியில் வளர்ச்சியடைந்த சபைகளாக இருக்க முடியாது. கர்த்தரின் வேதத்திற்கு பயந்து நடக்கும் சபைகள் போலிப் போதகர்களையும் போலித்தீர்க்கதரிசிகளையும் உள்ளே விடமாட்டார்கள். அத்தகையோர் சபைக்குள்ளிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடைய போதனைகள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டு, அவர்கள் பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டு சபைக்கு அடிபணிந்து நடக்காவிட்டால் அவர்களை சபையில் இருந்து விலக்குவது உத்தமமான திருச்சபைகள் செய்கின்ற காரியம். அத்தகையோர் சபைகளில் எந்தப் பொறுப்பும் வகிக்கக் கூடாது. அது ஆத்துமாக்களையும், சபையையும் அழித்துவிடும். அப்போஸ்தலனான பேதுரு தவறு செய்தபோது பவுல் அதைத் திருத்தியதற்கு கராணம் சத்தியம் மாசுபடக்கூடாதென்பதற்காகத்தான். இன்று மனித பயம் அதிகரித்து அநேக திருச்சபைகளில் சபை ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. முகத்தாட்சிணியம் பார்த்து, உலகத்தோடு நட்புக் கொண்டாடி கர்த்தருடைய வார்த்தையை உதாசீனம் செய்வது நம்மினத்து சபைகளில் வெகு சாதாரண மாக நடந்து வருகின்ற நிகழ்ச்சி. நம்நாட்டில் இப்படியெல்லாம் சபை நடத்த முடியாது என்று சொல்லுகிற வரட்டுக்கவுரவம் பார்க்கிறவர்களும் நம் மத்தியில் அதிகம். எந்தளவுக்கு வேதத்தை நாம் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதெல்லாம் சாட்சியம்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் முதல் மூன்று அதிகாரங்களிலும் காணப்படும் ஏழு சபைகளுக்கு செய்தி அனுப்பிய கிறிஸ்து அந்தச் சபைகள் தங்களுக்கு மத்தியில் காணப்படும் குறைகளை வேதத்தின் போதனைகளின் அடிப்படையில் நிவர்த்தி செய்யாவிட்டால் தானே வந்து அவர்களைத் திருத்துவேன் என்றும், நீ மனந்திரும்பு, ஜாக்கிரதையாயிரு என்றும் சொல்லியிருப்பதை வாசித்துப் பாருங்கள். மனந்திரும் பாத சபைகளின் சாட்சியத்தையே இல்லாமல் செய்து விடுவேன் என்றும் இராஜாதி இராஜன் எச்சரித்திருப்பதைக் கவனிப்பது அவசியம். ஒரு துளி விஷம் ஒரு பானை சோற்றை நஞ்சாக்கி விடும் என்பது தெரியாமலிருப்பவர்கள் இருக்க முடியாது. ஒரு துளி அசத்தியம் முழுச்சபையையும் நிர்மூலமாக்கிவிடும் என்பதை உணராமலி ருப்பவர்கள் விசுவாசிகளாக இருக்க முடியாது. நமக்கு வேண்டியது இன்று வேதத்தை மட்டும் பிரசங்கிக்கும் உத்தமப் பிரசங்கிகள், வேதப்புரட்டர்களல்ல.