New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை


Guru

Status: Offline
Posts: 24625
Date:
நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை
Permalink  
 


நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை - பகுதி 1

பிரகஸ்பதி

 

 

 

தென்னிந்தியாவைப் பற்றிய சமூக ஆய்வுகளில் சுவாரசியமான சில விவாதப் பொருட்களில், தமிழகத்தின் வருணப் பாகுபாடு குறித்த விவாதமும் முக்கியமான ஒன்றாகும். தற்காலத் தமிழ்ச் சமூகத்தில் பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று இரு பிரிவுகளே காணக்கிடைக்கின்றன. வட இந்தியாவில் இன்று வரை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வருணங்கள் சமூகத்தில் உள்ளன. இன்றைய தமிழகத்திலோ, பிராமணர் அல்லாத எல்லோரையும் சூத்திரர் எனக் கருதுவதால் இங்கு பிராமணர், சூத்திரர் என இரண்டு வருணப் பாகுபாடே உள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. வட இந்திய வராலாற்றாசிரியரான திருமதி சுவீரா ஜெயாஸ்வால் எழுதிய Caste (சாதி) என்ற நூலில், தமிழகத்தின் இரு வருணக் கோட்பாட்டிற்கு ஆதரவாகப் புதிய விளக்கத்தையே அளித்துள்ளார்.

 

இது குறித்துச் சமூக ஆய்வாளர்களிடையே இருவேறு கருத்துக்கள், காணப்படுகின்றன. பண்டைக் காலந்தொட்டே தமிழ்ச் சமூகத்தில், வட இந்திய சமூகத்தில் காணப்படுவது போன்ற நான்கு வருண பாகுபாடு வழக்கில் இல்லை என்று ஒரு சாரர் கருதுகின்றனர். இவர்களை இருவருணக் கோட்பாட்டாளர்கள் என நாம் அழைக்கலாம். இவர்களின் கருத்துப்படி நான்கு வருணக் கோட்பாடென்பது தமிழ்ச் சமூகத்திற்கு உரியது அல்ல. இது ஆரியப் பார்ப்பனரான தொல்காப்பியனால் வட இந்திய நடைமுறையைப் பின்பற்றி தமிழ்சமூகத்தின் மீது ஏற்றிக் கூறப்பட்டுள்ளது, அல்லது தொல்காப்பியம் மரபியலில் கூறப்பட்டுள்ள செய்திகள் இடைச்செருகல்களாகும். தமிழகத்தில் பல ஆய்வாளர்களும் இதே கருத்தையே கொண்டுள்ளனர். இவர்களின் கூற்றைப் பார்க்கும் பொழுது நான்கு வருணம் பற்றி தொல்காப்பியத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது போலவும், பிற இலக்கியங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றில் இப்படியான குறிப்புகள் எதுவும் இல்லை என்றும் எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் காலந்தோறும் உள்ள இலக்கியங்கள், நிகண்டுகள், மற்றும் கல்வெட்டுகளிலும் நான்கு வருண முறை பற்றிய குறிப்புகள் தெளிவாகவே உள்ளன. எனினும் இரு வருணக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே தமிழ்ச் சமூகத்தை மதிப்பிடும் முறையே இன்று நிலவி வருகின்றது. தமிழ்ச்சமூக வரலாறு குறித்த புதிய தகவல்கள் மற்றும் புதிய விளங்கங்களின் அடிப்படையில் இப்பிரச்சனையை ஆய்வு செய்யும் முகமாகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

 

கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் சுமதிபார்கவா என்பவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் மனுதர்ம சாஸ்திரம் கீழ் கண்டவாறு நான்கு வருணக் கடமைகளைப் பட்டியலிடுகின்றது.

 

அந்தணர் அறுதொழில்கள் : 1. வேதம் ஓதுதல், 2. வேதம் ஓதுவித்தல், 3. வேள்வி புரிதல், 4. வேள்வி செய்வித்தல், 5. ஈதல், 6. ஈதலை ஏற்றல்.

 

அரசனது தொழில்கள் : 1. பிரஜா பரிபாலனம் (குடிகாவல்), 2. ஈகை, 3. வேள்விகள் புரிவது, 4. வேதம் பாராயணம் செய்விப்பது, 5. விஷய சுகங்களில் மனத்தை அலையவிடாமல் உறுதியாக நிற்பது.

 

வைசியருக்கான தொழில்கள் : 1. ஆநிரைகாத்தல், 2. தானம் கொடுத்தல், 3. கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், 4. வட்டிக்கு விடுதல், 5. பயிர்த் தொழில் செய்தல்.

 

சூத்திரர்களுக்கான தொழில்கள் : ஏவலரான இவர்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும் ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார்.

 

மேலே கூறப்பட்ட நெறி முறைகள் தமிழ்ச் சமுதாய மரபுகளுக்குப் பொருந்துகின்றனவா எனக் கீழே ஆராயப்படுகின்றது.

 

கி.பி. 2 அல்லது 3-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும், தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வருணங்களுக்குரிய உரிமைகளையும், தொழில்களையும் கீழ்கண்டவாறு தெளிவாக இலக்கணப்படுத்தியுள்ளது.

 

அந்தணர்க்கு உரிய மரபுகள் :

நூலே, கரகம், முக்கோல், மனையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய.
 (மரபியல் : 71)

 

பொருள் : (நூல்) பூணூல், கமண்டலம், முக்கோல், இருக்கை மணை, ஆகிய நான்கும் ஆயும் காலத்து அந்தணர்க்கு உரியவை.

 

அரசர்க்கு உரிய மரபுகள் :

படையும், கொடியும், குடையும், முரசும்
நடைநவில்புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய.
 (மரபியல் : 71)

 

அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு
ஒன்றி வரூஉம் பொருளுமார் உளவே.
 (மரபியல் : 73)

 

பொருள் : அந்தணர்க்கு உரியன என்று முன்னே கூறப்பட்டவற்றுள் அரசர்க்கும் உரியனவாக ஒன்றிவரும் பொருளும் உண்டு.

 

அரசர்க்கு உரியன சில அந்தணர்க்கு இல்லை :

பரிசில், பாடாண் திணைத் துறைத் கிழமைப் பெயர்
நெடுந்தகை, செம்மல் என்று இவை பிறவும்
பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே
 (மரபியல் : 74)

 

வைசிகன் பெறுவன :

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை
மெய்தெரி வகையின் எண் வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பாலான.
 (மரபியல் : 78)

 

பொருள் : எண்வகை உணவாவன : நெல், காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதும்பை இவற்றை உண்டாக்குகின்ற உழவுத் தொழிலும் வைசியர்க்குரியதாகும்.

 

வேளாண் மாந்தர் இயல்பு :

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல் என மொழிப - பிறவகை நிகழ்ச்சி
 (மரபியல் : 81)

 

பொருள் : வேளாளருக்கு உழுது உண்ணும் வாழ்க்கை அல்லாது வேறு வகையான வாழ்க்கை இல்லை என்று கூறுவர் அறிஞர்.

 

வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்த்தனர் என்ப - அவர் பெரும் பொருளே
 (மரபியல் : 82)

 

பொருள் : வேந்தரால் ஏவப்பட்ட தொழிலால் படைக்கலம் கண்ணி (தலைமாலை) ஆகியவை வேளாளர்கள் பெறும் பொருள்கள்.

 

மேலே கூறப்பட்டுள்ள தொல்காப்பிய நூற்பாக்களால், சங்க காலத்தில் நான்கு வருணக் கோட்பாடு மனுநீதி அடிப்படையில் தெளிவாக வரையறுக்கப்பட்டு விட்டது என்பது நிரூபணமாகின்றது. சங்க இலக்கியங்கள் முழுவதிலும் எந்த இடத்திலும் மேலே கூறப்பட்ட இலக்கண முறைக்கு மாறான மரபுகளைக் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பாடிய ஒரு புறநானூற்றுப்பாடல் தமிழ்ச் சமுதாயத்தில் அன்று வழக்கிலிருந்த நான்கு வருண பாகுபாட்டைக் குறிப்பிடுகின்றது.

 

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழப்பாலொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே
 (மரபியல் : 183)

 

சங்க காலத்தைத் தொடர்ந்து களப்பிரர் காலத்தில் (கி.பி. 250 - கி.பி. 590) இயற்றப்பட்டதாகக் கருதப்படும் மணிமேகலையும் நான்கு வருணத்தைக் கூறுகின்றது.

 

அருந்தவர்க் காயினும் அரசர்க்காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி.
(மணிமேகலை : 6 சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை : 7)

 

கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரமும் நால்வகை வருணங்களைக் குறிப்பிடுகின்றது.

 

கனக பாதமுங் களங்கமும் வந்துவும்
நால்வகை வருணத்து நலங்கே மொழியவும்
 (சிலம்பு-14-180-82)

 

பால்வேறு தெரிந்த நால்வேறு தெரு (சிலம்பு-22-110)

 

பால்வேறு தெரிந்த நால்வேறு வீதி (சிலம்பு ஊர் காண்காதை-212)

 

இடம் கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப
 (சிலம்பு கடலாடு காதை. 6-8-164-165)

 

புறப்பொருள் வெண்பா மாலை வேளாண் வாகைப் பற்றிக் கூறுவதாவது :

 

மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழியழுகின்று
 (வாகைத்திணை -10-165)

 

இங்கு மேல் மூவரும், வேளாளரும் சேர்த்து நான்கு வருணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் வேளாளராகிய சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரியபுராணம் பல இடங்களில் வேளாளரை நாலாவது குலம் எனக் குறிப்பிடுகின்றது.

 

குறியின் நான்கு குலத்தினராயினும்
நெறியின் அக்குலம் நீங்கினராயினும்
 (குலச்சிறையார்.4)

 

நாலாங் குலத்திற் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திருஞாயிற்றுக் கிழார்.
 (29. ஏயர்கோன் - கலிக்காமநாயனார்)

 

வேத நெறியின் முறை பிறழாமிக்க ஒழுக்கத் தலைநின்ற
சாதி நான்கு நிலை தழைக்குந் தன்மைத் தாகித்தடமதில் சூழ்
 (37. சுழற்றியார்.4)

 

ஓங்கிய நாற்குலத் தொஏவாப் புணர்வில் தம்மில்
உயர்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாங்குழுமிப் பிறந்த குலபேதம் எல்லாம்
 (19. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார். செ.103)

 

கி.பி. 9-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகரம் நிகண்டு, நான்கு வருணத்தாருக்குரிய பெயர்களையும், அவர்களுடைய தொழில்களையும் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

 

பார்ப்பார் பெயர் :

 

அய்யர், வேதியர், இருபிறப்பாளர்,
மெய்யர், மிக்கவர், இறையோர், பூசரர்,
அந்தணர், நூலோர், அறுதொழிலாளர்,
செந்தீ வளர்ப்போர், உயர்ந்தோர், ஆய்ந்தோர்,
ஆதி வருணர், வேத பாரகர்,
வேள்வியாளர், விப்பிரர், தொழுகுலத்தோர்
முப்புரி நூலோர், முனிவர், என்று இவை
தப்பு இல் பார்ப்பார் தம் பெயர் ஆகும்.
 (திவா : 167)

 

அந்தணர் அறு தொழில் :

 

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,
ஈதல், ஏற்றல் என்று இவை ஆறும்
ஆதி காலத்து அந்தணர் அறு தொழில்.
 (திவா : 2365)

 

அரசர் பெயர் :

 

புரவலன், கொற்றவன், பெருமாள், காவலன்,
அரசன், ஏந்தல், கோவே, குரிசில்,
தலைவன், மன்னவன், வேந்தன், முதல்வன்,
நிருபன், பூபாலன், நரபதி, பார்த்திபன்,
இறைவன், அண்ணல், எனப்பதி னெட்டும்
அரசர் தொல் பெயர் ஆகும் என்ப.
 (திவா : 178)

 

அரசர் அறு தொழில் :

 

அரசர் அறுவகைச் செய்தொழில் ஓதல்,
விசையம், வேட்டல், ஈதல், பார்புரத்தல்,
(கரை இல்) படைக்கலம் கற்றல் ஆகும்
(திவா : 2366)

 

செட்டிகள் பெயர் :

 

இப்பர், பரதர், வயிச்சியர், கவிப்பர்,
எட்டியர், இளங்கோக்கள், ஏர்த்தொழிலர், பசுக்காவலர், (ஒப்பு இல்) நாய்க்கர்,
வினைஞர், வணிகர் என்று (அத்தகு) சிலேட்டர்,
செட்டிகள் பெயரே.

 

வணிகர் அறு தொழில் :

 

வணிகர் அறுதொழில் ஓதல், வேட்டல்,
ஈதல், உழவு, பசுக்காவல், வணிகம்
 (திவா : 2367)

 

வேளாளர் பெயர் :

 

வினைஞர், சூத்திரர், பின்னவர், சதுர்த்தர்,
வளமையர், வேளாளர், மண்மகள் புதல்வர்,
வார்த்தைத் தொழிலோர், (வண்) களமர், உழவர்,
(சீர்த்த) ஏரின் வாழ்நர், காராளர்.

 

வேளாளர் அறுதொழில் :

 

வேளாளர் அறு தொழில் உழவு, பசுக்காவல்,
(தெள்ளிதின்) வாணிகம், குயிலுவம், காருகவினை, (ஒள்ளிய)
இருபிறப்பாளர்க்கு ஏவல் செயல்.

 

திவாகரத்தில் கூறப்பட்டுள்ள நான்கு வருணத்தாருக்குரிய தொழில்கள் மனுநீதியிலிருந்து சிறிது மாறுபடுகின்றது. வைசியருக்குரிய பசுக்காவல், வாணிகம் முதலியன வேளாளருக்கும் கூறப்பட்டுள்ளது. களப்பிரர் காலச்சமூக மாற்றத்திற்குப் பின் வேளாளரில் ஒரு பிரிவினர் இத்தொழிலுக்குரியோராகியுள்ளனர்.

 

கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கலத்தை என்னும் பிங்கல நிகண்டில் காணப்படும் நான்கு வருணத்தாரைப் பற்றிய குறிப்புகளைக் கீழே பார்ப்போம்.

 

பார்ப்பார் :

 

அறவோர் பூசுர ரறு தொழி லாள
ரிருபிறப் பாள ரெரிவளர்ப் போரே
யாதி வருணர் வேதிய ரந்தணர்
வேள்வியாளர் மறையவர் விப்பிரர்
மேற்குலத் தோர்முற் குலத்தோ ரையர்
வேத பாரகர் முப்புரி நூலோர்
தொழுகுலர் பார்ப்பார் தொல் பெய ராகும்.
 (பிங் : 726)

 

அறவோர், பூசுரர், அறுதொழிலாளர், இருபிறப்பாளர், எரிவளர்ப்போர், ஆதிவருணர், வேதியர், அந்தணர், வேள்வியாளர், மறையவர், விப்பிரர், மேற்குலத்தோர், முற்குலத்தோர், ஐயர், வேதபாரகர், முப்புரிநூலோர், தொழுகுலர்.

 

அந்தணர் அறுதொழில் :

 

ஓத லோதுவித்தல் வேட்டல் வேட்பித்த
லீத லேற்ற லென்றிவை யாறு
மாதிக் காலத் தந்தணர் தொழிலே.
 (பிங் : 729)

 

அந்தணர் மாலை : கமலம்
அந்தணர் கொடி : வேதம்

மாலை கமல மறை கொடியாகும் (பிங் : 730)

 

அந்தணர்க்குரிய பொருள் :

 

தருப்பை, முஞ்சிப்
புல், சமித்து தருப்பையு முஞ்சியுஞ் சமித்து
மவர்க்கே
 (பிங் : 731)

 

அரசர் :

 

பார்த்தி பரிறைவர் காவலர் பதிகள்
கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர்
பொருநர் மன்னர் பூபாலர் நிருபர்
முதல்வ ரேந்தல் குரிசின் மகிபாலர்
தலைவ ரரசர் தம்பெய ராகும்.
 (பிங் : 733)

 

(பார்த்திபர், இறைவர், காவலர், பதிகள், கோக்கள், வேந்தர், கொற்றவர், புரவலர், பொருநர், மன்னர், பூபாலர், நிருபர், முதல்வர், ஏந்தல், குரிசில், மகிபாலர், தலைவர்.)

 

எண்வகை மாலை :

 

வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி யுழிஞை தும்பை வாகை யென்
றித்தொடை யெட்டு மரசர்க்காமே.
 (பிங் : 734)

 

(வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை.)

 

அரசர்கள் படை : அறுவகைத் தானை
அரசர்கள் கொடி : சிங்கம்

 

படையறு வகைத்தானை கொடி சிங்கமாகும் (பிங் : 735)

 

அரசர் அறு தொழில் :

 

ஓதல், பொருதல், உலகுபுரத்தல், ஈதல்,
வேட்டல், படை பயிறல்.
ஓதல் பொருத லுலகு புரத்தல்
ஈதல் வேட்டல் படை பயிற லறு தொழில்.
 (பிங் : 767)

 

வைசியர் பெயர் :

 

தாளாளரிப்பர் தருமக் கிழவர்
வேளா ரிளங் கோக்கள் வைசியர் பொதுப் பெயர்
 (பிங் : 773)

 

(தாளாளர், இப்பர், தருமக்கிழவர், வேளார், இளங்கோக்கள்)

 

வைசியர் முத்தொழில் :

 

கோக்களாக் காத்தலு மாப்பொரு ளீட்டலு
மேர்த் தொழின் மூன்று வைசியர் தந் தொழிலே.
 (பிங் : 774)

 

(கோக்களைக் காத்தல், பொருளீட்டல், ஏர்த்தொழில்)

 

தளவைசியர் :

 

நாய்கர், எட்டியர், வணிகர், பரதர்

 

நாய்க ரெட்டியர் வணிகர் பரதர்
தாமும் பிறவுந் தனவை சியர்க்கே
 ( பிங் : 776)

 

பூவைசியர் :

 

உழவர், மேழியர், காராளர், இளங்கோ, பூபாலர்

 

உழவர் மேழியர் காராள ரிளங்கோ
புகல் பூ பாலர்பூ வைசியர் பெயரே.
 (பிங் : 777)

 

பூவைசியர் அறு தொழில் :

 

ஓதல், வேட்டல், உபகாரம், வாணிகம், பசுக்காவல், உழவுத் தொழில்.

 

ஓதல் வேட்ட லுபகார மன்றியும்
வாணிகம் பசுக்காவ லுழவுத் தொழி லெனப்
புகன்றவை யாறும் பூவைசியர் தொழிலே.
 (பிங் : 778)

 

சூத்திரர் :

 

பின்னவர், சதுர்த்தர், பெருக்காளர், வளமையர், முத்தொழிலர், மண்மகள் புதல்வர், உழவர், ஏரின் வாழ்னர், காராளர், வினைஞர், மேழியர், வேளாளர்.

 

பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர், வளமையர்,
மன்னமுத் தொழிலர், மண்மகள் புதல்வர்,
உழவ, ரேரின் வாழ்னர், காராளர்,
வினைஞர், மேழியர், வேளாளரென்றிவை,
தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே.
 (பிங் : 780)

 

வேளாளர் பத்துவகைத் தொழில் : ஆணைவழிநிற்றல், மாண்வினை தொடங்கல், கைக்கடனாற்றல், குற்றமனத்தின்மை, சுற்றம் போற்றல், நீங்காத முயற்சி, மன்னிறை தருதல், ஒற்றுமை கோடல், ஒழுக்கம், விருந்து புறந்தருதல்.

 

ஆணைவழி நிற்றல் மாண்வினை தொடங்கல்
கைக்கட னாற்றல் கரிலகத் தின்மை
யக்கல் போற்ற லோவா முயற்சி.
மன்னிறை தருத லொற்றுமை கோட
றிருந்திய வொழுக்கம் விருந்து புறந் தருதல்
வேளாண் மாந்தர் செய்கை டூரைந் தே.

 

கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு, மனு நீதியிலிருந்து விலகிச் சென்ற திவாகரத்தின் வரையறைகளை ஒழுங்கு படுத்தியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் சூத்திரராகிய வேளாளரில் உயர்குடியினர் பூவைசியர் என்ற தகுதியை அடைந்துவிடுகின்றனர். பூவையருக்குரிய தொழிலில் ஓதலும், வேட்டலும் இடம் பெற்று விடுகின்றன.

 

இக்கால கட்டத்திலிருந்துதான் பிராமணரும் அரச வருணத்தினரும் வகித்து வந்த அமைச்சர் பதவி பெருவாரியாக உயர்குடி வேளாளருக்குக் கிடைத்து வந்தது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஏவையாரின் தனிப்பாடல் ஒன்று ஒருபடி மேலே சென்று வேளாளரே அமைச்சர் பதவிக்கு உகந்தவர் எனக் கூறுகின்றது.

 

நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெசைமராம்
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான்
அந்த அரசே யரசு.

 

இப்பாடலின் பொருள்,

 

நூலெனிலோ கோல் சாயும் - பார்ப்பனர் மந்திரி ஆனால் நெளிவு சுழிவு இல்லாத ஆலோசனை வழங்குவர். எனவே அங்கு அரசனின் செங்கோல் சாயும்.

 

நுந்தமரேல் வெசைமராம் - உன்னுடைய அரச வர்ணத்தான் மந்திரியானால் ஓயாத போரினைத் தூண்டுபவனாக இருப்பான். எனவே நாட்டின் பொருளாதாரம் சீர் கெட்டு, அமைதி கெடும்.

 

கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - துலாக்கோல் பிடிக்கக் கூடிய வணிகன் (வைசிய வருணத்தவன்) மந்திரியானால், குடிகளிடமிருந்து அதிகவரி பெற்றுக் கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பான். எனவே அங்குக் குடிசாயும்.

 

நாலாவான் மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான் அந்த அரசே யரசு - நாலாம் வருணத்தானாகிய வெள்ளாளன் நல்ல மந்திரியாகவும், எல்லா வழிக்கும் நல்ல துணையாகவும் இருப்பான். அப்படிப்பட்ட வெள்ளாளனை மந்திரியாகப் பெற்ற அரசே சிறந்த அரசு.

 

இத்தனை மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும் கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சினார்க் கினியரும் கி.பி. 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம் பூரணரும் தொல்காப்பியத்தின் கீழ்க்கண்ட பாடலுக்கு உரை எழுதும் பொழுது தெளிவாக நான்கு வருணப் பாகுபாட்டை ஏற்று எழுதுகின்றனர்.

 

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே
 (தொல் : பொருள் : கற்பியல் : 142)

 

நச்சினார்க்கினியர் உரை :

 

முற்காலத்து நான்கு வருணத்தாருக்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அ·து இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளருக்குத் தவிர்த்தது என்பதூஉம். தலைச் சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉம் கூறிய வாறாயிற்று ... ........ . ......

 

இளம்பூரணர் உரை :

 

மேற்குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தாருக்கும் புணர்த்த கரணம், கீழோ ராகிய வேளாண் மாந்தருக்கு ஆகிய காலமும் உண்டு என்றவாறு.

 

கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறுவதாவது:

 

நாற்பெரும் பண்ணும் சாதி நான்கும் பாற்படுதிறனும் பண்ணெனப்படுமே. இம்மரபுப்படி,

 

அந்தணருக்கு - வெண்பா
அரசருக்கு - ஆசிரியப்பா
வணிகருக்கு - கலிப்பா
வேளாளருக்கு - வஞ்சிப்பா
ஆகும்.

 

நச்சினார்க்கினியரும், இளம் பூரணரும், அடியார்க்கு நல்லாரும் நான்கு வருணப் பாகுபாட்டை இயல்பாகக் கூறுகின்றனர். எனவே தமிழ்ச் சமூகத்தில் 13, 14ம் நூற்றாண்டுகளிலும் நான்கு வருணப் பாகுபாடு தெளிவாக நிலவியது புலப்படுகின்றது.

 

இவ்வாறு நான்கு வருணத்தவர் யார் யார் என்றும் அவர்களுடைய இயல்புகள் பற்றியும் ஏராளமான இலக்கியக் குறிப்புகள் உள்ளன. தமிழ்ச் சமூகத்தில் இல்லை எனக் கருதப்படும் அரசர் மற்றும் வைஸ்ய வருணத்தாருக்கு உரியதாக இத்தனை விரிவான வரையறைகளை தமிழ் இலக்கண நூல்களும் நிகண்டுகளும் காலம்தோறும் கூறவேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

இதன் பின்னரும் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட நிகண்டுகளான உரிச் சொல் நிகண்டு (கி.பி. 14ம் நூற்றாண்டு), கயாதரம் (கி.பி. 15ம் நூற்றாண்டு), பாரதி தீபம் (கி.பி. 15ம் நூற்றாண்டு), சூடாமணி நிகண்டு (கி.பி. 16ம் நூற்றாண்டு), அகராதி நிகண்டு (கி.பி. 1594) ஆகியவைகளும் ஏறக்குறைய இதே மாதிரியான சமூகச் சித்திரத்தையே கொடுக்கின்றன.

 

கி.பி. 1700 ல் இயற்றப்பட்ட வட மலை நிகண்டிலும் (பல் பொருள் சூடாமணி), கி.பி. 1732ல் வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட சதுரகராதியிலும் நான்கு வருணச் சமூகச் சித்திரத்தில் பெரிய மாற்றம் தெரிகின்றது.

 

வடமலை நிகண்டின் சமூகச் சித்திரம் :

 

அந்தணர் : முனிவர், பார்ப்பார்
அரசன் : பிரகஸ்பதி, மன்னன்
வேளாளர் : தனவைசியர், தியாகி, பூவைசியர்.

 

சதுரகராதி காட்டும் சமூகச் சித்திரம் :

 

அந்தணர் : பார்ப்பார், முனிவர்
அரசன் : இராசா, எப்பொருட்கு மிறைவன், வியாழன்
வேளாளர் : ஈகையாளர், பூவைசியர்

 

இவ்விரு நிகண்டுகளிலும் வைசியருக்குப் பொருள் கூறப்படவில்லை. வடமலை நிகண்டில் பூவைசியருடன் சேர்த்து தனவைசியரும் வேளாளரில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது வைசிய வருணம், சூத்திரவருணமாகிய வேளாளரில் சேர்க்கப்பட்டு விட்டது.

 

அரசருக்குரிய பெயரில் மன்னன் என்ற பட்டம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. மேலும் அரசர்க்குரிய தொழில்களும் கூறப்படவில்லை. நிகண்டுகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள், அன்றைய கால கட்டத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைக் குறிப்பதாகவே உள்ளன. இக்கால கட்டத்தில் பழைய அரச சாதியினரில் பாண்டியர் மட்டுமே தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, கரிவலம் வந்தநல்லூர், வள்ளியூர் போன்ற இடங்களில் குறுநில மன்னர்கள் போல் ஆட்சி செய்து வந்தனர். மதுரையை ஆண்ட நாயக்கர்கள் தமிழ்நாட்டின் பெரும் பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்து ஆண்டு வந்தனர். மதுரை நாயக்கர்கள் விஜய நகர மன்னர்களின் அகம்படிகளாக இருந்தவர்கள். 72 பாளையக்காரர்களில் ஒருவர் கூடப் பழைய அரச சாதியைச் (வம்சங்களை) சேர்ந்தவர்கள் அல்ல. அதாவது, இக்காலக்கட்டத்தில் இருபிறப்பாளர் அல்லாத சாதியினரே தமிழகத்தின் மிகப் பெரும்பான்மையான நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். எனவேதான் இக்காலக்கட்டத்தைச் சேர்ந்த நிகண்டுகளால் அரசர்க்குரிய பழைய பட்டங்களையும், தொழில்களையும் கூற முடியவில்லை. மேலும் இந்நிகண்டுகளில் அரசர்க்குரிய தொழில்கள் வரையறுக்கப்படாததால், இவைகள் கூறும் அரசர் என்ற பதம் இரண்டாம் வருணத்தைக் குறிப்பதாகவும் கொள்ளமுடியவில்லை. இச்சூழலில்தான் பிராமணர் தவிர பிற வருணத்தவர் அனைவரையும் ஒரே வருணமாக, சூத்திர வருணமாகக் கருதும் நிலை உருவாகி விட்டது. வரலாற்றில் அன்று ஏற்பட்ட மயக்கம்தான் இன்றுவரை தொடர்கின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை
Permalink  
 


தமிழ் நாற்பாலும் வட இந்திய சதுர் வர்ணமும்
ப்ரவாஹன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இல்லை; பிராமணர், சூத்திரர் என்ற இரண்டுதான் என்றொரு பச்சைப் பொய் பல காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. தமிழகத்தின் எழுதப்பட்ட வரலாறு சங்க இலக்கியங்களுடன் தொடங்குகிறது. வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் (புறம் 183) என்பதில் தொடங்கி நாற்பால் குறித்துப் பதிவுகளற்ற தமிழ் இலக்கியங்கள் அரிதே.

சங்க இலக்கியங்களின் இறுதியாகச் சொல்லப்படும் தொல்காப்பியம் நாற்பால் குறித்து விரிவான பதிவைச் செய்துள்ளது. அதையடுத்த காப்பிய காலத்திற்குரிய சிலப்பதிகாரம் (6:164, 14:183, 212,), மணிமேகலை (5:97,6:56), சீவக சிந்தாமணி போன்றவையும் நாற்பால் குறித்துப் பதிவுசெய்துள்ளன. பிறகு வந்த புறப்பொருள் வெண்பாமாலை (8:10)யும் நாற்பால் குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளது. 9-10ஆம் நூற்றாண்டைய சேந்தன் திவாகரம் தொடங்கி நாற்பால் குறித்து விளக்கந் தராத நிகண்டுகளே இல்லை. இது பற்றி ‘தமிழகத்தில் நான்கு வர்ணம் ஒரு சிறப்புப் பார்வை' (காண்க: திண்ணை இணைய இதழ்) எனும் கட்டுரையில் ஆய்வாளர் பிரகஸ்பதி விரிவாக எழுதியுள்ளார்.

சம்ஸ்கிருத இலக்கியங்களைப் பொருத்தவரை, வேதங்களில், ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலமாக வருகின்ற புருஷ சூக்தத்தில் நான்கு வர்ணங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் அது இடைச் செருகல் என்பது அறிஞர்களின் கருத்து. அதையடுத்து வந்த பௌத்த நூல்களும், பின்னர் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் பலவும் நான்கு வர்ணம் பற்றி குறிப்பிடுகின்றன. கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குரிய கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் நான்கு வர்ணங்கள் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. இவற்றிலெல்லாம் நான்கு வர்ணம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மிகப் பரவலாக அறியப்பட்டிருப்பது மனு தர்ம சாஸ்திரமே. ஆனால், நடப்பிலுள்ள மனு தர்ம சாஸ்திரப் பிரதி கி.பி. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் முழுமையடைந்தது என்பது அறிஞர்கள் சிலரின் கருத்து. உண்மையில், கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குரிய அர்த்த சாஸ்திரம், தனது முதனூல்களாக மூன்று தர்ம சாஸ்திரங்களைக் குறிப்பிடுகிறது. அதில் மனு தர்மமும் ஒன்று. கெடுவாய்ப்பாக, அந்த மனு தர்மப் பிரதி எதுவும் கிடைக்காததனால் அதற்கும் நடப்பிலுள்ள பிற்காலப் பிரதிக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளை நாம் அறிய முடியவில்லை.

தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள்ள நாற்பால் குறித்த பகுதிகள் பிற்கால இடைச் செருகல் என்போர் உண்டு. அல்லது தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்திலேயே பார்ப்பன ஆதிக்கம் தொடங்கிவிட்டது; தொல்காப்பியரே ஒரு வட இந்தியப் பார்ப்பனர், அவர் தங்களின் வர்ணத்தை இதில் புகுத்திவிட்டார் என்று சொல்லுவோரும் உண்டு. அது இடைச் செருகல் அல்ல; ஆனால் இந்த நாற்பாலும் வடக்கத்திய நான்கு வர்ணமும் வேறுபட்டவை என்று சொல்வோரும் உண்டு.

தொல்காப்பியர் காலத்திலேயே வர்ணம் புகுத்தப்பட்டதாக வைத்துக் கொள்வோம்; சங்க காலத்தில்தான் தமிழர் வரலாறு தொடங்குகிறது. இந்த இடத்தில் தொல்லியல் சான்றுகளை இணைத்துப் பார்ப்பது அவசியம். தமிழ் வரலாறு என்று சொல்லப்படும் மூவேந்தர் வரலாறு, ‘பெருங்கற் கல்லறை / இரும்பு யுக எச்சங்கள்' என்ற தொல்லியல் எச்சங்களுடன் தொடர்புடையது. அப்படியானால், தமிழ் வரலாற்றின் தொடக்கம் முதலே நான்கு வர்ணங்கள் இருந்துள்ளன. மேலும் அதைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே எனில் அவர்களும் தமிழ் வரலாற்றின் தொடக்கத்தில் இருந்தே இருக்கின்றனர். எனவே, அவர்களை ‘புதிய வந்தேறிகளாக'ச் சொல்ல முடியாது. இதற்கு, “நீயே வடபால் முனிவன் தடவினுட் டோன்றி” (புறம் 201:8-12) என்ற இருங்கோவேளிரைப் பற்றிய புறநாநூற்றுப் பாடல் பிறிதோர் சான்று.

அடுத்து, நாற்பால் குறித்த விவரங்கள் ஓர் இடைச் செருகல் என்பது. அதை இடைச் செருகல் என்று சொல்வோர், சில அத்தியாயங்களும், சில பொருள் தொடர்பான விஷயங்களும் திடும் திடுமென முடிந்து முந்தைய விஷயம் தொடர்ச்சியாகப் பேசப்படுவதாகச் சொல்கின்றனர். இத்தகைய காரணங் கற்பிப்போர், தொல்காப்பியம் கூறுகின்ற நூல் எழுதும் உத்திகளையும், அத்தகைய உத்திகள் தொல்காப்பியத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதையும் சரியாக உணர்ந்திடவில்லை. உதாரணமாகச் செய்யுளியலில் கூறப்பட்டுள்ள 'மாட்டு' எனும் உத்தி,

“அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
இயன்று பொருள் முடிப்ப தந்தனர் உணர்தல்
மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்” என்பது.


இதன்படி பார்ப்போமேயானால், தொடர்ச்சியின்மை என்பது ஒரு பொருட்டே இல்லை; அவற்றை ஒருங்குகூட்டிப் பொருள்கொள்வது மரபே.

கி.பி. 12, 13, 14ஆம் நூற்றாண்டுகளில் தொல்காப்பியத்திற்கு உரையெழுதியோர் தம் மனப்போக்கில் உரையெழுதி, அதில் நான்கு வர்ணங்களைப் புகுத்தியதாகவும் ஒரு விமர்சனம் உண்டு. ஓர் இலக்கியத்திற்கு அது எழுதப்பட்ட சில பல நூறாண்டுகள் கழித்து உரை வகுக்கையில் சமகால சமூக நிலவரங்களின் தாக்கம் ஏற்பட்டுவிடுவது இயல்பே. அவ்வகையில், உரையாசிரியர்களின் காலத்தில் சமூகத்தில் நான்கு வர்ணங்கள் தெளிவாகவே இருந்தமைக்கு அரசர்களின் மெய்க் கீர்த்தியே (‘மனு நெறி தழைப்ப' அரசாண்டதாக சோழ அரசர்கள் பலரின் மெய்க்கீர்த்திகளில் சொல்லப்பட்டுள்ளது) நல்ல சான்று. இதற்கும் அப்பால், இவ்வுரையாசிரியர்களுக்கும் முன்னதாகவே முதல் தமிழ் நிகண்டு (சேந்தன் திவாகரம், 8-9 ஆம் நூற்றாண்டு) இயற்றப்பட்டது. அது மிகத் தெளிவாக நான்கு வர்ணங்களின் தொழில்களையும் பட்டியலிட்டுள்ளது. அதையடுத்துப் புறப்பொருள் வெண்பாமாலையும் மிகத் தெளிவாகவே நான்கு வர்ணங்களின் தொழில்களைப் பட்டியலிட்டுள்ளது. மேலும் தொல்காப்பிய உரையாசிரியர்கள், கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகள் அனைத்தும் சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன என்பது கவனத்திற்குரியது. இத்துடன், தொல்காப்பியம் குறிப்பிடும் உத்திகளில் சமூக நிலவரங்களில் இருந்து விஷயங்களை உணர்ந்து உரை வகுப்பதும் ஒன்று.

இதற்கு ஆதரவாக உள்ள தொல்காப்பியர் குறிப்பிடும் உத்தி, “வாராததனான் வந்தது உணர்தல்” என்பதாகும். ‘வந்தது கொண்டு வாராதது உணர்தல்' என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்; ஆனால், ‘வாராததில் இருந்து வந்ததை உணர்தல்' என்பது சற்றே கடினமானது. உண்மையில் இதன் பொருள், சமூக நிலவரங்களில் இருந்து அதை உய்த்துணர்தல் என்பதுதான்.

சங்க கால சமூகத்தில் ஐந்திணைகள் இருந்தமை சங்க இலக்கியங்கள் மற்றும் தொல்காப்பியத்தின் வாயிலாகத் தெரிகிறது. நான்கு திணைகளுக்குப் பெயரும் இலக்கணமும் வகுத்துச் சொல்லும் தொல்காப்பியம் நடுவண் திணையாகிய பாலைக்குரிய பொழுதைச் சொல்லியதே தவிர நிலத்தைக் குறிப்பிடவே இல்லை. எனினும் அடுத்து வந்த புலவர்கள், அதைத் தெளிவாகவே உணர்ந்து சொல்லியுள்ளனர். ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமயிற் திரிந்து நல்லியல்பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை என்பதோர் படிவங்கொள்ளும்' என்பது இளங்கோவடிகள் வகுக்கின்ற இலக்கணம். இது தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ள ஏனைய விவரங்களுக்குப் பொருந்தி உள்ளது. ‘வாராததனால் வந்தது உணர்தல்' என்ற உத்தியைப் பயன்படுத்தி இது தருவிக்கப்பட்டுள்ளது. இதே உத்தியைப் பயன்படுத்தி, எதார்த்த நிலவரங்களைக் கொண்டு நாற்பாலுக்கு உரையாசிரியர்கள் விளக்கம் எழுதியுள்ளனரேயன்றி அவர்கள் தம்மனப்போக்கில் செய்திடவில்லை. எனினும் நாம் முன்னரே குறிப்பிட்டதைப் போல அவர்களின் சமகால சமூக நிலவரங்கள், உரைகளில் தாக்கம் செலுத்தியிருப்பதையும் நாம் கணக்கில் கொள்வது அவசியம். எவ்வாறிருப்பினும், நாற்பாலும் நான்கு வர்ணமும் ஒப்பிடத்தக்கனவே. எனவே முதற்கண் அர்த்த சாஸ்திரம் கூறும் நான்கு வர்ணங்களின் இலக்கணங்களைப் பார்ப்போம்.

அர்த்த சாஸ்திரம் கூறும் வருண தருமங்களாவன:-

அந்தணர்க்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எனும் இவ்வாறுமாம்.

அரசர்க்கு ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், உயிர்களைக் காத்தல் என்னும் இவ்வைந்துமாம்.

வணிகர்க்கு ஓதல், வேட்டல், ஈதல், உழவு, பசுக்காவல், வாணிகம் இவ்வாறுமாம்.

சூத்திரர்க்கு இருபிறப்பாளர் மூவர்க்கும் பணிபுரிதல், உழவு, பசுக்காவல், வாணிகம், காருகன்மம் (நெசவுத் தொழில்), குசீலவகன்மம் (குயிலுவம் என்பது தமிழ் வழக்கு - ஆடல் பாடல் முதலியன: குசீலவர்கள் - கூத்தாடுவோர்) என்னும் இவையாம். (முதல் அதிகரணம், முதற் பிரகரணம், மூன்றாம் அத்தியாயம்)


தொல்காப்பியம் கூறுவன:

“அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்”
 (பொருளதிகாரம், புறத்திணையியல் 20)

“ஈண்டு உரையாளர் எல்லோரும் அந்தணர்க்குக் கூறிய அறுதொழில்களில் வேறுபட்டிலர். பதிற்றுப்பத்து என்னும் நூலில் “ஓதல், வேட்டல், அவை பிறர்ச்செய்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு புரிந்தொழுகும் அந்தணர் என்று கூறப்பட்டிருத்தலும் காண்க” என்கிறார் மு.கதிரேசச் செட்டியார் ( கௌடலீயம், அர்த்த சாஸ்திர உரை, அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு 1979). இதில் தமிழ் நூலார்க்கும் வட நூலார்க்கும் எவ்வித மாறுபாடுமில்லை என்பதுடன் நாம் முற்றிலும் உடன்படுகிறோம். எனினும், அந்தணர் வேறு பிராமணர் வேறு என்று சொல்வோரும் உண்டு. அத்தகையோர், ‘அந்தணர் என்ப அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்' என்ற குறளைச் சுட்டுவர். நாம் “மறப்பினும் ஓத்துக்கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” எனும் குறளைச் சுட்டினால், இவர்கள் அந்தணர் வேறு, பார்ப்பார் வேறு, பிராமணர் வேறு என்ற நிலையெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. சோணாட்டுப் பூஞ்சாற்றூர் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன், வேத வேள்விகள் இயற்றியது பற்றி புறநானூறு குறிப்பிடுகிறது. எனவே வேதவழியில் வந்தவர் அவர் என்பதுறுதி. இவர் குறித்து பார்ப்பார் என்ற குறிப்பு உள்ளது. பதிற்றுப்பத்து (24:6-8) சொல்லும் அந்தணர் அறுதொழில் குறித்த பாடலாலும், பரிபாடல் (11:78-79) குறிப்பிடும் விரிநூல் அந்தணர், புரிநூல் அந்தணர் என்ற குறிப்பாலும், பெரும்பாணாற்றுப்படை (315-16) ‘கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த வேள்வித் தூணத்து' என்பதில் அந்தணர் வேள்விகள் செய்துள்ளமை தெரிய வருவதாலும் பார்ப்பார், அந்தணர் என்பவை ஒத்த பொருள் கொண்ட சொற்களே என்று நாம் துணியலாம்.

அரசர் ஐந்தொழில் என்பதில் தொல்காப்பிய உரையாசிரியர்கள் இளம்பூரணர் ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்கல், குடியோம்பல் ஆகியனவற்றைக் குறிப்பிடுகிறார்; நச்சினார்க்கினியர் ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ்செய்தல் என்று குறிப்பிடுகிறார். இவ்விருவரது வகைப்பாட்டில் நச்சினார்க்கினியர் காத்தல், தண்டஞ்செய்தல் என்று ஒரே விஷயத்தின் இறு கூறுகளை தனித்தனித் தொழில்களாகப் பட்டியலிடுவது பொருத்தமுடையதல்ல. இவ்விரண்டுமே இளம்பூரணர் குறிப்பிடும் ‘குடியோம்பல்' என்பதுள் அடங்கும். எனவே இளம்பூரணர் சொல்வதே சரி என்று கொண்டால் அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுவதும் இளம்பூரணர் சொல்வதும் ஒன்றியிருக்கிறது. அர்த்த சாஸ்திரத்துக்கு விளக்கமெழுதிய கதிரேசச் செட்டியாரும் இதில் உடன்படுகிறார். எவ்வாறெனின், “இனி ‘ஐவகை மரபின் அரசர் பக்கம்' என்பதற்கு நச்சினார்க்கினியர் “ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ்செய்தல் என்னும் ஐவகை என்பர்”. இளம்பூரணர் “ஓதல், வேட்டல், ஈதல், படைவழங்கல், குடியோம்பல் என்னும் ஐவகை என்பர்”. இவற்றுள் இளம்பூரணர் கொள்கை இந்நூற் (அர்த்த சாஸ்திரம்) கருத்தோடு ஒத்திருத்தல் காண்க” என்கிறார்.

அடுத்ததாக வணிகர், வேளாளர் என்ற இவ்விரு பிரிவுகளின் ஆறு தொழில்கள் கூறப்பட்டுள்ளன. இதுபற்றி விளக்கங் கூறும் கதிரேசச் செட்டியார்: “இறு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்” என்பது வணிகரும் வேளாளரும் ஒத்த அறுவகைத் தொழில்களையுடையவர் என்பதைக் குறிக்கும். அங்ஙனமாகவும், நச்சினார்க்கினியர் “ஓதல், வேட்டல், ஈதல், உழவு, நிரையோம்பல், வாணிகம் என்னும் இவ்வறு தொழிலும் வணிகர்க்கு உரியன என்றும், வேதம் ஒழிந்தன ஓதலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் வழிபாடுமாகிய அறுவகைத் தொழிலும் வேளாண் மாந்தர்க்குரியன என்றும் வேறுபடுத்துக் கூறுவாராயினர். தொல்காப்பிய மூலத்தில் வேறுபாடு தோன்றா வகை கூறப்பட்டிருக்க இங்ஙனம் இவர் கூறியது வடநூல் நான்காம் வருணத்தவராகிய சூத்திரர்க்கு வகுத்த அறுதொழில்களையே தமிழ் நிலத்து வேளாளர்க்கும் உரியனவாகக் கருதினமையாம். தமிழ் நிலத்து வேளாளர் வடநூலிற் கூறப்பட்ட சூத்திரர் ஆகார் என்பது தமிழ் நூல்களிற் கண்ட முடிபாம். இதனை நன்குணர்ந்த பேராசிரியர் ஓதல், வேட்டல், ஈதல் இம்மூன்றும் நால்வகை வருணத்தார்க்கும் ஒத்த சிறப்பின எனவும், வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் உழவும் நிரைகாத்தலும் வாணிகமும் ஒத்த சிறப்பின எனவும் கூறி இம் மூன்றனுள் வாணிகம் வணிகர்க்குப் பெருவரவிற்றெனவும், உழவு வேளாண் மாந்தர்க்குப் பெருவரவிற்றெனவும் கூறி வேறுபாடும் காட்டினார் (தொல்-பொருள்-மரபி 8- ஆம் சூத்திரவுரை). இஃதே தமிழ் நிலத்தார்க்குப் பொருந்தியதாகும். இக்கௌடலீய நூலிற் கூறப்பட்ட சூத்திரர், ஏனைய மூவர்க்கும் பணிபுரிதல், குசீலவகன்மம் ஆகிய இவ்விழி தொழில்களையுடையோர் என்று கூறப்பட்டிருத்தலால் தமிழ்நிலத்து வேளாண் மாந்தரொடு இச்சூத்திரரை ஒத்தவராகக் கருதுதல் தவறுடைத்தென்பது விளக்கமாம்” என்கிறார் ( கௌடலீயம் (அ) பொருணூல் பக். 27-28 பணிதமணி மு. கதிரேச செட்டியார் விளக்கம்).

கதிரேசச் செட்டியார் மட்டும்தான் இவ்வாறு திரித்து விளக்கம் சொல்வதாக நினைக்க வேண்டாம். வேளாள அறிஞர்கள்/அவர்களைப் பின்பற்றுவோர் அனைவருமே ஏதோவொரு வகையில் இந்தத் திரித்தலைச் செய்திருக்கின்றனர். மறைமலையடிகளின் வழித்தோன்றலான புலியூர்க் கேசிகன், புறபொருள் வெண்பாமாலை, “மேல்மூவரும் மனம்புகல/வாய்மையான் வழியொழுகின்று” என்ற வேளாண் வாகை சூத்திரத்துக்கு உரையெழுதுகையில்,

“‘மேற்சொல்லிய அரசரும் பார்ப்பனரும் வணிகரும் ஆகிய மூன்று சாரரும் நெஞ்சத்தால் விரும்பும்படியாக, வாய்மையிலே வழிபட்டு நடந்துவருவது, வேளாண் வாகையாகும்' என்று எழுதிவிட்டு, ‘வேளாளரைப் பற்றிய, மூவர் ஏவல் கொள்ளலாகிய கருத்து ஏற்புடையதாகாமை தெளிவாம். அக்காலத்தைய சமூக நியதியும் இங்ஙனம் இருந்ததென்று கொள்வதற்கில்லை என்பதும் நினைக்க'” என்று எழுதுகிறார்.

அந்தணர் அறுதொழில் மற்றும் அரசர் ஐந்தொழில் குறித்து இளம்பூரணரைக் குறிப்பிட்ட கதிரேசச் செட்டியார், வணிகர், வேளாளர் தொடர்பாக, தனது திரித்தலுக்கு வாய்ப்பாக இளம்பூரணர் உரையைத் தவிர்த்துச் செல்வது கருதத்தக்கது. முதற்கண், “இறு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்” என்பதற்கு வணிகரும் வேளாளரும் ‘ஒத்த' அறுவகைத் தொழில்களையுடையவர்” என்கிறார். ‘ஒத்த' என்ற சொல்லை இவர் தன் விருப்பத்திலிருந்து சேர்த்திருக்கிறார்; மேலும், தொல்காப்பிய மூலத்தில் ‘வேறுபாடு தோன்றாவகை' கூறப்பட்டிருக்க என்கிறார். தொல்காப்பியத்தில் இருவருக்கும் அறுதொழில் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதேயன்றி அவை ஒத்த தொழில்கள் என்றோ, மாறுபட்டவை என்றோ ஒன்றையும் இந்த இடத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் மரபியற் சூத்திரம் (9:79), வணிகர்க்கு எண் வகை உணவை உண்டாக்குகின்ற தொழிலைக் கூறுகிற அதே நேரத்தில், வேளாண் மாந்தர்க்கு உழவைத் தவிர வேறு தொழில் இல்லை (9:81) என்கிறது. எனவே இவற்றைக் கூட்டிப் பொருள் கொள்வதே சரி. தற்காலத்திலும் பொதுவாக நாம், நிலவுடைமையாளரையும் பிறர் நிலத்தில் விவசாயக் கூலி வேலை செய்பவரையும் விவசாயி என்றே சொல்கிறோம். ஆனால் வணிகர் நிலம் வைத்திருந்த விவசாயி என்பதால்தான் ‘உணவை உண்டாக்குகின்ற' என்றும் வேளாளர் நிலம் அற்ற விவசாயி என்பதால்தான் ‘உழவு தவிர வேறு தொழிலில்லை' என்றும் சொல்கிறார். உண்மை இங்ஙனமிருக்க, கனகசபைப் பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோரின் சிந்தனைப் போக்கைப் பின்பற்றியுள்ள கதிரேசச் செட்டியர், ‘ஒத்த தொழில்' என்றும் ‘வேறுபாடு தோன்றாவகையில்' என்றும் கூறப்பட்டிருப்பதாகச் சொல்வதில் வியப்பில்லை. மேலும் அவர் சைவ மடத்தின் உபகாரத்தில் இருந்தவர் என்பதும் கருதத்தக்கது. எனவே, தம் விருப்பத்திற்குப் பொருள்படுத்தும் பொருட்டு கதிரேசச் செட்டியார் விடுத்துவிட்ட இளம்பூரணரின் விளக்கத்தைப் பார்ப்போம்.

இளம்பூரணரின் கொள்கைப் படி வணிகர்க்குரிய ஆறு பக்கமாவன: ஓதல், வேட்டல், ஈதல், உழல், வாணிகம், நிரையோம்பல் ஆகியன. இது அர்த்த சாஸ்திரம் குறிப்பிடும் வைசியர் பிரிவினரின் தொழில்களுடன் முற்றிலும் பொருந்துவதைக் காண்க.

இளம்பூரணர் குறிப்பிடும் வேளாண் மாந்தர்க்குரிய ஆறு பக்கமாவன: உழவு, உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, வேதம் ஒழிந்த கல்வி ஆகியன.

“இக்கௌடலீய நூலிற் கூறப்பட்ட சூத்திரர் ஏனைய மூவர்க்கும் பணிபுரிதல் குசீலவகன்மம் ஆகிய இவ்விழி தொழில்களையுடையோர் என்று கூறப்பட்டிருத்தலால் தமிழ் நிலத்து வேளாண் மாந்தரொடு இச்சூத்திரரை ஒத்தவராகக் கருதுதல் தவறு” என்கிறார் கதிரேசச் செட்டியார். ‘உழவொழிந்த தொழில்' என்று இளம்பூரணர் குறிப்பிடுவதில் காருகமும் குயிலுவமும் (குசீலவகன்மம்) உள்ளடங்கிவிடும். தவிரவும் இளம்பூரணர் சொல்லியிருக்கும் ‘வழிபாடு' என்பதுதான் “ஏனைய மூவர்க்கும் பணிபுரிதல்” என்பதாக அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வழிபாடு என்பதுதான் ‘மேல்மூவர்க்கும் ஏவல்' என்பதை புலியூர்க் கேசிகனும் தெளிவுபடுத்தி உரையெழுதியுள்ளார். இவ்வாறிருக்க ஏனைய மூவர்க்கும் பணிபுரிதல், குயிலுவம் ஆகியன தமிழ் மரபில் கூறப்படவில்லை என்று கதிரேசச் செட்டியார் தம் விருப்பத்திலிருந்தும், தமது சமகால சமூக நிலைமைகளிலிருந்தும் முடிவு செய்கிறார். தொல்காப்பிய உரையாசிரியர்களின் காலத்துக்கும் முற்பட்ட சேந்தன் திவாகரமும் இதர நிகண்டுகளும், புறப்பொருள் வெண்பாமாலையும் ‘மேல் மூவர்க்கும் ஏவல் செய்தல்' அல்லது ‘ஆணைவழி நிற்றல்' என்பதை வேளாளரின் கடமையாகக் குறிப்பிட்டுள்ளன. அவற்றை அடியொற்றியே உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர்.

“தமிழ் நிலத்து வேளாளர் வடநூலிற் கூறப்பட்ட சூத்திரர் ஆகார் என்பது தமிழ் நூல்களிற் கண்ட முடிபாம்” என்கிறார் கதிரேசச் செட்டியார். தமிழ் நூல்களிற் கண்ட முடிவாக எதைக் கொண்டு கூறுகிறார் என்பது தெரியவில்லை. சங்க இலக்கியங்களுள் ஒன்றான பரிபாடலில் (20:62-64), ‘தம் எருதுகளை உழுதற் றொழில் செய்யாமல் ஓடவிடும் முறைமைவேளாளர்க்கு இன்றாதலால்' என்று தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. தம் எருதை ஏரில் மட்டுமே பூட்டும் உரிமை பெற்றிருந்தவர்களே (பிறவற்றுக்குப் பயன்படுத்தும் உரிமையில்லை) வேளாளர்கள் என்று கருதும்போது அவர்கள் கடமையுள், மேலோர் மூவர்க்கும் பணி செய்தல் ஒன்றாக இருந்திருக்கும் என்ற கருத்தே வலுப்பெறுகிறதேயன்றி அத்தகைய இழிதொழில் தமிழ் மரபில் இல்லை என்பது தமிழ் நூற்களிற் கண்ட முடிபாக இல்லை. இதைத்தான் புறப்பொருள் வெண்பாமாலை (8:10) தெளிவுபடுத்தியுள்ளது. அடுத்து, குசீலவகன்மம் (குயிலுவம்) என்று அர்த்த சாஸ்திரம் சொல்லியிருப்பது வேளாளர்களின் தொழில்களில் ஒன்று. இன்றைக்கு வரையிலும் இசை வேளாளர் என்று ஒரு பிரிவிருப்பதே இதற்குச் சான்று. மேலும் அர்த்த சாஸ்திரமும் தமிழ் நிகண்டுகளும் குறிப்பிடுகின்ற காருகத் தொழிலில் கைக்கோளர்கள் இன்றைக்கு வரையிலும் ஈடுபட்டு வருவது ஒப்புநோக்கத்தக்கது.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்கு இலக்கணமாகக் கூறப்படும் ஐரோப்பியச் சமூகத்தில் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டோர் விவசாயத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை அனைவரும் அறிந்ததே. ஐரோப்பியச் சமூகத்திற்கும் முற்பட்ட தமிழ் மரபிலும் அதைப்போலவே இருந்துள்ளது.‘போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததை சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன' என்கிற பேரா. ஆ.சிவசுப்பிரமணியன். மேலும், ‘இன்றையத் தமிழகமும், கேரளத்தின் பெரும் பகுதியும் மூவேந்தர்களாலும், பல குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டது என்பதனை நினைவில் கொண்டால் பிறர்நாடு என்பது பெரும்பாலும் தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியினையே குறிக்கும் என்பதனை உணரலாம். எனவே போரில் தோற்ற தமிழ் மன்னர்களின் மனைவியரும் அந்நாட்டு மகளிரும் அடிமைகளாகப் பகைவர் நாட்டில் பணிபுரிந்துள்ளனர் என்பது தெளிவு' என்கிறார். (தமிழகத்தில் அடிமைமுறை, பக்.22-27) அத்தகையோரே தமிழ் மரபில் கொண்டி மகளிர் என்றும் புடைப் பெண்டிர் என்றும் கூறப்பட்டுள்ளனர். இவர்கள் உழுதொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதற்கு நாலடியார் (122:1-2) பாடல் சான்று பகர்கின்றது. இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிடுவது அவசியம். தொல்காப்பியர், வேளாண் மாந்தர்க்கு உழவே தொழில் என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர, உழுதுண்போர் எல்லாம் வேளாண் மாந்தர் என்று சொல்லியிருக்கவில்லை. ஏனெனில், வைசியப் பிரிவில் வருபவரும் உழுதொழிலில் ஈடுபடலாம் என்ற கருத்தை முன்வைத்தே அவர் இங்ஙனம் கூறியிருக்கிறார். இது வட இந்திய தர்ம சாஸ்திரங்கள் கூறுவதுடன் ஒப்பு நோக்கத்தக்கது. மேலும், ‘உழுதுண்போர் எல்லாம் வேளாண் மாந்தர்' என்று சொல்லி இருந்தால் வேளாண்மை என்ற சொல்லின் பொருள், ‘உழவு' என்று கொள்ளவேண்டி இருக்கும். ஆனால் தொல்காப்பியர் காலத்திலோ அல்லது அதையடுத்து வந்த காலங்களிலோ வேளாண்மை என்ற சொல்லுக்கு உழவு என்று பொருள் இல்லை. வேளாண்மை எனும் சொல், ‘உபகாரம் மற்றும் மெய்யுபசாரம்' என்ற பொருளிலேயே பயன்பட்டுள்ளது. எனவேதான் உழவை உயர்த்திச் சொல்லும் திருவள்ளுவரும் கூட உழவையும் வேளாண்மையையும் வேறுபடுத்தியே சொல்லி இருக்கிறார். அதாவது வேளாண்மை என்பதை ‘உபகாரம்' எனும் பொருளிலும் உழவு என்பதை ‘பயிர்த்தொழில்' எனும் பொருளிலும் பயன்படுத்தி இருக்கிறார்.

தொல்காப்பியம் கூறும் “அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரை இலபுறத் தென்மனார் புலவர்” என்ற இலக்கணப்படி வேளாண் மாந்தர்கள் அன்பின் ஐந்திணைக்குப் புறம்பான கைக்கிளை மற்றும் பெருந்திணைக்குரியவர்களாவர். மேலை உலகில் அடிமைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட குடும்பங்கள் இல்லை; அவர்களின் மண உறவு நெடுங்காலம் அங்கீகரிக்கப்படாமலேயே இருந்தது. தமிழ் மரபிலும் அவ்வாறே இருந்துள்ளது. இதைத்தான் கைக்கிளை மற்றும் பெருந்திணையாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அத்துடன் நேரடியாகவே “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” என்று வேளாண் மாந்தராகிய நான்காம் வர்ணத்தவருக்கு கரணம் அமைந்ததைச் சொல்வதையும் நாம் ஒப்பிட்டுக் காணலாம். பகை நாட்டிலிருந்து பிடித்துவரப்பட்ட மகளிரை வேளத்தில் ஏற்றுவது என்பதாக ஒரு மரபும் இருந்தமை பிற்கால சான்றுகளால் உறுதிப்படுகிறது. அவ்வாறான மகளிரை சீதன வெள்ளாட்டிகளாக கொடுத்தமை குறித்து ‘குரு பரம்பரை வைபவம்' எனும் வைணவ இலக்கியம் குறிப்பிடுகிறது. வெள்ளாட்டிகள் (வேளாளர்/வெள்ளாளரின் பெண் பால்) என்போர் வேலைக்காரிகளாக இருந்த மரபு மிகப் பிற்காலம் வரையிலும் இருந்துள்ளது. இத்தகையோரும் அவர்தம் வாரிசுகளும் குசீலவகன்மம் மற்றும் மேலோர் மூவரின் ஆணைவழி நிற்றல் என்ற கடமைகளை நிறைவேற்றும் நிலையிலேயே இருந்திருப்பர் என்பது வெளிப்படை.

இவை ஒருபுறமிருக்க, மனு தர்மம் கூறுகின்ற நால் வர்ணத்தவரின் தொழில்கள் மற்றும் கடமைகளை தொல்காப்பியம் கூறுவதுடன் ஒப்பிட்டுக் காண்போம்.

மனு தர்மம், முதல் அத்தியாயம் 88வது சுலோகம், “அந்தணாளர் வேதம் ஓதியும், ஓதுவித்தும், தியாக வேள்விகள் புரிந்தும், புரிவித்தும், செல்வராயின் பிறர்க்கு ஈந்தும், வறிஞராயின் செல்வரிடத்து ஏற்றும் வாழத்தக்கவர்” என்கிறது. இது இளம்பூரணர் சொல்கின்ற அறு தொழில்களுடனும், சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து குறிப்பிடுவதுடனும் முற்றிலும் ஒத்து இருக்கின்றது.

அரசருக்குரிய கடமைகளைச் சொல்லும் 89 ஆவது சுலோகம், பிரஜா பரிபாலனம், ஈகை, வேள்விகள் புரிவது, வேத பாராயணம் செய்விப்பது, விஷய சுகங்களில் மனதை அலைய விடாது உறுதியாக நிற்பது என்கிறது. இவற்றில் முதல் நான்கு இளம்பூரணர் சொல்லும் குடியோம்பல், ஈதல், வேட்டல், ஓதல் ஆகியன முறையே பொருந்தியுள்ளது. படை வழங்கல் குறித்து தனியே ஏதும் குறிப்பிடவில்லை. மாறாக, அரசனின் உறுதித் தன்மையை வலியுறுத்துகிறது. எனினும் அரச நீதி குறித்து சொல்லக்கூடிய 7வது அத்தியாயத்தில் இவையனைத்தும் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

வைசியருக்கான கடமைகளாக மனு தர்மம், முதல் அத்தியாயம், 90 ஆவது சுலோகம், ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், வணிகம், வட்டித் தொழில், பயிர்த் தொழில் ஆகியனவற்றைச் சொல்கிறது. இவை, இளம்பூரணர் சொல்கின்ற நிரையோம்பல், ஈதல், வாணிகம், உழல், ஆகியன பொருந்தி வருகின்ற அதே நேரத்தில் ஓதல், வேட்டல் ஆகிய இரண்டும் மூவர்ணத்தவருக்குமாக தொடக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. வட்டித் தொழில் என்பதை வாணிகம் என்பதுள் பொருத்திப் பார்ப்பதே சரி.

மேலும், சங்க இலக்கியங்களில் மேலோர் மூவர்க்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாளர் குறித்த குறிப்புகள் மிகக் குறைவே. இவ்வாறாக பல்வேறு தரவுகளை ஒப்புநோக்கையில் தமிழ் மரபில் கூறப்பட்டுள்ள நாற்பாலும் வட மரபில் சொல்லப்பட்டுள்ள நான்கு வர்ணமும் ஒன்றே என்ற முடிவுக்கு நாம் வரமுடிகிறது; எனினும் வட மரபுக்கும் தென் மரபுக்கும் இடையில் நடைமுறையில் முற்றிலும் வேறுபாடே இல்லை என்று நாம் கூறிடவில்லை. ஆனால், இவ்வேறுபாடுகளைக் கொண்டு மனுதர்மம் இங்கே புகுத்தப்பட்டதாகச் சொல்வது அபத்தமாக முடியும் என்பதுதான். மாறாக, இவ்விரு மரபுகளும் ஒரு பொது இடத்தில் இருந்து கிளைத்திருக்கக் கூடிய வாய்ப்புகளை நாம் முந்தைய கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தோம். எனவே, அத்தகைய வேறுபாடுகள் தோன்றியதன் வரலாற்றுப் பின்னணி ஆழ்ந்த ஆய்வுக்குரியது.

(நன்றி: மண்மொழி, நவம்பர்-டிசம்பர் 2008)

pravaahan@sishri.org


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.

E-mailPrintPDF

 

 

தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.
தொல்காப்பிய மரபியல், பெயர் மரபுகளையும், உயிர்ப் பாகுபாடுகளையும், நால்வகை வருண மரபுகளையும். இலக்கியப் படைப்பாக்க மரபுகளையும் எடுத்துரைக்கின்றது.

 மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
 மரபுவழிப் பட்ட சொல்லினான” (தொல்காப்பியம், மரபியல் 92)

என்பது மரபு பற்றிய வரையறையாகும். மரபு நிலை திரிதல் செய்யுள்களுக்கு அழகில்லை, மரபு வழிப்பட்ட சொற்களை மாறாமல் பின்பற்றுவது செவ்விலக்கியப்போக்கு என்று தொல்காப்பியர் மரபினை விளக்குகின்றார். மரபுகள் திரிந்தால் ஏற்படும் இழப்பினையும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். “மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்” ( தொல்காப்பியம், மரபியல். 93) என்ற இந்த நூற்பா மரபுநிலை திரிந்தால் ஏற்படும் பாதிப்பினை எடுத்துரைக்கின்றது. சொல்மரபுகள் மாறினாலும், பொருள் மரபுகள் மாறினாலும் அதனால் வேறுவேறான புலப்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிடும் என்பதைத் தொல்காப்பியர் இந்நூற்பா வழி எடுத்துரைத்துள்ளார். எனவே மண் சார்ந்த மரபுகள் அம்மண் சார்ந்த இலக்கியங்களில் மாறாமல் பின்பற்றப்படவேண்டும் எனத் தொல்காப்பியர் விரும்புவதாகக் கொள்ளலாம்.

சங்க இலக்கியங்களில் தொல்காப்பியம் சுட்டும் பிள்ளைப்பெயர்கள், ஆண்பாற் விலங்குப் பறவைப் பெயர்கள், பெண்பாற் விலங்குப் பறவைப் பெயர்கள் பெரிதும் எடுத்தாளப் பெற்றும் உள்ளன. பின்பற்றப்பெற்றும் உள்ளன. தொல்காப்பியர் காட்டும் நூல் இலக்கண மரபுகளும் பின்னால் வந்த இலக்கண ஆசிரியர்களால், இலக்கியப் படைப்பாளர்களால் பெரிதும் பின்பற்றப்பெற்றுள்ளன.

அவர் காட்டிய நால்வகை வருண மரபுகள், இலக்கிய அளவில் திறனாய்வு நிலையில் ஏற்பதும் மறுப்பதுமாக விளங்குகின்றன. ஆனால் சங்க இலக்கியத்தில் தொல்காப்பியர் காட்டிய நால்வகை வருணங்களும் அவற்றிற்குரிய அடையாளங்களுடன் இடம்பெற்றுள்ளன என்பது  வருணத்தை ஏற்பார் கருத்தாகும். சங்க இலக்கியங்களில் வருணப் பாகுபாடு அறவே இல்லை என்று மொழிவாரும் உண்டு, சங்க இலக்கியத்தில் பரிபாடல், புறநானூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்களில் இந்நால்வகை வருணமரபுகளைக் காணமுடிகின்றது. பத்துப்பாட்டு இலக்கியங்களிலும்  நால்வகை வருண மரபுகளைக் காணமுடிகின்றது. ஆனால் குநற்தொகை, நற்றிணை போன்ற இலக்கியங்களில் நால்வகை வருணப் பாகுபாட்டு முறை இல்லை என்றே முடியலாம். இதற்கான காரணம் ஆராயத்தக்கதாகும். நற்றிணையும் குறுந்ததொகையும் முற்கால இலக்கியங்களாக அமைந்திருக்கலாம். ஆரியர் கலப்பிற்கு முன்னதான இலக்கியங்கள் என்பதாக அவற்றைக் கொள்ளலாம். அல்லது அவை ஐந்திணை சார்ந்த இலக்கியங்கள் என்றும் கொள்ளலாம். அவை பெரிதும் இலக்கிய வழக்கு சார்ந்தவை என்றும் கொள்ளலாம். இவ்வகையில் இதற்கான காரணங்கள் ஆராயத்தக்கனவாகும்.

சங்க இலக்கியத்தின் பிற்பகுதி இலக்கியங்கள், பத்துப்பாட்டு இலக்கியங்கள் ஆகியன தோன்றிய காலங்களில் நால்வகை வருண முறை பின்பற்றப்பெற்றுள்ளது அவற்றைக் கற்கையில் தெளிவாகத் தெரிகின்றது. இக்கட்டுரை தொல்காப்பிய மரபியலின் ஒரு பகுதியாக விளங்கும் நால்வகை வருண மரபுகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவை சங்க இலக்கியங்களில் பின்பற்றப்பெற்றுள்ள முறைமையை எடுத்துரைப்பதாக உள்ளது.
நால்வகை வருணம்

 தொல்காப்பியத்தில் அகத்திணையியலில் நால்வகை வருணமுறை எடுத்துக்காட்டப்பெற்றுள்ளது. கற்புக் காலத்தில் ஓதல், தூது, பகை ஆகிய பிரிவுகளின் போது எத்தனை காலம் பிரியவேண்டும், யார் பிரியவேண்டும் என்ற வரையறை அங்கு வகுக்கப்பெற்றுள்ளது. இவ்வருணமுறைக் கற்பியலில் சற்றுத் தொட்டுக்காட்டப் பெற்று மரபியலில் தொல்காப்பியரால் முழுவதுமாக வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளது. மரபியலில் அந்தணர்,அரசர், வணிகர், வேளாளர் ஆகியோரின் இயல்புகள் வளர்ந்த நிலையில் எடுத்துக்காட்டப்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு சங்க இலக்கியங்களுடன் பொருத்திக் காட்டப்பெறுகின்றன.

அந்தணர்க்குரிய இயல்புகள்
 அந்தணர், ஐயர், பார்ப்பார் ஆகிய சொற்கள் குறிப்பிட்ட ஒரு குழுவினுக்;குள் அடங்கும் பகுப்புகள் ஆகும். இக்குழுவினர் வேதத்துடன் தொடர்புடைய குழுவினராகக்  கருதத்தக்கவர்கள் ஆவர். கரணம் யாத்தவர்கள் ஐயர் ஆகின்றனர். செந்தன்மை பூண்டொழுகுபவர்கள் அந்தணர்கள் ஆகின்றனர். பார்ப்பார் என்பவர் மறைநூல்களைப் பார்ப்பவர் அல்லது பார்த்து ஓதுபவர் ஆகின்றனர். இவர்களில் அந்தணர் என்போருக்கான இலக்கணம் பின்வருமாறு.

  " நூலே கரகம் முக்கோல் மணையே 
    ஆயுங்காலை அந்தணர்க்கு உரிய”
 (தொல்காப்பியம், மரபியல், 71)

நூல், தண்ணீர் இருக்கும் கெண்டி என்ற செம்பு, முக்கோல், அமரும் மணை  ஆகியனவற்றைக் கொண்டிருப்பவர்கள் அந்தணர்கள் என்று உரைக்கின்றது தொல்காப்பியம். அனைத்து அந்தணர்களுக்கும் முப்புரி நூல் என்ப:து அடையாளமாகும். கரகமும், முக்கோலும் தவம் செய்யும் அந்தணர்க்கு உரிய பொருள்கள் ஆகும்.

 இவ்வடையாளங்களுடன் சங்க இலக்கியத்தில் அந்தணர்கள் சித்திரிக்கப்பெற்றுள்ளனர். கலித்தொகையில் அந்தணர் ஒருவரை விளித்து தன் மகள் உடன்போக்குப் போனதைப் பற்றி அறியவிரும்புகிறாள் செவிலித்தாய்.

  “எறிதரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
    உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்
   நெறிபடச் சுவல்அசைஇ வேறுஒரா நெஞ்சத்துக்
    குறிப்புஏவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்”(
கலித்தொகை.9)

என்ற பாடலில் இடம்பெறும் அந்தணர் அப்படியே தொல்காப்பியர் காட்டிய காட்சிப்படி வருணனை செய்யப்பெற்றுள்ளார். தொல்காப்பியர் காட்டிய கரகம், முக்கோல் அவரிடத்தில் காணப்படுகின்றன. கூடுதலாக ஒரு குடையை அவர் வைத்திருந்துள்ளார். இவ்வாறு கலித்தொகை காலத்தில் அந்தணர்கள் விளங்கிய தோற்றம் தெரியவருகின்றது.

 கபிலர் பாரிமகளிரை திருமணம் செய்து கொள்ள விச்சிக்கோன் என்ற அரசனிடம் வேண்டியபோது தான் அந்தணன் என்று தன்னை அடையாளப்படுத்துகின்றார்.

  "யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே 
   வரிசையி;ல் வணக்கும் வாள் மேம்படுநன்
   நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி”
 (புறநானூறு,200)

 என்றும்

  “யானே
   தந்தை தோழன் இவர் என் மகளிர்
   அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே”
 (புறநானூறு 201)

என்றும் பாடுகின்றார். இவ்வகையில் அந்தண மரபினர் புலவோராகவும் சங்ககாலத்தில் இருந்துள்ளனர் என்பது குறிக்கத்தக்கது.

 “அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கின்| (புறநானூறு, 2) என்று அந்தணர்கள் அந்தி நேரத்தில் அருங்கடன் செய்யும் நடைமுறை புறநானூற்றில் காட்டப்பெறுகின்றது. “நன்பல கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு அருங்கலம் நீரோடு சிதறி| (புறநானூறு 361) என்று மற்றொரு குறிப்பு புறநானூற்றில் இடம்பெறுகின்றது. கேள்வியறிவு மிக்க அந்தண்கள் வேள்வி செய்வதில் வல்லவர்கள், அவர்களுக்கு அணிகலன்கள் பலவற்றை அளித்தல் கொடை  என்பது இப்பாடலடி தரும் விளக்கமாகும். வேள்வி செய்தலை மற்றொரு புறநானூற்றுப் பாடலும் குறிக்கின்றது. "அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன்” (புறநானூறு, 397) என்ற பாடலடியின் வழியாக அறம்புரிந்து தீ வளர்ப்பவர்கள் அந்தணர்கள் என்பது தெரியவருகின்றது.

 பரிபாடலில் பல இடங்களில் அந்தணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. “நாவல் அந்தணர் அருமறைப்பொருள்” என திருமால் குறிக்கப்படுகிறார்(பரிபாடல்.1). அந்தணர் பயிற்றும் அருமறையின் ஒரு வரியை அப்படியே எடுத்தாளுகிறது பரிபாடல். ~வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும்  தாதையும் நீ என மொழியுமால்; அந்தணர் அருமறை” (பரிபாடல் 3) என்ற பாடலடியின் வழியாகத்  தாமரைப்ப+வில் பிறந்த பிரம்மனும் அவனின் தந்தையும் ஆகிய திருமால் நீயே என்று வேதநெறி சொல்வதாக பரிபாடல் குறிப்பிடுகின்றது. இவ்வகையில் மறைகள் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன.

 “விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப”- தை நீராடல் நடைபெற்றது என்று குறிக்கின்றது பரிபாடல். (பரிபாடல்.11) விழாக்கள் சங்க காலத்தில் அந்தணர் கொண்டு தொடங்கப்பெற்றுள்ளது என்பது இதன்வழி தெரிகின்றது.

 “ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பகர்ந்தவன்” சிவபெருமான் (கலித்தொகை.1)என்ற குறிப்பு கலித்தொகையின் வழி கிடைக்கின்றது. இத்தொடரின் வழியாக வேதங்களின் ஆறு அங்கங்களை ஓதி உணர்ந்தவர்கள் அந்தணர்கள் என்பது தெரியவருகிறது. அந்தணர் தீ வளர்த்தலை கலித்தொகையும் குறிப்பிடுகின்றது. “கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும்” என்ற (கலித்தொகை.36) அடியின் வழியாக அந்தணர் வேள்வித்தீ வளர்ப்பர் என்தும், வேள்வித்தீ வளரக்கும் போது எழும் புகைபோல என் உயிர் அலைவுறும் என்று தலைவி பேசுவதும் இவ்வடிகளின் பொருளாகும். அந்திக் காலத்தில் அந்தணர் வேள்வி செய்வர் என்ற குறிப்பும் “அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து செந்தீச் செவ்வழல் தொடங்க” (கலித்தொகை 119) என்ற பாடலடியின் வழி தெரியவருகின்றது.

 சிறுபாணாற்றுப்படையில் நல்லியக்கோடனின் அரண்மனை பொருநர், புலவர், அந்தணர் ஆகியோருக்கு அடையா வாயிலாக விளங்கும் என்ற குறிப்பு கிடைக்கின்றது. (சிறுபாணாற்றுப்படை, 204) இதன் வழி அந்தணர்க்கு ஈவது அரசர் கடனாக இருந்துள்ளது என்பது வெளிப்படை. “கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வி” என்ற பெரும்;பாணாற்றுப்படை (பெரும்பாணாற்றுப்படை 315) அடிகள் அந்தணர் வேள்வி செய்தமையைக் குறிக்கின்றது. மதுரைக்காஞ்சியில் “ஓதல் அந்தணர் வேதம் பாட” என்ற (மதுரைக்காஞ்சி 656) குறிப்பு இடம்பெறுகின்றது. “அந்தி அந்தணர் அயர” என்று குறிஞ்சிப்பாட்டிலும் (225) ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது. “ஓதல், வேட்டல், அவை பிறர் செய்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி”  என்று அந்தணர்க்குரிய அறுதொழில்களைக் குறிக்கிறது பதிற்றுப்பத்து. (பதிற்றுப்பத்து, 24) “உரைசால் வேள்வி முடித்த கேள்வி, அந்தணர் அருங்கலம் ஏற்ப” (64) என்று மற்ற இலக்கியங்கள் காட்டிய அந்தண நெறியையே பதிற்றுப்பத்தும் காட்டுகின்றது.

 அந்தணர்ப் பள்ளியின் சிறப்பை மதுரைக்காஞ்சி பின்வருமாறு பாடுகின்றது.

  “சிறந்த வேதம் விளங்கப்பாடி
   விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
   நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி
   உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்
   அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
   பெரியோ மேஎய் இனிதின்  உறையும்
   குன்றுகுளின்றன்ன அந்தணர் பள்ளியும்”(
மதுரைக்கா ஞ்சி. 468-474)

என்ற பகுதியில் அந்தணர் பள்ளியின் சிறப்பு காட்டப்படுகின்றது சிறந்த வேதங்கள் விளங்கப் பாடும் அந்தணர்கள் இருக்குமிடம் அந்தணப்பள்ளி ஆகும். இங்குள்ள அந்தணர்கள் வேள்விகள் செய்து, பிர்மம் என்ற பொருளாகத் தாமே ஆகி உயர்ந்த தேவர் உலகத்தை அடையும் சிறப்பினை உடையவர்கள், அறநெறி தவறாதவர்கள், பல பெரியோர்கள் உடன் தங்கியிருக்கும் பேற்றினைப் பெற்றவர்கள் அந்தணர்கள் என்று அக்காலத்தில் அந்தணப் பள்ளி இருந்து நிலையை இவ்விலக்கியம் காட்டுகின்றது.

 இவ்வாறு அந்தணர் மரபுகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பார்ப்பார், ஐயர் என்ற பிரிவினரும் அந்தணர் என்ற மரபினரோடு இணைத்து எண்ணத்தக்கவர்கள் ஆவர். பார்ப்பார் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறன. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கம்  என்றுத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் போர்க்காலத்தில் பேணப்படுதலைப் புறநானூறு காட்டுகின்றது. புறநானூற்றில் பார்ப்பன வாகை என்ற துறையில் இருபாடல்கள் அமைகின்றன. அதில் 166 ஆம் எண்ணுடைய பாடல் ஆவூர் மூலங்கிழார் பாடிய பாடல் ஆகும். இப்பாடல் சோழநாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனைப் பாடியதாகும்.

   “வினைக்கு வேண்டி நீப+ண்ட
    புலப்புல்வாய்க் கலைப்பச்சை
     கவல்ப+ண் ஞாண்மிசைப் பொலிய
    மறம் கடிந்த அருங்கற்பின்
    அறம் புகழ்ந்த வலைசூடி
    சிறுநுதல் பேர் அகல் அல்குல் 
    சில சொல்லின் ;;;;;;;;;;;;;;பல கூந்தல் 
    நிலைக்கு ஒத்தநின் துணைத்துணைவியர்
    தமக்கு அமைந்த தொழில்கேட்பக்
    காடு என்றா நாடு என்று ஆங்கு
    ஈர்ஏழின் இடம் முட்டாது
   நீர் நாண நெய்வழங்கியும்
   எண்நர்ணப் பல வேட்டும்
   கண் நாணப் புகழ்பரப்பியும்
   அருங்கடி பெருங்காலை
   விருந்துற்ற நின் திருந்து ஏந்துநிலை
   என்றும் காண்கதில் அம்ம”
 (புறநானூறு, 166)

என்ற இப்பாடலில் பார்ப்பன வெற்றி பாடப்பெற்றுள்ளது. இப்பாடலுக்குரிய பாட்டுடைத்தலைவனான அந்தணன் தோளில் நூலணிந்து அதன்மேல் கலைமானின் தோலை அணிந்தவன். இவனின் சில சொற்களையும் மாறாமல் அவனின் துணைவியர் கேட்கின்றனர். நீரைவிட நெய்யை அதிகமாக வழங்கி எண்ணில் அறிய இயலாத பல வேள்விகளைச் செய்து, வேள்விகளின் நிறைவில் நல்ல விருந்தினை அனைவருக்கும் அளித்துப் புகழ் கொண்ட இன்றைய நிலையை நாங்கள் என்றைக்கும் காணவேண்டும் என்று இப்பாடல் பார்ப்பன வாகை பாடுகின்றது. 305 ஆம் பாடலும் பார்ப்பான் :தூது சென்றதால் நாடுகளுக்குள் அமைதி நிலவியது என்ற குறிப்பினைத்தருகின்றது.

   பார்ப்பன குறுமகன் குடுமி வைத்திருந்ததை ஐங்குநுறூற்றின் இருநூற்றியிரண்டாம் பாடல் எடுத்துக்காட்டுகின்றது. கலித்தொகையில் பார்ப்பானை முன்வைத்து ஒரு அழகான அகக்காட்சி புனையப்பெற்றுள்ளது.

  “அம்துகிற் போர்வை அணிபெறத் தைஇ நம்
  இன்சாயல் மார்பன் குறிநின்றேன் யானாகத்
  தீரத் தறைந்த தலையும் தன் கம்பலும்
  காரக்குறைந்து கறைப்பட்டு வந்து நம்
  சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானைத் 
  தோழிநீ போற்றுநி என்றிஅ வன் ஆங்கே
  பாராக் குறழாப் பணியாப் “பொழுதன்றி
  யார் இவன் நின்றீர் எனக் கூறிப் பையென
  வைகாண் முதுபகட்டின் பக்கத்திற் போகாது
  தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
  பக்கு அழித்துக் கொண்டீ எனத்தரலும் யாதொன்றும்
  வாய்வாளேன் நிற்கக் கடிது அகன்று கைமாறிக் 
  கைப்படுக்கப்பட்டாய்ச்சிறுமிநீ மற்றுயான்
  ஏனைப் பிசாசு அருள் என்னை நலிதரின்
   இவ்வ+ர் பலிநீ பெறாமல் கொள்வேன் எனப்
  பலவும் தாங்காது வாய்பாடி நிற்ப 
  முதுபார்ப்பான் அஞ்சினனாதல் அறிந்து யான்
  எஞ்சாது ஒருகை மணற்கொண்டு மேல்தூவக்
  கண்டே கடிது அரற்றிப் பூசல்தொடங்கினன் ஆங்கே”(
கலித்தொகை,65)

என்ற இந்தப் பாடல் தலைவி தலைவனைச் சந்திக்க விடாமல் ஆடிய கூத்தாகச் சுட்டப்பெறுகின்றது.

 மொட்டைத்தலையும் முக்காடும் n;காண்டு இந்த ஊரில் சுற்றித்திரியும் கிழட்டுக் கூனல் விழுந்த பார்ப்பான் ஒருவன்  அன்றைக்கு என்னை வழி மறித்தான். நான் தலைவனைக்காண போர்வை ஒன்றைப் போர்த்தியபடி இரவு நேரத்தில் நின்றிருக்க அவன் என்னைக் குனிந்துப் பார்த்து நேரங் கெட்ட நேரத்தில் இங்கு நிற்கும் நீங்கள் யார்? என வினவினான். அதன் பின் வெற்றிலை தின்கிறாயா என்று என்னைக் கேட்டான்;. நான் பதில் பேசாது நிற்கவே என்னிடம் அவன் மேலும் பேச்சினை வளர்த்தான். நீ பெண் பிசாசு. யான் ஆண் பிசாசு. என் காதலுக்கு நீ இரங்கு என்று ஏதோ ஏதோ அவன் பேசினான். அந்நேரத்தில் அவன்மீது மணலை அள்ளி வீசிவிட்டு நான் அவனிடமிருந்துத் தப்பி வந்தேன். அவன் இந்நிகழ்ச்சியை ஊர் முழுவதும் n;;சால்லிக்n;காண்டு அலைகிறான். நான் தலைவனைக் காணமுடியாமல் ஆயிற்று. என்னைப் பற்றி ஊரார் பேசும்படியும் ஆயிற்று என்றுப் பார்ப்பானை முன்வைத்து இக்கலித்தொகைப் பாடல் பின்னப்பெற்றுள்ளது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

 ஒரு பார்ப்பான் கொலை செய்யப்பட்ட செய்தியை அகநானூறு எடுத்துரைக்கின்றது.

  “தூதுஒய் பார்ப்பான் மடிவெள் ஓலைப்
   படையுடைக் கையர் வருதிறம் நோக்கி
   உண்ணா மருங்குல் இன்னோன் கையது 
   பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே
   தடிந்துஉடன் வீழ்ந்த கடுங்கண் மழவர்
   திறன்இல் சிதாஅர் வறுமை நோக்கிச்
   செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்
   காடுவிடு குருதி தூங்குகுடர் கறீஇ”(
 அகனாநூறு, 397)

என்ற பாடலில் இக்குறிப்பு இடம்பெறுகின்றது. தூதாக வந்த ஒரு பார்ப்பானை அவன் மடியில் பொன் வைத்திருக்கலாம் என்று எண்ணி எயினர் கொன்றுவிடுகின்றனர் கொன்றபின்பு அப்பார்ப்பான் மடியைப் பார்த்த அவர்கள் அவனிடம் ஏதும் இல்லாமை கண்டும் அவனின் வறுமை சார்ந்த ஆடையைக் கண்டும் அவனைக் கொன்றது தேவையற்றது என உணர்ந்து அப்படியே அவனை விட்டுவிட்டுச்சென்றுவிட்டனர். அவனது உடலில் இருந்து குடல் தொங்கிய வண்ணம் இருக்க அதனை ஒரு  நரி உண்ணக் கொடுமையான வழியில் தலைவன் பயணிக்கவேண்டும் என்று இப்பாடல் குறிப்பிடுகின்றது, பார்ப்பார் தூது செல்கின்றபோது ஏற்படும் இன்னலை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

 மொத்தத்தில் பார்ப்பார் ;அந்தணர் ஆகிய சொற்கள் குறுந்; தொகை நற்றிணை போன்ற பனுவல்களில் இடம்பெறாமல இருப்பது அவ்விலக்கியங்கள் காலத்தால் முந்தியதாக  அல்லது ஆரியவர் வருகை இடையீடுபடாத காலத்தில் வரையப்பெற்றிருக்க வாய்ப்புண்டு என்னறு கொள்ளச் செய்கின்றது.

அரசர்

 அரசர்க்குரிய மரபுகளாக தொல்காப்பியம் 
 “ படையுங் கொடியுங் குடையும் முரசும்
 நடைநவில் புரவியும் களிறும் தேரும்
 தாரும் முடியும் நேர்வன பிறவும்
 தெரிவு கொள் செங்கோல் அ;ரசர்க்கு உரிய”
 ( மரபியல், 72) என்று குறிப்பிடுகின்றது.

இம்மரபுடைய அரசர்களைச் சங்க இலக்கியங்கள் பலவற்றில் காணமுடிகின்றது. குறிப்பாக பதிற்றுப் பத்தும், புறநானூறும் இம்மரபுடைய அரசர்கள் பலரைப் பற்றிய செய்திகள் தரும் இலக்கியங்கள் ஆ:கும். .இவைதவிர பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களும் தொல்காப்பிய அரச மரபினைப் பின்பற்றுவனவாகும்.

  “கடாஅ யானைக் கழற்கால் பேகன் 
   கொடைமடம் படுதல் அல்லது
   படைமடம் படான் பிறர் படை மயக்குறினே|
 (புறநானூறு, 142)

என்ற இப்பாடல் பேகன் யானைப்படை வைத்திருந்ததைக் குறிப்பிடுகின்றது. இது அரசர்கள் யானை வைத்திருப்பது அவர்களின் அடையாளம் என்ற தொல்காப்பிய மரபினைப் பின்பற்றியதாகும்.

  தண்ணுடை மன்னர் தாருடைப் புரவி
  அணங்குடை முருகன் கோட்டத்துக்
   கலம்தொடா மகளிரின் இகந்து நின்ற
வ்வே (புறநானூறு, 299)

என்ற பொன்முடியார் பாடல் குதிரைகளை அரசர் பெற்றிருந்த நிலையைக் காட்டுகின்றது.

 ஒளவையார் மூன்று வேந்தர்களும் ஒருங்கிருந்த காட்சியை ஒரு புறநானூற்றுப் பாடலில் பாடுகின்றார். அதில் முத்தீ புரையக் காண்தக இருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்|+ (புறநானூறு, 367) என்று குறிப்பிடுகின்றார். இப்பாடலடியில் கொடி, தேர், குடை ஆகிய அடையாளங்களுடன் வேந்தர்கள் விளங்கினர் என்பது தெரியவருகின்றது.

 பதிற்றுப்பத்திலும் அரசர்க்கான முரசு, கொடி போன்ற மரபுகள் சுட்டப்பெற்றுள்ளன. “வாழ்க அவன் கண்ணி, வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்ந்து இலங்கும் பூணன்பொலங்கொடி உழிஞையன், மடம்பெருமையின் உடன்று மேலவந்த வேந்து மெய்மறந்த வாழ்ச்சி” (பதிற்றுப்பத்து, 56) என்று அரசரக்கான இயல்புகளைப் பாடுகின்றது பதிற்றுப்பத்து.

 மதுரைக்காஞ்சியில் பாண்டியர் மன்னர் பெற்றிருந்த நால்வகைப்படைகள் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.  அரசனுக்குரிய வாகைகள் ஐந்து என்றுக் குறிக்கிறது வாகைத்திணையில் குறிக்கின்றது தொல்காப்பியம். ஐவகை மரபின் அரசர் பக்கம் என்ற அக்குறிப்பிற்கு ஓதல், வேட்டல், ஈதல். படை வழங்குதல், குடியோம்பல் முதலியன அரசவாகையாகக் கொள்ளப்பெறுகின்றன. 
 அரசன் குடியோம்பும் முறை பற்றிய புறநானூற்று இனியபாடல் ஒன்று இதற்குச் சான்றாக அமைகின்றது.

 “அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும்
 சோறு படுக்கும் தீயொடு  
 செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது
 பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே
 திருவில் அல்லது கொலைவில் அறியார்
 திறனறி வயவரொடு தெவ்வர் தேய அப்
 பிறர் மண் உண்ணுஞ் செம்மல் நின் நாட்டு 
 வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது
 பகைவர் உண்ணா அருமண்ணினையே
 அம்புதுஞ்சும் கடிஅரணால்
 அறந்துஞ்சும் செங்கோலையே
 புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
 விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை
 அனையை ஆகல்மாறே
 மன்னுயிர் எல்லாம் நின் அஞ்சும்மே”
 (புறநானுறு. 20)

என்ற இப்பாடலில் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்n;பாறையின் நாட்டில் அடுப்பில் தோன்றும் வெப்பம் மட்டுமே அங்குத் தோன்றும். வேறு வெப்பம் தோன்றாது. சூரியனின் வெம்மை அன்றி வேறு வெம்மை அந்நாட்டில் தோன்றாது. கொலைவில் காணப்படாதாம். எங்கும் வானவில்லே தோன்றும். கருவுற்ற மகளிர் மண் உண்ணுவதைத்தவிர, மாற்று அரசர்கள் இம்மன்னனின் மண்ணை உண்ணமாட்டார்கள். கணைகள் தொங்கும் காவல்மிக்க அரணுடன், அறம் தொங்கும் செங்கோலையும் உடையவன் நீ. புதிய பறவைகள் வந்தாலும், பழைய பறவை இடம்பெயர்ந்தாலும் நிலை கலங்காமல் மக்களைக் காப்பவன் நீ என்பது இப்பாடலின் பொருளாகும்.  புள் வருகை, செலவு என்பன நிமித்தங்கள். என்றாலும் அவற்றால் எவ்விதச் சலனமும் இந்நாட்டில் ஏற்படா வண்ணம் காப்பவன் இவ்வரசன் என்பது புலனாகின்றது.

 இவ்வகையில் தொல்காப்பிய அரச மரபு சங்க இலக்கியங்களால் பெரிதும் பின்பற்றப்பெற்றுள்ளது.

வணிகர்
 தொல்காப்பியர் உணர்த்திய சமுதாயத்தில் அந்தணர், அரசர் என்ற முறைக்குப் பின்பாக அமைபவர்கள் வணிகர்கள். “வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை” (மரபியல்.78)  என்று வணிகருக்கான இலக்கணம் தொல்காப்பிய மரபியலில் காட்டப்பெறுகின்றது.

 மெய்திரி வகையின் எண்வகை உணவின்
 செய்தியும் வரையார் அப்பாலான (மரபியல். 623)

என்ற நூற்பா நெல், காணம், வரகு, இறுங்கு, திணை, சாமை. புல்லு, கோதுமை ஆகியனவற்றை உருவாக்குவதிலும், பேணுவதிலும், விற்பதிலும் வணிகருக்குப் பங்கு உண்டு என்று சுட்டப்பெறுகின்றது.

 வில்லும் வேலும் கழலுங் கண்ணியும்
 தாரும் ஆரமுந் தேரு மாவும்
 மன்பெறு மரபின் ஏனோர்க்குரிய
 (மரபியல். 84)

என்ற நூற்பாவின்படி வில்,வேல், கழல். கண்ணி, தார், ஆரம், தேர், குதிரை ஆகியனவற்றை வைத்துக்n;காள்ளும் மரபுகள் வணிகருக்கும் உண்டு. வேளாளருக்கும் உண்டு என்று இலக்கணம் வகுக்கிறார் தொல்காப்பியர்.  மேலும் வணிக வாகையை  ஆறு பகுதியாக உரைக்கின்றது தொல்காப்பியம். ஓதல், வேட்டல், ஈதல், உழல், வணிகம், நிரையோம்பல் ஆகிய ஆறும் வணிகர்க்கு உரியனவாகும். உழுதல், நிரையோம்புதல் ஆகிய முறையே மருதநில, முல்லை நிலச்செயல்பாடுகள் ஆகும். இச்செயல்பாடுகள் வளர்ந்து வணிக மரபாகியுள்ளன. நெய்தலிலும் உப்பு, மீன் விற்றல் ஆகியனவும் வணிகமுறைமையை உடையனவாகும்.

 “நெடுநுகத்துப் பகல்போல்
  நடுவுநின்ற நல்நெஞ்சினோர்
 வடு அஞ்சிவ வாய்மொழிந்து
 தமவும் பிறவும் ஒப்பநாடிக்
 கொள்வதூஉம் மிகைகொளாது, கொடுப்பதூஉம் குறைகொடாது
 பல்பண்டம் பகர்ந்து வீசும்
 தொல் கொண்டித் துவன்று இருக்கை”(பட்டினப்பாலை, 206- 2013)

என்று வணிக வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுகின்றது பட்டினப்பாலை. 
 மதுரைக்காஞ்சி வணிகத்தெரு ஒன்றைப் பின்வருமாறு காட்சிப்படுத்துகின்றது.

 “அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகிக்
  குறும்பல் குழுவின் குன்று கண்டன்ன
  பருந்து இருந்து உகக்கும்பல்மாண் நல்இல்
  பல்வேறு பண்டமோடு ஊண்மலிந்து கவினி
  மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவம்
  பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு
  சிற்நத தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்”
 (மதுரைக்காஞ்சி, 500-507)

என்ற நிலையில் வணிக வீதி அமைந்திருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. வணிகர்களின் வீடு பருந்து வந்தமர்ந்து செல்லும் அளவிற்கு உயர உயரமானக் கோபுரங்களை உடையதாக இருந்ததாம். அவ்வில்லில் நீரில் கிடைக்கும் பொருள்களையும், நிலத்தில் கிடைக்கும் பொருள்களையும் மணிகள், முத்துக்கள், பொன் ஆகியவற்றை அறநெறி பிறழாமல் விற்பவர்கள் என்று காட்டி அத்தகையோர் உறையும் தெரு வணிகத்தெரு என்று குறிக்கின்றது மதுரைக்காஞ்சி. அறவிலை வணிகன் என்று வணிகர் அறவழி நின்றதைப் புறநானூற்றின் 134 ஆம் பாடல் குறிக்கின்றது.

  இவ்வாறு தொல்காப்பியர் சுட்டிய வணிக மரபுகள் சங்க இலக்கியங்களில் பின்பற்றப்பெற்றுள்ளன.

வேளாளர்
 அரசர், அந்தணர், வணிகர் என்ற சமுதாய படிநிலைகளுக்குப்பின் அமைபவர் வேளாளர் ஆவர். இவர்களுக்கு உரிய மரபுகள் தொல்காப்பிய மரபியலில் சுட்டப்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு.

  "வேளாண் மாந்தர்க்கு உழுதூணல்லது
      இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”
 (மரபியல். 81)

என்ற நூற்பா வேளாண் தொழிலை நலம்பட செய்வதற்கே நாளும் பொழுதும் வேளார்க்குப் போதுமாய் அமையும் என்ற நிலையைக் காட்டுகின்றது. அத்n;தாழில் அல்லது அவர்கள் பிறவற்றில் நாட்டம் கொள்ளஇயலாது என்பது இந்நூற்பாவின் கருத்தாகும்.

 வேளாளர்க்கு அறுவகைப் பகுதி கொண்ட வாகை தொல்காப்பியரால் காட்டப்பெற்றுள்ளது.அதற்கு உரை சொன்ன உரையாசிரியர்கள் அவ்வறுவகையை உழவு, உழவொழந்ததொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, கல்வி ஆகியன என்று காட்டுகின்றனர்.

 "எருது தொழில் செய்யாது ஓட விடும் கடன்  வேளாளர்க்கு இன்று” என்று வேளாள மரபைச் சுட்டுகின்றது பரிபாடல்.(பரிபாடல.20) எருதினை உழவுத்தொழிலுக்குப் பயன்படுத்தாமல் ஓடவிடுவது வேளாளர்க்கு அழகில்லை என்பது இப்பாடலடியின் பொருளாகும்.

 மருதநிலத்தில் கேட்கும் வேளாண்மரபு சார்ந்த பேரொலிகளை மதுரைக்காஞ்சி காட்டுகின்றது.

"அள்ளல் தங்கிய பகடுஊறு விழுமம் 
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே
ஒலித்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை”
 (மதுரைக்காஞ்சி. 259-263”

என்று எருதுகளின் வருத்தத்தைப் போக்கும் வேளாண்பெருமக்களின் ஓசை, நெல்லை அறுப்பவர்கள் தம் கைகளால் அடிக்கும் பறை ஓசை ஆகியன கேட்கும் இடமாக மருதநிலம் திகழ்ந்தது என்கிறது மதுரைக்காஞ்சி.

 அரிசால் மாறிய அங்கன் அகன்வயல்
 மாறுகால் உழுத ஈரச் செறுவயின்
 வித்n;தாடு சென்ற வட்டி
 (நற்றிணை 210)

என்ற பாடலில் விதைக்கும் உழவு முறைமை காட்டப்பெற்றுள்ளது. இதுபோன்று நாற்றுநடல், களைபறித்தல், அறுவடை போன்ற வேளாண்செயல்பாடுகள் சங்க இலக்கியங்களில் காட்டப்பெற்றுள்ளன.

 இவ்வகையில் தொல்காப்பிய வேளாண்மரபும் சங்கஇலக்கியத்துள் போற்றப்பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது.

தொகுப்புரை
 தொல்காப்பிய மரபியலில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற சமுதாய படிநிலை மரபு குறிக்கப்படுகிறது, இம்மரபுகள் ஒருவரை ஒருவர் தாழ்த்துவது உயர்த்துவது போல் அமையாமல் அவரவர்கான செயல்பாடுகள் அவற்றில் வாகை சூடுதல் என்பதாகக் கொள்ளப்பெற்றுள்ளது.

 தொல்காப்பியர் சுட்டும் அந்தணர்க்கான மரபுகள் நூல் பூணுதல், கரகம் கைக்கொள்ளல், முக்கோல் கொண்டிருந்தல் என்ற மரபுகள் சங்க இலக்கியப்பாடல்களிலும் காணத் தகுவனவாக உள்ளன. இவை தவிர குடையும் கைக்கொண்டு வாழ்ந்துள்ளனர் அந்தணர்கள். இவர்களோடு இணைந்த குழுவினராக பார்ப்பார்,ஐயர் ஆகியோர் எண்ணத்தகுகின்றனர். அந்தணர்கள்  வேள்வி வயப்பட்டவர்கள். பார்ப்பார் தூது செல்லுதல், வாயிலாக அமைதல் போன்றவற்றைச் n;சய்துள்ளளனர். ஐயர் என்ற வழக்கு பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. நற்றிணை  குறுந்தொகை ஆகியவற்றில் அந்;தணர், பார்ப்பார், ஐயர் பற்றிய குறிப்புகள் இல்லை. இதற்குப்பின்னான இலக்கியங்களில் இப்பகுப்பு காணப்படுகின்றது. கபிலர் தான் அந்தணன் என்றே பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். இவ்வகையில் அந்தண மரபினர் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெற்றுள்ளனர்.

 அரச மரபினர் சங்க காலத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருந்தனர். தொல்காப்பியர் காட்டும், குதிரை, யானை, தேர், கண்ணி போன்ற அடையாளங்களுடன் அவர்கள் விலங்கினர். அவர் ஐவகைப்பட்ட அரசவாகையைப் பெற முயற்சி செய்துள்ளனர். பதிற்றுப்பத்தும், ஆற்றுப்படை நூல்களும், புறநானூறும் வேந்தர் சமுதாயத்தில் பெற்றிருந்த உயர்நிலையைப் பல இடங்களில் அறிவிக்கின்றன.

 வணிகமரபினரும் கண்ணி, குதிரை, யானை போன்ற அடையாளங்களுடன் திகழ்ந்துள்ளனர். இவர்கள் அறநெறி தவறாது வணிகச் செயல்பாடுகளை நிகழ்த்தியுள்ளனர்.

 வேளாண் மரபின் அத்தொழிலின் அருமைப்பாடு அத்தொழில் அன்றி பிறதொழில் புரிய இயலாத நிலையில் இருந்துள்ளனர். இவர்களுக்கும் குதிரை, யானை, கண்ணி, மாலை போன்றவற்றைக் கைக்கொள்ளும் உரிமை இருந்துள்ளது.

muppalam2006@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard