New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன்
Permalink  
 


பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்

 

(தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற கருணாநிதியின் பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.)

மிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழாவில் பேசுகையில், சித்திரை, வைகாசி முதலிய 12 மாதங்களின் பெயர்களும், அந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் முழுமதி நாள் (பௌர்ணமி) நிகழ்கிறதோ, அந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இடப்பட்ட பெயர்கள்தாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இக்கருத்தினைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, சித்திரை, கார்த்திகை என்ற இரு மாதங்களின் பெயர்கள்தாம் நட்சத்திரப் பெயர்கள் என்றும், பிற மாதங்களின் பெயர்களுக்கும் நட்சத்திரங்களின் பெயர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டு, பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிற மாதம் பூசை என்றும், மக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிற மாதம் மகம் அல்லது மகை என்றல்லவா பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும் வினவியுள்ளார்.

கருணாநிதி தமக்குத் தாமே ‘முத்தமிழ் அறிஞர்’ என்று பட்டம் சூட்டிக் கொண்டவர். முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் குறிக்கும். நாடகத் தமிழ் நூல்களுள் தலையாயது சிலப்பதிகாரம். தாம் சிலப்பதிகாரத்தைக் கரைத்துக் குடித்தவர் என்றும், சிலப்பதிகார நாயகி கண்ணகிக்கு மெரினா கடற்கரையில் சிலை வைத்தும், பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைத்தும் சிலம்புக்குப் பெருமை சேர்த்தவர் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்பவர் பூம்புகார் திரைப்பட வசனகர்த்தா கருணாநிதி. சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் வருகிற ஒரு குறிப்பை (கால்கோட்காதை – வரி. 25-26) அவருக்கு எடுத்துக்காட்ட வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

சேரன் செங்குட்டுவன், கனக விசயர் மீது படையெடுத்துப் புறப்படுவதற்கு நல்ல நேரம் (முகூர்த்தம்) குறித்துக் கொடுக்கிற சோதிடன் “ஆரிரு மதியின் காருக வடிப்பயின்று ஐவகைக் கேள்வியும் அமைந்தோன்” எனக் குறிப்பிடப்படுகிறான். ஐவகைக் கேள்வி என்பது பஞ்சாங்க அறிவாகும். “ஆரிரு மதியின் காருக வடிப்பயின்று” என்றால் 12 ராசிகளிலும் இருக்கின்ற கிரக நிலைகளைக் கற்று என்று பொருளாகும். ஜாதகத்தில் இருக்கின்ற 12 ராசிகளை மதி என்றே சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அதாவது சித்திரை மதி தொடங்கி பங்குனி மதி முடிய இருக்கிற 12 ராசிகள் என்பது பொருளாகும்.

மதி என்ற சொல்லில் இருந்தே மாதம் என்ற சொல் தோன்றிற்று. தமிழிலும் நிலவைக் குறிக்கிற திங்கள்என்ற சொல்லைத்தான் மாதத்தைக் குறிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் வழங்குகிறMonth (மாதம்) என்ற சொல் Moon என்ற சொல்லில் இருந்தே தோன்றியதாகும். எனவே, சித்திரை நட்சத்திரத்தில் முழுமதி திகழ்கிற மாதம் சித்திரை மாதம் ஆகும். அதே சிலப்பதிகாரத்தில், இந்திர விழவூரெடுத்த காதையில் (வரி 64) ”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென” என்ற குறிப்பு உள்ளது இதற்குச் சான்றாகும். அது போன்றே, விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் வைசாகி அல்லது வைகாசி ஆகும். இன்றும் வட இந்தியாவில் வைசாகி என்ற பெயர் வழக்கில் உள்ளது.

விசாக நட்சத்திரத்தின் பெயரை ஆட்பெயராகக் கொண்ட விசாகன் என்ற பெயருடையவர்கள், சங்க காலத்தில் இருந்துள்ளார்கள். இப்பெயர் வியாகன், வியகன், வியக்கன் என்ற வடிவங்களில் வழங்கியுள்ளதென கருணாநிதியாலேயே போற்றப்பட்ட – போற்றப்படுகிற(?) ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமது Early Tamil Epigraphy என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

சித்திரை, விசாகம் என்ற நட்சத்திரப் பெயர்களைப் போன்றே அனுஷம் என்ற நட்சத்திரமும் ஆனுஷி என்ற மாதப் பெயராக வழங்கத் தொடங்கி அதுவே ஆனி எனத் திரிந்திருக்கிறது. அனுஷம் அல்லது அனுடம் அல்லது அனிழம் என்ற நட்சத்திரம் முடப்பனை என்ற பெயரில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுஷ நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அனுஷ நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமாகிய ஜேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கருதுகிற மரபும் உண்டு. அந்த அடிப்படையில் ஆனி மாதத்தை ஜேஷ்ட மாதம் என்றும் குறிப்பிடுவதுண்டு.

இவ்விரண்டு நட்சத்திரங்களிலும் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், இவற்றை அடுத்து வருகிற மூல நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்கிற வழக்கமே தற்போது நடைமுறையில் உள்ளது. மார்கழி மாத மிருகசிரஸ் நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அதற்கு அடுத்த நட்சத்திரமான சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் முழுநிலா நாள் அமைவதாகக் கொள்வதை இதனையொத்த நிகழ்வாகக் கருதலாம்.

பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது. சிராவணம் என்ற நட்சத்திரம் திருவோணம் எனத் தமிழில் வழங்குகிறது. ஓணம் என்று இதனைக் குறிப்பிடுவதுண்டு. சிராவண நட்சத்திரத்தில் பௌர்ணமி அமைகிற மாதமே சிராவணி ஆகும். இது ஆவணி என வழங்கப்படுகிறது. சிரமணர் என்பது சமணர் எனத் திரிந்து அமணர் என வழங்குவது போன்றதே இம்மாற்றமும் ஆகும். ஆவணி மாத முழுநிலா நாள் ‘ஓண நன்னாள்’ என மதுரைக்காஞ்சியில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

பூர பாத்ர பதம் என்கிற நட்சத்திரப் பெயர் பூரட்டாதி எனத் தமிழில் வழங்கும். இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் புரட்டாசி எனத் தமிழில் வழங்குகிறது. அசுவதி நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் வட இந்தியாவில் ஆஸ்வின மாதம், ஆஸ்விஜ மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழிலோ அற்பசி, ஐப்பசி, அற்பிகை என்றெல்லாம் வழங்கியுள்ளது. இவற்றுள் ஐப்பசி என்பதே வழக்கில் நிலைத்துவிட்டது.

கார்த்திகையைக் கருணாநிதியே ஏற்றுக்கொண்டு விட்டதால் அதைப் பற்றி நாம் எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை.

மான் தலை போன்று தோற்றமளிக்கும் நட்சத்திரக் கூட்டம் மிருகசிரஸ் என்று வடமொழியில் வழங்கிற்று. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மார்கசிருஷி என வடமொழியில் வழங்கத் தொடங்கி, தமிழில் மார்கழி எனத் திரிந்துள்ளது. பிராகிருத மொழியில் மிருகசிரஸ் என்பது மகசிர என வழங்கிற்று. மார்கழி மாதமும் மகசிர என்ற நட்சத்திரப் பெயராலேயே பிராகிருதத்தில் வழங்கியுள்ளது. இதற்கான ஆதாரம் இலங்கையில் வரலாற்று நூலான மகாவம்சத்தில் உள்ளது. ‘யாப்பருங்கலவிருத்தி’ என்ற பழமையான இலக்கண நூலில் மகயிரம் என இந்நட்சத்திரப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூச நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் தை என்று எப்படிப் பெயர் பெற்றது என்பது கருணாநிதியில் கேள்வி. பூச நட்சத்திரம் வடமொழியில் பூஷ்யம் என்றும், திஷ்யம் என்றும் இரு வகையாக வழங்கும். திஷ்ய நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் என்பதால் தைஷ்யம் என இம்மாதம் வழங்கப்படத் தொடங்கி தைசம், தைய்யியம், தை எனத் திரிந்துள்ளது. தை என்பது பூச நட்சத்திரத்தின் பெயர் என்று பழமையான தமிழ் நிகண்டு நூலாகிய சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது.

தைசம் என்பது பூசம் நட்சத்திரத்தைக் குறிக்கும் என்று 1910ஆம் ஆண்டில் கதிரைவேல் பிள்ளை அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட சங்கத்து அகராதி குறிப்பிடுகிறது. புஷ்யம் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு பௌஷ்ய மாதம் என்றும், பௌஷ மாதம் என்றும் தைத் திங்களைக் குறிப்பிடுவதும் உண்டு. தை மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதாகச் சட்டம் இயற்றிய கருணாநிதிக்கு திஷ்ய நட்சத்திரத்தின் பெயர்கூடத் தெரிந்திருக்கவில்லை.

கருணாநிதிக்கு வேண்டியவரான ஐராவதம் மகாதேவன், திஷ்யம் என்ற நட்சத்திரப் பெயர் சங்க காலத் தமிழகத்தில் ஆட்பெயராகச் சூட்டிக் கொள்ளப்பட்டது என்றும், திஸ்ஸன், திய்யன், தீயன் என்ற வடிவங்களில் இப்பெயர் வழங்கியுள்ளது என்றும் நாம் மேலே குறிப்பிட்ட நூலில் எழுதியுள்ளார். கருணாநிதி, ஐராவதம் மகாதேவன் அவர்களைக் கலந்து ஆலோசித்திருந்தால், பூசை என்றல்லவா மாதப் பெயர் இருந்திருக்க வேண்டும் என்பது போன்ற அபத்தமான கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டார். அவர்தாம் அனைத்தும் அறிந்தவர் என்ற எண்ணம் உடையவராயிற்றே?

தை மாதம், ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதியன்று பிறக்கிறது என்ற கணக்கீடு பஞ்சாங்கக் காரர்களால் தாம் கணித்துச் சொல்லப்படுகிறது. அதாவது, கருணாநிதியால் பழித்துப் பேசப்படுகிற ‘ஆரிருமதியின் காருக வடிப்பயின்று ஐவகைக் கேள்வியும் அமைந்தோர்களால்’தான் சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு தொடங்குகிற நாள் என்ற அடிப்படையில் தை முதல் நாள் கணக்கிடப்படுகிறதே தவிர ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வானநூல் கல்வியில் தேர்ச்சி பெற்ற கோள் ஆய்வு நிபுணர்களால் அல்ல. பஞ்சாங்கக் காரர்களால் நிர்ணயிக்கப்பட்ட பழம் பஞ்சாங்கக் கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்த தை முதல் நாளை மட்டும் அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு, அதனைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று புதிதாக நாமகரணம் செய்கிற அளவிற்கு அடாவடித்தனம் உள்ள ஒருவர், எப்படி அறிஞர் ஒருவரைக் கலந்தோசிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியும்?

ஐராவதம் மகாதேவனைக் கலந்து ஆலோசித்திருந்தால், டிசம்பர் 20ஆம் தேதியன்றே சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு தொடங்கிவிடுகிறது என்பதால் டிசம்பர் 20ஆம் தேதியைத்தான் தை முதல் நாளாக நிர்ணயித்து, அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றாவது ஐரோப்பிய வானநூல் அறிவுக்கும் கருணாநிதியின் ஆணவத்திற்கும் ஒத்திசைகிற வகையில் ஒரு வழியையாவது சொல்லிக் கொடுத்திருப்பார்.

மக நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மாகி என வழங்கத் தொடங்கிப் பின்னர் மாசி எனத் திரிந்துள்ளது. கரம், ஹரமாகத் திரிந்து ஒலிக்கப்படத் தொடங்கிப் பின்னர் சகரமாகத் திரிந்திருக்கலாம். ஹிந்து என்ற பாரசீக வழக்கு, சிந்து என இந்திய மொழிகளில் வழங்குவதை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.

இறுதியாகப் பங்குனி என்ற கடைசி மாதப் பெயருக்கு வருவோம். ”பங்குனி உயர் அழுவத்துத் தலைநாள் மீன்” எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. அதாவது பங்குனி மாதத்தில் முழுநிலா அமைகிற முழுமையான நட்சத்திரமாகிய உத்தர பால்குண நட்சத்திரமே அதாவது உத்தரமே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. நாள்மீன் என்பது நட்சத்திரத்தையும், கோள்மீன் என்பது கிரகத்தையும் குறிப்பதற்குச் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களாகும். அதாவது Constellation என்பது நாள்மீன் அல்லது நட்சத்திரம், Planet என்பது கோள்மீன் அல்லது கிரகம் ஆகும்.

கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். வடமொழியில் கிரகித்தல் என்ற கருத்தின் அடிப்படையில்தான் கிரகம்என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள். நம் முன்னோர்களைப் பற்றி இவர் புரிந்து கொண்டது, தமிழைப் புரிந்து கொண்டதுபோல் இவ்வளவுதான்.

உத்தர பால்குண நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் பல்குனி என வழங்கத் தொடங்கிப் பங்குனி எனத் திரிந்துள்ளது. எந்நேரமும், எந்த ஆதாயத்திலும் தம் பங்கு என்ன என்ற சிந்தனையிலேயே மூழ்கி இருப்பவர்களுக்குப் பங்குனிக்கான பெயர்க் காரணம் புரியாமல் போவதில் வியப்பில்லை.

இறுதியாக ஒரு விளக்கம். இந்த நட்சத்திரப் பெயர்களும், மாதப் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்களாக இருப்பதால் அவை தமிழர்களுக்கு அன்னியமானவை என்ற எண்ணம் சில தமிழ் அறிஞர்களிடையேகூட நிலவுவதாகத் தெரிகிறது. பழமையான தமிழ்க் கணியர்களான (ஜோதிடர்களாகிய) வள்ளுவர்கள், தமிழர்களே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே, பல நட்சத்திரப் பெயர்களும், மாதங்களில் பெயர்களும் திராவிட மொழிகளில் இருந்தோ, முன்னிலை ஆஸ்திராய்டு மொழிகள் என்று கருதப்படுகிற முண்டா மொழிகளில் இருந்தோ பெறப்பட்டுச் சமஸ்கிருத வடிவம் பெற்ற சொற்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.

அதேபோன்று, வள்ளுவர்கள் வானவியல் அறிவை அனைத்திந்தியக் கல்விப் புலமாக உருவாக்குவதற்காக, சமஸ்கிருத மொழி வடிவில் இப்பெயர்களைப் பதிவு செய்திருக்கலாம். இக்காரணத்தினாலேயே வானவியல் அறிவும், பஞ்சாங்க அறிவும் தமிழர்களுக்கு அன்னியமாகிவிடா. மொழியியல் அறிஞர்கள்தாம் இது குறித்து ஆய்ந்து விளக்கம் அளிக்கத்தக்கவர்கள்.

(இக்கட்டுரை, ஏப்ரல் 21, 2012 அன்று மூவர் முதலிகள் முற்றம் சென்னையில் நடத்திய சித்திரைச் சிறப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவசப் பிரசுரத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம்).

கட்டுரை ஆசிரியர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். தமிழகக் கல்வெட்டுகள் குறித்த ஆழ்ந்த புலமை கொண்டவர்.

கல்வெட்டுகளை ஆய்வு செய்வது குறித்து பல புதிய கோணங்களையும், பார்வைகளையும் அளித்து வருபவர்.

மறையும் மறையவர்கள் (ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு),தோள்சீலைக் கலகம் (அ.கணேசனுடன் இணைந்து எழுதியது) ஆகிய நூல்களின் ஆசிரியர். சென்னையில் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் (SISHRI) என்ற ஆய்வு மையத்தை நடத்தி வருகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
RE: பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன்
Permalink  
 


vedanishthananda on May 18, 2012 at 7:36 am

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

சந்தஸ் : வேதத்தின் பாதம்

மாதப் பெயர்கள்

மார்கசீர்ஷி என்பது மார்கழி என்றானதாகச் சொன்னதில், பாஷா வித்யாஸங்கள் நன்றாகத் தெரிந்தன அல்லவா?தமிழில், அநேகமாக ஒவ்வொரு மாஸப் பெயரிலுமே, அந்த பாஷையின் தனி லக்ஷணப்படி மூலமான ஸம்ஸ்கிருதப் பேர் எப்படி மாறுகிறதென்று தெரிகிறது.

பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமியன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும். அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும். அநேகமாக சித்ரா நக்ஷத்தரத்தன்றுதான் சித்திரை மாஸத்தில் பௌர்ணமி வரும். சித்ரா பூர்ணிமை ஒரு விசேஷ நாளாக இருக்கிறது. தமிழில் சித்திரை என்ற மாஸப் பெயர் மூலத்துக்கு மாறாமலே இருக்கிறது. விசாக சம்பந்தமுள்ளது வைசாகம். விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம்தான் வைசாகி. மதுரை மருதையாவது போல், ஸம்ஸ்க்ருத வைசாகி தமிழில் வைகாசியாகிறது. (பெங்காலில் பைஷாகி என்பார்கள்) வைகாசி விசாகமும் உத்ஸவ நாளாக இருக்கிறது. நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் அன்றுதான். இப்போது, புத்த பூர்ணிமா என்பதாக அதற்கு விசேஷம் கொடுத்திருக்கிறார்கள்.

அநுஷ நக்ஷத்ர ஸம்பந்தமுள்ளது ஆநுஷீ. அந்த நக்ஷத்ரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற ஆநுஷீமாஸம், தமிழில் ஆனி ஆகிறது. ஷகாரம் தமிழில் உதிர்ந்துவிடுகிறது.

ஆஷாடத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் – முன்;உத்தரம் -பின். ‘பூர்வாஷாட’த்தில் ‘ர்வ’கூட்டெழுத்துச் சிதைந்தும், ‘ஷா’உதிர்ந்தும், தமிழில் ‘பூராடம்’என்கிறோம். இப்படியே உத்தராஷாடத்தை ‘உத்திராடம்’ என்கிறோம். இந்த ஆஷாடங்களில் ஒன்றில் பௌர்ணமி ஸம்பவிப்பதால், ‘ஆஷாடீ’எனப்படுவதுதான், நம்முடைய ‘ஆடி’ மாஸம்.

ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்ரத்தைக் குறித்தது. முதலில் உள்ள ‘ச்ர’தமிழில் அப்படியே drop -ஆகி, ‘வண’த்தை ‘ஒணம்’என்கிறோம். அது மஹாவிஷ்ணுவின் நக்ஷத்ரமாதலால், ‘திரு’என்ற மரியாதைச் சொல்லைச் சேர்த்துத் திருவோணம் என்கிறோம். (இவ்வாறே ‘ஆர்த்ரா’என்ற சிவபெருமானின் நக்ஷத்ரத்தை ஆதிரை என்றாக்கி, அதற்கும்’திரு’ சேர்த்துத் ‘திருவாதிரை’என்கிறோம். திரு அச்வினி, திருப் பரணி என்றெல்லாம் சொல்வதில்லை. கார்த்திகை மாஸ தீப உத்ஸவத்தை மட்டும் திருக்கார்த்திகை என்றாலும், மற்ற சமயங்களில் திரு போடாமல் கார்த்திகை என்றே சொல்கிறோம். ஹரி-ஹரபேதம் பார்க்காத தமிழ் மரபு அவ்விருவர் நக்ஷத்ரத்துக்கு மட்டும் எப்போதும் ‘திரு’போட்டு மரியாதை தருகிறது. இந்த விஷயம் இருக்கட்டும்) அநேகமாகப் பௌர்ணமி ச்ரவணத்திலேயே வருவதான ‘ச்ராவணி’தான், ஸம்ஸ்கிருதத்துக்கே உரிய சகார, ரகாரக் கூட்டெழுத்து drop ஆகி, ஆவணியாகிறது.

இப்படி ஏகப்பட்ட எழுத்துக்கள் தமிழில் உதிர்வதற்கு ‘ஸிம்ஹளம்’என்பது ‘ஈழம்’என்றானது ஒரு திருஷ்டாந்தம். ஸ வரிசையம் ச வரிசையும் தமிழில் அ வரிசையாய் விடும்.

‘ஸீஸம்’ என்பதுதான் ‘ஈயம்’என்றாயிருக்கிறது. ‘ஸஹஸ்ரம்’என்பது கன்னடத்தில் ‘ஸாஸிரம்’ என்றாயிருக்கிறதென்றால், அந்த ‘ஸாஸிரம்’ தமிழில் ‘ஆயிரம்’என்று ஸகாரங்களை உதிர்த்துவிட்டு உருவாயிருக்கிறது.

‘ஆயிர’த்தைச் சொன்னதால் மற்ற எண்களைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன். ஒன்று, இரண்டு, மூன்று முதலியன ஏக, த்வி, த்ரி முதலான ஸம்ஸ்கிருத வார்த்தைகளின் தொடர்பில்லாதவையாகவே உள்ளன. பஞ்ச-அஞ்சு;அஷ்ட-எட்டுஎன்பன மட்டும் ஸம்பந்தமிருக்கிறாற்போல் தோன்றுகிறது. இங்கிலீஷ் two, three என்பவை ஸம்ஸ்கிருத த்வி,த்ரி ஸம்பந்தமுடையவைதான். Sexta, hepta, octo, nove,deca என்பதாக ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து சம்பந்தத்தைச் சொல்லும் வார்த்தைகள் ஷஷ்ட, அஷ்ட, நவ, தச என்ற ஸம்ஸ்கிருத மூலத்திலிருந்தே வந்திருப்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. ஆனால் முதல் எண்ணான one என்பது ‘ஏக’ என்பதன் ஸம்பந்தமே இல்லாமல், தமிழ் ‘ஒன்று’ என்பதன் ஸம்பந்தமே இல்லாமல், தமிழ் ‘ஒன்று’என்பதன் முதல் இரண்டு எழுத்துக்களாக இருப்பது ஆச்சரியமாயிருக்கிறது. தெலுங்கிலோ தமிழ் ஒன்று-வின் ‘ஒ’ வும், ஸம்ஸ்கிருத ‘ஏக’வின் ‘க’வும் சேர்ந்து ‘ஒகடி’என்றிருக்கிறது. இதெயெல்லாம் பார்க்கும்போது இனத்தில் எல்லாம் ஒன்று என்பதுபோல், திராவிட -ஸம்ஸ்கிருத பாஷைகளுக்குங்கூடப் பொதுவான ஒரே மூலபாஷை இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

ஸிம்ஹளத்தில் ‘ஸிம்ஹ’என்பதில் ஸ,ஹ இரண்டும் drop -ஆகி ‘இம்ளம்’, ‘ஈளம்’ என்றாகி, ள வும் ழ வாகி ஈழம் என்று ஏற்பட்டிருக்கிறது.

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம்தான் தமிழில் பூரட்டாதி என்றாயிற்று. ‘அஷ்ட’ என்பது ‘அட்ட’என்றாவது தெரிந்ததுதானே?உத்தர ப்ரோஷ்டபதம் உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்ரங்கள் ஒன்றிலோ, அதை ஒட்டியோ பௌர்ணமி ஏற்படுகிற ப்ரோஷ்டபதீ என்பதே புரட்டாசி என்று எப்படியெப்படியோ திரிந்து விட்டது.

ஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ‘ ஆச்வயுஜீ ‘ அல்லது ‘ ஆச்வினீ ‘ தான், நம் ‘ ஐப்பசி ‘.

கிருத்திகாவுக்கு adjective -ஆன கார்த்திகம்தான் கார்த்திகை என்று ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. முக்காலே மூன்று வாசி திருக்கார்த்திகை தீபோத்ஸவம் பௌர்ணமியாகத்தானே இருக்கிறது?மார்கசீர்ஷி மார்கழியாவதில்தான் ஆரம்பித்தேன். அம்மாதப் பௌர்ணமி திருவாதிரைப் பண்டிகையாகத் தடபுடல் படுகிறது. புஷ்யம்தான் தமிழில் பூசம். (இந்தப் ‘பூச’ சப்தம் பழகிப் பழகியே புனர்வஸுவையும் புனர்பூசம் என்கிறோம். அது புனர்வஸுவேயன்றி புனர் புஷ்யம் இல்லை!) புஷ்ய ஸம்பந்தமானது பௌஷ்யம்.புஷ்யத்துக்குத் திவ்யம் என்றும் பெயர். பூர்ணிமை திஷ்யத்திலே வரும் மாஸம் ‘தைஷ்யம்’. அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய்த் தமிழில் ‘தை’மட்டும் நிற்கிறது.

மாசி மகம் பௌர்ணமியில்தான் வருகிறது. மாகமாஸம் என்று மகநக்ஷத்ரத்தை வைத்துப் பெயரிட்டது, தமிழில் மாசி என்றாகியிருக்கிறது. ககாரம் சகாரமாகி, மாகி என்பது மாசி என்றாயிருக்கிறது. வைகாசி, புரட்டாசி, ஐப்பசி என்று C யில் முடிந்தாற்போலவே, இங்கேயும் C யில் முடித்து, மாசி என்று சொல்கிறோம்.

பூர்வ பல்குனம், உத்தர பல்குனம் என்ற இரண்டு நக்ஷத்ரங்கள் உண்டு. இரண்டிலும் நாம் முக்யமான பெயரான பல்குனம் என்பதைத் தள்ளவிட்டு, ‘பூர்வ’த்தை ‘பூரம்’ என்றும், ‘உத்தர’த்தை உத்தர நக்ஷத்திரம் என்றுமே சொல்கிறோம். ஆனால், இந்த நக்ஷத்ரங்களில் ஒன்றில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸத்தை மட்டும் “பல்குன”என்ற சப்த ஸம்பந்தமுள்ள “பங்குனி” என்ற பெயரால் குறிக்கிறோம். அந்தப் பௌர்ணமியில்தான் பங்குனி உத்தரம் என்று திருக்கல்யாண உத்ஸவம் செய்கிறோம்.

இப்படிப் பன்னிரண்டு மாஸப் பெயர்களைப் பார்த்தாலே, ஸம்ஸ்கிருதத்திலுள்ள எந்தெந்த ஒலிகள் தமிழில் எப்படியெப்படி மாறும் என்பது தெரிந்துவிடும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard