New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதிக்கட்சியின் மறுபக்கம் – ம வெங்கடேசன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
நீதிக்கட்சியின் மறுபக்கம் – ம வெங்கடேசன்
Permalink  
 


 

 

justice11

‘‘சுதேச சீர்திருத்தமென வெளிவந்திருக்கும் இந்துக்கள் ஜாதி பேதத்தை நீக்கிவிட்டு ஒற்றுமையாக வேண்டும் என வீண்புரளி செய்கிறார்களே ஒழிய நிச்சயமாக ஜாதி பேதத்தை நீக்க பிரயத்தனப்படுபவர்களாக இல்லை. அவர்கள் முக்கியமாக ஜாதி பேதம் விட்டுவிட வேண்டும் என பிரசிங்கிப்பதெல்லாம் பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களாகிய நாலு வர்ணத்தார்கள் மாத்திரம் சேர்ந்து கொள்ளவேதான்.

மற்ற தாழ்ந்தவர்கள் என சொல்வோர்களிடம் சமயத்திற்கு மட்டுமே சேர்ந்து போரில் வெற்றிபெற்று சுய ஆதினம் பெற வேண்டும். பிறகு முன்போல தாழ்ந்தவர்களாக அந்த நாலு வர்ணத்துடன் சேர முடியாது என்பது எல்லா சுதேச சீர்த்திருத்தக்காரர்களுடைய கொள்கையேயாம்’’…

‘‘தமிழன்’’ பத்திரிகை ஆசிரியர் பண்டிதர் க.அயோத்திதாசர்

1. தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக போராடியது யார்?

திராவிட இயக்கத்தவர்கள் நீதிக்கட்சியைப் பற்றி எழுதும்பொழுது ‘‘ நீதிக்கட்சி பதினாறு ஆண்டுகள் இடைவிடாது ஆட்சி நடத்தாமல் இருந்திருந்தால் அந்த ஆட்சிக்கு 1925 முதல் தம் முழு ஒத்துழைப்பைப் பெரியார் தராமல் இருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் தலை எடுத்திருக்கவே முடியாது. வளர்ச்சி அடைந்திருக்கவே மாட்டார்கள்’’ (அடிக்குறிப்பு 1) என்றும் –
‘‘அந்த கால அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் பலராக இல்லை. தாழ்த்தப்பட்டவருள் அரசியல் அறிவு வாய்க்கப்பெற்றிருந்த ஓரிருவர் நீதிக்கட்சியில் சேர்ந்திருந்தனர். தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் நீதிக்கட்சி கொடியின் கீழ் அணிவகுத்து நின்றனர். நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக போராடிற்று….நீதிக்கட்சி உயர்ந்த சாதி இந்துக்களின் பெண்களை பறையர்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புவதாக இடைவிடாது பார்ப்பனர் பிரசாரம் செய்தனர். நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த உயர்சாதி இந்துக்களிடையே இந்தப் பொறாமைப் பிரசாரம் ஒரு பயன்தராத நிலையை உருவாக்க முயன்றது. எனினும் பொருட்படுத்தாது நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தது. (அடிக்குறிப்பு 2) தாழ்த்தப்பட்டவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும்,போராடுவதற்காகவும் நீதிக்கட்சி உருவாகிற்று.’’ (அடிக்குறிப்பு 3)

தாழ்த்தப்பட்டவர்கள் பிற சமுதாயத்தினர்க்கு ஒப்ப எல்லா உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் பிறந்தது நீதிக்கட்சி. நீதிக்கட்சி தோன்றிய காலத்தில் தாழ்த்தப்பட்டவர் பட்ட துன்பங்களையும் அவர்கள் அடைந்த இன்னல்களையும் அவர்கள் பெற்ற அவமானங்களையும் எழுதுவதென்றால் அவை இந்நாட்டின் ஒரு அவல வரலாறாகவே அமைந்துவிடும். அவர்கள் குரலற்றவர்களாகவும் செயலற்றவர்களாகவும் அப்போது இருந்தார்கள். அவர்களுக்காகப் பேச செயல்பட ஒரே இயக்கமாக நீதிக்கட்சி தென்னகத்தில் உருவாயிற்று. (அடிக்குறிப்பு 4)

– என்றும் குறிப்பிடுகிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் குறித்து எழுதவும் பேசவும் பொழுதெல்லாம் ‘நீதிக்கட்சி’ என்ற அரசை குறித்துத் திராவிடக் கழகத்தவர் முதல் பல எழுத்தாளர்கள் வரை பெருமைப் பொங்கக் கூறுகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு எழுதுவதின் நோக்கமென்ன?

தாழ்த்தப்பட்டோர் சிந்தனையற்றவர்களாவும் செயலற்றவர்களாகவும் இருந்தார்கள் என்றும், தாழ்த்தப்பட்டவரிடையே அரசியல் அனுபவமுள்ளவர்களே ஒரு சிலரே என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமையையும் முன்னேற்றத்தையும் பார்ப்பனரல்லாத உயர்சாதி இந்துக்களால் வழிநடத்தப்பட்ட நீதிக்கட்சி மற்றும் ஈ.வே.ராமசாமி நாயக்கராலேயே செய்ய முடிந்தது என்று தாழ்த்தப்பட்டோர்கள் நம்ப வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கமாகும்.

‘‘ பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினர் எனப் பாராது அனைவர்க்கும் இடம் தரும் ‘திராவிடர் ஹோம்’ பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியராகிய சி. நடேச முதலியாரால் உருவாக்கப்பட்டது என்பதும் அறிகிறோம்.

உரிமைகள் தமக்கும் உண்டு என்பது கூட அறியாராய்த் தமது உரிமைகள் எவை என்பதை அறியாராய் வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காக இலண்டன் மாநகரத்தில் திராவிடச் சங்கம் சார்பில் சான்றுரை பகர்ந்தவர் பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியராகிய சர். ஏ. இராமசாமி முதலியார் என்பதையும் அறிகிறோம்.(அடிக்குறிப்பு 5)”

இப்படிக் கூறுவதன் நோக்கமென்ன?

பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியைச் சார்ந்தவர்கள் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடியவர்கள் என்பதை தெரியப்படுத்துவதற்குத்தான்.

ஆனால் உண்மை என்ன?

உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?

நீதிக்கட்சி இல்லாத போது சிந்தனையற்றும் செயலற்றும், உரிமைகள் தமக்கும் உண்டு என்பது கூட அறியாராய்த் தமது உரிமைகள் எவை என்பதை அறியாராய் வாழ்ந்து கொண்டிருந்தனரா தாழ்த்தப்பட்டவர்கள்?

தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இல்லாது இருந்தார்களா?

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததா?

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன?

இந்தக் கேள்விகள் மிக மிக முக்கியமானவைகள். இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றையும் மிக விரிவாகவே நாம் ஆராய்வோம்.

விருப்பு வெறுப்பு இல்லாமல் ஓர் ஆராய்ச்சி முறையில் நாம் நீதிக்கட்சிப் பற்றியும், தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை பற்றியும் இவர்கள் கூறியிருக்கின்ற கருத்துக்களை ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால் நிச்சயமாகவே இவர்கள் கூறியிருக்கின்ற கருத்துகள் அப்பட்டமான வரலாற்றுப் பொய்கள் என்பது புலப்படும்.

தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல்

justice-partyதாழ்த்தப்பட்டவர்கள் எப்பொழுதுமே தங்கள் உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்பதைத்தான் சரித்திரம் நமக்கு சான்று பகர்கின்றது.

1779 – இல் சென்னை நகரத்தின் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கருகில் இருந்த தங்களின் குடிசைகளை அப்புறப்படுத்துவதை எதிர்த்துக் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு விண்ணப்பம் அளித்தனர்.

1810 – இல் அந்தக் காலத்தில் ‘பறச்சேரி’ என வழங்கிய பகுதியிலிருந்த தங்களின் குடிசைகளுக்கு விதிக்கப்பட்ட உரிமைத் துறப்பு வரிவிதிப்பை எதிர்த்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த பிரிட்டிஷ் நிர்வாகத்தாருக்கு மனு அளித்தனர். பிற்காலத்தில் இந்த இடம் ‘பிளாக் டவுன்’ என்று ஆனது.

1870 – இல் ‘ ஆதிதிராவிட மகாஜன சபை’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். அது பதிவு செய்யப்படாதது. பின்பு 1892ல் அது பதிவு செய்யப்பட்டது.

1917 – இல் இந்தியாவுக்கு வந்த மாண்டேகு – செம்ஸ்போர்டு தூது குழுவினரிடம் ஒரு மகஜரைக் கொடுத்துத் தங்களை ‘ஆதிதிராவிடர்’ என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த மகாஜன சபைவின் செயலாளர் எம்.சி.ராஜா, 1922 – இல் அப்போதைய ஆளுநர் வெலிங்டன் பிரபுவால் சட்டமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றபோது ‘ஆதிதிராவிடர்’ என்ற பெயரைச் சட்டபூர்வமாக ஏற்கச் செய்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்த தீண்டாதோர் ‘ஆதிதிராவிடர்’ எனப்படலாயினர். பின்னர் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் இருந்த தீண்டாதார் முறையே ‘ஆதிஆந்திரர்’, ‘ஆதி கர்நாடகர்’ எனப்பட்டனர்.

1891 – இல் ‘திராவிட மகாஜன சபா’ என்ற பெயரில் ஒரு சங்கத்தை ஏற்படுத்தினர். அதன் சார்பில் 1-12-1891 – இல் உதக மண்டலத்தில் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் செட்யூல்டு வகுப்பாருக்கு அரசியல் உரிமைகள், அரசு பணிகளில் வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், கல்விச் சலுகைகள், சிவில் உரிமைகள் ஆகியவற்றைப் பெறுவது பற்றிப் பேசப்பட்டது. பின்வரும் பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதற்காக ‘பறையன்’ என்று அழைப்பதையும், அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதையும் தடுப்பதற்குரிய வகையில் கடுமையான தண்டனை விதிப்பதற்கு வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும்.

2. தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் காண்பதற்குக் கல்வி மிக அவசியமாகும்.எனவே, கிராமங்கள் தோறும் தாழ்த்தப்பட்டோரை ஆசிரியர்களாகக் கொண்ட தனியான பள்ளிகளைத் தாழ்த்தப்பட்டோர் வாழும் கிராமங்கள் தோறும் தொடங்க வேண்டும்.

3. மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் மூவரைத் தேர்ந்தெடுத்து பட்டப்படிப்புப் படிப்பதற்காக உதவித் தொகை வழங்க வேண்டும்.

4. மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெறுவோர் அனைவருக்கும் அரசு அலுவலகங்களில் வேலை கொடுத்து உதவ வேண்டும்.

5. கல்விக்கும், நன்னடத்தைக்கும் தக்கவாறு அரசாங்க அலுவலகங்களில் நியமனம் அளிப்பதற்கு எவ்வகையான தடையும் இருக்கக் கூடாது.

6. மாவட்டங்கள் தோறும் நகராட்சிகளிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வதற்காகத் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படுவோர் வரி செலுத்துவோராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தாமல் கல்வித் தகுதி, நன்னடத்தை ஆகியவற்றைக் கருதி நியமிக்கப்பட வேண்டும். நகராட்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தில் தாழ்த்தப்பட்டோர் சார்பில் நியமனம் பெற்ற உறுப்பினர் மற்ற உறுப்பினர்களுக்கு சமமாகவும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும்.

7. சிறைச்சாலை விதிகள் 464ன் படி சிறைச்சாலைகளில் ‘பறையர்கள்’ இழிந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று விதித்திருப்பதை நீக்க வேண்டும்.

8. தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக்கிணறுகள், குளங்கள் ஆகியவற்றில் எவ்வித தடையும் இன்றித் தண்ணீர் எடுத்து அருந்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

9. நீதிமன்றங்கள், அரசாங்க அலுவலகங்கள் ஆகிய இடங்களில் மற்ற இந்துக்களோடு தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லவும், சமமாக உட்காரவும் தற்போதுள்ள கட்டுப்பாடுகளை ஒழிக்க வேண்டும்.

10. நன்னடத்தையுள்ள தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையினராக உள்ள கிராமங்களில் கிராம ‘முன்சீப்’ பதவியிலும், மணியக்காரர் பதவியிலும் அமர்த்தப்பட வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கிராமங்களுக்குப் பார்வையிடப் போகும் போது தாழ்த்தப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு நியாயம் வழங்க வேண்டும்.
இந்தத் தீர்மானங்களையும் கோரிக்கைகளையும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் இவற்றைப் பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சி ரசீது பெறப்பட்டது. ஆயினும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதற்கான பதில் எதுவும் திராவிட மகாஜன சபாவுக்கு அனுப்பப்படவில்லை. முஸ்லீம்களின் சங்கமும் இதற்கான பதிலெதுவும் அளிக்க முன் வரவில்லை.இதைக்குறிப்பிட்டு அந்தக்காலத்தில் பெயர் பெற்ற செட்யூல்டு வகுப்பு மக்களின் தலைவர் அயோத்திதாசப் பண்டிதர், ‘பிராமணர் காங்கிரஸ்’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார், அவ்வாறே முகம்மதியர் சங்கத்தையும் அவர் கண்டனம் செய்திருக்கிறார்.

1891 – இல் சென்னையிலிருந்த செடியூல்டு வகுப்பாரின் தலைவர்கள் ‘ஆதிதிராவிட மகாஜன சபா’ என்று இன்னொரு சங்கத்தை ஏற்படுத்தினர். இந்தச் சங்கமும், செட்யூல்டு வகுப்பாரின் நலன்களுக்காகப் பாடுபட்டது.

1892 – இல் சென்னை அரசாங்கம் அப்போது பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த எஸ்.ராகவ ஐயங்காரைச் சென்னை மாகாணத்தில் செடியூல்டு வகுப்பாரின் முன்னேற்றம் பற்றி விசாரிப்பதற்கு நியமித்தது.

1892 – இல் நடந்த சாதி இந்துக்களின் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட அயோத்திதாசப் பண்டிதரும் மற்றும் செடியூல்டு வகுப்பைச் சார்ந்த தலைவர்களும், செடியூல்டு வகுப்பைச் சார்ந்த பிள்ளைகள் படிப்பதற்குக் கிராமங்களில் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டுமென்றும், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் புறம்போக்கு நிலங்களை ஆங்காங்கே உள்ள செடியூல்டு வகுப்பாருக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர். சாதி இந்துக்களின் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மேற்படி தீர்மானங்களை ராவ் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் ஒரு மாநாட்டைக் கூட்டி மீண்டும் நிறைவேற்றி அனுப்பினார். அப்போதைய சென்னை அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கோண்டு, நிலமில்லாத செடியூல்டு வகுப்பாருக்கும் முன்னாள் படை வீரர்களுக்கும் நிலங்களை ஒதுக்கி அளிக்கவும், பள்ளிகளைத் தொடங்கவும் உத்தரவு பிறப்பித்தது.
( அரசாணை எண்:1010 – வருவாய்த்துறை-நாள்:30.9.1892)
( அரசாணை எண்:1010 அ – வருவாய்த்துறை-நாள்:30.9.1892)
( அரசாணை எண்: (சென்னை) 68 – கல்வித்துறை-நாள்:1.12.1893)

1891 – ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல மாநாடுகளையும் கூட்டங்களையும் செடியூல்டு வகுப்பு மக்கள் தொடர்ந்து நடத்தி இருக்கிறார்கள். (1891ஆம் ஆண்டில்தான் ஈவேரா காசிக்குப் புனித பயணம் மேற்கொண்டார்)

தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய கூட்டங்கள், மாநாடுகள் பற்றிய விபரங்கள் பெரியவர் டி.பி.கமலநாதன் அவர்கள் எழுதிய Mr.K.Veeramani, M.A,B.L. is Refuted and the Historical Facts about the Schedule Caste’s Struggle for Emancipation in South India என்ற நூலிலும், பெரியவர் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய உணவில் ஒளிந்திருக்கும் சாதி என்ற நூலிலும் பல விபரங்கள் விரவிக்கிடக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களின் போராட்டங்களைப் பற்றி அறிய விரும்புகிறவர்கள் அப்புத்தகங்களைப் படிக்கவும்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக பல பத்திரிகைகளையும் தாழ்த்தப்பட்டவர்கள் நடத்தி இருக்கிறார்கள்.

1869 – சூரியோதயம், 1900 – பூலோக வியாசன்,

1871 – பஞ்சமன்

1877 – சுகிர்த வசனி

1885 – திராவிட பாண்டியன் – ஆசிரியர் : ஜான் ரத்தினம்

1885 – திராவிட மித்திரன்

1886 – ஆன்றோர் மித்திரன் – ஆசிரியர் : வேலூர் முனிசாமி பண்டிதர்

1888 – மகாவிகட தூதன் – ஆசிரியர் : டி.ஐ.சுவாமிக்கண்ணு புலவர்

1893 – பறையன் – ஆசிரியர் : இரட்டைமலை சீனிவாசன்

1898 – இல்லற ஒழுக்கம்

1900 – பூலோக வியாசன் – ஆசிரியர் : தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரப்புலவர்

1907 – தமிழன் – ஆசிரியர் : க.அயோத்திதாசப் பண்டிதர்

1907 – திராவிட கோகிலம் – சென்னை, செடியூல்டு வகுப்பு மதம் மாறிய கிறிஸ்தவச்சங்கத்தார் வெளியீடு.

1916 – தமிழ்ப் பெண் – ஆசிரியர் : சொப்பன சுந்தரியம்மாள் (அடிக்குறிப்பு 6)

இந்த இதழ்கள் சாதிக்கொடுமையையும், தீண்டாமையையும் எதிர்த்துப் போராடி வந்துள்ளன. தமிழன் வார இதழ் இந்த எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது.

இதனால் செடியூல்டு வகுப்பு மக்கள், குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, வடாற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களில் விழிப்புற்றனர். சிவில் உரிமைகளுக்கான கோரிக்கைகள் எழுந்தன. இவற்றைப் பற்றிய விபரங்கள் செய்தி இதழ்களில் வெளிவரலாயிற்று.

1902 ஆம் ஆண்டில் கிராம மேய்ச்சல் நிலத்தில் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பதற்கும் இருந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து அப்போதைய செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தைச் சேர்ந்த ஒரத்தூர் கிராம மக்கள் சிவில் உரிமைப் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய பண்டிதர் அயோத்திதாசர் இந்த மக்களின் குறையை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். தமிழன் இதழிலும் இதைப்பற்றி விரிவான செய்திகளை வெளியிட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக தொண்டுமனம் படைத்த தன்னலமில்லாத பலர் கல்விக் கூடங்களையும், இரவுப் பள்ளிகளையும், மாணவர் விடுதிகளையும் ஆரம்பித்தனர்.

சென்னை, வெஸ்லியன் மிஷன் பள்ளியைச் சார்ந்த ஜான் ரத்தினம் பிள்ளை, சென்னை, பிரம்மஞானச் சபையைச் சார்ந்த கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் துரை, தங்கவயல் செல்லப்ப மேஸ்திரி, எம்.ஏ.முருகேசம், ஆர்.ஏ.தாஸ், சிதம்பரம் சாமி சகஜானந்தா, பி.வி.சுப்பிரமணியம், இரத்தினம், திருச்சி வீராசாமி, எல்.சி.குருசாமி, பி.எஸ்.மூர்த்தி, எம்.பழனிச்சாமி ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்க சிலராவர்.

1937ல் அப்போதைய ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜமேதார் ஆதிமூலம், பி.எத்துராஜ், தம்பிசாமி மேஸ்திரி, டி.முனிசாமி பிள்ளை ஆகியோர் முயற்சியால் வேலூரில் வட ஆற்காடு மாவட்ட ஆதிதிராவிடர் கல்வி அபிவிருத்தி சங்கம் நிறுவப்பட்டது. 1938 இல் இந்தச் சங்கத்தின் சார்பில் தங்கவயல் ஆர்.ஏ.தாஸ் அவர்களின் தந்தையார் ராமதாஸ் பெயரில் மாணவர் விடுதி ஒன்று ஏற்பட்டது. ராணிப்பேட்டையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜெயராமன், ஏ.சுந்தரம், வி.எல்.மோகனம், ஜி.ஜெகன்நாதன், ஜே.வி.ராகவன், கங்காதரன், ஆர்.டி.எஸ்.மூர்த்தி, கே.பி.ஆறுமுகம் ஆகியோரின் அரிய முயற்சியால் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் மாணவர் விடுதி ஏற்பட்டது.

எம்.கிருஷ்ணசாமி, ஜே.ஜே.தாஸ், கே.எம்.சாமி, வி.எஸ்.சுப்பையா, ஆதிமூலம், டாக்டர் சுப்பிரமணியம் ஆகியோரும் பிறரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக அயராது பாடுபட்டவர்களாவர்.

இதுமட்டுமல்ல,

மாண்டேகு குழுவின் அரசியல் சீர்திருத்தத்தைப்பற்றி தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்கள் பல கூட்டங்களில் தங்கள் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்து கொண்டார்கள். நீதிக்கட்சியினர் அக்குழுவினரை சந்திப்பதற்கு முன்பே ஆதிதிராவிட ஜன சபையார் சந்தித்து விட்டார்கள்.(அடிக்குறிப்பு 7)

நீதிக்கட்சியும், ஈவேராவும் தங்களின் உரிமைகளைப் பற்றி சிந்தனை செய்யுமுன்னே தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி சிந்தித்து அதற்காகப் போராடியுள்ளனர்.
தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக தாங்களே போராடிய சரித்திர சான்று இப்படியிருக்க, நீதிக்கட்சி இல்லை என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊமைகளாய் இருந்திருப்பார்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய் அல்லவா!

(தொடரும்)

அடிக்குறிப்பு :
1 – 5: நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?, திராவிடர் கழக வெளியீடு
6 – 7: உணவில் ஒளிந்திருக்கும் சாதி, சித்தார்த்தா பதிப்பகம்
 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திருட்டு எழுத்தும் புரட்டு வரலாறும்:

முதுபெரும் திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்கள், ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற தலைப்பில் ஆதிதிராவிடத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி 1993ல் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் தலித் தலைவர்களின் வரலாற்றைச் சுருக்கமாக திரட்டித் தந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார். உண்மையில், இந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்களில், க.அயோத்திதாசர் பற்றிய தகவல்கள் மற்றும் பின்னிணைப்புகளைத் தவிர மற்றவை அனைத்தும் அறிஞர் அன்புபொன்னோவியம் எழுதியவை. அவற்றை அப்படியே திருடி க.திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார். அவர் எங்கிருந்து திருடினார் ?

1969ல் பதிவுசெய்யப்பட்ட செட்யூல்டு வகுப்பினர், மலைவாசியினர் சமூக நல மன்றம், சென்னை என்ற சங்கம் 1971ம் ஆண்டுக்கான ஒரு நாள்காட்டியை வெளியிட்டது. அந்த நாள்காட்டியில்தான் அறிஞர் அன்புபொன்னோவியம் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் உயர்வுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். இந்த நாள்காட்டியில் உள்ள தகவல்களை மீண்டும் அகில இந்திய பட்டியலினத்தோர், மலைவாசியினர், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையோர் பணியாளர் நல சங்கத்தின் சார்பாக செட்யூல் வகுப்பினர், மலைவாசியினர் சமூக நல மன்றம் 1974ல் வெளியிட்டது. இந்த நாள்காட்டியில் உள்ள தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைகளைத்தான் க.திருநாவுக்கரசு அவர்கள் அப்படியே “களத்தில் நின்ற காவலர்கள்” என்ற தன் நூலில் ‘பயன்படுத்தியிருக்கிறார்’.

இவர் இதைப் பயன்படுத்தியது தவறே இல்லை. ஆனால் அத்தகவல்களை எங்கிருந்து எடுத்தார், அதை மூல நூலில் யார் எழுதினார்கள் என்பவற்றை மறைத்ததுதான் தவறு.  தன்மகன் உட்பட பலருக்கு முன்னுரையில் நன்றி தெரிவித்த க.திருநாவுக்கரசு, அறிஞர் அன்புபொன்னோவியத்திற்கும் நன்றி தெரிவித்து இருக்கலாம். ஆனால், அப்படி நன்றி தெரிவித்திருந்தால் அது தன் எழுத்து அல்ல என்று தெரிந்துவிடுமே என்ற காரணத்தால்தான் அவர் நன்றி தெரிவிக்கவில்லை. மேலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் எழுதியதைத் தாம் அப்படியே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற நெருடலும்கூட அறிஞர் அன்பு பொன்னோவியத்தின் பெயரை வெளியே சொல்லாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

“களத்தில் நின்ற காவலர்கள்” என்ற இந்த நூல் உண்மையின் களத்தில் எதை நிரூபிக்கிறது ?

ஒரு தலித் எழுத்தாளரை, திராவிட இயக்கத்தவர் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகிறார்கள் என்பதைத்தான் இந்த நூல் நிறுவுகிறது. அது மட்டுமா ?

இந்நூலின் 92ஆம் பக்கத்திலும் 154ம் பக்கத்திலும் பி. எம். மதுரைப்பிள்ளை பற்றிய தகவல்கள் வருகின்றன. ‘புரவலர் பெருமகன் பி. எம். மதுரைப்பிள்ளை’ என்ற தலைப்பில் 92ம் பக்கத்தில் பி. எம். மதுரைப்பிள்ளையைப் பற்றிப் பேசிவிட்டு, அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை மீண்டும் தருவதாக நினைத்து 154ம் பக்கத்திலும் மதுரைப்பிள்ளையைப் பற்றித் தகவல்கள் தருகிறார்.  அவை “பி. எம். மதுரைப்பிள்ளை” என்ற தலைப்பில் திரு.வி.க வெளியிட்ட தகவல்கள் என்று குறிப்பிடுகிறார். அவரது குறிப்பின்படி, திருவிக தனது கட்டுரையில் 1921ஆம் ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் ஆதிதிராவிடர்க்கு உதவி புரிந்தவர் என்று மதுரைப்பிள்ளையைக் குறிப்பிட்டுள்ளார்.

எம். சி. மதுரைப்பிள்ளை

பி. எம். மதுரைப்பிள்ளை

அதாவது 92ம் பக்கத்தில் உள்ள மதுரைப்பிள்ளையும், 154ம் பக்கத்தில் உள்ள மதுரைப்பிள்ளையும் ஒருவரே என்ற முடிவில் அவர் எழுதியிருக்கிறார். ஆனால், உண்மை என்ன?

92ம் பக்கத்தில் உள்ள பி. எம் மதுரைப்பிள்ளை 1858ல் பிறந்து 1913ஆம் ஆண்டு இறந்துபோனவர்.  திருவிக குறிப்பிடும் எம்.சி. மதுரைப்பிள்ளை 1880ல் பிறந்து 1935ல் இறந்தவர்.

திருவிக குறிப்பிடுவது எம். சி. மதுரைப்பிள்ளையை. திருநாவுக்கரசு குறிப்பிட நினைப்பதோ பி. எம் மதுரைப்பிள்ளையை.

(படங்கள் உதவி: அன்பு. பொ. ஆதிமன்னன்)

திருநாவுக்கரசு உண்மையிலேயே தேடி அலைந்து இந்த புத்தகத்தை எழுதியிருந்தால் இந்த உண்மைகள் அவருக்குப் புரிந்திருக்கும்! இது திருட்டுப் புத்தகம்தானே ! அதுவும் ஒரு ஆதிதிராவிட எழுத்தாளரின் புத்தகத்தைத்தானே திருடியிருக்கிறோம் என்ற நினைப்பில் எதையுமே ஆராயாமல் வெளியிட்டுவிட்டார் போலும். ஆனால் அறிஞர் அன்புபொன்னோவியம் தான் எழுதிய “மக்களுக்கு உழைத்த பெருமக்கள்” என்ற நூலில் தெளிவாக இருவரையும் பிரித்தே எழுதியிருக்கிறார். அது மட்டுமா ?

திருநாவுக்கரசுவின் இந்த புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார் திராவிட இயக்க எழுத்தாளரும், ஆய்வாளருமான (!) எஸ்.வி.ராஜதுரை. எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை – வரலாற்றை – தாழ்த்தப்பட்டவர்களால் போராடிப் பெற்ற உரிமைகளை – நீதிக்கட்சி, ஈவேரா இவர்களுக்கு உரிமையாக்கி விடுவார் இவர். இந்த புத்தகத்திலும் அதுமாதிரியான ஒரு வரலாற்றுப் புரட்டலை செய்திருக்கிறார் எஸ். வி. ராஜதுரை.

இந்நூலின் அணிந்துரையில் “தலித் தலைவர் எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் உறுப்பினராகவே தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். டாக்டர் நாயர்தான் தம்மை அரசியலில் ஈடுபடுத்திய ஆசிரியர் என்று அவரே பல நேரங்களில் கூறியுள்ளார்” என்று எழுதியிருக்கிறார். ஆனால், “டாக்டர் நாயர்தான் தம்மை அரசியலில் ஈடுபடுத்திய ஆசிரியர்” என்று எம்.சி.ராஜா எங்கே, எப்போது கூறினார் என்ற விபரத்தை மட்டும் தரவில்லை !! போகிற போக்கில் எழுதிச் சென்றுள்ளார்.

எம்.சி.ராஜா தன் அரசியல் வாழ்வை ஆதிதிராவிட மகாஜனசபையிலிருந்தே துவங்கினார். தனது 25வது வயதில் 1908ல் இருந்து பொதுத்தொண்டில் ஈடுபட ஆரம்பித்தார். 1916ல் சென்னை ஆதிதிராவிட மகாஜன சபாவைச் சீரமைப்பதில் பெரும்பங்காற்றினார். அந்த சபாவின் கௌரவச் செயலாளராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 36வது வயதில் 1919ல் சட்டமன்ற உறுப்பினரானார். 1927ல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இதுதான் உண்மை. எம். சி. ராஜாவை அரசியலில் கொண்டு வந்தது ஆதிதிராவிட மகாஜனசபை. ஆனால், அவரை அரசியலுக்குக் கொண்டு வந்த பெருமையை நீதிக்கட்சியைச் சேர்ந்த டாக்டர் நாயருக்குத் தானம் செய்து விட்டார் எஸ். வி. ராஜதுரை. அது மட்டுமா ?

இந்த நூலில் “சில சாதனைகளும் தகவல்களும்” என்ற தலைப்பில் நீதிக்கட்சி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்னென்ன உரிமைகள் பெறப்பட்டன என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார்.அவருடைய நோக்கம் தாழ்த்தப்பட்டத் தலைவர்களின் வரலாற்றை எழுதுவதல்ல. அனைத்துச் சாதனைகளும் நீதிக்கட்சியால் மட்டுமே பெறப்பட்டது என்று நிலைநிறுத்தவே இந்தத் தகவல்களைச் சேர்த்திருக்கிறார்.

வரலாற்றை தம் எண்ணத்திற்கு ஏற்ப மாற்றி எழுதுவதிலும், அதை நம்ப வைக்க, எழுதியவற்றையே மீண்டும் மீண்டும் எழுதுவதிலும் இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் மிக திறமைசாலிகள்தான். ஒரு பொய்யைத் தொடர்ந்து சொன்னால்தான் உண்மை என்று அது நம்பப்படும் என்று நன்கு தெரிந்தவர்கள் அவர்கள். இல்லையென்றால், சமீபத்தில், பத்து வருடங்களுக்கு முன்பு எழுதிய நூல்கள்வரை இப்படிப்பட்ட பொய்களைத் தொடர்ந்து எழுதுவார்களா? பொய்களைத் தருவது மட்டுமல்ல. உண்மைகளையும் இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களின் வரலாற்றை, திராவிட இயக்கத்தார் இருட்டடிப்பு செய்யும் வரலாற்றை, இத்தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாம் பார்க்கத்தான் போகிறோம். இதோ.

நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக போராடிய வரலாறுகள் பல உண்டு. அப்படிப் போராடிய தாழ்த்தப்பட்ட தலைவர்களையும் அவர்களின் போராட்டங்களையும் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

பண்டித க. அயோத்திதாசர் (1845 – 1914):

பண்டித க. அயோத்திதாசர்
சமுதாயத்திலிருந்து அறியாமையை நீக்கவும், உயர்வு தாழ்வு மனப்பான்மையைக் கண்டித்தும், மக்களைச் சிந்திக்க தூண்டும் வகையில் பல நூல்களை எழுதினார். 1886லிருந்து பகுத்தறிவுக் கொள்கையை முதன் முதலில் தமிழகத்தில் பரவச் செய்த பெருமைக்குரியவர். கிராமங்களில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு நிலமும், இடுகாடு-சுடுகாடு போன்றவைகளும் கிடைக்க வழிசெய்தவர். மருத்துவத்திலும் இவர் சிறந்து விளங்கினார்.

1889ல் கர்னல் ஆல்காட், மேரி பால்மெர், ஆனி பெசன்ட் உதவியுடன் நகரில் பல பள்ளிகளை அமைத்தார். 1902ல் தென்னிந்திய பௌத்த சாக்கிய சங்கத்தை நிறுவினார். சமயம், சமுதாயம், கல்வி ஆகிய துறைகளில் மக்களுக்கு இடைவிடாமல் பணியாற்றினார்.  1907ல் தமிழன் என்ற பத்திரிகையைத் துவக்கினார். இது இலங்கை, பர்மா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா போன்ற கடல்கடந்த நாடுகளிலும், இந்தியா முழுவதிலும் பவனி வந்தது. அவர் படைத்த நூல்களில் ‘புத்தரது ஆதிவேதம்’ அவரது ஆராய்ச்சித் திறனுக்கு ஓர் சான்றாகும்.

இரட்டைமலை சீனிவாசனார் (1860 – 1945)

இரட்டைமலை சீனிவாசனார்
இவர் நீலகிரியில் வணிகத்துறை கணக்காயராக பணியாற்றினார். சென்னையில் குடியேறிய பின் 1882லிருந்து 1885வரை பல அரசாங்க குறிப்பேடுகளையும், வரலாற்று நூல்களையும், கல்வெட்டுகளையும் ஆராய்ந்தார். தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் அன்றாட வாழ்ககை நிலைமைகளை நேரில் கண்டறிந்தார். 1884ல் தியோசஃபிகல் சொசைட்டியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். ஆனால், அவ்வமைப்பு பழங்குடி மக்களுக்குப் பயன்படாது என்று உணர்ந்து அப்பேரவையிலிருந்து விலகினார். பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் தோறும் சென்றார். உலக அறிவு தடுக்கப்பட்ட அவர்களிடம் அவர் கல்வி கற்றல், சுகாதாரத்துடன் இருத்தல், சுத்தமான ஆடைகளை அணிதல், ஒழுங்காகப் பேசுதல் போன்றவற்றின் அவசியத்தை உணர்த்தினார். 1891ல் ஆதிதிராவிட மகாஜன சபையில் திறம்பட பணியாற்றினார். 1892ல் ‘பறையன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி மக்கள் விழிப்படையும் வகையில் பல அரிய கருத்துக்களை வெளியிட்டார்.

1893ல் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் பழங்குடி மக்களின் மாநாட்டைக் கூட்டினார். இதுவே பழங்குடி மக்களுக்காக இந்தியாவில் கூட்டப்பட்ட முதல் மாநாடாகும். 1900 வரை எண்ணற்ற மாநாடுகளைக் கூட்டி மக்கள் நலன் அடையவும், பாதுகாப்புப் பெறவும் ஆங்கில அரசிடம் ஓயாமல் போராடினார். பிறகு, இங்கிலாந்து செல்ல புறப்பட்டு, இடையில் தென்னாப்பிரிக்கா சென்று அரசாங்கப் பணியை மேற்கொண்டார். அங்கும்கூட இந்தியப் பழங்குடி மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தார். அங்கிருந்தவாறே இந்திய மக்களின் நல்வாழ்விற்காகச் சிந்தித்தார், செயல்பட்டார். 1921ல் மீண்டும் இந்தியாவிற்கு வந்து, சமுதாய பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 1922ல் சென்னை சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார். 1925ல் தீண்டாமை ஒழிய பல திட்டங்களைத் தந்தார். 1930ல் லண்டன் வட்டமேஜை மாநாட்டிற்கு இந்திய பழங்குடி மக்களின் சார்பில் கலந்துகொண்டார்.

1932ல் பூனா ஒப்பந்தத்தில் பொறுப்பேற்று அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து தொண்டாற்றினார்.

பழங்குடி மக்களின் பாதுகாவலன் எம்.சி. ராஜா (1883-1945)

எம். சி. ராஜா
இவர் இளமையில் ஆசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களுக்குப் பல நூல்களை எழுதினார். 1936ல் நுங்கம்பாக்கத்தில ‘திராவிடர் பள்ளியை’ துவக்கி வைத்தார். நகர் முழுவதிலும் இரவுப் பள்ளிகளை நிறுவ தூண்டுதலாக இருந்தார். சென்னை மாநகர சாரணர் குழுவின் தலைவராகப் பலகாலம் இருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் பண்பாட்டை வளர்த்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பழங்குடி மாணவர்களை 1927லிருந்து சேர்த்துக் கொள்ள வகை செய்தார்.

இளம் வயதிலேயே மாநில ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளராகத் தொண்டாற்றினார். பேச்சுத்திறன் மிகுந்த இவர் மக்களிடம் கால நிலைமையையும், அவர்களுடைய கடமையையும் தெளிவாகச் சுட்டிக் காட்டினார். 1917லிருந்து பழங்குடி மக்களின் தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு போன்ற போராட்டங்களில் அவர் ஆற்றிய பணி சிறப்பானதாகும். 1919ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு பாராளுமன்றத்திலும் பணியாற்றினார்.

பழங்குடி மக்களுக்கிருக்கும் இன்னல்களும், இழிவுகளும் நீங்கி முன்னேற அரசியல் அதிகாரம் பெற வேண்டினார். இதற்காக பட்லர் கமிட்டி, மாண்டேகு-செம்ஸ்போர்ட், சைமன் கமிஷன் போன்ற பல குழுக்களைச் சந்தித்து சாட்சியம் கூறினார். 1929ல் லண்டன் சென்று பழங்குடி மக்களின் நலனுக்காகப் போராடினார். 1930ல் வட்டமேஜை மாநாட்டிற்காக அரிய கருத்துக்களை வெளியிட்டார். கூட்டுத்தொகுதியுடன் கூடிய தனித்தொகுதி முறையை முதலில் கூறியவர் இவர்தான். மக்களுக்காக அரசியலே தவிர அரசியலுக்காக மக்கள் அல்ல என்பது இவருடைய வாதமாகும். சிறிது காலம் தமிழக அமைச்சராக பணியாற்றினார். இறுதிக்காலம் வரை சட்டமன்றத்தில் தொண்டாற்றினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சிந்தனைச் செம்மல் பேராசிரியர் என். சிவராஜ் (1892-1964)

அம்பேத்கருடன் நமச்சிவாயம் சிவராஜ்
பட்டப்படிப்பிற்குப் பிறகு சிறிது காலம் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பிறகு சட்டக் கல்லூரி விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் இருந்தார். இவர் இளமையிலிருந்தே பழங்குடித் தலைவர்களோடு இணைந்து தொண்டாற்றினார். தன்னுடைய கருத்தாழமிக்க உரைகளால் மக்களால் நல்ல சிந்தனையாளராக இவர் மதிக்கப்பட்டார். மக்களுக்காகப் பல கூட்டங்களையும் மாநாடுகளையும் கூட்டி சிறந்த கருத்துக்களைக் கூறினார். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டன.

1922ல் சென்னை சட்டமன்ற உறுப்பினரானார். நகரின் பல இடங்களில் மாணவர் விடுதிகள் தோன்றக் காரணமாயிருந்தார். மக்கள் சொந்த நில விவசாயிகளாக மாறாத வரையில், அவர்களுடைய அடிமைமுறை மாறாது என்ற கொள்கையை உடையவர். சட்டமன்றத்தின் பல்வேறு குழுக்களில் இடம்பெற்று சிறப்பாக பணியாற்றினார். 1945ல் மாநகராட்சி மேயரானார். 1942ல் தொகுக்கப்பட்டோர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சான்பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் கலந்துகொண்டு இந்திய ஏழை மக்களின் இடர்பாடுகளை விளக்கினார்.

1946ல் மக்களின் இழிவுகளை நீக்கி இன்னல்களை போக்க ஏதும் நடவடிக்கை எடுக்காததால் ஆங்கில அரசை எதிர்த்து அவர்கள் தந்த திவான் பகதூர் என்ற பட்டத்தை உதறித்தள்ளினார். இந்தியர்களையும், ஆங்கிலேயர்களையும் தட்டிக்கேட்கும் வகையில் 1946ல் ஜெய்பீம் என்ற ஆங்கில வார இதழை துவக்கி நடத்தினார். தொகுக்கப்பட்டோர் சம்மேளனம் அரசியல் இயக்கமாக மாறியபோதும் அதனுடைய அகில இந்திய தலைவராகவே நீடித்தார். 1956ல் பேரறிஞர் அம்பேத்கர் அவர்கள் உருவகப்படுத்திய அகில இந்திய குடியரசு கட்சியை உருவாக்கி அதன் காப்பாளராகவும் ஒப்பற்ற தலைவராகவும் விளங்கினார். 1944லும் 1960லும் பாராளுமன்ற உறுப்பினரானார். அங்கு பல செயற்குழுக்களில் பங்கேற்று நாட்டிற்கு செயல்வகை மிகுந்த திட்டங்களை தந்தார்.

புரவலப் பெருமகன் பி.எம். மதுரைப்பிள்ளை(1858 – 1913)

1877ல் சென்னை கவர்னராக இருந்த பக்கிங்ஹாம் பிரபுவிடம் எழுத்தராக பணியாற்றினார். பிறகு ரங்கூன் ஸ்ட்ராங் ஸ்டீல் என்ற அமைப்பின் ஊழியரானார். வாணிபத்தில் நன்னடத்தையும் நம்பிக்கைக்குரியவர்ராகவும் இருந்தவர். துபாஷ் ஸ்டீவ்டேன் என்ற ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நிறுவனத்தை சுயமாக ஆரம்பித்துத் திறமையாக நடத்தினார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நார்வே, இத்தாலி, எகிப்து ஆகிய மேலைநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார்.

தன்னுடைய வருவாயில் ஒரு பகுதியை இந்து கோயில்களுக்கென்று நிரந்தரமாகக் கொடுத்து வந்தார். சொந்தமாக ஒரு கோயிலையும் கட்டினார். இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், குறுகிய மனிதாபிமானியாக இல்லாமல், கிறிஸ்துவர்களாலும், முகம்மதியர்களாலும் நடத்தப்பட்டு வந்த ஸ்தாபனங்களுக்கும்கூட உதவி புரிந்து வந்தார். சமூகத்தில் காணப்படும் கோளாறுகளுக்கு, கல்விதான் சரியான மருந்து என்பதை உணர்ந்து ஒரு உயர்நிலை பள்ளியைக் கட்டினார். அறிவுக்கு உகந்த நல்ல கதைகளையும், கருத்துக்களையும் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வழங்கினார்.

1885லிருந்து 1900 வரை ரங்கூன் முனிசிபாலிடி கமிஷனராக இருந்தார். சுமார் 25 ஆண்டுகள் இரண்டாவது வகுப்பு கௌரவ நீதிபதியாக பணியாற்றினார். டர்பன் மருத்துவமனைக்கு ஒரு பெருந்தொகையை நன்கொடையாக கொடுத்து உதவினார். பழங்குடி புலவர் பெருமக்கள் இவர் மீது கவிபாடி பல உயர்ந்த பரிசில்களை பெற்றிருக்கிறார்கள். இவரை கிறிஸ்தவ, முகம்மதிய புலவர்களும் பாடியுள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடிய பாக்களைக் கொண்ட 1500 பக்கங்களுடைய ‘மதுரை பிரபந்தம்’ என்ற நூல் ஒன்றே இன்றும் அவர் புகழ் பாடி நிலவுகிறது.  இவர் 1906ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் சிறந்த பொதுத் தொண்டர் என்ற அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மக்களுள் மாணிக்கம் டி. ஜான்ரத்னம் (1846-1942)

ஸ்பென்ஸர் கம்பெனியில் ஊழியராகப் பணியாற்றினார். சமூகத்திலிருக்கும் கொடுமைகளுக்கும் சமயத்துறையில் நிலவும் வெறிச் செயல்களுக்கும் கலைக்கல்வி, தொழிற்கல்வி ஆகியவைகளால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றமே நல்ல மாற்றமாகயிருந்து பழங்குடி மக்கள் எதிர்காலத்தில் வளர வைக்கும் என்று நம்பிய இவர் 1886ல் ஒரு ‘மாதிரிப் பள்ளியை’ நிறுவினார். அப்பள்ளி பயனளிப்பதை அறிந்து 1892ல் ஆண்-பெண் இருபாலரும் படிக்க ஆயிரம் விளக்கில் பெரியதொரு கல்விக்கூடத்தை அமைத்தார். அவரே தலைமை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். மேலும், மக்கிமா நகர், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளிலும் பள்ளிகளைத் தொடங்கினார்.

இவையன்றி சித்திரம், தச்சு, தையல் போன்றவைகளைக் கற்கும் தொழிற்கல்வி கூடம் ஒன்றையும், மாணவர் விடுதியையும் 1889ல் தோற்றுவித்தார். 1877ல் புனிதரான அவர், அதற்கு முன்னும் பின்னும் சமயத்துறையில் சிக்கலற்ற வண்ணம் மக்களை கவரத்தக்க பணியில் ஈடுபட்டார். 1885ல் திராவிட பாண்டியன் என்ற தமிழ் வெளியீட்டைத் துவக்கித் திறமையான வாதங்களால் மக்களை விழிப்படையச் செய்தார்.

அன்றைய சூழ்நிலையில் பழங்குடி மக்கள் பல்வேறு பெயர் கொண்ட அமைப்பைக்களில் இயங்க ஆரம்பித்தனர். இவர் 1892ல் ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை துவக்கி அதனைச் சமுதாயப் பணியில் ஈடுபடுத்தினார். இதற்கான பல அறிவு சார்ந்த விளக்கங்களை வெளியிட்டார். 1897லிருந்து சிலகாலம் கௌரவ நீதிபதியாக தொண்டாற்றினார். பழங்குடி மக்களின் வாழ்விலும் வளத்திலும் அக்கறை கொண்டிருந்த இவர் அவர்களுக்கு குடியிருக்கவும், பள்ளி கூடத்திற்கும் நிலம் பெறவும் கவர்னரைப் பார்த்து முறையிட்டு அவற்றைப் பெற்றுத்தந்தார். பழங்குடி மக்களை ஓரணியில் திரட்ட இணைப்புப் பாலமாக கூடுமிடம் ஒன்றை சுமார் நூறு ஏக்கர் நிலத்தில் சமூகக் கூடத்துடன் அமைக்க முயன்றார். பழங்குடி மக்களுள் எழுந்த கிறிஸ்தவர், பௌத்தர், சைவர், வைணவர் போராட்டங்களால் இது தடைபட்டு விட்டது.

பெரும் வணிகர் பி.வி. சுப்ரமணியம் (1859 – 1936)

தொழிலில் நாணயமும், செயலில் திறமையும், நம்பிக்கையும் கொண்ட இவர் வணிக துறையில் அயராது உழைத்தார். ஏராளமாக பொருள் சேர்த்தார். ஊறுகாய் மன்னர் என்று பலராலும் உலகமெங்கும் புகழப்பட்டார். அவர் தம் ஊறுகாய் வகைகளை இங்கிலாந்து பேரரசர் குடும்பத்தினர் முதல் உலகத்தின் எல்லாப்பகுதி மக்களும் அதனை பெரிதும் விரும்பினர். இவர் தமிழகத்தின் கோடீஸ்வரர்களில் ஒருவராவார். இவர் பழங்குடி மக்களின் சமய நெறியாளர்களான தட்சிணாமூர்த்தி சுவாமிகள் போன்றவர்களை ஆதரித்தும், அவர்களுக்கு தலமெடுத்தும் அவற்றுக்கு காப்பாளராகவும், பல்வேறு சமயத்துறைகளுக்கும் பேருதவியாயிருந்தார்.

பழங்குடி மக்கள் அனைவரும் கல்வியை – குறிப்பாக ஆங்கில கல்வியைப் பெற வேண்டுமென்பது இவரது ஆசையாகும். எனவே பல சிறு பள்ளிகளுக்கு பொருளுதவி செய்து ஊக்குவித்தார். 1920ல் வேங்கடாசலம் ஏழையர் பள்ளியை சிந்தாதிரிப்பேட்டையில் துவக்கினார். இன்றும் அது நடைபெற்று வருவது பெருமைக்குரியதாகும். பலமுறை ஒரு பெரிய பள்ளியைத் தோற்றுவிக்க முயற்சித்தார். சமுதாயத்தில் அன்றுள்ள சமய சமுதாய உட்போராட்டங்களாலும் வேறு காரணங்களாலும் அது தடைபட்டுவிட்டது. வணிகத் துறையில் பெரிதும் ஆழ்ந்திருந்த இவர் தமது மக்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டிருந்தார்.

தமிழ் மக்களுள் இருக்கும் பிளவுகளையும் பிணக்குகளையும் ஒழிக்க வேண்டுமானால் ஒரே பெயரின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்று எண்ணினார். எனவே 1922ல் திராவிடர் – ஆதிதிராவிடர் ஆகிய இருபெரும் வகுப்பினரையும் மாநாட்டின் வாயிலாக ஒன்று கூட்டி அறிவுரை வழங்கினார். பழங்குடி மக்களால் நடத்தப்பெறும் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் ஆகும் செலவினங்களை இவரே ஏற்றுக் கொள்வார். தலைவர்கள் வெளியூர்களுக்கும், அயல்நாடுகளுக்கும் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு உடை, வழிச்செலவு போன்றவற்றை கொடுத்து உதவுவார். சமுதாயத்தில் பழங்குடி மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு கவர்னர் வைசிராய் போன்றோரிடம் முறையிட்டு அவ்வப்போது பயன் காணுவார்.

வி.ஜி. வாசுதேவப்பிள்ளை (1878 – 1938)

இவர் வள்ளல் ரங்கூன் மதுரைப்பிள்ளை அவர்களின் மருமகனும் தலைவர் சிவராஜ் அவர்களின் மாமனாருமாவார். கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு 1900ஆம் ஆண்டு முதல் சமுதாயத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நமது மூத்த தலைவர்களான ஆர்.சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றோர்களிடையே தனித்தன்மை வாய்ந்த தலைவராக திகழ்ந்தார். 1912 முதல் சிறிதுகாலம் ரங்கூன் சென்று வள்ளல் மதுரைப்பிள்ளை பள்ளியின் கண்காணிப்பாளராக பணியாற்றி மீண்டார். சென்னை மாநில சிறையதிகாரியாகவும் அலுவலாற்றினார். பொதுத்தொண்டில் தீவிரமாக செயல்பட்டுப் பல அரிய ஆலோசனைகளையும், திட்டங்களையும் தந்ததின் மூலமாக பலராலும் பாராட்டப்பட்டார். பழங்குடி மரபில் இந்தியாவிலேயே முதல் மாநகராட்சி உறுப்பினராக (1920ல்) ஆக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

அவரது உழைப்பின் நினைவாக சென்னை வால்டாக்ஸ் நெடுஞ்சாலையில் வாசுதேவ பிள்ளை பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து இவர் பல்வேறு அமைப்புகளில் பங்கு கொண்டு திராவிட, ஆதித்திராவிட மக்களுக்கென பல மாநாடுகளை கூட்டுவித்து பொதுவாக மக்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காகப் போராடினார். இவற்றில் 1928-1925ம் ஆண்டுகளில் பச்சையப்பன், வெஸ்லியன் கல்லூரிகளில் நடைபெற்ற மாநாடுகளின் நடவடிக்கைகளையும், கவர்னரிடம் சென்று வலியுறுத்தியதையும் சிறப்பாகக் கூறுவார்கள். 1935ம் ஆண்டிலிருந்து சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் அரசாங்கம் அமைத்த பல்வேறு குழுக்களில் பங்கேற்று மக்களுக்கும் நாட்டிற்கும் அரிய பல சேவைகளை செய்தார்.

ராவ் சாகேப் வி. தர்மலிங்கம் பிள்ளை (1872-1944)

இவர் 1872ல் சென்னையில் பிறந்து ரங்கூனில் வளர்ந்தார். தனது கல்லூரி படிப்பிற்குப் பிறகு கணக்கியல் துறை அதிகாரியாகவும் வருவாய்த்துறை அதிகாரியாகவும் பணியாற்றினார். 1860ல் பழங்குடி மக்களின் பாதுகாவலர்கள் பலர் பல நூல்களையும், பத்திரிகைகளையும் வெளியிட்டு அவை கடல் கடந்து சென்று மக்களை விழிப்படைய செய்தன. அவற்றின் மூலம் உணர்ச்சி பெற்றவர்களில் தலைவர் தர்மலிங்கமும் ஒருவர்.

ரங்கூன், சிங்கப்பூர், சிலோன், தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் குடியேறிய மக்களின் வாழ்க்கைத் தடுமாற்றங்களையும், இந்தியாவிலுள்ள இழிவான நிலைகளையும் உணர்ந்த அவர் இந்தியாவிற்கு திரும்பியவுடன் சிறிதுகாலம் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும், கௌரவ நீதிபதியாகவும் தொண்டாற்றிக் கொண்டே சமுதாயத் தொண்டில் அதி தீவிரமாக ஈடுபட்டார்.

1917, 1923 ஆண்டுகளில் மாண்டேகு-செம்ஸ்போர்ட், சைமன் கமிஷன் போன்ற குழுக்களின் சீர்திருத்த ஆய்வின்போது எழுந்த கொந்தளிப்பில் பழங்குடி மக்களின் தலைவர்களோடு இணைந்து விரைந்த முன்னேற்றத்திற்கு அரிய திட்டங்களைத் தந்தார். வட்டமேஜை மாநாடு, பூனா ஒப்பந்தம் போன்ற காலங்களில் தலைவர்களில் சிலர் வேறு இயக்கங்களுக்கு இழுக்கப்பட்டார்கள். அதற்குப் பலியாகாமல் தனித்து நின்று ஷெட்யூல்டு வகுப்பினர் நன்மை ஒன்றையே கருத்தில் கொண்டு பல மாநாடுகளைக் கூட்டி தீர்மானத்தினை நிறைவேற்றக் காரணமாக இருந்தார்.

சிறிது காலம் கௌரவ நீதிபதியாகவும் பணியாற்றினார். 1928-1932 வரை சென்னை சட்ட மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றினார். வடசென்னையில் பல சங்கங்கள், இரவுப் பள்ளிகள், கூட்டுறவு பண்டக சாலைகள் போன்றவைகள் இவரது தலைமையில் சிறப்பாக தொண்டாற்றின. ராயல் கமிஷன், ஹாமன்ட் குழு போன்றவைகளில் பழங்குடி மக்களின் விரைந்த முன்னேற்றத்திற்கு பல அரிய திட்டங்களை தந்திருக்கிறார்.

மாண்புமிகு தலைவர் ம. பழனிச்சாமி (1870-1941)

1900வரை தவத்திரு கங்காதர நாவலர் அவர்களின் அன்பு மாணவராக இருந்து திருப்பணிக் கூட்டம் என்ற அமைப்பால் மக்களிடையே அருள்நெறி பரப்பி வந்தார். நற்பழக்கம், நல்லொழுக்கம் போன்ற அறநெறிகளால் மக்கள் விழிப்படைய முதுபெரும் ஞானமார்க்க பெருந்தொண்டர்களுக்கு உறுதுணையாக இருந்து தொண்டாற்றினார். நுங்கம்பாக்கம் பாலசுப்ரமணி ஆலயத்தின் ஸ்தாபகராகவும், திருக்காப்பாளராகவும் பலகாலம் இருந்து பணியாற்றினார்.

1921ல் மாணவர் விடுதியை ராயப்பேட்டையில் துவக்கி கவனமாகவும், பாதுகாப்பாகவும் மாணவர் படிக்க வகை செய்தார். ஒழுக்கமும் புலமையும் ஒருவரை சமூகத்தில் உயர்த்த வல்லது என்பதற்கு இவர் ஓர் உதாரணமாக திகழ்ந்தார். இவருடைய நற்பண்புகளாலும் புலமையாலும் ஈர்க்கப்பட்ட சங்கராச்சாரியார் அவர்கள் இவருக்கு 1923ல் பொன்னாடை போர்த்தி பெருமைப்படுத்தியது நல்ல சான்றாகும்.

இவர் சோதிட கணிதத்திலும் தேர்ந்தவர் என்று பலராலும் புகழப்பட்டவர். சமூக எழுச்சிப் பணியில் பெரும் பங்கு கொண்டார். பழந்தலைவர்களுடன் இணைந்து பல மாநாடுகளையும் கூட்டங்களையும் கூட்டினார். பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களுடன் சமுதாய-அரசியல் துறைகளில் தீவிரமாக பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர்.

1929ல் பழங்குடி மக்களால் செய்யப்பட்ட வகைவகையான உண்ணும் பண்டங்களையும், தச்சு, தையல் போன்ற பொருள்களையும் தொழில் திறனை காட்டும் வகையில் காட்சியில் வைத்தார். 1917ல் எழுந்த அரசியல் எழுச்சியில் டாக்டர் நாயருடனும் பெருந்தலைவர்களுடனும் இணைந்து அயராது உழைத்தார். ‘திராவிடர் வாலிபர் சங்கம்’ போன்ற பல்வேறு அமைப்புகளில் தலைவராக இருந்து தொண்டாற்றினார். 1931ல் சென்னை மாநகராட்சிக்கு போட்டியிட்டார்.

சுவாமி தேசிகாநந்தா (1877-1949)

அரசியலில் மதத்தையும், மதத்தில் சமுதாயத்தையும் போட்டுக் குழப்பிய பல பெரியவர்களை நாம் கண்டவர்கள்தான். அகப்புறத் துறைகளான அரசியல், சமயம், சமுதாயம், கல்வி, தொழில் போன்ற அனைத்து துறைகளிலும், தனித்தனியாக சிறப்புடன் பணியாற்றி மக்களைக் குழப்பமடையச் செய்யாமல் முன்னேற்றியவர் ஒருவர் தமிழகத்தில் உண்டென்றால் அது சுவாமி தேசிகானந்தா அவர்களேயாவார்கள்.

இவர் 1877ல் சென்னை பெரம்பூரில் பிறந்தார். நல்ல குடும்பத்தின் செல்வப் புதல்வனாக சீலமாக வளர்க்கப்பட்டார். எம்.ஏ. படிப்போடு கல்வியை நிறுத்திக் கொண்டு 1917ல் எழுந்த அரசியல் சமுதாய சூழ்நிலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதிதீவிரமாக பணியாற்றினார். இவர் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் தேர்ச்சியோடும், பல இலக்கியங்களில் புலமையும் நாவன்மையும் படைத்தவராகவும் இருந்தார்.

1918ல் பழங்குடி மக்களை உய்விக்க பல பள்ளிகளைத் தோற்றுவித்தார். இதில் ஜியோர்ஜ் பேரரசர் பேரால் தொடங்கிய பள்ளி குறிப்பிடத்தக்கது. இவற்றோடு மக்களுக்கு வீட்டுமனை வழங்கவும், சிறுதொகை மூலம் பொருளாதாரத்தை விருத்தி பண்ண கடன் வசதி தரும் கூட்டுறவு சங்கங்களையும் ஏற்படுத்தினார். பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிலகத்தின் மேற்பார்வையாளராகவும், தொழிலாளர் அதிகாரியாகவும் கௌரவ நீதிபதியாகவும் பணியாற்றினார்.

1920ல் தவத்திரு. தேசிகானந்தா பெரம்பூர் பக்கிங்ஹாம் கர்நாடிக் மில்லில் நடந்த கலவரத்தில் முக்கிய பங்கேற்றார். இதில் பங்குகொண்ட மற்றொரு தலைவர் எம்.சி.ராஜா அவர்களாவார். பழங்குடி மக்களை வேலை நிறுத்தத்திலிருந்து விலக்கி தலித்துகள் மில்லில் தொழில் கற்பதற்குத் துணை செய்தார். மில்லில் பெரும் பகுதிகளில் தலித்துகள் நுழைய முடியாதிருந்த நிலையை மாற்ற இவர் பேருதவியாக இருந்தார். பழங்குடி மக்களுக்கு மில்லில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பு நிலையைக் கண்டு மேல் சாதிக்காரர்களுக்கு வேலையில்லாமல் போய்விடுமென்று பயந்து சர். சி. பி. தியாகராய செட்டியார், திரு.வி.க. போன்ற உயர்த்தப்பட்ட சாதி இந்துத் தலைவர்கள் தங்கள் ஆட்களை வேலைக்கு அனுப்பியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால் ஏற்பட்ட பயங்கர விளைவுகளிலும், புளியந்தோப்பு ஷெட்யூல் வகுப்பு – சாதி இந்து – முஸ்லீம் கலவரத்தாலும் ஏற்பட்ட விளைவுகளைச் சமாளித்து ஷெட்யூல் வகுப்பு மக்களை காப்பாற்றிய பெருமையும் இவரையே சார்ந்ததாகும். இவரது தமிழ் அறிவினையும், இலக்கிய, யோக, ஞான மார்க்கங்களில் இவருக்கிருந்த ஆழ்ந்த புலமையும், வாதத்திறமையும் கண்டு வியந்தவர்களில் வடிவேல் செட்டியார், இலவழகனார், திரு.வி.க, உ.வே.சா, மறைமலையடிகள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இறுதி நாட்களில் சமயத்துறையில் சத்குரு அந்து சுவாமிகளின் அடியாராக இருந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் – யார்?

“சூத்திரர்கள்… பிராமணர்களிடம் காட்டும் பகைமையைவிட அதிகமாகத் தீண்டாதவர்களிடம் பகைமை காட்டுகிறார்கள். உண்மையில் இந்து சமூக சாதி முறையின்மீது தாழ்த்தப்பட்டோர்கள் தொடுக்கும் தாக்குதலை முறியடிக்கும் காவற்படையாகச் செயல்படுகிறவர்கள் சூத்திரர்களே… சூத்திரர்கள் பிராமணர்களைக் கீழே தள்ள விரும்பினாலும், தாழ்த்தப்பட்டோர்கள் தங்களுடைய நிலைக்கு உயர்ந்து விடுவதை விரும்பவில்லை – இந்தியாவின் ஆட்சி பிரிட்டிஷாரிடம் இருந்தாலும் நிர்வாகம் (ஆதிக்க சாதி) இந்துக்களால் நடத்தப்பட்டது.  நகரம் முதல் கிராமம் வரை (ஆதிக்க சாதி) இந்துக்களின் பிடியில் உள்ளது.”

பேரறிஞர் அம்பேத்கர்
அம்பேத்கர் நூல்தொகுப்பு – 9, பக். 174 – 158.

நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் யார் என்பதைப் பார்த்தாலே அது தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்கு – முன்னேற்றத்திற்குத்  தொடங்கப்பட்டது அல்ல என்பதை நாம் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளலாம்.

458px-justice_party_1923

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனது அரசியல் ஆட்சியை அந்தக் காலத்தில் விஸ்தரித்து வந்தது கிழக்கிந்திய கம்பெனி.  தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நபர்களைப் பொறுக்கி எடுத்து, அந்தப் பகுதிகளில் இருந்த விவசாயிகளிடமிருந்து நிலவரியை வசூலிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு கிழக்கிந்திய கம்பனி அளித்தது.  இந்த நபர்கள் தனக்குச் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட தொகையையும் பிரிட்டிஷ் சர்க்கார் நிர்ணயித்தது. அதை ஆண்டுதோறும் அவர்கள் செலுத்திவந்தால் போதும். இந்தத் தொகைக்குப் பெயர் ‘‘பேஷ்குஷ்’’.

இங்கனம் நியமிக்கப்பட்டவர்கள் விவசாயிகளிடம் தங்களுக்கு இஷ்டமான அளவு பணமாகவோ அல்லது பொருளாகவோ வசூலித்துக் கொள்ளலாம்.  மேலும்,  விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்காமல், ஒரு பெரும்பகுதி நிலத்தைச் சொந்த சாகுபடி என்ற பெயரால் வைத்துக் கொள்ளவும் இவர்களுக்கு அனுமதி உண்டு.  இவர்களுக்குப் பெயர் ‘ ஜமீன்தார்’,  ‘மிட்டாதார்’,  ‘தாலுக்தார்’ என்பவையாகும்.

இந்த உரிமைகளை வைத்துக்கொண்டு அவர்கள் மேலும் மேலும் விவசாயிகளைக் கொடுமைப்படுத்தினர். ‘பேகார் வெட்டி’ என்ற பெயரால் விவசாயிகள் இந்த ஜமீன்தார் இட்ட வேலையைக் கூலி ஒன்றும் இல்லாமல் செய்தாக வேண்டும்.  இவ்வித கொடுமைகள் பல உருவங்களை எடுத்தன.

விவசாயிகள் வீட்டிலிருந்த மாடு முதன் முதலில் போடும் கன்றை ஜமீன்தாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஜமீன்தார் வீட்டில் நடக்கும் திருமணங்கள் முதலிய சடங்குகளுக்கு விவசாயிகள் பால் முதலியவற்றை இனாமாக வழங்க வேண்டும்.  காலப்போக்கில் விவசாயி திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில் ஜமீன்தாரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றெல்லாம் இது விரிவடைந்தது.

இப்படிப்பட்ட வசூல்களுக்கு ஜமீன்தார்கள் குண்டர் படைகளை வைத்திருந்தனர். ஆரம்பத்தில் சர்க்காரின் சார்பாக விவசாயிகளிடத்தில் வரி வசூலிக்கும் காண்ட்ராக்டர்களாக நியமிக்கப்பட்ட இந்த ஜமீன்தார்கள் காலப்போக்கில் அந்த நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகவே கருதப்பட்டார்கள். குடியானவர்களை எந்த சமயத்திலும் அவர்கள் நிலத்தைவிட்டு வெளியேற்றும் அதிகாரமும் அவர்களிடம் இருந்தது.

300px-justice_party_1920sஜமீன்தார்கள் செய்யும் கொடுமைகளுக்கு பிரிட்டிஷ் சர்க்காரின் போலீசும், நிர்வாக இயந்திரமும் உதவி செய்து வந்தன. இந்த ஜமீன்தார்களும் அவர்களுடைய ஆதரவில் வாழ்ந்தார்கள்.  தங்களை ஆதரிக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கு விசுவாசிகளாகவும், இந்த சர்க்கார் வாழையடி வாழையாக இந்த நாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்புபவர்களாகவும் இவர்கள் வாழ்ந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு இவர்கள் விசுவாசமாக இருந்ததற்காக இவர்களில் பலருக்கு ‘மகாராஜா’, ‘ராஜா’, ‘நவாப்’ போன்ற பட்டங்கள் பிரிட்டிஷ் சர்க்காரால் வழங்கப்பட்டன.

இந்த ஜமீன்தார் முறையைத் தவிர  ‘ரயத்துவாரி – நிலவரி அமைப்பு’ என்ற முறையும் இருந்து வந்தது. 1803 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியில் கவர்னராக இருந்த லார்டு மன்றோ இந்த முறையை ஏற்படுத்தினார்.  நிலத்திற்குச் சொந்தமான விவசாயிகள் நேரடியாக சர்க்காருக்கு நிலவரி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முறை இது.

ஆனால் நிலம் யாருக்குச் சொந்தம், ஒரு குறிப்பிட்ட நபருக்கு எவ்வளவு நிலம் சொந்தம் என்பதற்கு சர்க்காரிடம் கணக்கு ஒன்றும் கிடையாது. இதை நிர்ணயிக்கும் அதிகாரம் தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டது. அந்தத் தாசில்தார்கள் தங்களுக்குப் பணம் (லஞ்சம்) கொடுத்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த லஞ்சப் பணத்திற்கேற்ப நில அளவை நிர்ணயித்தார்கள். அதைப் போலவே, கிராமங்களில் இருந்த பல முரடர்களுக்கும், சண்டியர்களுக்கும் பயந்து அவர்கள் தங்களுக்குச் சொந்தம் எனக் கூறும் இடங்களை அவர்களுக்குச் சொந்தமாக்கிவிட்டார்கள்.

உதாரணமாக, தஞ்சை மாவட்டத்திலிருந்த ஒரு சண்டியர், அந்த ஊர் தாசில்தாரை ஒருநாள் முழுவதும் குதிரை மீது சவாரி செய்யச் சொன்னாராம். அந்தக் குதிரை போகும் வழி பூராவும் கற்கள் நாட்டப்பட்டு அதற்குட்பட்ட பிரதேசம் பூராவும் அவருக்குச் சொந்தமாக்கப்பட்டதாம்.

இந்த ரயத்துவாரி முறை அமுலாக்கப்பட்ட போது ஆந்திராவில் பெருவாரியாக ஜமீன்தாரிமுறை இருந்து வந்தது. தமிழ்நாட்டில் அனேகமாக எல்லா மாவட்டங்களிலும் – ராமநாதபுரம் ராஜா, சிவகங்கை ராஜா, மற்றும் சேத்தூர், சாப்டூர் – போன்ற பல இடங்களிலும் ஜமீன்தார்கள்தான் இருந்து வந்தனர். இங்கனம் ஜமீன்தாரி முறை இருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெரும்பகுதி ‘ரயத்துவாரி’ முறைக்கே உட்பட்டிருந்தது. இந்த ‘ரயத்துவாரி’ முறைக்கு உட்பட  நிலச்சொந்தக்காரர்களுக்கு ‘மிராசுதார்கள்’ என்று பெயர்.

கொஞ்ச நிலம் வைத்துக்கோண்டிருக்கக் கூடிய குடும்பங்கள் மட்டுமே நிலத்தை உழுது சாகுபடி செய்யும். அதிக நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்ட மிராசுதாரர்கள் பெரும்பகுதி நிலத்தைக் கட்டு குத்தகைக்கோ அல்லது வார குத்தகைக்கோ விவசாயிகளிடம் விடுவார்கள். அந்த விவசாயிகளுக்கு நிலத்தில் எந்த விதமான உரிமையும் கிடையாது. நிலச்சொந்தக்காரர்கள் இஷ்டப்பட்ட சமயத்தில் விவசாயிகளை வெளியேற்றி வேறு விவசாயிக்கு அந்த நிலத்தைக் கொடுக்கலாம்.

இப்படிப்பட்ட நிலைமையின் காரணமாக நிலத்தைத் தவிர பிழைப்பதற்கு வேறு தொழில் இல்லாத நிலையில், பாடுபடும் விவசாயிகளிடையே குத்தகைக்கு நிலம் எடுத்துக்கொள்வதற்காக போட்டி வளர்ந்தது இயல்பு.  இதனால் இந்தப் போட்டியில் வெல்வதற்காக ஒரு வேலையும் செய்யாத நிலச் சொந்தக்கார மிராசுதாரர்களுக்கு  நிலத்தில் விளைந்ததில் 80.85 விழுக்காடு குத்தகை கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

இதைத் தவிர கொஞ்ச நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்து நிலத்தைச் சாகுபடி செய்யும் குடும்பங்கள் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலங்களைக் கடன் கொடுத்தவர்களே வாங்கிக் கொண்டார்கள். இவ்விதம் இந்த ரயத்துவாரி முறையில் நிலங்கள் சில நபர்கள் கையில் குவியத் தொடங்கின.

இந்த மிராசுதாரர்களில் பலர் நிலத்தை விவயாயிகளிடம் குத்தகைக்கு விடாமல், கூலிகளை அமர்த்தி சொந்த சாகுபடி என்ற பெயரால் பண்ணைகளை நடத்தி வந்தனர். இந்தப் பண்ணைகளில் வேலை செய்யும் கூலிகளின் நிலைமையோ படுமோசமானது.

இவ்வாறு அநியாயக் குத்தகை மூலமாக விவசாயிகளையும்,  அநியாயக் கூலியின் மூலமாக பண்ணைக்கூலிகளையும் கொள்ளையடித்து வந்த அந்தப் பெரு மிராசுதார்கள் பிரிட்டிஷ் சர்க்காரை நீடூழி வாழ வேண்டும் என்று விரும்பியது இயற்கையே.

இவர்களைத் தவிர பிரிட்டிஷ் கம்பெனிகளுக்காக இங்கே விளைந்த பருத்தி, கடலை போன்ற மூலப்பொருட்களை உள்நாட்டில் வாங்கி ஏற்றுமதிக்காக விற்ற தரகு வியாபாரிகளும் உண்டு. அதே போன்று பிரிட்டிஷ் கம்பெனிகள் இந்த நாட்டில் விற்பனைக்காக இறக்குமதி செய்த துணி போன்ற பொருட்களை வினியோகம் செய்யும் தரகு வியாபாரிகளும் இருந்தனர். பிரிட்டிஷ் சர்க்கார் இந்த நாட்டில் என்றென்றைக்கும் நிலைத்து இருக்கவேண்டும் என்றுதானே இவர்கள் விரும்புவார்கள் ?

இப்படி ஆங்கிலேயர்களுடைய பேராசைக்காகவும், தங்களுடைய பேராசைக்காகவும் மற்றவர்களைக் கொடுமைப்படுத்திய ஜமீன்தார்கள், மிட்டாமிராசுதாரர்கள், பண்ணையார்கள், ராஜாக்கள் தான் நீதிக்கட்சியில் இருந்தனர்.

இந்தக் கட்சியின் தலைவர்களின் பட்டியலைப் பார்த்தாலே இந்த உண்மை தெளிவாகும்.

அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரா, ஒரிசா பகுதிகளில் இருந்த அநேகமாக எல்லா ஜமீன்தார்களும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தனர்.  (தற்சமயம் ஒரிசா மாநிலத்தில் இருக்கின்ற) கஞ்சாம், கோரக்பூர் மாவட்டங்களில் இருந்த

கல்லிக்கோட் ராஜா,
பர்ஐம்பூர் ராஜா,
பர்லாக்கிமிடி ராஜா,
சின்னக்கிமிடி ராஜா,

ஆந்திரா பகுதியில் இருந்த

பொப்பிராஜா,
பிட்டாபுரம் ராஜா,
செல்லப்பள்ளி ராஜா,
பொப்பிலி ராஜா,
தேபுரேல் ராஜா,
வெங்கிடகிரி ராஜா

போன்ற ஜமீன்தார்கள் ஜஸ்டிஸ் கட்சியில் பிரமுகர்களாக இருந்தனர். இதற்கு விதிவிலக்காக விஜயநகர மகாராஜாவும் நூஜ்வீட்  ஜமீன்தாரும் இருந்தனர்.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் ராஜா, சிவகங்கை ராஜா, சேத்தூர், சாப்டூர் முதலிய பல ஜமீன்தார்களும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தனர். சில ஜமீன்தார்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருந்தனர்.

இந்த ஜமீன்தார்களைத் தவிர தமிழ்நாட்டில் இருந்த பல பெரிய மிராசுதார்கள் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாக இருந்தனர். உதாரணமாக, தஞ்சை மாவட்டத்தில் இருந்த நெடும்பலம் சாமியப்ப முதலியார், பன்னீர் செல்வம், மதுரை மாவட்டத்தில் உத்தமபாளையம் பி.டி. ராஜன், பட்டிவீரன்பட்டி டபிள்யூ.பி. சௌந்திர பாண்டிய நாடார், திருநெல்வேலி மாவட்டத்தில் மேடைதளவாய் முதலியார் போன்றோர்.

இவர்களைத் தவிர சென்னை பி.தியாகராயசெட்டியார், விருதுநகர் வி.வி.ராமசாமி நாடார் போன்ற தரகு வியாபார பிரமுகர்களும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாக இ300px-justice_party_1930sருந்தனர்.

எனவே, ஜஸ்டிஸ் கட்சியின் தலைமை அன்றைய சென்னை ராஜதானியில் ஆந்திரப் பகுதியிலும் தமிழ்நாட்டுப் பகுதியிலும் இருந்தவர்களால் ஆனது. தங்களுடைய சுரண்டலுக்கு பிரிட்டிஷ் ஆட்சியைப் பாதுகாவலனாகக் கொண்டிருந்த நிலபிரபுக்களையும்,  ஆங்கிலக் கம்பெனிகள் இந்தியாவில் அடித்த கொள்ளையில் பங்கு கொண்ட தரகு வியாபாரிகளையும் கொண்டதாகவே இந்தத் தலைமை திகழ்ந்தது.

இவர்கள் மட்டுமின்றி சிலோன், பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோ – சைனா (இன்று வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளைக் கொண்டது) போன்ற காலனி நாடுகளில் வட்டிக் கடைகள் வைத்து அநியாய வட்டி வாங்கி கொள்ளையடித்தவர்களும் இந்தக் கட்சியில் இருந்தனர்.

இவர்களைத் தவிர டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேச முதலியார், சர். ராமசாமி முதலியார் போன்ற பிரிட்டிஷ் சர்க்காரின் செல்லப்பிள்ளைகளும் இந்தக் கட்சியில் இருந்தனர். இவர்களுக்கு ‘சர், திவான், பகதூர், ராவ்பகதூர்’ போன்ற பட்டங்களை பிரிட்டிஷ் சர்க்கார் அளித்திருந்தது.  (ஆதார நூல் :ஆரியமாயையா திராவிட மாயையா?  விடுதலைப்போரும்  திராவிட இயக்கமும் பக்-14)

இப்படி மக்களை சுரண்டிக் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல்களின் மொத்தக் கூட்டமைப்புதான் நீதிக்கட்சி. அன்று கொத்தடிமைகளாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான். அவர்களை முன்னேற விடாமல் அடிமைப்படுத்திச் சுரண்டியே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்கள் நீதிக் கட்சியினர் தான். இவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நீதிக்கட்சியை ஆரம்பித்தனர் ?

நீதிக்கட்சியைச் சேர்ந்த யாரும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடவில்லை. உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடியவர்கள் பற்றி இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

கொங்கு நாட்டு ஆர். வீரையன் (1886-1938)

இவர் 1886ல் கோயம்புத்தூர் குக்கிராமமொன்றில் பிறந்தார். இளமைக் கல்வியை சிக்கலின்றி முடித்தார். புறநகரங்களிலே பொதுப்பணத்தாலும் அரசாங்கச் சலுகைகளாலும் நடத்தப்படுகிற பள்ளிகள் பழங்குடி மாணவர்களைச் சேர்க்க மறுப்பதையும், தவறிச் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தனி இடங்களில் அமர்த்தப்படுவதையும் மிக வன்மையாக கண்டித்தார். இந்த அவலக் கேட்டிலிருந்து விடுபட தெருத்திண்ணைகளிலும், மரத்தடிகளிலும் சிறு பள்ளிகளை தொடங்கி வைத்து, வன்கொடுமைகளை உடனடியாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து உடனேயே தீர்வு காணுவதில் முனைப்பாகப் பணியாற்றினார்.

பழங்குடி மக்கள் அஞ்சலகத்திற்குள் செல்லக்கூடாது, பொதுப்பாதையில் நடக்கக்கூடாது என்ற கட்டுத்திட்டங்களை மீறிப் பலரை அழைத்துக் கொண்டு சென்று பலமுறை விதியோடு விளையாடினார்.

வீதியோரங்களில் வீடமைத்து வாடும் ஏழை எளியோருக்கு உரியவிடத்தில் நிலந்தந்து ஆதரிப்பது ஆளுவோருடைய கடமை என்பதை அன்றைய அரசாங்கத்திற்கு ஓயாமல் உணரச்செய்தவர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை அச்சுறுத்தியும் அடித்தும் கூலி தராமல் வேலை வாங்கும் கொடிய பழக்கத்தை ஆட்சியாளர் கவனிக்காமலிருக்கும் போக்கினை வன்மையாக கண்டித்து அவற்றிற்குப் பரிகாரம் தேடியவர்.

இவர் 1924ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராகத்  தெரிந்தெடுக்கப்பட்டார். தீண்டாமையால் விளையும் கொடுமைகளை நீக்க சட்டமன்றத்தில் சிறப்பாகவும்,  குறிப்பாகவும் பாடுபட்டார். தேர்தல் நேரங்களில் ஊர்ச்சாவடிகளுக்குள் பழங்குடி மக்கள் போக முடியாமை, உயர்த்தப்பட்டோர் பழங்குடி மக்களின் குடிசைகளை எரிப்பது, கால்நடைகளைக் கொல்வது போன்ற கொடுமைகளை அவ்வப்போது அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து தீர்வு காணுவார்.

ராவ் பகதூர் வி.ஐ. முனுசாமிப்பிள்ளை (1899-1955)

தாவர உற்பத்தி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். காலச்சூழ்நிலையால் சமுதாய அரசியல் போன்ற துறைகளில் இறங்கும் கட்டாயத்திற்குள்ளானார்.

1926லிருந்து 1937வரை அவர் தொடர்ந்து சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது நேர்மையான உழைப்பும் உண்மையான தியாகமும் இவரைப் பல்வேறு அமைப்புகளில் பங்குபெறச் செய்தன. உதகை மாவட்ட ஆட்சியின் தலைவராகவும் மாவட்ட கல்வி வளர்ச்சிக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் உறுப்பினராகவும் பணியாற்றினார். கோவை, நீலகிரி மாவட்டங்களின் கல்வித்துறைகளின் தலைவராகவும், விவசாய மன்றங்களின் செயலாளராகவும்,  கூட்டுறவு நிலையங்களில் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

1933ல் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்பெற்ற பூனா ஒப்பந்தத்தில் பழங்குடி மக்களின் சார்பாகக் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவராவார். பழங்குடி மக்கள் உரிமைக்காக, குறிப்பாக அரசியலில் தனி உரிமை பெறுவதிலே இவர் பேரார்வம் காட்டினார். பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்கும், பொதுவாக நாட்டின் நலனிற்கும் மிகச் சீரிய வகையில் திட்டங்களை தந்துள்ளார்.

முதுபெரும் தலைவரான ஆர். சீனிவாசன் போன்றோர்களோடு இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்தியா முழுவதிலும் சென்று மாநாடுகளில் கலந்துகொண்ட, பல்வேறு தொண்டுகளில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் அறிமுகமான தமிழகத் தலைவர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவராவார்.

1938ல் சென்னை மாநில அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக சிறந்த முறையில் பணியாற்றியுள்ளார். 1950லிருந்து 1955 வரை நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கும்போதே இயற்கை எய்தினார்.

ராவ் சாகேப் எம்.சி. மதுரைப்பிள்ளை (1880 – 1935)

எளிய குடும்பத்தில் பிறந்து உண்மை உழைப்பாலும் நல்ல பண்பாலும் செல்வந்தரானார். ஏழை எளிய பட்டியல் வகுப்பு மக்களின் நலனிலே அதிக ஆர்வத்தோடு செயல்பட்டு எளிய தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் தீவிரமாக பங்கேற்று பணியாற்றினார். சென்னையில் பொதுவாக விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில செல்வந்தர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1921ல் பக்கிங்ஹாம் கர்நாடிக் தொழிற்சாலையில் கதவடைப்பு ஏற்பட்டது. முதலாளி-தொழிலாளி என்ற வகையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை சாதிச்சண்டையாக உருவெடுத்தது. இதனை புளியந்தோப்புக் கலவரம் என்று குறிப்பிடுவார்கள். இந்த வேலை நிறுத்தத்தினால் துயர வாழ்க்கைக்குப் பலியான திராவிடர்-ஆதிதிராவிடர் ஆகிய இரு தரப்பினர்களையும் தலைவர் மதுரைப் பிள்ளை சமமாக பாவித்து உணவும், பணமும் கொடுத்து ஆதரவு தந்தார்.

1925ல் இவர் சட்டமன்ற உறுப்பினாராக நியமிக்கப்பட்டார். அங்கும் அவர் தனித்து நின்றே பணியாற்றினார். ஒரு சில சமயங்களில் முதுபெரும் தலைவர் சீனிவாசனாருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பக்தியில் மிகுந்த ஈடுபாடுகொண்ட இவர் அரசியல் அதிகாரமானது பழங்குடி மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். தனித்தொகுதி தேர்தல் முறையைவிட கூட்டுத் தொகுதி முறையே சிறந்தது என இவர் ஆரம்பத்தில் கருதினார்.

சமுதாய நன்மைக்காக, திராவிடர், ஆதிதிராவிடர் ஆகிய இரு தரப்பினரையும் ஒரே மேடையில் பலமுறை கூட்டியிருக்கிறார். ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு பணம், உடை, இருக்க இடம் போன்றவைகளைத் தந்து உற்சாகப்படுத்தினார். இவர் நகர மன்ற உறுப்பினராகவும் சில காலம் தொண்டாற்றியுள்ளார்.

பண்டிதமணி ஜி. அப்பாதுரையார்  (1890-1962)

இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியில் ஆதாரங்களோடு வாதிட்ட உண்மையான பகுத்தறிவுவாதிகள் தமிழகத்தில் மிகக்குறைவு. அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றைய காலத்து தூயதமிழ் இணைந்தோடும்.  கருத்தில் தரம் தெரியும். திறன் பேசும். அறன் ஒளிரும்.  சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உறக்கத்தை  உதறி செயலிலே வீரத்தை காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார்.

இவர் 1890ல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார். இளமையிலேயே கழைக்கூத்து, மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவைகளில் நாட்டங்கொண்டிருந்தார் என்பார்கள்.

1907ல் இவர் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இதற்கு சென்னை ராயப்பேட்டையிலிருந்து தமிழகத்து முதல் பகுத்தறிவுவாதியான தண்டமிழ் செல்வன் பண்டித க. அயோத்திதாச தம்ம தாயகா அவர்களால் வெளியிடப்பட்டு வந்த தமிழன் பத்திரிகையும், அயோத்திதாசரின் எண்ணற்ற விளக்க கூட்டங்களே இம்மாற்றத்திற்குக் காரணமாகும். சமயம், சமுதாயம், இலக்கியம் ஆகிய துறைகளில் வல்லவர்களோடு வாதிட்டு வெற்றிக் காணுவது இவருக்கு கைவந்த கலையாக இருந்தது.

ஆரம்ப காலத்தில் கிறுத்தவ சமயத்தை ஏற்றிருந்த இவர் 1911ல் தமது 21 வயதில் பௌத்த நெறியை தழுவினார். இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு இளைஞர் பௌத்த சங்கத்தை கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார். சிறுநூல்கள் பல எழுதினார். எண்ணிலடங்கா அரிய கூட்டங்களை நடத்தினார்.

1912லிருந்து திராவிடன், நவசக்தி, விலாசினி, குடியரசு போன்ற பத்திரிகைகளிலும் சிறப்பாக தமிழன் பத்திரிகையிலும் பல்வேறு வகையான அரிய கட்டுரைகளை எழுதிப் புகழ்பெற்றார்.

1917ல் மாண்டேகு-செம்ஸ்போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை விளக்கியது, 1924ல் காந்தியடிகளோடு சமுதாயச் சீர்திருத்தத்தைப் பற்றி வாதிட்டது ஆகியவை இவரது வாழ்வில் குறிப்பிடத்தக்கவை. 1926லிருந்து பள்ளி ஆசிரியராகவும், கோலார் ‘தமிழன்’ பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார். புத்தர் அருளறம் என்ற நூலினைப் படைத்துள்ளார். 1930லிருந்து 1955 வரை அவர் செய்த தொண்டு மகத்தானதாகும்.

“எங்களுக்கெல்லாம் முன்னரே பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து மக்களைத்  திருத்தியவர் இவர்” என்று அன்னாரது நீத்தார் நினைவு நாளில் ஈ.வே.ரா பேசியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சுவாமி சகஜானந்தர் (1891 -1958)

1891ல் வட ஆற்காடு மாவட்டத்தில் பிறந்தார். சமத்துவக் கொள்கையிலும் தன்னலமற்ற பணியிலும் ஆழ்ந்த பற்றுள்ளவராய் வாழ்ந்தார். தமிழ் மொழியில் புலமையும், வேதம், வேதாந்தம் மற்றும் பல கலைகளிலும் ஆழ்ந்த பயிற்சியும் பெற்ற பின்னரே அவர் சமுதாய தொண்டினை மேற்கொண்டார்.

வேதங்களில் கோயில் வழிபாடு பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பழங்குடியினர் கோயிலினுள் நுழைவதால் மூர்த்தா அல்லது மூர்த்தியின் புனிதம் சீரழிந்துவிடும் என்னும் நம்பிக்கையை இகழ்ந்தார். இந்த மூட நம்பிக்கைக்கு வேதங்களில் ஆதாரமில்லை என்றும் எடுத்துக்காட்டினார்.

மேலும் தன் இன மக்களுக்காக பல ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோயிலை கட்டினார். சிதம்பரத்தில் நந்தனார் மடத்தை நிறுவி மற்றவர்களைப்போல தாமும் ஒரு மடத்தை நிறுவ முடியும் என்பதை உறுதிப்படுத்தினார்.

கல்விப்பணி: ஆன்மிகத்தெளிவு பெறவும் ஆத்மா உயர்வு அடையவும் கல்வி இன்றியமையாதது என்பது அவரது கருத்து. வேதம், வேதாந்தம், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை அறியவும் ஆய்வு செய்யவும் கல்வி ஒன்றே துணை செய்யும் என்பதை உணர்த்தினார். அறிவையும் பாதுகாப்பையும் எல்லா மக்களுக்கும் கல்வியே  பயக்கும் என்பதை எடுத்துக்காட்டினார். குறிப்பாக பழங்குடியினர் முழுமையான கல்வி பெற வேண்டும் என விரும்பினார். இக்குறிக்கோளோடு 1910ல் அவர் நந்தனார் பள்ளியை நிறுவினார். இன்றும் இப்பள்ளியை திறமையாக செயல்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

1925ல் சுவாமி அவர்கள் சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கே கருத்து ஒருமித்த பழங்குடிச்சமுதாய மக்களின் மற்ற தலைவர்களோடு ஒன்று சேர்ந்து அவர் பணியாற்றினார். உணர்ச்சிபொங்கும் அவரது சொற்பொழிவுகள் மற்ற இன மக்களின் உள்ளத்தைக் கூடத்  தட்டி எழுப்பும் ஆற்றல் பெற்றவையாக இருந்தன. பழங்குடி மக்களின் ஆன்மிக உரிமைகளுக்காகவும் அரசியல் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தார்.

பி.எம். வேலாயுதபாணி (1896-1962)

பூஞ்சோலை முத்துவீரர் நாவலர் ஈன்றெடுத்த செல்வர் நமது தலைவர் பி.எம்.வேலாயுதபாணி அவர்கள். 12 ஆண்டுகாலம் தொடர்ந்து மாநகராட்சி உறுப்பினராக இருந்து மக்களுக்கு தொண்டாற்றும் பேறினை பெற்றார். தன் வட்டத்து மக்கள் பிற பகுதி மக்கள் என்ற பாகுபாடில்லாமல் பொதுவாக மக்கள் சுகாதாரத்தை கண்காணிப்பதோடு, ஆங்காங்கே பள்ளிகளையும், மாணவர் விடுதிகளையும், சத்திரங்களையும் முதியோர் கல்விக் கூடங்களையும் துவக்கினார்; பிறர்  துவக்குவதற்குக் காரணமாகவும் இருந்தார். சமுதாய நலனிற்காகப் பல மன்றங்களைத் தோற்றுவித்ததோடு அவற்றில் உறுப்பினராக இருந்து செயல்களிலும் ஈடுபட்டார். கௌரவ நீதிபதியாகவும் சிலகாலம் இருந்தார்.

சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக ராணிப்பேட்டை தனித்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் தமது மூத்த தலைவர்களோடு பங்குகொண்டு தொண்டாற்றினார்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பொறுப்பிலிருந்து வழுவாமலும், சமுதாய முன்னேற்றத்தையே குறிக்கோளாகவும் எண்ணி செயல்பட்டார். திட்டங்கள் தீட்டப்படுகிறதா என்பதைக் காணுவதைவிட தீட்டிய திட்டங்கள் செயலுக்கும் பயனுக்கும் உகந்ததா என்பதைக்  கண்காணிப்பதுதான் இவரது கொள்கையாயிருந்தது. மாநில உணவுக் குழு, மதுவிலக்குக் குழு, மருத்துவமனை திட்ட ஆலோசனைக் குழு போன்றவைகளில் இவர் மிகவும் பங்கேற்று பல அரிய கருத்துக்களை வழங்கியிருக்கிறார்.

பி. பரமேஸ்வரன் (1909-1957)

பி.ஏ. பட்டதாரியான இவர் முதுபெரும் தலைவர் ஆர்.சீனிவாசன் அவர்களுடைய மகள் வழி பேரனாவார். பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் செயலாளராக 1935லிருந்து பத்தாண்டு காலத்திற்கு பணிபுரிந்திருக்கிறார். இந்த இளமைப் பருவ சமுதாய, அரசியல் துறைகளில் ஏற்பட்ட அனுபவங்களோடு இவரை நாடு தெரிந்து கொள்ளுமளவுக்கு இவரது துணிவும் முயற்சியும் பெருந்துணையாய் நின்றன எனலாம்.

தலைவர் என்.சிவராஜ் அவர்களின் தலைமையில் மாமேதை அம்பேத்கர் அவர்களின் கொள்கை வழி நின்று தொண்டாற்ற 1942லிருந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டது இவருக்குள்ள மற்றொரு சிறப்பு. அனைத்து இந்திய செட்யூல் வகுப்பினர் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளராகத் திறம்படப்  பணியாற்றியுள்ளார். பின்னாளில் அகில இந்திய டிப்ரஸ்ட் கிலாஸஸ் லீகிற்கு துணைத்தலைவராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். 1948ல் சென்னை மாநில பதிவுபெறாத ஷெட்யூல் வகுப்பினர் அரசாங்க ஊழியர் சங்கத்தை ஆரம்பித்து நடத்தினார்.

செங்கற்பட்டு, மதுராந்தகம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மேயராகவும் பதவி வகித்தார். பதவிக் காலம் முடியுமுன்பு இடையில் சென்னை மாநில அமைச்சரவையில் இவரை சேர்த்துக் கொள்ளத் தவிர்க்க முடியாத நிலையேற்பட்ட போது மேயர் பதவியிலிருந்து விலகி அமைச்சரானார். இங்கு பல குழுக்களில் பங்கேற்று பழங்குடி மக்களின் வாழ்க்கைக்கு உகந்த திட்டங்களை அரசாங்கத்திற்கு தந்தார்.

1964ல் இவர் தனது தலைமையில் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி, விவசாயம், வீட்டுமனை போன்ற பல்வேறு துறைகளில் தனது கருத்தினை அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பித்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நீதிக்கட்சி ஆரம்பித்ததன் பின்னணி

தற்காலம், பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக்  கூட்டத்தோர்களையே சேர்ந்தவர்களாகும்.

சைவம், வைணவம், வேதாந்தமென்னும் சமயங்களையும் அப்பிராமணரென்போர்களே ஏற்படுத்தியுள்ளதால், அச்சமயங்களை, எவரெவர் தழுவி நிற்கின்றனரோ அவர்களும் பிராமணச் சார்புடையவர்களேயாவர்.

இத்தகையச் செயலுள் சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் தழுவிக் கொண்டே (நான்-பிராமிண்ஸ்) என்ற சங்கங்கள் கூடியிருக்கிறன்றனரா? அன்றேல் சாதியாசாரங்களையும் சமய ஆசாரங்களையும் ஒழித்து (நான்-பிராமிண்ஸ்) என்ற சங்கங்கள் கூடியிருக்கின்றனரா என்பது விளங்கவில்லை.

அங்கனம் சாதியாசாரங்களையும், சமயவாசாரங்களையும் ஒழித்துள்ளக் கூட்டமாயிருக்குமாயின் அவர்களுடன் சேர்ந்துழைப்பதற்கு அனந்தம் பெயர் காத்திருக்கின்றார்கள். பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக் கொண்டு (நான்-பிராமிண்ஸ்) எனக்கூறுவது வீணேயாகும்.

‘‘15-9-1909, தமிழன்’’ பத்திரிகை ஆசிரியர் பண்டிதர் க.அயோத்திதாசர்

தாழ்த்தப்பட்ட தலைவர்களில் சிலர் ஈவேரா, நீதிக்கட்சி ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்தனர். ஆனால், அதில் கலந்துவிடவில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையிலேயே அந்தத் தொடர்பு இருந்தது. அப்போதும் கூட ஈவேரா, நீதிக்கட்சி ஆகியவற்றை பல நேரங்களில் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் விமர்சித்தே வந்திருக்கின்றனர்.

ஏனெனில், உயர்த்தப்பட்ட சாதியினரான நீதிக்கட்சியினர் தங்களது சொந்த சாதியினரின் உயர்வுக்காக மட்டுமே உழைத்தவர்கள். அவர்களுக்குத் தாழ்த்தப்பட்டோரைப் பற்றி எஞ்ஞான்றும் கவலை இருந்ததேயில்லை. இதை மறந்து விடக் கூடாது.

தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தாழ்த்தப்பட்டோரே வாதாடினார்கள், போராடினார்கள், தியாகம் புரிந்தார்கள். அதனால் தாழ்த்தப்பட்டோர் பெற்ற உரிமைகள் ஏராளம்….ஏராளம். இதைத் தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்நாட் குறிப்புகளைப் படிக்கும்போது நாம் உணர்ந்துகொள்ளலாம்.  இந்த குறிப்புகள் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய ‘மக்களுக்கு உழைத்த பெருமக்கள்’ என்ற நூலில் தெளிவாக உள்ளன.

ஆனால், தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தையும், உரிமையையும் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு நீதிக்கட்சி தோன்றியது என திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன?

நீதிக்கட்சி ஆரம்பித்ததின் வரலாற்றுப் பின்னணியைப் பார்ப்போம்.

அரசாங்க உத்தியோகங்களில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், அதனால் மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு 1851ஆம் ஆண்டு முதலே கூற ஆரம்பித்தது.

அதன் பின்னர் உத்தியோகங்களைத் தங்களது உறவினர்களுக்கே பிராமணர்கள் வழங்குகிறார்கள் என்று கலெக்டர்களுக்கு புகார்கள் வந்தன. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டு அந்த ஆண்டு வருவாய்த்துறை வாரியம் ஒரு உத்தரவினை வெளியிட்டது.

கீழ்நிலை உத்தியோகங்களை ஒரு சில செல்வாக்குள்ள குடும்பங்கள் ஏகபோகமாக்கிக் கொள்ளக்கூடாது என்றும், அனைத்து உத்தியோகங்களையும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய சாதியினருக்குப் பகிர்ந்தளிக்க முயற்சிக்க வேண்டுமென்றும், தாசில்தார் பதவிகளில் ஒரு விகிதாச்சாரம் பிராமணரல்லாத சாதியினருக்கு அளிக்க வேண்டும் என்றும் கலெக்டர் அலுவலகத்தில் ஹுசூர் சிரஸ்தேதார்,  இங்கிலீஷ் ஹெட்கிளார்க் என்ற இரு பிரதான வருவாய் அதிகாரிகள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாதென்றும் அந்த உத்தரவு கூறியது.

ஆனால், இந்த உத்தரவை அதைப் பிறப்பித்த அரசே பின்பற்றவில்லை. இது ஏன் என்பது ஆராயத் தக்கது.

ஆனால், 1871ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டது.

‘அரசுப் பதவிகளில் அவர்களது (பிராமணர்களது) எண்ணிக்கையைக் குறைப்பதும், அதிக அளவு இந்து பிராமணரல்லாதாரையும், முஸ்லீம்களையும் அரசு உத்தியோகங்களில் ஊக்குவிப்பதும், அதன் விளைவாக எந்த ஒரு குறிப்பிட்ட சாதியும் மற்றவர்களைவிட அதிக முக்கியத்துவமோ அல்லது அதிக எண்ணிகைப் பலமோ பெற்றுவிட அனுமதிக்காமல் இருப்பதும்தான் அரசின் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும்’

நாட்டு நிர்வாகம் சம்பந்தப்பட்ட உத்தியோகங்களில் எந்த ஒரு சாதியும் ஏகபோகம் வகிப்பதைத் தவிர்ப்பதற்கு, அரசு தனிச்சலுகைகள் வழங்க வேண்டும் என்று மக்கள் தொகைக் கணிப்புக் கண்காணிப்பாளர் கார்னிஷ் குறிப்பிட்டிருந்தார்.

நீதிக்கட்சி தோன்றுவதற்கு 45 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கருத்து உதயமானது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வாய்ப்புத் தந்து அவர்களைக் கைதூக்கிவிடவேண்டும் என்ற ஆங்கிலேயரின் சமநோக்கு மட்டும் இதற்கு காரணம் இல்லை. ஒரு சாராரின் ஆதிக்கம் பெருகிவிட்டால் அது அன்னியர் ஆட்சிக்கு எதிரான சதிக்கு இடம் கொடுத்துவிடும் என்கிற அச்சமே அப்போது ஆங்கிலேயரிடம் மேலோங்கியிருந்தது. (திராவிட இயக்க வரலாறு, தொகுதி-1, முரசொலிமாறன்)

பிராமணரல்லாதாரின் மனதில் ஆங்கிலேயர் போட்ட இந்த தூபம் தான் பின்னாளில் நீதிக்கட்சியாக உருவெடுத்தது.dravidian_1779

தாங்கள் பிராமணரல்லாதாராய் இருந்த ஒரே காரணத்தால், வேலையில் புறக்கணிக்கப்பட்டு, வேலை உயர்வு போன்ற நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை உணர்ந்து அரசு ஊழியர்கள் சிலர் மெட்ராஸ் யுனைடெட் லீக் என்னும் அமைப்பை 1912ஆம் ஆண்டில் உருவாக்கினர். இந்த அமைப்பிற்கு டாக்டர் சி. நடேசன் முதலியார் வழிகாட்டியாக விளங்கினார்.

இந்த இயக்கம் அமைவதற்குப் பாடுபட்டவர்களாகக் குறிப்பிடப்படுபவர்கள்:

சரவணபிள்ளை (பின்னால் தஞ்சையில் டெபுடி கலெக்டர் ஆனவர்)

ஜி. வீராசாமி நாயுடு

துரைசாமி முதலியார் (பொறியியல் துறையைச் சார்ந்தவர்)

எஸ்.நாராயணசாமி நாயுடு (வருவாய் வாரியத்தின் ஷெரீப்பாகப் பணியாற்றியவர்)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் வாங்கித் தருவதற்காக இந்த அமைப்பை இவர்களில் யாருமே துவங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உத்தியோகத்துறையிலும் பதவி உயர்விலும் தாங்களும், தங்களுக்கு இணையான மற்ற உயர்த்தப்பட்ட சாதியாரும் புறக்கணிக்கப்படுவதை எதிர்க்கவே  இந்த அமைப்பை உருவாக்கினர்.

1913ஆம் ஆண்டு. டாக்டர் நடேச முதலியாரின் மருத்துவமனையில் உள்ள தோட்டத்தில் மெட்ராஸ் யுனைடெட் லீக்கின் முதலாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது. அப்போது அதனுடைய பெயரைத் ‘திராவிடர் சங்கம்’ என்று மாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெயர் மாற்றப்பட்ட திராவிடர் சங்கமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்மை எதுவும் செய்ததாகக் குறிப்புகள் கிடைக்கவில்லை.

சென்னை திராவிடர் சங்கத்தின் சார்பில் 1915ல் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் கடிதங்கள் ரெட்டி, நாயுடு, வேளாளர் ஆகியோருக்கான ஒருங்கிணைவை முதலில் குறிப்பிட்டது. (சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும், கோ.கேசவன்)

1916ம் ஆண்டு டாக்டர் நடேச முதலியார் திராவிட சங்க விடுதி என்ற விடுதி ஒன்றைத் துவக்கினார். திருவல்லிக்கேணி அக்பர் சாகிப் தெருவில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் பிராமணரல்லாத மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக அந்த விடுதி செயல்படத் துவங்கியது. இவ்விடுதியும் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தைக் கருதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. பிராமணரல்லாத மற்ற உயர் சாதி மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.

நீதிக்கட்சியை ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள் டி.எம்.நாயர் மற்றும் சர்.பி.டி.தியாகராய செட்டியார் ஆகியோர். நீதிக்கட்சியை இவர்கள் ஆரம்பித்த கதை ரசிக்கும்படியானது. முக்கியமானதும் கூட.

டி.எம்.நாயர் கட்சி ஆரம்பித்த கதை:

t_m_nairடி.எம்.நாயர் நீதிக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பு காங்கிரசில் இருந்தார். 1907ஆம் ஆண்டில் சித்தூர் நகரில் நடைபெற்ற வடஆற்காடு மாவட்ட காங்கிரஸ் மகாநாட்டில் தலைமை வகித்தார்.

1904ஆம் ஆண்டு பிராமணர்கள் அதிகம் வாழக் கூடிய திருவல்லிக்கேணித் தொகுதியிலிருந்து அவர் சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னரும் தொடர்ந்து மும்முறை அந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1916ம் ஆண்டு அதே தொகுதியில் இந்திய சட்டசபைக்குப் போட்டியிட்ட பொழுது அவர் தோற்றார். தாம் தோற்றதற்கு அங்கு வாழும் பிராமணர்களே காரணம் என்ற புதுமையான (?) முடிவுக்கு அவர் வந்தார். இந்தத் தோல்வியானது அவரை பிராமணரல்லாத இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

சர்.பி.டி.தியாகராய செட்டியார் கட்சி ஆரம்பித்த கதை:

வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படும் சர்.பி.டி.தியாகராய செட்டியார் நீதிக்கட்சியைத் தொடங்குவதற்கு முன் காங்கிரசிலேதான் இருந்தார்.

ஒருமுறை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மற்றெல்லாரையும் விட அதிகத் தொகையாகிய ரூ.10,000 அளித்தார் தியாகராய செட்டியார். இருந்தும், விழாக் கூட்டத்திற்குச் சென்றபோது அவரை மேடையில் உட்கார வைக்காமல் கீழே உட்காரச் செய்தார்களாம். ஹைகோர்ட் ஜட்ஜ் முதல் அர்ச்சக, பரிச்சாரக, தரகர் – பார்ப்பனரெல்லாம் மேடையில் அமர்ந்திருந்தனராம். இவரிடம் இவருடைய அலுவலகத்தில் வேலைக்கு இருந்த சில பார்ப்பனச் சிப்பந்திகள் கூட மேடைமேல் வீற்றிருந்தனராம். ஆனால், இவரை மேடையில் வீற்றிருக்க யாரும் அழைக்கவில்லையாம்.

இந்தப் பார்ப்பன சாதித் திமிரை சகிக்க முடியாத சர்.பி.டி.தியாகராய செட்டியார், அந்த இடத்தை விட்டு விர்ரென்று எழுந்து காரிலேறி டாக்டர் நாயர் பங்களாவுக்குச் செல்லச் சொன்னாராம். இந்த நிகழ்ச்சிகள்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியதாம்.

இதைப்பற்றி ‘டாக்டர் நாயர், தியாகராயர், நான்’ என்ற தலைப்பில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பின்வருமாறு எழுதுகிறார்:-

‘ …ஆரம்பகாலத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப் போர்வையில் பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர் (நாயர்). நானும் ஆரம்பத்தில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார் தேர்தலை எதிர்த்தவன்தான். பிறகுதான் உண்மை உணர்ந்து நாங்கள் பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம். ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி.டி.தியாகராய செட்டியார் கூட ஆரம்பத்தில் தேசியவாதியாக இருந்தவர்தான். 1914ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரியதரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற்றியவர்தான் அவர். அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே நாங்கள் எல்லாம் துவக்கத்திலேயே இராட்சதர்களாக ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்காமல் இழிவு பற்றிய உணர்ச்சி பெற்று விழிப்படைந்தவர்கள்தாம் நாங்கள்.’1

(நீதிக்கட்சி 75வது ஆண்டு பவள விழா மலர் 1992)

ஈவேராவும் தனது சொந்தப் பிரச்சினைகளின் காரணமாகவே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நீதிக்கட்சியை ஆதரித்தார். இது குறித்து “ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்” என்ற எனது நூலில் விவரங்கள் உள்ளன.

ஆக இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது நீதிக்கட்சியை ஆரம்பிக்கவும், ஆதரிக்கவும் சொந்தப் பிரச்சினைகளே காரணமாக இருந்தன. டி.எம்.நாயர் தேர்தலில் தோற்றுப் போனதாலும், தியாகராய செட்டியார் தம்மை மேடையில் உட்கார வைக்கவில்லை என்பதாலும் பிராமணர்கள் மேல் இவர்கள் வெறுப்புக்கொண்டனர். இந்த சொந்த பிரச்சினைகளால் எழுந்த வெறுப்பால்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்களே தவிர, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

நான் இப்படிச் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.  டி. எம். நாயர் சென்னை மாநகராட்சிக்கு மும்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த மும்முறையும் அவர் தாழ்த்தப் பட்டவர்களைப் பற்றி எண்ணியதுண்டா? கவலைப்பட்டதுண்டா? தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறாரா? சேரியிலே புழுக்களாக அகப்பட்டுக் கொண்டு தினமும் இன்னல்களை அனுபவித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி மாநகராட்சியில் பேசியதுண்டா?

இல்லை…இல்லை…இல்லை.

அதைப் போலவே தியாகராய செட்டியாரும் நீதிக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? கெடுதிதான் செய்திருக்கிறார்.

1921ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் பக்கிங்காம் கர்னாடிக் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட போராட்டம் சாதிக் கலவரமாக மாறியது. இதைக் காரணமாக வைத்து தியாகராயர் என்ன செய்தார் தெரியுமா?

‘தாழ்த்தப்பட்டோர்களை நகருக்கு வெளியே குடியமர்த்த வேண்டும்’ என்று அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

அன்றைய தொழிலாளர் தலைவரான எம்.சி.ராஜா இதைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நேர்மையற்ற செயல் ‘ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் நீதிக்கட்சியினர்’ என்று தலைவர் ஜெ.சிவசண்முகம் பிள்ளையை எழுத வைத்தது.

அதேபோல 1921-22ல் தியாகராய செட்டியார் தீண்டாமை ஒழிப்பைப் பற்றிய விவாதத்தில் ஆதரவான கருத்து ஏதும் கூறாமலே இருந்துவிட்டார்.

இப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யாத, அவர்களுக்கு எதிராக இருந்தவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக நீதிக்கட்சியை ஆரம்பித்தனர்?

கல்வியிலும் செல்வத்திலும் வளமாக இருந்த நாயருக்கும் தியாகராய செட்டியாருக்கும் ஒருவேளை கட்சியிலும் மேல் சாதியாரிடத்தும் மதிப்பும் வாய்ப்பும் கிடைத்து இருக்குமானால் இந்த ‘இன உணர்வு’ உண்டாகியிருக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இவர்களுடைய சொந்த நலன்கள் பாதிக்கப்பட்டதாலேயே பிராமணரல்லாத கட்சியை ஆரம்பித்தார்கள் என்பதுதான் உண்மை.

1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் நாள் நீதிக்கட்சி உருவானது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் நாள் தியாகராயச் செட்டியார் ‘பிராமணரல்லாதார் கொள்கை அறிக்கை’யை வெளியிட்டார். அந்த அறிக்கை, பிராமணரல்லாத உயர்சாதி மக்களுக்கான – பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அறிக்கையாகத்தான் வெளிவந்தது.

அந்த அறிக்கையின் ஒரு பகுதியிலிருந்தே இதை உணர்ந்து கொள்ளலாம்.

‘‘…..(கல்வித்துறையில்) தாமதமாக நுழைந்திருந்தாலும் பிராமணரல்லாத சமுதாயங்கள் முன்னேறத் துவங்கிவிட்டன. அவர்கள் இப்போது முன்னேற்றத்தின் பல படிக்கட்டுகளில் இருக்கிறார்கள். செட்டியார், கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனர். மிகவும் பின்தங்கியோர்கூட முன்னேறியிருப்பவர்களைப் போல புதிய காலத்தின் தகுதிகளைப் பெறுவதற்காக அக்கறையுடன் பாடுபட்டு வருகிறார்கள். கல்வியில் முன்னேற வேண்டும் என்கிற பொதுவான உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.

பிராமணர்களில் காணப்படுவதைவிட சில பிராமணரல்லாத சமுதாயத்தினரிடையே காணப்படும் கல்வி வளர்ச்சி சீரானதாகவும், சமநிலையிலும் (ஆண்-பெண் இருபாலரும் கல்வி கற்கும் சூழ்நிலையிலும்) இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க சூழ்நிலையாகும். எது காரணம் பற்றியோ கல்வி இலாக்காவினர் பிராமணப் பெண்களுக்கும், குறிப்பாக பிராமண விதவைகளுக்கும் ஏதோ அவர்கள் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலக் கருதிக்கொண்டு கல்விச் சலுகை அளித்து வருகின்றனர். இருந்தாலும் பிராமணரல்லாதாரைச் சேர்ந்த நாயர் பெண்களின் அளவுக்குப் பிராமணப் பெண்கள் கல்வி கற்றுவிட்டதாக இல்லை. பல்வேறு வழிகளிலும், பல்வேறு துறைகளிலும் பிராமணரல்லாதார் அடக்கமாக அதேநேரம் பயனுள்ள வகையில் இந்த மாகாணத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களும் அவர்களுடைய சகோதரர்களும் இதுவரையில் வேறுவழியின்றி பின்னால் தள்ளப்பட்டுக் கிடந்தார்கள். பிராமண ஜாதியினர் தந்திரமாகவும், பல்வேறு வழிகளிலும் அரசியல் அதிகாரத்தையும், உத்யோகச் செல்வாக்கையும் பயன்படுத்திய காரணத்தால் அறிவுத்துறையில் தீவிரமான போட்டி நிலவுகின்ற இந்த நாட்களில் பரீட்சைகளில் வெற்றி பெறும் திறமை ஒரு தனித்திறமை என்பதை நாங்கள் மறுக்கவில்லை.

எங்களால் புரிந்துகொள்ள முடியாதது என்னவெனில், மற்றவர்களைவிட ஆங்கிலம் கற்ற ஆடவர் தொகை அதிகம் கொண்டிருக்கிற ஒரு சிறு வகுப்பு, இதர வகுப்புகளில் ஏதோ குறைந்த அளவாவது திறமை, ஞானம், பண்பாடு கொடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, அரசாங்க உத்தியோகங்களில் பெரிதும், சிறியதும், உயர்ந்ததும், தாழ்ந்ததுமான அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ள அனுமதிக்கப்படுவதுதான்!” ….

(திராவிட இயக்க வரலாறு, தொகுதி-1, முரசொலிமாறன்)

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

செட்டியார், கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற தங்கள் சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனரே – நாயர் பெண்கள் முன்னேறி வருகின்றனரே, அவர்களை முற்றிலும் ஒதுக்கிவிடுகின்றனரே இந்த பிராமணர்கள்! என்ற ஆதங்கம்தான் இதில் தொனிக்கிறது என்பதைக் கூர்ந்து படித்தால் புரிந்துகொள்ள முடியும்.

தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவது பற்றிய கவலை இதில் இல்லை. ஏனென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்கள்தானே!

ஆனால், என்ன செய்தால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து, ஆக்கபூர்வமாகச் செயல்படுத்திய பெரியோர் பலர் உண்டு. உதாரணமாக,

ராவ் சாகேப் எல்.சி. குருசாமி (1885- 1966)

1920 முதல் பத்து வருடங்களுக்கு அவர் சென்னைச் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றிருந்தார். இருபத்திரண்டு வருட காலம் அவர் கௌரவ நீதிபதியாகப் பதவியை அலங்கரித்தார்.

நாகரிகமான, பண்பாடு நிறைந்த வாழ்க்கையின் முதல்படியானது கல்விதான் என்னும் கோட்பாட்டை அவர் கொண்டிருந்தார். அதனால் 1921ல் இரண்டு இரவுப்பள்ளிகளை நிறுவினார். அதற்காக அவர் இரண்டாயிரம் ரூபாய் உதவிப்பணமும் அக்கால அரசாங்கத்திடமிருந்து பெற்றார். புதுப்பேட்டை, கொய்யாத்தோப்பு, ராயபுரம், மைலாப்பூர், பெரியமேடு ஆகிய பகுதிகளிலும் அவர் பள்ளிகளை நிறுவினார். செங்கல்பட்டு, பொன்னேரி முதலிய முக்கியப் பகுதிகளில் பகல் நேரப் பள்ளிகளையும் ஆரம்பித்தார். கல்வி பயில மக்கள் தவறுவார்களானால் அது மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் எச்சரித்திருக்கின்றார்.

1921ல் பல நூறு குடும்பங்கள் தாங்கள் வாழும் நிலத்தை உரிமையாகப் பெற அவர் வழி கண்டார். புளியந்தோப்பு, வேப்பேரி, மைலாப்பூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மக்களைக் குடியேற்ற அவர் நிலங்களைப் பெற்றார். ஆதிக்குடி மக்கள் கல்வி, பொருளாதார வகை முதலியவற்றில் வலிமை பெற்றால், பிறகு தீண்டாமையும் சாதி வேற்றுமையும் தாமாகவே ஒழிந்துவிடும் என்ற கருத்தையே அவர் மேற்கொண்டிருந்தார்.

1926ல் கோடம்பாக்கம் கைத்தொழில் பள்ளி நலச் சங்கத்தில் இணைந்திருந்தார். நகரக் கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். மேலும், சென்னை நகரசபைக் கவுன்சிலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1927ல் அவர் ‘ராவ் சாகேப்’ என்ற பட்டம் பெற்றார். செங்கல்பட்டு, திருவள்ளூர் முதலிய பகுதிகளில் அவர் கல்வி நிறுவனங்களில் தொண்டாற்றினார்.

1929ல் அவர்  பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் இருந்தார்.

1932ல் டில்லியில் நிகழ்ந்த வாக்காளர்கள் கூட்டத்தில் அவர் தமது மதிப்பு வாய்ந்த யோசனைகளை வழங்கினார்.

1937ல் நிகழ்ந்த ஆலயங்களில் துணிந்து பிரவேசித்தல் என்ற போராட்டத்துக்காக அவர் பலரைத் திருவாங்கூருக்கு அழைத்துச் சென்றார். பல மாணவர் விடுதிகளை நிறுவினார்.

தளபதி எம். கிருஷ்ணசாமி, (1917 – 1973)

வறுமையின் பிடியிலே சிக்கினாலும் இலட்சியத்தின் மதிப்பினை குறைத்துவிடாமல் வாழ்ந்தவர்களிலே தலைவர் எம். கிருஷ்ணசாமி அவர்கள் சிறப்பானவராவார். ஆசிரியராகவும் பின்னாளில் வணிகத்திலும் தம் வாழ்வை துவக்கினார்.

தமிழ்ப் பழங்குடி மக்களின் பல்கலைக்கழகமாக திகழ்ந்த அவர்  ஏற்கனவே 1920ல் தோற்றுவிக்கப்பட்ட  பழங்குடி மக்கள் சம்மேளனத்தின் கொள்கைகளை ஏற்று 1940 முதல் பணியாற்ற முன்வந்தார். இடையில் புத்த பிரச்சாரத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் அவரை பல்வேறு பகுதி மக்களிடையே ஈடுபாடு கொள்ளச் செய்தது.

தலைவர் என்.சிவராஜ் போன்ற தலைவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பின் விளைவாக மாமேதை அம்பேத்கர் 1942லும் 1956லும் ஷெட்யூல் வகுப்பினர் சம்மேளனம், இந்தியக் குடியரசுக்கட்சி போன்ற அமைப்புக்களை ஆரம்பித்தார். இந்த அமைப்புகளின் தலைவராக சிறப்பாக தொண்டாற்றினார் இவர்.

பழங்குடி சமுதாய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக குலக்கல்வி திட்ட எதிர்ப்பு, சாதி ஒழிப்புப் போராட்டம், விலைவாசி போராட்டம் போன்றவைகளில் பெரும் பங்கேற்று சிறை சென்றார். பழங்குடிச் சமுதாயம் விழிப்படைய தனது சமத்துவ சங்கு என்ற பத்திரிகையின் மூலமாக சங்கநாதம் செய்தார். வளர்ந்த கட்சிகள் வலிய வந்து அழைத்தும் பதவிக்கோ, பணத்திற்கோ தமது இலட்சியத்தை விட்டு கொடுக்காமல் மறுத்து தேர்தல்களில் எதிர்த்து நின்றார்.

ஏழை பங்காளன் தொண்டு வீ. வீராசாமி, எம்.பி (1919-1995)

கல்லூரியில் படிக்கும்போது தான் தங்கியிருந்த திருச்சி ஹரிசன சேவாசங்க தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு மட்டும் கஞ்சி ஊற்றப்படுவதைக் கண்டு வருந்தினார். இந்த அவலத்தைத் தாழ்த்தப்பட்ட மக்கள்  தலைவர் தந்தை சிவராஜின் கவனத்துக்கும் சட்டமன்ற உறுப்பினர் திரு.மருதையனின் கவனத்துக்கும் கொண்டு சென்று தீர்வு கண்டார். இங்கனம் சமூக நலனுக்காக உழைத்தாலும், கல்வியிலும் கவனமாய் இருந்து 1941ல் பி.ஏ.பட்டம் பெற்றார்.

1945ல் திருச்சி தக்கர்பாபா ஹரிஜன மாணவர்கள் இல்லத்திலிருந்து தாழ்த்தப்பட்ட கல்லூரி மாணவர்களை அற்பக் காரணங்களுக்காக இல்ல நிர்வாகிகள் வெளியேற்றினர். மாணவர்களின் பரிதாப நிலையைக் கண்டு வீராசாமி 31-1-1945 அன்று இரவோடு இரவாக தம் இல்லத்தை டாக்டர் அம்பேத்கர் மாணவர் இல்லமாக மாற்றினார்.

தந்தை சிவராஜ், ஈவேரா போன்றவர்களிடம் இருந்த நெருக்கத்தால் 1950ல் தாம் பணிபுரிந்த திருச்சி வானொலி நிலையத்திலிருந்து விலகி முழுநேரப் பொதுநலத் தொண்டரானார்.

1950ல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ‘தொண்டு’ என்ற பத்திரிகையை (தமிழிலும், ஆங்கிலத்திலும்) தொடங்கி 20 வருடங்கள் தொய்வில்லாமல் நடத்தினார். 1952 நாடாளுமன்ற தேர்தலில் மாயவரம் (மயிலாடுதுறை) தாழ்த்தப்பட்டோர் தொகுதியில் தனிச்சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏழை மாணவர்களின் நன்மைக்காக பல நூல்நிலையங்களோடு கூடிய மாணவர் இல்லங்களை உருவாக்கினார்.

1974ல் சமூக புரட்சி என்ற இதழையும் (4 வருடங்கள்) 1980ல் (பௌத்த மார்க்கம்) என்ற இதழையும் (2 வருடங்கள்) நடத்திய பெருமை வீராசாமிக்கு உண்டு.

பறை அடிப்பதையும் , இடுகாட்டிலும் சுடுகாட்டிலும் வேலை செய்வதையும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் நிறுத்த வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்தார். 1980ல் தம் குடும்பத்துடன் துறையூரில் பௌத்தத்தைத் தழுவினார்.

ராவ் பகதூர் ஜெகந்நாதன் (1894 – 1954)

தனது காலத்திலே அரசியல் சமுதாய துறைகளில் உழைத்துக்கொண்டிருந்த தலைவர்களுடன் இணைந்து தொண்டாற்றி விரைந்து முன்னேறினார். இரவுப் பள்ளிகளையும் மாணவர் விடுதிகளைத் துவக்கி வைப்பதிலே இவர் அதிகம் அக்கறைக் காட்டினார். 1920ல் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1929லிருந்து 1938 வரை மாநகராட்சி உறுப்பினராக இருந்து திறம்பட தொண்டாற்றினார். சிறிது காலம் கௌரவ நீதிபதியாகவும் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சென்னை மாநில டிப்ரஸ்டு வகுப்பினர் சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும், மாநில கொள்கை பரப்பும் தலைவராகவும், மற்றும் எண்ணற்ற அமைப்புகளிலும்  பொறுப்பேற்று உழைத்தார்.

அயல்நாட்டிலிருந்து இந்திய தேச நிலைமையையும், நிதி, சமுதாயம் போன்ற நிலைமைகளையும் ஆராய வந்த குழுக்களிடம் இவரது இன்றியமையாத அரிய கருத்துக்களை கேட்டறிய அரசாங்கம் வேண்டிக் கொண்டது. எனவே, இவர் ராயல் கமிஷன், சைமன் கமிஷன், லோத்தியன் கமிட்டி, ஹாமென்ட் கமிட்டி போன்ற தலைசிறந்த அரசியல் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவினரிடம் தனது ஆலோசனைகளை வழங்கினார்.

1933ல் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பூனா ஒப்பந்தத்தில் பழங்குடி மக்களின் சார்பில் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவராவார்.

சமுதாய நன்மைகளுக்காக மக்களை விழிப்பூட்ட பல மாநாடுகளில் இவர் பங்கேற்று நிலைமைகளை மக்களுக்கு அறிவுறுத்தியும், அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தும் மக்கள் பயனடைய வகை செய்தார்.

ஆந்திர மாநிலத்தில் நிலப்போராட்டங்களை முதுபெரும் தலைவர் ஆர். சீனிவாசன் அவர்களுடனிருந்து நடத்தி ஏழை மக்கள் நிலங்களைப் பெறுவதற்கு பேருதவியாக இருந்தார்.

அன்னை மீனாம்பாள் சிவராஜ் (1904 – 1992)

வி.ஜி. வாசுதேவப்பிள்ளை – மீனாட்சி தம்பதியருக்கு மகளாய் 26-12-1904ல் பிறந்தார் அன்னை மீனாம்பாள். அன்னையின் பிறப்பிலேயே பெருமையிருக்கிறது என்றால் மிகையாகாது. அவரது முப்பாட்டனார் ஒரு வணிகர். தாய்வழிப்பாட்டனார் பெ.மு.மதுரைபிள்ளை ஒரு பெரும் வணிகர்; வள்ளலுங்கூட. இரங்கூன் மாநகரில் கப்பல் வணிகத்தில் சிறந்து வாழ்ந்தவர். கப்பல் வைத்திருக்குமளவுக்கு செல்வம் படைத்தவர்.

அன்னையவர்களின் தந்தையார் திரு.வி.ஜி.வாசுதேவப்பிள்ளை அவர்கள் ஆதிதிராவிட தலைவர்களில் சிறப்பானவர். பழங்குடி மரபில் சென்னை மாநிலத்திலேயே முதன்முதலில் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நெடுங்காலம் சென்னை மாநில சட்டமன்றத்தை அலங்கரித்தவர்.

அன்னை மீனாம்பாள் அவர்களுடைய பொதுப்பணி 1928ல் சைமன் குழுவினரை ஆதரித்த முதல் மேடைப் பேச்சில் துவங்கியது. 1930லிருந்து அண்ணல் அம்பேத்கரின் பணிகளை பொதுமக்களிடம் தமிழில் எடுத்துக் கூறியவர். ‘என் அன்பு சகோதரி’ என்று அண்ணல் அம்பேத்கரால் அழைக்கப்பட்டவர். கிட்டதட்ட 1970 வரை அவரது பொதுப்பணி தீவிரமாக இருந்தது. அன்னையின் அயராத உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் பல பதவிகள் அவரைத் தேடிவந்தன. அவற்றில் சில :

துணைமேயர், சென்னை மாநகராட்சி,

ஆனரரி பிரசிடென்ட் மாஜிஸ்ட்ரேட்,

உறுப்பினர் மெட்ராஸ் பிரசிடென்ட் அட்வைசரி போர்டு,

உறுப்பினர் போஸ்ட்வார் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கமிட்டி,

உறுப்பினர் மெட்ராஸ் யூனியவர்சிட்டி (செனட்)

அன்னையார் ஆதிதிராவிடர் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவர்களால் விரும்பப்பட்டு பெரிதும் பாராட்டப்பட்டவர். இருப்பினும் தன் தனித்தன்மையை நிலைநாட்டுவதில் சற்றும் தயங்காதவர். பலநூறு கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை தாங்கியும் கலந்துகொண்டும் அன்னையவர்கள் சிறப்பித்திருக்கிறார்.

தலைவி ஜோதிவேங்கிடசெல்லம் (1917 – 1992)

ஜோதி அம்மாள் என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர் 27-10-1917ல் பர்மாவிலுள்ள மேம்யோ என்ற ஊரில் குப்புராம் தம்பதியிருக்கு பிறந்தவர். ரங்கூனில் சீனியர் கேம்பிரிட்ஜ் வரை படித்தவர். 1934 சென்னைக்கு வந்ததும் 1935ல் திரு பி.வி.எஸ்.வேங்கிட செல்லம் அவர்களை மணந்தார். 1961ல் கணவர் கார் விபத்தில் காலமான பிறகு தொழிலகத்திற்குப் பொறுப்பேற்றார்.

இந்திய வணிகர்களில் தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற வேங்கிட செல்லம் கம்பெனியார் குறிப்பிடத்தக்கவர். இந்த நிறுவனத்தின் ஊறுகாய் வகைகள் 1900ல் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருந்தது. லண்டனில் இன்றைய எலிசபெத்ராணியாரின் பாட்டனார் எட்வர்ட் காலத்திலும், தந்தை ஜார்ஜ் மன்னர் காலத்திலும் அண்மை காலம் வரையிலும் வின்சர் அரண்மனையில் பி.வி.நிறுவனத்தின் ஊறுகாய் வகைகளைத்தான் விரும்பி உண்டு வந்தார்கள்.

1938லிருந்து இவர் பொதுப்பணியிலும் சமூகப் பணியிலும் ஈடுபாடு கொண்டார்கள். 1940ல் கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும் 1950ல் மாநில சமூக நலப் போர்டின் துணைத்தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் (செனட்) உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952ல் அவருடைய கணவர் சென்னை செரீப்பாக இருந்தபோது திரு.ராஜகோபாலாச்சாரியாரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஜோதியம்மாளுடைய ஆற்றலையும், செல்வாக்கையும் கண்ட ராஜாஜி அவர்கள் தமது அமைச்சரவையில் பொறுப்பேற்கும்படி கேட்டுக்கொண்டார். அன்றுவரை சமூக சேவகியாக இருந்த அவர் அமைச்சர் பொறுப்பைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டது அவருடைய திறமைக்கு நல்ல சான்றாகும்.

பிறகு 1962ல் திரு.காமராசரின் அமைச்சரவையிலும், திரு. பக்தவத்சலம் அமைச்சரவையிலும் தொடர்ந்து அமைச்சராக இருந்தார்.

1976வரை கலைக்கப்பட்ட சட்டசபையின் எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் இருந்தார். 1974ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 1978ல் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அவர் புரிந்த விளம்பரமில்லாத சாதனைகள் பல. அவற்றில் சில: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, பாளையங்கோட்டை பி.ஜ.எம்.கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி, சென்னை அண்ணாநகரில் உள்ள அண்ணா சித்த வைத்தியக் கல்லூரி ஆகியவை அவர் காலத்தில் அவர் முயற்சியால் தொடங்கப்பட்டவை. அம்மையாருடைய மூதாதையர் ஏற்கனவே நூறு ஆண்டுகளுக்கு முன்பு வேங்கிடாசல ஏழையர் பள்ளி ஒன்றை நிறுவி இருந்தார்கள். அது இன்றும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்று வருகிறது.

இப்பொழுது சொல்லுங்கள் !

‘‘அந்த கால அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் பலராக இல்லை. தாழ்த்தப்பட்டவருள் அரசியல் அறிவு வாய்க்கப் பெற்றிருந்த ஓரிருவர் நீதிக்கட்சியில் சேர்ந்திருந்தனர். தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் நீதிக்கட்சி கொடியின் கீழ் அணிவகுத்து நின்றனர். நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக போராடிற்று….’’

என்று எழுதிய திராவிட இயக்க எழுத்தாளர் ராசதுரை உண்மையைத்தான் எழுதினாரா?

தாங்கள் சார்ந்திருக்கிற இயக்கத்தைப் பெருமைபட எழுதலாம். அதில் தவறில்லை. ஆனால் ஒரு சமுதாயத்துக்காக உழைத்த பல தலைவர்களின் வரலாற்றையே இருட்டடிப்பு செய்து, தான் சார்ந்திருக்கிற இயக்கத்தால்தான் உரிமை போராடி பெறப்பட்டது என்று சொல்வது கடைந்தெடுத்த பொய் அல்லவா?

ஒரு சமுதாயத்தையே கீழ்த்தரமாக எண்ணி எழுதுகின்ற எழுத்தல்லவா அவர் எழுதியது?

அதைப் போலவே ‘பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியராகிய’ என்றுதான் இவரின் முன்னோடிகளான நீதிக்கட்சியினரும் எழுதினர்.

இப்படி எழுத என்ன காரணம்?

இவர்களுக்குள் இருப்பது ஜாதியம் மட்டுமே என்பதுதான் காரணம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தாழ்த்தப்பட்டவர்களுக்கா வகுப்புரிமை ஆணை ?

வகுப்புரிமை ஆணையை நீதிக்கட்சி ஆட்சியின் முக்கிய சாதனை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். பார்ப்பனரல்லாத மக்களுக்காக – குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக – நீதிக்கட்சி ஆட்சி இந்த சாதனையைக் கொண்டுவந்தது என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆகவே இந்த வகுப்புரிமை ஆணையை பற்றி சற்று விரிவாகக் காண்போம்.

பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு சட்டம் மூலம் 1919ல் மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை முன்வைத்தது. இந்தச் சட்டம் இந்திய அரசுச் சட்டம் [The Government of India Act 1919] எனப்படுகிறது. இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறையை இது முன்வைத்தது. அதன்படி நேரடியான அதிகாரம் பிரிட்டிஷ் அரசின் கையில் இருக்கும். தேர்தலில் வென்ற இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வர். அவர்கள் மாகாண அரசுகளை அமைத்துக் கொள்ளலாம். இதுவே இரட்டை ஆட்சி முறை. இந்த முறையின்படி 1920 மற்றும் 1923ல் நடந்த தேர்தல்களில் ஆங்கில அரசுக்கு ஆதரவான கட்சியான நீதிக் கட்சி வென்றது.

1920 டிசம்பர் 17ம் நாள், சென்னை மாகாண அரசின் முதல் அமைச்சரவையாக நீதிக்கட்சி பதவிப் பொறுப்பை ஏற்றது.

நீதிக்கட்சியைச் சார்ந்த ஓ. தணிகாசலம் செட்டியார் 5-8-1921 அன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

‘‘பிராமண மனுதாரரைவிட பிராமணரல்லாத மனுதாரர் குறைவான தகுதியுடையவராக இருப்பினும் அரசுப் பணிகளின் நியமனத்துக்கு உரிய குறைந்த பட்சத் தகுதிகளைப் பெற்றவராக அவர் இருந்தால் ரூ 100/-க்கும், அதற்கு மேற்பட்டும் மாத வருமானம் உள்ள பதவிகளில் பிராமணரல்லாதார்க்கு 66 சதவீதமும் ரூ100/-க்குக் குறைவாக மாத வருமானம் உள்ள பதவிகளில் 75 சதவீதமும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.’’

என்பதே தணிகாசலம் அவர்களின் தீர்மானம்.

cnatesamudaliarஇத்தீர்மானத்தை வழிமொழிந்த சி. நடேச முதலியாரின் உரையில் இட ஒதுக்கீட்டுக்கான தருக்க நியாயத்தைவிட அரசாங்க ஆதரவுத் தன்மை ததும்பி வழிந்தது. அது:

“ஐயா, இந்தியாவில் பிரிட்டன் பேரரசுக்கான அடித்தளம் இடுதலில் பிரிட்டன் அரசுக்கு பிராமணர் அல்லாதார் துணை செய்துள்ளனர்…..பிரிட்டன் அரசாங்கத்துக்கு ஆபத்து ஏற்படும் பொழுதெல்லாம் அதைக் காப்பாற்ற அவர்கள் விரைந்தோடி வருகின்றனர். இந்த மண்ணின் மக்களின் நலத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.”

(சென்னை மாகாண சட்டமன்ற நடவடிக்கைகள், தொகுப்பு 2,1921,பக்-425)

தணிகாசலத்தின் தீர்மானத்துக்கு சட்ட உருவம் கொடுப்பதில் நெருக்கடி ஏற்படுமென்பதை உணர்ந்து இந்த விவாதத்தில் பங்கேற்ற ஆங்கிலேய அதிகாரி ஏ. ஆர். கிநாப் இதிலிருந்து தப்புவிக்க ஒரு வழியைக் குறிப்பிட்டார்.

1854 இல் வெளியிட்ட வருவாய்த் துறையின் ஆணையை அரசின் எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்தலாம் என்று அவர் சொன்னதன் அடிப்படையில் இதில் உள்ள சிக்கல் தீர்க்கப்பட்டு 16-9-1921 முதல் வகுப்புவாரி அரசு ஆணை வெளியிடப்பட்டது.

அவ்வாணையில் அரையாண்டு காலத்தில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆட்களின் எண்ணிக்கையைப் பின்வரும் தலைப்புகளின் கீழ்வகைப்படுத்தி அரசுக்கு அரையாண்டு விவர அறிக்கைகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

1. பிராமணர்கள்

2. பிராமணரல்லாத இந்துக்கள்

3. இந்தியக் கிறிஸ்துவர்கள்

4. முகம்மதியர்கள்

5. ஜரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ-இந்தியர்கள்

6. ஏனையோர்

இவ்வாறு கூறுகிறது அரசு ஆணை எண்-613.

இந்த வகுப்புரிமை ஆணையை கூர்ந்து கவனிப்பவர்கள் ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோரை குறிப்பாக உணர்த்தாமல் ‘ஏனையோர்’ என்ற தலைப்பில் அடைத்துவிட்டு கடைசியில் தள்ளி விட்டனர்.

இது நீதிக்கட்சி அரசால் பிறப்பிக்கப்பட்டது எனக் குறிப்பிடுதல் முழுமையான உண்மையன்று. நீதிக்கட்சியின் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் ஆங்கிலேய அதிகாரியால் திருத்தம் செய்யப்பட்டும் பிராமண உறுப்பினர்கள் உட்பட அனைவராலும் ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட அரசாணை. இந்த அரசாணையை, ஆங்கிலேயரால் நேரடியாக நிர்வகிக்கப்பட்ட துறை வெளியிட்டது. இது ஒருமை மன உணர்வுடன் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த அரசாணையில் தெளிவாக இன்ன வகுப்பார்க்கு இவ்வளவு இடங்கள் எனக் குறிப்படாததால் இதை நிறைவேற்ற இயலவில்லை.

நீதிக்கட்சி அரசு மறுபடியும் இரண்டாவது வகுப்புரிமை ஆணையை 15-8-1922 ஆண்டு வெளியிட்டது. (அரசு ஆணை எண்-658).

முதலமைச்சரவையின் பதவிக்காலம் முடிந்தவுடன் 1923 செப்டம்பர் 11ம் நாள் அமைச்சர்கள் தமது பதவிப் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டனர்.

இந்த இரண்டாவது வகுப்புரிமை ஆணையும் சட்டமாகவில்லை என்பதை கீழ்க்கண்ட செய்தியிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

3-12-1950 அன்று திருச்சியில் நடைபெற்ற வகுப்புவாரி உரிமை மாநாட்டில் எஸ். முத்தையா முதலியார் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நீதிக்கட்சி பதவிக்கு வந்ததும் சட்டசபையிலேயே வகுப்புவாரிப் பிரநிதித்துவக் கோரிக்கையை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படி தீர்மானம் 1920ம் ஆண்டிலேயே நிறைவேற்றம் ஆகியது என்றாலும், 1928 வரை அதை சட்டமாகக் கொண்டுவர முடியாமல்தான் இருந்தது.

நூல்: நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?

இரட்டையாட்சி முறையின்படி, 1926 நவம்பர் 8ம் நாளன்று சட்டமன்றத்திற்கான மூன்றாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களையும், நீதிக்கட்சியினர் 21 இடங்களையும், சுயேச்சைகள் 36 இடங்களையும் கைப்பற்றினர். அத்தேர்தலில் போட்டியிட்ட எந்தக் கட்சிக்கும் ஆட்சியை அமைக்கக் கூடிய பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.

200px-psubbarayanஎந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரமுடியாத நிலையில், ஆளுநர் கோஷன், அரசின் நியமன உறுப்பினர்களான 34 பேர்களுடைய ஆதரவைத் தருவதாக வாக்குறுதி தந்து, சுயேச்சையாக வெற்றிபெற்று வந்திருந்த டாக்டர் பி.சுப்புராயன் அவர்களை அழைத்து அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

டாக்டர் சுப்புராயன் அவர்கள் சுயேச்சை உறுப்பினர்கள் சிலரின் ஒத்துழைப்போடும், ஆளுநர் அளித்த வாக்குறுதியோடும் அமைச்சரவையை அமைக்க இசைந்தார். தம்மை முதலமைச்சராகவும் சுயராஜ்ஜியக் கட்சியினரான ஏ.அரங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார் இருவரையும் அமைச்சர்களாகவும் கொண்ட அமைச்சரவையை அமைத்து ஆட்சிப் பொறுப்பை 4-12-1926ல் ஏற்றார்.

ஒரு சிறுபான்மை உடைய அமைச்சரவை, ஆளுநர் ஆதரவோடும் நியமன உறுப்பினர்களின் ஆதரவோடும் ஆட்சி புரிந்து வருதலை நீதிக்கட்சியின் தலைவர்கள் விரும்பவில்லை. புதிய அமைச்சரவையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே பணியாற்றி வந்தனர்.  இருமுறை நம்பிக்கை இல்லாத் தீர்மானங்களை இயற்றினர்.

சுயராஜ்ஜிய கட்சியைச் சேர்ந்த சுவாமி வெங்கடாசலம் செட்டி 1927ம் ஆண்டு ஆகஸ்ட் 23வது நாள் டாக்டர். சுப்புராயன் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்.

நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு. பி. இராமச்சந்திர ரெட்டியும்,  திரு. எம். கிருஷ்ண நாயரும் ஆட்சியில் ஊழல்கள் மலிந்துவிட்டன என்றும் அமைச்சரவையானது நிர்வாகத் திறமையில்லாமல் செயல்படுகிறது என்றும் கூறி, அமைச்சரவையை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டிய இன்றியமையாத நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் வாதிட்டனர்.

அத்தீர்மானம் தோல்வி அடைந்தது.

பாராளுமன்ற சனநாயக முறையில் நேரடியாகப் பதவிகளை அனுபவிக்கும் அரசியல் நோக்கம் கொண்ட நீதிக்கட்சியினர், தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என தனிப்பட்ட நலன் கருதி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனா, ஈவேரா டாக்டர் சுப்பராயனை ஆதரித்தார். ஏனெனில், டாக்டர் சுப்பராயன் ஆளும் கட்சியினர். அத்தோடு ஆங்கிலேயரால் ஆட்சிக்குக் கொண்டு வரப்பட்டவர்.  ஆளும் கட்சியினர் எவராயினும் அவரை ஒப்புக்கொண்டு மறைமுகமாகப் பதவிகளைப் பயன்படுத்தும் நோக்கம் கொண்டவர் ஈவேரா. அதனால், அவர் டாக்டர் சுப்பராயனை ஆதரித்தார்.  பார்ப்பனரின் ஆதிக்கம் உள்ள சுயராஜ்ஜியக் கட்சியினர் ஆட்சிக்கு வராமல் பார்ப்பனரல்லாத சுப்பராயனின் கட்சியை ஆளுங்கட்சியாக ஆக்கியமைக்கு ஆதரவு தெரிவிப்பதில் பார்ப்பனரல்லாதாரின் நலன்கள் உள்ளது என்று கூறினார்.

முன்னாள் நீதிக்கட்சி உறுப்பினரும், பனகல் அரசரின் செயலரும், பார்ப்பனர் அல்லாதாருமான டாக்டர் சுப்பராயனின் அமைச்சரவை பார்ப்பனர் அல்லாத அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை எனக் கூறி ஆளுநரின் செயலில் பாராளுமன்ற சனநாயக உணர்வு இருப்பதாகப் போற்றினார் ஈவேரா.  (குடி அரசு 9-1-27).

இந்த வேறுபாட்டின் காரணமாகவே சுப்பராயன் அமைச்சரவை மீது நீதிக்கட்சியினர் கொணர்ந்த இரண்டு நம்பிக்கை இல்லாத் தீர்மானங்களையும் ஈவேரா எதிர்த்தார் (குடியரசு 29-3-27) மற்றும் (30-8-27).

இரண்டு தடவைகளிலும் காங்கிரசு மற்றும் சுயராஜ்ஜியக் கட்சிகளின் மறைமுக ஆதரவுடன் டாக்டர். சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவை தப்பியது.

ஒத்த நோக்கங்களைக் கொண்ட காங்கிரசு கட்சியுடன் இணைவதாக நீதிக்கட்சி தலைவர்கள் 1927 ஏப்ரலில் அறிவித்தனர். இதன்பின் கூடிய சிறப்பு மாநாட்டில் (கோவை 2-7-1927) நீதிக்கட்சி உறுப்பினர்கள் காங்கிரசில் சேர இசைவளிக்கும் தீர்மானம் கொணரப்பட்டது. கோவை ஆர்.கே.சண்முகம் செட்டியார், ஜே.எஸ்.கண்ணப்பர் இதை ஆதரித்தனர். ஆனால், ஆங்கில அரசிற்கு சாதகம் இல்லாத இந்தத் தீர்மானத்தை ஈவேரா எதிர்த்தார்.

பிரிட்டிஷ் அரசு 1927 நவம்பர் 8ம் நாளன்று ஜான் சைமன் தலைமையில் ஆய்வுக்குழு அமைத்தது.

இரட்டையாட்சியின் பயன்களை இதுவரை அனுபவித்த நீதிக்கட்சி இப்பொழுது பதவியில் இல்லாத பொழுது ‘இரட்டையாட்சி இருக்கும் வரையில் இனிமேல் பதவிக்கு வர விரும்பவில்லை’ எனக் கோவை மாநாட்டில் தீர்மானித்தது. மேலும் ‘இந்தியர் எவரும் இல்லாததால் சைமன் ஆணைக்குழுவுடன் எவ்விதக் கூட்டுறவும் வைத்துக் கொள்வதில்லை’ எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஈவேரா, சைமன் ஆணைக்குழுவை வரவேற்றார். பொதுமக்களை ஏமாற்றும் காங்கிரசார் முயற்சியில் நீதிக்கட்சியினர் சிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். (குடியரசு 20-11-27)

சி.பி.ராமசாமி அய்யரை மீண்டும் சட்ட அமைச்சராக மறுநியமனம் செய்த ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநரைப் பதவியிலிருந்து விடுவிக்கவும் கோரும் ஈவேராவின் தீர்மானம் நீதிக்கட்சித் தலைவர்கள் வேண்டுகோளின் பேரில் கைவிடப்பட்டது.

oct25கோவை மாநாடு முடிந்தபின் அதன் தீர்மானங்களுக்காகத் தம்மிடம் பனகல் அரசர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என ஆளுநர் வைசிராய் இர்வினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை சட்டமன்றத்தில் சைமன்குழு நியமனம் பற்றிய பிரச்சினை விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் டாக்டர் பி.சுப்புராயன் தீர்மானத்தை எதிர்த்து சைமன் குழுவிற்கு ஆதரவாக வாக்களித்தார். ஆனால் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் ஏ.அரங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் சைமன் குழுவிற்கு எதிராக வாக்களித்தனர்.

அமைச்சரவைக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்ட நிலையை உணர்ந்த டாக்டர் பி.சுப்புராயன் அவர்கள், தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்து பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அதன் காரணமாக மற்ற இரு அமைச்சர்களும் பதவிகளை தாமாகவே இழக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டது.

ஆளுநர் கோஷன், டாக்டர் பி.சுப்புராயன் அவர்களின் அமைச்சரவையைப் புதுப்பிக்கக் கருதி, நீதிக்கட்சியின் தலைவரான பனகல் அரசரின் உதவியை நாடினார்.

நீதிக்கட்சியினர்க்கு மனநிறைவு ஏற்பட வேண்டி, நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு.எம்.கிருஷ்ண நாயரை நிர்வாக ஆலோசனை அவையின் சட்ட உறுப்பினராக ஆளுநர் நியமித்தார். இரட்டையாட்சி இருக்கும் வரையில் பதவியேற்பதில்லை என்று நீதிக்கட்சி தீர்மானம் இயற்றிய பின்னர் இது நடந்தது என்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

அதன்பின்தான் பனகல் அரசர் ஒத்துழைப்பை அளிக்க முன்வந்தார்.

திரு.எஸ்.முத்தையா முதலியார், திரு.எம்.ஆர்.சேதுரத்தினம் அய்யர் ஆகிய இருவரையும் சுயராஜ்ஜியக் கட்சியிலிருந்து பிரித்து, டாக்டர் பி.சுப்புராயன் அமைச்சரவையில் இரு அமைச்சர்களாகப் பொறுப்பேற்க வைத்தார் பனகல் அரசர்.  அதோடு அந்த அரசிற்கு நீதிக்கட்சியின் ஆதரவை அளிக்க முன்வந்தார்.

(மணத்தட்டை சேதுரத்தின அய்யர், ஒரு பிராமண மிராசுதார்; சுயராஜ்ஜியக் கட்சியின் வட்டக் கழகத்தின் தலைவராகவும், மாவட்டக் கழகத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர்.)

இந்த அமைச்சரவை 1928 மார்ச் 16ம் நாள் பதவி ஏற்றுக்கொண்டது.

சுயராஜ்ஜியக் கட்சியிலிருந்து பிரித்து அழைத்து வரப்பட்ட எஸ்.முத்தையா முதலியார் கொண்டுவந்ததுதான் மூன்றாவது வகுப்புரிமை ஆணை.

15-12-1928ம் ஆண்டு இவ்வாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை கீழ்வருமாறு குறிப்பிட்டது:-

(அ) ஒவ்வொரு வகுப்பாரிலும் தகுதியும் தக்கவராகவும் உள்ள வேட்பாளர்களிடமிருந்து அலுவலர்களை நியமனம் செய்யப்படுவது. ஒவ்வொரு 12 பணியிடங்களில் ஒவ்வொரு வகுப்பாருக்கும் பின்வருமாறு விகிதாச்சார நியமனமாக இருக்க வேண்டும்:

பிராமணரல்லாதார் (இந்து)  …..   5

பிராமணர்கள் …..   2

முகம்மதியர்கள் …..   2

ஆங்கிலோ-இந்தியர் மற்றும் கிறிஸ்தவர்கள் (ஜரோப்பியர் உள்பட)  …..   2

ஏனையோர் …..   1

(ஆ) இத்தகைய நியமனங்கள் பின்வரும் வரிசைப்படி செய்யப்பட வேண்டும்.

1. பிராமணரல்லாதார் (இந்து)

2. முகம்மதியர்

3. பிராமணரல்லாதார் (இந்து)

4. ஆங்கிலோ-இந்தியர் அல்லது கிறிஸ்தவர்கள்

5. பிராமணர்

6. பிராமணரல்லாதார் (இந்து)

7. ஏனையோர்

8. பிராமணரல்லாதார் (இந்து)

9.  முகம்மதியர்

10. பிராமணரல்லாதார் (இந்து)

11. ஆங்கிலோ-இந்தியர் அல்லது கிறிஸ்தவர்கள்

12. பிராமணர்

திரு.எஸ். முத்தையா முதலியார் கொண்டுவந்த இந்த ஆணை முதன்முதலாக இன்னின்னார்க்கு இத்தனை இடங்கள் என்று வரையறை செய்தது.

இந்த ஆணையிலும் தாழ்த்தப்பட்டோரை ஒரு வகுப்பாக கொள்ளாமல் ‘ஏனையோர்’ என்ற பெயரில் அடைத்து வைத்து ஒரே ஒரு இடத்தை அளித்தனர். தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு மிகக் குறைந்த முன்னுரிமையையே அளித்திருப்பதை பார்க்கும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கா இந்த வகுப்புரிமை ஆணைகள்? என்ற கேள்விதான் எழுகிறது.

அன்றிருந்த சென்னை மாகாணத்தில் பிராமணர்களைவிட, முகம்மதியர்களைவிட, கிறிஸ்தவர்களைவிட தாழ்த்தப்பட்டோர்,  மக்கள் தொகையில் அதிகமாக இருந்தனர். ஆனால் பிராமணர், முகம்மதியர், கிறிஸ்தவர் ஆகியோர்க்கு இரண்டு இடங்களை தந்துவிட்டு மக்கள் தொகையில் பெருவாரியான எண்ணிக்கையில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு இடம் கொடுத்ததானது தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை குழிதோண்டிப் புதைத்ததாகத் தானே அர்த்தம்? இதுதான் சமூக நீதியா?

நீதிக்கட்சி கொண்டுவந்த வகுப்புரிமை ஆணை தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமூக நீதியல்ல, சமூக அநீதி.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘ஆதிதிராவிடர்’  என்ற பெயர் வந்தது யாரால்?

சொல்லிவைத்தாற்போல் தாழ்த்தப்பட்டவர்கள் பெற்ற உரிமைகள் நீதிக்கட்சியினரால் பெற்றது என்று திரும்பத் திரும்ப பொய்களையே திராவிட இயக்க எழுத்தாளர்கள் எல்லாம் எழுதிவருகின்றனர். அதில் ஒன்றுதான் ஆதிதிராவிடர் பெயரை நீதிக்கட்சியினர்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வைத்தார்கள் என்பது.

no496651

இதோ இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் :

‘திராவிடர்’ என்ற சொல்லை முதன்முதலில் அமைப்பு ரீதியாக பயன்படுத்தியவர் டாக்டர். சி. நடேசனார் ஆவார். இவர்தான் ‘திராடவிடர் சங்கம்’ என்கிற அமைப்பை 1912இல் தொடங்கினார். இதிலிருந்து தான் திராவிடர் இயக்கத்தின் வரலாறு தொடங்குகிறது.

திராவிடர் இயக்கச் சாதனைகள் – ப-3

திராவிடர் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வந்த டாக்டர் சி.நடேசனார் நீதிக்கட்சி அரசுக்கு அனுப்பிய ஒரு வேண்டுகோளில் ‘பறையர்’ , ‘பஞ்சமர்’ என்ற சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு, அவர்களது வரலாற்றுக்குரிய சிறப்புப் பெயரான ‘ஆதிதிராவிடர்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். இக்கோரிக்கை ஏற்கப்பட்டு 1922-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25ம்நாள் பெயர் மாற்றத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

திராவிடர் இயக்கச் சாதனைகள் – ப-5

பஞ்சமர் – பறையர் என்று உழைக்கும் மக்களை அழைக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்ற குரலை முதன்முதலில் டாக்டர் சி.நடேசன் அவர்கள் எதிரொலிக்கச் செய்தார். இவரே வரலாற்றுப்பூர்வமாய் இந்த மக்களுக்குரிய பெயரான ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயரையும் கண்டுபிடித்து இந்தப் பெயரால் இந்த மக்கள் அழைக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கையை அரசுக்கு வைத்தார். திராவிட இன மக்களின் ஒருங்கிணைந்த திராவிடர் சங்கத்தின் மூலவரான நடேசனாரின் குரலை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டு 1921ல் இம்மக்கள் எவ்வளவு பேர் (சென்னை மாகாணத்தில்) வாழ்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு பஞ்சமர்-பறையர் என்ற சொல் இம்மக்களுக்கு இழிவுதரும் சொல். ஆகவே, இம்மக்களை இனி ‘ஆதிதிராவிடர்கள்’ என்று அழைக்க வேண்டும் என்று 1922 மார்ச் 25ம் தேதி ஒரு பெயர் மாற்ற உத்தரவை பிறப்பித்தது.

தமிழர் சமூக விடுதலை இயக்கம், பொதிகைத் தமிழரசன்

இப்படி எல்லாம் தொடர்ந்து எழுதியும், பேசியும் அன்று முதல் இன்று வரை ‘ஆதிதிராவிடர்’ என்ற வார்த்தைக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள் நீதிக்கட்சியினர்.

ஆனால், ‘திராவிடர்’ என்ற சொல்லை முதன்முதலில் அமைப்பு ரீதியாக பயன்படுத்தியவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தான்.  ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை 1892ல் உருவாக்கியவர்களும் தாழ்த்தப் பட்டவர்கள்தான். தமிழகத்தில் பஞ்சமர், பறையர், தீண்டப்படாதவர் என்கிற சொற்கள் வழங்கிய நிலையில் ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லையே உபயோகிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் ஆதிதிராவிடர்கள்.

பல ஆண்டுகாலமாகவே அப்படித்தான் தங்களை அழைத்துக் கொண்டு வந்தனர். தாங்கள் ஆரம்பித்த அமைப்புகளுக்கும் அப்படியே பெயரிட்டு வந்தனர்.

வைரக்கண் வேலாயுதம்பிள்ளை, மதுரைப்பிள்ளை, க.அயோத்திதாசர் மற்றும் பலர் இணைந்து உருவாக்கிய சபைக்கு ஆதிதிராவிடர் மகாஜன சபை என்று பெயர். இது உருவாகிய ஆண்டு 1890.

athidravidan-issueயாழ்ப்பாணத்திலிருந்து 1907ல் வெளியான பத்திரிக்கையின் பெயர் ஆதிதிராவிட மித்திரன்.

1919ல் கொழும்பு -இலங்கையில் இருந்து வெளியான மற்றொரு இதழுக்கு ‘ஆதிதிராவிடன்’ என்ற பெயரே வைக்கப்பட்டது.

1917இல் இந்தியாவில் அரசியல் சீர்திருத்த விஷயமாக சென்னைக்கு வந்த செம்ஸ்போர்ட் பிரபு, மாண்டேகு பிரபுவிடம் ‘ஆதிதிராவிடர்’ எனும் பெயரைப் பற்றியும், ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்தைப் பற்றியும் நடவடிக்கை எடுக்குமாறு ஒரு விண்ணப்பம் தயாரித்து திரு. பி. வி. சுப்பிரமணிய பிள்ளை, திரு. வி. முக்குந்து பிள்ளை,  திரு. எம். சி. ராஜா, திரு. டி. ஓங்காரம், திரு. எம். சண்முகம்பிள்ளை, திருமதி. திருப்புகழ் அம்மாள், திரு. கே. முனுசாமி பிள்ளை, திரு. வி. இராஜரத்தினம்பிள்ளை, திரு. வி. பி. வாசுதேவப்பிள்ளை, திரு. வி. பி. வேணுகோபால்பிள்ளை ஆகியோர் கையொப்பமிட்ட விண்ணப்பம் இந்தியா மந்திரி மாண்டேகு பிரபுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. (ஆதிதிராவிடர் வரலாறு, 1922, திரிசிராபுரம் ஆ.பெருமாள்பிள்ளை)

ஆதிதிராவிட மகாஜனசபை 1918ல் சென்னை மாகாண அரசுக்குக்குக் கொடுத்த கோரிக்கையிலே மக்கள் கணக்கெடுப்பிலும், மற்றும் அரசு தஸ்தாவேஜூகளிலும் ‘பறையர் – பஞ்சமர்’ என்னும் பெயர்களுக்கு பதிலாக ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் அப்போதைய சென்சஸ் அதிகாரி திரு.ஈட்ஸ் இதனை ஏற்கவில்லை. ஆனால் ஆதிதிராவிடர் மகாசபை பெயர் மாற்றக் கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியிலே பொதுக்கூட்டங்கள் போட்டு, தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது.

அப்படியானால் நடேசனாரின் பங்கு என்ன?

ஆதிதிராவிட மகாஜன சபையின் கோரிக்கையை ஏற்குமாறு அரசினருக்குப் பரிந்துரை வழங்கும் தீர்மானம் ஒன்றை சி.நடேச முதலியார் சென்னை மாநகராட்சிக் கூட்டம் ஒன்றிலே தாமாக முன்மொழிந்தார். ஆனால், நீதிக்கட்சியினரே முன்வந்து இதை செய்யவில்லை.

ஆனால் திராவிட இயக்க எழுத்தாளர்கள் சொல்வதென்ன?

சி. நடேச முதலியாரே ஆதிதிராவிடர் என்ற பெயரை கண்டுபிடித்து வைத்ததுபோல எழுதுகிறார்கள். இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் தங்கள் பேனாக்களில் மைக்குப் பதிலாக பொய்யை ஊற்றி எழுதுகிறார்கள்.

1921ஆம் ஆண்டுக்குரிய சென்சஸ் தயாரிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை ஆதிதிராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டு, அது குடிமதிப்பீட்டுக் கணக்கேட்டில் ஏறும்படிச் செய்தனர்.

m-c-rajaசட்டமன்றக்கூட்டமொன்றில் 1922 சனவரி 20ல் ஆதிதிராவிடர் எனும் பெயரை அரசாணையில் குறிப்பிட வேண்டும் எனும் தீர்மானத்தை எம்.சி.ராஜா முன்மொழிந்தார். ராவ்பகதூர் திரு. நம்பெருமாள் செட்டியார் வழிமொழிந்தார். சட்டமன்ற உறுப்பினரான எம்.சி. மதுரைப்பிள்ளை ஆதரித்துப் பேசினார்.

தீர்மானம் நிறைவேறியது. அந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அப்பெயரை அங்கீகரித்து அரசு உத்தரவிட்டது.

பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடரை சேர்த்ததற்கு யார் காரணம்?

பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்க போராடி வெற்றி பெற்றது நீதிக்கட்சி ஆட்சியின் சாதனை என்று திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் தாங்களே போராடி பெற்ற உரிமைகளை நீதிக்கட்சியினருக்கு சாதகமாக எழுதுவதில் எத்தனை வெறித்தனம் இவர்களுக்கு?

இந்த வரலாற்றையும் சற்று ஆராய்வோம்.

பார்ப்பன ஆசிரியர்கள் எவ்வளவு வகுப்பு வெறுப்பைக் கக்குகிறார்கள் என்பதை சர் தியாகராயர் தமக்கேற்பட்ட ஓர் அனுபவத்தின் மூலம் விளக்கிக்கூறினார்.

1917 டிசம்பர் 23ஆம் நாள் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாகாண மாநாட்டில் பேசுகையில் அந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

new-pachaiyappar1‘நான் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு நிர்வாகக் குழுத் தலைவராக இருந்த சமயம். எனது சமீன்தார் நண்பர் ஒருவர், தனது பிள்ளைக்குக் கல்லூரியில் படிக்க இடம் வேண்டுமென்று கடிதம் எழுதி, என்னைச் சிபாரிசு செய்யும்படிக் கேட்டிருந்தார்.

பார்ப்பனரல்லாத மாணவர்கள் இப்போதுதான் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அதனால் அந்த மாணவருக்கு எப்படியும் ஒரு இடம் தர வேண்டும் என்று கடிதம் எழுதிப் பச்சையப்பன் கல்லூரித் தலைமையாசிரியருக்கு அனுப்பி வைத்தேன். கல்லூரியில் எந்த இடமும் காலி இல்லை என்று குறிப்பிட்டு எனக்குப் பதில் வந்தது. அதற்குப் பின்னர் சில பார்ப்பன மாணவர்களுக்கு இடம் அளித்ததை நான் அறிந்தேன். இந்தச் சம்பவம் என்னை எவ்வளவு வேதனையில் ஆழ்த்தியிருக்கும்? பொதுவாக நான் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. அப்படித் தலையிடுவது தவறு என்றும் கருதி வந்தேன். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்கும் விஷயத்தில் நான் கண்டிப்பான விதிமுறைகளை வகுத்தேன். என் அனுமதியின்றி, எந்த மாணவனையும் கல்லூரியில் சேர்க்கக்கூடாது என்று உத்தரவு போட்டேன்!’’

இவ்வாறு தியாகராயர் உணர்ச்சிப் பெருக்கோடு பேசினார்.

திராவிட இயக்க வரலாறு, கே.ஜி.மணவாளன், பக்.89-90

1926ஆம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு பச்சையப்பன் கல்லூரியில் அனுமதியில்லை என்ற நிலை இருந்தது. இதை அப்போதே ரெட்டைமலை சீனிவாசனாரும் குறிப்பிட்டிருக்கிறார். ரெட்டைமலை சீனிவாசனார் தம் ஜீவிய சுருக்கம் என்ற நூலில் கூறுகிறார் :

‘‘ஆங்கிலேயர்கள் மட்டுமே கலந்துகொண்டு வெற்றி பெறுகிற வகையில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், அந்த தேர்வு இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என பிரிட்டிஷ் பார்லிமென்டில் காங்கிரஸ் ஒரு மசோதா சமர்ப்பித்தது. பறையர் மகாஜன சபையார் சென்னை வெஸ்லியன் மிஷன் காலேஜ் ஹாலில் 1893ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒரு பெருங்கூட்டம் கூடி அந்த மசோதாவை எதிர் மறுத்து 112 அடி நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப்பங்கள் சேகரித்து ஜெனரல் சர் ஜார்ஜ் செஸ்னி  என்னும் பார்லிமெண்ட் மெம்பரிடம் சமர்ப்பித்தார்கள். அந்த மனுவில்,

‘வெளிஜில்லாக்களின் நாட்டுப்புறங்களில் ஜாதி வித்தியாசம் கட்டுப்பாடு இன்னும் முதன்மை பெற்று கொடுமையாய் நடக்கிறது. அறிவீனமான நாட்டுப்புறவாசிகள்தான் இப்படி நடந்து வருகிறார்களென்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது மல்லாமல் இந்த ராஜதானியின் தலைநகரமாகிய சென்னையிலுள்ள பச்சையப்பன் கலாசாலை என்னும் சிரேஷ்ட வித்தியாசாலையிலும் பறையர், பறையர் பிள்ளைகளைச் சேர்க்கப்படாதென்று கட்டோடே விலக்கியிருக்கிறதும்….’’

ayothidhasar

– என்று பச்சையப்பன் காலேஜில் ஆதிதிராவிடரை சேர்ப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இதை அப்போதே அறிஞர் அயோத்திதாசர் குறிப்பிட்டு எதிர்த்திருக்கிறார்.

மகாகனந்தங்கிய பச்சையப்பன் என்பவரின் பொதுச்சொத்துக்கு மேற்பார்வை உடையோராய் நியமிக்கப் பெற்ற சாதியாசாரமுடையோர் அதே பச்சையப்பன் காலேஜில் கைத்தொழிற்சாலையை ஏற்படுத்தி,   ‘சாதியாசாரமுள்ளவர்களை மட்டிலும் அச்சாலையில் சேர்க்கப்படும். சாதியாசாரமில்லாதவர்களை அவற்றுள் சேர்ப்பதில்லை’ என்று பயிரங்க விளம்பரம் வெளியிட்டிருக்கிறார்கள்.  (தமிழன், சனவரி 6, 1909)

1917ல் பிராமணரல்லாத மாணவர்களை சேர்க்கச் சொன்ன நீதிக்கட்சியின் தலைவரான தியாகராயர் ஏன் தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்க சொல்லவில்லை? என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் 1921ல் தியாகராயருக்கு இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

4.8.1921ல் சட்டமன்றத்தில் சௌந்தரபாண்டிய நாடார் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து முகமது உஸ்மான் சாகிபு தனது இஸ்லாமிய சகோதரர்களை கூட பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று கூறி, அவர் மேற்கொண்டு ஒரு கோரிக்கையை வைத்தார்.

image_110‘‘….இந்த மாநகரத்திலுள்ள பெரிய இந்து நிலையமாகிய பச்சையப்பன் கல்லூரி நான் சார்ந்துள்ள சமுதாயத்தினர்க்குத் திறக்கப்படுவதில்லை. இந்தச் சமயத்தில் இங்குள்ள மதிப்பிற்குரிய நண்பர்கள் சர்.பி.தியாகராயச் செட்டியார், திரு.ஓ.தணிகாசலம் செட்டியார் ஆகிய அக்கல்வி நிலையத்தின் அறங்காவலர்களை ஒரு தாராள மனப்பான்மை மேற்கொண்டு எல்லாச் சமுதாயத்தாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இங்கு வற்புறுத்த விரும்புகின்றேன்.’’

இந்த கோரிக்கைக்குப் பிறகாவது நீதிக்கட்சியின் தலைவர் பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை.

இதுதான் நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு போட்ட பட்டை நாமம். ஆனாலும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் தொடர்ந்து அதற்காகப் போராடினார்கள்.

இரட்டைமலை சீனிவாசனார் எழுதிய தன்னுடைய ஜீவிய சரிதத்தில் இவ்வாறு கூறுகிறார் :

‘‘ஜாதி இந்துக்கள் ஸ்தாபித்திருக்கும் ‘பச்சையப்பன்’ கலாசாலையில் பிள்ளைகளைச் சில காலத்திற்குப் பிறகு சேர்க்கவும் இம்மனுவே காரணம்’’

பச்சையப்பன் கல்லூரியில் எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தொடர்முயற்சியால் 21-11-1927ல் அனுமதி கிடைத்தது. தாழ்த்தப்பட்டவர்கள் தாங்களே போராடி வெற்றி பெற்ற உரிமைகளை நீதிக்கட்சியினர் தான் பெற்றுதந்தார்கள் என்று எழுதுவது அயோக்கியத்தனம் அல்லவா?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பதவியைத் தந்தது கொள்கையா, சூழ்நிலையா?

“முதன்முதலாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை அமைச்சர் பதவியில் அமர்த்தியது நீதிக்கட்சி” – என்று பெருமை பொங்க, ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற நூலில் எழுதியிருக்கிறார் க. திருநாவுக்கரசு.

இதைப் படிப்பவருக்கு ‘ஆஹா ! நீதிக்கட்சி உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தது’ என்றும் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறது’ என்றும் நினைக்கத் தோன்றும்.

நீதிக்கட்சி எந்தச் சூழ்நிலையில், எப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை அமைச்சர் பதவியில் அமர்த்தியது என்பதை மட்டும் வசதியாக மறைத்துவிடுகின்றனர். ஆகவே, அந்த மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் தற்போது ஆராய்ந்து பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்ட பிரதிநிதியை அமைச்சராக்கும் சூழ்நிலை ஏன் வந்தது? என்பதைத் தெரிந்து கொள்ள நீதிக்கட்சியின் ஆரம்பகால ஆட்சி முதலாகத் தாழ்த்தப்பட்ட பிரதிநிதியை அமைச்சராக்கியவரையில் நாம் ஆராயலாம்.

rajaofpanagal

மாண்ட்போர்டு சீர்த்திருத்தத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1920ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. அத்தேர்தலில் மொத்தம் இருந்த 98 தொகுதிகளில் 63 தொகுதிகளில் நீதிக்கட்சியினர் வெற்றி பெற்றனர்.

 

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை 17.12.1920ஆம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டது. முதலமைச்சராக அகரம். ஏ. சுப்பராயலு ரெட்டியாரும், அமைச்சர்களாக பி. இராமராயநிங்கார் (பனகல்ராஜா), கே. வி. ரெட்டி நாயுடுவும் பதவியேற்றுக் கொண்டனர்.

 

இதில் தாழ்த்தப்பட்ட பிரதிநிதி ஒருவரை அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

இரண்டாவது பொதுத்தேர்தல் 1923ஆம் ஆண்டு 31ம்நாள் நடைபெற்றது. இத்தேர்தலின் முடிவுப்படி நீதிக்கட்சி மீண்டும் அமைச்சரவையை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் பல இடங்களில் தோல்வியைச் சந்தித்திருந்தது. இருப்பினும் நீதிக்கட்சியே ஆட்சி அமைத்தது.

இரண்டாவது அமைச்சரவை 19.11.1923ல் பதவியேற்றுக்கொண்டது. முதலமைச்சராக பனகல் அரசரும், அமைச்சர்களாக ஏ. பி. பாத்ரோ, டி. என். சிவஞானம்பிள்ளையும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதிலும் தாழ்த்தப்பட்ட பிரதிநிதி ஒருவரை அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

நீதிக்கட்சியின் சரிவு இரண்டாவது தேர்தலிலேயே தெரிய ஆரம்பித்தது.

பார்ப்பனரல்லாதார்களுக்கு உரிமைப் பெற்றுத் தரவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று குறிப்பிடப்படும் நீதிக்கட்சி இரண்டாவது பொதுத் தேர்தலிலேயே அதிகம் இடங்கள் பெறாமல் இருந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. நீதிக்கட்சியின் தலைவர்களிடையே ஒற்றுமையின்மை, சீர்குலைவு காணப்பட்டன.

2.  நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களாக இருந்த டாக்டர் சி. நடேச முதலியார், ஓ. கந்தசாமிப்பிள்ளை, எம். சி. ராஜா போன்றோர் கட்சித் தலைமையின் நடவடிக்கைகள் முறையாக நடைபெறவில்லை என்று காரணங்காட்டிக் கடுமையாக எதிர்த்து வந்தனர். அதனால் கட்சியில் வலிவுக்குறைவு ஏற்பட்டது.

3. முதலாவதாக அமைந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூவரும், தெலுங்கர்களாகவே அமைந்துவிட்டதால், அப்படிப்பட்ட நிலை, தமிழகத் தலைவர்களிடையே பெரிதும் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது.

4. நீதிக்கட்சித் தலைவர்களிடையே, தெலுங்கர் தமிழர் என்ற மாற்சரிய உணர்வு ஏற்பட்டிருந்ததானது கட்சியை ஓரளவுக்கு வலிவுக் குன்றச் செய்திருந்தது.

5. சரியான முறையில் பிரச்சாரம் செய்யப்படாமல் இருந்தது நீதிக்கட்சியின் தேர்தல் சரிவுக்கு ஏதுவாக அமைந்துவிட்டது.

டி. என். சிவஞானம் பிள்ளையை அமைச்சரவையில் சேர்த்ததற்கு எதிர்ப்பாகச் சில காரணங்களைக் காட்டி டாக்டர் சி. நடேசமுதலியார், ஓ. தணிகாசலம் செட்டியார் மற்றும் சிலர் நீதிக்கட்சியின் தலைமை மீது குறை கூறினார்கள்.

நீதிக்கட்சியின் அமைச்சரவையைப் பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி எதிர்க்கட்சியினரிடையே ஏற்பட்டது. நீதிக்கட்சிக்குள்ளேயே இருந்து அவ்வப்போது தகராறுகள் செய்து கொண்டிருந்த சிலரும், அந்த உணர்வுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.

சர். பி. தியாகராயரின் மறைவுக்குப் பின்னர், நீதிக்கட்சியைத் திறம்பட நடத்திச் செல்லும் தலைவர் யாரொருவரும் சரியாக அமையவில்லை. பனகல் அரசர்கூட ஆட்சியை நடத்திச் செல்லுவதில் வல்லமை பெற்றிருந்தாரேயல்லாமல், கட்சியைக் கட்டிக்காத்து வளர்ப்பதில் வெற்றிபெற முடியவில்லை. கருத்துவேறுபாடு கொண்டு நீதிக்கட்சியை விட்டுப் பிரிந்திருந்த டாக்டர் சி. நடேசமுதலியார் போன்றவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர, பனகல் அரசர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் உருவான பலன் எதனையும் அளிக்கவில்லை.

நீதிக்கட்சியின் தலைவர்களில் பல பேர்கள் தங்கள் தங்களுக்கு என்று தனித்தனிப் போக்குகளை வகுத்துக் கொண்டு, தனித்தனியாகச் செயல்படத் தொடங்கினர். பனகல் அரசரால், நீதிக்கட்சியின் சரிவுநிலையை, ஓரளவுக்குத்தான் தடுத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்ததே அல்லாமல், அந்த முயற்சியில், அவரால் முழுவெற்றி பெற முடியவில்லை.

1926ஆம் ஆண்டு நவர்பர் 8ஆம் நாளன்று, சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், சுயராஜ்யக் கட்சியினர் 41 இடங்களையும், சுயேச்சைகள் 36 இடங்களையும், நீதிக்கட்சியினர் 21 இடங்களையும் வென்றனர்.

நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட தலைவர்களில் பனகல் அரசர் மட்டும் வெற்றி பெற்றார். மற்றத் தலைவர்களான கே. வி. ரெட்டி நாயுடு, ஏ. இராமசாமி முதலியார், டாக்டர் சி. நடேச முதலியார், ஓ. தணிகாசலம் செட்டியார் போன்றவர்கள் தோல்வியுற்றனர்.

இந்தத் தேர்தல் மூலம் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆட்சியை அமைக்கக் கூடிய பெரும்பான்மை இல்லை.

எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வர முடியாத நிலையில், ஆளுநர் கோஷன், அரசின் நியமன உறுப்பினர்களான 34 பேர்களுடைய ஆதரவைத் தருவதாக வாக்குறுதி தந்து, சுயேச்சையாக வெற்றிபெற்று வந்திருந்த டாக்டர் பி. சுப்பராயன் அவர்களை அழைத்து, அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். டாக்டர் சுப்பராயன் அவர்கள் சுயேச்சை உறுப்பினர்கள் சிலரின் ஒத்துழைப்போடும் ஆளுநர் அளித்த வாக்குறுதியோடும் அமைச்சரவையை அமைக்க இசைந்தார். டாக்டர். பி. சுப்பராயன் அவர்கள் முதலமைச்சராகவும், ஏ. அரங்கநாத முதலியார், ஆர். என். ஆரோக்கியசாமி முதலியார் ஆகியோர் அமைச்சர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறையை ஆராய்ந்து பார்த்து, அறிக்கை ஒன்றினைத் தயாரிக்க வேண்டி, பிரிட்டிஷ் அரசு திரு ஜான் சைமன் என்பவரைத் தலைவராகக் கொண்ட ஆய்வுக்குழு ஒன்றினை 1927 நவம்பர் 8ஆம் நாள் அமைத்தது.

இக்குழுவில் இந்தியர்கள் யாரும் இல்லை என்ற காரணத்தால் சட்டமன்றம் சைமன் குழு நடவடிக்கைகளுக்கு எவ்வித ஒத்துழைப்போ, உதவியோ நல்கக் கூடாது என்ற தீர்மானத்தை சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த திரு. ஜி.  ஹரி சர்வோத்தமராவ் என்பவர் கொண்டு வந்தார்.

நீதிக்கட்சியினர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். முதலமைச்சர் டாக்டர் பி. சுப்பராயன் தீர்மானத்தை எதிர்த்து சைமன் குழுவிற்கு ஆதரவாக வாக்களித்தார். ஆனால், அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் ஏ. அரங்கநாத முதலியார், ஆரோக்கியசாமி முதலியார் ஆகிய இருவரும் சைமன் குழுவிற்கு எதிராகத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அமைச்சரவைக்குள்ளேயே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுவிட்ட நிலையை உணர்ந்த டாக்டர் பி. சுப்பராயன், தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துப் பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அதன் காரணமாக மற்ற இரு அமைச்சர்களும் பதவிகளைத் தாமாகவே இழக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டது.

ஆளுநர் கோஷன், டாக்டர் பி. சுப்பராயன் அவர்களின் அமைச்சரவையைப் புதுப்பிக்கக் கருதி, நீதிக்கட்சியின் தலைவரான பனகல் அரசரின் உதவியைப் பெரிதும் நாடினார். நீதிக்கட்சியினருக்கு மனநிறைவு ஏற்படச் செய்ய வேண்டி, ஆளுநர், நீதிக்கட்சியைச் சேர்ந்த எம். கிருஷ்ண நாயரை நிருவாக ஆலோசனை அவையில் சட்ட உறுப்பினராக நியமித்தார்.

அதன் காரணமாக பனகல் அரசர் டாக்டர் பி. சுப்பராயன் புதிய ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்க முன்வந்தார். அவர் எஸ். முத்தையா  முதலியார், எம். ஆர். சேதுரத்தினம் அய்யர் ஆகிய இருவரையும் சுயராஜ்ய கட்சியிலிருந்து பிரித்து டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் இரு அமைச்சர்களாகப் பொறுப்பேற்க வைத்தார்.

(டாக்டர் பி. சுப்பராயன் அரசு நீதிக்கட்சி அரசு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது- டாக்டர் பி. சுப்பராயன் அரசை இங்கு குறிப்பிட்டதற்குக் காரணம் அந்த அமைச்சரவையிலும் தாழ்த்தப்பட்ட சமூக பிரதிநிதிகள் அமைச்சர்களாக யாரும் அமர்த்தப்படவில்லை என்பதற்காகவே.)

1930ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில், நீதிக்கட்சி வென்று 1930 அக்டோபர் 27ஆம் நாள் அன்று நீதிக்கட்சியின் தலைவராக இருந்த பி. முனுசாமிநாயுடு முதலமைச்சராகவும் பிடி. இராசன், எஸ். குமாரசாமி ரெட்டியார் ஆகிய இருவரும் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

இதிலும் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதி யாரையும் அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

முதலமைச்சர் பி. முனுசாமி நாயுடு பிரச்சினைகளைத் திறம்படத் தீர்ப்பதில் வல்லவராகத்தான் இருந்துவந்தார் என்றாலும், நீதிக்கட்சியிலிருந்த பெரும் ஜமீன்தார்களும், பணக்காரர்களும், முனுசாமி நாயுடு அமைச்சரவைக்கு எதிராக உட்பூசல்களைக் கிளப்பித் தொல்லைகள் பலவற்றைத் தொடர்ந்து தந்து கொண்டே இருந்தனர். அப்படித் தொல்லைகளைத் தருவதில் பொப்பிலி அரசர், வெங்கட்டகிரி குமாரராஜா, எம். ஏ. முத்தையா செட்டியார் போன்றவர்கள் முன்னிலையில் நின்றனர்.

1932ஆம் ஆண்டு அளவில் நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையே சில குழுக்கள் உருவாக, உட்கட்சிப் பூசல்கள் வளர்ந்து, பிளவுகளும் பிணக்குகளும் ஏற்பட்டுக் கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்து காணப்பட்டது.

முனுசாமி நாயுடு அவர்களின் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றினைக் கொண்டு வருவதற்கான சூழ்நிலை ஏற்பட்டது. நீதிக்கட்சிக்குள் பிளவை உண்டாக்கிக் கொண்டிருந்த குழுவினரே மறைமுகமாகக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், சுயராஜ்யக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோரைத் தூண்டிவிட்டு அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கினர்.  நாடகக் காட்சிகளைப் போல, சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைச்சர்களாக இருந்த பிடி. ராஜனும், எஸ். குமாரசாமி ரெட்டியாரும் திடீரென்று தமது அமைச்சர் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டனர். பி. முனுசாமி நாயுடு வேறுவழியில்லாமல் தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

நீதிக்கட்சிக்குள் ஏற்பட்ட பதவிப் போட்டியில் வெற்றி பெற்ற பொப்பிலி அரசர் அவர்களின் தலைமையில் புதிய அமைச்சரவை ஏற்பட்டது. 1932ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம்நாள் பொப்பிலி அரசர் முதலமைச்சராகவும், பிடி. இராஜன், எஸ். குமாரசாமி ரெட்டியார் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதிலும் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதி யாரையும் அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

பொப்பிலி அரசர் தலைமையின் கீழ்ப் புதிய அமைச்சரவை அமைந்ததே ஒழிய, நீதிக்கட்சியின் கட்டுக்கோப்பு நாளுக்குநாள் சீர்குலைய ஆரம்பித்தது. நீதிக்கட்சியைப் பழையபடி சரிப்படுத்த பொப்பிலி அரசர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் வீணாயின.

1934இல் இந்திய மத்திய பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரசுக் கட்சி பெருவாரியான இடங்களில் போட்டியிட்டுப் பெரும் வெற்றியைப் பெற்றது. நீதிக்கட்சி உட்கட்சிப் பூசலின் காரணமாக வலுவிழந்து காணப்பட்டதால், அது அந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது.

அமைச்சர் எஸ். குமாரசாமிரெட்டியார், 1936ஆம் ஆண்டில்,  உடல்நலக் குறைவின் காரணமாக அமைச்சர் பதவியைத் துறந்தார். அந்த அமைச்சர் பதவியில் செட்டிநாட்டுக் குமாரராசா எம். ஏ. முத்தையா செட்டியார் நியமிக்கப்பட்டார்.

இதிலும் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதி யாரையும் அமைச்சராக்கவில்லை நீதிக்கட்சி.

நீதிக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் என்பவர்கள் பலரும், கட்சி வளர்ச்சியைப் பற்றியோ, கொள்கைக் குறிக்கோள்கள் பரவ வேண்டிய இன்றியமையாமை பற்றியோ, திட்டங்கள் நிறைவேற்றுவதைப் பற்றியோ, பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பற்றையும் பரிவையும் பெறுவதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தத்தமது பதவி உயர்வு பற்றியும், ஆட்சி அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால் நீதிக்கட்சியானது கவனிப்பாரற்றுக் கூனிக்குறுகிச் செல்வாக்குக் குறைந்து காணப்பட்டது. பொது மக்களிடம் அது கொண்டிருந்த பிடிப்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவை நாளுக்குநாள் தளர்ந்துபோய்க் கொண்டிருந்தன.

இந்நிலையில் 1935ம் ஆண்டு இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தலை 1937 பிப்ரவரியில் நடத்துவது என்று இந்திய அரசு முடிவு எடுத்திருந்தது.

இந்த நிலையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும், டாக்டர் பி. சுப்பராயன், எஸ். இராமநாதன், கே. சீத்தாரம ரெட்டி போன்றவர்களும் காங்கிரசுக் கட்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.

நீதிக்கட்சியினர் அதிகார மமதையிலும், பணத்திமிரிலும், அலட்சியப்போக்கிலும், பெரும்போக்கான மிதப்புத் தன்மையிலும், ஆழ்ந்து கிடந்ததால் பொதுமக்களின் ஆதரவைப் பெரும் அளவுக்கு இழந்து காணப்பட்டனர்.  தேர்தல் நெருங்க, நெருங்க நீதிக்கட்சியைச் சேர்ந்த பலர், நீதிக்கட்சியை விட்டுவிட்டுக் காங்கிரசில் சேரத் தொடங்கினர்.

1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசு மாபெரும் வெற்றியை ஈட்டியது. நீதிக்கட்சியோ படுதோல்வி அடைந்தது. சட்டமன்றத்தில் மொத்தம் 215 இடங்களில், காங்கிரஸ் கட்சிக்கு 159 இடங்களும், நீதிக்கட்சிக்கு 17 இடங்களும், சுயேச்சைகளுக்கும் பிற கட்சிகளுக்கும் 46 இடங்களும் கிடைத்தன.

இந்தத் தேர்தலில் பொப்பிலி அரசர், பி. டி. இராஜன், வெங்கட்டகிரி குமாரராசா, ஏ. பி. பாத்ரோ போன்ற நீதிக்கட்சியின் மாபெரும் தலைவர்கள் பலரும் தோல்வியுற்றனர். 1937ஆம் ஆண்டு தேர்தல் நீதிக்கட்சியின் செல்வாக்கையும் வலிவையும் பெரும் அளவுக்கு மங்க வைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை அமைக்கும் தகுதியைப் பெற்றிருந்தபோதிலும் அது ஆட்சியை அமைக்க முன்வரவில்லை. அமைச்சரவை மீது ஆளுநருக்கு இருந்த சில ஆதிக்கக் கட்டுப்பாடுகளைக் குறைக்கும் அளவுக்கு, 1935 அரசமைப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும், அது நிறைவேறுகின்ற வரையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப்போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறிவந்தனர்.

mcraja

ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் காங்கிரஸ் கட்சி முன்வராதநிலை ஏற்படவே ஆளுநர், எதிர்கட்சியினராக விளங்கிய நீதிக்கட்சியினரை அழைத்து இடைக்காலப் பொறுப்பு அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிக்கட்சியினர் இசைவு அளித்தனர். இந்த அமைச்சரவையில் சர். கே. வி. ரெட்டிநாயுடு தலைமையின் கீழ்ப் பொறுப்பு அமைச்சரவை அமைக்கப்பட்டது.

இந்த அமைச்சரவையில்தான் தாழ்த்தப்பட்ட சமூக பிரதிநிதியான எம். சி. ராஜாவை அமைச்சராக்கியது நீதிக்கட்சி. அதாவது ஆட்சி காங்கிரஸ் கட்சியினருக்கு மறுபடியும் போய்விடக்கூடிய சூழ்நிலையில்தான் – மூன்றுமாதங்களே இருந்த அமைச்சரவையில்தான் – தாழ்த்தப்பட்ட சமுதாயப் பிரதிநிதியான எம். சி. ராஜாவை அமைச்சராக்கியது நீதிக்கட்சி.

இதில் நாம் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் – நீதிக்கட்சி பெருவாரியாக வெற்றிபெற்றபோது தாழ்த்தப்பட்ட பிரதிநிதிகளை அமைச்சராக்கவில்லை என்பதைத்தான். மக்கள் செல்வாக்கு முழுவதும் இழந்துவிட்ட நிலையில் – எப்பொழுது வேண்டுமானாலும் அமைச்சரவை கலைக்கப்படலாம் என்று தெரிந்திருந்தபோதுதான் எம். சி. ராஜாவை அமைச்சராக்கியது.

இதில் கூட, சரிந்துவிட்ட தன் நிலைமையை, தாழ்த்தப்பட்ட சமுதாய பிரதிநிதி ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதன் மூலம் உயர்த்திக்கொள்ளலாம் என்ற எண்ணமும் அடங்கியிருந்தது. அதனால் தான் தாங்கள் பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது – மக்கள் செல்வாக்கோடு இருந்தபோது – அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டநிலையில், அமைச்சர் பதவி கொடுத்தது. இந்த இடைக்கால பொறுப்பு அமைச்சரவை மூன்று மாதங்களே நடைபெற்றன. பிறகு காங்கிரசுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் ஏற்பட்ட சுமுகமான உடன்பாடு காரணமாக காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

(முற்றும்) 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard