New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள் ந.முருகேச பாண்டியன்


Guru

Status: Offline
Posts: 23616
Date:
திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள் ந.முருகேச பாண்டியன்
Permalink  
 


திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள்

Thirukkural - Tamil Literature Ilakkiyam Papersதமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை திருவள்ளுவருக்கு மட்டும் உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலையாக வள்ளுவர் நிற்பதற்குக் காரணம், அவர் திருக்குறள் என்ற அறநூலைப் படைத்ததுதான். சங்க காலத்திற்குப் பிந்தைய நூலாக திருக்குறள் ஏதோ ஒரு வகையில் தமிழில் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றிருக்கிறது. பக்தி இயக்கக் காலகட்டத்தில் முக்கியத்துவம் இல்லாமலிருந்த திருக்குறள், இருபதாம் நூற்றாண்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், புராணங்கள் போன்றவற்றை இலக்கியமாகக் கருதிய சூழலில், அதற்கு மாற்றாகத் திராவிட இயக்கத்தினர் திருக்குறளை முன்னிறுத்திப் புதிய சொல்லாடலை உருவாக்கினர். கடவுளை மையமாக்கிப் புனையப்பட்ட பக்தி இலக்கியம் பரப்பிய நம்பிக்கைகளுக்கு எதிராக திருக்குறளின் அறிவுபூர்வமான கருத்துகள், தமிழகத்தில் முதன்மையிடம் பெற்றன. நாளடைவில் திருக்குறள் தமிழர் மறை அல்லது வேதம் எனப் போற்றப்பட்டது. மத அடையாளம் வெளிப்படையாக அற்ற திருக்குறளின் பொதுத்தன்மையானது சமூக சீர்திருத்த நோக்கமுடையவர்களைக் கவர்ந்தது.

அன்றைய காலகட்டத்தில் சமஸ்கிருதத்தினை தேவபாஷையாக உயர்த்திப் பிடித்த வைதிக இந்து சமய நெறிக்கு மாறாகத் தமிழின் மேன்மையை வெளிப்படுத்தத் திருக்குறள் பெரிதும் பயன்பட்டது. 1950-கள் தொடங்கி திருமண விழாக்களில் அன்பளிப்பாக வழங்கப்படும் பொருளாகத் திருக்குறள் இடம் பெற்றது; திருமண அழைப்பிதழ்களில், "அன்பும், அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை..." எனத் தொடங்கும் திருக்குறள் அச்சடிக்கப்பட்டது. தொடக்கப் பள்ளிக்கூடம் தொடங்கி உயர்கல்வி வரை திருக்குறள் தமிழ்ப் பாடத் திட்டத்தில் இடம்பெறுதல் கட்டாயமானது. எழுபதுகளில் பேருந்துகளில் இடம்பெற்ற திருக்குறள், ஓரளவு வாசிக்கத் தெரிந்தவர்களின் மனதில் பதிவாகியது. தமிழில் இருந்து உலக மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் திருக்குறள் ஆகும். இன்று தமிழின் அடையாளமாக அறியப்பட்டுள்ள திருக்குறளின் செல்வாக்கு, தமிழரின் வாழ்வில் ஆழமாக ஊடுருவியுள்ளது.

தமிழைச் செம்மொழியாக அறிவித்தவுடன், ஏற்கெனவே திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இன்னொருபுறம் திருக்குறளை உலகப் பொதுமறையாக உயர்த்திப் பிடிக்கும் போக்கு வலுவடைந்துள்ளது. அறக்கருத்து அல்லது நீதியைத் தமிழர்களிடையே போதிக்கும் அறநூலான திருக்குறள், ஒப்பீட்டளவில் வேறு எந்த நூலையும் விடத் தமிழறிஞர்களால் போற்றப்படுகின்றது. ஒவ்வொரு அறக்கருத்தும் மனிதர்களை மேன்மைப்படுத்தும் தன்மையுடையது என்ற கருத்தானது பொதுப்புத்தியாகத் தமிழரிடையே நிலவுகிறது. இத்தகைய போக்குகள் நுண்ணரசியலைப் பின்புலமாகக் கொண்டுள்ளன.

உலகமயமாக்கல், தகவல் தொடர்புப் பரவல் காரணமாகத் தமிழ் அடையாளமானது பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. தமிழரின் வாழ்நிலையும் தமிழின் இருப்பும் முன்னைவிடச் சிக்கலுக்குள்ளாகியுள்ளன. அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான வளர்ச்சிக்கேற்ப தமிழ்மொழியும் மாறவேண்டிய நெருக்கடியான சூழலில் உள்ளது. உலகமெங்கும் தமிழர்கள் பரவியுள்ள நிலையில், தமிழை உலகமொழிகளில் ஒன்றாக மாற்ற வேண்டியது இன்றைய உடனடித் தேவை. ஆனால், திருக்குறளை உலகப் பொதுமறை என்ற புனைவைக் கட்டமைத்துப் பிரச்சாரம் செய்யும் முயற்சி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகு சூழலில் மனிதர்கள் வாழவேண்டிய நெறிமுறைகள் யாவை என்பதைக் கண்டறிந்து, அவற்றைச் செய்யுள் வடிவில் தந்துள்ள வள்ளுவரின் கருத்தியலையும், அவை நவீனத் தமிழ்ச் சமூகத்தில் பெறுமிடத்தையும் மதிப்பிட வேண்டியுள்ளது. நவீன மனிதனுக்கும் திருக்குறள் பிரதிக்குமான உறவு குறித்துக் கண்டறியும்போது புதிய சொல்லாடல்கள் பிறக்க வழியேற்படும்.
சங்க காலத் தமிழகத்தில் பல்வேறுபட்ட இனக்குழுவினர் ஒருங்கிணைந்தும் முரண்பட்டும், தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தினர். குடும்பம், அரசு போன்ற கருத்தியல்கள் வலுப்பெற்றுக் கொண்டிருந்தன. ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்பம் இருந்தது. அதே வேளையில் தாய் வழிச் சமுதாயத்தின் எச்சமாக விளங்கிய பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் கட்டுப்படாமல், ஆணைப் போலவே தன்னிச்சையாக வாழ்ந்தனர். போரில் எதிராளியைக் கொல்லுதல், இறைச்சி உண்ணுதல், கள் குடித்தல், ஆறலைக் களவு, ஆநிரை கவர்தல், ஒருவரையொருவர் விரும்பிய ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்ளுதல் போன்றன இயல்பாக நடைமுறையிலிருந்தன. கொண்டாட்டங்கள் நிரம்பிய அன்றாட வாழ்வில், தத்துவ போதனைகளைக் கேட்கவோ, போதிக்கவோ யாருக்கும் அக்கறை இல்லை. எனவே ஒழுக்க விதிகள் அல்லது அறக் கருத்துகளின் தொகுப்பு நூல் எதுவும் சங்க காலத்தில் எழுதப்படவில்லை.

பௌத்த, ஜைனத் துறவியரின் தமிழக வருகைக்குப் பின்னர், தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. வைதிக இந்து சமயம் கற்பித்த சாதிய ஏற்றத் தாழ்வு சமூகத்தில் வலுப்பெற்றது. உழவுத் தொழிலையும், வாணிகத்தையும் அங்கீகரித்த ஜைன சமயம், மக்களிடையே நிலவிய பொருளியல் சமமற்ற சூழலை வினைக்கோட்பாடு மூலம் நியாயப்படுத்தியது. ஜைன சமயம் போதித்த அறங்கள் "உயிர்க்கொலை கூடாது" என்பதை முதன்மையாகப் போதித்தன. பௌத்த சமயத்தின் பஞ்சசீலமானது கொல்லாமை, களவு செய்யாமை, காமம் கொள்ளாமை, பொய் பேசாமை, கள் குடிக்காதிருத்தல் ஆகியவற்றை அறங்களாக வலியுறுத்தியது. மதத்தைப் பரப்புதலில் மதங்களுக்கிடையில் நடைபெற்ற பூசல்களும், மோதல்களும், கொலைகளும் அளவற்றவை. இத்தகு சூழலில் ஒழுக்கம் என்ற பொருளில் "அறம்" என்ற சொல் உருவானது. எனவேதான் பெரும்பாலான அறங்கள் மதச்சார்புடையனவாக விளங்குகின்றன. சங்க காலத்தியக் கொண்டாட்டங்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகிய மதங்கள், வேறு வகைப்பட்ட நெறிகளை மக்களுக்குப் போதிக்கத் தொடங்கின. புத்தரின் போதனைகளைப் பரப்பிட முயன்ற புத்தபிக்குகளும் மகாவீரரின் கருத்துகளைப் பரப்பிய ஜைன துறவியரும் போதித்த கருத்துகள் நாளடைவில் அறங்கள் தோன்றுவதற்கான பின்புலத்தை உருவாக்கின. அன்றைய காலகட்டத்தில் தமிழில் பல அறநூல்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இன்று நமக்குத் திருக்குறள் மட்டுமே கிடைக்கிறது. சுமார் 1700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் சூழல், தமிழரின் வாழ்நிலையொட்டி திருவள்ளுவர் வகுத்து அளித்த அறநெறிகள் திருக்குறள் என்ற நூல் வடிவம் பெற்றன. அவற்றை எவ்விதமான மறுபரிசீலனையுமின்றி அப்படியே ஏற்றுப் போற்றுவது பண்டிதர்களிடையே பெருவழக்காக உள்ளது. ஒரு காலத்தில் இயல்பாகக் கருதப்பட்டவை பிற்காலத்தில் ஒழுக்க மீறலாகவும், அதேபோன்று ஒழுக்க மீறலாகக் கருதப்பட்டவை பிற்காலத்தில் இயல்பானதாகவும் மாற்றம் பெறுகின்றன. சமூகப் பொருளியல் நிலை மாற்றமடையும்போது, மதிப்பீடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக மனித மனத்தில் "குற்றம்" பற்றிய சிந்தனையை உருவாக்கி, ஏற்கெனவே நம்பியது சரியல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்போது, காலந்தோறும் புதிது புதியதான அறக்கருத்துகள் உருவாக்கப்படுவதற்கான அடித்தளம் வடிவமைக்கப்படுகிறது. இந்நிலையில் தனிமனித அறம், சமூக அறம் ஆகியவை புனிதமாகக் கருதப்படுகின்றன. இத்தகைய புனித அறங்களைக் கட்டுடைத்தால், அவற்றினுள் அதிகாரத்தின் குரல் நுட்பமாகப் பொதிந்திருப்பதனை அவதானிக்க முடியும். எனவே எந்தவொரு அறநூலும் புனிதமானது இல்லை; சார்பின்றி எழுதப்படுவதும் இல்லை. இந்நிலையில் திருக்குறள் அறிவுறுத்தும் அறக்கருத்துகள் இன்றைய தமிழர் வாழ்க்கையுடன் எங்ஙனம் ஒத்துப்போகின்றன என்பது முக்கியமான கேள்வி. திருக்குறள் குறிப்பிடும் பல அறக்கருத்துகள் இன்றைய மனிதனைச் செம்மைப்படுத்த உதவுகின்றன; அதேவேளையில் சில அறக்கருத்துகள் பொருத்தமற்று உள்ளன. திருக்குறளில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துகள் எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருத்தமானவையாக இல்லை என்பது அந்நூலுக்கு இழுக்கு அன்று; அதுதான் யதார்த்தம். கடவுளால் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் மதங்களே தங்களுடைய நிலைப்பாட்டினைக் காலத்தினுக்கேற்ப மாற்றிக்கொள்ளும்போது, அறநூல்களின் கருத்துகளில் முரண்பாடுகளும் மாற்றங்களும் ஏற்படுவது தவிர்க்கவியலாதது. எடுத்துக்காட்டாக, "உலகம் தட்டையானது; கோள்கள் எல்லாம் பூமியைச் சுற்றி வருகின்றன" என்ற விவிலியக் கருத்து இன்று கிறிஸ்துவர்களால் ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் சிலர், "திருக்குறளின் அறக் கருத்துகள் மாற்றப்பட முடியாதவை; தேவ வாக்கியம்" என்று கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இப்போக்கு ஏற்படையதல்ல.

ஜைன சமயச் சார்புடைய திருவள்ளுவர், மனிதர்கள் தங்களுக்குள் பின்பற்றவேண்டிய ஒழுங்குகளை அறங்களாக 1330 குறள்களில் பதிவாக்கியுள்ளார். அவருடைய சொந்த வாழ்க்கை பற்றிய செவி வழிக் கதைகள், அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்துகின்றன. ஒப்பற்ற ஞானியாகவும், மாபெரும் தீர்க்கதரிசியாகவும், தெய்வப் புலவராகவும், அய்யனாகவும் திருவள்ளுவரைப் போற்றித் துதிபாடுதலும் வணங்குதலும் பிரபலமடைந்து வருகின்றன. இறைவனுக்கு நிகராகத் திருவள்ளுவருக்குத் தரப்படும் போற்றுதல்கள், ஒரு வகையில் திருக்குறளுக்குப் பிரச்சினையைத் தரக்கூடியன. திருக்குறளை "வேத நூல்" என்று வழிபாட்டுப் பூசைப் பொருளாக்குவது, மக்கள் அந்நூலை வாசிப்பதைத் தடுத்துவிடும். "நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்தனம்" என்ற நோக்கில் அணுகிடும்போது, திருக்குறள் முன்னிறுத்தும் அறக்கருத்துகளைச் சராசரி மனிதரால் பின்பற்ற முடியுமா? என்பதுதான் முக்கியமான கேள்வி.

திருக்குறள் வாழ்வில் விழுமியங்களையும் மேன்மைகளை முன்னிறுத்தி முக்கியமான அறக்கருத்துக்களைக் கடந்த 1700 ஆண்டுகளாகத் தமிழர்களுக்குப் போதித்து வருகின்றது; ஓரளவு படித்த தமிழரின் கருத்தியல் போக்கிலும் ஊடுருவியுள்ளது. ஆனால் இன்று பெரும்பான்மைத் தமிழர்கள் பண்பாட்டு ரீதியில் மோசமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். மேனாமினுக்கி திரைப்பட நடிகர்களையும், போலியான அரசியல்வாதிகளையும், ஊழல் பேர்வழிகளையும் தொடர்ந்து தங்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இன்றளவும் கிராமப்புறங்களில் ஆதிக்க சாதியினரின் வன்முறை காரணமாகத் தீண்டாமை நிலவுகிறது. பால் சமத்துவமற்ற நிலை காரணமாகப் பெண்ணைப் போகப் பொருளாகப் பாவித்தலும், வன்முறை செலுத்துதலும் தொடர்கின்றன. இத்தகு சூழலில் திருக்குறள் போதிக்கும் அறக்கருத்துகள் தமிழர்களின் மனத்தையும் வாழ்க்கையையும் ஏன் நெறிப்படுத்தவில்லை என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

 __________________


Guru

Status: Offline
Posts: 23616
Date:
RE: திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள் ந.முருகேச பாண்டியன்
Permalink  
 


திருவள்ளுவர் "புலால் மறுத்தல்" அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும் உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக இறைவன் படைத்தான் என்கிறது. இஸ்லாமியரின் குர்ஆன், ஹலால் ஓதிச் சொல்லப்பட்ட விலங்கின் உடலைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று குறிப்பிடுகின்றது. இந்நிலையில் உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்ற ஜைன, பௌத்த சமயக் கருத்துகளைப் பிற மதத்தினர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. சங்க காலத்திலிருந்து இன்றுவரை இறைச்சியை உணவாகக் கொள்ளும் பெரும்பான்மைத் தமிழர்களும் திருவள்ளுவரின் புலால் மறுத்தல் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாடன், இசக்கி, பாண்டி, முனி, காளி போன்ற பல்வேறு துடியான கிராமத்துத் தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலி கொடுத்துத்தான் வழிபாடு நடைபெறுகிறது. நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் நிரம்பிய தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் உயிர்ப்பலி கூடாது என்ற கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் திருவள்ளுவர் உணவுக்காகப் பிற உயிரினங்களைக் கொல்லுகிறவர்களைப் "புலையர்" என்றும், அவ்வாறு கொல்லும்போது ஏற்படும் வெட்டினைப் "புண்" என்றும் இழிவுபடுத்துகின்றார். அறக்கருத்து என்ற பெயரில் ஜைன சமயக் கருத்தைத் தமிழர்கள் மீது திணிக்கும்போது, புலால் உண்பதற்காகப் "புலையர்" என்று திட்டுவது பொருத்தமன்று.

"புலால் மறுத்தல்" அதிகாரம் வலியுறுத்தும் அறக்கருத்துகளைப் பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எல்லாத் தமிழர்களுக்கும் ஏற்புடைய கருத்துகள் திருக்குறளில் உள்ளன என்பது முரண்பாடானது. இந்நிலையில், இறைச்சியையே தினசரி முதன்மை உணவாகக் கொண்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க மக்களிடையே "இறைச்சி உண்ணக்கூடாது" என்று அறம் போதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.

மது குடிக்கக்கூடாது என்பதனை அறமாக வலியுறுத்தும் வள்ளுவரின் குரலும் விமர்சனத்திற்குரியது. மது குடித்தலுக்குப் பல்லாண்டுகளாக மக்கள் பழகியுள்ளனர். மேலும் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் மேலை நாடுகளில் "மது கூடாது" என்ற பேச்சுக்கே இடமில்லை. மது குடித்தலைக் குற்றமெனக் கற்பிக்கும் குறளின் அறக்கருத்து நவீன வாழ்க்கையுடன் முரண்படுகிறது.

புலால் உண்ணுதலையும், கள் குடித்தலையும் கடுமையாகக் கண்டிக்கும் திருக்குறளின் அறங்களை உலக மக்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா? என்பது முக்கியமான கேள்வி. இந்நிலையில், நவீன வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற குறள்களை நீக்கிவிட்டு உலகத்து மக்களுக்கு திருக்குறளை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு திருக்குறளின் சில குறள்களை நீக்குதல் என்பது திருவள்ளுவருக்குச் செய்யும் பெருந்துரோகமாகும்.

திருக்குறள் என்பது பால் பேதமற்ற பிரதி; அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான கற்பினை வலியுறுத்துகின்றத் ஒடுக்கப்பட்ட பெண்களுக்குச் சார்பான அறக்கருத்துகளை முன்னிறுத்துகிறது என்று அழுத்தமான நம்பிக்கை தமிழரிடையே உள்ளது. "தமிழ்ப் பெண் என்பவள் குறளின் வழிநடந்தால், வாழ்வில் சிறக்கலாம்" என்று தமிழறிஞர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெண்ணியவாதிகள் திருவள்ளுவரின் பெண் பற்றிய மதிப்பீடுகளைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். "பெண் வழிச் சேரல்" அதிகாரம் முன்னிறுத்தும் கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. பெண்ணின் பேச்சைக் கேட்டு நடத்தல், பெண்ணின் வேண்டுதலை நிறைவேற்றுதல், பெண்ணுக்குப் பணிந்து நடத்தல் ஆகிய செயல்களைச் செய்யும் ஆண்களை திருவள்ளுவர் கடுமையாகக் கண்டனம் செய்கிறார். பெண்ணுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிற ஆணினால் அறச்செயல்களைச் செய்யவியலார் அவனுடைய பிறவிக்கு மோட்சம் கிடைக்கார் அவனால் பிறருக்கு நன்மை செய்ய முடியார் அவனுக்குச் செயல்திறன் இல்லாமல் போகும். பெண்ணின் அறிவுத்திறனையும், ஆற்றலையும் மறுக்கும் போக்கைத் திருக்குறளில் காணமுடிகிறது. திருவள்ளுவரின் குரலில் ஆண்மைய வாதம் அழுத்தமாகப் பொதிந்துள்ளது. "பெண் சொல் கேளேல்" என்பதை அறமாக முன்வைக்கும் திருவள்ளுவரின் கருத்தியல், சமூகத்தில் பெண்ணின் இருப்பை மறுப்பதுடன் அவளுடைய மனத்தையும் புறக்கணிக்கிறது.

வள்ளுவரின் காலத்தில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் பன்முகப் பாலியல் ஈடுபாடு இருந்தது. திருமணம் என்ற அமைப்பிற்குள் கட்டுப்படாத மகளிர் இருந்தனர். பொருளை விரும்பும் பெண்கள் இருந்தனரே அன்றி, பொருளுக்காக ஆடவரை விரும்பும் பெண்கள் பற்றிய குறிப்புகள் குறளில் இல்லை. குடும்ப அமைப்பில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டினை அறமாக திருவள்ளுவர் வலியுறுத்துவது அன்றைய காலகட்டத்தில் முற்போக்கான அம்சமாகும். மகளிர் நிறை காக்கும் கற்பினை முதன்மைப்படுத்தும் வள்ளுவர், ஆடவர் நிறை பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒப்பீட்டளவில் பெண்களுக்குத் தாராளமாக அறிவுரைகளை அள்ளி வழங்கியுள்ளார்.

ஆண்களுக்கான அறமாகத்தான் பிறன்மனை நயத்தல் கூடாது என்ற வள்ளுவரின் அறிவுரையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கணவன்-மனைவி என்ற சிறிய குடும்பத்தினை முன்னிறுத்தும் நிலையில், பாலியல் அறமானது முழுக்கப் பெண்ணை நோக்கியே வள்ளுவரால் முன்மொழியப்பட்டுள்ளது. தனி மனித ஒழுக்கம் என்ற லட்சிய நோக்கிலான அறமும் பெண் குறித்த ஆண் மேலாதிக்கத் தன்மையுடன் அமைந்துள்ளது. வள்ளுவர் சித்திரிக்கும் ஆணின் ஒவ்வொரு அசைவும், செயலும் பெண்ணின் மீதான அவனது அதிகாரத்தைச் சுற்றியே இயங்குகின்றது. பெண்ணுடலைப் பிற ஆண்களிடமிருந்து காத்து புனித உடலாக மாற்றி, கணவனுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்குமாறு பெண் மனத்தை மாற்றிடும் நுட்பமான பணியைக் "கற்பு" என்ற சொல்லாடலின் மூலம் அறநூல்கள் முயன்றுள்ளன. இந்நிலைக்கு திருக்குறளும் விலக்கு அல்ல.

வள்ளுவரின் ஆண்-பெண் பாலுறவு குறித்த பார்வை காமத்துப்பாலில் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. காமத்துப்பால் முழுக்க ஆணின் மொழியிலமைந்த பிரதியாகும் பெண் மொழிக்குச் சிறிதும் இடமில்லை. "கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள" என்ற குறள் ஆண் மைய வாதத்தைச் சார்ந்தது. இக்குறளில் ஆணின் பாலியல் வேட்கை மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் தனக்காக பாலியல் விழைவை அடைதல் அல்லது துறத்தல் பற்றி வள்ளுவருக்கு அக்கறை எதுவுமில்லை. பெண் எனப்படுபவள் ஆணினால் அறிந்துகொண்டு அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்ற அணுகுமுறையில் பால் வேட்கையானது ஆணின் தொழில்நுட்பமாக மாற்றப்படுகின்றது. இத்தகைய ஆண் மையப் பார்வைதான் எல்லாவகையான பாலியல் அத்துமீறல்களுக்கும் வன்முறைகளுக்கும் அடித்தளமாகும். ஒரு நிலையில் பெண்ணுடலைப் போகப் பொருளாக மாற்றித் துய்ப்பிற்கான தளமாக்கும் வள்ளுவர், இன்னொரு நிலையில் பெண்ணுடலை உரிமை கொள்ளும் அதிகாரத்தையும் அறத்தின் பெயரால் ஆணுக்கு வழங்குகிறார். பெண்ணை முன்னிறுத்திக் காதலி அல்லது மனைவி என்ற அடையாளத்துடன் பாலியல் கொண்டாட்டத்தினை முன்மொழியும் காமத்துப்பால், ஒரு வகையில் ஆண்டான் அடிமை உறவின் வெளிப்பாடுதான். பெண் தனது உடலை முழுமையாக ஆணிடம் ஒப்படைத்துவிட்டுப் பேச்சற்று இருக்கும்வரை "காமம்" பற்றிய புனைவுகள் பொங்கிப் பெருகும்.

"தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

என்ற குறள் பெண்ணைப் பெருமைப்படுத்தினாலும், மனைவி மீது தேவையற்ற சுமையைக் கற்பு என்ற பெயரில் ஏற்றுகின்றது. தூய உடலும், கணவனை வணங்கும் மனமும்மிக்க பெண்ணைப் பற்றிய புனைவைக் கட்டமைத்திடும் குறள் கேள்விக்குரியதாகின்றது. மனைவியைத் தொழுதெழும் கணவன் பற்றியும் அவன் பெய்யெனப் பெய்யும் மழை பற்றியும் வள்ளுவர் அக்கறை கொள்ளாதது குறித்துப் பெண்ணியவாதிகள் கண்டனம் எழுப்புகின்றனர். பல நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் உருவாக்கிய பெண் பற்றிய பிம்பம், நவீனத் தமிழ்ப் பெண்களால் மறுதலிக்கப்படுகின்றது.

இன்று பிரதமர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், உச்சநீதிமன்ற நீதியரசர், காவல்துறை உயர் அதிகாரி, பெரும் தொழிலதிபர் என உயர் மட்டங்களில் பெண்கள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றனர். இந்நிலையில், இத்தகைய பெண்களின் கீழ்ப் பணியாற்றும் ஆண்கள் வள்ளுவரின் அறமான "பெண் சொல் கேளேலைப்" பின்பற்றினால், அச்செயல் சட்ட விரோதமானது; இந்திய அரசியல் நிர்ணய சபை வகுத்துள்ள விதிகளுக்கு முரணானது. எனவே, திருவள்ளுவர் வலியுறுத்தும் பெண் பற்றிய அறங்களில் சில இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமாக இல்லை. தமிழ்ப் பெண்களுக்கே பொருந்தாத திருக்குறளின் அறக்கருத்தை உலகத்துப் பெண்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா? என்பது முக்கியமான கேள்வி.

சமூகமாக வாழும் மக்கள், தங்களுக்குள் ஒருங்கிணைந்து வாழ்வதற்காக வள்ளுவர் குறிப்பிடும் அறங்கள் குறிப்பிடத்தக்கன. அவ்வகையில் வள்ளுவரின் இன்னொரு முகம் எளிமையானது; சராசரி மனிதனாகக் காட்சியளிக்கின்றார். கல்வியின் சிறப்பைக் குறிப்பிடும்போது, அதன் தேவையை எதிர்மறையாக்குகின்றார். கல்லாதவனின் முகத்திலிருப்பவை கண்கள் அல்ல, புண்கள் எனத் திட்டுகிறவர், மேலும் அவனை "விலங்கு" எனப் பழிக்கின்றார். கற்றோர் முன்னால் கல்லாதவன் பேச முயலுவது, "முளை வளராத இளம் சிறுமி காம வயப்பட்டது போல" எனக் கண்டிக்கிறார். "பிறரிடம் அரிய விஷயங்களைக் கேட்டு ஆராய்ந்திடும் மனநிலை இல்லாதவன் செத்தாலும், வாழ்ந்தாலும் என்ன" என்று கோபத்துடன் கேள்வி கேட்கிறார். பல்லாண்டுகளாகக் கல்வி கற்பது உயர் சாதியினருக்கு மட்டும் உரித்தானது என்ற நூதன தர்மம் நிலவிய தமிழகத்தில் வள்ளுவர், தனது அறக்கருத்துகள் மூலம் கெட்டி தட்டிப்போன சராசரி மனிதனின் பிரக்ஞையில் பாதிப்பை ஏற்படுத்திட முயன்றுள்ளார்.

"அன்பில்லாதவர் உடம்பானது எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்டது", "கண்ணோட்டம் இல்லாத கண்கள் வெறும் புண்கள்," "கண்ணோட்டமில்லாதவர் மரத்திற்கு ஒப்பாவர்" எனக் கண்டனங்களை வீசும் வள்ளுவர், "மானம் இழந்தவர் மயிரனையர்" எனக் குறிப்பிடுவது தற்செயலானது அல்ல. மானம் என்பதற்குப் பொதுவான வரையறை இல்லாத நிலையில், ஓர் அரசியல் கட்சியிலிருந்து சில மூத்தத் தலைவர்கள் பிரிந்தபோது, அக்கட்சியின் செயலாளர் அவர்களை "உதிர்ந்த மயிர்கள்" என வருணித்தது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. திருக்குறள் முன்னிறுத்தும் சமூக அறங்களில் தேவையானவற்றை நவீன வாழ்க்கையில் பயன்படுத்தலாம். மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், இன்னும் ஏறமுயன்றால், அச்செயல் உயிரைப் பறித்துவிடும் என்ற எளிய உவமை மூலம் ஒரு கருத்தைப் பதிவாக்கிட முயலும் வள்ளுவரின் முயற்சியானது, மக்களிடையே கவனம் பெற்றதில் வியப்பில்லை. தொடர்ந்து திருக்குறள் நூலை வாசிக்கின்றவர்களுக்கு திடீரெனப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அதிலிருந்து விடுபடும் மனத்தெளிவைத் திருக்குறள் ஏற்படுத்தக்கூடியது. "நீரின்றி அமையாது உலகு", "உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு", "அடக்கம் அமரருள் உய்க்கும்", "கற்க கசடறக் கற்பவை" போன்ற வரிகள் மனத்தில் சிந்தனையை ஏற்படுத்தக்கூடியன. இத்தகைய வரிகளினாலே திருக்குறள் தொடர்ந்து தமிழர் மனங்களில் தொடர்ந்து ஆளுமை செய்கின்றது.

ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து அறக்கருத்துகளைச் சொல்ல முயன்றிருப்பதுதான் திருக்குறள் நூலின் பலவீனமான அம்சம். ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் கட்டாயம் பத்து அறக்கருத்துகளைக் குறிப்பிட வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாகச் சாதாரணமான கருத்தமைந்த குறள்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பிற அதிகாரங்களைவிட, அது முக்கியமானது என்ற தொனி, குறள்கள் உருவாக்கத்தில் வெளிப்பட்டுள்ளது. இதனால் பல குறள்கள் கவிதையாக வெளிப்படாமல், கருத்தைத் தாங்கியிருக்கும் வறண்ட நடையில் செய்யுள்களாக உள்ளன. பொதுவாக வளமான கவித்துவச் செறிவும் இலக்கிய ஆளுமையும் மிக்க சங்கக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது, திருக்குறளில் கவித்துவ அம்சங்கள் மிகக் குறைவு.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளுவரின் குரலில், வைதிக இந்து சமயம் கட்டமைத்த சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிரான மறுப்பு அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. இதுபோன்ற குறள்களை வைத்துக்கொண்டு வள்ளுவர் நூதன பார்வைக்கு எதிரானவர் என்று பலரும் முடிவெடுக்கின்றனர். ஒட்டுமொத்தமாக குறள்களை ஆழ்ந்து வாசிக்கும்போது, முரண்பட்ட போக்குகளை வள்ளுவரிடம் காண முடிகின்றது.

எந்தவொரு மதத்தையும் சாராத அறநூல் திருக்குறள் என்ற கூற்றிலும் முரண் உள்ளது. கடவுள் நம்பிக்கை, உருவ வழிபாடு, ஆரியருடைய வேள்வி, பிறவி நம்பிக்கை, ஊழ்வினை, சொர்க்கம், நரகம், மோட்சமடைதல், நல்வினை, தீவினை போன்றவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்குச் சார்பான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் குறள்கள், திருக்குறளில் நிரம்ப உண்டு. உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்ற முரணில் நல்ல செயல்கள் மூலம் தாழ்ந்த குடியில் பிறந்தவன் உயர்ந்த குடியாகலாம் என்கிறார் திருவள்ளுவர். இக்குறளை ஆராய்ந்தால், குடி அல்லது சாதிகளுக்கிடையில் பிறப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஏற்றத்தாழ்வினை முற்றிலும் மறுக்கவோ அல்லது கண்டனம் செய்யாத நிலையைக் கண்டறியலாம்.

அரசியலதிகாரத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்திடவும், மதங்களின் ஆளுமையைத் தக்க வைப்பதற்கும் எழுதப்பட்ட அறநூலான திருக்குறளின் கருத்துகளை எந்த அளவு நடைமுறைப்படுத்த முடியும் என்பதுதான், முக்கியமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில் திருக்குறளின் தேவையை மதிப்பிட வேண்டியுள்ளது. திருக்குறளின் அறக்கருத்துகளைப் பரந்துபட்ட நிலையில், மக்களிடம் அறிமுகம் செய்வது நோக்கமெனில், அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. மாறிவரும் சமூகச் சூழலுக்கேற்ப திருக்குறளின் கருத்துகள் பொருந்துதல் அல்லது முரண்படுவதை விமர்சனம் செய்வதன் மூலமாகவே, திருக்குறள் சமகால மதிப்புப் பெறும். அதுவே அந்நூல் தொடர்ந்து மக்களிடம் வழக்கிலிருப்பதற்கான வழியாகும்.

எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற புனித நூலாகத் திருக்குறளைப் போற்றுவது என்பது அந்நூலை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும்.

இன்று தமிழர் என்ற அடையாளத்துடன் பல்வேறு சாதியினர், மதத்தினர், நாத்திகர் உள்ளனர். உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். வேறுபட்ட பழக்க, வழக்கங்கள், நம்பிக்கைகள் கொண்ட, உலகத் தமிழர்களின் பண்பாடு என்பது ஒற்றைத் தன்மையுடையது அல்ல. பன்முகப் போக்குகள் நிலவுவதை அங்கீகரிப்பதன் மூலமாகவே தமிழர் என்ற அடையாளம் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் இறைச்சி உண்ணுதல், பெண் பற்றிய மதிப்பீடுகள் போன்றவற்றில் முரண்பட்ட கருத்துகளைக் கொண்ட திருக்குறள் நூலினைத் "தமிழர் வேதம்" என்று வலியுறுத்துவது தமிழர்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்துவிடும். எட்டுக்கோடி தமிழர்களுக்கு பொதுவான அறங்கள் என்பதே நடைமுறை சாத்தியமற்றது.

பல்வேறு மொழியினரும், பழங்குடியினரும் வெவ்வேறு பண்பாட்டு அடையாளங்களுடன் இந்தியாவெங்கும் வாழ்ந்து வருகின்ற சூழலில், பண்டைய அறங்களைப் போதிக்கும் திருக்குறள், இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற கருத்து நம்முடைய விருப்பம் சார்ந்தது; நடைமுறைக்கு ஏற்புடையதன்று.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசிக்கொண்டிருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற கருத்துகள் திருக்குறளில் உள்ளன. எனவே "திருக்குறள் உலகப் பொதுமறை" என்ற கருத்திலும் முரண்பாடுகள் உள்ளது. பொதுவாக உலகப் பொதுமறை என்ற கருத்தே கானல் நீர் போன்றது; பண்டிதர்களின் உச்சகட்டப் புனைவு. அப்படியொரு நூல் இருக்கச் சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை.

1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கற்று வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில், இவைதான் மனிதன் வாழவேண்டிய நெறிமுறைகள் என்று ஆழமாகச் சிந்தித்து, அவற்றைப் பதிவாக்கியுள்ள செயல், திருவள்ளுவரை என்றும் சாதனையாளராக முன்னிறுத்துகிறது. திருக்குறளின் அறக்கருத்துகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழரை நெறிப்படுத்த முயன்றுள்ளன; தமிழர் வாழ்க்கைக்குத் தத்துவப் பின்புலத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழர்களுக்கும் திருக்குறளுக்குமான ஆழமான உறவு என்றும் பிரிக்கவியலாத தன்மையுடையது என்பதே திருக்குறளுக்குப் பெருமை சேர்ப்பதாகும். விமர்சனமற்ற வெற்றுப் புகழுரைகள் திருக்குறளுக்குத் தேவையில்லை. எனவே பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் சிறந்த சமூகச் சிந்தனையாளரான திருவள்ளுவரின் இயல்புக்குப் பொருந்தாத வேடங்களை, அவருக்கு அணிவிப்பது பெருமைக்குரியதல்ல. திருக்குறள் என்ற அறநூல் தனது அசலான பலத்தினால் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பதுதான் உண்மை.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard