New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?
Permalink  
 


சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா? 

பி.ஏ. கிருஷ்ணன்

சிலநாட்களுக்கு முன்னால் டென்னிஸ் ஹட்ஸன் எழுதிய ‘கடவுளின் உடல்’ என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். காஞ்சிபுரத்தில் பரமேச்வர விஷ்ணுக் கிருஹம் என்று அழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள்கோயிலைப் பற்றிய புத்தகம் அது. கோயிலில் இருக்கும் சிற்பங்களில் முக்கியமான ஒன்று நந்திவர்ம பல்லவனின் மேற்பார்வையில் இருவர் (ஒருவர் தலைகீழாகக் கழுவேற்றப்படுகிறார்) கழுவேற்றப்படுவதைக் காட்டுகிறது. கழுவேற்றத்தைப் பற்றிய முதல் தமிழ்ப்படைப்பு இதுவாகத்தான் இருக்கும். இந்தச் சிற்பத்தின் புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு மிகவும் பேசப்படும் மற்றொரு கழுவேற்றத்தைப் பற்றிய நினைவு வந்தது.

 

எட்டாயிரம் சமணர்கள் மதுரையில் கழுவேற்றப்பட்டார்கள் என்ற செய்தி தமிழில் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. வாயில் நுரைததும்ப, இந்து மதத்தின் சாவுமணி எங்களால்தான் அடிக்கப்பட வேண்டும் என்ற வேகத்தோடு எழுதுபவர்களிலிருந்து தமிழின் முக்கியமான படைப்பாளிகள் வரை இந்த சம்பவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று:

 

ரத்தம் தோய்ந்த தீவிரவாதத்தின் வரலாறு பூமியின் இரண்டு பெரிய மதங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது, அதாவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே மதத்தின் பெயரால் மாற்று மதத்தவர் கூண்டோடு அழிக்கப்பட்டனர். அந்த மதத்தின் அடையாளங்கள், குறிப்புகள், கலாச்சாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது! அந்த மதத் தீவிரவாதத்தின் தலைவன் கூன்பாண்டியன் என்ற இந்து, கழுவிலேற்றி கொல்லப்பட்ட 800 மாற்று மதத்தவர்கள் சமணர்கள்.

 

மிகுந்தகோபத்தோடு எழுதியிருக்க வேண்டும். இரண்டு வாக்கியங்களில் மூன்று தவறுகள். சம்பவம் நடந்ததாகக் கூறப்படுவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்ல. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னால். சமணத்தின் அடையாளங்கள், குறிப்புகள், கலாச்சாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன என்று கூறுவது முற்றிலும் தவறு. கீழ்க்கணக்கு நூல்களில் பல சமணர்களால் இயற்றப்பட்டவை. சிலப்பதிகாரத்தை எழுதியவரும் சமணர்தான் என்று படித்த ஞாபகம். நன்னூல் என்று ஓர் இலக்கணப் புத்தகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். திருத்தக்கத் தேவர் ‘இந்து’ அல்ல. மூன்றாவது தவறு கொல்லப்பட்டவர்கள் 800 என்று குறிப்பிட்டது. தட்டச்சு செய்த போது நேர்ந்த தவறாக இருக்கலாம்.

 

தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பூமணி தனது ‘அஞ்ஞாடி’ நாவலில் ‘கழுவேற்ற’த்திற்கு ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருக்கிறார்.sravanbelagolakartz20000qp.jpg

 

வரலாற்று நிகழ்வுகள் என்று கூறப்படுபவை பற்றி தமிழில் எழுதுபவர்களில், மிகச் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு வரலாற்றுக் கட்டுரைகளுக்கும் துண்டுப் பிரசுரங்களுக்கும் இடையே பல வித்தியாசங்கள் இருக்கின்றன என்பது தெரியாது. தங்களுக்குச் சாதகமாகத் தகவல்கள் கிடைத்தால் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்ற முன்முடிபோடுதான் அவர்கள் அவற்றை அணுகுகிறார்கள்.

 

சமணர்கள் கழுவேற்றத்தைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?
தென்னிந்திய வரலாற்றின் புகழ்பெற்ற ஆசிரியரான நீலகண்டசாஸ்திரி சொல்கிறார்:
இது ஒரு கசப்பான பழங்கதை; இதை வரலாறென்று எடுத்துக் கொள்ளமுடியாது.
சாஸ்திரி பார்ப்பனர், பழைமைவாதி என்று ஒதுக்கிவிடலாம். ஹிந்துமதத்தைப் பற்றி பல புத்தகங்களை எழுதிய (ஹிந்துத்துவ வாதிகளுக்குப் பிடிக்காத) வெண்டிடோனிகர் சொல்கிறார்:
இந்தச் சம்பவம் நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இடதுசாரி வரலாற்றாசிரியராக அறியப்படும் ரோமிலா தபார் கூறுகிறார்:
இது நடந்திருக்கக் கூடிய கதையாகத் தோன்றவில்லை
சமணமதத்தைப் பல வருடங்களாக ஆராய்ந்து கொண்டிருக்கும் வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?
பால்டுண்டாஸ் எழுதிய ‘ஜைனர்கள்’ என்ற புத்தகம் உலகப்புகழ் பெற்றது. இவர் கூறுவது இது:
இந்தச் சம்பவத்தைப் பற்றி ஒருகுறிப்பு கூட ஜைன இலக்கியங்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ இல்லை.

 

இவரைத் தவிர இந்தக் காலகட்டத்தைப் பற்றி ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியவர்கள் கார்ட், இந்திரா பீட்டர்சன், லெஸ்லி ஓர், ரிச்சர்ட் டேவிஸ் போன்றவர்கள். இவர்களில் யாரும் இந்தச் சம்பவத்திற்கு வரலாற்று ஆதாரம் இருக்கிறது என்று கூறவில்லை.

 

இந்தக் கதை எங்கிருந்து பிறந்தது?

2

 

சிலப்பதிகாரம் காட்டும் தமிழகத்தில் மதம் சார்ந்த சண்டைகள் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக திருமாலைப் போற்றும் மிக அழகிய பாடல்கள் சிலப்பதிகாரத்தில் இருக்கின்றன. அதே போன்று மணிமேகலையும் பௌத்த மதத்தைச் சாராத திருவள்ளுவரைப் ‘பொய்யிற் புலவர்’ என்று வாழ்த்துகிறது. அப்பர், சம்பந்தர் காலக்கட்டமான ஏழாம் நூற்றாண்டில் இந்தப் பூசல் தொடங்குகிறது. அப்பர் சமணர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்;
பாசி பிடித்த பற்களை உடையவர்கள், அழுக்குப் பிடித்தவர்கள், பலம் இல்லாதவர்கள் என்று சமணர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

 

இன்னொரு பாட்டில் அப்பர் சொல்கிறார்:

 

கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று எண்ணி,

 

வடுக்களோடு இசைந்த நெஞ்சே கடுக்காய்ப் பொடியை உடலில் தடவிக்கொண்டு அதுதான் தவம் என்ற முட்டாள் தனமாக இருந்து மனதில் வடுக்களை ஏற்படுத்திக்கொண்டேன் என்கிறார் அவர்.

 

மேலும் சமணரை, இரவில் பட்டினிகிடப்பவர், சாப்பிடும்போது பேசாதவர், வெட்கம் இல்லாதவர், மயிற்பீலியைக் கையில் வைத்துக்கொண்டு அலைபவர், அம்மணமாக அலைபவர் என்று பலவாறாகக் கூறுகிறார்.02MP_LAKSHMI_INSIDE_518783g.jpg

 

இவ்வாறே குளிக்காதவர், இரண்டு கைகளாலும் உணவருந்துபவர், நின்றுகொண்டே சாப்பிடுபவர், தலைமுடியைப் பிடுங்கிக் கொள்பவர் என்று சம்பந்தரும் சமணரைக் குறிப்பிடுகிறார்.

 

இந்திரா பீட்டர் சன் குறிப்பிடுவது போல இந்தக் குற்றச்சாட்டுக்களில் எதுவும் கொள்கைகளைப் பற்றி அல்ல. இருத்தல், மற்றும் வழிபாட்டு முறைகளைப் பற்றியது. தேவாரத்தில் பல பாட்டுகள் உடற் தூய்மையை வலியுறுத்துகின்றன. இறைவனைத் துதிக்கும்போது உடலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்கின்றன.

சம்பந்தர் தனது மதுரைப்பாடல்களில் மற்றொன்றும் சொல்கிறார்:

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?

வேதத்தையும் வேள்வியையும் திட்டிக் கொண்டு திரியும் பயனற்றவர்களான சமணர்களையும் பௌத்தர்களையும் நான் வாதத்தில் வென்று அழிக்க விரும்புகிறேன்.

 

வேதத்தைத் திட்டினால் அது நாதனைத் திட்டியதாகும் என்று சம்பந்தர் கருதுகிறார். ‘வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே’ என்று அவரே சொல்லியிருக்கிறார்.

 

ஆனாலும் வேதத்தைப் பற்றிச் சம்பந்தர் பேசியிருந் தாலும் கொள்கைகள் அளவில் சமணர்களோடு சம்பந்தர் வாது புரிந்திருப்பார் என்று கருத இடமேயில்லை. அவரது விருப்பத்தை இறைவன் நிறைவேற்றியதாகத் தேவாரத்தில் ஆதாரம் - எனக்குத் தெரிந்த அளவில் - இல்லை.

 

இதனாலேயே சம்பந்தர் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் என்பதற்குத் தேவாரத்திலேயே ஆதாரம் இருக்கிறது.

 

சந்துசேனனும் இந்துசேனனுந்
தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனும்
முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந் தாரியத்தொடு
செந்தமிழ்ப் பயன் அறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயான் நிற்கவே.

 

சந்துசேனன் கந்துசேனன் போன்ற பெயர்களை வைத்துக்கொண்டு (தமிழ்ப் பெயர்அல்ல, வடமொழிப் பெயரும் அல்ல, பிராகிருதப் பெயர் என்று சொல்கிறாரோ?) தமிழும் வடமொழியும் அறிந்ததின் பயன் தெரியாமல் மந்திபோலத் திரியும் குருடர்களுக்கு நான் இளைத்தவன்அல்லன். ஏனென்றால் ஆலவாயில் இருக்கும் சிவன் எனக்குத் துணை நிற்கின்றான்.

 

மொழிகளின் பயனே இறைவனைத் துதிப்பதற்குத்தான், வாதம் செய்வதற்கு அல்ல என்கிறார்.

 

மற்றொரு பாடலில் மது அருந்தாத இவர்களுக்கு நான் இளைத்தவன் அல்லன் என்கிறார்:

 

கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியுங் குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந் திவணநந்தியு மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ மேதவம்புரி வோமெனும்
சினகருக்கெளி யேனலேன்றிரு வாலவாயார னிற்கவே.

’மொழி கொளா அனகநந்தியர்’! பெயர்களே அவர்களைத் திட்டுவதற்கு ஆயுதமாக ஆகிவிடுகிறது.

 

பல்தேய்க்கும் பழக்கம் கிடையாது, குளிப்பது அரிது, இரண்டு கையாலும் சாப்பிடுவது, ஆடையின்றி அலைவது போன்ற பழக்கங்களுக்கு கழுமரமா பரிசு? வசைகள்தான் பரிசு. எத்தர், கையர், குண்டர் போன்ற சொற்பரிசுகள் அளிக்கப்படுகின்றன.55_full.jpg

 

’நீங்கள் எக்கேடும் கெட்டுப் போகலாம். ஆனால் பொதுமக்களைச் சிவபக்தியிலிருந்து திசை திருப்ப வேண்டாம்’ என்று தேவாரப் பாடல்கள் சொல்கின்றன. சமணமதம் என்ன சொல்கிறது, அது எவ்வாறு மக்களைத் திசை திருப்புகிறது என்பதற்கெல்லாம் இந்தப் பாடல்களில் விடை கிடைக்காது. பாடல்கள் பக்தர்களுக்காக, நம்பிக்கை உள்ளவர்களுக்காக, இயற்றப்பட்டவை. சந்தேகப்படுபவர்களுக்காக, வாதம் செய்பவர்களுக்காக அல்ல.

 

கொள்கை அளவில் சம்பந்தர் சமணர்களோடு வாது செய்ய விரும்பவில்லை என்று தோன்றுகிறது. மேலும் பக்திமார்க்கம் வாதத்தை விரும்பாதது. நம்பிக்கை இருக்கும்போது வாதம் எதற்கு? நாயன்மார்கள் சிவபக்தி ஒன்றே உய்வதற்கு வழி என்று திண்ணமாக நம்புகிறவர்கள். ’உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய’ வேண்டும். இது சமணர்களுக்குக் கைவராது. எனவே அவர்கள் திட்டப்படுகிறார்கள்.

 

’உணர்ந்துணர்ந்து உரைத்துரைத்து இறைஞ்சும்’ வைணவர்களும் திட்டுகிறார்கள். திருமாலின் திருவடிகளைத் தொழும் திருமங்கையாழ்வாரும் ‘வந்திக்கும் மற்றவர்க்கும்மா சுடம்பின் வல்லமணர் தமக்கும் அல்லேன்’ என்று கூறுகிறார். ‘அறியார் சமணர், அயர்த்தார் பௌத்தர் சிறியார் சிவப்பட்டார்’ என்பது திருமழிசை ஆழ்வார் வாக்கு. ‘தர்க்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையான் சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும் நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே’ என்கிறது ராமானுஜ நூற்றந்தாதி. இதை வைத்துக்கொண்டு வைணவர்கள் மற்றைய சமயத்தைச் சார்ந்தவர் அனைவரையும் அழித்தொழித்தனர் எனக் கூறமுடியுமா? திருவரங்கத்து அமுதனாரும் சம்பந்தரைப் போலவே தங்கள் நிற்பதற்காகவேதான் பாடுபடுகிறேன் என்று சொல்கிறார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

 

சண்டை சமணர்களுக்கும் சைவர்களுக்கும் மட்டும் இல்லை. சமணர்- பௌத்தர், சமணர் - வைணவர், வைணவர் - சமணர், வைணவர் - சைவர் போன்ற பல சண்டைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. பக்தியை வலியுறுத்தும் சைவர்களுக்கும் வழிபாட்டு முறைகளை வலியுறுத்தும் சைவப் பிராமணர்களுக்கும் இடையேகூட உரசல் இருந்தது. சமணர்களும் இவற்றைப் போலப் பல ‘வசவு’ப் பாடல்களை எழுதியிருக்கலாம். அவை அழிந்துவிட்டன என்று கமில் சுவலபில் கருதுகின்றார்.

 

இன்னொன்றும் சொல்லவேண்டும். அப்பர் சம்பந்தர் போன்ற நாயன்மார்கள் பக்திமார்க்கத்தை மக்களிடம் பரப்புவதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். சமணர்களோடு கொள்கைகளைப் பற்றி வாதுபுரிவதற்குத் துணை செய்யும் சைவசித்தாந்த ஆகமங்கள் வடமொழியில் தயாராகிக்கொண்டிருந்தன. இதற்காகவே பிராமணர்களில் சைவப்பிராமணர்கள் என்ற ஒரு குழு உருவாகிக்கொண்டிருந்தது என்று ரிச்சர்ட் டேவிஸ் கூறுகிறார். கைலாசநாதர் கோயிலில் இருக்கும் ராஜசிம்ம பல்லவனைப் பற்றிய கல்வெட்டு ஒன்று அவன் சைவசித்தாந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தான் என்று கூறுகிறது. எனவே எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சைவசித்தாந்தம் உறுதி பெற்றிருக்க வேண்டும்.

 

.மேற்கூறியவற்றில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. சமணர்களுக்கும் சைவர்களுக்கும் சண்டை இருந்திருக்கலாம். ஆனால் சம்பந்தர் தேவாரத்திலோ அல்லது அப்பர் தேவாரத்திலோ அல்லது கிடைத்திருக்கும் கணக்கற்ற கல்வெட்டுகளிலேயோ சம்பந்தர் சமணர்களை வென்று கழுவேற்றியதாக எந்த அகச்சான்றும் இல்லை. முன்னால் சொன்னது போல ஜைன இலக்கியத்திலோ ஜைனக் கல்வெட்டுகளிலோ சான்றுகள் இல்லை.

 

களப்பிரர்காலத்தில் அரசர்களுக்கு அதிக வருவாய் நிலத்திலிருந்து இல்லை. வருவாய் வணிகர்களிடமிருந்து வந்துகொண்டிருந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரம் வணிகர்களின் செல்வச் செழிப்பைக் கூறுகிறது என்பது நமக்குத் தெரியும். வணிகர்கள் சமணமதத்தைச் சார்ந்து இருந்ததால், சமணர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. வணிகர்கள் சண்டையை விரும்பாதவர்கள். மக்கள் சமரசமாக இருந்தால்தான் வாணிபம் செழிக்கும். எனவேதான் சிலப்பதிகாரம் சமரசத்தை வலியுறுத்துகிறது.01MP_MAMP_NAMMA3_1253926g.jpg

 

இந்த நிலைமை பல்லவர் காலத்தில் மாறத் துவங்கியது. மக்கள்தொகை பெருகியதால் காடுகள் அழிக்கப்பட்டு விவசாயம் பெருமளவில் தொடங்கியது. பல பிராமணர்களுக்கு நிலம் அளிக்கப்பட்டு பிரம்மதேயங்கள் உருவாகின. பிராமணர் அல்லாத பெரும் நிலக்கிழார்கள் உருவாயினர். கோயில்கள் கட்டப்படத் துவங்கின. கோயில்களுக்கு பிராமணர்கள் தேவையாக இருந்தார்கள். கோயில் நிலங்களைப் பராமரிக்க பிராமணரல்லாத நிலக்கிழார்கள் தேவையாக இருந்தார்கள். வணிகர்களின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. அரசர்களைச் சமண வழியிலிருந்து திசை திருப்ப ஒரு கூட்டணி உருவாகியது. இது பிராமண - வெள்ளாளக் கூட்டணி என்று பர் டன்ஸ்டெயின் கூறுகிறார். அப்பர் வெள்ளாளர், சம்பந்தர் பிராமணர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்தக் கூட்டணி அகிம்சையைப் போதிக்கவில்லை. ஆனால் வன்முறையில் ஈடுபட வேண்டிய தேவையும் இல்லை. சமண மதம் என்றுமே பொதுமக்கள் மத்தியில் ‘அதிக அளவில் செல்வாக்கு பெற்ற மதமாக இருந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு. அப்பரும் சம்பந்தரும் பொது மக்களிடம் சைவ மதத்தைக் கொண்டு சென்றாலும், அரசர் அரசியர் ஆதரவு தேவையாக இருந்தது. அந்த ஆதரவு கிடைத்துவிட்டது. என்பதைத் தேவாரப் பாடல்கள் தெளிவாக்குகின்றன. மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை’ சைவத்தை ஆதரித்ததால் பாண்டியநாட்டு மன்னன் நெடுமாறன் ஆதரவும் தந்தையான சோழமன்னன் ஆதரவும் சைவத்திற்குக் கிடைத்து விட்டது. வடதமிழ்நாட்டில் மகேந்திரவர்மன் சைவனாக மாறிவிட்டான். சமணர்களை அழித்தொழிக்க அவசியமும் இல்லை. ஏழாம் நூற்றாண்டு சூழ்நிலையை இவ்வளவு எளிதாக கருப்பு - வெள்ளை வண்ணங்களில் விளக்க முடியாது என்பது எனக்குத் தெரிகிறது. ஆனாலும் இந்த விளக்கம் முதற்பாடமாக அமைகிறது. மற்றைய நிறங்களை வரலாற்று வல்லுனர்கள்தான் கொண்டுவரவேண்டும்.

 

சமணர்கள் அழித்தொழிக்கப்பட்டிருந்தால் அவர்களைப் பற்றிய செய்தியே தமிழ் வரலாற்றில் ஏழாம் நூற்றாண்டிற்கு பின் வந்திருக்காது. மாறாக Encyclopaedia of Oriental Philosophy என்ற நூல் ஏழாம் நூற்றாண்டை விட எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் சமண மக்கள் தொகை தமிழகத்தில் அதிகமாக இருந்தது என்கிறது. லெஸ்லி ஓர் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டுவரை சமண மதத்தைச் சார்ந்த 341 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்கிறார். அவற்றில் 203 கல்வெட்டுகள் எட்டாம் நூற்றாண்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இவற்றில் 50 கல்வெட்டுகள் மதுரையைச் சுற்றி இருக்கின்றன. இந்தக் காலத்தில் சமணர்கள் வசதியோடு வாழ்ந்தார்கள் என்பதனை சமணப் பெண்கள் செய்த கொடைகளைப் பற்றிய கல்வெட்டுகள் நமக்குத் தெரிவிக்கின்றன என ஓர் கூறுகிறார்.

 

மேலும் ராஜசிம்மன் காலத்தில்தான் ஜினகாஞ்சி என அன்று அழைக்கப்பட்ட திருப்பருத்திக் குன்றத்தில் ஒரு பெரிய சமணக் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் துவாரபாலகர்கள் இந்துக் கடவுள்கள் என்கிறார் ரிச்சர்ட்டேவிஸ்.

 

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணியின் காலம் பத்தாம் நூற்றாண்டு. அழித்தொழிக்கப்பட்ட சமூகத்திலிருந்து அத்தகைய காவியம் பிறந்திருக்க வாய்ப்பு இல்லை. புகழ்பெற்ற இலக்கண நூலான யாப்பருங்கலக்காரிகை பதினொன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

 

எனவே அப்பர், சம்பந்தர் காலத்திற்குப் பின்பும் சமணர்கள் தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டிருந்தனர் என்பது தெளிவு..

 

சமணர்கொலை நடந்திருக்கலாம் என்று யூகம் செய்வதற்குச் சுற்றி வளைத்து ஓர் ஆதாரம் இருக்கிறது என்று பால்டுண்டாஸ் கூறியதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் அவரே இது குழப்பத்திற்குத்தான் இட்டுச் செல்லும் (it may do no more than confuse the question) என்கிறார். படுகொலை நடந்ததாகக் குறிப்பிடப்படும் இடத்தில் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குக் கல்வெட்டுகள் ஏதும் இல்லை என்கிறார் (கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை). ஆனால் இந்தச் சான்றை வைத்துக்கொண்டு கழுவேற்றம் நடந்தது என்று கூறி விட முடியாது. ஏனென்றால் சமணர்கள் அச்சுறுத்தல் ஏதுமின்றி இயங்கிக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் காலத்திலும் - அதே இடத்தில் சமணர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் இயங்கத் தொடங்கினர் என்பதை மறந்து விடமுடியாது. அவர்கள் வலுவோடு இயங்கியதாகக் கூறப்படும் ஐந்து, ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளிலும் எந்தக் கல்வெட்டுகளும் கிடைக்கவில்லை. சமணர்கள் அந்த இடத்திலிருந்து துரத்தப்பட்டிருக்கலாம். அல்லது அவர்களாகவே வெளியேறி இருக்கலாம்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

3

 

சமணர்கள் கழுவேற்றம் பற்றிய குறிப்பு முதன்முதலாக நம்பியாண்டார் நம்பி எழுதிய பாடல்களில் இடம் பெறுகிறது. நம்பியாண்டார் நம்பி பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அப்பருக்கும் சம்பந்தருக்கும் ஏறத்தாழ ஐநூறு வருடங்களுக்குப் பிறகுவந்தவர். இவரது பாடல்களில் பதினொன்று தடவைகள் கழுவேற்றம் குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக,

 

கண்டினம் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாஉடலம்
விண்டினம் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே.
குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே
அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கி அமண்
கணங்கழு வேற்றி

 

முதன்முறையாக அமணர் கணம் கழுவேற்றப்பட்டார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. இவருக்குப் பின்னால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வந்த சேக்கிழார் தனது திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணத்தில் சம்பவம் எப்படி நடந்தது என்பதை விரிவாகச் சொல்கிறார். திருத்தொண்டர் புராணமே சோழமன்னன் சீவக சிந்தாமணிமீது கொண்டிருந்த பற்றிலிருந்து திசை திருப்புவதற்காக எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. எனவே அழித்தொழிக்கப்பட்டதாகக் கூறப்படும் சமணர்கள் சோழர் காலத்தில் ஆதரிக்கப்பட்டனர் என்பது தெளிவாகிறது.

 

அரசி மங்கையர்க்கரசியின் அழைப்பின் பேரில் சம்பந்தர் மதுரைக்கு வருகிறார். இவரால் தங்களுக்கு அபாயம் என்று அறிந்த சமணர்கள் அவர் தங்கியிருந்த இடத்திற்குத் தீ வைக்கிறார்கள். சம்பந்தர் தீயைப் பாண்டியன் உடலுக்கு மாற்றுகிறார். வெப்பத்தால் தவிக்கும் மன்னனை சமணர்கள் மயிற்பீலி கொண்டும் மந்திரங்கள் ஓதியும் குணமாக்க முயல்கிறார்கள். முடியவில்லை. சம்பந்தர் வந்து திருநீறு பூசுகிறார். அரசன் குணமாகிறார். பிறகு, சமணருக்கும் சம்பந்தருக்கும் போட்டி நடக்கிறது. நெருப்புப் போட்டியில் சமணர்களின் ஏடுகள் சாம்பலாகின்றன. சம்பந்தரின் ஏடுகள் நெருப்பில் எரியாமல் இருக்கின்றன. நீர்ப் போட்டியில் சமணர்களின் ஏடுகள் ஆற்றோடு போகின்றன. சம்பந்தரின் ஏடுகள் எதிர் நீச்சல் போட்டுக் கரைசேர்கின்றன. இதற்குப் பின் கழுவேற்றம் நடக்கிறது. தோற்றால் இறப்போம் என்று சொன்ன சமணர்கள் கழுவேறுகிறார்கள். சேக்கிழாரின் பாடல்கள் இவை:

 

மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி
துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இச்சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளையார் பால் அனுசி தம்முற்றச் செய்தார்
கொல்நுனைக் கழுவில் ஏற்ற முறை செய்க என்றுகூற
புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு
தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா இருந்தவேலை
பண்புடை அமைச்சரன்னாரும் பாருளோர் அறியும் ஆற்றால்
கண்புடைப்பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீநாடி இட்ட
எண்பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்

 

புறம்பான செயல்களைச் செய்ததன் மூலம் சம்பந்தர் வெற்றி பெற்றார் என்பது தெளிவாகிறது. எட்டாயிரம் பேர் கழுவில் ஏறினார்கள் என்றும் சேக்கிழார் சொல்கிறார். சம்பந்தருக்கு விருப்பமில்லை என்றாலும் அரசனைத் தடுக்கவில்லை என்றும் பெரியபுராணம் சொல்கிறது. இது போன்ற கதைகளைப் பலமுறைகள் பல புராணங்களில் படித்திருக்கிறோம். உலகெங்கிலும் இத்தகைய கதைகள் புழக்கத்தில் இருக்கின்றன. இது போன்ற கதைகளை வரலாற்று நிகழ்வுகளாக எடுத்துக்கொண்டு வரிந்து வரிந்து எழுதுவது தமிழகத்தில் மட்டுமே நடக்கும்.

 

ஜைனர்கள் வரலாற்றை எழுதிய பால் டுண்டாஸ் இந்தக் கதையை எதைக் குறிக்கிறது என்பதை அறுதியிடுவது கடினம் என்கிறார். ஒருவேளை சமணர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை இழந்து பொருளாதாரக் காரணங்களுக்காக மதுரையை விட்டு வெளியேறியிருக்கலாம். கழுமரம் என்பது யூபம் அதாவது வேள்வி நடக்கும்போது நிலத்தையும் வானையும்இடைவெளியையும் ஒன்று சேர்ப்பதின் குறியீடாக நடப்படும் வேள்விக் கம்பத்தைக் குறிக்கலாம் (வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் என்று புறநானூறு கூறுகிறது) என்கிறார்.Sittannavasal-Jain-Temple.jpg

 

சமணர்கள் ஏன் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், இன்று அதிகம் இல்லை என்ற கேள்வி எழலாம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஹேமச்சந்திரர் எழுதிய நூல் ஒன்று சமணத் துறவிகள் அசோகச் சக்கரவர்த்தியின் பேரரான சம்பிரதியினால் காட்டுமிராண்டிகளான தென்னிந்தியர்களுக்கு நாகரீகம் கற்றுக்கொடுக்க அனுப்பப்பட்டார்கள் என்று கூறுகிறது. வந்தவர்கள் ஆடையணியாத, வானத்தையே ஆடையாக உடுத்திய திகம்பரர்கள். இவர்களும் இவர்கள் போதித்த கொள்கைகளும் என்றுமே பெரும்பாலான மக்களை அவர்கள் பக்கம் இழுத்திருக்க முடியாது. எனவே சமணர்கள் சிறிய குழுக்களில்தான் இயங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அரசர்கள் இவர்கள்பால் ஈர்க்கப்படலாம். மக்கள் ஈர்க்கப்படுவது கடினம். உணவிற்கே உழல்பவனிடம் உணவைக் கட்டுப்படுத்து என்று சொல்ல முயன்றால் மக்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். சமணம் அரசர்களின் மதம். பெரு வணிகர்களின் மதம். வாழ்க்கையில் அனுபவித்தது போதும் என்று நினைத்துத் துறவேற்றவர்களின் மதம். அறிவின்பால் நாட்டம் கொண்டவர்களின்மதம். இது மக்கள் மதமாக என்றுமே இருந்திருக்க முடியாது என்பது எனது கருத்து. எனவே பஞ்சம், போர் போன்ற நிகழ்வுகள் சமணர்களை அதிகமாகப் பாதித்திருக்கும். அரசுகள் மாறும்போதும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். ராஜஸ்தான், குஜராத் போன்ற இடங்களில் பாதுகாக்க பெரும் வணிகர்கள் இருந்தார்கள். தமிழகத்தின் வணிகர்களில் பெரும்பாலோர் சைவர்களாக இருந்ததால் (அல்லது சைவர்களாக மாறிவிட்டதால்) சமணர்களுக்கு ஆதரவு தருவோர் அதிகமாக இருந்திருக்க முடியாது.

 

மதங்கள் அன்று அரசரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அரசன் தயவில்லாமல் மடங்கள் இயங்கியிருக்க முடியாது. வைணவத்தின் வரலாற்றிலும் இது நடந்திருக்கிறது. ராமானுஜர் பல வருடங்கள் தமிழகத்திற்கு வெளியே இருக்க வேண்டியிருந்தது. குருபரம்பரைக் கதைகள் பல வைணவர்கள் குருடாக்கப்பட்டதைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால் இரண்டாம் ராஜராஜனின் மெய்க்கீர்த்தி ‘விழுந்த அரிசமயத்தையும் மீளவெடுத்து’ என்று பேசுகிறது. இரண்டாம் ராஜராஜன் வைணவத்திற்கு ஆதரவு அளித்து அதன் வீழ்ச்சியைத் தடுத்தான். விழுந்த சமணத்தை மீளவெடுக்கத் தமிழகத்தின் அரசர்கள் யாரும் முன்வந்ததாகத் தெரியவில்லை.

 

மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

 

சைவமதத்தின் இரு முக்கியமான குழுக்களாக காபாலிகர்களும் காளாமுகர்களும் இருந்தார்கள். ஆளவந்தாரும் (யாமுனாச்சாரியர் என்று அழைக்கப்படுபவர். ராமானுஜருக்கு முந்தையவர்) ராமானுஜரும் தங்களது நூல்களில் காபாலிகர்களையும் காளாமுகர்களையும் கடுமையாக விமரிசித்திருக்கிறார்கள். காதம்பரி என்ற வடமொழி நூல் தென்னிந்தியாவிலிருந்து வந்த காபாலிக பூசாரியைப் (ஞிக்ஷீணீஸ்வீபீணீ ஞிலீகிக்ஷீனீவீளீணீ) பற்றிப் பேசுகிறது. மகேந்திரவர்மனுடைய மத்த விலாசப் பிரகசனம் இவர்களைக் கேலி செய்கிறது. ஹூவான் சுவாங் இவர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆதிசங்கரர் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் நூல்களில் காபாலிகர்கள் வருகிறார்கள். தமிழகம் முழுவதும் இவர்களது மடங்கள் இருந்திருக்கின்றன.

இன்று இவர்கள் எங்கே சென்றார்கள்?

ஒரு குழு சுருங்குவதற்கோ அல்லது அடியோடு மறைவதற்கோ அழித்தொழிப்பு மட்டும் காரணமாக இருக்கமுடியாது.

 

4

 

சமணர்கள் கழுவேற்றப்பட்ட கதை தமிழர்கள் மத்தியில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது என்பதற்கு ஆதாரங்கள் பல இருக்கின்றன. சைவக்கோயில்கள் பலவற்றில் கழுவேற்றுவது ஒரு திருநாளாகவே நடத்தப்பட்டுக்கொண்டு வந்திருக்கிறது. ஓவியங்கள் பல இச்சம்பவத்தை விவரிக்கின்றன. மீனாட்சி அம்மன் கோயில் ஓவியங்கள் ஓர் உதாரணம்.

 

மேற்கத்தியர் தமிழகத்திற்கு வந்தபோது இந்தக் கதையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ராபர்ட்டி நொபிலி இந்தக் கதையைத் தனது Report on Indian Customs என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஜின புராணம் என்ற நூலில் உள்ள கதை என்று சொல்லும் அவர், இந்த நூல் புத்த மதத்தைச் சார்ந்தது என்கிறார். தமிழகம் முழுவதும் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் இருந்தார்கள். ஆனால் வைதீகர்கள் அவர்களை மதம் மாற்றிவிட்டார்கள் என்றும் குறிப்பிடுகிறார். சீகன்பால்கு, அபேதுபாய் போன்றவர்கள் சமணர்கள் ஒரு காலத்தில் தென்னிந்தியா முழுவதையும் ஆண்டு கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.

 

கர்னல்மெக்கென்ஸி ஆவணங்களைச் சேகரிக்கும்போது சமணர்களைப் பற்றிய வாய்மொழிக் கதைகளையும் சேகரித்திருக்கிறார். அவருக்குத் துணை செய்தவர்களில் ஒருவர் ஜைனர் என்று தெரியவருகிறது. லெஸ்லி ஓர் தனது கட்டுரையில் மெக்கென்ஸி ஆவணங்களில் இருக்கும் நான்கு முக்கியமான கதைகளைக் குறிப்பிடுகிறார்:

 

1. திருவள்ளுவர் சைவர். அவரது நூலின் பெருமையை உணர்ந்த சங்கப் புலவர்கள் - அவர்கள் அனைவரும் சமணர்கள் - எல்லோரும் தற்கொலை செய்துகொண்டனர்.

 

2, ஒரு கதை ஆதிசங்கரர் ஆயிரக்கணக்கான சமணர்களைக் கொலை செய்வித்தார் என்று கூறுகிறது. மற்றொரு கதை இந்த வேலையை ஹொய்சளா பிரதேசத்தில் செய்தவர் ராமானுஜர் என்கிறது. அவர் பல ஜைனக் கோயில்களை அழித்தார் என்கிறது.

 

3. திருநறுங்கொண்டைக் கோயிலைப் பற்றிய கதை ஒன்று, அப்பர் கடைசிக் காலத்தில் சைவத்திலிருந்து மறுபடியும் சமணமதத்திற்கு மாறிவிட்டார் என்கிறது. காரணம் அவர் கண்பார்வை இழந்து சமணர்களால் மறுபார்வை பெற்றது. இதனால் கோபமுற்ற சம்பந்தரும் சுந்தரரும் சேர்ந்து சூழ்ச்சி செய்து அப்பரைச் சுண்ணாம்பு காளவாயில் தள்ளிக் கொன்றுவிட்டனர்.

 

4. பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் அகளங்கன் தலைமையில் காஞ்சிபுரத்தில் நடந்த வாதத்தில் சமணர்கள் வென்றனர். ஆனால் பௌத்தர்களைக் கொல்லாமல் அவர்களை ஸ்ரீலங்காவிற்கு நாடுகடத்தி விட்டனர்.

 

தென்னிந்தியா முழுவதும் சுற்றிய புக்கனன் எல்லா க்ஷத்திரியர்களும் ஒரு காலத்தில் ஜைனர்களாக இருந்தார்கள் என்று பல ஜைனர்கள் அவரிடம் சொன்னதாக எழுதியிருக்கிறார்.

 

வாய்வழிக் கதைகளில் உண்மைகள் புதைந்திருக்கலாம். ஆனால் உண்மைகளைத் தோண்டி எடுப்பதற்கு வரலாறு பற்றிய புரிதல் வேண்டும். பொறுமையோடு இயைந்த திறமை வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக முன்முடிபு இல்லாமல் அணுகவேண்டும். தமிழில் இன்று எழுதிக் கொண்டிருப்பவர்களில் பலருக்கு இந்த மூன்று பண்புகளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

 

5 கதைகளை நம்பி வரலாற்றை எழுதுவது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முயல்கிறது. சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்பது புராணக்கதை. ஜைன நூல்களிலோ கல்வெட்டுகளிலோ அல்லது அப்பர், சம்பந்தர் பாடல்களிலோ இந்தக் கதைக்கு ஆதாரம் கிடையாது. அவர்கள் காலத்திற்கு ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கதை தோன்றுகிறது. இதனால் சமணர்கள் ஒடுக்கப்படவில்லை என்று கூறமுடியாது. ஒரு மதம் மற்றொரு மதத்தை ஒடுக்க முயல்வது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வந்திருக்கிறது. சில மதங்கள் வென்றன. சில மதங்கள் தோற்றன. சமணர்களின் தோல்விக்குக் காரணம் அவர்களது குறைந்த எண்ணிக்கையாக இருக்கலாம். சமண மதம் மேன்மக்கள் மதமாக இருந்திருக்க முடியாது. சைவ வைணவ மதங்கள் தங்களது இதிகாசப்புராணங்கள் மூலமும் கோயில்களின் மூலமும் மக்களைக் கவர்ந்தன. முக்கியமாக அரசர்களைக் கவர்ந்தன.

 

வைதீக சமயங்களும் அரசர்களும் சமண மதத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல் புரிந்திருக்கலாம். ஆனால் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் வாய்ப்புக்கள் மிகக்குறைவு. அதற்கான தேவை இருந்ததாக இதுவரை நமக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கவில்லை.

 

இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு உதவிய நூல்கள்:

 

தமிழ்நூல்கள்:

 

1. அப்பர் தேவாரம்
2. சம்பந்தர் தேவாரம்
3. நம்பியாண்டார் நம்பியின் பாடல்கள்
4. சேக்கிழாரின் பெரியபுராணம்.
5. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
6. ராமானுஜ நூற்றந்தாதி

 

ஆங்கில நூல்கள்:

 

1. History and Culture of Tamil Nadu, 2008, DK Print world Private Limited - Chitra Madhavan
2. Ramanuja A Reality Not a Myth, Sri Vaishnava Sri, 2009, - A. Krishnamachari.
3. A History of South India, 1975, Oxford India - K. A. Nilakanta Sastri
4. Early India, Penguin India, 2002 - Romila Thapar
5. The Hindus An Alternative History, Penguin India, 2011 - Wendy Doniger
6. The Jains, Routledge, 2002 - Paul Dundas
7. Open Boundaries, State University of New York Press, 1998 - John Cart
8. Orientalists, Missionaries and Jains, 2011 - Essay by Leslie Orr
9. Encyclopaedia of Oriental Philosophy and Religion Global Vision Publishing House, 2002 - N .K . Singh and A. P. Mishra
10. The Kapalikas and Kalamukhas, Motilal Banarasidas, 1991 - D. N. Lorenzen
11. Poems to Siva, Motilal Banarasidas, 2007, - Indira Viswanathan Peterson
12. The Story of Disappearing Jains, 1998 - Essay by Richard Davis
13. Jain and “Hindu Religious Woman” 1998 - Essay by Leslie Orr
14. Sramanas against the Tamil Way 1998 - Indira Viswanathan Peterson.?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வாது செய்யவில்லையா ஞானசம்பந்தர்!

“திருவருட்பிரகாச வள்ளலார் தமிழகம் தந்த மாபெரும் சித்தர். மரணத்தை வெல்லும் ரகசியம் கண்டவர்.  வேதம், வைதிகம் என்று சமஸ்கிருத மொழியில் பிராமணர்கள் ஏதோ தாங்களே இந்துசமயத்தின் ஒரே பிரதிநிதி போல் கோலோச்சியிருந்த காலகட்டத்தில் அருட்பெரும்சோதி தனிப்பெருங்கருணை என்று தமிழில் சிவனைக் கண்டு எளிய மக்களிடையே ஆன்மிகத்தைக் கொண்டு சேர்த்த பெரியார். அவர் புகழ்கண்டு பொறுக்காத பிராமணர் கூட்டம் சூழ்ச்சி செய்து அவர் உறங்குகையில் தீவைத்துக் கொளுத்திப்பின் ஓர் அறையில் தள்ளிப் பூட்டிக் கொன்றுவிட்டுப் பின்னர் வள்ளலார் ஜோதியில் கலந்து விட்டார் என்று அன்றுமுதல் நாடகமாடி வருகின்றது. அதுபோலவே கிபி.ஏழாம் நூற்றாண்டில், அந்தணர் குலத்தில் பிறந்திருந்தாலும் தம்மைத் தமிழன் என்றே அடையாளப்படுத்திக் கொண்டு தமிழிலே பாடல்கள் புனைந்த ஒரே காரணத்தால் திருஞானசம்பந்தரை இந்தப் பார்ப்பனக்கூட்டம் அவர் திருமணநாளன்று குடும்பத்துடன் தீவைத்துக் கொளுத்திவிட்டு, சம்பந்தர் அனைவரையும் ஜோதிக்குள் இட்டுச்சென்று விட்டதாய் ஒரு கட்டுக்கதையைப் பரப்பி விட்டது”

 

இதை இணையத்தில் மேய்கிறபோக்கில் படிக்கும் ஒரு சராசரித்தமிழன் சட்டென்று நம்பி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு உச்சமெய்துவிடுவான். 

 

இதைப்போன்று பல விடவித்துக்களை இணையமெனும் முகமிலா மாயவெளியில் தமிழ்நேசர்களாய், சைவப்பூனைகளாய் பல பாத்திரங்கள் உருவெடுத்து விதைத்துப் போவதை 90’களின் இறுதியில் இணையத்தில் மடலாடல் குழுக்கள் தோன்றிய காலத்திலிருந்து நான் அவதானித்து வருகிறேன். கூர்ந்து நோக்கினாலொழிய அந்தப் பூனைகளின் உருத்திராக்கத்தில் சிலுவை மறைந்திருப்பதை அறிதல் கடினம். :)

 

மேற்கண்டதைப் போன்ற நச்சுரையை மேலோட்டமாய்ப் பார்த்தால் இதை எழுதியவர் தமிழ்வெறியராயினும் அடிப்படையில் ஒரு சிவநெறிச்செல்வரோ என்றொரு மயக்கு ச.தமிழனுக்குத் தோன்றும்.  உண்மையில் இந்த அயோக்கியன் தேர்ந்த புரட்டன் என்பது உடன் விளங்காது. இவன் பிராமண எதிர்ப்பென்ற போர்வையில், தமிழுக்குப் பரிந்துவரும் பாவனையில் அதன் ஆன்மிகத்தூண்களாய் விளங்கும் சமயச்சான்றோர்தம் பெருவாழ்வினையே தொலைநோக்கில் எள்ளுகிறான் என்பது ச.தமிழன் புத்திக்குள் என்றாவது புகுமா என்பதும் ஐயமே. 

 

திருஞானசம்பந்தரைத் தீவைத்து எரித்து விட்டனர் என்ற திரிபினை ஏற்றுக்கொண்டால் அவர் நிகழ்த்திய அருளிச்செயல்கள் யாவுமே பொய்யாகிப் போகும். ஆயிரமாண்டுகளுக்கு மேலாய் அவரைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிவரும் சைவசமயத்தாரே முழுமுதல்பொய்யரென்றாகும். அவ்வண்ணமே வள்ளலார் அறைக்குள் தாமே திருக்காப்பிட்டுக் கொண்டு அருட்பெரும்சோதியில் கரைந்து மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியதும் பொருளற்றுப் போகும். 

 

இணையத்தில் பல்வேறு தமிழ்வெறி முகமூடிகளில் உலவும் மிஷநரிச் சைவப்பூனைகளின் மறைநோக்கம் இதுவே.

 

oO0Oo

 

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் பி.ஏ.கிருஷ்ணன் என்றொரு மார்க்ஸீய (இதுவும் ஒருவகை மறைகிறுத்துவம்தான் என்பருண்டு) அறிஞர் எழுதிய கட்டுரை ஒன்றினைக் காண நேர்ந்தது.

 

http://www.kalachuvadu.com/issue-167/page09.asp

 

‘சமணர்கள் கழுவேற்றப் பட்டார்களா?’ என்றொரு வினாவுக்கு விடைகாணும் முகமாய் ஆய்வுக்கட்டுரை எழுதப் புகுந்த இவர் தம் சொந்தக்கருத்துக்கள் பலவற்றையே கட்டுரையெங்கும் தூவிச் செல்கிறார். 

 

பாண்டியநாட்டில் மீண்டும் சைவம் தழைக்க வேண்டி, மன்னன் கூன்பாண்டியனை மதம்மாற்றி ஆண்டிருந்த சமணப் பெரியோருடன் அனல்வாதம் புனல்வாதமென்று வாதுபல நிகழ்த்தி வெல்லும் திருஞானசம்பந்தர் வாதில் தோற்ற சமணரை கழுவேற்றும்படி ஆணையிட்டதாய் எங்கும் சொல்லப்படவில்லை, சமணர்தம் நூல்கள் உட்பட. 

 

அகிம்சையைக் கொள்கையளவில் கொண்டிருந்தாலும் அடியார் தங்கியிருந்த திருமடத்துக்கே தீவைத்த கொடியோர் என்பதால் தீவிரவாதச் சமணர் சிறுபான்மையோரைக் கழுவேற்றினாலும் அது மன்னன் செய்த முறைமை என்பதால் சம்பந்தர் தடுக்காமல் விலகிச் சென்றார் என்பது பின்னர்வந்த சைவர்தரப்பு வாதம். 

 

எண்ணாயிரம் சமணர் கழுவேறி உயிர்நீத்ததாய்ச் சொல்வது மிகையென்றும் உண்மையில் எண்ணாயிரம் என்ற ஊரினைப் பூர்வீகமாய்க் கொண்ட சிலரே கழுவேறினர் என்றும் ஒரு சாரார் சொல்கின்றனர். இன்றும் எண்ணாயிரம் என்ற (விழுப்புரம் பக்கம்) கிராமத்தில் சமணர் வாழ்ந்த அடையாளங்கள் , பல சமணச்சின்னங்கள் கிட்டுகின்றன. 

 

கழுவேற உறுதி பூணாத ஏனையோர் மதுரையிலிருந்து சேரநாட்டுக்குச் சென்று விட்டதாகவும் அங்கே அஷ்டசஸஸ்ரம் (எண்ணாயிரம் என்பதன் சங்கதப் பெயர்ப்பு) என்ற அந்தண வகுப்பினராய் சமணத்தைக் கைவிட்டு வைதிகநெறிக்குத் திரும்பி வாழ்வதாகவும் யாஹூகுழுமம் ஒன்றில் அந்தப்பிரிவினைச் சார்ந்த ஒருவர் குறிப்பிட்டிருந்தார். தங்கள் குலதெய்வக்கோயில் திருச்சூரில் வடக்குநாதர் என்ற விடைகுன்றுநாதர் என்றும் அது சமணர்க்கும் ஆதியான ரிஷபநாதரே என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுவும் ஒரு தரப்பு. 

http://en.wikipedia.org/wiki/Ennayiram

 

இப்படிப் பல்வேறு தரப்புகள் உள்ளன. திரு.கிருஷ்ணன் அவர்கள் தாம் எழுதவந்த திறக்கில், சமணர் கழுவேற்றம் எந்த அளவில் மெய்யானது என்று ஆய்வுநோக்கில் எழுதிப் போயிருந்தால் நான் பொருட்படுத்தியிருக்கவே போவதில்லை. ஆனால் அவர் இடையிடை அள்ளிவிட்டிருக்கும் சில சொந்தக்கருத்துகளே என்னை இதை எழுதத்தூண்டின.

 

குறிப்பாய் முதலில் இது:

 

//கொள்கைகள் அளவில் சமணர்களோடு சம்பந்தர் வாது புரிந்திருப்பார் என்று கருத இடமேயில்லை. அவரது விருப்பத்தை இறைவன் நிறைவேற்றியதாகத் தேவாரத்தில் ஆதாரம் - எனக்குத் தெரிந்த அளவில் - இல்லை. இதனாலேயே சம்பந்தர் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் என்பதற்குத் தேவாரத்திலேயே ஆதாரம் இருக்கிறது.//

 

இது முன்னர் சுட்டிய மிஷநரிக்குஞ்சுகளின் சில்மிஷத்துக்கு எந்தவகையிலும் குறையாத அதே ரீதியிலான விஷமக் செருகல். சம்பந்தரின் அவதார நோக்கிற்கே ஆதாரமின்றி அவதூறு கற்பிப்பது. 

 

இன்று கிட்டும் திருஞானசம்பந்தரின் 384 பதிகங்களிலிருந்தே இந்த அவதூறுக்கு விடை காண்போம். 

 

பாண்டியநாடு நோக்கிக் கிளம்பு முன்னர் திருமறைக்காட்டில் ‘வேயுறு தோளிபங்கன்’ என்று அப்பருக்கு ஆறுதல் சொல்லும் முகமாய் பாடிய பதிகம் முதல் ‘வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்’ என்று வாது பல முடித்த திருஞானசம்பந்தர் ‘வேந்தனும் ஓங்குக’ என்று கூன்பாண்டியனான அவனை நின்றசீர்நெடுமாறனாக்கிப் பின்னர் சோழநாடு திரும்பும் வரை வரை அவர் பாடல்களிலேயே ஏராளமான குறிப்புகள் உள்ளன. 

 

சம்பந்தர் வாதுசெய்யத் திருவுளம் வேண்டிப்பாடியுள்ளது மட்டுமின்றி, அவர் சமணரால் தீர்க்கவியலாத கூன்பாண்டியனின் வெப்புநோய் தீர்த்ததும், பின்னர் அனல்வாதம், புனல்வாதம் ஆகிய அதிசயங்களை நிகழ்த்தியதையெல்லாம் அகச்சான்றுகளாகவே அவர் பாடியுள்ள 384 பதிகங்களுக்குள்ளேயே குறிப்பிட்டிருக்கிறார். 

 

ஒவ்வொன்றாய்க் காண்போம்.

 

1. வாது செயத் திருவுளமே என்று வாதில் புகுமுன்னர் சம்பந்தர், சோமசுந்தரப் பெருமான் திருவுள்ளச் சம்மதம் வேண்டிப் பாடுவது -     வேதவேள்வியை நிந்தனை செய்துழல் என்று தொடங்கும் சம்பந்தர் தேவாரம் - 3.108

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=3108&padhi=126+&button=செல்க

 

2. சம்பந்தரும், சிவனடியார்களும் தங்கியிருந்த திருமடத்துக்குச் சமணர் தீவைத்த நிகழ்வையும் (அமணர் கொளுவுஞ்சுடர், அமண்கையர் இடும்கனல்), அந்த அடாத செயலுக்கு அரசாளும்  மன்னனே பொறுப்பென்பதால் இட்ட தீ சென்று மன்னனைப் பற்றட்டும் என்று சம்பந்தர் ஆணையிடுவதும், ஆயினும் அத்தீ பாண்டியனை உடனழித்து விடாமல் (பின்னர் அவனை தடுத்தாட்கொள்ள வேண்டியமையால்) ‘பையவே செல்க’ என்று நெருப்புக்கு ஆணையிடுவதும், பதிகத்தின் இறுதியில் திருக்கடைக்காப்பில் ‘வெப்பம் தென்னவன் மேல் உற’ என்று அவனை வெப்புநோய் சூழச்செய்வதும் - செய்யனே என்று தொடங்கும் சம்பந்தர் தேவாரம் - 3.051

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=3051&padhi=126+&button=செல்க

 

3. வெப்புநோயெனும் தீப்பிணி பாண்டியனைச் சென்று தாக்கியதையும், சம்பந்தர் ஆலவாயான் திருநீறு பூசி அதைப் போக்குவதையும், அதைக்கண்டு திகைத்து நிற்கும் சமணர்களையும் சுட்டுவது - மந்திரமாவது நீறு என்று தொடங்கும் சம்பந்தர் தேவாரம் - 2.066

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=2066&padhi=122+&button=செல்க

 

4. ஆலவாய் அரன் அருளால் மன்னவன் உயிரைத் திருநீறு பூசிக் காத்து மங்கையர்க்கரசியாரின் மாங்கல்யத்தையும் காத்தருளியதைச் சுட்டுவது - ஆலநீழலுகந்த என்று தொடங்கும் சம்பந்தர் தேவாரம் 3.115

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=3115&padhi=126+&button=செல்க

 

5. மன்னனின் தீப்பிணி தீர்த்தும், இது மந்திரவாதமேயன்றி வாதில் வென்றதாகாது என்று சமணர்கள் மன்னனிடம் கோர, முதலில் நடந்த அனல்வாதமெனும் போட்டியில் சம்பந்தரின் ‘போகமார்த்தபூண்முலையாள்’ என்ற பதிகம் எழுதப்பட்ட ஓலை நெருப்பில் கருகாது பசுமையாய் நிற்கிறது. இந்த அனல்வாதம் மன்னவன் முன்னிலையில் நிகழ்ந்ததென்றே சம்பந்தரின் ‘தளரிள வளரொளி’ என்று தொடங்கும் இப்பதிகத்தால் (கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய சொல்) அறிகிறோம் - சம்பந்தர் தேவாரம் - 3.087

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=3087&padhi=126+&button=செல்க

 

6. சமணர் அனல்வாதத்தில் தோற்றபிறகு புனல்வாதுக்கழைக்க, அப்போட்டியில் வைகை ஆற்றில் சமணர்தம் கொள்கை பதித்த ஏடு  மூழ்கவும், சம்பந்தரின் பதிகம் கொண்ட ஏடு ஆற்றின் எதிர்த்திசையில் முழுகாமல் செல்வதும் தெளிவாகவே ‘வாழ்க அந்தணர்’ என்று தொடங்கும் திருப்பாசுரம் எனும் இப்பதிகத்தில் சுட்டப்படுகிறது - 

 

அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்

தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்

பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்

பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே - சம்பந்தர் தேவாரம் - 3.054

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=3054&padhi=126+&button=செல்க

 

7. இந்தப் புனல்வாதினை திருக்கழுமலப் பதிகத்திலும் சுட்டுகிறார்: பருமதில் மதுரைமன் னவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே வருநதி யிடைமிசை வருகரனே  - உற்றுமை சேர்வது என்று தொடங்கும் சம்பந்தர் தேவாரம் - 3.113

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=3113&padhi=126+&button=செல்க

 

8. நீரோட்டத்தை எதிர்த்துச் செல்லும் ஏடானது, திருவேடகம் என்று பின்னர் வழங்கப்படும் இடத்தில் கரை சேர்வதைச் சுட்டுவது:

‘ஏடு சென்று அணைதரு ஏடகம்’ - வன்னியும் மத்தமும் என்று தொடங்கும் பதிகம் - சம்பந்தர் தேவாரம் - 3 - 032

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=3032&padhi=126+&button=செல்க

 

இப்படி மதுரை மாநகரில் சமணருடன் சம்பந்தர் வாது நிகழ்த்தியமைக்குத் தெளிவான ஆதாரங்கள் அவர் பதிகங்களிலேயே மேலே தொகுத்தபடி இருக்க “கொள்கைகள் அளவில் சமணர்களோடு சம்பந்தர் வாது புரிந்திருப்பார் என்று கருத இடமேயில்லை; கொள்கை அளவில் சம்பந்தர் சமணர்களோடு வாது செய்ய விரும்பவில்லை என்று தோன்றுகிறது”  - என்றெல்லாம் தத்தம் சுயவிருப்பின்படி கருத்தள்ளி விடுவது அறிஞர்க்கு அழகில்லை. 

 

மேலும்,

//புறம்பான செயல்களைச் செய்ததன் மூலம் சம்பந்தர் வெற்றி பெற்றார் என்பது தெளிவாகிறது.//

என்று இக்கட்டுரையில் பிறிதோரிடம் முத்துதிர்க்கிறார் திரு.கிருஷ்ணன். இதிலே எது புறம்பான செயல்! முதலில் புறம்பு என்ற சொல்லுக்கு அவர் புரிதல் என்ன என்று விளங்கவில்லை.

 

அடுத்து,

//மேலும் பக்திமார்க்கம் வாதத்தை விரும்பாதது. நம்பிக்கை இருக்கும்போது வாதம் எதற்கு? நாயன்மார்கள் சிவபக்தி ஒன்றே உய்வதற்கு வழி என்று திண்ணமாக நம்புகிறவர்கள்.// என்று இன்னொரு முத்து.

 

சைவத்தில் சரியை, கிரியை என்று முதலிரண்டு படிநிலைகளே பக்தியைப் பிரதானமாய் வலியுறுத்துவன. அடுத்த கட்டங்களான யோகத்திலும் ஞானத்திலும் இது முதிர்ந்து இறுதியாய் ஞானஞானமாய் ‘ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்’ என்று பற்றற்றான் மீதும் பற்றை விடச் சொல்வன. 

 

‘அறியும் அறிவே சிவமுமாம்’ என்பது சிவஞானபோதம். அதுவே மெய்யான பகுத்தறிவு.

 

மேலும் சம்பந்தர் வெறும் பஜனை கோஷ்டியை வழிநடத்திச் செல்லவில்லை. பாண்டிய நாட்டில் சமணர்களை வாதில் வென்று சோழநாட்டுக்குத் திரும்பும்போதில், திருநள்ளாற்றிலிருந்து திருக்கடவூர் செல்லும் வழியில் பௌத்தம் (தேராவாதம், சௌத்ராந்திகம் எனும் பிரிவினர்) வலுத்திருந்த 'போதிமங்கை' என்ற ஊரின் வழியே செல்ல நேர்கிறது. 

 

சம்பந்தருக்கு முன்செல்வோர் செய்த அரநாம ஆர்ப்பொலி கேட்டும், திருச்சின்னங்களைக் கண்டும் பொறாத புத்தநந்தி என்பான் அவரைத் தடுத்து 'வெற்றிபுனை சின்னங்கள் வாதில் எம்மை வென்றன்றோ பிடிப்பது?' என்று வெகுண்டு சொல்கிறான்.

 

திருச்சின்னங்களை மறித்தனுப்பக் கண்டு மனம் பொறாத சம்பந்த சரணாலயர் என்ற சம்பந்தரின் அணுக்கரும், பதிகம் எழுதிக் கொள்ளும் அடியாருமானவர், சம்பந்தர் பாடிய ‘அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே’ என்ற பஞ்சாக்கரப் பதிகத்தின் பத்தாம் பாடல் ஒன்றைப் பாட, திடுமென மின்னல் வெட்டி புத்தநந்தி தலையில் இடியாய் இறங்குகிறது. தலை நூறுகூறாக விழுந்து மடிகிறான் புத்த நந்தி.

 

பயந்தோடிய பௌத்தரைத் திரட்டிய மற்றொரு தலைவனான சாரிபுத்தன் என்பார் 'இது மந்திரவாதமேயன்றி சைவ வாய்மையில்லை! எம்முடன் நேர்மையாய் வாதிட வல்லீரோ' என்றழைக்க, பின்னால் வரும் சம்பந்தப் பெருமானுக்குச் செய்தி போய் அவரும் அதற்கிசைந்து அருகில் இருந்த சத்திர மண்டபம் ஒன்றில் எழுந்தருளுகிறார். சாரிபுத்தன் தலைமையில் தேரர் திரள வாது தொடங்குகிறது. 

 

தத்தம் புரட்சித்தலைகளுக்கு மாலை அணிவித்துத் தூபதீபம் காட்டியிருக்கும் கூட்டங்களும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய வாதமிது. 

 

இதை சேக்கிழார் பெருமான் விவரிப்பதையே காண்போம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=914&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

 

‘உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க’ என்று தொடங்கி சதுரங்கத்தில் காய் நகர்த்துவது போல் இந்த வாதம் செல்வதைப் பாருங்கள். 

 

பக்திமார்க்கம் வாதத்தை விரும்பாதது என்பது தொடக்கநிலை பஜனை கோஷ்டிகளுக்கே பொருந்தும். 

 

//கைலாசநாதர் கோயிலில் இருக்கும் ராஜசிம்ம பல்லவனைப் பற்றிய கல்வெட்டு ஒன்று அவன் சைவசித்தாந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தான் என்று கூறுகிறது. எனவே எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சைவசித்தாந்தம் உறுதி பெற்றிருக்க வேண்டும்.//

 

இதுவும் மிகப்பிழையான புரிதல். விரிவாய் எழுத வேண்டும். திரு.கிருஷ்ணன் அவர்களுக்கு முனைவர் வை.இரத்தினசபாபதி அவர்களின் ‘திருமுறைத் தெளிவே சிவஞானபோதம்’ என்ற நூலையும் பரிந்துரைக்கிறேன்.

http://books.google.co.in/books/about/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3.html?id=xkzTOwAACAAJ&redir_esc=y

 

மேலும் பத்தாம் திருமுறையான திருமந்திரமே சைவசித்தாந்தத்தின் ஆதாரமான நூல். இதன் காலமென்ன என்று திரு.கிருஷ்ணன் அறிவாரா!

 

இன்னும் நிறையவே எழுதலாம். ஆனால் முக்கியமான அவதூறுகளுக்கு இதில் தந்திருக்கும் ஆதாரங்களே போதுமானதென்பதால் முடிக்கிறேன். 

 

ஜாவா குமார்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard