New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்துமதமும் பழங்குடிகளின் தெய்வங்களும்


Guru

Status: Offline
Posts: 24788
Date:
இந்துமதமும் பழங்குடிகளின் தெய்வங்களும்
Permalink  
 


http://www.jeyamohan.in/6833#.VTYb-tKqqko

சமண பௌத்த இந்து மதங்கள் பழங்குடி வழிபாடுகளையும் நாட்டார் வழிபாடுகளையும் ‘அழிப்பதில்லை’ மாறாக ‘ உள்ளிழுத்துக்கொள்கின்றன’. அவற்றுக்கு ஒரு தத்துவ- புராண விளக்கம் மட்டுமே அளிக்கின்றன. சடங்குகள் ஆசாரங்கள் தொன்மங்கள் படிமங்கள் அனைத்தும் அப்படியே நீடிக்கின்றன.

அதாவது ஒரு ‘தரப்படுத்தல்’ அல்லது ‘மேம்படுத்தல்’ மட்டுமே நிகழ்கிறது. இந்த தொகுப்புச்செயல்பாட்டில் ஒரு இழப்பு உள்ளதா என்றால் உள்ளது. ஆனால் இது நூற்றாண்டுகளாக நடந்தும்கூட எந்த பழங்குடிப் பண்பாடும் அழிந்ததில்லை. பழங்குடிகளின் வரலாற்று நினைவுகள் இல்லாமல் ஆனதில்லை. சுயம் மறுக்கப்பட்டதில்லை. இந்திய பெருநிலத்தில் அழிக்கப்பட்ட பழங்குடி இனமே கிடையாது. வெகுசில உறுப்பினர்களே உள்ள இனம் கூட நீடிக்கவே செய்கிறது -தனியடையாளத்துடன்

மாறாக ஆபிரகாமிய பெருமதங்கள் பிற வழிபாடுகளை, மதங்களை முழுமையாக அழித்து அங்கே தங்களை நிறுவிக்கொள்கின்றன . அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கொன்றே அழித்து தீர்த்திருக்கின்றன. பிற வழிபாடுகளை பாவமானவை, வெறுக்கத்தக்கவை என்று அவை அந்த மக்களுக்குக் காட்டுகின்றன. அந்த மக்களின் பண்பாட்டு மரபு, பாரம்பரியம், தனித்தன்மை, வரலாற்று நினைவு முழுக்க அழிக்கப்படுகிறது.

இந்தியாவில் 300 வருடம் முன்பு மதமாற்றம் செய்யப்பட்ட பரதவர்கள் ஓர் உதாரணம். புனித சேவியருக்குப் முன்னால் அவர்களுக்கு என்ன வரலாறு இருந்தது என்பதற்கு எந்த விதமான ஆதாரமும்  இன்று அவர்களிடம் இல்லை. தொன்மங்கள், சடங்குகள் ,ஆழ்மன நம்பிக்கைகள் — எதுவும்! இன்று பழங்குடிகளுக்கும் இதுவே நிகழ்கிறது.

இந்த அழித்தொழிப்பைப்பற்றி நம் அறிவுஜீவிகள் பேசுவதே இல்லை. ஆனால் இந்து பௌத்த சமண மதங்களின் ‘அழிப்பை’ப்பற்றி  ‘ஆதிக்கம்’ பற்றி கருத்தரங்குகளாக போட்டு பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னமும் வேடிக்கை என்னவென்றால் சென்ற காலங்களில் இந்த வகையான கருத்தரங்குகள் எல்லாமே புனித சவேரியார் கல்லூரி போன்ற கிறித்தவ அமைப்புகளில்தான் நடத்தப்பட்டன! அவர்களின் நிதியுதவியுடன். அங்கே பேசிய எவருமே கிறித்தவம் இந்த பழங்குடி அடையாளங்களுக்கும், பண்பாடுகளுக்கும் என்ன செய்கிறது என பேசியதில்லை. ஒருவர் கூட!

பழங்குடிகளின் சமயம் இந்து மதம் அல்ல என்ற ‘கதை’ கடந்த பத்தாண்டுகளில்  வெளிநாட்டு நிதிபெறும் அமைப்புகளாலும் ஆய்வாளர்களாலும் மிக உக்கிரமாக சொல்லப்படுகிறது. இது உண்மை அல்ல என்பதை  எந்தப் பழங்குடி வழிபாட்டையும் மேலோட்டமாகப் பார்த்தாலே அறியலாம். பழங்குடிகளுக்கு அவர்களுக்கே உரிய தெய்வங்கள் உண்டு என்பது உண்மை. ஆனால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு சாதிக்கும் அவர்களுக்கே உரிய குலதெய்வங்கள் உண்டு. ஆனால் மைய  அடையாளம் இந்து மரபு சார்ந்ததாகவே இருக்கும் என்பதையும் காணலாம். இதுவே பழங்குடிகள் விஷயத்திலும்.

தமிழகப் பழங்குடிகள் இந்துமத அமைப்புக்குள் வந்தது சங்க காலத்திலேயே நடந்துவிட்டது என்பது படிக்கும் வழக்கம் கொண்ட எவருக்குமே தெரியும். சொல்லப்போனால் அவர்களின் தெய்வமான முருகனைத்தான் இந்துமதம் பெரும் தெய்வமாக வழிபடுகிறது.  இன்றும் தமிழகப் பழங்குடிகளில் 70 சதம் பேரின் கடவுள் வேலன் தான். பல்வேறு வடிவங்களில் இந்த தெய்வம் வழிபடப்படுகிறது.  மேற்குமலைகளில் சாத்தன் அல்லது சாஸ்தா. கேரளத்தில் பகவதி. அதாவது கண்ணகி. அதற்கு சிலப்பதிகாரமே சான்றளிக்கிறது.

அவர்களிடம் உள்ள விபூதி குங்குமம் கொடுப்பது, படையலிடுவது போன்ற சடங்குகள், மறுபிறப்பு போன்ற நம்பிக்கைகள் எல்லாமே இந்து மதம் சார்ந்தவையே. பெரும்பாலான பழங்குடி தெய்வங்களின் கதைகள் நேரடியாக சிவபெருமானில் வந்து முடிவதைக் காணலாம். இதை அ.கா.பெருமாள் போன்ற ஆய்வாளர்கள் பக்கம் பக்கமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பல ஆலயங்களில் பழங்குடிகளுக்கு தனியிடமும் தனிச்சடங்குகளும் உள்ளன. நான் மொழியாக்கம் செய்த கொடுங்கோளூர் கண்ணகி என்ற நூலை உதாரணமாக பார்க்கவும். பல இந்து ஆலயங்கள் பழங்குடி தெய்வங்களாக இருந்தவை. உதாரணம் திற்பரப்பு மகாதேவர் ஆலயம்.

சாராம்சத்தில் இந்து மதக்கூறு முற்றிலும் இல்லாத ‘தூய’ பழங்குடி தெய்வம் என ஒன்றுகூட இல்லை என்பதே உண்மை. எந்த பழங்குடித் தெய்வத்தின் கதையும் இயல்பாகவே சைவத்தில் வந்து முட்டுவதைக் காணலாம். இந்து மதம் என்பதே இத்தகைய பல ஆயிரம் வழிபாடுகளின் தொகை என்பதே இதற்குக் காரணம்.  அதாவது இவர்கள் வேறு இந்துமதம் வேறல்ல. சம்பந்தமில்லாமல் கொண்டு வந்து இவர்களின் மேல் போடப்பட்ட அன்னிய வஸ்து அல்ல இந்து மதம். இவர்களிடமிருந்தே உருவாகி வந்தது அது.

என் விமரிசனம் என்னவென்றால் இந்துமதத்தின் அடித்தளத்தில் உள்ள குலதெய்வ வழிபாடு மற்றும் மூத்தார் வழிபாடுகளுக்கு அவற்றுக்கே உரிய தனித்தன்மை உண்டு என்றும் அதை தரப்படுத்தி சமப்படுத்தும் முயற்சிகள் இந்த ஊடக யுகத்தில்  அழிவை உருவாக்கலாம் என்றும்தான். ஒரு மாபெரும் தொன்மவெளி அது. ஆகம வழிபாடு போன்ற முறைகள் மூலம் அவற்றின் தனித்தன்மை அழிய விடக்கூடாது என்பதே என் எண்ணம்.

பழங்குடிகள் இந்துக்கள் அல்ல என்றால் யார்தான் இந்துக்கள்? இந்து மதத்தின் அமைப்பே மூன்றடுக்கு முறைதான். கீழே நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் அடங்கிய பழங்குடி வழிபாடு. மேலே பெருந்தெய்வ வழிபாடு. அதற்கு மேல் தத்துவ தெய்வ உருவகம். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதபடி கலந்தும் இருக்கும்.  தத்துவம் பழங்குடி வழிபாட்டை நோக்கி வரும். பழங்குடி வழிபாடு தத்துவம் நோக்கிச் செல்லும்.பழங்குடி தெய்வபிரதிஷ்டை இல்லாத எந்த பெரும் கோயிலும் தமிழ்நாட்டில் கிடையாது என்பதை நினைவுகொள்ளுங்கள்.

குலதெய்வ பழங்குடி தெய்வ வழிபாடு செய்பவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல என்றால் நானும் இந்து அல்லதானே? என் இட்டகவேலி முடிப்புரை நீலிக்கு இந்து பெருமத புராணங்களில் இடமில்லையே. இட்டக்வேலி தேவியை பராசக்தியாக ஆக்கவேண்டுமா என்பதே சிக்கல். இதை இந்துமதத்துக்குள் உள்ள ஒரு சிக்கலாகவே காண்கிறேன்

இந்தச் சிக்கலை சிலர் தாங்கள் செய்யும் மதமாற்றச் செயல்பாட்டுக்கு நிகராக ஆக்கியதையே கடந்த இருபத்தைந்து ஆண்டுக்காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த ஆகப்பெரிய கருத்தியல் மோசடி என்று நினைக்கிறேன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard