கோட்பாடு சார்ந்த அறம் பேசிய காலமெல்லாம் காற்றோடு போய்விட்டது. எஸ்.வி.ராஜதுரை நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத் தந்துகொண்டிருக்கிறார் .
இலங்கைப் பிரச்சினையில் ஐஎன்எஸ்டி எனும் ஜெர்மானிய தன்னர்வ நிறுவனத்தின் நிலைபாடு, ஜெர்மானிய பிராதஸ்தாந்து நிறுவனமான எவாஞ்ஜலிகா அகாதமியாவினுடன் அதனது நிதி சார்ந்த உறவு, அந்த அமைப்பின் இலங்கை அரசு ஆதரவு நிலைபாடு பற்றி எனது முன்னைய கட்டுரையொன்றில் கேள்வி எழுப்பியிருந்தேன். ஏகாதிபத்திய நிதி மூலதனம் பற்றியும் தன்னார்வ நிறுவனங்களது எதிர்ப்புரட்சி அரசியல் பற்றியும் வாய்கிழியப் பேசும் ‘புரட்சிகர’ மார்க்சியரான எஸ்.வி.ராஜதுரையும், ‘புரட்சிகர’ எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனும், ஐஎன்எஸ்டி நிறுவனம் திருவனந்தபுரத்தில் நடத்திய கருத்தரங்கில் என்ன அடிப்படையில் கலந்து கொண்டீர்கள் எனக் கேட்டிருந்தேன்.
தமிழ்ச்செல்வனின் பதில் நகைச்சுவை தவிர வேறில்லை. ‘ஐஎன்எஸ்டி அமைப்பாளர்களில் ஒருவரான சுசீந்திரனையும் அவரது துணைவியான இன்பாவையும் அவருக்குப் பல ஆண்டுகள் தெரியும். தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு எல்லாம் அவர்கள் வந்திருக்கிறார்கள். அதனால் சுசீந்திரன் கூப்பிட்டார். நான் போனேன்’ என்கிறார் தமிழ்ச்செல்வன்.
பிராஸ்தஸ்தாந்து நிறுவனம், தன்னார்வ நிறுவனத்திற்கான நிதி போன்றவை குறித்த கேள்விகளுக்கான தமிழ்ச்செல்வனது பதில் இது. கருத்தரங்கிற்கு வந்தவர்கள் எல்லாம் இலங்கை அரசை எதிர்ப்பவர்கள் என்கிறார் தமிழ்ச்செல்வன். பச்சைப் பொய். தமிழ்ச்செல்வன் இலங்கை அரசை பாசிச அரசு என்கிறார். ஐஎன்எஸ்டி அமைப்பாளர்களான ரஞ்சித்தோ அல்லது சுசீந்திரனோ அப்படியா சொல்கிறார்கள்?
தமிழ்ச்செல்வனுக்காக மறுபடியும் ஒரு தகவல் சொல்கிறேன். 2009 அக்டோபரில் ஜெர்மனியில் இலங்கை தொடர்பாக நடந்த கருத்தரங்கிற்கு ஜெர்மானிய அரசின் பெடரல் ஏஜன்ஸி நிதி வழங்கியிருக்கிறது. அக்கருத்தரங்கில் ஜெர்மனியில் இருக்கும் இலங்கைத் தூதுவரும், ஜெர்மனி அரசின் தூதுவரும் பங்குபற்றியிருக்கிறார்கள்.
தமிழ்ச்செல்வன் கதை எழுதுகிறவர் என்பது மறுபடி ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம் கருத்தரங்கு ஏழு நாட்கள் நடைபெற்றது என டக்கிளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த எம் பௌசரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘எதுவரை’ என்ற சஞ்சிகையில் தாஸ் என்பவர் எழுதியுள்ளார். ஆனால் ஒரு நாள் நிகழ்ச்சியோடு இந்திய உளவுத்துறை அதனைக் கலைத்துவிட்டது என்கிறார் தமிழ்ச்செல்வன். இந்த ‘எதுவரை’ சஞ்சிகையின் ஆசிரியரான எம் பௌசர் திருவனந்தபுரம் கூட்டத்திற்கு லண்டனலிருந்து சென்று கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியானால் எது உண்மை, எது பொய்?
இதுவாவது பரவாயில்லை. எஸ்.வி.ராஜதுரையின் சாட்சியங்கள் அருவறுப்பானவையாக இருக்கிறது. எஸ்.வி.ராஜதுரை திருவனந்தபுரம் கருத்தரங்கம் என ஒரு இடத்திலும் குறிப்பிடாமல், போகிற போக்கில் பத்துப் பக்கக் கட்டுரையொன்றில் (உயிர் எழுத்து : அக்டோபர் 2009) இரண்டு பத்திகளில் தனது அரசியல் ‘திருவிளையாடலை’ நிகழ்த்தியிருக்கிறார்.
ஐஎன்எஸ்டி, தன்னார்வ அமைப்புக்கள், ஏகாதிபத்திய நிதி, இலங்கை அரசு ஆதரவு பற்றி கேள்வி எழுப்புபவர்கள், புலி எதிர்ப்பு-புலி ஆதரவு என கறுப்பு வெள்ளை அரசியல் நடத்துகிறார்களாம். கருத்துக்களை ‘ஜனநாயகபூர்வமாக’ எதிர்கொள்கிற ‘ஆன்மபலம்’ இல்லாமல் அவதூறு செய்கிறார்களாம். எஸ்.வி.ஆர். சொல்கிறார்.
ஐஎன்எஸ்டி அமைப்பாளர்களில் ஒருவரான ரஞ்ஜித் முன்னாள் ஜேவிபி இயக்கத்தில் ஆயுதம் ஏந்திப் போராடி, அதனது இனவாதத்தினால் வெளியேறியவராம். ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்கள் வெளியிட்ட, இலங்கை ராணுவத்தினர் விடுதலைப் புலிகளைக் கொலைசெய்யும் ஒளிநாடாவை வெளியிட்டார் என இலங்கை அரசினால் குற்றம் சாட்டப்படுகிறவராம் – சிறி டெலோ இணையத்தள ஆதாரம் தருகிறார் எஸ்வி.ஆர் – இதுவெல்லாம் எஸ்.வி.ராஜதுரையின் நகைச்சுவைக்குச் சான்றுகள்.
ரஞ்ஜித்தை ஒரு புரட்சிக்காரராகவும், இலங்கை அரசுக்குத் ‘தண்ணி காட்டுகிறவராகவும்’ சித்தரிக்க முயல்கிற எஸ்.வி.ராஜதுரையை நினைக்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தினர் கொல்வதாக வந்த ஒளிநாடாவை ரஞ்ஜித் வெளியிட்டதாக இலங்கை அரசு குற்றம் சாட்டுவதாகச் சுட்டிக் காண்பிப்பதன் மூலம் எஸ்.வி.ராஜதுரை என்ன சொல்ல வருகிறார்?
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போர் புரிகிற நெஞ்சுரம் படைத்தவர் என, ரஞ்ஜித்தையும் அவர் சார்ந்த ஐஎன்எஸ்டியையும் சொல்கின்றாரா? என்ன கொடுமை!
மற்றவர்களுக்காகப் ‘பொய்’ பேசுகிற அவலநிலை எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு வந்திருப்பதற்காக உண்மையாகவே நான் வருத்தப்படுகிறேன்.
அந்த ஒளிநாடாவுக்கும் ஐஎன்எஸ்டிக்கும் சம்பந்தம் இல்லை என அது பற்றி ஒரு விசாரணை நாடகம் ஆடிய பின்னர் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அந்த ஒளிநாடாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ரஞ்ஜித் இலங்கை அரசுக்குக் தன்னிலை விளக்கமளித்து மன்னிப்புகோரும் பாணியில் கடிதம் எழுதியிருக்கிறார். இலங்கை ஜனநாயக ஊடகவியலாளர்களுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என ரஞ்ஜித் தனது அரசுக்கான கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அத்தோடு 2009 அக்டோபரில் ஜேர்மனியில் தங்களுடைய ஐஎன்எஸ்டி நடாத்திய கருத்தரங்குக்கு இலங்கை அரச தூதுவர் கலந்துகொண்டு சிறப்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறி டெலோ இணையதளத்தைப் பார்த்துப் “புரட்சிகரமான” தகவல் தந்த எஸ்.வி. ராஜதுரை அவர்கள் சமகாலத்தில் வெளியான இந்தத் தகவல்களையும் குளோபல் தமிழ் இணையத்தள வழியிலோ அல்லது லங்காவெப்நியூஸ் இணையத் தள வழியிலோ அறிந்திருக்கவேண்டும்.
நாம் கேட்ட கேள்விகள் எதற்கும் ஐஎன்எஸ்டி இதுவரை மூச்சுவிடவில்லை. தமிழ்ச்செல்வனும் இதுவரை உருப்படியாக எதுவும் சொல்லவில்லை. எஸ்.வி.ராஜதுரைக்கு மட்டும் என்ன நேர்ந்தது? ‘அவர்களுக்காக’ப் பேசவேண்டிய அவசியம் ‘இவருக்கு’ ஏன் வந்தது? எஸ்.வி.ராஜதுரை சுசீந்திரனுக்காகவும் ரஞ்ஜித்துக்காகவும் “பேசுகிறவராக” வெளிவந்திருப்பதால் நேரடியாகவே நாம் இப்போது எஸ்.வி.ராஜதுரையிடம் கேட்க வேண்டியிருக்கிறது.
ஐஎன்எஸ்டிக்கும் உங்களுக்கும் என்ன உறவு?
ஐஎன்எஸ்டி எவாஞ்ஜலிக்கா அக்காதமியாவுடன் என்ன உறவுகளை வைத்திருக்கிறது?
ஐஎன்எஸ்டி ஜெர்மனி பெடரல் ஏஜன்சியுடன் என்னவிதமான நிதி சார்ந்த உறவு கொண்டிருக்கிறது?
இலங்கை அரசு பாசிச அரசு என ஐஎன்எஸ்டி கருதுமானால் எவ்வாறு அவர்கள் நடத்திய கருத்தரங்கில் இலங்கை அரசின் தூதவர் கலந்து கொள்வார்?
‘ஆன்மபலம்’ பற்றிப் பேசுகிற எஸ்.வி.ராஜதுரை அவர்களே நேர்மையாக நெஞ்சின் மீது கைவைத்து இதற்குப் பதில் சொல்லுங்கள்.
எஸ்.வி. ராஜதுரை அவர்களின் தகவலில் அல்லது ஆதாரத்தில் என்னவிதமான ‘ஆன்மபலம்’ இருக்கிறது என அவர் கருதுகின்றார்? எது அவதூறு? எது பொய்? எது நேர்மை? எது ஆன்ம பலம்?
எஸ்.வி. ராஜதுரை தரப்பில் இவைகளில் எதுவொன்றும் இல்லாததால்தான் ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் சொல்லுகிற இவற்றில் எது அவதூறு என எமக்கு நிரூபித்துக் காண்பியுங்கள். மொன்னைத்தனமாக எழுதிக் கொண்டிருக்காமல் மனத் திண்மையிருந்தால் நேரடியாக எழுதுங்கள்.
இதனோடு தொடர்புடைய இடுகைகள்:
http://inioru.com/?p=6163
http://inioru.com/?p=6337