New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிபாடலில் சிவன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பரிபாடலில் சிவன்
Permalink  
 


பரிபாடலில் சிவன் –மு​னைவர் சி.​சேதுராமன்.

 

சிவா

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை

எட்டுத்​தொ​கை நூல்களுள் ‘ஓங்கு’ என்ற அ​டை​மொழியால் குறிப்பிடப்​பெறும் நூல் பரிபாடல் ஆகும். இவ்வ​டை​மொழி​யே இந்நூலின் சிறப்​பை விளக்குவதாக அமைந்துள்ளது. ​​
தொல்காப்பியம்,
“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புல​னெறி வழக்கம்
கலி​யே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரியதாகும் என்மானார் புலவர்” (அகத் – சூ. 56)
என்று பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகின்றது. அகப்​பொரு​ளை கலிப்பாவினாலும் பரிபாடலாலும் பாடுதல் ​வேண்டும் என்ற ​தொல்காப்பியம் கூறும் இலக்கணத்திற்கு இலக்கியங்களாகக் கலித்​தொ​கையும் பரிபாடலும் அ​மைந்திலங்குகின்றன. இப்பரிபாடல் அகப்புற இலக்கியமாக அ​மைந்துள்ளது.

தொல்காப்பியர் சிவ​னைப் பற்றி யாதும் ​தொல்காப்பியத்தில் குறிப்பிடவில்​லை. ​மேலும் சங்க நூல்களில் சிவன் எனும் ​பெயர் இடம்​பெறவில்​லை என்பதும் ​நோக்கத்தக்கது. சிவனு​டைய இயல்வுகள் பலவும் சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டுத்​தொ​கை நூல்களில் இடம்​பெற்றுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலில் பாரதம் பாடிய ​பெருந்​தேவனாரால் சிவனு​டைய உருவத் திரு​மேனியின் சிறப்பு எடுத்து​ரைக்கப் ​பெற்றுள்ளது. பரிபாடலில் திருமால், ​செவ்​வேள், ​கொற்ற​வை பற்றிய பல ​செய்திகள் இடம்​பெற்றிருந்தாலும் சிவன் குறித்த ​செய்திகளும் இடம்​பெற்றுள்ள​மை ​நோக்கத்தக்கது.

பரிபாடல் இலக்கணம்:
தொல்காப்பியர் ​செய்யுளியலில் பரிபாடலுக்கு உரிய இலக்கணத்​தை விளக்கும்​போது, “அது நான்கு வ​கைப்பட்ட ​வெண்பா இலக்கணத்​தையு​டையது. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, ​வெண்பா, கலிப்பா, மருட்பா என்று கூறப்படும் எல்லாப் பாவினு​டைய உறுப்புக்க​ளைப் ​பெற்று வரும். ​கொச்சகம், அராகம், சுரிதகம் எத்து ​சொற்சீரடி அதில் அ​மைந்திலங்கும். அது காமப் ​பொருள் பற்றிப் பாடப்படும்” என்று குறிப்பிடுகிறார்.

இந்நூலில் முருகன், திருமால் காளி பற்றியும் ​வை​யை பற்றியும் இ​றையுணர்வு மிக்க பாடல்கள் இடம்​பெறக் காண்கி​றோம். இதனால் தான் ​தொல்காப்பியர் காலத்திற்குப் பின் இ​றைபக்தி பற்றிப் பாடும் வழக்கம் உண்டாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது. ​வை​யை குறித்து வரும் பாடல்களில் மட்டும் காமம் கண்ணிய பாடல்கள் விளங்குகின்றன.

சங்கத்தார் தொகுத்த பரிபாடல்கள் 70 என்பது இறையனாரகப் பொருள் உரையாலும் (சூ.1), தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பேராசிரியர் உரையாலும் (செய்யு. சூ. 149) தெரிய வருகிறது. இப் பாடல்களில் யார் யாரைக் குறித்து எத்தனை பாடல்கள் இருந்தன என்பதை,
“திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று – மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்”
என்ற ​வெண்பா குறிப்பிடுகிறது.

பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்கள், செவ்வேளுக்கு 31 பாடல்கள், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், வையைக்கு 26 பாடல்கள், மது​ரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன என்று ​வெண்பா ​தெளிவுறுத்துகிறது. ஆனால் இன்று இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.

இவற்றுள் இப்பொழுது நமக்குப் பிரதிகளில் கிடைப்பன முதலிலிருந்து 22 பாடல்களே. எஞ்சியவை இறந்துபட்டன. எனினும், பழைய உரைகளிலிருந்தும், புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் 2 முழுப் பாடல்களும், சில பாடல்களின் உறுப்புகளும் தெரிய வருகின்றன. இவை ‘பரிபாடல்-திரட்டு’ என்னும் தலைப்பில் நூலிறுதியில் சேர்க்கப் பெற்றுள்ளன. 22 பாடல்களில் 6 திருமாலுக்கும், 8 முருகனுக்கும், 8 வையைக்கும் உரியனவாயுள்ளன. பரிபாடல் திரட்டில் உள்ள 2 முழுப் பாடல்களுள் ஒன்று திருமாலைப் பற்றியும், மற்றொன்று வையையைப் பற்றியும் அமைந்தவை. பாடற் பகுதிகளுள் சில மதுரையையும் வையையையும் குறித்தன. ஒரு சில உறுப்புகள் இன்னவற்றைச் சார்ந்தவை என்று தெரியக் கூடவில்லை.

இந் நூலைத் தொகுத்தார், தொகுப்பித்தார், பெயர் ஒன்றும் அறியக்கூடவில்லை. தொகுத்த பாடல்களின் அடிவரையறை பற்றிய குறிப்பும் கிடைக்கவில்லை. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும், தொல்காப்பியர் வரையறுத்துள்ளனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, இயற்றிய ஆசிரியர் பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர்,பற்றிய பழங் குறிப்புகள் உள்ளன. ஆயினும், பிரதிகளின் சிதைவினால் முதற் பாடலுக்கும் 22–ஆம் பாடலுக்கும் இக்குறிப்புகள் கிடைக்கவில்லை. 13ஆம் பாடலுக்கு இசை வகுத்தோர் பெயர் காணப்படவில்லை. முதற் பாடலில் அராகமாக வருகின்ற 14 ஆம் வரி முதல் 28 ஆம் வரி வரையிலுள்ள பகுதி தெளிவின்றி உள்ளது. இப் பகுதியில் பொருள் வரையறை செய்வதற்குப் பிரதிகளின் உதவியும் பழைய உரையின் உதவியும் கிடைக்கவில்லை. இவ்வாறே ஏனைய பாடல்கள் சிலவற்றிலும் ஒருசில இடங்கள் உள்ளன.

“பரிந்த பாட்டு பரிபாட்​டென வரும். அதாவது ஒரு ​வெண்பாவாகி வருதலின்றிப் பல உறுப்புகளுடன் ​தொடர்ந்து ஒரு பாட்டாகி முடிவது. பரிபாடல் என்பது பரிந்து வருவது. பல வடிவம் ​பெற்று வருவது.நான்கு பாவாலும் வந்து பல அடியும் வருமாறு நிற்கும்.

பரிபாடலின் சிறப்பு:
பரிபாடல் இ​சை​பொருந்திய பாடல்கள் ஆகும். இப்பரிபாடல் இ​சைப் பாடலாக இருந்த​மையால் இதற்கு இ​சை அ​மைத்தனர். பிற்காலத்தில் ​தேவார திவ்விய பிரபந்த நூல்கள் ​தோன்றக் காரணமாக அ​மைந்த​வை இப்பரிபாடல்க​ளே ஆகும். இ​சைய​மைப்​பை ஒட்டி இப்பாடல்கள் அ​மைந்துள்ள​மை குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலில் உள்ள 12 பாடல்கள் பா​லைப் பண்ணிலும், அடுத்துவரும் 5 பாடல்கள் ​நோதிறம் பண்ணிலும், இறுதியாக வரும் 4 பாடல்கள் காந்தாரப் பண்ணிலும் அ​மைந்துள்ளன. இறுதியில் உள்ள பாடலின் பண்​ணை அறிய இயலவில்​லை. சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.

பரிபாடல் திரட்டு என்பது சில நூல்களில் இறுதியில் ​கொடுக்கப்​பெற்றுள்ளது. ம.து ​தொடர்ச்சியாக உள்ள நூலில் காணப்படாமல் பண்​டைய உ​ரையாசிரியர்களால் காட்டப்பட்ட ​​மேற்​கோள்களிலிருந்தும், புறத்திரட்​னென்று ​தெரிந்த பாடல்கள் ஆகும். இதில் 11 பாடல்கள் இடம்​பெற்றுள்ளன. இதில் ஒரு பாடல்(1) திருமால் பற்றியும், 6 பாடல்கள் (6,7,8,9,10,11) மது​ரை​யைப் பற்றியும், ​வை​யை குறித்து 3 பாடல்களும் (2,3,4) இடம்​பெற்றுள்ளன. இத்திரட்டில் இடம்​பெற்றுள்ள ஐந்தாவது பாடல் ​பொருள் விளங்காத பாடலாக அ​மைந்துள்ளது. 1-4 வ​ரையுள்ள பாடல்கள் ​தொல்காப்பியம் ​செய்யுளியல்​பேராசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் உ​ரைப்பகுதிகளிலும், 5-ஆவது பாடல் நாற்கவிராச நம்பியின் அகப்​பொருள் 129-ஆம் நூற்பாவின் உ​ரையில் இடம்​பெற்றுள்ளது. 6-11வ​ரையுள்ள பாடல்கள் புறத்திரட்டில் இடம்​பெற்றுள்ளது ​நோக்கத்தக்கது.

​சைவமும் சிவனும்:
சைவ சமயம் என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். சைவம் சிவனுடன் ​தொடர்பு​டையது எனத் திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். சிவ வழிபாட்டி​னை சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம். சைவ சமயத்தினைச் சுருக்கமாகச் சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், ​சே​யோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் தமிழர் சமயம் என்ற நூலில் பாவணார் குறிப்படுகிறார். இச்​சைவ சமய​மே உலகில் தோன்றிய முதல் சமயம் என்று கூறப்பெறுகிறது.

தொன்மையான ​மொகஞ்சதா​ரோ அகழ்வாராய்ச்சியின் ​போது கண்டுபிடிக்கப் பெற்ற ஒரு முத்திரை, சிவ உருவத்தின் முன்னோடியாகக் கருதப்பெறுகிறது. மூன்று தலையினையுடைய தியானத்தில் இருப்பவரைச் சுற்றி மிருகங்கள் இருப்பதாக அமைந்த இந்த முத்திரை பசுபதி முத்திரை என்று அழைக்கப்பெறுகிறது. அகழ்வாராய்ச்சி அறிஞரான சர் ஜான் மார்சல் மற்றும் பலர் இந்த முத்திரை சிவனது தோற்றத்தினைக் குறிப்பதாகக் கூறியுள்ளனர்.

சிவன் என்ற தமிழ்ச் சொல்லிற்கு சிவந்தவன் என்று பொருளாகும். தமிழர்கள் குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாக வழிபட்ட​ சே​யோன் என்பதன் பொருளும் சிவந்தவன் என்பதால் சேயோனே சிவன் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் எனப் பல்​வேறுவிதமான சிவப்பெயர்கள் சங்கநூல்களில் காணக்கிடக்கின்றன. சிவம் என்ற சொல்லுக்கு “செம்மை” (பூரணத்துவம்), “மங்களமானது” என்று பொருளாகும். முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றனர்.

உலகத்தின் கடவுள் (எந்நாட்டவருக்கும் இறைவன்) எனவும், பரப்பிரம்மம், ஆதி அந்தம் இல்லாதவன் என்றும் இறைவன் என்று வழங்கப்பெறுகிறார். தேவநாகிரி சொல்லான சிவ (शिव) என்பதற்கு களங்கமற்ற மற்றும் அழிப்பவர் என்று பொருளாகும். சிவபெருமானை அகங்காரத்தினை அழிப்பவர் என்று புராணங்கள் பிரம்மன் தலை கொய்தது முதல் தட்சன் அழிவு வரை மேற்கோள்களோடு கூறுகிறன. வேதங்களில் ருத்ரன் என்ற சிவ அம்சம் அழிக்கும் தொழில் செய்யும் மும்மூர்த்திகளுள் ஒருவராகக் குறிப்பிடப்படுவது ​நோக்கத்தக்கது.

சிவ​பெருமான் எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதால் சித்தன் என்றும், சிவபக்தர்களின் பக்தியில் மூழ்கி, அவர்கள் கேட்கும் வரங்களின் விளைவுகளை ஆராயாமல் வரம் தருவதால் பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார். மேலும் ச​டை முடி​யையுடையதால் சடையாண்டி, சூலாயுதத்தினை வைத்திருப்பதால் திரிசூலன், மூன்றுகண்களை உடையதால் முக்கண்ணன் எனத் தோற்றத்தினை வைத்தும் பல பெயர்களின் அழைக்கப்படுகிறார்.

அத்துடன் கையிலாய மலையில் வசிப்பதால் கயிலைவாசன் எனவும், சுடுகாட்டில் வசிப்பதால் சுடலையாண்டி எனவும் வசிப்பிடம் கொண்டும் பல பெயர்களின் சிவ​பெருமான் அறியப் பெறுகிறார். அடைக்கலம் காத்தான் எனத் தொடங்கி யாழ்மூரிநாதன் வரை ஆயிரம் தமிழ்ப்பெயர்களும் சிவபெருமானுக்கு கூறப்படுகின்றன.

சிவபெருமான் சிவன் என்ற சொல்லால் குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான். அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிறான்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

முப்புரங்க​ளை எரித்தல்:
வானிடத்தில் பறந்து திரியும் இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன் சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும்.
இச்செய்தி,
“மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்” (பரி.5, 25-27)
எனப் பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.

தாரகாசுரனு​டைய மகன்களான வித்யுன் மாலி, தராகாட்சன், கமலாட்சன் ஆகிய மூவரும் தந்​தையின் மரணத்திற்குப் பிறகு ​தேவர்க​ளைப் பழி வாங்க ​வேண்டு​மென்று பிரம்ம​தே​வனைக் குறித்துத் தவம் ​மேற்​கொண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமு​றை முப்புரங்களும் ஒன்று ​சேரும்​போது ஒ​ரே பாணத்தால் அவற்​றை அழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தவ​னே தங்​க​ளை அழிக்க வல்லவன் என அவர்கள் பிரம்மனிடம் இருந்து வரம் ​பெற்றனர். இவ்வரத்தின் வலி​மையினால் அவர்கள் அனைவருக்கும் தீங்கி​ழைத்து வந்தனர். அவ்வசுரர்கள் மூவரும் நி​னைத்த மாத்திரத்தில் பறந்து ​சென்று திரிபுரங்க​ளை அ​டைந்து ​தேவர்களுக்கும் உலகத்தவருக்கும் ​கொடு​மைகள் இ​ழைத்து வந்தனர். ​தேவர்கள் அவர்க​ளை அழிப்பதற்காகச் சிவ​பெருமா​னிடம் வந்து ​வேண்டினர். அவரும் அதற்கு இ​சை​ய​வே, அசுரர்க​ளை வதம் ​செய்வதற்காக சிவன் ஏறிச் ​செல்லும் இரதமாகத் ​தேவர்கள் தங்க​ளை​யே அர்ப்பணித்துக் ​கொண்டனர்.

சூரியனும் சந்திரனும் இரு சக்கரங்களானார்கள். அஸ்தகிரியும் உதயகிரியும் இருசுகளாயின. மந்தர ம​லை​யே இரதமாகியது. ஆகாயம் ​கொடுமுடி ஆனது. ​தேவர்கள் இரதத்தின் அலங்காரப் ​பொருள்களானார்கள். விந்தியம​லை கு​டையாகியது. பிரம்ம​தேவன் கடிவாளத்​தைக் ​கையி​லேந்திச் சாரதியானார். பிரணவம் குதி​ரைக​ளை ஓட்டிச் ​செல்லும் சாட்​டையாக மாறியது. ​வேதங்கள் நான்கும் குதி​ரைகளாயின. ​மேரும​லை வில்லாக வாசுகி அதன் நாண் கயிறாகியது. சரசுவதி வில்லின் நுனியி​லே கலகல என ஒலிக்கும் சிறு மணிகளாக விளங்கினாள். விஷ்ணு பாணமானார்.

பட்டணத்​தை ​நெருங்கியதும் சிவன் வில்​லை வ​ளைத்து ஊங்காரம் ​செய்தார். திரிபுரங்கள் ஒன்றாயின. ​நெற்றிக்கண்​ணைச் சிவன் திறந்தார். தீ முப்புரங்க​ளையும் எரித்தது. வில்​லை வ​லைத்துப் பாணத்​தை எய்தார். முப்புரங்களும் அழிந்தன. இக்க​தை சிவபுராணத்தில் இடம்​பெற்றுள்ளது. இத​னை​யே பரிபாடலும் எடுத்து​ரைக்கின்றது. இம்முப்புரத்​தை மும்மலங்கள் என்று கூறுவர். ஆணவம், கன்மம், மா​யை ஆகிய இவ்வான்ம பந்தமானது சிவஞானம் என்ற தீயால் எரிக்கப்படுகிறது, ஆன்மாக்கள் சிவத்​தொடர்பு ​பெற்றுச் சிறக்கின்றன. திரிபுரம் எரித்த சிவனு​டைய அருட்​செயலுக்குத் திருமந்திரமானது,
“அப்பணி ​செஞ்ச​டை ஆதி புராதனன்
முப்புரம் ​செற்றனர் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்த​மை யாரறிவா​ரே” (திருமந்திரம்., 343)
என்று ​விளக்கமளிக்கிறது.

சிவ​பெருமான் திரிபுரம் எரித்த ​செய்தியானது,
“……… ……… …. தாஅம் பணிவுஇல் சீர்ச்
​செல்வி​டைப் பாகன் திரிபுரம் ​செற்றுழிக்
கல்உயர் ​சென்னி இமயவில் நாண் ஆகித்
​தொல்புகழ் தந்தாரும் தாம்” (பரிபாடல் திரட்டு,1;74-77)
எனப் பரிபாடல் திரட்டில் உள்ள முதற் பாடலில் இடம்​பெற்றுள்ளது.

சிவ​பெருமா​னை மற்றவர்க​ளே பணிவர். சிவன் பிற​தேவர்க​ளைப் பணியமாட்டார். அ​னைத்துத் ​தேவர்களுக்கும் த​லைவராக விளங்குகின்றார். சிவன் வி​ரைந்து ​செல்லும் கா​ளை​யை ஊர்தியாக உ​டையவர் என்று சிவ​பெருமானின் இயல்பி​னையும் அ​னைத்துக் கடவுளர்களுக்கும் முதன்​மையானவராக முழுமுதற் கடவுளாக விளங்குவ​தையும் இப்பாடல் எடுத்து​ரைக்கின்றது.

சிவன் கங்​கை​யைத் த​லையில் ​வைத்தது:
ம​லையரசனின் (பர்வதராஜன்) மற்றும்​ மைனாவதி தம்பதியினரின் மகளான கங்​கை, சிவபெருமானிடம் என்றும் புனித தன்மை உடையவளாகத் திகழ வரம் பெற்றார். இதனால்​தேவ​லோகத்தி​னைப் புனிதம் செய்ய இந்திரன் அழைப்பால் தேவலோக நதியாக மாறினாள். பகிரதனின் முன்னோர்கள் சாபம் பெற்று சாம்பலாக இருந்தார்கள். அவர்களுக்கு முக்தி கிடைக்க கங்கை நதி பூமிக்கு வந்தால் மட்டுமே இயலும் என்பதை அறிந்த பகிரதன் கங்கையை நோக்கித் தவமிருந்தார். தேவலோகத்திலிருந்து பூமிக்கு வரும் பொழுது எழும் பிரவாகத்தினை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டுமே இயலும் என்று கங்கை கூறியதால், பகிரதன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து கங்கையைப் பூமிக்கு வரும்பொழுது பிரவாகத்தினை தடுத்து காத்தருள வேண்டினார். பகிரதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் கங்​கை​யைச் சடாமுடியில் தாங்கிப் பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டார். இதனால் சிவபெருமான் கங்காதரன் என்றும் சலதாரி என்றும் பெயர்பெற்றார். சிவபெருமான் கங்கையைச் சடையில் வைத்திருப்பதை,
“இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி
விரிசடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி” (பரி 9;1-7)
என்று பரிபாடல் குறிப்பிடுகிறது.

நீலமணிமிடற்​றோன்:
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் சகல உயிர்களும் இறந்துவிடும் என்று ​தேவர்கள் பயந்தனர். அதனால் இவ்வுல​கைக் காப்பாற்றுவதற்காக அ​னைவரும் ​சேர்ந்து சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டனர்.

அவர்களின் ​வேண்டு​கோ​ளை ஏற்ற சிவ​பெருமான் ஆலகால விஷத்தை உண்டு இவ்வுலகைக் காப்பாற்றினார். சிவன் ஆலகால விடத்​தை உண்ட​போது அருகிலிருந்த உமா​தேவியார் எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் உடலில் நஞ்சு சேர்ந்தால் சகல உயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சி, ஒடி வந்து சிவனாரின் கண்டத்தை இருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்து போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட சிவன் திருநீலகண்டரென்ற திருப்பெயர்ப் பெற்றார். இத​னை,

“மறு மிடற்று அண்ணற்கு மாசி​லோள் தந்த
​நெறி நீர் அருவி அசும்பு உறு ​செல்வம்” (பரி 8: 127)

“மணிமிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்​தோய் நீ” (பரி., 9:7)

திருவாதி​ரை விழா:
சிவபெருமானுக்குத் திருவாதிரை நாள் சிறப்புடையதாகக் கருதப்பட்டது. அதிலும் மார்கழித் திருவாதிரை நாள் சிறப்புடைய திருநாளாகக் கருதப்பட்டது. மழைக்காலத்தின் கடைசிப் பகுதியாகிய மார்கழி மாதத்தில் சந்திரன் முழுதாக நிறைந்துள்ள திருவாதிரை நாளில் சிவபெருமானுக்குத் திருவிழாவை முப்புரி பூணூ​லை உ​டைய பார்ப்பனர் அந்த விழாவில் இ​றைவனுக்குப் பலிப் ​பொருள் (பூ​சைப் ​பொருள்கள்) இட்ட ​பொன் கலங்க​ளையும் பிறவற்​றையும் ஏந்தித் ​தொடங்கினர். இதனை,
“க​னைக்கும் அதிரிகுரல் கார் வானம் நீங்க
பனிப்படு ​பைதல் வித​லைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பின்குளத்து
மாயிருந் திங்கள் மறுநி​றை ஆதி​ரை
விரிநூல் அந்தணர் விழவு ​தொடங்கப்
புரி நூல் அந்தணர் ​பொலம்கலம் ஏற்ப” (பரி., 11;74-80)
எனப் பரிபாடல் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

முருகனின் தந்​தை:
ஆதி அந்தணனாகிய பிரமன் அறிந்து தேர்க்குதிரைகளை ஓட்ட, வேதமானவை குதிரைகளாகவும், வையகமே தேராகவும், வாசுகி நாகம் நாணாகவும், மேரு மலை வில்லாகவும், பொன்-வெள்ளி-இரும்பு ஆகிய மூவகைப் புரங்களை ஒரு தீக்கணையாலே வேகும்படியும், அத்திசையே தீயாக எய்தவனும்; அமரர் மூலமாக (அவர்களை அதிஷ்டித்து) வேத யாகங்களின் அவியுணவை ஏற்பவனும் ஆகிய இளமை பொருந்திய கண்களையுடைய பார்ப்பானாகிய சிவபெருமான், உமையம்மையைத் திருக்கரம் பற்றிய அழகு (காமர் – அழகு) பொருந்திய திருமணத்தில், விண்ணோர்களிலெல்லாம் வேள்வி முதல்வனாக இருக்கின்ற விரிகதிர் போன்ற மணிகளைப் பூண்ட இந்திரனுக்குத் நெற்றியில் இமையாத கண்ணுடைய தான் அளித்த வரமாகிய, “தனக்குக் காமப் புணர்ச்சி இல்லையாயினும் ஒரு விலக்கமாக (புத்திரனைப் பெற்று) அமைய வேண்டும்” என்பது தான் உண்மைப் பொருளாக விளங்குவதால் “செய்வதற்கில்லை” என்று கூறி ஒதுக்காது, அழிவில்லாத மழுவுடைய அவன், எரி போலக் கனன்று ஏழு உலகங்களும் அச்சமுறுமாறு உருவினைக் கொண்டான்.

அந்த நெருப்புருவத்தின் கருவினைப் பெற்றுக்கொண்ட உடல் பழுத்துத் தவம் பெருக்கி மெலிந்த சப்தரிஷிகளும், அதன் பெருமை உணர்ந்து அதனைப் பிரித்தெடுத்துத் தாம் வசீகரணம் செய்துகொண்டு மாதவர்களாகிய அவர்கள் தம் மனைவியர் வயிற்றில் அமையச் செய்தால் அது தகாதென (அதாவது சிவபெருமான் திருவருட் பிரசாதத்தைத் தாம் உண்டு அதனை அற்பமான புணர்ச்சி மூலம் தம் மனைவியர் வயிற்றில் அமைத்தல் பெருமானுடைய திருவருளாகிய அக்கருவின் பெருமைக்குத் தாகாது என), அவர்களே பெற்றுக் கொள்ளட்டும் என்று வேள்வித்தீ வளர்த்து அந்த முத்தீயில் அவியுடன் இட்டனர். அவ்வாறு அவ்வேள்வித் தீயில் திகழ்ந்ததான பிரசாதத்தை வடதிசையில் திகழும் விண்மீன்களான ஏழு மகளிருள் அருந்ததி தவிர மற்ற அறுவரும் உண்டனர்.

மாசு மறு ஏதும் இல்லாத கற்புடைய மாதவர் மனைவியராகிய அவர்கள் தவறாமல் உன்னைக் (முருகப்பெருமானை) கருக்கொண்டனர் என சிவனருளால் முருகப்​பெருமான் ​தோன்​றிய​தை,
“ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ
வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
நாக நாணா மலைவில் லாக
மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய
மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப்
பாக முண்ட பைங்கண் பார்ப்பான்
உமையொடு புணர்ந்த காம வதுவையுள்
அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி
இமையா நாட்டத் தொருவரங் கொண்டு
விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன்
விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்த
தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்
எரிகனன் றானாக் குடாரிகொண் டவனுருவு
திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக்
கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை
நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து
வசித்ததைக் கண்ட மாக மாதவர்
மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற்
சாலார் தானே தரிக்கென அவரவி
யுடன்பெய் தோரே யழல்வேட் டவ்வழித்
தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில்
வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்
கடவுள் ஒருமீன் சாலினி யொழிய
அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர்
மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே
நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்
பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்
பெரும் பெயர் முருக!” (பரி 5; 21-50)
என்ற பரிபாடல் எடுத்தியம்புகிறது.

இப்பாடலில் சிவன் முப்புரங்க​ளை எரித்த நிகழ்வும் இடம்​பெற்றுள்ளது ​நோக்கத்தக்கது. ​மேலும் இப்பாடல் முருகப் பெருமானின் திருவவதாரத்தைக் குறிப்பது. சிவபெருமான் உண்மை பொருளாவதும், எல்லோரும் புணர்ச்சியின் மூலமே மகவு பெறும்பொழுது அரிதினும் அரிய பரமசிவம், மற்ற உயிகள் போலன்றி அரிய செயலாகப் புணர்ச்சி இன்றியே முருகப் பெருமானைப் பெற்றனர் என்பதும் இப்பரிபாடல் கூறும் சிவபெருமான் திறம் ஆகும்.

சிவனின் தன்​மைகள்:
சிவ​பெருமான் கா​ளை​யை வாகனமாக உ​டையவன்; ஆதி​ரை நாளுக்குரியவன். இத​னை,
“புங்கவம் ஊர்வோனும்” (பரி., 8:2)
“ஆதிரை முதல்வனின் கிளந்தநாதர் பன்னொருவரும் (பரி., 8: 6)
என்று பரிபாடல் எடுத்து​ரைக்கின்றது.

முடிவுகள்:
பரிபாடலில் சிவன் குறித்த ​செய்திகள் 4 பாடல்களில் இடம்​பெற்றுள்ளன. பரிபாடல் திரட்டில் ஒருபாடலில் மட்டும் சிவ​னைப் பற்றிய ​செய்தி இடம்​பெற்றுள்ளது. சிவனின் அருட்​செயல்களான முப்புரம் எரித்தல் ஒரு பாடலிலும்(5), கங்​கை​யைத் தாங்கியது ஒரு பாடலிலும்(9), சிவனின் ​தோற்றம் குறித்த ​செய்தி இருபாடல்களிலும்(8,9), சிவனின் தன்​மைகள்(8) ஒரு பாடலிலும், சிவன் முருகப்​பெருமா​னைப் ​பெற்ற​மை(5) ஒரு பாடலிலும், சிவனுக்குரிய திருவாதி​ரை நாள் (11) ஒரு பாடலிலும் குறிப்பிடப்பட்டுள்ள​மை ​நோக்குதற்குரியது. பிற ​கடவுளர்க​ளைக் குறிப்பிட்டாலும் சிவ​​பெருமா​னே முழுமுதற் கடவுளாகப் பரிபாடலில் குறிப்பிடப்பட்டுள்ள​மை சிறப்பிற்குரியது. இப்பரிபாடலில் சிவன் என்று எந்தப்பாடலிலும் குறிப்பிடப் ​பெறா​மை குறிப்பிடத்தக்கது. செல்வி​டைப் பாகன், சலதாரி, மணிமிடற்றண்ணல், புங்கவம் ஊர்​வோன், ஆதி​ரை முதல்வன் என்​றே பரிபாடலில் சிவ​பெருமான் குறிக்கப்படுகிறார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard