சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவற்றுள் சில சமயம் தொடர்பானவை. வேறு சில சமூகம் தொடர்பானவை. நகரங்கள் சில, ‘விழவு மேம்பட்ட பழவிரல் மூதூர்’ என்று பாராட்டப்பட்டுள்ளன. விழாக்களில் ஆடலும், பாடலும் இடம்பெற்றன. பாணர், கூத்தர் முதலிய கலைஞர்கள் விழாக்களில் ஆடியும் பாடியும் மக்களை மகிழ்வித்தனர்.
விழாக்கள்
மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்கள். மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் முக்கிய நோக்கமாகும். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி மறுமலர்ச்சி ஆகியவற்றை அச்சமுதாயம் காலங்காலமாகப் போற்றிக் கொண்டாடும் விழாக்களின் வழியாக அறியலாம் சங்க காலத்தில் விழாக்கள் சிற்றூரிலும், பேரூரிலும் கொண்டாடப்பட்டதை இலக்கியங்கள் கூறுகின்றன.
விழா மரபுகள்
விழாக்களை வளர்பிறை மற்றும் மதி நிறைந்த நாட்களில் தொடங்கியதை அகநானூறு கூறகிறது (அகம்., பா.எ. , 141.) விழாவில் காணப்படும் செயல்முறைகளை ஆற்றுவோரை விழாவாற்றுவோர்; என்பர். வெறியாட்டில் வேலன் விழாவாற்றுவோனாகச் சுட்டப்படுகிறான். சங்ககாலத்தில் குயவர்கள் விழாக்களில் முக்கியப் பங்கு வகித்தனர்; என்பதை,
என்று தெரிவிக்கிறது. இக்குயவர்கள் இன்றும் சிறுகோயில்களில் பூசாரிகளாகச் செயல்படும் நிலை உள்ளது. இதனைப் பண்டைய மரபின் தாக்கம் எனக் கருதலாம். விழாவை அறிவிப்பவராக குயவர் இருந்ததையும் நற்றிணை உணர்த்துகிறது.
கார்த்திகை விழா
சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய சமய விழாக்களில் குறிப்பிடத்தகுந்தது கார்த்திகைத் திருவிழாவாகும். கார்த்திகை விண்மீனை, ‘அறுமீன்’ என்று நற்றிணைச் செய்யுள் ஒன்று குறிக்கின்றது. அஃது அறஞ்செய்யத்தக்க சிறப்புடையது. எனவே கார்த்திகைத் திங்களை ‘‘அறஞ்செய் திங்கள்’’ என்றும் நற்றிணை குறிப்பிடுகின்றது (நற்றிணை, பா.எ. , 185). கார்த்திகை விழாக்களின் போது வீடுகளும், தெருக்களும் ஒளிவிளக்குகளால் அழகுறுத்தப் பெற்றமையை,
என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. இந்த நாளில் வீரர்கள் நீலக்கச்சையணிந்து விருந்துண்டு களித்தனர். இவ்விழா ஆவணித் திங்களில் கொண்டாடப்பட்டது. இவ்வோணம் பின்னாளில் கேரள மாநிலத்தில் வசிக்கும் மக்கள் மட்டும் கொண்டாடும் விழாவா இன்று மாறிவிட்டது நோக்கத்தக்கது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்கள் இதுபற்றிக் குறிப்பிடுகின்றனர். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சைவம் புத்துயிர் பெற்றபோது ஆதிரை நாள் சிறப்பிடம் பெற்றது.
பொங்கல்
இது தைத்திங்களில் கொண்டாடும் விழாவாகும். முதற்கண் அறுவடை விழாவாகத் தொடங்கி பின்னர் வளத்தைக் குறித்த விழாவாக மாறியது. ஆனால் பொங்கல் விழாவினைப் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. தைத்திங்களில் நோன்பு நோற்பதுண்டு என்று மட்டும் அறிகிறோம். தைத்திங்களில் நோன்பு இயற்றுவார் அமர்ந்திருப்பது போல் குரங்குகள் மழையில் நனைந்து அமரந்திருப்பதாக,
‘‘வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்; தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்’’ (நற்றிணை, பா.எ., 22)
என்ற நற்றிணைச் செய்யுள் குறிப்பிடுகின்றது.
தை நீராட்டு
தைத் திங்களில் மகளிர் ஆறு, குளங்களில் நீராடுவது சில செய்யுட்களில் குறிப்பு காணப்படுகின்றது. பின்னால் இதனையே மார்கழி நீராட்டு என்றனர்.
என்னும் குறிப்புகளால் அறியலாம். தமக்கு வாய்க்கும் கணவன்மார் நற்பண்புடையவராதல் வேண்டும் என வேண்டிப் பெண்கள் எடுத்த இந்நோன்பு பிற்காலத்தில் சமயத் தொடர்பு பெற்றதை ஆண்டாள், மாணிக்கவாசகர் பாடல்களால் அறிகின்றோம். அம்பாவாடல் என்று பரிபாடல் இதனைக் குறிப்பிடும்.
இளவேனில் விழா
இளவேனில் காலம் காமவேளுக்குரியதாகக் கொள்ளப்படும். வில்லவன் விழாவென்பது காமனை வேண்டிச் செய்யும் விழாவாகும். தலைவி ஊரில் காமவேள் விழா நடப்பதைக் கண்டால் கலங்குவாள் எனக் கருதித் தலைவன் திண்டேரேறி வந்தாகத் தோழி குறிப்பிடுகின்றாள். இதனை,
இந்திரனைப் பற்றிய சில குறிப்புகளே சங்கச் செய்யுட்களில் கிடைக்கின்றன. வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் முரசம் முழங்குதலைப் புறநானூறு குறிப்பிடுகின்றது (புறம்., பா.எ., 141). ‘இந்திரவிழவிற் பூவின் அன்ன’ என்று உவமையாகப் பயன்படும் அளவுக்கு இந்திர விழா சிறப்புற்றிருந்தது (ஐங்குநுறூறு, பா.எ., 62). சிலம்பு, மணிமேகலை காலத்தில் இந்திரவிழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக் கொடியேற்றப்பட்டது. பல தெய்வங்கட்கும் பூசையிடப்பட்டது. இசையும், கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. நகரம் முழுவதும் அணி செய்யப்பட்டதை மணிமேகலை விழாவறைகாதை தெளிவாக்குகிறது.
அறிஞர்கள் குழுமியிருந்து பட்டிமண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலாமும் செய்யாது ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தூங்கெயிலெறிந்த தொடிதோட்செம்பியன் இதனைத் தொடங்கினான் என்று அறிகின்றோம். இவ்விழா புகாரோடு தொடர்புடையதாக விருந்தாலும் மதுரையிலும் கொண்டாடப்பட்டதாகச் சின்னமனூர்ச் செப்பேட்டாலறிகின்றோம்.
நீர் விழா
பரிபாடலின் வழியே வைகையில் வெள்ளம் வந்த போது மக்கள் நீராடி மகிழ்ந்ததை அறிகின்றோம் (பரி., 16-வது பாடல், 11-15-வது வரிகள்). மலர்களும் பொன்மீன்களும் கொண்டு வைகையாற்றுக்கு மக்கள் நீராடச் சென்றனர். முற்காலத்தில் மன்னர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்; என்பதற்கு அகநானூற்றுப் பாடல்கள் சான்றாக அமைகின்றன (அகம்., பா.எ., 222, 376). சிலப்பதிகாரத்து ஆற்றுவரிப் பாடல்கள் வெள்ளத்தைக் கண்டு மக்கள் மகிழ்ந்து கொண்டாடியதைத தெரிவிக்கும்.
திருப்பரங்குன்றத்து விழா
முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்டதை மணவிழாவாகக் கொண்டாடினர். (பரி., 19-வது பாடல்). பாண்டிய மன்னன் தன் பரிவரத்தோடு இவ்விழாவிற் கலந்து கொண்டான்.
திருப்பதியில் விழா
நெடியோன் குன்றாகிய திருவேங்கடம், ‘‘விழவுடை விழுச்சீர் வேங்கட’’மெனப் பாராட்டப்பட்டது (அகம்., பா.எ., 61.) திருமாலின் நின்ற கோலம் இப்பதியின் சிறப்பு ஆகும்.
பிறந்தநாள் விழா
சங்க காலத்தில் மன்னர்கள் தம் பிறந்த நாளைக் கொண்டாடியதை உணர முடிகிறது. தொல்காப்பியர்; இதனை,
என்று குறிக்கிறார். நன்னனின் பிறந்தநாளை அவனது மக்கள் கொண்டாடியதை மதுரைக்காஞ்சி குறிக்கிறது.
புனலாட்டு விழா
மழை பொழிந்து ஆற்றில் நீரோட்டம் ஏற்பட, நீராடி வழிபடுவதே புனலாட்டு விழா எனப்படுகிறது. தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள நீரை வாழ்த்தி, வழிபடுவது வளமை வேண்டிச் செய்யப்பட்ட செயலாகக் கருதலாம். ஆற்றில் புனலாடியதைப் பரிபாடலும் (பரி., 10-வது பாடல், 27-வது வரி) கடலில் புனலாடியதைப் பட்டினப்பாலையும் (பட்டினப்பாலை, 99-வது வரி) கூறுகின்றன. பறையறிவித்துப் புனலாடியதனைப் பரிபாடல் கூறுகிறது (பரி., 20-வது பாடல், 14-வது வரி.) பெண்கள் பொன்னாலான சங்கு, நண்டு, வாளை முதலியவற்றைப் புதுப்புனலில் இட்டு வேண்டியதையும் பரிபாடல் உணர்த்துகிறது (பரி., 10-வது பாடல், 85-வது வரி). ஆட்டனத்தி காவிரி வெள்ளத்தில் நீராடும் போது அடித்துச் செல்லப்பட்டதை அகநானூறு உணர்த்துகிறது (அகம்., பா.எ., 45)
பூந்தொடை விழா
இது வீரர்களின் கலைப்பயிற்சித் தொடக்க விழாவாகும். மாலைகளால் இடத்தை அழகுறுத்துவர். வீரனையும், அழகுறுத்துவர். வில்லில் நாணேற்றி அமைப்பினைக் குறிபார்த்து எய்யும் விழா இதுவெனக் கருதலாம். இதனை,
ஆடும் கலைஞர்கள் கோடியர் எனப்பட்டனர். விறலியர் மயில் போல அசைந்தாடும் தோறும் கூத்தருள் முழவினை முழக்கிக் கொண்டு பின்னே செல்வர். இதனை, கோடியர் விழவுகொள் முதூர் விறலிபின்றை முழவன் போல்’’ (அகம்., பா.எ., 352). என்னும் உவமை விளக்குகின்றது.
வெறியாட்டு விழா
பண்டைய நாளில் பெருவழக்காக இருந்தது வெறியாட்டு விழாவாகும். முருகனுக்காக எடுக்கப்பட்ட இவ்விழாவில் வேலன் கையில் வேலேந்தி ஆடுவான். இன்னிசைக் கருவிகள் முழக்கப்படும்; தினையரிசியையும் மலர்களையும் தூவுவர். ஆட்டுக்கிடாயை அறுத்துக் குருதியைச் சிந்துவர். இவ்விழாவைப் பற்றிய முழுவிவரம் திருமுருகாற்றுப்படையில் இடம் பெறுகிறது. ஊர்தோறும் இவ்விழாவினைக் கொண்டாடினர்; என்பதனை,
என்று மதுரைக்காஞ்சியும் குறிக்கின்றது. விழாவிற்கு நிமித்தம் பார்த்துப் புறப்பட்ட செய்தியைக் குறுந்தொகை கூறுகிறது (குறுந்தொகை, பா.எ. , 233).
பிறை வழிபாடு
அக்காலம் முதல் இக்காலம் வரை பிறை வழிபாடு நிகழ்கின்றது. இந்து மதத்தவர் அன்றி இஸ்லாமியர்களும் வளர்பிறை வழிபாட்டினைச் செய்கின்றனர். இவ்வழிபாடு மணமாகாத பெண்கள் தங்களுக்கு மணம் முடிய வேண்டும் என எண்ணிப் பிறையைத் தொழுதனர். இம்முறை சங்க காலத்தில் இருந்துள்ளமையை அகநானூறு காட்டுகிறது.
‘‘ஔஇழை மகளிர் உயர்பிறை தொழுஉம் புல்லென் மாலை யாம்இவன் ஒழிய’’ (அகம்., பா.எ., 239)
என்ற வரிகளில் ஒளி மிகுந்த அணிகலன்களை அணிந்த பெண்கள் மாலை நேரங்களில் பிறையினைத் தொழுதனர் என்ற செய்தி தெரியவருகின்றது.
கடல் தெய்வ வழிபாடு
நான்கு வகை நிலங்களில் கடலும் கடல் சார்ந்த பகுதியாகிய நெய்தற் நில மக்கள் மீன் பிடித்தும், உப்பு விற்றும் வாழ்க்கையை நடத்தினர். இவர்களது வாழ்க்கை கடலை நம்பி இருந்தமையால், இவர்கள் அக்கடலைக் கண்கண்ட தெய்வமாக எண்ணி வழிபடலாயினர்;. இந்நில மகளிர்கள் தங்கள் ஆடவர்கள் நடுக்கடலுக்குச் சென்று மீன்பிடித்து எந்த ஒரு ஆபத்திலும் சிக்காமல் விரைவிலேயே அவர்கள் மீன்களோடு வீடு திரும்ப வேண்டும் என்று கடலையே பெண்ணாகப் பாவித்து, கடல் தாயை வழிபட்டு ஆடவர்கள் வீடு திரும்பும் வரை ஆற்றியிருப்பர்.
சங்க காலத்திலும் இக்கடல் தெய்வ வழிபாடு நிகழ்ந்துள்ளமையை,
‘‘பழையர் மகளிர் பனித்துறைப் பரவ பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு’’ (அகம்., பா.எ., 201)
என்ற அகநானூற்றுப் பாடலின் மூலம் அறியலாம். மீனவர்களின் தெய்வமான கடலினை, பெண்கள் யாவரும் கடற்கரையில் ஒன்று கூடி நின்று வழிபாடு நிகழ்த்தினார்;கள் என்பதையும் அறிய முடிகிறது. இவ்வழிபாடு சங்க காலத்தேயன்றி இக்காலத்திலும் நெய்தற் நிலப் பகுதிகளில் மீனவர் வாழ்க்கையில் காண முடிகிறது.
பாவை வழிபாடு
பாவை வழிபாடு என்ற ஒரு வழிபாடும் அக்காலத்தில் நிகழ்ந்துள்ளமையை,
என்ற பாடலால் அறியலாம். அதாவது தைத் திங்களிலே குளிர்ந்த பெயலின் கடைப்பட்ட நாட்களிலே பொன்னாலாகிய காசுகளைத் தொடுத்து அணிந்த வண்டல் விளையாட்டிற்கு உரிய பாவையை அழிகிய நெறியினையுடைய மகளிர் நீர், உண்ணும் துறையிலே கொண்டு வந்து வைப்பர். அப்போது அவர்கள் குரவைக் கூத்து ஆடுவர். இந்நிகழ்வே பண்டைய பாவை வழிபாடு எனப்பட்டது. இவ்வழிபாடு பிற்காலத்தில் பாவை வழிபாடு, பாவை நோன்பு என்று மாறியது. திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய பக்தி இலக்கியங்கள் கூட இவை சார்ந்து தோன்றியவை ஆகும்.
பண்டைத் தமிழகத்தில் விழாகட்குப் பஞ்சமில்லை யென்றும், சமய விழாக்களே பெரும்பான்மையாக இருந்தனவென்றும், இவ்விழாக்களின் போது பாட்டும் கூத்தும் விருந்துகளும் நிறைந்து மக்களை மகிழ்ச்சியிலாழ்த்தின என்றும் தெள்ளிதின் உணர்கின்றோம். இயற்கையில் ஆரம்பமாகிய வழிபாடு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தொடங்கி இன்றளவும் நிலவுகிறது. இயற்கை வழிபாடானப் பிறையும், கார்த்திகை விழாவும், பங்குனி வழிபாடும், கடல்தெய்வ வழிபாடும், சங்க காலம் தொட்டு இன்றளவும் நிகழ்ந்துள்ளது என்பதனை அகநானூறு காட்டுவதோடு குறிப்பிட்ட தெய்வங்களை அல்லாமல் பல தெய்வங்களையும் வழிபாடு செய்து பக்தியில் சங்ககால மக்கள் மூழ்கி இருந்தனர்; என்ற செய்திகளும் ஆய்வினால் உணர முடிகிறது.