காலச்சுவடு மார்ச் 2010 இதழில் (பக். 9) அரவிந்தன் எழுதியுள்ள எதிர்வினையில் “2000 ஆண்டுக் கால இந்திய மரபு தனது செழுமையான பல்வேறு கூறுகளில் தாழ்த்தப்பட்டோருக்கான இடத்தை மறுத்துவந்தது மட்டுமல்ல; அவர்களது இருப்பைத் தன் பிரக்ஞையிலிருந்தும் இயல்பாகவே அகற்றியிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வரலாற்றில் இது சரியான கருத்தெனக் கொள்வதற்கில்லை. இன்றைக்குப் பறையர் குல உட்பிரிவாகக் கருதப்படும் வள்ளுவர் சாதியைச் சேர்ந்த திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் என்ற நீதிநூல் தமிழ் வேதமாகவே போற்றப்பட்ட நிலையும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. திருக்குறள் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். 1,600 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்ப்புடன் இந்நூல் தமிழ் மக்களால் பயிலப்பட்டு வருகிறது என்றால், ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவரின் படைப்பு பிற உயர் சாதிக்காரர்களால் எப்படி ஏற்கப்பட்டிருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
வள்ளுவர் சாதியைப் பிற சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியாகக் கருதத் தொடங்கியது எந்த நூற்றாண்டிலிருந்து? அத்தகைய ஒரு கருத்தும் நடைமுறையும் உருவானதற்கான சமூகச் சூழல் மற்றும் வாழ்வியல் நிர்ப்பந்தங்கள் எவை என்பதையெல்லாம் ஆராய்ந்தால்தான் இதற்கு விடை கிடைக்கும். ஆரியத்திற்கு எதிரான திராவிடச் சிந்தனை மரபின் பிரதிநிதி திருவள்ளுவர் என்பது போன்ற மட்டையடி வாதங்கள் கட்சிப் பிரச்சாரமாக இருக்கலாமே தவிர, ஆய்வுக் கருத்தாக இருக்கமுடியாது.
பறையர் என்ற பெரும் சாதியையே எடுத்துக்கொண்டாலும் வலங்கைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த பறையர்கள் இடங்கைப் பிரிவைச் சேர்ந்த (கல்வெட்டுகளில் இடங்கைச் சாதியாகக் குறிப்பிடப்படுகின்ற மறவர், கைக்கோளர், வன்னியப் படையாச்சிகள் போன்ற) பல சாதிகளைவிடத் தாழ்ந்த சாதியாகக் கருதப்படக் காரணம் என்ன? கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் ‘சூத்திர ராயன்’ என்ற பட்டத்துடன் குறிப்பிடப்படுகின்ற பறையர் குலத்தவர் எந்தக் காரணங்களுக்காக எப்போது பஞ்சமர் பிரிவில் சேர்க்கப்பட்டனர்? கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுவரை பறையர்கள் தீண்டாச் சாதியினராகக் கருதப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டா?
மேற்கண்ட கேள்விகளுக்கு ஒரு பதிலைக் குறிப்பிடமுடியும். பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தின் (13ஆம் நூற்றாண்டின்) இறுதிக் கட்டம்வரை பறையர்கள் பஞ்சமர்களாகக் கருதப்பட்டிருக்க வாய்ப்பில்லை. சித்திரமேழிப் பெரியாநாட்டார் எனப்பட்ட வேளாளர் குலக் கூட்டமைப்பினரின் எழுச்சியாலும், அரச குலச் சத்திரியரின் வீழ்ச்சியாலும், பறையர்கள் தாம் சார்ந்திருந்த நிலங்களோடு பிணைக்கப்பட்டுக் கிட்டத்தட்ட அடிமை நிலையை எய்தினார்கள். புலையர்கள் போன்ற பிற பழமையான சாதியினருடன் சேர்க்கப்பட்டு ஒட்டுமொத்தச் தீண்டாச் சாதிக் குழுக்களுடன் அவர்கள் இணைக்கபட நேர்ந்தது.
நிலம் என்பது அரசின் உடைமை என்ற கருத்து ஏட்டளவில் மட்டுமே இருந்ததாலும், 19-20ஆம் நூற்றாண்டுகளின் முதன்மையான நிர்வாகப் பதவிகளில் (பட்டாமணியம் அல்லது கிராம முன்சீப்பு, கர்ணம் அல்லது கணக்கப்பிள்ளை போன்றவை) நாலாம் வர்ணத்தவரான வேளாளர்களே நிறைந்திருந்ததாலும், பறையர் சமூகத்தவர் போன்றவர்களின் சுதந்திரமான இயக்கமே முடக்கப்பட்டது. “கணக்கனைப் பகைத்தவன் காணியை இழந்தான்” என்ற ஊரகப் பழமொழி ஒன்றுண்டு. ராஜகுலவர்கள் தங்கள் காணிப்பற்றை இழந்ததே சித்திரமேழிப் பெரியநாட்டாரின் எழுச்சியால்தான் என்பது வரலாறு. கலப்பையில் பூட்டப்படுபவர்கள் பஞ்சமர்கள், கலப்பையைக் கையில் பிடித்திருப்பவர்கள் வேளாளர்கள் என்பதனால்தான் இந்த நிலைமை.
19-20ஆம் நூற்றாண்டுகளில் தென் மாவட்டத்துச் சைவ வேளாளர்களாலும், கார்காத்த வேளாளர்களாலும் ராஜகுலச் சான்றோர் (நாடார்) சமூகத்தவர்மீது ஒடுக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பறையர்களைத் தாழ்த்தியது போலவே, சான்றோர்களையும் அடக்கி ஒடுக்கி அனைத்துவித அந்தஸ்துகளையும் பறிப்பதற்கான முயற்சிகள் தொடங்கின. ஆனால், சான்றோர் சமூகத்தவரிடம் எஞ்சியிருந்த அரசகுலப் பாரம்பரியப் பெருமித உணர்வாலும், போர்க் குணத்தாலும், தலைமைப் பண்புகளாலும் வேளாளர்களின் முயற்சியை முறியடித்துத் தங்கள் சுய சார்பினையும், தன்மானத்தையும் நிலைநிறுத்திக் கொண்டனர்.
சான்றோர் சாதியினர் குடிகாவல் மரபினர் என்ற வரலாற்று உண்மையைத் தேவநேயப் பாவாணர் போன்ற தமிழறிஞர்கள்கூட ஒப்புக்கொண்டு பதிவு செய்துள்ளனர். குடிகாவல் என்பது சத்திரியப் பண்பாகும். பறையர் போன்ற அடித்தட்டு மக்களையும் அரவணைத்துக் காத்தல், அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கேற்றல், அவர்களுக்கிடையே ஏற்படுகிற வழக்குகளை நடுநிலையோடு தீர்த்துவைத்தல் போன்றவையும் இப்பண்புநலனில் அடங்கும். இன்றும் சான்றோர் சமூகத்தினர் பெரும்பான்மையினராக இருக்கின்ற ஊர்களில், பறையர் சமூகத்தவர் போன்றவர்கள்மீது தாக்குதலோ ஒடுக்குமுறைகளோ நிகழ்வது இல்லை என்றே கூறலாம். விதிவிலக்காக ஒருசிலர் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டாலும், சான்றோர் சமூகத்திலுள்ள நடுநிலையாளர்கள் நிலைமை மோசமடையாமல் சீர்செய்துவிடுவதையும் காணலாம்.
அடுத்ததாக அரவிந்தன், “கடந்த ஆயிரம் ஆண்டுகளாக பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் சேர்ந்துகொண்டு இந்தியாவின் பெருவாரியான மக்களை ஒடுக்கி வைத்திருந்தது பற்றி அவர் (விவேகானந்தர்) விரிவாகப் பேசுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். விவேகானந்தருடைய கருத்து வட இந்தியாவின் சில பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்; அவர் பிறந்து வளர்ந்த வங்காள மாநிலத்துக்கேகூட பொருந்தாது. விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியை 17ஆம் நூற்றாண்டுவரை ‘பிரம்ம க்ஷத்திரியர்’ என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர். 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பிரம்ம க்ஷத்திரியர் அந்தஸ்தினைக் கைவிட்டுச் சூத்திர அந்தஸ்தோடு திருப்தியுற்றனர்.
எனவே, பெருவாரியான மக்களை ஒடுக்கிவைத்திருந்தனர் என்ற கூற்று விவேகானந்தரே கூறியிருந்தாலும், ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. ஐரோப்பிய, குறிப்பாக பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் எந்தெந்த விதங்களில் எல்லாம் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தையும் சீரழித்து ஓட்டாண்டிகளாக்கியது என்பதை முழுமையாக ஆராய்ந்தால்தான் இது குறித்த முழு உண்மை தெரியவரும். விவேகானந்தர் உலக அளவில் இந்தியர்களின் தன்மானத்தையும், தற்சார்பையும் உயர்த்திப்பிடித்தவர் என்ற அளவில் அவர் ஒரு போற்றத்தக்க ஆன்மீகவாதியே தவிர, வரலாற்று அறிஞர் அல்லர்.
வரலாற்று ஆய்வில் நம் தவறுகளுக்கும் தோல்விகளுக்குமான காரணங்களையும், பழியையும் பிறர்மீது சுமத்துமுன், ஆய்வுக் கண்ணோட்டத்துடன் தரவுகளைப் பரிசீலித்துவிட்டுக் குற்றம் சுமத்துவதுதான் சரியாக இருக்குமே தவிர, பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுவது முறையல்ல.