New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இசைபட வாழ்ந்த சான்றோர்: ஆபிரகாம் பண்டிதர் குறித்த சில விளக்கங்கள் -அ. கணேசன்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
இசைபட வாழ்ந்த சான்றோர்: ஆபிரகாம் பண்டிதர் குறித்த சில விளக்கங்கள் -அ. கணேசன்
Permalink  
 


இசைபட வாழ்ந்த சான்றோர்: ஆபிரகாம் பண்டிதர் குறித்த சில விளக்கங்கள் -அ. கணேசன்

"தமிழிசை: இசையாச் சிந்தனைகள் சில" என்ற தலைப்பில் அ.மார்க்ஸ் அவர்களின் கட்டுரை (புதிய பார்வை பிப்ரவரி 1-15 2007) வெளிவந்துள்ளது.

தஞ்சையில் வாழ்ந்தவரும், கர்ணாமிர்த சாகரம் என்ற பெயரில் இசைநூல் எழுதி வெளியிட்டவருமான ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) பற்றிய சில செய்திகளைக் கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல செய்திகள் தலைப்புக்குப் பொருத்தமின்மை கருதி அவரால் எழுதப்படாமல் விடுபட்டுள்ளன போலும். சான்றோர் குலத்தவரான (நாடார்) ஆபிரகாம் பண்டிதர் சிறந்த மருத்துவராகவும் இருந்தவர் ஆவார். பண்டிதர் என்ற பட்டப்பெயர் கூட அவருடைய குலப் பட்டப்பெயர் அல்ல. தமிழ்ப் பண்டிதர் என்பதையும், மருத்துவ நிபுணர் என்பதையும் குறிப்பதற்குச் சூட்டப்பட்ட பட்டமாகும். அவருடைய குடும்பத் தயாரிப்புகளான மருந்துகள் இன்றைக்கும் தஞ்சை பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மருத்துவத் துறைப் பிரிவுகளான எலும்பு முறிவுச் சிகிச்சை, வாதக் கோளாறுக்கான சிகிச்சை, வர்ம சிகிச்சை போன்றவற்றில் சான்றோர் குலத்தவர் தன்னிகர் அற்றவர்களாக - குறிப்பாகத் தென் மாவட்டங்களில் - இருப்பது தமிழகம் அறிந்த செய்தியே. ஆபிரகாம் பண்டிதரின் பூர்விகம் தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரை ஆகும். இவருடைய முன்னோர்கள் இந்து நாடார் ஆவர். இவருடைய பரம்பரையே சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற பரம்பரையாகும். மேலும், இவர் 1879ஆம் ஆண்டில் சுருளிமலைக்குச் சென்று நேரடியாக மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சுருளிமலையில் கருணாநந்த ரிஷி என்பவரிடம் உபதேசம் பெற்றுப் பல்வேறு சிகிச்சை முறைகளிலும் கைதேர்ந்தவராய் ஆனார். தஞ்சைக்குத் திரும்பி லேடி நேப்பியர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணிபுரிந்தார். இவருடைய மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்தார்.

1890ஆம் ஆண்டில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தஞ்சைப் புறநகரில் ஒரு நிலத்தை வாங்கி மூலிகைத் தோட்டம் வைத்து, அதற்குக் கருணாநந்தபுரம் என்று பெயரிட்டார். தஞ்சையில் தாம் வசித்த வீட்டில் வைத்திய சாலை ஒன்றை நிறுவினார். இங்கு தயாரிக்கப்பட்ட கோரோசனை மாத்திரைகள் உலகப்புகழ் பெற்றன. அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநர் சர். ஆர்தர் லாலி இங்கு வருகை புரிந்து இவரைப் பாராட்டியுள்ளார். 1909ஆம் ஆண்டு ராவ் சாஹிப் பட்டம் கிடைத்தது.

பண்டிதர் 1879ஆம் ஆண்டுக்கு முன்னரே திண்டுக்கல்லில் சடையாண்டி பட்டர் என்பவரிடம் இசை கற்றார். கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் போன்ற இசை மேதைகளுடன் விவாதிக்குமளவுக்கும், அடிப்படையான கேள்விகளை எழுப்புமளவுக்கும் இசை ஞானம் பெற்றுத் திகழ்ந்தார். இராமநாதபுரம் சேதுபதியைப் புரவலராகக் கொண்ட இசைச்சங்கம் தோற்றுவிக்கப்படக் காரணமாக இருந்தார். 1916ஆம் ஆண்டில் பரோடாவில் இசை குறித்த மாநாடு நடப்பதற்குப் பண்டிதர்தான் உந்து சக்தியாகத் திகழ்ந்தார். அம்மாநாட்டில் பண்டிதர் ஆய்வுக்கட்டுரை வாசித்ததோடு, பண்டிதரின் மகள் மரகதவல்லி அம்மாள் ஸ்வரங்கள் பற்றிய செயல்முறை விளக்கமளித்தார். பண்டிதரின் பேரன் தனபாண்டியன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

தமிழிசை தொடர்பான ஆய்வுகளிலும், பிரசாரங்களிலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு எவ்வாறு தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது என்பதையும், வேளாளர் சமூகத்தவரான விபுலானந்த அடிகளின் பங்களிப்பு அளவுக்கு மீறி முக்கியத்துவம் பெற்றுவருகிறது என்பதையும் அ. மார்க்ஸ் தமது கட்டுரையில் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். இதற்காக அவரைப் பாராட்டுகிற அதே வேளையில் ஒரு சிறிய திருத்தத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஆபிரகாம் பண்டிதர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறாமல் இந்து நாடாராகவே நீடித்திருந்தால்கூட இதே கதிதான் அவருக்கு நேர்ந்திருக்கும். தமிழ்ச் சமூக அடையாளங்கள் என்பவையே வேளாளரின் அடையாளங்கள்தாம் என்றோ, வேளாளர்களின் சமூகத் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களின் அடையாளங்கள்தாம் என்றோ கருதுகின்ற ஒரு மனநிலை சுமார் ஐந்து நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வருகிறது. தமிழ்ச் சைவம் என்பதே பிள்ளைமார் சைவம்தான் என்ற நிலை தோன்றிவிட்டது இதற்கு முக்கியமான காரணமாகும். இந்த நிலைக்கு நேர் எதிரான ஒரு நிலை பெளத்த மதம் தாக்குப்பிடித்து உயிர் வாழ்ந்து வருகிற இலங்கையில் இன்றும் நிலவி வருகிறது. சிங்கள பெளத்தத்தில் வேளாளச் சாதியான 'கோயிகமா' சாதியினர் நடுத்தர அந்தஸ்து உடைய சாதியினராகக் கருதப்படுகிறார்களே அல்லாது யாழ்ப்பாணப் பிள்ளைமார் போல உயர் சாதியினரரகக் கருதப்படுவதில்லை. சிங்கள பெளத்தர்களிடையே எல்லா சாதிகளும் நடைமுறையில் இருந்தாலும்கூட, யாழ்ப்பாணத் தமிழரிடையே இருப்பது போன்ற சாதிய உயர்வு மனப்பான்மைகளும், பிற சாதியினர் குறித்த ஏளன உணர்வுகளும் இல்லை.

இலங்கையில் இன்றைக்கு நிலவுகின்ற, சிங்களப் பேரினவாதம் என்று தமிழ்த் தேசியவாதிகளால் அழைக்கப்படுகின்ற ஒடுக்கு முறைகள்கூட ஆங்கிலேய ஆட்சியின் விளைவாகவும் ஆங்கிலக் கல்வியினாலும் உயர்வடைந்த யாழ்ப்பாணத் தமிழ் வர்க்கத்தவர்பால் அவ்வாறு உயர்வடையாத சிங்கள பெளத்தர்கள் கொண்ட குரோதத்தின் விளைவே ஆகும். பிரம்மஞான சபைத் தலைவர்களுள் ஒருவரான ஆல்காட் (இந்த ஆண்டு அவர் மரணமடைந்த நூறாவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது) அவர்கள் சிங்கள பெளத்தர்களுக்கு 130 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன அறிவுரை நாம் விவாதிக்கின்ற பொருளுடன் எவ்வளவு பொருந்திப் போகிறதென்று பாருங்கள். "பெளத்த மதம் என்ற சமயப் பெருமிதத்தில் திளைத்துக் கொண்டு உங்களைச் சுற்றி ஒரு குறுகிய வட்டம் போட்டுக் கொண்டு விடாதீர்கள். ஐரோப்பியக் கல்வியின் ஆக்கபூர்வமான அம்சங்களை, புதிய புதிய துறைகளின் ஞானத்தைத் தேடி அடையுங்கள்" என்று ஆல்காட் அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவலை - அறிவுரையைச் சிங்களர்கள் சரிவரப் பின்பற்றவில்லை என்பது வருத்தத்துடன் குறிப்பிடப்பட வேண்டிய உண்மையாகும்.

எனவே, சிங்களப் பேரினவாதம் என்று நாம் அழைக்கின்ற அடக்கு முறைக்குக்கூட, அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய யாழ்ப்பாண வேளாளர்பால் சிங்கள பெளத்தர் கொண்ட குரோத உணர்வும் ஓர் அடிப்படைக் காரணமாகும். ஒரு வகையில் தமிழ்நாட்டில் தோன்றிய பிராம்மணிய எதிர்ப்பு இயக்கங்களுடன் இதை ஒப்பிடலாம். கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனார் கதை இலங்கைத் தமிழரிடையே எந்த வித வரவேற்பையும் பெறமுடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று கலாநிதி க. கைலாசபதி அவர்கள் விளக்கியுள்ளார். யாழ்ப்பாண ராஜ்ஜியத்தில் 18ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரை வேளாளர்களின் ஆதிக்கம் நிலவிற்றே தவிர நந்தனார் ஒடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பிராம்மணர் ஆதிக்கம் நிலவவில்லை. எனவே, கோபாலகிருஷ்ண பாரதி கவிதையில் வெளிப்பட்ட பிராம்மணிய சனாதனக் கொடுமையாலும், பிராம்மண நில உடைமையாளர்களாலும் நந்தனாருக்கு விளைவிக்கப்பட்ட அநீதி குறித்த பச்சாதாப உணர்வு தமிழகத்தில் எழுந்தது போல யாழ்ப்பாண ராஜ்ஜியத்தின் மக்களிடையே எந்த ஒரு ஒத்திசைவையும் ஏற்படுத்தவில்லை.

ஆபிரகாம் பண்டிதர் கிறிஸ்தவராக இருந்தமையால்தான் அவர் புறக்கணிக்கப்பட்டார் என்பது சரியான வாதமாகத் தெரியவில்லை. முதல் தமிழ் நாவலாசிரியரான மாயூரம் முன்சீப் வேதநாயகம் 'பிள்ளை' ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவர் ஆவார். அவருடைய மதத்தின் காரணமாக அவர் இருட்டடிப்பு செய்யப்படவில்லையே - அது ஏன்? எனவே, ஆபிரகாம் பண்டிதரின் சாதியே முதன்மையான காரணம் என்பதை அ. மார்க்ஸ் உணர வேண்டும். முன்னரே அவர் உணர்ந்திருந்தாலும் அவர் அதனைத் தைரியமாகச் சொல்ல முன்வர வேண்டும்.

தமிழக வேளாளர் சமூகத்தவர் தமிழின அடையாளம் அனைத்தையும் தங்களுக்கும், தங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டவர்களும் மட்டுமே உரியனவாகக் காட்டிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆபிரகாம் பண்டிதர் போன்ற சான்றோர் சமூகத்தவரின் பணியையும் பங்களிப்பையும் அங்கீகரிப்பது இவர்களுக்கு என்றைக்குமே உவப்பானதாக இருந்ததில்லை. இது தீவிரமான ஆய்வுக்குரிய ஒரு விஷயம் ஆகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard