பரம் பொருளுக்கு உருவமில்லை, பெயரில்லை என்று எல்லாச் சமயங்களும் சொல்கின்றன. இந்து சமயத்தின் அடிப்படையும் அது தான். இறைவன் என்று ஆண்பால் பெயரால் சுட்டுகிறோம். ஆனால் அவன் ஆணும் பெண்ணும் அலியுமல்லாததோர் தாணு என்கிறார் தாயுமானவர். அது இருளன்று ஒளியன்று என நின்றதுவே என்கிறார் அருணகிரி.
என்கிறார் திருநாவுக்கரசர். இப்படி எல்லா வகையிலும் இல்லை இல்லை என்று எதிர்மறையாகவே வர்ணிக்கப்படும் பொருளை துவக்க நிலைச் சாதகர்கள் எப்படி மனதில் இருத்த முடியும்? அதற்காகத் தான் இறைவனுக்குப் பல உருவங்களை உருவாக்கி வணங்குகிறோம்.
ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
என்று மணிவாசகர் கூறியபடி, பல பெயர்களால் அவனது தோற்றச் சிறப்பையும் அருஞ் செயல்களையும் போற்றிப் புகழ்ந்து பாடுவதும் இந்து சமயத்துக்கே உள்ள தனிச் சிறப்பு.
இறைவனுக்குள்ள பல பெயர்களை நிரல் பட அமைத்து திருநாம மாலையாகத் தொடுப்பது ஒரு வகை. ஒவ்வொரு பெயருக்குப் பின்னரும் போற்றி அல்லது அது போன்ற ஒரு சொல்லை இணைத்துப் போற்றுவது மற்றொரு வகை. பின்னது மட்டுமே தற்போது அருச்சனை எனப்படுகிறது. திருநாம மாலையிலும் அருச்சனையிலும் வரும் பெயர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1 இறைவனின் தோற்றச் சிறப்புகளைக் கூறும் பெயர்கள் 2 பண்புச் சிறப்புகளைப் போற்றுபவை 3 இறைவன் செய்த அருஞ்செயல்களை வியந்து பாராட்டுபவை 4 இருப்பிடத்தை ஒட்டி ஏற்பட்ட பெயர்கள்
தாளி அறுகின் தாராய் போற்றி நீளொளி யாகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி இவை இறைவனின் தோற்றத்தை வருணிக்கின்றன.
புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி கருங்குரு விக்கன் றருளினை போற்றி இவை ஈசனின் திருவிளையாடல்களை நம் நினைவுக்குக் கொணர்கின்றன.
ஆரூ ரமர்ந்த அரசே போற்றி சீரார் திருவை யாறா போற்றி அண்ணா மலையெம் அண்ணா போற்றி இவை தேவதேவன் உவந்து வாழும் திருத்தலங்களை ஒட்டி ஏற்பட்ட பெயர்கள்.
மேலே கண்டவை மணிவாசகரின் போற்றித் திருவகவலிலிருந்து எடுக்கப்பட்டவை. இது 154 திருநாமங்கள் கொண்ட ஒரு அற்புதமான அருச்சனை. இதில் தான் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற புகழ்பெற்ற வரிகள் வருகின்றன.
அப்பரடிகளின் தேவாரத்தின் பெரும்பகுதி திருநாம மாலை தான். அவரது திருவாரூர்ப் போற்றித் திருத்தாண்டகத்திலும், கயிலை மலைப் போற்றித் திருத்தாண்டகத்திலும் இறைவனின் ஒவ்வொரு பெயருடனும் போற்றி என்ற சொல் இணைந்து வரும். இவை தவிர திருநாமங்களுடன் கண்டாய், காண், நீயே, போலும், கண்டேன் நானே என்ற சொல் இணைந்து வரும் பதிகங்கள் பல உண்டு. சில எடுத்துக் காட்டுகள் மட்டும் காண்போம்.
அப்பரடிகளின் பிற பாடல்களும் சம்பந்தர், சுந்தரர் பாடல்களும் இது போன்ற போற்றிச் சொற்கள் இல்லாமல் திருப்பெயர் மாலையாக உள்ளன. எடுத்துக் காட்டாக சம்பந்தர் தேவாரத்தில் முதல் பாடலில், தோடுடைய செவியன் விடையேறி தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப் பொடி பூசி உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த, அருள் செய்தவன் பிரமாபுரம் மேவிய பெம்மான் என்று இறைவனின் சிறப்புப் பெயர்கள் தொடுக்கப்பட்டுள்ளன.
தமிழின் மிகப் பழமையான திருநாம மாலையை பரிபாடலில் பல இடங்களில் காணலாம். எடுத்துக்காட்டுக்கு ஒன்று- தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ; அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ; அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;
நீண்ட தொடராக வரும் திருநாம மாலை ஒன்று திருமுருகாற்றுப்படையில் காணப்படுகிறது. நெடும்பெரும் சிமயத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ, ஆல்கெழு கடவுள் புதல்வ, மால்வரை மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே, வெற்றி வேல் போர் கொற்றவை சிறுவ, இழையணி சிறப்பிற் பழையோள் குழவி, வானோர் வணங்கு வில் தானைத் தலைவ, மாலை மார்ப, நூலறி புலவ, செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை, அறிந்தோர் சொன்மலை, மங்கையர் கணவ, மைந்தரேறே, வேல் கெழு தடக்கைச் சால் பெரும் செல்வ, குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ, பலர் புகழ் நன்மொழிப் புலவரேறே, அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக, நசையுநர்க்கு ஆர்த்தும் மிசை பேராள, வலந்தோர்க்களிக்கும் பொலம்பூட் சேஎய், மண்டமர் கடந்த நின் வென்றாடகலத்து பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள், பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள், சூர் மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி, போர் மிகு பொருந, குரிசல்.
படம் உதவிக்கு நன்றி: http://new-hdwallpaperz1.blogspot.com/2013/07/hindu-god-shri-ram-wallpapers.html
யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் தோத்திரம் இந்து சமய இலக்கியத்தின் மிகப் பழமையான அருச்சனை என்ற சிறப்பைப் பெறுகிறது. இறைவனின் ஒவ்வொரு பெயருடனும் நம என்ற இணைப்புச் சொல் கொண்ட மந்திரம் வேதத்தில் இது ஒன்றே. அதனால் இது நமகம் என்றும் அழைக்கப்படுகிறது.
ருத்ரனின் பல விதமான சிறப்புப் பெயர்களைக் கூறி ஒவ்வொன்றுடனும் நம என்று சொல்லப்படுகிறது. அப்படி 273 முறை நமஸ்காரம் செய்யும் இதில் 226வதாக வருவதுதான் நம சிவாய என்ற மந்திரம். மங்கலம் உடையாருக்கு வணக்கம் என்ற பொருளுடையது. இதற்கு அடுத்த மந்திரம் சிவதராய. மேலதிக மங்கலம் உடையாருக்கு வணக்கம் என்ற பொருள் படுவது.
இதில் ருத்ரனின் தோற்றத்தைக் குறிக்கும் பெயர்களாக வருபவை- தங்கக் கையர், கருங் கேசத்தர், ஆயிரம் கண்ணர், பூணூல் அணிந்தவர், தலைப்பாகை கொண்டவர், செம்மேனியர் என்று பல உள்ளன.
வாளேந்தியவர், அம்புக் கையர், அழகிய நாணேற்றிய வில்லினர், காலாட்படை தலைவர், எதிரிகளை குத்தித் துளைத்து அடித்து அழ வைக்கின்றவர் என்று அவரது போர்த்திறமையைப் புகழ்ந்து பேசும் நமகங்கள் பல.
துன்பம் துடைப்பவர், பாபத்தை அழிப்பவர், அருள் மழை பொழிபவர், இம்மை மறுமை இன்பம் தருபவர் என்ற பெயர்கள் அவரது உயர் பண்புகளைக் காட்டுகின்றன.
வில்லாளிகள், நாணேற்றுபவர்கள், நாணை இழுப்பவர்கள், அம்பு ஏந்தியவர்கள், குறி நோக்கி அம்பு எய்துபவர்கள், படை தலைவர்கள், எதிரியைக் கிழிப்பவர்கள் என்று அவர் பன்மையில் வணங்கப்படும்போது அவர் பல்லாயிரம் வடிவத்துடன் தோன்றுவதை அறிகிறோம்.
காலத்தால் மிகப் பழமையானது என்பதைத் தவிர, இந்த அருச்சனைக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை இது சொல்லும் முறை வித்தியாசமானது.
மணல் திட்டு, ஓடும் நீர் முதலான எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் என்று கூறாமல் மணல் திட்டே வணக்கம், ஓடும் நீரே வணக்கம், களர் நிலமே வணக்கம் என்று இவ்வகையில் சுக்கான் பூமி, மாட்டுக் கொட்டகை, வீடு, கட்டில், ஒலி, எதிரொலி என்று பல பொருள்களுக்கு வணக்கம் கூறுகிறது. பொருளுக்குள் இறைவன் மறைந்து இல்லை, பொருளே இறைவன் என்கிறது இது.
மந்திரியாகவும் அவைத் தலைவராகவும் விளங்குபவரும் அவரே. மற்றும் வணிகர், தச்சர், குயவர், விராதன் (புலையன்) என்று எல்லா வகை மனிதராகவும் அவரே காட்சி தருகிறார். குதிரை, நாய் முதலான மிருகங்களும் அவரே. இந்த எல்லா உயிர்களுக்கும் வணக்கம் தெரிவிப்பதிலிருந்து எல்லாமே இறைவனாகப் போற்றப்பட வேண்டியவை என்பது விளக்கப்படுகிறது.
கருங் கழுத்தர்- வெள்ளைக் கழுத்தர், சடையர்- மொட்டையர், மூத்தவர்- இளையவர், பச்சை இலை- காய்ந்த சருகு, மழைநீர்- மழையின்மை என்று ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலைகளையும் ருத்திரனாகக் கருதிப் போற்றும் மந்திரங்கள் சோதியனே- துன்னிருளே, சேயாய்- நணியானே என்ற மணிவாசகரின் வரிகளை நினைவூட்டுகின்றன.
எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் இறைவன் என்றால் நாம் அன்றாடம் கண்ணெதிரில் காண்போரும் தெய்வம் தானே. உரக்கக் கூவுபவர்களுக்கு வணக்கம், ஓடுபவருக்கு வணக்கம், உட்கார்ந்து இருப்பவர்களுக்கு வணக்கம், படுத்திருப்பவர்களுக்கு வணக்கம், தூங்குபவர்களுக்கு வணக்கம், விழித்திருப்பவர்களுக்கு வணக்கம், நிற்பவர்களுக்கு வணக்கம் என்று இறைவனின் வியாபகத் தன்மையை விதந்து ஓதுகிறது ருத்ரம்.
இறைவன் கெட்டவரிடத்தும் இருப்பான் அல்லவா? அதனால் ருத்ரம் அவனது உயர் பண்புகளைப் போற்றுவதோடு நிற்கவில்லை. தாழ்ந்ததாக நாம் கருதும் பண்புகளையும் கொண்டவன் இறைவன் என்கிறது. இது பிற அருச்சனைகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு.
திருடர்களின் தலைவருக்கு வணக்கம், கொள்ளையருக்கு வணக்கம், ஏமாற்றுபவருக்கு வணக்கம், பேராசைக்காரருக்கு வணக்கம் என்று நாம் சமூகத்தில் விரும்பத் தகாதவராகக் கருதுவோரையும் இறைவனாகவே காண்கிறது.
இதைப் படித்து விட்டுத் தான் பாரதி சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனச் சுருதி (வேதம்) சொல்லும் என்று பாடினார் போலும். வேறொரு பாடலில் ருத்ரத்தின் சாரத்தைப் பிழிந்து தமிழில் தருகிறார்.
சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்; சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்; வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர், வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;