New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... மேலும் சில விவரங்கள்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... மேலும் சில விவரங்கள்
Permalink  
 


 

இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... மேலும் சில விவரங்கள்

 

 

எஸ். இராமச்சந்திரன்

 

 

 

 

 

இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... - என்ற என்னுடைய கட்டுரை குறித்துக் கற்பக விநாயகம் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வெள்ளாரம் பறம்பில் காணப்படும் பாறைகள் சீனியைப் போன்று பளபளப்பதால் அப் பெயர் பெற்றிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீனிக்கல் என்ற வழக்கு குறித்த சொல்லாராய்ச்சியை முதன்மையாக வைத்து நான் இந்தக் கருத்தைத் தெரிவிக்கவில்லை1. சீனிக்கல் (Quartzite) என்பது வெப்பத் தன்மையைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், சூட்டினை அதிகரிக்கவும் முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட கல்லாகும். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் வல்லநாடு மலைத்தொடர்க் காட்டுப் பகுதியை ஒட்டி ஆழ்வார் கற்குளம் என்ற ஊர் அமைந்துள்ளது. இக் காட்டுப் பகுதியில் ஏராளமான இரும்பு உருக்கிய கழிவு (Iron Slag) காணப்படுகிறது. இப் பகுதியில் இரும்பு உருக்குவதற்கு இப் பறம்புகளில் காணப்படும் சீனிக்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரும்பை உருக்கி வார்க்கும்போது அடியில் பரப்பி வைக்கப்படும் மணலில் இச் சீனிக்கற்களையும் பொடித்துப் பரப்புவர். இதனைத் தற்கால உலோகவியல் நிபுணர்கள் Moulding Sand என்று குறிப்பிடுகின்றனர். சீனிக்கற்கள் மிகுந்த சூட்டிலும் கரைந்து விடாமல் தாக்குப் பிடிப்பதால் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன. ஆழ்வார் கற்குளம் என்ற ஊரின் பழம்பெயர் ஆழ்வார் கற்களம் என்பதாகும். கற்களம் என்பது கல்வெட்டு வழக்கில் கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட இடமாகும் (பக்கம் 163, தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, முதல் தொகுதி, பதிப்பு: சாந்தி சாதனா, சென்னை - 28, 2002). ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் கோயில் கோபுரத்தின் வட சுவரில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டில் இவ்வூர் "மேல் பிடாகைக் கற்களம்" என்று குறிப்பிடப்படுகிறது. இத்தகைய கற்களங்களில் வெட்டி எடுக்கப்பட்ட பாறைக் கற்களில் Quartzite, Pigmatite போன்ற கற்களும் செப்புக் கனிமம் உள்ள Malachite வகைக் கற்களும் அடங்கும்.

 

ஆழ்வார் திருநகரி, ஆதிச்சநல்லூர் போன்ற ஊர்களில் இரும்பு உருக்கி எடுக்கும் தொழில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது என்பது ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளால் தெளிவாக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, செம்பு தங்கம் போன்றவையும் சிறிய அளவில் உருக்கி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆழ்வார் திருநகரியின் பழம் பெயரான குருகூர் என்பது கூட உலைத்துருத்தி என்று பொருள்படும் குருகு என்ற சொல்லுடன் தொடர்புடையதாகலாம். முக்கூடற்பள்ளு என்ற 17ஆம் நூற்றாண்டு இலக்கியம் "சேர குலப் பத்தனார் தம் மாளிகைப் பூங்காட்டு வளமெல்லாம் களமர் உரை செய்வாரே" என்று குறிப்பிடுகிறது. சேர அரச குலத்தவர்க்கு நகை செய்து கொடுத்து வந்த பத்தர் (விஸ்வகர்மா இனத்தவர்)க்குரிய பூந்தோட்டத்துடன் (நந்தவனத்துடன்) கூடிய மாளிகை ஒன்று ஆழ்வார் திருநகரியில் இருந்ததாக இதற்கு உரை கூறப்படுவதுண்டு. ஆழ்வார் திருநகரி விஸ்வகர்ம சமூகத்தவரின் தலைநகராக இருந்து வந்ததாகவும், 20ஆம் நூற்றாண்டில் அவர்கள் பெருமளவில் ஏரலில் குடியேறிவிட்டதாகவும் கூறப்பட்டு வருகின்றன. இரும்பு உருக்குகின்ற தொழில் இப்போதும் கூடச் சிறிய அளவில் ஏரல் பகுதியில் நடைபெற்று வருகிறது. ஒழுக்கு அறல் அல்லது ஒழுக்கறை எனப்படும், ஆற்றுப்படுகையில் காணப்படும் கருநிற மணலை எடுத்து உருக்கி இரும்புத் தூள் தயார் செய்து பற்ற வைப்பதற்கு அதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மண் வெட்டிக் குழைச்சியைத் தகட்டில் பொருத்திப் பற்ற வைப்பதற்கு இத் தூளைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு இரும்பு உருக்குகின்ற தொழில்நுட்பத்திற்கு மிகுந்த வெப்பம் தேவைப்படும். எனவே, வெப்பத்தை அதிகரிப்பதற்கும், சூடு நீடித்து நிற்கச் செய்வதற்கும் சீனிக்கற்களைப் பயன்படுத்தி இருக்க வாய்ப்புண்டு. உலை சூட்டினால் வெடித்து விடாமல் பாதுகாப்பதற்கு வசதியாகக் கொல்லர் உலைகளின் உட்பகுதியிலும் சீனிக்கல் தூள் பொடித்துப் பூசப்பட்டிருக்கலாம். இதே போன்றுதான், வெடிகுண்டு பயன்படுத்தப்படுகின்ற பீரங்கி போன்ற ஆயுதங்களின் குழல் பகுதிகள் சூட்டினையும் அதிர்வினையும் தாங்கிக் கொள்வதற்கு வசதியாகச் சிப்பம் செய்யும் பொருளாகச் சீனிக்கல் தூள் பயன்பட்டிருக்கலாம். சீனிக்கல்லுக்குக் கடினத்தன்மை அதிகம் உண்டு. மோஹர் என்பவரால் நிர்ணயிக்கப்பட்ட கடினத்தன்மை அளவுக் குறியீட்டின்படி (Mohr's Scale of Hardness) வைரம் 10; மரகதம் 9; மாணிக்கம் 8; சீனிக்கல் (Quartzite) 7 என்ற மதிப்பில் அளவிடப்பட்டுள்ளன.

 

திருவைகுண்டம் வட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் சற்றேறக்குறைய 140 ஏக்கர் பரப்பளவுடைய பறம்பு இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு அண்மையில் நடைபெற்ற அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களையும் இப் பறம்பினையும் ஆய்வு செய்த விஞ்ஞானிகளான திரு. எஸ். பத்ரிநாராயணன் (மேனாள் இயக்குநர், இந்திய மண்ணியல் பரப்பாய்வுத் துறை) மற்றும் திரு. சசிசேகரன் (விஞ்ஞானி, தேசிய ஆழ்கடல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், சென்னை) ஆகியோருடனான கலந்துரையாடலில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் என்னால் சில கருதுகோள்களை முன்வைக்க முடியும். இப் பகுதியில் பாஷாணத்துடன் (Arsenic) கலந்த நிலையில் பலவித உலோகப் படிவுகள் காணப்படுகின்றன. இவற்றை மூலக் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வாழ்ந்த மக்கள் அறிந்திருந்தனர். இத் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள் அக்காலத் தச்சர், கொல்லர் சமூகத்தவராகவே இருக்க முடியும்2. தூத்துக்குடி மாவட்டத்தில் கொல்லன்பறம்பு, தட்டார்பாறை போன்ற பெயர்களில் வழங்கப்படும் இடங்களிலெல்லாம் மூலக் கனிமத்திலிருந்து உலோகத் தாதுக்களைப் பிரித்தெடுக்கும் பணி முற்காலத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். ஓட்டப்பிடாரத்துக்கு அருகிலுள்ள இராஜாவின் கோவில் என்ற பெயர் கொண்ட சிற்றூரில் உள்ள பழங்காலச் சிவன் கோயிலில் காணப்படும் துண்டுக் கல்வெட்டுகளில் 'திவட்டாப்பாறை' என்ற ஊர் குறிப்பிடப்படுகிறது. திவட்டா என்ற சொல் த்வஷ்டா என்ற சமஸ்கிருதச் சொல்லின் திரிபாகும். தட்டார் (பொற்கொல்லர்) என்பதுதான் இதன் பொருள். இது தற்போதைய தட்டார்பாறை ஊரையே குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. முற்காலத்தில் இவ்வூரில் உள்ள பாறைகளிலிருந்து பொன் உருக்கி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது திண்ணம்.

 

இந்த அடிப்படையில் பார்க்கும்போது வீரன் சுந்தரலிங்கனின் சொந்த ஊர்களான வெள்ளாரம், கவுனகிரி ஆகிய ஊர்களிலும் இத்தகைய பணிகள் பெருமளவில் நடந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. மேற்குறித்த இரண்டு ஊர்ப் பெயர்களுமே இத்தகைய அரிய தாதுக்களை குறிப்பிடும் பெயர்களாக உள்ளன. ஆரம் என்ற சொல் அஞ்சன பாஷாணத்தையோ அஞ்சனக் கல்லையோ குறிக்கும். கவுனி என்ற சொல் குதிரைப்பல் பாஷாணம் எனப் பொருள்படும். குதிரைப்பல் பாஷாணம் என்பது Realgar Arsenic ஆகும். இப் பாஷாணத்துடன் ஈயம் கலந்து காணப்படுவதுண்டு எனத் தெரிகிறது. குதிரைப்பல் பாஷாணம் வாண வேடிக்கைகளின் போது பல வித வர்ண ஜாலங்களைத் தோற்றுவிக்கும் ஒரு ரசாயனம் ஆகும். அஞ்சனக் கல் என்பது Antimony Sulphide எனப்படும் Antimony-யும் கந்தகப் படிவும் கலந்து காணப்படும் கல்லாகும். Antimony என்பது இரு உலோகங்களை ஒன்றுடன் ஒன்று கலப்பதற்குப் பயன்படும் வினையூக்கி ஆகும். கல்லீயம், ஈயம், கந்தகம் ஆகியன வெடிகுண்டு தயாரிப்பின்போது, பல்வேறு கட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் தாதுக்களாகும். சீனி என்ற சொல்லுக்குப் பித்தளை மணல் என்று தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. ஆதிச்சநல்லூர்ப் பறம்பிலிருந்து செம்புத் தாது முற்காலத்தில் உருக்கி எடுக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. பித்தளை என்பது செம்பும், துத்தநாகமும் சேர்ந்த கலவையாகும். எனவே, இப்பகுதியிலிருந்த சீனிக்கற்களுடன் கலந்திருந்த பல்வேறு வகைப் பாஷாணங்களையும் உலோகத் தாதுக்களையும் பிரித்தெடுக்கும் பணி இப்பகுதியைச் சேர்ந்த கொல்லர் சமூகத்தவரால் நீண்ட காலமாக செய்யப்பட்டு வந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது. இன்றைய கண்ணோட்டத்தில் மூலக் கனிமத்திலிருந்து இத் தாதுக்களைப் பிரித்தெடுக்கும் பணிக்கு, இறுதியாகக் கிடைக்கின்ற பொருளை விடச் செலவு அதிகமாகும். தமிழகத்தின் பல பகுதிகளில் சாதாரணமாகக் காணப்படுகின்ற செம்புரைக்கல் அல்லது செம்புராங்கல் என்று சொல்லப்படுகின்ற Laterite கற்களை Iron Aluminium Silicate என்று வேதியியல் அடிப்படையில் வகைப்படுத்தலாம். ஆனால், செம்புரைக் கற்களிலிலிருந்து இரும்பையும், அலுமினியத்தையும் பிரித்தெடுப்பது என்பது மிகுந்த செலவு பிடிக்கிற ஒரு தொழில்நுட்பமாகும். தாம் வாழ்கின்ற ஊர்களோடும், தம் ஊரின் முதன்மையான நிறுவனமாக விளங்கிய கோயில்களோடும் மானியதாரர்கள் என்ற அளவில் தம் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த விஸ்வகர்ம சமூகத்தவருக்கும், அவ்வக் காலத்திய ஆளும் வர்க்கத்திற்கும் இடையே நிலவிய உற்பத்தி உறவுகளில் இத்தகைய உற்பத்திச் செலவுகள் பிரதானமான தடைக்கற்களாக இருந்ததில்லை. எனவே, நம்முடைய பாரம்பரியத் தொழில்நுட்ப அறிவின் மேம்பாடு குறித்து வரலாற்று அறிஞர்கள் கூட ஐயுறுவதற்கு இது ஒரு முதன்மையான காரணமாகும்.

 

நவீன ஆயுதங்களும் வெடிமருந்துகளும் டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் போன்ற ஐரோப்பியர்கள் மூலமே நம்மிடையே புழக்கத்தில் வந்திருக்க வாய்ப்புகள் அதிகமாக இருந்தன என்று கற்பக விநாயகம் குறிப்பிட்டுள்ளார். வெடிமருந்து என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிமுகமாகி விட்டது. இது தொடக்கத்தில் சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம். இருப்பினும் சால்ட் பீட்டர் போன்ற சில வெடியுப்புகள் வெடித்தல் என்னும் செயலை நிகழ்த்தும் பொட்டாஷியம் நைட்ரேட் அடங்கிய தாதுப்புகள் இமயமலைப் பகுதியிலும், ஜம்மு பகுதியிலும் கிடைக்கின்றன எனத் தெரிகிறது. இத்தகைய இறக்குமதிப் பொருள்களை மட்டும் வெளியிலிருந்து வரவழைத்து உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே தமிழகத்திலும் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதற்கான தொழில்நுட்ப அறிவு பரவலாக வெளிப்பட்டு விடாமல் சில குலக் குழுக்களிடம் மட்டும் பாரம்பரிய அறிவாகத் தேங்கி நின்றுவிட்டது. புறநானூறு 19ஆம் பாடலில் "இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய பெருங்கல் அடார்" என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. "பெரும்புலியைப் படுக்கும் (வீழ்த்தும்) வேட்டுவன் எந்திரமறிந்து கொளுத்திய பெரிய கல்லை உடைய இடியை ஒக்கும் அடார்" என்று பழைய உரை பொருள் கூறுகிறது (பக்கம் 50, புறநானூறு மூலமும் பழைய உரையும், உ.வே.சா. நூலகப் பதிப்பு, சென்னை - 41, 1971). இன்றும் இந்த அடார் என்ற வெடிகுண்டு வட ஆர்க்காடு மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்கு வேட்டுவக் குடியினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஐரோப்பியர்கள் தொடர்பினால்தான் நம்மிடையே நவீன ஆயுதங்கள் புழங்கத் தொடங்கின என்று எண்ணுவது தவறாகும்.

 

கி.பி. 1368-70இல் விஜயநகர அரசர் குமார கம்பணருக்கும், மதுரை சுல்தான்களுக்கும் இடையே நடந்த போரில் அக்கினி எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என கங்கா தேவியின் 'மதுரா விஜயம்' குறிப்பிடுகிறது. அக்கினி எந்திரம் என்பது பீரங்கியையே குறிப்பிடும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இனி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாலிக் இ மைதான் என்ற பீஜப்பூர் பீரங்கியும், தஞ்சை அரண்மனை பீரங்கி மேடையில் வைக்கப்பட்டுள்ள ராஜகோபால பீரங்கியும் இந்தியாவிலேயே இந்தியத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டவை என்பது ஐயத்து இடமற்ற உண்மையாகும். குறிப்பாகத் தஞ்சை பீரங்கியை இந்தியத் தொழில்நுட்பக் கழக (IIT) அறிஞர்கள் ஆராய்ந்து வெல்டிங் முறை இதில் கையாளப்படவில்லை என்றும், ஒன்றன் மேல் ஒன்றாகப் பட்டை பட்டையாக அடுக்கி உருக்கி இணைத்து உருவாக்கப்பட்ட பீரங்கி இதுவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

1799ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதியன்று மேஜர் பானர்மன் பாளையக்காரர்களை எச்சரித்து வெளியிட்ட செப்புப்பட்டய விளம்பரத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

 

யினிமேல்ப்பட்டு யாதாமொரு பாளையகாரனும் மேற்படி கோட்டை கொத்தள முபையங்கள் போட்டாலும் பீரங்கி ரேக்குலோ சரபோகி மற்றதுகள் வைத்திருந்தாலு மித்தியாதிகளைச் சம்பாதித்தாலு மவர்கள் கும்பினியாருடைய ஆதரவுகளையு மிழந்து அவர்களுடைய பாளைய பட்டுகளையும் கும்பினியார் கட்டிக் கொண்டு அந்த பாளையக்காரனையும் கும்பினியாருக்கு தோணினபடி தெண்டிப்பார்கள் பாளையபட்டுகளிலுள்ள சேர்வைக்காரர் சேவுகர் காவல்காரர் குடியான பேர்க ளிந்தவித மனுடர்களில் யாதாமொரு மனுடர்களானாலும் துப்பாக்கி யாதிய கல்வெடி திரிவெடி ஈட்டி வல்லையங்கள் பிடித்த பேர்களைக் கண்டாலு மிதுகளை யொளித்து வைத்திருந்த பேர்களைக் கண்டாலு மவர்களை யுயிர்ச்சேதம் பண்ணுவார்கள்.

 

மேற்குறிப்பிட்டுள்ள விளம்பரத்தில் துப்பாக்கி ஆதியாக உள்ள கல்வெடி, திரிவெடி என்பவை குறிப்பிடப்பட்டுள்ளன. பீரங்கி முதலிய ஆயுதங்களை வைத்திருத்தல், சம்பாதித்தல் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஆங்கிலேயர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டவை என்று பொருள் கொள்வது அபத்தமானதாகும். தூத்துக்குடியிலிருந்த பரதவர் ஜாதித் தலைவர் ஊமைத்துரை தலைமையிலான புரட்சிப் படை அணியினருக்குத் துப்பாக்கிகள், பீரங்கிகள், வெடிமருந்து முதலியவற்றை வழங்கினார் எனத் தெளிவாக ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி ஆவணங்கள் குறிப்பிடுகின்றன (Page 201, South Indian Rebellion, K. Rajayyan, Rao and Raghavan Publishers, Mysore-4, 1971).31800-1801ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடித் துறைமுகம் முழுமையாக ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, புரட்சி அணியினர் இலங்கையுடனும், சோழ மண்டலக் கடற்கரையிலிருந்த பிற பாளையக்காரர்களுடனும் தூத்துக்குடித் துறைமுகத்தின் மூலம் பொருள் பரிவர்த்தனை முதலிய தொடர்புகளை ஓரளவாகிலும் தமது அதிகாரத்தில் வைத்துப் பராமரித்து வந்தனர். டச்சு (ஹாலந்து)க் கிழக்கிந்தியக் கும்பினியின் கப்பல்களும், கிடங்குகளும் தூத்துக்குடியில் இருந்தன. ஆயினும் அவர்கள் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியார்க்கும் பாளையக்காரர்களுக்கும் இடையே நடந்த போரில் எந்த அணியின் பக்கமும் சேராமல் நடுநிலை வகித்து விட்டனர் என ஆங்கிலேயரின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. தூத்துக்குடிப் பரதவர்கள் கோவாவில் ஓரளவுக்கு வலிமையுடன் இருந்த போர்ச்சுகீசியர்களுடன் கத்தோலிக்க சமய உணர்வின் அடிப்படையில் நல்லிணக்கம் கொண்டிருந்தார்கள் என்றாலும் கூட, போர்ச்சுகீசியர்கள் இப்போர்களில் மறைமுகமாகக் கூட எந்த விதப் பங்கும் வகித்ததாகத் தெரியவில்லை. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலிருந்த பிரான்ஸ் நாட்டவர்கள் பாளையக்காரர்களுக்கு ஓரளவு உதவி புரிந்திருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளையில் தொழில்நுட்ப அறிவைப் பொருத்தவரை நாம் பிறரைச் சார்ந்தே வாழ்ந்தோம், போரிட்டோம் என்று எண்ணுவது சரியன்று.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... மேலும் சில விவரங்கள்
Permalink  
 


18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை ஐரோப்பியர்கள் தென்னிந்திய எ·குத் தொழில்நுட்பத்தை வியந்து பாராட்டி எழுதியுள்ளனர். எ·கு என்ற சொல் சங்க இலக்கியத்தில் ஆயுதப் பொதுப் பெயராக மட்டுமின்றி, பருத்தியிலிருந்து கொட்டையை நீக்க (Ginning)ப் பயன்படுத்தப்படும் வில்லைக் குறிக்கவும் வழங்கியுள்ளது. எ·கு என்ற சொல்லே எ·குதல், எகிறுதல் என்ற சொற்களோடு தொடர்புடையதாகும். வில் போன்று வளைகின்ற, துள்ளுகின்ற இரும்பே எ·கு ஆகும். உக்குதல், உட்குதல் என்ற சொற்களும் இப் பொருளோடு தொடர்புடையவையே. ஹள கன்னடத்தில் உக்கு என்றும், துளு மொழியில் உங்கிலு என்றும் இத் தொடர்பில் சொற்கள் வழக்கிலுள்ளன. கர்நாடகத்தில் குதிரைமுக மலைப் பகுதியில் கிடைத்த இரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட எ·கு அல்லது உக்கு wooks என ஆங்கிலேயரால் குறிப்பிடப்பட்டது. இச் சொல் 18ஆம் நூற்றாண்டில் Wootz என ஆங்கிலேயரால் வழங்கப்பட்டது. டமாஸ்கஸ் வாள்கள் எனக் குறிப்பிடப்படும் இடைக்காலப் போர் ஆயுதங்கள் எல்லாம் தென்னிந்திய உக்கு கொண்டு உருவாக்கப்பட்டவையே என உலோகவியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனவே, நம்முடைய தொழில்நுட்பப் பாரம்பரியம் மிகவும் பழமையானது, செழுமையானது என்பதில் ஐயமில்லை. நம்முடைய தொழில்நுட்பக் கல்வி முறை என்பது பாரம்பரிய அடிப்படையில் கற்பிக்கப்பட்டு வந்ததாலும், சந்தைப் பொருளாதாரத் தொடர்புகளுக்கு இடமளிக்காத விதத்தில் இந்தியச் சமூக அமைப்பு ஊர், வட்டாரம் சார்ந்த தொழில் உறவுக் கட்டுமானம் உடையதாக இருந்ததாலும் கைவினைஞர்களின் இயக்கம் பெருமளவுக்கு முடக்கப்பட்ட நிலையிலிருந்தது.

 

கி.பி. 17-18ஆம் நூற்றாண்டுகளில் கிராமத் தலையாரி, மணியக்காரர் (பட்டாமணியம்), கணக்கப் பிள்ளை என்ற அடிமட்ட நிர்வாக அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பாளையக்காரர்களின் ஆட்சி முறையில் தச்சர், கொல்லர், நெசவாளர் போன்ற தொழிற் சமூகத்தவர் மானியதாரர்களாக நீடித்தமையால் வரையறுக்கப்பட்ட உற்பத்தி உறவுகள் நிலவின. உழவர் சமூகத்தவரான மள்ளர் போன்றோர் நிலமற்ற அடிமட்ட உழைப்பாளி வர்க்கத்தவராகவே நீண்ட நெடுங்காலம் இருந்து வந்தனர். சமூக அமைப்பு பெருமளவு தேக்க நிலையில் இருந்தாலும் கூட, அந்த அமைப்பில் சில ஆக்கபூர்வமான கூறுகளும் உள்ளடங்கி இருந்தன. குடிமராமத்து போன்ற ஆக்கப்பணிகள், பஞ்ச காலத்தில் அனைவரும் 'வெட்டி' எனப்படும் கட்டாய உடல் உழைப்பை மேற்கொள்ளுதல் போன்ற தார்மிக அடிப்படையிலான சில ஒப்பந்தச் செயல்பாடுகள் நிகழ்ந்து வந்ததால் சமூக அமைப்புக் கட்டுமானம் தளர்ச்சியின்றி நீடித்து வந்தது. இந்த அமைப்பில், நிலவிய ஏற்றத்தாழ்வுகளை அநீதி என்ற பிரக்ஞையே இன்றி ஏற்றுக்கொண்டு கிராம சமூகம் முடங்கிக் கிடந்தது என்பதும் உண்மையே.4 ஆயினும், நம் ஆய்வுப் பொருளுடன் தொடர்புடைய ஒரு முதன்மையான விஷயம் குறித்துதான் நாம் இங்கு சிந்திக்க வேண்டியிருக்கிறது. பழைய யுகம் ஒன்றின் பிரதிநிதியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகம் ஒரு யுகசந்தியில் எவ்வாறு திசை தெரியாமல் தடுமாறிச் சீரழிந்து விடுகிறது என்பதற்கு 18ஆம் நூற்றாண்டின் இந்திய சமூக வரலாறே ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். வியாபார யுகம் என்று சொல்லத்தக்க புதிய யுகத்தின் பிரதிநிதிகளான ஐரோப்பியக் கும்பினிகள் பிற நாடுகளின் உற்பத்தி சக்திகளைக் கைப்பற்றுதல், அவற்றைத் தமது நாட்டின் வளர்ச்சி என்ற வேள்வியில் ஆகுதியாக்குதல், பரந்து பட்ட வாணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் உலக அளவிலான ஆதிக்க சக்தியாக உருவாகுதல் ஆகிய தமது நோக்கங்களைத் திட்டமிட்டுத் திறம்பட நிறைவேற்றி வந்தன. அதே நேரத்தில் இந்திய சமூகமோ வாணிகத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் சார்ந்த முதலாளித்துவ சமூகமாக முன்னேற்றமடையாமல், கனிந்து அழுகிப்போன நிலையில் அடைக்கப்பட்டதால் ஆவி குடிபோன நிலப் பிரபுத்துவ சமூகமாகவே நீடித்து வந்தது. சிதறல்களாக கிடைக்கின்ற சில குறிப்புகளை வைத்துப் பார்க்கும்போது 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியக் கிழக்கிந்தியக் கும்பினியார் நம் நாட்டுக் கைவினைஞர்களின் தொழில்நுட்பத் திறனைத் தகுந்த சன்மானம் வழங்குவதன் மூலம் விலைக்கு வாங்கியிருக்கிறது என்று தெரிய வருகிறது.

 

கி.பி. 1660-70ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த மதராஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆவணங்கள் சிலவற்றில் ஒரு புதிரான குறிப்பு இடம்பெற்றுள்ளது. (இவ்வாவணங்கள் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணக் காப்பகத் துறையினரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.) ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் கப்பல்களில் Brahmanyee Cabin எனப்படும் பணிக்கூடம் இருந்ததாகத் தெரிய வருகிறது. இது விஸ்வ பிராம்மணர் எனப்பட்ட தச்சர், கொல்லர் சமூகத்தவரின் அறையாகவே இருக்க வேண்டும். இரு விதப் பணிகளில் வல்லமை பெற்ற விஸ்வ பிராம்மணர்கள் அக் கப்பல்களில் பணியில் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என நாம் ஊகிக்கலாம். முதலாவதாக, கப்பலில் பழுது ஏற்பட்டால் பழுது பார்ப்பதற்குரிய தச்சுப் பணித் தொழில்நுட்பம் அறிந்தோர். இரண்டாவதாக, கப்பல்களில் உள்ள பீரங்கிகளுக்கு வெடி மருந்து தயாரித்துப் பாதுகாத்து வைக்கின்ற தொழில்நுட்பம் அறிந்தோர். அக் காலத்தில் பெரும்பாலான ஐரோப்பியக் கிழகிந்தியக் கும்பினிகளின் கப்பல்களில் ஈயப் பாளங்கள் (Lead Ingots) கொண்டு வரப்பட்டுள்ளன. ஈயம் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்குப் பயன்படும் என்பதோடு, குறைந்த அளவு சூட்டிலேயே உருகு நிலையை அடைந்து விடும் என்பதால், கப்பல்களில் தீ விபத்து ஏற்படாத அளவு பாதுகாப்புடன் ஈயத்தை உருக்கிப் பயன்படுத்திட இயலும். இவ்வாறு கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல் குறித்த தொழில்நுட்பமாகட்டும், வெடிமருந்து தயாரிக்கின்ற தொழில்நுட்பமாகட்டும், தொடக்க காலத்தில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி நம் நாட்டு விஸ்வகர்ம சமூகத்தவரையே சார்ந்திருந்தது என்பது வெளிப்படையான ஓர் உண்மையாகும்.

 

கி.பி. 1639ஆம் ஆண்டு சென்னப்ப நாயக்கன் பட்டினமாகிய சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கட்டுமானப் பணி தொடங்கிற்று. அப்போது, வெடிமருந்துக் கிடங்குகள் உருவாக்குவதற்கும், வெடிமருந்து தயாரிப்பதற்கும் நாக பட்டன் என்ற விஸ்வகர்ம சமூகத்தைச் சேர்ந்த தமிழரே ஆங்கிலேயருக்கு உதவி புரிந்துள்ளார்.5 தமிழர்கள் வாழ்ந்த Black Town பகுதியில் (20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப் பகுதியின் பெயர் ஜார்ஜ் டவுன் என்று மாற்றப்பட்டது) விஸ்வகர்ம சமூகத்தவருக்குரிய காளிகாம்பாள் கோயில் கட்டுவிக்கப்பட்டது. இக் கோயிலில் கி.பி. 1677ஆம் ஆண்டில் மராட்டிய வீரர் சிவாஜி வழிபட்டுச் சென்றுள்ளார் என்று சென்னை பற்றி ஆங்கிலேயர் எழுதி வைத்துள்ள பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியார் 17ஆம் நூற்றாண்டில் உள்நாட்டு விஸ்வ பிராம்மணர்களைச் சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தமையால் தமக்கு உதவி புரிந்த விஸ்வ பிராம்மணர் சமூகத்தவர் சிலருக்குப் பெருமளவில் சலுகைகள் வழங்கி வந்தனர் எனத் தெரிகிறது. இதே போன்று, 17-18ஆம் நூற்றாண்டுகளில் சென்னையிலிருந்த ஆங்கிலேயக் கும்பினியார் மிகவும் அச்சத்துடன் பார்த்த ஒரு சமூகத்தவர் யாரெனில் கரையார் அல்லது கரையாள்வார் எனப்பட்ட மீகாமன் (கப்பலோட்டி) சமூகத்தவராவர். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் கப்பல்களைத் தாக்கிக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்று விடுகிற ஒரு கூட்டத்தவராக ஆங்கிலேயரின் ஆவணங்களில் குறிப்பிடப்படும் இச் சமூகத்தவர் உண்மையிலேயே உள்நாட்டு மன்னர்களின் கப்பற்படை வீரர்களாக இருந்தவர்கள் ஆவர். கரையார் சமூகத்தவரைப் பற்றிய குறிப்பிடத்தக்க வரலாற்றுச் செய்தி ஒன்றுள்ளது. கி.பி. 1620ஆம் ஆண்டில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் டென்மார்க் நாட்டுக் கிழக்கிந்தியக் கும்பினியாரிடத்து துபாஷாக (மொழிபெயர்ப்பாளராக)ப் பணிபுரிந்தவரும், கரையார் சமூகத்தைச் சேர்ந்தவருமான காலிங்கராயப் பிள்ளை என்பவரின் வம்சத்தவரிடமிருந்து 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஆங்கிலேயர்கள் 'கப்பல் சாத்திரம்' என்ற கையெழுத்துப் பிரதியைச் சேகரித்தனர். தமிழ்நாடு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தினரால் 1950ஆம் ஆண்டில் டி.பி. பழனியப்பப் பிள்ளை என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இந்நூல் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்நூலில் சோதிடத்தைப் பற்றிய குறிப்புகளே மிகுதியாக உள்ளன. 'கப்பலுக்குப் பாய்மரம் அளவு', 'நங்கூரம் வகை' போன்ற சில குறிப்புகளை அடுத்து 'இங்கிலீஷ் கப்பல் அளவு' என்ற தலைப்பில் சில விவரங்களைக் குறிப்பிடுவதோடு இந்நூல் முடிந்து விடுகிறது. இது கிடைத்த போதே அரைகுறையாகத்தான் கிடைத்ததா, டென்மார்க் நாட்டின் ஆவணக் காப்பகங்களிலோ, தரங்கம்பாடியை மையமாகக் கொண்டு செயல்பட்ட ஜெர்மானிய லுத்தரன் திருச்சபை போதகர்களால் அவர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டு ஜெர்மன் நாட்டின் ஹாலே நகரம் போன்ற இடங்களில் பாதுகாக்கப்படும் சுவடிகளிலோ இதன் பிரதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. இதன் முழுமையான பிரதி கிடைத்திருந்தால் இப் பொருள் குறித்த ஒரு பெரும் புதையலே நமக்குக் கிடைத்திருக்கும். கப்பல் கட்டும் தொழிலிலும், திரை கடல் ஓடி திரவியம் தேடுவதிலும் ஒரு காலகட்டம் வரை மிகுந்த முன்னேற்றமான நிலையிலிருந்த நம் நாடு 17-18ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு உலகளாவிய வாணிகப் போட்டியை தாக்குப் பிடித்து நிலை நிற்க முடியாமல் போனதற்கான காரணங்களுள் காலனி ஆதிக்கச் சுரண்டல், பிரித்தாளும் சூழ்ச்சி, உற்பத்தி சக்திகளை உறிஞ்சி சீரணமாக்கிக் கொள்ளுதல் போன்ற ஆங்கிலேயரின் தந்திரமான செயல்பாடுகள் முதன்மையானவை ஆகும். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் என்ற கப்பல் கம்பனியைத் தொடங்கிய வ.உ.சிதம்பரனார் குறுகிய காலத்தில் தாழ்வுற்று வறுமை மிஞ்சி நின்ற நிலையிலிருந்தே நாம் இந்த வீழ்ச்சியின் பிரம்மாண்ட நிலையைப் புரிந்து கொள்ள முடியும்.

 

தூத்துக்குடியில் சிதம்பரனாருடைய தலைமையில் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காங்கிரஸ் இயக்கம் அந்நியத் துணி பகிஷ்காரத்தை நடத்திற்று. தூத்துக்குடியைப் பொருத்தவரை இது ஒரு முதன்மையான வரலாற்று நிகழ்வாகும். ஏனென்றால், பிஷப் ராபர்ட் கால்டுவெல் தமது History of Tinnevelly என்ற நூலில் தூத்துக்குடியைப் பருத்தி வாணிகத்தின் தலைநகரம் (Emporium of Cotton Trade) என்று குறிப்பிடுகிறார்.6 தூத்துக்குடிப் பகுதிக் கரிசல் காட்டில் விளைந்த பருத்தி கருங்கண்ணி என்ற பெயருடையது. இது உலக அளவில் தரம் வாய்ந்த பருத்தியாக முற்காலத்தில் போற்றப்பட்டது. 'கோவில்பட்டிக் கருங்கண்ணி' என்றே இது அண்மைக் காலம் வரை பெயர் பெற்றிருந்தது. அதிக மழை பெய்தாலும், மழையே பெய்யால் விட்டாலும் தாக்குப் பிடித்து வளரக்கூடிய தாவர வகை கருங்கண்ணிப் பருத்தியாகும். கி.பி. 1782ஆம் ஆண்டிலேயே தூத்துக்குடியிலிருந்த டச்சுக்காரர்கள் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மனுடன் துணி ஏற்றுமதி தொடர்பாக ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்கள். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நம் நாட்டின் பருத்தித் துணிகள் மிகுந்த தரம் வாய்ந்தவையாக இருந்ததால் விலை மதிப்பிற்குரிய ஏற்றுமதிப் பொருள்களாக விளங்கின. ஆங்கிலேயர்கள் இப் பகுதியிலிருந்து கொட்டை நீக்கப்பட்ட பருத்தியை ஏகபோகமாகக் கொள்முதல் செய்து அவர்களுடைய நாட்டிற்கு ஏற்றுமதி செய்து அங்கே நூலாக நூற்றுத் துணியாக நெய்து மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வந்து 175 சதவீத லாபம் வைத்து விற்றுக் கொள்ளை லாபம் அடைந்தனர். நம் நாட்டு நெசவாளர்கள் பட்டினி கிடந்து செத்தனர். தொழிற் புரட்சியின் விளைவாக இங்கிலாந்தில் தொழில்கள் அனைத்தும் இயந்திர மயமாகிக் கொண்டிருந்தமையால், நீரின் விசை, குதிரையைப் பயன்படுத்துதல், பல் சக்கரம் கொண்டு சுழற்சி இயக்கம் மூலம் தொழிலை எளிதாகச் செய்தல் போன்றவற்றைத் தம் நாட்டில் அறிமுகப்படுத்தி நவீன மயமாக்கித் தொழில் வளர்ச்சியை உருவாக்கினர். அதே வேளையில் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த நமது நாட்டின் உள்நாட்டுத் தொழில்கள் முற்றிலும் நசித்துப் போயின. நம் நாடு விவசாய நாடாகவே நீடித்தது. கி.பி. 19ஆம் நூற்றாண்டில் நீராவி விசையால் இயந்திரங்களை இயக்க முடியும் எனக் கண்டறியப்பட்ட பின், நீராவிக் கப்பல்கள் ஞாலம் நடுங்கும் வண்ணம் வலம் வரத் தொடங்கின. 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு, இருப்புப் பாதைகளில் ராட்சதத் தொடர் வண்டிகள் விரைந்து செல்லத் தொடங்கின. இவற்றின் மூலமாக சரக்குப் பரிவர்த்தனை, கும்பினிப் படைகளின் இயக்கம் ஆகியவை விரைவாக நிகழத் தொடங்கின. இந்தியாவின் அறிவாளி வர்க்கமும், நிர்வாகப் பணியாளர்களும் ஆங்கிலேயரின் கூலிப் பட்டாளமாக மாறிப் போயினர். இந்தியர்களின் உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட செல்வம் இங்கிலாந்தை வளப்படுத்திற்று.

 

இத்தகைய செயல்பாடுகளின் எதிர் விளைவே, காங்கிரஸ் இயக்கம் மேற்கொண்ட அந்நியத் துணி பகிஷ்காரம் ஆகும். சுதேசித் தொழில்களின் முடக்கம், காலனி ஆதிக்கச் சுரண்டல், பிரித்தாளும் சூழ்ச்சி ஆகியவை எந்த அளவுக்கு இந்தியச் சமூகத்தின் பின் தங்கிய நிலைக்குக் காரணமாக இருந்தன என்பதை காரல் மார்க்ஸ் போன்ற 19ஆம் நூற்றாண்டைய சிந்தனையாளர்கள் புரிந்து கொண்டிருந்தனர். கி.பி. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரான லாலா லஜபதி ராய், England's debt to India என்ற நூலில் (இந்நூல் அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்டது) ஆங்கிலேயரின் பருத்தி வாணிகக் கொள்ளை பற்றிய பல விவரங்களை ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

வீர பாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னாலே "வானம் பொழிகிறது பூமி விளைகிறது மன்னவன் காணிக்கு ஏது கிஸ்தி" என்று முழங்கிய அவருடைய சுதந்திர ஆவேசம் நம் மனக்கண் முன் சித்திரமாக நிற்கிறது. ஆனால், அப் பகுதிக் கரிசல் காட்டில் விளைந்த பருத்தி எந்த அளவிற்குக் கட்டபொம்மனின் போராட்டத்திற்குக் காரணமாக இருந்தது என்பது யாருக்கும் தெரிவதில்லை. பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகிலுள்ள பொதியில்புத்தூர் (புதியம்புத்தூர்) போன்ற பல ஊர்கள் முதன்மையான நெசவுத் தொழில் மையங்களாக விளங்கியுள்ளன. நாலாட்டின்புதூர் என்ற ஓர் ஊர் கோவில்பட்டிக்கு அருகிலுள்ளது. இவ்வூரின் பெயரே பருத்தியிலிருந்து கொட்டை நீக்கும் Ginning தொழில் தொடர்புடையதாகும். தூத்துக்குடித் துறைமுகத்தின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்திப் பீலிகளின் (Cotton Bales) மேல் நான்கு என்ற எண்ணும், ஹார்ட்டீன் (இதய) வடிவமும், ஹார்ட்டீன் வடிவத்துக்குள் United East India Company என்பதன் சுருக்கமான UEIC என்ற எழுத்துகளும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் முத்திரையாகப் பதிக்கப்பட்டன. இத்தகைய நாலாட்டீன் சின்னம் பதித்த காசுகளும் முத்திரைகளும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து நாணயவியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய முத்திரைகள் நம் நாட்டுப் பருத்தியைப் பயன்படுத்தி 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை ஆங்கிலேயர்கள் அடித்து வந்த கொள்ளையை நமக்கு நினைவூட்டும் ராஜ முத்திரைகளாக நின்று நிலவி வருகின்றன.

 

இத்தகைய விவரங்கள் இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றிய ஆய்வுடன் எந்த வகையில் தொடர்புடையவை என்ற கேள்வி எழலாம். நம் நாட்டின் கைத்தொழில்கள் மூலமாகத் தயாரிக்கப்பட்ட பொருள்கள் மிகுந்த தரமுடையவையாக இருந்தன. ஆனால், வியாபாரக் கண்ணோட்டத்தில் பெருமளவில் உற்பத்தி செய்து சந்தையைக் கைப்பற்றுகிற செயல்திறனும் அதற்குரிய உளவியல் அடிப்படையிலான உந்துதலும் நம்மிடையே இல்லை. தனித்தன்மையும், நுணுக்கமான கைவினை வேலைப்பாடுகளும் நமது உற்பத்திப் பொருள்களின் அடையாளச் சின்னங்களாக இருந்தன. பரந்துபட்ட அளவிலான நுகர்வுக்கேற்ற உற்பத்தி, விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்ட வாணிகம் ஆகியவை ஐரோப்பிய உற்பத்திப் பொருள்களின் அடையாள முத்திரைகளாக இருந்தன. தொழில் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட இயந்திர மயமாக்கலின் மூலம் இங்கிலாந்தில் லங்காஷயர் போன்ற நகரங்களில் பெரிய நூற்பாலைகளும் நெசவாலைகளும் தோன்றின. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இந்தியாவிலேயே நூற்பு - நெசவாலைகள் தோன்றின என்றாலும்கூட, அவையும் பின்னி போன்ற கிழக்கிந்தியக் கும்பினியின் பங்குதாரர்கள் அல்லது ஆல்காட் போன்ற ஜெர்மானியர்களால் பெரும் லாபம் ஈட்ட வேண்டும் என்ற வாணிக நோக்கில் நிறுவப்பட்ட ஆலைகளே ஆகும்.

 

இனி, நம் ஆய்வின் முதன்மையான பகுதியாகிய ராக்கெட் தயாரிப்பு குறித்த விவாதத்துக்கு வருவோம். ராக்கெட் என்ற ஆங்கிலச் சொல் ராக்கெட்டோ என்ற இத்தாலியச் சொல்லின் திரிபாகும். இத்தாலிய மொழியில் தக்ளி என்ற நூற்புக் கருவியையே இச் சொல் குறிக்கும். வடிவ ஒப்புமையினால் இச் சொல் விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டைக் குறிக்கத் தொடங்கிற்று. இந்திய மொழிகளில் வாணம் அல்லது பாணம் என்ற சொல்லும் அஸ்திரம், எந்திரம் போன்ற சொற்களும் மிகப் பழங்காலத்திலிருந்தே வழங்கி வருகின்றன. துப்பாக்கி என்ற சொல் போர்ச்சுகீசிய சொல்லாகக் கருதப்படுகிறது. பந்தூக் என்ற பெயர் துப்பாக்கிக்கு உரிய பழம் பெயராகும். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் விஜய நகர அரசின் தலைநகரமாகிய ஹம்பியில் மகாநவமி எனப்படும் ஆயுத பூஜைத் திருவிழாவின் நிறைவு நாளான விஜய தசமியன்று பலவிதமான வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டன என்று வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள் மூலம் தெரிய வருகிறது. வாணப்பட்டறை எனப்பட்ட தொழில்கூடத்தில் வாணங்கள் தயாரித்த கர்ப்பூரச் செட்டிகள் பற்றிய ஆவணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. கி.பி. 1716ஆம் ஆண்டைச் சேர்ந்த திருவரங்கம் செப்பேடு மதுரை அரசரான விஜயரங்க சொக்கநாத நாயக்கன் நவராத்திரி கொலு வீற்றிருந்தபோது நங்கபுரத்தைச் சேர்ந்த வாணபட்டறை கர்ப்பூரச் செட்டிகள் வாண வேடிக்கைகள் செய்து காட்டினர் என்றும், அதைக் கண்டு மகிழ்ச்சியுற்ற அரசர் அவர்களுக்கு நிலக் கொடை வழங்கினார் என்றும் இக் கொடைக்குக் கைமாறாக அரண்மணைக்கு வெடியுப்பு 100 மணங்கு எடையளவுக்கு கர்ப்பூரச் செட்டிகள் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடுகிறது. தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இச் செப்பேடு பற்றிய விவரம் 'நங்கவரம் செப்பேடு' என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பதிப்பிக்கப்பட்டுள்ளது (தமிழகச் செப்பேடுகள் தொகுதி 1 பதிப்பாசிரியர்: தி.ஸ்ரீ. ஸ்ரீதர், உதவிப் பதிப்பாசிரியர்: சு. இராஜகோபால், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2005). வாணப்பட்டறை என்ற தொடரில் இடம் பெற்றுள்ள பட்டறை என்ற சொல் மிகப் பழமையானதாகும். கொல்லுத் தொழிலில் முதன்மையாகப் பயன்படுகின்ற அடைகல்லினைப் பட்டடை என்று குறிப்பிடுவர். திருக்குறளில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது (குறள்: 821). காலப்போக்கில் அனைத்துத் தொழிற்கூடங்களையும் பட்டடை, பட்டறை என்ற சொல்லாலும், தொழிற்சாதியினரைப் பட்டறையார் என்ற சொல்லாலும் குறிப்பிடுகின்ற வழக்கம் ஏற்பட்டது. வாணங்கள் செய்யப்படுகின்ற வாணப்பட்டறை ஆங்கிலத்தில் பேட்டரி என 17ஆம் நூற்றாண்டில் வழங்கத்தொடங்கிற்று. கி.பி. 18ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் கேரளத்தின் வயநாடு பகுதியில் திப்பு சுல்தான் நிறுவிய ஆயுதக் கூடம் சுல்தான் பேட்டரி என வழங்கப்பட்டது இதற்குச் சான்றாகும்.

 

17ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மதுரை அரசர் திருமலை நாயக்கரின் தளவாயான ராமப்பையனுக்கும் ராமநாதபுரம் சேதுபதிக்கும் இடையே நடந்த போரில் ராமபாணம் என்ற பீரங்கி பயன்படுத்தப்பட்டதாக 'ராமப்பையன் அம்மானை' குறிப்பிடுகிறது. இதே போன்று 17ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி மற்றும் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி ஆகிய காலகட்டங்களில் தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசர்கள் ஏகோஜி, முதல் சரபோஜி ஆகிய மராட்டிய மன்னர்களால் 'ஏகரணம்' என்ற பெயரிலும் 'வெடிச்சரபோகி' என்ற பெயரிலும் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என இராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனைச் சுவர் ஓவியம் மற்றும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகக் குறிப்புகள் ஆகியவற்றால் தெரிய வருகின்றது. ஏகரணம் என்ற பெயர் ஏகோஜியின் போர்க்கருவி என்றும், ஒப்பற்ற போர்க்கருவி என்றும் இரு பொருள்படும் வகையில் சூட்டப்பட்டுள்ள பெயராகும். வெடிச்சரபோகி என்பது சரபோஜி மன்னருக்குரிய பீரங்கி என்றும் வெடிச்சரம் (சரம் என்றால் அம்பு என்று பொருள்படும்) ஏந்திய வாகனம் (Bogie) என்றும் இரு பொருள்படும் வகையில் சூட்டப்பட்டுள்ள பெயராகும். இவையெல்லாம் உள்நாட்டுத் தயாரிப்புகளே என்பதில் ஐயமில்லை. வெடிச்சரபோகியின் வளர்ச்சியடைந்த நிலைதான் ராக்கெட் எனச் சொல்லப்படுகின்ற ஏவுகணையாகும். 18ஆம் நூற்றாண்டைய ஆவணங்களையும், சுவடிகளையும், சேகரித்து ஆய்வு செய்வதோடு அக்கால மக்களின் வழக்காற்று எச்சங்களாக நிலவுகின்ற பல விவரங்களையும் சேகரித்து ஆய்வு செய்ய வேண்டிய மிகக் கடினமான ஒரு பொறுப்பு வரலாற்று ஆய்வாளர்களுக்கு உள்ளது. இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வியறிவு குறித்த ஆய்வின் இன்றைய நிலவரம் இதுதான்.

 

அடிக்குறிப்புகள்

 

[1] சீனி என இன்று நாம் குறிப்பிடும் அஸ்கா சர்க்கரை ஒரிசா மாநிலம் கஞ்ஜம் பகுதியில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பப்படி தயாரிக்கப்படும் சர்க்கரை வகையாகும். கரும்பு என்பது சீன நாட்டிலிருந்து இறக்குமதியான ஒரு தாவரம் என்று கருதப்படுகிறது. எனவே, கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையைச் சீனி என்று குறிப்பிடுவது வழக்கம். இச் சீனி சற்றே பழுப்புக் கலந்த வெள்ளை நிறமுடைய சர்க்கரை ஆகும். சீனப்படிக்காரம் அல்லது சீனக்காரம் (Alum) போன்று காணப்படுவதால் Quartzite வகைக் கற்களைச் சீனிக்கல் என்று வழங்கியிருக்கலாம். சீனக் காரத்தில் அலுமினியம் தாது அடங்கியுள்ளது. ஆனால் சீனி அவரைக்காய், சீனிக் கிழங்கு என்பன போன்ற சொல் வழக்குகள் சர்க்கரை போன்று இனிப்பவை என்பதைத் தவிர வேறு விசேடப் பொருள் கொள்வதற்குரியவை அல்ல.

 

[2] சங்க காலத்தில் பாண்டியர்களின் கோநகராக இருந்த கொற்கையில் தச்சர், கொல்லர் சமூகத்தவர் பேரளவில் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. கொற்கை என்ற பெயரே, கொல்லுத் தொழிலாளர் இருக்கை எனப் பொருள்படக்கூடும். சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை "பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகு அரியணை ஏறிய வெற்றிவேற் செழியன் கொற்கையில் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று நங்கைக்குக் கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்தான்" எனக் குறிப்பிடுகிறது. கொற்கையில் ஆயிரக்கணக்கான பொற்கொல்லர்கள் வாழ்ந்தனர் என நாம் உய்த்துணர முடிகிறது.

 

[3] ஊமைத்துரை, மருது சகோதரர்கள் போன்றோர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியாரால் வேட்டையாடப்பட்டு வந்த நிலையில் - 1801ஆம் ஆண்டில் - பரதவர் ஜாதித் தலைவர் தொன் கபிரியேல் தக்ரூஸ் வாஸ் கோம்ஸ் ஆங்கிலேயர்கள் கண்ணில் அகப்படாமல் தலைமறைவாகி விட்டார். இவருடன் பரதவர் சாதியின் அடைப்பனார் பதவி வகித்த ஹென்றி லெயோன் என்கிற இன்பகவிராயரும் தலைமறைவாகி விட்டார். இருவரும் இலங்கை சென்றிருந்ததாக ஊகிப்பதற்குரிய ஆதாரங்கள் ஹென்றி லெயோன் அவர்களின் சில தனிப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. 1804ஆம் ஆண்டில் தொன் கபிரியேல் மணப்பாடு நகரில் இருப்பதாக அறிந்த திருநெல்வேலி கலெக்டர் கொக்ரேன் (இவரது பெயரில்தான் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள இடம் கொக்ரகுளம் என அழைக்கப்படுகிறது) ஒரு கடிதம் எழுதித் தமது நம்பிக்கைக்குரியவர்கள் மூலம் தொன் கபிரியேல் வசம் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்தார். அக் கடிதம் தற்போது தொன் கபிரியேல் வம்சத்தைச் சேர்ந்தவரும், தூத்துக்குடி கிரகோப் தெருவில் வசிப்பவருமான திரு. பெர்க்மான்ஸ் மோத்தா அவர்களிடம் உள்ளது. தொன் கபிரியேல் அவர்களின் ஆளுயர வடிவத்தில் அமைந்த கான்வாஸ் ஓவியம் திரு. பெர்க்மான்ஸ் மோத்தாவின் வீட்டில் உள்ளது. தொன் கபிரியேல் 1808ஆம் ஆண்டில் இறந்தார். அவருடைய கல்லறைக் கல்வெட்டு தூத்துக்குடி ஒர்னல்லோஸ் பள்ளிக்கூட வளாகத்தில் உள்ளது. அக் கல்வெட்டு போர்ச்சுகீஸ், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. 1808ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தொன் கபிரியேலின் மகன் தொன் கஸ்பார் அந்தோணி தக்ரூஸ் வாஸ் கொரைராவுக்கு ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி தூத்துக்குடிப் பரதவர் சாதித் தலைமை அதிகாரம் (சன்னது) வழங்கிற்று. தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெருவைச் சார்ந்துள்ள பீட்டர் கோயில் சந்தில் வசிக்கும் திரு. செல்வராஜ் மிராந்தா அவர்கள் உதவியுடன் மேற்குறித்த ஓவியம், கல்வெட்டு, ஆவணங்கள் ஆகியவை என்னால் பார்வையிடப்பட்டன. கலெக்டர் கொக்ரேனின் கடிதம் முதலிய ஆவணங்கள் வரலாற்று ஆவணங்களில் இன்னமும் பதிவு செய்யப்படவோ, பதிப்பிக்கப்படவோ இல்லை.

 

[4] இந்திய நாடு சுதந்திரம் அடைந்து விட்டதாக சுதந்திரத்திற்குப் பல ஆண்டுகள் முன்பாகவே களியாட்டமிட்ட சுப்பிரமணிய பாரதியார் சுதந்திரம் பற்றிய தமது பாடலுக்குச் 'சுதந்திரப் பள்ளு' என்றே பெயரிட்டார். "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று" என்று தொடங்கும் அப் பாடலில் அடிமை இந்தியர்களாலேயே அடிமைகளாக நடத்தப்பட்ட மள்ளர் சமூகத்தவர் "நாமிருக்கும் நாடு நமதென்பது அறிவோம் அது நமக்கே உரிமையாம் என்பதறிவோம் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்" என்று பாடுவதாகப் பாரதியார் எழுதியுள்ளார்.

 

[5] கடலில் காம்பஸ் எனப்படும் திசைகாட்டும் கருவி சரியாகச் செயல்படாத போது திசையறிவதற்காக Brahmini Kite எனப்படும் செம்பருந்து பயன்படுத்தப்படுவது வழக்கம் என்றும் 'பிராமணி' என்ற சொல் இத்தகைய பருந்துகளைக் குறிப்பிட்டிருக்கலாம் என்றும் திரு. சசிசேகரன் (விஞ்ஞானி, தேசிய ஆழ்கடல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், சென்னை) கருத்துத் தெரிவிக்கிறார். இருப்பினும் பிராம்மணர்களை 'பிராமணி' என அழைக்கிற இலங்கைக் கரையார் வழக்கின் அடிப்படையிலும், விஸ்வ பிராம்மணர் என விஸ்வகர்ம சமூகத்தவர் குறிப்பிடப்படுகிற மரபின் அடிப்படையிலும் இது விஸ்வகர்ம சமூகத்தவரையே குறிக்கும் எனக் கருதுகிறேன். விஸ்வகர்ம சமூகத்தவர் 'பட்டன்' என்ற சாதிப் பட்டத்தைச் சூட்டிக் கொண்டனர் என்பதற்குக் கல்வெட்டுகளிலும் ஆதாரமுள்ளது. கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கழுகுமலைச் சமணப் பள்ளிக் கல்வெட்டு அப் பள்ளியில் பட்டன் சுந்தரனான நெற்சுர நாட்டுப் பெருங்கொல்லன் என்ற விஸ்வகர்ம சமூகத்தவர் முதன்மையான பொறுப்பிலிருந்த செய்தியைக் குறிப்பிடுகிறது. 1640ஆம் ஆண்டில் நாக பட்டன் என்ற விஸ்வகர்ம சமூகத்தவர் ஆங்கிலேயருக்கு வெடி மருந்து தயாரித்து வழங்கிய வரலாறு பற்றி திரு. கே.ஆர்.ஏ. நரசய்யா அவர்கள் என்னிடம் தெரிவித்தார்.

 

[6] தூத்துக்குடி என்ற பெயரே பஞ்சு எனப் பொருள்படும் 'தூதி' என்ற தெலுங்குச் சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம். தூத்துக்குடி என்பது பழமையான பெயர் அன்று. திருமந்திர நகர் என்பதே இதன் பழம் பெயராகும். டாலமி என்ற நிலநூல் வல்லுனர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சூசிக்குரை என்ற பெயரில் குறிப்பிட்டுள்ள ஊர் தூத்துக்குடியாக இருக்கலாமெனச் சிலர் தவறாக முடிவு செய்து எழுதியுள்ளனர். சூசிக்குரை என்ற கிரேக்க உச்சரிப்பின் தமிழ் வடிவம் எது எனத் தெரியவில்லை. ஆயினும் அவ்வூர் திருக்குறுங்குடி அருகிலுள்ள மலைப்பகுதிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் இருந்திருக்க வேண்டும்.

 

maanilavan@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard