ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்றும்போது, அல்லது எதிர்க்கும்போது அதன் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக்கொள்ளாமல் இருப்பதென்பது ஓர் முதிர்ச்சியான நிலை. தன் வாழ்நாள் முழுக்க நாராயண குரு கற்பித்தது அதைத்தான். நான் அந்த மரபைச் சேர்ந்தவனாக என்னை உணர்வதனாலேயே பல விஷயங்களில் எனக்கு தெளிவு கிடைத்தது.
ஆனால் பொதுவாக அரசியல் களங்களில் அது நிகழ்வதில்லை. வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. எளிதாக அதை பரப்ப முடிகிறது. ஆகவே அது மிக முக்கியமான அரசியல் ஆயுதம். அதைத்தான் ஃபாஸிஸம் என்கிறோம்
இவ்வறு வெறுப்பை உருவாக்கும்போது நாம் எதிரீடுகளை உருவாக்குகிறோம். நம்முடையது முழுக்க முழுக்க சரி என்றும் எதிர் தரப்பு முழுக்க முழுக்க தவறு என்றும் நம்ப ஆரம்பிக்கிறோம். எதிர் தரப்பை குறுக்கி சுருக்கி எளிமையான ஒரு கருத்தாக ஆக்கிக் கொண்டு அதற்கேற்ப நம்மையும் ஓர் எளிய தரப்பாக ஆக்கிக் கொள்கிறோம். இதை தவிர்ப்பதற்கு இன்றியமையாத விவாதங்கள் எதுவுமே நிகழாமல் ஆகின்றன. எதிர் தரப்புடன் விவாதத்துக்கே இடமில்லாத நிலையை ஒரு கட்டத்தில் நாம் அடைகிறோம்.
தமிழில் மொழி சார்ந்த விவாதங்களில் இந்த நிலை உருவானது ஒரு துரதிருஷ்ட வசமான வரலாற்றுத் திருப்பம். நேற்று நான் பெர்க்கிலி பல்கலையில் பேரா ஜார்ஜ் எல் ட்டை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். தமிழை ஆய்வுசெய்வதற்கு சம்ஸ்கிருதம் இன்றி இயலாது என்ற தன் தரப்பை மிக வலுவாக அவர் சொன்னார். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழாய்வாளன் தமிழின் பெரும்பகுதியை இழந்துவிடுகிறான். தமிழும் சம்ஸ்கிருதமும் நெடுங்காலம் ஒன்றை ஒன்று உண்டு வளர்ந்தவை. தமிழறிர்கஞளுக்கு இருக்கும் சம்ஸ்கிருத வெறுப்பு தமிழாய்வுகளை எப்படி முடக்கியிருக்கிறதோ அதேபோல இன்றைய சம்ஸ்கிருத அறிஞர்களுக்கு பிற மொழிகளைப்பற்றி ஏதும் தெரியாது என்பதும் பெரிய தேக்க நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது என்றார்.
அந்த நிலை எப்படி மாறியது? பிறரைப்போல நான் அதற்கு உடனே ஒரு சதிக்கோட்பாடைச் சொல்ல மாட்டேன். அதற்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் சம்ஸ்கிருதமும் தமிழும் சீரான முறையில் உரையாடி வளர்ந்தன என்பதைக் காண்கிறோம். அப்போது தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையே முரண்பாடும் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் திராவிட சிசு தமிழ்ஞான சம்பந்தன் என்றுமே தமிழுக்கு அரணாக சம்ஸ்கிருதத்தை பார்ப்பவராகவே இருந்திருக்கிறார்.
ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டின் தமிழகம் மீது மாலிக் காபூரின் படையெடுப்பு நிகழ்ந்தது. பேரரசுகள் சிதறின. அதன்பின் நூறுவருடம் உதிரி தளகர்த்தர்களின் அராஜக ஆட்சி. குமார கம்பணன் மதுரையை கைப்பற்றி மதுரை ஆலயத்தை திருப்பிக் கட்டி மீண்டும் ஒரு தொடக்கத்தை உருவாக்கினான். அதன்பின் மதுரை தஞ்சை செஞ்சியில் நாயக்கர் ஆட்ச்சி. இக்காலகட்டத்தில் தென்னகத்தில் உள்ள எல்லா பேராலயங்களும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டன. ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டன. சந்தைகள் அமைந்தன.சாலைகள் நீண்டன. இன்றைய தமிழகம் உருவாகி வந்தது. ஆனால் இவர்கள் பெரும்பாலும் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் மொழி தெலுங்கு. அவர்கள் போற்றி வளர்த்தது சம்ஸ்கிருதத்தை. தமிழை நம்பி வாழ்ந்த கவிராயர் குலங்கள் மெல்ல மெல்ல அன்னியப்பட்டன. பேரிலக்கியங்கள் உருவாகாமலாயின. தமிழின் வளர்ச்சி தேங்கியது
இதை ஒட்டி ஒரு வகை சம்ஸ்கிருத மேலாதிக்கம் உருவாகியது. பதினெட்டாம் நூற்றாண்டு ஆனபோது தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. சம்ஸ்கிருதம் பேணப்பட்டு அரசின், மதத்தின் மொழியாக விளங்கியது. தமிழை பழிக்கவும் சம்ச்கிருதத்தை போற்றவும் கூடிய மனநிலைகள் ஓங்கி இருந்தன. மேலும் நாயக்கர் காலமும் சரி , அதன் பின் வந்த ஆங்கில ஆட்சியும் சரி பிராமணர்களை பெரிதும் போற்றி வளர்த்தவை. பிராமணர்களில் ஆதிக்கவாதிகள் தங்கள் மொழியாக சம்ஸ்கிருதத்தை எண்ணினார்கள். தமிழை புறக்கணிக்கவும் எள்ளி நகையாடவும் அவர்களில் பலர் முயன்றார்கள்.
இந்த இழிநிலையில் இருந்து தமிழ் மீண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான். அதற்கு சைவ மடங்கள் முன்னோடி பங்களிப்பாற்றின. கிட்டத்தட்ட வழக்கொழிந்துபோன தமிழிலக்கியக் கல்வியை அவைதான் விடாப்பிடியாகப் பேணி வளர்த்தன. நூல்களை தக்கவைத்தன. அங்கிருந்து மீண்டும் தமிழ் முளைத்து எழுந்தது.
இக்காலகட்டத்தில் தமிழின் தனித்தன்மை, தொன்மை, இலக்கிய வளம் ஆகியவற்றை விவாதித்து நிறுவ வேண்டியிருந்தது. தமிழ் சம்ஸ்கிருதத்தைச் சாராமல் இயங்கக்கூடியது, அது சம்ஸ்கிருதத்தின் அடிமை அல்ல என்பதை பேசிப்பேசி நிலைநாட்ட வேண்டியிருந்தது. அந்த விவாதம் நூறாண்டு நீடித்தது. அதன் சம்ஸ்கிருத தரப்பாக இங்கே பேசியவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள். ஆகவேதான் பிராமண மொழி என்ற அடையாளம் தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதம் மேல் விழுந்தது.
இருநூறு வருட இடைவெளி என்பது எந்தப் பண்பாட்டுக்கும் மிகப்பெரிய சோதனைதான். தமிழ் வளர்ச்சியில் உருவான அந்த இடைவெளியால் தமிழ்நூல்கள் பல மறைந்தன. தமிழின் செவ்வியல் மரபு அறுபட்டது. தமிழ் மொழியில் அறிவுத்தள விவாதங்கள் நிகாது போனமையால் மெல்லமெல்ல தமிழின் சொல்வளம் மறக்கப்பட்டு சம்ஸ்கிருதக் கலப்பு மிகுந்தது. அதன் விளைவே மணிப்பிரவாளம் போன்ற கலவை மொழி.
இந்த வீழ்ழ்சியில் இருந்து தமிழை மீட்டது தமிழிய இயக்கம்தான். தமிழிய இயக்கம் என்று நாம் இன்று சொல்வது பலதளங்களில் நிகழ்ந்த ஒரு ஒட்டுமொத்த அறிவியக்கத்தைத்தான். கடந்த இருநூறு வருடங்களில் தமிழ்நாட்டில் நடந்த ஆகப்பெரிய அறிவியக்கம் என்பது தமிழிய இயக்கமே. தமிழின் தொல்நூல்களை பதிப்பித்தல் , அவற்றை ஆராய்ந்து தமிழின் தொல்மரபை நிலைநாட்டல், தமிழின் தனித்துவத்தை மறுபடியும் கண்டடைந்து நிலைநாட்டுதல் ஆகியவை ஒரு தளத்தில் நிகழ்ந்தன. இந்த இயக்கத்தை நாம் தனித்தமிழ் இயக்கம் என்று சொல்கிறோம்.
இரண்டாவதாக தமிழின் தொன்மையான இசைமரபை மீட்டுருவாக்கம் செய்தல் முக்கியமான கவனம் பெற்றது. அதை தமிழிசை இயக்கம் என்று சொல்கிறோம். மூன்றாவதாக தமிழை முறைப்படி கற்பதற்கான கல்விமுறைகளை உருவாக்குதல். அதை தமிழ்க்கல்வி இயக்கம் என்கிஓம். இம்மூன்றும் இணைந்ததே தமிழிய இயக்கம்.
இந்த தமிழிய இயக்கத்தில் பிராமணர்களின் பங்கை எவரும் மறுத்துவிட முடியாது. உ.வே.சாமிநாதய்யர் இல்லையேல் தமிழ் நூல்கள் அழிந்திருக்கும். அவரது மாணவர்களான அனந்தராம அய்யர், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்களின் பங்களிப்பும் சாதாரணமானதல்ல. பரிதிமாற்கலைஞர், பி.டி.ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்கள் இவ்வியக்கத்தில் பெரும் பணியாற்றியவர்கள்.
தமிழிய இயக்கம் தமிழை மீட்டமைக்கும் வேகத்தில் சம்ஸ்கிருதத்துக்கு எதிரானதாக ஆனது. நடைமுறையில் அதில் பிராமண எதிர்ப்பும் கலந்து கொண்டது. அதற்கான சமூகக் காரணங்கள் அன்று இருந்தன.
பிராமணர்கள் வெள்ளைய அரசில் எல்லா முக்கிய பதவிகளையும் வகித்த காலம் அது. ஒரு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் எந்த குழுவும் செய்வதைப்போல அவர்கள் அந்த அதிகாரத்தை பிறர் எய்த அனுமதிக்கவில்லை. இதற்கு எதிராக முதல் கசப்பும் எதிர்ப்பும் கேரளத்தில் , இன்னும் சொல்லப்போனால் நாயர் சாதியில்தான், உருவாகியது. காரணம் கிறித்தவ இயக்கத்தின் கல்விப்பணியை பயன்படுத்திக்கொண்டு கல்விகற்று வந்த நாயர்கள் அரச பதவிகளை நாடி பிராமணர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள்.
ஆரம்பகாலத்தில் இவ்வாறு பிராமணர்களால் வாய்ப்பு பறிக்கப்பட்டவர்கள் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். பின்னர் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு தேர்தலில் வென்று வட்டார அரசுகளை அமைக்கும் வாய்ப்பை வழங்கியபோது அந்த அமைப்பு ஜஸ்டிஸ் கட்சி என்ற கட்சியாக ஆகியது. இந்த அமைப்புக்கும் தமிழிய இயக்கத்துக்கும் கொள்கை அளவில் எந்தத்தொடர்பும்பு இல்லை. ஆனால் இதன் ஆதரவாளர்களாக தமிழியக்கத்தினர் பலர் இருந்தார்கள்.
இக்காலத்தில் கால்டுவெல் முன்வைத்த திராவிடமொழிகொள்கை பெரிதாகப் பேசப்பட்டது. தென்னக மொழிகளை ஆராய்ந்த பிஷப் கால்டுவெல் அவற்றுக்கு ஒரு பொது இலக்கண அமைப்பு இருப்பதை உணர்ந்தார். தென்னகத்தைக் குறிக்க நம் சிற்ப- தாந்த்ரீக மரபில் பயன்படுத்தப்பட்ட திராவிட என்ற சொல்லை அவற்றைக் குறிக்க பயன்படுத்தினார். திராவிட என்பது ஒரு இனமாக இருக்கலாம் என்ற ஊகத்தை அவர் முன்வைத்தார். அந்த ஊகத்தை உடனடியாக ஒரு கோட்பாடாக ஆக்கிக் கொண்டு திராவிட இயக்கம் உருவானது
இவ்வாறு திராவிட இயக்கம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது பிராமண வெறுப்பே. இந்திய மக்களை திராவிடர் ஆரியர் எனப்பிரித்து திராவிடர் என்போர் தென்னகத்து பிராமணரல்லாதோர் என வகுத்து அவர்கள் தனி இனம் தனி நாடு என்று வாதிட ஆரம்பித்தார்கள். இக்காலகட்டத்தில் திராவிட இனம் என்பதை வரையறை செய்வதற்கான அறிவார்ந்த முயற்சி ஏதும் எடுக்கப்படவில்லை. ஊகங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டு உடனடியாக அவை கோட்பாடுகளாக ஏற்கப்பட்டன.
சுதந்திரத்துக்குப் பின்னர் மொழிவழி மாநிலங்கள் அமைந்தபோது திராவிட இயக்கங்கள் திராவிடக்கருத்தியலை கைவிட்டன. அதற்கும் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. திராவிட என்பது தமிழர்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக மருவியது. ஏனென்றால் திராவிடக்கருத்தாக்கம் கர்நாடகம் ஆந்திரா கேரளத்தில் எந்த சலனத்தையும் உருவாக்கவில்லை.
அக்காலத்தில் இந்தியாவெங்கும் உருவாகி வலுவடைந்த பிராமணமைய வாதம் தன்னை சம்ஸ்கிருதத்துடன் அடையாளப்படுத்திக் கொண்டது. இந்தியாவின் பண்பாடென்பது பிராமணப் பண்பாடாக முன்வைக்கப்பட்டது. அது சம்ஸ்கிருதத்தால் மட்டுமே அமைந்தது என வாதிடப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியால் புதுப்பணபலம் பெற்ற பிராமண சாதியின் ஒரு ஆதிக்க தந்திரம் அது.
அதற்கு எதிராக பிராமணரல்லாத சாதியினர் உருவாக்கிய பல கோட்பாடுகளை உருவாக்கினர். உதாரணமாக வேதங்களின் காலத்தை பிராமணர்கள் பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்னால் கொண்டு சென்றபோது தமிழிய இயக்கத்தினர் கடல்மூழ்கிய குமரிநில நீட்சியை ஒரு பெரும் கண்டமாக உருவகித்து அதுவே பிரம்மசமாஜத்தினர் சொல்லிய லெமூரியா என வாதிட்டு ஆதாரமேதும் இல்லாமலேயே அதை நம்பவும் ஆரம்பித்தார்கள்
இவ்வாறு நம் சூழலில் புழங்கும் கருத்துக்கள் பெரும்பாலும் ஆதிக்க நோக்குடன் மிகைப்படுத்தப்பட்டவை. அதற்கு எதிரான கருத்து அதற்கேற்ப மிகைப்படுத்தப்பட்டது. இன்று ஒரு அறிவார்ந்த ஆய்வாளர் நடுநிலையான ஆய்வுகளை செய்யவேண்டியிருக்கிறது. அப்படிச் செய்தால் ஒரு அபாயம் உள்ளது. கருத்துநிலைபாட்டின் இரு தரப்புமே அவருக்கு எதிரிகள் ஆகிவிடுவார்கள். ஒன்று அவர் தமிழியராக இருக்க வேண்டும். அல்லது அவர் பிராமணியராக இருக்க வேண்டும். இரண்டுமே துறை வெற்றிகளை அளிக்கக் கூடியவை. நடுநிலையாளருக்கு இன்று தமிழ்ச் சூழலில் ஆளிருப்பதில்லை. ஆகவே மிகக் குறைவாகவே நடுநிலைக் குரல்கள் ஒலிக்கின்றன
திராவிட இயக்கம் பிரபல அரசியலியக்கமாக ஆகியது. முதலில் பிராமணரல்லாத உயரசாதியினரின் குரலாக ஆரம்பித்தது பின்னர் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான அரசியலியக்கமாக ஆகியது. இந்த பரிணாமத்தில் அது தமிழிய இயக்கம் உருவாக்கிய மனநிலைகளையும் கோஷங்களையும் பெரிது படுத்தி வெகுஜன நம்பிக்கைகளாக ஆக்கியது. தமிழிய இயக்கம் ஓர் அறிவார்ந்த இயக்கம். அதில் ஆய்வும் உண்டு, வெறுப்பின் அம்சமும் உண்டு. திராவிட இயக்கம் அதில் வெறுப்பை மட்டுமே எடுத்துக்கொண்டது.
பொருட்படுத்தும்படியான தமிழாய்வுகள் எதையுமே திராவிட இயக்கம் உருவாக்கவில்லை. தமிழின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க எந்த பங்களிப்பையும் அது ஆற்றவும் இல்லை. இது வரலாறு. ஏனெனில் அது பரப்பு இயக்கம், அறிவியக்கம் அல்ல. இன்று திராவிட இயக்கம் தன் சாதனைகளாகச் சொல்லிக் கொள்வதெல்லாமே தமிழிய இயக்கத்தின் பங்களிப்புகளையே. அவர்களில் பெரும்பாலானவர்கள் திராவிட இயக்க ஆதரவாளர்கள்கூட அல்ல.
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அந்தக்கால கட்டாயங்களினால் உருவான கருத்துக்கள் பின்னர் வெகுஜனப்படுத்தப்பட்டு எளிய கோஷங்களாக மாறி நம் சூழலில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றை எதிரொலிப்பவர்கள் அவற்றை நிறுவப்பட்ட உண்மைகளாகவே எண்ணுகிறார்கள். மத நம்பிக்கை போல ஆவேசமாக முன்வைக்கிறார்கள். ஆராயவோ விவாதிக்கவோ அவர்கள் தயாராக இருப்பதில்லை. எதிர் தரப்பை எதிரிகளாகவே நினைக்கிறார்கள். கருத்துக்கள் சார்ந்து முன்வைப்பதெல்லாமே மிகையுணர்சிக்களைத்தான். ஆகவே ஒரு விவாதமே சாத்தியமில்லாமல் போகிறது
இந்துமதம் சார்ந்து, இந்திய சிந்தனை மரபு சார்ந்து, சாதியமைப்பின் உருவாக்கம் சார்ந்து, இந்திய தேசிய உருவகம் சார்ந்து, ஆரிய திராவிட இனப்பிரிவினை சார்ந்து இன்று தமிழ்ச் சூழலில் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எந்தவித ஆய்வு முறைமையும் இல்லாமல் அவசர நோக்கில் ஒரு சமூகத்தேவையின் பொருட்டு வடிவமைக்கப்பட்டவை. அவை கடந்த அரைநூற்றாண்டுக்கால சமூக அறிவியல்களின் கருவிகளால் மீள மீள மறுபரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை இவர்கள் சற்றும் அறிய மாட்டார்கள். அறியும் மனநிலையே இல்லாமல் மதநம்பிக்கை போல பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அக்கருவிகளை பயன்படுத்தி ஆராய்பவர்களை தமிழ்த்துரோகிகள் என்று நம்பத்தான் அவர்களின் மதச்சார்பு, இனச்சார்பு மனம் பயின்றிருக்கிறது
சம்ஸ்கிருதம் சார்ந்து நம் சூழலில் உள்ள நம்பிக்கைகளும் இவ்வகைப்பட்டவையே. அந்த வெறுப்பாலும் புறக்கணிப்பாலும் தமிழின் அறிவு வளர்ச்சியே தேங்கிக் கிடக்கிறது. தமிழின் மாபெரும் இலக்கிய வளத்தை இந்தியச் சூழலில் பொருத்தி ஆராயும் ஆராய்ச்சிகளே நிகழ்வதில்லை. ஆகவே இங்குள்ள இலக்கியங்களில் பெரும் பகுதி அபத்தமான வாசிப்புக்கும் விளக்கத்துக்கும் உள்ளாகிறது. குறள் ஆனாலும் சரி, கம்பராமாயணம் ஆனாலும் சரி. பிற மொழிகளுடன் எந்த வகையான விவாதங்களும் நிகழ்வதில்லை. நமக்குள்ளே பழங்கதை பேசும் மூடக்கும்பலாக தமிழறிஞர்கள் உருவம் பெற்றிருக்கிறார்கள்.
தமிழில் சம்ஸ்கிருதம் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகள் பல. 1. அது வடமொழி. அது உண்மை அல்ல. அந்த மொழியின் முதல் வடிவம் வடக்கே எங்காவது உருவாகியிருக்கலாம். ஆனால் அதன் வளர்ச்சி என்பது இந்திய நிலப்பகுதியில் உள்ள பலநூறு மொழிகளை தழுவியது. சம்ஸ்கிருதக் கல்வியும் சரி சம்ஸ்கிருத பங்களிப்பும் சரி தென்னகத்திலேயே ஒப்பு நோக்க அதிகம். 2. அது பிராமண மொழி. அதுவும் உண்மை அல்ல . மரபான சம்ஸ்கிருத நூல்களிலேயே பிராமணர் எழுதிய நூல்கள் குறைவு. வியாசனொ வான்மீகியோ உபநிடத ஆசிரியர்களோ காளிதாசனோ பாரவியோ எவருமே பிராமணர்கள் அல்ல.
3. அது இந்து மதத்தின் மொழி. இது அபத்தமானது. அது இந்திய மதங்கள் அனைத்துக்கும் பொதுவான அறிவார்ந்த மொழி. சமணர்கள்தான் அதை இந்தியா முழுக்கக் கொண்டு சென்றவர்கள். அதற்கு லிபி [வரிவடிவம்] உருவாக்கியவர்கள். அது பிற்கால பௌத்தத்தின் மொழியும் கூட 4. அதைஇப்போது பிராமணர்களே ஆதரிக்கிறார்கள். தமிழகம் தவிர பிற பகுதிகளில் இது உண்மை அல்ல. உதாரணமாக கேரளத்தில் சிரியன் கிறித்தவர்களும் ஈழவர்களும்தான் பெரும் சம்ஸ்கிருத அறிஞர்கள். 5. சம்ஸ்கிருதம் செத்த மொழி. இது ஓர் அபத்தமான கூற்று. இன்றைய சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது.
இந்த நம்பிக்கைகள் நம் தமிழியர்களால் உருவாக்கப்பட்டு இன்று திராவிட வழிவந்தவர்களால் மதம்போல நம்பப்படுகின்றன. ஆனால் மறு தரப்பிலும் அதேபோல அபத்தமான நம்பிக்கைகள் உள்ளன
1. சம்ஸ்கிருதம் தேவமொழி. அதில் இறைவழிபாட்டு மந்திரங்களும் நூல்களும் மட்டுமே உள்ளன. இது பொய். சம்ஸ்கிருதத்தில் ஏராளமான இறை மறுப்பு நூல்கள் உள்ளன. வேதங்களிலேயே பொருள்முதல்வாதம் பேசும் பாடல்கள் ஏராளமாக உள்ளன. வேத மறுப்பு மட்டுமல்ல வேத வெறுப்பும் சம்ஸ்கிருத நூல்களில் பேசப்படுகின்றன. சம்ஸ்கிருதம் அறிவார்ந்த விவாதங்களுக்கான மொழி. ஆகவே விவாதத்தின் எல்லா தரப்பும் அதில் பேசப்படுகிறது
2. சம்ஸ்கிருதம் பிராமணர்களுக்குமுன்னுரிமை உள்ளமொழி. அது பிராமணர்களின் நம்பிக்கை. உண்மை அல்ல. சம்ஸ்கிருத நூல்களில் பிராமண மேன்மை பேசும் நூல்கள் பூர்வ மீமாம்சை என்ற வேத மைய தரிசனத்தின் தரப்பைச் சேர்ந்தவை மட்டுமே. அதை எதிர்க்கும் பல நூறு தரப்புகள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பகவத்கீதை கூட பூர்வமீமாம்சத்தை நிராகரிப்பதே
இந்த நம்பிக்கைகளை கைவிட்டுவிட்டு அறிவார்ந்த தர்க்கங்களுடன் சம்ஸ்கிருதத்தை அணுகக்கூடிய ஆராயக்கூடிய ஒரு தலைமுறை இனியாவது உருவாகி வரவேண்டும். அதன்பின்னர் மட்டுமே தமிழாய்வு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். அப்போது பல ஆச்சரியமளிக்கும் உண்மைகள் வெளிவரும் என நான் நினைக்கிறேன். அதில் முக்கியமானது, தமிழ் சம்ஸ்கிருதத்துக்கு எந்த அளவுக்குக் கடன்பட்டதோ அதை விட சம்ஸ்மிருதம் தமிழுக்குக் கடன்பட்டது.
தமிழ்ஹிந்து டாட் காம் தளத்தில் சுப்பு என்பவர் எழுதியதில் இருந்து சில வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.
சம்ஸ்க்ருதம் இப்போதும் புத்துணர்வோடும் புத்துயிரோடும் இருக்கிறது என்ற காரணத்தால் தமிழகத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் எழுதிய நூல் ஒன்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
அந்த முக்கியப் புள்ளி தமிழக முதல்வர் மு. கருணாநிதி தான். அவர் எழுதிய குறளோவியத்தின் சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்தவர் கண்ணன். இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான கி.ஆ.பெ. விசுவநாதத்தின் மருமகன்.
இந்தப் புத்தகத்தின் முன்னுரையில்
“மாண்புமிகு கருணாநிதி அவர்களுக்கு சமஸ்க்ருதத்தின் பாலுள்ள அன்பை அறிந்துகொண்டு சமஸ்கிருத மொழிபெயர்ப்பு செய்யப்படட்டும் என்ற அவரின் ஆசையையும்ஆணையையும்பெற்றுக்கொண்டு” மொழிபெயர்ப்பு செய்ததாக கண்ணன் எழுதியுள்ளார்.
சம்ஸ்கிருதம் அறிவியக்கத்துக்குரிய மொழி. அதற்காகவே ஆக்கப்பட்டது. மக்கள் மொழியான தமிழில் அறிவியக்கம் ஒன்று ஈராயிரமாண்டுகளாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்த தலைமுறையில் அது அழிந்துவருகிறது
— என்பதுதான் அக்கட்டுரையில் நான் சொல்லியிருந்த சுருக்கமான கருத்து. சம்ஸ்கிருதத்தில் தொடர்ச்சியாக நான்கு நூற்றாண்டுகளாக மாபெரும் அறிவியக்கம் நிகழ்ந்து வந்துள்ளது என்பது உலகசிந்தனையின் ஓரத்தை பயின்றவர்களும் அறிந்ததே.
சம்ஸ்கிருத அறிவியக்கத்தை 1.வேதங்கள் உருவான காலகட்டம் 2 .ஆறுதரிசனங்கள் தோன்றி தொகுக்கப்பட்ட காலகட்டம் 3.உபநிடதங்கள் உருவான காலகட்டம் 4. இதிகாசங்களும் ஆரம்பகட்ட புராணங்களும் தொகைநூல்களும் உருவான காலகட்டம் 5. பிறமொழி நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டதும் சமணநூல்கள் எழுதப்பட்டதும் பெருங்காவிய இயக்கம் நிலைகொண்டதும் மொழியியல் மற்றும் இலக்கண நூல்கள் உருவானதுமான காலகட்டம் 6. பிற்கால வேதாந்தங்கள் உருவான காலகட்டம் என பல தனி அறிவியக்கங்களாகப் பிரிப்பதுண்டு.
சம்ஸ்கிருதம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை உலக அளவில் மிக அதிகமான அறிவியல் நூல்களைக் கொண்ட அறிவியல்மொழியாகவே இருந்துள்ளது. கணிதம், வானவியல்,மருத்துவம், சிற்பவியல் என அதிலுள்ள பெருநூல்கள் இன்றும் அறிவியலாளர்களால் பயிலப்படுபவை, ஆராயப்படுபவை. இன்றும் இங்கே புழங்கும் மருத்துவமும் சிற்பவியலும் சம்ஸ்கிருதக் கலைச்சொற்கள் இன்றி செயல்படமுடியாதவையாகவே உள்ளன.
இன்று சம்ஸ்கிருதம் அதன் அறிவியல் முக்கியத்துவத்தை இழந்து ஐநூறாண்டுகள் ஆகின்றன. அதுவும் இயல்பே. நூறாண்டு முன்வரை ஜெர்மன் மொழியே தத்துவத்துக்கான மொழி. இன்று அப்படி இல்லை. இன்று நவீன அறிவியலுக்கான உலகளாவிய மொழி ஆங்கிலமே.
தமிழிலும் தொடர்ந்து ஓர் அறிவியக்கம் இருந்துள்ளது. 1. திணைப்பிரிவினைகள் மற்றும் அதை ஒட்டிய வாழ்க்கைநோக்கு உருவான சங்க காலகட்டம். 2. பௌத்த சமண சிந்தனைகளின் செல்வாக்குடன் உருவான நீதிநூல்கள் மற்றும் காப்பியங்களின் காலகட்டம். 3. சைவ வைணவப் பெருமதங்கள் தத்துவார்த்த அடிப்படையை திரட்டிக்கொண்ட பக்திகாலகட்டம். 4. மூலநூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்ட, மருத்துவம் போன்றதுறைகளில் மூலநூல்கள் பல உருவான மரபின் இறுதிக்காலகட்டம் 5.பாரதிக்குப்பின் உருவான நவீன காலகட்டம் என அவ்வறிவியக்கத்தை பிரித்துப்பார்க்கலாம்
கொஞ்சமாவது ஏதாவது புரிந்துகொள்ள முயலலாமே அய்யா. உங்களை எல்லாம் நம்பித்தானே தமிழ் எதிர்காலத்தில் வாழவேண்டும்?
கீதை குறித்தக் கட்டுரையைப் படித்தேன். ஒரு புறம் மகிழ்ச்சியும், மறுபுறம் வேதனையும் வந்தது. என்னுடைய காலம் காலமான நம்பிக்கைகளை, மற்றும் புரிதல்களையும், தத்துவார்த்தமாக எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியது மகிழ்ச்சி. ஆனால், மாபெரும் முதிர்வுத் தத்துவங்களுக்கு அரிச்சுவடி நிலையில் இருந்து ஆரம்பித்து மறுப்பு தெரிவிக்கும் எழுத்துக்களுக்கு எல்லாம் நீங்கள் விளக்கம் கொடுக்க நேர்ந்தது வேதனை.
எந்த ஒரு அதீதமான நுகர்ச்சியையும் நம் நாட்டில் ‘apologetic’ ஆகவே கருதுவதை நான் சிறு வயதில் இருந்தே பார்க்கிறேன். நவீன வாதம் என்பது இதற்கு எதிரானது- இந்த மாதிரி சுய அடக்கம் எல்லாம் தேவையில்லை என்று யாராவது வாதிட்டால், பதட்டத்தில் என் நாக்கு அடங்கி விடும். பதிலே வராது. சமீபத்தில் ந்யூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஞாயிறு மலரில் மன நல அறிவுரை (கவுன்சிலிங்) ஒன்றில் ஒரு பெண் மருத்துவர், அடிக்கடி சுய இன்பம் அனுபவிக்க அந்த கேட்டப் பெண்ணுக்கு அறிவுரை கூறினார். தாழ்வு மனப்பான்மையை இது தகர்க்கும என்று வேறு சொன்னார்.
ஆசை ஒரு பெருந்தீனிக்காரன் என்று கண்ணன் சொன்னதை நாம் எந்த தளத்தில் இருந்து விளக்க முடியும்? “இல்லையே ! அதோ பார் வெள்ளையர் சமுகத்தை. அவர்கள் தீனி, குடி, பெண் என்று அனைத்திலும் பெரும் நாட்டம் உடையவராக இருந்தும் அவர்கள் நிம்மதியாய்த் தானே உள்ளனர்?” என்று பதில் கேள்வி வந்தால் நம் பதில்கள் சப்பையாகவேப் போய் விடும்.
இந்த நிலையில் உங்களது கட்டுரை ஒரு கலங்கரை விளக்கம். தமிழில் இது போல நிறையத் தேவை.
வேங்கடசுப்ரமணியன்
அன்புள்ள வேங்கடசுப்ரமணியம்,
நம் சூழல், பல்லாயிரம் வருடம் தத்துவ விவாத மரபுள்ள சூழல் அல்ல. அது நடுவே அறுபட்டு விட்டது. இன்றுள்ளது வேறு. இது பத்தொன்பதாம் நூற்றாண்டு வெள்ளையர்களால் உருவாக்கப் பட்டது. இந்த மரபை நாம் இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை. விவாதத்திற்கு நமக்கு உள்ள மரபை [நியாயம், மீமாம்சம்] நாம் அறியோம். மேலை மரபை [கிரேக்க தர்க்கவியல்] நாம் கற்கவில்லை
ஆக எல்லாவற்றையும் ஆதியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இன்று விவாதம் மூலம் உண்மையை நெருங்குவ்தல்ல, விவாதக் களத்தை உருவாக்குவதே முதல் சவாலாக உள்ளது
ஜெ
*
அன்புள்ள ஜெ!
நலமா..! மிக சமீபத்தில் நீங்கள் எழுதிய தாய்மொழி, செம்மொழிவாசித்தேன். எனக்குச் சில சந்தேகங்கள். நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட விதிகளில் ஒன்றான “மொழி இன்னொரு மொழியில் இருந்து பிரிந்து, வளர்ந்து உருவானதாக இருக்கலாகாது. அதற்கான சொற்களஞ்சியம் மூலத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்” என்கிற விதி சம்ஸ்கிருதத்திற்கு முற்றாக பொருந்துமா..! பழைய பாலி, பிராகிருத மொழிகளின் சொற்களஞ்சியத்தில் இருந்து பெறப் பட்டதல்லவா சமஸ்கிருதத்தின் சொற்களஞ்சியம்? விளக்கவும்
அன்புடன் சக்திவேல் சென்னை
அன்புள்ள சக்திவேல்,
நான் அறிந்தவரை சம்ஸ்கிருதம் மூல மொழியே. அதன் இலக்கியம், சொற்களஞ்சியம் இரண்டும் அசலானவை. சம்ஸ்கிருதம் இன்றைய முழு மொழியாவதற்கு முன்னால் ஒரு உரை வடிவம் [டைலக்ட்] மட்டுமாக இருந்த நிலையில் இயற்றப் பட்ட ரிக்வேதம் நமக்கு இன்று கிடைக்கிறது. உலகச் செம்மொழிகளில் கிடைக்கும் மிகத் தொன்மையான மூலநூல்களில் ஒன்று ரிக்வேதம்.
சம்ஸ்கிருதத்தில் பின்னாளில் உருவான இலக்கணங்களோ, சொற்களோ இல்லாத அதிபுராதனமான மொழி ரிக் வேதத்தில் உள்ளது. அதன் பழைய பாடல்களில் எழுவாய், பயனிலை அமைப்பு கூட உருவாகியிருக்கவில்லை என மோனியர் வில்லியம்ஸ் சொல்கிறார். அதில் ஒரே சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்தப் படுகிறது. பல சொற்களுக்கு வேர்ச் சொல் மட்டுமே உள்ளது. ஒரு மொழி குழந்தையாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அது உள்ளது.
உதாரணமாக சங்க இலக்கிய காலகட்டத்து தமிழ் மொழியில் செய்வினை,செயப்பாட்டு வினை பிரிவினை இல்லை. கொன்ற, கொல்லப் பட்ட இரண்டுமே கொன்ற என்றே சொல்லப் படும். பின்னாளில் அது உருவாகி வந்தது. இவ்வாறு தமிழுக்கு மூன்று அடுக்குகள் உள்ளன. நவீனத் தமிழ், சங்க காலம் வரையிலான தமிழ், சங்க காலத் தமிழ் என பிரித்துச் சொல்லலாம். அதே போல சம்ஸ்கிருதத்திற்கு குறைந்தது ஐந்து அடுக்குகள் உள்ளன. ரிக் வேதம் ஆகக் கடைசியில் உள்ள ஐந்தாவது அடுக்கைச் சேர்ந்தது.
அந்த ஐந்தாவது அடித்தளத்தில் இருந்து பின்னாளைய சம்ஸ்கிருதம் உருவாகி வந்தது. அந்த தொல்மொழியில் இருந்து எழுந்து பின்னர் முறைப் படுத்தப் பட்ட மொழியை இலக்கண ஆசிரியர்கள் செம்மையாகச் செய்யப் பட்டது என்ற பொருளில் சம்ஸ்கிருதம் என்று பெயர்ச் சூட்டிக் குறிப்பிட்டனர். அவ்வாறு செம்மை செய்யப் படாமல் அப்படியே பல இடங்களில் புழங்கிய மொழியே பிராகிருதம். பிராகிருதத்திற்கும் புராதன சித்தியன், முண்டா துணை மொழிகளுக்குமான ஊடாட்டத்தில் பிறந்தது பாலி. இம்மூன்று மொழிகளில் இருந்தும் கிளைத்த மொழிகள் அபப்பிரம்ஸ மொழிகள் எனப் பட்டன.
தமிழில் சம்ஸ்கிருதம் பற்றி நிறைய அரைவேக்காட்டுத்தனங்கள் வெறும் மொழிக் காழ்ப்பினால் எழுதப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்றே சம்ஸ்கிருதம் என்று பெயர் இருப்பதனால் அது பழைய மொழி இல்லை, பிற மொழிகளில் இருந்து பின்னாளில் உருவாக்கப் பட்டது என்பது. சமீபத்தி ல்கூட ஒருவர் எச்சில்தெறிக்க மக்கள் டிவியில் கத்திக் கொண்டிருந்தார். அவற்றை நம்பி வாசிக்கும் போது நாம், நம் வரலாற்றுணர்வை இழக்கிறோம். இந்த விஷயங்களெல்லாம் சாதாரணமாக எவரும் வாசிக்கக் கூடிய நூல்களில் கிடைப்பனவே.
2004 டிசம்பர் 26; மறக்க முடியாத நாள். "ஆழிப்பேரலை" தென்கிழக்காசிய நாடுகளையே உலுக்கியது; சிதறடித்தது. தமிழகக் கரையோரத்தில் தன் வலிமையைக் காட்டியது. தமிழ்நாட்டுக்கு ஆழிப்பேரலை புதியதல்ல. கடைச்சங்க காலத்துக்கு முன்னரே இருமுறை தமிழகத்தை ஆழிப்பேரலை தாக்கியுள்ளது. "பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடும்கடல் கொள்ள"
என்ற தொடர்கள் ஆழிப்பேரலையின் விளக்கமேயாகும். கடல் கொள்ளுவதைக் "கடல்கோள்" என்ற சொல்லால் தமிழர் குறித்தனர். உலகில் நாம் ஓங்கி ஒலித்திருந்தால் எல்லா மொழிகளிலும் "கடல்கோள்" என்ற தமிழ்ச்சொல் பரவியிருக்கும். ஆனால் சப்பான் (Japan) மொழியான "சுனாமி" யைத் தானே நாமும் கூறுகிறோம்.
கடல்கோளை விட ஓர் கொடிய ஆழிப்பேரலை தமிழ்நாட்டை முன்பு தாக்கியது; அதன் தாக்கம் இன்றும் காணப்படுகிறது. நம் தமிழர்களில் பலர் அந்த ஆழிப் பேரலையின் ஆபத்தை உணராமல் அதைக் குற்றால அருவியென எண்ணிக் குளித்து மகிழ்கிறார்கள். அந்த ஆழிப் பேரலைதான் வடமொழி ஆதிக்கம்!
"வந்தாரை வாழவைக்கும்" தமிழகமல்லவா? தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வட மொழியாளர்கள் இங்கு புகுந்துவிட்டனர். தமிழ்நாட்டில் தாராளமாகத் தம்மொழிச் சொற்களைப் பரப்பினர். எளிய, இனிய தமிழ்ச் சொல் பேசும் தமிழர், கடினமான உச்சரிக்க முடியாத வடமொழிச் சொற்களையும் கூறி மகிழ்ந்தனர். "மனம்" என்பது தமிழ்ச்சொல்; வடமொழியில் "ஹ்ருதய" எனக்கூறப்படும். வடமொழியை உச்சரிப்பது மிகக் கடினமானதாகும். அதற்கு முயற்சி அதிகம் தேவை. வாய், உதட்டளவில் தமிழை உச்சரிக்கும் நாம் வடசொல்லை உச்சரித்தால் அடிவயிற்றிலிருந்து முயலல் வேண்டும்.
தொல்காப்பியர் நாட்டில் மக்கள் வழங்கும் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தார். அவர் சொற்களை "இயற்சொலல்", "திரிசொல்", "திசைச்சொல்" எனப் பிரித்தார். வழங்கிய சொற்கள் பல இம்மூன்று பகுப்பில் அடங்கவில்லை. "வடசொல்" என்று நான்காவதாக ஒன்றை வகுத்தார். வடசொற்களைத் தமிழில் எவ்வாறு உச்சரிக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார், "வடமொழிச் சொற்களை வடமொழி எழுத்துக்களைக் கொண்டே ஒலிக்காதீர்கள்; வடமொழி எழுத்துக்களை நீக்கி இணையான தமிழ் எழுத்துக்களில் உச்சரியுங்கள்" என்கிறார் தொல்காப்பியர். "ஹ்ருதய" என்பதை "இதயம்" என்று கூறுங்கள். "பங்கஜம்" என்பதைப் "பங்கயம்" என்று கூறுங்கள் என்கிறார் தொல்காப்பியர்.
என்பது தொல்காப்பிய நூற்பா, அவருக்குப் பின்வந்த நன்னூலார், இரண்டு வடமொழிச் சொற்களை இணைத்து எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கும் இலக்கணம் வகுத்தார். "இராமன் + அயனம் = இராமாயணம்" என்பன போன்ற "வடமொழிப்புணர்ச்சி" விதி கூறுகிறார் நன்னூலார் பவணந்தி முனிவர்! இலக்கியத்திலும் அம்மொழி புகுந்துவிட்டதே காரணம்.
தொல்காப்பியத்€த்ப் பிற்காலத்தில் உரையாசிரியர்கள் பாடம் நடத்தினர். உரையாசிரியருடைய மாணவர்கள் கேட்டனர்; "ஐயா, திசைச்சொல் என்றால் எல்லாத் திசைகளிலும் இருந்து தமிழில் வந்து வழங்கும் சொற்கள் என்று கூறுனீர்கள். வடக்கும் ஒரு திசைதானே அப்படியானால் வடசொல்€ல் திசைச்சொல்லுக்குள்தானே அடக்க வேண்டும். வடசொல் எனத் தனியாகக் கூறியது தவறல்லவா?" என்பது மாணவன் வினா.
தொல்காப்பியர் "வடசொல்" என வகுத்துவிட்டனர். உரையாசிரியர் அதைத் தவறென்று எவ்வாறு கூறமுடியும். மாணாக்கனுக்கு உரையாசிரியர் வலிந்து பின்வருமாறு கூறுகிறார். அவரால் மாணாக்கன் கேட்டது தவறென்று கூற முடியவில்லை. அவருக்கும் அது தவறென்று தெரியும்!
"மாணாக்கனே! நீ சொல்வது முற்றிலும் சரி. வடசொற்களைத் திசைச்சொல்லில்தான் அடக்கியிருக்க வேண்டும். ஆனால் நமக்கெல்லாம் ஆசிரியராகிய தொல்காப்பியர் "வடசொல்" என்று தனியாக வகுத்தது ஏன் தெரியுமா?
1. வடக்கு ஒரு புண்ணிய திசை 2. வடமொழி தேவ பாசை 3. வடமொழி எல்லாத் தேசத்துக்கும் பொது
ஆகையால் வடசொல்லைத் திசைக் சொல்லில் அடக்காது "வடசொல்" எனத் தனியாக நம் ஆசிரியர் தெல்காப்பியர் வகுத்தார் என்று மாணாக்கனுக்கு ஆசிரியர் கூறினார். அதைத் தவறு என்று கூற ஆசிரியருக்குத் துணிவு இல்லை. இம்மூன்று பொய்யையும் வடவர் பரப்பியிருந்தனர்.
அங்கிங்கெனாதபடி எங்கும் வடமொழி ஆதிக்கம் புகுந்தது. "மன்னன் எவ்வழி; குடிமகள் அவ்வழி" என்பதறிந்து அரண்மனையை வடமொழி ஆழிப்பேரலை தாக்கியது. மன்னர்கள் அதற்கு ஆட்பட்டனர். மன்னர்களைத் தம்வசப்படுத்தப் பல குறுக்கு வழிகளையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
சோழரிடம் சென்று வடமொழியாளர் கதையளக்கத் தொடங்கினர், "சோழனே உனக்குத் தெரியுமா? உன் வம்சமே சூரியனிடமிருந்து தோன்றியது. உலககெலாம் ஒரு சூரியன்; உலகுக்கு நீயே ஒரு தனி மன்னன். சூரியன் மகன் மனு; அவன் நீ ஆட்சி செய்யத்தான் "மனு நீதியை" எழுதியுள்ளான். மனு உன் முன்னோர். இட்சுவாகு, புரஞ்சயன், காகுத்தன் என்று பல மாவீரர்கன் உன் வழியினர் உனக்குத் தெரியாதா? உன் புலிக்கொடியில் இருப்பது புலி அல்ல; தேவேந்திரன் என்றனர். நம் அரசர்கட்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. "ஆம்" என்று தலையாட்டி "ஆகா" என்று போற்றிப் புகழ்ந்தனர். அக்கரையிலிருந்து வந்த பச்சைப் பாம்பை பாம்பென உணராமல் "பசுமை" என்று கண்டு மகிழ்ந்தனர். தம் இலக்கியங்களிலும், மெய்க்கீர்த்திகளிலும் அப்புனை கதையை எழுதினர்.
அரசன் ஆதரவோடு வடமொழியாளர்கள் தங்கள் வரிசையைக் காட்டினர். பல புனைகதை புனைந்தனர். தஞ்சைக்குப் பக்கத்தில் "வெண்ணாறு" காவிரியின் பாசன ஆறு. "விண்ணை" என்ற சோழ அரசியல் தலைவன் உருவாக்கியதால் அது "விண்ணன் ஆறு" "விண்ணாறு" என்று கூறப்பட்டது. தமிழன் வெட்டிய ஆற்றுக்கு ஒரு கதை கட்டினர் வடமொழியாளர்கள்.
ஒருமுறை தென்திசை வந்த காமதேனு பாலாய்ச் சொரிந்தது. அந்தப்பால் தேங்கி, தயிராகி, வெண்ணை உண்டாகி அந்த வெண்ணைய் ஆறாய்ப் பெருகிறது. அதனால் அது "வெண்ணையாறு" ஆயிற்று. வெண்ணை வெண்ணையாக ஓடுவதால் இது "சுவேதநதி" ஆயிற்று. இதோ புராணத்தில் பாருங்கள்: என்று சில சுலோகங்களைக் கூறினர். ஆற்றின் வரலாற்றை மறந்த மக்கள் புராணப் பொய்யை நம்பினர்.
புறநானுறு பாடப்பட்ட காலத்திலேயே,
"நின் முன்னோர் எல்லாம்
பார்ப்போர் நோவன செய்யலர்"
"பார்ப்பார்க்கு அல்லது பண்பு அறிகிலையே"
என்று அரசரை வடவர் புகழ்ந்து பெற வேண்டியதைப் பெற்றனர்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று எண்ணிய தமிழரை,
"வேற்றுமை தெரிந்த நாற்பால்" என நம்ப வைத்தனர்.
பார்ப்பனரே முதல் வருணம். மேலான சாதி என்று பரப்பப்ட்டது. மற்ற அனைவரையும் "பிராமணர்க்கும் கீழ்ப்பட்ட மக்கள்" என்று கரந்தைக் கல்வெட்டுக் கூறுகிறது. அந்தணர் என்பதும் தாங்கள்தான் என்றனர். "அந்தணர் முதல் அரிப்பன் கடையாக" என்பதும் ஒரு கல்வெட்டுத் தொடர். தாராளமாக - ஏராளமாக நிலங்கள் பார்ப்பனர்கட்கு வழங்கப்பட்டன. அங்கு வசதியான வீடு கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தப்பட்டனர். தஞ்சையில் இருந்த சர்வசிவ பண்டித சைவாச்சாரியார் தாம் ஏராளமாகப் பெற்றது தவிர தன் சிடர்கட்கும், சிடருடைய சிடர்கட்கும் தஞ்சாவூரிலிருந்து ஆர்யதேசம், மத்ய தேசம், கௌடதேசம் ஆகிய நாட்டில் உள்ளார்க்கும் வருடம்தோறும் 2000 கல நெல் அனுப்பி வைத்தார். வடமொழிப் பார்ப்பனர்கள் தம்மை "சைவ புரந்தரச் சச்சரவர்த்தி" என்று அழைத்துக் கொண்டு அரசனுக்கு நிகர் என்றனர்.
"அகரப் பிரமதேயம், சதுர்வேதமங்கல்யம், பட்டவிருத்தி, சுரோத்திரியம், அத்யயனவிருத்தி, மாஸியம், சர்வமானியம், ஏகபோகம், கணபோகம்" என்று பல்வேறு பெயரிட்டுப் பல்லாயிரக்கணக்கான வேலி நிலங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. நில உடைமையாளர்களாக இருந்த வேளாளர்களின் நிலங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டு பார்ப்பனர்கட்குக் கொடுக்கப்பட்டன. சில இடங்களில் அதை எதிர்த்து வேளாளர்கள் கிளர்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர். நிலங்கள் பிராமணர்கட்கு
"தானாதி வினிமய கிரய விக்கிரயங்களுக்கு யோக்கியமாய் புத்திர பவுத்திர பாரம்பரியமாய் சந்திர சூரியர் உள்ளவரை அட்டபோகத்துடன் ஆண்டு அனுபவித்துக் கொள்ள" அளிக்கப்பட்டன.
அரசர்களுக்கு, வழிகாட்டவே "மனு" நீதி நூல் எழுதப்பட்டது என்று கூறக்கேட்ட மன்னர்கள் தாங்கள் "மனு ஆறு பெருக" "மனு நெறி தழைக்க" அரசாள்வதாகத் தங்கள் மெய்க்கீர்த்திகளில் கூறிக்கொண்டனர். ஆனால் ஒருசில இடங்களில் தமிழ்க் குறுநில மன்னர்கள் மிகச்சிலர் தங்கள் ஆவணங்களில் "வள்ளுவர் உரைத்த முப்பால் மொழியின்படி" அரசாண்டதாகக் கூறிக் கொள்கின்றனர். இது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. அரசர்கள் ஆதரவு பெற்ற பார்ப்பனர் நடத்திய வடமொழிக் கல்லூரிகள் பற்றிப் பல ஆவணங்கள் கிடைத்துள்ளதே தவிர தமிழ்க்கல்வி பற்றி அரசு ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ்ப் புலவர் பெருமக்களே தமிழைக் கற்பித்தனர் காத்தனர்.
தமிழ் அமைப்பைப் பார்த்துத் திருத்திச் செய்யப்பட்டதே வடமொழி. "சமஸ்கிருதம்" என்பதற்கும் அதுதான் பொருள். சிலர் "வடு + அல்" மொழி எனப்பிரித்துக் குற்றமில்லாத மொழி வடமொழி என்று கூறுவது மிகப்பெரும் பிழையாகும். மொழியியல் படியும் அது தவறு.
தமிழ் ஊர்ப்பெயர்கட்கெல்லாம் இதுதான் மூலம் என்று மொழிபெயர்ந்து வடமொழிச் சொற்களைப் புகுத்தினர். "நட்டூர் - மத்யபுரி" ஆயிற்று; "கருவூர் -கெர்ப்பபுரம்" ஆயிற்று; "பேரூர் -ஆதிபுரி" எனப்பட்டது. ஊர்ப் பெயர்கட்குப் புராணக் கதைகளையும் படைத்தனர். தஞ்சாவூருக்கும் "தஞ்சன்" என்ற அரக்கனுக்கும் தொடர்புபடுத்தினர். சிராப்பள்ளியை (சமணப்பள்ளி) "திரிசிரா" மூன்று தலையுடைய அரக்கனோடு தொடர்புபடுத்தினர். இராசராச சோழன் கட்டிய பெருவுடையார் - பெரியநாயகி கோயிலை "பிரகதீசுவரர்" "பிரகந்நாயகி" என்று அழைத்தனர் அழைக்குமாறு கூறினர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானி இரண்டு ஆறுகள் கூடும் இடம். அங்குள்ள இறைவன் பெயர் "நண்ணாவுடையார்" அம்மன் பெயர் "பண்ணாரி மொழியம்மை" என எல்லாக் கல்வெட்டு, செப்பேடு, ஆவணம் அனைத்திலும் இப்பெயரே காணப்படுகிறது. ஆனால் "சங்கமேசுவரர்" "வேதநாயகி" என்ற பெயரை "மார்க்கசகாயர்" என மாற்றியதுபோல் ஏராளமான பெயர்களை மொழி பெயர்த்தனர் அல்லது மாற்றினர்.
தமிழகக் கட்டடக் கலையின் நுட்பங்களைப் பழந்தமிழர் கட்டிய பல கோயில்களில் காணுகின்றோம். வடநாட்டுக் கட்டடக் கலை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. ஆனால் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை நூல்கள் வடமொழியிலேயே உள்ளன. தமிழில் உள்ளவைகளை வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டு தமிழ்நூல்களை அழித்து விட்டதை அல்லவா இது காட்டுகிறது.
"தமிழ் ஓலைச் சுவடிகளை ஆடிப்பெருக்கன்று ஆற்றிலும், கார்த்திகை தீபத்தன்ற நெருப்பிலும் இடுவது புண்ணியம்" என்ற செய்தியைப் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சுவடிகள் அழிவதற்குக் காரணமாக இருந்தவர்கள் வடமொழியாளர்கள்.
வடமொழியாக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களின் வடிவம் அருவருப்பையும் ஏற்படுத்திகின்றன. ஈரோடு என்பது இரண்டு ஓடைகளால் ஏற்பட்ட பெயர். ஈரோடை-ஈரோடு ஆயிற்று. ஆனால் அதை "ஈரஓடு" என்று பிரித்து தலையில் கங்கையாறு இருப்பதால் ஈரமான தலை ஓட்டையுடைய சிவபெருமான் இருக்கும் ஊர் என்று கூறி "ஆர்த்தரகபாலபுரிசுவரர்" ஆக்கி ஈரோடு என்ப€யும் "ஆர்த்தரகபாலபுரி" ஆக்கிவிட்டனர். அம்மன் பெயர் "வாரணி அம்மை" (வார்=கச்சு); இப்பெயரைப் பூசையின்போது "குஜமஸ்த குசும ஸ்தானாம்பிகை" என்று கூறுகின்றனர். இதன் பொருள் "தர்ப்பைப் புல்லால் இறுக்கிக் கட்டப்பட்ட தனங்களை உடைய பார்வதி" என்பதாகும்.
வடமொழி ஆதிக்கத்தால் செம்மேனியுடைய சிவன், "ருத்திரன்" ஆனார்; தமிழ் முருகன் "சுப்பிரமணியர்" ஆனார்; மால், திருமால், விஷ்ணு எனப்பட்டார். வழக்கில் இல்லாத "இந்து" என்ற பொதுச் சொல்லையும் உருவாக்கினர். "வேதநெறி தழைத்தோங்க" தமிழ் கோயிலை விட்டு அகன்றது.
பூவால் செய்யப்பட்ட வழிபாடே "பூசை" ஆயிற்று என்பது அறிஞர் துணிவு. ஏராளமான சொற்களை வடமொழியில் பெயர்த்து அதுவே மூலச்சொல் என்றனர்.
மொழி, இலக்கிய வரலாற்று ஆய்வுகளைத் தொடங்கியவர்கள் மேனாட்டினரே என்பதில் ஐயமில்லை. தமிழர்கள் உயர்கல்வி கற்க இயலாதிருந்ததால் கற்ற பார்ப்பனர் மேனாட்டினரை அண்டியிருந்ததால் அவர்கள் ஆய்வும் வடமொழிக்கே வாய்ப்பாக இருந்தது. இன்றும்கூட தமிழகப் பெரும் ஆய்வாளர்கள் வடமொழியாளர் வகுத்த பாதையிலேயே நடைபோடுகின்றனர்.
"செட்டு" என்பது வணிகத்தைக் குறிக்கும் சொல். பல இலக்கியங்களில் பயின்று வருகிறது. செட்டு செய்பவன் செட்டியார்; ஆனால் தமிழ் ஆய்வாளர் பலர் "சிரேஷ்டி" என்ற சொல்லே செட்டியார் ஆயிற்று என்று எழுதுகின்றனர். சிரேஷ்டி மூத்தவனே தவிர செட்டியார் அல்ல.
"கோடு" என்ற சொல் அடிப்படையாகப் பிறந்தது "கோட்டை" என்பது. கோஷ்டம்தான கோட்டை ஆயிற்று என்கிறார் இந்தியப் புகழ்பெற்ற ஒரு வரலாற்று ஆசிரியர்; அவர் தமிழர்; சிவபெருமான் சிரித்து (நகல்புரிந்து) முப்புரத்தை எரித்ததால் "நக்கன்" எனப்பட்டார். சிவன் அடியார்க்கும் அப்பெயர் உண்டு. ஆனால் "நக்ணன்" என்ற சொல்லே நக்கன் ஆயிற்று என்பார் ஒரு தமிழ்ப் பேராசிரியர். வடமொழிக்கு அடிமையான தமிழ்ப் பேராசிரியர்கள், வரலாற்றாசிரியர் இன்னும் உள்ளனர்.
பார்ப்பனர் தொடர்பு இருந்தால்தான் ஒருவன் அறிஞன் ஆக முடியும் என்பதால் தானே "ஆதி" என்ற தாழ்த்ப்பட்ட பெண்ணுக்கும் "பகவான்" என்று பார்ப்பனனுக்கும் பிறந்தவர்கள் திருவள்ளுவர் என்ற பொய்க் கதை உருவானது. இந்தப் பொய்யை மெய்யென்று நம்பிய ஒரு பேரறிஞர் தம் கவிதைகளில் திருவள்ளுவரை "ஆதிபகவன் மைந்தன்" என்று மேடையில் பாடினார். தவறென்று தெரிந்த அக்கவிதை அச்சாகும்போது அந்தத் தொடரை நீக்கிவிட்டார்.
வடமொழி ஆழிப்பேரலை ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறாமல் உள்ளன. அண்மையில் ஒரு பெரும் கவிஞர் "அங்கொன்றும் இங்கொன்றுமாக" சிறு வடமொழித் தாக்கம் இருப்பதாக எழுதியுள்ளார் அங்கிங்கெனாதபடி எங்கும் காணப்படுகிறது. அதன் தாக்கம் "மறையாமல் நின்று பல வடிவங்களில் காட்சியளிப்பது கொடுமையிலும் கொடுமை".
அதன் தாக்கம் சிதம்பரம் சிற்றம்பலம் சன்னதியில், திருமுக்கூடல் குடமுழுக்கு விழாவில், கரூர் பசுபதிவரர் கோயிலில் இருப்பதை இன்றும் காண்கிறோம். இனிமேலாவது பேரலையைத் தடுத்து நிறுத்துவது தலையாய கடமையாக இருக்க வேண்டும்.