New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: “தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்”


Guru

Status: Offline
Posts: 24762
Date:
“தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்”
Permalink  
 


 

1. நூல் பற்றிய அறிமுகம்
எஸ். இராமச்சந்திரன் & அ. கணேசன்

“தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற இந்த ஆய்வு நூல் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இடைப்பகுதி வரை திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் நாயர் சமூகத்தவருக்கும் நாடார் சமூகத்தவருக்கும் இடையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பானதாகும். 

தோள்சீலைக் கலகம் (Upper Cloth Revolt) என்று வழங்கப்படுகின்ற இப்பொருள் குறித்து எழுதியுள்ள ஆய்வாளர்களுள் பெரும்பாலானோர் - அனைவருமே என்றுகூடச் சொல்லலாம் - சாணார் சமூகத்துப் பெண்டிர் இடுப்புக்குமேல் உடையுடுத்துவதற்கு அனுமதிக்கப்படாதிருந்தனர் என்றும், லண்டன் மிஷனரி சொ ஸைட்டியைச் சேர்ந்த புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ சமயப் பரப்புநர்களின் சமயப் பரப்புதல் பணியின்மூலம் மதம் மாறிய சாணார் சமூகத்தவர்கள் நாகரிகமான நடையுடை பாவனைகளைக் கற்றுக் கொண்டதன் விளைவாக அச்சமூகப் பெண்டிர் மார்பை மறைக்கும் வண்ணம் ரவிக்கையும் அதன் மேல் முன்றானை போன்ற சீலைத் துணியும் அணியத் தொடங்கினர் என்றும் எழுதி வருகின்றனர். 

மேலும், இப்படி அணியத் தொடங்கியதின் எதிர்விளைவாகவே உயர் சாதியினரான நாயர்-வேளாளர் சமூகத்தவர்கள் அடக்கு முறையில் ஈடுபட்டனர் என்றும், இந்த அடக்குமுறைக்கு எதிராகச் சாணார்கள் மேற்கொண்ட நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாகவும், புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ சமயப் பரப்புநர்க ளின் பரிந்துரையின்பேரில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் ரெஸிடெண்ட் போன்ற அதிகாரிகள் தலையிட்டதன் பயனாகவும் சாணார் சமூகத்துப் பெண்டிர் ரவிக்கையும் தோள்சீலையும் அணிய அனுமதிக்கப்பட்டனர் என்றும் இந்த ஆய்வாளர்கள் ஒரு போக்கிலேயே எழுதி வருகின்றனர். 

இந்த ஐரோப்பிய மையவாத ஆய்வுக் கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்கின்ற மேனாட்டு ஆய்வாளர்களும், ஆங்கிலேயக் காலனியாதிக்க மோகப்பித்து தெளியாத மனநிலையுடன் ஆய்வைத் தொடர்ந்து செய்துவரும் நம் நாட்டு ஆய்வாளர்களும், புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ சமயப் பரப்புநர்களின் மானஸ புத்திரர்களாக அல்லது உணர்வுபூர்வமான பிள்ளைகளாக இயங்கிக் கொண்டிருக்கின்ற ஆய்வாளர்களும் இந்த ஒரு போக்கிலான ஆய்வுக் கருத்தையே தொடர்ந்து முன்னிறுத்தி வருகின்றனர். 

இந்திய மக்களில் பெரும்பாலோர் தன்மானமும் சுய அபிமானமும் கெளரவ உணர்ச்சியும் இன்றி மிருகங்களைப் போல வாழ்ந்து வந்தார்கள் என்றும், வெள்ளை இனத்துப் பாதிரிமார்களின் ஞான உபதேசத்தால்தான் அவர்களுக்குச் சிந்திக்கின்ற ஆற்றலே உருவாயிற்று என்றும் இத்தகைய ஆய்வாளர்கள் நினைக்கின்றார்கள் போலும். 

எடுத்துக்காட்டாக, என்.கே. ஜோஸ் என்ற ஆய்வாளர் “சாணார் லகளை” என்ற நூலில்1 பின்வருமாறு எழுதுகிறார்: “கேரளத்தில் இந்து சமய ஆசார வழக்கத் தின்படி அரைநிர்வாணமாக காலங்காலமாக அலைந்து அல்லலுற்றுவந்த சான்றோர் சமுதாயப் பெண்கள் கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்ட உடனே றவிக்கை அணியத் துணிந்தனர். அத்துடன் உயர்சாதியினருக்கு மட்டும் உரிமையுடைய தோள்சீலையையும் சேர்த்து அணியத் துணிந்துவிட்டனரே என்ற சவர்ணர்களின் ஆதங்கமே இத்தோள்சீலைக் கலகத்துக்குக் காரணமாயிற்று. ஆதலால் இவர்கள் தோள் சீலையுடன் றவிக்கையையும் சேர்த்துக் கிழிக்கத்தொடங்கினர்.” 

இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ள மேற்கோளில் இழிவுத் தொனியுடன்கூடிய சாணார் என்ற சொல்லுக்குப் பதிலாகச் சான்றோர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்தவரின் பிரக்ஞைச் சிக்கலால் ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாகும்.2 சான்றோர் என்ற சொல்லின் உட்பொருளுக்குச் சிறிதும் தொடர்பற்ற வகையில் சான்றோர் சமூகத்தவர் காலம் காலமாக இழிவான நிலையில்தான் இருந்து வந்துள்ளனர் என்றே எழுதுகிறார்கள் என்றால் இவர்களுடைய உள்நோக்கம் எவ்வளவு அப்பட்டமாக வெளிப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். நெல்லைச் சீமையில் 1842 முதல் 1881 வரை3 சமயப் பணி புரிந்த பிஷப் கால்டுவெல் குறித்து எழுதும்போது வின்சென்ட் குமாரதாஸ் என்ற ஆய்வாளர் “சாணார் சமூகத்துக்குச் சுயமாக சொந்தக்காலில் நிற்கின்ற தன்மையை ஏற்படுத்தியவர் கால்டுவெல்” என்று எழுதுகிறார்.4 

இவற்றையெல்லாம் படிக்கும்போது திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் தென்பகுதியில் திவான் பேஷ்கராக இருந்த வி. நாகமையா அவர்கள் 1906ஆம் ஆண்டில் Travancore State Manual (திருவிதாங்கூர் சமஸ்தானக் கையேடு) முதல் தொகுதியில் பக்கம் 501-502இல் எழுதியுள்ள ஒரு குறிப்பு நினைவுக்கு வருகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அக்கருத்தினைத் தமிழில் தருகிறோம்: 

“கிறிஸ்தவ மிஷனரிமார் எந்த மக்களைப் பற்றியும் நிறுவனங்களைப் பற்றியும் விவரித்து எழுத விழைந்தார்களோ அம்மக்கள் மற்றும் நிறுவனங்களின் பூர்விகம் பற்றிச் சரியான பரிச்சயம் அம்மிஷனரிமார்களுக்கு இருந்ததில்லை. அவர்களுக்குத் தகவல் கொடுத்தவர்களும் காழ்ப்புணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். மிஷனரிமார்கள் மட்டுமின்றி ஆங்கிலேயர்கள் எல்லோரிடமும் இத்தகைய கண்ணோட்டம்தான் இருந்தது. தம் ஆயுள் முழுவதும் இந்தியாவிலேயே கழிக்க நேர்ந்தாலும் ஆங்கிலேயர்களுக்கு இம்மக்கள் பற்றி ஒரு சரியான புரிதல் ஏற்படுவதில்லை.” 

தோள்சீலைப் பிரச்சினை நிகழ்ந்த திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் தென்பகுதிக்குத் திவான் பேஷ்கராக இருந்த ஒருவர் எத்தகைய விருப்பு வெறுப்புமின்றி உண்மை நிலையைத் தெளிவாகப் புரிந்துகொண்டு எழுதியுள்ளார் என்பது இந்த மேற்கோளைப் படிக்கும்போது தெளிவாகத் தெரியவரும். 

19ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் சென்னையில் கலெக்டராக இருந்த ஃபிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்ற நேர்மையான நிர்வாகி - ஆய்வாளர், ‘ஏசுர் வேதம்' என்ற தலைப்பில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஒரு சுவடியைப் பற்றிக் குறிப்பிடும்போது அச்சுவடி போலியானது என்றும் அச்செயல் கிறிஸ்தவ மிஷனரிகளின் குறும்புத்தனம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.5 

ஒரு சமூகத்தின் பாரம்பரியப் பெருமிதத்தைக் குலைக்கும் வகையிலும், தாழ்வு மனப்பான்மையை அவர்களிடம் உருவாக்கும் வகையிலும் வரலாற்றைத் திரித்து எழுதுவதென்பது கிறிஸ்தவ மிஷனரிமார்களின் செயல்திட்டங்கள் பலவற்றுள் முதன்மையானதாகும். இதற்கு மிக எளிமையான சிறந்த எடுத்துக்காட்டு சாணார் (Shanar) என்ற சொற்பிரயோகம் ஆகும். சான்றோர் குலம் என்பது இச்சமூகத்தின் பெயராகும்.6சான்றோர், சான்றார் என்ற சொல் வழக்குகள் தமிழ்க் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் இலக்கியங்களிலும் இச்சமூகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று என்பது ஒண்ணு என்று வழங்கப்படுவதுபோல இச்சொல் காலப்போக்கில் மக்களின் பேச்சு வழக்கில் சாணார் எனத் திரிந்து வழங்கத் தொடங்கிற்று. 

நெல்லைச் சீமையில் வாழும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கம்பளத்தார், கம்மவார், பலிஜவார், பண்ட குல ரெட்டிமார் போன்றோர் சான்றவாளு என்றே இன்றுவரை இச்சமூகத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர். சான்றோர் அவர்கள் என்பது சான்றோர் அவாளு என்றும் சான்றவாளு என்றும் திரிந்துள்ளது. நிலைமை இப்படி இருக்க ஷானார் என்ற தங்களின் மழலை வழக்கையே பொது வழக்காக ஆக்கியதோடு அச்சொல்லுக்குச் சான்றோர் என்ற பெருமிதம் மிக்க பெயருடன் உள்ள தொடர்பைப் பொதுப் புத்தியிலிருந்து துண்டிக்கவும் செய்தவர்கள் ஐரோப்பியப் புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ மிஷனரிமார்களே. 

நடுநிலையுடன் ஆய்வு செய்வதாகப் பறைசாற்றிக்கொள்கின்ற ஐரோப்பிய ஆய்வாளர்கள் பலரும் தங்களுடைய ஐரோப்பிய மைய நோக்கினையே நுட்பமாகவும் இலாகவமாகவும் பயன்படுத்தி வரலாற்றைத் திரித்து எழுதிவருகிறார்கள். சற்றொப்ப 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த டிக் கூய்மன் (Dick Kooiman) என்ற ஐரோப்பிய ஆய்வாளரின் “Conversion and Social Equality in India” என்ற நூல் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.7ஆரம்பத்திலிருந்து கடைசிவரை சாணார் சமூகத்தவரை அடிமைச் சாதி என்றும், தீண்டத்தகாத சாதியினர் என்றும் குறிப்பிட்டு எழுதிவரும் டிக் கூய்மன் ஐரோப்பியக் கிறிஸ்தவ மிஷனரிமார்களால்தான் சாணார் சமூகத்தவர் உய்வடைந்தனர் என ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார். 

இத்தகைய ஆய்வாளர்கள், ஆங்கிலேயர்கள் தென்னாப்பிரிகாவைக் கைப்பற்றி அண்மைக்காலம் வரை அந்த மண்ணின் மைந்தர்களை அடிமைகளாக நடத்தி வந்த வரலாற்றை ஆய்வு செய்யும்போதுகூட இதே கண்ணோட்டத்துடன்தான் எழுதுவார்கள் போலும். அடிமை முறையைச் சட்டபூர்வமாக ஒழித்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்த ஆங்கிலேயர்கள் தென்னாப்பிரிகாவிலுள்ள டிறான்ஸ்வால், நேட்டால் போன்ற தங்கள் காலனியாதிக்கப் பகுதிகளில் ஒப்பந்தக்கூலிகளாக ஆயிரக்கணக்கான இந்தியர்களைக் குடியேற்றினர். 

இந்த இந்தியர்கள் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கை நடத்துபவர்களாக இருந்தாலும்கூட அவர்களுடைய திருமணம் கிறிஸ்தவத் தேவாலயங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தால்தான் அத்திருமணம் சட்டபூர்வமாகச் செல்லுபடியாகும் என அறிவித்தனர். அவ்வாறு திருமணம் பதிவு செய்யப்படாவிட்டால் அவர்களுடைய குடும்ப உறவு சட்டபூர்வமான உறவாக அங்கீகரிக்கப்படாது. அதாவது அடிமைகளுக்குத் தாய் தந்தை குழந்தைகள் என்ற உறவு முறை இல்லை என்பதே சட்டத்தின் நிலைப்பாடு ஆகும். எனவே, கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தால் அவர்கள் சுதந்திரமான மனிதர்கள் என்று பெயரளவிலாவது அங்கீகரிக்கப்படுவார்கள். இல்லாவிட்டால் அவர்கள் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாகவே இருக்க நேரும் என்பதுதான் இதன் உட்பொருளாகும். 

ஆங்கிலேயர்களின் இந்த அராஜகமான இனவெறி, மதவெறி நடவடிக்கையை எதிர்த்துத்தான் 1913இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதநேயம் மிக்க வழக்கறிஞர் தென்னாப்பிரிகாவில் போராட்டம் நடத்தவும், தில்லையாடி வள்ளியம்மை போன்றோர் தங்கள் இன்னுயிரை அப்போராட்ட வேள்வியில் ஆகுதியாகவும் நேர்ந்தது. வரலாறு இப்படியிருக்க நடுநிலையோடு ஆய்வு செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஐரோப்பிய மையவாத ஆய்வாளர்களின் பார்வைக்கு வேறு சித்திரம்தான் தென்படுகிறது. 

ஆங்கிலேயர்கள் தென்னாப்பிரிகர்களுக்கு நாகரிகத்தைக் கற்பிக்க வேண்டும் என்ற ‘நல்ல' எண்ணத்துடன்தான் தென்னாப்பிரிக்காவைக் கைப்பற்றினார்கள் என்றும், ஒப்பந்தக் கூலிகளாக ஆயிரக்கணக்கில் இந்தியர்களை அங்குக் குடியேற்றி அவர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றி அவர்கள் மூலம் படிப்படியாகத் தென்னாப்பிரிக்கர்களையும் நாகரிகமானவர்களாக மாற்ற வேண்டும் என்றுதான் ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள் என்றும்கூட இத்தகைய ஆய்வாளர்கள் எழுதுவார்கள். 

ஒருவகையில் பார்த்தால் இத்தகைய ஆய்வாளர்களைக் குறை சொல்வதில் பொருளில்லை. ஆங்கிலேயர்கள் நம்மை வென்றார்கள்; நாம் அடிமையானோம் என்பது வரலாற்று உண்மை. அடிமைகளின் குரல் என்றைக்குமே வரலாற்றில் இடம் பெற்றதில்லை என்பதும் உண்மைதான். வென்றவர்கள் எழுதி வைத்ததுதான் வரலாறு. இதுதான் வரலாற்றுப் பாடமாக இருந்து வருகிறது. ஆனால், வரலாற்றாய்வு என்பது இந்தப் பாடத்துடன் முடிந்துவிடுவதில்லை. வென்றவர்கள் அந்த வெற்றியை அடைவதற்குக் கையாண்ட உத்திகள் என்னென்ன; தோற்றவர்களின் பலம் எது? பலவீனம் எது? என்பதையெல்லாம் ஆய்வதுதான் வரலாற்றாய்வு. அந்த ஆய்வின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்தான் ஆய்வுப் பாடம். 

இத்தகைய ஆய்வுப் பாடத்தைக் கற்பிக்க வேண்டிய பொறுப்பு வரலாற்று ஆய்வாளர்களுக்கு இருக்கிறது. இதற்கு மாறாக இந்தியர்களிடம் இருந்தது, இருப்பது, இன்று வரை தொடர்வது எல்லாம் பலவீனம் மட்டுமே என்ற பாடத்தையே மீண்டும் மீண்டும் வரலாற்று மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்குக் கற்பித்து வருகின்ற இழிசெயலினையே மேற்குறித்த ஆய்வாளர்கள் தவறாது செய்து வருகின்றனர். 

வரலாறு குறித்த ஒரு தரவினைப் பதிவு செய்வதென்பது ஆய்வின் ஒரு கட்டம். அதற்குப் பொருள் விளக்கம் கூறுவதென்பது ஆய்வின் அடுத்த கட்டம். சாணார்கள் தீண்டத் தகாதவர்களாகவும் அடிமைகளாகவும் இந்து சமூகத்தில் உயர் சாதியினரால் நடத்தப்பட்டனர் என்ற ஒரு கருத்தினை ஆய்வாளர் டிக் கூய்மன் மேற்குறித்த நூலில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அதே நேரத்தில் மேலாளர்களிடம் பணிந்து நடத்தல், பிரச்சினைகளை உருவாக்காமல் - கலகம் செய்யாமல் - இருத்தல் போன்ற நற்பண்புகள் அவர்களிடம் காணப்படுவதற்குக் காரணம் கிறிஸ்தவ மிஷனரிமார்களால் கற்பிக்கப்பட்ட கட்டுப்பாடு, கடமை உணர்வு ஆகியவைதாம் என்றும் குறிப்பிடுகிறார்.8 

அதாவது, இந்த மண்ணின் மைந்தர்கள் வெறும் களிமண் கட்டிகள். இந்தக் களிமண் கட்டிகள் நல்ல வடிவழகு மிக்க பொம்மைகளாக - தலையாட்டி பொம்மைகளாக என்றே வைத்துக் கொள்ளலாமே - உருவாகியுள்ளனர் என்றால் அது பொம்மை செய்தவனின் திறமை காரணமாகத்தான் என்பது போன்ற அப்பட்டமான ஆணவம் மிக்க ஐரோப்பிய மைய நோக்கு இதில் தொனிப்பதைக் காணலாம். 

இதில் ஒரு பெரிய நகைமுரண் என்னவென்றால் சான்றோர் சமூகத்தவரின் பணிவான நடத்தை, அடாவடித்தன்மை இல்லாத அணுகுமுறை போன்றவற்றைப் பற்றி 1846ஆம் ஆண்டில் எழுதுகின்ற ஸாரா டக்கர்,9 இது அவர்களின் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று பொருள் கொள்கிறார். சாணார்கள் ஒரு தாசில்தாரைச் சந்தித்து ஒரு புகார் மனு சமர்ப்பிக்க நேர்ந்தால் அலுவலகத் தாழ்வாரத்திற்கு வெளியே நின்று ஜன்னல் வழியாகவே புகார் மனுவைக் கொடுப்பார்கள் என்றும், அவ்வாறில்லாவிட்டால் அலுவலகத்திற்கு அருகிலுள்ள கூரைக் கொட்டகை ஒன்றிற்குச் சென்று தாசில்தார் அவர்களிடம் மனுவைப் பெற்றுக்கொள்வார் என்றும், சாணார் சமூகத்தவரால் ஏற்படும் தீட்டினைத் தவிர்ப்பதற்காகவே அதிகாரிகள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். 

ஒரே விதமான ஆய்வுத் தரவு (அது சரியான தரவுதானா என்ற கேள்வி ஒருபுறமிருக்க) இருவேறு விதமான பொருள் விளக்கங்களுக்கு இடமளித்துள்ள விந்தையை நாம் ஐரோப்பியர்களின் எழுத்துகளில் காணமுடியும். சாணார் சமூகத்தவர் சூத்திரருக்குக் கீழ்ப்பட்ட சாதியினர் என்று ஓரிடத்திலும் (பாகம் 1, பக். 38, ஸாரா டக் கரின் மேற்குறித்த நூல்), சூத்திரர்களுள் உயர்ந்த பிரிவினர் என்று வேறோரிடத்திலும் (பாகம் 2, பக். 49) ஒரே எழுத்தாளர் (ஸாரா டக்கர்) குறிப்பிடுகிற விந்தையையும் காண முடிகிறது. 

மறவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, சூத்திரப் பிரிவினர் அல்லர் என்றும் ஆனால் சூத்திரரின் சில உட்பிரிவினருக்கு இணையான தகுதி உடையவர்கள் என்றும் இருவேறு விதமாக இவர் எழுதியுள்ளார். (பாகம் 2, பக். 49, மேற்படி நூல்.) மறவர்கள் இராமாயணத்தில் குறிப்பிடப்படும் கரடிகள் மற்றும் குரங்குகளின் வம்சா வளியினராக இருப்பது சாத்தியமானதே என்றும் குறிப்பிடுகிறார். (பாகம் 2, பக். 49.) ஸாரா டக்கருடைய கடித வடிவில் அமைந்துள்ள தொகுப்பு நூலான மேற்குறித்த நூலில் இந்து மதப் புராண இதிகாச நூல்கள் இந்த நாட்டு மண்ணின் மைந்தர்கள் மீது ஆரியர்கள் படையெடுத்து நிகழ்த்திய தாக்குதல்களின் நினைவுப் பதிவுகளே என்ற விளக்கம் பல இடங்களில் பதிவாகியுள்ளது. 

திருநெல்வேலிப் பகுதியில் புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவப் பணிபுரிந்த ரெவரெண்ட் டக்கர் என்பவரின் மனைவியாகிய ஸாரா டக்கர், பிஷப் கால்டுவெல் போன்றோருடன் நெருங்கிய பழக்கமும் ஒத்த கருத்தும் உடையவராவார். எனவே, ஆரிய திராவிட இனவாதம் என்பது புராடெஸ்டெண்ட் மிஷனரிமார்களின் செயல் திட்டத்தின் ஒரு முதன்மையான அங்கமாக இடம்பெற்றுவிட்டதில் வியப்பில்லை. 

பெரும்பாலான சாணார்கள் மது அருந்துவதில்லை என்ற போதும்கூட கள்ளிறக்கும் தொழிலோடு அவர்களுக்கு இருந்த தொடர்பும், பனம் பாளையை நசுக்கிவி டுவதற்குப் பசுவின் அல்லது மாட்டின் எலும்பிலான கிடுக்கியைப் பயன்படுத்துவதுமே இந்து சமயத்தில் அவர்கள் தூய்மையற்ற சாதியினராகக் கருதப்படக் காரணமாயின என்று டிக் கூய்மன் குறிப்பிடுகிறார்.10 லண்டன் மிஷனரி சொஸைட்டியின் சார்பில், தென் திருவிதாங்கோட்டுப் பகுதியில் பணிபுரிந்தவர் ரெவரெண்ட் சாமுவேல் மடீர் (கி.பி. 1835-1893) என்பவராவார். இந்து சமயத்தில் நீண்ட காலமாகச் சமூகக் கொடுமைகளையும் பொருளாதார ஒடுக்கு முறைகளையும் எதிர்த்துப் பேசக்கூட இயலாமல் ஏற்றுக்கொள்ள நேர்ந்ததால் சாணார்கள் பயந்த சுபாவமும் அறியாமையும் நிறைந்தவர்களாகவும் அதனாலேயே ஏமாற்றுகிற குணமுடையவர்களாகவும் உள்ளனர் எனத் தமது பணிக்காலத் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள ரெவரெண்ட் சாமுவேல் மடீர் பின்நாள்களில், சாணார்கள் முயற்சியுடையவர்கள் என்றும், பணத்தைச் சேமிக்கத் தெரிந்தவர்களாகவும் புதிய முயற்சிகளில் இறங்க முன்வருபவர்களாகவும் உள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்.11 

சாமுவேல் மடீர் இவ்வாறு முன்னுக்குப்பின் முரண்பாடாக எழுதியுள்ளது வெளிப்படையாகத் தெரிந்துவிடுவதால் இக்குழப்பத்தைச் சரி செய்வது தமது கடமை எனத் தற்கால ஐரோப்பிய ஆய்வாளர் டிக் கூய்மன் முடிவு செய்துள்ளார். சாமுவேல் மடீர் முதலில் குறிப்பிட்டுள்ளதே உண்மை என்று கூறும் டிக் கூய்மன், சாணார்கள் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதால் மகிழ்ச்சியடைந்து அவர்களைக் குளிர்விப்பதற்காக சாமுவேல் மடீர் தாம் முதலில் குறிப்பிட்டதற்கு முற்றிலும் முரணாகப் பின்னாள்களில் எழுதியுள்ளார் என விளக்கமளிக்கிறார். 

இந்த மண்ணின் மைந்தர்களுக்கு இயல்பாக எந்த நற்பண்பும் இருந்ததில்லை என்பது டிக் கூய்மன் போன்ற ஆய்வாளர்களுடைய முடிந்த முடிபு. கிறிஸ்தவ சமயத் தைத் தழுவிய சான்றோர் சமூகத்தவர், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர் என்ற புள்ளிவிவரத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், ஆங்கிலேயர் வழங்கிய கல்வியறிவினைப் பெற்றுத் தங்கள் அந்தஸ்தை உயர்த்திக்கொண்ட சாணார்கள் பிறகு நன்றியுணர்வின்றி ஆங்கிலேயர்களையே எதிர்த்தனர் என்றும், நன்றியின்மை என்பது இந்து சமயத்தில் நீண்ட காலம் இருந்ததால் சாணார் குலத்தவரின் இயல்பில் கலந்துவிட்ட ஒன்று என்றும்கூட இத்தகைய ‘ஆய்வாளர்கள்' எழுதக்கூடும். 

உன்னுடைய வீட்டிற்கு நான் வந்தால் எனக்கு என்ன கொடுத்து உபசரிப்பாய்? என்னுடைய வீட்டிற்கு நீ வந்தால் எனக்கு அன்பளிப்பாக என்ன கொண்டு வருவாய்? என்று கேட்கின்ற மனநிலை போன்றதே இத்தகைய ஆய்வு நோக்கு. விளைந்த நன்மைக்கெல்லாம் பொறுப்பு ஐரோப்பியர்களே; கேடுகள் விளைந்திருந்தால் அவை இந்த மண்ணின் வேரூன்றிவிட்ட மரபுகளால் விளைந்த இழிவுகளே. ஆகா, எவ்வளவு நடுநிலையான ஆய்வுக் கண்ணோட்டம்! 




__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
RE: “தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்”
Permalink  
 


நெல்லைச் சீமையில் சமயப் பணிபுரிந்த பிஷப் கால்டுவெல் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” (Comparative Grammar of Dravidian Languages) என்ற நூலை எழுதியவர் என்பது பலரும் அறிந்த செய்தியே. திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றினைத் தொகுத்து History of Tinnevelly என்ற தலைப்பில் கால்டுவெல் எழுதியுள்ளார். அந்த நூலில் அவர், ஆங்கிலேயரை எதிர்த்து 1790 முதல் 1801ஆம் ஆண்டு வரை போராடிய பாளையக்காரர்களைப் பற்றி இழிவான ஒரு சித்திரத்தை உருவாக்க முனைந்துள்ளார். 

பாளையப்பட்டுகளின் வரலாற்றினை ஆங்கிலேயக் கும்பினியினரின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸி கி.பி. 1803-1806ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொகுத்துள்ளார். பாளையப்பட்டுகளை ஜமீன்தாரிகளாக மாற்றியபோது பாளையப்பட்டுகளின் வரலாற்றை உரிய ஆவணங்களின் அடிப்படையில் அந்தந்தப் பாளையப்பட்டின் கணக்கர்கள் போன்ற அலுவலர்களை வைத்துத் தயாரித்துச் சரிபார்த்துக் கைபீதுகள் (Kaifiats) என்ற பெயரில் இவை மெக்கன்ஸியால் பதிவு செய்யப்பட்டன. காலின் மெக்கன்ஸி, சென்னை கலெக்டர் ஃபிரான்சிஸ் வைட் எல்லிஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்விதக் காழ்ப்புணர்வுமின்றி ஓர் அரசு அலுவலரால் தொகுத்துச் சரிபார்க்கப்பட்ட அதிகாரபூர்வமான இவ்வரலாற்று ஆவணங்களை, “கட்டுக் கதையைவிட மோசமானவை” என்று குறிப்பிடுகிறார் கால்டுவெல். கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில், இந்தியர்களிடமிருந்து வெளிப்படும் வரலாற்றுச் செய்திகள் அனைத்துமே பொய்யும் புனைசுருட்டும்தாம். 

திராவிட இயலின் பிதாமகனாகப் பலரால் கொண்டாடப்படுகிற கால்டுவெல் எத்தகைய ஐரோப்பிய மையவாத நோக்குடனே தம்முடைய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும். மண்ணின் மைந்தர்களை மதம் மாற்ற வேண்டுமென்றால் அவர்கள் மனதிலிருந்து இந்த மண்ணின் மரபுகள்மீதும் தங்களுடைய பூர்விக வரலாறு குறித்தும் இருக்கின்ற பெருமிதத்தோடு கூடிய மரியாதையுணர்வை நீக்கிவிட வேண்டும். அவர்களுடைய தனித்தன்மையான வரலாற்று அடையாளங்கள் எல்லாமே இழிவானவைதாம் என்று போதித்து அவர்களைக் கொண்டே அவர்களின் அடையாளங்களை அழிக்கச்செய்து, அவர்களின் தற்சார்பையும் அழித்துவிட்டால் அவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி ஆங்கிலேயர்களின் மரபும் மதமும்தாம் தங்களை உய்விப்பதற்காக, வாராதவைபோல் வந்த மாமணிகள் என்று எண்ணுவதற்கும், ஆங்கிலேயர்கள்பால் விசுவாசம் மிக்க அடிமைகளாக இருப்பதற்கும் அவர்களை ஆயத்தப்படுத்திவிட முடியும் என்பது கால்டுவெல் முதலிய மிஷனரிமார்களின் செயல் திட்டமாகும். 

அதே வேளையில் ஐரோப்பியர்களிலும், (வெளிநாட்டு - உள்நாட்டு) மிஷனரிமார்களிலும் இத்தகைய காழ்ப்புகள், மத உயர்வு மனப்பான்மை போன்ற திரைகளை விலக்கிவிட்டு உண்மையை எதிர்நோக்குகிற நேர்மையுணர்வு கொண்ட ஒரு சிலர் இருந்திருக்கிறார்கள். அத்தகையோர் விதிவிலக்குகள் ஆவர். இந்தியக் கிறிஸ்தவம் இந்து சமயத்தின் சாதிய ஒடுக்கு முறைகளிலிருந்து தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களுக்கு விடுதலை வழங்கிற்று என்றும், ஆனால் இந்தியக் கிறிஸ்தவத்திலும் சாதி என்ற நச்சரவம் மெல்ல மெல்ல உள்ளே நுழைந்து காலப் போக்கில் படமெடுத்து ஆடத் தொடங்கிவிட்டது என்றும் ஒரு பொய்யான சித்திரத்தை இந்தியக் கிறிஸ்தவ மத நிறுவன அமைப்பு (clergy) வலியுறுத்தி வருகிறது. இன்றைய வெகுஜன அரசியல், வாக்கு வங்கி அரசியல், இட ஒதுக்கீடு அரசியலுக்கு இந்தப் பிரச்சாரம் உகந்ததாகவே இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், வரலாறு காட்டும் உண்மை வேறு விதமானது. 

1835ஆம் ஆண்டில் ரெவரெண்ட் வில்லியம் டெய்லர் என்ற புராடெஸ்டெண்ட் போதகரால் Oriental Historical Manuscripts in the Tamil Language என்ற தலைப்பில் தமிழ் ஓலைச்சுவடி இலக்கியங்கள் அச்சிடப்பட்டன. அந்நூலின் 11ஆம் தொகுதி பகுதி Cயில் அதிவீரராம பாண்டியனின் வெற்றி வேற்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பும் அடங்கியுள்ளது. அந்நூலில் “சான்றோரில்லாத் தொல்பதி இருத்தலின் தேன் தேர் குறவர் தேயம் நன்றே” என்ற வெற்றிவேற்கை நூலின் வாசகம் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: “Rather than dwelling in an ancient country without rulers it is better to live in the woods among wild people who feed on honey.” இங்குச் சான்றோர் என்ற சொல் ஆட்சியாளர் எனப் பொருள்படும் வகையில் rulers என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கவனத்துக்குரியது. 

1865ஆம் ஆண்டில் ஜான் மர்டாக் என்பவரால் Classified Catalogue of Tamil Printed Books என்ற அட்டவணை நூல் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இத்தொகுப்புப் பணியில் ஜான் மர்டாக்குக்கு உதவியவர்களில் ரெவரெண்ட் சற்குணம் வின்ஃப்ரெட் ஐயர் என்ற தமிழறிஞர் (கி.பி. 1817 - 1879) முதன்மையானவராவார். இவர் சான்றோர் குலத்தைச் சேர்ந்த புராடெஸ்டெண்ட் மத போதகர் ஆவார். இவர் கால்டுவெல் போன்ற சமயப் பரப்புநர்களுடன் இணைந்து பணியாற்றிய சமகாலப் புராடெஸ்டெண்ட் மதப் பிரச்சாரகராயினும் தம்முடைய சாதி குறித்த தாழ்வு மனப்பான்மையோ இழிவுணர்ச்சியோ இல்லாதவராவார். இவர் 1870ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட “சான்றோர் குல மரபு காத்தல்” என்ற நூல் பெரும்பாலான மிஷனரிமார்களின் பொய்களைத் தகர்க்கும் ஆற்றலுடைய ஓர் அடிப்படையான நூலாகும். இந்த நூல் இலக்கிய - சாசனச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஆய்வு நூலாகும். திருவெண்காட்டுச் சான்றோர் மடத்துச் செப்பேட்டின் வாசகங்கள் வாசிக்கப்பட்டுப் பொருள் விளக்கத்துடன் வெளியிடப்பட்டிருப்பது இந்நூலின் மற்றொரு சிறப்பாகும்.12 

1880ஆம் ஆண்டில் சாமுவேல் சற்குணர் என்ற அறிஞர் “திராவிடச் சத்திரியர்” என்ற நூலின் (பதிப்பு: கலாரத்னாகரம் பிரஸ், சென்னை) முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்: 

தென்னிந்தியாவிலுள்ள சாதிகள் சிலவற்றைப்பற்றி இந்நாட்டில் வாழும் ஐரோப்பியர் சிலர் எழுதியுள்ளனர். அவர்களுள் இடையன்குடியிலுள்ள பிஷப் கால்டுவெல்லே தலையாயவர் எனக் கருதலாம். பிஷப் கால்டுவெல்லையே இவ்விஷயத்தில் ஆதாரபூர்வமான ஆய்வாளர் என மற்ற எல்லோரும் கருதுகின்றனர். அவர் திருநெல்வேலிச் சாணார்கள் என்ற நூல் எழுதியுள்ளார். அதன் பிறகும் அவர் எழுதிய சில கட்டுரைகளில், “சாணார்களிடையே நிலவும் சில பழக்கங்களைப் பார்க்கும்போது சூத்திர சாதியில்தான் அவர்களைச் சேர்த்துப் பார்க்கவேண்டும்” என்று ஓரிடத்திலும், “சாணார்களின் சில பழக்கங்களையும் நடைமுறைகளையும் பார்க்கும்போது அவர்கள் சூத்திரர்களைவிடக் கீழான சாதியினராகவே தோன்றுகிறது” என்று ஓரிடத்திலும், “சாணார்களில் சிலர் அவ்வப்பிரதேசங்களின் ஆட்சியாளர்களாகத் தோற்றமளிக்கின்றனர்” என்று ஓரிடத்திலும் முன்னுக்குப்பின் முரணாக எழுதியுள்ளார். இது சிந்தனைத் தெளிவின்மையின் விளைவே. 

இத்தகைய உண்மையான வரலாற்றாய்வுக் கருத்துகளுக்கு மகுடம் சூட்டியது போன்று சைமோன்ஸ் பாதிரியாரின் ஒரு குறிப்பு அமைந்துள்ளது. “ஜாதிப் பெருமிதம் குல அபிமானம் போன்ற விஷயங்களைக் கிறிஸ்துவ மதம் அங்கீகரித்ததால்தான் இந்தியாவில் கிறிஸ்துவ மதம் இந்த அளவிற்குப் பரவ இயன்றது” என்று அவர் குறிப்பிடுகிறார். “சாதிக் கொள்கை (பழக்க வழக்கங்கள்) சிலவற்றை மாற்றாமலே கிறிஸ்து மதத்தை அனுசரிக்க இடங்கொடுத்திருந்ததால் இந்தியாவிலுள்ள சகல சாதிகளிலும் (சாதி ஹிந்துக்களிலும்) குலாபிமான விஷயமாய் மகா ரோஷம் மானம் பாராட்டும் சாதியான சான்றோர் தங்களுக்கு இடுக்கண் மிகுதியாயிருந்த காலத்தில் பெருந்தொகையினராய்க் கிறிஸ்து மதத்தில் சேரும்படியாயிற்று” என்று சைமோன்ஸ் பாதிரியார் எழுதியுள்ளார்.13 

“தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற நமது நூல் ஐரோப்பிய மைய நோக்கிற்கு மாறுபட்ட கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது, ஆனால் இந்தியாவின் பொற்காலம் குறித்த புளகாங்கித உணர்வுடன் எழுதப்பட்ட நூலன்று. கூடுமானவரை நடுநிலையுடன் ஆவணங்களை ஆராய்ந்து உண்மையைப் புலப்படுத்தும் நோக்கில் எழுதியுள்ளோம். சான்றோர் குலத்தவர்களுக்கும், வேளாளர்-நாயர் குலத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உயர்ந்த சாதியினர்க்கும் தாழ்ந்த சாதியினர்க்கும் இடையே ஏற்பட்டதன்று. வீழ்ந்துபட்ட பழைய ஆட்சியாளர்களுக்கும், புதிய ஆட்சியாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டமாகும்.14 இந்தப் போராட்டத்தில் திருவிதாங்கோடு பகுதியின் முதன்மையான சில சமூகத்தவர்களான ஈழவர் (இல்லத்துப் பிள்ளைமார்), முக்குவர்-பரதவர், இஸ்லாமியர்கள் போன்றோர் எந்தப் பங்கும் ஏற்காமல் ஒதுங்கி நின்றது; சில வேளைகளில் சான்றோர் சமூகத்தவர்க்கு எதிராக இயங்கியது ஏன்? 

மேற்குறிப்பிட்ட சமூகத்தவருள் ஈழவர் சமூகப் பெண்டிர் நூற்றுக்கு நூறு சதமானத்தினரும் முக்குவர் சமூகப் பெண்டிருள் பெரும்பாலானோரும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இடுப்புக்குமேல் உடை உடுத்தாமலேயே இருந்துள்ளனர் என்பதற்கு நிழற்பட ஆதாரங்கள் உள்ளன. முக்குவர் சமூகத்துப் பெண்டிருள் மிகக் குறைந்த சதமானத்தினர் முலைக்கச்சு என்று சொல்லக்கூடிய மார்புக் கச்சையை மட்டும் அணிந்திருந்ததாகச் சில குறிப்புகளால் தெரியவருகிறது. தோள்சீலை என்பது எஜமானர்கள் அல்லது ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்டிர் மட்டுமே அணிவதற்கு உரிமை உடைய ஆடையாகும். தாங்கள் இந்த மண்ணின் எஜமானர்கள்தாம் என்ற தம் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் வகையிலேயே சான்றோர் குலப் பெண்டிர் தொடர்ந்து தோள்சீலை உடுத்து வந்தனர். 

சமூகப் பொருளாதார அடுக்கில் உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்ட புதிய ஆட்சியாளர்களான நாயர்கள் தங்கள் குலப் பெண்டிர்க்குக்கூட மரபுப்படி உரிமையல்லாத ஒரு வழக்கத்தினைத் தங்களைவிடச் சமூகப் பொருளாதார அந்தஸ்தில் கீழான நிலைக்கு வந்துவிட்ட சான்றோர் குலத்தைச் சேர்ந்த பெண்டிர் இயல்பாகக் கடைபிடித்து வருகிறார்களே என்ற ஆத்திரத்தில் அராஜகச் செயல்களில் ஈடுபட்டனர். சான்றோர் சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர்களே இத்தகைய தாக்குதலுக்கு ஆளாயினர் என்பதால் உயர்மட்டச் சான்றோர் குலப்பிரிவினர் தமக்கு இப்பிரச்சினையில் எந்தவிதத் தொடர்பும் இல்லாததுபோல் காட்டிக்கொண்டு அமைதிகாத்தனர். சான்றோர் சமூகத்தவர் ஓரளவு சமூகப் பொருளாதார அந்தஸ்தைக் காத்து வந்த ஊர்களில் நாயர்-வேளாளர் சமூகத்தவர் அவர்களுக்கெதிரான அராஜகச் செயல்களில் ஈடுபடவில்லை. கலகத்தின் இறுதிக்கட்டங்களில்தான் உயர்மட்டச் சான்றோர்களும் நேரடியாகக் களத்தில் இறங்கினர். நாயர் சமூகத்தவர்கள் சான்றோர் குலப் பெண்டிருக்கு எதிராக எத்தகைய அராஜகங்களில் இறங்கினார்களோ அதற்குச் சற்றும் குறையாத வகையில் சான்றோர் குலத்தவரும் பதிலடி கொடுத்தனர். 

ஆனால், இத்தகைய எதிர் நடவடிக்கை பரவலாக எல்லா ஊர்களிலும் நிகழவில்லை. நாயர்-வேளாளர் சமூகத்தவர் எண்ணிக்கையிலும் பொருளாதாரத்திலும் வலிமையுடன் இருந்த திருவிதாங்கோடு, பத்மநாபபுரம் முதலிய அரசின் மையப் பகுதிகளிலும் இன்றைய விளவங்கோடு வட்டம் பாறைச்சாலை, திருவனந்தபுரம் முதலான இடங்களிலும் சான்றோர் சமூகத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாகப் பல குற்ற வழக்குகள் பதிவாகின. ஆயினும், காவல்துறை, வருவாய் நிர்வாகத்துறை போன்ற அதிகாரம்மிக்க துறைகளில் பதவி வகித்தோருள் நாயர்-வேளாளர் சமூகத்தவர்களே பெரும்பான்மையினராக இருந்ததால் அராஜகத்தைத் தொடங்கிவைத்த நாயர்-வேளாளர் சமூகத்தவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 

நீதிபதி போன்ற செல்வாக்கு மிக்க பதவிகளில் இருந்த ஆங்கிலேயர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாதிக்கப்பட்ட சான்றோர் சமூகத்தவர்கள் பலரை மதமாற்றம் செய்ததோடு அவர்களுக்கு ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பாதுகாப்பும் தார்மீக ஆதரவும் கிடைக்க வகை செய்தனர். தோற்ற அரசியல் கட்சிக்கும், வென்று ஆட்சியைப் பிடிக்கும் கட்சிக்கும் நடக்கும் சண்டையில் தொடர்பின்றி ஒதுங்கி நின்ற மூன்றாம் அணியினர் மற்றும் நடுநிலையாளர்கள் போல ஈழவர் சமூகத்தவர்களும், பிறரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். 

வர்ணாஸ்ரம அமைப்புப்படி வேளாளர் என்ற சாதி சூத்திரர் என்ற நான்காம் வருணப் பிரிவைச் சேர்ந்ததாகும். நாயர் மற்றும் வேளாளர்கள் சூத்திரர்கள் என்றுதான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் 19-20ஆம் நூற்றாண்டின் அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அந்தணர் ஈன்ற காராளர், அரசர் ஈன்ற காராளர் என்ற இரண்டு வகையான வேளாளர்கள் தமிழ் இலக்கண நூல்களில் குறிப்பிடப்படுகின்றனர். இரண்டு பத்திரி வழி வேளாளர்கள் எனக் கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்குரிய தென்காசிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

பரசுராம க்ஷேத்திரம் என்று பெருமிதத்தோடு குறிப்பிடப்படும் கேரளத்தில் நம்பூதிரி பிராம்மணர்களின் பிள்ளைகள் என்று சொல்லத்தக்க நாயர் சமூகத்தவர்கள் 18-19ஆம் நூற்றாண்டுகளில் ஆதிக்க சமூகத்தவராக உயர்ந்தனர். அரசர் ஈன்ற காராளர் என்று சொல்லத்தக்க ஈழவர் (இல்லத்துப் பிள்ளைமார்) சமூகத்தவர் தங்களைச் சூத்திரர்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டதில்லை. ஆயினும், சான்றோர் சமூகத்தவருடன் அவர்களுக்கு இருந்த உறவு நெடுங்காலத்துக்கு முன்னரே அற்றுப் போய்விட்டதாலும் அவர்கள் தங்களை ஆட்சியாளர்களாக நிலைநிறுத்திக்கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாததாலும் நிலவுடைமை உறவுகளில் நாயர் - வேளாளர் அணியினரின் எஜமானத்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாலும் பல வேளைகளில் நாயர் சமூகத்தவரின் பொதுமைப் பண்பாகிய மருமக்கள் தாயத்தைப் பின்பற்றியதாலும் நாயர் சமூகத்தவருக்குக் கட்டுப்பட்டு அடங்கி எதிர் நடவடிக்கை எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தனர். 

குமரி மாவட்ட ஈழவர்களுள் ஒரு பிரிவினர்,தோவாளை தேசத்திலுள்ள சில ஊர்களில் தாங்கள் அரச பரம்பரையினர் எனக் கூறிக்கொண்டு ஆண்டுக்கொருமுறை வரி வசூலித்தலில் ஈடுபட்டனர் என்றும், இதனை 1818ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் (கொல்லம் 993, மீனம் 10) திருவிதாங்கூர் அரசர் ஆணையிட்டுத் தடுத்துவிட்டார் என்றும் தெரிகின்றன.15 தோவாளைப் பகுதியிலுள்ள திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான நம்மாழ்வார் தாயாரின் பூர்விக ஊராகும். நம்மாழ்வாரின் தாயார் ஈழவர் குலத்தவராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. நம்மாழ்வாரின் தந்தை மாறன்காரி, திருவழுதிவளநாட்டு (தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம்) பாண்டிய குலச் சிற்றரச மரபினராவார். இவர் சான்றார் மரபினர் எனக் கருதுவதற்கு ஆதாரங்கள் உள்ளன.16 இந்த அடிப்படையிலேயே தோவாளைப் பகுதியில் ஈழவர்கள், தாங்களும் அரச பரம்பரையினரே எனக் குறிப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. 

பூர்விக அரச குலத்தவரான சான்றோர் குலத்தவருக்கு எதிராக வேளாளர் சமூகத்தவரின் எழுச்சி என்பது வேணாடு எனப்பட்ட பின்னாளைய திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் தொடங்கிற்று. அந்த வரலாற்றை முழுப் பரிமாணங்களுடன் இந்த ஆய்வு நூலின் தொடக்க அத்தியாயங்களில் நாம் காண இருக்கிறோம். அதனுடைய இறுதிக் கட்டம்தான் தோள் சீலைக் கலகம். இது ஒரு சமூகப் புரட்சி என்பதைவிட சமூக-அரசியல் நிகழ்வு என்றுதான் கூறமுடியும். 20ஆம் நூற்றாண்டில் பிராம்மண சமூகத்தவருக்கு எதிராகப் பிராம்மணர் அல்லாத சாதிகளின் எழுச்சி நீதிக் கட்சி (Justice Party) என்ற பெயரிலும் திராவிட இயக்கம் என்ற பெயரிலும் உருவானது போன்றே பூர்விக அரச குலத்தவரான சான்றோர் சமூகத்தவருக்கு எதிராகத் திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் சாதி இந்துக்களான வேளாளர்-நாயர்களின் அதிகாரம் சார்ந்த ஆதிக்க நடவடிக்கை அமைந்தது. எனவே, இது முற்றிலும் சமூக அரசியல் நிகழ்வே. 

வீழ்ந்துபட்ட முன்னாள் அரசியல் ஆட்சியாளர்களான சான்றோர் சமூகத்தவர்கள் புதிய ஆட்சியாளர்களால் இழிவுபடுத்தப்பட்டது புதுமையானதன்று. உலக வரலாற்றில் இதற்கு முன்னோடி நிகழ்வுகள் ஏராளம் உண்டு. யூதர்களின் நாட்டைக் கைப்பற்றிய ரோமானியர்கள் யூதர்களை அடிமைப்படுத்தியதோடு, யூதர்கள் படைக்கலன்கள் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், குதிரையில் சவாரி செய்யக்கூடாது என்றும் ஆணையிட்டனர். அது போன்றே, திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் நாயர்-வேளாளர்கள் சான்றோர் குலத்தவரின் அதிகாரங்களைச் சிறுகச் சிறுகப் பறித்ததோடு அடிமைப்படுத்தவும் முனைந்தனர். ஆங்கிலேயக் கும்பினி அரசின் ஆட்சி இந்தியாவில் ஏற்படாமல் இருந்திருந்தால் திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் இருந்த சான்றோர் குலத்தவரின் நிலை என்னவாக ஆகியிருக்கும் என்பது பரிசீலனைக்குரிய ஒரு கேள்வியாகும். 

நிச்சயமாகச் சான்றோர் குலத்தவர்களுள் பெரும்பகுதியினர் அடிமை நிலைக்கு உடன்பட்டு வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவது என்ற நிலையை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். தாம் வாழ்ந்த பூர்விக ஊர்களை விட்டு நீங்கிச் சான்றோர் சமூகத்தவர் ஓரளவு சமூக அந்தஸ்துடன் வாழ்ந்த பகுதிகளில், அதாவது இன்றைய தோவாளை அகஸ்தீஸ்வரம் வட்டங்களில் குடியேறவோ அங்கும் நிர்ப்பந்தங்கள் நீடித்தால் திருவிதாங்கோடு சமஸ்தானத்தை விட்டே நீங்கி வேறு இடங்களில் குடியேறி வணிகத்திலும் பிற வகை உடலுழைப்புகளிலும் ஈடுபட்டுத் தங்களைத் தற்காத்துக் கொண்டிருக்கவோ செய்திருப்பார்களே தவிர அடிமை நிலைக்கு உடன்பட்டு இருந்திருக்க மாட்டார்கள். சான்றோர் சமூகத்தவர்களின் எதிர்வினை என்பது இத்தகைய ஆக்கபூர்வமான ஒரு செயல்பாடாகவே இருந்துவந்துள்ளது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு. 

இவ்வாறெல்லாம் இருப்பினும் தாங்கள் சார்ந்துள்ள சாதி மதங்களின் விருப்பு வெறுப்புச் சாயல் படிந்த கண்ணோட்டத்துடனும் அரசியல் உள்நோக்கத்துடனும்தாம் பல ஆய்வாளர்கள் தோள்சீலைக் கலகம் பற்றித் தொடர்ந்து எழுதிவருகின்றனர். 

கிறிஸ்தவ மிஷனரிமார்களின் அரசியல் நலன்களுக்கு உகந்த ஆய்வுகள் வலிமையான கல்விப் பின்புலத்துடன் முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பரவலான விளம்பரமும் கிட்டிவருகிறது. கன்னியாகுமரி மாவட்டம், இந்தியாவிலேயே ஒப்பீட்டளவில் கிறிஸ்தவ சமயம் அதிக எண்ணிக்கையுடைய மக்களால் பின்பற்றப்படும் முதன்மையான ஒரு நிலப்பரப்பாகும். மிஷனரிமார்களின் கடாட்சத்தால்தான் அடிமைகளாய் இருந்த சான்றோர் சமூகத்துப் பெண்டிர் தோள்சீலை உடுத்துகின்ற சலுகையைப் பெறமுடிந்தது என்ற பொய்யைக் கோயபல்ஸ் பாணியில் திரும்பத் திரும்ப வலியுறுத்தினால்தான் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்ற சான்றோர் சமூகத்தவருக்கு இம்மதத்தின்பால் நன்றியும் விசுவாசமும் நீடிக்கும் என்பதாலும், இந்து சமயத்தைப் பின்பற்றி வருகிற சான்றோர் சமூகத்தவரையும் கிறிஸ்தவ மதத்திற்குக் கொண்டுவந்து சேர்க்க முடியும் என்பதாலும்தான் ஒரே பொய் திரும்பத் திரும்ப வலியுறுத்தி எழுதப்பட்டு வருகின்றது. 

தம் பூர்விகப் பெருமிதத்தைச் சான்றோர் சமூகத்தவர் உணர்ந்துவிட்டால் அவர்களிடத்தில் இந்து மதத்தின்மீது ஊட்டப்பட்டுள்ள துவேஷ உணர்வு குறைந்துவிடும் என்ற எண்ணம்கூட இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். இழிந்த நிலையிலிருந்த சாணார் சமூகத்தவர்களைத் தங்களது தன்னலமற்ற தொண்டும், தாங்கள் வழங்கிய கல்வியும்தான் எழுச்சி பெறச்செய்து சமூகப் புரட்சியில் ஈடுபட வைத்தது என்ற சித்திரத்தை ஒரு முன்னுதாரணமாக இந்து சமூகத்தின் பிற விளிம்பு நிலைச் சாதியினர் மனத்தில் பதியச் செய்வதும் இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களுக்குரிய உள்நோக்கமாக இருக்கக்கூடும். 

நாம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்கின்ற கொள்கைகளுக்கு உகந்த வகையிலும், உயர்த்திப் பிடிக்கின்ற கொடிகளின் வண்ணங்களுக்குத் தகுந்த வகையிலும் ஆவணங்களுக்குப் பொருள் விளக்கம் சொல்லி எழுதுவதென்பது பிரச்சாரமாகுமே தவிர ஆய்வாகாது. அதே வேளையில் பழியையெல்லாம் பிறர் தலையில் சுமத்துவதன் மூலம் நெஞ்சத்தில் கனக்கின்ற குற்றச்சுமையைத் தவிர்க்க முயல்வது நியாயமற்ற முயற்சியாகும். எனவே, இந்த இருவேறு துருவ நிலைகளாலும் ஈர்க்கப்பட்டுவிடாமல் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தும் நோக்கில் நியாயமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த வகையில் இது ஒரு முன்னோடி ஆய்வாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். இருக்குமென்று நம்புகிறோம். 

அடிக்குறிப்புகள்: 

1 பக். 91. “திருவிதாங்கூரில் சான்றோர் மக்கள் புரட்சி” என்ற பெயரில் தமிழாக்கம்: இளந்தோட்டம் சுகுமாறன், வெளியீடு: சாந்தினி பதிப்பகம், கிறிஸ்டோபர் நகர், பெருவிளை, நாகர்கோவில் - 629003, 2005. 

2 மொழிபெயர்ப்பாளர் இளந்தோட்டம் கு. சுகுமாறன், விளவங்கோடு வட்டம் கிள்ளியூர் துரத்தார் வம்சத்தவர் என்பதை “இளந்தோட்டம் கு. சுகுமாறன் சுயசரிதை”யில் பதிவு செய்துள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை என்பது ஆராயப்படவேண்டியது. சமுதாய சிந்தனை சிறப்பு மலர் - Kanyakumari Institute of Development Studies, Nagercoil - 629001, 2007. துரத்தார் அல்லது துரக்காரர் பதவி குறித்தும் நமது நூலில் உரிய இடத்தில் விளக்கப்படும். 

3 1881 முதல் 1891ஆம் ஆண்டுவரை கால்டுவெல் கோடைக்கானலில் இருக்க நேர்ந்தது. அது குறித்து இந்நூலில் உரிய இடத்தில் விவரிக்கப்படும். 

4 Robert Caldwell - A Scholar Missionary in Colonial South India, Y. Vincent Kumaradoss, ISPCK, New Delhi - 110006, 2008. இந்நூலில் இக்கருத்து பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

5 பக். 106, திராவிடச் சான்று - எல்லிஸும் திராவிட மொழிகளும், தாமஸ் டிரவுட்மன், தமிழில்: இராம. சுந்தரம், காலச்சுவடு, நாகர்கோவில்-629001, 2007.

6 சால்பு என்ற பண்பின் அடிப்படையில் தோன்றிய சான்றோர், சான்றார் என்ற சொற்களே சாணார் என்ற வழக்குச் சொல்லின் மூல வடிவங்கள் என்பதை திவ¡ன் பேஷ்கர் வி. நாகமையா குறிப்பிட்டுள்ளார். பார்க்க: p. 392, Travancore State Manual, Vol. II, V. Nagam Aiya. Printed at the Travancore Government Press, Trivandrum, 1906. 

7 இந்நூல் உள்நோக்கத்தோடுகூடிய ஆய்வு நூலாயினும், தரவுகள் மிகவும் கவனத்துடனும் நிபுணத்துவத்துடனும் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதும் உண்மையே. நமது ஆய்வுக்கு மிகவும் பயன்பட்ட நூல்களுள் இதுவும் ஒன்றாகும். Conversion and social equality in India: The London Missionary Society in south Travancore in the 19th century, Dick Kooiman, Manohar Publishers, New Delhi - 110002, 1989. 

8 pp. 201-202, Conversion and Social Equality in India. 

9 p. 38, South Indian Sketches, Sarah Tucker, James Nisbet and Co., London, 1842. 

10 p. 17, Conversion and Social Equality in India. 

11 p.41, Land of Charity, Samuel Mateer, First Published in 1872, Republished by Asian Educational Services. 

12 இச்செப்பேடு தற்போது எங்குள்ளதென்பது தெரியவில்லை. 

13 எம்.டி.சி. காரியதரிசியாக இருந்த ரெவ. ஏ.ஆர். சைமோன்ஸ் திருநெல்வேலிப் பகுதியிலுள்ள சான்றோர் குலத்தவரிடையே விஜயம் செய்துள்ளார். அப்போது அவர் தெரிவித்த கருத்துதான் இது. (பக். 68, நாடார் குல வரலாறு. ஜெ.எம். குலசேகரராஜ், அச்சிட்டோர்: டார்லிங் பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, 1918.) 

14 சான்றோர் சாதியினர், முற்காலத்தில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் என்ற உண்மையை வி. நாகமையா குறிப்பிட்டுள்ளார். pp. 392-393, Travancore State Manual, Vol II. 

15 pp. 563-564, The Travancore State Manual, Vol III. 

16 “நம்மாழ்வாரும் நாமும்” என்ற நூல், ஆ. இராஜகோபால் நாடார் என்பவரால் கள ஆய்வுகளின் அடிப்படையில் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. வெளியீடு: ஏ.ஆர். ஜெயசிங் அண்டு பிரதர்ஸ், 76, தாணா தெரு, புரசைவாக்கம், சென்னை - 600007. நம்மாழ்வாரை, ‘மகிழந்தார்மாறன்' எனக் குறிப்பிடுவது மரபு. மகிழம்பூ மாலை, சான்றோர் சமூகத்தவர்க்குரியது எனச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard