அன்றாட வாழ்வில் துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்கும் ஏழை எளிய மக்கள் தமது துன்பங்களை கடவுள் தீர்த்து வைப்பார் என நம்புகின்றார்கள். கடவுளின் பிரதிநிதிகளாக தென்படும் மதவாதிகளின் பேச்சில் மயங்கி, அவர்கள் கோரும் பணத்தை காணிக்கையாக அளிக்கின்றனர். இத்தகைய விளிம்பு நிலை மனிதர்களையும், துன்பப்பட்டோரையும் மூலதனமாக்கி தமது செல்வச் செழிப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர் இத்தகைய மதவாதிகள்.
உலகில் இன்று நல்ல லாபம் தரும் ஒரு வியாபாரமாக இருப்பது ஆன்மிக வியாபாரங்களே. எங்கு பார்த்தாலும் புதிது புதிதாக கோவில்கள், திருச்சபைகள், பிரசங்கிகள், சாமியார்கள் என புற்றீசல்களாய் புறப்பட்டு வந்த வண்ணமே உள்ளனர். உலகில் எந்தவொரு பெரும் தொழில் நிறுவனங்களை விடவும், அதிகமான செல்வங்களை யார் வைத்துள்ளார்கள் என்பதை அறிவீர்களா ? சாமியார்கள் தான். அதற்கு இன்ன மதம் என்ற வேறுபாடுகளே கிடையாது.
பொதுவாகவே கிறித்தவம் என்றால் பொது சேவை செய்பவர்கள், மக்கள் ஊழியம் செய்பவர்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கின்றது. ஆனால் அவை யாவும் எந்தளவுக்கு உண்மை என்பதை இன்றைய இணைய சமூகம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன. எல்லா மதவாதங்களை போலவும், கிறித்தவமும் பணம், அதிகாரம் ஆகிய இரண்டையும் பெறும் நோக்கிலேயே தான் தொடங்கப்பட்டது, இன்றளவும் செயல்பட்டும் வருகின்றது.
கத்தோலிக்கத்தின் போப்பாண்டவர், இஸ்லாமிய முப்திகள், கிறித்தவ போதகர்கள், இந்து சாமியார்கள், பௌத்த மடாதிபதிகள் என பற்பல பெயர்களில் உழைக்கும் மக்களை கடவுளின் பெயரால் சுரண்டி வருகின்றனர். இந்த சுரண்டல்களுக்கு மட்டும் வளர்ந்த நாடு, வளரும் நாடு, கற்றோர், பாமரர் என்ற வேறுபாடுகளே கிடையாது எனலாம்.
மிகுந்த ஏழைகள் நிறைந்த நைஜீரிய நாட்டில் மட்டும் கோடிக் கணக்கான சொத்துக்களை உடைய பற்பல போதகர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் பலரும் சுவிசேச திருச்சபைகளை நடத்துவோர்கள். இவர்கள் எண்ணெய் கிணறுகள், விடுதிகள், தொலைக்காட்சிகள், பங்குச் சந்தைகள், பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் என தமது வியாபாரத்தை விரிவாக்கியுள்ளனர். பலரும் தனியாக விமானங்கள், உலங்கு வானூர்திகள் கூட வைத்துள்ளனர். ஏழைகள் நிரம்பிய நைஜீரியாவிலேயே இப்படி என்றால் அமெரிக்கா போன்ற நாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
கென்னத் கோப்லாண்ட், கிரப்லோ டாலர், பிசப் எத்தி லாங்க், ஜான் காகி,பென்னி கின், ஜோயல் ஓஸ்தீன், எட் யங்க், பிராங்கிளின் கிரகம், ரிக் வாரன், ஜோய்ஸ் மேயர் என இந்த பட்டியல் நீள்கின்றது. இவர்கள் எல்லோரும் சாதாரண போதகர்கள் இல்லை கோடிஸ்வர போதகர்கள்.
மதங்களில் நல்லதே இல்லையா என கேட்பவருக்கு நிச்சயம் நல்லவை என்பது அனைத்திலும் இருக்கின்றது தான், ஆனால் எதற்கும் ஓர் அளவுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். ஒரு துளி நஞ்சைக் கூட மருந்தாகவும் பயன்படுத்தலாம், ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமுதும் கூட நஞ்சாகி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.