மாம்பலம் மாமி மெஸ்ஸில் தயிர் சாதம் சாப்பிடுவதை விடவும் பேரின்பம் வேறெதிலும் கிடைத்திடாது. தோழருக்கு மாமிமெஸ் தயிர்சாதமும் வடுமாங்காவும் போதும் வெறெதுவும் வேண்டாம். அப்படியாகப்பட்ட ஒரு மதியவேளை தயிர்சாதம் முடித்து திநகர் முப்பாத்தம்மன் கோயில் பக்கமாக பைக்கில் போய்க்கொண்டிருந்த போது அந்த போஸ்டர் கண்ணில் அகப்பட்டது!
(படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)
சகோ.இரா.மணி ஐயர் – மனந்திருந்திய பூசாரி என்கிற அந்த மஞ்சள் வண்ண போஸ்டரை கண்டதுமே.. வண்டி பிரேக் அடித்து நின்றது. அருகில் போய் பார்த்தால் ஏதோ சுவிஷேச அழைப்பு போஸ்டரை போல இருந்தது. அதேதான்! ஆஞ்சநேயருக்கும் அல்லேலுயாவுக்கும் என்னய்யா சம்பந்தம் என்பது புரியாமல் அதை ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். மாம்பலம் மாமிகளை கவர் பண்ணி மதமாற்றம் பண்ண புது டெக்னிக் யூஸ்பண்றாய்ங்க போலருக்கே பாஸு என பேசிக்கொண்டோம்.
ஆனால் சில நாட்களுக்கு முன் பம்மலில் ஒரு வேலையாக பயணம் செய்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இன்னொரு போஸ்டர். இதிலும் பார்ப்பன பெண்மணி (சுசிலா மாமி!) ஒருவர் கிறிஸ்தவராக மதம் மாறியும் விடாப்பிடியாக தன்னுடைய சாதிப்பெருமையை கைவிடாமல் உடும்புபிடியாக பிடித்துக்கொண்டிருந்தார். மணி ஐயரை விடவும் இவர் ஒருபடிமேலே போய் கிறிஸ்தவ பிராமண சேவா சமிதி என்று அமைப்பு வேறு வைத்திருக்கிறார்கள்.
(படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)
அமாவசை நாளில் சிறப்பு பூஜை வேறு உண்டு. பில்லிசூனியங்களை எடுக்கிறார்களாம். பிசாசுகளை விரட்டுகிறார்களாம்! எண்ணெய்போட்டு ஸ்பெசல் பூஜை வேறு. உன்னோடு கூட இருந்து நான் செய்யும் காரியங்கள் பயங்கரமாய் இருக்கும் – யாத் 39:10 பைபிளில் இல்லாத வாசகங்களை போட்டு பயமுறுத்துகிறார்கள். பைபிளில் அப்படியெல்லாம் வாசகங்கள் கூட இல்லை!
**********
இந்த மொக்கை கிறிஸ்தவ பிராமண கோஷ்டிகளின் காமெடிக்கு நடுவில் பொள்ளாச்சி நசனின் தமிழம் தளத்தில் பழைய சிற்றிதழ்களை புரட்டிக்கொண்டிருந்த போது செய்தி துணுக்கு ஒன்று கண்ணில் பட்டது. யாரோ ஒரு பிராமணர் வேறு சாதி ஆள் ஒருவரிடம் பணம் வாங்குகிறார். கடன் கொடுத்தவன் திருப்பி கேட்க போன இடத்தில் நடக்கும் பிரச்சனையில் மாடுமுட்டி இறந்தார் என்னும் செய்தி எவ்வளவு நேர்த்தியாக திரித்து எழுதியிருக்கிறார்கள் என்பதை படித்து பாருங்களேன். (கல்பதரு இதழ் 1917ல் வெளியான செய்தி இது). இதை படிக்கும் போது எழுத்தாளர் மாமல்லன் அண்மையில் எழுதிய நிறம் கதையின் சாயல் அச்சு அசலாக தெரிவதை தவிர்க்க முடியவில்லை.