New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலப்பதிகாரம் - சிலம்பின் காலம் - இராம.கி


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சிலப்பதிகாரம் - சிலம்பின் காலம் - இராம.கி
Permalink  
 


சிலம்பின் காலம் -1

 
கீழே வரும் கட்டுரைத் தொடர் முதன்முதலில் 2009 திசம்பர் மாதம் பாரதிதாசன் பல்கலைக்கழகமும், செம்மொழித் தமிழ் நிறுவனமும் சேர்ந்து நடத்திய செவ்விலக்கியப் பயிலரங்கில் ஒரு பரத்தீடாக (presentation) அளிக்கப்பட்டது. அப்படி அளிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்த பேரா. க.நெடுஞ்செழியனுக்கு முதற்கண் என் நன்றிகள். புதிய கண்ணோட்டங்களை வரவேற்கக் கூடியவர் அவர். படைப்பவரின் பின்புலம் பார்க்காது (வேதிப் பொறிஞனாய் இருந்து ஓய்வு பெற்று தமிழ்த் துறையிலும், வரலாற்றிலும் இப்பொழுது உழன்று கொண்டிருப்பவன் என்ற என் பின்புலம் பார்க்காது) படைப்பை மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு சில அரிதான தமிழறிஞர்களில் அவரும் ஒருவர். அங்கு கூடியிருந்த பலரும் என் பரத்தீட்டைப் பார்த்து, கேட்டு, வெகுவாகப் பாராட்டித் தங்களுடைய முன்னிகைகளைத் தந்தார்கள். மனத்திற்கு நிறைவாக இருந்தது.

அந்த முன்னிகைகள் என்னை மேலும் தூண்டி, அவற்றின் வழி சில திருத்தங்களுடன் என் பரத்தீட்டை ஒரு கட்டுரையாக மாற்றி, கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற் படிக்கும் வகையில் அனுப்ப முன்வந்தேன். ஒருபக்கக் கட்டுரைச் சுருக்கம் எழுதி அனுப்ப வேண்டும் என்று மாநாட்டினர் சொன்னார்கள்; அனுப்பி வைத்தேன். அனுப்பும் போதே என் உள்ளூற ஒரு ஐயப்பாடும் எழுந்தது. இதை ஏற்பார்களா? நான் வெளியாள் ஆயிற்றே? 

பலரையும் போல, முகனமாக (modern) எழுந்துள்ள ஏதேனும் ஒரு பொதுத் துறையில் கட்டுரை எழுதாமல், நாட்பட்டு நிலைத்து ஆகிவந்த துறையில் [இங்கு வரலாறு] வெளியாட்கள் உள் நுழைந்து, ஏற்கனவே கல்லெழுத்துப் போல் ஏற்கப்பட்ட கருத்தீட்டை மறுக்கின்ற கட்டுரையை, மரபுசார்ந்த வரலாற்றாய்வாளர்கள் ஏற்பார்களா? ”இவன் யார்? நேற்றுவந்த கற்றுக் குட்டி, நிலைத்தூன்றிய எங்கள் கருத்துக்களை எதிர்த்துச் சொல்லுவதற்கு இவனுக்கு என்ன துணிச்சல்?” என்று கட்டுரையைத் தேர்வு செய்யும் குழுவினரும், அமைப்பாளரும் எண்ணமாட்டார்களா? ”சிலம்பின் காலம் இரண்டாம் நூற்றாண்டில்லை, அதற்கும் 200 ஆண்டுகள் முந்தியது என்று சான்றுகளுடன், தருக்கத்துடன், நிறுவ முற்படும் இந்தக் கட்டுரை ஏற்கப்படுமா? - என்ற எண்ணம் இடைவிடாது ஊறிக் கொண்டே இருந்தது. என் கெழுதகை அன்பர்கள் ஒருசிலர் (என்னுடைய பரத்தீட்டைப் படித்தவர்கள், கேட்டவர்கள்) “கட்டுரை ஏற்கப்படும், தேவையற்று கவலுகிறீர்கள்” என்று என்மேல் இருக்கும் அன்புணர்வினாற் ஆற்றுப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். நானும் அவர்கள் பேச்சிற்காகப் பொறுத்துப் பார்த்தேன். முடிவில் ”கட்டுரை வந்து சேர்ந்தது” என்று சொன்ன மாநாட்டு அழைப்பாளர்கள் கட்டுரையை ஏற்கவில்லை. ”என்ன காரணம்?” என்றும் அவர்கள் இதுவரையும் சொல்லவில்லை. ஒரு சில அன்பர்கள் விசாரித்துப் பார்த்த பொழுதும் சரியான விவரம் கிடைக்கவில்லை. ”ஒருவேளை அவர்கள் எதிர்பார்க்கும் தரம் என் கட்டுரையில் இல்லை போலும்” என்று எண்ணி என்னைச் சமதானம் செய்துகொண்டேன். 

’சரி, அதனால் என்ன? இந்த மடம் இல்லையென்றால் இன்னொரு மடம் என்ற எண்ணத்திற் கட்டுரையை மேலும் விரிவாக்கி ஒரு தொடராகவே மாற்றி என் வலைப்பதிவிலும், ஓரிரு மடற்குழுக்களிலும் போடுவோம்’ என்ற விழைவில் தமிழ்கூறு நல்லுலகிற்கு இந்தத் தொடரைப் படைக்கிறேன். நான் ஆழ அறிந்த செய்திகளைத் தொகுத்து, இடையே சில இன்றியமையாத கருதுகோள்களையும் பிணைத்து, முடிவில் ஏரணம் உள்ளிருப்பதாக உறுதிப் பட்டு, இந்தத் தருக்கக் கட்டுரையைத் தருகிறேன். ”படிப்போரே எழுத்தாளனின் உரைகல்” என்று சொல்லுவார்கள். உங்களைத் தவிர வேறு யார் எனக்குச் சொல்லவேண்டும்? ஏதேனும் தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். திருத்திக் கொள்வேன்.

பின்னால் முடிந்தால் சிலம்பைப் பற்றிய என்னுடைய மற்ற கட்டுரைகளோடு சேர்ந்து ஒரு பொத்தகமாகப் போடும் எண்ணமும் உண்டு. இனி உங்கள் வாசிப்பிற்கு. 

அன்புடன்,
இராம.கி. 

சிலம்பின் காலம் 

முனைவர் இராம.கி.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

கட்டுரைச் சுருக்கம்

வரலாற்றுக் காலக்கணிப்பு முற்றைப் புள்ளிகளால் (absolute markers) ஒழுங்கு செய்யப் படுவதைச் சொல்லி, இந்திய, தமிழக வரலாறுகளின் முற்றைப் புள்ளிகளையும், சிலம்பின் பழைய காலக் கணிப்புக்களையும் இக்கட்டுரை முதலில் தெரிவிக்கிறது. அதோடு, காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165 ஆகவும், முதலாம் கயவாகு காமினியின் காலத்தை கி.பி.171-193 ஆகவும் கொண்டு, பழந்தமிழக வரலாற்றை ஒழுங்கு செய்வதையும் கேள்வியெழுப்புகிறது.

அடுத்து, மேடைக்கூத்து வடிவங்கொண்ட சிலம்பிற்குள், முன்னால் வரும் பதிகமும், கடைசியில் வரும் வரந்தரு காதையும், மற்ற காதைகளோடும், உரைபெறு கட்டுரையோடும், பெரிதும் முரண்படுவதால், அவற்றை இளங்கோ எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பது சான்றுகளோடு தெளிவாக நிறுவப் படுகிறது. [அதே பொழுது, இளங்கோ எழுதாத போதும், உரைபெறு கட்டுரையில் வரும் செய்திகளின் இயலுமைக்காக உரைபெறு கட்டுரை ஏற்கப் படுகிறது.]

அடுத்து, சிலம்பிற் புகழப்படும் கரிகாலன் ”சிலம்புக் காலத்திற்கு மிகவும் முற்பட்டோன்” என்பதை விளக்கி, அவன் வட படையெடுப்பு மகதன் அசாதசத்துவின் கடைசியில், அன்றேல் அவன் மகன் உதயனின் தொடக்கத்தில், கி.மு.462க்கு அருகில், நடந்திருக்கலாம் என்பது நிறுவப் படுகிறது. 

அடுத்து, காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டைக் கொண்டு, சிலம்பிற்கு முன்பிருந்த மூவேந்தர் பின்புலத்தை ஆய்ந்து, செங்குட்டுவன் காலத்தையொட்டி கிட்டத்தட்ட 9 சேரர் இருந்திருக்கலாம் என்பதையும், செங்குட்டுவனின் வஞ்சி இன்றையக் கேரளத்துச் சுள்ளியம் பேரியாற்றுக் கரையில் தான் இருந்தது என்பதையும் நிறுவுகிறது. நெடுஞ்செழியன் மேல், நாட்டு மக்களுக்கு இருந்த கோவமும், பாண்டியநாட்டில் சட்டம்-ஒழுங்கு குலைந்திருந்த நிலையும், விளக்கப் படுகின்றன. 

செங்குட்டுவனின் வடசெலவு கண்ணகி பொருட்டா, அன்றி வேறொன்றா என்பதும் கட்டுரையில் அலசப் படுகிறது, மகதத்தில் இருந்த சுங்க அரச குடியினர் விரிவும், அவருக்குப் பின்வந்த கனவர்/கனகர் பற்றியும், இக்காலத்துச் சாதவா கன்னர் நிலையும், தெளிவாக விவரிக்கப் படுகின்றன. நூலில் வரும் செய்திகளைப் பார்த்தால், பெரும்பாலும் கி.மு.87-69க்கு நடுவில், தன் நாட்டுப் பெரும் பகுதியை இழந்து, ஆட்சி வலி குறைந்திருந்த, இலம்போதர சதகர்ணி காலத்திலேயே, செங்குட்டுவனின் வடசெலவு நடந்திருக்கலாம் என்பது நிறுவப் படுகிறது.

அதோடு, ”கனகவிசயர் ஒருவரே, கனகர், விசயர் என இருவரில்லை” என்ற செய்தி நிறுவப் படுகிறது. கனக விசயன் என்பான் சுங்கரை வீழ்த்திப் பின்னால் மகதம் கைப்பற்றிய கனக வசுதேவனின் தந்தையாக இருந்திருக்கலாம் என்பதும் உணர்த்தப்படுகிறது. ”பாலகுமாரன் மக்கள்” என்னும் சொற்றொடர் அவந்தி அரச குடியினரைக் குறிப்பதும், கனக விசயனோடு இருந்த ஆரிய மன்னரின் அடையாளமும், சுட்டிக் காட்டப் படுகிறது. படைபோன வழியாய், அன்றையப் பழம் இந்தியாவின் தக்கண, உத்தரப் பாதைகள் விவரிக்கப் படுகின்றன. 

கடைசியில் கற்கோள், நீர்ப்படை, கங்கைக்கரையில் மாடலன் கூற்று, போருக்குப் பின் நடந்தவை, நடுகல், வாழ்த்து ஆகியவை சுருக்கமாய்ச் சொல்லப் பட்டு, சிலம்புக் கதை நடந்த காலம் பெரும்பாலும் மகதத்துக் கனவர் ஆட்சிக்குச் சற்று முன், கி.மு.75-80யை ஓட்டியதே என்றும், அது உறுதியாகக் கி.பி.177-க்கு அருகில் அல்ல என்றும் தெளிவாக நிறுவப் படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பின் காலம் - 2

 
தோற்றுவாய்:

”ஆரியர் கருத்தாடல்” என்னும் தலைப்பில், 2007 இல், பேரா. தாமசு ஆர் டிரௌட்மன் ஒரு நூலைத் தொகுத்தளித்தார். அதில் சப்பானைச் சேர்ந்த, தென்னிந்திய வரலாற்றாசிரியர் பேரா. நொபுரு கராசிமாவின் சிறப்பான சொற்றொடர் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்(1)

”The great Japanese historian of South India, Noboru Karashima, speaks of the ‘whispering’ of the inscriptions, by which he means the subtle facts that can only be found by paying close attention to the small details of a text.” 

கராசிமாவின் குறிப்பிடத்தக்க இச்சொற்றொடரைப் படித்த போது, இன்னோர் எண்ணமும் சட்டென்று எழுகிறது. “கல்வெட்டுக்கள் மட்டுமா முணுமுணுக்கின்றன? காப்பியங்களும்தான் முணுமுணுக்கின்றன. ஆனால், நம்மில் எத்தனை பேர் அதைக் கூர்ந்து கவனிக்கிறோம்?”

பொதுவாகத் தமிழர் சார்ந்த இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் போன்ற ஆவணங்களை, மேம்போக்காக இரண்டாமவர் கருத்துக்களை ஒட்டியே, நம்மிற் பலரும் படிக்கிறோம். அதோடு ஏற்கனவே வழக்குற்ற கருத்துக்களுக்கு மாறாய் அவற்றை அணுகினால், வரலாற்றாசிரியர் பலரும் ஏற்பதில்லை. பெரும்பாலும், மூல ஆவணங்களை, நாமே ஆழப் படித்து, ஏரணத்தோடு புரிந்து அதன்வழி நம் நிலைப்பாடுகளை எடுப்பதில்லை. இரண்டாமவர் புரிதலையே உச்சிமேற்கொண்டு, அதன்படி உருவான பொதுக்கருத்தையே நம்மைச் சுற்றியுள்ளோரிடம் பரப்பவும் செய்கிறோம். 

காட்டாகச் சிலப்பதிகாரம் படிப்பதையே எடுத்துக்கொள்வோமே? அக்காப்பியம் நெடுகிலும் ஆசிரியர் இளங்கோ சிறுசிறு குறிப்புக்களை நாம் புரிந்துகொள்ளும் வகையிற் தருகிறார். அந்தக் குறிப்புக்களைத் தவிர்த்தால், அற்றை வரலாறு, குமுகாய வாழ்நிலை, கதை மாந்தரின் நடப்புகள் நமக்கு ஒழுங்காய் விளங்காது. ஆனாலும் அதைக் கவனியாது, உரைகாரரும், இரண்டாமவரும் தரும் இடைப்பரட்டில் (interpretation) மனந்தோய்ந்து, பிறழ்வாகவே சிலப்பதிகாரத்தைப் புரிந்துகொள்கிறோம். அதோடு அப்பிறழ்ச்சிகளையே சரியென்று நம்மிற் சிலர் சாதிக்கிறோம். 

இப்படியொரு நுனிப்புற் புரிதலில், வரலாற்றின் சரியான காலத்திலன்றி வேறெங்கோ பொருத்தி, சிலம்பின் கதைமாந்தரைக் குறிப்பாக, கண்ணகி, கோவலன், மாதவி, நெடுஞ்செழியன், செங்குட்டுவன் ஆகியோரை வழமையான அச்சடிப்பிற் பார்த்து, கருத்துச் சொல்கிறோம். சிலம்புக் கதைமாந்தரை, குறிப்பாகக் கண்ணகியை, எள்ளி நகையாடுவாரும் நம்மிடையுண்டு. இன்னும் சிலர் ‘வரலாறாவது, ஒன்றாவது, சிலம்பு ஒரு கட்டுக்கதை’ என்றும் சொல்வர். 

”சிலம்பின் வழியாய் அதன் காலம் அறியவொண்ணுமா?” என்றால் “ஓரளவு இயலும்” என்றே நான் சொல்லுவேன். குறிப்பாகச் சிலம்புச்செய்திகளை நுணுகிக் கவனித்து, மற்ற ஆவணங்களோடு, பல்துறை நோக்கிற் பொருத்திப் பார்த்தால். சிலம்பின் காலத்தை உறுதியாய்க் கணிக்கலாம். அதற்கு, இப்பொழுதையக் கட்டுக்களில் இருந்து வெளிவருவது முகன்மையானது.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

வரலாறும், வரலாற்று வரைவும்:.

“இன்னாருக்கு, இன்னது நடந்தது” என்ற பழஞ்செய்திகளைத் தொகுத்துரைக்கும் இயலைக் குறிக்கும் ”வரலாறு” என்ற சொல் வெறும் நூறாண்டுப் பழமை கொண்ட சொல்லாகும். அதற்கு இணையாய்க் கட்டுரை எனும் இன்னொரு சொல்லை முன்னாற் புழங்கியிருப்பது சிலம்பிலிருந்து தெரிகிறது. உரைபெறு கட்டுரை, காண்டங்களின் முடிவில் உள்ள கட்டுரைகள், வாழ்த்துக் காதையில் வரும் கட்டுரை, நூற்கட்டுரை போன்றவை, சொல்லப் போகும் கதைக்கு முற்பட்ட செய்திகளை, கதையின் நடுவார்ந்த, அல்லது கதைக்குப் பிற்பட்ட செய்திகளைக் கட்டி உரைக்கின்றன. கட்டி உரைப்பதால் அவை கட்டுரையாயின. History என்ற ஆங்கிலச்சொல்லும் கூட இதே பொருளைத்தான் உணர்த்துகிறது. 

”இன்னாருக்கு இன்னது, இதனால் நடந்தது” என்று காரணம் காட்டுவதும், அதை அலசுவதும், முன்னால் எழுதிய வரலாற்றை மீளாய்வு செய்வதும் வரலாற்று வரைவியல் (historiography) எனப்படும். பொதுவாக, எழுதுவோனின் கருத்தியலும், குமுகச் சாய்வும் ஊடுவதால், வரலாற்று வரைவையும், வரலாற்றையும் பிரித்துப்பார்ப்பது யாருக்கும் கடினம்.

இந்தச் சாய்வினால், புதுப் ‘பழஞ்செய்திகள்’ நமக்கு ஆய்வின் வழி தெரியும் போது, வரலாற்றையும், வரலாற்று வரைவையும் மீளாய்வு செய்யும் தேவையும் நமக்கு ஏற்படும். சுருக்கமாய்ச் சொன்னால், எந்த வரலாற்றுத் தரவும், அதனாலமையும் வரலாற்று நிகழ்வரிசையும் நிலைத்தனவாகா. “மாற்றம் ஒன்றே மாறாதது”. 

சிலம்பின் காலம் பற்றிய முந்தையக் கணிப்புக்கள்:

தமிழ்த்தாத்தா உ.வே.சா. சிலம்புச் சுவடிகளை ஏட்டிலிருந்து தாளுக்குக் கொண்டுவந்த நாளில் இருந்தே (1892), கடந்த 90, 100 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் அறிஞர்கள் பலர் சிலம்பின் காலத்தைக் கணிக்க முற்பட்டிருக்கிறார்கள். அப்படிக் கணிக்கப்பட்ட காலங்களும் பல்வேறாகும்.

1. கி.பி.2 ஆம் நூற்றாண்டு: 

— இம்முடிவிற்கு வந்தோர் மிகப் பலர். இவருள் குறிப்பாக, மு.இராகவ ஐயங்கார், இரா.நாகசாமி, மயிலை. சீனி.வேங்கடசாமி, கா.சு.பிள்ளை, ஞா.தேவநேயப் பாவாணர், தனிநாயக அடிகள், கே.என். சிவராசப் பிள்ளை, பி.டி.சீனிவாச ஐயங்கார், மு.சண்முகம் பிள்ளை, இரா.வை. கனகரத்தினம், வி.சீ.கந்தையா, துளசி.இராமசாமி, க.சண்முகசுந்தரம் ஆகியோரைக் குறிப்பிடலாம்(2). பல வரலாற்றுப் பாடநூல்களும் இந்தக் கணிப்பையே செந்தர நோக்காய்ச் சொல்லுகின்றன. இந்தக் கணிப்பு வரந்தரு காதையின் கயவாகு குறிப்பை, சிங்கள மகாவம்சத்தின் காலவரிசையோடு, பொருத்தி வந்ததாகும். 

2. கி.பி. 5 ஆம் நூற்றாண்டு: 

— இம்முடிவிற்கு வந்தது பேரா. வையாபுரிப்பிள்ளையாவார்(3). வஞ்சிக் காண்டத்தில் வரும் “பங்களர்” என்ற சொல் வங்காளத்தைக் குறிப்பதாகவும், ”மேகலையும், சிலம்பும் ஏராளமாய் வடசொற்களைப் பயில்வதால், சிலம்பு பிற்காலமே” என்றும் உரைப்பார். 

3. கி.பி. 8 ஆம் நூற்றாண்டு: 

— இப்படிக் கணித்தவர் எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளை.(4) கட்டுரைக் காதை 133-137 அடிகளில் வரும் “ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து” என்னும் சோதியக் குறிப்பால், இம்முடிவிற்கு வந்தார்.

4. கி.பி.11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி: 

— இது 1935 இல் திரு. செல்லன் கோவிந்தனால் கணிக்கப் பட்டதாகும்(5). ”முதலாம் இராசேந்திரன் தான் தமிழர்வரலாற்றில் முதன்முதல் வடக்கே படையெடுத்தவன். அவனுக்குமுன், யாரும் வடக்கே போனதில்லை” என்றுரைத்து, “இராசேந்திரன் படையெடுப்பைப் போல்மமாக்கி, செங்குட்டுவன் படையெடுப்பும், இக்காப்பியமும் கற்பனையாக எழுந்திருக்கின்றன” என்று அவர் கூறுவார்.

வரலாற்று நிகழ்வுகளின் அக, புற, ஒழுங்குகள்:

பொதுவாகப் பழங்கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும், உறவான (relative) கால நிலைகளே சொல்லப்பெறும்; அதாவது ”இவ்வரசன் பட்டமேறியதிலிருந்து இத்தனையாவது ஆண்டு” என்றே கல்வெட்டுக்களில் காலங் குறிக்கப்படும். பல கல்வெட்டுக்களில், அரசனின் பட்டப்பெயர் அல்லது குலப்பெயர் மட்டுமே இருக்கும், இயற்பெயரே வாராது. கலி (கி.மு.3101), விக்ரம (கி.மு.57), சக (கி.பி.78) போன்ற முற்றாண்டுகளும் (absolute years) இந்த ஆவணங்களில் அரிதாகவே வரும். பொதுவாக, (ஏதோ ஓராண்டை அடிப்படையாக்கி, மற்ற நிகழ்வுகளை அதையொட்டிக் கணக்குப் போடும்) ஒற்றையாண்டுமுறை, தமிழரின் மரபாக, இருந்ததில்லை. 

இப்படி உறவுக் காலநிலை கொண்ட ஒரு கல்வெட்டில், அதன் உள்ளடக்கம், எழுத்தமைதி, பிற தொடர்புகளைக் கணக்கிலெடுத்து, இன்னொரு கல்வெட்டோடு அதைத் தொடர்புறுத்தி, இரண்டையும் ஒன்றின்பின் ஒன்றாக்கிக் கால வரிசைப் படுத்துவர். இதே போல ஓர் இலக்கியத்தில் இருந்து கல்வெட்டு, அல்லது கல்வெட்டில் இருந்து இலக்கியம், என்றும் தொடர்புறுத்திக் காலவரிசைப் படுத்துவதும் உண்டு. இந்தக் காலக் கணிப்பில், உள்ளே பொருந்தி நிற்கும் ஏரணம் (logic), ஒன்றிற்கொன்று ஒத்திசைவு (consistency) ஆகியவை முகன்மையாகும். 

தமிழாவணங்களை வரிசைப்படுத்தி, உள்ளடக்கம், எழுத்தமைதி போன்றவற்றை வேறிடங்களிற் கிடைத்த, தமிழருடையதல்லாத வெளியாவணங்களோடு ஒப்பிட்டு, அவற்றிற்கு அறுதி முற்றாண்டு (கி.பி./கி.மு.) ஏற்கனவே கணித்திருந்தால், அதே ஆண்டுகளை நம் ஆவணத்துக்குப் பொருத்துவார்கள். இப்படியாக, நம் வரலாற்றுக் காலக் கணிப்பு பலராலும் அறுதியாக்கப் பட்ட முற்றைப் புள்ளிகளால் (absolute markers) ஒழுங்கு செய்யப் படும்.

இதில் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. முற்றைப்புள்ளிகளும், காலவொழுங்கும் ஒன்றிற்கொன்று முரணானவை. இவற்றில், ஒன்றை நெகிழ்த்தி, மற்றொன்றை அசைப்போம். இந்த முரணியக்கச் செயற்பாட்டில் (dialectical movement), எடுகோள் (reference) முற்றாண்டுகளும் கூடச் சிலபோது அசைக்கப் படலாம். இதனால் நாம் ஒழுங்கு செய்த வரலாற்று நிகழ்வரிசை, புதிதாய்க் கிடைத்த ‘பழஞ் செய்திகளால்’, மாறலாம். இந்த மீளாய்வில், குமுக வரலாற்று அகம், புறம் ஆகிய இரண்டுமே முகன்மையாய்க் கருதப்படும். 

இந்திய, தமிழக வரலாறுகளின் முற்றைப் புள்ளிகள்: 

முன்னே சொன்ன முற்றைப் புள்ளிகளை இனிப் பட்டியலிடுவோம்.

1. வடநாட்டு வரலாற்றின் முற்றைப் புள்ளிகள் :

— அலெக்சாந்தர் படையெடுப்பு - கி.மு. 327

— அசோகரின் பாறைக் கல்வெட்டு II, XIII இல் வரும் குறிப்பு - கி.மு.258 [Antiochus II Theos of West Asia (261-246 BC), Ptolemy II Philadelphus of Egypt (285-247 BC), Antigonus Gonatas of Macedonia (277-239 BC), Magas of Cyrene in North Africa (282-258 BC), Alexander of Epirus (272-255BC) or of Corinth (252-244 BC). சோழன், பாண்டியன், சேரமான், அதியமான், தாம்ப பன்னி அரசன் ஆகியோர் இதில் குறிக்கப் படுகின்றனர்](6) 

2. தமிழக முற்கால வரலாற்றின் முற்றைப் புள்ளிகள்:

— கலிங்க அரசன் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டு - கி.மு.172(7)

— சிங்கள அரசன் முதலாம் கயவாகு காமினியின் காலம் - கி.பி. 171-193(8) 

3. பிற்காலப் பல்லவர், பாண்டியர் வரலாற்றின் முற்றைப் புள்ளிகள் 

— கங்க அரசன் மாதவ வர்மனின் பெனுகொண்டாச் செப்பேடு - கி.பி.475(9)

— செழியன் சேந்தன் இறந்ததைக் குறிக்கும் யுவாங் சுவாங் குறிப்பு - கி.பி.640(10) 

4. பேரரசுச் சோழர், பாண்டியர் வரலாற்றின் முற்றைப் புள்ளிகள் 

— இவை பலவாறாகும். பொதுவாக இக்காலகட்டத்திற் குழப்பங்கள் குறைவு.

---------------------------------------------

எடுகோள்கள் (References):

1. Thomas R.Trautmann, “The aryan debate”, page xv, OUP, 2007
2. இரா.மதிவாணன், “சிலம்பின் காலக் கணிப்பு”, ப 13-18, சேகர் பதிப்பகம், சென்னை - 78, 2005
3. மேற்படி நூல், ப 13, சேகர் பதிப்பகம், சென்னை - 78, 2005
4. மேற்படி நூல், ப. 18, சேகர் பதிப்பகம், சென்னை - 78, 2005
5. செ.கோவிந்தன், “சிலம்பின் காலம்”, ப.177, சேகர் பதிப்பகம், சென்னை - 78, 2004
6. DC Sircar, Inscriptions of Asoka, 4th ed. P.6, New Delhi: Publications Division, 1998
7. Shashi Kant, “The Hāthīkumphā inscripṭion of Khāravela and the Bhabru Edict of Asoka”, p.46, D.K.Printworld (P) Ltd.,2000
8. வில்ஹெம் கய்கர், (தமிழில் மறவன் புலவு க.சச்சிதானந்தன், கவிஞர் அண்ணா கண்ணன், “சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை”, ப.55, காந்தளகம், சென்னை -2, 2002
9. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், “பல்லவர் செப்பேடுகள் முப்பது”, பக்.ix, தமிழ் வரலாற்றுக் கழகம் 1966இல் வெளியிட்ட நூலின் மறுவச்சு, 1999. 
10.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். “பாண்டியர் செப்பேடுகள் பத்து”, பக்.xii தமிழ் வரலாற்றுக் கழகம் 1967இல் வெளியிட்ட நூலின் மறுவச்சு. 1999. இது இரண்டாம் நிலை எடுகோளாதலால், யுவான் சுவாங் பற்றிய இந்தக் குறிப்பு ஊற்றாவணம் கொண்டு உறுதி செய்யப்படவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பின் காலம் - 3

 
சிலம்பின் வடிவம்:

சிலம்பின் நூற்கட்டுரையைப் படித்தால்(11), சிலப்பதிகாரம் ஒரு நாடகக் காப்பியம் ஆவதையும், கதைசொல்லும் பாணி ஒரு தேர்ந்த மேடைக்கூத்து வடிவத்தைச் சுட்டுவதையும், அறியலாம். 50, 60 ஆண்டுகளுக்கு முன், தமிழக நாட்டுப்புறங்களில் நடந்த கோவலன் - கண்ணகி,, கீசக வதம், நள தமயந்தி போன்ற 10, 15 நாள் இரவுநேரக் கூத்துக்களை இங்கு எண்ணிப் பார்க்கலாம். சிலம்பின் பல உத்திகளும் நம்முடைய நாட்டுப்புறக் கூத்துகளில் பயன்படுத்தப் பட்டுள்ளன. 

இக்கூத்துக்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் நடிக்கும் கூத்துக்காரர், முன்னாற் பெற்ற பாராட்டையொட்டி, சில விலக்குகளும், சேர்ப்புகளும் செய்துகொண்டேயிருப்பர். இதனால், ஒருசில ஆண்டுகளுள், கூத்தின் உரையாடல், விவரிப்புக்களில் எது ஊற்றாசிரியருடையது (original author), எது இடைச்செருகல் என்பது தெரியாமலே போகும்.. இதே போல, சிலம்புக் கூத்தினுள்ளும் நடந்திருக்கலாம். எது இளங்கோவுடையது, எது பிற்சேர்ப்பு என்று பிரித்தறிவது கடினமான செயலாகும். அடுத்துள்ள பத்திகளில் இதை ஆழ்ந்து செய்யப்போகிறோம். [அதே பொழுது சிலம்பில் எது கற்பனை, எது உள்ளமை (reality) என்பது முற்றிலும் வேறு விதயம்.]

பதிகம் ஊற்றாவணமா?:

”சிலம்பின் பதிகத்தை இளங்கோவோ, அன்றி அவருக்கு வேண்டிய சாத்தனாரோ எழுதினரா? அதுவோர் ஊற்றாவணமா (original document) ?” - என்பதைப் பதிகத்திற்கும், காப்பியச் செய்திகளுக்கும் இருக்கும் ஒத்திசைவைப் (consistency) பொறுத்தே காணமுடியும். ஒரே ஆசிரியர் அன்றிச் சம காலத்தில் வெவ்வேறு ஆசிரியர் எழுதியிருந்தால் இந்த ஒத்திசைவு இருந்திருக்கும். ஆனால் இங்கோ, பெரும் முரண்கள் தெரிகின்றன. ஒவ்வொரு முரணாகப் பார்ப்போம். 

1.பதிகத்தின் தொடக்கத்திலேயே, ‘குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்’ என்று வருகிறது. முற்றுந் துறந்த ஒருவர், பீடும், பெருமையும் பெயரொடு சேர ‘குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்’ என்று தன்னைத் தானே அழைத்துக்கொள்வாரா? அது ஒரு துறவி செய்யும் செயலா? பொதுவாய் இயற்பெயர் தவிர்க்கும் துறவுப்பெயர் இருக்குமே? துறவுப்பெயரால் விளிக்காது, அரசப்பெயர் சொல்லுவரோ? (அடிகள் என்ற விளிப்பிலும் ஐயம் உண்டு. மதுரைக்காண்டத்துள் கண்ணகி, கோவலனை அடிகள் என்பாள். எனவே அடிகள் எல்லோரும் துறவியரென்று ஐயந்திரிபறச் சொல்லுதற்கில்லை. ”இளங்கோவடிகள்” என்பது அற்றைப்புரிதலில் துறவியைச் சுட்டுவதாய்க் கொள்ளமுடியாது.) 

2.பதிகத்தின்படி, கண்ணகி ‘விட்புலம் போன’ செய்தியைக் குன்றக்குரவர் இளங்கோவிடம் நேரடியாய்ச் சொல்ல, காட்சிக் காதையில் சேரனிடம் தெரிவிக்கப் படுகிறது. (இங்கு அரசன் முன்னிலை இல்லையோ?)

3.இதே போலக் காட்சிக் காதையில் அரசனின் முன்னிலையில் சாத்தனார் உரைக்கும் நிகழ்வுக்கு மாறாய், பதிகத்தில் அவர் இளங்கோவிடம் உரைக்கிறார். அரசனின்றி வஞ்சிக் காண்ட நிகழ்வுகள் நடந்திருக்குமா? இளங்கோவா வஞ்சிக் காண்ட நிகழ்வுகளை நடத்துபவர்? இல்லையே? இது ஒரு முரண் அல்லவா? 

4.முற்பிறப்புச் செய்தியை மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்குச் சொன்னபோது, வெள்ளியம்பலத்து நள்ளிருளில் சாத்தனார் கேட்டதாய்ப் பதிகமும், கதை மாந்தர் வழியாய் நேராக விவரித்துக் கட்டுரைக் காதையிலும் வரும். விவரிப்பில் ஏன் இந்த முரண்? 

5.அழற்படு காதையில் மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்கு முன் தோன்றியது அந்திவிழவு நேரமாகும். பதிகத்தில் இது நடு யாமம் என்று (15 நாழிகை வேறுபாடு) வரும். நிகழ்வுக் காலநிலையை ஒரே ஆசிரியர் வெவ்வேறு இடங்களில் முரணாய்ச் சொல்லுவாரோ?

6.வஞ்சிக் காண்டம் நிகழாது, சாத்தனார் விளக்கிய அளவிலேயே, ”காப்பியக் குறிக்கோள்கள் இன்னின்ன” என்று பதிகம் சொல்வது ஒரு நாடகத் தனமாய் இருக்கிறது. முன்னுக்குப் பின் முரணாய் ஒரு காப்பிய ஆசிரியர் கூறுவாரோ? 

7.செங்குட்டுவனே இல்லாது, நிகழ்வுகள் பதிகத்தில் சொல்லப் படுவதும், நூலெழுதக் காரணம் கற்பிப்பதும், சற்றும் பொருத்தமின்றி இருக்கின்றன.

8.பதிக முடிவில், சாத்தனார் இளங்கோவை நூலெழுதச் சொல்வது படர்க்கையிலுள்ளது. ஓர் அரசன் வீற்றிருக்கும் நிலவுடமைக் கொலுவில் அவனிடமின்றி, நேரடியாய் வேறொருவர் மற்றோரிடம் வேண்ட முடியுமோ? 

9.பதிகத்தை இளங்கோவோ, சாத்தனாரோ எழுதியதாய்த் தோற்றவில்லை. நீண்ட காலங் கழித்து, பெரும்முரண்களோடு, ”நாடகத்தனமாக”யாரோ பதிகம் செய்திருக்கிறார்கள். பதிகம் ஊற்றாவணத்திற் (original document) சேர்ந்ததல்ல.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

உரைபெறு கட்டுரை ஊற்றாவணமா?:

அடுத்திருக்கும் உரைபெறு கட்டுரைக்கு வருவோம். காப்பியத்தைப் படிக்க வருவோரை படிக்கத் தூண்டுவதாய், கூத்தைப் பார்க்கவைப்பதாய் இது அமைகிறது. 

1.கூர்ந்து கவனித்தால், நாட்டுப்புறக் கூத்தின் தொடக்கத்தில் வரும் கட்டியங்காரனின் கூற்றுப் போல் இது அமைந்துள்ளது. 

2.இந்தக் கட்டுரையுள், ”அது கேட்டு, அது கேட்டு” என்ற சொற்றொடர் அடுத்தடுத்த நிகழ்வுகளைக் கால வரிசையிற் தருவதால், ஒரு வரிசைப் போக்கு புலப்படுகிறது. அந்தக் காலத்தில் எங்கெல்லாம் பஞ்சம் ஏற்பட்டதோ, அங்கெல்லாம் பத்தினி வழிபாடு தொடங்கியது போலும். இன்றைய ‘வாழும் வரலாற்றிலும்’ மழைவேண்டி, மாரியம்மன் விழாக்கள் நடக்கின்றன தானே? 

3.உரைபெறு கட்டுரையில் வரும் “களவேள்வி” என்ற சொல் ஒரு போர்க்களச் சொல். மக்கள் பெருங்கோவமுற்று அரசனை எதிர்க்க, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட, புரட்சியாளரைக் கொன்று, வெற்றிவேற்செழியன் ”களவேள்வி” செய்தானோ?. உள்நாட்டுப் போர் அங்கு நடந்ததோ? மதுரை பஞ்ச காலத்தில் எரிந்ததோ, என்னவோ?

4.உரைபெறு கட்டுரையின் வழி, கொங்கிளங் கோசர் (South Canara) விழவொடு சாந்தி செய்தது பாண்டியனின் கள வேள்விக்கு அப்புறம் என்று புரிகிறது.

5.அடுத்துவரும் ”அது கேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத்து ஆங்கு அரந்தை கெடுத்து வரந்தரும் இவள் என ஆடித் திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக் கோள் பன்முறை எடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று” - என்னும் இலங்கைச் செய்தி உன்னித்துக் கவனிக்கவேண்டியது [ஆனால் பலரும் செய்யாதது.] 

6.கண்ணகிக்கு சாந்தி செய்து கோசர் மழைபெற்றது கேட்டுத் தன் நாட்டு (அதாவது இலங்கையின்) அரந்தை (கொடுங்கோடை) கெடக் கயவாகு பத்தினிக்கு விழா எடுக்கிறான். வரந்தரு காதையோ, செங்குட்டுவன் கூடவே கயவாகு இருந்ததாய்க் கூறுகிறது. ஒரே ஆவணத்துள் இப்படி ஒரு முரண் எப்படி வந்தது? அல்லது இரண்டும் ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு ஆவணங்களா? இதையேன் பலரும் கவனிக்க மறந்தார்கள்? 

7.உரைபெறு கட்டுரை, வரந்தரு காதை – இவற்றில் ஒன்றுதான் உண்மையாக முடியும்.. அடுத்தடுத்த அரசர் செயல்களில் ஒரு கால ஒழுங்கும் ஏரணமும் உரைபெறு கட்டுரையிற் காணுவதால், வரந்தரு காதையை ஏற்கத் தயங்கவேண்டியிருக்கிறது. அக்காதை பற்றி கீழே வருவது போல் நிறையக் கேள்விகள் நமக்கு இருக்கின்றன.

8.உரைபெறு கட்டுரையின் வழி, பெருங்கிள்ளி கோழியகத்துப் பத்தினிக் கோட்டம் சமைத்தது இலங்கைக் கயவாகு பன்முறை (=பல்லாண்டு) விழா எடுத்ததற்கு அப்புறம் என்று அறிகிறோம். இங்கே குறிப்பிடப்பெறும் பெருங்கிள்ளி, செங்குட்டுவனின் சமகாலத்து மைத்துனனின் பிறங்கடையாவான். [எத்துணையாவது பிறங்கடை என்பது தெரியாது.]

9.மொத்தத்தில் உரைபெறு கட்டுரையும் இளங்கோ எழுதிய ஊற்றாவணமாய்த் தெரியவில்லை; அதே பொழுது காப்பியத்திற்குப் பின் நடந்த நெடுங்கால நிகழ்வுகளை உரைப்பதால், இதை ஒதுக்காமல், காலக் கணிப்பிற்கு எடுத்துக் கொள்வது நல்லது. 

காப்பியத்தின் மற்ற பகுதிகள் ஊற்றாவணங்களா?:

1.மங்கல வாழ்த்தில் இருந்து வாழ்த்துக் காதை வரை காப்பியத்தில் தொடர்ச்சி இருப்பதால், அவை இளங்கோ எழுதியதே என்று கொள்ளுகிறோம். 

2.அதே பொழுது, இந்தப் பகுதிகளுக்குள் அங்கும் இங்குமாக இடைச்செருகல் இருக்கலாம். அவற்றைப் பாடபேதம் கொண்டே நிறுவமுடியும். (காட்டாக, அழற்படு காதையில் வருண பூதங்கள் மதுரையை விட்டு விலகும் பகுதியை இடைச்செருகல் என்று சுவடி வேறுபாட்டு விளக்கம் சொல்லி ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஒதுக்குவார்.)

3.காதைகளின் முடிவில் இருக்கும் வெண்பாக்கள் இளங்கோ எழுதியது என்று கொள்ள வேண்டியதில்லை. அவை கதைக்குத் தேவையானைவையும் அல்ல. 

4.காண்டக் கட்டுரைகள், நூற்கட்டுரை –ன்பவை இளங்கோவோ, அன்றி வேறெவரோ எழுதியிருக்கலாம். இவையும் நூற்தொடர்ச்சிக்குத் தேவையில்லாதவை.

5.வரந்தரு காதை மட்டும் மற்றவையோடு மாறுபடுகிறது; கூத்துவடிவத்தின் மரபும் அதிற் கிடையாது. கிட்டத்தட்ட மணிமேகலையின் பா வடிவிலும், அதன் முன்னெடுப்பாகவும் தெரிகிறது. மணிமேகலைக்கு வேண்டுமானால் அது தேவையாகலாம், சிலம்பிற்கு அல்ல.
------------------------

எடுகோள்:

11.குமரி வேங்கடம் குணகுட கடலா 
மண்டிணி மருங்கிற் தண்டமிழ் வரைப்பிற் 
செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின் 
ஐந்தினை மருங்கின் அறம்பொருள் இன்பம் 
மக்கள் தேவர் என இரு சார்க்கும் 
ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர 
எழுத்தொடு புணர்ந்த சொல்லகத்து எழுபொருளை 
இழுக்கா யாப்பின் அகனும் புறனும் 
அவற்று வழிப்படூஉம் செவ்விசிறந்து ஓங்கிய
பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் 
அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்தும் 
ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த 
வரியும் குரவையுஞ் சேதமும் என்றிவை 
தெரிவுறு வகையாற் செந்தமிழ் இயற்கையில் 
ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம் 
காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து 
மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய 
சிலப்பதிகாரம் முற்றும். 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பின் காலம் - 4

 
வரந்தரு காதை ஊற்றாவணமா?: 

முன்னே சொன்னது போல், இந்தக் காதையினுள் பல்வேறு முரண்கள் தென்படுகின்றன.

1. முதல் முரணே நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகிறது. வாழ்த்துக் காதையில் மணிமேகலைத் துறவு பற்றி கண்ணகியின் அடித்தோழி (கண்ணகியின் இளமைக் காலத்திருந்து பழகிய வேலைக்காரத் தோழி) அரற்ற, வரந்தரு காதையின் 35-36 வரிகளிலோ, இன்னொரு தோழி தேவேந்தி அதே வாசகம் கூறி அரற்றுகிறாள். ஒரே துறவு பற்றி இரு வேறு மாந்தர் இருவேறு காதையில் வேறுபட்டு அரற்றுவதாய் ஒரேநூலின் ஆசிரியர் சொல்லுவாரோ?

2. ”வஞ்சியிற் பத்தினிக் கோட்டம்” என நடுகற்காதையும் (191-234), வாழ்த்துக் காதை உரைப்பாட்டு மடையும் புகலும். காப்பியத்தின் படி, சுள்ளியம் பேரியாற்றின் கரையில் சமதளத்தில் வஞ்சி இருக்கிறது. அங்கு “செங்கோட்டு உயர்வரைச் சேணுயர் சிலம்பு” என்பது கிடையாது. ஆனால், வஞ்சியின் பத்தினிக் கோட்டத்திற்கு அருகில், செங்கோட்டுச் சுனையிலிருந்து நீர் எடுத்து வருவதாய், வரந்தரு காதையின் 53-59 ஆம் வரிகள் சொல்லும். அப்படியானால் பத்தினிக் கோட்டம் எங்கிருந்தது? வஞ்சியா? செங்கோடா? ஒரே ஆசிரியர் பத்தினிக் கோட்டத்திற்கு இருவேறு இருப்பிடங்களைக் காட்டுவாரோ?

3. கேரளப் புரிதலில், பத்தினிக்கோட்டம் என்பது இற்றைக் கொடுங்களூர் பகவதி கோயில் தான். தமிழகப்புரிதலில், அது தேனிமாவட்டம் செங்கோட்டுமலையில் இருக்கிறது. எது சரி?

4. மறைந்த தமிழறிஞர் மயிலை. சீனி.வேங்கடசாமியாரின் கருத்தின்படி செங்குட்டுவனின் வஞ்சி குடநாட்டில் தான் உள்ளது. [கொங்கு வஞ்சி என்று ஆர்வத்திற் சொல்லுவோர் அங்குள்ள ஐவர்மலையை அயிரிமலையாக்குவர். இன்னுஞ்சிலர் திருச்செங்கோட்டுக்கும், சுருளி மலைக்கும் கூடப் பத்தினிக் கோட்டத்தைக் கொண்டு வருவர்.] 

5. கொங்குக் கருவூரையும், குடக் கருவூரையும் குழம்பிக் கொள்வது தமிழாய்வின் நெடுகிலும் நடக்கிறது. குடக் கருவூர் பற்றிய இலக்கியச் செய்திகள் அதிகம், தொல்லியற் செய்திகள் குறைவு. அண்மையில் தான், குடக் கருவூருக்கு அருகிலிருந்த முசிறி பற்றிய தொல்லாய்வுச் செய்திகள் கேரளத்திற் பட்டணம் என்ற இடத்திற் கிடைத்தன(12). இது நடந்து கொண்டிருக்கும், முற்றுப்பெறாத, ஆய்வு. கொங்குக் கருவூர் பற்றிய ஆய்வு மிகுத்து நடந்த ஒன்றாகும். இரண்டிற்கும் உள்ள முகன்மையைக் குறைத்துப் ”பட்டிமண்டபம்” நடத்த முற்படுவது வரலாற்றுப் புரிதலுக்கு வழிவகுக்காது. 

6. மாளுவம் என்ற அரசே கி.பி.2 ஆம் நூற்றாண்டில் இல்லை. ஆனாலும் மாளுவம் பற்றிப் பேசும் வரந்தருகாதை அதன் கூடவே கயவாகுவை அருகில் வைத்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சுட்டுகிறது. ஒரு பக்கம் மேலே சொன்னது போல் கால முரண்; இன்னொரு பக்கம் இருக்கவே வாய்ப்பில்லாத ஓர் அரசின் பெயர் சுட்டப்படுகிறது. [சக சத்ரப அரசர்கள் கி,மு 61-57 இலும், மீண்டும் கிபி.78க்கு அப்புறமும் மாளுவத்தை / அவந்தியை விழுங்கினர். அவர்களிடம் இருந்து சாதவா கன்னர் (நூற்றுவர் கன்னர்) அவந்தியிற் பாதியைப் பிடித்துக் கொண்டனர். மாளுவம் என்ற தனியரசு கி.பி.78க்கு அப்புறம் வரலாற்றிற் கிடையவே கிடையாது. [தென்னிந்தியாவிற் பெரிதும் பின்பற்றப் பட்ட சக என்னும் முற்றாண்டு சக சத்ரப அரசர் மாளுவத்தைப் பிடித்ததைக் கொண்டாடும் வகையில் தொடங்கிற்று.(13)] மாளுவர் என்ற தனியரசரே இல்லாத நிலையில் அவர் பெயரை இங்கு வரந்தரு காதையில் இணைக்கும் வரலாற்று முரணை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். 

7. வரந்தரு காதையில், வரும் நிகழ்ச்சிக் கோவையைப் பார்த்தால் இன்னொரு பொருந்தாமை புலப்படும். முதலில் அரசனுக்கு முன்னால், பார்ப்பனி மேல் பாசாண்டன் என்னும் சாமியேறி ”சிறுகுறு மகளிரின் ஒளித்த பிறப்பைக்” காணும்வகை சொல்லப்படும். பிறகு “தந்தேன் வரம்” என்று கண்ணகி வான்குரல் எழும். அடுத்து அரசன் போனபின், அதே பார்ப்பனி மேல் கண்ணகியின் ஆவி ஏறி இளங்கோவின் முன்கதையை உரைக்கும். “சாமி”வந்து ”குறி”சொல்லும் மரபு தமிழரிடம் உண்டென்றாலும், ஒருவர் மேல் ”இரு சாமிகள்” அடுத்தடுத்து வருவது, எங்குமே கேள்விப் படாதது. Succeesively two spirits on a single medium? Highly unlikely. இது என்ன மாகையா (magic)? நாட்டுப்புற மரபு அறிந்தவர் தான் வரந்தரு காதை எழுதினாரா? - என்ற கேள்வி நம் மனத்தில் எழுகிறது.

8. எந்தக் கூத்தும் தமிழர்மரபில் வாழ்த்திற்தான் முடியும். அதற்கப்புறம் வேறொரு நிகழ்வு காட்டமாட்டார். அப்படிப் பார்த்தாலும், வரந்தரு காதை என்பது உச்சத்திற்கு அப்புறம் சரிவாக (anticlimax) நேர்கிறது. தமிழ்மரபு மீறி ஒரு பழங்காப்பிய ஆசிரியர் செய்வாரா? 

9. தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் 5 ஆம் நூற்பாவின் “காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்” என்ற வெட்சித் திணையின் துறைகளை வண்ணிக்கும் வரிசையை, அப்படியே பின்பற்றும் சிலப்பதிகாரம் “வாழ்த்தோடு” முடிக்காது, ”வரந்தருதல்” என்ற இன்னொரு காதை சொல்லுமா? இது தொல்காப்பிய மரபிற்கும் வேறுபட்டல்லவா அமைகிறது? 

மொத்தத்தில் ”வரந்தரு காதை இளங்கோ எழுதியதா?” என்றகேள்வி நம்முன் எழுகிறது. (எப்பொழுது இளங்கோ எழுதியதல்ல என்ற முடிவிற்கு வருகிறோமோ, அப்பொழுதே) சிலம்பிற்கும், மணிமேகலைக்குமான காப்பியத் தொடர்வில் ஐயுறவு கொள்ளுகிறோம். இங்கே மணிமேகலை-மகளென்னும் செய்தியை நாம் ஒதுக்கவில்லை. மணிமேகலை என்ற காப்பியத்தையும், அதின் நிகழ்வுகளையும் பற்றியே எண்ணுகிறோம். மணிமேகலைக் காப்பியம் சிலம்போடு சேர்ந்தெழ வேண்டிய தேவையுண்டா? சிலம்பின் வரந்தரு காதையை ஒதுக்கினால், ”இந்தச் சமய நெறியே சிறந்தது” என்னுமாப்போல அழுத்திச் சொல்லும் நிகழ்வுகள் சிலம்பிற் கிடையாது. அதன் குறிக்கோள்கள் வேறானவையாகும். [அவற்றை விரிவாகப் பார்ப்போம்.] ஆனால் மணிமேகலைக் காப்பியமோ புத்தநெறியே வாழ்க்கைக்கு வழிதரும் என்று நிலைநிறுத்தப் பிறந்தது.

ஒரு காப்பியத்தை, இன்னொரு காப்பியத்தோடு தொடர்புறுத்துவது இதுதான் முதன்முறை என்று சொல்லமுடியாது. கம்பனின் இராம காதைக்கும், ஒட்டக் கூத்தனின் உத்தர காண்டத்திற்கும் கூட உறவு சொல்லுவார்கள். இராமகாதை எழுதிய கம்பன் யுத்த காண்டத்தோடு நிறுத்திக் கொண்டான். இராமனுக்கு முடிசூட்டுவதோடு கதை முடிந்து விடுகிறது, அதற்கப்புறம் ”அயோத்தியில் என்ன ஆனது? இராமனின் மக்கள் என்ன ஆனார்கள்? சீதைக்கு என்னவானது? இராமனுக்கு என்னவானது?” போன்ற செய்திகளை உள்ளடக்கியது உத்தர காண்டம் ஆகும். 

கம்பரின் காலம் தெளிவுற ஆயப்படாதது. அவரை 9, 12 என்று பல்வேறு நூற்றாண்டுகளில் ஆய்வாளர் பொருத்திச் சொல்லுவர். ஆனால், ஒட்டக் கூத்தரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு என்று தெளிவாகக் குறிக்கப் படும். [விக்கிரம சோழன் கி.பி.1118-1135, இரண்டாம் குலோத்துங்கன் கி.பி.1133-1150, இரண்டாம் இராசராசன் கி.பி.1146-1163](14) 

பொதுவாகப் பின்னெழுந்த நூலில், முன்னெழுந்த நூலோடு அங்குமிங்கும் தொடக்கூடிய உறவுகள் சொல்லப் படலாம். இரண்டின் நடையும், சொல்லவந்த குறிக்கோளும் வேறுபடலாம். ஆழ்ந்த ஆய்வில்லாமல் இரண்டும் ஒரே காலம் என்று சொல்லிவிட முடியாது. [இராம காதையும், உத்தர காண்டமும் ஒரே காலத்தன என்று எப்படிச் சொல்லமுடியும்? ஒரு சில இலக்கிய நடைகள், வாசகங்கள், குறிப்புக்களைப் பார்த்தால், இராம காதை உத்தர காண்டத்திற்கு முற்பட்டது என்றே தோன்றுகிறது. ஆனாலும் காலக் கணிப்புக் குழப்பம் இன்றும் உண்டு,] 

பல வரலாற்றாசிரியரும் மணிமேகலையையும், சிலம்பையும் ஒன்றுசேர்த்து ஓர் இரட்டைக் காப்பியம் போலவே காலங் கணிக்கிறார்கள். அப்படிச் செய்வது ஒரு முட்டுச் சந்திற்கே நம்மை இழுத்துச்செல்லும். ”இரட்டைக்காப்பியம்” என்னும் கருத்தீட்டை ஒதுக்கி, சிலம்பின் காலத்தை முதலிற் கணித்துப் பின் மணிமேகலையோடு உறவை நிலைநாட்டுவதே ஒருகாற் பயன்தரும்.

எடுகோள்கள்:

12. http://keralahistory.ac.in/researchprojects1.htm
13. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India (100 BC-AD 900)”pp 42-48, Munshiram Manoharlal Publishers Pvt.Ltd. 2005. 
14. தமிழ்வளர்ச்சித்துறை வெளியீடு, “தமிழ்நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம் - முதற்தொகுதி” ப.224-234, தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை 108, 1998


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பின் காலம் - 5

 
மகதக் குறிப்பும் சங்க காலமும்:

சங்க காலம் தொடங்கியது மகதத்தில் ஆட்சி செய்த நந்தர் காலத்திற்குஞ் சற்று முன்பாகக் கொள்ளுவதே சரியாக இருக்கும். இனிமேலும் சங்ககாலத்தைக் கி.மு.300 ல் இருந்து கி.பி.300 வரையென்று அச்சடித்தாற்போலச் சொல்லிச் சுருக்க முடியாது. அதை கி.மு. 550/500 க்காவது நீள வைக்கும் சான்றுகள் இப்பொழுது கிடைத்துள்ளன. சங்கப் பாடல்கள் ஒருசிலவற்றால்(15) தமிழ்மன்னரோடு நந்தர்கள் நல்லுறவு கொண்டிருந்தார்கள் என்றே அறிகிறோம்.

இந்த உறவு நந்தர்களுக்குப் பிறகு வந்த வம்ப மோரியரோடு தொடராமல், பகை ஏற்பட்டது. அசோகனின் தந்தையாகிய பிந்துசார மோரியன் தமிழெல்லை வரைக்கும் படையெடுத்து வந்திருப்பதும், நேரடியல்லா முறையில், சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது (16). மோரியர் படையெடுப்பு இப்படித் தடுக்கப் பட்டதால், அத்தடுப்பு வலுவாக இருந்ததால், அதற்கும் தெற்கே அசோகன் வராமல் இருந்திருக்கிறான். இதன் விளைவால், தன் கல்வெட்டுக்களில் சேர, சோழ, பாண்டியர்,அதிகர் நாடுகளை எல்லையிலிருந்ததாகவே அசோகன் குறித்திருக்கிறான் (17)

மோரியரை வம்பர் என்று குறிப்பிட்டிருப்பதை இங்கு நாம் சரியாய் விளங்கிக் கொள்ள வேண்டும். வம்பர் என்போர் வம்புடையவர் அல்ல; பழம்பொருளின் படி, அவர் புதியவர்; வம்பர் என்று சொன்னதாலேயே, சங்ககாலம் மோரியரின் காலத்திற்கு அண்மையில் இருந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம். "இப்பத் தான் புதுசா வந்தவங்க" என்று நாம் ஒருவரை எப்பொழுது சொல்லுவோம்? நாம் முன்னவராய் இருந்து, மற்றவர் புதிதாய் வந்தவராய் இருந்தால் தானே? அதோடு, நாமும் புதியவரும் குறிப்பிட்ட சம காலத்தில் ஒருங்கிருந்தால் தானே? 

இதுபோன்ற மோரியர், நந்தர் காலத்துக் குறிப்புகளை மறுத்து, சங்க காலத்தைப் பின்னுக்குத் தள்ளியவர்கள் ரொமிலா தாப்பரில் தொடங்கி, இந்திய, மேலை ஆய்வாளர்கள் மிகுதியாவர். நாவலந் தீவின் தென்கோடித் தமிழர்கள் மோரியருக்கும் முந்துபட்டவர்கள் என்பதை ஏற்றுச், சொல்வதில், பல வரலாற்றாசிரியருக்கும் ஏனோ தொண்டைக்குள் அடைத்துக்கொள்கிறது. [இல்லையேல் குறைந்தது அண்மையில் கி.மு.500 அளவிற் தமிழி எழுத்திற்குத் தொல்லியற் சான்று கிடைத்த பின்னும்(18), "அசோகன் பிரம்மியில் இருந்து தமிழ் பிரம்மி வந்தது" என்று மீட்டும் சொல்லிக் கொண்டிருப்பரா, என்ன? இதை மாற்றி, இந்திய வரலாறு எழுத வேண்டாமா?] 

இது தவிர, ஆசீவகம் பற்றிய தொடர்பும் சங்க காலத் தொடக்கத்தை நந்தருக்கும் முன்னதாய்க் கொண்டு போகும். புத்தம், செயினம் ஆகிய நெறிகளுக்குச் சம காலத்தில் தோன்றி, பின் அந்த இரு நெறிகளிலும், (ஏன், நம்மூர் சிவ, விண்ணவ நெறிகளிலும் கூடச்) செரித்துக் கொள்ளப்பட்ட ஆசீவக நெறியின் தோற்றம் கி.மு 600 அளவில் என்றே இந்திய வரலாற்றிற் சொல்லப்படுகிறது(19). கிட்டத் தட்ட மற்ற நெறிகளுக்குள் ஆசீவகம் முழுதாய்ச் செரித்துக் கொள்ளப்பட்ட காலம். கி.பி. 400 ஆகும். ஆசீவக நெறியைப் பற்றி, புறப்பற்றியாய் (பரபக்தியாய்) அல்லாது, நேரடிப் பங்களிப்பான பாடல்கள் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே, அதுவும் சங்க இலக்கியம், புறநானூற்றில் மட்டுமே, கிடைக்கின்றன. (பெரிதும் பேர்பெற்ற ”யாதும் ஊரே, யாவரும் கேளிர்...” என்ற கணியன் பூங்குன்றனார் பாடல் ஓர் ஆசீவகப் பாடலே. புறநானூற்றில் வரும் ஆசீவகப் பாடல்களை விளக்கி நிலைநிறுத்துவதற்கு இந்தக் கட்டுரை, களமில்லை. வேறொரு பொழுதில் அதைச் செய்யவேண்டும்) ஆசீவக நெறி தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கவே பெரும்வாய்ப்பு உண்டு என்று ஆசீவகம்-தமிழர் தொடர்பு பற்றி ஆய்ந்த பேரா. க.நெடுஞ்செழியனும், வெங்காலூர் குணாவும் தங்கள் நூல்களில் சொல்லுவார்கள்(20). இந்த ஆய்வு தொடரவேண்டியவொன்று.

இவர் ஆய்வு முடிவுகளை ஏற்றால், ஆசீவக நெறியின் உச்ச காலத்திற்குச் (நந்தர்-மோரியர் காலம்) சற்று முன்னர், அல்லது சம காலத்தில் சங்ககாலம் தொடங்கி இருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. (இன்றைக்கோ ஆசீவக நெறி தமிழகத்தில் இருந்ததே அறியாமல், அதைச் செயின நெறிக்குள் பொருத்திச் சொல்லுவதும், அதைச் செரித்துக்கொண்ட சிவ, விண்ணவ நெறிகளுக்குள் கருத்துக்களைத் தேடுவதுமாய், காலம் மாறிப் போயிற்று. ஊழ் (விதி) பற்றி இன்றும் நிலவும் இந்திய அடிப்படைக்கருத்தும் ஆசீவக நெறிக்குச் சொந்தமானதே!)


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

வேடுவச் சேகரமும், பயிரீட்டுப் பொருளியலும்:

மூவேந்தர் பின்புலம் பற்றி ஆய்வதற்கு முன், சேர, சோழ, பாண்டியரின் குலப்பெயர்கள் இனக்குழுக்களை உணர்த்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். வேடுவச்சேகர (hunter-gatherer) வாழ்க்கையில் ஒவ்வொரு பழங்குடியினரும் மற்ற குடியினரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட இனக்குழு அடையாளத்தைப் பூசியிருந்தனர். தொல்தமிழ் நாட்டின் பழங்குடியினர் பலர் சிறிது சிறிதாக மறைந்து போக, மூன்று குடியினர் மட்டுமே பெருநிலையை அடைந்திருக்க வேண்டும். நாளாவட்டத்தில் நாகர், வேளிர் போன்ற குடியினரும் இம் முப்பெருங் குடிக்குள் கரைந்து போயிருக்க வேண்டும். [துடியர், பாணர், பறையர், கடம்பர் என்னும் நாலு குடியினர் மட்டும் கரையாது நின்றதை புறம் 335 மாங்குடி கிழார் பாட்டால் அறிகிறோம்.] பெரும்நிலை அடைந்த மூன்று குடியினரும், சேர, சோழ, பாண்டியர் என்றழைக்கப் பட்டனர். 

சந்தனம்/சாரல் பூசிய இனக்குழு சாரல்>சாரலர்>சேரலர் என்றும், பாண்டில் (= சாம்பல்) பூசிய இனக்குழு பாண்டியர் என்றும், கோழி நிறம் (= சிவந்த பொன்னிறம் அமிலச்செறிவைப் பொறுத்து இது மஞ்சளும்/சிவப்புமாய் மாறும் வேதிப்பொருளின் நிறம். கோழியூர் = உறையூர்) பூசிய இனக்குழு கோழி>சோழி>சோழியர் என்றும் அழைக்கப்பட்டன. இன்றைக்கும் சாரல் (=சந்தனம்), திருநீறு, மஞ்சள்/குங்குமம் ஆகியவற்றின் மிச்ச சொச்சம் தமிழர்/மலையாளிகளிடையே பெரிதும் விரிவாய்ப் பரவியிருப்பதை உணர்ந்தால் இனக்குழுப் பழக்கம் எங்கிருந்து பிறந்தது என்று உணர முடியும். சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் பூசும் பழக்கங்கள் உறுதியாகச் சமய நெறி சார்ந்தவை அல்ல. [இவற்றை வடவர் தேடி அணிவதில்லை என்பதை எண்ணிப் பார்க்கலாம். தென்னாட்டிற்கு வந்தால் நம்மைப் பார்த்து அணிவர்.] அவை இனக்குழு (tribal) சார்ந்த வழக்கங்கள். இன்றைக்கும் ஆத்திரேலியப் பழங்குடிகள் பண்டிகை நாட்களில் பல்வேறு வண்ணம் பூசித் தம்மை அடையாளம் காண்பிப்பதை ஓர்ந்து பார்க்கலாம். [அவர்களில் ஒரு குடியினர், நம் தென்பாண்டியினரைப் போலவே முப்பட்டைத் திருநீறை உடலெங்கும் அணியும் வழக்கம் உண்டு. நம்மூர்ச் சிவநெறியா அவர்களுக்கு இருக்கிறது?] ஆத்திரேலியப் பழங்குடியினரும், பழந்தமிழரும் ஈனியல் முறையில் உறவுகொண்டவர் என்ற ஆய்வு முடிபையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்(21).

மூன்று பெருங்குடியினரும் வேடுவச்சேகர நிலையிலிருந்து பயிரிடும் நிலைக்கு வந்துசேர்ந்ததால் நிலைத்துநின்றனர் போலும். பொன்னி - வளநாடு/நாகநாடு, தண்பொருநை (தாம்பர பெருநை) - தென்பாண்டிநாடு, வெள்கை (வைகை) - மதிரையைச் சுற்றிய பாண்டிநாடு, ஆன்பொருநை (சுள்ளியம் பேரியாறு) - குட்டநாடு என்ற ஆறு-பயிர்த் தொடர்புகளும், பொருளியல் தொடர்பான குமுகவளர்ச்சிகளும் ஆய்வு செய்யப்பட வேண்டியவை. யாரும் இதுவரை அதுபோன்ற ஆய்வைச் செய்ததில்லை. செய்தால் நன்றாய் இருக்கும். காரணமில்லாது மூவேந்தர் என்ற பாகுபாடு நம்மூரில் ஏற்படவில்லை. அதற்கான அரசியற் பொருளியற் காரணங்களை அலசவேண்டும். மற்ற குடியினர் அவருக்கு கீழ்நின்றதற்கும் அரசியற் பொருளியல் தான் காரணமாய் இருக்கவேண்டும். பயிரீட்டுப் பொருளியலுக்கு முன் வேடுவச்சேகரப் பொருளியல் போட்டி போட முடியாது. பின்னது முன்னதற்கு முன் அடங்கித்தான் போகவேண்டும். ஆற்றங்கரை நாகரிகங்களே இறுதியில் வெல்லும். சங்கத்தமிழ் இலக்கியத்திலும் மருத நாகரிகத்திற்கு முன், குறிஞ்சி, முல்லை நாகரிகங்கள் அடிபணிந்தே போயிருக்கின்றன. நெய்தல் நாகரிகம் மருதத்தை ஒட்டி, அதைச் சந்தையாக்கியே, வளர்ந்திருக்கிறது. 

மூவேந்தர் பின்புலமும், அற்றைத் தமிழகப் பொருளியலும்:

முடியுடை மூவேந்தரும் சமகாலத்தில் பல்வேறு உட்கிளைகள் / பங்காளிகள் கொண்டிருந்தனர். காட்டாகச் சென்னி/செம்பியன், கிள்ளி/வளவன் என்ற குலப்பெயர்கள் சோழரின் உட்கிளைகளைக் குறித்தன. வழுதி, செழியன், மாறன் போன்றவை பாண்டியரைக் குறித்தன. ஒரே காலத்திற் பாண்டியர் ஐவர் இருந்தனர் என்பதும் பழைய புரிதலாகும். இதே போல ஆதன், இரும்பொறை, கோதை ஆகிய குலப்பெயர்கள் சேரரின் உட்கிளைகளைக் குறித்தன.

சம காலத்தில் உறையூர்/புகார், மதுரை, குடநாட்டு வஞ்சி ஆகியவற்றைத் தலையிடமாகக் கொண்ட அரசரே வேந்தர் என்று சொல்லப்பட்டனர். மற்ற நகரில் ஆட்சிபுரிந்தோர் அந்தந்தக் குலங்களின் பங்காளிகள், வேந்தருக்கு அடங்கியோர் என்றே அறியப்பட்டார்கள். 

மூவேந்தரின் சமகாலத்திருந்த பல்வேறு குறுநில வேளிரும் யாரோ ஒரு வேந்தரின் மேலாண்மை ஏற்று, இறை செலுத்தியோ, அன்றி ஏற்காமலோ, தனியாட்சி நடத்தியிருக்கிறார்கள். காட்டாக, மூவேந்தர் நாட்டுக்கு நடுவில் கொங்குநாடு இருந்திருக்கிறது. [இது இன்றையக் கொங்கு மண்டலம் மட்டுமல்ல; இதற்கும் விரிந்தது, இற்றைக் கருநாடகக் குவலாளபுரம் (கோலார்) உட்பட மேலும் சில பகுதிகளை உள்ளடக்கியது.] கொங்கின் கனிமவளம் கருதிப் பல்வேறு காலங்களில் மூவேந்தர் அதைத் தோற்கடித்து, இறைபெற்று, தம் ஆட்சியின்கீழ் கொண்டுவந்திருக்கின்றனர்; ஆனால் அதன் அரசரிமையை தமக்குச் சொந்தமாய் மாற்றியோர் குறைவு. காட்டாகச் சிலம்புக் காலத்தினும் முற்பட்ட பொழுதில், ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கொங்குக் கருவூரில் ஏறியிருக்கிறான். ஆனால் தன்நாட்டோடு அதைச் சேர்த்துக்கொண்டதாய்த் தெரியவில்லை. 

மூவேந்தர் பின்புலத்தில் இன்னொரு செய்தி கவனிக்கவேண்டும். அது வெளியார் படையெடுப்பும், தமிழகத்தில் இருந்து மகதம் வரை போய்வந்த வணிகச் சாத்துக்களைக் காத்ததும், எல்லைப்புறத் தேசங்களைக் காவல்செய்ததும் பற்றியதாகும். மோரியருக்கு முன்னால், வடக்கிருந்து யாரும் தமிழகத்தின் மேல் படையெடுத்தாய்த் தெரியவில்லை. இன்னுஞ் சொன்னால் விந்தியத்திற்குத் தெற்கேயிருந்த நாடுகள், மக்கள் பற்றிய புரிதல் கூட அவர்களிடம் குறைந்தேயிருந்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து வணிகத்தார் வடக்கே போய்வந்திருக்கிறார்கள். [தொல்காப்பியமும், சங்கத்தமிழின் அக இலக்கியங்களும் அதைத் தெளிவாக, ஆழமாக, உணர்த்துகின்றன.]

இரும்பு என்பது மகதத்திலும், தமிழ் மூவேந்தரின் பொதுக்களமான கொங்குநாட்டிலும் தான் அன்று பரவலாகக் கிடைத்தது. [இரும்புக் காலம் / பெருங்கற்படைக் காலம் கி.மு. 1000 இலேயே இந்தியாவிற் தொடங்கிவிட்டது.] மகதத்தில் இல்லாததாய், கொங்குநாட்டில் மட்டுமே பொன் கிடைத்தது. [அற்றைக் கொங்கு இந்தக் காலக் கொங்குமண்டலம் மட்டுமல்லாது, குவலாளபுரம் (கோலார்) பொருந்திய பழைய கங்கநாடும் சேர்ந்தது (கொங்கர்>கங்கர்.). இற்றைக் கொங்குமண்டலத்திற்கும் அதையொட்டிய இற்றைக் கருநாடகத் தென்பகுதிக்கும் இருக்கும் உறவுகள் மிகுதி.] பொன்வேண்டித் தெற்கே வருவது மோரியருக்குத் தேவையாயிற்று. [மறக்க வேண்டாம் அசோகனின் மாதண்ட நாயகன் கர்நாடகம் பிரம்மகிரியில் அரசப் பொறுப்பைப் பார்த்துவந்தான். அசோகனின் கல்வெட்டுக்கள் கருநாடகத்திலும் கிடைக்கின்றன.] 

அதே போல வணிகத்திற் செலாவணிபோற் பயன்பட்ட முத்தும், பவளமும், மணிகளும் தென்னகத்திலேயே கிடைத்தன. நெத்தில்>நெத்தி>நெதி>நிதி போன்ற சொற்கள் நித்திலம்/முத்தை விதப்பாகக் குறித்துப் பின் செல்வத்தைப் பொதுமையிற் குறித்திருக்கின்றன. சங்கநிதி என்பது முத்தையும், பதுமநிதி என்பது பவளத்தையும் குறித்தது. முத்து பாண்டியருக்கும், பவளம் சோழருக்கும் மிகுந்த செல்வத்தைக் கொடுத்தன. முத்தும், மணிகளும், மிளகும் சேரருக்குச் செல்வத்தைக் கொடுத்தன, பொன், வெள்ளி, முத்து, பவளம், மணிகள் போன்றவை அன்று வணிகம் நடத்துவதிற் செலாவணிப் பொருள்களாய் (exchange goods) இருந்தன. இவற்றைக் கொண்டிருந்த நாடுகள் செல்வத்தில் இயற்கையாகவே சிறப்புற்றிருந்தன. அற்றை நாவலந்தீவில் தமிழகம் சிறப்புற்றதற்கு இதுவே காரணம் 

இரும்புக் காலத்திற்குப் பிந்தைய குமுகாயநிலையில், இந்தியத் துணைக்கண்டத்தில் ஏறத்தாழ ஒரே வளர்ச்சியுற்ற இருவேறு அரசத்தொகுதிகள் மகதமும், தமிழகமும் மட்டுமே. இவை ஒன்றிற்கொன்று போட்டியாய், தம்முள் முனைப்புடன் பொருதியிருக்க வாய்ப்புகளுண்டு. தவிரச் செலாவணி கிடைக்க வேண்டியதன் காரணமாய், தமிழகத்துள் ஊடுறுவாமல், அற்றை மகதப் பொருளியல் இருந்திருக்க முடியாது. அதற்குக் கோசலம். மகதம் ஆகியவற்றிற் கிடைத்த உள்நாட்டுச் செம்பும், உத்தர பாதை வழியாக இற்றை இராசத்தானில் இருந்துபோன கேத்ரிச் செம்பும் (Khetri Copper) உதவியிருக்கலாம். [காசிச் செம்பு தமிழர் மரபில் என்றும் பேர்பெற்றது.] அதே போல மகதப் பொருளியலில் ஊடுறுவாமல், தமிழகம் இருந்திருக்க முடியாது. அந்தக் காலத்தில் தமிழகத்தில் பித்தளை/ வெண்கலம்/ செம்புத் தட்டுப்பாடு இருந்ததோ, என்னவோ? வரலாற்றுக் காலத்தில் ஈழத்தில் ஓரளவு செம்பு கிடைத்ததாக தெரனியாகல எடுத்துக் கூறுவார்(22)

தவிர, தமிழகத்தில் வெள்ளி சுற்றரவாகக் கிடையாது. அது வெளியில் இருந்துதான் வரவேண்டும். உப்பும், மிளகும், மற்றிங்கு விளைந்த பொருட்களும் வெளியே விலைபோய், பலவுப் பணம் (surplus cash) ஈட்டும் தேவை இங்கிருந்தது.. என்னென்ன பொருட்கள் மகதத்திலிருந்து இங்கு இறங்கின என்பதும் ஆயப்பட வேண்டிய செய்தியாகும். காரணம் இல்லாமல் தக்கணப்பாதை விந்திய மலை தாண்டி, கோதாவரியின் வடகரையில் உள்ள படித்தானம் வரை நீண்டிருக்காது. சந்தையோ, விளைவிடமோ தெற்கே இருந்திருக்கவேண்டும். இரண்டு தேசங்களுக்கும் இடையில் வணிகம் பெருத்து நடந்திருக்கவேண்டும். சங்க இலக்கிய அகத்துறையில் பாதிக்கு மேற்பட்டவை பாலைத்துறைப் பாட்டுக்கள். பாலைத்திணையிலும், இற்றை இராயலசீமையைக் கடந்து வணிகம் செய்யப் போவதாகவே பெரும்பாலான பாட்டுக்கள் அமைந்துள்ளன. சங்க காலத்தில் இவர் எங்கு போய் வணிகஞ் செய்தார்கள்? அது மகதம் அன்றி வேறெங்கும் இருக்க முடியுமா? 

காலகாலமாய் வடக்கு என்றவுடன் நம்மில் பலரும் தில்லி, பாஞ்சாலம் என்றே எண்ணிக் கொள்கிறோம். அது இற்றைக்கு 1000 ஆண்டுச் சிந்தனை. அதற்கும் முன்னால், 2000 ஆண்டுகளில், வடக்கு என்பது கோசலம், மகதம், இமயம் என்றே விரிந்தது. ஒழுங்கான ஆய்வுகள் அமைய வேண்டுமானால் நம்முடைய பார்வையில் மாற்றம் வேண்டும். உத்தர, தக்கணப் பாதைகளைப் புரிந்து கொள்ளாமல் வரலாற்றுவழி ஒழுங்கான ஆய்வு அமையமுடியாது. தக்கணப் பாதையின் நுழைவாயிலான படித்தானத்திற்கு தெற்கில் இருந்து மொழிபெயர் தேயத்தின் வழி எப்படி வணிகத்தார் சென்றார்கள்? மொழிபெயர் தேயம் தமிழரின் பொருளியலுக்கு ஏன் முகன்மையானது? - போன்ற கேள்விகள் ஆய்வு செய்யப்படவேண்டியவை. 
-------------------------
எடுகோள்கள்:

15. மாமூலனார் பாடல் அகம் 251: 5, மாமூலனார் பாடல் அகம் 265: 4-6
16. மாமூலனர் - அகம் 251: 12, அகம் 281:8; கள்ளில் ஆத்திரையனார் புறம் 175: 6-7, உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் அகம் 69:10
17. Rock Edicts No.II [Girnar Text}, Rock Edicts No.XIII [Shahbazgarhi Text], page 32 and 42, Inscriptions of Asoka D.C.Sircar, Publications Division, Ministry of Information and Braoadcasting, Government of India, 1998 
18. முனைவர். கா.ராஜன் “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” பக.78, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004. 
19. A.L.Basham, “History and Doctrines of the Ajivikas”, p.10, Motilal Banarsidass Publishers Pvt. Ltd, Delhi, 2009. 
20. பேரா. க. நெடுஞ்செழியன், “ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்”, மனிதம் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி - 21, 2002, வெங்காலூர் குணா “வள்ளுவத்தின் வீழ்ச்சி”, தமிழக ஆய்வரண், வெங்காலூர், 1996. 
21. Spencer Wells, Discussion about M130 marker in “The Journey of Man: A Genetic Odyssey”, Penguin Books, 2002
22. http://www.lankalibrary.com/geo/dera2.html; It is now known that the only major source of copper ore south of Madhya Pradesh in central India is located at Seruvila (the ancient Tambapittha) in eastern Sri Lanka (Seneviratne 1984; 1994). It is very likely that this was known to the Chalcolithic peoples of India and that Sri Lanka exploited this resource. Mantai could well have been a port for shipping copper to India.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பின் காலம் - 6

 
திராமிர சங்காத்தம் / தமிழ் மூவேந்தர் உடன்பாடு:

தமிழகத்தை அடுத்திருந்த மொழிபெயர்தேயம் மூவேந்தர் காவலுக்குட்பட்டதாக மாமூலனாரின் அகநானூறு 31-ஆம் பாட்டில் வரும் ”தமிழ்கெழுமூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” என்ற சொற்றொடரால் உணருகிறோம். மாமூலனார் காலம் மோரியருக்குச் சற்று பின்பட்டது. மாமூலனார் சொல்வது போல், [வடபுலத்தார் படை தென்புலத்துள் நுழையா வண்ணமும், தென்புலத்துச் சாத்துக்கள் தயக்கமின்றி தக்கணப்பாதையின் வழியாக மகதம் வரை போய்வரும் வண்ணமும்,] ஓர் ஒன்றிணைந்த காவலைத் தமிழ்மூவேந்தர் மொழிபெயர் தேயத்தில் ஏற்படுத்தியிருப்பார்களேயானால், மூவேந்தரிடையே ஏதோவோர் அரசியல் உடன்பாடும் புரிதலும் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. [தமிழரா? ஒற்றுமையா? எப்படி? - என்ற நகைப்புக் கேள்வி இங்கு எழுகிறதோ?]

இதைக் கலிங்கவேந்தன் காரவேலனின் புகழ்பெற்ற அத்திகும்பாக் கல்வெட்டும் உறுதி செய்கிறது. காரவேலனின் கல்வெட்டுக் காலம் கி.மு.172 என்று அண்மையில் வெளிவந்த “The haathigumphaa Inscription of Khaaravela and the Bhabru Edict of Asoka” என்ற நூலில் சசி காந்த் (Shashi Kant) என்பவர் நிறுவுவார். [அவருக்கு மாறாய் அத்திக்கும்பாக் கல்வெட்டின் காலம் கி.மு.117க்கு அண்மையில் என்று சொல்வாரும் உண்டு], 

இந்தக் கல்வெட்டில்”திராமிர சங்காத்தம்” என்ற பாகதச் சொல்லால் தமிழ் மூவேந்தர் உடன்பாடு குறிக்கப்படும். ”திராமிர” என்ற அடையாளம் முதன்முதலில் ஒரு கல்வெட்டில் இதிற்றான் புழங்கியது. இங்கே குறிப்பிடப்படும் ”திராமிர சங்காத்தம்” என்பது கல்வெட்டிற் சொன்னபடி ”1300 ஆண்டுகள்” நிலைத்ததாகவும், ”அவ்வளவு நீண்டகாலம் இருந்திருக்க வழியில்லை” என்று தமக்குள் வியப்புக் கொண்டு, அதை வெறும் ”113 ஆண்டுகள்” என்ற சொந்தக் கருதுகோளை முன்வைத்து தாம் வாசித்ததாகவும் புகழ்பெற்ற கல்வெட்டாய்வாளர்கள் K.P Jaiswal-உம், R.D. Bannerji-யும் தங்கள் கட்டுரையில் வெளிப்படுத்துவார்கள்(23). பின் வந்த பல வரலாற்றாசிரியரும் ”113 ஆண்டுகள்” என்ற செயிசுவால் - பானர்சி கருதுகோளை அப்படியே உண்மை என்று ஏற்று தமிழர் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளுவர். [அடிக்கோள் மறந்து கருதுகோள் உண்மையாகிப் போன சோகம் இங்கு நிலவுகிறது.] 

ஆனால் மேலே குறிப்பிட்ட அண்மையாய்வாளர் Shashi Kant என்பார், ஜெய்சுவால் - பானர்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, இக்கல்வெட்டின் உள்வரும் காலக் குறிப்புகள் எல்லாம் மகாவீரரின் இறப்பின் பின்வந்த முற்றாண்டுகளையே குறிக்கின்றன என்று நிறுவி, ”திராமிர சங்காத்தம்” என்பது ம.பி. [மகாவீரருக்குப் பின்] 113 ஆம் ஆண்டில் ஏற்பட்டது என்று வரையறுப்பார். அதாவது திராமிர சங்காத்தம் ஏற்பட்டது (கி.மு.527-113=) கி.மு.414 என்பார் (24)

இப்படியாக, கி.மு.172 ஆம் ஆண்டுக் காலத்துக் காரவேலன் கல்வெட்டு கி.மு.414 இல் இருந்த தமிழ் மூவேந்தர் உடன்படிக்கை பற்றிப் பேசுவது, முன்னாற் சொன்னது போல், சங்ககாலம் பற்றிய புதிய பார்வையை நமக்குத் தருகிறது. [இந்தக் கட்டுரையில் சசி காந்த்தின் ஆய்வுமுடிவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளேன். தமிழக வரலாற்றாசிரியர் யாரும் காரவேலன் கல்வெட்டை தமிழர் பார்வையில் ஊன்றிப் படித்ததாய்த் தெரியவில்லை. அப்படிப் படிப்பது தமிழர்க்குத் தேவையானது. (கல்வெட்டும் அதன் ஓரளவு தமிழ் மொழிபெயர்ப்பும் இந்தக் கட்டுரைத் தொடரின் இறுதியிற் கொடுக்கப்பட்டுள்ளன.) பாகத மொழி, இலக்கணம் நன்கு தெரிந்த தமிழகக் கல்வெட்டாய்வாளர் இதை மீளாய்ந்தால், தமிழர் வரலாறு இன்னுந் தெளிவு பெறூம். தமிழர் வரலாற்றைக் கணிப்பதற்கு இக்கல்வெட்டு ஒரு திறவுகோல் என்றே நான் எண்ணுகிறேன்.] 

இந்தத் ”திராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம். 

1. மூவேந்தரும் தம்முள் எவ்வேளிரையும், அடக்கலாம்; ஆனால் அவரிடம் இறைபெற்ற பின், தனியாட்சிக்கு விட்டுவிடவேண்டும். அவர் கொடிவழியை அழிக்கக் கூடாது. [வேளிருக்கும் வேந்தருக்கும் இடையே கொள்வினை, கொடுப்பினைகள் காலகாலமாய் உண்டு.]
2. தமிழகத்திற்கு வெளியிருந்து மூவேந்தர் / வேளிர் மேல் யாரேனும் படையெடுத்தால், தமிழகம் காக்க மூவரும், தங்களுக்குள் என்ன மாறுபட்டாலும், அதைப் பொருட்படுத்தாது, ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்; 
3. தமிழகத்தில் இருந்து தக்கணப்பாதைவழி வடக்கே போய்வரும் சாத்துக்களைக் காப்பாற்றும் வகையில், மொழிபெயர் தேயத்தில் மூவேந்தர் நிலைப்படைகள் (standing armies) நிறுத்திச் செயற்பட வேண்டும். [நிலைப்படையை மாமூலனார் பாடல்கள் குறிப்பாக சொல்லுகின்றன.]


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

கொங்குக் கருவூரும், சேரரும்:

காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டால் இன்னொரு செய்தியும் தெரிகிறது. அதாவது, Pithumda என்ற நகரில் உள்ள ஆவ (<ஆவியர்) அரசனை அழித்து, நகரைச் சூறையாடி, கவடிப் (வெள்வரகு) பயிரை வித்தி, கழுதையால் காரவேலன் உழுதிருக்கிறான். பாகதத்தில் Pithumda என்பதற்கு round walled என்ற பொருளுண்டு. பித்திகை என்ற தமிழ்ச் சொல்லிற்கும் வட்டச் சுவர் என்று பொருள் உண்டு. வட்ட மதில் கொண்ட இவ்வூர் தமிழக ஊராகச் சொல்லப்படுவதால், அதைக் கருவூராகக் கொள்ளுதற்குப் பெரும்வாய்ப்புண்டு. ஏனெனில், அக்காலத் தமிழகத் தலைநகர்களில் மதிரையும் கருவூருமே வட்ட மதில் கொண்ட பெருநகரங்களாகும். (மதில்>மதிரை = walled city மதுரை என்னும் இலக்கியப் பெயர் மீத்திருத்தமாகவே தெரிகிறது. இதுவரை கிடைத்த பழந்தமிழிக் கல்வெட்டுக்களில் மதிரை என்ற பெயரே இருக்கிறது; மதுரையில்லை.) 

கருவூர் நகரை அழிக்கும் அளவிற்கு அந்நகரில் என்ன சிறப்பு? அருகில் இருந்த கொடுமணமா? [கொடுமணம் என்பது கருவூருக்கு அருகில் பெரும் மணிகளைக் கடைந்து அணிகலன்கள், மாலைகள் செய்த இடமாகும் (25). கொங்குக் கருவூர் என்றும் வணிகச் சிறப்புக் கொண்ட ஊர் தான்]. மறுமொழியில்லாத கேள்விகள் பலவும் நம்முள் எழுகின்றன. இந்த ஊரைப் பிடிப்பதற்கு முன்னோ, பின்னோ, மூவேந்தருக்கு இடையிருந்த உடன்பாட்டை (திராமிர சங்காத்தத்தை) முறித்ததாகவும் இக்கல்வெட்டு ஆவணப்படுத்துகிறது. இதுபோன்றதொரு வேளிர் நாட்டைப் பிடிக்க, திராமிர சங்காத்தத்தை ஏன் முறிக்க வேண்டும்? அந்தக் காலத்தில் ஆவியருக்கும் மூவேந்தருக்கும் என்ன தொடர்பு? - என்ற கேள்விகள் நம் மனத்தை உறுத்துகின்றன. 

வேளாவிக் குடியினர் என்பார் பொதினியைத் (இற்றைப் பழனியைத்) தலைநகராய்க் கொண்டு ஒரு பெரும்பகுதியை ஆண்டவர். சேரரோடு கொள்வினை கொடுப்பினை உறவு கொண்டவர். நெடுஞ்சேரலாதனுக்கும் அவனுடைய ஒன்றுவிட்ட தம்பி செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கும் ஆவியர்குடியைச் சேர்ந்த அக்கா (பதுமன்தேவி) தங்கையர் மாலையிட்டிருக்கிறார்கள். நெடுஞ்சேரலாதன் தந்தை உதியச் சேரலுக்கு வெளியன் வேள்மான் மகள் நல்லினி வாழ்க்கைப் பட்டிருக்கிறாள். அந்துவஞ் சேரலுக்கும் இந்தப் பக்கத்தில் இருந்த வேளிர் மகளே வாழ்க்கைப் பட்டிருக்கிறாள். [அவள் தந்தை பெயர் சங்க இலக்கியத்தின் வழி தெரியவில்லை.] அவளும் ஓர் ஆவிக்குடிப் பெண்ணோ, என்னவோ? ஆவியர் குடிக்கு ஒன்றென்றால், தாய்வழியுறவு கருதிச் சேரர் முன்வந்து மாற்றாரைப் பழிவாங்குவது பதிற்றுப் பத்துப் பதிகங்களைப் படித்தால் நடக்கக் கூடியதே. ஆனாலும் திராமிர சங்காத்தம் இதனுள் எப்படி வந்தது? - மறுமொழி கிடைக்கவில்லை. 

காரவேலனுக்குப் பின் கொங்குக்கருவூரைச் சேரரே மீட்டிருக்கிறார்கள். அந்துவஞ்சேரல் கொங்குக் கருவூரைப் பிடித்தபின்னால், ஆவிக்குடியினர் மீண்டும் அங்கு ஆளவில்லை. ஒருவேளை பொதினிக்கருகில் தம் பாதிநிலத்தோடு அவர் ஒடுங்கினரோ என்னவோ? [18 ஆம் நூற்றாண்டிற் சசிவர்ணத்தேவருக்கு பெண்கொடுத்த கிழவன் சேதுபதி தன்நாட்டை இருகூறாக்கிச் சிவகங்கைச்சீமை என்ற புது அரசை உருவாக்கித் தன்மகளுக்குப் பாதிநிலஞ் சீராய்க் கொடுத்து, அது தனியுரிமை பெற்றது போல் இது நடந்ததா என்பது ஆய்விற்குரியது. ஏனெனில் செல்வக்கடுங்கோ வாழியாதன் தொடக்கத்திற் தன்னுடைய ஒன்றுவிட்ட சோதரனான பல்யானைச் செல்கெழுகுட்டுவனோடு சேர்ந்து பூழிநாட்டிலேயே வாழ்நாளைக் கழித்திருக்கிறான். (இற்றைப் பொன்னாணிக்கு அருகில் உள்ள. பூழி என்பது சேரநாட்டிலும் உண்டு; பாண்டிநாட்டிலும் உண்டு. பாண்டிநாட்டுப் பூழி என்பது சங்கரன் கோயிலுக்கு அருகில் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூழித் தேவன் பூலித்தேவன் என்று ழகரம் திரிந்த நிலையில் அழைக்கப் பட்டிருக்கிறார். பூழி = புழுதி) வாழியாதன் தந்தை அந்துவன்தான் கொங்குக் கருவூரை ஆண்டவன். அந்துவனுக்குப் பின் சிறிது காலமே செல்வக்கடுங்கோ கொங்குக் கருவூரை ஆண்டிருக்கிறான்.]

தங்கம் போன்ற கனிமங்கள் விளையும் கொங்குநாட்டின் நடுவுநிலை குலைந்து அதன் ஒருபகுதி சேரருக்குள் அமிழ்ந்தது மற்றவிரு வேந்தருக்கும் ஏற்பில்லாது, அதனால் திராமிர சங்காத்தம் முறிந்ததா? இதில் காரவேலன் பங்கென்ன? - தெரியாது. சூழ்ச்சியும், இருபுலப் பரிமாற்றமும் (diplomatic exchanges) நடந்திருக்கின்றன. என்னெவென்று, நமக்கு விளங்கவில்லை. ஆனால் திராமிர சங்காத்தம் முறிந்ததால், மூவேந்தருக்கிடையே மூண்ட பெரும் புகைச்சலும், ஒருவருக்கொருவர் நம்பாமையும், வன்மமும் காரவேலனுக்குப் பெருவாய்ப்பைத் தந்திருக்க வேண்டும். ஒருவேளை அதனாலேயே கொங்குக் கருவூர்மேல் அவன் படையெடுத்தான் போலும்.

சிலம்பில் சோழ, பாண்டியர் நிலை:

இனிச் சோழநாட்டு நிலைக்கு வருவோம். சிலம்பிற்குச் சற்று முன்பு சோழநாடு இரண்டானது சிலம்பிலேயே வெளிப்படுகிறது. வள நாட்டுச் சோழன் (உறையூர்ச் சோழன்) ஒரு கிள்ளி/வளவன். இவன் செங்குட்டுவனின் மாமன் மகன். உறையூர் அரசு கட்டிலில் அவனை ஏற்றியவனும் செங்குட்டுவனே. நாகநாட்டுச் சோழன் (புகார்ச்சோழன்) ஒரு செம்பியன்; செங்குட்டுவனை மதியாதவன். [நாக நாடு என்பது சிலம்புக் காலத்தில் புகாரைச் சுற்றிய சிறு நாடு. இதுவும் சோழநாடு தான். நாக நாட்டை சரியாக அடையாளம் காணாது அதனைப் ”பாதாள உலகம்” என்று புரிந்துகொண்டவர் பலர். நாக நாடு என்பது ஒருபக்கம் புகாருக்கு அருகிலும், இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்திலும் விரிந்தது போலும் (26). நாகனார் தீவான நயினாத் தீவு, மணிபல்லவம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. புகாருக்கே, நாகரோடு தொடர்புடைய சம்பாதி என்ற பெயரும் உண்டு. தவிர அதே நாட்டுள் நாக(ர்)பட்டினம் என்ற இன்னொரு துறைமுகமும் உண்டு.] 

நாகநாடும், வளநாடும், நாடுகாண் காதை (40-43) வரிகளின் படிச் சிறு நாடுகளாவே இருந்திருக்கின்றன. காடுகாண் காதையில் வரும் வரிகளை(27A) ஆய்ந்து பார்த்தால் இந்த நாடுகளின் நீட்சியை ஓரளவு அறியலாம். புகார் நகரிலிருந்து காவிரியை ஒட்டினாற் போல் நாகநாட்டின் எல்லை வெறும் 50-60 கி.மீ மட்டுமே இருந்தது என்று நம்பமுடிகிறாதா? அண்மை ஆய்வின் முடிவில் இவ்வுண்மை அறிந்து நானும் வியப்பில் ஆழ்ந்தேன் (27B) இதே போல, வளநாட்டின் கிழக்கெல்லை திருவரங்கத்திற்கு அருகிலே முடிந்து விடுகிறது. நாகநாட்டின் வடக்கெல்லை தென்பெண்ணையாற்றில் இருந்திருக்கலாம். வளநாட்டின் வடக்கெல்லை தெரியவில்லை. வளநாட்டின் மேற்கெல்லை உறையூருக்கும், கொங்குக் கருவூருக்கும் இடைப்பட்டது. பொதுவாக, வளநாடும், நாகநாடும் சிலம்பின் காலத்தில் சிறு நாடுகள். வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் இடைத்தொலைவு காவிரியை ஒட்டி பாண்டியனிடமே இருந்திருக்கிறது. இது மாங்காட்டு மறையவன் கூற்றால் விளங்குகிறது (28).)

பாண்டியன் நெடுஞ்செழியனும், அவன் தம்பி வெற்றிவேற் செழியனும் கூட செங்குட்டுவன் மேலாளுமையை ஏற்காதவர். [”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்” என்ற கொலைக்களக் காதை 163 வரிகளின் பின் செழியன்மகன் பற்றிக் குறிப்பு வருகிறது. மதுரை எரியுண்டதில் செழியன் மகன் இறந்ததால், கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன், நெடுஞ்செழியனின் தம்பியாய் இருக்கவே வாய்ப்பு அதிகம்.] 

மொத்தத்தில் சோழரும், பாண்டியரும் வலிவின்றி அதே பொழுது சேரரோடு முரணிய காலமே சிலம்பின் காலமாகும். தமிழ் மூவேந்தர் உட்பகை கூடிய காலமாததால், அதைக் குறைக்கும் முகமாய் தமிழ்-தமிழர் என்பதை முன்னிறுத்தி, சிலப்பதிகாரம் எழுந்திருக்கலாம். மூன்று குறிக்கோள்களுக்கும் மேல்,”ஒற்றுமை” வேட்கை உட்கிடக்கையாய் நூலுள் இருந்திருக்கிறது. ‘சங்காத்தம்’ குலைத்த சேரரிடம் இருந்தே இத்தகைய ஒற்றுமை முயற்சி எழுந்திருக்கலாம். [சிலப்பதிகாரம் என்ற காவியப் பெயருக்கே இரு பொருட்பாடுகள் உண்டு. ஒன்று சிலம்பால் அதிகரித்த கதை; இன்னொன்று சிலம்பின் (=மலை, மலைநாடு) அதிகாரம் கூடிய கதை.] 

பொதுவாக வம்ப மோரியர் தங்கள் காலத்தில் தமிழகத்தைத் தாக்கியதும், மோரிய அசோகனுக்குப் பின்னால் வந்த சுங்கரின் கடைசி வலிக்குறைவும், சேரரின் வடசெலவுக்குக் காரணமாகலாம். சிலம்பை மீளாய்வது, தமிழர் வரலாற்றைப் புரிய வைக்கும். உள்ளூர்ச் சண்டையைக் குறைத்து, ”தமிழகம் ஒன்றே” என்பதை நிலைநிறுத்தும் முயற்சியில் வெளியாரை வெற்றிகொண்ட செய்திகள் முன்கூறப்படுவதை வேனிற்காதை (1-5), ஆய்ச்சியர் குரவை (1-5) வரிகளிற் காணலாம் (29).

எடுகோள்கள்:

23. http://enc.slider.com/Enc/Hathigumpha
24. Shashi Kant, “The Hāthīkumphā inscripṭion of Khāravela and the Bhabru Edict of Asoka”, pp.35-36, D.K.Printworld (P) Ltd.,2000
25. முனைவர். கா.ராஜன் “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” பக.117-130, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004. 
26. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=31711
27. A.முதிராக் கிழவியின் முள்ளெயிறு இலங்க 
மதுரை மூதூர் யாதென வினவ 
ஆறைங் காதம் மகனாட்டு உம்ப 
நாறைங் கூந்தல் நணித்து என 
- நாடுகாண் காதை (40-43)
B. அளவைகள் - 6. இராம.கி. யின் வலைப்பதிவு இடுகை: http://valavu.blogspot.com/2009/07/6.html
28. அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி 
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது 
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் 
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள 
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு 
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி 
- காடுகாண் காதை (17-22) 

29. நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் 
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு 
மாட மதுரையும் பீடார் உறந்தையும் 
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும் 
அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின் 
- வேனிற் காதை (1-5) 
கயல் எழுதிய இமய நெற்றியின் 
அயலெழுதிய புலியும் வில்லும் 
நாவலந்தண் பொழில் மன்னர் 
ஏவல் கேட்பப் பாரர சாண்ட 
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் 
- ஆய்ச்சியர் குரவை (1-5)



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பின் காலம் - 7

 
சிலம்புக் காலத் தமிழக நில முகப்பு (map):



படம் 1: தமிழர் வரலாறு - பி.இராமநாதன், தமிழ்மண் பதிப்பகம்

மேலேயுள்ள படம் - 1(30) கிட்டத்தட்ட கி.மு. முதல் நூற்றாண்டில் நிலவிய தமிழக எல்லைகளைக் குறிக்கும். இந்தக்காலத்தில் சேரர் நாடு என்பது கொங்குநாட்டையும் இணைத்து மூவரிலும் பெரிதானது. செங்குட்டுவன் காலத்தில் இன்னும் இது வடக்கே விரிந்திருக்கலாம். குடநாட்டு வஞ்சி மூன்று திசைகளிலும் வீச்சுக் கொண்டதாய் இருந்தது. கோசர் நாடு (south canara) என்னும் துளுநாடு இற்றை மங்களூரைச் சுற்றியது. சிலம்பின் காலத்தில் இதுவும் சேரருக்கு அடங்கியது என்றே தோன்றுகிறது. 

படத்தில் தொண்டை,நாட்டையும், நாகநாட்டையும் பிரிப்பது தென்பெண்ணை ஆறாகும். வளநாடு தான் அன்றிருந்த மூவேந்தர் நாடுகளுள் மிகவும் சிறியது. வளநாட்டிற்கும், நாகநாட்டிற்கும் இடையே காவிரியின் தென்கரை வரைக்கும், பாண்டிநாடு துருத்தியதை மாங்காட்டு மறையவன் கூற்றால் அறிகிறோம். பெரும்பாலும் இற்றைத் திருவாங்கூரையும், அதற்குத் தெற்கிலும் இருக்கும் வேணாடு உட்பட்ட கேரள நிலங்கள் தென்பாண்டி நாட்டிற் சேர்ந்திருக்கலாம். படத்தில் பாண்டிநாட்டிற்கும், வளநாட்டிற்கும், நாகநாட்டிற்கும் இடைப்பட்ட எல்லைகள் தெளிவாகக் குறிக்கப் படவில்லை. இவையும் ஆய்விற்குரியன. மூவேந்தர் போக, குறுநில வேளிர் பலரும் அவரிடை இருந்திருக்கின்றனர். அவர்நாடுகளும் படத்திற் குறிக்கப் படவில்லை.

முதற் கரிகாலன் பற்றிய செய்திகள் / உத்தர, தக்கணப் பாதைகள்:

தமிழ் மூவேந்தரின் பின்புலத்தைப் பார்க்கும் போது, சிலப்பதிகாரக் காலத்தில் அவரிடையே பெரும் ஒற்றுமைக்குலைவு இருந்ததை மேலே குறிப்பாகப் பார்த்தோம். இத்தகைய குலைவில் இருந்து தமிழர்நிலை மாறவே, தமிழரெனும் குடை பிடித்து, முன்னோர் பெருமிதங்களை இளங்கோ தன் காப்பியத்துள் சொல்லுகிறார் என்பது சிலம்பைப் படிக்கும் யாருக்கும் விளங்கும். முதற் கரிகாலன் பற்றிய சிலம்பின் செய்தியும் அத்தகைய முன்னோர் பெருமிதங்களில் ஒன்றே. 

சிலம்பை ஆழ்ந்து படிக்காத பலரும் முதற் கரிகாற் சோழனைச் சிலம்பு காலத்தவனாகவே சொல்கிறார்கள். அந்தப் புரிதல் முற்றிலும் தவறு. இந்திரவிழவு ஊரெடுத்த காதையின் 89-104 ஆம் வரிகளைப்(31)படித்தால், கரிகாலன் புண்ணிய திசைமுகம் (= வடக்கே காசியை நோக்கிய பயணம்) போனது ‘அந்நாள்’ (= ’சிலம்பிற்கு நெடுங்காலம் முன்னால்’) என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும். அந்த விவரிப்பின் 96 ஆம் வரியில் வரும் ’பகைவிலக்கிய பயங்கெழு மலை’ என்பது இமயத்தைக் குறிக்கும். 

திருமாவளவன் வடநாட்டுச் செலவில் சென்ற நாடுகள் வச்சிரம், மகதம், அவந்தி ஆகிய மூன்றாகும். இவற்றில் ’பகைப்புறத்து மகத’த்தோடு போர் நடந்திருக்கிறது. ’உவந்து கொடுத்த அவந்தி’யோடு போர் நடக்கவில்லை. மகதத்திற்கு மேற்கில் இருந்த வச்சிரம் இறை கொடுத்ததால், போர் நடவாது போயிருக்கலாம். கோசலத்திற்கு வடக்கே இருந்த இமயத்தில்.எங்கு புலிச்சின்னம் பொறித்தான் என்பது கள ஆய்விற்குறியது. 

அவந்திக்குப் போகும் வழியிலிருந்த நாடுகள் மொழிபெயர் தேயத்தில் இருந்தவை. அவை பற்றி ஏதும் இங்கு பேசாததால், எந்தவிதமான எதிர்ப்புமின்றி திருமாவளவன் எளிதிற் கடந்திருக்கிறான் என்றே பொருள் கொள்ளலாம். மூவேந்தர் காவலுக்குட்பட்ட மொழி பெயர் தேயம் ஆங்கிலத்தில் சொல்லப் படுவது போல், ஒருவகை buffer states ஆகவே இருந்திருக்கலாம். கீழேயிருக்கும் படத்தில்(32) தக்கண, உத்திரப்பாதைகள் சுட்டிக் காட்டப் படுகின்றன. கரிகாலனின் வடசெலவைப் புரிந்து கொள்ள உதவும் தக்கணப்பாதை இக்கட்டுரையாசிரியனால் படத்தில் படித்தானத்திற்கும் (Paithan) தெற்கில் நீட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. 

கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள் என்பவை இன்றைய ஆந்திரப் பிரதேசத்தையும், ஒரிசாவையும், சத்திசுகாரையும், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களையும் முழுதும் ஆட்கொள்ளவில்லை. இவ்விடங்கள் எல்லாம் பெருங்காடுகளாய் இருந்தன. காடுகள் குறைந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மராட்டியம் போன்றவை வழியாகத்தான் வடக்கு/தெற்கு வணிகமே நடந்தது.

அன்றைய உத்தர, தக்கணப் பாதைகள் வணிகத்துக்கு மட்டுமல்லாது, அரணம் (army) நகர்வதற்கும், கோட்டைகள் அமைத்துக் காவல் செய்வதற்கும் கூட முகன்மையானவை. இந்தப் பாதைகளைக் கைக்குள் வைத்துக் கொள்ளாத எந்தப் பேரரசும் மிக எளிதில் குலைந்து போயிருக்கும். அதே போல எந்த எதிரியும், இந்தப் பாதைகளைத்தான் முதலில் கைக்கொள்ளத் துடிப்பான். மாதண்ட நாயகர்கள் இந்தப் பாதைகளின் விளிம்புகளில் தான் பேரரசால் பணிக்கு அமர்த்தப் படுவார்கள். இந்தப் பாதைகள் பெருவழிகள் என்று வரலாற்றில் சொல்லப்படும். 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 





படம் 2: உத்தர, தக்கணப் பாதைகள்

வடமேற்கில் தக்கசீலம் தொடங்கி, (ஜீலம், செனாப், ராவி, சட்லஜ் என்னும்) நான்கு ஆறுகளைக் கடந்து கங்கையையும் கடந்து அத்தினாபுரம் வழி, சாவத்தி, கபிலவாய்த்து, குசினாரா, வேசாலி, பாடலிபட்டணம் வழியாக அரசகம் (முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகம் - Rajgir) வரை வந்து சேரும் பாதையை உத்தர பாதை என்று சொல்லுவார்கள்.

இதே போல, கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானம் (patiththaana> prathisthana; patiththaana> payiththaana> paithan; இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் உள்ளது) தொடங்கி அசந்தா, எல்லோரா வழியாக வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா(Bhilsa) வந்து நேர்வடக்கே திரும்பி தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் இருக்கும் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி என்ற சாகேதம் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேருவது தக்கணப் பாதையாகும். (சாவத்தி கோசலத்தின் தலைநகர் கிட்டத்தட்ட நேபாள எல்லையில் உள்ளது. கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள்.)

உத்தர, தக்கணப் பாதைகள் போக, கங்கையை ஒட்டியே பாடலியில் இருந்து மேற்கே சென்றால் வாரணசி வழி, கோசாம்பி அடையும் பெருவழியும் அந்தக் காலத்தில் முகன்மையான ஒன்றாகும். 

எந்த வடநாட்டுப் படையெடுப்பும் இந்த முப்பெரும் பாதைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நடக்க முடியாது. மேலேயுள்ள படம் -2 இல் காட்டப்பெறும் தக்கண, உத்தரப் பாதைகள் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறுகளை நிருணயித்தவை. 

முதற்கரிகாலன் காலத்தில் வடக்கில் இருந்த 16 பெருங்கணப் பதங்களில் (mahajana padas) முகன்மையானவை காசி - கோசலம் (தலைநகர் - சாவத்தி / சாகேதம்), மகதம் (தலைநகர் - இராச கிருகம்), வத்சம் / வச்சிரம் (தலைநகர் - கோசாம்பி), அவந்தி (தலைநகர் - உஞ்சை என்னும் உச்சயினி) ஆகிய நாலு பதங்களாகும். வட இந்திய வரலாற்றின் முதற் பேரரசு காசி-கோசலம். அதன்பின் எழுந்த இரண்டாம் பேரரசு மகதமாகும். கி.மு.546-494 ஆண்டுகளில் மகதத்தை ஆண்ட பிம்பிசாரன் மகதத்தின் முதற் பேரரசனாவான். அவனுக்கு முன்னால் வரலாற்றுக் கால அரசர்கள் யாரும் குறிப்பிடப் படுவதில்லை. இந்த அரசனின் காலத்துக்கு நடுவில் தான், கி.மு.527ல் செயின மதத்தின் 24 ஆவது தீர்த்தங்கரர் மகாவீரர் இறந்ததாகச் சொல்லுவார்கள்(33). [மகாவீரர் நிருவாணநாள் குறித்துக் காலக்குழப்பம் இதுவரை சொன்னதில்லை.]

பிம்பிசாரனுக்கு அடுத்து கி.மு.494-462 இல் மகத்தை ஆண்டவன் பிம்பிசாரன் மகனான அசாதசத்து ஆவான். அவன் தன் மாமன் பெருஞ்சேனாதியின் (Presnejit) கோசலத்தையும், விச்சி (தலைநகர் - வைசாலி) யையும் பிடித்ததால், புத்தர் காலத்திற்குப் (கி.மு.563-483) பின், 3 பெருநாடுகளே மீந்தன. [விச்சியும் வச்சிரமும் வெவ்வேறானவை.] இவற்றிலும் அவந்திக்கும் மகதத்திற்கும் இடையே பெரும் புகைச்சல் இருந்ததாகவே வரலாறு சொல்லுகிறது. இவ்விரு நாடுகளுக்கு நடுவிருந்த வச்சிரம் பெரிதும் வலி குறைந்திருந்தது. கி.மு.462-446 இல் அசாதசத்துவிற்குப் பின் வந்த அவன் மகன் உதயன் காலத்தில், கி.மு.459 இல் பாடலிபுத்ரம் என்னும் தலைநகரம் உருவாகியது.

முதற் கரிகாலனின் வடசெலவு அசாதசத்துவின் கடைசிக் காலத்தில் அல்லது உதயனின் தொடக்க காலத்தில், கி.மு.462 -க்கு அண்மையில், நடந்திருக்கவே பெரிதும் வாய்ப்புண்டு. இதே கருத்தைப் பேரா. க.நெடுஞ்செழியனும் வலியுறுத்தியிருக்கிறார்(34). சிலம்பிற் கூறியுள்ளபடி, இப்படையெடுப்பில் அவந்தியரசன் கரிகாலனோடு சேர்ந்து மகதனை எதிர்த்துப் பொருதி இருக்கிறான். அவந்திக்கு அடுத்திருந்த வச்சிர நாடு போரிடாமலேயே கரிகாலனுக்கு அடங்கிப் போயிருக்கிறது. மகதப் போரின் பின்னால் இமையம் ஏறி கரிகாலன் புலிச்சின்னம் பொறித்திருக்கலாம். [அந்தக் காலத்தில் கோசலத்தைக் கடந்தே இமையம் செல்லவேண்டும். அசாதசத்துவின் காலத்தில் கோசலம் மகதத்தின் ஆளுகைக்கு உட்பட்டு விட்டது. எனவே மகதத்தைத் தோற்கடித்தால் இமையம் செல்வது கடினமானது அல்ல.]

இப்படியாக, அசாதசத்துவின் வழியினரோடு கரிகாலன் முதன்முறை பொருதியதற்குப் பின்னால், நந்தர்(35), மோரியர்(36), சுங்கர், கனகர் (இவர்கள் இருவரின் காலத்துச் செய்தி சிலம்பில் வருகிறது; பின்வரும் பத்திகளில் பேசப் படுகிறது), என அடுத்தடுத்து பகைப்புறத்து மகதத்தோடு தமிழகம் தொடர்ந்து பொருதியிருக்கிறது. இந்தப் போர்களை மகதத்தின் பக்கமுமிருந்து யாரேனும் வரலாற்றாய்வு செய்வது நலம் பயக்கும். அப்படியோர் எதிரி அங்கில்லாது இருந்தால், நமது செவ்விலக்கியம் விளம்பும் தமிழ்வேந்தரின் வடசெலவுகளுக்குப் பொருளில்லை. உண்மை எங்கோ பொதிந்திருக்கிறது. இருந்தாலும் தமிழிலக்கியம் கூறுவதை இந்திய, மேல்நாட்டு வரலாற்றாசிரியர்கள் ஒதுக்கியே தள்ளுகிறார்கள். 

மகத்திற்கும் தமிழ்மூவேந்தருக்கும் இடையே விருப்பு-வெறுப்பு உறவுமுறை [love-hate relationship] நிலவி, ஒரேவிதமாய்ச் சிந்திக்கும் ஈர் எதிராளிகளாய்த் (like minded opposites.) இவர்கள் இருந்திருப்பாரோவென்று எண்ணவேண்டியிருக்கிறது. [இருவரிடத்தும் இருந்த அறிவுச் செறிவு, மெய்யறிவியல் வாக்குவாதங்கள் (பட்டிமண்டபங்கள்), ’பனையோலை’ மரங்கள், இரும்பு, வாணிகம், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நெல்வேளாண்மை, பல்வேறு குமுக அடையாளங்கள், சமகாலத்திய எதிராளித் தன்மையை ஆழ்ந்து உணர்த்துகின்றன.] மேலே சொன்ன பல்வேறு மகத ஆட்சியாளரைக் கவனித்தால், நந்தரோடு தமிழர் சற்றுக் குறைத்துப் போர் புரிந்திருக்கிறார்கள் என்றும், அவந்தி வச்சிரங்களோடு சிலபோதே போர் நடந்திருக்கலாம் என்பதும் புலப்படுகிறது. .

இந்தப் போர்ச் செய்திகள் மட்டுமல்லாது, தமிழர்கள் அடிக்கடி வடக்கே புனித நீராட்டுப் பயணம் கொள்ளும் போக்கைக் குறிக்குமாப் போல, மத்திய தேசத்தில் இருந்த வாரணாசியும் சிலம்பின் அடைக்கலக் காதை 178 ஆம் வரியில் ”மத்திம நன்னாட்டு வாரணம்” என்று பேசப்படுகிறது(37). செங்குட்டுவனின் அன்னை புனித நீராடியதும் வாரணாசியில் இருக்கலாம். கங்கை நீராடல் என்பது தமிழகத்தின் நெடுநாட் பழக்கம் போலும். இன்றுவரை நிலவுகிறது. [காசித் தடங்கண்ணி (விசாலாட்சி) - ஆலமர் செல்வன் (விசுவநாதன்) என்ற தொன்மங்கள் தமிழரிடம் இன்றுவரை பெரிதும் நிலைத்தன. ஆலங்காடு (Ficus Bengalensis) செழித்திருந்த நாடு மகதம் ஆகும்.]

செங்குட்டுவனின் சமகாலப் பங்காளிகள்:

செங்குட்டுவனோடு, அவன் காலத்துப் பங்காளிகளைச் சிலம்பின் மூலமாகவும், மற்ற சங்க நூல்கள் மூலமாகவும், அடையாளம் காணுவது செங்குட்டுவன் பின்புலத்தை மேலுந் தெளிவாக்க உதவும். 

செங்குட்டுவனின் தந்தையைப் பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்துவழியாகவே அறிகிறோம். அவன் இமயம் வரை சென்ற செய்தி மேலும் ஆய்வு செய்யப் படவேண்டியது. ஒருவேளை செங்குட்டுவனின் முதல் வடசெலவும் (அவன் தாய் காசியில் புனித நீராடியது), இமயவரம்பனின் வடசெலவும் ஒன்றாய் இருக்கலாம். தந்தையின் பெயரால் மகன் போரிட்டிருக்கலாம். 

அடுத்தது செங்குட்டுவனின் சிற்றப்பனான பல்யானைச் செல்கெழு குட்டுவன். கட்டுரைக்காதையின் 61-64 ஆம் வரிகள் இவனைக் குறிக்கின்றன(38). இவன் வானுறை கொடுத்த செய்தி பாலைக் கௌதமனாரால் பதிற்றுப்பத்து - 3 ஆம் பத்திலும் உறுதி செய்யப் படுகிறது.

செங்குட்டுவனின் அண்ணன் (பெரிய தாய் மகன்) களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், (நார்முடிச் சேரலின் நேரடித்) தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் பற்றிப் பதிற்றுப் பத்தின் 4, 6 ஆம் பத்துகள் வாயிலாக அறிகிறோம். இளங்கோ என்பவர் சேரனின் தம்பியா என்பது வரந்தரு காதையினாலன்றி வேறெங்கும் நமக்குத் தெரிவதில்லை. [வரத்தருகாதை என்ற ஆக்கம் இளங்கோ பற்றி உண்மையைச் சொல்லியிருக்கலாம். அதேபொழுது, எப்பொழுது வரந்தரு காதையை இளங்கோ எழுதியதன்று என நாம் ஒதுக்கினோமோ, அப்பொழுதே நம்மைப் பொருத்தவரை இளங்கோ என்பவர் சேரனின் தம்பி என்ற கதை பட்டுப் போகிறது. உண்மை ஏதென்று நாம் சொல்லுதற்கில்லை.] 

கட்டுரை காதையின் படி (79-84ஆம் வரிகள்), ஐங்குறுநூற்றைத் தொகுப்பிக்க உதவிய (யானைக்கண் சேய்) மாந்தரஞ் சேரல் இரும்பொறை செங்குட்டுவனின் சமகாலத்தவன் ஆகிறான். ஆனால், இவன் கொங்குக் கருவூரில் இல்லாது பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்குப் பிறகு இன்றையப் பொன்னானிக்கருகில் குடநாட்டின் வடக்கிலிருந்த மாந்தரத்தில் ஆட்சி கொண்டிருக்கலாம். யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் குறிக்கப்படுவதன் காரணமாய், முகன்மைச் சங்க இலக்கியத்தொகுப்பு ஏற்பட்டது கூடச் செங்குட்டுவனுக்குச் சற்றுப் பின்னுள்ள காலமாகலாம். 

இளஞ்சேரல் இரும்பொறை பற்றிய செய்தியும் சிலம்பில் வருவதால்(39), அவனுமே செங்குட்டுவன் காலத்தான் ஆகிறான். கொங்குக்கருவூரில் ஆண்ட தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் செங்குட்டுவன் காலத்தில், அன்றி அவனுக்குச் சற்று பின்னால் இருந்திருக்க வாய்ப்புண்டு. 

மொத்தத்தில், செங்குட்டுவன் வாழ்நாளில் அவனுக்குச் சமகாலத்திலும், சற்றுமுன்னும் பின்னுமாய், கொங்குச் சேரர் உட்பட, 8, 9 சேரர்கள் இருந்திருக்கிறார்கள். குட வஞ்சி, குட்ட நாடு, கொங்கு வஞ்சி, பூழிநாடு, மாந்தரம், தொண்டி எனப் பல்வேறு இயலுமைகள் சேரரிடை இருந்ததால், இத்தனைபேர் சமகாலத்தில் இருந்திருக்க வழியுண்டு. எல்லாச் சேரரும் யாப்பிற்குத் தகுந்தாற் போல் சேரல், பொறையன், மலையன், வானவன் என்று விதந்து சொல்லப் பட்டிருக்கிறார்கள்(40)

பொதுவாகச் சொன்னால், சங்க கால வரலாறு, குறிப்பாகச் சேரர் வரலாறு, மீண்டும் முறையாக ஒழுங்கு செய்யப் படவேண்டும். 

நாம் சேரர்பற்றி உணரவேண்டிய, இன்னொருசெய்தியும் உண்டு. வேதநெறித் தாக்கம் சேரரிடம், சிறிதுசிறிதாய்க் கூடியது பதிற்றுப்பத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. மற்ற நெறிகளின் பாதிப்பும் வஞ்சியில் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக புத்தநெறித் தாக்கம். அசோகப் பேரரசனின் தாக்கம், சேரர் காலத்துச் சமயப்பழக்கத்தில் மட்டுமின்றி, அரச நடைமுறைகளிலும் இருந்திருக்க வேண்டும்.. சங்கப் பாடல்களிலும், சிலம்பிலும் பலவிடங்களில் வரும் திகிரி என்னும் சொல்லின் பயன்பாடு. வெறும் தேர்க்காலைக் குறிக்காது, அறத்தோடு கூடிய அரச நெறி, அறவாழி என்பதையே குறித்தது, என்று பேரா. க.நெடுஞ்செழியன் சொல்லுவார்(41). இதையும் ஆழ்ந்து ஆயவேண்டும். அற்றைச் சமண நெறிகள் (ஆசீவகம், செயினம், புத்தம் என்ற மூன்றுமே) மகதத்தார் போலவே தமிழரிடை பெரிதும் புழங்கியிருக்க வாய்ப்புண்டு. அவை வேதநெறியோடு போட்டிகொண்ட காலநோக்கில், சங்க இலக்கியம் ஆயப்படவேண்டும்.

“தேவனாம்பிய” என்னும் பெயர் அசோகனுக்கும், அவன் வழியாருக்கும் அன்றி, அவனுக்குச் சற்று பிற்பட்ட இலங்கை அரசன் தீசனுக்கும் உரிய பட்டமாய் வரும். ”சேரருக்கான வானவரம்பன், இமையவரம்பன் ஆகிய பட்டங்கள் அது போன்றதே” என்று ஓர்ந்துரைப்பார் மயிலை.சீனி.வேங்கடசாமியார்(42). [வானவரன்பன்>வானவரம்பன், இமையவரன்பன்>இமையவர் அம்பன் என்று ஏடெழுதுவோரால் திருத்தப் பட்டிருக்கலாம் என்று அவர் சொல்லுவார்]. இதுவும் அசோகனின் தாக்கத்தை நமக்கு உணர்த்துகிறது. அவ்வளவு பெரிய அரசனின் புத்தநெறிப் பரப்பல் தமிழரைப் பாதிக்காது இருந்தல் இயலாது. [இதே போல பல சங்கப் பாடல்கள் ஆசீவக நெறியை உணர்த்துவதாய் பேரா. க.நெடுஞ்செழியன் சொல்லுவார். அதையும் ஒதுக்க முடியாது.] 

எடுகோள்கள்:

30. பி.இராமநாதன், “தமிழர் வரலாறு”, ப.88, தமிழ்மண் பதிப்பகம், 2008.
31. இருநில மருங்கில் பொருநரைப் பொறாஅர் 
செருவெங் காதலின் திருமா வளவன் 
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் 
நாளொடு பெயர்த்து தண்ணார்ப் பெறுக இம் 
மண்ணக மருங்கில் என் வலிகெழு தோள் எனப் 
புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள் 
அசைவில் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப் 
பகை விலக்கியது இப் பயங்கெழு மலையென 
இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக் 
கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு 
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் 
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும் 
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன் 
பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும் 
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த 
நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும் 
- இந்திரவிழவூர் எடுத்த காதையின் (89-104)
32. D.D.Kosambi, “The Culture and Civilization of Ancient India in Historical Outline”, pp 136-137, Vikas Publishing House Pvt Ltd., 1994. [within the figure shown here, a tentative extension of the Dakshina Patha upto Vanji is shown by the present author. This is done to aid visualization.]
33. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India (100 BC-AD 900)” pp 16-27. Munshiram Maniharlal Publishers Pvt. Ltd, 2005
34. க.நெடுஞ்செழியன், “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, ப.99, பத்ப்பாசிரியர். இரா.சக்குபாய், மனிதம் பதிப்பகம், திருச்சி 620021.
35. அகம்: 265.4, அகம் 251.5
36. அகம்:69.10, 251.12, 281.8, புறம்: 175.6
37. வாருண, அசி என்ற என்பவை கங்கையில் இணையும் ஆறுகளாகும். அவற்றையொட்டியே வாரணவாசி>வாரணாசி என்ற பெயர் தோன்றியது.
38. வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன் 
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு 
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த 
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கு எனக் 
கட்டுரைக் காதை (61-64)
39. சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து 
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் 
நடுகற் காதை (147-148)
40. காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி 
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி 
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி 
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி 
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக்
41. க.நெடுஞ்செழியன், “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, ப.104-130, பதிப்பாசிரியர். இரா.சக்குபாய், மனிதம் பதிப்பகம், திருச்சி 620021.
42. மயிலை. சீனி.வேங்கடசாமி, ”சேரன் செங்குட்டுவன்”, ப 93-98, வ.உ.சி.நூலகம், சென்னை 14, 2005



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பின் காலம் - 8

 
சேரரின் வஞ்சி:

சேரன் செங்குட்டுவனின் சமகாலப் பங்காளிகளைப் பார்த்தோம் அல்லவா? இவர்களின் மையப் புள்ளி எங்கிருந்திருக்கும்? பங்காளிகளுக்கு நடுவிலா? அன்றி, விளிம்பிலா? - என்பது அடுத்த கேள்வி. குறிப்பாக இது குட நாட்டு வஞ்சியா? கொங்கு வஞ்சியா? - என்ற கேள்வியெழும். கொங்குமண்டலப் பற்றுக் கொண்ட பல ஆய்வாளர்கள் ஆன்பெருநை என்னும் பெயர் தமிழக அமராவதிக்குப் பொருந்துவதாலும் [ஆன்பெருநை = ஆன்பெருவதி> ஆம்பெராவதி> ஆம்ப்ராவதி> ஆம்ராவதி> அமராவதி], அங்கு ஏராளம் தொல்லியற் பொருட்கள், நாணயங்கள் கிடைப்பதாலும், அதையே சேரர் தலைநகர் வஞ்சி என்று சொல்வார்கள். ஆனால் சிலம்பைச் சரியாக ஆராய்ந்தால் தலைமை வஞ்சி கொங்கிலில்லை, அது அடுத்த வஞ்சி என்பது எளிதில் விளங்கிப் போகும். [இதற்காகக் கொங்குக் கருவூரின் முகன்மையை நாம் குறைக்கிறோம் என்று பொருளில்லை. ஒரே பெயர் இருவேறு ஊர்களுக்கு இருப்பது தமிழருக்குப் புதிதா, என்ன?] 

நெடியோன் மார்பில் ஆரம் போன்று ’பெருமலை விலங்கிய பேரியாற்று அடைகரை” என்று காட்சிக் காதை 21-22 ஆம் வரிகள் சொல்லுவதால்,. செங்குட்டுவனின் வஞ்சி என்பது உறுதியாக இன்றையக் கொடுங்களூர் தான்; (முன்னாற் சொன்ன எடுகோள் 12.) வஞ்சிக் காண்டம் நெடுகிலும் இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன(43). இன்றைய கொடுங்களூரில் இருந்து சுள்ளியம் பேரியாற்றை ஒட்டியே, மூவாற்றுப் புழை வழியே அயிரிமலை (= கூர்த்த மலை) வரை போகமுடியும். செங்கோடு என்பதற்கும் செங்குத்து மலை என்று பொருள் கொள்ள முடியும். அயிரி மலைக்குக் கிழக்குப் பக்கம் வையை தோன்றுகிறது. மேற்குப் பக்கம் சுள்ளியம் பேரியாறு தோன்றுகிறது. ஆறு தொடங்கும் இடத்தில் அயிரியாறு என்றும் அழைக்கப் படுகிறது. 

கோன்முறை பிழைத்த கொற்ற வேந்தன்:

செங்குட்டுவனின் பங்காளிகளையும், அவன் வஞ்சியையும் பார்த்த நாம் இனி அவனுடைய தமிழக எதிராளிகளைப் பார்ப்போம். முதலிற் நாம் பார்ப்பது பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகும். 

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்” என்ற புறப்பாட்டை எழுதிய அரசன் இந்த நெடுஞ்செழியனாவான். ”வடவாரியர் படைகடந்து, தென்றமிழ்நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசுகட்டிலிற் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று” என்ற சொல்லால், இவன் வடவாரியர் படைகடந்த பாண்டியன் என்பதை அறிகிறோம். [இது செங்குட்டுவனின் முதற் படையெடுப்பிற்கு முந்தியதோ, பிந்தியதோ, தெரியாது. ஆனால், இவன் இமையம் போகவில்லை, வடவாரியர் என்போர் “அரசன் இல்லா ஆயுதகணத்தார் (யௌதேய கணத்தார்= merceneries)” என்று ம.சீ.வே சரியாக நிறுவுவார்(44). இவன் எதிரியான நெடுஞ்சேரலாதன் வடசெலவிற் வெற்றி கொண்ட காரணத்தால் அதற்குப் போட்டியாய், இப்படியோர் பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டான் போலும்.]

ஆனாலும் நெடுஞ்செழியன் கடைசிக் காலம் பெரிதும் குழப்பமானது. சிலம்புக் காலத்தில் மக்களின் பெருங்கோவத்திற்கு இவன் ஆளாகியிருக்கிறான். மக்கள் இவன் ஆட்சியின் மேல் குறை கொண்டிருந்திருக்க வேண்டும். கோவலன் கொலைக்கு முன்பும், நெடுஞ்செழியனின் கோத்தொழிலர் (bureaucrats), கோமுறை (goveranance) தவறியதால், மக்களின் முணுமுணுப்பு அரசனுக்கு எதிராய்க் கூடியிருந்திருக்கிறது. வார்த்திகனை விடுவித்து, ”கோன்முறை பிழைத்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதி” பற்றிச் சிலம்பு ஆழமாகப் பேசுகிறது(45).

கணவன் கொலைக்களப் பட்டபின் அரசன் முன் வழக்குரைத்த கண்ணகி, கோவலன் தந்தையின் பெயரை முன்னுரைத்தே தன்னை அறிமுகம் செய்வாள். அப்படியெனில் மாசாத்துவான் என்னும் வணிகன் தமிழகமெங்கும் பேர்பெற்றவன் என்பது புலப்படுகிறது. அப்படிப் பன்னாட்டு மன்னராலும் அறியப் பட்டவன் மாசாத்துவானெனில், கோவலனைக் கொல்லச் செழியன் ஆணையிட்டது எப்படி? கோவலன் நாடு புகுந்த செய்தியை கோத்தொழிலர் எப்படி அரசனுக்குச் சொல்லாது இருந்தனர்? கோட்டை வாசலில் நுழையும் போது “கோவலன் யார்?” என்று கேட்டு, செய்திகள் உரியமுறையில் அறியப்பட்டு அரசனுக்குச் சொல்லப் படாமற் போயிருக்கிறதே? நெடுஞ்செழியனின் புலனறிவாளர் (intelligence people) தரங் குறைந்தவரா? அரசனுக்குச் செய்திகளைச் சரியானபடி தராதவரா? செழியன் எடுப்பார் கைப்பிள்ளையா? அன்றி அரசனுக்கும் கோத்தொழிலருக்கும் நடுவே ஒருவேளை பெருத்த இடைவெளி இருந்ததோ? இந்த இடம் நமக்குப் புரிபடாமல் போகிறது. மொத்தத்தில் பாண்டியன் அரசு தடுமாறிக் கொண்டிருந்த காலத்தில், மக்களின் கோவம் கூடியிருந்த காலத்தில், சிலம்புக் கதை நடந்திருக்கிறது.

”மதிரையில் நடந்த செய்திகள் குன்றக் குரவரும், சாத்தனாரும் சொல்வதற்கு முன் சேரனுக்குத் தெரியாதா?” என்ற கேள்வி சிலருக்கு எழலாம். ஒற்றர்கள் இல்லாது அரசகருமம் என்பது என்றுமேயில்லை. ஆனால் இற்றைப் போல் அன்று நடைச்செலவு எளிதானதல்ல. மதுரையை எரித்து 14 ஆம் நாள் பகற்பொழுதில் கண்ணகி செங்கோடு வந்து சேருகிறாள். அதற்கு இரண்டு, மூன்று நாட்களில் மலைவளங் காணவந்த சேரனிடம் குன்றக் குரவர் செய்தியைச் சொல்லியிருக்க வேண்டும். ஒற்றர்களுக்கும் சேரனையடைய கிட்டத்தட்ட இதே காலம் பிடித்திருக்கும். ஒற்றர் கூறிய செய்தியை கதைமாந்தர் வழியாகவே வெளிப்படுத்துவது சிறப்பென்று இளங்கோ எண்ணியிருக்கலாம். சம காலத்தில் (அதாவது நிகழ்வுகள் நடந்த சில காலத்துள்) காப்பியம் எழுதப்பட்டிருந்தால், புலனாய்வுச் செய்திகளை வெளியிட இளங்கோ போன்றவர் முற்படமாட்டார். 

சிலம்பிற் காணும் உதிரிச் செய்திகள்:

சிலம்புக் காலச் சமயப்பின்னணி பற்றி முன்பே பேசினோம். அதே பொழுது, வரந்தருகாதையை ஒதுக்கினால், இந்தக் காப்பியம் எந்தச் சமயநெறியையும் சிறப்பித்துச் சொல்லவில்லை. வேதநெறி, சிவநெறி, விண்ணவநெறி, ஆசீவகம், செயினம், புத்தம் எனப் பல்வேறு நெறிகளைப் பின்பற்றியோர் இதன் கதைமாந்தராய் வருகின்றனர். பலநெறிப் பாடல்களும், பரவுதல்களும் பேசப்படுகின்றன. ஆசீவகக் கருத்துகள் சிலம்பின் உள்ளே பெரிதும் பொதிந்திருப்பதாக க.நெ. குறிப்பிடுவார். ஆனாலும் எந்த நெறியும் முதல் நெறியாகப் பேசப்படவில்லை. ”தமிழர் என்று பொதுமை” பேசப்புகுந்த காப்பியம் அதன் நோக்கிலிருந்து தவறி மதம் பேசப் புகுமோ? 

ஒருசில உதிரிச் செய்திகள் நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. முருகன் கோயிலாய்ச் சிலம்பிற் சொல்லப்படும் இடங்களில்(46) செந்திலைத் தவிர மற்றவற்றை இன்னுஞ் சரியாக யாரும் அடையாளம் காணவில்லை. அழகர் மலை(47), திருவரங்கம்(48), வேங்கடம்(49), குயிலாலுவம்(50) (கைலாயம்) பற்றிச் சொல்லும் முதற் தமிழ் நூல் சிலம்பே. மதுராபதித் தெய்வத்தின் விவரிப்பு அப்படியே இன்றைய சொக்கர் -மீனாட்சியின் இருபுடை விவரிப்பாய்த் தெரிகிறது(51).


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

செங்குட்டுவனின் வடசெலவுக் காரணம்:

உதிரிச் செய்திகளை ஒருபுறந் தள்ளி, செங்குட்டுவனின் வடசெலவுக் காரணம் பற்றி இனி ஆழ்ந்து பார்ப்போம். செங்குட்டுவனின் வடநாட்டுப் போர், உண்மையில், காட்சிக்காதையின் 127-130 ஆம் அடிகள்(52) சொல்வது போல் கல்லெடுக்கத் தான் எழுந்ததா? அன்றிக் காலகாலமாய்த் தமிழரோடு போட்டிபோட்ட மகதத்தை ஒறுக்க எழுந்ததா? (மறக்கவேண்டாம் அது பகைப்புறத்து மகதம்)

இப்படிச் சொல்வதற்குக் காரணங்கள் உண்டு. தமிழகத்து மூவேந்தரிடையே ஒருவருக்கொருவர் நம்பாமை இருந்திருக்கிறது. ஓரிரு தலைமுறைகளுக்கு முன்னால் கொங்குக் கருவூரைப் பிடித்துச் சேரர் தம்பகுதியாய் அறிவித்தது சோழ,பாண்டியருக்கு கடுப்பை விளைவித்திருக்கும். சோழநாட்டு அரசவுரிமையில் செங்குட்டுவன் தலையிட்டு, உறையூரில் தன் மைத்துனனை ஆட்சிக்கு அமர்த்தியது புகார் வேந்தனுக்குப் பகைமையைக் கிளப்பிவிட்டிருக்கும். வேளிருக்கிடையேயும் குழப்பம் இருந்திருக்கலாம். ”எப்போதெல்லாம் உள்நாட்டில் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போது, வெளிநாட்டைக் காரணங் காட்டி அவரை நோக்கிப் படையெடுக்க வைத்து உள்நாட்டினரை அமைதிப் படுத்துவது காலகாலமாய் பல்வேறு அரசுகளுக்கு உள்ள பழக்கம் தானே?” இற்றைக் காலத்தும் இத்தகைய தடந்தகைகள் (strategies) இருக்கின்றனவே? 

எனவே முன்னே செங்குட்டுவன் தந்தை சேரலாதன் காலத்தில் வடக்கே படையெடுத்தது(53), இப்பொழுது வடபுலத்தார் செயலைப் பெரிதுபடுத்துவது என எல்லாமே செங்குட்டுவனைப் பொருத்த மட்டில் வேறு அரசியற் காரணம் காட்டுகின்றன. செங்குட்டுவனுக்கு வந்த உளவுச் செய்திகள் பலவாக இருந்திருக்கலாம்; அவன் வடநாட்டுச் செய்திகளை அறிவதில் கவனத்தோடு இருந்திருக்கிறான்(54). கண்ணகிக்குக் கல் கொள்ளுவது, வடநாட்டுப் படையெடுப்பிற்கான சாக்கா? - என்ற எண்ணம் சிலம்பை ஆழ்ந்து படிக்கும் யாருக்கும் எழாது போகாது. அவனுடைய சூளுரையும் இந்த எண்ணத்திற்குப் பின்புலம் காட்டுகிறது(55)

எடுகோள்கள்:

43.குட வஞ்சிக்கான வஞ்சிக் காண்ட ஆதாரங்கள்: .காட்சிக்காதை 9,34,148,174,180, .கால்கோட்காதை 46,50,79,99, நீர்ப்படை காதை 113,149,256, நடுகற் காதை 4,147,196, வாழ்த்துக் காதை உரைப்பாட்டு மடை (இருமுறை). 11,14,28 ஆம் பாட்டுக்கள்.
44. மயிலை சீனி வேங்கடசாமி “தமிழுக்கு வழங்கிய கொடை” - ”14. ஆரியப்படை கடந்த அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் - செந்தமிழ்ச்செல்வி சிலம்பு -46”, பக். 172-179”, 19. ஆரியப்படையும் யௌத்தேய கணமும் - கல்வெட்டுக் கருத்தரங்கம் 1966”, பக்.201-209, வெளியிடுவோர்: எம்.வெற்றியரசி, மனை எண் -9, கதவு எண் -26, ஜோசப் காலணி, ஆதம்பாக்கம், சென்னை 600088, 2001. 
45. நன்கலன் 
புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி 
வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பிக் 
கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றிப் 
படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன் என 
இடுசிறைக் கோட்டத்து இட்டனராக அதுகண்டு 
மையறு சிறப்பின் ஐயை கோயில் 
செய்வினைக் கதவம் திறவாது ஆதலின் 
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக் 
கொடுங்கோல் உண்டுகொல் கொற்றவைக்கு உற்ற 
இடும்பை யாவதும் அறிந்தீம் என்னென 
கட்டுரை காதை (98-112)
46.சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே
- குன்றக்குரவை 8 
47. காடுகாண் காதை 91 
48. காடுகாண் காதை 35-40,
49. காடுகாண் காதை 41-51
50. நடுகற் காதை 102
51. சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவளவாள் முகத்தி
கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியள்
இடக்கை பொலும்பூந் தாமரை யேந்தினும்
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றுந் தகைமையள் பனித்துறைக்
கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்
பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்
குலமுதற் கிழத்தி
- கட்டுரைக் காதை 1-13
52. புன்மயிர்ச் சடைமுடி புலரா உடுக்கை
முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து
இருபிறப்பளரொடு பெருமலை யரசன் 
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக் 
கடவுள் எழுதவோர் கல்தாரான் எனின் 
- காட்சிக் காதை 127- 130 
53. நும்போல் வேந்தர் நும்மோடு இகலிக் 
கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி 
பகைப்புறத்துத் தந்தனர் ஆயினும் ஆங்கு அவை 
திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன 
கொங்கணர் கலிங்கர் கொடுங்கருநாடர் 
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் 
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கதுன் 
கடமலை வேட்டம் என் கட்புலம் பிரியாது 
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம் 
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள் 
ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு 
ஒருநீ யாகிய செருவெங்கோலம் 
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம் 
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய 
இது நீ கருதினை யாயின் ஏற்பவர் 
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை
- காட்சிக் காதை 132-167
54. வியம்படு தானை விறலோர்க் கெல்லாம்
உயர்ந்தோங்கு வெண்குடை யுரவோன் கூறும்
இமையத் தாபதர் எனக்கீங் குணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பா லொழிகுவ தாயி னாங்கஃது
எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியுந் தரூஉம்
- கால்கோட் காதை 7-12
55. இமையத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய 
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி 
நம்பால் ஒழிகுவது ஆயின் அஃது 
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம் 
வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக் 
கடவுள் எழுதவோர் கற்கொண்டு அல்லது 
வறிது மீளும் என் வாய்வாளாகில் 
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப் 
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற் 
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகு என 
கால்கோட் காதை 9-18



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பின் காலம் - 9

 
வடசெலவின் போது சுங்கர், கனகரின் நிலை: 

”செங்குட்டுவனின் வடசெலவு, மோரியருக்கு அடுத்த சுங்கர், கன்னர் ஆகியோரின் வலுவற்ற காலத்தில் நடந்திருக்கவே வாய்ப்புண்டு” என்னும் கூற்றை இக்கட்டுரையின் அடிக்கோளாய்க் கொண்டு, இனிவரும் பகுதிகளில் அதைப் பல்வேறு கோணங்களில் அலசுவோம். 

மகதத்தை ஆண்ட சுங்கர்களின் கடைசியரசன் தேவபூதியாவான் (கி.மு.83-73)(56). இவனுக்கு உடன்பிறந்தார் இருந்தாலும் அவர் யாரும் ஆட்சிக்கு வரவில்லை. நடு இந்தியாவிலுள்ள சாஞ்சி(=விதிசா)க் கல்வெட்டை வெட்டுவித்த ’காசிபுத்ர பாக பத்ர’ என்பவன் இவன் தந்தையாவான்(56) .கி.மு.180 இல் இருந்த சுங்க அரசின் விரிவு கீழேயுள்ள படத்தில் தரப்படுகிறது. இந்தக் கட்டுரையில் முன்பக்கங்களிற் குறிப்பிட்ட காரவேலன் கல்வெட்டை ஆழ்ந்து படித்தால், சுங்கர் அரசின் எல்லைகள் அவரின் கடைசிக் காலத்தில் (கி.மு.73) கீழே படத்திற் காட்டப்படும் விரிவில் இருந்தும் சுருங்கியிருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது. [குறிப்பாக அவந்திப்பகுதி (உஞ்சை) அவர்களிடம் இருந்து வழுவிப் போயிருக்கிறது.] ஆனால் எவ்வளவு சுருங்கியது என்று உறுதியாய்ச் சொல்லமுடியவில்லை. அதற்குரிய ஆய்வுகள் இதுவரையில்லை. 


படம் 3: மோரியருக்கு அப்புறம் இருந்த சுங்கரின் அரச விரிவு

சுங்கன் தேவபூதியின் முதலமைச்சன் வசுதேவ கண்வன் என்னும் குறுநில மன்னன் ஆவான் (57). கி.மு.75 - இல் வசுதேவ கண்வனே அரண்மனைக் கலகத்தில் தேவபூதியை பாடலிப் பட்டணத்தில் இருந்து துரத்தி மகத அரசைக் கைப்பற்றியிருக்கிறான். கண்வரில் வரும் ”ண்வ” எனும் ஒலிக்கூட்டு பழந்தமிழில் இல்லை. (இற்றைத் தமிழிற் பயில்கிறார்கள்.) அதை உயிர்மெய்க் கூட்டாக்கி, கனுவர்>கனவர் என்றே பழந்தமிழர் பலுக்கியிருக்க வாய்ப்புண்டு. அதோடு வகரமும், ககரமும் தமிழிற் போலிகளாதலால் (காண்க: பாவற்காய்/ பாகற்காய், நாவற்பழம்/நாகற்பழம், குடவம்/குடகம், குணவம்/குணகம்). கனவர் என்னுஞ் சொல் தமிழொலிப்பில் கனகராகும். 

இன்னொரு செய்தியையும் வரலாற்றாசிரியர் ஏமச்சந்திர ராய்சௌதுரியால் அறிகிறோம். ”கண்வ” என்பது “கனுவ்வாயன” என்றும் சொல்லப் பட்டிருக்கிறது(58). வடமொழி - தமிழ்த் திரிவில் கனுவ வாசன்>கனுவ வாஸ்யன்>கனக வாஸ்யன்>கனக விசயன் என்றாகலாம். அப்படியெனில் ”சேரன், சோழன், பாண்டியன்” போலக் ”கனகவிசயன்” என்பது வெறும் குடிப்பெயராகலாம். இன்னொரு வகையில், ”கனகன்” குடிப் பெயராகி ”விசயன்” இயற்பெயராகலாம். எந்த இயலுமை உண்மை என்பதைப் பாகதச் செய்திகள் மூலமே அறியமுடியும். தமிழர் கண்ணோட்டத்திற் பார்த்தால், மோரியருக்குப் பின்னிருந்த சுங்கர், கண்வர் வரலாறு ஆயப்பட வேண்டிய தொன்றாகும்.

சுங்கருக்கு அடுத்து மகதத்தை ஆண்ட கனக அரசர் (கி.மு.75-26) நால்வராவர்(59). அவரில் முதல் அரசனான கனக வசுதேவனும் கனக விசயனும் ஒருவரா? அன்றி முன் சொன்னது போல் கனகவாஸ்யன் என்ற குடிப்பெயர் கனகவிசயன் என்று தமிழராற் புரிந்து கொள்ளப் பட்டதா? முன்றாவது முறையில், விசயன் – வசுதேவன் என்ற பெயர்கள் மாபாரதக் கதையின் தாக்கத்தால் வழிமுறை உறவுப் பெயர்களாய் அமைந்தனவா? [காட்டாகச் சிங்கள அரசின் முதல் அரசன் விசயனாய் இருக்க, அவன் மகன் பாண்டு வசுதேவன் எனப்படுவான்.(60)] என்ற கேள்விகளுக்குச் சரியான விடையில்லை. ”கனக விசயன் என்பது கனக வாசுதேவனின் தந்தையாய் இருக்கலாமோ?” என்ற ஐயமும் இக்கட்டுரையாசிரியனுக்கு உண்டு. 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

வடசெலவின் போது கன்னர் நிலை:

சுங்கரைப் பேசும் போது நூற்றுவர் கன்னர் பற்றியறிவதும் தேவையாகும். மகத வணிகத்திற்கான தென்னகப்பாதையின் (Dakshinapaatha) முடிவில் (இற்றை அவுரங்காபாத் அருகில்) கோதாவரியின் வடகரையில் உள்ள படித்தானத்தைத் (படித்தானம்>பயித்தானம்>பைத்தான்>paithan என்பது இற்றைப் பெயர். நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை படித்துறை என்று சொல்வதில்லையா? படித்தானம் என்பதும் படித்துறை என்பதைப் போலத்தான்.) தலைநகராய்க் கொண்ட அரசராயும், மோரியரின் மாதண்டநாயகராகவும் நூற்றுவர் கன்னர் இருந்திருக்கின்றனர். மோரியருக்கு அப்புறம் நடுவணரசுப் பிடியிலிருந்து விடுபட்டு நூற்றுவர் கன்னர் தம் தனியாட்சியை நிறுவியிருக்கிறார்கள்(61). ஆனால் சுங்கரின் பிடியிலிருந்து அவர் முற்றிலும் விலகியதாய்ச் சொல்ல முடியவில்லை.

படித்தானத்திற்கு மேற்கில் விரைந்தால் இந்தக் கால லோனாவாலாவும், அந்தக் காலக் கார்லே குகைகளும் வந்துசேரும். (கார்லே குகையில் தான், இந்தியாவின் மிகப் பழமையான புத்த சேத்தியங்களில் ஒன்று (கி.மு.280) உள்ளது.) கார்லேயில் இருந்து இன்னும் மேற்கே போனால் மேற்குக் கடற்கரையில் இருக்கும் சோபாரா துறைமுகம் வந்து சேரும். (இது இன்றைய மும்பைக்கு மிக அருகில் உள்ளது. இந்தக் கால இந்தியத் துறைமுகங்களில் பலவும் பழைய துறைமுகங்களுக்கு அருகில் எழுந்தவை தான்; காட்டாக முசிறி/கொச்சின், கொற்கை/காயல்பட்டினம்/தூத்துக்குடி, புகார்/நாகப்பட்டினம், பாலூர்/பாரதீப், தாமலித்தி/ஆல்தியா, சோபாரா/மும்பை, பாருகச்சா/பரூச்). 

சோபாரா துறைமுகம் (கூடவே சோபாராவுக்குச் சற்று முன்னே கன்னேரிக் குகைகள்) நூற்றுவர் கன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. நூற்றுவர் கன்னருக்கும் முன்னால், மகத அரசிற்கு முகன்மையாக சோபாராவும், நர்மதையின் கழிமுகத்தில் இருந்த பாரகச்சாவும் (இந்தக் கால பரூச் Bhaarukaccha>Broach) துறைமுகமாய் இருந்திருக்கிறன. இந்தத் துறைமுகங்கள் அரேபிய, உரோம வாணிகத்திற்கு உறுதுணையாய் இருந்தவை. இதே போல வங்க விரிகுடாவில் தாமலித்தி இருந்திருக்கிறது. அது கீழைக் கடல் வாணிகத்திற்குத் துணையாக இருந்திருக்கிறது.

நூற்றுவர் கன்னர் தமிழக வழக்கப்படி முறைப்பெண்களை மணமெடுத்துப் பழகியவர்(62). தமிழ், பாகதம் என ஈர் ஆட்சிமொழி நாணயம் வெளியிட்டவர்(63). (அவரரசில் இருமொழியும் அருகருகே புழங்கியிருக்கலாம். மாமூலனார் கூறிய மொழிபெயர்தேயத்தை இங்கு நினைவு கொள்ளுங்கள்.) தமிழ் அகநானூறு போலவே மரபு கொண்ட ”காதா சத்தசதி” என்னும் பாகத நூலுக்குக் காரணமானவர்(64). கன்னரின் மரபுகளைப் பார்த்தால், அவரைத் தமிழ்மரபுக்கு முரண்பட்டவராய்ச் சொல்ல முடியாது.

சாதவா கன்ன எனும் பாகதப் பெயரைப் பலரும் பலவிதமாய் அடையாளங் காணுவர். ”சாதவா கன்ன என்ற பெயர் Indo-Austric மொழிகளில் சாத = குதிரை; கன்னா = மகன் என்று எழுந்ததாகச் சிலர் சொல்வர்(65). ஆனால் சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால்,”நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப்படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்லமுடியும். சிலம்பும் அப்படித்தான் மொழிபெயர்க்கிறது. சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். "அவனைப் போட்டுச் சாத்திட்டான்" என்று இன்றைய வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா? 

அந்தச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்குதல் என்னும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற ஆங்கிலச் சொல்லும் கூடப் பொடி என்ற பொருளில் எழுந்தது தான்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான். ஆக சதவா என்பதன் உட்கருத்து தமிழே. பலரும் எண்ணுவது போல் அவர் 100 பேர் அல்லர், நூற்றுவர் (=சதைப்பவர்). ”நூற்றுவர்” என்பது கன்னர் குடியினருக்கோர் அடைமொழி, அவ்வளவுதான். இன்னும் ஒரு சிலர் சாதவா கன்னர் என்று படிக்காது சாத வாக(ன்)னர் என்று படிக்கிறார்கள்(66). அப்படிச் சொல் பிரிப்பது தவறென்றே தோன்றுகிறது. சதம்>சதவர்>சாதவர்>சாதவா = நூற்றுவர். 


படம் 4. நூற்றுவர் கன்னரின் அரச விரிவு

கன்னர் என்பது கர்ணி என்றும் திரிகிறது. இங்கே ”காது, கன்னக்குழி” போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்னன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் விதப்பாகச் சொல்லப்படுவான்(67). பாகதத்தில் கிருஷ்ண என்பது கன்ன என்றாகும். கன்னன் என்பது சேரன், சோழன், பாண்டியன், போல ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும். முன்னால் சேர, சோழ, பாண்டியருக்கு இன அடையாளம் சொன்னது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநர்>கன்னர் என்று ஆகியிருக்க வாய்ப்புண்டு. 

கன்னரின் ஆட்சிக்காலம் கி.மு.230 - கி.பி.220 ஆகும். கன்னரின் முதலரசன் சீமுகன். இவர்களின் முதற் பேரரசன் சாதகர்ணி I (கி.மு. 180-124) சுங்கரைக் கட்டுப்படுத்தி மாளுவம்/ அவந்தியைப் பிடித்தான். அத்திகும்பா கல்வெட்டும் (கி.மு.172) சாதகர்ணி I ஐப் பற்றிப் பேசுகிறது. முதலாம் சதகர்ணிக்கு அப்புறம் ஒரு பெருவீழ்ச்சி கன்னருக்கு ஏற்பட்டது(68). தாங்கள் பிடித்த நிலங்களிற் பெருவாரியை அவர்கள் இழந்திருக்கிறார்கள். மாளுவம் இவர் கைவிட்டுப் போயிற்று. அந்த வீழ்ச்சியால் கி.மு.87-69 இல் இலம்போதரன் என்னும் சாதவா கன்ன அரசன் காலத்தில், கன்னரின் அரச எல்லை பெரிதும் சுருங்கியது. இக்காலத்திற் கன்னர் சுங்கருக்கு இறைகூடச் செலுத்தியிருக்கலாம்(69). இலம்போதரனுக்குப் பின்வந்த அபிலகனும் மற்ற அறுவரும் கனகருக்குக் கீழ் சிற்றரசராகவே ஆயினர்(70). ஆனாலும் கன்னர் கருவிக் கொண்டே இருந்திருக்க வேண்டும். மீண்டும் வீறுகொண்டு எழுந்து கி.மு. 26-இல் சுங்கர் அரசை கன்னர் முற்றிலும் வீழ்த்தியிருக்கின்றனர். விதப்பாகப் கன்னன் புலிமாவியின் ஆட்சியில் மீண்டும் வலியுற்று, மகதத்தையே பிடித்தனர். பின்னர் கன்னர் அரசு பெரிதாக விரிவடைந்திருக்கிறது(71)

சாதவா கன்னரின் முகன்மை, அவர்கள் தக்கணப்பாதையின் வாயிலைக் காத்த மாதண்ட நாயகராய் இருந்ததாலே தான் ஏற்பட்டது. தவிர, அதே காரணத்தால், நூற்றுவர் கன்னரைத் தொடர்பு கொள்ளாமல், எந்தத் தமிழரசராலும் வடக்கே படையெடுக்க முடியாத நிலை அந்தக் காலத்தில் இருந்தது. தமிழக வரலாற்றை இந்திய வரலாற்றோடு பொருத்திக் காட்டுவது சாதவா கன்னர் என்னும் பற்றிய செய்தியே. 

எடுகோள்கள்:

56. http://en.wikipedia.org/wiki/Sunga_Empire
57. http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty
58. Hemachandra Raychaudhuri, “Political History of Ancient India” p 353, Oxford University Press, 1996 Seventh Inpression 2008..
59. வசுதேவ (கி.மு.75-66); பூமிபுத்ர (கி.மு.66-52); நாராயண (கி.மு.52-40); சுசர்மன் (கி.மு.40- 26) http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty
60. விஜயன் (தீப வம்ச வரி 9.42; மகா வம்ச வரி 7.74) - கி.மு.483-445; அரசனற்ற காலம் (தீப. வரி 11.9; மகா.வரி 8.5) - கி.மு.445-444; விஜயன் மகன் பாண்டு வாசுதேவன் (தீப. வரி 10.5; மகா.வரி 9.25) - கி.மு.444-414; விஜயன், வசுதேவன் என்ற பெயர் இணைகள் மா.பாரதத் தாக்கத்தை நமக்கு நினைவுறுத்துகின்றன. வசுதேவனுக்கு முந்திவரும் ”பாண்டு” என்னும் அடைமொழி, அவன் பாண்டிய அரசகுமாரிக்குப் பிறந்த மகன் என்னுஞ் செய்தியை உணர்த்துகின்றது. ”சிங்களவர் தமிழ்த் தாய்மாருக்கும், அங்கிருந்த பழங்குடித் தாய்மாருக்கும் பிறந்தவரே”. என்று அவர் நூல்களே தெளிவாகக் கூறுகின்றன. 
வில்ஹெம் கெய்கர், தமிழில் மறவன்புலவு க. சச்சிதானந்தம், கவிஞர் அண்ணா கண்ணன், “சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை” பக்கம் 53. காந்தளகம், 2002.
61. நூற்றுவர் கன்னர் ஆட்சி ஏற்படுத்தியது கி.மு..230. K.A.Nilakanta Sastri, “A history of South India”, p.92, Oxford University Press, 1975.
62. நூற்றுவர் கன்னர் முறைப்பெண்ணை மணத்தல், ”Another Characteristic feature of the Satavahanas and many of their successors was the use of Metronyms, which took the form of brahminical gotra + puta (son); e.g., Gotamiputa, Vasithiputa, and so on. These are two of the most widely used metronyms among Satavahanas, which raises the possibility that several of the Satavahana queens were closely related to one another and that in consequence some of the Satavahana marriages were consanguineous. Once this is granted it follows almost immediately that Satavahanas had a rule of Cross Cousin Marriage. - By Thomas R Trautman “The Dravidian Kinship” p 375, Cambridge University Press, 1981. 
63. நூற்றுவர் கன்னர் இருமொழி நாணயம் Iravatham Mahadevan, “Early Tamil Epigraphy”, pp 199- 204, Crea-A, Chennai and The Departmemt of Sanskrit and Indian Studies, Harvard University, U.S.A., 2003
64. நூற்றுவர் கன்னர் “காதா சத்தசதி”; K.A.Nilakanta Sastri, “A history of South India”, p.94, Oxford University Press, 1975
65. நூற்றுவர் கன்னரின் பெயர்விளக்கம். D.D.Kosambi, "Satavahana Origins". Introduction to the study of India history pp. 243 -244. Popular prakashan. Mumbai, 1975. 
66. நூற்றுவர் கன்னர் பெயரை “சாத வாகனர்” என்று படித்தல். முனைவர் ஐராவதம் மகாதேவன், “சிந்துவெளிப் பண்பாடும், சங்க இலக்கியமும்” பக்.32, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600005., 2010.
67. நூற்றுவர் கன்னரின் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் பற்றிய செய்தி. K.A.Nilakanta Sastri, “A history of South India”, p.93, Oxford University Press, 1975
68. நூற்றுவர் கன்னரின் ஆட்சி விரிவும், சுருக்கமும்
http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty

Satakarni (c.180-124 BCE)
His successor Sātakarnī I was the sixth ruler of the Satavahana. He is said in the Puranas to have ruled for 56 years.

Satakarni defeated the Sunga dynasty of North India by wresting Western Malwa from them, and performed several Vedic sacrifices at huge cost, including the Horse Sacrifice - Ashwamedha yajna. He also was in conflict with the Kalinga ruler Kharavela, who mentions him in the Hathigumpha inscription. According to the Yuga Purana he conquered Kalinga following the death of Kharavela. He extended Satavahana rule over Madhya Pradesh and pushed back the Sakas from Pataliputra (he is thought to be the Yuga Purana's "Shata", an abbreviation of the full name “Shri Sata” that occurs on coins from Ujjain), where he subsequently ruled for 10 years.

By this time the dynasty was well established, with its capital at Pratishthānapura (Paithan) in Maharashtra, and its power spreading into all of South India.

Kanva suzerainty (75-35 BCE)

Many small rulers succeeded Satakarni, such as Lambodara, Apilaka, Meghasvati and Kuntala Satakarni, who are thought to have been under the suzerainty of the Kanva dynasty. The Puranas (the Matsya Purana, the Vayu Purana, the Brahmanda Purana, the Vishnu Purana) all state that the first of the Andhra kings rose to power in the 1st century BCE, by slaying Susarman, the last ruler of the Kanvas.[11] This feat is usually thought to have been accomplished by Pulomavi (c. 30-6 BCE), who then ruled over Pataliputra
69. இலம்போதரன்; http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty 
70. அபிலகனும் அறுவரும் http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty
71. நூற்றுவர் கன்னர் மீள்விரிவு K.A.Nilakanta Sastri “A History of South India”, pp 94-96, Oxford University Press, 1975



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பின் காலம் - 10

 
செங்குட்டுவன் வடசெலவு பொருந்துங் காலம்:

முன்னர் சொன்ன செய்திகளில், சுங்கரின் நிலப்பரப்புச் சுருக்கத்தையும், அதே போல நூற்றுவர் கன்னரின் நிலப்பரப்புச் சுருக்கத்தையும், கூடவே மகதத்தை வெற்றிகொள்ள கன்னர் வேட்கை கொண்டதையும், அவர் செல்வாக்கையும் பார்க்கும் போது, செங்குட்டுவனின் வடசெலவுகள் இலம்போதரக் கன்னன் காலத்தில் (கி.மு.87-69), சுங்கன் தேவபூதி காலத்தில், (கி.மு.86-75 இக்கு நடுவில்), கனகர் ஆட்சி (கி.மு.75-26) தொடங்குமுன், கி.மு.80 அளவில் நடந்திருக்கலாம் என்றே எண்ணவேண்டியிருக்கிறது. அப்படியோர் இடைவேளையே செங்குட்டுவனின் வடசெலவுச் செய்திகளுக்குச் சரியான இடங் கொடுக்கிறது. 

இலம்போதரக் கன்னன் காலத்தில் (கி.மு.87-69) நூற்றுவர் கன்னர் வலிமை குன்றியிருந்ததால் தான், தெற்கேயிருந்து சேரன் படையெடுத்து வந்தபோது, அவனுக்கு உதவி செய்து தம்நிலையைச் சீர்படுத்திக் கொள்ள முயன்றிருக்கின்றனர். “கல்லெடுப்பதற்கு நீங்கள் போகவேண்டுமா? உங்கள் சார்பாக நாங்கள் போரிட்டுக் கல்லெடுத்துத் தரமாட்டோமா?” என்று செங்குட்டுவனிடம் கன்னர் சொல்லச் சொன்னதாகச் சஞ்சயன் பேசுவது ஒருவகையிற் பார்த்தால் இருபுலப் பேச்சாகும் (diplomatic speech). அந்த நேரத்தில் சேரருக்கும் சிறியவராய் குறைவலிமை கொண்டிருந்த நிலையில், கன்னர் இப்படிப் பேசாமல் வேறு எப்படிப் பேசுவர்? அதனாற்றான், பல்வேறு பொருள்களும் படையும் சேரனுக்குக் கொடுத்து உதவிக்குப் போயினர் போலும். செங்குட்டுவனுக்கு நூற்றுவர் கன்னர் கொடுத்தவை கால்கோட்காதை 128-140 வரிகளிற் பேசப்படுகின்றன(72).அதோடு தம் உள்ளூர ”சேரன் வடபுலத்திற்கு வரவேண்டும்; போரிட வேண்டும்; சுங்கரும், அவருக்கு அமைச்சராய் இருந்த கனகரும் வலிகுன்ற வேண்டும்” என்ற விழைவு கன்னருக்கு இருந்திருக்கலாம். இல்லையெனில் காட்சிக் காதையில் வரும் இந்த நிகழ்வைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. 


படம் 5:செங்குட்டுவனின் வடசெலவுப் பாதை.

செங்குட்டுவன் வடசெலவு படம் 5 இல் இருப்பது போல், பெரும்பாலும் குடவஞ்சியில் தொடங்கி, கடலொட்டி நகர்ந்து, வயநாட்டுச் சாரலில் ஏறி (80 கி.மீ), நீலமலை தாண்டி, (இது வரை சிலம்பு பேசுகிறது(73)). முன்னால் முதலாங் கரிகாலன் படையெடுத்த போது சென்ற பாதையிலேயே, குடகு, அதியர், கங்கர் நாடு வழி (ஐம்பொழில் ஊடாக, வடுகவழி மேற்கு) கருநாடு கடந்து, படித்தானம் (கன்னரின் தலைநகர்) பிடித்து தக்கணப் பாதை வழியாகப் மகேசர், உஞ்சை, பில்சா, சாஞ்சி, கோசாம்பி கடந்து, முடிவில் மகதத்தில் முடிந்திருக்கும். 

அந்தக் காலத்தில் குடகு, அதியர் நாடுவழி ஐம்பொழில், படித்தானம் போக்காமல் வடக்கே செல்லமுடியாது. ஏனென்றால், இன்னொரு மாற்றான கலிங்க வழி, அடர்காடுகளின் காரணமாய், பல நூற்றாண்டுகள் கழித்தே ஏற்பட்டது. அது பிற்காலப் பேரரசுச் சோழர் காலத்தது. கலிங்கம் என்ற நாடு கடற்கரையை ஒட்டிப் பாலூரைத் (இந்தக் கால ஒரியா மாநிலத்துப் பாரதீப்பைத்) தலைநகராய்க் கொண்டு இருந்தது. அதன் மேற்கு எல்லை காடுகளால் நிறைந்தது. அதன் தெற்கு எல்லை (இன்றைய ஆந்திர மாநிலத்தின் நெய்தல் நிலம் தவிர மற்றவை எல்லாமே) அடர்ந்த முல்லையும் குறிஞ்சியும், பாலையுமாய் இருந்ததால், தமிழர்களின் வடநாட்டுத் தொடர்பே பெரும்பாலும் கருநாடகம் வழியாகத்தான் இருந்தது

கருநாடகமும் சாதவா கன்னரின் அரசிற்குள் அடங்கியதே. கருநாடக மக்கள் கொடுங் கருநாடராய்ச் சிலம்பிலும் அதற்குப் பின்வந்த நூல்களிலும் சொல்லப் படுகின்றனர். கொடுமை என்பதற்கு இந்தக் காலப் பொருள் கொள்ளக் கூடாது. அவர் மொழி கொடுந்தமிழாய் இருந்ததையே அந்தச் சொற்றொடர் குறிக்கிறது. பழங் கன்னடம் என்பது பழந்தமிழுக்கு நெருங்கிக் கொடுந்தமிழாய் இருந்தது. கன்னடத்தின் இப் பழநிலையை மறுப்பது தமிழருக்கும் வடபுலத்தாருக்கும் இருந்த தொடர்பையே மறுப்பதாகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இடைப்பட்ட அவந்தியும், கன்னரின் வீச்சும்:

படித்தானத்திற்கு அடுத்த பெரிய ஊர் உஞ்சை. அவந்தியின் தலைநகர். சிலம்பின் படி இதை ஆண்டவர் “பாலகுமாரன் மக்கள்” எனப்படுவர்(74). இவர் யார் என்றறிவது அப்படியொன்றும் கடினமானதல்ல. கி.மு.550 களில் நடந்த உதயணன் கதை இந்தியாவெங்கும் பெரிதும் பேர் பெற்றது. இது நெடுங்காலம் பொதுமக்களிடையே பெருவழக்கில் இருந்தது. [குணாட்டியரின் ’ப்ருஹத் கதா’ பிசாச மொழியில் எழுதப்பட்டது. கங்கன் துர்விநீதன் கி.பி.570-580 இல் இதைச் சங்கதத்தில் எழுதினான். கொங்குவேளிர் இதைப் பெருங்கதை என்று தமிழில் ஆக்கினார்.] 

இந்தக் கதையில், வச்சிர நாட்டு உதயணன் பல்வேறு சூழ்ச்சிகள், போர்கள், நிகழ்ச்சிகளின் பின் அவந்தி நாட்டு வாசவதத்தையை மணப்பான். [ஞாவகம் வருகிறதா? முதற் கரிகாலன் காலத்தில் அவந்தி சோழனுக்குத் துணையாய் இருந்தது. மகதம் சண்டையிட்டது. வச்சிரம் சண்டைபோடாமலே அடிபணிந்தது.] அவந்தியின் அரசன் பெருத்தோதன் (பிரத்யோதனன்). அவனுடைய மக்கள் ”பாலகன், பாலகுமாரன், கோபாலகன்.”என்று அழைக்கப்படுவர்(75). பின்னால் பாலகுமாரன் குடியே அவந்தியை ஆளும். ”பாலகுமாரன் மக்கள்” என்ற குறிப்பு இப்படியெழுந்தது தான். 

செங்குட்டுவனின் வடசெலவுக் காலத்தில் அரசாண்ட அரசன் பெயர் தெரியவில்லை. ஒருவேளை கி.மு.80 களில் அது கன்னரின் மிரட்டலுக்கு ஆட்பட்டதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் கி.மு.74-61 இல் அவந்தியின் (மாளுவத்தின்) அரசன் ”கருதவில்ல மகேந்திராதித்யன்”என்று செயின ஆவணங்கள் பதிவு செய்யும்(76).

உஞ்சை தாண்டி, கோசாம்பி வழியே மகதம் நுழைந்த செங்குட்டுவன் கங்கையின் தென்கரையில் காசிக்கு அருகிலேயே ஆற்றைக் கடந்திருக்க வேண்டும். அவன் பாடலிப் பட்டணம் போனதாய் சிலம்பின் எங்கணும் அறியமுடியவில்லை. முன்னால் அவன் தாய் புனித நீர் ஆடியது கூடக் காசியாய் இருக்கலாம் இரண்டாம் முறையும் அதற்கருகிலேயே கங்கையைக் கடந்திருக்கலாம் என்பது ஒரு கருதுகோளே. ஆற்றைக் கடக்க நூற்றுவர் கன்னர் ஒரு வங்கப் பரப்பையே (படகுப்பரப்பையே) ஏற்பாடு செய்கிறார்கள். கங்கையாற்றின் அகலம் பாடலி அளவிற்கு காசியிற் பெரிதில்லை. ஆற்றின் வடமருங்கில் கன்னர் சேரரை எதிர்கொள்ளுகிறார்கள் [கன்னரின் வீச்சு கங்கையின் வடகரை வரை இருந்திருக்கிறது என்றால் சுங்கர்/கனகரின் வலிமை பெரிதும் அங்கு குன்றியிருக்க வேண்டும்.] அந்த நாடும் கழிந்து, இன்னும் வடக்கே போகிறார்கள்; பகைப்புலம் வந்துவிடுகிறது. எனவே கங்கையைக் கடக்குமிடம் சுங்கர்/கனகர் கையில் இல்லை. இத்தனை செய்திகளும் கால்கோட் காதை 175-181 ஆம் வரிகளில் தெரிய வருகிறது(77)

கனகனும் விசயனுமா? கனக விசயனா?: 

முன்னே சொன்னது போல், செங்குட்டுவன் படையெடுப்பின்போது சுங்கன் தேவ பூதிதான் பெரும்பாலும் மகத அரசனாக இருந்திருக்கலாம்(78).இருந்தாலும் சுங்கனின் தலைமை யமைச்சனாகக் கனக விசயன் என்ற குறுநில மன்னன் இருந்திருந்தான் என்பதையும் பார்த்திருந்தோம். இனிக் கனக விசயன் என்பவன் ஒருவனா, இருவரா என்ற ஐயப்பாட்டிற்கு வருவோம். 

தமிழகப் புரிதலில் சிலம்பையொட்டிய வரலாற்று ஆய்வுகள் புதிதாக ஏற்படாததால், 60, 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த புரிதலில் கனகர், விசயர் என்று இரண்டு பேராகவே பலரும் சொல்லிவருகிறார்கள். அரச குலத்தவரைக் குப்பன் சுப்பன் என்று ஒற்றைப்பெயரால் அழைப்பது வரலாற்றில் யாருக்கும் பழக்கமில்லை சேரன் செங்குட்டுவனை சேரன், செங்குட்டுவன் என்று இரண்டாகப் பிரிப்போமோ? பாண்டியன் நெடுஞ்செழியனை பாண்டியன், நெடுஞ்செழியன் என்று இரண்டாய்ப் பிரிப்போமோ? மகதத்தை ஆண்ட சுங்கனுக்கும், அவன் அமைச்சன் கனகனுக்கும் குடிப்பெயர் ஒன்றும், இயற்பெயர் ஒன்றும் தனித்தனியாய் இருக்காதோ? 

சிலம்பில் இரண்டு இடங்களில் கனகனும் விசயனும் என்று உம்மை சேர்த்தும்(79) 4 இடங்களில் கனக விசயன் என்று உம்மை சேர்க்காமலும்(80) இந்தப் பெயர் குறிப்பிடப்படும். உம்மை சேர்த்த இரு இடங்களிற் கூட உம்மையை எடுப்பதனால் வாக்கிய அமைப்போ, சீரமைப்போ, தளையோ ஒன்றும் மாறுபடாது. இந்த இரு இடங்களும் ஏன் படியெடுப்பின் பிழைகளாக இருக்கக் கூடாது? 

தவிர கனகவிசயரின் கதிர்முடி ஏற்றியது அவ்வளவு பெரிய கல்லா, இரண்டு பேர் தூக்க? பொதுவாய்க் கேரளப் படிமங்களின் உரு சிறிதாக ஒரே கல்லிலான புடைப்புச் சிற்பமாகவே இருக்கும். [இன்றைக்கும் கேரளக் கோயில்களைப் பார்த்தால் இது விளங்கும். அவர்களின் ஊருலவர் (உர்ச்சவர்) திருமேனியும் நம்மூரைப்போல நாலுபேர் தூக்கும்படிப் பெரிதாக இருக்காது. ஒருவர் தன்தலையிலோ, அன்றி இரு உள்ளங்கைகளிலோ வைத்துக் கொள்ளும்படி சிறிதாகவே இருக்கும். பெருந்திருமேனிகளைக் கையாளுவது அவர்கள் பழக்கம் அல்ல.) இற்றைத் தமிழ்நாடு போல பெரிய கருங்கற்களில் பெருத்த படிமங்களைச் செதுக்குவது அங்கு மரபல்ல. 

பல்லவர், பேரரசுச் சோழர், பிற்காலப் பாண்டியர் காலத்துக் கோயில்களின் சிற்பங்களைப் பார்த்துப் பார்த்துச் சிலைகள் என்றாற் பெரிதாக இருக்கும் என்றெண்ணும் நிலைக்கு நாம்தான் வந்து விட்டோம். ”கடவுள் எழுதவோர் கல்”.என்னும் போது அது சிறிய புடைப்புச் சிற்பமாகத்தான் இருக்கக் கூடும் என்று நாம் எண்ணினால் என்ன? தவறா? 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கும் சிற்பங்கள் சிறியதாக இருந்திருக்கக் கூடாதா? அதோடு, இமயமலையிலிருந்து கருங்கற்கள் எடுத்துவருவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. 

[கருங்கற்கள் இந்தியத் தீவக்குறையிலே தான் சிலை செய்யப் பயன்படுகின்றன. வடக்கே கருங்கற்கள் அல்லாதவையே பயன்படுத்தப் படும்.] கருங்கல் அல்லாத ஒன்றை கிட்டத்தட்ட 15, 20 அயிர எடை (கிலோ எடை) அளவுள்ள கல்லை ஒருவரே தம் தலையிற் தூக்க முடியும். கல் தூக்கி வந்தது ஒருவர் தலையிலா? இருவர் தலையிலா? என்பது கள ஆய்வின் மூலம் செய்து பார்த்து முடிவு செய்ய வேண்டிய கேள்வி. 

ஒருவரா, இருவரா என்ற கேள்விக்குச் சான்றளிப்பது பதிற்றுப் பத்து 5 ஆம் பத்தின் பதிகமே(81). தெள்ளத் தெளிவாக ஆரிய அண்ணல் என்று ஓர் அரசனையே சொல்லும். எந்த அரசன் போரை முன்னின்று நடத்தினானோ, அவனைத்தானே ‘வீட்டி (வீழ்த்தி) ” என்று சொல்லமுடியும். எனக்குப் புரிந்த வரையில் கனகவிசயன் என்பவன் ஒருவன் தான்.

அன்றைக்கு நடைமுறையில் மகத அரசன் கனகனே; சுங்கன் தேவபூதி ஒரு பாவை போலத் தான் பாடலியிலோ, அன்று கோசம்பியிலோ கொலுவீற்றிருந்தான். அவன் போரில் கலந்து கொள்ளாது மற்ற பங்காளிகளையும், சுற்றியுள்ள வட அரசர்களையும் போரில் இறக்கியிருக்கலாம். கனகவிசயன் போரில் தோற்றபின், கல்லைச் சுமந்து சேரனோடு வர, உடன் போரிட்ட வடபுலத்தரசரை போர்க்கள முடிவில் சேரனே விடுவிக்கிறான். அதற்குப் பின்னால் சுங்கனின் ஆட்சியில் விசயனின் மகன்(?) வசுதேவன் அமைச்சனாகி கி.மு.75-இல் சுங்கரிடமிருந்து ஆட்சியைப் பிடித்துக் கொள்கிறான் போலும்(82). இதுபோன்றதொரு இயலுமையே வரலாற்றிற் தெரிந்த உண்மைக்கும், சிலம்பில் வரும் காட்சிகளுக்கும் பொருத்தம் காட்டுகிறது.

கனகரோடு சேர்ந்த வடதிசை மன்னவர்:

கண்ணகிக்குக் கல் எடுப்பதற்காகப் போர் நடப்பதற்கு முன்னால், சேரனின் முதற் படையெடுப்பிற்குப் பின்னால், நடந்த ஒரு விருந்தில் வடபுலத்து அரசர் (அவருள் அவந்தி அரசரும், மற்றவரும், கனக விசயனும் அடக்கம்) தமிழரை இகழ்ந்தது சிலம்பில் பேசப்படுகிறது83.

கனகரோடு சேர்ந்து பொருதிய வடதிசை மன்னவரைக் கால்கோட் காதையின் 182-192 ஆம் வரிகள் உரைக்கும்(84). ஆனால் இந்தப் பட்டியலிலும் எது குடிப்பெயர், எது இயற்பெயர் என்ற தடுமாற்றம் உண்டு. ”சுவடிப் பெயர்ப்புப் பிழைகள் இங்குமுண்டா?” என்ற கேள்வியும் எழுகிறது 

”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன்” என்று அடுத்தடுத்துப் பெயர்கள் எழும்பொழுது ”உத்தர விசித்திரன், ருத்ர பைரவன்” எனச் சொல்லலாமா? அதே போல “சித்திரன்” என்பவன் யார்? சிங்கன் சுங்கனாய் இருக்கலாமோ? [இது போன்ற சுகர, சிகரக் குழப்பங்கள் சிங்கள அரசர் பெயர்ப்பட்டியலிலும் உண்டு. தமிழில் ஒருவிதமாயும் , பாலியில் இன்னொரு விதமாயும் வரும்] சிங்கனோடு சித்ரனா? தனுத்ரனா? ”சிவேதன்” யார்? அரசர்க்கான மரபில் குலப்பெயரும் தனிப்பெயரும் சேர்ந்தல்லவா வரும்? - என்ற கேள்விகளும் எழுகின்றன. [த்ர’என்ற ஒலிக்கூட்டு வடநாட்டு அரசர் பெயர்களின் பெரிதும் உள்ளதே. இந்தப் பெயர்கள் வடபாற் பெயர்கள் தான்] இவர்களை அடையாளம் காணும் பணி இன்னும் மீந்து நிற்கிறது. தேவபூதியை தனுத்ரபூதி என்றோர் ஆவணம் சொல்லுகிறதாம். இதையும் ஆய வேண்டும். தேவபூதியின் தந்தை பாகபத்ரன் பற்றியும், சுங்கர்/கனகர் காலத்து வடபுல அரசர் குறிப்புக்களையும் ஆயவேண்டும்.

”ஒருபகல் எல்லையில் ஆரியப் படையைச் செங்குட்டுவன் சாய்த்தான். கனக விசயர் 100 கடுந்தேராளரொடு களம் புகுந்தனர். தோற்றபின் துறவி வேடம் பூண்டுத் தப்ப முயன்று பிடிபட்டனர்” என்பவை அடுத்துவரும் செய்திகளாகும். துறவி வேடம் பூண்டு தப்பமுயன்றதில் ஒன்றும் வியப்பில்லை. காசிக்கருகில் சாம்பற் பூசிய துறவிகள் இன்றைக்கும் கணக்கற்றுத் திரிவர். காசிக்கு அருகில் தப்புதற்கு அந்த வேடம் மிகவும் எளிய வழியாகும். இவர்கள் இப்படித் தப்பியதே, போர் ஒருவேளை காசிக்கு அருகில் நடந்திருக்குமோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது. முன்னாற் சொன்னது போல், வடபுலத்தில் காசிதான் முதலில் எழுந்த பெரு நகரம். அதற்கு அப்புறம் தான் மற்ற நகரங்கள் அங்கு தோன்றின. 

இந்தப் போருக்குப்பின் செங்குட்டுவன் கங்கைத் தென்கரையில் பாடிகொள்கிறான். வில்லவன் கோதையோடு படைகளை மேலும் வடக்கே அனுப்பி இமையத்தில் இருந்து கல்லெடுத்துவரச் செய்கிறான்(85). ஆனால் அப்படிப் போகும் போது போர் ஏதும் நடந்ததாய்த் தெரியவில்லை. கனக விசயனின் முடிமேல் கல்லேற்றிக் கொண்டு வந்து அதைக் கங்கையில் நீர்ப்படை செய்கிறார்கள்(86)

அதன்பின் தெள்ளுநீர்க் கங்கையின் தென்கரையில் ஆரிய மன்னர் அழகுற அமைத்த பாடியில் இருக்கும் போது மாடலன் வருகிறான். [இன்றைக்கும் தெள்ளுநீர்க் கங்கை காசிக்குத் தென்கரையில் தான் என்பது வியக்கத் தக்க செய்தி. வடகரையில் இருக்கும் சுடுகாட்டுக் கரைகளைத் தவிர்த்து, சாம்பல் பூச்சிதறல் இல்லாமல், உருப்படியாக நீராட வேண்டுமென்றால் படகில் ஏறித் தென்கரைக்குத்தான் வரவேண்டும். அங்கு தான் சோலைகளும் தோட்டங்களும் உண்டு. தென்கரை அழகு அன்றைக்கும் இருந்தது வியக்கத்தக்க ஒற்றுமைத் தொடர்ச்சியாகும். வாரணசி நகருக்கு வடக்கே இன்றும் பறந்தலைகள் தான். முற்காலத்திற் பறந்தலைகளே போர்க்களங்களாய் ஆயின. போர்க்களம் எது என்றறிவது அங்குள்ள நிலவரைவை (geography) ஆய்வு செய்வதிற்றான் தெளிவாகும். 




__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

எடுகோள்கள்:

72. நாடக மகளிர் ஈரைம்பத்து இருவரும்
கூடிசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும் 
தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத் துறை 
நண்ணிய நூற்றுவர் நகைவேழம்பரும் 
கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பத்திற்று இரட்டியும் 
கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும், 
ஐயீராயிரங் கொய்யுளைப் புரவியும் 
எய்யா வடவளத்து இருபதினாயிரம் 
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும் 
சஞ்சயன் முதலாத் தலைக்கு ஈடு பெற்ற 
கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவரும் 
சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே 
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப 
- கால்கோட் காதை 128-140 
73. தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும்
வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத
மலைமுதுகு நெளிய நிலைநாடு அதர்பட
உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு
ஆலும் புரவி யணித்தேர்த் தானையொடு
நீலகிரியின் நெடும்புறத்து இறுத்து ஆங்கு
- கால்கோட் காதை 80-85
74. பால குமாரன் மக்கள் மற்றவர் 
காவா நாவிற் கனகனும் விசயனும் 
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி 
அருந்தமிழ் ஆற்றலர் அறிந்திலர் ஆங்கு எனக் 
கூற்றங் கொண்டு இச்சேனை செல்வது 
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் 
கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன 
வங்கப் பெருநிரை செய்க தாம் எனச் 
- கால்கோட் காதை 159-165 
75. பாலகுமாரன் - பெருங்கதைக் குறிப்பு. ”கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை - பகுதி 1. எடுவிப்பு: டாக்டர் உ.வே.சா, உ.வே.சா. நூல்நிலையம், 2000, கீழே வருவன அப்பொத்தகத்தில் வரும் அருஞ்சொல்லகராதிக் குறிப்புகள் பக்கங்கள் நூலில் வரும் இடங்களைக் குறிக்கின்றன. 

[பிரச்சோதனன் = ஒரு மகாச் சக்கரவர்த்தி; வாசவதத்தையின் தந்தை. இவன் நாடு அவந்தி; இராசதானி உச்சைனி நகர்; உதயணனை வஞ்சத்தாற் பிடித்துச் சிறாஇயில் வைக்கும்படி செய்தவன்; இவன் தேவியர் பதிறாயிரவருள் வாசவதத்தையைப் பெற்ற நற்றாயாகிய பதுமகாரிகை என்பவள் முதன்மை வாய்ந்தவள். இவனுக்குப் பாலகன், பாலகுமாரன், கோபாலகன் என்பவர் முதலிய குமாரர்கள் பலர் உண்டு. 

பாலகன் = பிரச்சோதனன் புதல்வர்களுள் ஒருவன், பக்.92; 

பாலகுமாரன் = பிரச்சோதனன் புதல்வன், உஞ்சை நகரில் உதயணன் நளகிரியை அடக்கிய பின்பு தந்தையின் கட்டளைப் படி அவனுக்கு வேண்டியவைகளைக் குறிப்பறிந்து செய்து வந்தவன், பக்.43. பாலகுமரார் = பிரச்சோதனனுடைய பிள்ளைகளின் பொதுப்பெயர், பக்.116]

76. அவந்தி அரசன் பற்றிய செயினக் குறிப்பு. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India (100 BC-AD 900)”pp 32-38, Munshiram Manoharlal Publishers Pvt.Ltd. 2005. 

77. பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து 
கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற 
வங்கப் பரப்பின் வடமருங்கு எய்தி 
ஆங்கு அவர் எதிர்கொள அந்நாடு கழிந்தாங்கு 
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇப் 
பகைப்புலம் புக்குப் சறை யிருந்த 
தகைப்பருந் தானை மறவோன் தன் முன் 
- கால்கோட்காதை 175-181
78. தேவபூதியின் ஆட்சிக் காலம். http://en.wikipedia.org/wiki/Devabhuti
79. காவா நாவிற் கனகனும் விசயனும் – கால்கோட்காதை 176 
காய்வேற் தடக்கைக் கனகனும் விசயனும் – கால்கோட் காதை 222
80. கலந்த மேன்மையிற் கனக விசயர் – கால்கோட் காதை 186
கனக விசயர் தம் கதிர்முடி ஏற்றி – நீர்ப்படைக் காதை 4 
கானற் பாணி கனக விசயர் தம் – நீர்ப்படைக் காதை 50
தெரியாது மலைந்த கனக விசயரை – நீர்ப்படைக்காதை 190
81. ”வடவ ருட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்கு
சோழன் மணக்கிள்ளி ஈன்றமகன்
கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் 
கானவில் கானங் கணையிற் போகி, 
ஆரிய அண்ணலை வீட்டி பேரிசை
இன்பல் அருவிக் கங்கை மண்ணி” 
- பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பதிகம் 
82. கண்வ வசுதேவன் ஆட்சியைப் பிடித்தது. http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty
83. பால குமாரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றலர் அறிந்திலர் ஆங்கு எனக்
கூற்றங் கொண்டு இச்சேனை செல்வது
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன
வங்கப் பெருநிரை செய்க தாம் எனச்
கால்கோட் காதை 159-165
வடபுலத்தரசர் ஒரு விருந்தில் தமிழரை இழித்துப் பேசியது. குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை, வட ஆரிய மன்னர் ஆங்கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கை தன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின் தவழும் இமயநெற்றியில் விளங்கு வில், புலி, கயல் பொறித்த நாள் எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லை போலும் என்ற வார்த்தை அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்தவிடத்து, - வாழ்த்துக் காதை உரைப்பாட்டு மடையின் முதற்சில வரிகள். 

84. உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் 
சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் 
வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம் 
தென் தமிழாற்றல் காண்குதும் யாம் எனக் 
கலந்த கேண்மையிற் கனக விசயர் 
நிலத்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர 
இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமாக் 
கரிமாப் பெருநிரை கண்டு உளம் சிறந்து 
பாய்ந்த பண்பிற் பல்வேல் மன்னர் 
காஞ்சித் தானையோடு காவலன் மலைப்ப 
- கால்கோட் காதை 182-192 
85. வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த 
பல்வேற் தானைப் படைபல ஏவி 
பொற்கோட்டு இமையத்துப் பொருவறு பத்தினிக் 
கற்கால் கொண்டனன் காவலன் ஆங்கென்.
- கால்கோட் காதை 251-254 
86. வடபேர் இமயத்து வான் தரு சிறப்பிற் 
கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின் 
சினவேல் முன்பிற் சருவெங் கோலத்துக் 
கனக விசயர்தம் கதிர்முடி யேற்றிச் 
செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் 
அறியாது மலைத்த ஆரிய மன்னரைச் 
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக 
உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற் றிரட்டியென்று 
யாண்டும் மதியும் நாளும் கடிகையும் 
ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள 
வருபெருந் தானை மறக்கள மருங்கின் 
ஒருபகல் எல்லை உயிர்த்தொகை யுண்ட 
செங்குட்டுவன் தன் சினவேல் தானையொடு 
கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து 
பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை 
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து 
- நீர்ப்படை காதை 1- 14 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பின் காலம் - 11

 
மாடலன் வருகையும், மன்னவர்க்கு உரைத்ததும்:

”கானற்பாணி கனக விசயர்தம் முடித்தலை நெறித்தது”என்ற வாசகமும், ”குடவர் கோவே நின்னாடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்” என்ற வாசகமும் இங்குதான் சொல்லப்படுகின்றன. கூடவே ”கவுந்தியின் உண்ணாநோன்பு, மதுரை நிகழ்வுகள், மாசாத்துவன், மாநாய்கன் துறவு, இருவரின் மனைவியர் இறந்தது, மாதவி, மணிமகலை துறவு, மாடலன் நன்னீர்க் கங்கை ஆடப் போந்தது” என்று அடுத்தடுத்த செய்திகள் சொல்லப்படுகின்றன. பொதுவாக தெற்கிருந்து வந்து கங்கையிற் புனித நீர் ஆடுவதென்பது அன்றிலிருந்து இன்றுவரை. காசியன்றி வேறெங்கும் நடப்பதில்லை. மாடலன் செங்குட்டுவனைப் பார்க்கும் இடத்தில் தான் அருகில் செங்குட்டுவனின் தென்கரைப் பாடி இருந்திருக்கிறது. இதனாலேயே செங்குட்டுவனின் போர்க்களம் பெரும்பாலும் காசிக்கு வடக்கே இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறோம். கங்கைக்குத் தென்கரையில் காசியிற் தங்கிய பாடிக்கு அருகில் ஏதோ ஒரு சிறுகுன்றம் இருந்ததாகச் சிலம்பு சொல்கிறது(87). இதைப் பற்றியும் கள ஆய்வு தேவை. 

மாடலனை அரசன் கேட்கும் கேள்விகள் அத்தோடு முடியவில்லை. மைத்துனன் கிள்ளிக்காக ஒன்பது சோழிய இளங்கோக்களோடு செங்குட்டுவன் பொருதியதும் இங்கு நினைவுகூரப் படுகிறது(88)

முடிவில் கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் 1000 பொற்கொல்லரைக் கொன்று உயிர்ப்பலியூட்டிய செய்தி சொல்லப்படுகிறது. இந்தச் செய்தி மதுரை எரியுண்டு 32-36 மாதங்களுக்கு அப்புறம் தான் செங்குட்டுவனுக்குத் தெரிகிறது. 

மொத்தத்தில், செங்குட்டுவனின் வடசெலவைக் குறைத்து மதிப்பிடமுடியாது. அது வழிநெடுகப் பல தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டே சென்றிருக்க வேண்டும். இந்த 32-36 மாதங்களில் பாண்டிய நாட்டில் கலகமும் போராட்டங்களும் வெடித்திருக்க வேண்டும். முடிவில் மக்களின் கோவத்தைக் குறைக்க 1000 பொற்கொல்லர் பலியாடுகளாக ஆக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். நீதிவழி தப்பிய அரசனும் அதனால் ஏற்பட்ட பிற விளைவுகளும் கொடிதானவை என்பது சிலம்பைப் படித்த யாருக்கும் விளங்கும். 

சேரனின் பெருங்கணி “எண்ணான்கு (32) மதியம் வஞ்சி நீங்கியது” என்ற அறிவிப்பைத் தருகிறான். அதற்கு மறுமொழி சொல்வதற்கு மாறாய், தன் மைத்துனன் கிள்ளியையே நினைந்து, ”இளங்கோ வேந்தர் இறந்ததிற் பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவன் (உறையூர்ச் சோழன்) கொற்றமொடு செங்கோல் தன்மை தீதின்றோ? – என்ற கேட்பதால், நேரிவாயிற் போரின் பின் உறையூர் ஆட்சியை மைத்துனனுக்கு பிடித்துக் கொடுத்தது கண்ணகி கதைக்குச் சற்று முன் நடந்திருக்கலாம் என்று உணர்கிறோம். காசியில் இருந்தபோது செங்குட்டுவனுக்கு அந்தக் கவலையும் இருந்திருக்கிறது. எனவே அந்த நேரிவாயிற் போர் வடசெலவிற்கு ஓரிரு ஆண்டுகள் முன்னர்தான் நடந்திருக்க வேண்டும். நாக நாட்டுச் சோழன், பாண்டியன் ஆகியோரின் கோவம் இயற்கையாகவே சிலம்புக் காலத்திற் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

32 மாதங்களில் நடந்த செய்தியைச் சொன்ன மாடலனுக்கு, குறிப்பாகத் தன் மைத்துனன் கிள்ளியைப் பற்றிச் சொன்ன மாடலனுக்கு, தன்னிறைக்குத் தக்க 50 ஆடகப் பெருநிறையைச் சேரன் கொடுக்கிறான். அடுத்து ஆரிய மன்னரை (கனக விசயனோடு களத்தில் இருந்த 100 பேரை) நாடு செல்க என்கிறான். ஆரியப் பேடியொடு, எஞ்சிய மன்னர், சேரனுடைய இறைமொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈரைஞ்ஞூற்றுவர், கனக விசயர் ஆகியோரை இருபெரு வேந்தர்க்குக் காட்டுமாறு ஏவுகிறான். இது எதற்கு என்று புரியமாட்டேன் என்கிறது. ஒருவேளை இந்தக் கண்காட்சி சோழ, பாண்டியர் கோவத்தை, மாற்றும் என்று நினைத்தானோ? - தெரியவில்லை. 

வடபுலத்தை விட்டுப் புறப்படுமுன் வடதிசை மன்னரின் மண்ணெயில் முருக்கிக் கவடி (= வெள்வரகு, கொள்) வித்தி, கழுதையாற் சேரன் ஏருழுகிறான்(89). இவ்வளவு விவரம் சொல்லும் சேரன் படையெடுப்பையே ”பொய்”யென்று சொல்லி வடநாட்டு வரலாற்றாசிரியரும் (சில தமிழ்நாட்டு வரலாற்றாசிரியரும்) மேலைநாட்டாரும் ஒதுக்குகிறார்களே? அது என்னவிதமான ஆய்வு? - என்ற வியப்பும் நமக்குள் எழுகிறது. 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

காப்பியத்தின் முடிப்புச் செய்திகள்:

கதை விரைவாக வஞ்சிக்கு மாறுகிறது. ஒரு நாள் மாலை, வேண்மாளோடு வஞ்சி அரண்மனை நிலாமுற்றத்தில் பறையூர் சாக்கையன் கூத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது (கொடுங்கோளூர் - எர்ணாகுளம் இடையே இன்றைக்கும் பறையூர் உள்ளது. சாக்கைக்கூத்தின் இன்னொரு வளர்ச்சி தான் இந்தக் காலத்துக் கதகளியும், மோகினியாட்டமும். இதைப் படித்த பிறகும் செங்குட்டுவன் இருந்தது குடவஞ்சியில்லை, கொங்கு வஞ்சி என்று சொல்லச் சில ஆய்வாளருக்கு எப்படி மனம் வருகிறது?) நீலன் வந்து, ஆரிய அரசரோடு நாகநாட்டுச் சோழனையும் பாண்டியனையும் பார்த்த கதையைச் சொல்லுகிறான். செங்குட்டுவனின் சினம் கூடிப்போகிறது.

கூத்துப் பார்க்கும் போது கூடவிருந்த மாடலன் செங்குட்டுவனின் சினம் தணித்து :”ஆட்சியேற்று 50 ஆண்டுகள் ஆனபின் இன்னும் வேள்வி செய்யவில்லையே?” என்று கேட்கிறான். இந்த ஒரு செய்தியால், நடுகற் காலத்தில் செங்குட்டுவனின் அகவை 70-75 ஆக இருந்திருக்கலாம் என்று நாம் ஊகிக்க இடம் தருகிறது. இந்தச் செய்தியை பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்துப் பதிகம் அவன் ஆட்சிக்காலம் சொல்லுவதன் மூலம் உறுதி செய்கிறது(90)

அதுவரை வேள்வி செய்யாத சேரர்கள், அடுத்தடுத்து ஏதோவொரு காரணத்தால் வேள்வி செய்யும் படி தூண்டப்பட்டிருக்கிறார்கள், அவர்களும் அதற்கு இணங்கியிருக்கிறார்கள். இந்தக் கேள்வியும் ஆய்வு செய்யப்படவேண்டியதே. வேதநெறி அவ்வளவு தூரம் அவர்களை ஆட்படுத்தியதா? கொஞ்சங் கொஞ்சமாக மற்ற நெறிகளின் தாக்கம் தமிழ்நாட்டில் குறைந்தது போலும். பல்லவர் காலம் வரும் போது வேதநெறியோடு பிணைந்து கலவையான சிவநெறியும், விண்ணவ நெறியுமே இங்கு ஆட்சி செய்யத் தொடங்கின. மாடலன் கூற்றில் செங்குட்டுவனின் வெவ்வேறு பங்காளிகளைப் பற்றிய கூற்றும் வருகிறது(91). வேத வேள்வி செய்து முடிந்தபின், வஞ்சிப் புறநகர் ஆற்றங்கரையில் வேளாவிக்கோ மாளிகையில் இருந்த ஆரிய அரசரையும், மற்றோரையும் வில்லவன் கோதைமூலம் சேரன் சிறையிருந்து விடுவிக்கிறான். குடிமக்களின் வரியைக் குறைக்குமாறு அழும்பில் வேளுக்கு ஆணையிடுகிறான். 

அதன் பின்னால் பத்தினிக் கோட்டம் சென்று, கைவினை முற்றிய கண்ணகியின் தெய்வப் படிமத்தைப் பார்க்கிறான். பார்த்து, மனம் களித்து, ”பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி, வேள்வியும் விழாவும் நாள் தொறும் வகுத்து, கடவுள் மங்கலம் செய்கு” என்று ஆணையிடுகிறான். நிகழ்வுகள் எல்லாம் சடசடவென்று நடைபெறுகின்றன. இடையில் மலைப்பாதை வழி எந்தப்பயணமும் சேரன் மேற்கொண்டதாய்ச் சொல்லப்படவில்லை. 

நினைவிருக்கிறதா? முன்னால் கண்ணகி பற்றிய செய்தி அறிந்த போது ஆற்றைக் கடந்து செங்கோட்டின் மேல் ஏதோவொரு இடத்தில் தங்கியிருந்தான். அவ்விடம் செல்லச் சேரனுக்குச் சிலநாட்கள் கூடப் பிடித்தன. அது போன்ற பயணம் இங்கு விவரிக்கப்படவில்லை. இந்தக் காதையில் எல்லாமே அடுத்தடுத்த செய்திகளாக, அரண்மனையில் இருந்து அருகே ஊருக்குள் நகர்ந்த வண்ணமே விவரிக்கப்படுகின்றன. 

இதைக் கூர்ந்து கவனித்தால், கண்ணகி. கோயில் என்பது குடவஞ்சியில் அமைந்ததுதான், எங்கோவொரு மலையில் அமைந்ததல்ல, என்று புரிந்துபோகும். இதை நிறுவுவதற்கு நடுகற் காதை 226-234 ஆம் வரிகளில் வரும் ஒரு விவரிப்புப் போதும்(92). அதோடு எந்த அரசனும் இதுபோன்று கோயிலெழுப்பும் செயலைத் தன் தலைநகரிற் செய்வானேயொழிய நாட்டு எல்லையிற் செய்ய மாட்டான். [இன்றைக்கு தமிழக எல்லையில் இருக்கும் மங்கலாதேவிக் கோட்டம் பின்னால் எழுந்த எத்தனையோ கண்ணகி கோயில்களில் ஒன்றாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அதோடு அங்கே உடைந்து கிடக்கும் படிமங்களும் கேரளபாணிச் சிற்பங்களை நமக்கு உணர்த்தவில்லை. 

அடுத்து வாழ்த்துக் காதையில், தேவந்தி, கண்ணகியின் காவற்பெண்டு, கண்ணகியின் அடித்தோழி, ஐயை ஆகியோர் பத்தினிக்கோட்டம் வந்த செய்தி சொல்லப்படுகிறது; அவர்களில் மூவர் அழுது அரற்றியதும் சொல்லப்படுகிறது. ”தென்னவன் தீதிலன்; நானவன் மகள்” என்னும் கண்ணகியின் வான்குரல் எழுகிறது. இந்தகைய முடிப்பு நாட்டுப்புறத் தொன்மங்களில் அப்படியே உண்டு. 

”கண்ணகியைப் பாண்டியன் மகளாக உருவகப்படுத்தும் கதைக்கூறு ”கோவலன் கதை”என்னும் நாட்டுப்புறக் கூத்திலும்(93), ”சந்திராவின் பழிவாங்கல்” என்ற கன்னட நாட்டுப்புறக் கதையிலும்(94) உண்டு. இது ஒருவிதமான கருத்தீடு. இது உண்மையாய் இருக்கத் தேவையில்லை. கதை நாயகியை எதிரியின் மகளாகச் சொல்வதும், குழந்தையை ஆற்றில் விடுவதும், அதை இன்னொருவர் கண்டுபிடித்து வளர்ப்பதும், உலகெங்கும் காலகாலமாய் பயன்படுத்தப்படும் புனைவு உத்திகளாகும். யூத நெறியாளர் மோசே குழந்தையாய் இருந்தபோது நீல நதியாற்றில் இதுபோலக் கூடையில் வைத்து மிதந்து வந்ததும், எகிப்திய அரசனால் பின்னால் இராமசிசோடு சேர்த்து வளர்க்கப்படுவதும் இங்கு நினைவிற்கு வருகின்றன. இதுபோன்ற கதையுத்திகள் யாரோ ஒரு கதையில் நடந்திருக்கலாம். ஆனால் அவை மக்கள் மனத்தை பெரிதும் கவர்ந்திருப்பதால், அதே யுத்திகளை வெவ்வேறு கதைகளில் புனைவாளர் இடைச்செருகிறார்கள். ”கண்ணகி பாண்டியன் மகள்” என்னும் பாமர மக்களின் கருத்தீட்டைப் புறம் தள்ளவேண்டாம் என்று இளங்கோ வாழ்த்துக் காதையிற் சேர்த்திருக்கலாம். இளங்கோவின் குறிப்பில் இருந்தே அதற்குப் புனைவுகள் சேர்த்து, மேலே சொன்ன நாட்டுப்புறக் கூத்துக்கள் எழுந்திருக்கலாம். இந்தக் கூத்துக்கள் மிக மிகப் பிற்காலத்தன. [எவ்வளவு முனைந்து கணித்தாலும், இவை 16 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாற் போகாதவை.] இவற்றை வைத்துக் கொண்டு சில ஆய்வாளர் சிலம்பின் காலத்தைப் பிற்காலத்திற்குத் தள்ளமுயல்வது “பேரன் தாத்தனுக்கு முன்னோன்” என்று சொல்வதைப் போன்றது. இது போன்ற முயற்சிகளைச் சரியான ஆய்வாளர் புறந் தள்ளுவர். 

ஈற்றுவாய்:

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் தான். 

"சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன? சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா? அல்லது அது வெறும் கதையா? (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் ஆய்வாளர் வையாபுரியாரிலிருந்து, இக்கால இடதுசாரிகள் வரை பலருண்டு. பேரா. ரொமிலா தாப்பர் போன்றோரும் கூடச் சிலம்பின் காலத்தைப் பின் தள்ளுவார்கள்.) செங்குட்டுவன் வென்றதாகச் சொல்லப்படும் கனக விசயர் யார்? வடபுலத்து மன்னர்கள் என்று வஞ்சிக் காண்டத்துள் ஏழெட்டுப் பெயர்கள் சொல்லப் படுகிறதே, அவரெல்லாம் யார்? சிலம்பைப் படிக்கும் போது, மகதத்தில் மோரியர் ஆட்சி இல்லை என்று புரிகிறது; பிறகு யார் அப்போது மகதத்தை ஆண்டார்கள்? அந்தக் காலத்தில் பெரும்நகரமான பாடலிப் பட்டணத்திற்கு அருகில் செங்குட்டுவனோ, வில்லவன் கோதையோ போனார்களா? இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கல் எடுத்தான் என்றால், கிட்டத்தட்ட அந்த இடம் எங்கிருக்கலாம்? வஞ்சிக் காண்டத்தில் வரும் நூற்றுவர் கன்னர் யார்? நூற்றுவர் கன்னரின் கொடிவழியில் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் இருந்த மன்னரின் பெயர் எது? செங்குட்டுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு, ஆதிக்கம் பெற்றவராய், நூற்றுவர் கன்னர் எப்படி இருந்தார்கள்?" 

இது போன்ற பல கேள்விகள் வஞ்சிக் காண்டம் படிக்கும் நமக்கு எழுகின்றன. ஒரு சில கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடை காண முயன்றிருக்கிறேன் (எல்லாக் கேள்விகளுக்கும் அல்ல.) நாவலந்தீவின் தெற்கே இருக்கும் ஒரு சிறிய மன்னனான சேரலன் (நமக்கு நம் நாடு பெரிதென்றாலும், நாவலந்தீவில் சேர நாடு சின்னது தானே?) வடக்கே படையெடுத்துப் போக முற்படும் பொழுது தனக்கு வடக்கே இருக்கும் மன்னர்களில் ஏதேனும் ஒரு சிலரையாவது நட்புடையவர்களாய் ஆக்கிக் கொள்வது ஓர் அரசதந்திரம் தான்; இருந்தாலும் "நூற்றுவர் கன்னரோடு ஏன் அப்படி ஒரு தொடர்பு கொண்டான்? அவர் தவிர்க்க முடியாதவரா?" என்ற கேள்வி எண்ணிப் பார்க்க வேண்டியது தான். [சிலம்பில் ஏற்பட்ட வரலாற்று வேட்கையும் எனக்கு நூற்றுவர் கன்னரில் தான் தொடங்கியது.] 

மொத்தத்தில் சிலம்பை ஆழ்ந்து படித்தால், பெரும்பாலும் சிலம்புக் கதையின் காலம் கனகர் ஆட்சிக்குச் சற்று முன், கி.மு.75-80 யை ஒட்டியிருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கிறது. வெறுமே வரந்தரு காதையையும், மகாவம்சப் பட்டியலையும் வைத்துக் கொண்டு உள்ளிருக்கும் முரண்களைப் பார்க்காது முதலாம் கயவாகுவின் காலமாய் கி.பி.177-யை வைத்துக் கொண்டு அதையே சிலம்பிற்கும் காலமாய்ச் சொல்லுவது சற்றும் பொருத்தமில்லை.

இன்னும் ஒரு கேள்வி மீதமிருக்கிறது. ”சிலம்புக் கதையின் காலம் கி.மு.75-80 ஆய் இருக்கலாம். சிலம்பு என்னும் காப்பியத்தின் காலம் அதற்கும் பின்னால் சில நூற்றாண்டுகள் கழித்து இருக்கக் கூடாதா?” இதை அடுத்த கடைசிப் பகுதியிற் பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

எடுகோள்கள்:

87. நீர்ப்படை காதை 196.
88. பதிற்றுப்பத்து 5 ஆம் பத்துப் பதிகம், அகநா.125:18-21
89. வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கிக்
கவடி வித்தியக் கழுதையேர் உழவன்
குடவர் கோமான் வந்தான். . . 
நீர்ப்படைக் காதை.225-227 
90. பதிற்றுப் பத்து 5 ஆம் பதிகம். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமைந்த காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப் பாட்டு. பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு வாரியையும் தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத்தான் அக் கோ. கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான். தன் மகன் குட்டுவன் சேரலைக் கொடுத்தது என்றவுடன் அவனைக் கொடை கொடுத்தான் என்று பொருள் கொள்ளக் கூடாது. சிறுவன் குட்டுவன் சேரலைப் பரணரிடம் அளித்து உரிய காலம் படிப்பித்துத் தரும்படி “இவன் நின் அடைக்கலம்” என்று கூறியதாகவே பொருள் கொள்ளவேண்டும். செங்குட்டுவன் பத்தினிக்குக் கல் எடுத்தபோது பெரும் முதுமையடைந்திருக்க வேண்டும். இங்கே பரணர் பாடியது குட்டுவன் சேரல் சிறுபிள்ளையாய் இருந்த போது என்பதால், பரணரின் பாடலில் இமயத்திற் கல்லெடுத்த செய்தி வராதது இயற்கைதான். பதிகம் பாடப்பட்டது வடசெலவிற்குப் பின் இருந்திருக்க வேண்டும் என்பதும் இந்தத் தருக்கத்தாற் புலப்படுகிறது.
91. கடற் கடம்பு எறிந்த காவலன் – நெடுஞ்சேரலாதன், நடுகற் காதை 135
விடர்ச்சிலை பொறித்த விறலான் - நெடுஞ்சேரலாதன், நடுகற் காதை 136 
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு 
மேல்நிலை உலகம் விடுத்தோன் – செல்கெழு குட்டுவன், நடுகற் காதை 137-138
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கு எனக் 
கூற்றுவரை நிறுத்த கொற்றவன் - யாரென்று தெரியவில்லை, நடுகற் காதை 139 -140
வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு 
பொன்படு நெடுவரை புகுந்தோன் - யாரென்று தெரியவில்லை, நடுகற் காதை 141-142 
மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி 
அகப்பா எறிந்த அருந்திறல் - செல்கெழு குட்டுவன், நடுகற் காதை 143-144 
உருகெழு மரபின் அயிரை மண்ணி 
இருகடல் நீரும் ஆடினோன் – செல்கெழு குட்டுவன், நடுகற் காதை 145-146 
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து 
மதுக்கொள் வேள்வி வேட்டோன் – இளஞ்சேரல் இரும் பொறை, நடுகற் காதை 147-148 
92. இமையவர் உறையும் இமையச் செவ்வரைச் 
சிமயச் சென்னித் தெய்வம் பரசிக் 
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து 
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து 
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி 
வேள்வியும் விழாவும் நாள் தொறும் வகுத்துக் 
கடவுள் மங்கலம் செய்கு என ஏவினன் 
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறு என் 
- நடுகற் காதை 226-234 
93. ”கோவலன் கதை” பதிப்பாசிரியர் முனைவர் சூ. நிர்மலாதேவி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2003. சிலம்பினின்றும் மாறுபட்ட நிகழ்ச்சிகள் இதில் விவரிக்கப் படுகின்றன. பாண்டியன் தேவியாகிய கொப்புலிங்கி (<கோப்பெருங்கி) பெற்றெடுத்த மகள் கண்ணகி என்றும், காளியே கண்ணகியாக வந்து பிறந்தாள் என்றும், சோதியர் அறிவுறுத்தியபடி குழந்தை ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டு வையையாற்றில் விடப்பட்டது என்றும், மாசாத்துவானும் அவன் மைத்துனன் வண்ணமாலைச் செட்டியும் (மாநாய்கன்) பெட்டியைக் கண்டெடுத்து, வண்ணமாலைச்செட்டி கண்ணகியை எடுத்து வளர்த்தான் என்றும் கதை போகும். மாசாத்துவான் மனைவி வண்ணமாலை என்று சொல்லப்படுவாள். இங்கும் முறை மாப்பிள்ளை/பெண் உறவு கண்ணகிக்கும், கோவலனுக்கும் சொல்லப்படுகிறது. முழுவிவரிப்பையும் அந்தக் கதையுள் கண்டு கொள்க. கோவலன் கதை என்பதைப் 12-13 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த புகழேந்திப் புலவர் இயற்றினார் என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். ஆனால் கொச்சி, கொல்லம் போன்ற துறைமுகங்களைப் பற்றிப் பேசும் கோவலன் கதை அவ்வளவு முந்திய காலமாய் இருக்க வாய்ப்பில்லை. 
94. ”சந்திராவின் பழிவாங்கல்” என்ற கன்னட நாட்டுப்புறக் கதை The Cilappatikaaram - The tale of an anklet”, Penguin Classics, 2004, என்ற பொத்தகத்தில் பக்கங்கள் 321-326 இல் சொல்லப்படும். இந்தக் கதை முன்னாற் சொன்ன கோவலன் கதையில் இருந்தும் சிறிது வேறுபடும். 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பின் காலம் - 12

 
கட்டுரையை முடிக்க இன்னும் ஒரு கேள்வி மீதமிருக்கிறது. ”சிலம்புக் கதையின் காலம் கி.மு.75-80 ஆய் இருக்கலாம். சிலம்பு என்னும் காப்பியத்தின் காலம் அதற்கும் பின்னால் சில நூற்றாண்டுகள் கழித்து இருக்கக் கூடாதா?” இதை இந்தப் பகுதியிற் பார்ப்போம்.

1.இத்தகைய கூற்றிற்குத் துணையாக ஒருசிலர் சிலம்பில் வரும் வடசொற்களைக் காரணஞ் சொல்லுவார்கள். [பேரா. வையாபுரிப் பிள்ளை போன்றோரின் கூற்று.] 

தமிழில் வடசொற்கள் நுழைவது இன்று நேற்றல்ல; நந்தர், மோரியர் காலத்திலேயே தொடங்கி விட்டது. என்றைக்கு ஆசீவகம், செயினம், புத்தம், உலகாய்தம் போன்ற நம்புநெறிகளும், நம்பாநெறிகளும் வேதநெறியைக் கேள்விகேட்கத் தொடங்கினவோ, அன்றே அறிவாளிகளின், முனிவர்களின் (இருடிகளின்), மெய்யியலாளர்களின், நகர்ச்சி வடக்கிருந்து தெற்கு நோக்கித் தொடங்கிவிட்டது. இங்கிருக்கும் அரசரின் ஆதரவை பெற வேண்டாமா? இந்நகர்ச்சியில் பாகதமும், சங்கதமும் சிறிது சிறிதாய்த் தமிழில் நுழையத் தானே செய்யும்? [அம்மொழிச் சொற்களைத் தமிழில் தக்க வைத்து, தமிழையே மாற்ற முற்படுவது வேறு கதை. அதை நான் பேசவில்லை. கூடியமட்டும் நம் நடையிற் தமிழ்ச்சொற்களை ஆளுவதே சிறந்தது என்று சொல்லுவேன். ”அகிலத்தின் ஒழுங்கின்மை (entropy of the universe) கூடுகிறது” என்பதற்காக எந்தக் கட்டகமும் (system) தன்னுள் ஒழுங்கை (order) உருவாக்காது இருக்கிறதோ? ஒழுங்கு என்பது ஒழுங்கின்மைக்கு நடுவில் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.] 

”வடசொற்கள்” எனுஞ் சொல் சங்கதம், பாகதம் என்ற இரு மொழிச்சொற்களுக்கும் பொதுவானது. ”வடசொற்கள்” எல்லாம் சங்கதமே என்னும் பார்வை ஒருபாற் கோடியது. (தமிழாய்வில் நெடுங்காலம் பாகதத்தைக் குறைத்தே மதிப்பிட்டிருக்கிறார்கள்.) வடசொற்கள் தமிழுள் ஊடுறுவியது வெறும் மெய்யியலார் தொடர்பால் மட்டுமல்ல.அதற்கும் ஆழமான, தமிழகம், மகதம் ஆகிய இரு தேசங்களின் அரசியற் பொருளியல்கள் ஊடாடத் தொடங்கியவுடன், தக்கண, உத்தரப் பாதைகளின் வழி சாத்துக்கள் இடை நகரத் தொடங்கியவுடன் மொழிகளின் பரிமாற்றம் அதனூடாக நடக்கத் தொடங்கும் தானே? 

இத்தகைய இயல்பான பரிமாற்றம் நடக்கும் போது, ஒரு சிலரின் மொழிநடை மாற்று மொழியால் பாதிப்பில்லாது இருக்கும்; வேறு சிலரின் மொழிநடையோ பெரிதும் பாதிக்கப்படும். ஏன் ஒருவரே வெவ்வேறிடங்களில், வெவ்வேறு நடை பயிலமாட்டாரா, என்ன? வடசொற் கிளவியைத் தமிழில் சிலர் பயிலத் தொடங்கியதாற்தானே கி.மு. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் ”வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்று நெறிப்படுத்த முனைந்தார்? ”தமிழை மேலோட்டமாய்ப் பேசத் தெரிந்த, ஆனால் அதை முழுதும் புரிந்துகொள்ளாத, தமிழர் மரபு என்பதை முறையே அறிந்து கொள்ளாத, படித்த, மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க எழுந்த இலக்கணம் தான் தொல்காப்பியம்” என்று அண்மையில் பேரா. கா.சிவத்தம்பி சொல்லவில்லையா?(95) [பேரா. சிவத்தம்பியோடு தொல்காப்பியரின் காலக் கணிப்பில் நான் வேறுபடுகிறேனேயொழிய இக்கருத்தில் அல்ல.] 

தமிழக வரலாற்றில் தொடர்ச்சியாக ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எழுத்துநடை என்பது ஓரளவு கட்டுப்பட்ட பழமைப் போக்கிலும், பேச்சுநடை என்பது ஓரளவு நீக்குப் போக்கோடு, கலவை நடையாக இருப்பதும் உண்மைதானே? அண்மைக்காலப் பாரதியையே எடுத்துக் கொள்வோமே? வடசொற்கள் அவன் உரைநடையில் மிகுந்தும், கவிநடையிற் குறைந்தும் இல்லையா? இதே போலக் கவிப்பேரரசன் கம்பன் செய்திருக்க மாட்டானா? தேவார மூவர் செய்திருக்க மாட்டாரா? இளங்கோ செய்திருக்க மாட்டானா? அருணகிரிநாதர் எக்கச் சக்கமாகத் திருப்புகழில் வடமொழி பயின்றார் என்பதால் அவர்க்கு முந்திய 14 ஆம் நூற்றாண்டு நச்சினார்க்கினியரில் அதே அளவு காணுவதில்லையே? ஏன் 11 ஆம் நூற்றாண்டு இளம்பூரணருக்கும், 14 ஆம் நூற்றாண்டு நச்சினார்க்கினியருக்கும் எத்துணை அளவு வேறுபாடு கண்டுவிட்டோம்? ஒரே காலகட்டத்தில், வடமொழி விரவிய நடையும், விரவாத நடையும் பயிலத்தான் செய்திருக்கின்றன. 

எத்துணை விழுக்காடு வடசொற்கள் சமகாலத்திற் தமிழர் பயின்றார் என்பது அகன்ற பட்டை போன்றது. அதை நூலிழைபோற் கருதிக் கணித்துவிட முடியாது. கூடவே, மொழிநடை என்பதைக் காலத்தோடு நேருறவுற்றதாய்க் (direct relation) கொள்ளக் கூடாது. ஒரு காப்பியத்தை எடுத்துக் கொண்டு அதிலுள்ள வடசொற்களைக் கணக்குப் போட்டு அது எந்தக் காலம் என்று துல்லியமாக 10 ஆண்டுக் கணக்கிற் சொல்லுவது மிகக் கடினம். என்னைக் கேட்டால் இந்தக் கணிப்பில் 100, 200 ஆண்டுத் துல்லியங் கணக்கிடுவது கூடச் சரவலான செயலேயாகும்.

அடுத்த கேள்வியான ”சிலம்பிற்குள் எது வடசொல், எது தமிழ்ச்சொல்?” என்பதிற்கூட ஒரு ஒன்றுபட்ட அளவுகோல் கிடையாது. வடசொல் என்று சிலர் சொல்லுவதை தமிழ்ச்சொல் என்று இன்னொரு அறிஞர் வேர்ச்சொற்கள் கொண்டு சான்றுகளோடு நிறுவுகிறார். மொத்தத்தில் அயல்மொழிச் சொற்களை வைத்து, ஓர் இலக்கியத்தின் காலத்தைத் தெள்ளத் தெளிவாகக் கணிப்பது அவ்வளவு எளிதான செயலல்ல. அது சவ்வாக இழுத்துக் கொள்ளும். இருந்தாலும் சிலம்பிற் பயிலும் வடசொற்கள் எத்தனை விழுக்காடு என்பது சுவையார ஆய்வுதான். 

2. மணிமேகலையோடு சிலப்பதிகாரத்தை இணையாக வைத்து இரட்டைக் காப்பியம் என்று சொல்லி, அதனாற் காலத்தைக் குறைத்துக் காட்டுவார்கள். [பல தமிழறிஞர் கூற்று.]

என்றைக்குப் பதிகத்தையும், வரந்தரு காதையையும் இளங்கோ இயற்றியதாய் இருக்கவியலாது என்று ஒதுக்கினோமோ, அன்றைக்கே இக்கூற்றுப் பட்டுப்போகிறது. கோவலன், மாதவியின் மகள் மணிமேகலை என்பதைத் தவிர்த்து இரண்டு கதைகளுக்கும் தொடர்பு கொஞ்சமும் கிடையாது. புத்தநெறியே சிறந்தது என்று நிலைநாட்டப் பிறந்த மணிமேகலையின் கதைக்களன் முற்றிலும் வேறுபட்டது. அதன் காலத்தைத் தனித்துக் கணிக்க வேண்டுமேயொழிய சிலம்போடு சேர்த்து இரட்டைக் காப்பியம் என்று சொல்லி சிலம்பின் காலத்தை வலிந்து கீழே தள்ளுவது வேண்டாத வேலை. சிலம்பு என்னும் காப்பியம் ”பத்தினிக் கோட்டம் கட்டிய நிகழ்வோடு ஒரு சில ஆண்டுகளிலேயே காப்பியமாய் எழுதப்பட்டிருக்கவேண்டும்” என்று எண்ணுமாப்போல், அகநானூற்றின் 149 ஆம் பாட்டு உறுதி செய்கிறது. அதைக் கீழே பார்ப்போம்.

3. சிலப்பதிகாரத்தைச் செயினக் காப்பியம் என்றுரைத்து, “செயினம் என்பது களப்பிரர் காலத்திற்தான் தமிழகத்தில் பெரிதும் பரவியது” என்று கட்டங்கட்டி, அதனால் சிலம்பு பிற்பட்டது என்று ஒருசிலர் சொல்லுவார்கள். [இது பல இடதுசாரியர் கூற்று]

கட்டுரையின் முன்பகுதிகளிற் சொன்னாற் போல், சிலம்பு ஒரு செயினக் காப்பியம் என்று சொல்ல முற்படுவதற்கு வரந்தரு காதை மட்டுமே சான்றாகும். வரந்தரு காதையை ஏற்பதில் தயக்கம் வந்தபின், சிலம்பு செயினக் காப்பியம் என்று சொல்வதிலும் தயக்கம் ஏற்படும். கவுந்தி என்னும் செயினத் குரத்தி காப்பியத்தின் ஊடே ஒரு கதை மாந்தராய் செயினம் பேசி வருவதாலேயே சிலம்பு செயினக் காப்பியம் ஆகிவிடாது. ”கவுந்தி பேசுவது ஆசீவகம் தான்; அவரை செயினக் குரத்தி என்று சட்டென்று சொல்லிவிட முடியாது, ஊழையும், ஊழ்வினையையும் பலர் குழப்பிக் கொள்கிறார்கள்” என்று பேரா. க.நெடுஞ்செழியன் கூறுவார்(96)

ஆசீவகத்திற்கும், செயினத்திற்கும் இடையுள்ள ஆட்டத்தில் பல்வேறு ஆசீவகச் சான்றுகளை செயினமாய்க் காட்டும் போக்கு 19, 20 ஆம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களிடையே, தமிழக வரலாற்று ஆய்வாளரிடையே பெரிதும் இருந்திருக்கிறது. ஏதெல்லாம் செயினம் எனப்படுகிறதோ, அவற்றை மீளாய்வு செய்வது இப்பொழுது தேவையாகிறது. சிலம்பும் அதிலோர் ஆய்வுக் களமே.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இன்னொரு செய்தியும் இங்கு சொல்ல வேண்டும். நிக்கந்தர்கள் நெடுங்காலம் வேதநெறிப் பார்ப்பனரைப் போன்றே ஏதொன்றையும் எழுத்தில் வைக்கத் தயங்கினார்கள். “சரசுவதி இயக்கம்” என்ற செயின எழுத்தியக்கம் கி.மு.150 களிற் தொடங்கி கி.பி.100 வரை நடந்தது. அந்த இயக்கத்தையொட்டியே மகாவீரர் போதனைகள் எழுத்தில் ஆவணப்பட்டன. இதன் உச்சகாலம் கி.மு.50 இல் இருந்து கி.பி.50 வரையாகும். இக்காலத்திற் தான் செயின சமய நூல்கள் எழுதிவைக்கப்பட்டன. அதற்கு முன் அவர்களுக்கு வேத நெறியாளரைப் போல எல்லாமே வாயுரைகள் தான்(97).

சிலம்பைப் போன்றதொரு காப்பியம் கி.மு.50-கி.பி.50இலும், அதற்குப் பின் 100 ஆண்டுகளிலும், செயினச் சமய நோக்கில் எழுந்திருக்க வாய்ப்பேயில்லை. அதோடு இன்று நமக்குக் கிடைத்த சீவக சிந்தாமணி, ஐஞ்சிறு காப்பியங்கள் போன்றவை “ஒரு ஊரில் ஒரு இராசா இருந்தார், அவருக்கு இத்தனை மனைவியர், இத்தனை பிள்ளைகள். . . .” என்று சொல்லி, ஊடே மாந்தரை மீறிய மாகைச் (magic) செய்திகளை நுழைத்து, முடிவில் “செயினம் வெல்லுகிறது” என்ற முடிப்போடு, தொன்மம் (புராணம்), பழங்கதை சொல்லும் போக்கிற் தான் இருக்கின்றனவே யொழிய, சிலம்பைப்போற் கூத்துவடிவில் சட்டென்று திரையைத் தூக்கி நாடகப் பாங்கில் ஓர் வரலாற்று இலக்கியமாய்த் தோற்றங் காட்டவில்லை. சிலம்பின் கூத்து வடிவம் செயினக் கருத்தாளருக்கு முற்றிலும் மாறான புதிய வடிவம். 

4. பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்தில் வரும் கடல்பிறக்கோட்டிய குட்டுவனும் சிலம்பில் வரும் செங்குட்டுவனும் வெவ்வேறானவர்கள் என்று சொல்லியும், பதிற்றுப் பத்தின் பதிகம் மிகப் பிற்காலத்தது, பேரரசுச் சோழர்களின் மெய்கீர்த்திகளையொட்டி பதிகம் எழுந்தது என்று சொல்லிச் சிலம்பின் காலத்தைப் பிந்தையது என்பார்கள். [இதுவும் இடதுசாரியர் கூற்றே.]

சிலம்பினுள் வரும் ஒத்திசைவான சான்றுகளைக் குப்புறத் தள்ளிவிட்டு, பதிற்றுப்பத்துப் பதிகத்தின் காலத்தை வைத்துக் கொண்டு இப்படித் தீர்ப்பு எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. பதிற்றுப் பத்தின் பதிகங்கள் காலத்தாற் பிற்பட்டவையாக இருக்கலாம். ஆனால் அவற்றில் வரும் செய்திகள் முற்பட்டவையாக இருக்கக் கூடாதா? கி.பி.100க்கும் பின்னால் எழுந்த குணாட்டியரின் “ப்ருகத்கதா”வில் வரும் செய்திகள் பிம்பிசாரனுக்கும் முந்தைய காலத்தை, அவந்தி, வச்சிரம், வத்தவம், மகதம் என்று தனித்திருந்த கணபதங்களின் காலத்தை, அல்லவா பழங்கதை சொல்லுவது போற் சொல்லுகின்றன? அவை சம காலத்தைச் சொல்லவில்லையே? அதே போல பதிற்றுப் பத்தின் பதிகங்கள் தங்களின் காலத்திற்கு முற்பட்ட செய்திகளை ஏன் சொல்லக் கூடாது? 

சற்று முன்னாற் சொன்னது போல் அகம் 149 ஆம் பாட்டைப் படித்தால், சிலம்பு என்னும் காவியம், ’தன் வரலாறு’ நடந்து முடிந்த நாலைந்து ஆண்டுகளுக்குள்ளேயே எழுந்திருக்கலாம் என்ற எண்ணம் ஆழமாய் எழுகிறது. அதைக் கீழே பார்ப்போம்.

5. செங்குட்டுவனோ, தமிழக அரசர்களோ வடக்கே எந்தக் காலத்தும் படையெடுத்துப் போகவில்லை; எல்லாமே “கப்சா”; ”முதல்முதல் வடக்கே போனவன் இராசேந்திர சோழன் தான்; எனவே சிலப்பதிகாரம் ஒரு கற்பனை” என்று சொல்லி ஒரு புது “திரைக்கதை-வசனம்” எழுத முற்படுவார்கள் [இது திரு.செல்லன் கோவிந்தனின் வழிமுறை] 

இதற்குச் ”சிலம்பின் காலக் கணிப்பு” என்ற நூலில்(98) முனைவர் இரா. மதிவாணன் ஏற்கனவே விடை கூறிவிட்டார். [அதேபொழுது மதிவாணன் சிலம்பின் காலம் கி.பி.2 ஆம் நூற்றாண்டு என்பார்.] 

மேலேயுள்ள ஐந்து கூற்றுகளையும் ஏற்காத நிலையில், ”சிலம்பு என்னும் காப்பியம் எழுந்த காலம் எது?” என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. அதை இனிப் பார்ப்போம்.

சேரனை வேள்வி நடத்த மாடலன் வேண்டியபோது, சேரன் ஆட்சிக்கட்டிலேறி 50 ஆண்டுகள் ஆயிற்று. பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தின் பதிகத்தின் படி செங்குட்டுவன் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தான். 25 அகவையில் ஆட்சிப் பொறுப்பேற்ற சேரனுக்கு, பத்தினிக்கோட்டம் எழுந்தபோது 75 அகவை ஆகியிருக்கும். அதன்பின் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறான். அவனுக்குப் பின் அவன் மகன் குட்டுவன் சேரல் ஆட்சிக்கு வந்திருக்கலாம். 

முன்னே சொன்னது போல், மதுரையில் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு அப்புறம் ஆட்சிக்கட்டில் ஏறிய அவன் தம்பி வெற்றிவேற் செழியனின் தொடக்க காலம் குழப்பமாய் இருந்தது. மக்களின் கோவத்தைத் தணிக்கும் வகையில் 1000 பொற்கொல்லரை ”படையற் பலியாடுகள்” போலக் காவு கொடுக்கும் நெருக்கடி அவனுக்கு நேர்ந்திருக்கிறது. எப்பொழுது இந்தப் பலி நடந்தது என்று சொல்ல முடியாவிடினும், பாண்டிநாட்டில் சட்டம்- ஒழுங்கு அரசின் அடக்குமுறை மூலந்தான் நிலைநாட்டப் படுகிறது என்று உறுதியாய்ச் சொல்லலாம். இதன்முடிவில் நாடெங்கும் ஒரு மயான அமைதி ஏற்பட்டிருக்க வேண்டும். [இந்தச் செய்தி, வடசெலவிற் புறப்பட்டுச் சென்ற சேரனுக்கு 32 மாதங்கள் கழித்துத் தான் தெரிகிறது.]

இந்தக் கால முடிவில், பத்தினிக்குக் கல்லெடுக்கச் சேரன் வடக்கே படையெடுத்தது வெற்றிவேற் செழியனுக்கு ஒற்றர் மூலம் தெரிந்திருக்க வேண்டும். எங்கிருந்திருந்தோ வந்த ஒரு சோழநாட்டுப் பெண்ணால் தன்நாட்டுக்குத் தீராப் பழியும் கேவலமும் வந்து சேர்ந்தது, பாண்டியன் வெற்றிவேற் செழியன் மனத்திற் பெருங்கனலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்தக் கோவம், நீலன் கனகவிசயரைக் கொண்டுவந்து பாண்டியனிடம் காட்டும் போது சேரனை ஏளனம் செய்வதில் முடிகிறது(99). “ஊர் இரண்டுபட்டுக் கிடக்கக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்ற வகையிற் ”தங்களுடைய பரிதவிப்பில் சேரன் சிக்கெடுக்கிறான்” என்றே பாண்டியர் எண்ணியிருப்பர். 

சேர நாட்டு வஞ்சியில் பத்தினிக்குக் கோட்டம் எடுத்ததைப் பாண்டியரால் கொஞ்சங் கூடத் தாங்கிக் கொண்டிருக்கவே முடியாது. ஏனென்றால் அந்தப் பத்தினிச் சிலை பாண்டியர் நீதி தவறியதை மெய்ப்பிக்கும் ஓர் அடையாளச் சின்னம். [பாண்டியர் நீதி குறைப்பட்டுப் போனதை மக்கள் மறந்து தொலைக்க வேண்டுமென்றே பாண்டிய அரசகுலத்தார் நினைந்திருப்பர்.] அந்தச் சின்னத்தை அழிப்பதில் பாண்டியர் பெரும் முனைப்புக் கொள்வது இயற்கையே. அப்படி ஒன்று நடந்திருக்கிறது. அதை அகம் 149 இல் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பதிவு செய்திருக்கிறார். சற்று விரிவாகப் பார்ப்போம். 

பாலைத் திணையைச் சேர்ந்த அகம் 149 ஆம் பாட்டில்(100)வணிகத்தின் பேரில் செல்லவிருக்கும் பாண்டிநாட்டு தலைமகன் ஒருவன் இருவேறு காட்சிகளைத் தன் கண்முன்னே எண்ணி, தன் செலவைத் தவிர்க்கிறான். ஒரு காட்சி, அவன் போகவிருக்கும் சுரத்தின் கொடிய விவரிப்பாய் அமைகிறது. அக்காட்சியின் பின், “இப்படிப்பட்ட ஆளைக் கொள்ளும் வழியில் நான் சென்று பொருளீட்ட வேண்டுமா?” என்று தலைவன் தன் நெஞ்சை விளிக்கிறான். இன்னொன்று பரங்குன்றச் சுனையின் நீலமலர் போலச் செவ்வரிபடர்ந்த கண்களுடைய காதலியின் முகத்தோற்றம். இந்த இரு காட்சிகளால் அவன் செலவு அழுங்கிப் போகிறது. 

[பாட்டை விவரிக்கும் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பாண்டிநாட்டாராக இருக்கப் பெரும் வாய்ப்பு உண்டு. காரைக்குடிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார்பட்டியில் கண்டெடுத்த ஆறாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில் “எக்காட்டூர் கோன் பெருந்தச்சன்” என்ற ஒரு வாசகம் வரும்(101). எருக்காட்டூர் என்பது தான் எக்காட்டூராகப் பிழைபடப் பதிவுசெய்யப்பட்டதாக ஐராவதம் மகாதேவன் கருதுவார். எருக்கஞ்செடிகள் நிறைந்த காடு எருக்கங்காடு>எருக்காடு. இன்றைக்கும் அந்தப் பகுதியில் எருக்கஞ் செடிகள் மிகுந்து காணப்படும். உள்ளூர்த் தச்சனாய் இருந்தால் பிள்ளையார்பட்டியின் பழைய பெயர் எருக்காட்டூர் ஆகும். அதே பொழுது ஔவை துரைசாமியார் வேறு அடையாளஞ் சொல்லுவார்(102). எருக்காட்டூர் என்பது பழைய தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், குளிக்கரை இருவுள் (Rail) நிலையத்திற்கு மேற்கில் இருக்கிறது என்று அவர் சொல்லுவார். எருக்காட்டூரைச் சேர்ந்த “மணற்குன்று” என்னும் ஊரை “எருக்காட்டூர்ச் சேரிக்குப் பிடாகையான” எனத் திருக்கடவூர்க் கல்வெட்டுக்கள் (A.R. No.32 and 38 of 1906) குறிப்பதாக அவர் சொல்லுவார். எது தாயங்கண்ணனாரின் ஊர் என்பது மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.] 

தாயங்கண்ணனார் பரங்குன்றத்தை விவரிக்கும் போது “மதுரையின் மேற்கே மயிற்கொடி உயர்த்தப்பெற்று இடையறாமல் விழா நடக்கும் முருகனின் பரங்குன்றம்” என்று சொல்லுவார். மயிற்கொடியை விவரிக்கும் போது ”நெடுநல் யானை அடுபோர்ச் செழியனின் மீன்கொடி அண்மைக்காலத்தில் சேரனைச் சமரிற் (battle and not war) கடந்து, ”படிமம் வவ்விய” வெற்றியால் அசைந்ததை” ஒப்பீடாகச் சொல்லுவார். இந்த அடுபோர்ச் செழியன் உறுதியாக ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனல்லன்; அவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுமல்லன். வேறு யாரோவொரு செழியன். அவன் சேரன் மேற் கனன்று கொண்டிருந்த வெற்றிவேற் செழியனாய் இருக்கப் பெரும்வாய்ப்பு உண்டு. ஆழ்ந்து போவோம்.

அகம் 149 இன் படி, “சேரலனின் சுள்ளியம் பேரியாற்றில் பொன்கொணர்ந்து, கறியேற்றிச் செல்லும் யவனரின் கலங்கள் அடுத்தடுத்துப் போவதால் வெண்நுரை பொங்கிக்கொண்டேயிருக்கிறது. அப்பேற்பட்ட சிறப்புடைய முசிறித் துறைமுகத்தைச் சுற்றி வளைத்து சேரர்படையை நிலைகுலைய வைத்து, ஆற்றுள் நுழைந்து வஞ்சியிலுள்ள படிமத்தை தன் படையால் பாண்டியன் வவ்விக் கொண்டு போகிறான்.” அப்படியென்ன சிறப்பு அப்படிமத்திற்கு? சிலம்புக் காலத்தின் சூழ்க்குமம் அதிற்தான் இருக்கிறது.

[The Periplus of the Erythraean sea என்னும் நூலில், தொண்டியில் இருந்து கடற்கரையை ஒட்டி 480 ஸ்டேடியா கடந்து பின் ஆற்றிற்குள் நுழைந்து 20 ஸ்டேடியா போனால் முசிறித் துறைமுகம் வந்துவிடும் என்ற குறிப்புண்டு. இந்த ஸ்டேடியாவை ஏதென்சின் அட்டிக் ஸ்டேடியாவாகக் கொண்டால் 1 அட்டிக் ஸ்டேடியா = 0.185 கி.மீ என்றாகும். அதன்படி, தொண்டியில் இருந்து கடற்கரையை ஒட்டி 480*0.185 = 88.8 கி.மீ சென்று பின் ஆற்றிற்குள் 20*0.185 = 3.7 கி.மீ சென்றால் முசிறி வந்து சேரும். முசிறிப் பட்டணத்தில் இருந்து ஆற்றையொட்டிக் குறைந்தது 8/10 கி.மீ தூரத்தில் வஞ்சி மாநகர் இருந்திருக்கலாம். (நமக்கு உண்மைத் தொலைவு தெரியாது.)]

முசிறியை வளைத்தவன், சேரநாட்டைப் பிடிக்கவில்லை. வெறுமே படிமம் கவர இவ்வளவு தொலைவு கடல்வழியே போயிருக்கிறான். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், ஆங்கிலத்திற் சொல்வது போல் இது திடீரென்று பழிவாங்கும் தாக்குதல், தண்டனை கொடுக்கும் தும்பைப் போர் (punitive expedition). எந்தச் செழியன் படிமத்தைத் தூக்கிவர முற்படுவான்? சேரனை ஏளனமாகப் பேசிய வெற்றிவேற் செழியன் அன்றி அது வேறு யாராய் இருக்க முடியும்? அது கண்ணகியின் படிமம் என்றி வேறேதாக இருக்க வாய்ப்புண்டு? [உரையாசிரியர்கள் பொற்படிமம் என்று சொல்லுவார்கள். ஆனால் அகம் 149 ஆம் பாட்டில் பொன் என்னும் சொல்லாட்சி எங்கணும் கிடையாது. படிமம் மாழைப் படிமமா, கற் படிமமா என்று கூட அகம் 149 சொல்லவில்லை. நம்முடைய ஊகமாய் அது கற்படிமம் என்று சொல்லத் தோன்றுகிறது.] 

வெற்றிவேற் செழியன் நெடுநாட்கள் கொற்கையில் இருந்தவன். கொற்கையில் இருந்து முத்துக் குளிப்பதற்கும், மீன்பிடிப்பதற்கும் அந்தக் காலத்தில் இந்தக் காலம் வரை, பருவகாலத்தை ஒட்டி பாண்டிக் கடற்கரையில் இருந்து புறப்பட்டு வஞ்சி வரை (இற்றைக் கொச்சின் வரை) வந்து போவது மீனவர் பழக்கம். இந்த நாவாய், படகுகளுக்கு நடுவில் ஒரு அதிரடிப்படையை அனுப்புவது அப்படியொன்றும் கடினமான செயலல்ல. நிலத்தின் வழியே படையை அனுப்பினால் அது பெரும் போரில் வந்து முடியும். அதைத் தவிர்த்து, பாண்டியன் அதிரடிப் படைகள் கடல்வழியே கரையொட்டிப் போய் முசிறியில் ”அருஞ்சமம்” நடத்தி முடிவில் வஞ்சினம் தீர்க்கும் வழியாய், ”படிமத்தை” வவ்விக் கொண்டு போவதே எளிதானது, இத்தகைய அதிரடிச் சமரைத்தான் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் அகம் 149-இற் பதிவு செய்கிறார். 

”மீன்கொடிகள் சட்டென்று பறந்து படிமத்தை விரைவாய்க் கவ்விக் கொண்டுவந்துவிட்டன. அதைப்போலப் பரங்குன்றத்து மயிற்கொடிகள் ஆடுகின்றன” என்று ஒப்புமை சொல்லுகிறார். 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

தாயங்கண்ணனார் பாடல் வெற்றிவேற் செழியனைக் குறித்தவை என்று எப்படிச் சொல்ல முடிகிறது? - என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது. அவர் இன்னொரு அரசனையும் தம் வாழ்நாளில் பாடியிருக்கிறார். அவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பவனாவான். நினைவிருக்கிறதா? சிலம்பிற் பதிவு செய்தபடி செங்குட்டுவனின் மைத்துனன் ஒரு கிள்ளிவளவன்(103,104,105). ஒன்பது சோழ இளங்கோக்களோடு போரிட்டு அவனை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிவைத்தது செங்குட்டுவன் தான். இவன் உறந்தை யரசன் என்பது மாறோக்கத்து நப்பசலையார் பாட்டால் (39) விளங்குகிறது. (இவனே பின்னால் சேர அரசிற்கு எதிராகப் படையெடுக்கும் காலம் ஒன்றுண்டு. எனினும் மாறோக்கத்து நப்பசலையார், ”இமயத்தில் வில் பொறித்த சேரனை வென்றவனே” என்று சோழனைப் பாராட்டுவார்(106).மாறோக்கம் என்பது கொற்கைக்கு அருகில் உள்ள சிற்றூர். இவர் பாண்டிநாட்டுப் பெண்புலவர். 

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்திலும், அவன் மகன் இராசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காலத்திலும் இருந்த மாந்தரஞ்சேரல் இரும்பொறையை (இவன் சிலம்புக் காலத்தில் அகவை குறைந்தவனாய் இருந்திருக்கவேண்டும்.)சிலம்பு தெளிவாகக் குறிப்பிடுகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மாந்தரஞ்சேரல் இரும்பொறை காலத்தில் இருந்திருக்கிறான். இந்த நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கோ, வெற்றிவேற் செழியனுக்கோ மகனாய் இருக்க வேண்டும். இத்தனை அரசர்களின் சமகாலம் முறைப்படி வெகு எளிதாகப் பொருந்துகிறது. அதைப்பற்றி விவரிக்கப் போனால் வேறு எங்கோ இழுத்துச் செல்லும்; எனவே சிலம்பிற்கு மீண்டும் வருவோம். 

சிலம்பு என்னும் காப்பியம் பல ஆண்டுகள் கழித்து எழுந்திருக்குமானால் படிமம் வவ்விய செய்தியை அதுவே பதிந்திருக்கும். கதையின் பாங்கும் பெரிதும் மாறிப் போயிருக்கும். அதை இளங்கோ பதியாத காரணத்தால், அந்தக் குறிப்பிட்ட நிகழ்வு நடப்பதற்கு முன்னேயே காப்பியம் எழுந்திருக்கவேண்டும் என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லலாம். பெரும்பாலும் குட்டுவன் சேரலின் அவையில் சிலம்புக் காப்பியம் அரங்கேறியிருக்கலாம். குட்டுவனுக்குப் பின் அவன் பங்காளியான மாந்தரஞ்சேரல் இரும்பொறை சேரரின் கூட்டரசை ஆண்டிருக்கிறான். அவன் காலத்திற்றான் ஐங்குறுநூறு தொகுப்பிக்கப்பெற்றது என்ற குறிப்புமுண்டு(107). [அன்றி மாந்தரன் சேரல் இரும்பொறையின் அவையிலோ எழுந்திருக்கலாம்.] 

குட்டுவன் சேரல் தன் தந்தையின் புகழ் விளங்க வேண்டுமென்று ”சிலப்பதிகாரம்” என்ற இந்நூலுக்கு ஆதரவு அளித்திருக்கலாம். பேரரசுச் சோழர் காலத்தில் குலோத்துங்கனின் பிறங்கடைகள் ஒட்டக்கூத்தரை வைத்து தங்கள் முன்னோருக்கு உலாப் புகழும், பரணிப் புகழும் பாடவில்லையா? இது போன்ற புகழ்ப்பாடுதல்கள் உடனே நடந்துவிடும்; நாட்பட்டு நடக்கா. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதும், இரும்பு சூடாய் இருக்கும் போதே அடிப்பதும் தான் உலகியல் வழக்காகும்.

எனவே கண்ணகிப் படிமத்தை வவ்வியது வெற்றிவேற் செழியன் தான் என்று உறுதி செய்ய முடிந்தால் சிலம்பு எழுந்தது கதை நடந்து முடிந்த ஒருசில ஆண்டுகளில் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. 

இன்னொரு கேள்வி எழுகிறது. வவ்விய படிமம் எங்கே போயிற்று? அதனாற்றான் கொடுங்களூர் பகவதி கோயிலில் மூலவள் இல்லாது இன்றும் கருவறை நான்கு பக்கமும் அடைபட்டிருக்கிறதா?(108)அந்தப் பகவதி கோயிலுக்குள் இன்னொரு சூழ்க்குமம் இருக்கிறதோ? என்று அதை அவிழ்ப்போம்? 

---------------------------------- 
[இந்த ஆய்வு பற்றிய சுருக்கத்தை, 2007 நவம்பரில் அமெரிக்க ஒன்றிய நாடுகள், தென்கரோலினா மாநிலத் தலைநகரான சார்ல்சுடனில் ஒரு நாள் மாலை, அங்கிருந்த நூலகம் ஒன்றில் எனக்காகக் கூடியிருந்த சில தமிழன்பர்களிடையே உரையாட்டில் சொல்லியிருந்தேன். அந்த உரையாடலை ஏற்பாடு செய்த நண்பர் சுந்தரவடிவேலுக்கும், உரையாடலில் பங்கு கொண்டோருக்கும் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். அங்கு சொன்னதற்கும் மேல் விரித்து, கூடிய மட்டும் சான்றுகளுடன் இங்கு சொல்ல முற்பட்டிருக்கிறேன்.]

எடுகோள்கள்:

95. பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி ”பண்டைய தமிழக வரலாற்றின் மீது ஓர் ஆய்வொளிப் பாய்ச்சல்” பனுவல், தொகுதி 1, இதழ் 1, நவம்பர் 2008, பக்கங்கள் 36-66. 
96. பேரா., க.நெடுஞ்செழியன் ”ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்”, மனிதம் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி - 21, 2002
97. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India”, pp 64-75, Munshiram Monoharlal Publishers Pvt. Ltd. 2005.
98. முனைவர் இரா. மதிவாணன், “சிலம்பின் காலக் கணிப்பு” சேகர் பதிப்பகம், சென்னை 78, 2005/
99. ஆங்கு நின்று அகன்றபின் அறக்கோல் வேந்தே
ஓங்குசீர் மதுரை மன்னவற் காண
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீரியல் வெண்குடைக் காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவில் தலைக்கோல் ஆங்குக்
கயந்தலை யானையிற் கவிகையிற் காட்டி
இமயச் சிமையத்து இருங் குயிலாலுவத்து
உமையொரு பாகத்து ஒருவனை வணங்கி
அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து
தவப்பெரும் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதியழற் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது என்றனன் போர்வேற் செழியன் 
நடுகற் காதை 96-107
100.சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையில்
புல் அரை இருப்பைத் தொள்ளை வான்பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள் இடைப் போகி நன்றும்

அரிதுசெய் விழுப்பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி என் நெஞ்சே! சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளம்கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அருஞ்சமம் கடந்து, படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய 

ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.
அகநானூறு 7-16, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
101. Iravatham Mahadevan, “Early Tamil Epigraphy” pp 474-475, Crea-A, Chennai India, and The Department of Sanskrit and Indian Studies, Harvard University, U.S.A., 2003 
102. ஔவை துரைசாமிப் பிள்ளை விரிவுரை, “புறநானூறு 201-400 பாட்டுக்கள்” பக்கம் 453, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1972.
103. நீடு வாழியரோ நீள்நில வேந்தென
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநாடு அளிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்
நீர்ப்படை காதை 116-123
104. சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக்
கோயில் இருக்கைக் கோமகன் ஏறி
வாயிலாளரின் மாடலற் கூஉய்
இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர்
வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோற் தன்மை தீதின்றோ என
நீர்ப்படை காதை 156-161
105. ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச்செரு வென்று
நடுகற் காதை 116-117
106. ஓங்கிய
வரையளந்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு 
இமயஞ் சூட்டிய வேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டுநின் 
பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே
புறம் 39. 13-18
107. அ. பாண்டுரங்கன், “தொகை இயல்” தமிழரங்கம், புதுச்சேரி 605008, 2008.
108. முனைவர் வி. ஆர். சந்திரன், “கொடுங்கோளூர் கண்ணகி” (தமிழில் ஜெயமோகன்), யுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை, 2005 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பிற்குப் பின்வந்த வரலாற்றுச் செய்திகள் - 1

 
சிலம்பின் காலத்தை கி.மு.80க்குச் சற்றுபின் என்று வரையறுத்த போது, வெற்றிவேற் செழியன் வஞ்சியின் மேல் அதிரடித் தாக்குதல் செய்து, பத்தினித் தெய்வத்தின் படிமத்தை வவ்விய செய்தியைச் சொல்லியிருக்கக் கூடிய, அகம் 149 ஆம் பாடலைப் பார்த்த நாம் இன்னொரு இலக்கியமான நற்றிணையில் 216 ஆம் பாடலையும் பார்க்கவேண்டும். அதிலும் சிலம்பிற்குத் தொடர்பான செய்தியொன்று வருகிறது. அதையும் பலர் தனியாகப் பொருத்தமில்லாது பார்த்திருக்கிறார்கள். நற்றிணை 216 ஆம் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன். 

துனிதீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்;
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கைபோல் உதவி,
நம் உறு துயரம் களையார் ஆயினும்,
இன்னாது அன்றே, அவர் இல் ஊரே;
எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் துழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒருமுலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே

இதை எழுதியவர் மதுரை மருதன் இளநாகனார். மேலே வரும் நற்றிணைப் பாடலின் திணை: மருதம் என்பதாகும். மதுரையில் உள்ள பரத்தை ஒருத்தி, தலைமகன் தன்னை நாடி வாராவிடத்து, தலைமகன் பெருமையைத் தலைமகளுக்குச் சுற்றிவளைத்துத் தெரிவிக்கும் பாங்கில் பாணனிடமோ, விறலியிடமோ சொல்லியதாய் இந்தப் பாடல் அமையும். 

[பாடலின் உள்ளே, “நீ நினைப்பது போல் நான் ஒன்றும் காசுக்கு உடன்படும் விலைமகள் அல்லள்; அவரும் விலைமாதரை நாடுங் கூட்டத்தைச் சேர்ந்தவரில்லை. இப்பொழுது அவர் என்னோடு சேர்ந்திருக்கவில்லை. அவரைப் பிரிந்து நானும் தவிக்கிறேன். என் துயரைக் களையாது அவரிருந்தும், அவர்மேல் என்னன்பு சற்றும் குறையவில்லை. எப்பேற்பட்ட துன்பம் வந்தாலும் வேண்டப்பட்டவர் தான் துன்புற்றுக் கலங்குவர். இப்பொழுது நான் கலங்குகிறேன்.”என்ற இறைச்சிப்பொருளை உள்வைத்து வெளியே வேறொரு பொருட்பாட்டை வைத்து அந்தப் பாட்டுப் போகும். அப்படிச் சொல்லும்போது தான் ஒருமுலையறுத்த திருமாவுண்ணி பற்றிய செய்தி வரும். முதலில் பாட்டின் வெளிப்படைப் பொருட்பாட்டைப் பார்ப்போம். 

”புலவிநீட்டம் தீர்க்க முனையும் கூட்டத்தோடு அவர் சேரார் எனினும், காணத்தக்க அவரைக் காணும்படிக்கு வாழ்தல் இனிதேயாகும். கண்பெறும் துன்பத்தை சட்டென்று கை விலக்குதல் போல நாமுற்ற துயரத்தை அவர் களையாரெனினும், அவர் இல்லாத இவ்வூர் இனிமையற்றது. நெருப்பாய்ச் சிவந்த வேங்கைக் கடவுளைக் (முருகனைக்) காக்கும் கோழியின் கூவொலி நிறைந்த காவற்பரணுள்ள களத்தில், அயலார் மனங்கலங்கும்படி தன் ஒருமுலையை அறுத்த அந்த(மாநிறக்குட்டை)த் திருமாவுண்ணியின் அவலத்தை அனைவரும் கேட்டோர் என்றாலும், வேண்டப்பட்டோர் தவிர்த்து மற்றோர் கலங்கமாட்டார் அன்றோ?” என்று வெளிப்படைப் பொருள் அமையும்.

இந்தப் பரத்தை மதுரையில் வாழ்ந்த சாத்தார (சாதாரண) இற்பரத்தை. சோழநாட்டுப் பெண்ணொருத்தி மதுரைக் கொலைக்களத்தில் ஒருமுலை அறுத்தசெய்தி இவளுக்குத் தெரிய வந்திருக்கிறது. [கண்ணகி ஒருமுலை அறுத்தபோது மதுரை முற்றிலும் அழிந்ததென்றே சிலம்புவழி உயர்வு நவிர்ச்சியாய்ப் பலரும் சொல்கிறார்கள். அது முற்றிலும் இல்லை போலும். அரண்மனையையொட்டிய சில பகுதிகளாய் மட்டுமே அழிந்திருக்கலாம், மதுரை என்ற பெருநகரம் மீண்டும் அந்தச் சாம்பலிலிருந்து எழுந்திருக்கிறது, மீண்டும் மீண்டும் அக்கதை பொதுமக்களால் பல்வேறு கோணங்களில் உசாவப் பட்டிருந்திருக்க வேண்டும் என்பதை இந்தப் பாட்டின் வழி குறிப்பாலுணர்கிறோம். ஏனென்றால் பொதுமக்களில் ஒருத்தியிடம் இருந்து எழுந்து எதிர்வினை இது. “ஊரில் பார்ப்பனரையும், குழவிகளையும் ஒரு சிலபெண்டிரையும் விட்டுவிட்டு மற்றுள்ளோரையெல்லாம் அவள் எரிக்கச் சொன்னாள்” என்று சில ஆய்வாளர் சொல்லுவது தவறான புரிதலாய் இருக்கக் கூடும். சிலம்பை இந்தவொளியில் மீண்டும் நாம் படிக்கவேண்டும். சிலம்பைத் தவறாகவே நம்மிற் பலரும் உணர்ந்திருக்கிறோம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

கண்ணகி மாநிறம் என்ற குறிப்பு இந்தப் பரத்தைக்குத் தெரிந்திருக்கிறது. அதோடு கண்ணகி அவ்வளவு உயரமில்லாது, சற்றே குட்டையாய் தோற்றியிருக்கலாமோ என்று ஐயுற வேண்டி இருக்கிறது. கண்ணகி ஒருமுலையறுத்தபோது ”அவள் கொற்றவையோ? தெய்வவடிவோ?” என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டு திரு என்ற அடைமொழி வந்ததோ, என்னவோ? “கருத்த குட்டைச்சி” என்று கண்ணகியைப் பற்றிய ஒரு விவரிப்பு சாத்தாரப் பெண்ணுக்கு ஏற்படக்கூடியதே. நாட்டுப்புறங்களில் சட்டென்று எழும் எந்த விவரிப்பும் உயரம், வண்ணம் பற்றியே அமையும். உண்ணி என்ற சொல் தெண்பாண்டிநாட்டில் இன்றும் உள்ளது தான். உள்நி>உண்ணியாகும். உள்ளுதல் = குறைதல், சிறிதாததல், சுருங்குதல் என்ற பொருட்பாடுகளைக் காட்டும். உள்ளத்தி>ஒள்ளத்தி என்ற சொல் கொஞ்சமாக, குறைவாக, சிறிதுபோல் என்ற பொருளில் சிவகங்கை மாவட்டத்தில் வழங்கும் சொல். “எனக்கு ஒள்ளத்தியோண்டு அந்த மாவுருண்டையில் பிட்டுக் கொடுங்க” “என்ன இவ ஒள்ளத்தியா ஒடுங்கி இருக்கா? இவளுக்கும் ஓங்கியவனுக்கும் சரிப்பட்டு வருமா?” இப்படிப் பல்வேறு வழக்காறுகள் உண்டு.

கோவலனின் கொலைக்களம் மதிலின் காவற்பரணுக்கு அருகில் தான் இருந்தது என்பதைச் சிலம்பின் வழி அறிகிறோம். காவற்பரணுக்கு அருகில் கோழிகள் உலவுவதும், அவை கொக்கொக்கொக் என்று இடைவிடாது கரட்டிக் கூவுவதும் இங்கு விவரிக்கப் படுகிறது. முருகன் சேவற்கொடியோன் தானே? [சூரபன்மனை வென்ற போது சூரன் வேங்கை மரம், கோழி, மயில் என மூன்று வகையில் உருமாறியதாகத் தொன்மம் உண்டு. அதுவரை யானையைத் தன் ஊர்தியாகக் கொண்ட முருகன் சூரசங்காரத்திற்கு அப்புறம் மயிலை ஊர்தியாகவும், தன் காப்பிற்கு அறிகுறியாக கோழியைக் கொடியாகவும், வேங்கை மரத்தைக் காவல்மரமாய்க் கொண்டதாகத் தொன்மக்கதை சொல்லும். நெருப்பைப்போற் சிவந்த பூக்களைக் கொண்ட வேங்கை மரத்தடி முருகன் நிற்கும் இடம் என்று முதியோர் சொல்லுவார்கள்.. 

முன்னால் மார்ச்சு 2009 இல் கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் என்ற தொடரை எழுதியபோது, நண்பர் நா. கணேசனின் பல கருத்துக்களுக்கும் மறுமொழி சொல்லி, மூன்று கருத்துக்களுக்கு மட்டும் மறுமொழி சொல்லாது நான் விட்டுப்போனதால், அத்தொடர் முடிவுறாது நிற்கிறது. அதில் ஒரு கருத்து இந்தத் திருமா உண்ணி பற்றியது ”திருமா உண்ணியாய் நற்றிணை 216-ல் கண்ணகி வருகிறாள். உண்ணி < நுண்ணிய (Cf. உண்ணி கிருஷ்ணன்) என்பது மலைநாட்டு வழக்கு. இன்னலெ < நென்னல் என்பது இன்றைய மலையாளம்” என்று நண்பர் நா. கணேசன் சொல்லுவார். 

பலரும் இத்திருமாவுண்ணியையும், சிலம்புக் கண்ணகியையும் வெவ்வேறாகவே பார்ப்பார்கள். சிலம்பை கி.பி.177க்கு அப்புறமாய்த் தள்ளியவர்களிடம் ”இப்படி ஒரு பாடல் நற்றிணையில் வருகிறதே” என்று சொன்னால் ”ஒருமுலை குறைத்த திருமாவுண்ணியின் கதை தனிக்கதை, அந்தக் கதையை கண்ணகியின்மேல் ஏற்றிவிட்டார்கள், இருவரும் வெவ்வேறு” என்று சமதானம் சொல்லுவார்கள். நல்லவேளை நா.க. திருமாவுண்ணியை கண்ணகியென்றே சொல்லிவிட்டார். என்னைப் பொறுத்தவரை திருமாவுண்ணியும், கண்ணகியும் ஒன்றே என்னும் அடையாளத்தில் எந்த மறுப்பும் கிடையாது ஒருமுலை குறைத்தல் என்பது தமிழர் வரலாற்றில் இருமுறை நடந்திருக்க வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு. இரண்டும் ஒரே நிகழ்வைத்தான் வெவ்வேறு கோணங்களிற் குறித்திருக்க வேண்டும். அவற்றை எப்படிப் பொருத்துவது என்பதிற்றான் சூழ்க்குமமே அடங்கியிருக்கிறது.

திருமாவுண்ணி, கண்ணகி என்ற இருவரையையும் ஒருவராக்குவதில் ஒருசில வரலாற்று நடப்புகளும் நமக்கு உதவி செய்கின்றன. மதுரை மருதன் இளநாகனார் சங்க இலக்கியத்தில் அதிகம் பாடல் பாடியவர்களில் (பாடல் அடிகள் இல்லை; பாடல் எண்ணிக்கை. 43 பாடல்கள்.) ஒருவராவார். இவர் அகநானூற்றில் 23 பாடல்களும் (59, 77, 90, 131, 220, 255, 269, 297, 312, 343, 368. 34, 104, 121, 184, 193, 206, 245, 283, 358, 365, 380, 387) குறுந்தொகையில் 4 பாடல்களும் (77, 160, 279, 367), நற்றினையில் 12 பாடல்களும் (39, 216, 341, 21, 103, 194, 283, 290, 302, 326, 362, 392) பாடியிருக்கிறார். கூடவே புற நானூற்றில் 52, 55, 138, 139, 349 ஆம் பாடல்களைப் பாடியிருக்கிறார். 

52 ஆம் புறப்பாடல் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியைப் பாடியது: பாண்டியன், வழுதி என்ற பட்டங்களும், கூடகாரமும் தெளிவாக இவனை மதுரையில் ஆண்டவனாகக் காட்டிவிடுகின்றன. (வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்) என்ற பாடலின் வரியால் கூடல்நகரத்தின் மருதந்துறை பேசப் படுகிறது. 

55 ஆம் புறப்பாடல் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடியது. கொற்கையில் இருந்த பாண்டியருக்கு திருச்செந்தூரின் மேல் ஒரு தனிக்கவனம் இருந்திருக்கவேண்டும், இவன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியின் சமகாலத்தவனாக, பங்காளியாக, இருந்திருக்கவேண்டும்.

138, 139 ஆம் புறப்பாடல்கள் இரண்டும் நாஞ்சில் வள்ளுவன்மேற் பாடப்பட்டவை. இவன் சேரனுக்கு அடங்கிய குறுநில மன்னன். தென்பாண்டி நாட்டிற்கு நாஞ்சில் நாடு அண்மையானது. 

349 ஆம் புறப்பாடல் பெருஞ்சிக்கில் கிழான் மகளைச் சோழனொருவன் பெண்கேட்டதை ஒட்டிப் பாடியது. இவன் புகார்ச்சோழனாய் இருக்கலாம். சிக்கில் புகாருக்கு மிக நெருங்கியது. உறையூர்ச் சோழன் நாகநாட்டிற்குள் போய்ப் பெண்கேட்டு மருட்டியிருக்க முடியாது. இப்புகார்ச்சோழன் பெயர் தெரியவில்லை. 

இவ்வரசர்கலின் சமகாலத்தில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உறையூரில் இருந்து ஆண்டிருக்கிறான். ஏனென்றால் ஐயூர் முடவனார் என்ற புலவர் சம காலத்தில் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பாடியிருக்கிறார். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தான் பெரும்பாலும் உறையூர் அரியணையில் ஆட்சிக்கட்டிலிற் செங்குட்டுவனால் ஏற்றப்பட்டவன் ஆகலாம் என்று “சிலம்பின் காலம்” என்ற கட்டுரைத்தொடரில் அறிந்தோம். மருதன் இளநாகனாரின் இப்பாடல்கள் எழுந்த காலம் சிலம்பு எழுந்து 25 ஆண்டுகளுக்குள் இருந்திருக்கவேண்டும். (ஒரு தலைமுறைக் காலம் என்பது 25 ஆண்டுகள்.) அப்படியானால் மருதன் இளநாகனார், ஐயூர் முடவனார், கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன், இலவஞ்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நாஞ்சில் வள்ளுவன் (இது பட்டப்பெயர், இயற்பெயரல்ல) ஆகியோரின் காலம் கி.மு.50 ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சிலம்பிற்குப் பின்வந்த வரலாற்றுச் செய்திகள் - 2

 
மருதன் இளநாகனாரின் ஒருசில பாடல்கள் வரலாற்றுச் செய்திகளையும் நமக்குச் சொல்கின்றன. அவற்றை இங்கு பதிவு செய்கிறேன். 

1. முதலில் நாம் பார்ப்பவை அகநானூறு 59 ஆம் பாடலின் 3-18 வரிகளாகும். 

- வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தந்தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல
புந்தலை மடப்பிடி உணீஇயர், அம் குழை
நெடுநிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
படிஞிமிறு கடியும் களிறே - தோழி
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை
இன்தீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த
தண்நறுங் கழுநீர்ச் செண்இயற் சிறுபுறம்
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய்நாட்டு
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே

இதில் முதற் செய்தி தொழுனையாற்றில் (யமுனையாற்றில்) ஆயர்பாடி மங்கையரின் சேலைகளைக் கண்ணன் எடுத்து ஒளித்துவைத்து, பலராமன் அந்தப் பக்கம் வரும்பொழுது மரக்கிளையைக் கீழே அழுத்தி மங்கையரின் நக்கனத் தோற்றம் வெளித்தெரியாதவாறு மறைத்தது பற்றியாகும். அதாவது கி.மு.50 இலேயே கண்ணனின் விலையாட்டுக்களைச் சொல்லும் பாகவதச் செய்திகள் மிகுந்த விவரிப்போடு தென்புலத்து மக்களுக்குத் தெரிந்திருக்கின்றன. கண்ணன் பற்றிய செய்திகள் சிலம்பில் தெரிந்ததில் வியப்பில்லை, சங்க இலக்கியத்திலும் கூடக் கி.மு.50 இல் அவை விரிவாகத் தெரிந்திருக்கின்றன. 

இதில் இரண்டாம் செய்தி ”அந்துவன் பாடிய சந்து கது எழு நெடுவரை” என்னும் வரியில் அடங்கியிருக்கும் முகன்மையான செய்தியாகும். முருகனைப் பற்றி பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்து (=இசை) அப்படியே பரங்குன்றைப் பற்றியெழுகிறதாம் (கதுத்தல், கதுவுதல் = பற்றுதல்). அது என்ன அந்துவன் பாடிய இசை? - என்ற கேள்வி சட்டென்று நமக்குள் எழுகிறது. இதையறியப் பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்துள் நாம் போகவேண்டும். பரிபாடலுக்குள் செவ்வேளைப் பற்றியும், வையை பற்றியும் நல் அந்துவனாரின் இசைப் பாடல்கள் இருக்கின்றன. அந்த அந்துவனார் என்னும் இசைப்புலவர் மருதன் இளநாகனாருக்கு நன்றாகத் தெரிந்த புலவர் போலும். பரங்குன்றைப் பாடியவர்களுள் இவர் பலராலும் அறியப்பட்டவர் போலும்.

பரிபாடலில் மொத்தம் 70 பாடல்கள் இருந்தன என்று வெண்பா சொல்லும்.

திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று - மருவிளிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்

அதாவது திருமாலுக்கு 8 உம், செவ்வேளுக்கு 31 உம், காடுகிழாளுக்கு (கொற்றவைக்கு) 1 உம், வையைக்கு 26 உம், மதுரைக்கு 4 உம் பாடப்பட்டதாய் இந்த வெண்பா சொல்லுகிறது. 70 மூலப்பாடல்களில் 33 - ஏ முழுதாகவோ (22), சிதைந்தோ (11) கிடைக்கப் பெற்றிருக்கின்றன. வெவ்வேறு நூல்களில் பரிபாட்டென்று திரட்டப்பட்ட, சிதைந்து போன 11 பாடல்களைப் பரிபாடற் திரட்டு என்று சொல்லுவார்கள். கிடைத்தவற்றுள் திருமாலுக்கு 7 பாடல்களும், செவ்வேளுக்கு 8 பாடல்களும், வையைக்கு 10 பாடல்களும், மதுரைக்கு 6 பாடல்களும், இன்னதென்று தெரியாது 2 பாடல்களும் கிடைத்ததாய் அண்மைத் தொகுப்பாசிரியர்கள் சொல்லுகிறார்கள். [மேலே கூறிய வெண்பாவோடு பொருத்திப் பார்த்தால், மதுரை பற்றிய பாடல்களிற் கணக்குக் கூடியிருக்கிறது, மற்றவற்றில் கணக்குக் குறைந்திருக்கிறது.] கிடைத்த பாடல்களுள் 11 பாலையாழிலும் (பாலையாழ் என்பது தொல்காப்பியக் காலப் பெயர், இது சங்க காலத்தில் அரும்பாலையாகும். கருநாடக சங்கீதத்தில் சங்கரா பரணம் என்றாகும். எல்லாத் தமிழைப்பண்களுக்கும் வடமொழிப் பெயர்தானே அராகம் என இப்பொழுது கொடுத்திருக்கிறார்கள்). 5 நேர்திறப் பண்ணிலும் (இது அக்காலத்தில் வளர் முல்லை, இக்காலத்தில் சிவப்பிரியா), 4 காந்தாரப் பண்ணிலும் (சங்க காலத்தில் செவ்வழிப் பாலை; அண்மைக்காலத்தில் இரு மத்திமத் தோடி) பாடப்பட்டவையாகும். இன்னும் இரு பாடல்களுக்குப் பண்கள் தெரியவில்லை. 

இவற்றில் 19 பாடல்களுக்கு எழுதியோர் பெயர்கள் தெரிகின்றன, அவருள் கடுவன் இளவெயினனார் 3 பாடல்களும், நல்லந்துவனார் 3 பாடல்களும், குன்றம்பூதனார் (இப்பெயர் குறும்பூதனார் என்றும் பிழைபட எழுதப்பட்டிருக்கிறது) 2 பாடல்களும், நல்லழிசியார் - 2 பாடல்களும், நல்வழுதியார் (நல்லெழுதியார் என்றும் பிழைபட எழுதப்பட்டுள்ளது. இவர் ஒரு பாண்டிய மன்னராய் இருந்திருக்கலாம்.) - 2 பாடல்களும், இளம்பெருவழுதி (இவரும் ஒரு பாண்டிய மன்னராய் இருக்கலாம்.)- 1 பாடலும், கரும்பிள்ளைப் பூதனார் - 1 பாடலும், கீரந்தையார் - 1 பாடலும், கேசவனார் - 1 பாடலும், நப்பண்ணனார் - 1 பாடலும், நல்லச்சுதனார் - 1 பாடலும், மையோடக் கோவனார் - 1 பாடலும் எழுதியிருக்கிறார்கள். [இளம்பெருவழுதி, நல்வழுதியார் என இரு பாண்டியரும் ஒருவர் தானோ என்ற ஐயமுண்டு.] 

இதே போல 19 பாடல்களுக்குப் பண்ணமைத்தோர் பெயர்கள் தெரிகின்றன. அவருள் மருத்துவன் நல்லச்சுதனார் (சில பாடல்களில் வெறுமே நல்லச்சுதனார் என்றும் இவர் குறிக்கப்படுகிறார். ஆய்ந்து பார்த்தால் ஒருவராக இருக்கவே வாய்ப்புண்டு) - 10 பாடல்களும், நன்னாகனார் (வெறுமே நாகனார் என்ற குறிப்பும் உண்டு) - 3 பாடல்களும், பெட்டன் நாகனார் - 2 பாடல்களும், கண்ணாகனார் (கண்ணனாகனார் என்ற பாடமும் உண்டு)- 2 பாடல்களும், பித்தாமத்தர் - 1 பாடலும், கேசவனார் - 1 பாடலும் பண்ணமைத்திருக்கிறார்கள். பொதுவாக எந்தெந்த பாடலாசிரியர், பாணர், சமகாலத்திற் தமக்குள் உறவுகொண்டனர் என்பதை வலைப்பின்னற் தேற்றத்துள் (network theory) வரும் அண்ணக மடக்கை (adjacency matrix) வழி அலசிக் கண்டுபிடிக்க இயலும், அதன்படி (1, 7,14,22) என்ற 4 பாடல்கள் தவிர்த்து மற்ற 18 உம் சம காலத்தவை என்று அறிகிறோம். மேற்குறிப்பிட்ட நாலும் இத் தொகுப்பின்போதோ, முந்தியோ பாடப்பட்டிருக்கலாம்; பரிபாடற் தொகுப்பு பெரும்பாலும் சமகாலத்தில் எழுந்திருக்கலாம். 

இனி மருதன் இளநாகனாரின் அகம் 59 ஆம் பாடலுக்கு வருவோம். அந்துவனார் பாடிய செவ்வேள் பற்றிய பாடல் ஒன்றுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது. கிடைக்காதுபோன பாடல்களில் செவ்வேள் பற்றி அதிகம் பாடல்களை அந்துவனார் பாடினாரோ என்னவோ? இளநாகனாரின் காலம் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலம் என்று முந்தையப் பகுதியில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். அதையொட்டி, இன்னொரு கொடிவழி (பரம்பரை) கடந்திருக்கும் போது (அதாவது கிள்ளிவளவனுக்கு 50 அகவையாகும் போது) மருதன் இளநாகனார் இருந்திருப்பார் என்று கொள்ளலாம். இதன்வழி நல்லந்துவனார் காலமும் குறைந்தது அதே காலமாய் இருந்திருக்க வேண்டும். 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

எனவே சிலம்புக் காலத்தில் இருந்து 25 ஆண்டுகள் கழித்து கி.மு.50 இல் பரிபாடல் தொகுக்கப் பட்டிருக்கலாம். பெரும்பாலும் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி காலத்தில் இது நடந்திருக்கலாம். உரைகாரர்கள் மூலம் அகநானூறும், குறுந்தொகையும் பன்னாடு தந்தான் மாறன் வழுதி காலத்தில் தொகுக்கப் பட்டன என்று அறிகிறோம். பரிபாடலைத் தொகுப்பித்ததாய் நாம் ஊகிக்கும் மாறன் வழுதியும், அகநானூறு, குறுந்தொகை தொகுத்த மாறன் வழுதியும் ஒரே அரசனாய் இருக்கக் கூடுமா என்பது ஆய வேண்டியதாகும். 

2. இனி அகம் 77 இல் 7-12 ஆம் வரிகளைக் காணுவோம். 

கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்
உயிர்திறம் பெயர, நல் அமர்க் கடந்த 
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர
செஞ்செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின், 

இந்த வரிகள் அந்தக் காலத்தில் நடந்த குடவோலை முறையை நமக்குத் தெரிவிக்கின்றன. பேரரசுச் சோழர், பல்லவர் காலத்துக் குடவோலை முறை பற்றிய உத்தரமேரூர் கல்வெட்டுக்களைப் பற்றிப் பெருமை கொள்ளும் நாம் அதற்கு முந்தைய, கி.மு.50 அளவான குடவோலை முறையை அகம் 77 தெரிவிக்கிறது என்ற செய்தியை மறந்து விடுகிறோம். நான் அறிந்தவரை ”தென்புலத்தில் தேர்தல்கள் எப்படி நடந்தன?” என்பதைக் குறிக்கும் முற்காலத்து முதன்மையான சான்று இதுதான். இனிப் பாடலுக்கு வருவோம்.

பாடல் பாலைத்திணையைச் சேர்ந்தது. வணிகத்தை நாடி அருஞ்சுரத்தைக் கடக்க விரும்பிய தலைமகன் போகும் வழியில் தான் காணப்போகும் கழுகுகளின் செயலை எண்ணிப் பார்க்கிறான், காதலியின் முகத்தையும் எண்ணிப் பார்க்கிறான், மனங்கலங்கித் தான் பிரிந்து செல்ல முற்படுவதைக் கைவிடுகிறான். பாடலின் உள்ளே அருஞ்சுரத்தின் கொடுமையின் விவரிப்பு இப்படி அமைகிறது. 

அருஞ்சுரத்தின் கொடிய சூடு தாளாது ”இனி மேற்கொண்டு நகரமுடியாது” என்று இறந்து போனவர் உடம்பு சுரத்தின் பாதையிற் கிடக்கிறது. எங்கிருந்தோ செந்தலைக் கழுகு (Red-headed Vulture, Sarcogyps calvus) பறந்து ஓடிவருகிறது. உயிரற்றுக் கிடக்கும் உடம்பின் வயிற்றைக் குத்தி உள்ளிருக்கும் குடரை வெளியே இழுத்துப் போடுகிறது. 

[இந்தக் கழுகு பற்றிய செய்திகளை முனைவர் க.ரத்னம் எழுதிய “தமிழ்நாட்டுப் பறவைகள்” என்ற பொத்தகத்தில் (மெய்யப்பன் தமிழாய்வகம், 2002) இருந்து தருகிறேன். ”இந்தக் கழுகு கருப்புநிற உடலைக் கொண்டது. இதன் தலை, கழுத்து, தொடை, கால் ஆகியன சிவப்பு நிறங் கொண்டவை. உயரமாகப் பறக்கும் போது கருத்த உடலின் பின்னணியிலான சிவந்த தலையும் வெண்திட்டுக்கள் கொண்ட தொடையும் இறகுகளிற் காணப்படும் வெண்பட்டையும் கொண்டு அடையாளம் காணலாம். தமிழ்நாடு முழுதும் வறள் காடுகளில் மக்கள் வாழ்விடத்தை அடுத்துக் காணலாம். பிற கழுகுகளைப் போலப் பெருங்கூட்டமாய் இது திரள்வதில்லை. செத்த பிணங்களைத் தின்ன பெருங் கூட்டமாய்க் கூடும். மற்றவகைக் கழுகளிடையே இதனையும் ஒன்றிரண்டாகக் காணலாம். மற்ற கழுகுகளை விரட்டிவிட்டு முதலில் தன் வயிறு நிறையத் தின்னும் ஆற்றல் வாய்ந்தது. இதனாலேயே இது கழுகு அரசன் (King Vulture) என்றும் அழைக்கப் படுகிறது. வயிறு நிறையத் தின்றபின் பறக்க எழ இயலாது இது திண்டாடும். சங்க இலக்கியத்தில் ’செஞ்செவி எருவை’ எனவும் பாலைநிலத்தில் பயணம் செய்வோர் வெப்பத்தின் கொடுமையால் மயங்கி விழுந்தபின் இறப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.”] 

இறந்து போன உடம்பின் வயிற்றில் இருந்து செந்தலைக்கழுகு (செஞ்செவி எருவை = செக்கச் சிவந்த கழுகு) குடரை உருவுவது எப்படி இருக்கிறதாம் என்பதற்கு மாங்குடி மருதனார் ஓர் உவமை சொல்கிறார். அதில் தான் மேலே சொன்ன குடவோலைச் செய்தி வருகிறது. அந்தக் காலத்தில் ஊர் வாரியத்திற்கு நிற்பவர்களின் பெயரை ஒரு ஓலை நறுக்கில் எழுதி அதைச் சுருளாக்கி ஒரு குடத்தில் இடுவார்கள் முடிவில் குடத்தின் வாயின் மேல் ஒருதுணியை மூடிக்கட்டிச் சுருக்குப்போட்டு, சுருக்குப் போட்ட இடத்தில் களிமண்ணையோ, அல்லது ஒரு பிசினையோ கொண்டு ஒட்டி, களிமண்/பிசின் மேல் பொறிகொண்டு முத்திரை பொதித்துப் பின் குடத்தைப் பாதுகாத்து ஒரு பொது இடத்திற்குக் (அது வேறு ஊராகக் கூட இருக்கலாம்) கொண்டுவந்து கூடியிருந்தோர் அறியப் பொறியை உடைத்து நீக்கி, சுருக்கைப் பிரித்துத் துணியை விலக்கி, ஒவ்வொரு சுருளாக உள்ளிருந்து எடுத்து நீட்டி ஓலை நறுக்கைப் படித்து ”எத்தனை வாக்குகள் யாருக்குக் கிடைத்தன?” என்று பார்ப்பார்களாம். 

எப்படி வாக்குக் குடத்தில் இருந்து ஒலை நறுக்குச் சுருள்களை ”குண்டு குண்டான அரசு ஆவண மாக்கள் (இடை பெருத்த அரசு அதிகாரிகள்) இழுத்துப் பிரிக்கிறார்களோ அதுபோல, செந்தலைக் கழுகுகள் இறந்த குடரில் இருந்து குடலை உருவி நீட்டுகின்றனவாம். செந்தலைக் கழுகுகளுக்கு குண்டான அரசு அதிகாரிகள் உவமை. இறந்த உடம்பின் வயிற்றுக்கு வாக்குக் குடங்கள் உவமை. மாந்தக் குடலுக்கு ஒலை நறுக்குச் சுருள் உவமை. அகம் 77 எண்ணி எண்ணி வியக்கக் கூடிய பாட்டாகும். இதில் அடங்கிய வரலாற்றுச் செய்தி கி.மு.50 இல் குடவோலை முறை தமிழகத்தில் வழக்கில் இருந்தது என்பதே. 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

புறநானூறு 2ஆம் பாட்டு - 1

 
அண்மையில் ctamil மடற்குழுவில் புறநானூற்றின் 2 ஆம் பாடலை முன்னுறுத்தி, அதில் வடபுலக் கருத்துக்கள் மிகுத்திருப்பதாகவும், அக்கருத்துக்களைத் தமிழர் பெரிதாய்க் கருதிப் பின்பற்றியதாகவும், தமிழருக்குச் சொந்தமான பண்பாட்டுத் துலக்கம் கிடையாது போலவும், எல்லாமே pan-Indian culture with regional variations என்று ஒரு சாராரும், ”அப்படியில்லை, ஒன்றிற்கொன்று வளமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட இருவேறு தனிப் பண்பாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தன; இரண்டுஞ் சேர்ந்தது தான் இந்தியப் பண்பாடு” என்று இன்னொரு சாராரும் தம் கருதுகோள்களின் அடிப்படையில் உரையாடல் எழுப்பினார்கள். [நான் உரையாடல்களை அப்படியே சொல்லுக்குச் சொல் இங்கு எடுத்துக் கொள்ளவில்லை.] 

இதுபோன்ற உரையாடல்கள் காலகாலமாய் நடப்பவை தான்.

பல வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் இன்னும் ”துபாஷிகள்/பண்டிதர்கள்” சொன்னதை வேதவாக்காய் எடுத்துக் கொண்டு, “வடக்கு மேடு, தெற்கு பள்ளம். மேட்டிலிருந்து பள்ளத்திற்கு நீரோட்டம்” என்ற பார்வையை எத்தனை நாட்களுக்குக் கொண்டிருப்பார்களோ? - தெரியாது. Tamil culture and practices are derived from the north என்ற புரிதலையும் என்று மாற்றிக் கொள்வார்களோ? - தெரியவில்லை. தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை வேறு இந்திய நடுவண் அரசினர் கொடுத்துத் தொலைத்துவிட்டார்கள். அதைக் கண்டு பலருக்கும் பற்றிக் கொண்டு எரிகிறது. வேறொன்றும் இல்லை. It is an un-deserved recognition என்ற முணுமுணுப்பும், ”எல்லாம் அரசியற் செல்வாக்கால் அடைந்துவிட்டார்கள்” என்ற பொருமலும் ஆங்காங்கே எழுகிறது. 

“அடிப்படையில் வடமொழியும் தென்மொழியும் ஒன்றிற்கொன்று நெடுங்காலம் உறவாடியவை தான். இங்கிருந்து அங்கு சில கூறுகளும், அங்கிருந்து இங்கு சில கூறுகளும் ஊடுறுவது இயற்கை தான்” என்ற பார்வையை நடுநெறியாளர் ஒருநாளும் மறைத்ததில்லை. மறந்ததுமில்லை. இப்படி ஒருபக்கச் சார்பாகவே பார்க்கும் பார்வை, 19 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி, 21 ஆம் நூற்றாண்டு வரையிலும் மாறாதிருப்பதை எங்களைப் போன்றவர்கள் மறுத்துச் சொல்லி வந்தோமேயொழிய, எல்லாமே தமிழ் என்று எக்காளம் இட்டதில்லை. ஆனாலும் எம் கருத்தைத் தனித்தமிழ்த் தீவிரவாதிகள் (pure Tamil extremists), பொதுக்கைவாதிகள் (fascists) என்று சாயம் பூசுவது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. [இப்படிச் சாயம் பூசுவதே வழக்கமாகிப் போன ஒரு மடற்குழுவில் இருந்தே நான் அகன்றிருக்கிறேன்.] மாற்றுக் கருத்தாய் எதை வைத்தாலும் அதை ஒதுக்கித் தள்ளி மேலை நாட்டுத் தமிழறிஞரை ஒருபாற் கோடவைப்பது தொடர்ந்து நடக்கிறது. ”வடக்கே, இதோ என் சாஷ்டாங்க சரணம், நமஸ்காரம்” என்றபடி தாசானு தாசர்களாய் ஆகிப்போனது இன்று நேற்று நடப்பதல்ல. 

[யாரோ ஒருவர் அழகாகச் சொன்னார்: காசுமீரத்தில் நாலுபேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு இந்தியர் இறந்தார்” என்று வரும். இராமேசுரக் கடலில் நாலுபேர் இறந்தால் இந்திய நாளிகைகளில் “நாலு தமிழ் மீனவர் இறந்தார்” என்று வரும், ஏதோ இவர் இந்தியர் இல்லாதது போலச் சொல்லப்படும். இந்த மனப்பான்மை இன்று நேற்று ஏற்பட்டதில்லை. இல்லையென்றால் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுடப்பட்டதற்குப் பொங்காத இந்தியர் மும்பை 2611 என்று மட்டும் குதிப்பது ஏன்?] 

அரசியலை ஒதுக்கிவைத்து சங்க இலக்கியத்திற்கு வருவோம்.

கால காலமாக தமிழக வரலாற்றைக் கீழிறக்கித் தள்ளுவதே வேலையாக ஒரு சாரார் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேதத்தைத் தூக்கி வைக்கவேண்டிய பணியிருக்கிறபோது, ”எல்லாமே சங்கதம் தான்” என்று முழக்கம் செய்யவேண்டிய நிலை இருக்கும் போது, தெற்கே ஒரு பண்பாடு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுப் பழமையானது என்று சொல்ல எப்படி மனம் வரும், சொல்லுங்கள்? அதன் காரணமாய் வையாபுரியாரைத் துணைக்கொண்டு சங்க இலக்கியத்தின் காலத்தை தவறாகப் பொருத்துவது மாறவேயில்லை; 

[வையாபுரியாரின் தற்சார்புக் கருத்துக்களை மறுத்து இவர்கள் எவருமே கேள்வி எழுப்பியதில்லை. வையாபுரியார் முடிவுகளை மேல்நாட்டறிஞர் கமில் சுவலபில் கூட மறுத்ததில்லை. இன்று கமில் சுவலபில்லின் முன்னெடுப்புகளை மற்ற மேலைத் தமிழறிஞர் யாரும் மறுப்பதில்லை. ஹெர்மன் டீக்கன் மட்டும் இப்போது ஒருசிலருக்கு எதிராளியாகத் தெரிகிறார்.] சங்க கால வாழ்க்கை முறையை இன்னும் Burton Stein வரையறுத்தபடி Segementary State ஆகவே பார்ப்பதும் மாறவில்லை. [Burton stein கருத்தை நொபுரு கராசிமா மட்டும் வன்மையாக மறுத்திருக்கிறார்; ஆனால் அவர் தன் ஆய்வுக்கு உட்பட்ட பெருஞ்சோழர் காலத்தோடு இயற்கையாக நிறுத்திக் கொள்வார். நானறிய யாரும் சங்க கால மூவேந்தர் அரசுகள் எப்படிப் பட்டவை, அவற்றின் அரசியற் பொருளாதாரம் என்ன? - என்று ஆய்ந்து பார்க்க முன்வந்ததில்லை.], 

தமிழ்நாட்டு ஆய்வாளர்களோ, ஆழங் காண மறுத்து ”வைரமுத்துவின் திரையிசைப் பாடல்கள், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகத் திறம், புதுக்கவிதையும் லிமெரிக்கும்” என்று விளிம்புநிலை ஆய்வுகளிலேயே கவனஞ் செலுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஆய்வுப் பட்டத் தலைப்புகளைக் கேட்டால் நமக்குக் கண்ணீர் வடிக்கத் தான் தோன்றும். ஏதோ 200 ஆய்வுநூற் பக்கங்களை நிறைத்துவிட்டாற் போதும் என்றாற் போல் எத்தனை நாட்களுக்கு சவலைப் பிள்ளையாய், மூளியாய், மூடமாய்த் தமிழாய்வுகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்குமோ தெரியவில்லை. இத்தனைக்கும் புதிய தரவுகள் தொல்லியல் வழி வந்து கொண்டிருக்கின்றன. கல்வெட்டியல் மூலம் எழுந்து கொண்டிருக்கின்றன. நாணயவியல் புது வரலாறு படைக்கிறது. ஆனாலும் தமிழக வரலாற்றைச் சங்க இலக்கியத்தை புத்தொளி கொண்டு மீண்டும் ஆய்வு செய்ய தமிழியலில் யாரும் அணியமாய் இல்லை. இல்லையென்றால் அச்சடித்தாற் போல் ”சிலப்பதிகாரம் கி.பி.2 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறம் எழுந்தது” என்று கீறல் விழுந்த இசைத்தட்டைப் போல தமிழறிஞரில் 99.9% பேர் இன்னியம் பாடிக் கொண்டு இருப்பார்களா? 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஏன் சங்க இலக்கியத்தில் மீளாய்வே நடப்பதில்லை என்றும் எனக்குப் புரிவதில்லை. இத்தனைக்கும் சங்க இலக்கியத்தில் 50% க்கும் மேலான பாடல்கள் பாலைத்திணையில் உள்ளனவே? அதில் பெரும்பாலும் மொழிபெயர் தேயம் தாண்டி பாடற் தலைவர் வடக்குப் போனதாகச் செய்திகள் வருகின்றனவே? அப்படி வடபுலத்தில் எங்கேதான் வணிகம் செய்யப் போனார்கள்? வடுகர் என்பவர் யார்? தமிழரின் பொருளியல் எதன் அடிப்படையில் இயங்கியது? இது வெறும் கொள்ளையடிப்புப் பொருளாதாராமாகவே இயங்கியதா? [அப்படியும் சிலர் எண்ணிக் கொள்கிறார்கள்.] இவ்வளவு காசுகள் (உரோம நாட்டுக் காசுகளும் சேர்த்து) கிடைத்துள்ளனவே? மணிகள், முத்துகள் இங்கு கிடைத்துள்ளனவே? இவையெல்லாம் எங்கே செலாவணியாகின? வடக்கே இருந்த மகதத்திற்கும் தமிழகத்திற்கும் இடையாட்டம் இல்லாது போனதா? மகதத்தோடு உறவு கொள்ளாத தமிழகம் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் இருந்துவிட முடியுமா? வம்ப மோரியர் என்றால் மோரியருக்கும் முந்தியவராய் சங்ககாலத் தமிழர் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படியானால் சங்க இலக்கியத்தின் காலம் குறைந்தது மோரியருக்கும் முன்னால் என்ற ஆய்வு கூட நம்மிடம் இல்லாது போனது எப்படி? ஏன் தீவுக்குள் முடங்கிப் போனவராய் நம்மை எண்ணிக் கொள்கிறோம்? வடபுலத்தாரும், மேல்நாட்டாரும் நம்மை ஒரு தொங்குசதையாகவே (appendage) பார்க்கிறார்களே ஏன்? Are we so worthless? Every thing here was a derived one? Don't we see a conspiracy in it?

மகதப் பேரரசு அளவிற்கு இல்லாவிட்டாலும் அதற்கு எதிராய்ச் சூளுரைத்து, தம் பொருளியலையும் அரசியலையும் தனித்து நிலைநாட்டிக் கொண்டு மூன்று பயிர்த்தொழில் அரசுகள் (feudatory states) இங்கு இருந்தன என்பதையும், கூடவே வேடுவச் சேகர (hunter-gatherer) குமுகாயக் கூறுகளும் இங்கு இருந்தன என்பதையும், அந்தப் பின்புலத்திற் பார்த்தால் தான் சங்க இலக்கியமும் பழந்தமிழ் வரலாறும் புரிபடும் என்று யார் இந்த வறட்டுவாதிகளுக்குச் (dogmatists) சொல்வது? சங்க இலக்கியத்தின் காலம் கி.மு.600-கி.பி.200 என்று விரித்து உணருவது எப்போது? ”மகத அரசுகள் எப்போதுமே தமிழக அரசுகளுக்கு பகையாய், அதே பொழுது போட்டியரசுகளாய் இருந்தன” என்ற வரலாற்று உண்மையை யார் உணர்த்துவது? 

இப்படிக் கேள்வி மேற் கேள்விகள் நமக்குள் அடுத்தடுத்து எழுகின்றன. விடை காண்பதற்குத் தான் ஆட்களைக் காணோம். வையாபுரியார் சொன்னது இன்றுவரை மேலைத் தமிழறிஞரிடம் அப்படியே அடிபிறழாமல் இருக்கிறது. நம்முடைய மாற்றுக் கருத்துக்கள் பொதுக்கைக் (fascist) கருத்துக்களாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன. நாம் என்ன சொல்ல முடியும்? Am I a fascist? 

இதற்கிடையில் காவிரியில் எத்தனையோ ஆடிப்பெருக்கும் வந்தாயிற்று. ஆடி அமையுவாவும் (அமாவாசையும்) வந்தாயிற்று.

நானறிந்த வகையில் புறநானூற்று 2 ஆம் பாடலுக்கு என் விளக்கத்தை அடுத்த பகுதியிற் தருகிறேன். இதை ஏற்பதும் ஏற்காததும் படிப்போர் உகப்பு. 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

புறநானூறு 2ஆம் பாட்டு - 2

 
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின்
வெண் தலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந

வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப் 
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே
--------------------

இந்தப் பாடல் பாடாண் திணையைச் சேர்ந்தது இதன் துறையைச் செவியறிவுறூஉ என்றும் வாழ்த்தியல் என்றும் இலக்கணத்தில் வகைப்படுத்துவார்கள். இது பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய பாடலாகும். 

அது என்ன பாடாண் திணை? - என்று கேட்டால் நாம் புறத் திணைகளின் வகைப்பாட்டிற்குள் போக வேண்டும். ”வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி ஆகிய ஆறு திணைகளுக்கு அப்புறம் வருவது பாடாண் திணையாகும். வேடுவச் சேகர வாழ்க்கைக்கும் (hunter-gatherer life), பயிர்த்தொழில் வாழ்க்கைக்கும் (feudatory life) பொதுவான புறத்திணைப் பாகுபாடுகள் இங்கு பாவிற்குக் களன்கள் ஆகின்றன. 

முதலில் வருவது வெட்சி. இது ஓர் இனக்குழுக் கூட்டத்தாரின் பசுக் கூட்டத்தை இன்னொரு கூட்டத்தார் கவ்விக் கொள்வதும், அதைத் தொலைத்தவர் மீட்டுக்கொள்வதும் பற்றிய களமாகும். கி.பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பிற்காலத்து வந்த புறப்பொருள் வெண்பா மாலை இப்படி மீட்டுவருவதை ஒரே திணைக்குட் பொருத்தாது, ”கரந்தைத் திணை” என்று தனிப்பெயர் கொடுத்து அழைக்கும். தொல்காப்பியம் இரண்டையும் ஒன்றாய்ச் சேர்த்துப் பார்க்கும். 

வஞ்சி என்பது மாற்றரசனை அச்சுறுத்திப் போர்செய்தலைக் குறிக்கும். சிலப்பதிகாரத்திற் சேரன் செங்குட்டுவன் வடபுலம் சென்று அங்குள்ள அரசரை அச்சுறுத்தி நடத்திய போர் வஞ்சிப் போராகும். இது வலிமையை நிலைநிறுத்தும் காரணத்தால் நடக்கும் போராகும். இதன் முடிவு கப்பங் கொள்ளுதலும், அடிபணிதலுமாய் அமையும்.

உழிஞை என்பது மாற்றரசன் கோட்டையை முற்றுகை இடுதலும் அதைக் கைப்பற்றுதலும் ஆகும். முன்னே வெட்சியின் எதிராய் கரந்தையைக் காட்டியது போல உழிஞையின் எதிராய் நொச்சி என்ற தனித் திணையை புறப்பொருள் வெண்பாமாலை காட்டும். தொல்காப்பியரைப் பொறுத்தவரை நொச்சி என்பது தனித் திணையல்ல. அது உழிஞையின் பகுதியே.

தும்பை என்பது வஞ்சிக்கு எதிரானது. தனது வலிமையைப் பொருளாகக் கருதிவந்த அரசனை எதிர்த்துச் சென்று அவனோடு போரிடுவது. தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரண்டுமே இதைத் தனித்து அடையாளங் காட்டும்.

வாகை என்பது வெறுமே வாளாலும் தோளாலும் அன்றி தம் இயல்புகளை ஒட்டிய மற்ற போட்டிகளில் இருவேறு சாரார் பொருதுவதையும் வெற்றிபெறுதலையும் குறிக்கும், 

காஞ்சி என்பது வாகைக்கு மாறாக, பொருதலை விட்டொழித்து, “இவ்வுலகம் நிலையற்றது, இதில் ஒருவருக்கொருவர் பொருது கொள்ளத்தான் வேண்டுமா?” என்று நீத்தார் நெறி பற்றிப் பேசுவதாகும்.

பாடாண் என்பது இதுவரை மேலே பேசப்படாத பாடுபொருட்களை, ஆனால் பாடிப் பரவத்தக்க புறத்திணை நிகழ்வுகளைப் பற்றிப் பேசுவதாகும்.

இனிச் செவியறிவுறூஉ என்பது என்ன என்று பார்ப்போம். இதைச் செவியுறை என்றுஞ் சொல்லுவதுண்டு. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் 1371 ஆம் நூற்பாவில் செவியுறையின் வரையறை சொல்லப் பெறும். 

செவியுறை தானே
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே

”பெரியோர் நடுவே சினந்து கொள்ளுவதும், தன்னையே வியந்து கொள்ளும் செருக்கும் இன்றி தாழ்ந்து ஒழுகுதல் கடமை” என்று கேட்போன் உளம் கொள்ளுமாறு சொல்லுவதைத்தான் செவியுறை என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வரையறையை ஆழ்ந்து புரிந்து கொள்ளுவது புறநானூற்று இரண்டாம் பாடலைப் புரிந்து கொள்ள வழிவகுக்கும். ”அரசனே! நீ செயற்கரிய செயல்கள் செய்தவன், பகைவர் மேற் சினந்து கொள்ள உரிமையுள்ளவன். ஆனாலும் இந்த நேரத்தில் அடங்கி ஆக்கமுடையவனாய் இருத்தல் வேண்டும்” என்று முரஞ்சியூர் முடிநாகனார் சொல்ல வருகிறார் - என்ற குறிப்போடு பாடலின் பொருளைப் பார்ப்போம். பொருள் புரிவதற்குத் தக்க இந்தப் பாட்டை 5 பிரிவுகளாக நான் பிரித்துக் கொள்ளுகிறேன்.

1. முதல் 8 வரிகள் “ஐம்பூதத்து இயற்கை போன்றவன் சேரலாதன்” என்று உரைக்கின்றன.
2. அடுத்த 3 வரிகள் “அகன்ற நாட்டிற்கு உரியவன் சேரன்” என்று அவன் ஆட்சியின் அகண்டதன்மையைக் குறிக்கின்றன.
3. அடுத்த ஒருவரி “வானவர் அன்பன்” என்று மோரியருக்குப் பின் சேரர் பெற்ற/அழைக்கப்பட்ட பட்டத்தைக் குறிக்கிறது.
4. அடுத்த 4 வரிகள் தாம் நாவலந்தீவின் பெரும் வீரர் கொடிவழியைச் சேர்ந்தவன் என்று சொந்தங் கொண்டாடும் விதத்தில் முன்னோர் நினைவாக “பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்த” சிறப்பைக் குறிக்கின்றன.
5. கடைசி 8 வரிகளில் தான் அரசனுக்கு உணர்த்தப்பெறும் செவியறிவுறூஉ இருக்கிறது. எந்த நிலையில் இந்தச் செவியுறை எழுகிறது என்று நம்மாற் சொல்லமுடியவில்லை. ஆனால் இமயமும் பொதியமும் போல நடுக்கமில்லாதவராய் யார்வந்தாலும் எதிர்நின்று வேள்விகளைக் காக்கக் கூடியவர் போல ஆயத்த நிலையில் இருக்கச் சொல்லும் அறிவுறுத்தல் தெளிவாக நமக்குப் புரிகிறது.

செவியுறை என்பது கிட்டத்தட்ட psychological counselling. ”அரசே! நீ எப்பேர்ப்பட்டவன், அதைச் செய்திருக்கிறாய், இதைச் செய்திருக்கிறாய், எல்லாவற்றிற்கும் உகந்தவன் தான் நீ? இருந்தாலும் கோவப்படலாமா? செருக்குக் கொள்ளலாமா? இதைக் கொஞ்சம் பக்குவமாய்ப் பார்த்துச் செய்யப்பா” என்பது உளவியற் கலந்துரை இல்லாது வேறு என்ன?

பாட்டின் ஒவ்வொரு பகுதிக்குள்ளும் இன்னும் ஆழமாய்ப் போவோம். 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

புறநானூறு 2 ஆம் பாட்டு - 3

 
முதலில் வருவன கீழுள்ள 8 வரிகள்: 

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்

மேலேயுள்ள வரிகளுள் சாங்கியம், உலகாய்தம்/பூதவாதம், ஆசீவகம் ஆகிய மெய்யியலாளர் சொல்லும் ஐம்பூதத்து இயற்கை பற்றிய விவரிப்பு அடங்கியிருக்கிறது. இந்த உலத்தில் உள்ள பொருட்களும், பொருண்மைகளும் ஐம்பூதத்தால் ஆனவை என்பது இவை போன்ற நம்பா மதங்களைச் சேர்ந்த மெய்யியலாரின் வாதமாகும். பின்னால் எழுந்த நம்பும் மதங்களான சிவ, விண்ணவ நெறிகளும், ஏன் வேத நெறியும் கூட இந்த ஐம்பூதக் கருத்தை ஏற்றுக் கொண்டு, அதே பொழுது ஐம்பூதத்தைப் படைத்தவன் இறைவன் என்று கற்பித்துக் கொண்டு அமைந்து போயின. வேத நெறிக்கு எதிராய் எழுந்த புத்த, செயின நெறிகளும் கூட ஒருவகையில் இந்தக் கருத்தை உள்வாங்கின. ஆனால் கி.மு.600 க்கு அருகில் எழுந்த சாங்கியம், உலகாய்தம் / பூதவாதம், ஆசீவகம் ஆகிய நெறிகளே ஐம்பூதத்து இயற்கை பற்றித் தெளிவாகப் பேசின. [ஓர் இடைவிலகலாக வேறொன்றைச் சொல்லவேண்டும். ஏதேனும் மெய்யறிவியல் பற்றிச் செய்திகள் சங்க இலக்கியத்தில் வந்தாலே அதை வேத நெறி வழியாகப் பார்ப்பதும், இல்லையென்றால் செயினம் என்று சொல்லும் அச்சடிப்பு வேலை நெடுநாட்களாகத் தமிழாய்வில் நடந்துகொண்டிருக்கிறது. சங்க இலக்கியத்தில் பொருள்முதல் வாதக் கருத்துக்களும், நம்பா மதங்களான சாங்கியம், உலகாய்தம்.பூதவாதம், ஆசீவகக் கருத்துக்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் விரவிக் கிடக்கின்றன. அதை ஆய்ந்து முற்காலத் தமிழர் மெய்யியலை அடையாளம் காணத்தான் ஆளில்லை. Not everything is always black and white. There are lots of grades of grey in between. It takes courage to discern them.] 

மண்திணிந்த நிலன்; நிலன் ஏந்திய விசும்பு; விசும்பு தடவும் வளி; வளி தலைப்பட்ட தீ; தீ முரணிய நீர் என்று ஒன்றிற்கொன்று தொடர்புறுத்தி ஐம்பூதத்தைச் சொல்லுவார்கள். [வடநாட்டு உலகாய்தத்தில் ஐம்பூதங்கள் கிடையாது விசும்பு தவிர்த்த நாலு பூதங்களே அங்கு புழக்கத்தில் உண்டு. எங்கெல்லாம் இந்தியக் கொள்கைகளில் 5 பூதங்கள் பேசப்படுகின்றனவோ, அங்கெல்லாம் தென்னகத் தாக்கம் இருந்தது என்றே பொருள் கொள்ள வேண்டும். ஐம்பூதங்கள் என்ற கருத்து ஒருவகைக் கதைசொல்லும் குறியீடாகும் (tell-tale sign). ஐம்பூதத்து இயற்கை சங்க இலக்கியத்தில் பல இடங்களிலும் பேசப்படுவது நம்மை வியக்க வைக்கிறது. ஆனாலும் தமிழரா? - சொந்த மூளையில்லாத விவரங் கெட்டவர்கள் என்ற வாதம் இடைவிடாது அறிவுய்திகளால் - அறிவுஜீவிகளால் - வைக்கப்படுகிறது.] இந்த ஐம்பூதத்திற்கும் இணையாய் முறையே பகைவரைப் பொறுத்தலும், பகைவரை வெல்லுதற்காகச் செய்யும் ஆலோசனைகளின் அகற்சியும், உடல், மனங்களின் வலிமையும், வலியின் வழியாகப் பெறப்படும் ஒறுத்தலும், கருணையும் சொல்லப்படுகின்றன. ”இந்த ஐம்பெரும் தகைகளை உடையவனே!” என்று சேரன் இந்தப் பகுதியில் புகழப்படுகிறான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

அடுத்த பகுதியைப் பார்ப்போம். இது

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின்
வெண் தலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந

என்று அமையும். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் காலத்தில் அவன் நாடு குண கடலில் தொடங்கி குடகடல் வரை விரிந்து பரந்து இருந்திருக்கிறது. ”உன்னுடைய குண கடலில் பிறந்த ஞாயிறு அங்கிருந்து பெயர்ந்து மேற்கே போய் வெள்ளிய நுரைபொங்கும் மேற்குக் கடலிற் குளித்துப் புத்துருவம் கொள்ளும் நல்ல நாட்டின் தலைவனே!” என்று சேரன் மேலும் சிறப்பிக்கப் படுகிறான். 

அதாவது இவன் வெறும் குறுநிலத் தலைவன் இல்லை. அகண்ட ஆட்சி நிலத்திற்கு உரிய வேந்தன். வடக்கேயிருந்த எந்த வேந்தனுக்கும் இவன் சளைத்தவன் அல்லன். He can challenge anyone up north. He had two seas on both sides of his kingdom. Now this denotes a few things in terms of trade. நிலத்தொடர்பால் வடக்கே மகதநாட்டின் தக்கணப் பாதையைப் பிடித்து சாவத்தி (இன்றைய அயோத்தி) வரை போய் வடபுலத்து வாணிகத்தை நடத்திக் கொள்ளமுடியும். [சிலம்பின் காலம் என்ற என் தொடரை வாசகர் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். தக்கணப்பாதை என்பது தமிழக- வடபுல வாணிகத்திற்கு இன்றியமையாதது. இதன் முகன்மையை நாம் இன்னும் உணரவில்லை.] மேற்குக் கடல் வழியாக எகிப்து, பாபிலோனியா, எலாமைத், பாரசீக நாடுகளின் வாணிகத்திற் கலந்து கொள்ள முடியும். கிழக்குக் கடல் வழியாக தென்கிழக்கு ஆசியா, சீனம் ஆகிய நாடுகளுடன் வணிகஞ் செய்யமுடியும். இப்படி மூவேறு திசைகளில் வணிகஞ் செய்ய வாய்ப்புக் கிடைத்த நாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.காலங்களில் ஒரு சிலவே. அப்படியிருந்தவை வளங் கொழித்துச் சிறந்திருந்தன. சேரனின் வணிகச் சிறப்பைச் சொல்ல இந்த மூன்று வரிகள் சிறப்பானவை அல்லவா? 

அடுத்த பகுதி: 

வான வரம்பனை நீயோ பெரும

என்று ஓரடியால் அமையும். ”வான வரம்பன், இமைய வரம்பன்” என்ற சொற்களுக்கு “வானத்தை எல்லையாகக் கொண்டவன், இமையத்தை எல்லையாகக் கொண்டவன்” என்று பல உரையாசிரியர்கள் பொருள் கொள்ளுவார்கள். உண்மையில் எந்த நாளும் வானத்தையோ, இமையத்தையோ சேரர் எல்லையாகக் கொண்டவரில்லை. சேரர் இமையம் வரை பலமுறை படையெடுத்துப் போயிருக்கிறார்கள். பாண்டியர், சோழரும் கூட அது போலச் செய்திருக்கிறார்கள். அவையெல்லாம் வஞ்சிப் போர்களே. வடக்கே பல வேந்தரையும், மன்னரையும் தமிழ்வேந்தர் வெற்றி கொண்டிருக்கிறார் என்பது மட்டுமே உண்மை. வடக்கே எல்லை கொண்டிருந்தார் என்பது உண்மையல்ல.

“வானத்தை எல்லையாகக் கொண்டவர், இமையத்தை எல்லையாகக் கொண்டவர்” என்பது போன்ற தேவையற்ற உயர்வு நவிற்சி சொல்லுவது தமிழ் வரலாற்றிற்கு ஒரு நம்பகமில்லாத் தன்மையையே வரவழைக்கும். மயிலை சீனி வேங்கடசாமியார் இந்தக் கூட்டுச் சொற்களை ஏற்றவரில்லை. அவர் “வானவர் அம்பன், இமையவர் அம்பன்” என்று பிரித்து, ”அம்பன்” என்பதை ”அன்பன்” என்பதன் பேச்சுவழக்குத் திரிபாகக் கொண்டு இரண்டு சொற்களுமே ”தேவர் அன்பன்” என்ற பொருள் படுவதாகக் கொள்ளுவார். இது அசோகர் காலத்திற்குப் பின் மோரியக் குடிவழியினர் “தேவனாம்ப்ரிய” என்று தங்களை அழைத்துக் கொண்டது போலவே நாம் கொள்ளலாம் என்று அவர் சொல்லுவார். சிங்கள அரசன் மூத்த சிவன் மகனான தீசனும் அசோகரின் பாதிப்பால் தன்னை தேவனாம்பிய தீசன் என்று அழைத்துக் கொள்ளுவான். ”தேவன அம்பியன்” என்பது ”தேவன் அம்பன்” என்ற சொல்லோடு தொடர்புறுவதை நோக்கலாம். அன்பன்>அம்பன் என்ற சொற்திரிவு தமிழுக்கும் பாகதத்திற்கும் இடைப்பட்டதாக இருக்கலாம். நாம் அன்பு என்று அழைப்பது பாகதத்தில் அம்பு ஆகலாம். பொதுவாக பேரரசன் அசோகனின் தாக்கம் அவன் காலத்திற்கு அப்புறம் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் இருந்தது போலும். புத்த, செயின, ஆசீவக மதங்களின் தாக்கமும் தெற்கே பெரிதாக இருந்திருக்க வேண்டும். வேத நெறியைப் போலவே, இந்த மூன்று மதங்களும் மாந்த நிலைக்கு மேற்பட்டு தேவ நிலை இருப்பதாகவும் அந்த நிலைக்குப் போவது ஆதன்களின் (atmans) முயற்சியால் முடியும் என்ற கருத்தையும் கொண்டிருந்தன. ”தேவர்களின் அன்பைப் பெற்றவன்” என்று சொல்லிக் கொள்வதில் அந்தக் கால அரசர் பெருமிதங் கொண்டனர் போலும். “வானவர் அன்பன் நீ தானோ, என் வேந்தே?” என்ற பொருளையே இந்த வரிக்கு ஈடாய் நாம் சொல்ல முடியும். 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

புறநானூறு 2ஆம் பாட்டு - 4

 
அடுத்துள்ள 4 வரிகள் பெரிதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவை.

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப் 
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

மேலே உள்ளதை ஆழ்ந்து படித்தால் பாண்டவ, கௌரவ பாரதப் போரின் இருபக்கப் படைக்கும் சேரன் உணவளித்துப் புரந்ததாய் உரைகாரர் சொல்லுவது நம்ப முடியாதது என்று புலப்படும். ஏனெனில் இவ்வரிகள், “ஐவரோடு சினமுற்று தும்பைப் போரில் பொருதுகளத்து ஒழிந்த நூற்றுவருக்கு பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தது” பற்றிச் சொல்லுகின்றன. [அலங்குளைப் புரவி ஐவர் என்ற கூட்டுச்சொல் இங்கு கருத்தாவைக் குறிக்கவில்லை. ”பொலம்பூந் தும்பை ஈரைம்பதின்மர்” என்பது தான் இங்கு கருத்தா. ”பொருதுகளத்தில் ஒழிதல்” என்பது கருமம் / வினை. அதைப் பின்பற்றும் கருமம்/வினை ”பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தல்” என்றாகும். மீண்டும் பாடல் வரிகளை ஆழ்ந்து படியுங்கள்.]

வரிகளைப் படித்தவுடனேயே ”அறந் தவறிப் பாண்டவர் நிலத்தைப் பற்றிக் கொண்ட கௌரவருக்கா, பெண்ணை இகழ்ந்து, பழி செய்த கௌரவருக்கா, சேரர் பெருஞ்சோற்று மிகுபதம். கொடுத்தார்கள்?” என்ற நயன்மைக் கேள்வி நமக்குள் எழுகிறது. ”18 நாள் பாரதப் போர் உண்மையில் நடந்ததா?” என்ற கேள்வி பின்புறம் நிற்க, அந்தப் போர் மோரியருக்கும் முன்பு நடந்திருக்கவே வாய்ப்புண்டு என்ற காலநிலையை வைத்துப் பார்த்தால், ”வானவர் அன்பன்” என்று மோரியரைப் பின்பற்றித் தன்னை அழைத்துக் கொண்ட சேரலாதன் எப்படிப் பாரதப் போர் காலத்திலிருந்தான்? - என்ற காலமுரணும் நமக்குள் கேள்வியாய் அரும்புகிறது. இக் காலமுரணைத் தவிர்க்க வேண்டுமானால், ”ஒருவேளை கௌரவர் பாண்டவர் என்று இங்கே அடையாளப் படுத்தியதே தவறோ? இது வேறு வரலாற்றுச் செய்தியோ?” என்ற எண்ணமும் எழுகிறது. மொத்தத்தில் ஏரணப்படி (logicaly) பார்த்தால் இங்கே மாபாரதக் கதையைத் துணைக்கு அழைத்ததே தவறு என்ற முடிவுக்கு நாம் வருகிறோம்.

சண்டைக்கு இழுத்து வஞ்சிப் போரிட்டது யாரோ ஒரு ஐந்துபேர். அவருக்கு எதிராய்த் தும்பைப் போரிட்ட 100 பேரும் இப்போரில் இறந்து போனார்கள். தொன்மத்தில் வேண்டுமானால் நூற்றுவர் கௌரவராகலாம்; வரலாற்றில் நூற்றுவர் யாரோ வேறொருவராய் இருக்கமுடியாதா? அவர் யார்? நூற்றுவர் என்பது ஏன் ஒரு சொல்விளையாட்டாய் இருக்கக் கூடாது? ”பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என்பதற்குப் பொருளென்ன? - என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி ஒரு விளக்கம் தும்பைப் போரியற்றிய, சேரரையொட்டிய ஓர் அரசமரபினர் பற்றிச் சொல்ல முடியும். கொஞ்சம் பொறுமையாகப் பார்க்கலாம். 

பல்வேறு காரணங்களால் செங்குட்டுவனின் கடைசிக் காலம் கி.மு.75க்கு அருகில் என்றே முடிவு கொள்ளவேண்டியிருக்கிறது. கனகவிசயர் என்னும் கன்வர் மேலும், சுங்கர் மேலும், செங்குட்டுவன் படையெடுத்தது ஏறத்தாழ கி.மு.80 ஆக இருக்கலாம். வேறெந்தக் காலமும் இந்தப் படையெடுப்பிற்குப் பொருந்தவேயில்லை. ”இளங்கோ பொய் சொல்லவில்லை, வரலாற்றுச் செய்தியை மட்டுமே சொன்னார்” என்று கொண்டால், சிலம்புக் கதை நடந்த காலம் பெரும்பாலும் கி.மு.80க்கு அருகிற் தான். [விளக்கம் வேண்டுவோர் ”சிலம்பின் காலம்” என்ற என் தொடரைப் படிக்க வேண்டுகிறேன். 

http://valavu.blogspot.com/2010/05/1-2009-presentation.html
http://valavu.blogspot.com/2010/05/2.html
http://valavu.blogspot.com/2010/05/3.html
http://valavu.blogspot.com/2010/05/4.html
http://valavu.blogspot.com/2010/05/5.html
http://valavu.blogspot.com/2010/05/6_14.html
http://valavu.blogspot.com/2010/05/7_15.html
http://valavu.blogspot.com/2010/05/8.html
http://valavu.blogspot.com/2010/05/blog-post_20.html
http://valavu.blogspot.com/2010/05/10.html
http://valavu.blogspot.com/2010/05/11.html
http://valavu.blogspot.com/2010/05/12.html

உளுத்துப் போன கயவாகுக் கதையை வைத்துக்கொண்டு சிலப்பதிகாரத்தைக் கி.பி.2 ஆம் நூற்றாண்டிற்கு இழுத்து வரும் போக்கை நான் அங்கு கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறேன்.] 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பதிற்றுப்பத்தின் பதிகச் செய்திகளால் செங்குட்டுவன் அரசு கட்டிலில் வீற்றிருந்தது 55 ஆண்டுகள் என்றாகிறது. அப்படியானால் அவன் பட்டத்திற்கு வந்தது கி.மு.130 என்று ஆகும். சேரனுக்கு முன்னால் குடக்கோச் சேரனாய் இருந்தது இவன் தந்தை நெடுஞ்சேரலாதனே (மற்ற உறவினரெல்லாம் சேரநாட்டின் பகுதிகளையே ஆளுநர்கள் போல் ஆண்டிருக்கின்றனர். மைய அரசை ஆண்டது நெடுஞ்சேரலாதனும் அவன் மகன் செங்குட்டுவனுமே.) நெடுஞ்சேரலாதன் ஆண்டது 58 ஆண்டுகள். நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் மகன் செங்குட்டுவனுக்கும் இடையே அரசன் - இளவரசன் என்ற மேற்படுகை ஆண்டுகள் (overlap years) 20 என்று கொண்டால் நெடுஞ்சேரலாதன் குடக்கோ ஆனது கிட்டத்தட்ட கி.மு.168 என்று ஆகும். இனி அவனுக்கும் அவன் தந்தை உதியன் சேரலுக்கும் இடைப்பட்ட மேற்படுகை ஆண்டுகள் 20 என்று கொண்டு, உதியஞ் சேரல் தனியே ஆட்சி செலுத்தியது 25 ஆண்டுகள் (ஒரு நிரவல் ஆட்சிக்காலம் - average rulling period) என்று கொண்டால் கிட்டத்தட்ட உதியஞ்சேரல் பட்டத்திற்கு வந்தது கி.மு.193 என்றாகும். அதாவது பெரும்பாலும் கி.மு.2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உதியஞ் சேரல் ஆட்சிக்கு வந்திருக்கலாம் என்ற கருதுகோளை நாம் கொள்ளுவோம். [இந்தக் கருதுகோள் 5, 10 ஆண்டுகள் இந்தப்பக்கம், அந்தப்பக்கம் போகலாம். இப்போதைக்கு இந்தத் துல்லியம் போதும்.]

அந்தக் காலத்தில் கி.மு..185 ல், மகதத்தில் ஆட்சி புரிந்தவன் மோரியரின் கடைசியரசன் பெருகதத்தன் (=ப்ருகத்ரதன்) ஆவான். இவன் தான், இவன் அமைச்சன் சுங்கன் புஷ்ய மித்திரனால் கொலை செய்யப்படுகிறான். [கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு இந்த மகதநாட்டுப் பெருகதத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தவே கூடப் பாடப்பட்டிருக்கலாம். உரையாசிரியர்கள் அவனை வெறுமே ஆரிய அரசன் என்று சொல்லிவந்திருக்கிறார்கள்.] சுங்கன் இப்படி அரண்மனைக் கொலைசெய்து அரசுகட்டில் ஏறியதை ஏற்றுக் கொள்ளாத சாதவா கன்னர்கள் (இவர் தான் மோரியர்களின் தண்டநாயகர்களாய், தக்கணப்பாதையின் வாயில் காப்போராய், படித்தானத்தில் - பயித்தான் paithan - அரசு வீற்றிருந்தவர்கள்) சுங்கரை எதிர்த்துப் போரிட்டு வந்தார்கள். சுங்கருக்கும் சாதவா கன்னருக்கும் இடையே இருந்த போர் வஞ்சி - தும்பைப் போர் தான். சுங்கர் செய்தது வஞ்சிப் போர்; சாதவா கன்னர் செய்தது தும்பைப் போர். 

சாதவா கன்னர் என்பவர் தான் நூற்றுவர் கன்னர் என்று சிலப்பதிகாரத்தில் அழைக்கப்படுபவர். சாதவா கன்ன எனும் பாகதப் பெயரைப் பலரும் பலவிதமாய் அடையாளங் காணுவர். ”சாதவா கன்ன என்ற பெயர் Indo-Austric மொழிகளில் சாத = குதிரை; கன்னா = மகன் என்று எழுந்ததாகச் சிலர் சொல்வர். ஆனால் சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால்,”நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப்படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்லமுடியும். சிலம்பும் அப்படித்தான் மொழிபெயர்க்கிறது. சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். "அவனைப் போட்டுச் சாத்திட்டான்" என்று இன்றையத் தமிழ் வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா? 

அந்தச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்குதல் என்னும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற ஆங்கிலச் சொல்லும் கூடப் பொடி என்ற பொருளில் எழுந்தது தான்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான் [வடபால் மொழிகளில் பழகும் சொல்]. ஆகச் சதவா என்பதன் உட்கருத்து தமிழே. பலரும் எண்ணுவது போல் அவர் 100 பேர் அல்லர், நூற்றுவர் (= சதைப்பவர்). ”நூற்றுவர்” என்பது கன்னர் குடியினருக்கோர் அடைமொழி, அவ்வளவுதான். [ஆனாலும் சொல் விளையாட்டில் நூற்றுவர் என்பதை 100 பேர் = ஈரைம்பதின்மர் என்று இடக்கரடக்கலாய்க் கூறமுடியும்.] இன்னும் ஒரு சிலர் சாதவா கன்னர் என்று படிக்காது சாத வாக(ன்)னர் என்று படிக்கிறார்கள். அப்படிச் சொல் பிரிப்பது தவறென்றே தோன்றுகிறது. சரியான சொற்திரிவு சதம்>சதவர்>சாதவர்>சாதவா = நூற்றுவர் என்றேயாகும்.

கன்னர் என்பது கர்ணி என்றும் திரிகிறது. இங்கே ”காது, கன்னக்குழி” போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்னன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் விதப்பாகச் சொல்லப்படுவான். பாகதத்தில் கிருஷ்ண என்பது கன்ன என்றாகும். கன்னன் என்பது சேரன், சோழன், பாண்டியன், போல ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும். சேர, சோழ, பாண்டியருக்கு இன அடையாளம் (சாரல் பூசியவர் சாரலர்>சேரலர், கோழி = பொன்னிறம்-மஞ்சள்/குங்குமம் பூசியவர் கோழியர்>சோழியர், பாண்டில் பூசியவர் பாண்டியர்) சொல்வது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநர்>கன்னர் என்று ஆகியிருக்க வாய்ப்புண்டு. 

கன்னரின் ஆட்சிக்காலம் கி.மு.230 - கி.பி.220 என்று சொல்லுவார்கள். கன்னரின் முதலரசன் சீமுகன். இவர்களின் முதற் பேரரசன் சாதகர்ணி I (கி.மு. 180-124) சுங்கரைக் கட்டுப்படுத்தி மாளுவம்/ அவந்தியைப் பிடித்தான். அத்திகும்பா கல்வெட்டும் (கி.மு.172) சாதகர்ணி I ஐப் பற்றிப் பேசுகிறது. முதலாம் சதகர்ணிக்கு அப்புறம் ஒரு பெருவீழ்ச்சி கன்னருக்கு ஏற்பட்டது. சாதகர்ணி I ற்கு முன்னால் தும்பைப் போரில் தோற்று போய் பலர் இறந்திருக்கலாம். 

சிலம்பைப் படித்தால், சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் நல்ல உறவு நெடுநாட் பட்டு இருந்திருக்க வேண்டும் என்று புரிகிறது. இரண்டு மூன்று தலைமுறைகளாய் உதியன் சேரல் காலத்திருந்தே இந்த உறவு தொடர்ந்திருக்கலாம். ”தம் நண்பருக்கு ஆனது தமக்கானது” போல் கன்னரின் தொடக்க காலத் தும்பைப்போர்த் தோல்விகளைச் சேரர் நினைத்திருக்கலாம். அந்தத் தும்பைப் போரில் இறந்தவருக்காகச் சேரர் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்திருக்கலாம். இது வேறெங்கும் பதிவு செய்யப்படாத வரலாற்றுச் செய்தியாய் ஏன் இருக்கக் கூடாது?

இனிப் பெருஞ்சோற்று மிகுபதம் என்பதற்கு வருவோம். பொதுவாகத் தமிழர் வாழ்வில் முன்னோர் வழிபாடு என்பது என்றுமேயுண்டு. (அது மற்ற திராவிடர் வாழ்விலும் இருந்திருக்கலாம்.) எடுத்துக் காட்டாக இன்றைக்கும் தென்பாண்டிநாட்டில் சிவகங்கைச் சீமையில் வீட்டில் நல்லது நடக்க வேண்டுமானால் [ஒரு திருமணம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.] தம் முன்னோரை நினைந்து அவருடைய ஆசி வேண்டிக் குறிப்பிட்ட விழவிற்கு சில நாட்கள் முன்னால் ”படைப்பு” என்ற ஒன்றைச் செய்வார்கள். இது ஒரு முன்னோர் வழிபாடு. அந்த முன்னவர் ஆணென்றால் வீட்டில் அவர் நினைப்பில் வைத்திருக்கும் கோடி வேட்டியையும், துண்டையும் நீர் நிலையில் அமிழ்த்திக் கசக்கிப் பிழிந்து பங்காளிகள் எல்லாம் அதைக் கொண்டுவந்து உலர்த்திப் பின் மடித்து வேட்டியை படையல் செய்யும் இடத்தில் வைத்து அதற்கு மேல் ஒரு துண்டை தலைப்பாகைக் கட்டுபோல் அழகுற ஆக்கி, கூடவே உருத்திராக்க மாலை அணிவித்து அந்த முன்னாள் ஆவி அங்கு குடிவந்தது போலவே செய்வார்கள். இதே போல இறந்து போன முன்னவர் பெண் (பாட்டி என்று கொள்ளுங்களேன்) என்றால் கோடிச் சேலையை நீரில் அமிழ்த்திக் கசக்கிப் பிழிந்து பின் உலர்த்தி அவரைப்போலவே உருவகம் செய்து தாலி அணிவித்து, முன்னாற் பாட்டி அங்கு எழுந்தருளுவது போலவே செய்து வைப்பார்கள். தாத்தனுக்கோ, பாட்டிக்கோ வேண்டப்பட்ட உணவு வகைகளைப் பண்ணி கூடவே படையற் பண்ணிகாரங்களைச் செய்து முன்னோர் ஆவிக்குப் படையலிட்டு பின்னாற் கூடியிருக்கும் சுற்றத்தார் அனைவருக்கும் பெருஞ்சோறு படைப்பார்கள். படைப்புச் சோற்றைத் தான் பெருஞ்சோறு என்பார்கள். 

முன்னோர் படையல் முறைதான் இன்றுங் கூட சிறுதெய்வக் கோயில்களான ஐயனார் கோயில்களிலும், காளி கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும், கருப்பர் கோயில்களிலும் திருமேனிகளுக்கு முன்னாற் செய்யப்படும் வழிபாட்டு முறையாகும். பின்னால் இது ஆகம சமயத்திலும் பரவி பெருமானமயம் ஆக்கப்பட்ட கோயில்களிலும் (Brahminised temples) கூட நடைமுறையானது. நாட்கள் ஆக ஆக ஒவ்வொரு சிறுதெய்வக் கோயிலும் நம் நாட்டில் பெருமானமயம் ஆகிக் கொண்டே வந்தாலும் பெருமானர் அல்லாத (non-brahmin) பழக்க வழக்கங்கள் ஏதோவொரு வகையிற் தொடர்ந்து பின்பற்றப் படுகின்றன. ஆக ஒரு இனக்குழு நடவடிக்கை (tribal practice) கொஞ்சங் கொஞ்சமாய் சமய நடவடிக்கை (religious temple practice) ஆகியிருக்கிறது. ”ப்ரசாத்” என்று வடமொழியில் மொழிபெயர்த்துச் சொல்கிறார்களே அது கூடப் “பெருஞ்சோறு” என்பதன் நேரடிச் சங்கத மொழிபெயர்ப்புத் தான். கோயில் ஆகம நெறிமுறைகளுக்கும் வேத நெறிக்கும் எந்தத் தொடர்புங் கிடையாது. இந்து மதம் என்பது வேத நெறியும், ஆகம நெறியும், இனக்குழுப் பழக்கங்களும் கலந்த ஒரு கலவை நெறி. வேத நெறியின் தாக்கம் அதில் ஒரு சிறு பகுதிதான். எல்லாவற்றையும் வேதம் வழியாகப் பார்ப்பதைப் போல முட்டாள் தனம் கிடையாது. ஆனாலும் பல ஆராய்ச்சியாளர்கள் அந்த முட்டுச் சந்திற்குள்ளேயே போய்விழுகிறார்கள். அரச பாட்டைக்கு வரமாட்டேம் என்கிறார்கள்.

இது போக, முன்னோர் இறந்த, குறிப்பாகத் தந்தை தாயர் இறந்த நாளின் போது (அதாவது அதே நாள்மீன் ஏற்படும் நாளில்) தமிழர் “பிண்டம் மேய பெருஞ்சோறு கொடுப்பதும்” உண்டு. [தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் வஞ்சித் திணைபற்றிய குறிப்பில் 9 ஆம் துறையாக ”பிண்டம் மேயப் பெருஞ்சோற்று நிலை” சொல்லப்பெறும்.] பிண்டம் என்பது எள்ளுச் சோற்றுருண்டை. இதை இந்தக் காலத்தில் பெருமான மயச் சடங்குகள் கூடிப்போன காரணத்தால் ”தர்ப்பணம் செய்தல்” ”திதி கொடுத்தல்” என்று சங்கத வழக்கில் மொழிபெயர்த்துச் சொல்லுவார்கள். அடிப்படை வழக்கம் தமிழர் வழக்கம் தான். இதைச் செய்வதிற் பூசாரி தான் மாறிவிட்டார். பழம் அறிவருக்குப் (பறையருக்குப்/ பண்டாரத்திற்குப்/ குயவருக்குப்) பகரியாய் இப்பொழுது பார்ப்பனர் வந்துவிட்டார். அதனாலேயே இது பார்ப்பனர் வழக்கம் ஆகிவிடாது. [இன்றுங் கூட பெருஞ்சோற்று விருந்தின் முதல் மரியாதை எங்கள் பக்கம் பறையர் என்னும் அறிவருக்குத் தான்.]

இன்னொரு விரிவாகத் தென்பாண்டி நாட்டில் பெரும்பகுதியில் ஆடி அமையுவாவின் (ஆடி அமாவாசையின்) போது நீர்நிலைகளுக்கு அடுத்திருந்து (கடல், ஆறு, ஏரி, குளம் இப்படி அது விரியும்) மூன்று தலைமுறை முன்னவர்க்குப் பிண்டம் மேயப் பெருஞ்சோறு கொடுப்பதுண்டு. சென்ற வாரம் தான் தமிழ்நாடெங்கணும், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் இது நடந்தது. குமரி, நெல்லை மாவட்டங்களில் ஆடி அமையுவாவிற் பிண்டங்கொடுத்துப் பெருஞ்சோறு படைப்பது பெரிதும் உண்டு. பெருஞ்சோறு கொடுப்பதற்கு அரசனாய் இருக்கவேண்டியதில்லை. வசதியிருக்கும் எவனும் இதைச் செய்யமுடியும். செல்வ நிலைக்குத் தகுந்தாற் போல் பெருஞ்சோற்றின் செழுமை மாறும். அவ்வளவு தான். 

“பெருஞ்சோற்று மிகுபதம்” என்பது இரட்டை வழக்கு. பெருஞ்சோறு என்றாலும் மிகுபதம் என்றாலும் ஒரே பொருள் தான்.

இங்கே நூற்றுவர் கன்னரின் முன்னோருக்கு படையலெடுத்து, ”சேரரும் அவரும் ஒரே குலம் போலத் தான்” என்று ஊருக்கே உணர்த்திச் சேரன் நட்பரசோடு சொந்தம் கொண்டாடுகிறான். அவ்வளவுதான். “சேரனே! நூற்றுவர் கன்னருக்காக நீ பரிந்து முன்வந்து பெருஞ்சோற்று மிகுபதம் செய்தாயே? அவன் குலமும், உன் குலமும் ஒன்றென்று பறைந்தாயே? உன் சிறப்பை என்னவென்று சொல்லுவோம்?” என்று புலவர் வியக்கிறார். 

நூற்றுவர் கன்னர் மேல் சினந்து படையெடுத்து வஞ்சிப்போர் செய்த அந்த ஐவர் யார் என்று என்னாற் சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் சேரருக்கு வேண்டிய அவந்தியரசராய் இருக்கமுடியாது. பெரும்பாலும் பகையரசரான மகத அரசராகவே இருக்க முடியும். 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

புறநானூறு 2ஆம் பாட்டு - 5

 
இனி அடுத்த பகுதிக்குப் போவோம்.

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே

இந்த 8 வரிகளுள் வடபுலத்து இனக்குழுக்களின் இடையுள்ள முரணும், வடபுலத்தரசர் ஒருசாரார்க்குச் சார்பாகச் செயற்படுவதும், இந்தச் செவியுறையிற் குறிப்பாகத் தென்புலத்து அரசனுக்கு உணர்த்தப்பட்டுப் புதுவகை நயன்மை (justice) ஒன்று நிலைநாட்டப் படுகிறது. அதன் விளைவாக ஆட்சி நடத்தும் நெறி மாறத் தொடங்குகிறது. ஆக, வேத நெறித் தாக்கம் என்பது உதியன் சேரல் காலத்தில் தமிழகத்தில் நன்றாகவே நுழைந்து விட்டது.

இவ்வரிகளைப் புரிவதற்கு இந்தியத் துணைக்கண்டத்துள் நடந்த பல்வேறு மாந்தப் பரவல்களை நினைவுகொள்ள வேண்டும். [கொஞ்சம் பற்றற்ற நிலையில் இச்செய்திகளை அணுகுங்கள். நான் இனச் (race) செய்திகளை எழுதவில்லை. இனக்குழுச் (tribal)செய்திகளைச் சொல்லுகிறேன்.] 

கிறித்துவுக்கு முன்னாலிருந்த காலங்களில் இந்தியாவிற்குள் குறைந்தது 4 தடவையாவது வெவ்வேறு மாந்தக் கூட்டங்கள் நுழைந்திருக்கலாம் என்று இற்றை ஈன் அறிவியல் (genetic science) கூறுகிறது. [நான் இற்றைப் புரிதலைச் சொல்கிறேன். நாளைக்கு இன்னும் தரவுகள் கிடைக்கும்போது அறிவியல் முடிவுகள் மாறலாம்.]

இற்றைக்கு 55000/60000 ஆண்டுகளுக்கு முன், முதல் மாந்தப் பரவல் நடந்தது என்று சொல்லுவார்கள். ஆப்பிரிக்காவிற் தொடங்கி எத்தியோப்பியா, சோமாலியா வழியாக அரேபிய ஏமனுக்குள் நுழைந்து பின் அங்கிருந்து துபாய் இணைப்பு வழியாக ஈரானுக்குள் நுழைந்து அப்படியே கடற்கரை வழியாக, மகான் (இற்றை கராச்சிக்கு அருகில் உள்ள சிந்துதேசம்), குசராத், மராட்டியம் என்று மேற்குக் கடற்கரை வழியாக இந்தியாவில் நுழைந்து பின் தெற்கே கன்னடம், கேரளம், தமிழகம் வரை வந்து அங்கிருந்து கிழக்கு கடற்கரை வழியாக நகர்ந்து ஆந்திரம், கலிங்கம், வங்காளதேசம் போய், பர்மா, தாய்லந்துக் கடற்கரைகள் வழியாகத் தென்கிழக்கு ஆசியா, பாப்புவா நீயூ கினி, ஆசுத்திரேலியா வரை இந்தப் பரவல் நடந்து முடிவில் அங்குள்ள பழங்குடிகளாயினர். இவர்களை நெய்தலார் (coastal people) என்று சுருக்கமாய் அழைப்பார்கள். 

நெய்தலார் எச்சம் நம்மூரில் உண்டு. நம் பிரான்மலைக் கள்ளரும் இந்த எச்சத்தைச் சேர்ந்தவர் தான். நெய்தலாரை ஆண் குருமியங்களின் (male chromosome) அடிப்படையில் M180என்று ஈனியலிற் சொல்லுவார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை நெய்தலார் தான் முதல்மாந்தக் கூட்டத்தார். M130 என்பது இந்தியாவின் தென் கிழக்குப் பகுதி மாநிலங்களில் (கன்னடம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், ஒரிசா, சத்திசுகார், சார்க்கண்ட், பீகார், வங்கம் போன்ற மாநிலங்களில்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் சற்று தூக்கலாய் இருக்கிறது. [உடனே மொழிக்குடும்பம் வேறு, இனம் என்பது வேறு என்று அச்சடிப்பு முழக்கம் செய்யச் சிலர் முன்வரலாம். ஆனால் விளக்கிச் சொல்வதற்கு வேறு வகை எனக்குத் தெரியவில்லை.] M130 என்போர் இந்தியரிடையே கிட்டத்தட்ட 10/15% இருக்கின்றனர். அவர் பெரும்பாலும் திராவிடமொழி பேசுபவராய், பழங்குடிகளாய் இருக்கின்றனர். 

இரண்டாம் பரவல் கிட்டத்தட்ட 30000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இவர்கள் இந்தியா, பாக்கிசுத்தானின் வடமேற்கே இருக்கும் கணவாய்கள் வழியாக நுழைந்து நம்மூர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் விரவியவர்கள். இவர்களை ஆண்குருமியங்களின் அடிப்படையில் M20 என்று சொல்லுவார்கள். M20 என்பது இந்தியாவெங்கணும் விரவிக் கிடக்கும் ஒரு ஈனாகும். இதை இந்திய ஈன் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். நம்மில் பெரும்பாலோருக்கு இந்த ஈன் இருக்கிறது. இது இல்லாத இந்தியர் மிகவும் அரிதானவர்.

மூன்றாவது பரவல் கிட்டத்தட்ட 9000/10000 ஆண்டுகளுக்கு முன் முற்பட்டது. இவர்களும் இந்தியா, பாக்கிசுத்தானின் வடமேற்குக் கணவாய்கள் வழியாகத்தான் நுழைந்தனர். இவர்களை ஆண்குருமியங்களின் அடிப்படையில் M17 என்று சொல்லுவார்கள். M17 என்பது இந்தியாவில் வடமேற்கு மாநிலங்களிலும், நடு மாநிலங்களிலும், மற்ற பகுதிகளில் உயர்சாதி மக்களிடமும் விரவியிருக்கிறது. M17 என்பது இந்தோ-இரோப்பிய மொழி பேசுகிறவர்களோடு தொடர்புடையது என்றும் சொல்லவேண்டும். 

நான்காவது பரவல் வரலாற்றுக் காலத்தில் கிட்டத்தட்ட 3500-4000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இவர்களுக்கும் M17 காரர்களுக்கும் ஈனளவில் மிகுந்த வேறுபாடு இருப்பதாய்ச் சொல்ல முடியாது. ஒருசில பண்பாட்டு வேறுபாடுகளே தென்படுகின்றன. [நான்காவது பரவல் தொல்லியல், மாந்தவியலின்படி உணரப் பட்டது. ஈனியல் வழி அது உறுதி செய்யப் பட்டதில்லை. மற்ற மூன்று பரவல்களும் ஈனியலால் உறுதி செய்யப் பட்டவை. நான்காம் பரவலுக்கும் மூன்றாம் பரவலுக்கும் வேறுபாடு காண்பது கடினம் என்பதை இங்கு நினைவு கொள்ளுங்கள்.] முன்றாம், நான்காம் பரவலாளர்கள் இந்தியரில் 8/10% இருக்கின்றனர்.

இந்த நால்வேறு கூட்டத்தார் தம்முள் கலந்து உருவாகிய இனமக்கள் தான் இன்று இந்தியத் துணைக் கண்டத்திற் குடியிருக்கும் மக்களாவர். எவ்வளவோ கலந்து போனபின், ”இவர்தான் அவர்” என்று இந்தியருள் அடையாளங் காணுவது மிகவும் சரவல் என்றாலும் பாழாய்ப் போன சாதிமுறைத் திருமணங்களால் கடந்த 4000 ஆண்டுகளில் ஒரு சில வேறுபாட்டுத் தன்மை அறியக் கூடிய அளவில் வேரூன்றி விட்டது. அதனால் ”இந்த ஈன்களின் பரவல் நாடெங்கணும் எப்படி விரவியிருக்கிறது?” என்று ஓரளவிற்குச் சொல்ல முடிகிறது.

நாலாவது கூட்டத்தார் இந்தியாவிற்குள் நுழைந்த போது ஏற்கனவே நுண்கல் நாகரிகத்திலும் (neolithic culture), ஓரளவு பெருங்கற்படை நாகரிகத்திலும் (megalithic culture) இருந்த (M130, M20 ஆகியவிரண்டும் கலந்து கிடந்த) பழங்குடிகள் முல்லை, குறிஞ்சி நிலங்களிலும், மாட மாளிகைகள் கட்டி நிலைத்த நாகரிகத்தில் (M130, M20 நிறையவும் M17 கொஞ்சமுமாய்க் கலந்து கிடந்த) அன்றைய மேற்தட்டு மக்களும் (இவர்தான் மூன்றாவது கூட்டத்தை இன்றைக்குப் பகராளுமை - representation - செய்பவர்) இருந்தனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

நாலாவது கூட்டத்தார் நுழைந்த போது, மூன்றாவது கூட்டத்தார் இயற்கையூறுகள் காரணமாகத் தங்கள் வாழ்விடங்களை இழந்து இந்தியத் துணைக்கண்டத்தின் மற்ற மருத, நெய்தல் நிலங்களுக்கு நகர்ந்து விட்டார்கள். சிந்து சமவெளி நாகரிகம் அழிந்து போனது. மூன்றாவது கூட்டத்தார் மற்றவிரு கூட்டத்தாருடன் பெரும்பாலும் இணங்கிப் போய்க் கலந்துவிட்டனர்.

அப்படி மூன்றாவது கூட்டத்தார் கலந்ததின்பின் இந்தியாவில் நுழைந்த நாலாவது கூட்டத்தார் முல்லை நாகரிகத்திலேயே ஆழ்ந்திருந்தார்கள். அவர்களின் வாழிடங்கள் மருதத்திற்கும் முல்லைக்கும் இடைப்பட்டதாய் இருந்ததாகவே, வேத நூல்கள் சொல்லுகின்றன. நகரம், அரண்மனை, பெரும் மாளிகைகள் என்று அவர்கள் மேற்கட்டுமானம் கட்டுவதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகவேண்டிய நிலையில் நாலாவது கூட்டத்தாரின் நகர்ச்சி இந்தியாவின் வடமேற்கேயிருந்து கங்கைச் சமவெளியை நோக்கி நடைபெற்றது. [அதன் வெளிப்பாடு வேதம், ஆரண்யம், ப்ராமணம், உபநிடதம், புராணம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து கொண்டே போகும். இருக்கு வேதத்திற்கு அப்புறம் அவர்களுக்கு எல்லாமே கங்கைச் சமவெளியை நோக்கிய பயணங்கள் தான். அப்போது, ஆற்றுக்கு நெருங்கிய இடங்களை விட்டால், கங்கைச் சமவெளி பெரிதும் காடாகவே விந்திய மலை வரைக்கும் இருந்தது. இன்னுஞ் சொன்னால் அன்றைக்கு ஆந்திரமும், சத்திசுகரும், பீகாரும், சார்க்கண்டும், மத்தியப் பிரதேசமும், உத்திரப்பிரதேசமும் கூடப் பெரும்பாலும் காடுகள் என்பதை உணரவேண்டும். 

நாலாவது கூட்டம் எனப்படும் ஆரியரும், அதற்கு முன்னிருந்த மூன்று கூட்டத்தாரும் தம்முள் ஓரளவு கலந்தார்கள். ஆனால் சாதிப் பாகுபாடு என்பது ஏற்பட்டுப் போன காரணத்தால் இந்தக் கலப்பு முழுமையடையவில்லை. அதனால் மேல்தட்டுக் கூட்டத்தில் நாலாவது கரையினரின் பண்புகள் கூடவும், கீழ்த்தட்டுக் கூட்டத்திலும், பழங்குடிகளிடமும் மற்று மூன்று கரையினரின் பண்புகள் கூடவும் கலந்து விரவின. புறனடைகள் (exceptions) இரண்டு தட்டுக்களிலும் உண்டு. வடபுலத்துப் பழக்கமாய் நாலு வருணம் என்ற நிலைப்பாடு உருவாகி அது கொஞ்சங் கொஞ்சமாய் இந்தியாவெங்கணும் பரவத் தொடங்கியது. கொஞ்சங் கொஞ்சமாய்க் கீழ்த்தட்டு மக்களின் மொழிகள் மேற்தட்டு மக்களின் மொழியான இந்தோ-யிரோப்பியன் மொழிக்கு முன் சரியத் தொடங்கின. மொழிக்குடும்பங்கள் கலக்கத் தொடங்கின. முரண்பாடுகளும் பெருத்து வந்தன. வேதமொழியும் பழந்தமிழும் கலந்து பாகதங்களும், மற்ற திராவிட மொழிகளும் உருவாகின. வேதமொழி, பழந்தமிழ் ஆகிய இரண்டும் இரண்டு எல்லைகளாக, இரண்டுக்கும் நடுவில் பல மொழிகளின் பரம்பல் ஏற்பட்டது. தமிழுக்கு நெருங்கிய மொழிகள் திராவிட மொழிகளாயின. வேதமொழிக்கு நெருங்கிய மொழிகள் பாகதங்களாகின. சங்கதம் என்பது பாகதங்களுக்கு இடையே ஒரு கலவை மொழியாக, செந்தரப் படுத்தப்பட்ட படிப்போர் மொழியாக உருவாகியது. [சங்கதத்தில் இருந்து பாகதம் உருவாகியது என்ற கொள்கையை நான் ஏற்பவன் இல்லை. எப்படி வழக்குத்தமிழில் இருந்து செந்தமிழ் உருவானதோ, அதுபோலச் செங்கதம் என்பது ஒரு புலவர் ஆக்கம். அதற்கு மேல் அது ‘சுயம்பு, சிவசூத்திரம், உடுக்கையொலிகள், கிளியொலிகள் blah blah.....’ என்ற தொன்மத்தை நான் ஏற்பவனில்லை.]

நூலறிந்த பெருமானரே முதலிற் சங்கதத்தை உருவாக்கினர். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்களைச் செய்யும் வருணத்தோராய் அவர் அறியப்பட்டனர். முதல் வருணத்துப் பெருமானருள் முனிவர் என்ற கூட்டம் ஆரியக் குமுக நலத்திற்கு நல்லது என்று சொல்லி அவ்வப்பொழுது வேள்விகள் நடத்தி வந்தது. அந்த வேள்விகளில் விலங்குகளைப் பலி கொடுப்பது பெருத்து வந்தது. வேள்விச் செய்முறைகளின் அளவு இருக்க இருக்கப் பெரிதானது. அரசன் செய்யும் ஒவ்வொரு வேள்விக்கும் கொட்டிக் கொடுக்கவேண்டிய பொருட்கள் மலையாய்ப் பெருகின. முல்லைநிலத்து நாகரிகத்தில் இருந்து வந்த கீழ்த்தட்டு மக்கள் என்னதென்று செய்யத் தெரியாமல் வேள்விகளைப் பெரிய இடையூறாகக் கருதத் தொடங்கினர். ஒரு மாடு, இரண்டு மாடு பலிகொடுப்பதைப் “போய்த் தொலையட்டும்” என்று பலரும் அமைந்து போகலாம். ஆனால் அது 10, 100 என்று விரிவடையும் போது, பல்வேறு விலங்குகள் என்று அகலும் போது, ஆகுதியாகும் வெண்ணெய், கூலங்கள் இன்ன பிறவும் கூடும் பொழுது, ஊர்கள், ஊர்களையொட்டிய காடுகளில் இது அதிர்ச்சியையும், கலகத்தையும் கொண்டுவரத்தான் செய்யும். 

[இப்பொழுது சத்திசுகர், ஒரிசா, சார்க்கண்ட், வங்கம் போன்ற பகுதிகளில் பழங்குடியினருக்கும் வெளியிலிருந்து வரும் மக்களுக்கும் இடையில் ஏற்படும் தகறாறுகள், உள்நாட்டு வளங்கள் அந்த அந்த மக்களுக்குப் பயன்படாது வெளியாருக்குப் பயன்படுதல் போன்ற பொருளாதாரச் சுரண்டல்களை அன்றைய நாகரிக வழக்கங்களோடு சேர்த்துவைத்து எண்ணிப் பார்த்தால் நான் சொல்லுவதன் பரிமானம் புரியும்.] 

புதுக் குடியேற்றத்தாருக்கும், பழங்குடியினருக்கும் இடையே முரண் ஏற்பட்டால் புதுக்குடியேற்றத்தாரின் வேள்விகள் பழங்குடியினரால் சிதைக்கப்படத்தான் செய்யும். அதன் விளைவால் பழங்குடியினர் அரக்கரென்று சொல்லப்படுவார்கள். பழங்குடித் தலைவர் அசுரர் தலைவர் எனப்படுவார். நான்காவது கூட்டத்தார் ஆரியர்/தேவர் என்று ஆவார். ஆரியர்கள்/தேவர்கள் செய்வதெல்லாம் அரசருக்குச் சரியாகவே தெரியும். நிலைமை அப்படி இருந்தது. தங்கள் வேள்விகள் தடுக்கப் படுவதால் தம் இனக் கூட்டத்துத் தலைவனை, தம் அரசனை, இந்த முனிவர்கள் வேண்டத்தான் செய்வார்கள். முனிவருக்கு இணங்கி அரசர்கள், தாங்களோ, தங்கள் படைத்தலைவரை அனுப்பியோ, பழங்குடியினருக்கு எதிராகப் போரிட வைத்து முனிவர்களின் வேள்விகளைக் காப்பாற்றுவார்கள். வேறு என்னத்தை வடபுலத்து அரசர் செய்திருக்க முடியும்? [கி.மு.1500-இல் இருந்து கி.மு.800 வரைக்குங் கூட it was always ”they and us” between the Aryas and the indigeneous ethnic locals in the Bharatvarsha.] 

இத்தகைய வேறுபாடு தெற்கே கிடையாது. ஏனென்றால் கி.மு.600 வரைக்குங் கூடத் தெற்கே வேள்விகள் கிடையாது “அவர்களும் நாங்களும்” என்ற சிக்கல் கிடையாது. வெவ்வேறு மாந்தப் பரவல்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட நீண்ட காலக் கலப்பில் ஒருவருக்குள் இன்னொருவராய் ஆகிப் போனார்கள். முல்லை நிலத்துப் பழங்குடிகளுக்கும், மருத நிலத்து மக்களுக்கும் ஒரே வேந்தன் தான். அதன் விளைவால் ஒருவரைக் கொன்று, அவருடை பசுக்களைக் கவர்ந்து இன்னொருவர் வேள்வியில் ஆகுதியாக்குவது என்ற பேச்சிற்கே இடமில்லை. வெட்சிப் போரும், கரந்தைப் போரும் தென்னகக் குடிமக்களுக்குள் இருந்தன தான். ஆனால் அதற்கான வழிமுறைகளும், அதை ஒழுங்கு செய்யும் நெறிமுறைகளும் கூட வெட்சியார், கரந்தையார் இருபாலருக்கும் தெரிந்தன. இந்தப் போர்களைக் கையாளும் முறை தெரிந்திருந்த காரணத்தால் இருவேறு இனக்கூட்டத்து வெறுப்புச் சிக்கல்களை கி.மு.1000/800 களுக்கு அருகில் தென்புலத்து வேந்தர் பார்த்ததில்லை. There was law and order. There was no day-light robbery possible. There were ways and means to solve the issues. வடபுலத்து அரசருக்கோ establishing law and order என்பது முகன்மையான பணியாய் இருந்தது. Wherever new immigration takes place by forcible entry, law and order becomes a major issue. 

இப்படி ஒரு காட்சியைத்தான் இராமாயணத்தில் விசுவாமித்திரன் வழியே நாம் அறிகிறோம். அவன் செய்ய நினைக்கும் வேள்வியைத் தாடகையும், அவள் மக்களும் செய்யவிடாது தடுக்கிறார்கள். தாடகை பக்கத்திலிருந்து எத்தனை விலங்குகள், உயிரினங்கள் வேள்விக்காகப் பிடித்து இழுத்துவரப்பட்டு முனிவன் ஆசிரமத்தில் அடைக்கப் பட்டன, கூலங்களைக் கொண்டுதரக் கட்டாயப்படுத்தப் பட்டார்கள் என்ற செய்தியை இராமயணம் நமக்குத் தெரிவிக்கவில்லை. தாங்கள் பாதிக்கப் படாமல், தாடகையும் அவள் மக்களும் விசுவாமித்திரன் வேள்வியைத் தடுக்கவேண்டிய காரணம் என்ன? ”அவர்கள் வேள்விக்கு ஊறுசெய்தார்கள், அவர்கள் கொல்லப்படவேண்டும்” என்று மட்டுமே ஆரியர் பார்வையில் இருந்து செய்தி தெரிவிக்கப் படுகிறது. 

தருவணத்துள் யானியற்றும் தகைவேள்விக்கு
இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் செய்யும் அடைகாம வெகுளியெனும்
நிருதர் இடைவிலக்கா வண்ணம்
செருமுகத்துக் காத்தி 

என்று (கம்பனில் சொல்லுவது போலத்) தயரதனிடம் கேட்டுப் பெற்று இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரன் கூட்டிவருகிறான். காட்டில் தாடகை வதைப் படலம் நடைபெறுகிறது. அதன் பின்

எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை 
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர் 

என்று வேள்விப் படலம் சொல்லுகிறது. தாடகையின் மக்கள் மாரீசனும், சுபாகுவும் கொல்லப் படுகிறார்கள். விசுவாமித்திரன் வேள்வி காக்கப் படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் ”மத்திய தேசத்தில், ஆர்யா வர்த்தத்தில்” திரும்பத் திரும்ப நடக்குமானால், கண்ணினைக் காக்கும் இமை போல வேள்விகள் காக்கப் படுமானால், காடடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமானால், அடம் பண்ணிக் கொண்டிருந்த தாடகை வழியினர் அடங்கிப் போக மாட்டார்களா, என்ன? அப்புறம் விசுவாமித்திரன் போன்ற முனிவர்களின் ஆசிரமங்களிற் கிடக்கும் பெண் புள்ளிமான்கள் அங்குமிங்கும் அலைய வேண்டிய தேவையென்ன? பழங்குடிகள் எட்டிப் பார்க்கமுடியாத அளவிற்கு இமையம், பொதியம் போல் எதற்கும் அசையாத போர்த்தலைவர்கள் வழிநடத்தும் போர்ப்படைகள் வேள்வி நடக்கும் பர்ணசாலையைச் சுற்றி இருக்கும் போது எந்தப் பழங்குடிகள் உள்நுழைவர்? மான்கள் நன்றாகவே அமைதியாகத் தூங்கும். முத்தீ நன்றாகவே ஓம்பப்பட்டு வேள்விகள் இனிதே முடிவடையும். 

இன்னொரு செய்தியும் இங்கு சொல்லவேண்டும். முனிவர்கள் பெரும்பாலும் எந்த அரசனுக்கும் அடிபணியாத காட்டு இடைவெளிகளிலேயே இருந்திருக்கிறார்கள். They were on no-man's land like the pioneers in the American wild west. Just like the american Indians and European immigrants got into a conflict, here also conflict arose. 

இத்தனை பின்புலத்திற்குப் பின் மேலேயுள்ள கடைசி 8 வரிகளுக்கு வருவோம். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் தன் நாட்டை விட்டு ஆளில்லா நிலவெளிக்கு (no-man's land) வந்திருக்கிறான். யாரோ ஒரு கூட்டத்தாரைக் காப்பாற்றவேண்டும். அப்படிக் காப்பாற்றும் போது தன் நாட்டில் இல்லாத அதே பொழுது காடுகளில் வதியும் (தன் குடிமக்களைப் போன்ற இன்னொரு) இனக்குழுவோடு போரிடும் நிலைக்கு வந்து சேருகிறான். அவன் மனம் தடுமாறுகிறது. தான் செய்வது சரியா? ”யாரோவொருவருக்கு வாக்குக் கொடுத்ததற்காக, ஒரு பாவமும் செய்யாத வேற்று நாட்டுப் பழங்குடி மக்களோடு போருக்குப் போகிறோமே?” என்று கலங்குகிறான். ”இது சரிதான்” என்று வடபுலத்து நிகழ்வை எடுத்துக் காட்டி நயன்மை சொல்லப் பார்க்கிறார் முரஞ்சியூர் முடிநாகனார். It appears to be a perverted justification. But still we don't know the truth. 

"என்ன நடந்தாலும் சரி கறந்த பால் புளித்தாலும், பகலே இருளாய் மாறிபோனாலும், இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் நால்வேத நெறி கூட மாறி போனாலும்,உன்னைச் சுற்றிய வீரர் மனந்திரியாது இமையமலை, பொதியமலை மாதிரி அசையாது உயர்ந்து விளங்கியிருக்கும் நிலையைப் பார்! அத்தகைய வரிசையில் ”எப்படி இளமான்களும் துயிலும் வகையில் ஆசிரம வேள்விகளைக் காக்கும் தொழிலை வடபுலத்தரசர் செய்கிறாரோ?” அது போல எம் அரசே! நடுக்கமிலாது நிற்பாயாக! அரச ஒழுங்கைக் காப்பாற்றுவாயாக!” 

இந்த ஐந்து பகுதிகளில் பாட்டின் பொருளைச் சொல்லிவிட்டேன். வடநாட்டுத் தாக்கம் கூடிவரும் பருவத்தில் உதியஞ் சேரல் ஆண்டிருக்கிறான். இனக்குழுக்களின் மோதல் தெற்கிலும் தோன்றத் தொடங்கிவிட்டது. Southern Royalty was also getting into brahminised practices. 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard