1917 மே மாதம் 13-ம் நாள் போர்ச்சுகல் நாட்டின் ஃபாத்திமாவிற்கு அருகிலுள்ள வயல்வெளியில் லூஸியா ஸாண்டோஸ், ஃப்ரான்ஸிஸ்கோ மார்தோ, ஜெஸிந்தா என்ற பத்து வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகள் தங்களது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மின்னல் போல தோன்றிய பேரொளியில் ஓர் அழகிய பெண்ணைக் கண்டனர். அவர்களில் லூஸியா மட்டும் அப்பெண்ணுடன் பேசினாள். மற்ற இருவரில் ஃப்ரான்ஸிஸ்கோ மார்தோவினால் ஒளியாகத் தோன்றிய அப்பெண்ணைக் காண இயலவில்லை. சிறுவனால் அப்பெண்ணைக் காண முடிந்தது ஆனால் அவள் பேசுவதைக் கேட்க இயலவில்லை. ஆறாவது மாத முடிவில் வந்து மூவரையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் வாக்களித்து மறைந்து போனாள்.மூவரும் இச் செய்தியை ரகசியமாக வைதிருந்தனர். அவர்களில் சிறியவளான ஜெஸிந்தா தனது பெற்றோர்களிடம் உளறிவைக்க, செய்தி அந்த நகரம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. ஒளியாகத் தோன்றிய அப்பெண் கன்னி மரியாள் என்று பின்னர் அடையாளம் காணப்பட்டார்.
அன்றிலிருந்து மூவரும் ஒவ்வொரு மாதமும் 13-ம் நாள் அவ்விடத்திற்கு வருகை தந்தனர். ஜூன் 13-ம் நாள் அப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தினருடன் மரியாள் காட்சியளித்த இடத்தில் கூடி வழிபாடுகளையும் புகழ்மாலைகளையும் இசைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுதும் மூன்று சிறார்களும் வானிலிருந்து ஆலிவ் இலைகளை ஏந்தியவாறு அப்பெண் இறங்கி வருவதைக் காண்பதாக கூறி கூட்டத்தினரை புல்லரிக்கச் செய்தனர். இது அடுத்தடுத்த மாதங்களிலும் தொடர்ந்தது
வாக்களிக்கப்பட்ட அக்டோபர் 13-ம் நாளும் வந்தது. சுமார் 70,000 பேர் மரியாள் காட்சியளிக்கப் போகும் அற்புதத்தைக் காண குழுமியிருந்தனர். வானம் இருண்டு மழை பொழிந்து அற்புதத்தை காண வந்திருந்தவர்களையும், அப்பகுதியையும் நனைத்தது. கூட்டத்தினர் பக்தியில் மூழ்கியிருந்தனர், மீண்டும் அப்பெண் சிறார்களுக்கு மட்டும் காட்சியளித்தாள். அப்பெண் வானத்தை நோக்கி தனது கைகளை மெல்ல உயர்த்தினாள். அப்பொழுது, லூஸியா, “சூரியன்” என்று கூச்சலிட, எல்லோரும் சூரியனை நோக்கி பார்வையைத் திருப்பினர்.
சூரியன், வர்ணஜாலங்களை உருவாக்கியவாறு, கூட்டத்தினரின் இசைக்கேற்ப மெல்ல அசைந்து, தவழ்ந்து கூட்டத்தினரை நெருங்கியது. அதன் நெருக்கத்தினால் தங்களது ஆடைகளும், நிலமும் உலர்ந்து விட்டதாக கூறி தங்களைத் தங்களே புல்லரித்துக் கொண்டனர்.
சில புகைப்படங்களையும் இதற்கு ஆதாரமாக முன் வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை நாம் மட்டுமல்ல உலகில் மிகப்பெரும்பாமையோர் கண்டதில்லை. பலர் கேள்விப்பட்டிருக்கக் கூட முடியாது. ஆனால் இப்படியொரு கதையை வரலாற்றில் பதிந்துள்ளனர். இராமாயணத்தின் அனுமன் குழந்தையாக இருந்தபோது அவரால் சூரியன் விழுங்கப்பட்டிருக்கிறது; மகாபாரதக் குந்தி, சூரியனுடன் கூடி குழந்தையைப் பெற்றிருக்கிறாள் எனும் பொழுது இந்து மதத்தினருக்கும் சூரியனின் குத்தாட்டத்தை ஏற்பதில் சிரமம் இருக்காது என்று நம்பலாம். முஸ்லீம்களின் நிலையைப் பார்ப்போம்.