விதண்டாவாதம் என்ற தலைப்பில் வணக்கங்களால் கடவுளுக்கு என்ன லாபம் ?                என்ற கேள்விக்கு அறிஞர் P. ஜெயினுல் ஆபிதீன் அளித்துள்ள விளக்கத்திற்கு மறுப்பு.
உலகிலுள்ள பெரும்பாலான மக்களும் ஏதோ ஒரு முறையில் கடவுளை வழிபாடு செய்கிறவர்கள்தான். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது நன்மைக்காகவும் வெகு சிலர் மற்றவர்களின் நன்மைக்காவும் அனுதினமும் கடவுளைத் தொழுது சரணடைகின்றனர். இவர்கள் அனைவருமே கடவுளிடமிருந்து நன்மைகளை அடையமுடியுமா?
இந்த கேள்விக்கு  சராசரிக்கும் குறைவான மத அறிவுடைய இஸ்லாமியர் கூட இதற்கு இல்லையென்ற பதிலை உறுதிபடக் கூறுவார். காரணம், அல்லாஹ்வையும் முஹம்மதையும் ஏற்காத ஒரு வணக்கம், ஏற்புடையதல்ல என்பதுதான். எனவே, நன்மைகளை அடைய(!) இஸ்லாம் கூறும் வணக்கமுறைகளைக் காண்போம்.
தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் என்றொரு பட்டியல் இருந்தாலும், அல்லாஹ்விற்கு இணை வைக்காது, அவனது தூதர் முஹம்மதிற்கும் முற்றிலும் வழிப்படுதலே முதன்மையானது.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
குர் ஆன் 4:48
தன்னைத் தவிர வேறு கடவுளர்கள் இல்லை, தான்மட்டுமே ஒரே கடவுள் என்பது அல்லாஹ்விற்குத் தெரியுமல்லவா? மனிதர்கள் அதை உணராமல், தங்களது அறியாமையால் செயல்படுவதால் அவனுக்கு இழப்பு ஏதேனும் நிகழுமோ?
இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏக மனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை.
என்கிறார் அறிஞர் P. ஜெயினுல் ஆபிதீன். ஆனால் இது பீஜே அவர்களின் வெற்று கற்பனையே. இவரது இந்த விளக்கம் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு எதிரானது. தான் மட்டுமே ஒரே இறைவன், தன்னை மட்டுமே வணங்க வேண்டும், தான் கூறும் முறையில் மட்டுமே வணங்கப்பட வேண்டும் என்பதை அறியச்செய்ய அல்லாஹ் காண்பிக்கும் வெறித்தனம் எல்லையில்லாதது.
			


