சரியான பார்வையில் மனு ஸ்மிருதி : மலர் மன்னன்
ஓரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனுநீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவு படுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப் பிற்போக்கான சட்ட நூல்தான் மனு நீதி என்கிற எண்ணம் நம்மில் பலரிடையே நிச்சயமாகிவிட்டிருக்கிறது. விருப்பு வெறுப்பின்றி, முன்கூட்டியே ஓர் அபிப்பிராயத்துடன் அணுகாமல் ஆராய்ந்து பார்த்தால்தான் மனு நீதி என்கிற மனு ஸ்மிருதி வகுத்திருக்கும் விதிமுறைகள் எத்தகையன என்னும் முடிவுக்கு வரமுடியும்.
முதலில் ஸ்மிருதி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியிலிருந்து தொடர்ந்து வருபவை ஸ்ருதி என்கிற செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாய் மிகுந்த மரியாதையுடன் ஏற்கப்பட்டு வரும் கோட்பாடுகள். நான்மறைகளும் அவற்றின் அடியற்றி வரும் உபநிடதங்களும் இவ்வகையைச் சேர்ந்தவை. கண்ணபிரான் அருளியதாக அறியப்படும் பகவத் கீதையையுங்கூட ஸ்ருதி என்று கூற வியலாதுதான். ஆனால் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு வாய்மொழியாக அது உபதேசிக்கப்பட்டமையால் அதையும் ஸ்ருதியெனக் கொள்வதில் தவறில்லை எனக் கருதுவோர் உண்டு. ஸ்மிருதி எனப்படுபவை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட விதிமுறைகள். வேத காலத்திற்குப் பின் வெகு காலங் கழிந்த பிறகுதான் இவை உருவாயின. பொதுவாக தர்ம சாஸ்திரங்கள் எனக் கருதப்படுபவைதாம் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன. மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கொள்பவைதாம் தர்ம சாஸ்திரங்கள். அவ்வாறு மாற்றங்கொள்ளாமல் சில விதிமுறைகள் முரண்டுபிடித்தால் மூலாதாரமான ஸ்ருதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, ஸ்ருதிகள் என்ன சொல்கின்றனவோ அவற்றை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஸ்மிருதியின் கூற்றைத் தள்ளிவிட வேண்டும் என்று தர்ம சாஸ்தரங்களான ஸ்மிருதிகளே அறிவுறுத்தியிருக்கின்றன. ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு காணப்படுமானால் ஸ்ருதியில் சொல்லப்பட்டிருப்பதைத்தான் சரியென்று கொள்ளவேண்டும் என மனு ஸ்மிருதியும் தனது இரண்டாவது சருக்கத்தின் பனிரெண்டாவது, பதிமூன்றாவது செய்யுள்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆக, ஹிந்து சமுதாயத்திற்கு ஸ்ருதிகளான வேதங்கள்தாம் வழிகாட்டும் அறநெறிகள். மனு ஸ்மிருதியே ஒப்புக்கொண்டுள்ளவாறு, ஸ்மிருதிகள் இரண்டாம் பட்சந்தான். மனு நீதி எனப்படும் மனு ஸ்மிருதியானது ஹிந்து சமுதாயத்தின் ஒரேயரு ஸ்மிருதியல்ல. மொத்தம் உள்ள பதினெட்டு ஸ்மிருதிகளுள் ஒன்றுதான் அது. ஒரு தனி நபர், ஒரு குடும்பம், ஒரு சமுதயம், ஒரு தேசம் ஆகியவை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகளை, தான் எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வகுத்துள்ளது, மனு ஸ்மிருதி. விண்ணியல், மருத்துவம் முதலான விஷயங்கள் குறித்தும் அது பேசுகிறது.